Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     26 நவம்பர் 2019  
                                    பொதுக்காலம் 34ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 விண்ணகக் கடவுள் ஓர் அரசை நிறுவுவார்; அது என்றுமே அழியாது.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 2: 31-45


அந்நாள்களில் தானியேல் அரசனுக்குச் சொன்ன மறுமொழி: "அரசரே! நீர் பெரிய சிலை ஒன்றைக் கண்டீர். உம் கண் எதிரே நின்ற அம்மாபெரும் சிலை பளபளக்கும் ஒளிமிக்கதாயும் அச்சுறுத்தும் தோற்றமுடையதாயும் இருந்தது. அச்சிலையின் தலை பசும்பொன்னால் ஆனது; அதன் மார்பும் புயங்களும் வெள்ளியால் ஆனவை; வயிறும் தொடைகளும் வெண்கலத்தால் ஆனவை.

அதன் கால்கள் இரும்பினால் ஆனவை; அதன் காலடிகள் ஒரு பகுதி இரும்பினாலும் மறு பகுதி களிமண்ணாலும் ஆனவை. நீர் அச்சிலையைப் பார்த்துக் கொண்டிருந்தபொழுது, மனிதக் கை படாத கல் ஒன்று பெயர்ந்து உருண்டு வந்தது. அந்தக் கல் இரும்பினாலும் களிமண்ணாலுமான அதன் காலடிகளில் வந்து மோதி அவற்றை நொறுக்கியது.

அப்பொழுது இரும்பு, களிமண், வெண்கலம், வெள்ளி, பொன் ஆகியவை யாவும் நொறுங்கி, கோடை காலத்தில் கதிரடிக்கும் களத்துப் பதரைப் போல் ஆயின. அவற்றின் அடையாளம் இராதபடி காற்று அவற்றை அடித்துக் கொண்டு போய்விட்டது; ஆனால் சிலையை மோதிய அந்தக் கல் பெரிய மலை ஆகி உலகம் முழுவதையும் நிரப்பிற்று.

அரசரே! இதுவே நீர் கண்ட கனவு; அதன் உட்பொருளையும் உமக்கு இப்பொழுது விளக்கிக் கூறுவோம். அரசரே! நீர் அரசர்க்கரசராய் விளங்குகின்றீர். விண்ணகக் கடவுள் உமக்கு அரசுரிமை, ஆற்றல், வலிமை, மாட்சி ஆகியவற்றைத் தந்துள்ளார். உலகெங்கும் உள்ள மனிதர்களையும், வயல்வெளி விலங்குகளையும், வானத்துப் பறவைகளையும் உம் பொறுப்பில் அவர் ஒப்படைத்து, அவற்றையெல்லாம் நீர் ஒருவரே ஆளும்படி செய்துள்ளார்.

எனவே, பொன்னாலாகிய சிலையின் தலை உம்மையே குறிக்கின்றது. உமக்குப்பின் உமது அரசை விட ஆற்றல் குறைந்த வேறோர் அரசு தோன்றும்; அடுத்து வெண்கலம் போன்ற மூன்றாம் அரசு எழும்பும்; அது உலகெல்லாம் ஆளும். பின்னர், அனைத்தையும் நொறுக்கும் இரும்பைப் போல் வலிமை வாய்ந்த நான்காம் அரசு தோன்றும்; அந்த அரசும் இரும்பு நொறுக்குவது போல் அனைத்தையும் தகர்த்துத் தவிடுபொடியாக்கும். மேலும், நீர் அச்சிலையின் அடிகளையும் கால் விரல்களையும், ஒரு பகுதி குயவனின் களிமண்ணாகவும், மறு பகுதி இரும்பாகவும் கண்டதற்கிணங்க, அந்த அரசு பிளவுபட்ட அரசாய் இருக்கும்.

ஆனால், சேற்றுக் களிமண்ணோடு இரும்பு கலந்திருக்க நீர் கண்டதற்கிணங்க, இரும்பின் உறுதியும் ஓரளவு காணப்படும். அடிகளின் விரல்கள் ஒரு பகுதி இரும்பும் மறு பகுதி களிமண்ணுமாய் இருந்தது போல் அந்த அரசும் ஓரளவு வலிமையுள்ளதாயும் ஓரளவு வலிமையற்றதாயும் இருக்கும். இரும்பு களிமண்ணோடு கலந்திருப்பதாக நீர் கண்டதற்கிணங்க, அவர்களும் தங்களுக்குள் திருமணத்தின் மூலம் உறவு கொள்வார்கள்;

ஆனால் இரும்பு களிமண்ணோடு கலக்காதது போல், அவர்கள் ஒருவரோடு ஒருவர் ஒன்றித்திருக்க மாட்டார்கள். அந்த அரசர்களின் காலத்தில் விண்ணகக் கடவுள் ஓர் அரசை நிறுவுவார்; அது என்றுமே அழியாது; அதன் ஆட்சியுரிமை வேறெந்த மக்களினத்திற்கும் தரப்படாது. அது மற்ற அரசுகளை எல்லாம் நொறுக்கி அவற்றிற்கு முடிவுகட்டும்; அதுவோ என்றென்றும் நிலைத்திருக்கும். மனிதக் கை படாது பெயர்ந்து மலையிலிருந்து உருண்டு வந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கியதாக நீர் கண்ட அந்தக் கல் இந்த அரசையே குறிக்கிறது. இவ்வாறு எதிர்காலத்தில் நிகழப்போவதை மாபெரும் கடவுள் அரசருக்குத் தெரிவித்திருக்கிறார். கனவும் உண்மையானது; அதன் உட்பொருள் நிறைவேறுவதும் உறுதி.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் -தானி(இ) 1: 34. 35-36. 37-38 (பல்லவி: 34b)
=================================================================================
பல்லவி: என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.

34 ஆண்டவரின் அனைத்துச் செயல்களே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி

35 வானங்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள். 36 ஆண்டவரின் தூதர்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி

37 வானத்திற்கு மேல் உள்ள நீர்த்திரளே, ஆண்டவரை வாழ்த்து; 38 ஆண்டவரின் ஆற்றல்களே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திவெ 2: 10

அல்லேலூயா, அல்லேலூயா! இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
கோவிலின் கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இடிக்கப்படும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 5-11

அக்காலத்தில் கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப் பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.

இயேசு, "இவற்றை யெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்" என்றார்.

அவர்கள் இயேசுவிடம், "போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?" என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், "நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, `நானே அவர்' என்றும், `காலம் நெருங்கி வந்துவிட்டது' என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள். ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும்.

ஆனால் உடனே முடிவு வராது" என்றார். மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: "நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளைநோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
தானியேல் 2: 31-45

ஆண்டவர் பெரியவர்; அவருடைய ஆட்சி என்றும் நிலைத்திருக்கும்

நிகழ்வு

ஐரோப்பாக் கண்டத்திலேயே அதிக ஆண்டுகள் ஆட்சி செலுத்திய பெருமைக்குச் சொந்தக்காரர்; "பெரிய லூயிஸ்", "சூரிய அரசர்" என்று பல்வேறு சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுபவர் பதினான்காம் லூயிஸ் (1638-1715) என்ற மன்னர். இவர் பிரான்ஸ் நாட்டை எழுபத்து இரண்டு ஆண்டுகள், நூறு நாள்கள் ஆட்சி செய்தார்.


இவர் மூப்படைந்து இறந்துபோனார். இவருடைய இறுதிப்பயணத் திருப்பலியானது பாரிசில் உள்ள ஒரு திருகோயிலில் நடைபெற்றது. இறுதிப்பயணத் திருப்பலியை நிறைவேற்றிய குருவானவர், இறந்துபோன மன்னரின் உடலானது மலர்களாலும் அரச உடைகளாலும் அலங்கரிக்கப்பட்டு சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்துவிட்டு, மக்களைப் பார்த்துச் சொன்னார்:


"அன்பார்ந்த மக்களே! ஒன்றை மட்டும் உங்களுடைய மனதில் வைத்துக்கொள்ளுங்கள். பிரான்ஸ் நாட்டைச் சிறப்பாகவும் மாண்போடும் ஆட்சி செய்த மன்னராகிய இவர், இன்றைக்கு உடல் விரைத்துப்போய், சவப்பெட்டியில் அடங்கிக் கிடக்கின்றார். இதைப் பார்க்கின்றபோது, "மனிதர்கள் சாதாரணமானவர்கள்; அவர்களுடைய ஆட்சி ஒரு காலத்தில் முடிவுக்கு வரும்; ஆனால், ஆண்டவர் அப்படியல்ல, அவர் எல்லாரையும்விடப் பெரியவர்; அவருடைய ஆட்சிக்கு முடிவு என்பதே கிடையாது" என்ற உண்மை புலப்படுகின்றது. இதை உணர்ந்து வாழுங்கள்."


குருவானவர் இவ்வாறு சொன்னதைக் கேட்டு மக்கள் யாவரும் சரியென்பது போல் தலையாட்டினார்கள்.


ஆண்டவர் மிகப்பெரியவர்; அவருடைய ஆட்சிக்கு முடிவு என்பதே கிடையாது என்ற உண்மையை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய முதல் வாசகமும் நமக்கு இதே செய்த செய்தியைத்தான் எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.


நெபுகத்னேசருக்குத் தோன்றிய கனவு


இறைவாக்கினர் தானியேல் நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், பாபிலோனிய அரசன் நெபுகத்னேசருக்குக் கனவு ஒன்று வருகின்றது. அந்தக் கனவில் ஒரு பெரிய சிலை தோன்றுகின்றது; அந்தச் சிலையின் தலைப்பகுதி பொன்னாலும் மார்புக் பகுதி வெள்ளியாலும் வயிறு மற்றும் தொடைப்பகுதி வெண்கலத்தாலும் கால் பகுதி இரும்பாலும் காலடிகள் ஒரு பகுதியாலும் இன்னொரு பகுதி கணிமன்னாலும் ஆனதாக இருக்கின்றது. இப்படிப்பட்ட ஒரு சிலையின்மீது மனித கையே படாத ஒரு கல் மோதி, அதைச் சுக்கு நூறாக உடைத்துப் போடுகின்றது. இப்படிப்பட்ட கனவிற்கு விளக்கம் அளிக்குமாறு நெபுகத்னேசர் அரசன், தன்னுடைய அரசபையில் பணியாற்றி வந்த தானியேலை கேட்கின்றான். தானியேல் அந்தக் கனவிற்கு என்ன விளக்கம் கொடுத்தார்; அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய செய்தி என்ன என்பதைத் தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.


கனவிற்குத் தானியேல் கொடுத்த விளக்கம்


நெபுகத்னேசரின் கனவில் தோன்றிய பொன்னாலான தலையானது அவனைக் குறிப்பாக இருக்கின்றது. ஏனென்றால் அவனுக்குத்தான் ஆண்டவராகிய கடவுள் அரசுரிமை, ஆற்றல், வலிமை, மாட்சி ஆகியவற்றைத் தந்தார். அவனும் அவற்றைக் கொண்டு, கிமு 636-539 இஸ்ரயேல் மக்களை ஆட்சி செய்தான். அதற்கடுத்து வருகின்ற வெள்ளியால் ஆன மார்பு என்பது பாரசீக அரசர்களையும் (கிமு 539-330) அதற்கடுத்து வருகின்ற வெண்கலத்தால் ஆன வயிறு மற்றும் தொடைப் பகுதி என்பது கிரேக்க அரசர்களையும் (கிமு 330-63) இரும்பினால் செய்யப்பட்ட கால்பகுதியும் களிமண்ணால் ஆன காலடிகளும் உரோமை அரசர்களைக் (கிமு 63- கிபி 475) குறிப்பாக இருக்கின்றது. உரோமை அரசாங்கம் பெரியதாக, வலிமை வாய்ந்ததாக இருந்தாலும், அந்த அரசாங்கத்தில் ஏற்பட்ட ஒருசில குளறுபடிகளால் அது ஒன்றுமில்லாமல் போனது.


இப்படிப்பட்ட சிலையை மனித கைபடாத கல் உடைக்கின்றது. அந்தக் கல் வேறு யாருமல்ல முடிவில்லா ஆட்சி செலுத்தும் ஆண்டவர்தான் என்று தானியேல், நெபுகத்னேசருக்கு விளக்கம் அளிக்கின்றார்.


ஆண்டவர் பெரியவர்; அவருடைய ஆட்சி என்றும் நிலைத்திருக்கும்


திருவிவிலியத்தில் கல்லானது ஆண்டவரோடு தொடர்பு படுத்திப் பேசப்படுகின்றது (திபா 118: 22; எசா 8:14) இன்றைய முதல் வாசகத்தில் வருகின்ற கல்லானது மிகப்பெரிய சிலையை உடைத்தும், அது உடையாமல், பெரியதாய் உயர்வது என்பது ஆண்டவரே பெரியவர்; அவருடைய ஆட்சிக்கு முடிவு என்பதே கிடையாது என்கின்ற உண்மையை மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது.


கடவுள் மிகப்பெரியவர்; அவருடைய ஆட்சிக்கு முடிவே கிடையாது என்றால், நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான்; அதுதான் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து (யோவா 3: 1-18) அவருடைய கருவிகளாக இருந்து செயல்படுத்து ஆகும். ஆகையால், நாம் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் பொறுப்புகளை, அவர்மீது நம்பிக்கைகொண்டு, நாம் அவருடைய அவருடைய கருவிகள் என்பதை உணர்ந்து, அவருடைய திருப்பெயர் விளங்கச் செய்வோம்.

சிந்தனை

"கெருபுகள்மேல் வீற்றிருக்கும் இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவரே! இவ்வுலகத்து அரசர்களுக்கெல்லாம் நீர் ஒருவரே கடவுள்" (2 அர 19: 15) என்பார் எசேக்கியா அரசர். ஆகையால், அரசர்களுக்கெல்லாம் அரசராக இருக்கும் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
லூக்கா 21: 5-11

வேறெதன்மீதும் அல்ல, இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம்


நிகழ்வு


மிகச்சிறந்த ஓவியரான லியோனார்டோ டாவின்சி "இயேசுவின் இறுதி இராவுணவு" ஓவியத்தை வரையத் தொடங்கினார். மூன்றாண்டுகள் எடுத்துக்கொண்டு அந்த ஓவியத்தை வரைந்து முடித்த அவர், அந்த ஓவியம் எப்படி இருக்கின்றது என்று தன்னுடைய நெருங்கிய நண்பரிடம் கருத்துக் கேட்டார். வழக்கமாக ஒவ்வோர் ஓவியத்தை வரைந்து முடித்தபின்னரும் அந்த ஓவியம் எப்படி வந்திருக்கின்றது என்று தன்னுடைய நெருங்கிய நண்பரிடம் கருத்துக் கேட்பது லியோனார்டோ டாவின்சியின் வழக்கம். அதுபோன்றுதான் இயேசுவின் இறுதி இராவுணவு ஓவியத்தை வரைந்து முடித்த பின்னரும் கேட்டார்.


லியோனார்டோ டாவின்சியின் நண்பர், அவர் வரைந்திருந்த ஓவியத்தை மிகவும் கவனமாகப் பார்த்து வந்தார். அப்படிப் பார்த்து வருகையில், இயேசுவின் கையில் இருந்த இரசக் கிண்ணம் அவருடைய கவனத்தை அதிகமாக ஈர்த்தது. உடனே அவர் லியோனார்டோ டாவின்சியிடம், "நண்பா! நீ வரைந்திருக்கின்ற இந்த ஓவியம் மிகவும் அற்புதமாக இருக்கின்றது. அதிலும் குறிப்பிலும் இயேசுவின் கையில் இருக்கும் இரசக்கிண்ணம் மிகவும் தத்தூரூபமாக இருக்கின்றது" என்றார். அவர் சொன்னதை "அப்படியா?" என்று கேட்டுக்கொண்ட லியோனார்டோ டாவின்சி, அருகில் கிடந்த தூரிகையை எடுத்து, இயேசுவின் கையில் இருந்த இரசக்கிண்ணத்தை மங்கலாக்கினார்.


இதைப் பார்த்துவிட்டு லியோனார்டோ டாவின்சிவின் நண்பர் அவரிடம், "என்ன நண்பா! இயேசுவின் கையிலிருந்த இரசக்கிண்ணம் நன்றாகத்தானே இருந்தது. அதையேன் மங்கலாக்கினாய்?" என்று கேட்டதற்கு லியோனார்டோ டாவின்சி அவரிடம், "இந்த ஓவியத்தைப் பார்க்கின்ற எவருடைய கவனமும் இயேசுவின்மீது இருக்கவேண்டுமே ஒழிய, வேறு எதன்மீதும் இருக்கக்கூடாது, அதனால்தான் நான் அப்படிச் செய்தேன்" என்றார்.


ஆம், நம்முடைய கவனம் நம் ஆண்டவர் இயேசுவின்மீது மட்டுமே இருக்கவேண்டுமே ஒழிய, வேறு எதன்மீதும் இருக்கக்கூடாது என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.


உலகப் பொருள்களின் நிலையாமை


நற்செய்தியில், ஒருசிலர் எருசலேம் திருக்கோயிலின் அழகை வியந்து பேசிக்கொண்டிருக்கும்போது, இயேசு அவர்களிடம், "ஒருநாள் வரும். அப்பொழுது இது கற்கள் ஒன்றின்மீது ஒன்று இராதபடி இடிக்கப்படும்" என்கின்றார். எருசலேம் திருக்கோயில், அந்தக் காலத்தில் ஓர் உலக அதிசயம் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் நாற்பத்து ஆறு ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்பட்டு (யோவா 2:20) கட்டப்பட்ட எருசலம் திருகோயில் காண்போரை வியக்கச் செய்தது. அதனால் மக்களுடைய கவனமெல்லாம் அதிலேயேதான் இருந்தது. இப்படிப்பட்ட சூழலில்தான் இயேசு, எருசலம் திருக்கோயிலின் அழகைக் கண்டு வியந்து பேசிக்கொண்டிருந்தவர்களிடம், அது அழிக்கப்படும் என்று கூறுகின்றார்.


இயேசு இவ்வாறு கூறுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, உலகப் பொருள்கள், செல்வங்கள், அதிசயங்கள் எல்லாம் ஒருநாள் அழிந்துவிடும்; அது நிலைத்து நிற்காது என்பதால்தான். இயேசு சொன்னதுபோன்றே எருசலேம் திருக்கோயில் கி.பி. 70 ஆம் ஆண்டு உரோமையர்களால் அழிக்கப்பட்டது. ஆகையால், உலக செல்வங்களின், பொருள்களின் நிலையாமையை நம்முடைய வாழ்வில் உணர்வது நல்லது. இயேசு எருசலேம் திருக்கோயிலின் அழிவைக் குறித்துச் சொல்வதற்கு இரண்டாவது காரணம், அந்தக் கோயிலைவிட பெரியவர் வந்துவிட்டார் என்பதை மக்கட்கு உணர்த்துவதற்குத்தான். இயேசு எல்லாரையும் விட, எல்லாவற்றையும்விடப் பெரியவர், மேலானவர் (பிலி 2:9), நிலையானவர். இது யாரும் மறுக்கமுடியாத உண்மை. இந்த உண்மையை அன்று யூதர்களும் இன்று நாமும் உணர்ந்துகொள்ளாமல் மக்கள் வாழ்ந்துகொண்டிருப்பதுதான் மிகுந்த வேதனைக்குரிய செய்தியாக இருக்கின்றது


இயேசுவின் மீது கவனம்


இயேசு, எருசலேம் திருக்கோயிலின் நிலையாமையைக் குறித்துப் பேசிய அதேவேளையில், நிலையான ஒருவர்மீது கவனத்தையும் நம்பிக்கையையும் வைத்து வாழவேண்டும் என்ற செய்தியையும் தருகின்றார். இன்றைய நற்செய்தியின் முந்தைய பகுதியில், இயேசு ஏழைக் கைம்பெண்ணைப் பாராட்டுவார். அதற்குக் காரணம், அவர் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்துச் செயல்படுவார். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், அந்த ஏழைக் கைம்பெண், தன்னுடைய பிழைப்புக்காக வைத்திருந்த இரண்டு செப்புக்காசுகளைக் காணிக்கையாகச் செலுத்தியதன்மூலம், "இனிமேல் என்னுடைய வாழ்க்கையை ஆண்டவர் பார்த்துக்கொள்வார்" என்ற நம்பிக்கையோடு இருந்தார். இந்த ஏழைக் கைம்பென்னைப் போன்று நாம் ஒவ்வொருவரும் உலகப்பொருள் மற்றும் பணத்தில் அல்ல, ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழவேண்டும்; அவர்மீது நம்முடைய கவனத்தைப் பதிய வைக்கவேண்டும் என்பதைத்தான இயேசு தெளிவாக எடுத்துக்கூறுகின்றார்.



ஆகையால் நாம் இயேசு நம்மிடம் எதிர்பார்ப்பது போல், இறைவன்மீது நம்முடைய கவனத்தைப் பதிய வைத்து, அவர்மீது நம்பிக்கை வைத்து வாழ முயற்சி செய்வோம்.


சிந்தனை


"இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்" (1 யோவா 5:5) என்பார் புனித யோவான். ஆகையால், நம்முடைய வாழ்வில் எல்லா நலன்கட்கும் ஊற்றாக இருக்கும் இயேசுவின்மீது கண்களைப் பதிய வைத்து, அவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
துன்பங்களின் வழி வாழ்வு

இரண்டாம் உலகப்போரின்போது குண்டுவீசப்பட்டு ஹீரோசிமா, நாகசாகி என்ற இரண்டு நகரங்கள் அழிந்துபோன தருணம்.

அப்போது பத்திரிக்கையாளர்கள் சிலர் அணுகுண்டைத் தயாரித்த ஆல்பர்ட் நோபிலிடம், "மூன்றாம் உலகப்போரில் எதை ஆயுதமாகப் பயன்படுத்துவார்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "எனக்கு மூன்றாம் உலகப் போரில் மக்கள் எதை ஆயுதமாகப் பயன்படுத்துவார்கள் என்று தெரியாது. ஆனால் நான்காம் உலகப் போரில் மக்கள் என்ன ஆயுதத்தைப் பயன்படுத்துவார்கள் என்று தெரியும்" என்றார்.

உடனே அங்கு வந்த பத்திரிக்கையாளர்கள், "என்ன ஆயுதம்?" என்று கேட்டு குறிப்பெடுக்க விரைந்தார்கள்.

அதற்கு அவர், "மூன்று உலகப்போரில்தான் உலகம் முற்றிலும் அழிந்து போய்விடுமே; அதன்பிறகு நான்காம் நான்காம் உலகப் போரில் ஆதிமனிதர்கள் தொடக்கத்தில் பயன்படுத்திய கற்களையும், ஈட்டுகளையும் பயன்படுத்த வேண்டியதுதான்" என்றார்.

உலகம் எந்தளவுக்கு அழிவின் பாதையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்பதை இந்த நிகழ்வானது மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்திலே ஒரு சிலர் கவின்மிகு கற்களால் கோவில் அழகு படுத்தப்பட்டிருப்பதைப் பற்றி பேசும்போது இயேசு, "ஒருகாலம் வரும். அப்போது இக்கோவில் கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இல்லாதபடி இடிக்கப்படும்" என்கிறார். தொடர்ந்து இயேசு பேசுகிறபோது சொல்கிறார், "நாட்டை எதிர்த்து நாடும், அரசை எதிர்த்து அரசும் கிழர்ந்தெழும், நிலநடுக்கமும், கொடிய பஞ்சமும், போர்களும் ஏற்படும்" என்கிறார். இன்று நாம்காணும் காட்சிகளும், போர்களும், வன்முறையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இயேசு சொன்ன வார்த்தையை உறுதி செய்வதாக இருக்கின்றது.

இயேசுவின் அச்சமூட்டும் வார்த்தைகளை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?. இதன் அர்த்தம் என்ன?. இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்றால் அதற்கு யூதர்களின் காலத்தைப் பற்றிய கணக்கிடலைப் புரிந்துகொள்ள வேண்டும். யூதர்கள் காலத்தை இரண்டாக பிரித்தார்கள். ஒன்று நாம் வாழும் இந்த "துன்புறும் காலம்". இந்தக் காலத்தில் நாம் பலவாறு துன்பங்களைச் சந்திக்க நேரிடும். இதை அடுத்து இன்னொரு காலம் இருக்கிறது. அதுதான் இறைவன் அருள்பாலிக்கும் "மாட்சிக்காலம்". இதில் இறைவன் தனது ஆட்சியை நிலைநாட்டுவார். ஆனால் இந்த இரண்டு காலங்களுக்கு மத்தியில் "புடமிடும் காலம்" என்ற ஒன்று இருக்கிறது. இதில் தீமைகள், தீயவர்கள் எல்லாம் அழிக்கப்படுவார்கள். இக்காலத்தில்தான் மக்கள் ஆண்டவரின் வருகைக்காக மக்கள் தயார்படுத்தப்படுவார்கள்.

ஆதலால் ஆண்டவரின் வருகைக்கு முன்பாக இப்படிப்பட்ட போர்கள், வன்முறைகள் போன்ற துன்பங்கள் நிகழ்ந்துதான் ஆகவேண்டும் என்பது இயேசுவின் போதனையாக இருக்கின்றது. எனவே நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் என்ன செய்யவேண்டும்? என்பதுதான் நமது சிந்தனைக்கு உரியதாக இருக்கின்றது.

எசாயா புத்தகம் 1: 16-17 வரை உள்ள வசனங்களில் படிக்கின்றோம், "உங்களைக் கழுவித் தூய்மையாக்குங்கள்; உங்கள் தீச்செயலை என்னிடமிருந்து அகற்றுங்கள்; தீமை செய்வதை விட்டுவிடுங்கள். நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்; ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரியுங்கள்; திக்கற்றவருக்கு நீதி வழங்குங்கள்; கைம்பெங்களுக்காக வழக்காடுங்கள்". ஆக தீமையைக் கைவிடுவதும், நன்மை செய்வதில் கருத்தாய் இருப்பதும்தான் நாம் ஆண்டவரின் வருகைக்காக நம்மையே நாம் தயார்செய்வதற்கு செய்யக்கூடிய காரியங்கள் ஆகும்.

இன்று ஒருசில போலி இறைவாக்கினர்கள் சொல்வது போன்று அழிவு வருகிறது; காலம் வந்துவிட்டது என்ற அவர்களின் வார்த்தையைக் கேட்டு கலங்காமல் ஆண்டவரின் வருகைக்காக நன்மையான காரியங்கள் செய்வதன் வழியாக நம்மையே நாம் தயாரிப்போம். அதன்வழியாய் இறையருள் பெறுவோம். - Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!