Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     06  ஆகஸ்ட் 2020  

பொதுக்காலம் 18ஆம் வாரம்

=================================================================================
முதல் வாசகம்  ஆண்டவரின் தோற்றமாற்றம் விழா
=================================================================================
 அவருடைய ஆடை வெண்பனி போல இருந்தது.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 9-10, 13-14

நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன; தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்; அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவரது தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன; அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன. அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாலான ஓடை தோன்றிப் பாய்ந்தோடி வந்தது; பல்லாயிரம் பேர் அவருக்குப் பணி புரிந்தார்கள்; பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்; நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது; நூல்கள் திறந்து வைக்கப்பட்டன.

இரவில் நான் கண்ட காட்சியாவது; வானத்தின் மேகங்களின் மீது மானிடமகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டுவரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்குக் கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்துபோகாது.

ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் -
=================================================================================
திபா 97: 1-2. 5-6. 9 . (பல்லவி: 9a, 1a) Mp3

பல்லவி: உலகனைத்தையும் ஆளும் உன்னதராம் ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்.
1
ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக!
2
மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன; நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். - பல்லவி

5
ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள் மெழுகென உருகுகின்றன.
6
வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. - பல்லவி

9
ஏனெனில், ஆண்டவரே! உலகனைத்தையும் ஆளும் உன்னதர் நீர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலானவர் நீரே! - பல்லவி

இரண்டாம் வாசகம்

விண்ணிலிருந்து வந்த இக்குரலொலியை நாங்களே கேட்டோம்.

திருத்தூதர் பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 16-19

சகோதரர் சகோதரிகளே,

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் பற்றி நாங்கள் உங்களுக்குத் தெரிவித்தபோது சூழ்ச்சியாகப் புனைந்த கதைகளை ஆதாரமாகக் கொண்டு பேசவில்லை. நாங்கள் அவரது மாண்பை நேரில் கண்டவர்கள்.

"என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று மாட்சிமிகு விண்ணகத்திலிருந்து அவரைப் பற்றிய குரல் ஒலித்தபோது, தந்தையாகிய கடவுளிடமிருந்து மதிப்பும் மாட்சியும் பெற்றார். தூய மலையில் அவரோடு இருந்தபோது விண்ணிலிருந்து வந்த இக்குரலொலியை நாங்களே கேட்டோம்.

எனவே, இறைவாக்கினர் கூறியது இன்னும் உறுதியாயிற்று. அவர்கள் கூறியதை நீங்கள் கருத்திற் கொள்வது நல்லது; ஏனெனில் பொழுது புலர்ந்து விடிவெள்ளி உங்கள் இதயங்களில் தோன்றும் வரை அது இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கைப் போன்றது.

ஆண்டவரின் அருள்வாக்கு.


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
மத் 17: 5c

அல்லேலூயா, அல்லேலூயா! என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். அல்லேலூயா. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 1-9


அக்காலத்தில்

இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளி போன்று வெண்மையாயின.

இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தனர்.

பேதுரு இயேசுவைப் பார்த்து, "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?" என்றார்.

அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த போது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள் மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்" என்று ஒரு குரல் ஒலித்தது.

அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள்.

இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, "எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்" என்றார். அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.

அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்த போது இயேசு, "மானிடமகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும் வரை இக்காட்சியைப் பற்றி எவருக்கும் சொல்லக் கூடாது" என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 எரேமியா 31: 31-34

"என் சட்டத்தை அவர்களது இதயத்தில் எழுதி வைப்பேன்"

நிகழ்வு

2007 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் அமெரிக்காவிலிருந்து வெளிவந்த செய்தித்தாள்கள் இப்படியொரு செய்தியைத் தாங்கி வந்தன: "ஹீரோஷிமாவில் குண்டு வீசி, பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த பால் டிப்பெட்ஸ் (Paul Tibbets) என்பவன் இறந்துவிட்டான். இவன் இறக்கின்றபொழுதுகூட தான் செய்த குற்றத்திற்கு மன்னிப்புக் கேட்காமல் இறந்தான்."

மக்கள் இந்தச் செய்தியைப் படித்துப் பார்த்துவிட்டு, இப்படியொரு கல் நெஞ்சக்காரனையா இந்த அமெரிக்க மண் பெற்றெடுத்தது என்று அவனைத் திட்டத் தீர்த்தனர்.

இந்தப் பால் டிப்பெட்ஸ் இரண்டாம் உலகப் போரின்பொழுது B-29 எனப்படும் போர் விமானத்தின், விமான ஓட்டியாக இருந்தான். தொடக்கத்தில் இவன் ஜெர்மனியின்மீது குண்டுகளை வீசினான். ஆனால், இவன் செய்த மிகக் கொடூரமான செயல், 1945 ஆண்டு, ஆகஸ்ட் திங்கள் 6 ஆம் நாள், ஜப்பானில் உள்ள ஹீரோஷிமா என்ற இடத்தில் "Little Boy"என்ற அணுகுண்டை வீசி, ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் பேரைக் கொன்றதுதான். இதனுடைய பாதிப்பு இன்றைக்கும் தொடர்ந்து கொண்டிருப்பதுதான் வேதனையான ஒரு செய்தி.

இது குறித்து ஒருசிலர் பால் டிப்பெட்ஸிடம், "குண்டு வீசி பல்லாயிரக்கணக்கான மக்களை நீ கொன்றொழித்திருக்கின்றாயே...! அது குறித்து என்றைக்காவது ஒருநாள் "நான் மிகப்பெரிய பாவம் செய்துவிட்டேன்"என்று நினைத்து மனம் வருந்தியிருக்கின்றாயா...?" என்று கேட்டபொழுது, அவன் "நான் எதற்கு வருத்தப்படவேண்டும்! நான் நாட்டுப் பற்றுக்கொண்டவனாய், என்னுடைய கடமையைத்தான் செய்தேன். இன்னும் சொல்லப் போனால், நான் இன்னும் ஏராளமான மக்களைக் கொல்ல முடியவில்லையே என்ற வருத்தம்தான் எனக்கு இருக்கின்றதே ஒழிய, இவ்வளவு பேரைக் கொன்றுவிட்டேனே என்ற வருத்தம் எனக்குக் கொஞ்சம்கூட இல்லை" என்றான்.

இப்படிப் பால் டிப்பெட்ஸ் தான் செய்த குற்றத்திற்குத் தன்னுடைய கடைசிக் காலம் மட்டும் மனம் வருந்தாமல், கல்நெஞ்சக்காரனாய் இருந்ததால்தான், எல்லாருடைய பழிச்சொல்லும் அவன் ஆளானான் (Delights to Cherish Dhinakaran).

பால் டிப்பெட்ஸ் மட்டுமல்ல, நாமும்கூட பலநேரங்களில் கனிவான இதயத்தோடு வாழாமல், கல்லான நெஞ்சத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இத்தகைய சூழ்நிலையில் ஆண்டவராகிய கடவுள், என் சட்டத்தை அவர்களுடைய இதயத்தில் எழுதி வைப்பேன் என்கின்றார். ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எரேமியா வழியாக சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளின் பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

உடன்படிக்கையை மீறிய இஸ்ரயேல் மக்கள்

ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களோடு, சீனாய் மலையில் ஓர் உடன்படிக்கை செய்தார் (விப 19-20). இந்த உடன்படிக்கையின் சாரம், கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குத் தந்தையாகவும், அவர்கள் அவருக்கு மக்களாகவும் இருப்பார்கள் என்பதுதான். இந்த உடன்படிக்கையை இஸ்ரயேல் மக்கள் அடிக்கடி மீறினார்கள். அதனால் யோசுவாவின் காலத்திலும் (யோசு 23-24), சாமுவேலின் காலத்திலும் (1சாமு 12), மன்னர் எசேக்கியாவின் காலத்திலும் (2 குறி 29: 31), யோசியாவின் காலத்திலும் (2 குறி 34-35) உடன்படிக்கை புதுபிக்கப்பட்டது. அப்படி இருந்தபொழுதும் இஸ்ரயேல் மக்கள் கடவுளோடு செய்துகொண்டு உடன்படிக்கையை மீறிப் பாகால் தெய்வத்தை வழிபட்டு வந்தார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் கடவுள் புதிய உடன்படிக்கையை அவர்களோடு செய்கின்றார்.

புதிய உடன்படிக்கை செய்யும் ஆண்டவர்

கடவுள் இஸ்ரயேல் மக்களோடு செய்துகொள்ளும் இந்த உடன்படிக்கை பழைய உடன்படிக்கை போன்றது அல்ல. ஏனெனில் பழைய உடன்படிக்கை கற்பலகையில் எழுதப்பட்டது. புதிய உடன்படிக்கையோ இதயத்தில் எழுதப்பட்டது (2 கொரி 3:3; எசே 11: 19-20). இப்புதிய உடன்படிக்கையின் மூலம் ஒருவர் ஆண்டவரை அறிந்துகொள்பவராக இருக்கின்றார். காரணம், இப்புதிய உடன்படிக்கை ஒருவருடைய இதயத்தில் எழுதப்பட்டிருக்கின்றது என்பதால்தான். கடவுளின் உடன்படிக்கை அல்லது அவருடைய சட்டம் நம்முடைய இதயத்தில் எழுதப்பட்டிருக்கின்றது எனில், நாம் நம்மிடம் உள்ள கல்லான இதயத்தை எடுத்துவிட்டு, கனிவுள்ள நெஞ்சத்தோடு வாழவேண்டும். அதுதான் இந்த உடன்படிக்கை உணர்த்தும் செய்தி.

ஆகையால், கடவுளோடு நாம் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு ஏற்ப கனிவுள்ள நெஞ்சத்தினாய் வாழ்ந்து, அவருக்கு உகந்த மக்களாவோம்.

சிந்தனை

கடவுள் மனிதர்களை அளவிடும்பொழுது, அவர்களுடைய மூளை எவ்வளவு பெரிது என்று அளவிடுவதில்லை; அவர்களுடைய இதயம் எவ்வளவு பெரிது என்றே அளவிடுவார். ஆகையால், நாம் ஆண்டவர் நம்முடைய இதயத்தில் எழுதிவைத்திருக்கின்ற திருச்சட்டமாம் அன்புக் கட்டளையின்படி நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மத்தேயு 16: 13-23

நம்முடைய விருப்பமல்ல, இறை விருப்பம் நிறைவேற உழைப்போம்

நிகழ்வு

"சிறுமலர்"என அன்போடு அழைக்கப்படும் குழந்தை இயேசுவின் புனித தெரேசா பிரான்ஸ் நாட்டில் உள்ள அலென்கோன் என்ற இடத்தில் 1873 ஆண்டு பிறந்தார். இவரோடு பிறந்தவர்கள் மொத்தம் ஒன்பது பேர், இதில் நான்கு பேர் சிறுவயதிலேயே இறந்து போனார்கள். இது ஒருபுறம் இருக்க, தெரேசாவிற்கு நான்கு வயது நடக்கும்பொழுது, இவருடைய தாயார் இறந்து போனார். இதனால் இவருடைய தந்தை லூயிஸ்தான் எல்லாரையும் வளர்க்க வேண்டி வந்தது.

பிள்ளைகள் வளர வளர ஒவ்வொருவராகக் கார்மல் சபையில் போய்ச் சேர்ந்தார்கள். தெரேசா மட்டுமே தன் தந்தையோடு இருந்தார். தெரசாவின் தந்தைக்கு வயது ஏறிக்கொண்டு சென்றது. அதேநேரத்தில் அவர் அடிக்கடி நோய்வாய்ப்படவும் செய்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தெரேசாவின் தந்தை, "தெரேசா என்னோடு இருப்பதால், கடைசிக் காலத்தில் அவர் என்னைப் பார்த்துக்கொள்வார்"என்ற எண்ணத்தில் இருந்தார்.

இந்த நேரத்தில் ஒருநாள் தெரேசா தன் தந்தையிடம் வந்து, "அப்பா! நான் என் மூத்த சகோதரிகளைப் போன்று கார்மல் சபையில் சேர்ந்து, துறவியாகப் போகிறேன்" என்று தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தினார். இது லூயிஸின் மனத்தில் பேரிடியாக இறங்கியது. இருந்தாலும், லூயிஸ் தன்னுடைய மகளின் விருப்பத்திற்கு மறுப்பேதும் சொல்லாமல், அவரை அவருடைய மூத்த சகோதரிகளைப் போன்று கார்மல் சபைக்குப் போக அனுமதித்தார்.

தன்னுடைய பிள்ளைகளையெல்லாம் கார்மல் துறவற சபைக்கு அனுப்பிய பின்பு லூயிஸ் தனித்து விடப்பட்டார்; அந்தக் கவலையாலேயே அவர் நோய்வாய்ப்பட்டார். அப்பொழுது அவர் வாழ்ந்துவந்த பகுதியில் இருந்த மக்களெல்லாம், "பெற்ற பிள்ளைகளையெல்லாம் துறவிமடத்திற்கு அனுப்பிவிட்டு, இப்படி நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் மனிதரை எங்காவது பார்த்ததுண்டா...?" என்று சாடை மாடையாக அவரைத் திட்டித் தீர்த்தார்கள். இதற்காகவெல்லாம் லூயிஸ் கவலைப்படவில்லை. மாறாக, தான் தன்னுடைய பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றியதன் வழியாகக் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றிவிட்டேன் என நினைத்து மகிழ்ச்சியடைந்தார்.

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய விருப்பம் அல்ல, இறை விருப்பம் நிறைவேற உழைக்கவேண்டும். அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக் கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகமும் நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துக் கூறுகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசு பாடுகள் படக்கூடாது என விரும்பிய பேதுரு

இன்றைய நற்செய்தி வாசகம் இரண்டு பகுதிகளை உள்ளடக்கி இருக்கின்றது. முதற்பகுதியில் இயேசு தன்னைப் பற்றி மக்கள் என்ன சொல்கின்றார்கள்...சீடர்களாகிய நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்பதாகவும், இரண்டாவது பகுதியில் இயேசு தன்னுடைய பாடுகளை முதன்முறையாகத் தன் சீடர்களிடம் எடுத்துச் சொல்வதாகவும் இருக்கின்றது. நாம் நம்முடைய சிந்தனைக்கு, இன்றைய நற்செய்தி வாசகத்தின் இரண்டாவது பகுதியை எடுத்துக்கொள்வோம்.

தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்லவேண்டாம் என்று தன் சீடர்களிடம் சொல்லிவிட்டு, இயேசு அவர்களிடம் தன்னுடைய பாடுகள், இறப்பு, உயிர்ப்பு ஆகியவற்றை முதன்முறையாக எடுத்துச் சொல்கின்றார். இயேசு இவ்வாறு சொல்லி முடித்ததும், பேதுரு இயேசுவைத் தனியாக அழைத்துக்கொண்டு போய், "ஆண்டவரே, இது வேண்டாம்" என்கின்றார். பேதுருவின் விருப்பமெல்லாம், மெசியா மக்களை ஆளக்கூடியவர், அப்படிப்பட்டவர் பாடுகள் படக்கூடாது என்பதாகவே இருந்தது. அதனால்தான் இயேசு தன் பாடுகளை முன்னறிவித்த பொழுது, வேண்டாம் என்று சொல்கின்றார்.

இறைத்திருவுளம் நிறைவேற்றிய இயேசு

பேதுரு இயேசுவிடம், பாடுகள் வேண்டாம் என்று சொன்னபொழுது, இயேசு அவரிடம், "என் கண்முன் நில்லாதே சாத்தானே..." என்கின்றார். இயேசு பேதுருவிடம் சொன்ன இந்த வார்த்தைகள், தன்னை நெடுஞ்சாண் கிடையாக வணங்கினாலே போதும்... பாடுகள் படத் தேவையில்லை... உலக அரசுகள் அத்தனையும் தருவதாகச் சொன்ன சாத்தானிடம் இயேசு சொன்ன வார்த்தைகளை நினைவுபடுத்துபவையாக இருக்கின்றன (மத்4: 8-9). பேதுரு விரும்பியதுபோல் இயேசு பாடுகள் படவில்லை என்றால், அவருடைய பாவம் உட்பட யாருடைய பாவமும் போக்கப்படாது. ஏனெனில், இயேசு இந்த உலகின் பாவம் போக்கவந்த கடவுளின் ஆட்டுக்குட்டி (யோவா 1: 29). எனவேதான் இயேசு பேதுருவிடம், "நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல், மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்" என்கின்றார்.

ஆம், நாம் ஒவ்வொருவரும் பேதுருவைப் போன்று அல்ல, இயேசுவைப் போன்று கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணி, அதன்படி நடக்க முயற்சி எடுக்கவேண்டும். இயேசுவைப் போன்று கடவுளின் திருவுளத்தின்படி நடக்கத் தயாரா? சிந்திப்போம்.

சிந்தனை

"என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்"(திபா 40: 8) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் திருப்பாடல் ஆசிரியர் போன்று, இயேசுவைப் போன்று கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதில் மகிழ்ச்சி அடைவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
ஆண்டவரின் தோற்றமாற்றம் விழா - மறையுரைச் சிந்தனை (ஆகஸ்டு 06)

இன்று திருச்சபையானது ஆண்டவர் இயேசுவின் உருமாற்றப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. இவ்விழா கி.பி.நான்காம் நூற்றாண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டு வரையிலான காலக் கட்டத்திலிருந்து கொண்டாடப் பட்டு வருகிறது. ஆனால் 1456 ஆம் ஆண்டு கிறித்தவர்கள் துருக்கியவர்களை வெற்றிகொண்டதன் பேரில் அப்போது திருத்தந்தையாக இருந்த முதலாம் கலிஸ்டஸ் என்பவர்தான் இதனை உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்தார். அன்றிலிருந்துதான் இவ்விழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருவதாக வரலாறு சொல்கிறது.

இப்போது ஆண்டவர் இயேசுவின் உருமாற்றப் பெருவிழா நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

முதலாவதாக இவ்விழா ஆண்டவர் இயேசுவின் விண்ணக மகிமையை அவருடைய சீடர்களும், அவருடைய மக்களாகிய நமக்கும் எடுத்துரைப்பதாக இருக்கின்றது. நற்செய்தியின் இந்த பகுதிக்கு முன்பாக இயேசு தன்னுடைய சீடர்களிடம் தான் அடைய இருக்கும் சிலுவைச் சாவு, மரணம் ஆகியவற்றைப் பற்றி பேசுகிறார். இதனால் குழம்பிபோன இயேசுவின் சீடர்கள் "இயேசு உண்மையிலே மெசியாதானா ? என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். அவர்களுடைய குழப்பத்தைப் போக்கவே இயேசுவின் இந்த உருமாற்ற நிகழ்வு ஏற்படுகின்றது.

தூய பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் அவர் கூறுவார், "நாங்கள் இயேசுவின் மாண்பை நேரில் கண்டவர்கள். "என் அன்பார்ந்த மகன் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைக்கிறேன்"என்று மாட்சிமிகு விண்ணகத்திலிருந்து அவரைப் பற்றிய குரல் ஒலித்தபோது தந்தையாகிய கடவுளிடமிருந்து மதிப்பும், மாட்சியும் பெற்றார். தூய மலையில் அவரோடு இருந்தபோது விண்ணகத்திலிருந்து வந்த இக்குரலொலியை நாங்களே கேட்டோம்" என்று. ஆக, இயேசுவின் உருமாற்ற நிகழ்வு, இயேசுவின் சீடர்கள் அவரை இறைமகன், மெசியா என ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக நிகழ்ந்தது என்று கூடச் சொல்லலாம்.

அடுத்ததாக இயேசுவின் உருமாற்ற நிகழ்வு, எருசலேமில் அவர் (இயேசு) அடைய இருக்கும் துன்பம், சிலுவைச் சாவு போன்றவற்றின் முன் அடையாளமாக இருக்கின்றது. அதைக் குறித்துப் பேசத்தான் மோசேயும், எலியாவும் அங்கு வந்தார்கள் என்று விவிலிய அறிஞர்கள் சொல்வார்கள். இயேசு தான் அனுபவிக்கப் போகும் பாடுகள், சிலுவைச் சாவு போன்றவற்றைக் கண்டு பயப்படவில்லை. மாறாக அதனைத் துணிவுடன் ஏற்றார். அதன்வழியாக நமக்கு மீட்பினைப் பெற்றுத் தந்தார். ஆகவே இயேசுவின் சீடர்களாக இருக்கும் நாமும் நமது வாழ்வில் வரும் துன்பங்களைத் துணிவுடன் தாங்கிக்கொண்டு தொடர்ந்து நடப்போம். இந்த மண்ணுலகிற்கு உப்பாக, ஒளியாக மாறுவோம்.

அகில உலகத் திருச்சபையின் தலைவராக, பாப்பரசராக இருபத்து ஏழு ஆண்டுகள் இருந்தவர் முன்னாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள். 2005 ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி இந்த மண்ணுலகை விட்டுச் சென்றவர். அவருக்கு புற்று நோய், இடுப்பு வலி, முதுகு வலி, உடல் நடுக்கம் போன்ற பல்வேறு வியாதிகள் இருந்தன. அப்படியிருந்தும் அவர் திருச்சபையை சிறப்பாக வழிநடத்தி வந்தார்.

ஒருமுறை நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஒரு இளம் பத்திரிக்கையாளர் அவரிடம், "திருத்தந்தை அவர்களே, உங்களுக்கு ஏராளமான நோய்கள் இருக்கின்றன. உடலில் அடிக்கடி நடுக்கம் ஏற்படுகிறது. வயது வேறு ஆகிக்கொண்டிருக்கிறது. அதனால் நீங்கள் திருத்தந்தை பொறுப்பை விட்டு விலகி, அதனை வேறொருவருக்குக் கொடுக்கலாமே?" என்று கேட்டார்.

அதற்கு திருத்தந்தை அவர்கள், "இயேசு சிலுவையில் வேதனையை அனுபவித்தபோது உங்களால் அவரை இறக்கிவிட முடிந்ததா? இல்லை அவர்தான் சிலுவையே வேண்டாம் என்று இறங்கி வந்தாரா?. அவர் சிலுவைச் சாவை துணிவுடன் ஏற்றுக்கொண்டார். அதுபோன்றுதான் நானும் எனக்கு வந்த நோய் என்னும் துன்பத்தை துணிவோடு ஏற்றுக்கொண்டு இயேசுவுக்காக சான்று பகர்வேன்" என்றார்.

இதைக் கேட்டு கேள்வி கேட்டவர் அமைதியானார். ஆம், திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் தனக்கு வந்த துன்பத்தை துணிவோடு ஏற்றுக்கொண்டார். அதனால்தான் கடவுளால் அவர் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டார். நாமும் வாழ்வில் நமக்கு வரும் துன்பங்களைத் துணிவோடு தாங்கிக்கொள்வோம். இயேசு விட்டுச் சென்ற பணியை தொடர்ந்து செய்வோம்.

நிறைவாக இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசுவைப் பார்த்து, "இவரே என்னுடைய அன்பார்ந்த மைந்தன். இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலிக்கிறது. இயேசு கிறிஸ்து எப்போதும் தந்தையின் திருவுளம் என்ன? அவருடைய மீட்புத் திட்டம் என்ன? என எல்லாவற்றையும் உணர்ந்து, அதன்படி தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்தார். அதனால்தான் கடவுளிடமிருந்து இப்படிப்பட்ட ஒரு பாராட்டைப் பெறுகிறார். நாமும் இறைவனின் திருவுளம் என்ன என்பதை அறிந்து, அதன்படி நம்முடைய வாழ்வை அமைத்துகொள்ளும்போது, நாமும் கடவுளுக்கு உகந்த அன்பார்ந்த மக்களாகின்றோம்

ஆகவே, இயேசுவின் உருமாற்றப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நல்லநாளில் இயேசுவே இறைமகன் என நாம் ஏற்றுக்கொண்டு வாழ்வோம். அவரைப் போன்று துன்பங்களை துணிவுடன் ஏற்கத் துணிவோம். அதன்வழியாக கடவுளின் அன்பார்ந்த மக்களாவோம், இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!