Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 கொரோனா தொற்று கிருமியின் பேராபத்திலிருந்து விடுபட செபம்

     
 
         அன்பின் இறைவா, இதோ முழு நம்பிக்கையுடன் உம்மை நோக்கி கூக்குரலிடுகின்றோம். இன்று இந்த கொரோனா என்ற நோய்கிரிமியினால் உலகமே செயலிழந்து போயுள்ளது. மக்கள் நாங்களனைவரும் வீட்டுக்குள் அடைந்து போயுள்ளோம். மேலும் இந்த நோய்கிரிமியினால் இன்று எத்தனையோ ஆயிரம் மக்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர், ஆயிரக்கணக்கான மக்கள் வைத்தியசாலைகளிளும், வீடுகளிலும் அவதிப்பட்டுகொண்டு, வேதனையோடும், வருத்ததோடும் தங்கள் உயிருக்காக போராடிக்கொண்டிருகிறார்கள். உலக அரசுகள் கூட இந்த நிலமையை கட்டுப்படுத்த முடியாமலும் தட்டு தடுமாறி தவித்துக்கொண்டிருகிறார்கள்.

இறைவா, இக்கட்டான நிலையில் நாங்கள் உம்மை நோக்கி கூக்குரலிடுகின்றோம். உமது ஆதரவை நாடி ஓடி வருகின்றோம். நாங்கள் அனைவரும் உமது பிள்ளைகளே. எங்களுக்கு உம்மை விட்டால் வேறு யாருமேயில்லை. எங்களுக்காக பாடுகள் பட்டு, வேதைனையுடன் சிலுவையில் இறந்த இறைவா, எங்களை கருணைக்கண் கொண்டு பாரும். எங்கள் தனிமையை, வேதனையை, எங்கள் மனதிலுள்ள பயத்தை நீர் நன்றாக அறிந்திருகின்றீர். ஆகவே உங்களுக்கு உதவி செய்ய விரைந்து வாரும். இறைவா, இந்த கொடுமையான தொற்று நோயை இந்த உலகத்திலிருந்து இல்லாமல் ஒழித்துவிடும். எல்லாவித அழிவுகள், துன்பங்கள், வேதனையிலிருந்து எம்மை காப்பாற்ற வாரும்.

உலக அரசுகளாலும், மருத்துவர்களாலும், மருத்துவ நிபுணர்களாலும் இந்த கொடிய தொற்று நோயை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து கொண்டிருக்கும் இந்த வேளையில், யாரினதும் உதவியின்றி அனாதைகளாக நாங்கள் உன் முன் வந்து நிற்கின்றோம். சுமை சுமந்து சோர்ந்திருப்போரே என்னிடம் எல்லோரும் வாருங்கள் என்று அழைத்தீரே இறைவா, இதோ உன்முன் மனப்பாரத்துடனும், வேதைனையுடனும், மனப்பயத்துடனும் உடலில் நோயுடனும் உம்முன் வந்து நிற்கிறோம். எம்மீது இரக்கம் வையும், ஏனெனில் நாங்கள் தளர்ந்து போயிருகின்றோம். இறைவா எம்மை குணமாக்கியருளும். நாங்கள் மனப்பயத்தினால் சோர்ந்து போயிருகின்றோம்.

அதே போன்று இந்நேரத்தில் நாங்கள் உம்மிடம் மன்னிப்பு கேட்கின்றோம். எமது பாவங்களும், எமது வாழ்க்கை முறைகளும் உம்மை தொடர்ந்து புண்படுத்தி கொண்டிருகின்றது. நாங்கள் எமது பாவவாழ்கையினால் உமது பிரசன்னத்தை உணராமல் உம்மை விட்டு பிரித்து வாழ்கின்றோம். தாவீது அரசன் பாவம் செய்தேன் இறைவா, நான் பாவம் செய்தேன், உமக்கெதிராக நான் செய்த பாவமெல்லாம் என் கண் முன்னே நிற்கின்றது என்று சொல்லி மனம் வருந்தி அழுதது போன்று நாங்களும் எங்கள் பாவங்களையெல்லாம் நினைத்து மனம் வருந்தி கண்ணீர் சிந்தி அழுகின்றோம். இறைவா எங்கள் பாவங்களையெல்லாம் மன்னித்தருளும், எங்கள் பாவங்கள் உமது இதயத்தை புண்படுத்தியிருகின்றது, உம்மை மீண்டும் மீண்டும் சிலுவையிலறைந்து கொலை செய்கின்றது. இதோ உமது இரக்கத்தை, மன்னிப்பை தேடி உம்முன் வந்து நிற்கின்றோம். உமது முன்னிலையிலிருந்து எம்மை தள்ளி விடாதேயும். உமது தூய ஆவியை எம்மிடமிருந்து எடுத்து விடாதேயும், உமது பேரன்பு எம்மை என்றும் ஆட்கொள்வதாக. இறைவா, நீர் இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் எத்தனையோ நோயாளர்களை குணப்படுத்தியுள்ளீர், அன்று தொட்டு இன்று வரை உம்மீது நம்பிக்கை வைத்து மன்றாடிய அனைத்து நோயாளிகளையும் நீர் குணப்படுத்திக் கொண்டிருகிறீர். இதோ, உமது பிள்ளைகளாகிய நாங்கள் உம்மில் முழு நம்பிக்கையுடன் முழந்தாலிட்டு, கெஞ்சி மன்றாடி உமது பாதுகாப்பை கேட்டு நிற்கின்றோம். எம்மை குணமாக்கும், எமக்கு ஆறுதலாயிரும். எம்மை உமது பாதையில் வழிநடத்தி செல்லும்.

அன்பின் இறைவா, கடைசியாக தங்கள் உயிரையே பணயம் வைத்து எல்லா நோயாளிகளையும் காப்பாற்ற நேரம் காலம் பார்க்காமல் இடைவிடாது சேவை செய்து கொண்டிருக்கும் அனைத்து மருத்துவர் மற்றும் தாதிமார்களை காத்து, அவர்களுக்கு தேவையான மனவுறுதி, மனத்திடம், மனப்பலத்தை கொடுத்து, தொடர்ந்து தங்களது சேவைகளை ஆற்றி அனைத்து நோயாளிகளை காப்பாற்ற அவர்களுக்கு தேவையான உமது ஆவியின் சக்தியை கொடுத்தருளும், மேலும் இந்நாட்களில் இந்த கொடூரமான நோயினால் இறந்த போன உமது பிள்ளைகளின் ஆன்மாக்களுக்கு நித்திய இளைபாற்றியை கொடுத்து உமது வான்வீட்டில் அவர்களை ஏற்றுகொள்ளும். ஆமென்!

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்