|
|
25 நவம்பர்
2019 |
|
|
பொதுக்காலம்
34ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
கடவுள் தம் தூதரை அனுப்பிச் சிங்கங்களின் வாய்களைக் கட்டிப்
போட்டார்.
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 6: 11-27
அந்நாள்களில் முன்னரே கூடிப் பேசிக்கொண்டபடி, அந்த மனிதர்கள்
உள்ளே நுழைந்து தானியேல் தம் கடவுளிடம் வேண்டுவதையும் மன்றாடுவதையும்
கண்டார்கள். உடனே அவர்கள் அரசனை அணுகி, அவனது தடையுத்தரவைப் பற்றிக்
குறிப்பிட்டு, "அரசரே! முப்பது நாள்வரையில் அரசராகிய உம்மிடமன்றி
வேறெந்தத் தெய்வத்திடமோ மனிதனிடமோ யாதொரு விண்ணப்பமும்
செய்கின்ற எந்த மனிதனும் சிங்கக் குகையில் தள்ளப்படுவான் என்ற
தடையுத்தரவில் கையொப்பமிட்டுள்ளீர் அல்லவா?" என்றார்கள்.
அதற்கு அரசன், "ஆம், மேதியர், பாரசீகரின் சட்டங்கள்
மாறாதிருப்பது போல், இதுவும் மாறாததே" என்றான். உடனே அவர்கள்
அரசனை நோக்கி, "யூதாவிலிருந்து சிறைப்பிடித்துக் கொண்டு வரப்பட்டவர்களுள்
ஒருவனாகிய தானியேல் உம்மை மதியாமல், நீர் கையொப்பமிட்டுள்ள தடையுத்தரவை
மீறி நாள்தோறும் மூன்று வேளையும் வேண்டுதல் செய்கிறான்" என்றார்கள்.
ஆனால், அரசன் இந்தச் சொற்களைக் கேட்டு மிகவும் மனம் வருந்தினான்;
தானியேலைக் காப்பாற்றத் தனக்குள் உறுதி பூண்டவனாய், அன்று கதிரவன்
மறையும் வரையில் அவரைக் காப்பாற்ற வழி தேடினான்.
ஆனால் அந்த மனிதர்கள் முன்னரே கூடிப் பேசிக்கொண்டபடி, அரசனிடம்
வந்து, அவனை நோக்கி, "அரசரே! மேதியர், பாரசீகரின் சட்டப்படி,
அரசன் விடுத்த தடையுத்தரவோ சட்டமோ மாற்றத்திற்கு அப்பாற்பட்டது
என்பதைத் தெரிந்துகொள்ளும்" என்றனர். ஆகவே, அரசனுடைய கட்டளைப்படி
தானியேல் கொண்டு வரப்பட்டுச் சிங்கக் குகையில் தள்ளப்பட்டார்.
அப்பொழுது அரசன் தானியேலை நோக்கி, "நீ இடைவிடாமல் வழிபடும் உன்
கடவுள் உன்னை விடுவிப்பாராக!" என்றான். அவர்கள் ஒரு பெரிய கல்லைப்
புரட்டிக் கொண்டுவந்து குகையின் வாயிலை அடைத்தார்கள்;
தானியேலுக்குச் செய்யப்பட்டதில் யாதொன்றும் மாற்றப்படாதிருக்கும்படி
அரசன் தன் மோதிரத்தாலும் தம் உயர்குடி மக்களின் மோதிரங்களாலும்
அதற்கு முத்திரையிட்டான்.
பின்னர் அரசன் அரண்மனைக்குத் திரும்பிச்சென்று, அன்றிரவு முழுவதும்
உணவு கொள்ளவில்லை; வேறு எந்தக் களியாட்டத்திலும் ஈடுபடவில்லை.
உறக்கமும் அவனை விட்டு அகன்றது. பொழுது புலர்ந்தவுடன், அவன் எழுந்து
சிங்கக் குகைக்கு விரைந்து சென்றான்.
தானியேல் இருந்த குகையருகில் வந்தவுடன் துயரக் குரலில் அவன்
தானியேலை நோக்கி, "தானியேல்! என்றுமுள கடவுளின் ஊழியனே! நீ இடைவிடாமல்
வழிபடும் உன் கடவுளால் உன்னைச் சிங்கங்களினின்று விடுவிக்க
முடிந்ததா?" என்று உரக்கக் கேட்டான்.
அதற்குத் தானியேல் அரசனிடம், "அரசரே! நீர் நீடூழி வாழ்க! என்
கடவுள் தம் தூதரை அனுப்பிச் சிங்கங்களின் வாய்களைக் கட்டிப்
போட்டார். அவை எனக்குத் தீங்கு எதுவும் செய்யவில்லை; ஏனெனில்
அவர் திருமுன் நான் மாசற்றவன். மேலும் அரசரே! உம்
முன்னிலையிலும் நான் குற்றமற்றவனே" என்று மறுமொழி கொடுத்தார்.
எனவே, அரசன் மிகவும் மனம் மகிழ்ந்து, உடனே தானியேலைக்
குகையிலிருந்து விடுவிக்குமாறு கட்டளையிட்டான். அவ்வாறே
தானியேலைக் குகையிலிருந்து வெளியே தூக்கினார்கள். அவருக்கு
யாதொரு தீங்கும் நேரிடவில்லை; ஏனெனில் அவர் தம் கடவுளை உறுதியாக
நம்பினார். பிறகு அரசனது கட்டளைக்கிணங்க, தானியேலைக் குற்றம்
சாட்டியவர்கள் இழுத்துக் கொண்டுவரப்பட்டனர். அவர்களும் அவர்களுடைய
மனைவி, மக்களும் சிங்கக் குகையினுள் தள்ளப்பட்டார்கள். அவர்கள்
குகையின் அடித்தளத்தை அடையும் முன்னே சிங்கங்கள் அவர்களைக் கவ்விப்
பிடித்து, அவர்களுடைய எலும்புகளை எல்லாம் நொறுக்கிவிட்டன. அப்பொழுது
தாரியு அரசன் நாடெங்கும் வாழ்ந்துவந்த எல்லா இனத்தவருக்கும்
நாட்டினருக்கும் மொழியினருக்கும் ஓர் அறிக்கை விடுத்தான்.
"உங்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டாவதாக! என் ஆட்சிக்குட்பட்ட
நாடு முழுவதும் உள்ள மக்கள் தானியேலின் கடவுளுக்கு அஞ்சி நடுங்க
வேண்டும். இது என் ஆணை. ஏனெனில், அவரே வாழும் கடவுள்; அவர் என்றென்றும்
நிலைத்திருக்கின்றார்; அவரது ஆட்சி என்றும் அழிவற்றது; அவரது
அரசுரிமைக்கு முடிவே இராது. தானியேலைச் சிங்கங்களின்
பிடியினின்று காப்பாற்றியவர் அவரே; அவரே மீட்பவர்! விடுதலை அளிப்பவரும்
அவரே! விண்ணிலும் மண்ணிலும் அரிய செயல்களையும் விந்தைகளையும்
ஆற்றுபவர் அவரே!"
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-தானி (இ) 1: 45. 46-47. 48-49. 50-51 (பல்லவி: 45)
=================================================================================
பல்லவி: என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
45 பனித் திவலைகளே, பனி மழையே, ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி
46 பனிக் கட்டியே, குளிர்மையே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 47 உறை
பனியே, மூடுபனியே, ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி
48 இரவே, பகலே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 49 ஒளியே, இருளே, ஆண்டவரை
வாழ்த்துங்கள். பல்லவி
50 மின்னல்களே, முகில்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 51 மண்ணுலகு
ஆண்டவரை வாழ்த்துவதாக. பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
லூக் 21: 28
அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில்
உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
பிற இனத்தாரின் காலம் நிறைவு பெறும்வரை எருசலேம் அவர்களால்
மிதிக்கப்படும்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 20-28
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: "எருசலேமைப்
படைகள் சூழ்ந்திருப்பதை நீங்கள் காணும்போது அதன் அழிவு
நெருங்கி வந்துவிட்டது என அறிந்து கொள்ளுங்கள்.
அப்போது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்;
நகரத்தின் நடுவில் உள்ளவர்கள் வெளியேறட்டும்; நாட்டுப் புறங்களில்
இருப்பவர்கள் நகரத்துக்குள்ளே வரவேண்டாம். ஏனெனில் அவை பழிவாங்கும்
நாள்கள்.
அப்போது மறைநூலில் எழுதியுள்ள யாவும் நிறைவேறும். அந்நாள்களில்
கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை அந்தோ பரிதாபம்!
ஏனெனில் மண்ணுலகின்மீது பேரிடரும் அம்மக்கள்மீது கடவுளின் சினமும்
வரும். அவர்கள் கூரான வாளால் வீழ்த்தப்படுவார்கள்; எல்லா நாடுகளுக்கும்
சிறைப்பிடித்துச் செல்லப்படுவார்கள்; பிற இனத்தார் காலம்
நிறைவு பெறும்வரை எருசலேம் அவர்களால் மிதிக்கப்படும்.
மேலும் கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள்
தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால்
கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு
என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில்,
வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும்
மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள்மீது வருவதை அவர்கள் காண்பார்கள்.
இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்;
ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
உலகத்திற்கு என்ன நேருமோ என அச்சம் கொள்ளும் மனிதர்கள், கடவுள்
நம்பிக்கை கொண்டவராய் இருப்பார்களோயானால், அச்சம் தவிர்த்து நம்பிக்கை
கொண்டிட முடியும். காரணம் மனிதர்களால் எல்லாம் செய்திட
முடியாது. மனிதர்களின் எல்லை வரையறுக்கப்பட்ட ஒன்றே.
உலகு இயங்கிக் கொண்டு இருப்பதை மனிதனால், அறிய முடிகிறதே ஒழிய,
அதனை எந்த விதத்திலும் முறைப்படுத்திட முடியாது. புயல் சின்னம்
உருவாகியிருக்கிறது, என கண்டு பிடித்திட முடியும். அதனுடைய வேகத்தை
காண முடியும். அது நகரும் திசையினை அறிந்திட முடியும். மாறாக
அதன் வேகத்தை கட்டுப்படுத்தவோ, அது செல்லும் பாதையை மாற்றி அமைக்கவோ
மனிதனால் இயலாது.
எனவே உலகுக்கு என்ன நேருமோ என்ற கவலையை படைத்தவரிடம் விட்டு
விட்டு, மனிதன் இயற்கைக்கு எதிரான காரியங்களில் இறங்காமல் இருப்பது
விவேகமான செயல். படைத்தவரிடம் நம்பிக்கை கொள்வதுவும் அறிவார்ந்த
செயலாகும்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
முதல் வாசகம்
கடவுள் தம் தூதரை அனுப்பிச் சிங்கங்களின்
வாய்களைக் கட்டிப் போட்டார்.
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 6: 11-27
கடவுளை உறுதியாக நம்பிய தானியேல்
நிகழ்வு
அமுதன் தன்னுடைய நண்பர்கள் இருவரோடு நான்கு சக்கர வண்டியில்
மைசூருக்குச் சுற்றுலா சென்றார். இதில் அமுதனுக்கு கடவுள்மீது
ஆழமான நம்பிக்கை உண்டு; அவருடைய இரண்டு நண்பர்களுக்குத்தான்
கடவுள்மீது நம்பிக்கையே கிடையாது. இன்னும் சொல்லப்போனால், கடவுள்
என்ற வார்த்தையே அவர்களுக்குப் பிடிக்காது.
அவர்கள் மூன்றுபேரும் வண்டியில் சிரித்து, மகிழ்ந்து
பேசிக்கொண்டுபோனார்கள். அன்றைக்கு சரியான மழை பெய்துகொண்டிருந்தது.
ஒரு திருப்பத்தில் வண்டி வளையும்போது, எதிர்த்திசையில் வந்த ஒரு
பெரிய லாரி தன்னுடைய காட்டுப்பாட்டை இழந்து அவர்கள் பயணம்
செய்துகொண்டிருந்த நான்கு சக்கர வண்டியில் வந்து மோதியது. இதனால்
அந்த இடத்திலேயே அந்த மூன்றுபேரும் இறந்துபோனார்கள்.
செய்தியறிந்து போக்குவரத்துக் காவல்துறையினர் அங்கு விரைந்து
வந்தனர். அவர்கள் இறந்தவர்களின் குடும்பத்திற்குத் தகவல் சொன்னபின்பு,
இறந்து கிடந்தவர்களை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காகத்
தூக்கிக்கொண்டு போனார்கள். மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள்
ஒவ்வொருவராக பரிசோதித்துப் பார்த்துக்கொண்டு வந்தார்கள். அப்படித்
சோதித்துப் பார்க்கும்போது அமுதனின் இரண்டு நண்பர்களும் இறந்துபோனது
உறுதியானது. அமுதனிடம் அவர்கள் வந்தபோது, அவருடைய விரல்கள்
லேசாக அசைவதை உணர்ந்தார்கள். உடனே அவர்கள் அவருக்குத் தீவிரச்
சிகிச்சை அளித்து அவருடைய உயிரைக் காப்பாற்றினார்கள்.
அமுதன் முழுவதுமாகக் குணம்பெற்றதும், தான் ஆண்டவர்மீது
கொண்டிருந்த நம்பிக்கைதான் தன்னை காப்பாற்றியது என்று ஆண்டவரைப்
போற்றிப் புகழ்ந்து, தன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவருக்கு உண்மையாக
இருந்தார்.
ஒருவர் ஆண்டவர்மீது கொண்டிருக்கும் நம்பிக்கை அவருக்கு எத்தகைய
ஆசியைத் தருகின்றது என்பதை என்பதை இந்த நிகழ்வின் வழியாக நாம்
அறிந்துகொள்ளலாம். இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவர்மீது நம்பிக்கைகொண்டு
வாழ்ந்த தானியேல் எப்படி சிங்கங்களிலிருந்து காப்பாற்றப்படுகின்றார்
என்பதைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது
சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
இறைவனிடம் வேண்டியும் மன்றாடியும் வந்த தானியேல்
இன்றைய முதல் வாசகத்தில், தானியேலுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த
மனிதர்கள் அவர் உண்மைக் கடவுளிடம் மூன்று வேளையும் மன்றாடுவதையும்
வேண்டுவதையும் பார்த்துவிட்டு, தாரியு அரசரிடம் சென்று, அரசராகிய
உம்மிடமன்றி தெய்வத்திடமோ மனிதரிடமோ யாதொடு விண்ணப்பமும்
செய்கின்ற எந்த மனிதனும் சிங்கக் குகையில் தள்ளப்படுவான் என்று
நீர் தடையுத்தரவு விதித்தீர் அல்லவா... அதையும் மீறி தானியேல்
என்பவன் தன்னுடைய கடவுளிடம் மூன்று வேளை வேண்டுதல் செய்துவருகின்றான்
என்று பற்ற வைக்கின்றார்கள். தாரியு அரசருக்கு தானியேலை எப்படியாவது
காப்பாற்றவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனாலும்,
தானியேலுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் தன்னுடைய பிடியில் உறுதியாக
இருந்ததால், அவர் தானியேலைச் சிங்கக் குகையில் தள்ளி
முத்திரையிடுகின்றார்.
இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான செய்தி, அரசரைத் தவிர
வேறு யாரிடமும் விண்ணப்பம் செய்யக்கூடாது என்று தடை உத்தரவு இருந்தபோதும்,
தானியேல் பேதுருவைப் போன்று திருத்தூதர்களைப் போன்று மனிதர்களுக்குக்
கீழ்ப்படியாமல், ஆண்டவருக்கு மட்டுமே கீழ்ப்படிந்து நடந்ததுதான்
(திப 5:29) . தானியேல் கடவுள்மீது நம்பிக்கை கொண்டு, அவருக்கு
மட்டுமே கீழ்ப்படிந்து நடந்ததால் அடுத்து என்ன நடந்தது என்பதைத்
தொடர்ந்து நாம் பார்ப்போம்.
சிங்கங்களின் வாய்களிலிருந்து காப்பாற்றப்பட்ட தானியேல்
தானியேலுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள், அவர் சிங்கக் குகையில்
தள்ளப்பட்டுக் கொல்லப்படவேண்டும் என்று செயல்பட்டாலும், தாரியு
அரசர் தானியேலிடம் இரக்கத்தோடு நடந்துகொண்டார். அதனால்தான் அவர்
தானியேலிடம், "நீ இடைவிடாமல் வழிபடும் கடவுள் உம்மை
விடுவிப்பாராக" என்று சொல்கின்றார். மட்டுமல்லாமல் அவரைக்
குறித்து நினைத்து, நிலைகொள்ளாமல் இருந்து, மறுநாள் சிங்கக்
குகைக்கு அருகே வந்து, "கடவுளின் ஊழியனே! நீ இடைவிடாமல் வழிபடும்
உன் கடவுளால் உன்னைச் சிங்கத்தினின்று விடுவிக்க முடிந்ததா?"
என்று கேட்கின்றார். அதற்கு தானியேல் "என் கடவுள் தம் தூதரை அனுப்பிச்
சிங்கங்களின் வாய்களைக் கட்டிப்போட்டார்; அவை எனக்குத் தீங்கு
எதுவும் செய்யவில்லை" என்கின்றார்.
தானியேல் சிங்கங்களின் வாய்களிலிருந்து விடுவிக்கப்பட்டதற்குக்
காரணம், அவர் ஆண்டவர் திருமுன் மாசற்றவராகவும் அவர்மீது நம்பிக்கை
கொண்டவராகவும் இருந்ததுதான். மேலும் தானியேல் சிங்கங்களின்
வாயிலிருந்து விடுவிக்கப்பட்டதன் மூலம், ஆண்டவர் தம் அடியார்களைத்
தன்னுடைய தூதர்களை அனுப்பிக் காக்கின்றார் என்பதும் உண்மையாகின்றது
(திபா 34: 7, 91: 11). ஆகையால், நாம் கடவுளிடமிருந்து தயவும்
ஆசியும் பெற தானியேலைப் போன்று ஆண்டவர்மீது நம்பிக்கைக் கொண்டவர்களாகவும்
அவர்முன் மாசற்றவர்களாகவும் இருப்போம்.
சிந்தனை
"மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே
நலம் (திபா 18:8) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால்,
நாம் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டு, அவரிடம் தஞ்சம் புகுவோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
லூக்கா 21: 20-28
இயேசுவின் இரண்டாம் வருகை
1934 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தவர் சார்லஸ் மேன்சன் என்பவர்.
இவர் குழந்தையாக இருக்கும்போதே தந்தையை இழந்தவர். தாயும் இவரை
சில மாதங்களிலிலே அனாதையாக விட்டுவிட்டுப் பிரிந்தார். இதனால்
இவருடைய குழந்தைப் பருவமே கேள்விக்குள்ளாக்கப்பட்டது. பெரியவர்
ஒருவர் இவர்மீது இரக்கப்பட்டு குழந்தைகள் காப்பகத்திலே
கொண்டுபோய் சேர்த்தார்.
அங்கே இளைஞனாக வளர்ந்த சார்லஸ் மேன்சன் தன்னை "இயேசு கிறிஸ்து
என்றே அழைத்துக்கொண்டான். அழகிய தோற்றமும், சிறந்த குரல் வளமும்
கொண்ட இவன் வாகனங்களில் ஊர் ஊராகச் சென்று "நான்தான் இயேசுக்
கிறிஸ்து; இன்னும் ஒருசில நாட்களில் உலகம் அழியப்போகிறது" என்று
போதிக்கத் தொடங்கினான். இவனது போதனையால் கவரப்பட்ட ஏராளமான இளைஞர்கள்
இவரைப் பின்தொடர்ந்தார்கள். தன்னுடைய சீடர்களுக்கு சார்லஸ்
மேன்சன் கடவுளைப் போன்றே காட்சியளித்தான்.
ஆனால் இவன் தன்னுடைய சீடர்கள் மட்டும் தனியாக இருக்கும்போது
அவர்களிடத்தில் "நாட்டில் இருக்கக்கூடிய பணக்காரர்கள்,
சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள் எல்லாம் நாட்டைப்
பிடித்திருக்கும் சாத்தான்கள்; அவர்களிடத்திலிருந்து பொருட்களையும்,
பணத்தையும் சூறையாடவேண்டும்" என்று அறிவுறுத்தினான். குழந்தைப்
பருவத்தில் தான் அனுபவித்த துன்பங்களுக்கு காரணமாக இருந்தவர்களை
அழித்தொழிக்க வேண்டும் என்ற வெறியோடு அவன் செயல்பட்டான்.
தன்னுடைய தலைவன் சொன்னதை வேதவாக்காக எடுத்துக்கொண்ட மேன்சனின்
சீடர்கள் ஊரில் ஒதுக்குப்புறமாக இருந்த வீடுகளில் இரவு நேரங்களில்
கொள்ளையடித்தார்கள்; எதிர்த்து வந்தவர்களை வெட்டி வீழ்த்தினார்கள்.
இச்செய்தி காவல்த்துறையினருக்குத் தெரியவர அவர்கள் சார்லஸ்
மேன்சனையும், அவனுடைய சீடர்களையும் சிறையில் அடைத்தார்கள்.
சிறைச்சாலையில் கையெழுத்துப் போடும்போதுகூட சார்லஸ் மேன்சன் என்ற
தன் பெயரை "இயேசு கிறிஸ்து என்றே எழுதினான். அரசாங்கம் அவனுக்கு
ஆயுள் தண்டனை விதித்தது.
இன்றைக்கும் தன்னைக் கடவுளாக, இயேசுக் கிறிஸ்துவாக அழைத்துக்கொண்டு
மக்களின் மூளையை மழுங்கடிக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு
சார்லஸ் மேன்சன் அந்த மனிதன் ஒரு சான்று.
நற்செய்தி வாசகத்திலே ஆண்டவர் இயேசு எருசலேம் நகர அழிவைப் பற்றியும்,
இறுதி நாட்களில் நடப்பவை பற்றியும், மானிட மகனின் இரண்டாம் வருகையும்
பற்றி எடுத்துக்கூறுகிறார். திருவெளிப்பாடு நூலில் உள்ள செய்திகளை
ஒத்திருக்கும் இப்பகுதியானது நமக்கு ஒருசில உண்மைகளைத் தெளிவுபடுத்துகின்றன.
முதலாவதாக இன்றைக்கு ஒருசில போதகர்கள்(?) சொல்வது போன்று மானிட
மகனின் வருகை நாளையோ அல்லது அதற்கு அடுத்த நாளோ வருவதல்ல.
மாறாக அந்த நாளைப் பற்றி இயேசுவுக்கே தெரியாது. மத் 24:36 ல்
வாசிக்கின்றோம், "அந்த நாளையும், வேளையையும் பற்றி தந்தை ஒருவரைத்
தவிர வேறு எவருக்கும் தெரியாது, ஏன் விண்ணகத் தூதர்களுக்கோ
மானிட மகனுக்கூடத் தெரியாது.
ஆதலால் மானிட மகன் எந்த நாள் வருவார், எப்டி வருவார் வருவார்?
என்பதுபற்றி கவலைப்படாமல் மண்ணுலகில் நாம் நம் வாழ்வை அர்த்தமாக்குவோம்.
அடுத்ததாக ஒவ்வொருவருமே கனிதரும் பயனுள்ள - வாழ்க்கை வாழ அழைக்கப்படுகின்றோம்.
யோவான் 15:8 ல் வாசிக்கின்றோம், "நீங்கள் மிகுந்த கனிதந்து என்னுடைய
சீடராக இருக்கவேண்டும் என்பதே என் தந்தைக்கு மாட்சியளிக்கிறது"
என்பார் இயேசு. ஆகவே நாம் ஒவ்வொருவரும் கனிதரும் வாழ்க்கை வாழ
முயலுவோம்.
எப்படி கனிதரும் வாழ்க்கை வாழ்வது?. "வாழ்க்கை இன்பமானது எனக்
கனவுகண்டேன். கண்விழித்த பிறகு, வாழ்க்கை சேவையில் அடங்கியுள்ளது
எனக் கண்டேன். சேவை செய்த பிறகு, சேவைதான் இன்பமானது எனப்
புரிந்துகொண்டேன்" என்பார் புத்தர். ஆம். பிறருக்கு நாம்
செய்யும் நல்ல காரியங்கள்தான் நமக்கு மகிழ்வையும், நிறைவையும்
பெற்றுத்தரும்; அதுவே நமது வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றும்.
எனவே உலக முடிவு மானிட மகனின் வருகை பற்றிய தேவையற்ற அச்சத்தைத்
தவிர்ப்போம். ஆண்டவரில் நம்பிக்கை வைத்து நன்மைகள்
செய்துவாழ்வோம். அதன்வழியாய் இறையருள் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
லூக்கா 21: 20-28
இறுதிநாள்களும் மானிடமகனின் இரண்டாம்
வருகையும்
நிகழ்வு
சாம் என்றொரு கிறிஸ்தவர் இருந்தார். அவர் ஒரு குருத்துவக் கல்லூரியில்
தோட்டக்காரராக வேலை செய்துவந்தார். குருத்துவக் கல்லூரியில் இருந்த
மாணவர்கள் அவரோடு அன்பாய்ப் பேசுவதுண்டு; பழகுவதுண்டு.
ஒருநாள் அந்தக் குருத்துவக் கல்லூரில் இருந்த இரண்டு மாணவர்கள்
திருவெளிப்பாடு நூலைக் குறித்து மிகத் தீவிரமாக
விவாதித்துக்கொண்டிருந்தார்கள். இருவருக்கும் திருவெளிப்பாடு
நூலைக் குறித்து இருவேறு கருத்துக்கள் இருந்தன. அதனால் அவர்கள்
இருவரும் அதைக் குறித்து சத்தம் போட்டு
விவாதித்துக்கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் அந்தப் பக்கமாய்
சாம் என்ற அந்தத் தோட்டக்காரர் சென்றுகொண்டிருந்தார். அவரைப்
பார்த்த இரண்டு மாணவர்களும் அவரைத் தங்கள் அருகே அழைத்தார்கள்.
அவரும் அவர்கள் அருகே சென்றார்.
"ஐயா! திருவெளிப்பாடு நூலை எப்போதாவது வாசித்திருக்கிறீர்களா...?
அந்த நூலில் சொல்லப்பட்டிருப்பதைப் பற்றி நீங்கள் என்ன
நினைக்கிறீர்கள்...?" என்றார் ஒரு மாணவர். சாம் ஒருநிமிடம் அமைதியாக
இருந்தார். பின்னர் அவர் அவர்களைப் பார்த்து, "உங்கள் அளவுக்கு
என்னால் பேசத் தெரியாது; எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்" என்று
சொல்லிவிட்டு, "இயேசு மீண்டும் வருவார். அவர் தீயோனாகிய சாத்தனையும்
அவனுடைய தந்திரங்களையும் முறியடித்துவிட்டு, என்றுமுள்ள தன்னுடைய
ஆட்சியை நிறுவுவார்" என்றார். இதைக் கேட்டு அந்த இரண்டு மாணவர்களும்
வியப்படைந்து அவரை வெகுவாகப் பாராட்டினார்கள்.
தோட்டக்காரராகிய சாம் சொன்ன வார்த்தைகள் பாரமத்தனமாக இருந்தாலும்,
மானிடமகன் மீண்டுமாக வருகின்றபோது என்ன நடக்கும் என்பதை மிகத்
தெளிவாக எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. இன்றைய நற்செய்தி வாசமும்
நமக்கு இதைக்குறித்த செய்தியைத்தான் தருகின்றது. எனவே, நாம் அதைக்
குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
எருசலேம் திருக்கோயிலின் அழிவும் இறுதிநாள்களும்
லூக்கா நற்செய்தி, இருபத்து ஒன்றாம் அதிகாரம் முழுவதும் எருசலேம்
திருக்கோயிலின் அழிவு குறித்தும் இறுதிநாள்களில் நடப்பவை
குறித்தும் பேசுவதாக இருக்கின்றது. எருசலேம் நகரில் இருந்தவர்கள்
பலமுறை ஆண்டவருடைய வார்த்தையை கேட்டபோதும் மனமாற்றத்திற்கான அழைப்பினை
பெற்றபோதும் மனம்மாறாதவர்களாகவே இருந்தார்கள். இதனாலேயே அவர்கள்
உரோமையர்களிடமிருந்து மிகப்பெரிய அழிவினைச் சந்தித்தார்கள்.
யூத வரலாற்று ஆசிரியரான ஜோசேபுஸின் கூற்றுப்படி, கிபி.70 ஆம்
ஆண்டு, எருசலேமில் உரோமை மன்னன் டைடசின் தலைமையில் நடைபெற்ற
தாக்குதலில் ஆறு இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டார்கள்; பலர்
நாடுகடத்தப்பட்டார்கள்; எருசலேம் திருக்கோயில் அழிக்கப்பட்டது.
இதற்கெல்லாம் காரணம் மக்கள் இறைவனுடைய வார்த்தையைக் கேட்டு நடக்காததுதான்.
ஆண்டவர் இயேசு, எருசலேமில் நடக்கவிருப்பதைப் போன்று நடந்ததைப்
போன்று - இறுதி நாள்களில் நடைபெறும் என்று கூறுகின்றார். ஆம்,
இறுதிநாளில் கதிரவனிலும் நிலாவிலும் அடையாளங்கள் தென்படும்...
வான்வெளிக்கோள்கள் அதிரும் என்று அவர் கூறுகின்றார். இவையெல்லாம்
நமக்கு அச்சத்தைத் தருவதாக இருந்தாலும், இவற்றுக்கு நடுவில் ஒரு
நம்பிக்கை கீற்று இருக்கின்றது. அது என்ன என்று தொடர்ந்து
சிந்தித்துப் பார்ப்போம்.
வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் வருவார்
"இடி விழுந்த வீட்டில் இன்று பூச்செடிகள் பூக்குறதே என்பார்
கவிஞர் நா. முத்துக்குமார். இறுதிநாள்களில் நடப்பவை குறித்து
இயேசு சொல்லும் வார்த்தைகள் ஒருபக்கம் நமக்கு அச்சத்தைத் தருவதாக
இருந்தாலும், எல்லாம் நடந்துமுடிந்த பின்பு நிகழும் மானிடமகனுடைய
வருகை நமக்கு நம்பிக்கையைத் தருவதாக இருக்கின்றது. ஆம், மானிடமகனுடைய
வருகை ஒரு நம்பிக்கைக் கீற்றாக இருக்கின்றது என்பதில் எந்தவோர்
ஐயமுமில்லை. இன்னும் சொல்லப்போனால், இயேசுவின்மீது நம்பிக்கையில்லாமல்
வாழ்பவர்கள்தான் "அந்த நாளைக் குறித்துக் கவலைப்பட்டுக்
கொண்டிருக்கவேண்டும்; இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு வாழ்பவர்களோ
அந்த நாளைக் குறித்துக் கவலைப்படவோ அச்சப்படவோ தேவையே இல்லை.
இங்கு இன்னொரு கேள்வி எழலாம். அது என்னவெனில், "மானிடமகன் வருவார்
என்று இயேசு சொல்லி ஈராயிரம் ஆண்டுகள் ஆயிற்றே...? இன்னும்
மானிடமகன் வரவில்லையே...? என்பதுதான் அந்தக் கேள்வி. இதற்கு
புனித பேதுரு தன்னுடைய இரண்டாம் திருமுகத்தில், "நாம் மனம்மாறுவதற்கே
அவர் பொறுமையாக இருக்கின்றார் என்று மிக அருமையாகப் பதில்
கூறுவார். ஆகையால், மானிடமகனுடைய வருகை கண் இமைக்கும்
நொடியிலும் நிகழலாம் (1 15: 52). அத்தகைய ஒரு நிகழ்விற்காக
நாம் தயாராக இருந்து, அவரை எதிர்கொள்வதுதான் அறிவார்த்ந்த செயல்.
சிந்தனை
"நம்பிக்கை கொண்டோர் பதற்றமடையார் (எசா 28: 16) என்பார் இறைவாக்கினர்
எசாயா. ஆகையால், மானிட மகனுடைய வருகையைக் குறித்து அஞ்சிக்
கொண்டிருக்காமல், அவர்மீது நம்பிக்கை கொண்டவர்களாய், அவருடைய
வருகைக்காக ஆவலோடு காத்திருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
|
|