Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     29 நவம்பர் 2019  
                                    பொதுக்காலம் 34ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 
வானத்தின் மேகங்களின்மீது மானிடமகனைப்போன்ற ஒருவர் தோன்றினார்.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 2-14

இரவில் நான் கண்ட காட்சியில் வானத்தின் நான்கு திசைக் காற்றுகளும் பெருங்கடலைக் கொந்தளிக்கச் செய்தன. அப்பொழுது நான்கு பெரிய விலங்குகள் கடலினின்று மேலெழும்பின.

அவை வெவ்வேறு உருவம் கொண்டவை. அவற்றுள் முதலாவது கழுகின் இறக்கைகளை உடைய சிங்கத்தைப் போல் இருந்தது. நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அதன் இறக்கைகள் பிடுங்கப்பட்டன; அது தரையினின்று தூக்கப்பட்டு மனிதனைப் போல் இரண்டு கால்களில் நின்றது; அதற்கு மனித இதயமும் கொடுக்கப்பட்டது.

அடுத்து, வேறொரு இரண்டாம் விலங்கைக் கண்டேன். கரடியைப் போன்ற அந்த விலங்கு பின்னங்கால்களை ஊன்றி எழுந்து நின்றது; தன் மூன்று விலா எலும்புகளைத் தன் வாயின் பற்களுக்கு இடையில் கவ்விக்கொண்டிருந்தது. `எழுந்திரு, ஏராளமான இறைச்சியை விழுங்கு' என்று அதற்குச் சொல்லப்பட்டது.

இன்னும் நோக்குகையில், வேங்கை போன்ற வேறொரு விலங்கு காணப்பட்டது. அதன் முதுகில் பறவையின் இறக்கைகள் நான்கு இருந்தன; அந்த விலங்குக்கு நான்கு தலைகள் இருந்தன; அதற்கும் ஆளும் உரிமை கொடுக்கப்பட்டது.

இவற்றுக்குப் பிறகு, இரவின் காட்சியில் கண்ட நான்காம் விலங்கு, அஞ்சி நடுங்கவைக்கும் தோற்றமும் மிகுந்த வலிமையும் கொண்டதாய் இருந்தது. அதற்குப் பெரிய இரும்புப் பற்கள் இருந்தன. அது தூள் தூளாக நொறுக்கி விழுங்கியது; எஞ்சியதைக் கால்களால் மிதித்துப் போட்டது. இதற்குமுன் நான் கண்ட விலங்குகளுக்கு இது மாறுபட்டது. இதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தன. அந்தக் கொம்புகளை நான் கவனித்துப் பார்க்கையில், அவற்றின் நடுவில் வேறொரு சிறிய கொம்பு முளைத்தது; அதற்கு இடமளிக்கும் வகையில், முன்னைய கொம்புகளுள் மூன்று வேரோடு பிடுங்கப்பட்டன; அந்தக் கொம்பில் மனிதக் கண்களைப் போலக் கண்களும் பெருமை பேசும் வாயும் இருந்தன.

நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன; தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்; அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவரது தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன; அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரிநெருப்பாயும் இருந்தன. அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாலான ஓடை தோன்றிப் பாய்ந்தோடி வந்தது; பல்லாயிரம் பேர் அவருக்குப் பணி புரிந்தார்கள்; பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்; நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது; நூல்கள் திறந்து வைக்கப்பட்டன. அந்தக் கொம்பு பேசின பெருமைமிக்க சொற்களை முன்னிட்டு நான் அதைக் கவனித்துப் பார்த்தேன். அப்படிப் பார்க்கையில், அந்த விலங்கு கொல்லப்பட்டது; அதன் உடல் சிதைக்கப்பட்டு நெருப்பிற்கு இரையாக்கப்பட்டது. மற்ற விலங்குகளிடமிருந்து அவற்றின் ஆட்சியுரிமை பறிக்கப்பட்டது; ஆயினும் அவற்றின் வாழ்நாள் குறிப்பிட்ட கால நேரம்வரை நீட்டிக்கப்பட்டது.

இரவில் நான் கண்ட காட்சியாவது: வானத்தின் மேகங்களின்மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்குக் கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபடவேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்து போகாது.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் -தானி (இ) 1: 52. 53-54. 55-56. 57-58 (பல்லவி: 52b)
=================================================================================
பல்லவி: என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.

52 மலைகளே, குன்றுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி

53 நிலத்தில் தளிர்ப்பவையே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்; 54 கடல்களே, ஆறுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி

55 நீரூற்றுகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 56 திமிங்கிலங்களே, நீர்வாழ் உயிரினங்களே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி

57 வானத்துப் பறவைகளே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்; 58 காட்டு விலங்குகளே, கால் நடைகளே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 21: 28


அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 29-33

அக்காலத்தில் இயேசு ஓர் உவமை சொன்னார்: "அத்தி மரத்தையும் வேறு எந்த மரத்தையும் பாருங்கள். அவை தளிர்விடும்போது அதைப் பார்க்கும் நீங்களே கோடைக் காலம் நெருங்கிவிட்டது என அறிந்துகொள்கிறீர்கள்.

அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.

அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா. "

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
லூக்கா 21: 12-19

இறைவனின் அழியா வாழ்வுதரும் வார்த்தைகள்


சிறுவனாக இருந்தபோது வால்டர் ஸ்காட் மிகவும் மந்தமாகவே இருப்பான். பள்ளிக்கூடத்தில்கூட ஒருமூலையில் அமர்ந்துகொண்டு சாதாரண ஒரு மாணவனைப் போன்றே இருந்தான்.

ஒருநாள் அவனுடைய இல்லத்திற்கு ராபர்ட் பர்னஸ் என்ற புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் சென்றபோது அங்கே சுவரில் இரண்டு வரிகள் அடங்கிய கவிதை பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டார். அதைப் பார்த்ததும், "இதை எழுதியவர் யார்?"என்று கேட்டார். உடனே சிறுவன் வால்ட்டர் ஸ்காட் "நான்தான் எழுதினேன்"என்று சொல்லி தன்னுடைய கையை உயர்த்தி, அந்தக் கவிதையின் எஞ்சிய வரிகளைத் தொடர்ச்சியாகச் சொன்னான்.

இதைக்கேட்டு வியந்துபோன ராபர்ட் பர்ன்ஸ் தன்னுடைய கைகளை அவன் தலைமேல் வைத்து, "பிற்காலத்தில் நீ ஸ்காட்லாந்து நாட்டில் மிகப் பெரிய கவிஞனாக மாறுவாய்"என்று சொல்லி வாழ்த்தினார். அந்தக் கவிஞரின் வாக்கு பலித்தது. வால்ட்டர் ஸ்காட் என்ற அந்த சிறுவன் பிற்காலத்தில் நாடு போற்றும் கவிஞனாக மாறினான்.

ஒருவர் ஒருவரைப் பற்றி வாழ்த்திப்பேசும் வார்த்தைகள் அந்த மனிதனுடய வாழ்வில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சான்று. ஆம், வார்த்தைக்கு வாழ்வளிக்கும் ஆற்றல் உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "விண்ணும், மண்ணும் ஒழிந்துபோகும்; என்னுடைய வார்த்தைகள் ஒழியவேமாட்டா"என்கிறார். இயேசுவின் வார்த்தைகள் அமரத்தன்மை கொண்டவை, அவற்றிக்கு அழிவு கிடையாது.

நற்செய்தியிலே இயேசு ஒரு வார்த்தை சொல்கிறார் நூற்றுவத் தலைவனின் ஊழியன் குணமடைகின்றான்; ஒரு வார்த்தை சொல்கிறார் செவிடர் கேட்கின்றனர்; ஊமையர் பேசுகின்றனர்; முடவர் நடக்கின்றனர்; நோயாளிகள் நலம் பெறுகின்றனர். அந்தளவுக்கு இயேசுவின் வார்த்தைகளுக்கு ஆற்றல் இருப்பதை நாம் காண்கின்றோம். யோவான் நற்செய்தி 6:68 ல் வாசிக்கின்றோம், "யாரிடம் செல்வோம் இறைவா! வாழ்வுதரும் வார்த்தைகள் உம்மிடம் அன்றோ உள்ளன"என்று பேதுரு கூறுகின்றார். ஆம், இயேசுவின் வார்த்தைகள் வாழ்வுதரும் வார்த்தைகள்.

இவ்வேளையில் இந்நற்செய்தி நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப் பார்ப்போம். முதலாவதாக இயேசுவின் வாழ்வுதரும் வார்த்தைகளை நாம் வாழ்வாக்குகிறோமா சிந்தித்துப் பார்க்கவேண்டும். மத் 15:8 ல் இயேசு கூறுவார், "இம்மக்கள் உதட்டால் என்னைப் புகழ்கிறார்கள். இவர்களது உள்ளமோ என்னைவிட்டு வெகுதொலைவில் உள்ளது"என்று. பலவேளைகளில் இறைவார்த்தையை வாசிக்கின்றோம்; இறைவழிபாட்டில் கலந்துகொள்கிறோம். ஆனால் நமது வாழ்வோ எந்த ஒரு மாற்றமும் அடையாமல் அப்படியே இருக்கின்றது.

