Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     08 ஆகஸ்ட் 2020  

பொதுக்காலம் 18ஆம் வாரம்

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்.

இறைவாக்கினர் அபக்கூக்கு நூலிலிருந்து வாசகம் 1: 12- 2: 4

ஆண்டவரே, என் கடவுளே, என் தூயவரே, தொன்றுதொட்டே இருப்பவர் நீர் அல்லவா? நீர் சாவைக் காண்பதில்லை; ஆண்டவரே, அவர்களை எங்கள் தண்டனைத் தீர்ப்பாய் ஏற்படுத்தியவர் நீரே; புகலிடமே, எங்களைச் சாடும் சாட்டையாய் அவர்களை ஆக்கியவரும் நீரே. தீமையைக் காண நாணும் தூய கண்களை உடையவரே, கொடுமையைப் பார்க்கத் தாங்காதவரே, கயவர்களை நீர் ஏன் பார்த்துக்கொண்டே இருக்கிறீர்? பொல்லாதவர் தம்மைவிட நேர்மையாளரை விழுங்கும்போது நீர் ஏன் மௌனமாய் இருக்கின்றீர்?

நீர் மானிடரைக் கடல் மீன்கள் போலும் தலைமை இல்லா ஊர்வன போலும் நடத்துகின்றீர். கல்தேய இனத்தார் மற்றெல்லாரையும் தூண்டிலால் பிடிக்கின்றார்கள்; வலையால் வாரி இழுக்கின்றார்கள்; தங்கள் பறியிலே சேர்த்துக்கொண்டு அகமகிழ்ந்து களிப்புறுகின்றார்கள். ஆதலால், தங்கள் வலைக்குப் பலி செலுத்துகின்றார்கள்; பறிக்குத் தூபம் காட்டுகின்றார்கள்; ஏனெனில் அவற்றாலேயே இன்பமான வாழ்வை அடைகின்றார்கள்; அறுசுவை உணவைப் பெறுகின்றார்கள். அப்படியானால் அவர்கள் தங்கள் வலையில் இருப்பவற்றை ஓயாமல் வெளியே கொட்டி, மக்களினங்களை இரக்கமின்றி இடைவிடாமல் கொன்று குவிக்கவும் வேண்டுமோ?

நான் காவல் மாடத்தில் நிற்பேன்; கோட்டைமேல் நின்று காவல் புரிவேன்; என் வாயிலாக ஆண்டவர் என்ன கூறப்போகின்றார் என்றும் என் முறையீட்டுக்கு என்ன விடையளிப்பார் என்றும் கண்டறிவதற்காகக் காத்திருப்பேன்.

ஆண்டவர் எனக்கு அளித்த மறுமொழி இதுவே: "காட்சியை எழுதிவை; விரைவாய் ஓடுகிறவனும் படிக்கும் வண்ணம் பலகைகளில் தெளிவாய் எழுது. குறித்த காலத்தில் நிறைவேறுவதற்காகக் காட்சி இன்னும் காத்திருக்கின்றது; முடிவை நோக்கி விரைந்து செல்கின்றது. ஒருக்காலும் பொய்க்காது. அது காலந்தாழ்த்தி வருவதாகத் தோன்றினால், எதிர்பார்த்துக் காத்திரு; அது நிறைவேறியே தீரும்; காலம் தாழ்த்தாது. இதை நம்பாதவரோ உள்ளத்திலே நேர்மையற்றவராய் இருப்பர்; நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 9: 7c-8. 9-10. 11-12 . (பல்லவி: 10b)  Mp3
=================================================================================


பல்லவி: உம்மை நாடி வருவோரை ஆண்டவரே, நீர் கைவிடமாட்டீர்.
7c
ஆண்டவர் அரியணையில் என்றென்றும் வீற்றிருக்கின்றார்; நீதி வழங்குவதற்கென்று அவர் தம் அரியணையை அமைத்திருக்கின்றார்.
8
உலகிற்கு அவர் நீதியான தீர்ப்பு வழங்குவார்; மக்களினத்தார்க்கு நேர்மையான தீர்ப்புக் கூறுவார். - பல்லவி

