|
|
05 ஆகஸ்ட் 2020 |
|
பொதுக்காலம்
18ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உனக்கு நான் முடிவில்லாத அன்பு காட்டியுள்ளேன்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 31: 1-7
ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: "அக்காலத்தில் இஸ்ரயேலின் குடும்பங்கள்
எல்லாவற்றுக்கும் நான் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய்
இருப்பார்கள்."
ஆண்டவர் கூறுவது இதுவே: "வாளுக்குத் தப்பிப் பிழைத்த மக்கள்
பாலைநிலத்தில் என் அருளைக் கண்டடைந்தனர்; இஸ்ரயேலர் இளைப்பாற
விரும்பினர். ஆண்டவர் அவர்களுக்குத் தொலையிலிருந்து
தோன்றினார். உனக்கு நான் முடிவில்லாத அன்பு காட்டியுள்ளேன்;
எனவே பேரன்பால் உன்னை ஈர்த்துள்ளேன். கன்னிப் பெண்ணாகிய இஸ்ரயேலே!
உன்னை நான் மீண்டும் கட்டி எழுப்புவேன்; நீயும் கட்டி எழுப்பப்படுவாய்;
மீண்டும் உன் மேளதாளங்களை நீ எடுத்துக் கொள்வாய்; மகிழ்ச்சியுற்றோர்
போல நடனம் ஆடிக்கொண்டு நீ வெளியேறுவாய்; சமாரியாவின் மலைகள்மேல்
திராட்சைத் தோட்டங்களை நீ மீண்டும் அமைப்பாய்; தோட்டக்காரர் பயிரிட்டு
விளைச்சலை உண்டு மகிழ்வர். ஏனெனில் ஒரு நாள் வரும்; அப்பொழுது
எப்ராயிம் மலையில், "எழுந்திருங்கள்; நாம் சீயோனுக்குப்
போவோம்; நம் கடவுளாகிய ஆண்டவரிடம் செல்வோம்" என்று காவலர்அழைப்பு
விடுப்பர்."
ஆண்டவர் தொடர்ந்து கூறுகிறார்: "யாக்கோபை முன்னிட்டு மகிழ்ந்து
பாடுங்கள்; மக்களினத் தலைவனைக் குறித்து ஆர்ப்பரியுங்கள்; முழக்கம்
செய்யுங்கள், புகழ்பாடுங்கள்; "ஆண்டவர் இஸ்ரயேலில் எஞ்சியோராகிய
தம் மக்களை மீட்டருளினார்! " என்று பறைசாற்றுங்கள்."
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
எரே 31: 10. 11-12ab. 13 . (பல்லவி: 10d)
Mp3
=================================================================================
பல்லவி: ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் ஆண்டவர் நம்மைக் காத்தருள்வார்.
10
மக்களினத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; தொலையிலுள்ள கடலோரப்
பகுதிகளில் அதை அறிவியுங்கள்; "இஸ்ரயேலைச் சிதறடித்தவரே அதைக்
கூட்டிச் சேர்ப்பார்; ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் அதைக்
காப்பார்" என்று சொல்லுங்கள். - பல்லவி
11
ஏனெனில், யாக்கோபை ஆண்டவர் மீட்டார்; அவனிலும் வலியவன்
கையினின்று அவனை விடுவித்தார்.
12ab
அவர்கள் வந்து சீயோனின் உச்சியில் பாடி மகிழ்வார்கள்; தானியம்,
திராட்சை இரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுகாலிகள் ஆகிய
ஆண்டவரின் கொடைகளை முன்னிட்டுப் பூரிப்படைவார்கள். - பல்லவி
13
அப்பொழுது கன்னிப் பெண்கள் நடனம் ஆடிக் களித்திருப்பர்; அவ்வாறே
இளைஞரும் முதியோரும் மகிழ்ந்திருப்பர்; அவர்களுடைய அழுகையை
நான் மகிழ்ச்சியாக மாற்றுவேன்; அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்;
துன்பத்திற்குப் பதிலாக இன்பத்தை அருள்வேன். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
லூக் 7: 16
அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர்
தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்.
அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
அம்மா, உமது நம்பிக்கை பெரிது.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 21-28
அக்காலத்தில்
இயேசு தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார். அவற்றின்
எல்லைப் பகுதியில் வாழ்ந்துவந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம்
வந்து, "ஐயா, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய்
பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்" எனக் கதறினார். ஆனால்
இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை.
சீடர்கள் அவரை அணுகி, "நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே,
இவரை அனுப்பிவிடும்" என வேண்டினர். அவரோ மறுமொழியாக, "இஸ்ரயேல்
குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்"
என்றார்.
ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, "ஐயா, எனக்கு உதவியருளும்"
என்றார். அவர் மறுமொழியாக, "பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து
நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" என்றார். உடனே அப்பெண்,
"ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும்
சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே" என்றார்.
இயேசு மறுமொழியாக, "அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர்
விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்" என்று அவரிடம் கூறினார். அந்நேரம்
அவர் மகளின் பிணி நீங்கியது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
எரேமியா 31: 1-7
"நான் உனக்கு முடிவில்லா அன்பு காட்டியுள்ளேன்"
நிகழ்வு
அமெரிக்காவைச் சார்ந்த பிரபல நகைச்சுவை நடிகர் டேவிட் பிரென்னர்
(David Brenner 1936-2014). இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல்,
எழுத்தாளராகவும் வலம்வந்தவர். இவர் தன்னுடைய தந்தை, தன்னிடத்தில்
எவ்வளவு காட்டினார் என்பதற்குச் சொல்லக்கூடிய ஒரு நிகழ்ச்சி.
டேவிட் பிரென்னர் தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்துப் பட்டம்
வாங்கிய பின், அதைத் தனது தந்தையிடம் கொடுத்தார். அப்படிக்
கொடுக்கும்பொழுது, தனது தந்தை தனக்கு விலையுயர்ந்த பரிசினைக்
கொடுப்பார் என்ற எதிர்பார்ப்புடன் கொடுத்தார். இவர் இப்படி எதிர்பார்ப்புடன்
கொடுத்ததற்கும் ஒரு காரணம் இருந்தது, அது என்னவெனில், இவரோடு
படித்துப் பட்டம் வாங்கிய இவருடைய நண்பர்கள் அனைவரும், தாங்கள்
வாங்கிய பட்டத்தைத் தங்களுடைய தந்தையிடம் கொடுத்தபொழுது, அவர்களுடைய
தந்தை அவர்களுக்கு நான்கு சக்கர வண்டி... விலையுர்ந்த ஆடைகள்...
கைக் கடிகாரங்கள் என்று பல பரிசுகளைக் கொடுத்திருந்தார்கள்.
அதனால்தான் இவர் தான் வாங்கிய பட்டத்தைத் தனது தந்தையிடம்
கொடுத்தபொழுது, அவர் ஏதாவது விலையுயர்ந்த பொருளைப் பரிசாகக்
கொடுப்பார் என்ற எதிர்பார்ப்போடு கொடுத்தார்.
ஆனால் இவர் எதிர்பார்த்ததற்கு மாறாக ஒன்று நடந்தது. டேவிட்
பிரென்னர் தன்னுடைய தந்தையிடம் தான் வாங்கிய பட்டத்தைக் கொடுத்தபொழுது,
அவர் தன்னுடைய சட்டைப் பைக்குள் கையைவிட்டு, ஐந்து சென்ட் மதிப்புள்ள
ஒரு நிக்கலை எடுத்து, இவரிடம் கொடுத்து, "இந்த நிக்கலை வைத்து,
ஒரு செய்தித்தாள் வாங்கு. பின்னர் அதில் உள்ள
"வகைப்படுத்தப்பட்ட விளம்பரப் பகுதியை"ப் (Classified Ad
Section) பார்" என்றார். தன்னுடைய தந்தை தன்னிடம் இவ்வாறு சொன்னது
டேவிட் பிரென்னருக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது.
"என்னுடைய நண்பர்களின் தந்தையர்கள் அவர்களுக்கு என்னவெல்லாமோ
பரிசளித்திருக்கும்பொழுது, என்னுடைய தந்தை எனக்கு இந்த நிக்கலைத்
தந்திருக்கின்றாரே!" என்று இவர் மிகவும் வருத்தப்பட்டார். இருந்தாலும்,
இவர் தன்னுடைய தந்தை தன்னிடம் கொடுத்த அந்த நிக்கலை
வைத்துக்கொண்டு ஒரு செய்தித்தாளை வாங்கி, அதில் வகைப்படுத்தப்பட்ட
விளம்பரப் பகுதியைப் பார்த்தார்.
