✠ புனிதர் ஹிலாரியன் ✠(St. Hilarion) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(அக்டோபர்
/
Oct -
21) |
✠ புனிதர் ஹிலாரியன் ✠(St. Hilarion)
✠ மடாதிபதி/ துறவி :
(Abbot/ Anchorite)
✠பிறப்பு : கி.பி. 291
தபத்தா, சிரியாவின் தென் காஸா, பாலஸ்தீனம்
(Thabatha, South of Gaza in Syria, Palaestina)
✠இறப்பு : கி.பி. 371
சைப்ரஸ்
(Cyprus)
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கீழ் ஆர்த்தோடாக்ஸ் திருச்சபைகள்
(Eastern Orthodox Churches)
காப்டிக் திருச்சபை
(Coptic Church)
✠நினைவுத் திருநாள் : அக்டோபர் 21
புனித ஹிலாரியன், தமது வாழ்வின் பெரும்பகுதியை பாலைவனங்களில்
கழித்த துறவி ஆவார். இவர், புனித வனத்து அந்தோனியாரை (St.
Anthony the Great) முன்னுதாரணமாகக் கொண்டு அவரை பின்பற்றியவர்
ஆவார்.
இவரைப் பற்றின தகவல்களின் மூல ஆதாரம் "புனித ஜெரோம்" (St.
Jerome) அவர்களின் எழுத்துக்களே ஆகும். சுமார் 390ல்,
பெத்தலகேமில் ஜெரோம் அவர்களால் ஹிலாரியனின் சரிதம்
எழுதப்பட்டது. அதன் பொருளானது, ஹிலாரியன் எங்ஙனம் தமது துறவு
வாழ்வினை அர்ப்பணித்தார் என்பதேயாகும்.
ஹிலாரியன், "சிரிய பாலஸ்தீனத்திலுள்ள" (Syria Palaestina)
"காஸாவின்" தென் பகுதியிலுள்ள (South of Gaza) "தபத்தா"
(Thabatha) எனுமிடத்தில் "பேகன்" (Pagan) இன பெற்றோருக்குப்
பிறந்தவர் ஆவார்.
சிறுவன் ஹிலாரியனின் பெற்றோர், தங்களின் மகனைக் கல்வியில்
சிறந்தவனாக்க விரும்பி, அக்காலத்தில் கல்விக்குச் சிறந்து
விளங்கிய எகிப்து நாட்டின் அலெக்சாந்திரியாவிலுள்ள
(Alexandria) இலக்கணகர்த்தா ஒருவரிடம் அணியிலக்கணம் கற்க
அனுப்பினர். அங்குச் சென்ற ஹிலாரியனுக்கு அந்நகரின்
திரையரங்குகளும், கேளிக்கை விளையாட்டுகளும், ஆடம்பரமான
நண்பர்களும் கவர்ச்சியளிக்கவில்லை. ஆனால் அந்நகரின்
கிறிஸ்தவர்களின் வாழ்க்கைமுறை அச்சிறுவனை ஈர்த்தது. இவர்,
அலெக்சான்றியாவிலுள்ள ஒரு இலக்கணவாதியிடம் "அணியிலக்கணம்
மற்றும் வாக்கு வன்மை" சம்பந்தமான பாடங்களை வெற்றிகரமாக
கற்றுத் தேர்ந்தார். இவர், அலெக்சான்றியாவில் மனம் மாறி,
கிறிஸ்தவ மதத்தினை தழுவியதாக தெரிகிறது. பின்னர் ஆலயங்களுக்கு
தொடர்ந்து செல்ல ஆரம்பித்தார். புனித ஜெரோம் அவர்களின்படி,
இவர் மிகவும் ஒல்லியான, ஆரோக்கியமற்ற உடல்வாகினை
கொண்டிருந்தார்.
துறவு வாழ்வின் தொடக்கம் :
புனித ஜெரோம் அவர்கள் எழுதிய சரித்திரத்தின்படி, புனித வனத்து
அந்தோனியார், "அவர்களுடைய பெயர் எகிப்தின் எல்லா இன மக்களின்
நாவில் இருக்கும்" என்று சொன்னதைக் கேட்டறிந்த ஹிலாரியன், தமது
பதினைந்தாம் வயதில் எகிப்தியப் பாலைநிலத்தில் கடும் தவ
வாழ்க்கை வாழ்ந்த தூய வனத்து அந்தோணியார் பற்றி எல்லாரும்
வியந்து பேசுவதைக் கேட்டார். எனவே புனித வனத்து அந்தோனியாருடன்
சேர்ந்து இரண்டு மாதங்கள் வாழ முடிவெடுத்து பாலைநிலம் சென்றார்
ஹிலாரியன். ஆனால், புனித வனத்து அந்தோனியாரின் ஆசிரமமானது,
நோய்கள் தீர வேண்டியும், பேய் பசாசுகளை ஓட்ட வேண்டியும் வரும்
மக்களால் பரபரப்பாகவே இயங்கியது. இதனால், ஹிலாரியன் சில
துறவியர்களுடன் தமது ஊரான "தபத்தா" திரும்பினார். அதே சமயம்,
அவரது பெற்றோர் மரித்துப் போகவே, அவர் தமக்கு சேர வேண்டிய
சொத்துக்களை தமது சகோதரர்களுக்கும் ஏழைகளுக்கும்
பகிர்ந்தளித்துவிட்டு துறவு வாழ்வினைத் தொடர வேண்டி பாலைவனம்
திரும்பினார்.
"மஜோமா"வின் (Majoma) தென்மேற்குப் பகுதியிலுள்ள "காஸா" நகரின்
துறைமுக (Gaza) பகுதிக்கு சென்றார். ஒரு பக்கம் கடலும்,
மறுபக்கம் சதுப்பு நிலத்தையும் கொண்ட அவ்விடம் வழிப்பறிக்
கொள்ளையர்கள் நிறைந்தது. இது குறித்து அவரது நண்பர்கள் அவரை
எச்சரித்தனர். ஆயினும் அங்கு குச்சிகளால் ஒரு சிறு குடிசை
அமைத்து புனித வனத்து அந்தோணியார் போல் கடும் தவ வாழ்வு வாழத்
தொடங்கினார் ஹிலாரியன். அடிக்கடி இடத்தை மாற்றினார். இவரிடம்
ஒரேயொரு மயிராடையும், புனித வனத்து அந்தோணியார் கொடுத்த
தோலாலான ஒரு மேலங்கியுமே இருந்தன.
தினமும் கதிரவன் மறைந்த பின்னர் 15 காய்ந்த அத்திப்பழங்களை
மட்டுமே சாப்பிட்டார். சாத்தானின் பிடியிலிருந்து பலரை
விடுவித்தார். மேலும் பல புதுமைகளையும் செய்தார். மக்களும்
கூட்டம் கூட்டமாய் அவரிடம் வரத் தொடங்கினர். இதனால் தனிமையை
நாடி கி.பி. 360ல் மீண்டும் எகிப்து சென்றார். அங்கு புனித
வனத்து அந்தோணியார் வாழ்ந்த இடங்களைத் தரிசித்தார். பின்னர்
அலெக்சாந்திரியாவுக்கு அருகிலுள்ள "ப்ரூச்சியம்" (Bruchium)
சென்றார். ஆனால் ஜூலியன் என்பவர், கிறிஸ்தவத்துக்கு எதிராகக்
கிளம்பி இவரைக் கைது செய்ய முயற்சித்தான். இதனால் லிபியப்
பாலைநிலம் சென்றார். பின்னர் சிசிலி சென்று, "பச்சினம்"
(Pachinum) என்ற இடத்திற்கு அருகில் நீண்ட காலம் கடும் தவ
வாழ்வு வாழ்ந்தார். இதற்கிடையே, இவரின் முந்தைய சீடரான
"ஹெஸிச்சியஸ்" (Hesychius) இவரைத் தேடி அங்கு வந்தார்.
துறவி ஹிலாரியன் அவர்களைத் தேடி மீண்டும் மக்கள் வரத்
தொடங்கினர். இதனால் தனிமையை நாடி குரோவேஷியா நாட்டின்
"டல்மாஷியா" (Dalmatia) எனுமிடத்திலுள்ள "எபிடாரஸ்"
(Epidaurus) சென்றார். இறுதியில் "சைப்ரஸ்" (Cyprus) சென்று
தனிமையான குகை ஒன்றில் வாழ்ந்து கி.பி. 371ம் ஆண்டில் இறந்தார்
ஹிலாரியன். இத்தூயவரின் நினைவுத் திருவிழா அக்டோபர் மாதம்,
21ம் தேதி ஆகும். |
|
|