தொடர்ந்து யாக்கோபு புத்தகம் 1:22 ல் வாசிக்கின்றோம், "இறைவார்த்தையைக் கேட்பவர்களாக மட்டும் இருந்து உங்களையே நீங்கள் ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்; அதன்படி நடப்பவர்களாகவும் இருங்கள்" என்று. எனவே நாம் இறைவார்தையைக் கேட்டு, அதன்படி வாழக் கற்றுக்கொள்வோம்.

இரண்டாவதாக இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும் அறிவுரை "காலத்தின் அறிகுறிகளைக் கண்டு, அதன்படி நம்முடைய வாழ்வை அமைத்துக்கொள்வது. திருச்சபை நம்மை "Reading the signs of the time"அதாவது காலத்தின் அறிகுறிகள் என்ன என்று கண்டுணர்ந்து, அதற்கேற்ப வாழ்வை அமைத்துக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்துவதுபோல, இயேசுவும் உலகில் நடைபெறும் போர்கள், குழப்பங்கள், சண்டைச் சச்சரவுகள், இயற்கைச் சீற்றங்கள் இவற்றையெல்லாம் கண்டுணர்ந்து இறைவனின் வருகை மிக அண்மையில் உள்ளது எனப் புரிந்துகொண்டு வாழுங்கள் என்கிறார்.

ஆதலால் நாம் சூழலுக்கு ஏற்ப நம்மைத் தகவமைத்துக் கொண்டு, அன்றாடம் நாம் வாசிக்கும் இறைவனின் வாழ்வுதரும் வார்த்தைகளை வாழ்வாக்க முயல்வோம். அதன் வழியாய் இறையருள் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
வானத்தின் மேகங்களின்மீது மானிடமகனைப்போன்ற ஒருவர் தோன்றினார்.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 2-14

நிலையில்லாத உலக அரசுகள்

நிகழ்வு

கிபி நான்காம் நூற்றாண்டில் உரோமையை ஆண்டவன் ஜூலியன் என்ற மன்னன். இவனுடைய காலத்தில் கிறிஸ்தவர்கள் அதிகமாகத் துன்புறுத்தப்பட்டார்கள், கொடுமைப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். இதற்குப் பயந்து ஒருசிலர் கிறிஸ்தவ மறையை விட்டு விலகினாலும், பலர் கிறிஸ்தவ நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தார்கள்.

ஒருநாள் இவன் மாறுவேடம் பூண்டு, தன்னுடைய தெய்வத்தின் கோயிலுக்கு முன்பாக நின்றுகொண்டு, அதனுள் மக்கள் போகின்றார்களா என்று பார்த்துக்கொண்டிருந்தான். அன்றைக்கு ஏராளமான மக்கள் அதனுள் சென்று வழிபட்டுக்கொண்டிருந்தார்கள்; ஆனால், அந்தக் கோயிலுக்குள் போகாமல் வெளியே நின்றுகொண்டிருந்தான் அகத்தேன் என்றோர் இளைஞன். அவன் ஒரு கிறிஸ்தவன்; ஒருகாலத்தில் மன்னன் ஜூலியனின் நண்பனாக இருந்தவன்

அவனைப் பார்த்ததும், மாறுவேடத்தில் இருந்த ஜூலியன் அவனிடம், "என்ன அகத்தோன்! பலரும் நான் வழிபடச் சொன்ன என்னுடைய தெய்வத்தை வழிபடுவதற்காக இங்குள்ள கோயிலுக்கு வருகின்றார்கள். அப்படியானால் நீ வணங்கும் இயேசுவுக்குப் பின் யாருமே செல்லவில்லையா...? ஒருவேளை அவருடைய தொழில் கெட்டுவிட்டதோ...? இப்பொழுது அவர் என்ன செய்துகொண்டிருக்கின்றார்?"என்று ஏளனமாகக் கேட்டான். தன்னிடம் பேசிக்கொண்டிருப்பது மன்னன் ஜூலியன் என்பதை அவனுடைய குரலை வைத்து அறிந்துகொண்ட அகத்தோன் அவனிடம், "அவர் உனக்கும் உன்னுடைய உரோமை அரசாங்கத்திற்கும் சவப்பெட்டி செய்துகொண்டிருக்கின்றார்" என்றார்.

இப்படியொரு பதிலை சிறிதும் எதிர்பார்த்திராத மன்னன் ஜூலியன் கோபத்தில் அங்கிருந்து சென்றுவிட்டான். நாள்கள் மெல்ல உருண்டோடின. ஜூலியன் எவ்வளவுதான் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டாலும்... கிறிஸ்துவை வணங்கக்கூடாது, தன்னுடைய தெய்வத்தைத்தான் வணங்கவேண்டும் என்று சொன்னாலும்... கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை ஒவ்வொருநாளும் கூடிக்கொண்டே போனது. இதைப்பார்த்து அவன் மிகவும் வேதனையடைந்து, தூக்கமில்லாமல் தவித்தான். ஆறு மாதங்கள் கழித்து, கிறிஸ்தவ மறையின் அசுர வளர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியாமல், ஜூலியன் தன்னிடம் இருந்த ஈட்டியை தன மார்பில் பாய்ச்சி, பின்னர் அதைப் பிடுங்கி ஆகாயத்தில் வீசி, "ஓ! கலிலேயனாகிய இயேசுவே! இறுதியில் நீதான் வெற்றிபெற்றாய், நான் தோற்றுப்போய்விட்டேன்"என்று உரக்கச் சொல்லிவிட்டு இறந்துபோனான்.

இந்த நிகழ்வில் வருகின்ற மன்னன் ஜூலியனைப் போன்றுதான் எத்தனையோ மனிதர்கள், அரசர்கள் கிறிஸ்தவ மறையை, கிறிஸ்துவை ஒன்றுமில்லாமல் செய்ய நினைத்தார்கள். முடிவில் அவர்கள்தான் அழிந்துபோனார்கள். இன்றைய முதல் வாசகம் உலக அரசுகள் எப்படி அழிந்துபோயின... ஆண்டவருடைய ஆட்சி எப்படி நிலைத்து நிற்கின்றது என்பவற்றைக் குறித்துப் பேசுகின்றது. அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

தானியேலின் கனவில் தோன்றிய நான்கு விலங்குகளும் பத்துக் கொம்புகளும்

இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் தானியேல் ஒரு காட்சி காண்கின்றார். அந்தக் காட்சியில் வெவ்வேறு உருவத்தைக் கொண்ட நான்கு விலங்குகள் தோன்றுகின்றன. ஒரு விலங்கு கழுகின் இறக்கை உடைய சிங்கத்தைப் போன்றும், இன்னொரு விலங்கு கரடியைப் போன்றும், மூன்றாவது விலங்கு நான்கு இறக்கைகளுடன் கூடிய வேங்கை போன்றும், நான்காவது விலங்கு இரும்புப் பற்களுடன் கூடியதாகவும் இருக்கின்றன. இந்த நான்கு விலங்குகளும் முறையே பாபிலோனிய அரசு, மேதிய மற்றும் பாரசீக அரசு, கிரேக்க அரசு, உரோமை அரசு என்ற நான்கு அரசுகளைக் குறிக்கின்றன. இந்த நான்கு அரசுகளும் அந்ததந்தக் காலத்தில் வலிமையுடையவையாக இருந்தாலும், காலப்போக்கில் அவை இருந்த இடம் தெரியாமல் அழிந்துபோயின.

இதற்குப் பின் கடைசியாகத் தோன்றிய இரும்புப் பற்களுடன் கூடிய கொடிய விலங்கின் தலையில் பத்துக் கொம்புகள் தோன்றுகின்றன; அவற்றினூடே ஒரு சிறிய கொம்பும் தொன்றுகின்றது. இந்தக் கொம்புகள் எல்லாம் பல்வேறு அரசுகளைக் குறிப்பவையாகவும், அவையெல்லாம் ஆண்டவரை எதிர்த்து நிற்பதால் ஒன்றுமில்லாமல் போகும் என்ற செய்தியைக் குறிப்பவையாகவும் இருக்கின்றது (1 சாமு 2:10)

என்றுமுள்ள இயேசுவின் ஆட்சி

இந்த நான்கு கொடிய விலங்குகளுக்குப் பிறகு தொன்மை வாய்ந்தவர் தோன்றுகின்றார். அவர் கொடிய விலங்குகளாம் உலக அரசுகளை ஒன்றுமில்லாமல் செய்கின்றார். தொடர்ந்து மானிட மகன் அங்கு தோன்ற, அவருடைய ஆட்சி அங்கு நிறுவப்படுகின்றது. அது என்றுமுள்ள ஆட்சியாக விளங்குகின்றது.

இக்காட்சி உலக அரசுகளின் நிலையாமையையும் இயேசுவின் ஆட்சியின் முடிவுறாத் தன்மையையும் நமக்கு எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. அதனால் நாம் என்றுமுள்ள அரசராம் இயேசுவுக்குப் பணிந்து, அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்வதே சாலச் சிறந்தது. நாம் இயேசுவின் ஆட்சிக்கு ஏற்புடைய மக்களாக வாழ்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம்

சிந்தனை

"கடவுள் அனுப்பியவரை நம்புவதே அவருக்கு ஏற்புடைய செயல்" (யோவா 6: 29) என்பார் இயேசு. ஆகையால், நாம் என்றுமுள்ள ஆட்சியை நடத்தும் இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து, கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
லூக்கா 21: 12-19

அறிவோம்; ஆயத்தமாய் இருப்போம்

நிகழ்வு

ஆர்தர் டோன்னே (Arthur Tonne) என்ற பிரபல எழுத்தாளர் சொல்லக்கூடிய ஒரு வரலாற்று உண்மை இது: கிபி. ஐந்தாம் நூற்றாண்டில் அலெக்ஸாண்டர் என்றொரு துறவி இருந்தார். அவரிடம் முன்னூறு இளைஞர்கள் சீடர்களாக இருந்தார்கள். அந்த முன்னூறு பேர்களையும் ஆறு குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவிற்கும் நான்கு மணிநேரம் என ஒதுக்கி, ஒரு குழுவைத் தொடர்ந்து இன்னொரு குழு என்று இருபத்து நான்கு மணிநேரமும் ஆயத்தமாகவும் விழிப்பாகவும் இருந்து இறைவனிடம் மன்றாடச் சொல்வார். அவர்களும் அவர் சொன்னதற்கு இணங்க விழித்திருந்து இறைவனிடம் மன்றாடுவர்.

இதற்கு அலெக்ஸாண்டர் என்ற அந்தத் துறவி சொல்லக்கூடிய விளக்கம் இதுதான்: "மானிட மகன் எந்த நேரத்திலும் வருவார். அதற்காக நாம் ஆயத்தமாகவும் விழிப்பாகவும் இருக்கவேண்டும்."

இந்த வரலாற்று உண்மை நமக்குகொரு முக்கியமான செய்தியை எடுத்துக்கூறுகின்றது. அது வேறொன்றுமில்லை, நாம் ஒவ்வொருவரும் மானிடமகனுடைய வருகைகாக ஆயத்தமாகவும் விழிப்பாகவும் இருக்கவேண்டும் என்பதாகும். இன்றைய நற்செய்தி வாசகமும் நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துக்கூறுகின்றது. எனவே, நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

அறிவோம்

ஆண்டவர் இயேசு, மானிட மகனுடைய வருகையை, இறையாட்சி நெருங்கி வந்துவிட்டதைக் குறித்துப் பேசுவதற்காக அத்திமரத்தை உருவகமாகப் பயன்படுத்துகின்றார். திருவிவிலியத்தில் அத்திமரமானது இஸ்ரயேல் மக்களைக் குறிப்பதாக இருக்கின்றது (ஓசே 9:10; லூக் 6-10). இங்கு இயேசு, அத்திமரம் தளிர்த்ததும் கோடைகாலம் நெருங்கிவந்துவிட்டது என்று அறிந்துகொள்கிறீர்கள். அதுபோன்று மண்ணுலகில் ஏற்படும் போர்கள், கலகங்கள் இயற்கைப் பேரிடர்கள் ஆகியவற்றின் மூலமாக இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என அறிந்துகொள்ளுங்கள் என்று கூறுகின்றார்.

இதன்மூலம் நம்முடைய நம்பிக்கை வாழ்க்கையில் "அறிவது" அல்லது "அறிந்துகொள்வது" என்பது முதன்மையான இடம் வகிக்கின்றது என்று இயேசு அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றார். வழக்கமாக நாம் இயற்கையில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்களை கண்டு இவையெல்லாம் நடக்கும் என்று கூறுகின்றோம் (லூக் 12: 54-57) இதையே நம்முடைய நம்பிக்கை வாழ்வோடு தொடர்புபடுத்திப் பார்க்கின்றபோது, நிகழும் அடையாளங்களையும் மாற்றங்களையும் கண்டுணர்ந்து நாம் ஒவ்வொருவரும் இறையாட்சி நெருங்கி வருவதையும் மானிட மகனுடைய வருகையும் அறிந்துகொள்ளும் தெளிந்த பார்வையை பெற்றுக்கொள்ளவேண்டும்.

ஆயத்தமாக இருப்போம்

ஆண்டவர் இயேசு, தளிர்விடும் அத்திமரத்தை உருவகமாகப் பயன்படுத்துவதன் இன்னொரு முக்கியமான நோக்கம், இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது, ஆதலால், நாம் ஒவ்வொருவரும் அதற்காக ஆயத்தமாகவும் தயாராகவும் இருக்கவேண்டும் என்பதை உணர்த்துவதற்குத்தான்.

மானிடமகன் வரும் நாளோ வேளையோ உங்களுக்கும் தெரியாது (மத் 25:13) எனக்கும் தெரியாது, தந்தை ஒருவருக்கு மட்டுமே தெரியும் (மத் 24: 36) என்று சொல்லும் இயேசு, அதற்காக நாம் ஒவ்வொருவரும் விழிப்பாகவும் ஆயத்தமாகவும் இருக்கவேண்டும் என்று கூறுகின்றார். விழிப்பாய் இருப்பது அல்லது ஆயத்தமாய் இருப்பது என்பது நம்பிக்கை வாழ்வின் அடுத்த கட்டமாக இருக்கின்றது. பலர் நிகழுகின்ற மாற்றங்களையும் அடையாளங்களையும் வைத்து இறையாட்சி நெருங்கிவிட்டது என்பதை அறிந்துகொண்டாலும், அதற்காக ஆயத்தமாக இருப்பதில்லை.

நோவாவின் காலத்தில் வாழ்ந்தவர்களும் லோத்துவின் காலத்தில் வாழ்ந்தவர்களும் நோவாவின் வழியாக, லோத்துவின் வழியாக வரப்போகிற அழிவைக் குறித்து அறிந்துவைத்திருந்தார்கள். ஆனால், ஆயத்தமாக இருக்கவில்லை. அதனால்தான் அவர்கள் வெள்ளப்பெருக்கின் மூலமும் நெருப்பு மற்றும் கந்தக மழையின் மூலமும் அழிந்துபோனார்கள். ஆதலால், நம்பிக்கை வாழ்வில் அறிவதோடு மட்டுமல்லாமல், ஆயத்தமாக இருப்பதும் முக்கியம் என்பதை நாம் உணரவேண்டும்.

வாக்குறுதி மாறாத இறைவன்

இன்றைய நற்செய்தி வாசகம் மூன்றாவது ஒரு முக்கியமான செய்தியைச் சொல்கின்றது. அது என்னவெனில், இறைவன் வாக்குமாறாதவர் என்பதாகும். இன்றைய நற்செய்தியின் இறுதியில் இயேசு சொல்லக்கூடிய, "என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா" என்ற வார்த்தைகள் நமக்கு அதைத்தான் உணர்த்துகின்றன. ஒழியவே மாட்ட என்பதை மாறாது என்றும் நம் பொருள்படுத்திக்கொள்ளலாம். இதை உறுதிசெய்யும் வகையில் இருப்பதுதான் யோசுவாப் புத்தகத்தில் வருகின்ற, "உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுத்த எல்லா நல்ல வாக்குறுதிகளிலும் ஒன்றுக்கூடத் தவறவில்லை" (யோசு 23: 14) என்ற வார்த்தைகள். ஆம், கடவுள் மனிதர்களைப் போன்று முன்னுக்குப் பின் முரணாகவோ, மாற்றி மாற்றியோ பேசிக்கொண்டிருப்பதில்லை; அவர வாக்கு மாறாதவர். அப்படிப்பட்டவர் மானிடமகனுடைய வருகையைக் குறித்து பேசுகின்றார் என்றால், அது நிச்சயம் நிகழும் என்பதுதான் உண்மை.

ஆகையால், நாம் மானிடமகனைக் குறித்து அறிந்து, அவருடைய வருகைக்காக ஆயத்தமாகவும் விழிப்பாகவும் இருப்போம்.

சிந்தனை

"இதோ நான் திருடனைப் போல வருகின்றேன். விழிப்பாய் இருப்போர் பேறுபெற்றோர்" (திவெ 16: 15) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் மானிட மகனுடைய வருகைக்காக விழிப்பாய் இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!