Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     07 ஜூலை 2020  

பொதுக்காலம் 18ஆம் வாரம்

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 இரத்தக் கறை படிந்த நகருக்கு ஐயோ கேடு!

இறைவாக்கினர் நாகூம் நூலிலிருந்து வாசகம் 1: 15; 2: 2; 3: 1-3, 6-7

"வெற்றி! வெற்றி!" என்று முழங்கி நற்செய்தி அறிவிப்பவனின் கால்கள் மலைகளின்மேல் தென்படுகின்றன! யூதாவே, உன் திருவிழாக்களைக் கொண்டாடு! உன் பொருத்தனைகளை நிறைவேற்று! ஏனெனில், தீயவன் உன் நடுவில் இனி வரவே மாட்டான்; அவன் முற்றிலும் அழிந்துவிட்டான்.

இஸ்ரயேலின் மேன்மை போலவே யாக்கோபின் மேன்மையை ஆண்டவர் மீண்டும் நிலைநாட்டுகின்றார்; கொள்ளைக்காரர்கள் அவர்களைக் கொள்ளையடித்தனர்; அவர்களின் திராட்சைக் கொடிகளையும் அழித்துப் போட்டனர்.

இரத்தக் கறை படிந்த நகருக்கு ஐயோ கேடு! அங்கு நிறைந்திருப்பது எல்லாம் பொய்களும் கொள்ளைப் பொருளுமே! சூறையாடலுக்கு முடிவே இல்லை! சாட்டையடிகளின் ஓசை! சக்கரங்களின் கிறிச்சிடும் ஒலி! தாவிப் பாயும் புரவிகள்! உருண்டோடும் தேர்கள்! குதிரை வீரர்கள் பாய்ந்து தாக்குகின்றனர்; வாள் மின்னுகின்றது; ஈட்டி பளபளக்கின்றது; வெட்டுண்டவர்கள் கூட்டமாய்க் கிடக்கின்றனர்; பிணங்கள் குவிந்து கிடக்கின்றன; செத்தவர்களுக்குக் கணக்கே இல்லை; அந்தப் பிணங்கள் மேல் மனிதர் இடறி விழுகின்றனர்.

அருவருப்பானவற்றை உன்மீது எறிவேன்; உன்னை இகழ்ச்சியுடன் நடத்திப் பகடிப் பொருள் ஆக்குவேன். உன்னை நோக்குவோர் எல்லாரும் உன்னிடமிருந்து பின்வாங்கி, "நினிவே பாழாய்ப் போனது; அவளுக்காகப் புலம்புவோர் யாரேனும் உண்டோ?" என்று சொல்வார்கள்; உன்னைத் தேற்றுவோரை எங்கே தேடுவேன்?

ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - இச 32: 35cd-36cd. 39a-d. 41 . (பல்லவி: 39c) Mp3
=================================================================================

பல்லவி: கொல்பவரும் நானே; உயிரளிப்பவரும் நானே!
35cd
அவர்களது அழிவுநாள் அண்மையில் உள்ளது; அவர்களுக்கு வரப்போகும் கொடுமைகள் தீவிரமாகின்றன.
36cd
ஆண்டவரே அவர் மக்களுக்குத் தீர்ப்பிடுவார்; அவர்தம் ஊழியர்களுக்காக அவர் மனமிரங்கிடுவார். - பல்லவி

39a-d
நானே இருக்கிறவர்! என்னைத் தவிர வேறு தெய்வங்கள் இல்லை என்பதை இப்பொழுது உணர்ந்து கொள்ளுங்கள்! கொல்பவரும் நானே; உயிரளிப்பவரும் நானே! காயப்படுத்துபவரும்நானே; குணமாக்குபவரும் நானே! - பல்லவி

41
மின்னும் என் வாளை நான் தீட்டி, நீதித் தீர்ப்பை என் கையில் எடுக்கும்போது என் பகைவரைப் பழிவாங்கி என்னைப் பகைப்பவருக்குப் பதிலடி கொடுப்பேன். - பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
மத் 5: 10

அல்லேலூயா, அல்லேலூயா! நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================

ஒருவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 24-28

அக்காலத்தில்

இயேசு தம் சீடரைப் பார்த்து, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவர். மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?

மானிட மகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கு ஏற்பக் கைம்மாறு அளிப்பார். நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இங்கே இருப்பவருள் சிலர் மானிட மகனது ஆட்சி வருவதைக் காண்பதற்கு முன் சாகமாட்டார்" என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 நாகூம் 1: 15, 2: 2, 3: 1-3, 6-7

தீயவன் முற்றிலும் அழிந்துவிட்டான்

நிகழ்வு

சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரியா ஜெர்மனி எல்லைப் பகுதியில் இளைஞன் ஒருவன் வாழ்ந்து வந்தான். இவன் ஒவ்வொருநாளும் பக்கத்திலிருந்த ஆஸ்திரியாவிலிருந்து தன்னுடைய வீட்டிற்கு மிதிவண்டியில், ஒரு சாக்குப் பையில் ஏதோ ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தான். அவன்மீது சந்தேகப்பட்ட ஜெர்மனியின் எல்லைப் பகுதியில் இருந்த காவலர், அவனை நிறுத்தி, அவன் வைத்திருந்த சாக்குப் பையைச் சோதனையிட்டனர். அதில் வெறும் மண் மட்டுமே இருந்ததால், அவனை விட்டுவிட்டார். இப்படியே பல நாள்கள் தொடர்ந்தன.

ஒருநாள் எல்லைப் பகுதியில் இருந்த அந்தக் காவலர், "நம்முடைய நாட்டில் இல்லாத மண்ணா ஆஸ்திரியாவில் கிடைக்கிறது...? பிறகு எதற்கு இவன் ஒவ்வொருநாளும் சாக்குப் பையில் மண்ணை அள்ளிக்கொண்டு, அதை மிதிவண்டியில் வைத்துக்கொண்டு வருகின்றான்...?" என்று யோசித்துப் பார்த்துவிட்டு, அவனுடைய போக்கை இன்னும் கூர்மையாகக் கவனிக்கத் தொடங்கினார். அப்பொழுதுதான் தெரிந்தது, அவன் கடத்துவது அல்ல, மிதிவண்டியை என்று.

இது குறித்து அந்தக் காவலர் அவனிடம் தீவிர விசாரணை நடத்தியபொழுது, அவன், "நான் ஒவ்வொருநாளும் மணலை அல்ல, மிதிவண்டியைத் கடத்தினேன்" என்ற உண்மையை ஒத்துக்கொண்டு. இதனால் அவன் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டான்.

தீயவர்கள் நன்றாக இருப்பது போன்றும், தண்டனையிலிருந்து தப்பிப்பது போன்றும் நமக்குத் தோன்றலாம்; ஆனால், நிச்சயம் ஒருநாள் அவர்களுக்கு அழிவு வரும்; அதிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது. அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக் கூறுகின்றது. இன்றைய முதல் வாசகம் தீயவர்களாக, இரத்த வெறிபிடித்தவர்களாக இருந்த அசீரியர்களின் அழிவைப் பற்றி எடுத்துச் சொல்கின்றது. உண்மையில் அசீசியர்கள் செய்த தவறு என்ன...? அவர்களுக்கு எப்படிப்பட்ட தண்டனை கிடைத்தது...? என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்

நினிவே நகருக்கு ஏற்படவிருந்த அழிவு முன்னறிவிக்கப்படல்

இன்றைய முதல் வாசகமானது இறைவாக்கினர் நாகும் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. சிறிய இறைவாக்கினரான நாகும், கி.மு.612 ஆம் ஆண்டு அசீரியர்களின் தலைநகரான நினிவே நகர் பாபிலோனியர்களால் அழிக்கப்படுதைவதக் குறித்து முன்னறிவிக்கின்றார்.

அசீரியா நாடானது, ஆண்டவராகிய கடவுள், சினத்தில் பயன்படுத்திய கோல்; இஸ்ரயேல் மக்களுக்குத் தண்டனை வழங்க அவர் ஏந்திய தடி (எசா 10: 5). இஸ்ரயேல் மக்கள் அல்லது வடநாட்டைச் சார்ந்தவர்கள் ஆண்டவருடைய கட்டளையை மீறி, பாகால் தெய்வத்தை வழிபட்டார்கள். இதனால் கடவுள் அவர்களுக்குத் தண்டனை வழங்கவும், தண்டித்துத் திருத்ததும் அசீரியர்களைக் கோலாக, தடியாகப் பயன்படுத்தினார். உண்மை இப்படி இருக்க, அசீரியர்களோ எல்லாம் தங்களால்தான் ஆனது... தங்களுடைய வல்லமையால்தான் எல்லா நாடுகளையும் கைப்பற்றினோம் என்ற ஆணவத்தில் ஆடினார்கள். மேலும் தங்களுடைய கைகளை இரத்தக் கறைபடுத்திக் கொண்டார்கள். இத்தகைய சூழ்நிலையில்தான் கடவுள் இறைவாக்கினர் நாகும் வழியாக அசீரியர்களின் தலைநகரான நினிவே எதிரிகளால் வீழ்த்தப்படும் என்றும், கொள்ளையர்களால் அந்நகர் கொள்ளையடிக்கப்படும் என்றும் சொல்கிறார்.

ஒருவர் தாம் விதைப்பதையே அறுவடை செய்வார்

புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய மடலில் இவ்வாறு கூறுவார்: "ஒருவர் தாம் விதைப்பதையே அறுவடை செய்வார்" (கலா 6:7). புனித பவுல் கூறுகின்ற இந்த வார்த்தைகள் அசீரியர்களுக்கு அப்படியே பொருந்திப் போவதைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம். இரத்தத்தைக் கறை படிந்த கைகளைக் கொண்ட அசீரியர்களின் தலைநகரான நினிவே பகைவர்களால் அழிக்கப்படும் என்று இறைவாக்கினர் நாகும் சொன்னார். அவர் சொன்னது போன்றே கி.மு. 612 ஆம் ஆண்டு பாபிலோனியர்களால் அழிக்கப்பட்டது.

அசீரியர்களுக்கு நேர்ந்த இந்த அழிவு நமக்கு இரண்டு செய்திகளை எடுத்துச் சொல்கின்றது. ஒன்று. நாம் எதை விதைக்கின்றோமோ, அதையோ அறுவடை செய்வோம். ஒருவேளை நாம் நன்மையை விதைத்தால், நம்மையையும்; தீமையை விதைத்தால் தீமையையும் அறுவடை செய்வோம். இரண்டு, இந்த உலகத்தில் கடவுளைத் தவிர வேறு யாரும் வல்லவரோ, பெரியவரோ கிடையாது. அசீசியர்கள் தங்களைவிட பெரியவர் யாரும் கிடையாது என்று நினைத்தார்கள்; ஆனால் பாபிலோனியர்கள் அவர்களை வெற்றி கொண்டார்கள். பின்னாளில் பாபிலோனியர்களை ஆண்டவர் ஒன்றுமில்லாமல் செய்தார். ஆகையால், நாம்தான் பெரியவர்... எல்லாம் தெரிந்தவர் என்ற ஆணவத்தில் நாம் ஆடாமல், தாழ்ச்சியோடு வாழக் கற்றுக் கொள்வோம்.

சிந்தனை

"ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுகேற்பக் கடவுள் கைம்மாறு செய்வார்" (உரோ 2: 6) என்பார் பவுல். ஆகையால், நாம் நம்முடைய செயல்களுக்கேற்பக் கைம்மாறு பெறுவோம் என்ற உண்மையை உணர்ந்தவர்களாய், இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மத்தேயு 16: 24-28

"தம் வாழ்வையே இழப்பாரெனில்..."

நிகழ்வு

இயேசு சபையின் மூன்றாவது தலைவராக இருந்தவர் புனித பிரான்சிஸ் போர்ஜியா. இவர் இயேசு சபையில் சேர்வதற்கு முன்னர், ஸ்பெயின் நாட்டில் உள்ள காண்டியாவின் நான்காவது பிரபுவாக இருந்தவர். திருமணமான இவருக்கு ஏழு குழந்தைகள் இருந்தார்கள்.

1539 ஆம் ஆண்டு, மே திங்கள் ஒன்றாம் நாள், ஸ்பெயின் நாட்டின் அழகுப் பதுமையாகவும், மன்னர் நான்காம் சார்லசின் மனைவியாகவும் வலம்வந்த இளவரசி ஈசபெல்லா தனது முப்பத்து ஐந்தாம் வயதில் திடீரென இறந்துபோனாள். அவளுடைய இறப்பைச் சிறிதும் எதிர்பார்த்திராத அவளுடைய கணவனான நான்காம் சார்லஸ் அவளது உடலை அப்படியே போட்டுவிட்டு, ஆசிரமத்தை நோக்கி ஓடிப்போனான். இதனால் பிரபுவாக இருந்த பிரான்சிஸ் போர்ஜியா இளவரசி ஈசபெல்லாவின் இறந்த உடலை அடக்கம் செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அக்கால வழக்கத்தின்படி, மன்னர் குடும்பத்திலிருந்து ஒருவர் இறந்துவிட்டால், அவரது உடலை இத்தாலியில் உள்ள ஏழு கோயில்களில் மக்களுடைய பார்வைக்கு வைத்துவிட்டு, அதன்பிறகுதான் அடக்கம்செய்ய வேண்டும். அதன்படி காண்டியாவின் பிரபுவான பிரான்சிஸ் போர்ஜியா, இறந்துபோன ஈசபெல்லாவின் உடலை இத்தாலியில் உள்ள ஏழு கோயில்களில் மக்கள் பார்வைக்கு வைத்து, அதை யாரும் திருடிக்கொண்டு போய்விடாமல் பாதுகாத்து வந்தார். ஏழாம் நாளில், பெட்டியைத் திறந்து, "இவர் இன்னார்" என்று மக்களிடம் சான்று பகரவேண்டும். அந்த அடிப்படையில் இவர் இளவரசி ஈசபெல்லாவின் உடல் இருந்த பெட்டியைத் திறந்து, "உண்மையில்... இது இளவரசி ஈசபெல்லாதான்" என்று சொல்ல முற்பட்டபொழுது, அதிர்ந்து போனார். காரணம், எழில்மிகு ஓவியம் போன்றும், அழகுச் சிலை போன்றும் இருந்த இளவரசி ஈசபெல்லாவின் உடல் வதங்கிப் போய், நாற்றம் அடிக்கத் தொடங்கியது.

அப்பொழுது அவர், "வதங்கிப் போய் நாற்றமடிக்கும் இந்த உடலுக்குத்தான் நான் இத்தனை ஆண்டுகளும் பணிவிடை செய்தானா! இனிமேல் நான் கடவுளைத் தவிர, வேறு யாருக்கும் பணிவிடை செய்யமாட்டேன்!" என்று தீர்க்கமானதொரு முடிவினை எடுத்து, தன்னுடைய குடும்பத்திற்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்துவிட்டு, புனித இஞ்ஞாசியார் நிறுவிய இயேசு சபையில் சேர்ந்து, பின்னாளில் ஒரு புனிதராக உயர்ந்தார் (நெறிகாட்டும் ஆளுமைகள் 01 சேவியர் அந்தோனி. சே.ச)

புனித பிரான்சிஸ் போர்ஜியாவின் வாழ்க்கையில் நடந்த இந்த நிகழ்வு அல்லது அவருக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் நமக்கொரு முக்கியமான செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது என்னவெனில், ஒருவர் அழகு நிறைந்தவராகவும், அதிகாரம் கொண்டவராகவும், ஆயிரம் கோடிகளுக்குமேல் அதிபதியாகவும் இருக்கலாம்; ஆனால் அவர் தன்னுடைய வாழ்வை இழப்பாரெனில், அவருக்கு ஒரு பயனும் கிடைக்கப் போவதில்லை. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களிடம், "மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும், தம் வாழ்வையே இழப்பாரெனில், அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?" என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்தச் சொற்களின் பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொள்ள முற்படும் மனிதர்கள்

நற்செய்தியில் இயேசு, தன்னைப் பின்பற்றி வருகின்றவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதைக் குறித்துப் பேசும்பொழுது, முதலில் தன்னலத்தைத் துறக்கவேண்டும் என்கின்றார். இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், ஒருவர் தன் மையம் சார்ந்த வாழ்க்கை வாழ்வதை விட்டுவிட்டு, இறைமையம் சார்ந்த வாழ்க்கை வாழவேண்டும் என்று சொல்லலாம். ஆனால், இன்றைக்குப் பலர் தன் மையம் சார்ந்த வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்பதுதான் மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது. பொருள் சேர்த்து, பணம் சேர்த்து, உலகையே தங்களுக்கு ஆதாயமாக்கிக் கொள்ளப் போராடும் இவர்கள், மிகுதியான உடைமையைக் கொண்டிருப்பதால் மட்டும் ஒருவருக்கு வாழ்வது வந்துவிடாது (லூக் 12: 15) என்ற உண்மையை மறந்துபோய் இருக்கின்றார்கள். இவர்கள் தங்களுடைய வாழ்வை ஆய்வுக்கு உட்படுத்திப் பார்ப்பது நல்லது.

இயேசுவின் பொருட்டுத் தம்மையே இழப்பவர் வாழ்வடைவர்

உலகை ஆயதமக்கிக் கொள்ள முற்படுவோர் அதை இழந்துவிடுவர் என்று சொல்லும் இயேசு, தன் பொருட்டும், நற்செய்தியின் பொருட்டும் அதை இழக்கத் துணிபவர், வாழ்வடைவர் என்று குறிப்பிடுகின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகளுக்கு ஏற்ப எத்தனனையோ புனிதர்கள், மறைச்சாட்சிக்ள தங்களுடைய உயிரை இழந்ததன் மூலம் அதை காத்துக் கொண்டார்கள். நாமும் இயேசுவின் பொருட்டு, நம் வாழ்வை இழக்கத் துணிந்தால் அதைக் காத்துக்கொள்ளலாம் என்பது உறுதி.

நாம் இயேசுவின் பொருட்டு நம்மையே இழக்கத் தயாரா? சிந்திப்போம்.

சிந்தனை

"ஆகவே, அனைத்திற்கும் மேலாக, அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள்; அப்பொழுது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்" (மத் 6: 33) என்பார் இயேசு. ஆகையால், நாம் எப்பொழுதும் கடவுளுக்கு ஏற்புடையவற்றை நாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!