✠ புனிதர் ஃபிரான்சிஸ் ✠(St. Francis of
Assisi) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(அக்டோபர்
/
Oct -
04) |
✠ புனிதர் ஃபிரான்சிஸ் ✠(St. Francis of
Assisi)
✠ மறைப்பணியாளர்; திருத்தொண்டர்; ஒப்புரவாளர்; அருள் வடுவுற்றவர்; சபை நிறுவனர்
:
(Religious, Deacon, Confessor, Stigmatist and Religious
Founder)
✠பிறப்பு : கி.பி. 1181/1182
அசிசி, ஸ்போலெடோ, தூய ரோம பேரரசு
(Assisi, Duchy of Spoleto, Holy Roman Empire)
✠இறப்பு : அக்டோபர் 3, 1226 (வயது 44)
அசிசி, ஊம்ப்ரியா, திருத்தந்தையர் மாநிலங்கள்
(Assisi, Umbria, Papal States)
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
லூதரன் திருச்சபை
(Lutheran Church)
பழைய கத்தோலிக்க திருச்சபை
(Old Catholic Church)
✠புனிதர் பட்டம் : ஜூலை 16, 1228
திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி
(Pope Gregory IX)
✠முக்கிய திருத்தலங்கள் :
அசிசியின் தூய ஃபிரான்சிஸ் பேராலயம்
(Basilica of San Francesco d'Assisi)
✠நினைவுத் திருவிழா : அக்டோபர் 4
✠பாதுகாவல் :
விலங்குகள், சுற்றுச்சூழல், இத்தாலி, வியாபாரிகள், சாரணர்கள்,
சான் ஃபிரான்சிஸ்கோ (San Francisco), கலிஃபோர்னியா (California),
நாகா சிட்டி (Naga City), செபு (Cebu), ஓவியத்திரை தொழிலாளர்கள்.
அசிசியின் ஃபிரான்சிஸ், ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவத் திருத்தொண்டரும்,
ஃபிரான்சிஸ்கன் சபை என்னும் கிறிஸ்தவ துறவற அமைப்பை நிறுவியவரும்
ஆவார். அவர் பிறந்த ஆண்டு கி.பி.1181 அல்லது கி.பி.1182 என்று
கூறுவர். அவர் இறந்த ஆண்டும் நாளும் உறுதியாகத் தெரிவதால் அதிலிருந்து
பின்னோக்கிக் கணித்து அவரது பிறந்த ஆண்டை வரலாற்றாசிரியர்கள்
நிர்ணயிக்கின்றனர். திருத்தொண்டராகப் பட்டம் பெற்றபின்னர்,
"குருத்துவ பட்டம்" பெற தாம் தகுதியற்றவர் என்று தாழ்ச்சி உணர்வுடையவராக,
ஃபிரான்சிஸ் அப்பட்டத்தைப் பெற முன்வரவில்லை.
வரலாற்று ஆதாரங்கள் :
புனிதர் அசிசியின் ஃபிரான்சிசின் வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல்களுக்குப்
பல சான்றுகள் உள்ளன. கி.பி. 12-13ம் நூற்றாண்டுகளில் அவர்
வாழ்ந்திருந்த போதிலும் அவர் உரைத்த சொற்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவர் நிறுவிய சபைக்கு அவர் வழங்கிய ஒழுங்குகள் உள்ளன. அவர் எழுதிய
இறுதி சாசனம் உள்ளது. அவர் எழுதிய கடிதங்கள், கவிதைகள், வழிபாடு
பற்றிய எழுத்துப் படையல்கள் போன்றவையும் உள்ளன. ஃபிரான்சிஸ்
இறந்த இருபது ஆண்டுகளுக்குள்ளாக அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று
ஏடுகள் தோன்றலாயின. அவரைப் பின்பற்றிய அவர்தம் சீடர்கள் பலர்
அவரது வரலாற்றை எழுதினர். அவர்களுள் சகோதரர்கள் செலானோ தோமா,
லியோ, ஆஞ்செலொ, ருஃபீனோ ஆகியோரைக் குறிப்பிடலாம். மேலும் பல
பிரான்சிஸ்கன் துறவியர் ஃபிரான்சிசோடு தமக்கு ஏற்பட்ட அனுபவங்களையும்,
அவரது போதனை, வாழ்க்கை நிகழ்வுகளையும் சேர்த்தனர். இத்தகைய வரலாற்று
ஆதாரங்களின் அடிப்படையில் புனித ஃபிரான்சிஸ் பற்றிய பல விவரங்கள்
உறுதியாகத் தெரிகின்றன. ஃபிரான்சிஸ் வாழ்ந்த கி.பி. 12-13ம்
நூற்றாண்டுகளிலும், அதற்குப் பின்னும் இன்று வரை எண்ணிறந்த மனிதர்கள்
இந்த "அசிசியின் ஏழை மனிதரின்" (Poor Man of Assisi) எளிய
வாழ்க்கையையும், இயற்கை அன்பையும், கடவுள் பக்தியையும் போற்றி
வந்துள்ளனர். கத்தோலிக்க திருச்சபை தவிர எதிர் திருச்சபைகள் -
குறிப்பாக ஆங்கிலிக்கம், லூதரனியம் ஆகிய திருச்சபைகளும், எல்லா
சமயத்தவரும் இவரை மாபெரும் மனிதராகவும் புனிதராகவும் ஏற்கின்றனர்.
இளமைப் பருவம் :
இளைஞராக இருந்தபோது ஃபிரான்சிஸுக்கு ஃபிரெஞ்சு மொழியில் கவிஞராக
வேண்டும் என்ற ஆசை இருந்ததாகச் சிலர் கூறுகின்றனர். அசிசியில்
புனித ஜோர்ஜ் பங்குக்கோவிலில் அவர் சிறிது கல்வி பயின்றார். ஆனால்
அவர் படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டவில்லை, தம் தந்தையின்
தொழிலாகிய வாணிகத்தில் மனதார ஈடுபடவுமில்லை. இவரது வரலாற்றை எழுதியவர்கள்
இவரது பகட்டான உடைகள், பணக்கார நண்பர்கள், தெருச் சண்டைகள்,
உலகப் போக்கை விரும்பும் இயல்பு ஆகியவை பற்றிக்
குறிப்பிட்டிருக்கின்றனர். மேல்தட்டு இளைஞர்களோடு சுற்றித்
திரிவதிலும், வீர சாகசம் புரிவதிலும் ஆர்வம் காட்டினார். நடுத்தர
வர்க்கமாகிய வணிகர் பிரிவைச் சார்ந்த ஃபிரான்சிஸ் உயர்குடி மக்களைப்
போல ஆடம்பர வாழ்க்கை நடத்த விருப்பமுடையவராய் இருந்தார்.
1201ம் ஆண்டில் பெரூஜியா (Perugia) நகருக்கு எதிராகப் போரிடும்படி
ஃபிரான்சிஸ் படையில் சேர்ந்தார். காலெஸ்ட்ராடாவில் நடந்த
போரில் எதிரிகளிடம் பிடிபட்ட இவர் ஓராண்டு கைதியாக இருக்க
நேரிட்டது. இந்த அனுபவத்தில் இருந்தே படிப்படியாகப்
ஃபிரான்சிஸுக்கு ஆன்மிக மாற்றம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. எனினும்,
கி.பி. 1203ம் ஆண்டில் அசிசிக்குத் திரும்பிய ஃபிரான்சிஸ்
மீண்டும் தனது பழைய வாழ்க்கை முறைக்கே திரும்பினார். கி.பி.
1205ம் ஆண்டிலும் அவருக்கு ஓர் திருக்காட்சி அனுபவம் கிடைத்ததாகத்
தெரிகிறது. அதன்பின், ஃபிரான்சிஸ் தம் பழைய வாழ்க்கை முறையை
மாற்றத் தொடங்கினார். இயேசுவைப் பின்பற்றி, ஃபிரான்சிஸும் ஓர்
ஏழை மனிதராக வாழ விரும்பினார். ஃபிரான்சிஸ் தனிமையை நாடிச்
சென்று நீண்ட நேரம் செலவிட்டார். கடவுளை நோக்கி வேண்டல்
செய்து, தம் உள்ளத்தில் இறை ஒளியைப் பாய்ச்ச வேண்டும் என்று மன்றாடினார்.
துறவற சபைகளை நிறுவுதல் :
கி.பி. 1209ம் ஆண்டு, 12 இளையோருடன், "சிறு சகோதரர்கள்" என்ற
சபையை ஆரம்பித்தார். ஃபிரான்சிஸ், திருத்தந்தை மூன்றாம் இன்னொசென்டை
அணுகித் தம் குழுவை ஒரு துறவற சபையாக அங்கீகரித்து ஏற்க
வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். திருத்தந்தை, கி.பி. 1210ம்
ஆண்டு, ஃபிரான்சிஸ்கன் சபைக்கு அதிகாரப்பூர்வமான இசைவு வழங்கினார்.
பின்னர், ஃபிரான்சிஸ் கி.பி. 1212ம் ஆண்டு, கிளாரா என்ற பெண்மணியோடு
சேர்ந்து பெண்களுக்கான ஒரு துறவற சபையையும், கி.பி. 1221ம் ஆண்டு,
மேலும் தவ முயற்சிகளை மேற்கொள்ளும் பொதுநிலை சகோதர சகோதரிகளுக்கென்று
"மூன்றாம் சபை" என்று அழைக்கப்பட்ட ஒரு அமைப்பையும் ஆரம்பித்தார்.
இறப்பு :
தாம் இறப்பதற்கு முந்தின நாள் மாலை நேரம் ஃபிரான்சிஸ் தம் சகோதரர்களிடம்
அப்பம் கொண்டுவரச் சொன்னார். அவரோடு கூட இருந்த சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும்
அப்பத்திலிருந்து ஒரு சிறு துண்டைப் பிட்டுக் கொடுத்தார். இயேசு,
தாம் துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் அறையுண்டு உயிர்துறந்தற்கு
முந்தின நாள் தம் சீடர்களோடு பந்தியமர்ந்து, அவர்களோடு அப்பத்தைப்
பகிர்ந்துகொண்டது போலவே ஃபிரான்சிஸும் செய்ய விரும்பினார். அப்பத்தைப்
பகிர்ந்துகொண்டதும் ஃபிரான்சிஸ் தம் சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும்
இறுதி ஆசி வழங்கினார். "உலகில் நான் செய்ய வேண்டிய பணி முடிந்தது.
நீங்கள் ஆற்ற வேண்டிய பணி யாதென்று உங்களுக்கு இயேசு கிறித்து
கற்பிப்பாராக" என்று கூறினார். ஏழ்மையைத் தம் வாழ்க்கைத்
துணையாக ஏற்றுக்கொண்ட பிரான்சிசு தமக்கென்று தாம் உடுத்த எளிய
மேலாடையைக் கூட வைத்திருக்க விரும்பவில்லை. எனவே தம் ஆடையை அகற்றச்
சொன்னார். பின்னர் தரையில் தம்மைக் கிடத்தச் சொன்னார். கடன்
வாங்கிய ஒரு துணியால் அவரது உடலை மறைத்தனர். அனைத்தையும் துறந்த
மனிதராக, ஏழையாக இவ்வுலகை விட்டுப் பிரிய விரும்பினார்
பிரான்சிசு. அன்று சனிக்கிழமை, 1226ம் ஆண்டு, அக்டோபர் மாதம்,
3ம் நாள் இரவு. சூரியன் சாய்ந்தபின் மறுநாள் தொடங்குவதாகக் கணக்கிடுவதால்
ஃபிரான்சிஸ் அக்டோபர் மாதம், 4ம் நாள் இறந்தார் என்று கணிப்பர்.
அப்போது ஃபிரான்சிஸுக்கு வயது 45. அவர் இயேசுவின் குரலுக்குச்
செவிமடுத்து, இயேசுவை முற்றிலுமாகப் பின்சென்று வாழ்ந்திட
முடிவு செய்து, மனமாற்றம் அடைந்த 12ம் ஆண்டு. அந்த நாளில்
ஃபிரான்சிஸ் மரித்தார். இன்று, புனிதர் அசிசியின் ஃபிரான்சிஸ்
உலகெங்கிலும் போற்றப்படுகின்ற சமயத் தலைவர்களுள் சிறப்பிடம்
பெறும் ஒருவராகத் திகழ்கின்றார்.
====================================================================
தூய பிரான்சிஸ் அசிசியார்
நிகழ்வு:-
பிரான்சிஸ் அசிசியார் இஸ்லாமிய மக்களுக்கு ஆண்டவரின் நற்செய்தியை
அறிவிக்க வேண்டும் என்று தீராத ஆர்வம் கொண்டிருந்தார். அதற்காக
அவர் பல முறை முயற்சி எடுத்தார். 1212 ஆம் ஆண்டு அவர் சிரியா
நாட்டிற்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றபோது நோயினால் பாதிக்கப்பட்டு
திரும்பி வந்துவிட்டார். 1214 ஆம் ஆண்டு மொரோக்கோ நாட்டிற்கு
நற்செய்தி அறிவிக்கச் சென்றபோதும் அவ்வாறே நிகழ்ந்தது. 1218 ஆம்
ஆண்டு எகிப்து நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கச்
சென்றபோது, அங்கிருந்த படைவீரர்கள் அவரை ஒற்றர் என நினைத்து,
அந்நாட்டு மன்னர் மாலிக் எல் கமில் என்பவரிடம் அழைத்துச்
சென்றார்கள்.
மன்னர் பிரான்சிஸ் அசிசியாரைப் பார்த்த மறுகணமே அவர் ஒற்றர் அல்ல,
மாறாக அவர் ஓர் இறையடியார் என்ற உண்மையை உணர்ந்துகொண்டார்.
பின்னர் மன்னர் அசிசியாரிடம் வந்ததன் நோக்கம் என்ன என்று
கேட்டு அறிந்துகொண்டார். அசிசியார் அவரிடம், "நான் ஆண்டவர் இயேசுவின்
நற்செய்தியை அறிவிக்க வந்திருக்கிறேன்" என்று எடுத்துச்
சொன்னார். அதன்பிறகு அசிசியார் அவரிடம், தான் வணங்கும் கடவுள்
சாதாரணமானவர் அல்ல, அவர் எல்லாம் வல்ல கடவுள் என்று எடுத்துச்
சொன்னார். மன்னருக்கு அசிசியாரின் பேச்சு பிடித்துப் போகவே, அசிசியாரை
மன்னர் தன்னுடைய நண்பராகவே பார்க்கத் தொடங்கினார். மன்னர் அசிசியாருக்கு
தன்னுடைய நாட்டியல் நற்செய்தி அறிவிக்கும் அங்கீகாரமும்
கொடுத்தார். அசிசியார் சிறுது காலம் எகிப்தில் நற்செய்தி அறிவித்துவிட்டு
தன்னுடைய சொந்த மண்ணுக்குத் திரும்பினார்.
வாழ்க்கை வரலாறு:-
பிரான்சிஸ் 1182 ஆம் ஆண்டு இத்தாலியில் உள்ள அசிசி நகரில் பிறந்தார்.
இவருடைய தந்தை பெர்னார்தோனே, தாய் பிகா என்பவர் ஆவார்.
பிரான்சிசின் தந்தை துணி வியாபாரம் செய்யும் ஒரு வணிகர். ஆகையால்,
பிரான்சிஸ் செல்வச் செழிப்பில் வளர்ந்து வந்தார்.
பிரான்சிசுக்கு சிறு வயதில் ஒரு போர் வீரனாக மாறவேண்டும் என்ற
ஆசை. அதனால் அவர் பெருசியாவுக்கு எதிரான போரில் ஆயுதம் ஏந்திப்
போரிட்டார். ஆனால் அவர் துரதிஸ்ட வசமாக கைது செய்யப்பட்டு ஓராண்டு
காலம் சிறைதண்டனையை அனுபவித்தார். ஓராண்டுக்குப் பிறகு அவர் எதிரி
நாட்டவரிடமிருந்து விடுதலை ஆகி தன்னுடைய சொந்த நாட்டிற்குத்
திரும்பினார்.
ஒருநாள் அவர் குதிரையில் சென்றுகொண்டிருக்கும்போது வழியில்
குளிரில் நடுங்கிகொண்டிருந்த ஒரு தொழுநோயாளரைக் கண்டு மனமிரங்கினார்.
உடனே அவர் தன்னுடைய குதிரையில் இருந்து இறங்கி அந்தத்
தொழுநோயாளியைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். அதுமட்டுமல்லாமல்
தான் உடுத்தியிருந்த விலையுயர்ந்த ஆடையையும் கழட்டிக்கொடுத்து
விட்டு தன்னுடைய வீட்டிற்குத் திரும்பினார். வீட்டிற்கு வந்த
அசிசியார் அங்கிருந்த விலையுயர்ந்த ஆடைகள், துணிமணிகள் எல்லாவற்றையும்
எடுத்து ஏழைகளுக்குக் கொடுக்கத் தொடங்கினார். இதைக் கேள்விப்பட்ட
பிரான்சிசின் தந்தை அவரை, "நீ என்னுடைய மகன் என்று அழைக்கப்படக்
கூட தகுதியற்றவன்" என்று சொல்லி அவரைக் கடுமையான வார்த்தைகளினால்
திட்டினார். அதற்கு பிரான்சிசோ தான் உடுத்தியிருந்த ஆடையையும்
அவரிடம் கழற்றிக்கொடுத்துவிட்டு, நிர்வாணமாக வீதிகளில் நடந்துசென்றார்.
இதைக் கண்ட அந்நகரில் இருந்த ஆயர் அவரிடம் இருந்த போர்வையை எடுத்து,
அவருக்குப் போர்த்தி அனுப்பினார்.
தன்னுடைய வீடு, பெற்றோர் உடைமைகள் அனைத்தையும் துறந்த
பிரான்சிஸ் எளிமை கோலம் பூண்டு, நகரில் இருந்தவர்களிடம் பிச்சை
எடுத்து, அதனை உண்டு வந்தார். அது மட்டுமல்லாமல் அசிசி நகரில்
இருந்தவர் அனைவர்க்கும் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவித்து
வந்தார். இந்த நேரத்தில் அதாவது 1206 ஆம் ஆண்டு அவர் தமியானோ
ஆலயத்தில் வேண்டிக்கொண்டிருந்தபோது, ஆண்டவர் இயேசு அவரிடத்தில்
பேசத் தொடங்கினார். "பிரான்சிஸ் என்னுடைய ஆலயம் மிகவும் பாழடைந்த
நிலையில் உள்ளது. இதனை நீ சரிசெய்வாயா?". ஆண்டவரின் இக்குரலைக்
கேட்ட பிரான்சிஸ் தமியானோ ஆலயத்தை புதுப்பிக்கும் முயற்சியில்
இறங்கினார். அதற்காக அவர் மக்களிடம் இருந்து நிதி திரட்டி அந்த
ஆலயத்தைக் கட்டி முடித்தார். அசிசியார் வானதூதர்களின் அரசி
ஆலயத்தையும் இன்னும் ஒரு சில ஆலயத்தையும் கட்டி முடித்தார்.
பிரான்சிசின் வாழ்க்கை முறையைப் பார்த்த நிறைய இளைஞர்கள் அவரைப்
பின்பற்றத் தொடங்கினார்கள். ஒரு சமயம் அவர் ஓர் ஆலயத்தில் நடைபெற்ற
திருப்பலியை பங்கேற்றிருந்தார். அப்போது குருவானவர், "பொன்
வெள்ளி, செப்புக் காசு எதையும் உங்கள் இடைக் கச்சைகளில்
வைத்துக்கொள்ள வேண்டாம். பயணத்திற்காகப் பையோ, இரண்டு அங்கிகளோ,
மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஏனெனில்,
வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே" (மத் 10: 9-10) என்ற இறைவார்த்தையை
வைத்து மறையுரை ஆற்றிக்கொண்டிருந்தார். இவ்வார்த்தைகள்
பிரான்சிசின் உள்ளத்தைத் தைத்தது. உடனே அவர் இதைக் குறித்து
ஆழமாக சிந்திக்கத் தொடங்கினார். பின்னர் ஆண்டவர் இயேசு சொன்னதுபோன்று
தனக்கென்று எதுவுமே வைத்துக்கொள்ளாமல், எளிமையான வாழ்க்கை வாழத்
தொடங்கினார். பிரான்சிஸ் தன்னை பின்பற்றி வந்தவர்களை வைத்து
"சிறிய சகோதரர்கள் என்னும் சபையைத் தொடங்கினார். இதற்கான ஒப்புதலை
முறைப்படி பெற அவர் 1208 ஆம் ஆண்டு, உரோமை நகருக்குச் சென்று,
திருத்தந்தை மூன்றாம் இன்னோசென்டை சந்தித்து ஒப்புதல் பெற்று
வந்தார்.
அசிசியார் சபையில் பெண்களும் சேரத் தொடங்கினார்கள். கிளாரா என்ற
பெண்மணிதான் முதன்முறையாகச் சேர்ந்தார். எனவே பிரான்சிஸ் பெண்களுக்கு
என்று "ஏழைப் பெண்கள் சபையைத் தோற்றுவித்தார். பொதுநிலையினருக்கு
எனவும் ஒரு சபையைத் தோற்றுவித்தார். அது இன்றைக்கு பிரான்சிஸ்கன்
மூன்றாம் சபை என அழைக்கப்படுகின்றது. தூய பிரான்சிசும் அவருடைய
சபையைச் சேர்ந்தவர்களுக்கு மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து
வந்தார்கள். அதனால் அவருடைய சபையில் சேர்வோர் எண்ணிக்கை ஒவ்வொரு
நாளும் பெருகிக்கொண்டே வந்தது.
பிரான்சிஸ் இயேசுவின் பாடுபட்ட சிரூபத்தின் முன்பாக நீண்ட நேரம்
உட்கார்ந்து ஜெபிப்பார்; அவருடைய பாடுகளை நினைத்து கண்ணீர்
விட்டு அழுவார். சில நேரங்களில் இயேசுவின் மீது கொண்ட அன்பினால்,
பாடுபட்டு சிரூபத்திற்கு முன்பாகச் சென்று, அவரை
சிலுவையிலிருந்து கீழே இறக்குவதுபோல் காட்சி காண்பார். இன்னொரு
சமயம் அவர் லா வேர்னாவில் ஜெபித்துக்கொண்டிருந்தபோது ஐந்து காய
வரங்களைப் பெற்றார். அக்காயங்களால் அவர் பெரிதும் வேதனை அடைந்தார்.
இறந்தாலும் இயேசுவின் பாடுகளில் தானும் கலந்துகொள்கிறேன் என்று
மகிழ்ச்சி அடைந்தார். பிரான்சிஸ்க்கு முகமதியர்களுக்கு நற்செய்தி
அறிவிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்தது. அதற்காக அவர்
சிரியா, மொரோக்கோ, எகிப்து போன்ற நாடுகளுக்கும் சென்று, நற்செய்தி
அறிவித்து வந்தார்.
1223 ஆம் ஆண்டு புதிய முயற்சியாக பிரான்சிஸ் கிறிஸ்மஸ் குடிலை
அமைத்தார். அதில் இயேசு, மரியா, யோசேப்பு அவர்களோடு சேர்த்து
கழுதை, ஆடு மாடுகள் போன்றவற்றையும் வைத்து கிறிஸ்து பிறப்பு
விழாவைக் கொண்டாடினார். அவர் இயற்கையின் மீது அளவு கடந்த அன்பு
கொண்டிருந்தார். அதனால் அவர் சூரியனை சகோதரன் எனவும், நிலவைச்
சகோதரி எனவும், யூமியைத் தாய் எனவும் அழைத்து வந்தார். அவர்
இயற்கையின் மீது அன்பு கொண்டிருந்ததனால்தான் என்னவோ பறவைகள்
கூட அவருடைய தோளில் தங்கின, காட்டில் அவர் நடந்து சென்றபோது
கொடிய விலங்குகளும் அவருக்கு வழிவிட்டன.
இப்படி இயற்கையை நேசிப்பவராய், ஏழைகளை அன்பு செய்பவராய்
வாழ்ந்து வந்த பிரான்சிஸ் தன்னுடைய நாற்பத்தி நான்காம் வயதில்
1226 ஆம் ஆண்டு அக்டோபர் 04 ஆம் நாள் இம்மண்ணுலக வாழ்வைத் துறந்தார்.
அவர் இறந்த அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே அவருக்குப் புனிதர் பட்டம்
கொடுக்கப்பட்டது. திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் அசிசியாரை
மறு கிறிஸ்து என அன்போடு அழைப்பார்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்:-
தூய பிரான்சிஸ் அசிசியாருடைய விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல
நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்ற
சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
ஏழைகளிடத்தில் அன்பு:-
பிரான்சிஸ் அசிசியார் ஏழைகளிடத்தில் அதிகமான அன்பு
கொண்டிருந்தார். எந்தளவுக்கு என்றால், ஒரு சமயம் அவர்
சியென்னாவிலிருந்து வந்து கொண்டிருந்தபோது பாதையில் பிச்சைக்காரர்
ஒருவரைக் கண்டார். அவர் மிகவும் கிழிந்த ஆடையோடு இருந்தார். அதைக்
கண்ட பிரான்சிஸ் அசிசியார் தன்னிடம் இருந்த கொஞ்சம் கிழிந்த ஆடையை
அவருக்கு உடுத்தக் கொடுத்து, அவருடைய மிகவும் கிழிந்த ஆடையை எடுத்துப்
போர்த்திக்கொண்டார். இதைக் கண்ட ஒருவர் அசிசியாரிடம் எதற்காக
இப்படிச் செய்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு அவர், "நம்மை விட
வறியவர் ஒருவரைக் கண்டால், அவருக்கு நம்மிடம் இருப்பதைக்
கொடுக்கவேண்டும், இல்லையென்றால் அது மிகப் பெரிய பாவம்" என்றார்.
பிரான்சிஸ் அசிசியார் எப்போதும் ஏழை எளியவரிடத்தில் அதிக அன்பு
கொண்டு வாழ்ந்து வந்தார் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.
நாம் ஏழை எளிய மக்களிடத்தில் உண்மையான அன்போடு இருக்கின்றோமா?
அவர்களுக்கு நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து கொடுத்து
வாழ்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
ஓர் ஊரில் யாரைப்பற்றியும் அக்கறையில்லாது வாழ்ந்து வந்த பையனுக்கு,
அவனுடைய தந்தை பிறர் நலம் பேணும்படி அறிவுரை கூறிக்கொண்டே வந்தார்.
ஆனால் அவனோ தந்தையின் அறிவுரைக்கு செவிகொடுக்காமல், அவருக்குப்
பாடம் கற்பிக்க விரும்பினான். ஒருநாள் அவன் ஒரு காலிக்குவளையை
எடுத்து, அதில் கொஞ்சம் பாலை ஊற்றி, "இந்தக் குவளை நான். இதிலுள்ள
பால் என் வாழ்க்கை. இதில் நான் யாரைக்குறித்து அக்கறை கொள்ளவேண்டும்?"
என்று கேட்டான். அதற்கு தந்தை சிறிது சக்கரையை எடுத்து அதில்
கலந்தார். பின்னர் அவர் அவனிடம், "சமூக அக்கறை என்னும் சக்கரை
இல்லாமல் பால் எனப்படும் வாழ்க்கை இனிக்காது" என்றார். தந்தையின்
அறிவுரையைக் கேட்டு மனம்மாறிய மகன் அதன் பிறகு சமூக அக்கறையோடு
ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யத் தொடங்கினான்.
நாம் அடுத்தவர் மட்டில் அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்கிறபோது
நம்முடைய வாழக்கை இனிக்கும் என்கிற உண்மையை இந்த நிகழ்வு நமக்கு
அருமையாக எடுத்துக்கூறுகின்றது. நற்செய்தியில் கூட ஆண்டவர் இயேசு,
"நீங்கள் உலகிற்கு உப்பாக, ஒளியாக இருகிறீர்கள்?" (மத்
5:13,14) என்று சொல்வார். ஆகவே தூய பிரான்சிஸ் அசிசியாரின்
விழாவைக் கொண்டாடும் இந்த நாளில், நாமும் அவரைப் போன்று எளிய
வாழக்கை வாழ்வோம். ஏழை எளியவரிடம் அன்பும் அக்கறையும் கொண்டு
வாழ்வோம், இந்த உலகிற்கு ஒளியாக உப்பாக மாறுவோம், இயற்கையை
நேசிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
பிரான்சிஸ் அசிசியாரின் ஜெபம் :-
இறைவா, என்னை உமது அமைதியின் கருவியாக்கும்;
எங்கு பகைமை நிறைந்துள்ளதோ அங்கு அன்பையும்
எங்கு கயமை நிறைந்துள்ளதோ அங்கு மன்னிப்பையும்
எங்கு ஐயம் நிறைந்துள்ளதோ அங்கு விசுவாசத்தையும்
எங்கு அவநம்பிக்கை நிறைந்துள்ளதோ அங்கு நம்பிக்கையையும்
எங்கு இருள் சூழ்ந்துள்ளதோ அங்கு ஒளியையும்
எங்கு மனக்கவலை உள்ளதோ அங்கு அகமகிழ்வையும்
விதைத்திட அருள்புரியும்.
என் இறைவா, ஆறுதல் பெறுவதைவிட ஆறுதல் அளிக்கவும்
புரிந்து கொள்ளப்படுவதைவிட பிறரை புரிந்து கொள்ளவும்
அன்பு செய்யப்படுவதைவிட பிறரை அன்பு செய்யவும் வரமருள்வாய்.
ஏனெனில், கொடுப்பதில் யாம் பெறுவோம்;
மன்னிப்பதில் மன்னிக்கப்பெறுவோம்;
இறப்பதில் நித்திய வாழ்வடைவோம். ஆமென்.
============================================================================
தூய பிரான்சிஸ் அசிசியார் விழா
ஒருமுறை பிரான்சிஸ் அசிசியார் தன் உடன் சகோதரர் ஒருவரை அழைத்து,
"வாருங்கள், இன்று நாம் இருவரும் பக்கத்துக்கு ஊருக்குச்
சென்று போதித்துவிட்டு வருவோம்"என்றார். அசிசியாரின் அழைப்பை
ஏற்று அந்த சகோதரும், அவரோடு உடன் சென்றார். அவர்கள் இருவரும்
நீண்ட தூரம் நடந்துசென்றார்கள். போகிற வழியில் அசிசியார் ஏதாவது
போதிப்பாரா? என்று பார்த்துக்கொண்டே வந்தார் அந்த சகோதரர். ஆனால்
அவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. நீண்ட நேரமாகியும் அவர் எதுவும்
போதிக்கவில்லை.
ஓரிடத்தில் மரத்திலிருந்து பறவையின் குஞ்சு ஒன்று கீழே விழுந்தது.
இதைப் பார்த்த அசிசியார் ஓடிச்சென்று அந்த பறவைக் குஞ்சை அள்ளி
எடுத்து, தன்னுடைய கையில் வைத்துக்கொண்டு, அதனை அந்தப் பறவையின்
கூட்டிலே போய் வைத்துவிட்டு வந்தார்.
பின்னர் அவர்கள் இருவரும் தங்களுடைய பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
அவர்கள் போகின்ற வழியில் மக்கள் தங்களுடைய வயலில் அறுவடை
செய்துகொண்டிருந்தார்கள். இதைப் பார்த்ததும் அசிசியார் வயலில்
இறங்கி, அவர்களோடு சேர்ந்து அறுவடையில் இறங்கினார்கள். அப்போதும்
அந்த சகோதரர், அசிசியார் ஏதாவது போதிப்பார் என்று எதிர்பார்த்தார்.
ஆனால் அப்போதும் அவர் ஒன்றும் போதிக்கவில்லை.
சிறுதுநேரம் அவர்களுக்கு உதவி செய்துவிட்டு அசிசியார் தன்னுடைய
பயணத்தைத் தொடர்ந்தார். அவருக்குப் பின்னால் அந்த சகோதரர் தன்
பயணத்தைத் தொடர்ந்தார்.
அவர்கள் ஊரின் நுழைவாயிலை அடைந்தார்கள். அங்கே ஒரு வயதான பெண்மணி
கிணற்றில் தண்ணீர் இரைத்துக்கொண்டிருந்தார். உடனே அசிசியார் அந்த
பெண்மணி இருக்கும் இடத்திற்கு விரைந்துசென்று, அவருக்குத் தண்ணீர்
இரைத்துத் தந்தார். அதோடு மட்டுமல்லாமல், தண்ணீர் குடத்தை அந்தப்
பெண்மணியின் வீடுவரை தூக்கிக்கொண்டே சென்றார். அப்போதாவது அசிசியார்
ஏதாவது போதிப்பார் என்று எதிர்பார்த்தார். ஆனால் அப்போதும் அந்த
சகோதரருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.
அதற்குள் மாலை நேரமாகிவிட்டது. எனவே அசிசியார் அந்த சகோதரரிடம்,
"நேரமாகிவிட்டது, வாருங்கள் நம்முடைய இல்லத்திற்குச் செல்வோம்"
என்றார். இதைக் கேட்ட அந்த சகோதரர் அசிசியாரிடம், "போதிப்பதாக
சொல்லி என்னைக் கூட்டிவந்து, ஒன்றுமே போதிக்காமல் இப்படிக்
கூட்டிக்கொண்டு செல்கிறீர்களே"என்று இழுத்தார். அதற்கு அசிசியார்,
"இன்றைக்கு நாம் தேவைக்கு அதிகமாகவே போதித்துவிட்டோம்"என்றார்.
தொடர்ந்து அவர் அவரிடத்தில் சொன்னார், "செயல்களால் போதிக்கின்ற
போதனைதான் தலைசிறந்த போதனை"(Speak Speak, Speak If neccessary
use words) என்று.
இறையன்பை, பிறரன்பை நாடுவதற்குரிய நல்வழிகாட்டிகளாக புனிதர்களின்
வாழ்வும், செய்தியும் அமைந்துள்ளன. அந்த வகையில் பல சமயத்தினர்
மட்டுமல்லாமல், பல சமுதாய சிந்தனையாளர்களின் போற்றுதலுக்குரியவர்
தூய ர் பிரான்சிஸ் அசிசி ஆவார். ஆம், இன்று அன்னையாம் திரு அவை
தூய பிரான்சிஸ் அசிசியின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது.
புனித பிரான்சிஸ் அசிசியார்! இவருடைய இயற் பெயர் ஜோவானி டி பியத்ரோ
டி பெர்னார்தோனே. 1181 ஆம் ஆண்டு இத்தாலிய நாட்டில் பெரூசியா
மாகாணத்தில் அசிசி என்ற பட்டணத்தில் பிறந்தார். இவருடைய
பெற்றோர்கள் பெரிய செல்வந்தர்கள். இவருடைய தந்தை பெர்னார்தோனே
பட்டு ஆடைகள் விற்பனை செய்து வந்த ஒரு பெரிய வணிகர். சிறு வயதில்
இருந்தே ஜோவானி செல்வச் செழிப்பில் வாழ்ந்தார்.
தந்தை பெர்னார்தோனே தன் மகன் ஜோவானியுடைய நடையுடை பாவனைகளைக்
கண்டு தன் மகனை "பிரான்சிஸ்கோ"என்று அழைத்தார். அதன் பொருள்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். பிரஞ்சுக்காரர் என்பது ஆகும்.
பிரான்சிஸ்கோ இளம் வயதில் அங்கிருந்து ஒருமுறை பெரும் நகராம்
ரோமாபுரிக்குச் சென்றார். செல்வமும் சிறப்பும் வாய்ந்த ரோமை
நகரில் கூட பட்டினியால் வாடும் ஏழைகள் பிச்சை எடுப்பதைக் கண்டார்.
அவர்களுடைய நிலையும் துன்பமும் இவருடைய உள்ளத்தைத் தொட்டது. இயேசுவின்
வார்த்தைகளான "ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள், ஏனெனில் கடவுளின்
அரசு உங்களதே"(லூக்கா 6:20) என்பது அவரது உள்ளத்தை உறுத்தியது.
அவருடைய கற்பனைகளைக் கிளறியது. இயேசு அவர் உள்ளத்தில் பேசுவதை
உணர்ந்தார். அணிந்திருந்த பட்டாடைகளைக் களைந்து விட்டு ஏழைகளில்
ஒருவராக பிச்சை எடுக்க ஆரம்பித்தார். வீடு திரும்பிய பின்பு
நிறைய விலை உயர்ந்த ஆடைகளை எடுத்து ஏழைகளுக்குக் கொடுத்து மகிழ்ந்தார்.
இதைப் பார்த்த அவருடைய தந்தைக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. தன்
மகன் தனக்கு விரோதமாக செயல்பட்டதைக் கண்டித்தார். ஆனால் இளம்
ஜோவானியின் மனம் தன்னையே வெறுமையாக்கிக் கொண்ட இயேசுவின்
மீதும் ஏழைகள் மீதும் சென்றது.
ஒருநாள் ஜோவானி வீட்டில் இருந்த உடைகளை எடுத்து ஏழைகளுக்குக்
கொடுப்பதைக் கண்ட அவருடைய தந்தை பெர்னாந்தோனே மிகுந்த கோபத்துடன்
தன் மகனை இழுத்துக் கொண்டு அசிசி நகரில் வாழ்ந்த ஆயரின்
முன்கொண்டு நிறுத்தினார். "இவன் என் வீட்டில் உள்ள பொருட்களை
எல்லாம் எடுத்து மற்றவர்களுக்குக் கொடுத்து குடும்பத்தை
பாழாக்குகிறான்"என்று தன் மகனைப் பற்றி குறை கூறினார்,
குறையைக் கேட்ட ஆயர் இளைஞனுக்கு ஒழுக்கமாய் இருக்க ஆலோசனை
சொல்ல ஆரம்பித்தார்.
உடனேயே ஜோவானி தான் அணிந்திருந்த உடையை முற்றும் கழற்றி தன் தந்தையின்
பாதத்தில் போட்டுவிட்டு நிர்வாணமாய் நின்றார். இனிமேல் உங்கள்
உடைகள் எனக்கு அவசியம் இல்லை என்று முழு நிர்வாணமாய் அங்கிருந்து
புறப்பட ஆரம்பித்தார். இதைக் கண்ட ஆயர், தான் மேலே போட்டிருந்த
போர்வையைக் கழற்றிக் கொடுத்து ஜோவானி தன் மானத்தை மறைத்துக்
கொள்ள உதவினார்.
சிலுவையில் தொங்கிய இயேசுவைப் போல் ஜோவானி இயேசுவையே அணிந்து
கொண்டு தமது தந்தையையும் தாயையும் செல்வம் நிறைந்த வீட்டையும்
துறந்துவிட்டு வெளியே நடந்தார். அன்று முதல் இயேசுவிக்காகவே
வாழ்ந்த அவர் திருச்சபையில் ஒரு புரட்சிகரமான தத்துவத்தைக் கற்றுக்கொடுத்தார்.
"எளிய மனத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில் விண்ணரசு அவர்களதே!"(மத்தேயு
5:3) இந்த தத்துவம் ஜோவானி என்பவருடைய புதிய கண்டுபிடிப்பு அல்ல.
ஆனால் இயேசுவின் அடிப்படையான படிப்பினைகளில் ஒன்றாகும்.
"உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். பணக்காரன் விண்ணரசில்
நுழைவது அரிது! மீண்டும் உங்களுக்குச் சொல்லுகிறேன். பணக்காரன்
விண்ணரசில் நுழைவதை விட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது"
என்றார். இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு அவருடைய சீடர்களுக்கே
மலைப்பாய் இருந்தது. அவர்களால் கூட அதை ஜீரணிக்க முடியவில்லை.
அவர்களே இயேசுவிடம் ஒரு கேள்வி எழுப்பினர். "அப்படியானால்
யார்தான் மீட்புப் பெற முடியும்?
இயேசு சீடர்களின் மலைப்பையும் உணர்வையும் உணர்ந்தவராய் அவர்களை
உற்று நோக்கி, "மனிதரால் இது முடியாது. ஆனால் கடவுளால் எல்லாம்
முடியும்"என்று சொன்னார். (மத்தேயு 19 : 23-26). ஜோவானி இளம்
வயதிலேயே இயேசுவின் வெறுமையையும் எளிமையையும் ஏழ்மையையும் கண்டுணர்ந்தார்.
பெற்றோர்களின் வீட்டை விட்டு வெளியில் நடந்தவர், சாக்கு உடையை
அணிந்து கொண்டு இயேசுவைப் பற்றி போதிக்க ஆரம்பித்தார்.
இதனால் நிறைய இளைஞர்கள் அவரைச் சுற்றி வந்தார்கள். சிறிய சகோதரர்கள்
என்ற பிரான்சிஸ்கு சபையை நிறுவினார். அப்போது வாழ்ந்த மூன்றாம்
இன்னொசென்ட் என்ற பாப்பரசர் சபையின் கூட்டமைப்பை அங்கிகரித்தார்.
வெகுவிரைவில் உலகம் எங்கும் இவரது பெயரும் கூட்டமைப்பும் பரவியது.
கத்தோலிக்க திருச்சபையில் உலகம் எங்கும் புனித
பிரான்சிஸ்குவின் சிந்தனைகளும் கிறிஸ்தவ வாழ்வின் எளிமை, ஏழ்மை
என்ற சித்தாந்தமும் பரவியது. இந்த சித்தாந்தத்தை தழுவியவர்தான்
இன்று திருச்சபையை வழி நடத்தும் பாசமிகு புனித பாப்பரசர்
பிரான்சிஸ் ஆவார்.
தூய பிரான்சிஸ் அசிசியார் பாடிய "அமைதியின் தூதுவராக எம்மை
மாற்றும்"என்று தொடங்கும் அவரது இறை வேண்டலில், அன்பைப் பெறுவதைவிட
அன்பை அளிப்பதை ஆசிக்கும்படி வேண்டுகிறார்.
இயற்கை, சுற்றுச் சூழல் ஆர்வலரான பிரான்சிஸ், பறவைகளையும் விலங்குகளையும்கூட
நேசித்தார். இயற்கையைப் போற்றிப் பாடியுள்ள அவர், மக்களை அச்சுறுத்திய
ஓநாயை நெருங்கி, "ஓநாய் சகோதரனே' என்று அன்புடன் அழைத்து, அதனை
ஊரின் செல்லப்பிராணி ஆக்கினார். அவர் நினைவாக ஒவ்வோரு ஆண்டும்
அக்டோபர் மாதம் 4ஆம் தேதி உலக விலங்குகள் தினம் கொண்டாடப்பட்டு
வருகிறது.
ஒருமுறை லியோ என்ற இளம் துறவியுடன் மலை உச்சிக்குச் சென்ற
பிரான்சிஸ், இயேசு பெருமானின் திருப்பாடுகளில் நெஞ்சுருகி
தியானித்த பொழுது இயேசுவின் ஐந்து திருக்காயங்களை ஒளி வெள்ளத்தில்
பெற்றார். 1226ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் நாள் மரணம் என்னும் தங்கை
தன்னை நெருங்குகிறாள் என்றுரைத்த 44 வயது நிரம்பிய பிரான்சிஸ்
வெறும் தரையில் தன்னைக் கிடத்தும்படி கூறினார். இறை புகழ்
பாடிக்கொண்டே இறையடி சேர்ந்தார்.
சிறிய சகோதரர்கள் சபை மட்டுமல்லாமல், செல்வந்தர் ஒருவரின் மகளான
கிளாராவின் தலைமையில் பெண்களுக்கான துறவியர் சபையும், இல்லத்தினரும்
பங்கு பெரும் மூன்றாம் சபையும் பிரான்சிஸ் ஆரம்பித்தார். இன்று
உலகெங்கும் உள்ள துறவியர் சபைகளில் பிரான்சிஸ் அருளுரைகளும் சபை
ஒழுங்குகளும் பின்பற்றப்படுகின்றன.
தூய பிராசிஸ் அசிசியாரின் வாழ்வைக் கொண்டாடும் இந்த நல்லநாளில்
நாமும் அவரைப் போன்று எளிமையுள்ளவர்களாக, இயற்கையையும் இறைவனையும்
நம்மோடு வாழும் சகமனிதர்களை நேசிக்கக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக
இறையருள் நிறைவாய் பெறுவோம். |
|
|