Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ✠ புனிதர் முதலாம் போனிஃபாஸ் ✠(St. Boniface I)
   
நினைவுத் திருநாள் : (அக்டோபர் / Oct - 25)
✠ புனிதர் முதலாம் போனிஃபாஸ் ✠(St. Boniface I)

 42ம் திருத்தந்தை :
(42nd Pope)

பிறப்பு : ரோம்

இறப்பு : செப்டம்பர் 4, 422
ரோம்

நினைவுத் திருநாள் : அக்டோபர் 25

திருத்தந்தை புனிதர் முதலாம் போனிஃபாஸ், கத்தோலிக்க திருச்சபையின் 42ம் திருத்தந்தையாக கி.பி. 418ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 28ம் தேதி முதல், கி.பி. 422ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 4ம் தேதி வரை பணியாற்றினார். இவர் புனித அகஸ்தீனுடைய சமகாலத்தவர். " புனிதர் அகுஸ்தீன்" (Saint Augustine of Hippo), இவருக்கு தன் படைப்புகளுள் பலவற்றை அர்ப்பணித்துள்ளார்.

(Liber Pontificalis) எனும் மேற்கத்திய திருச்சபையின் திருத்தந்தையர் அல்லது ஆயர்களின் நடப்புகள் மற்றும் சடங்குகள் பற்றின விபரங்கள் எழுதப்பட்டிருக்கும் புத்தகத்தில், திருத்தந்தை போனிஃபாஸ் பற்றின விபரங்கள் சிறிதளவே காணப்படுகின்றன. இவர் ஒரு ரோமன் என்றும், கிறிஸ்தவ தேவாலயத்தின் மூப்பரான (Presbyter) " ஜோகண்ட்டஸ்" (Jocundus) என்பவருடைய மகன் என்றும் அறியப்படுகிறது. இவர், திருத்தந்தை " முதலாம் டமாஸ்கஸ்" (Pope Damasus I) அவர்களால் குருத்துவம் பெற்றவர் என்றும், "கான்ஸ்டண்டினோபிலில்" (Constantinople) திருத்தந்தை " முதலாம் இன்னொசென்ட்டின்" (Innocent I) பிரதிநிதியாக செயல்பட்டவர் என்றும் அறியப்படுகிறது.

திருத்தந்தைத் தேர்தலில் குழப்பம் :
திருத்தந்தை " சோசிமஸின்" (Pope Zosimus) இறப்புக்குப் பின், இருவர் திருத்தந்தை பதவிக்கு முன்மொழியப்பட்டனர். ஒருவர் போனிஃபாஸ், மற்றவர் " யூலாலியஸ்" (Eulalius). இதனால் ஏற்பட்ட குழப்பத்தை தவிர்க்கக் கோரி ரோம ஆட்சியாளர் " சிம்மாக்குஸ்" (Aurelius Anicius Symmachus) என்பவர் இரவேன்னா நகரில் தங்கியிருந்த ரோமப்பேரரசர் " ஹொனோரியசை" (Emperor Honorius) வேண்டி கடிதம் எழுதினார். அவர், முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யூலாலியஸ் ஆதலால், அவருக்கே ஆதரவளித்தார்.

ரோமப் பேரரசின் பேரரசி " கல்லா பிலசிடியா" (Empress Galla Placidia) மற்றும் அவருடைய கணவர் " மூன்றாம் கான்ஸ்டன்ஷியஸ்" (Constantius III) கூட யூலாலியுசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இருந்தாலும், யார் திருத்தந்தை என்னும் குழப்பத்தைத் தீர்ப்பதற்கு வசதியாக போனிஃபாசும், யூலாலியுசும் ரோமுக்கு வெளியே அனுப்பப்பட்டனர். அச்சமயம் இயேசுவின் உயிர்த்தெழுதல் விழா அண்மையில் நிகழவிருந்ததைப் பயன்படுத்திக்கொண்ட யூலாலியுசு, பேரரசின் உத்தரவுகளையும், சட்டத்தையும் மீறி ரோமுக்குத் திரும்பினார். இது ரோம ஆட்சியாளர்களுக்குப் பிடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து பேரரசர் " ஹொனோரியஸ்" (Emperor Honorius) போனிஃபாஸ்தான் முறைப்படி திருத்தந்தை ஆவார் என்று அறிவித்தார்.

போனிஃபாஸ் ஆட்சி :

திருத்தந்தை போனிஃபாஸ், தமக்கு முந்தைய சில திருத்தந்தையரின் திருச்சபையின் நிர்வாகம் சம்பந்தமான கொள்கைகள் சிலவற்றை மாற்றியமைத்தார். " பெலாஜியஸ்" (Pelagius) எனும் பிரிட்டிஷ் துறவி போதித்த " பெலாஜியனிசம்" (Pelagianism) எனும் இறையியல் கோட்பாடுகளைக் கண்டித்தார். இதனை எதிர்த்து போராடுவதற்காக, இவர் " புனிதர் அகுஸ்தினாருக்கு" (St. Augustine) ஆதரவளித்தார்.

பேரரசர் " இரண்டாம் தியோடோசியசை" , (Emperor Theodosius II) அவரது மேற்கத்திய அதிகார வரம்பான " இலரிக்கம்" (Illyricum) திரும்ப வற்புறுத்தினார். மேலும், திருப்பீடத்துக்கு உள்ள உரிமைகளை இவர் நிலைநாட்டினார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா