|
|
27 நவம்பர்
2019 |
|
|
பொதுக்காலம்
34ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
மனித கைவிரல்கள் தோன்றி எழுதத் தொடங்கின.
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 5: 1-6, 13-14,
16-17, 23-28
அந்நாள்களில் பெல்சாட்சர் என்ற அரசன் உயர்குடி மக்கள் ஆயிரம்
பேருக்குப் பெரியதொரு விருந்து வைத்தான்; அந்த ஆயிரம் பேருடன்
அவனும் திராட்சை மது குடித்தான். அவ்வாறு குடித்துக்கொண்டிருந்தபொழுது,
அரசன் தானும் தன் மனைவியரும் வைப்பாட்டிகளும் குடிப்பதற்கென்று,
தன் தந்தையாகிய நெபுகத்னேசர் எருசலேம் திருக்கோவிலிலிருந்து
கொண்டு வந்திருந்த பொன், வெள்ளிக் கிண்ணங்களைக் கொண்டுவரச்
சொன்னான்.
அதன்படி, எருசலேமிலிருந்த கடவுளின் கோவிலிலிருந்து கொண்டு வந்த
பொன் கிண்ணங்களை எடுத்து வந்தார்கள்; அரசனும் அவனுடைய உயர்குடி
மக்களும், அவனுடைய மனைவியரும், வைப்பாட்டியரும் அந்தக் கிண்ணங்களிலிருந்து
குடித்தார்கள். அவர்கள் திராட்சை மது குடித்துக் கொண்டே பொன்,
வெள்ளி, வெண்கலம், இரும்பு, மரம், கல் ஆகியவற்றாலான தங்கள்
தெய்வங்களைப் புகழ்ந்தார்கள். திடீரென்று ஒரு மனிதனுடைய கைவிரல்கள்
தோன்றி அரசனது அரண்மனை உட்சுவரில் விளக்குத் தூணுக்கு எதிரே எழுதத்
தொடங்கின. அவ்வாறு எழுதும்போது அரசன் அந்த உள்ளங்கையைப்
பார்த்தான். அதைக் கண்டு அரசன் முகம் கறுத்து, நெஞ்சம் கலங்கி,
குலைநடுங்கி, தொடை நடுக்கமுற்றான். இதற்கு விளக்கம் அளிக்குமாறு,
அரசன் முன்னிலைக்குத் தானியேல் அழைத்து வரப்பட்டார்.
அரசன் அவரைப் பார்த்து, "என் தந்தையாகிய அரசன் யூதாவிலிருந்து
சிறைப்பிடித்து வந்தவர்களுள் ஒருவனாகிய தானியேல் என்பவன்
நீதானே? உன்னிடத்தில் புனிதமிகு கடவுளின் ஆவியும் அறிவொளியும்
நுண்ணறிவும் சிறந்த ஞானமும் உண்டென உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன்.
விளக்கங்கள் கூறவும் சிக்கல்களைத் தீர்க்கவும் உன்னால்
முடியும் எனக் கேள்விப்படுகிறேன்.
இப்பொழுது நீ இந்தச் சொற்களைப் படித்து இவற்றின் உட்பொருளை விளக்கினால்,
உனக்கு அரச உடை உடுத்தி, கழுத்தில் பொன் மாலை அணிவித்து, என்
அரசில் மூன்றாம் நிலையில் உன்னை அமர்த்துவேன்" என்றான்.
அப்பொழுது அரசனுக்குத் தானியேல் மறுமொழியாகக் கூறியது: "உம்முடைய
அன்பளிப்புகள் உம்மிடமே இருக்கட்டும்; உம் பரிசுகளை வேறு
யாருக்காவது கொடும். ஆயினும், இந்தச் சொற்களை அரசருக்குப் படித்துக்
காட்டி அவற்றின் உட்பொருளை விளக்கிக் கூறுவேன்.
விண்ணுலக ஆண்டவருக்கு எதிராக உம்மையே உயர்த்தினீர்; அவரது
கோவிலின் கிண்ணங்களைக் கொண்டு வரச் செய்து, நீரும் உம் உயர்குடி
மக்களும், உம்முடைய மனைவியரும், வைப்பாட்டியரும் அவற்றிலிருந்து
திராட்சை மது குடித்தீர்கள்; மேலும் காணவோ, கேட்கவோ, எதையும்
உணரவோ இயலாத வெள்ளி, பொன், வெண்கலம், இரும்பு, மரம், கல்
ஆகியவற்றாலான தெய்வங்களைப் புகழ்ந்தீர்கள். ஆனால் உமது
உயிரையும் உம் வழிகளையும் தம் கைக்குள் வைத்திருக்கும் கடவுளை
நீர் பெருமைப்படுத்தவில்லை. ஆகையால் அவர் இந்தக் கையைத் தம்
திருமுன்னின்று அனுப்பி, இந்த எழுத்துக்களைப் பொறிக்கச்
செய்தார்."
பொறிக்கப்பட்ட சொற்களாவன: "மேனே மேனே, தேகேல், பார்சின்"
இவற்றின் உட்பொருள்: `மேனே: கடவுள் உமது அரசின் நாள்களை எண்ணி
வரையறுத்து அதனை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டார். தேகேல்:
நீர் தராசில் நிறுக்கப்பட்டீர்; எடையில் மிகவும்
குறைந்துள்ளீர். பார்சின்: உமது அரசு பிரிக்கப்பட்டு
மேதியருக்கும் பாரசீகருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
தானி (இ) 1: 39-40. 41-42. 43-44 (பல்லவி: 39b)
=================================================================================
பல்லவி: என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப்
போற்றுங்கள்.
39 கதிரவனே, நிலவே, ஆண்டவரை வாழ்த்துங்கள். 40 விண்மீன்களே,
ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி
41 மழையே, பனியே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்; 42
காற்று வகைகளே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி
43 நெருப்பே, வெப்பமே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 44 நடுக்கும்
குளிரே, கடும் வெயிலே, ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
திவெ 2: 10
அல்லேலூயா, அல்லேலூயா! இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு.
அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன், என்கிறார்
ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள்.
இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 12-19
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "அனைத்தும்
நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத்
துன்புறுத்துவார்கள்; தொழுகைக் கூடங்களுக்குக் கொண்டு
செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின் பொருட்டு
அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள். எனக்குச்
சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.
அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட
வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில்
நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள்
எதிரிகள் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப்
பேசவும் முடியாது.
ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும்
நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக்
கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை
வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே
விழாது.
நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக்
காத்துக்கொள்ளுங்கள்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
தானியேல் 5: 1-6, 13-14, 16-17, 23-28
நீர் தராசில் நிறுத்தப்பட்டீர்; எடையில் மிகவும்
குறைந்துள்ளீர்"
நிகழ்வு
கரிசல்பட்டி என்றொரு சிற்றூர் இருந்தது. அங்கு புகழ்பெற்ற
கோயில் ஒன்று இருந்தது. அக்கோயிலுக்குச் சொந்தமாக கதிரவன் என்றொரு
யானை இருந்தது. அந்த யானையை அவ்வூரில் இருந்த எல்லாருக்கும்
பிடிக்கும். யானையிடம் கொண்ட பிரியத்தால் மக்கள் எல்லாரும் அது
உண்பதற்கு பழங்கள், தேங்காய் உள்ளிட்டவைகளை வழங்குவர்.
யானையும் தன்னுடைய துதிக்கையால் மக்களுக்கு ஆசி வழங்கும்.
இதற்கிடையில் யானைப் பாகன், கதிரவன் என்ற அந்த யானை குளிப்பதற்காக
பக்கத்தில் இருந்த ஆற்றிற்கு அழைத்துச் செல்வதை வழக்கமாகக்
கொண்டிருந்தார். யானை ஆற்றுக்குச் செல்லும் வழியில் சந்திரன்
என்பவன் தையல் கடை நடத்தி வந்தான். அவனும் ஆற்றுக்குக் குளிக்கச்
செல்லும் யானைக்கு அவ்வப்போது பழங்களை வழங்கி வந்தான். ஒரு
நாள் யானைப் பாகன் யானையைக் குளிக்க வைப்பதற்கு ஆற்றுக்கு அழைத்துச்
சென்றார். யானை சந்திரனின் கடை அருகே வந்ததும், வழக்கம்போல்
துதிக்கையை நீட்டியது. சந்திரனுக்கு அன்று ஒரு தப்பான எண்ணம்
தோன்றியது. ஆம், அவன் யானையைச் சீண்டிப் பார்க்க நினைத்தான்.
அதனால், அவன் யானைக்கு பழத்தினைத் தராமல் ஊசியால் குத்தி
விட்டான். ஊசியால் குத்தப்பட்ட யானை வலியால் துடித்தது. இருந்தாலும்
எதனையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவ்விடத்தை விட்டு அகன்று,
ஆற்றுக்குக் குளிக்கச் சென்றது.
தன்னைக் குத்திய சந்திரனுக்குத் தக்க பாடத்தை புகட்ட யானை
நினைத்தது. அதனால் அது ஆற்றில் குளித்துவிட்டு வெளியேறும்போது
வாய் நிறைய சேற்றினை உறிஞ்சுகொண்டது. சந்திரன் கடை அருகே வந்ததும்
யானை தன்னுடைய வாயில் வைத்திருந்த சேற்றினை அவனுடைய கடையில் இருந்த
துணிகளின்மேல் பீய்ச்சி அடித்தது. அது திருவிழா சமயம் என்பதால்,
சந்திரன் தன்னுடைய தையல் கடையில் தைப்பதற்காக ஏராளமான
புதுத்துணிகளை வைத்திருந்தான். யானை பீச்சியடித்த சேறு
புதுத்துணிகளில் பட்டதும் சந்திரன் அதிர்ச்சி அடைந்தான். பின்னர்
தன்னுடைய செய்கைக்காக மிகவும் வருந்தினான்.
நாம் எதை விதைக்கின்றோமா அதையே அறுவடை செய்கின்றோம். தினை
விதைத்தால், தினையும் வினை விதைத்தால், வினையும் அறுவடை
செய்வோம் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது
சிந்தனைக்குரியது. இன்றைய முதல் வாசகத்தில், எருசலேம்
திருக்கோயிலிலிருந்து கவர்ந்து வரப்பட்ட கிண்ணங்களில் திராட்சை
மதுவை ஊற்றிப் பருகிய பெல்சாட்சர் எவ்வாறு அழித்தான் என்பதைக்
குறித்து எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
Top of Form
பெல்சாட்சர் செய்த தவறு
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்
வாசகத்தில், பாபிலோனிய அரசனாகிய நெபுகத்னேசரின் வழிவந்தவனும்
அவனுடைய மகனுமான பெல்சாட்சர் தன்னுடைய நாட்டிலிருந்த உயர்குடி
மக்களுக்கு விருந்துகொடுக்கின்றபோது, தானும் தன்னுடைய மனைவியும்
இன்ன பிறரும் திராட்சை மதுவைப் பருகுவதற்காக தன்னுடைய தந்தை
நெபுகத்னேசர் எருசலேம் திருக்கோயிலிருந்து கவர்ந்து வந்த கிண்ணங்களைப்
பயன்படுத்தினான். மட்டுமல்லாமல், பொன்,வெள்ளி போன்ற பொருள்களால்
செய்யப்பட்ட தெய்வங்களைப் புகழத் தொடங்கினான். இவ்வாறு அவன்
திருப்பண்டங்களைத் தீட்டுப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பிற
தெய்வங்களையும் வழிபட்டதால், அரண்மனை உட்சுவரில் கையொன்று எழுதத்
தொடங்குகின்றது. அதைக் கண்டு திகிலிற்று, அதன் அர்த்தத்தைத்
தெரிந்துகொள்ள அவன் தானியேலை அழைக்கின்றான்.
பெல்சாட்சருக்கு நேர்ந்த அழிவு
திருவிவிலியத்தில் கை என்ற சொல் ஆண்டவரோடு தொடர்பு படுத்திப்
பேசப்படுகின்றது ( விப 8: 19; திபா 115:7; லூக் 11:20). அரண்மனையின்
உட்சுவரில் தோன்றிய கை எழுதத் தொடங்கியபோது பெல்சாட்சர்,
தானியேலை அழைத்து அதற்கான விளக்கத்தைக் கேட்கின்றான்.
தானியேலோ, கடவுள் உம்முடைய நாள்களை எண்ணி... முடிவுக்குக்
கொண்டுவந்துவிட்டார்; நீர் தராசில் நிறுத்தப்பட்டீர்; உமது அரசு
பிரிக்கப்பட்டு மேதியருக்கும் பாரசீகருக்கும் கொடுக்கப்படப்
போகிறது என்று கூறுகின்றார்.
பெல்சாட்சர், ஆண்டவருடைய உறைவிடமாம் எருசலேம்
திருக்கோயிலிருந்து கவர்ந்து வரப்பட்ட கிண்ணங்களைத் தீட்டுப்படுத்தியது
ஒரு தவறு என்றால், அவன் ஆண்டவர்மீது நம்பிக்கை வைக்காமல், தன்மீது
நம்பிக்கை வைத்துச் செயல்பட்டது இன்னொரு தவறு என்றுதான் சொல்லவேண்டும்.
இதனாலேயே அவனுடைய அரசு மேதியருக்கும் பாரசீகருக்கும்
பிரித்துக் கொடுக்கப்பட்டது.
பெல்சாட்சரைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கின்ற நாம், ஆண்டவர்மீது
நம்பிக்கை வைத்து, அவருக்கு உகந்த செயல்களைச் செயல்களைச்
செய்கின்றோமா என்று சிந்தித்துப் பார்ப்போம்
சிந்தனை
ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்ப கடவுள் கைம்மாறு
செய்வார் (உரோ 2:6) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் கடவுள்மீது
நம்பிக்கை வைக்காமல், அவருக்கு விருப்பில்லாத செயல்களைச்
செய்யாமல், கடவுள்மீது நம்பிக்கை வைத்து, அவருக்கு விருப்பமான
செயல்களைச் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
லூக்கா 21: 12-19
எனக்குச் சான்று பகர இவை உங்கட்கு வாய்ப்பளிக்கும்"
நிகழ்வு
ஸ்பெயின் நாட்டின் தெற்குப்பகுதியில் மறைப்பணியைச் செய்துவந்தார்
குருவானவர் ஒருவர். அவர் ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை
யாருக்கும் அஞ்சாமல் அவ்வளவு துணிச்சலாக அறிவித்து வந்தார்.
இதனால் அரசாங்கம் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது;
தூக்குதண்டனைக்கான நாளையும் குறித்தது.
அவர் இருந்த சிறைச்சாலையில் கொலைகாரர்கள், திருடர்கள், கம்யூனிஸ்டுகள்
என்று பலர் இருந்தனர். அவர்களெல்லாம் கொடிய அரசாங்கத்திற்கு எதிராக
முழக்கமிடுவதும் சிறைச்சாலைச் சுவர்களில் அரசாங்க அதிகாரிகளைக்
குறித்துத் தவறாக எழுதுவதுமாக இருந்தார்கள். இவற்றையெல்லாம்
பார்த்துக்கொண்டிருந்த அந்தக் குருவானவர், அங்குள்ளவர்கட்கு ஆண்டவரின்
நற்செய்தியை எடுத்துரைப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்தார். அதனால்
அவர் சிறைச்சாலைச் சுவரில். ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும்
கொல்பவர்கட்கு அஞ்சவேண்டாம்; ஆன்மாவையும் உடலையும் நரகத்தில்
அழிக்க வல்லவர்க்கே அஞ்சுங்கள்" (மத் 10:28) என்ற இறைவார்த்தையையும்
அதற்குக் கீழே, யோவான் 3:16 ல் வருகின்ற இறைவார்த்தையையும் எழுதி
வைத்தார்.
