Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் மாற்கு ✠(St. Mark)
  Limage contient peut-tre : 1 personne  
நினைவுத் திருநாள் : (அக்டோபர் / Oct - 07)
✠ புனிதர் மாற்கு ✠(St. Mark)
 34ம் திருத்தந்தை : (34th Pope)

பிறப்பு : ---
ரோம் (Rome)

இறப்பு : அக்டோபர் 7, 336
ரோம் (Rome)

நினைவுத் திருவிழா : அக்டோபர் 7

திருத்தந்தை புனிதர் மாற்கு (Pope Saint Mark) ரோம் நகர ஆயராகவும், கத்தோலிக்க திருச்சபையில் திருத்தந்தையாகவும் கி.பி. 336ம் ஆண்டு, ஜனவரி மாதம், 18ம் தேதி முதல், கி.பி. 336ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 7ம் தேதி வரை, மிகக் குறுகிய காலமே (எட்டு மாதங்களும் இருபது நாட்களும்) ஆட்சி செய்தார். இவருக்கு முன் ஆட்சி செய்த திருத்தந்தை, "புனிதர் சில்வெஸ்டர்" (St. Sylvester) ஆவார்.

திருத்தந்தையர்களின் வரலாறு (Liber Pontificalis) என்னும் பண்டைய நூல், இவர் ரோம் நகரில் "பிரிஸ்கஸ்" (Priscus) என்பவருக்கு மகனாகப் பிறந்தார் என்று கூறுகிறது.

இவரது ஆட்சிக்கால நிகழ்வுகள் :
ஆயர்களின் பட்டியல் மற்றும் மறை சாட்சிகளின் பட்டியல் என்னும் தொகுப்புகள் இவர் காலத்தில்தான் தொடங்கப்பட்டன என்பது மரபுச் செய்தி. புதிதாகத் திருத்தந்தையாகத் தெரிந்தெடுக்கப்படுபவருக்கு அருட்பொழிவு வழங்கும் உரிமைகொண்ட மூன்று ஆயர்களுள் 'ஓஸ்தியா' (Ostia) நகர ஆயருக்கு முதன்மைப் பொறுப்பு உண்டு என்று இவர் உறுதிப்படுத்தினார். இன்றைய திருச்சபை வழக்கப்படி, கர்தினால் குழுவின் தலைவர் ஓஸ்தியா நகர ஆயர் என்னும் மரியாதைப் பொறுப்பு கொண்டுள்ளார்.

இயேசு கிறிஸ்து இறைத்தன்மை கொண்டவர், கடவுளின் மகன் என்று நிசேயா சங்கம் 325ல் அறிவித்திருந்தது. ஆனால் 'ஆரியுஸ்' (Arius) என்பவர் இக்கொள்கையை ஏற்க மறுத்து, இயேசு கடவுளின் படைப்புகளில் மிகச் சிறந்தவரே தவிர கடவுள்தன்மை கொண்டவரல்ல என்று போதித்தார். இந்தத் தவறான போதனையால் திருச்சபைக்குள் குழப்பம் ஏற்பட்டது. இது திருத்தந்தை மாற்குவின் காலத்தில் நிகழ்ந்தது.

இவர் கட்டிய ஆலயங்கள் :
ரோமில் உள்ள புனித மாற்கு பேராலயத்தைக் (Basilica of San Marco) கட்ட இவரே அடித்தளம் இட்டார் என்று கருதப்படுகிறது. ரோம் நகரின் வெளியே, பேரரசர் "கான்ஸ்டன்டைன்" (Emperor Constantine) அவர்களிடமிருந்து நன்கொடையாகப் பெற்ற நிலத்தில், "பால்பீனாவின் கல்லறை" (Catacomb of Balbina) என்றழைக்கப்படும் பாதாள கல்லறைத் தோட்டத்தின் மேலே, கல்லறை ஆலயத்தைக் கட்டியவரும் இவரே என்று தெரிகிறது.

இறப்பும் திருவிழாவும் :
திருத்தந்தை மாற்கு இயற்கைக் காரணங்களால் இறந்தார். அவரது உடல் புனித பால்பீனா ஆலயத்தின் அடியில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. திருத்தந்தை மாற்குவின் நினைவுத் திருவிழா அக்டோபர் 7ம் நாள் கொண்டாடப்படுகிறது.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா