|
|
04 ஆகஸ்ட் 2020 |
|
பொதுக்காலம்
18ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உன் பாவங்களோ எண்ணற்றவை; எனவே இவற்றை நான் செய்தேன். நான்
யாக்கோபின் கூடாரங்களைத் திரும்பக் கொணர்வேன்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 30: 1-2, 12-15,
18-22
ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு மீண்டும் அருளப்பட்டது: இஸ்ரயேலின்
கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் உனக்குச்
சொல்லியிருக்கும் சொற்களை எல்லாம் ஏட்டுச் சுருளில் எழுதிவை.
ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: உனது காயத்தைக் குணப்படுத்த
முடியாது; உனது புண் புரையோடிப்போனது. உனக்காக வாதிட எவனும் இல்லை;
உனது காயத்தை ஆற்ற மருந்தே இல்லை; உன்னைக் குணப்படுத்தவே
முடியாது. உன் காதலர் அனைவரும் உன்னை மறந்துவிட்டனர்; உன்னை
அவர்கள் தேடுவதே இல்லை; மாற்றான் தாக்குவது போல நான் உன்னைத்
தாக்கினேன்; கொடியோன் தண்டிப்பது போல நான் உன்னைத் தண்டித்தேன்;
ஏனெனில் உனது குற்றம் பெரிது; உன் பாவங்களோ எண்ணற்றவை. நீ
நொறுக்கப்பட்டதை எண்ணி ஏன் அழுகின்றாய்? உனது வேதனையைத் தணிக்க
முடியாது; ஏனெனில் உனது குற்றமோ பெரிது; உன் பாவங்களோ எண்ணற்றவை;
எனவே இவற்றை எல்லாம் நான் உனக்குச் செய்தேன்.
ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: அடிமைத்தனத்தினின்று நான்
யாக்கோபின் கூடாரங்களைத் திரும்பக் கொணர்வேன்; அவனுடைய உறைவிடங்கள்
மீது நான் இரக்கம் காட்டுவேன்; அவற்றின் இடிபாடுகள் மேலேயே நகர்
மீண்டும் கட்டி எழுப்பப்படும்; அரண்மனையும் அதற்குரிய இடத்திலேயே
அமைக்கப்படும். அவர்களிடமிருந்து நன்றிப் பாக்கள் எழும்பிவரும்;
மகிழ்ச்சியுறுவோரின் ஆரவாரம் கேட்கும். அவர்களை நான் பல்கிப்
பெருகச் செய்வேன்; அவர்கள் எண்ணிக்கையில் குறைய மாட்டார்கள்.
நான் அவர்களைப் பெருமைப்படுத்துவேன்; இனி அவர்கள் சிறுமையுறமாட்டார்கள்.
அவர்களுடைய பிள்ளைகள் முன்புபோல் இருப்பர்; அவர்களது கூட்டமைப்பு
என் திருமுன் நிலைநாட்டப்படும்; அவர்களை ஒடுக்குவோர் அனைவரையும்
தண்டிப்பேன். அவர்களின் தலைவன் அவர்களுள் ஒருவனாகவே இருப்பான்;
அவர்களை ஆள்பவன் அவர்கள் நடுவினின்றே தோன்றுவான்; அவன் என்னை
நெருங்கிவரச் செய்வேன்; அவனும் என்னை அணுகி வருவான்; ஏனெனில்,
என்னை அணுகி வர வேறு யாருக்குத் துணிவு உண்டு?, என்கிறார் ஆண்டவர்.
நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள்; நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 102: 15-17. 18-20. 28,21-22 . (பல்லவி: 16)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்பி, மாட்சியுடன் திகழ்ந்திடுவார்.
15
வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்; பூவுலகின் மன்னர்
யாவரும் அவரது மாட்சியைக் கண்டு மருள்வர்.
16
ஏனெனில் ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்புவார்; அங்கு அவர் தம்
மாட்சியுடன் திகழ்வார்.
17
திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார்; அவர்களின்
மன்றாட்டை அவமதியார். - பல்லவி
18
இனி வரவிருக்கும் தலைமுறைக்கென இது எழுதி வைக்கப்படட்டும்; படைக்கப்படவிருக்கும்
மக்கள் ஆண்டவரைப் புகழட்டும்.
19
ஆண்டவர் தம் மேலுலகத் திருத்தலத்தினின்று கீழே நோக்கினார்; அவர்
விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார்.
20
அவர் சிறைப்பட்டோரின் புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்; சாவுக்கெனக்
குறிக்கப்பட்டவர்களை விடுவிப்பார். - பல்லவி
28
உம் அடியாரின் பிள்ளைகள் பாதுகாப்புடன் வாழ்வர்; அவர்களின் வழிமரபினர்
உமது திருமுன் நிலைத்திருப்பர்!
21
சீயோனில் ஆண்டவரின் பெயர் போற்றப்படும். எருசலேமில் அவர்தம் புகழ்
அறிவிக்கப்படும்.
22
அப்போது, மக்களினங்களும் அரசுகளும் ஒன்றுதிரண்டு ஆண்டவரை வழிபடுவர்.
- பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 1: 49b
அல்லேலூயா, அல்லேலூயா! "ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின்
அரசர்." அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
என் விண்ணகத் தந்தை நடாத எந்த நாற்றும் வேரோடு பிடுங்கப்படும்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-2, 10-14
அக்காலத்தில்
பரிசேயரும் மறைநூல் அறிஞரும் எருசலேமிலிருந்து இயேசுவிடம் வந்து,
"உம் சீடர் மூதாதையரின் மரபை மீறுவதேன்? உணவு அருந்துமுன் அவர்கள்
தங்கள் கைகளைக் கழுவுவதில்லையே" என்றனர்.
மேலும் இயேசு மக்கள் கூட்டத்தைத் தம்மிடம் வரவழைத்து அவர்களை
நோக்கி, "நான் சொல்வதைக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள்.
வாய்க்குள் செல்வது மனிதரைத் தீட்டுப்படுத்தாது; மாறாக
வாயிலிருந்து வெளி வருவதே மனிதரைத் தீட்டுப்படுத்தும்" என்றார்.
பின்பு சீடர் அவரை அணுகி, "பரிசேயர் உம் வார்த்தையைக் கேட்டு
மனவேதனை அடைந்தனர் என்பது உமக்குத் தெரியுமா?" என்றனர். இயேசு
மறுமொழியாக, "என் விண்ணகத் தந்தை நடாத எந்த நாற்றும் வேரோடு
பிடுங்கப்படும். அவர்களை விட்டுவிடுங்கள் அவர்கள் குருட்டு
வழிகாட்டிகள். பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவரை வழிநடத்தினால்
இருவரும் குழியில் விழுவர்" என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
எரேமியா 30: 1-2, 12-15, 18-22
மக்கள்மீது இரக்கம் காட்டும் இறைவன்
நிகழ்வு
முன்பொரு காலத்தில் மாமன்னர் ஒருவர் இருந்தார். இவர் நாட்டு மக்களை
நீதியுடன் ஆட்சி செய்துவந்தார். இது பிடிக்காத ஒருசிலர் இவருக்கு
எதிராகக் கலகம் செய்யத் தொடங்கினார்கள்.
இச்செய்தியை அறிந்த மாமன்னர், தன்னுடைய படைவீரர்களோடு சேர்ந்து
அந்தக் கலகக்காரர்களை ஒடுக்கினார். மட்டுமல்லாமல், இவர் அந்தக்
கலகக்காரர்களிடம், "இன்று இரவு, அரண்மனைக்கு முன்பாக ஒரு பெரிய
தீபம் ஏற்றி வைக்கப்படும். அந்தத் தீபத்திற்கு முன்பாக வந்து,
யாரெல்லாம் "இனிமேல் நான் இந்த நாட்டிற்கும், நாட்டு மன்னருக்கும்
உண்மையாக இருப்பேன்" என்று வாக்குறுதி தருகின்றார்களோ, அவர்களுடைய
குற்றங்களை நான் மன்னித்து, அவர்களை இந்த நாட்டுமக்களாக ஏற்றுக்கொண்டு,
அவர்கள்மீது இரக்கம் காட்டுவேன்" என்று சொல்லிவிட்டு, அவர்களிடமிருந்து
விடைபெற்றார்.
அன்று இரவு மாமன்னர் தன்னுடைய அரண்மனைக்கு முன்பாக ஒரு பெரிய
தீபத்தை ஏற்றி வைத்துவிட்டுத் தனக்கெதிராகக் கலகம் செய்தவர்களுக்காகக்
காத்திருந்தார். சிறிதுநேரத்தில் யாரெல்லாம் அவருக்கு எதிராகக்
கலகம் செய்தார்களோ, அவர்களெல்லாம் அங்கு வந்துநின்றார்கள்.
பின்னர் அவர்கள், "இனிமேல் நாங்கள் இந்த நாட்டிற்கும்,
நாட்டின் மன்னருக்கும் உண்மையாக இருப்போம்" என்று வாக்குறுதி
அளித்தார்கள். இதைத் தொடர்ந்து மாமன்னர் அவர்களுடைய குற்றங்களை
மன்னித்து, அவர்கள்மீது பெரிதும் இரக்கம் காட்டி, தன்னுடைய அரண்மனையில்
அவர்களுக்கு முக்கியப் பொறுப்புகளைக் கொடுத்தார்.
இந்த நிகழ்வில் வருகின்ற மாமன்னர் எப்படித் தனக்கெதிராகக் கலகம்
செய்தவர்களை மன்னித்து, அவர்களைத் தன்னுடைய அரண்மனையில் முக்கியப்
பொறுப்புகளில் அமர்த்தினாரோ, அப்படி ஆண்டவராகிய கடவுள், தன்னுடைய
கட்டளைகளை மீறிச் செயல்பட்ட இஸ்ரயேல் மக்களுடைய குற்றங்களை மன்னித்து,
அவர்கள்மீது இரக்கம் காட்டுகின்றார். அதை இன்றைய முதல் வாசகம்
எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது
சிந்தித்துப் பார்ப்போம்.
எண்ணற்ற பாவங்களைச் செய்த மக்கள்
இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெறும் சொற்கள் யாவும், ஆண்டவராகிய
கடவுள் இறைவாக்கினர் எரேமியாவுக்கு கனவில் வெளிப்படுத்தியவை ஆகும்
(எரே 31: 26). இறைவாக்கினர் எரேமியா, ஆண்டவராகிய கடவுள் தனக்கு
என்ன வெளிப்படுத்தினாரோ, அதை அப்படியே எழுதி வைக்கின்றார். இந்தக்
கனவின் மூலம் இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு எதிராகச் செய்த பாவங்கள்
எண்ணற்றவை என்பதைப் புரிந்துகொள்ளலாம். "நானே உன் கடவுளாகிய ஆண்டவர்.
என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது" (விப 20:
2-3) என்று கடவுள் இஸ்ரயேல் மக்களிடம் சொன்னார்; ஆனால், அவர்கள்
உண்மைக் கடவுளை மறந்து, பாகால் தெய்வத்தை வழிபடத் தொடங்கினார்கள்.
இவ்வாறு அவர்கள் சிலை வழிபாடு என்ற விபசாரத்தைச் செய்தார்கள்.
இரக்கம் காட்டும் இறைவன்
மக்கள் தன்னுடைய கட்டளையை மீறிப் பாகால் தெய்வத்தை
வழிபட்டதால், கடவுள் அசீரியர்களையும் பாபிலோனியர்களையும்
அவர்கள் நடுவில் அனுப்பி, அவர்களைத் தண்டித்தார்; ஆனால்,
அவர்கள் அவருக்கு எதிராகச் செய்த குற்றங்களுக்கு ஏற்பத்
தண்டிக்கவில்லை. ஏனெனில் அவர் மக்கள் செய்த குற்றங்களுக்கு
ஏற்ப அவர்களைத் தண்டித்தால், யாரும் நிலைத்து நிற்கமுடியாது
(திப 130: 3). ஆகவே, கடவுள் யூதா நாட்டினர் தனக்கு எதிராகச்
செய்த குற்றங்களை மன்னித்து, அவர்களை அடிமைத்தன வீட்டிலிருந்து
விடுவித்து, அவர்களுடைய சொந்த நாட்டில் அவர்களைக்
குடியமர்த்தி, அவர்கள்மீது இரக்கம் காட்டுகின்றார்.
மக்களை ஆள்பவரை அவர்கள் நடுவிலிருந்து தோன்றச் செய்யும் இறைவன்
ஆண்டவராகிய கடவுள் மக்கள்மீது சாதாரண அன்பல்ல, பேரன்பும்,
சாதாரண இரக்கமல்ல, பேரிரக்கமும் கொண்டிருந்தார் என்றுதான்
சொல்லவேண்டும். ஏனென்றால், தன்னுடைய கட்டளைகளை மீறிச்
செயல்பட்ட மக்களை ஆள்வதற்காகத் தன்னுடைய சொந்த மகன் இயேசுவையே
அவர்கள் நடுவில் அனுப்பி வைக்கின்றார். இன்றும்கூட கடவுள்,
நாம் செய்த குற்றங்களுக்கு ஏற்பத் தண்டிக்காமல், மன்னித்து
இரக்கம் காட்டுகின்றார் என்றால், அவர் பேரன்பும் பேரிரக்கமும்
கொண்டவர் என்றுதானே பொருள்.
எனவே, நாம் நம்மீது இரக்கமும் அன்பும் காட்டும் இறைவனிடம்
திரும்பி வந்து, அவருடைய வழியில் நடப்பவர்களாக மாறுவோம்.
சிந்தனை
"அவர் அருள் நிறைந்தவர்; இரக்கமிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர்;
பேரன்பு மிக்கவர்; செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம்
மாறுகின்றவர்" (யோவே 2: 13) என்பார் யோவேல் இறைவாக்கினர்.
ஆகையால், நாம் நம்மீது பேரன்பும் இரக்கமும் கொண்டிருக்கின்ற
இறைவனிடம் திரும்பி வந்து, அவருடைய அன்புக்குரிய மக்களாக
வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 15: 1-2, 10-14
பாரம்பரியமும் பரிவன்பும்
நிகழ்வு
இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் வாழ்ந்து வந்த புகழ்பெற்ற
வரலாற்றுப் பேராசிரியர் ராபர்ட் சோபல் என்பவர் (Robert Sobel
1931-1999). இவர் சொல்லக்கூடிய ஒரு செய்தி நம்முடைய
கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது. இவர் சொல்லக்கூடிய செய்தி
இதுதான்: "நம்முடைய முன்னோர்கள் ஒரு செயலைச் செய்தார்கள்
என்பதற்காக, இன்றைக்கும் செய்யப்படும் அந்தச் செயல்களில் பல
முட்டாள்தனமானவையாக இருக்கின்றன." ராபர்ட் சோபல் சொல்லக்கூடிய
இச்செய்தி உண்மைதான் என்பதை நிரூபிக்கக்கூடிய வகையில் உள்ளது
கீழ்க்காணும் இந்த நிகழ்வு.
இங்கிலாந்து நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள துறைமுக
நகர்தான் டோவர் (Dover) என்ற நகர். இத்துறைமுக
நகரிலிருந்துதான் பிரான்சு போன்ற நாடுகளுக்கு கப்பல்கள்
செல்லும். அங்கிருந்து வரக்கூடிய கப்பல்கள்கூட இங்கு கட்டாயம்
வந்தாக வேண்டும். இப்படப்பட்ட துறைமுக நகரான டோவரில் ஒரு பெரிய
கோட்டை இருந்தது. கோட்டைக்குள் பாதாள அறைகளும், சுரங்கப்
பாதைகளும் நிறைய இருந்தது.
இந்தக் கோட்டை கட்டப்பட்டதன் முக்கியமான நோக்கம், நெப்போலியன்
இங்கிலாந்து நாட்டின்மீது படையெடுத்து வரும்பொழுது, இந்தக்
கோட்டையில் பொருத்தப்பட்டிருந்த பெரிய மணியை அடித்து,
இங்கிலாந்து நாட்டினரை எச்சரிப்பதுதான். 1805 ஆம் ஆண்டு
கட்டப்பட்ட இந்தக் கோட்டையில் பொருத்தப்பட்டிருந்த மணியை
அடிப்பதற்காகவே, ஒரு காவலாளி நியமிக்கப்பட்டிருந்தார்.
வேடிக்கை என்னவென்றால், நெப்போலியன் இறந்து நூறு ஆடுகளுக்குப்
பிறகும்கூட, அதாவது 1945 ஆண்டுவரை இந்தக் கோட்டையில் இருந்த
மணியை அடிப்பதற்காகக் காவலாளி ஒருவர் தொடர்ந்து
நியமிக்கப்பட்டு வந்தார்.
1945 ஆம் ஆண்டில் ஒருநாள் தற்செயலாக இதைப் பார்த்த உயர்
அதிகாரி ஒருவர், டோவர் கோட்டையில் காவலாளியை வேலைக்கு
அமர்த்துவது வீண் என்று அந்தப் பணியிடத்தை நீக்கினர்.
நெப்போலியனுடைய வருகையை இங்கிலாந்து நாட்டினருக்கு
அறிவிப்பதற்காக டோபர் கோட்டையில் நிறுத்தப்பட்ட காவலாளி,
நெப்போலியன் இறந்து பின்பும் அந்த இடத்தில் தொடர்ந்து
நிறுத்தப்பட்டது போன்று, இன்றுநாம் கடைப்பிடிக்கின்ற பழக்க
வழக்கங்கள், சடங்கு முறைகள் எதற்காகப் பின்பற்றுகின்றோம் என்று
தெரியாமலேயே பின்பற்றி வருகின்றோம். இன்றைய நற்செய்தியில்,
இயேசுவின் சீடர்கள் மூதாதையர் மரபை மீறியதாக எருசலேமிலிருந்து
வந்திருந்த பரிசேயரும் மறைநூல் அறிஞர்களும் அவர்கள்மீது
குற்றம் சுமத்துகின்றார்கள். இதற்கு இயேசுவின் பதில் என்னவாக
இருந்தது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
அர்த்தமற்ற சடங்குமுறைகளைப் பின்பற்றி வந்த பரிசேயக் கூட்டம்
யூத சமூகத்தில் சமயக் காவலர்களாகத் தங்களைக்
காட்டிக்கொண்டவர்கள் பரிசேயர்கள். இவர்கள் திருமறையைப் பற்றி
மக்களுக்குப் போதிக்கின்றோம் என்ற பெயரில் தேவையற்ற சட்டங்களை,
சில நேரங்களில் கடினமான சட்டங்கள் என்ற சுமைகளை மக்கள் மேல்
சுமத்தினார்கள் (மத் 23: 4). இவர்கள் அந்தச் சட்டங்களை எல்லாம்
கடைப்பிடித்தார்களா? என்றால் கிடையாது. இப்படித் தாங்கள்
கடைப்பிடிக்காத சட்டங்களை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று
நினைத்த பரிசேயர்கள், இயேசுவின் சீடர்கள் உண்ணும்பொழுது கை
கழுவவில்லை என்று, அவர்கள் மூதாதையர் மரபை மீறிவிட்டதாக,
அவர்கள்மீது குற்றம் சுமத்துகின்றார்கள்.
உண்மையில் இயேசுவின் சீடர்கள் உணவு உண்பதற்கு முன்பாகக்
கைகளைக் கழுவித்தான் உண்டார்கள். (யாராவது உணவு உண்ணும்
முன்பாக கைகளைக் கழுவாமல் உண்பார்களா?). பரிசேயர்கள்,
இயேசுவின் சீடர்கள் கைகளைக் கழுவாமல் உண்டார்கள் என்று சொன்னது
வேறொன்று. அதுதான் பரிசேயச் சட்டம். அதை மீறியதற்காகத்தான்
பரிசேயர்கள் இயேசுவின் சீடர்கள்மீது குற்றம்
சுமத்துகின்றார்கள். இதற்கு இயேசு சொல்லும் பதில் என்னவாக
இருக்கின்றது என்று பார்ப்போம்.
அர்த்தமற்ற சடங்குகளைத் தூக்கி எறிந்துவிட்டு அர்த்தமுள்ள
வாழ்வுவாழ அழைக்கும் இயேசு
எருசலேமிலிருந்து வந்த பரிசேயர் மற்றும் மறைநூல் அறிஞர்கள்,
புறத் தூய்மையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபொழுது, ஆண்டவர்
இயேசு அகத்தூய்மையைப் பற்றிப் பேசுகின்றார். அதை அவர்
வாய்க்குள்ளே செல்வது மனிதரைத் தீட்டுப் படுத்தாது;
வாயிலிருந்து வெளிவருவதே மனிதரைத் தீட்டுப்படுத்தும்
என்கின்றார். இதன்மூலம் புறத்திலிருந்து மனிதனுக்குள்ளே
செல்லும் உணவு மனிதனைத் தீட்டுப்படுத்தாது; ஏனெனில் கடவுள்
படைத்த எல்லாமும் நல்லவை (தொநூ 1: 31). மாறாக, அகத்திலிருந்து
வெளியே வரும் சொற்கள்தான் மனிதனைத் தீட்டுப்படும் என்கின்றார்
இயேசு. நாம் புறத்தைத் தூய்மைப்படுத்துவதற்குக் கொடுக்கும்
முக்கியத்துவத்தை, அகத்தைத் தூய்மைப்படுத்தக் கொடுக்கின்றோமா?
சிந்தித்துப் பார்ப்போம்.
"உள்ளத்தின் நிறைவே வாய் பேசும்" என்பார்கள். நம்முடைய உள்ளம்
தூய்மையாக இருந்தால், எல்லாமும் தூய்மையாக இருக்கும்.
சிந்தனை
"அன்பே திருச்சட்டத்தின் நிறைவு" (உரோ 13: 10) என்பார் புனித
பவுல். ஆகையால், நாம் நம்மிடம் இருக்கின்ற அர்த்தமற்ற
சடங்குமுறைகளையும் சட்டங்களையும் தூக்கி எறிந்துவிட்டு,
திருச்சட்டத்தின் நிறைவாகிய அன்பைக் கடைப்பிடித்து வாழ்வோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|