தொடக்கத்தில் இவ்வார்த்தைகளை வித்தியாசப் பார்த்த சிறைவாசிகள்,
நாள்கள் செல்லச் செல்ல அவற்றைக் கருத்தூன்றிப் படிக்கவும் அதற்காக
விளக்கத்தைக் குருவானவரிடம் கேட்கவும் தொடங்கினார்கள். அவரும்
அவர்கட்கு அதற்கான விளக்கத்தை எடுத்துச் சொன்னார். இதனால்
சிறையில் இருந்த பலர், ஆண்டவர் இயேசு எங்களை இந்தளவுக்கு அன்புசெய்கின்றாரா...?
அவர் எல்லாம் வல்லவரா...? என்று அவர்மீது நம்பிக்கை கொள்ளத்
தொடங்கினார்கள்.
ஒருநாள் அந்தச் சிறையில் இருந்த குற்றவாளி ஒருவர் குருவானவரைப்
பார்க்க வந்தார். அவர் குருவானவரிடம், இன்று எனக்குத்
தூக்குத்தண்டனை நிறைவேற்றப் போகிறார்கள். ஆனாலும், நான் அதை மகிழ்ச்சியோடு
ஏற்றுக்கொள்ளப்போகிறேன். நீங்கள் ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை
அறிவிப்பதற்கு முன்னம் நான் சாவைக் குறித்து மிகவும் பயந்துகொண்டிருந்தேன்.
எப்பொழுது நீங்கள் ஆண்டவரின் அன்பைக் குறித்தும் அவர் அளிக்கும்
நிலைவாழ்வைக் குறித்தும் எடுத்துச் சொன்னீர்களோ, அப்பொழுதே எனக்குச்
சாவுபயம் போய்விட்டது. இப்பொழுது நான் என் அன்புத்தந்தையை சந்திக்கப்போகிறேன்
என்ற உணர்வோடு செல்கின்றேன். பின்னொரு நாள் நாம் இருவரும் விண்ணகத்தில்
சிந்திப்போம்" என்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றுச்
சென்றார்.
இதைக்கேட்டு குருவானவர்க்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை. இதற்குப்
பின்பு அவர் நாம் அறிவித்த நற்செய்தி வீண்போகவில்லை என்று
நிம்மதிப் பெருமூச்சுவிட்டார்.
இயேசுவின் சீடர்களாகிய நமக்கு வரும் எதிர்ப்புகள், சாவல்கள்,
இக்கட்டான சூழ்நிலைகள்கூட, இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதற்கான
வாய்ப்புகள்; அவற்றைக் கண்டு நாம் அஞ்சி நடுங்காமல், ஆண்டவரைப்
பற்றிய நற்செய்தியை எடுத்துரைக்கவேண்டும் என்ற உண்மையை உணர்த்தும்
இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய நற்செய்தி வாசகமும்
நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து
இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தீமையிலும் நன்மை
நற்செய்தியில் இயேசு, எருசலேம் திருக்கோயிலின் அழிவையும் உலகில்
ஏற்படும் அழிவுகளையும் குறித்துப் பேசிவிட்டு, நிறைவாக தன்னுடைய
சீடர்கட்கு எப்படியெல்லாம் எதிர்ப்புகளும் சவால்களும் வரும் என்று
பேசுகின்றார். இது குறித்து அவர் பேசுகின்றபோது, ..... எனக்குச்
சான்றுபகர வாய்ப்பளிக்கும்" என்று கூறுகின்றார். ஆம், அந்நாள்களில்
இயேசுவின் சீடர்களாக இருப்போர் ஆட்சியாளர்களிடமும் அதிகாரிகளிடமும்
இழுத்துச் சொல்லப்படலாம். அதற்காக யாரும் அஞ்சத் தேவையில்லை;
அவையெல்லாம் இயேசுவைப் பற்றி மக்கட்கு அறிவிப்பதற்கான சந்தர்ப்பங்கள்.
இதை நாம் ஒவ்வொருவரும் நம்முடைய மனதில் பதிய வைப்பது நல்லது.
எனவே, தீமையிலும் ஒரு நன்மை என்பதுபோல், நமக்கு வரும் எதிர்ப்புகள்,
சவால்கள் ஆகியவற்றை வெறும் எதிர்ப்புகளாகப் பார்க்காமல், இயேசுவைப்
பற்றிய நற்செய்தியை அறிவிப்பதற்கான தருணங்கள் என்பதை உணர்ந்து,
இயேசுவைப் பற்றி மக்கட்கு அறிவிப்போம்.
இன்னலில் இறைவனின் பராமரிப்பு
இறுதி நாள்களில், தன்னைப் பின்தொடர்ந்து நடப்பவர்கள் சந்திக்கப்போகிற
துன்பங்களையும் சவால்களையும் குறித்துப் பேசிய இயேசு, அத்தகைய
தருணங்களில் இறைவனின் பராமரிப்பு அவர்கட்கு நிச்சயம் இருக்கும்
என்பதை அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. உங்கட்கு நாவன்மையையும்
ஞானத்தையும் கொடுப்பேன் , உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே
விழாது என்ற இயேசு கூறும் வார்த்தைகள், இறைவன் தன்னுடைய அடியார்களை,
தன்னுடைய மக்களை எப்படியெல்லாம் பாராமரிப்பார் என்ற உண்மையை
உரக்கச் சொல்வதாக இருக்கின்றன.
ஆகையால், நாம் இறைவனின் துணையையும் பராமரிப்பையும் உணர்ந்தவர்களாய்,
எதிர்வரும் எதிர்ப்புகளைக்கூட வாய்ப்புகளாகப் பயன்படுத்தி இயேசுவுக்குச்
சான்று பகர்ந்து வாழ்வோம்.
சிந்தனை
அஞ்சாதே: பேசிக்கொண்டே இரு: நிறுத்தாதே (திப 18:9) என்று ஆண்டவர்
புனித பவுலிடம் கூறுவார். புனித பவுலிடம் கூறிய அதே வார்த்தைகளைத்தான்
இறைவன் இன்று நம் ஒவ்வொருவர்க்கும் கூறுகின்றார் என்பதை உணர்ந்தவர்களாய்,
ஆண்டவரின் நற்செய்தியை எடுத்துரைத்து, அவர்க்குச் சான்று பகர்வோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
இன்னலுக்கு மத்தியில் இறை உதவி
துரதிஸ்டவசமாக துரதிஸ்டம் தனியாய் வருவதில்லை. அது
கூட்டாகத்தான் வரும். அத்தகைய வேளையில் பலர் குடி, போதைக்கு
அடிமையாகி விடுகிறார்கள். இன்னும் ஒருசிலர் தற்கொலை
செய்துகொண்டு தங்களுடைய உயிரையே மாயத்துக்கொள்கிறார்கள்.
அப்படித்தான் மேலைநாட்டைச் சார்ந்த பக்ஸ்மினிஸ்டர் புல்லர்
என்ற 32 வயதே ஆன மனிதர் ஒருவர் தன்னுடைய தொழில் நிறுவனம்
திவாலாகிவிட்டதை நினைத்து மனம்வருந்தி ஒரு டிசம்பர் மாத
இரவில், மிக்சிசன் ஏரியிலே விழுந்து தற்கொலை செய்துகொள்ளத்
துணிந்தார். அப்போது வானத்தின் நட்சத்திரங்கள் ஏரியில்
விழுந்து பிரதிபலிக்க யாரோ ஒருவர் பேசுவது போன்று உணர்ந்தார்.
தன்னோடு பேசும் அந்தச் சத்தத்தைக் கூர்ந்து கவனித்தார்.
உன்னுடைய உயிரை மாய்த்துகொள்ள உனக்கு எந்த அதிகாரமும் இல்லை;
நீ உன்னுடையவன் அல்ல; என்னுடையவன்" என்று சொல்லி அந்தக் குரல்
அடங்கியது.
அதைக் கேட்டதும் புல்லர் கடவுள்தான் என்னோடு பேசி, என்னுடைய
தற்கொலை முடிவை மாற்றியிருக்கிறார்; இனிமேல் நான் ஒருபோதும்
தற்கொலை செய்யத் துணியமாட்டேன் என்று உறுதிபூண்டு, அதன்பிறகு
சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்துகாட்டினார்.
அவர் தன்னுடைய என்பதாவது வயதில் இறக்கும்போது 175 புதிய
கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்திருந்தார். ஒரு கவிஞராகவும்,
பொறியாளராகவும், நாடுபோற்றும் அறிஞராகவும் அறியப்பட்டார்.
கடவுள் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார் என்பதைத்தான் புல்லர்
என்ற இந்த வெளிநாட்டவரின் வாழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு இறுதி நாட்களில்
தன்னுடைய சீடர்கள் அனுபவிக்க இருக்கும் துன்பத்தையும், அத்தகைய
வேளைதனில் கடவுளின் பிரசன்னம் எப்படி இருக்கும் என்பதையும்
நமக்கு எடுத்துக்கூறுகிறார். நீங்கள் ஆட்சியாளர்கள்,
அதிகாரிகள் முன்பாக இழுத்துச் செல்லப்படுவீர்கள்; சிறையில்
அடைக்கப்படுவீர்கள்; அப்போது என்ன பேசுவது? எப்படிப் பேசுவது?
என்பது பற்றிக் கவலைப்படவேண்டாம்; ஏனெனில் அந்நேரத்தில் என்ன
பேசவேண்டும் என்று தூய ஆவியார் உங்களுக்கு வெளிப்படுத்துவார்"
என்கிறார். தொடர்ந்து இயேசு சொல்கிறார் என் பெயரின் பொருட்டு
உங்களை எல்லாரும் வெறுப்பர், ஆனாலும் உங்கள் தலைமுடி எல்லாம்
எண்ணப்பட்டிருக்கிறது; இறுதிவரை மனவுறுதியோடு இருந்து உங்கள்
உயிரைக் காத்துக்கொள்ளுங்கள்" என்கிறார்.
ஆக, எத்தகைய சோதனைகள், துன்பங்கள் வந்தாலும் இறைவன் நம்மோடு
இருப்பதால் நாம் எதைக் குறித்தும் கவலைப்படத் தேவையில்லை
என்பதுதான் இறைவன் நமக்கு உணர்த்தும் செய்தியாக இருக்கிறது.
உரோமையாருக்கு எழுதிய திருமடல் 8:35 பவுலடியார் கூறுவார்,
கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக்கூடியது எது?
வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா?
சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்? என்று. ஆம் இயேசுவின்
அன்பை உணர்ந்த ஒருவர் எத்தகைய இடரைக் குறித்தும் கலங்கத்
தேவையில்லை.
தூய அகுஸ்தினார் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார்,
வேண்டுபவர்களுக்கு உதவி வழங்க இறைவன் எப்போதும் ஆயத்தமாக
இருக்கிறான்" என்று. இது உண்மை. நமக்கு உதவி செய்ய ஓடிவரும்
இறைவனின் துணையை நம்முடைய வாழ்வில் நாம் உணர்ந்திருக்கிறோமா?
என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
பல நேரங்களில் திருமுழுக்குப் பெற்று, நற்செய்தி அறிவிக்க
அழைக்கப்பட்டிருக்கும் நாம் ஒவ்வொருவரும் அதனை வசதியாக
மறந்துவிடுகின்றோம். அத்தோடு இறைவன் நம்மைக் கைவிட்டுவிட்டார்
என்று கலங்கித் தவிக்கின்றோம். இது தேவையற்ற காரியம். இறைவன்
நம்மோடு எப்போதும் இருக்கிறார் என்பதுதான் விவிலியம் காட்டும்
உண்மை. ஆதலால் வாழ்வில் வரும் துன்பங்களைக் கண்டு கலங்காமல்,
துணிவோடு இயேசுவுக்கு சான்று பகர்வோம். இறையருள் நிறைவாய்
பெறுவோம். - - Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
|
|