Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ஃபிரான்சிஸ் போர்ஜியா ✠ (St. Francis Borgia)
  Limage contient peut-tre : 1 personne, plein air  
நினைவுத் திருநாள் : (அக்டோபர் / Oct -10)
✠ புனிதர் ஃபிரான்சிஸ் போர்ஜியா ✠ (St. Francis Borgia)

 இயேசு சபை குரு/ ஒப்புரவாளர் :
(Jesuit/ Confessor)

பிறப்பு : அக்டோபர் 28, 1510
காண்டியா, வாலென்சியா அரசு, ஸ்பெயின்
(Duchy of Ganda, Kingdom of Valencia, Spain)

இறப்பு : செப்டம்பர் 30, 1572 (வயது 61)
ரோம், திருத்தந்தையர் மாநிலங்கள்
(Rome, Papal States)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம் : நவம்பர் 23, 1624
திருத்தந்தை எட்டாம் அர்பன்
(Pope Urban VIII)

புனிதர்பட்டம் : ஜூன் 20, 1670
திருத்தந்தை பத்தாம் கிளமெண்ட்
(Pope Clement X)

பாதுகாவல் :
பூகம்பத்திலிருந்து, காண்டியா, ரோட்டா, மரியானா மற்றும் போர்ச்சுகல்

நினைவுத் திருநாள் : அக்டோபர் 10

புனிதர் ஃபிரான்சிஸ் போர்ஜியா, பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த "ஸ்பெயின் நாட்டு கனவானும்" (Grandee of Spain), "ஸ்பேனிஷ் இயேசு சபை துறவியும்" (Spanish Jesuit), இயேசு சபைச் சமூகத்தின் மூன்றாவது பெரும்தலைவரும் (Superior General of the Society of Jesus) ஆவார்.

ஸ்பெயின் நாட்டின் கிழக்குப் பிராந்தியமான "வலென்சியாவின்" (Valencia) "காண்டியா" (Ganda) எனும் நகரில் பிறந்த இவரது தந்தை, காண்டியா நகரின் மூன்றாவது பிரபு ஆவார். அவரது பெயர், "ஜுவான் போர்ஜியா" (Juan Borgia) ஆகும். இவரது தாயார், "ஜுவானா" (Juana) ஆவார்.

சிறு வயதிலேயே பக்தி மார்க்கத்தில் நாட்டம் கொண்டிருந்த ஃபிரான்சிஸ், துறவு பெறுவதில் ஆவலாயிருந்தார். ஆனால், இவரது பெற்றோர் இவரை இவரது விருப்பத்திற்கு மாறாக தூய ரோமப் பேரரசர் "ஐந்தாம் சார்ளசின்" (Charles V, Holy Roman Emperor) அரண்மனைக்கு அனுப்பினார். அங்கே இவர் ஒரு உறவினராக வரவேற்கப்பட்டார்.

கி.பி. 1529ம் ஆண்டில் இவருக்கு "மேட்ரிட்" (Madrid) நகரில், "லியோனர்" (Leonor de Castro Mello y Meneses) என்னும் போர்ச்சுகீசிய உயர்குடியைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு எட்டு குழந்தைகள் பிறந்தனர். பேரரசர் ஐந்தாம் சார்ளஸ் இவரை பல்வேறு உயர் பதவிகளில் அமர்த்தினார்.

கி.பி. 1539ம் ஆண்டு, இவர் ஸ்பெயின் நாட்டின் அரசன் "இரண்டாம் பிலிப்பின்" (Philip II of Spain) தாயாரான "இசபெல்லாவின்" (Isabella of Portugal) சவ ஊர்வலத்தில் கலந்துகொண்டார். அதே வருடம், "கடலோனியாவின் வைசராயாக (Viceroy of Catalonia) நியமிக்கப்பட்டார்.

கி.பி. 1543ம் ஆண்டில், "காண்டியா (Ganda) மாநிலத்தின் மூன்றாம் பிரபுவாக இருந்த இவரது தந்தையார் மரணமடையவே, ஃபிரான்சிஸ் "காண்டியா" மாநிலத்தின் நான்காம் பிரபுவாக பதவியேற்றார். இளவரசர் "பிலிப்புக்கும்" போர்ச்சுகல் நாட்டின் இளவரசிக்கும் (Prince Philip and the Princess of Portugal) திருமணம் செய்விக்க இவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், இவரது இராஜதந்திர திறன்கள் கேள்விக்குள்ளாக்கியது. அதே வேளை, இரு நாடுகளை இணைக்கும் முயற்சியும் தோல்வியடைந்ததால், 33 வயதான ஃபிரான்சிஸ் தமது பிரபு பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். பின்னர், அவர் ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்கினார்.

கி.பி. 1546ம் ஆண்டு, இவரது மனைவியான "லியோனர்" (Leonor) மரணமடையவே, இவர் புதிதாய் தொடங்கப்பட்டிருந்த இயேசு சபையில் இணைய முடிவெடுத்தார். 1551ம் ஆண்டில் இயேசு சபை குருவாக குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.

ஒருமுறை, ஃபிரான்சிஸ் "பெரு" (Peru) நாட்டிற்கு பயணித்துவிட்டு திரும்புகையில், அப்போதைய திருத்தந்தை மூன்றாம் ஜூலியஸ் (Pope Julius III) அவர்கள், போர்ஜியாவைப் பற்றி கேள்விப்பட்டு, அவரை கர்தினாலாக உயர்த்த முடிவு செய்தார். ஆனால், இதைக் கேள்வியுற்ற போர்ஜியா இதிலிருந்து மீளும் வகையில் புனித இக்னேஷியசுடன் (St. Ignatius) செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, இரகசியமாக நாட்டை விட்டு வெளியேறி "பாஸ்கு" (Basque) நாடு செல்ல முடிவெடுத்தார். தனிமையே ஜெபிக்க உதவும் என முடிவெடுத்தார்.

கி.பி. 1554ம் ஆண்டு, போர்ஜியா ஸ்பெயின் நாட்டின் இயேசு சபையின் தலைமைப் பொறுப்பேற்றார். அங்கே அவர் பத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளை நிறுவினார். இரண்டே வருடங்களின் பின்னர், கிழக்கு மற்றும் மேற்கிந்திய நாடுகளிலும் கல்வி மற்றும் சமய பணிகளை மேற்கொள்ள பொறுப்புகள் கிடைக்கப்பெற்றார்.

கி.பி. 1565-1572 ஆகிய வருடங்களுக்கிடையே அவர் கண்ட வெற்றிகளால், புனித இக்னேஷியசின் மறைவிற்குப் பிறகு போர்ஜியாவை பெருந்தலைவராக்க சரித்திரவியலாளர்களை முடிவெடுக்க வைத்தன. பின்னாளில், "கிரகோரியன் பல்கலைக்கழகமாக" (Gregorian University) பல்கலையை நிறுவிய பெருமையும் ஃபிரான்சிஸ் போர்ஜியாவையே சேரும். இவர் அரசர்கள் மற்றும் திருத்தந்தையருடன் நெருக்கமாக காணப்பட்டார். அவர்களுக்கு ஆலோசகராகவும் செயல்பட்டார்.

அனைத்து அதிகாரங்களும் இருந்தும் ஃபிரான்சிஸ் போர்ஜியா தாழ்ச்சியான வாழ்வையே வாழ்ந்தார். உணவு பந்தியில் தாழ்ச்சியோடு தன் கையால் அனைவருக்கும் உணவு பரிமாறினார். அதன்பின்னர் மண்டியிட்டு மற்ற குருக்களிடம் உணவு தருமாறு கெஞ்சிகேட்டு வாங்கி உண்டார். இவருடன் இருந்த குருக்கள், பல வழிகளில் இவரை கோபமூட்டினர். ஆனால் ஃபிரான்சிஸ் கோபம் கொள்ளாமல், அனைவரிடத்திலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் அன்பாகவே நடந்துக்கொண்டார். அவர் தனது குருத்துவ வாழ்வில் ஒரு முறை மட்டும் பிறர் தனக்கு மரியாதை கொடுத்த காரணத்திற்காக கோபப்பட்டுள்ளார். இவரது தாழ்ச்சியின் வாழ்கை முறையால், இயேசு சபை ஸ்பெயின், மற்றும் போர்த்துக்கல் நாடு முழுவதிலும் பரப்பியது. இவரின் அற்புதமான, அழகான பணிகளைக் கண்டு, அந்நாட்டு இளைஞர்கள் பலர் அச்சபையில் இணைந்து குருவாகி ஃபிரான்சிசைப் போலவே வாழ்ந்தனர். இவரின் எளிமையான வாழ்வால், பலருக்கு ஆன்மீக வழிகாட்டியாக திகழ்ந்தார். இவரின் வழிகாட்டுதலில், இயேசு சபை உலகம் முழுவதிலும் பரவியது. இயேசுவின் இறைப்பணியை திருச்சபையில் சிறப்பாக ஆற்றினர். இவ்வெற்றிகள் அனைத்தும் ஃபிரான்சிஸ் போர்ஜியாவையே சார்ந்தது.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா