✠ புனிதர் நார்ஸிஸ்சஸ் ✠(St. Narcissus of
Jerusalem) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(அக்டோபர்
/
Oct -
29) |
✠ புனிதர் நார்ஸிஸ்சஸ் ✠(St. Narcissus of
Jerusalem)
✠ஜெருசலேம் ஆயர்/ ஒப்புரவாளர் :
(Bishop of Jerusalem and Confessor)
✠பிறப்பு : கி.பி. 99
✠இறப்பு : கி.பி. 216 (வயது 117)
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
✠நினைவுத் திருவிழா : அக்டோபர் 29
புனிதர் நார்ஸிஸ்சஸ், ஜெருசலேமின் " ஆதி குலத் தலைவர்" (Patriarch
of Jerusalem) ஆவார். மேற்கு மற்றும் கிழக்கு திருச்சபைகளால்
புனிதராக அருட்பொழிவு செய்யப்பட்டவர். ரோமன் கத்தோலிக்க திருச்சபையில்,
அக்டோபர் மாதம் இருபத்தொன்பதாம் நாள் அவரது நினைவுத் திருநாள்
கொண்டாடப்படுகின்றது.
கி.பி. 180ம் ஆண்டில், தனது என்பதாவது வயதில் எருசலேமின்
முப்பதாவது ஆயராகப் பொறுப்பேற்றவர் புனிதர் நார்ஸிஸ்சஸ்.
பணிக்கு வயது ஒரு தடையல்ல என்பதுபோல் இளமைத் துடிப்புடன்
இறைப்பணியைத் தொடர்ந்த இவர், கி.பி.195ம் ஆண்டில்,
" பாலஸ்தீனின்" (Palestine) " செசாரியா" (Caesarea) ஆயர்
" தியோஃபிடஸ்" (Theophitus) அவர்களுடன் சேர்ந்து, செசாரியாவில்
நடந்த ஆயர்கள் அவையில், கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா
எப்போதும் ஞாயிற்றுக்கிழமையிலேயே கொண்டாடப்பட வேண்டுமென்றும்,
யூதர்களின் பெருநாளான " பாஸ்காவுடன்" (Passover) அல்ல என்றும்
தீர்மானம் கொண்டு வந்தார்.
" யூசெபிசியசின்" (Eusebius) கூற்றின்படி, ஆயர் நார்ஸிஸ்சஸ்
அவர்கள் வாழும்போதே பல புதுமைகள் செய்தவர். மின்வசதிகள் இல்லாத
அக்காலத்தில், ஒரு கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா
திருவிழிப்புத் திருவழிபாடு தொடங்கவிருந்த நேரத்தில், ஆலய
விளக்குகளுக்குப் போதுமான எண்ணெய் இல்லாமல் அணைந்துபோகும்
நிலையில் இருந்தன. உடனே இவர் தியாக்கோன்களை அழைத்து
அருகிலிருந்த கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துவந்து
விளக்குகளில் ஊற்றச் சொன்னார். பின்னர் அந்தத் தண்ணீர்மீது
உருக்கமாகச் செபித்தார். உடனே அந்தத் தண்ணீர் எண்ணெய்யாக மாறி
விளக்குகள் சுடர்விட்டு எரிந்தன.
" புனித குரு" என எல்லாராலும் இவர் போற்றப்பட்டதைக் கண்டு
பொறாமையடைந்த மூவர், இவர்மீது அபாண்டமாகப் பழி சுமத்தினர்.
முதலாமவன், அனைவர் முன்னிலையிலும் வந்து, நான் சொல்வதில் உண்மை
இல்லையென்றால், கடவுள் என்னை நெருப்பில் சுட்டெரிப்பாராக
என்றான்.
இரண்டாவது ஆள் வந்து, எனது குற்றச்சாட்டுப் பொய்யானால், நான்
தொழுநோயால் தாக்கப்படுவேன் என்று சபதமிட்டான்.
மூன்றாவது ஆள் வந்து, நான் பார்வையிழப்பேன் என்று உறுதியாகச்
சொன்னான்.
இது நடந்து ஒரு சில நாட்களிலே ஓர் இரவில் முதல் ஆளின் வீடு
தானாகத் தீப்பிடித்து முழுக் குடும்பமும் சாம்பலானது. அடுத்த
ஆளும் அவர் கூறியதுபோலவே தொழுநோயால் தாக்கப்பட்டார்.
இவற்றைக் கண்டு பயந்த மூன்றாவது ஆள், ஆயர் மீது தாங்கள்
மூவரும் சுமத்திய குற்றங்கள் அனைத்தும் பொய் என அனைவர்
முன்னிலையில் அறிவித்து ஆயரிடம் மன்னிப்பு இறைஞ்சினான். ஆயரும்
அவருக்கு மன்னிப்பளித்தார்.
பின்னர், பாலைநிலம் சென்று தனிமையில் செபத்தில் நாட்களைச்
செலவழித்தார். சில காலம் கழித்து ஆயர் நார்ஸிஸ்சஸ் அவர்கள்,
எருசலேம் திரும்பி வந்தபோது மக்கள் அவரை மீண்டும்
ஆயராக்கினார்கள். ஆனால் முதிர்வயது காரணமாக, புனிதர்
" அலெக்சாண்டரை" (Saint Alexander) துணை ஆயராக நியமித்தார்
அவர்.
புனித வாழ்வு வாழ்ந்த ஆயர் நார்ஸிஸ்சஸ், கி.பி. 216ம் ஆண்டில்,
தனது 117வது வயதில், முழங்கால் படியிட்டு
செபித்துக்கொண்டிருக்கும் வேளையில் மரித்தார். |
|
|