Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ஜான் லியோனார்டி ✠(St. John Leonardi)
  Limage contient peut-tre : intrieur  
நினைவுத் திருநாள் : (அக்டோபர் / Oct - 09)
✠ புனிதர் ஜான் லியோனார்டி ✠(St. John Leonardi)

 கத்தோலிக்க குரு/ துறவற சபை நிறுவனர் :
(Catholic Priest/ Founder)

பிறப்பு : கி.பி. 1541
டயஸிமோ, லுக்கா, லுக்கா குடியரசு
(Diecimo, Lucca, Republic of Lucca)

இறப்பு : அக்டோபர் 9, 1609 (வயது 68)
ரோம், திருத்தந்தையர் மாநிலம்
(Rome, Papal States)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம் : நவம்பர் 10, 1861
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
(Pope Pius IX)

புனிதர் பட்டம் : ஏப்ரல் 17, 1938
திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்
(Pope Pius XI)

முக்கியத் திருத்தலங்கள் :
தூய மரியாள் ஆலயம், கேம்பிடெல்லி, இத்தாலி
(Santa Maria in Campitelli, Italy)

பாதுகாவல் : மருந்தாளுனர்கள்

நினைவுத் திருநாள் : அக்டோபர் 9

தூய கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப மனிதர் வாழும்பொழுது தூயோர் ஆகின்றனர், நடமாடும் புனிதராக மாறுகின்றனர் என்பதை தன்வயப்படுத்தி வாழ்ந்தவர்கள்தான் புனிதர்கள். வாழ்க்கை என்னும் பயணத்தில் பலமுறை வழி தெரியாமல் தத்தளிக்கும்போது நமது பயணத்திற்கு நல்வழியை காட்டுபவர்கள் புனிதர்கள். எப்படியும் வாழ்ந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழும் முறையை வகுத்து காட்டியவர்கள் புனிதர்கள். இவர்கள் புவியிலேயே புனித வாழ்வு வாழ்ந்ததால்தான் இன்று புனிதர்களாக போற்றப்படுகிறார்கள், புகழப்படுகிறார்கள். ஒவ்வொரு புனிதருமே தன் சுய விருப்பங்களைக் கடந்து, களைந்துவிட்டு இறை விருப்பத்தை உணர்ந்து இறைப்பணிக்காய் அர்ப்பணித்தவர்களாக உள்ளனர். அத்தகைய வாழ்வுக்காய் தன்னையும் அர்ப்பணித்தவர்தான் இறையன்னை சபையின் நிறுவனரும், மருந்தாளுநர்களின் பாதுகாவலருமாய், விசுவாசப் பரப்புதல் சபையின் துணை நிறுவனருமாய் போற்றப்படுகின்ற புனித ஜான் லியோனார்டி.

"புனிதர் ஜான் லியோனார்டி" என்றும், "புனிதர் ஜியோவன்னி லியோனார்டி" என்றும் அழைக்கப்படும் இவர், ஒரு இத்தாலிய ரோமன் கத்தோலிக்க குருவும் "லுக்காவின் இறை அன்னையின் துறவற சபை" (Clerics Regular of the Mother of God of Lucca) என்ற சபையை தோற்றுவித்தவரும் ஆவார். லுக்கா குடியரசில் பிறந்த இவர், கி.பி. 1572ம் ஆண்டு, கத்தோலிக்க குருத்துவ அருட்பொழிவு பெற்றார். தமது பங்கிலுள்ள இளம் கிறிஸ்தவ உருவாக்கத்திற்கு தம்மை அர்ப்பணித்துக்கொண்ட அவர், "இறை அன்னையின் கியோவன்னி" ("Giovanni of the Mother of God") என்ற பெயரை தமது கிறிஸ்தவப் பெயராக சுவீகரித்துக்கொண்டார்.

அறிவியல், விஞ்ஞானம் என அனைத்துத் துறைகளிலும் புதிய சிந்தனைகள் பிறப்பெடுத்த ஓர் மறுமலர்ச்சியின் பொற்காலமும், தாய் திருச்சபையின் முக்கிய காலமுமாய் விளங்கிய பதினாறாம் நூற்றாண்டில், கி.பி. 1541ம் ஆண்டு இத்தாலி நாட்டில், லூக்கா நகரில் உள்ள தியோச்சிமோ என்ற இடத்தில், ஜியோக்கோமோ லியோனார்டி, ஜியோவான்னா லிப்பி என்ற பெற்றோருக்கு பிறந்தவர்தான், இறையன்னை சபையின் நிறுவனரும், மருந்தாளுநர்களின் பாதுகாவலருமாய் இன்று போற்றப்படும் புனித ஜியோவன்னி லியோனார்டி. இவருடைய பெற்றோர்கள் மிகவும் இறை பக்தியோடும், தெய்வ பயத்தோடும் வாழ்ந்து வந்தார்கள். தன்னுடைய குடும்பத்தில் ஏழாவது செல்லப் பிள்ளையாகப் பிறந்தார். இவருக்கு நான்கு மூத்த சகோதரிகளும், இரண்டு மூத்த சகோதரர்களும் இருந்தனர். இளம் வயதிலேயே தன் பெற்றோருக்கு கீழ்ப்படிந்து, இறைத்தாக்கத்தோடு, இறை பக்தியிலும், பண்பிலும் வளர்ந்தார்.

இவர் தமது 17வது இளம் வயதில் தன் தந்தையின் பணியான மருந்தாளுநர் பணியை மேற்கொண்டு செயல்பட்டார். மருந்தாளுநர் பணியை செய்கின்றபோது கொலம்பினஸ் குழுவினரோடு தன் உறவை ஏற்படுத்தினார். கி.பி. 1569ம் ஆண்டு ஜியோவன்னி லியோனார்டியின் அன்புத் தந்தை ஜியோக்கோமோ லியோனார்டி இறந்தார். அவரின் இறப்பு ஜான் லியோனார்டிக்கும், அவரின் குடும்பத்திற்கும் பெரும் பேரிழப்பை தந்தது. அதனால் தன் தாயாருக்கு உதவிகரமாக சொந்த ஊரிலேயே ஒரு மருந்துக்கடை திறக்கலாம் என்று முடிவு செய்த அவர், இறைவனின் அழைப்பை உணர்ந்ததால் கி.பி. 1558ம் ஆண்டு, தொடங்கிய மருந்தாளுநர் பணியை கி.பி. 1568ம் ஆண்டு கைவிட்டார். தன் ஆன்மீக குருவான டோமினிக்கன் சபையைச் சார்ந்த ஃபிரான்சிஸ்கோ பெர்னார்டினியின் வழிகாட்டுதலின்படி குருவாக இறைப்பணிச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் குருத்துவத்தை நோக்கிப் பயணித்தார். குருத்துவப் பயிற்சிப் பெற்ற ஜான் லியோனார்டி, அன்னை மரியாளின் பக்தியிலும், அளவு கடந்த ஆன்மீக தாகத்திலும் வளர்ந்தார்.

இவர் கி.பி. 1571ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 22ம் நாள் குருத்துவ அருட்பொழிவு பெற்றார். கி.பி. 1572ம் ஆண்டு ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா அன்று தன் முதல் நன்றித் திருப்பலியை புனித சூசையப்பர் ஆலயத்தில் நிறைவேற்றினார். இறை அன்னையின் மீது இருந்த அளவு கடந்த அன்பினால் கி.பி. 1574ம் ஆண்டு புனித ரோஸாவின் அன்னையின் ஆலயத்தில், இறையன்னை சபையை தோற்றுவித்தார். ஜான் லியோனார்டியின் வாழ்வால் ஈர்க்கப்பட்ட ஜார்ஜ் அரிக்கினி, ஜீவாம்பட்டிஸ்டா சியோனி, செசார் பிரான்சியோட்டி ஆகிய மூவரும் இறையன்னை சபையின் முதல் மூன்று சகோதரர்களாக தங்கள் பாதம் பதித்து, ஜான் லியோனார்டியின் வழிகாட்டுதலில் இறைப்பணிச் செய்ய தங்கள் வாழ்வை ஆரம்பித்தனர்.

கி.பி. 1583ம் ஆண்டு, தன் துறவற சபைக்கான அங்கீகாரத்தை, அப்போது இருந்த லூக்கா நகரத்து ஆயரிடம் மார்ச் திங்கள் 8ம் நாள் கடிதத்தின் வாயிலாக அனுமதி பெற்றார். கி.பி. 1604ம் ஆண்டு, ஜீன் மாதம், 24ம் நாள், திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட் என்பவரால் தன் துறவற சபையின் அடிப்படை ஒழுங்கு நூல்களை அனுமதியாகப் பெற்றார்.

எது சரி, எது தவறு என்ற தெளிவின்றி சமுதாயமும், திருச்சபையும் தேங்கி நின்ற சமயத்தில் "கிறிஸ்துவே அனைத்திற்கும் அளவுகோலாக இருக்கிறார்" என்றுச் சூளுரைத்து, தவறுகளைத் துணிவோடுச் சுட்டிக்காட்டியும், சமூகம் பயணிக்க வேண்டியச் சரியானப் பாதையினை தனது வாழ்வாலும், பணிகளாலும் எடுத்தியம்பி மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தினார். அக்காலத்தில் நிலவிய லூத்தரன் பிரிவினை சபையினருக்கு எதிராக ஜான் லியோனார்டியின் தணியாத தாகமாக விளங்கியது "நற்கருணை வழிபாடு, மரியன்னை பக்தி, சிறுவர்க்கு மறைக்கல்வி" ஆகியனவாகும். இவர் திருத்தந்தையின் வார்த்தைக்கு கீழ்படிந்து, சீர்திருத்தப் பணியினையும் மேற்கொண்டார். நற்செய்தி பணியைத் தன் வாழ்வின் அடிப்படை உரிமையாக தேர்ந்தெடுத்த இவர், சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்து, அவற்றை வாழ்வாக்கியும் செயல்பட்டார். சிறுவர்களுக்கு "மறைக்கல்வி" புத்தகத்தையும் முதன் முதலாக எழுதினார். பல செயல்கள் புரிந்த ஜான் லியோனார்டி, தொற்று நோயாளிகளுக்கும் இறைப் பணி புரிந்ததால், அவரும் அந்நோயால் தாக்கப்பட்டு கி.பி. 1609ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 9ம் நாள், இறைவனில் கலந்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா