Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ப்ரூனோ ✠(St. Bruno of Cologne)
  Limage contient peut-tre : une personne ou plus  
நினைவுத் திருநாள் : (அக்டோபர் / Oct - 06)
✠ புனிதர் ப்ரூனோ ✠(St. Bruno of Cologne)
 "கர்த்தூசியன்" சபை நிறுவனர், துறவி :
(Founder of the Carthusian Order, Hermit)

பிறப்பு : கி.பி. 1030
கொலோன் (Cologne)

இறப்பு : அக்டோபர் 6, 1101
செர்ரா சான் புருனோ
(Serra San Bruno)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம் : கி.பி. 1514
திருத்தந்தை பத்தாம் லியோ
(Pope Leo X)

புனிதர் பட்டம் : ஃபெப்ரவரி 17, 1623
திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரி
(Pope Gregory XV)

நினைவுத் திருநாள் : அக்டோபர் 6

பாதுகாவல் :
ஜெர்மனி (Germany), கலாப்ரியா (Calabria), கர்தூசியன்ஸ் (Carthusians), துறவற சகோதரர்கள் (Monastic Fraternities), வர்த்தக குறிகள் (Trade marks), ருதெனியா (Ruthenia), ஆட்கொள்ளப்பட்ட மக்கள் (Possessed people).

கொலோன் நகரில் பிறந்த புனிதர் ப்ரூனோ, "கர்த்தூசியன்" (Carthusian) சபை நிறுவனரும், "ரெய்ம்ஸ்" (Reims) நகரின் பிரசித்தி பெற்ற ஆசிரியரும் ஆவார். இவர், திருத்தந்தை "இரண்டாம் அர்பன்" (Pope Urban II) அவர்களின் முன்னாள் ஆசிரியரும் நெருங்கிய ஆலோசகரும் ஆவார்.

தற்போதைய ஃபிரான்ஸ் நாட்டின் ரெய்ம்ஸ் நகரில் குருத்துவக்கல்வி பயின்ற இவர், தமது ஊரான கொலோன் திரும்பி, கி.பி. சுமார் 1055ம் ஆண்டு, குருத்துவ அருட்பொழிவு பெற்றார். கி.பி. 1056ம் ஆண்டு, அவரை திரும்ப ரெய்ம்ஸ் நகருக்கு அழைத்த ஆயர் "கேர்வைஸ்" (Bishop Gervais) அவருக்கு ஆயர் பள்ளிகளின் தலைமைப் பொறுப்பை அளித்தார்.

கி.பி. 1057ம் ஆண்டு முதல், 1075ம் ஆண்டு வரை, பதினெட்டு வருடங்கள் ரெய்ம்ஸ் பள்ளியின் கௌரவத்தை பேணிக் காத்தார். சுமார் இருபது வருடங்கள் தத்துவம் மற்றும் இறையியல் கற்பிப்பதில் சிறப்பு பெற்றார். திருத்தந்தை "இரண்டாம் அர்பன்" (Pope Urban II) உள்ளிட்ட ஆயர்கள் பலர் இவரிடம் கல்வி கற்றவர்களேயாவர்.

ரெய்ம்ஸ் மறைமாவட்டத்தின் அதிபர்:
கி.பி. 1075ம் ஆண்டில், இவர் "ரெய்ம்ஸ் ரோமன் கத்தோலிக்க உயர்மறை மாவட்டத்தின்" (Roman Catholic Archdiocese of Reims) அதிபராக நியமிக்கப்பட்டார். இதனால் இவர் மறைமாவட்டத்தின் அன்றாட நிர்வாகத்தில் ஈடுபாடு கொண்டார்.

ரெய்ம்ஸ் மறைமாவட்டத்தின் ஆயராக பதவியேற்க வேண்டிய காலத்தின் விளிம்பில், அதற்குப்பதிலாக, மதச் சார்பற்ற சம்பந்தங்களைத் துறந்து, "ரவுல்" (Raoul) மற்றும் "ஃபுல்சியஸ்" (Fulcius) ஆகிய இரண்டு நண்பர்களுடனும், ரெய்ம்ஸின் நியதிகளோடு சேர்ந்து, அவர் விலகிக் கொண்டார். ஆறு தோழர்களோடு காட்டுக்கு போய், கர்த்தூசியன் என்னும் சபையைத் தொடங்கினார். இவர்கள் தனிமை, எளிமை, ஒருத்தல், மௌனம், இவற்றை அனுசரிக்க வேண்டும். இவர்கள் தனித்தனி சிற்றறைகளில் வாழ்ந்து, கடவுளை வழிபடுவதற்கு மாத்திரமே ஒன்று கூடுவார்கள். இவர் எப்பொழுதும் விழிப்பாய் இருந்து தவவாழ்வு நடத்தி கடவுளுடன் என்றும் ஒன்றித்திருந்து நடுவரின் வருகைக்காக காத்திருந்தார்.


=================================================================================

தூய புருனோ (அக்டோபர் 06)

"என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு; என் பாதைக்கு ஒளியும் அதுவே" (திபா 119:105)

வாழ்க்கை வரலாறு

புருனோ, ஜெர்மனியில் உள்ள கோலோக்னே (Cologne) என்னும் இடத்தில் இருந்த ஒரு வசதியான குடும்பத்தில், 1030 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தன்னுடைய கல்வியை ரெய்ம்ஸ் என்ற இடத்தில் முடித்து, அறிவில் சிறந்தவராய் விளங்கி வந்தார். இவருடைய அறிவையும் ஞானத்தையும் கண்டு, இவரை மறைமாவட்டப் பள்ளிகளில் போதிக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். இவரும் மாணவர்களுக்கு நல்லமுறையில் கற்றுத்தந்தார். இதன்பிறகு இவரை மறைமாவட்டத்தின் வேந்தராக நியமித்தார்கள். அந்தப் பணியையும் இவர் சிறப்புடனே செய்துவந்தார்.

இந்த காலக்கட்டத்தில் திருச்சபையின் நடவடிக்கைகளில் அரசர்களும் முக்கியப் பதவிகளில் இருந்தவர்களும் தலையிடுவதும் ஆயர்களை, குருக்களை பொறுப்புகளில் நியமிப்பதுமாக இருந்தார்கள். இதனை அப்போது திருத்தந்தையாக இருந்த திருத்தந்தை கடுமையாக எதிர்த்தார், அதற்கு முற்றுப் புள்ளியும் வைத்தார். திருத்தந்தை அவர்களின் இந்த முடிவுக்கு புருனோ மிகவும் உறுதுணையாக இருந்தார். இதனால் புருனோ பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்து, தன்னுடைய பதவியிலிருந்து விலகவேண்டிய சூழலும் ஏற்பட்டது. அதற்காக புருனோ பயப்படவில்லை.

தன்னிடமிருந்த பதவி பறிக்கப்பட்ட பின்பு, புருனோ சில நாட்களை ஜெபத்திலும் தவத்திலும் செலவழித்து வந்தார். ஒருநாள் அவர் இவ்வாறு ஜெபித்துக்கொண்டிருக்கும்போது, தனியாக ஒரு துறவற சபையை நிறுவி, அதிலே தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் செலவழித்தால் என்ன என்ற யோசனை பிறந்தது. இதனை அவர் கிரநோபிளில் ஆயராக இருந்த ஹுக் என்பவரிடத்தில் எடுத்துச் சொன்னார். அவரும் இதற்குச் சரியென்று சொல்ல, புருனோ தன்னுடன் ஒருசில நண்பர்களை சேர்த்துக்கொண்டு நகருக்கு வெளியே சென்று, அங்கே ஒரு துறவற சபையை நிறுவி, ஜெப தவ வாழ்வில் ஈடுபட்டு வந்தார். பின்னாளில் தான் உருவாக்கிய அந்த சபைக்கு "கார்த்தூசியன்" என்று பெயரிட்டார்.

நாட்கள் செல்லச் செல்ல புருனோ உருவாக்கிய இந்த சபையில் நிறைய இளைஞர்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்களுக்கு எல்லாம் இவர் தன்னுடைய சபை ஒழுங்குகளை எடுத்துச் சொல்லி, அவர்களை நல்ல துறவிகளாக வாழப் பணித்தார். இதைவிட மேலான ஒரு காரியத்தையும் தன் சபைத் துறவிகளோடு செய்தார். அது என்னவென்றால், விவிலியத்தை பிரதி எடுத்தது. அச்சகம் இல்லாத அந்த காலகட்டத்தில், புருனோ தன்னுடைய சபைத் துறவிகளிடம், விவிலியத்தை பல பிரதிகளாக எழுதச் சொல்லி, அதனை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாத்து வந்தார்.

இதற்குப் பிறகு இவரை திருத்தந்தை இரண்டாம் உர்பன் தன்னுடைய ஆலோசகராக நியமித்தார். துறவற வாழ்வையே பெரிதும் விரும்பிய புருனோ, சில காலம் திருத்தந்தைக்கு ஆலோசகராக இருந்துவிட்டு இத்தாலியில் இருந்த கலாப்ரியா என்ற இடத்திற்கு வந்து, அங்கு தன்னுடைய வாழ்வின் கடைசி நாட்களை ஜெபத்திலும் தவத்திலும் செலவழித்து வந்தார். இவர் 1101 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1674 ஆம் ஆண்டு திருத்தந்தை பத்தாம் கிளமென்ட் அவர்களால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய புருனோவின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

அஞ்சாதே! துணிவோடிரு!

தூய புருனோவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம் அஞ்சாமை, துணிவோடிருத்தல்தான். திருச்சபையின் நிர்வாகத்தில் அரசர்களும் பிரபுக்களும் தலையிட்டபோது இவர் அதனைக் கடுமையாக எதிர்த்தார்; கிறிஸ்துவுக்காகவும் திருச்சபைக்காகவும் எதையும் செய்யத் துணிந்தார். இந்தத் துணிச்சல் நம்மிடத்தில் இருக்கின்றதா என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம், அதிகாரத்தோடு ஏன் மோதுவானேன் என்று அவர்கள் செய்கின்ற தவற்றினைக்கூட கண்பொத்தி, வாய்பொத்தி கடந்துபோகின்றோம். இந்நிலை மாறவேண்டும், நாம் அனைவரும் உண்மையை உரக்கச் சொல்கின்ற மனதிடம் பெறவேண்டும்.

கடந்த நூற்றாண்டின் இறுதியில் எல்சால்வதோரில் இருந்த மன்னன் மக்களின் உரிமைகளை மறுத்து, அவர்களை விலங்கினும் கீழாக நடத்தியபோது அங்கு பேராயராக இருந்த ஆஸ்கர் ரோமெரோ மக்களிடம், "நாம் கடவுளின் மக்கள், யாருக்கும் அடிமையில்லை" என்று எடுத்துச் சொல்லி, மக்களை தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடச் சொன்னபோது, அதற்காக திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருக்கும்போதே அவர் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்டாலும் இன்றைக்கு மக்களுடைய மனதில் நீங்காது இருக்கின்றார். நாம் உண்மையை துணிவோடு எடுத்துச் சொல்லும்போது எதிர்ப்புகளைச் சந்திக்கலாம். ஆனால், இறைவன் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார். இதுதான் உண்மை.

ஆகவே, தூய புருனோவின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று அஞ்சாது, துணிவோடிருந்து உண்மையை உரக்கச் சொல்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா