Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் இரண்டாம் ஜான் பவுல் ✠(St. John Paul II)
   
நினைவுத் திருநாள் : (அக்டோபர் / Oct - 22)
✠ புனிதர் இரண்டாம் ஜான் பவுல் ✠(St. John Paul II)

264ம் திருத்தந்தை :
(264th Pope)

பிறப்பு : மே 18, 1920
வாடோவிஸ், போலந்து குடியரசு
(Wadowice, Republic of Poland)

இறப்பு : ஏப்ரல் 2, 2005 (வயது 84)
அப்போஸ்தலர் அரண்மனை, வாடிகன் நகரம்
(Apostolic Palace, Vatican City)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம் : மே 1, 2011
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
(Pope Benedict XVI)

புனிதர் பட்டம் : ஏப்ரல் 27, 2014
திருத்தந்தை ஃபிரான்சிஸ்
(Pope Francis)

பாதுகாவல் :
"க்ரகோவ்" உயர்மறைமாவட்டம்" (Archdiocese of Krakw)
உலக இளைஞர் நாள் (இணை பாதுகாவல்) (World Youth Day (Co-Patron)
உலக குடும்பங்களின் சந்திப்பு 2015 (இணை பாதுகாவல்) (World Meeting of Families 2015 (Co-Patron)
இளம் கத்தோலிக்க குடும்பங்கள் (Young Catholics Families)
"ஸ்விட்னிகா" (தென் மேற்கு போலந்து நாட்டின் "சிலேசியா" (Silesia) பிராந்தியத்திலுள்ள நகரம்) (Świdnica)

நினைவுத் திருவிழா : அக்டோபர் 22

1978ம் ஆண்டு திருத்தந்தையாக பதவியேற்ற இரண்டாம் ஜான் பவுல், தமது முதல் திருப்பலியின் மறையுரையில் உலக கத்தோலிக்கர்களை நோக்கி, பின்வருமாறு அறைகூவல் விடுத்தார்.:
"கிறிஸ்துவுக்காக கதவுகளை அகலத் திறந்து வையுங்கள்" (Open wide the doors to Christ).

வாழ்க்கைக் குறிப்பு :
1920ம் ஆண்டு மே 18ம் தேதி போலந்தின் "வாடோவிஸ்" (Wadowice) நகரில் பிறந்த "கரோல் ஜோசெஃப் வோஜ்டிலா" (Karol Jzef Wojtyła) என்ற இயற்பெயர் கொண்ட திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் அவர்களது தந்தை பெயர், "கரோல் வோஜ்டிலா" (Karol Wojtyła) ஆகும். தாயாரின் பெயர், "எமிலியா" (Emilia Kaczorowska) ஆகும். தமது பெற்றோருக்குப் பிறந்த மூன்று குழந்தைகளில் இரண்டாவதாகப் பிறந்தவர். இவரது மூத்த சகோதரியான "ஓல்கா" (Olga) இவர் பிறப்பதற்கு முன்னரே மரித்துப்போனார். பள்ளி ஆசிரியையான இவரது தாயார் "எமிலியா", 1929ம் ஆண்டு, குழந்தைப் பிறப்பின்போது மரித்தார். மருத்துவரான தமது ஒரே சகோதரர் "எட்மண்டை" (Edmund) 1932ல் இழந்தார். "போலிஷ்" இராணுவ (Polish Army) அதிகாரியான இவரது தந்தை 1941ம் ஆண்டு, மாரடைப்பால் இறந்தார். ஜெர்மனிய நாசிகளின் ஆக்கிரமிப்பால் போலந்தில் பல்கலைக்கழகம் 1939ல் மூடப்பட்டது. எனவே ஜெர்மனிக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்கும் நோக்கத்திலும் தனது பிழைப்புக்காகவும் முதலில் சுண்ணாம்புக்கல் அகழ்விடத்திலும் பின்னர் சொல்வாய் நகரில் வேதித் தொழிற்சாலையிலும் வேலை செய்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கல்வியை மீண்டும் தொடர்ந்து 1946ம் ஆண்டில் குருத்துவம் பெற்றார். உடனடியாக ரோம் நகருக்கு அனுப்பப்பட்ட இவர், இறையியலில் முனைவர் பட்டம் வென்றார். பின்னர் போலந்து திரும்பிய அருட்தந்தை வோஜ்டிலா, தத்துவத்தில் முனைவர் பட்டம் வென்றார். பின்னர், "லூப்ளின் பல்கலையில்" (University of Lublin) கற்பிக்க ஆரம்பித்தார்.

1958ம் ஆண்டு, கம்யூனிஸ்ட் அதிகாரவர்க்கத்தினர், அருட்தந்தை வோஜ்டிலாவை "க்ராகோவ்" (Krakw) மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமனம் செய்ய அனுமதித்தனர். 1964ம் ஆண்டு, க்ராகோவ் பேராயராகவும், 1967ம் ஆண்டு, கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டார்.

1978ம் ஆண்டு அக்டோபர் 16ல் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்தினால் கரோல் ஜோசெஃப் வோஜ்டிலா, அச்சமயம் இரண்டாம் ஜான் பால் என்ற பெயரைத் தெரிவு செய்தார்.

திருத்தந்தை புனிதர் இரண்டாம் ஜான் பவுல், கத்தோலிக்க திருச்சபையின் 264வது திருத்தந்தை ஆவார். இவர் 26 ஆண்டுகள், 168 நாட்கள் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பணியாற்றினார். இதுவரை பணியாற்றிய திருத்தந்தையர்களில் போலந்து நாட்டைச் சேர்ந்த முதலாவது திருத்தந்தை இவராவர். மேலும் 1520க்கு பின்னர் இத்தாலியர் அல்லாத ஒருவர் திருத்தந்தையானதும் இதுவே முதல் தடவையாகும். இவர் 1978ம் ஆண்டு அக்டோபர் 16ம் நாள் பதவியேற்றார். வரலாற்றில் நீண்ட காலம் இப்பதவியில் இருந்தவர்களில் இரண்டாம் இடம் பிடித்தவர் இவராவார்.

இவர் 1340 பேருக்கு அருளாளர் பட்டமும், 483 பேருக்கு புனிதர் பட்டமும் அளித்துள்ளார். இது, இவருக்கு முன், ஐந்து நாற்றாண்டுகளாக இருந்த எல்லா திருத்தந்தையர்களின் கூட்டு எண்ணிக்கையை விட அதிகமாகும். இவர் 20ம் நூற்றாண்டின் மிக முக்கிய தலைவர்களுல் ஒருவராக போற்றப்படுகின்றார். தம் 26 ஆண்டு ஆட்சிகாலத்தில் இவர் 129 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். தம் தாய்மொழியான போலியம் மட்டுமல்லாமல் இத்தாலியம், ஃபிரெஞ்சு, ஜெர்மன், ஆங்கிலம், எசுப்பானியம், போர்த்துக்கீசம், உக்குரேனிய மொழி, ரஷ்யன், குரோவாசிய மொழி, எஸ்பெராண்டோ, பண்டைய கிரேக்கம் (Ancient Greek) மற்றும் இலத்தீன் மொழிகள் இவருக்குத் தெரிந்திருந்தன.

திருத்தந்தை, ரோம் நகரிலுள்ள "பிரதான யூதர் வழிபாட்டுத் தலம்" (அ) "வழிபாட்டுக் கூடத்திற்கும்" (Main Synagogue), "எருசலேமின் மேற்கு சுவர்" (Western Wall in Jerusalem) என்றழைக்கப்படும் யூதர்கள் பாரம்பரியமாக வெள்ளிக்கிழமைகளில் பிரார்த்தனை செய்து வரும் "ஏரோதுவின்" ஆலயத்தின் (Herod's temple) தளத்துக்கும் வருகை தந்தார். கத்தோலிக்கர்களின் தலைமையகமான வாடிகனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தினார். கத்தோலிக்க-முஸ்லீம் உறவுகளை மேம்படுத்திய திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல், 2001ம் ஆண்டு, "சிரியா" (Syria) நாட்டின் தலைநகரான "டமாஸ்கஸில்" (Damascus) உள்ள மசூதிக்கும் வருகை தந்தார்.

ரோம் மற்றும் உலகெங்குமுள்ள கத்தோலிக்கர் மற்றும் பிற கிறிஸ்தவ மக்களிடையே கொண்டாட்டங்களை நிகழ்த்திய சிறப்பு ஜூபிளி ஆண்டான 2000, "ஜான் பவுல்" பணிக்காலத்தின் ஒரு முக்கிய நிகழ்வு ஆகும். "மரபுவழி திருச்சபைகளுடனான" (Orthodox Churches) உறவுகள் கணிசமாக முன்னேறியது.

1979ம் ஆண்டில், திருத்தந்தையின் போலந்து நாட்டு வருகை, அங்கே ஒற்றுமை இயக்கம் வளரவும், பத்து வருடங்களின் பின்னர் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிசம் தகர்க்கப்படவும் காரணமாயிருந்தது. உலக இளைஞர் தினத்தை (World Youth Day) தொடங்கிய திருத்தந்தை, அதன் கொண்டாட்டங்களுக்காக பல்வேறு நாடுகளுக்கு விஜயம் தந்தார். அவர், "சோவியத் யூனியன்" (Soviet Union) மற்றும் "சீனா" (China) ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்ய மிகவும் ஆர்வமாயிருந்தார். ஆனால், அந்நாடுகளிலுள்ள அரசுகள், அதனைத் தடுத்தன. இவரது திருத்தந்தையர் பணிக்காலத்தைய புகைப்படங்களில் மிகவும் நினைவுகூறத்தக்கது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தம்மை படுகொலை செய்ய முயன்ற "மெஹ்மெத் அலி அக்கா" (Mehmet Ali Agca) என்பவருடன் 1983ம் ஆண்டு அவர் நேருக்கு நேர் நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களாகும்.

திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுலின் 27 வருட பணிக்காலத்தில், அவர் கத்தோலிக்க ஆயர்களுக்கு 14 சுற்றறிக்கைகளை (Encyclicals) எழுதியிருந்தார். ஐந்து புத்தங்கங்களையும் எழுதியிருந்தார்.

தமது வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளில் "பார்கின்சன் நோய்" (Parkinsons disease) எனப்படும் நடுக்கம், தசை இறுக்கம், மற்றும் மெதுவாக, துல்லியமற்ற, இயக்கங்களுடைய நரம்பு மண்டலத்தின் முற்போக்கான நோயால் பாதிக்கப்பட்டிருந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல், தமது அன்றாட நடவடிக்கைகள் சிலவற்றை குறைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டார்.

தூய பேதுரு சதுக்கத்தில் (St. Peters Square) நடந்த இறுதிச் சடங்கு திருப்பலிக்காக காத்திருந்த மக்கள் கூட்டத்திடையே, அப்போதைய கர்தினால்களின் கல்லூரியின் தலைவரான "கர்தினால் ஜோசஃப் ரட்சிங்கர்" (Cardinal Joseph Ratzinger) பின்னால் திருத்தந்தையுமான "பதினாறாம் பெனடிக்ட்" (Pope Benedict XVI) பின்வருமாறு பேசினார்.:
"நோயினால் பாதிக்கப்பட்டிருந்த திருத்தந்தை, தமது வாழ்க்கையின் இறுதி உயிர்த்தெழுதல் ஞாயிறு (Easter Sunday) தினத்தன்று, அப்போஸ்தலர் மாளிகையின் ஜன்னலருகே மீண்டுமொருமுறை வந்து வாட்டிகன் நகருக்கும் உலகத்துக்கும் ஆசீர் தந்ததை நாம் யாரும் மறக்க இயலாது. இன்று, நமது அன்பான திருத்தந்தை தமது வீட்டின் ஜன்னலில் நின்றவாறு, நம்மைப் பார்த்து ஆசீர்வதிக்கிறார் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஆமாம், திருத்தந்தையே, எங்களை ஆசீர்வதியுங்கள். உங்கள் அன்பான ஆத்மாவை, ஒவ்வொரு நாளும் உம்மை வழிநடத்திய கடவுளின் தாய், உன் தாயிடம் நாங்கள் ஒப்படைத்து விடுகிறோம். அவர் இனி உம்மை தமது மகனும், எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமைக்காக உம்மை வழிநடத்துவாராக. ஆமென்."

அருளாளர் பட்டம் :
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் இறந்த சிறிது காலத்திற்குள்ளேயே அவருக்குப் புனிதர் பட்டம் அளிப்பதற்கான விசாரணை தொடங்கியது. வழக்கமாக இவ்வகையான விசாரணை தொடங்குவது ஒருவரது இறப்புக்குப் பின் ஐந்து ஆண்டுகள் கழித்தே தொடங்கும். ஆனால், இரண்டாம் ஜான் பவுலை விரைவில் புனிதராகக் காண பொதுமக்கள் விரும்பியதைத் தொடர்ந்து திருத்தந்தை "பதினாறாம் பெனடிக்ட்" (Pope Benedict XVI) அந்த விசாரணை உடனடியாகத் தொடங்க ஆணையிட்டு, ஐந்து ஆண்டு கால தாமதம் வேண்டாமென்று விதிவிலக்கு அளித்தார்.

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், 2009ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 19ம் நாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுலை வணக்கத்திற்குரியவர் என்று அறிவித்தார். ஃபிரான்ஸ் நாட்டைச் சார்ந்த ஒரு கன்னியர், இரண்டாம் ஜான் பவுலை நோக்கி மன்றாடியதைத் தொடர்ந்து "பார்க்கின்சன் நோயிலிருந்து" திடீரென குணம் பெற்றதை ஆராய்ந்த வாட்டிகன் பேராயம், அந்நிகழ்ச்சி இறையருளால் நிகழ்ந்ததே என்று அறிக்கையிட்டதைத் தொடர்ந்து, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2011ம் ஆண்டு, மே மாதம், முதல் நாளன்று திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுலை அருளாளர் நிலைக்கு உயர்த்தினார்.

புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுதல் :
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுலுக்கு அருளாளர் பட்டம் அளிக்கப்பட்ட சில மணி நேரம் சென்ற உடனேயே, அவருடைய பரிந்துரையின் பயனாக ஒரு புதுமை நிகழ்ந்ததாக செய்தி வந்தது. "கோஸ்டாரிக்கா" (Costa Rican) நாட்டு "ஃபுளோரிபெத் மோரா" (Floribeth Mora) என்ற பெண்மணிக்கு ஏற்பட்ட மூளை இரத்த அழற்சி, திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுலை நோக்கி மன்றாடியதன் விளைவாக, அற்புதமான விதத்தில் மறைந்ததாகவும், அதற்கு மருத்துவர்களால் விளக்கம் தர இயலவில்லை என்றும் செய்தி வெளியானது. இந்த நிகழ்வை ஆய்ந்த வாட்டிகன் பேராயம், அதை ஒரு புதுமை என்று அறிக்கையிட்டது.

திருத்தந்தை "ஃபிரான்சிஸ்" (Pope Francis) அவர்கள், 2014ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 27ம் நாள், திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுலுக்கு புனிதர் பட்டம் அளித்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா