Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ தூய காவல் தேவதூதர்களின் நினைவு ✠
(Memorial of the Holy Guardian Angels)
  Limage contient peut-tre : 1 personne, assis  
நினைவுத் திருநாள் : (அக்டோபர் / Oct - 02)
✠ தூய காவல் தேவதூதர்களின் நினைவு ✠(Memorial of the Holy Guardian Angels)
 நினைவுத் திருவிழா : அக்டோபர் 2

தூய காவல் தேவதூதர்களின் நினைவுத் திருநாள் என்பது, கத்தோலிக்க திருச்சபையினால் அனுசரிக்கப்படும் நினைவுத் திருநாட்களில் ஒன்றாகும். அக்டோபர் மாதம் 2ம் தேதி அனுசரிக்கப்படும் இந்நினைவுத் திருநாளானது சில இடங்களில், ":தெய்வீக வணக்கத்திற்கான சபையின்" (Congregation for Divine Worship) அனுமதியுடன் செப்டம்பர் மாதத்தின் முதல் ஞாயிறன்று அனுசரிக்கப்படுகின்றது. கத்தோலிக்கர்கள் 4ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பாதுகாவல் தேவதூதர்களை நினைத்து பலிபீடங்களை அமைத்தனர். மற்றும், காவல் தேவதூதர்களை கௌரவப்படுத்துவதற்கான உள்ளூர் கொண்டாட்டங்கள் 11ம் நூற்றாண்டிற்கு பின்னோக்கிச் செல்கின்றன. இந்நினைவுத் திருவிழாவானது, "ஆங்கிலிகன் சமூகத்திலுள்ள" (Anglican Communion) சில "ஆங்கிலோ-கத்தோலிக்கர்களாலும்" (Anglo-Catholics), தொடர்ந்து "ஆங்கிலிகன் இயக்கத்தின்" (Anglican movement) பெரும்பாலான சபைகளாலும் பின்பற்றப்படுகிறது.

தேவதூதர்களுக்கான பக்தி என்பது, யூத மதத்திலிருந்து கிறிஸ்தவ திருச்சபைகளுக்குப் பெறப்பட்ட ஒரு பண்டைய பாரம்பரியம் ஆகும். இந்நினைவுத் திருநாளானது, ஆரம்பத்தில் "ஃபிரான்சிஸ்கன் சபையினரால்" (Franciscan Order) கி. பி. 1500ம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது. 1607ம் ஆண்டு "பொது ரோம நாள்காட்டியில்" திருத்தந்தை "ஐந்தாம் பவுல்" (Pope Paul V) அவர்களால் இந்நினைவுத் திருவிழா நிலை நிறுத்தப்படும்வரை, இன்ன பிற நினைவுத் திருவிழாக்கள் போலவே, இதுவும் உள்ளூர் கொண்டாட்டமாகவே இருந்தது. 1976ம் ஆண்டிலிருந்து இது நினைவுத் திருநாளாக கொண்டாடப்படுகிறது.

ஒரு தேவதூதர் தமது சிறு குழந்தைகளை உண்மையான, மற்றும் கற்பனையான ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுகிறார் என்பது கத்தோலிக்க பெற்றோரிகளின் பெரும் ஆறுதலளிக்கும் அம்சமாக அமைந்துள்ளது. பாதுகாவல் தேவதூதர் என்பவர், சிறு பிள்ளைகளுக்கானவர் மட்டுமல்லர்.

காவல் தேவதூதர்களின் முக்கிய பணிகளாவது, கடவுளுக்கு முன்பாக தாம் பாதுகாப்பவர்களை பிரதிநிதித்துவம் செய்வதுவும், எப்பொழுதும் அவர்களைக் கண்காணிப்பதுவும், அவர்களுக்கு அவர்களுடைய ஜெபத்திற்கு உதவுவதும், மற்றும் அவர்கள் மரித்தபோது அவர்களுடைய ஆன்மாவை கடவுளுக்கு முன்நிறுத்துவதுமாகும்.

ஒரு காவல் தேவதூதனின் எண்ணமானது, ஒவ்வொரு மனிதனையும் வழிநடத்துவதும், வளர்ப்பதுமாகும். இது கத்தோலிக்கக் கோட்பாடு மற்றும் புனித நூல்களை அடிப்படையாகக் கொண்ட பக்திவிருத்தியாகும்.

மத்தேயு 18:10-ல் இயேசுவின் வார்த்தைகள் இவ்விசுவாசத்தை ஆதரிக்கின்றன:
"இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்."

இது துறவற மரபுகளின் பிறப்புடன் வளரத் தொடங்கிய நினைவுத் திருநாளாகும். புனிதர் பெனடிக்ட் (Saint Benedict) அதை ஊக்கப்படுத்தினார். மற்றும் 12ம் நூற்றாண்டின் பெரிய சீர்திருத்தவாதியான "கிளைர்வாஸின் புனிதர் பெர்னார்ட்" (Saint Bernard of Clairvaux) தமது நாட்களில் தேவதூதர்களின் பக்தியை எடுத்துக் கொண்டதற்கான சிறந்த சொற்பொழிவாளர் ஆவார்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 23: 20-23a
ஆண்டவர் கூறுவது: வழியில் உன்னைப் பாதுகாக்கவும், நான் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் உன்னைக் கொண்டு சேர்க்கவும், இதோ நான் உனக்கு முன் ஒரு தூதரை அனுப்புகிறேன். அவர்முன் எச்சரிக்கையாயிரு; அவர் சொற்கேட்டு நட; அவரை எதிர்ப்பவனாய் இராதே. உன் குற்றங்களை அவர் பொறுத்துக் கொள்ளார். ஏனெனில், என் பெயர் அவரில் உள்ளது. நீ அவர் சொல் கேட்டு நடந்தால், நான் சொல்வது யாவற்றையும் கேட்டுச் செயல்பட்டால், நான் உன் எதிரிகளுக்கு எதிரியும், உன் பகைவர்க்குப் பகைவனும் ஆவேன். ஏனெனில், என் தூதர் உனக்கு முன் செல்வார்.

மறையுரைச் சிந்தனை:

கடவுள் நம்பிக்கையுள்ள ஒருவர் காட்டுவழியாக பயணம் மேற்கொண்டார். அது ஓர் அடர்ந்த, கொடிய மிருகங்கள் வாழக்கூடிய காடு. அவர் தன் பயணத்தைத் தொடர்கையில் திடிரென்று இருள்சூழ்ந்து கொண்டது; மழைபெய்யும் அறிகுறிகள் வேறு தென்பட்டன. இடிமுழக்கத்துடன், காட்டுவிலங்குகளின் சத்தமும் ஒருசேர அவரை பீதிக்கு உள்ளாக்கியதால், அவருக்குள்ளே ஒருவிதமான பய உணர்வு ஏற்பட்டது. முடிவில் அவர் மயங்கி கீழே விழுந்தார்.

அவர் மீண்டும் கண்விழித்துப் பார்த்தபோது, அவர் செல்லவேண்டிய இடத்தை அடைந்திருந்தார். அவருக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. என்ன நிகழ்ந்தது என அவர் சிந்தித்த போது அவருக்கு ஒரு அசரீரி ஒலி கேட்டது.
"மகனே நீ உன் பயணத்தைத் தொடர்ந்தபோது, அதன் பாதுகாப்பை என்னிடம் ஒப்படைத்துச் செபித்தாய், அக்கணம் முதலே நான் உன்னைப் பின்தொடர்ந்து வந்தேன். நீ பயணித்த பாதையின் பாதச்சுவடுகளை உற்றுப்பார், உன்பின்னே மேலும் இரு பாதப்பதிவுகளைக் காணலாம். நான்காகத் தொடர்ந்த பாதச்சுவடுகள் நீ மயங்கிய இடத்திலிருந்து இரண்டாகக் குறைந்துள்ளதை காண்பாய். நீ நிலைகுலைந்து, மயங்கி, நிலத்தில் விழ நான் இடமளிக்கவில்லை. மாறாக, நான் உன்னை என் கரங்களில் தாங்கிக் கொண்டேன். அதன்பின் உன்னால் நடந்து உன் பயணத்தைத் தொடர முடியாததால், என் தோள்களில் உன்னைச் சுமந்துவந்தேன். அந்த இரண்டு பாதச்சுவடுகளும் உன்னுடையதல்ல, உன்னைச் சுமந்த என்னுடையதே. உனக்குத் தெரியாமலே நான் உன்னுடன் பயணித்தேன் என்றது" அந்த அசரீரி.

நீ செல்லும் இடமெல்லாம் உன்னைக் காக்கும்படி அவர் தம் தூதர்களுக்குக் கட்டளையிட்டுள்ளார் என்ற இறைவார்த்தையை (திபா 91:11) உறுதி செய்வதாக இருக்கிறது மேலே சொல்லப்பட்ட நிகழ்வு. ஆம், இறைத்தூதர்கள் நம்மை பாதுகாக்கக்கூடியவர்கள்; நமக்குத் துணையாய் இருப்பவர்கள், நம்மோடு வழிநடப்பவர்கள். அப்படிப்பட்ட சிறப்புகளுக்குச் சொந்தக்காரர்களான காவல் தூதர்களின் விழாவை இன்று நாம் கொண்டாடுகின்றோம்.

திருச்சபையின் தந்தையர் என அழைக்கப்படுகின்ற அகுஸ்தினார், அக்வினாஸ், எரேனியு போன்றவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு காவல் தூதர் இருக்கிறார் என்று சொல்வார்கள். ஆனால் விவிலியத்திலே அதற்கான ஆதாரம் கிடையாது. "இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம். கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" (மத்தேயு 18:10) என்னும் இயேசுவின் வார்த்தைகள்தான் காவல்தூதர்கள் இருக்கிறார்கள் என்பதற்கான மையக் கருவாக இருக்கின்றது.

இந்த காவல்தூதர்கள் வழியாக இறைவன் நமக்கு உணர்த்தும் வாக்குறுதி 'உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை' என்பதுதான். காவல் தூதர்கள் நம்மோடு இருக்கிறார்கள், நம்மை என்றும் வழிநடத்துகிறார்கள். மேலும் இவர்கள் கடவுளின் செல்லப்பிள்ளைகளைக் காப்பாற்றுபவர்களாகவும் (2 அரசர்கள் 6:13-17), தகவல்களை வெளிப்படுத்துபவர்களாகவும் (லூக் 1:11-20), வழிகாட்டுபவர்களாகவும் (மத் 1:20-21), பராமரிப்பவர்களாகவும் (1 அர 19:5-7), பணிவிடை செய்பவர்களாகவும் (எபி 1:14) வலம் வருகின்றனர். ஆதலால் இவ்வளவு பணிகளை நமக்காக செய்துவரும் காவல் தூதர்களை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்தவேண்டும்; அவருக்கு என்றும் பிரமாணிக்கமாய் இருக்கவேண்டும்.

சிறுவன் ஒருவன் விடுமுறைக்கு தன்னுடைய பாட்டியின் வீட்டிற்குச் சென்றிருந்தான். பாட்டியின் வீட்டில், ஒரு அறையில் கடவுளின் படம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. அதற்கு கீழே, "கடவுள் உன்னை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று எழுதியிருந்தது.

இது சிறுவனுக்கு மிகப்பெரிய மன உளைச்சலைத் தந்தது. "கடவுள் என்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்றால், என்னால் சேட்டைகள் செய்ய முடியாது, நான் ஒழுக்கமுடையவனாக அல்லவா வாழவேண்டும்" என்று தன்னுடைய பாட்டியிடம் முறையிட்டான் அவன். அதற்கு அவனுடைய பாட்டி, "கடவுள் உன்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கு அது விளக்கமல்ல, மாறாக கடவுள் உன்னை சிறு நொடிப்பொழுதும் கைவிடாமல் பாதுகாத்து அன்பு செய்கிறார் என்பதே இதன் அர்த்தம்" என்று விளக்கமளித்தார்.

ஆம், காவல் தூதர்கள் நம்மோடு இருக்கிறார்கள் என்றால் கடவுள் எப்போதும் கண்காணித்துக்கொண்டே இருக்கிறார் என்று அர்த்தமல்ல, மாறாக அவர் நம்மை சிறுபொழுதும் பிரியாமல் பாதுகாத்து அன்பு செய்கிறார் என்பதே அர்த்தம்.

எனவே நம்மை காவல் தூதர்கள் வழியாக பராமரித்து வரும் இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். அத்தோடு காவல்தூதர்களின் உடனிருப்பை உணர்வோம்; இறைவழியில் நடந்து, இறையருள் பெறுவோம்.

(அருட்தந்தை: மரிய அந்தோனிராஜ்)

=================================================================================
தூய காவல் தூதர்கள் நினைவு


நிகழ்வு

ஒருமுறை சிரியா நாட்டு அரசன் ஆண்டவரின் அடியாரும் இறைவாக்கினருமாகிய எலிசாவை பிடித்துவர அவர் இருந்த இடத்திற்கு தன்னுடைய படைவீரர்களை அனுப்பி வைத்தான். படைவீரர்களும் அவர் இருந்த இடத்தைச் சூழ்ந்துகொண்டார்கள். அடுத்தநாள் காலையில் இறைவாக்கினர் எலிசாவின் வேலையாள் படைவீரர்கள் அவர்களைச் சூழ்ந்திருந்திருப்பதைக் கண்டு, பயந்துபோய் எல்லாவற்றையும் எலிசாவிடம் சொன்னார். அதற்கு எலிசா, "அஞ்ச வேண்டாம், அவர்களோடு இருப்பவர்களை விட நம்மோடு இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்" என்றார். பின்னர் எலிசா, "ஆண்டவரே! இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும்!" என்று வேண்டினார். அப்போது ஆண்டவர் வேலைக்காரனின் கண்களைத் திறந்தார். வேலைக்காரன் தன்னுடைய கண்களைத் திறந்து பார்த்தபோது, மலை எங்கணும் நெருப்புக் குதிரைகளும், தேர்களும் எலிசாவைச் சூழ்ந்து நிற்பதைக் கண்டான்.

இதற்கிடையில் சிரியா நாட்டினர் எலியா இறைவாக்கினரைச் சூழ்ந்து வந்த பொழுது எலிசா ஆண்டவரை நோக்கி, "இவ்வினத்தாரைக் குருடாக்கியருளும்" என்று மன்றாடினார். உடனே, ஆண்டாவர் எலிசாவின் மன்றாட்டுக்கு இணங்கி அவர்களைக் குருடாக்கினார். பின்னர் எலிசா அவர்களை நோக்கி, "இது நீங்கள் செல்ல வேண்டிய பாதையுமல்ல, நகருமல்ல. என்னைப் பின் தொடருங்கள். நீங்கள் தேடும் மனிதரிடம் நாங்கள் உங்களை அழைத்துச் செல்கிறேன்" என்று சொல்லி அவர்களைச் சமாரியாவிற்கு அழைத்துச் சென்றார். அவர்கள் அந்நகருக்குள் நுழைந்ததும் எலிசா, "ஆண்டவரே! இவர்கள் பார்வை பெறும்படி இவர்கள் கண்களைத் திறந்தருளும்" என்றார். ஆண்டவர் அவர்கள் கண்களைத் திறக்கவே, சமாரிய நகரின் நடுவில் தாங்கள் இருப்பதைக் அவர்கள் கண்டார்கள். தாங்கள் முற்றிலுமாக ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்த அவர்கள், அதன்பின் இஸ்ரயேல் நாட்டுக்குள் காலேடுத்துக் கூட வைக்கவில்லை.

ஆண்டவரின் தூதர்கள் - காவல் தூதர்கள் - எப்படி நம்மைக் காப்பாற்றுகிறார்கள் என்பதற்கு விவிலியத்தில் வரும் இந்த நிகழ்வு ஒரு சான்று.

வரலாற்றுப் பின்னணி

"நம்முடைய ஆன்மா மிகவும் முக்கியமானது என்பதால், அதனைப் பாதுகாக்க இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு காவல்தூதரை நியமித்திருக்கிறார்" என்பார் விவிலிய அறிஞரான தூய எரோனிமுஸ். ஆம், நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு காவல்தூதர் உண்டு என்பது ஆழமான உண்மை. காவல்தூதர்களுக்கு விழா எடுத்துக்கொண்டாடும் வழக்கம் 16 ஆம் நூற்றாண்டிலிருந்தே இருந்திருக்கின்றது.

1582 ஆம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டில் உள்ள வலேன்சியா என்னும் இடத்தில்தான் முதன்முறை காவல்தூதர்களுக்கு விழா எடுத்துக் கொண்டாடும் வழக்கம் வந்தது. 1608 ஆம் ஆண்டு திருத்தந்தை ஐந்தாம் பவுல் இதனை இன்னும் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தார். திருத்தந்தை பத்தாம் கிளமேண்டோ இவ்விழாவை அக்டோபர் 02 ஆம் நாள் கொண்டாடப் பணித்தார். திருத்தந்தை பதிமூன்றாம் சிங்கராயரோ இவ்விழாவை ஒரு பெருவிழாவைக் போன்று கொண்டாடப் பணித்தார். அப்படி வந்ததுதான் காவல்தூதர்களின் விழாவாகும்.



காவல்தூதர்கள் செய்யும் பணிகள்

விவிலிய அறிஞரான ஜேம்ஸ் ஆல்பரியோனே (James Alberione) என்பவர் காவல்தூதர்கள் செய்யும் பணிகள் என்னென்ன என்று பின்வருமாறு வரிசைப்படுத்துவார். அவை என்னென்ன என்று இப்போது பார்ப்போம்.

1. காவல்தூதர்கள் நம்மைக் காக்கின்றார்கள்

காவல்தூதர்கள் செய்யும் முதன்மையான பணி நம் ஒவ்வொருவரையும் தீமைகளிலிருந்தும், பகைவர்களின் பிடியிலிருந்தும் காப்பதாகும். இதனை திருப்பாடல் 91:11 ல் மிகத் தெளிவாக நாம் வாசிக்கின்றோம். "நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி தம் தூதர்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்" என்று. புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்த தூய பவுலும் காவல்தூதர்களின் பாதுகாப்பை தன்னுடைய வாழ்வில் உணர்ந்தார். அதனைத்தான் "அஞ்சாதீர்! நீர் சீசர் முன்பாக விசாரிக்கப்பட வேண்டும். உம்மோடு கூடக் கப்பலிலுள்ள அனைவரையும் கடவுள் உம் பொருட்டுக் காப்பாற்றப் போகின்றார்" (திப 27:24) என்று வானதூதர் பவுலடியாருக்குச் சொன்ன வார்த்தைகளிலிருந்து நாம் அறிந்துகொள்கிறோம்.


2. காவல்தூதர்கள் நம்மை வழிநடத்துகிறார்கள்

காவல்தூதர்கள் நம்மைத் தீமையிலிருந்து காப்பதோடு மட்டுமல்லாமல், நல்வழியில் வழிநடத்தவும் செய்கிறார்கள். விடுதலைப் பயண நூல் 32:34 ல் வாசிக்கின்றோம், "இதோ என் தூதர் உம் முன்னே செல்வார்" என்று ஆண்டவராகிய கடவுள் மோசேயிடம் கூறுகின்றார். ஆகவே, நாம் கடவுளுடைய வழிநடத்துதலை காவல்தூதர்கள் வழியாக உணர்ந்துகொள்வோம்.

3. காவல்தூதர்கள் நமக்காக பரிந்துபேசுகிறார்கள்

காவல்தூதர்கள் நம்மைப் பாதுகாத்து வழி நடத்துவதோடு மட்டுமல்லாமல், நமக்காகப் பரிந்தும் பேசுகிறார்கள். எப்படியென்றால் வானதூதர்கள் இறைவன் திருமுன் எப்போதும் இருக்கிறார்கள். அதே நேரத்தில் நம்மோடும் உடன் இருக்கிறார்கள். ஆகவே நம்முடைய தேவைகளை அறிந்து, அதனை இறைவன் திருமுன் எடுத்துச் சென்று, அவரிடம் நமக்காகப் பரிந்து பேசுகிறார்கள். யோபு புத்தகத்தில் யோபுவின் நண்பரான எளிகுவின் வார்த்தையான "குழியில் விழாமல் இவர்களைக் காப்பாற்றும்" (யோபு 33: 24-26) என்பதில் இருந்து இதனை அறிந்துகொள்கிறோம்.

ஆகவே, நம்மை வழிநடத்தும், பாதுகாக்கும், நமக்காக பரிந்து பேசும் காவல்தூதர்கள் நம்மோடு இருக்கின்றார்கள் என்ற உண்மையை உணர்வதே மிகச் சிறந்த செயலாகும்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

காவல்தூதர்களின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்ற சிந்தித்துப் பார்ப்போம்.

காவல்தூதர்களைத் தந்ததற்காக இறைவனைப் போற்றுவோம்

இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் காவல்தூதரைத் தந்திருக்கிறார் என்றால் அதற்காக நாம் இறைவனுக்கு நன்றி செலுத்தவேண்டும். அதுவே நாம் செய்யவேண்டிய மிக முக்கியமான காரியமாக இருக்கின்றது. எனவே, இவ்விழா நாளில் காவல்தூதர்களை நமக்குத் தந்த இறைவனைப் போற்றுவோம். அதே நேரத்தில் காவல்தூதர்களின் - கடவுளின் - மனம்நோகாதவாறு இருக்க கடவுளுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


 
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா