|
|
03 ஆகஸ்ட் 2020 |
|
பொதுக்காலம்
18ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
அனனியாவே, கூர்ந்து கேள்: ஆண்டவர் உன்னை
அனுப்பவில்லை. அப்படியிருந்தும் இம்மக்கள் பொய்யை நம்பும்படி
நீ செய்துவிட்டாய்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம்
28: 1-17
யூதாவின் அரசனான செதேக்கியாவினுடைய ஆட்சியின் நான்காம் ஆண்டு
ஐந்தாம் மாதத்தில் அசூரின் மகனும் கிபயோனைச் சார்ந்தவனுமான அனனியா
என்னும் இறைவாக்கினன் ஆண்டவரின் இல்லத்தில் குருக்கள் மற்றும்
மக்கள் அனைவருடைய முன்னிலையிலும் என்னிடம் உரைத்தது:
"இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
"பாபிலோனிய மன்னனது நுகத்தை நான் முறித்தெறிந்து விட்டேன்.
பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் இவ்விடத்தினின்று கவர்ந்து,
பாபிலோனுக்கு எடுத்துச் சென்றுள்ள ஆண்டவரது இல்லத்தின் கலங்கள்
எல்லாவற்றையும் இரண்டே ஆண்டுக் காலத்திற்குள் இவ்விடத்திற்குத்
திரும்பக் கொண்டுவருவேன். அத்தோடு யோயாக்கிமின் மகனும்
யூதாவின் அரசனுமான எக்கோனியாவையும் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்ட
யூதா மக்கள் அனைவரையும் இவ்விடத்துக்கு நான் திரும்பக் கொண்டு
வருவேன். ஏனெனில், பாபிலோனிய மன்னனது நுகத்தை நான்
முறித்தெறிவேன்', என்கிறார் ஆண்டவர்."
அப்பொழுது ஆண்டவரின் இல்லத்தில் நின்று கொண்டிருந்த குருக்கள்,
மக்கள் அனைவர் முன்னிலையிலும், இறைவாக்கினர் எரேமியா இறைவாக்கினன்
அனனியாவிடம் பேசினார். இறைவாக்கினர் எரேமியா அவனை நோக்கி,
"ஆமென்! ஆண்டவர் அவ்வாறே செய்வாராக! நீர் உரைத்த சொற்களை ஆண்டவர்
நிறைவேற்றுவாராக! ஆண்டவர் இல்லத்தின் கலங்களையும் நாடுகடத்தப்பட்டோர்
அனைவரையும் பாபிலோனிலிருந்து இவ்விடத்திற்குத் திரும்பக்
கொண்டுவருவாராக! ஆயினும் உம் செவிகளிலும் மக்கள் அனைவரின் செவிகளிலும்
விழும்படி நான் உரைக்கும் இச்சொல்லைக் கவனித்துக் கேளும். உமக்கும்
எனக்கும் முன்பே பண்டைய நாள்களில் வாழ்ந்த இறைவாக்கினர், பல
நாடுகள், பேரரசுகளுக்கு எதிராகப் போர், துன்பம், கொள்ளைநோய் ஆகியவை
பற்றி இறைவாக்கு உரைத்திருக்கின்றனர். நல்வாழ்வை முன்னறிவிக்கும்
இறைவாக்கினரைப் பொறுத்தவரை, அவரது வாக்கு நிறைவேறும்
பொழுதுதான், ஆண்டவர் அவரை உண்மையாகவே அனுப்பியுள்ளார் என்பது
தெரியவரும்" என்றார்.
அதைக் கேட்ட இறைவாக்கினன் அனனியா இறைவாக்கினர் எரேமியாவின் கழுத்திலிருந்த
நுகத்தைப் பிடுங்கி முறித்தெறிந்தான். மேலும், அனனியா எல்லா மக்கள்
முன்னிலையிலும், "ஆண்டவர் கூறுவது இதுவே: இவ்வாறே பாபிலோனிய மன்னன்
நெபுகத்னேசரின் நுகத்தை இன்னும் இரண்டே ஆண்டுகளில் மக்களினத்தார்
அனைவருடைய கழுத்தினின்றும் பிடுங்கி முறித்தெறிவேன்" என்றான்.
உடனே இறைவாக்கினர் எரேமியா அவ்விடம் விட்டு அகன்றார்.
இறைவாக்கினன் அனனியா இறைவாக்கினர் எரேமியாவின் கழுத்திலிருந்த
நுகத்தை முறித்தெறிந்த சில நாள்களுக்குப் பின்னர், ஆண்டவரின்
வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது: "நீ போய் அனனியாவிடம்
சொல்: ஆண்டவர் கூறுவது இதுவே: நீ மர நுகத்தை முறித்தெறிந்தாய்;
அதற்குப் பதிலாக இரும்பு நுகத்தைச் செய்துகொள்வாய். ஏனெனில்,
இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இந்த மக்களினத்தார்
அனைவரின் கழுத்தில் இரும்பு நுகத்தை வைத்துள்ளேன். ஆதலால் அவர்கள்
பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசருக்கு அடிபணிந்து பணிவிடை
செய்வார்கள். காட்டு விலங்குகளையும் அவனிடம் ஒப்புவித்திருக்கிறேன்."
அப்பொழுது இறைவாக்கினர் எரேமியா இறைவாக்கினன் அனனியாவிடம் கூறியது:
"அனனியாவே, கூர்ந்து கேள்: ஆண்டவர் உன்னை அனுப்பவில்லை. அப்படியிருந்தும்
இம்மக்கள் பொய்யை நம்பும்படி நீ செய்துவிட்டாய். எனவே, ஆண்டவர்
கூறுகிறார்: இதோ! நான் இவ்வுலகினின்றே உன்னை அனுப்பி வைக்கப்
போகிறேன். ஆண்டவருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்யுமாறு நீ
போதித்ததால், இந்த ஆண்டிலேயே நீ சாவாய்!" அவ்வாறே அதே ஆண்டு ஏழாம்
மாதத்தில் இறைவாக்கினன் அனனியா மாண்டான்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 119: 29,43. 79,80. 95,102 . (பல்லவி: 68b) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பியும்.
29
பொய் வழியை என்னைவிட்டு விலக்கியருளும்; உமது திருச்சட்டத்தை
எனக்குக் கற்றுத்தாரும்.
43
என் வாயினின்று உண்மையின் சொற்கள் நீங்கவிடாதேயும்; ஏனெனில்,
உம் நீதிநெறிகள் மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன். - பல்லவி
79
உமக்கு அஞ்சி நடப்போர், உம் ஒழுங்குமுறைகளைப்பற்றிய அறிவுடையோர்
என் பக்கம் திரும்புவாராக!
80
உம் நியமங்களைப் பொறுத்த மட்டில் என் உள்ளம் மாசற்றதாய் இருப்பதாக!
அதனால், நான் வெட்கமுறேன். - பல்லவி
95
தீயோர் என்னை அழிக்கக் காத்திருக்கின்றனர்; நானோ உம் ஒழுங்குமுறைகளை
ஆழ்ந்து சிந்திக்கின்றேன்.
102
உம் நீதிநெறிகளை விட்டு நான் விலகவில்லை; ஏனெனில், நீர்தாமே
எனக்குக் கற்றுத் தந்தீர். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 4: 4b
அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக,
கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் 14: 22-36
அக்காலத்தில்
இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக்கொண்டிருந்தார்.
அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்கு முன் அக்கரைக்குச்
செல்லுமாறு அவர் கட்டாயப்படுத்தினார். மக்களை அனுப்பிவிட்டு,
அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின் மேல் ஏறினார்.
பொழுது சாய்ந்த பிறகும் அங்கே அவர் தனியே இருந்தார். அதற்குள்
படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது. மேலும் எதிர்க்காற்று
அடித்துக் கொண்டிருந்ததால் அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது.
இரவின் நான்காம் காவல் வேளையில் இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது
நடந்து வந்தார். அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி,
"ஐயோ, பேய்" என அச்சத்தினால் அலறினர். உடனே இயேசு அவர்களிடம்
பேசினார். "துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்" என்றார்.
பேதுரு அவருக்கு மறுமொழியாக, "ஆண்டவரே, நீர்தாம் என்றால்
நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்" என்றார். அவர்,
"வா" என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை
நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார். அப்பொழுது பெருங்காற்று
வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, "ஆண்டவரே, என்னைக்
காப்பாற்றும்" என்று கத்தினார். இயேசு உடனே தம் கையை நீட்டி
அவரைப் பிடித்து, "நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?"
என்றார்.
அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது. படகில் இருந்தோர்
இயேசுவைப் பணிந்து, "உண்மையாகவே நீர் இறைமகன்" என்றனர்.
அவர்கள் மறு கரைக்குச் சென்று கெனசரேத்துப் பகுதியை அடைந்தார்கள்.
இயேசுவை யாரென்று அறிந்துணர்ந்த அவ்விடத்து மக்கள் சுற்றுப்புறமெங்கும்
ஆள் அனுப்பி எல்லா நோயாளர்களையும் அவரிடம் கொண்டு வந்தனர்.
அவரது மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை
வேண்டினர்; தொட்டவர் யாவரும் நலமடைந்தனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
எரேமியா 28: 1-17
மக்கள் பொய்யை நம்பும்படி செய்த அனனியா
நிகழ்வு
அரசியல்வாதி ஒருவர் இருந்தார். இவர் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்பொழுது,
நான் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் வறுமையே இல்லாமல்
செய்வேன்... எல்லாருக்கும் வேலை கிடைக்கச்செய்வேன்... யாரும்
எந்தக் கவலையும் இல்லாமல் நிம்மதியாக வாழலாம்... மொத்தத்தில்
நான் உங்களுக்குப் பொற்கால ஆட்சியை வழங்குவேன் என்று
வாக்குறுதி தந்தார். மக்களும் அவர் தந்த தேர்தல் வாக்குறுதிகளை
நம்பி, அவருக்கு வாக்குச்செலுத்தி, அவரை நாட்டின் தலைவராக்கினார்கள்.
அவர் நாட்டின் தலைவரான பின்பு, தேர்தலின்போது கொடுத்த
வாக்குறுதிகளுக்கு முற்றிலும் எதிராகச் செயல்படத் தொடங்கினார்.
எல்லாருக்கும் வேலை கிடைக்கும்படி செய்வேன் என்று சொன்ன அவர்,
பலரும் தங்களுடைய வேலையை இழப்பதற்குக் காரணமாக இருந்தார். மக்கள்
கவலையே இல்லாமல், நிம்மதியாய் இருப்பார்கள் என்று சொன்ன இவர்,
மக்கள் தங்களுடைய அடிப்படை உரிமைகளுக்குக்கூட சாலைகளில் இறங்கிப்
போராடும்படி செய்தார். இவ்வாறு இவர் நாட்டையே கலவர பூமியாகும்படி
செய்தார்.
இப்படிப்பட்ட சூழலில், பெண் செய்தியாளர் ஒருவர், அந்த அரசியல்வாதியின்
தாயாரை நேர்காணல் செய்தார். அந்த நேர்காணலின்பொழுது, பெண்
செய்தியாளர் அரசியல்வாதியின் தாயாரிடம், "உங்களுடைய மகன் தேர்தலின்பொழுது
கொடுத்த வாக்குறுதிகளுக்கு முற்றிலும் எதிராகச் செயல்படுகின்றாரே!
அப்படியானால், அவர் சொன்னதெல்லாம் பச்சைப் பொய் அல்லவா!" என்றார்.
"தேர்தல் பிரச்சாரத்தின்பொழுது என்னுடைய மகன் சொன்னது பச்சை
பொய்ய் இல்லை; அது வெள்ளைப் பொய்" என்றார் அரசியல்வாதியின்
தாய்.
"பச்சைப் பொய்யைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கின்றேன். அது
என்ன வெள்ளை பொய். அது குறித்துக் கொஞ்சம் விளக்க முடியுமா?"
என்று அந்தப் பெண் செய்தியாளர் கேட்டபொழுது, அரசியல்வாதியின்
தாயார் அவரிடம், "வெள்ளைப் பொய் என்பது ஒருவரை மகிழ்விப்பதற்காகச்
சொல்லப்படுகின்ற பொய். உதாரணத்திற்கு நீங்கள் உடுத்தியிருக்கும்
உடை அவ்வளவு அழகாக இல்லையென்றாலும், உங்களை மகிழ்விப்பதற்காக,
நீங்கள் இங்கு வந்த தொடக்கத்தில், நான் "உங்கள் உடை அவ்வளவு
அழகாக இருக்கின்றது" என்று சொன்னேன் அல்லவா! அதுபோன்றுதான் என்னுடைய
மகனும் மக்களை மகிழ்ச்சிப்படுத்துவதாக நான் ஆட்சிக்கு வந்தால்,
அதைச் செய்வேன்... இதைச் செய்வேன் என்று சொல்லியிருப்பான். இதெல்லாம்
அரசியல் தந்திரம். இதைக் கண்டுகொள்ளாமல் போவதுதான் நல்லது" என்றார்.
இதைக்கேட்டு அந்தப் பெண் செய்தியாளர் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.
இந்த நிகழ்வில் வருகின்ற அரசியல்வாதி, மக்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக
"வெள்ளைப் பொய்களைச்" சொன்னது, எரேமியாவின் காலத்தில் வாழ்ந்து
வந்த அனனியா என்ற பொய் இறைவாக்கினர், மக்களையும் ஆட்சியாளர்களையும்
மகிழ்ச்சிப்படுத்த வெள்ளைப் பொய்களைச் சொன்னார். அவர் சொன்ன
பொய்கள் என்ன...? அதற்காக அவருக்குக் கிடைத்த தண்டனை என்ன...?
என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
மக்களை மகிழ்ச்சிப்படுத்த பொய்களைப் பரப்பிய அனனியா
இறைவாக்கினர் எரேமியா, ஆண்டவராகிய கடவுள் எவற்றையெல்லாம் மக்களிடம்
சொல்லவேண்டும் என்று கட்டளையிட்டாரோ, அவற்றையெல்லாம் அவர் மக்களிடம்
சொன்னார் (எரே 1: 7); ஆனால், இதற்கு முற்றிலும் மாறாகச் செயல்பட்டவர்,
எரேமியாவின் காலத்தில் இருந்த பொய் இறைவாக்கினரான அனனியா. இவர்
மக்களையும் ஆட்சியாளர்களையும் மகிழ்ச்சிப்படுத்துவதற்காகப்
பாபிலோனிய மன்னது நுகத்தை முறித்தெறிந்துவிட்டேன்... என் இல்லத்தின்
கலங்கள் எல்லாவற்றையும் திரும்பக் கொண்டு வருவேன்... எக்கோனியாவை
எருசலேமிற்குத் திரும்பக் கொண்டுவருவேன் என்று ஆண்டவர் சொன்னதாக
மூன்று பொய்களைச் சொல்கின்றார்.
பொய் இறைவாக்கினரான அனனியாவிற்குக் கிடைத்த தண்டனை
இறைவாக்கினர் என்பவர் "இறை"வாக்கினை எடுத்துரைப்பவராக இருக்கவேண்டும்;
ஆனால் பொய் இறைவாக்கினராகிய அனனியாவோ மக்களை மகிழ்ச்சிப்படுத்தத்
தன்னுடைய வாக்கை ஆண்டவருடைய வாக்காகச் சொன்னார். இதனால் அவர்
சாவார் என்று இறைவாக்கினர் எரேமியா அவரிடம் எடுத்துரைக்கின்றார்.
எரேமியா இப்படிச் சொன்னது போன்றே அனனியா அந்த ஆண்டிலேயே இறக்கினார்.
சில நேரங்களில் பொய்யாக, போலியாக நடப்பவர்களுக்கு இதுதான் தண்டனையாகக்
கிடைக்கும் (திப 5).
ஆகையால், நாம் அனனியாவைப் போன்று இல்லாமல், எரேமியாவைப் போன்று
உண்மையை எடுத்துரைத்து, ஆண்டவருக்குச் சான்று பகர்வோம்.
சிந்தனை
"உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்;
இதற்காகவே உலகிற்கு வந்தேன்" (யோவா 18: 37) என்பார் இயேசு. ஆகையால்,
நாம் பொய் இறைவாக்கினர் அனனியாவைப் போன்று இல்லாமல், ஆண்டவர்
இயேசவைப் போன்று உண்மையை எடுத்துரைத்து, உண்மைக்குச் சான்று
பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 14: 22-36
தனியே இறைவனிடம் வேண்டுவதற்கு மலைமேல்
ஏறிய இயேசு
நிகழ்வு
ஒரு பெரிய சர்க்கஸ் நிறுவனத்தில் கோமாளி வேடம் தரித்து,
வித்தியாசமாக நடனமாடியும் குறும்புத்தனங்கள் செய்தும் மக்களை
மகிழ்ச்சிப்படுத்திய கோமாளி ஒருவர் இருந்தார். இவருக்குத்
திடீரென ஒருநாள், இவ்வுலக வாழ்க்கை சலித்துப்போனது. அதனால் இவர்
தன்னுடைய மீதி வாழ்க்கையை ஒரு துறவியாக வாழலாம் என்று
முடிவுசெய்தார். அதன்படி இவர் ஒரு துறவுமடத்திற்குச் சென்று,
அங்கிருந்த தலைமைத் துறவியிடம் தன்னைப் பற்றி எடுத்துச்
சொல்லி, தன்னை அந்த மடத்தில் துறவியாக ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொண்டார். தலைமைத் துறவியும் இவர் வைத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு,
இவரை அந்த மடத்தில் துறவியாகச் சேர்த்துக்கொண்டார்.
நாள்கள் மெல்ல நகர்ந்தன. துறவுமடத்தில் செய்யப்பட்ட வழிபாடுகள்
கோமாளியாக இருந்து துறவியாக மாறிய இந்தப் புதிய துறவிக்கு
வித்தியாசமாக இருந்தன. குறிப்பாக ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு
இறைவனிடத்தில் வேண்டுவதும் தியானம்செய்வதும், அங்கும் இங்கும்
ஆடியும் ஓடியும் கொண்டிருந்த இவருக்குக் கடினமாக இருந்தன. இதனால்
இவர் தனியாக ஓர் இடத்திற்குச் சென்று, முன்பு தான் மக்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக
எப்படி நடனமாடினாரோ அப்படி நடனமாடி இறைவனிடம் வேண்டினார். இப்பொழுது
இவரால் மனம் ஒன்றி இறைவனிடம் வேண்ட முடிந்தது. இதையே தொடரலாம்
என்றும் இவர் முடிவு செய்தார்.
இதற்கு பிறகு இவர் ஒவ்வொருநாளும் தனியாகக் காட்டுப் பகுதிக்கு
வந்து நடனமாடிக் கொண்டே இறைவனிடம் வேண்டி வந்தார். இது இவருடைய
உள்ளத்திற்கு மிகுந்த ஆறுதலையும் அமைதியையும் தந்தது. இதை எப்படியோ
நோட்டம் விட்ட துறவி ஒருவர் தலைமைத் துறவியிடம் இவரைப் பற்றிப்
பற்ற வைத்தார். இதனால் தலைமைத் துறவி, இந்தப் புதிய துறவியை அழைத்தார்.
புதிய துறவியோ, தலைமைத் துறவிக்கு நாம் தனியாக வந்து, நம்முடைய
பாணியில் இறைவனிடம் வேண்டுகின்ற செய்தி தெரிந்துவிட்டதுபோலும்...
எப்படியும் அவர் நம்மை இந்தத் துறவுமடத்திலிருந்து அனுப்பி
விடுவார் என்று பயந்துகொண்டே அவர் முன் சென்றார்.
தலைமைத் துறவி புதிய துறவியின் அருகில்சென்று, அவரைக் கட்டியணைத்துக்
கொண்டு, "உங்களைக் குறித்து இங்கிருக்கும் ஒரு துறவி சொல்வதைக்
கேள்விப்பட்டேன். நீங்கள் எப்படி இருந்து இறைவனிடம் வேண்டினால்
இறைவனோடு ஒன்றிக்க முடியுமோ, அப்படி இருந்து இறைவனிடம் வேண்டி,
அவரோடு ஒன்றித்திருங்கள். யாருக்காகவும் உங்களுடைய தனித்தனியை
இழந்துவிடாதீர்கள்; வாழ்த்துகள்" என்றார். தலைமைத் துறவியிடமிருந்து
இப்படியொரு பதில் வரும் என்பதைச் சிறிதும் எதிர்பார்த்திராத அந்தப்
புதிய துறவி, இதற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் அதிகாலையில்
காட்டிற்குச் சென்று, நடனமாடிக் கொண்டே இறைவனிடம் வேண்டி, அவரோடு
ஒன்றித்திருந்தார்.
ஆம், இந்த நிகழ்வில் வரும், ஒருகாலத்தில் கோமாளியாக இருந்து
பின் துறவியாக மாறியவர் தனக்குப் பிடித்த வழியில் இறைவனிடம்
வேண்டி, அவரோடு ஒன்றித்திருந்தது போன்று, ஆண்டவர் இயேசுவும்
தனக்குப் பிடித்த வழியில் இறைவனிடம் வேண்டி ஆண்டவரோடு
ஒன்றித்திருந்தார். ஆண்டவரோடு ஒன்றித்திருப்பதற்கு, இயேசு
எப்படி வேண்டினார், அவருடைய இறைவேண்டல் அவரை என்ன செய்யத்
தூண்டியது என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
தனியாக மலைமேல் ஏறி இறைவனிடம் இயேசு
இயேசு கிறிஸ்து இறைவனிடம் வேண்டுவதற்கெனத் தனிக்கென்று ஒரு
வழிமுறையை வைத்திருந்தார். அதுதான் தனியாக மலைக்குச் சென்று
இறைவனிடம் வேண்டியது. இயேசு தனிமையான ஓர் இடத்திற்குச்
சென்றார் என்று மாற்கு நற்செய்தியாளரும் (மாற் 1: 35), இரவு
நேரங்களில் ஒலிவம் என்று வழங்கப்பட்ட மலைக்குச் சென்று
தங்கினார் என்று லூக்கா நற்செய்தியாளரும் (லூக் 21: 37)
எடுத்துக்கூறுகின்றார்கள். இவையெல்லாம் இயேசு, தந்தைக்
கடவுளிடம் வேண்டுவதற்குத் தனக்கென்று ஒரு வழிமுறையைப்
பின்பற்றினார் என்பதை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. நாமும்
இறைவனிடம் வேண்டுகின்றபொது தனித்தன்மையோடு வேண்டலாம். மற்ற
வேலைகளையும் தனித்தன்மையோடு செய்யலாம் என்பதை இயேசுவின்
இச்செயல் நமக்கு எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது.
இயேசுவின் இறைவேண்டல் அவரைச் செயலுக்கு உந்தித் தள்ளியது
இயேசு இறைவனிடம் வேண்டிக்கொண்டதோடு மட்டும் நிறுத்திக்
கொள்ளவில்லை. மாறாக, சீடர்களுக்கு ஒரு பிரச்சனை வந்ததும்,
அதாவது அவர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்தியதும் (மாற் 6:
48) அவர்களுக்கு உதவக் கடல் மேல்நடந்து செல்கின்றார். ஆகையால்,
நாம் இறைவனிடம் வேண்டுகின்றபொழுது, எல்லாரையும் போல் வேண்டிக்
கொண்டிருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. இயேசுவைப் போன்று
தனிதன்மையோடும் வேண்டலாம். மட்டுமல்லாமல், நாம் இறைவனிடம்
வேண்டுவது, நம்மைச் செயலுக்கு இட்டுச் செல்வதாக
இருக்கவேண்டும். நம்முடைய இறைவேண்டல் நம்மைச் செயலுக்கு
இட்டுச் செல்கின்றதா? சிந்திப்போம்.
சிந்தனை
"உங்களில் யாரேணும் துன்புற்றால் இறைவேண்டல் செய்யட்டும்"
(யாக் 5:13) என்பார் புனித யாக்கோபு. ஆகையால், நாம் நம்முடைய
துன்பத்தை இன்பமாக மாற்றும் இறைவேண்டலை, இயேசுவைப் போன்று
தனித்தன்மையோடு செய்வோம். அதே நேரத்தில் நம்முடைய இறைவேண்டல்
நம்மைச் செயலுக்கு இட்டுச் செல்லுமாறு பார்த்துக்கொள்வோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|