அதில் திரைப்படத்தில் நடிக்க விரும்பமுள்ளவர்கள் விண்ணபிக்கலாம்
என்று என்றொரு விளம்பரம் இருந்தது. நடிப்பில் மிகுந்த ஈடுபாடு
கொண்டிருந்த இவரும் அதில் கொடுக்கப்பட்டிருந்த முகவரிக்கு விண்ணப்பித்தார்.
இதற்கு பின்பு நடந்ததெல்லாம் வரலாறு.
டேவிட் பிரென்னர் திரைவுலகில், புகழின் உச்சியில் இருந்தபொழுது,
தன்னுடைய தந்தை தனக்குக் கொடுத்த அந்த நிக்கலை நினைத்துப்
பார்த்தார். "ஒருவேளை என்னுடைய தந்தை மட்டும் என்னுடைய நண்பர்களின்
தந்தையைப் போன்று எனக்கு விலையுயர்ந்த நான்கு சக்கர வண்டி,
கைக் கடிகாரம் என்று கொடுத்திருந்தால், நான் பத்தோடு பதினொன்றாய்
இருந்திருப்பேன்; ஆனால், அவர் ஒரு நிக்கலைக் கொடுத்து, என்னை
உலகம் முழுவதும் தெரிய வைத்துவிட்டார். என் தந்தை என்மீது எவ்வளவு
அன்பு கொண்டிருந்தால், இப்படியொரு செயலைச் செய்திருப்பார்" என்று
டேவிட் பிரென்னர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
இந்த நிகழ்வில் வருகின்ற டேவிட் பிரென்னரை அவருடைய தந்தை மிகவும்
அன்புசெய்தார். அதனால்தான் அவர் அவருக்கு நல்லதொரு வாழ்வை அமைத்துத்
தந்தார். ஆண்டவராகிய கடவுளும்கூட, இஸ்ரயேலின் எல்லாக் குடும்பங்களின்மீதும்
பேரன்பும் கொண்டிருந்தார். அதனால்தான் அவர் அவர்களை மீண்டுமாகக்
கட்டி எழுப்புவதாகச் சொல்கின்றார். இன்றைய முதல்வாசகம் இத்தகைய
செய்தியை எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது
சிந்தித்துப் பார்ப்போம்.
மீண்டுமாகக் கட்டியெழுப்புவதாகச் சொல்லும் கடவுள்
இஸ்ரயேல், சமாரியா என்றழைக்கப்பட்ட வடநாட்டினர், ஆண்டவராகிய
கடவுள் கொடுத்த கட்டளையை (விப 20: 1-3) மீறி, பாகால் தெய்வத்தை
வழிபட்டார்கள். இதனால் அவர்கள் கி.மு. 722 ஆம் ஆண்டு அசீரியர்களால்
நாடுகடத்தப்பட்டு, பல்வேறு இன்னல்களுக்கு உள்ளானார்கள். இப்படிப்பட்ட
சூழ்நிலையில் அவர்கள் ஆண்டவர் தங்களைப் புறக்கணித்துவிட்டாரோ
என்றுகூட நினைத்துப் பெரிதும் வருந்தினார்கள் (திபா 137:
1-2,4).
அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எரேமியா வழியாக,
"அக்காலத்தில் இஸ்ரேலின் குடும்பங்கள் எல்லாவற்றுக்கும் நான்
கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்...
நான் உன்னை மீண்டும் கட்டி எழுப்பேன்" என்கின்றார். ஆண்டவராகிய
கடவுள் இப்படிச் சொன்னதற்குக் காரணம், அவர் இஸ்ரயேல் மக்கள்மீது
பேரன்பு கொண்டிருந்ததால்தான். மக்கள் தன்னுடைய கட்டளையை மீறித்
தவறு செய்தார்கள்; ஆனாலும் ஆண்டவர் அவர்கள்மீது பேரன்புகொண்டு,
அவர்களுடைய குற்றங்களை மன்னித்து, அவர்களை மீண்டுமாகக் கட்டி
எழுப்புவதாகச் சொல்கின்றார்.
அன்று கடவுள் இஸ்ரயேல்மீது பேரன்பு கொண்டிருந்தது போன்று,
இன்று நம்மீதும் அவர் பேரன்பு கொண்டிருக்கின்றார். இந்த அன்பை
உணர்ந்து, அவரிடம் நாம் திரும்பி வருகின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
"அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது" (திபா 33: 5) என்பார்
திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நம்மைப் பேரன்பால் ஆட்கொள்ளும்
ஆண்டவரிடம் நாம் மிகுந்த அன்பு கொண்டு அவருக்கு உகந்த மக்களாக
வாழ முயற்சி செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 15: 21-28
"ஐயா, எனக்கு இரங்கும்"
நிகழ்வு
கணவன், மனைவி இவர்களுடைய சிறு வயது மகள் என்றிருந்த குடும்பம்
அது. ஒருநாள் இந்தக் குடும்பத்தில் இருந்த மூவரும் இரவு உணவைச்
சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். உணவையெல்லாம்
சாப்பிட்டு முடித்ததும், சிறுமி தன் தாயிடம், "அம்மா அந்த
ஆப்பிள் பழத்தை எடுங்கள்" என்றாள். இதைச் சிறுமியின் தாய்
கண்டுகொள்ளவில்லை. மீண்டுமாகச் சிறுமி தன் தாயிடம், "அம்மா!
உங்களிடம்தான் சொல்கிறேன், அந்த ஆப்பிள் பழத்தை எடுத்துத்
தாருங்கள்" என்றாள். அப்பொழுது சிறுமியின் தாய் இந்தக் கதையைச்
சொல்லத் தொடங்கினாள்.
"ஓரூரில் ஒரு பெரிய தோட்டம் இருந்தது. அதில் அழகழகான
மலர்களும், விதவிதமான பழங்களும் இருந்தன. அந்த ஊரில் இருந்த
மக்கள், தோட்டத்தில் இருந்த மலர்களையும் பழங்களையும்
பறிப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்தார்கள். அவர்களால்
முடியவில்லை. காரணம், தோட்டத்தினுடைய வாயிற்கதவு உயரமாக
இருந்தது. மக்கள் அதில் ஏறியபொழுது, அது இன்னும் உயரமானது.
இதனால் அவர்கள் வாயிற்கதவை சம்மட்டியால் அடித்து, உடைக்க
முயற்சி செய்தார்கள். சம்மட்டிதான் உடைந்தே ஒழிய, வாயிற்கதவு
உடையவில்லை. அதைத் தீயிட்டுக் கொழுத்தியும் பார்த்தார்கள்.
அப்பொழுது அந்தத் தோட்டத்தின் வாயிற்கதவுக்கு எந்தப்
பாதிப்பும் ஏற்படவில்லை; திறக்கவுமில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்தத் தோட்டத்தின் வாயிற்கதவு
முன்பாகச் சிறுமி ஒருத்தி வந்து நின்றுகொண்டு, "தோட்டத்தில்
இருக்கும் மலர்களையும் பழங்களையும் பறிக்கவேண்டும். அதனால்
வாயிற்கதவே! தயவுசெய்து நீ எனக்காகத் திறப்பாயா?" என்றாள்.
அவள் இப்படிச் சொன்னதுதான் தாமதம், வாயிற்கதவு திறந்து,
அவளுக்கு வழிவிட்டது."
தாயானவள், இந்தக் கதையைச் சொல்லி முடித்ததும், சிறுமிக்குத்
தன்னுடைய தாயிடம் தான் ஆப்பிளைப் பழத்தை எடுத்துக்கொடுக்கச்
சொன்னபொழுது, அவர் ஏன் ஆப்பிள் பழத்தை எடுத்துக் கொடுக்கவில்லை
என்ற உண்மை புரிந்தது. உடனே சிறுமி தன் தாயிடம், "அம்மா!
தயவுசெய்து எனக்காக அந்த ஆப்பிள் பழத்தை எடுத்துக்
கொடுப்பீர்களா? என்றாள். அவளுடைய தாயும் அவள் கேட்டுக்கொண்டது
போலவே, அவளுக்கு ஆப்பிள் பழத்தை எடுத்துக் கொடுத்தாள்.
எதையும் ஒருவரிடமிருந்து கேட்கின்றபொழுது, அதை மிகுந்த
தாழ்ச்சியோடு கேட்டால், நிச்சயம் கிடைக்கும் என்ற செய்தியை
இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி
வாசகமும் நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துக்கூறுகின்றது.
நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவை "ஐயா, தாவீதின் மகனே" என அழைக்கும் கானானியப் பெண்மணி
நற்செய்தியில் இயேசு, பிற இனத்தார் மிகுதியாக வாழ்ந்த தீர்,
சீதோன் ஆகிய பகுதிகளுக்குச் செல்கின்றார். இங்கு இயேசுவைப்
பற்றியும், அவர் பேய்களை ஓட்டியதையும் பற்றியும் கேள்விப்பட்ட
கானானியப் பெண்மணி, பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகியிருந்த
தன்னுடைய மகளிடமிருந்து பேயை விரட்டவேண்டும் என்பதற்காக
இயேசுவிடம் செல்கின்றார். அவ்வாறு செல்லும் அந்தக் கானானியப்
பெண்மணி இயேசுவைப் பார்த்து, "ஐயா" என்று மூன்றுமுறை சொல்வதை
நாம் வாசிக்கின்றோம். ஒருவரை ஐயா என்று அழைப்பது,
அழைக்கப்படுவர்மீது அழைப்பவருக்கு இருக்கும் மரியாதையும்,
தாழ்ச்சியையும் எடுத்துக் காட்டுகின்றன. கானானியப் பெண்மணி
இயேசுவை ஐயா என்று அழைப்பதன்மூலம், இயேசுவின்மீது தனக்கிருந்த
மரியாதையையும், அதே நேரத்தில் தன்னிடம் இருந்த தாழ்ச்சியையும்
எடுத்துக் கூறுபவையாக இருக்கின்றன.
தாழ்ச்சியோடு வேண்டிய கானானியப் பெண்மணியின் வேண்டுதல்
கேட்கப்படல்
கானானியப் பெண்மணி இயேசுவை "ஐயா, தாவீதின் மகனே, எனக்கு
இரங்கும்; எனக்கு உதவியருளும்" என்று அழைத்தபொழுது, இயேசு
அவரைக் கண்டுகொள்ளவில்லை; இயேசுவின் சீடர்களோ இயேசுவிடம், அவரை
அனுப்பிவிடுமாறு சொல்கின்றார்கள். இதற்காக அந்தப் பெண்மணி
மனந்தளர்ந்து போகாமல், இயேசுவைப் பின்தொடர்ந்துகொண்டே
செல்கின்றார். இறுதியாக இயேசு அவரிடம், "பிள்ளைகளுக்குரிய உணவை
எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல"
சொல்கின்றபொழுது, அந்தப் பெண்மணி இயேசுவிடம், "தங்கள்
உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை
நாய்க்குட்டி தின்னுமே" என்று சொல்கின்றார். இதைக்கேட்ட இயேசு
அவரிடம், "நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்" என்கின்றார்
.
இயேசுவின் கண்கொள்ளாமை, சீடர்களின் உதாசீனம் இவற்றையெல்லாம்
கண்டுகொள்ளாமல், கானானியப் பெண்மணி நம்பிக்கையோடும்
தாழ்ச்சியோடும் இருந்தார். இதனாலேயே அவருடைய மகளுக்கு நலம்
கிடைக்கின்றது. நாமும் இறைவனிடம் வேண்டுகின்றபொழுது,
நம்பிக்கையோடும், அதே நேரத்தில் மிகுந்த தாழ்ச்சியோடும் மன்றாட
வேண்டும். நாம் இறைவனிடம் தாழ்ச்சியோடு வேண்டுவதற்குத் தயாரா?
சிந்திப்போம்.
சிந்தனை
தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச்
செல்லும்; அது ஆண்டவரை அடையும்வரை அவர்கள் ஆறுதல் அடைவதில்லை"
(சீரா 35: 17) என்கிறது சீராக்கின் ஞானநூல். ஆகையால், நாம்
இறைவனிடம் வேண்டுகின்றபொழுது, மிகுந்த தாழ்ச்சியோடு
வேண்டுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|