9
ஒடுக்கப்படுவோர்க்கு ஆண்டவரே அடைக்கலம்; நெருக்கடியான வேளைகளில் புகலிடம் அவரே.
10
உமது பெயரை அறிந்தோர் உம்மில் நம்பிக்கை கொள்வர்; ஆண்டவரே, உம்மை நாடி வருவோரை நீர் கைவிடுவதில்லை. - பல்லவி

11
சீயோனில் தங்கியிருக்கும் ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; அவருடைய செயல்களை மக்களினத்தாரிடையே அறிவியுங்கள்;
12
ஏனெனில், இரத்தப் பழி வாங்கும் அவர் எளியோரை நினைவில் கொள்கின்றார்; அவர்களின் கதறலை அவர் கேட்க மறவார். - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
2 திமொ 1: 10b

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 14-20

அக்காலத்தில்

இயேசுவும் சீடர்களும் மக்கள் கூட்டத்தினரிடம் வந்தபோது ஒருவர் இயேசுவை அணுகி அவர் முன் முழந்தாள்படியிட்டு, "ஐயா, என் மகனுக்கு இரங்கும்; அவன் வலிப்பு நோயால் பெரிதும் துன்புறுகிறான். அடிக்கடி தீயிலும் தண்ணீரிலும் விழுகிறான். உம் சீடர்களிடம் அவனைக் கொண்டு வந்தேன்; அவனைக் குணமாக்க அவர்களால் முடியவில்லை" என்றார். அதற்கு இயேசு, "நம்பிக்கையற்ற சீரழிந்த தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்? அவனை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்" என்று கூறினார். கொண்டு வந்ததும் இயேசு அப்பேயைக் கடிந்துகொள்ளவே, அது அவனை விட்டு வெளியேறியது. அந்நேரமே சிறுவன் குணமடைந்தான். பின்பு சீடர்கள் தனிமையாக இயேசுவை அணுகி வந்து, "அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?" என்று கேட்டார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து, "உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் காரணம். உங்களுக்கு கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து "இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ" எனக் கூறினால், அது பெயர்ந்து போகும். உங்களால் முடியாதது ஒன்றும் இராது என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 அபக்கூக்கு 1: 12-2:4

கடவுள் கயவர்களைப் பார்த்துக்கொண்டே இருப்பாரா?

நிகழ்வு

ஓர் ஊரில் கணவனாலும் பிள்ளைகளாலும் கைவிடப்பட்ட மூதாட்டி ஒருத்தி இருந்தாள். இவளுக்குக் கடவுளுக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு அப்படிப்பட்டவள் தன்னுடைய பிழைப்பிற்காக ஒரு சிறிய கடை வைத்து, அதில் பல சரக்குகளை விற்று வந்தாள்.

ஒருநாள் இரவு, இந்த மூதாட்டி வாழ்ந்துவந்த ஊரில் இருந்த திருடன் ஒருவன், இவளுடைய கடைக்குள் புகுந்து, இவள் வைத்திருந்த கொஞ்சப் பணத்தையும் திருடிக்கொண்டு போய்விட்டான். மறுநாள் இவள் கடையைத் திறந்து பார்த்தபொழுது, கடையில் இருந்த பணம் திருடு போயிருப்பதைக் கண்டு, அதிர்ந்து போனாள். தன்னுடைய கடையிலிருந்த பணத்தையெல்லாம் திருடியது பிரபல திருடன்தான் என்பதை உறுதிசெய்துகொண்ட இவள் மூதாட்டி நடந்ததை ஊர்த் தலைவரிடம் முறையிட்டாள்.

உடனே ஊர்த்தலைவர் ஊர்க்கூட்டத்தைக் கூட்டினார். அதில் மூதாட்டி, பிரபல திருடன் உட்பட எல்லாரும் இருந்தார்கள். அப்பொழுது ஊர்த்தலைவர் திருடனைப் பார்த்து, "இந்த மூதாட்டி, நீதான் இவளுடைய கடையிலிருந்து திருடியதாக உன்மீது குற்றம் சுமத்தியிருக்கின்றாளே...! இது உண்மையா...?" என்றார். "அவள் சொல்வது பொய். நான் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தக் கடுமையாக உழைத்துச் சம்பாதிப்பவன். என்மீதே இவள் இப்படி அபாண்டமாகப் பழி சுமத்துவதா...? இதோ பாருங்கள் நான் உழைத்துச் சம்பாதித்த பணம்" என்று ஆத்திரத்தில், அவன் தன்னுடைய பையிலிருந்த பணத்தை எடுத்து, மக்கள் முன் விட்டெறிந்தான்.

அவ்வாறு அவன் விட்டெறிந்த பணத்தில், அவ்வூர் மக்கள் பொருள்கள் வாங்குவதற்கு அந்த மூதாட்டியிடம் கொடுத்த நோட்டுகள் ஒருசில இருந்தன. அவற்றைப் பார்த்துவிட்டு, அந்த நோட்டுகளை மூதாட்டியிடம் கொடுத்த மக்கள், "இவையெல்லாம் நாங்கள் இந்த மூதாட்டியிடம் பொருள்கள் வாங்கும்போது கொடுத்தவை. இவை இவனிடம் இருக்கின்றது என்றால், நிச்சயம் இவன் இந்த மூதாட்டியிடமிருந்து திருடி இருக்கவேண்டும். அதனால் இவனுக்குத் தக்க தண்டனை கொடுங்கள்" என்றார்கள்.

இதைத் தொடர்ந்து ஊர்த் தலைவர் அந்தத் திருடனிடம், "மக்கள் சொல்லக்கூடிய சாட்சிகளைக் கொண்டு பார்க்கும்பொழுது, நீதான் இந்த மூதாட்டியின் கடையிலிருந்த பணத்தைத் திருடியிருக்கின்றாய் என்பது தெரிய வருகின்றது. அதனால்தான் நீ இந்த மூதாட்டியிடமிருந்து எடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு, இந்த ஊரைவிட்டே போய்விடு. அதுதான் இங்கிருக்கும் எல்லாருக்கும் நல்லது" என்றார். ஊர்த்தலைவர் சொன்னது போன்றே, திருடன் மூதாட்டியிடமிருந்து திருடிய பணத்தைத் திரும்பக் கொடுத்துவிட்டு, அந்த ஊரைவிட்டே சென்றான். திருடுபோன பணம் திரும்பக் கிடைத்ததும், பெரிதும் மகிழ்ந்த மூதாட்டி, "இத்தனை ஆண்டுகளும் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்து வந்தேன். அவர் என்னைக் கைவிட்டு விடவில்லை" என்றார்.

இந்த நிகழ்வில் வரும், ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்து வந்த மூதாட்டி, தன்னுடைய நம்பிக்கையால் ஆண்டவரால் காப்பாற்றப்பட்ட அதே வேளையில், திருடன் தன்னுடைய தீச்செயலுக்காகத் தண்டனை பெற்றான். இறைவாக்கினர் அபக்கூக்கு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகமும், தீயவர் தன் தீச்செயலுக்காகத் தண்டிக்கப்படுவதையும், நேர்மையாளர் நம் நம்பிக்கையால் வாழ்வடைவதையும் எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

கடவுள் கயவர்களைப் பார்த்துக்கொண்டே இருப்பதில்லை

இறைவாக்கினர் அபக்கூக்கு நாகும், செப்பனியா, எரேமியா ஆகியோரின் சம காலத்தவர். இவர் இஸ்ரயேல் மக்கள், "நாங்கள் வலிமை வாய்ந்தவர்கள்" என்று தம்பட்டம் அடித்துக்கொண்ட பாபிலோனியர்களால் இன்னலுக்கு உள்ளானார்கள். இப்படிப்பட்ட சூழலில் இறைவாக்கினர் அபக்கூக்கு "கயவர்களை நீர் ஏன் பார்த்துக் கொண்டே இருக்கிறீர்? பொல்லாதவர் தம்மைவிட நேர்மையாளரை விழுங்கும்பொழுது நீர் ஏன் அமைதியாய் இருக்கின்றீர்?" என்கின்றார். உண்மையில் கடவுள் கயவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பவரும் கிடையாது. பொல்லாதவர்களைக் கண்டு அமைதியாய் இருப்பவரும் கிடையாது. அவர் அவர்களுக்குத் தக்க வெகுமதி அளிப்பார். அதை இன்றைய முதல் வாசகத்தின் இறுதிப் பகுதியில் வாசிக்கின்றோம்.

நேர்மையாளர் தம் நம்பிக்கையால் வாழ்வடைவர்

ஆண்டவராகிய கடவுள், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் தன்னுடைய மக்களைத் துன்புறுத்தியதைக் கண்டு, பொறுமையாக இருக்கவில்லை. மாறாக, அவனை அழித்தொழித்து, அவனுடைய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார். மட்டுமல்லாமல், தன்மீது நம்பிக்கை கொண்டோருக்கு அவர் புதுவாழ்வினைத் தந்தார். இவ்வாறு அவர் தன்மீது நம்பிக்கை கொண்டோரைக் கைவிடாமல் காத்தார்.

நம்முடைய வாழ்க்கையிலும் துன்பங்களும் சவால்களும் வரும். இத்தகைய சூழ்நிலையில் நாம் ஆண்டவர் இன்னும் மிகுதியாக நம்பிக்கை வைத்து, அவருக்கு உகந்த மக்களாக வாழ முயற்சி செய்வோம்.

சிந்தனை

"கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும். உலகை வெல்வது நமது நம்பிக்கையே" (1யோவா 5: 4) என்பார் புனித யோவான். ஆகையால், நாம் கடவுள்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கைக்கேற்ப வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மத்தேயு 17: 14-20

"உங்களால் முடியாதது ஒன்றும் இராது"

நிகழ்வு

மாவீரன் நெப்போலியன்! இப்பெயரைக் கேள்விப்படாத யாரும் இருக்க முடியுமா...? (வெகு சொற்பமான பேர் இருக்கலாம்). தான் வகுத்த தெளிவான திட்டங்களாலும், போர்த்திறனாலும் ஐரோப்பாக் கண்டத்திலிருந்த பல நாடுகளைக் கைப்பற்றியவர் இந்த நெப்போலியன்.

1796 ஆம் ஆண்டு இவர் தன்னுடைய படைவீரர்களோடு ஆஸ்திரியாவின்மீது படையெடுத்துச் சென்று அந்நாட்டைக் கைப்பற்றினார். முன்னதாக இந்த ஆஸ்திரியா நாடானது இத்தாலியின்மீது போர்த்தொடுத்து, அதைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. இதனால் ஆஸ்திரியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இத்தாலியின்மீது நெப்போலியன் படையெடுத்துச் சென்று, அதைக் கைப்பற்ற நினைத்தார். இதற்காக அவர் ஆஸ்திரியாவிற்கும் இத்தாலிக்கும் இடையே இருக்கக்கூடிய ஆல்ப்ஸ் மலைவழியாக இத்தாலிக்குச் செல்ல வழி இருக்கின்றதா என்று பார்த்து வரத் தன்னுடைய படையில் இருந்த ஒருசில அதிகாரிகளை அனுப்பி வைத்தார்.

அவ்வாறு நெப்போலியனால் அனுப்பி வைக்கப்பட்ட அதிகாரிகள் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு திரும்பி வந்தார்கள். "ஆல்ப்ஸ் மலை வழியாக இத்தாலிக்குச் செல்ல வழி இருக்கின்றதா...? நம்மால் அந்த வழியாகச் செல்ல முடியுமா...?" என்று நெப்போலியன் அவர்களிடம் கேட்டதற்கு, அவர்கள், "இல்லை", "முடியாது" என்று பதில் சொன்னார்கள். இதைக் கேட்ட நெப்போலியன் அவர்களிடம், " நெப்போலியனின் படையில் இருந்துகொண்டு "இல்லை", "முடியாது" என்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லை...! "இல்லை", "முடியாது" போன்ற வார்த்தைகள் நம்முடைய அகராதியிலேயே இருக்கக்கூடாது" என்று சொல்லிவிட்டு, தன்னிடம் இருந்த படைவீரர்களை ஒன்று திரட்டி, இத்தாலியை நோக்கிப் புறப்பட்டார். அவ்வாறு அவர் இத்தாலியை நோக்கிப் புறப்பட்ட ஆண்டு 1800.

வழியில் மிகநீண்ட ஆல்ப்ஸ் மலை வந்தது. அதில் தன்னோடு இருந்த அறுபதாம் படைவீரர்களோடு நெப்போலியன் ஏறினார். இடையில் ஒரு செங்குத்துப் பாறை வந்தது. அவரோடு இருந்த படைவீரர்களெல்லாம் மிரண்டு போய்நிற்க, நெப்போலியன், "வீரர்களே! முன் வைத்த காலைப் பின் வைக்காமல், தொடர்ந்து முன்னேறுங்கள்" என்று கட்டளை பிறப்பித்தார். நெப்போலியனிடமிருந்து இப்படியொரு கட்டளை வந்ததும், படைவீரர்கள் யாவரும் அந்தச் செங்குத்துப் பாறையில் ஏறினார்கள். நான்கு நாள்கள் கடுமையாக போராட்டிற்குப் பிறகு நெப்போலியனோடு இருந்த படைவீரர்கள் யாவரும் அந்தச் செங்குத்துப் பாறை மீதேறி, ஜூன் ஒன்பதாம் நாள் இத்தாலியை அடைந்தார்கள். அங்கு மொண்டேபெல்லோ (Montebello) என்ற இடத்தில், நெப்போலியன் தன்னுடைய படைவீரர்களோடு சேர்ந்து, எதிரிகளோடு போர்தொடுத்து, போரில் வெற்றி பெற்றார். இவ்வாறு மாவீரன் தன்மீதும் தன்னுடைய வீரர்கள்மீதும் கொண்ட அசாதரண நம்பிக்கையால், தன்னுடைய அகராதியில் "முடியாது" என்ற வார்த்தையே இல்லாமல் செய்தார்.

ஆம், இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு சொல்வது போல், "உங்களால் முடியாதது ஒன்றும் இராது" என்பதற்கேற்ப, மாவீரன் நெப்போலியன் தன்னுடைய நம்பிக்கையால், முடியாதது எதுவும் கிடையாது என்று சாதித்துக் காட்டினார். "உங்களால் முடியாதது இராது" என்று இயேசு சொல்லக்கூடிய இச்சொற்களின் பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

சீடர்களால் பேயை ஓட்ட முடியாமல் போதல்

நற்செய்தியில், பேயின் கொடுமைக்கு உட்பட்டு வலிப்பு நோயால் பெரிதும் பாதிக்கப்பட்ட தன்னுடைய மகனை நலப்படுத்த வேண்டுமென்று தந்தை ஒருவர் அவனை இயேசுவின் சீடர்களிடம் கூட்டிக்கொண்டு வருகின்றார். இயேசுவின் சீடர்களால் அவனை நலப்படுத்த முடியவில்லை. இயேசு தன்னுடைய சீடர்களுக்கு பேயை ஓட்ட அதிகாரம் கொடுத்திருந்தார் (மத் 10: 1). அப்படியிருந்தும் அவர்களால் பேயை ஓட்ட முடியவில்லை. அதற்குக் காரணமென்ன என்பதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

சீடர்களின் நன்மையின்மை

இயேசுவின் சீடர்களால் பேயை ஓட்ட முடியாமல் போனதற்குக் காரணம், அவர்களிடம் நம்பிக்கை இல்லாமல் போனதாலேயே ஆகும். ஒருவேளை அவர்கள் இயேசு தங்களுக்குக் கொடுத்த ஆற்றலில் நம்பிக்கைகொண்டு, சிறுவனிடமிருந்து பேயை ஓட்டியிருந்தால், அவர்களால் முடிந்திருக்கும். இயேசுவின் சீடர்ககள் தங்களால் ஏன் பேயை ஓட்ட முடியவில்லை என்று இயேசுவிடம் கேட்கின்றபொழுது, இயேசு அவர்களிடம், "உங்கள் நம்பிக்கை குறைவுதான் காரணம்... உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால்... உங்களால் முடியாதது ஒன்றும் இராது" என்கின்றார். ஆம், நமக்கு இறைவன்மீது நம்மீதும் நம்பிக்கை இருந்தால், நம்மால் முடியாதது ஒன்றும் இராது.

ஆகையால், நாம் இறைவன்மீது ஆழமான நம்பிக்கை வைத்து, நம்முடைய வாழ்க்கையை வாழ்வோம்.

சிந்தனை

"நம்மை மனிதராக்குபவை மாபெரும் நம்பிக்கைகள்" என்பார் டென்னிஸன் என்ற அறிஞர். ஆகையால், நம்முடைய வாழ்விற்கு அர்த்தம் தரும் நம்பிக்கையை ஆண்டவரிடமும் நம்மிடமும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை இறைவாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!