|
|
25 நவம்பர்
2019 |
|
|
பொதுக்காலம்
34ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா ஆகியோருக்கு இணையாக யாரும்
காணப்படவில்லை.
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 1: 1-6, 8-20
யூதா அரசன் யோயாக்கிமின் மூன்றாம் ஆட்சியாண்டில் பாபிலோனிய
அரசன் நெபுகத்னேசர் எருசலேமுக்கு வந்து முற்றுகையிட்டான். தலைவராகிய
ஆண்டவர் யூதா அரசனாகிய யோயாக்கிமையும் கடவுளுடைய கோவிலின் கலன்கள்
சிலவற்றையும் அவனிடம் கையளித்தார். அவனும் அவற்றைச் சீனார்
நாட்டிலிருந்த தன் தெய்வத்தின் கோவிலுக்கு எடுத்துச் சென்று
அவற்றைத் தன் தெய்வத்திற்குரிய கருவூலத்தில் சேர்த்தான்.
அப்பொழுது, அரசன் தன் அரண்மனை அலுவலரின் தலைவனாகிய அஸ்பெனாசுக்கு,
அரசகுலத்தையும் உயர் குடியையும் சார்ந்த இஸ்ரயேலர் சிலரைக்
கொண்டுவருமாறு கட்டளையிட்டான். அக்கட்டளைப்படி அவர்கள் உடல்
ஊனமற்ற, அழகுமிக்க, எல்லா ஞானத்திலும் தேர்ச்சி பெற்ற, அறிவிலும்
உணர்விலும் கல்வியிலும் சிறந்த, அரசனின் அரண்மனையில் பணியாற்றும்
திறமை பெற்ற இளைஞர்களாய் இருக்க வேண்டும். மேலும் அவர்கள் கல்தேய
மொழியை எழுதவும் பேசவும் கற்றுக் கொள்ள வேண்டும். அரசன் தான்
உண்டு வந்த சிறப்புணவிலும், பருகி வந்த திராட்சை இரசத்திலும்
நாள்தோறும் ஒரு பங்கை அவர்களுக்குக் கொடுக்கும்படி ஏற்பாடு
செய்தான். இவ்வாறு மூன்றாண்டுகள் பயிற்சி அளித்தபின், இறுதியில்
அவர்களை அரசன் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்று
ஆணையிட்டான். இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுள் யூதா குலத்தைச்
சார்ந்த தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா என்பவர்களும் இருந்தார்கள்.
அரசனது சிறப்புணவினாலும், அவன் பருகி வந்த திராட்சை இரசத்தினாலும்
தம்மைத் தீட்டுப்படுத்திக் கொள்ளலாகாது என்று தானியேல் தம் உள்ளத்தில்
உறுதி செய்து கொண்டார்; அவ்வாறே தாம் தீட்டுப்படாதிருக்க அலுவலர்
தலைவனிடம் அனுமதி கேட்டார். அலுவலர் தலைவன் தானியேலுக்குப் பரிவும்
இரக்கமும் காட்டுமாறு கடவுள் அருள்கூர்ந்தார்.
அலுவலர் தலைவன்
தானியேலை நோக்கி, "உங்களுக்கு உணவும் பானமும்
ஏற்பாடு செய்திருக்கும் அரசனாகிய என் தலைவருக்கு நான் அஞ்சுகிறேன்.
ஏனெனில் உங்களையொத்த வயதினரை விட நீங்கள் களை குன்றியிருப்பதை
அரசன் கண்டால் என் தலையே போய்விடும்; நீங்கள்தான் அதற்குக் காரணமாவீர்கள்''
என்றான்.
தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா ஆகியவர்களுக்கென அலுவலர்
தலைவனால் நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளரிடம் தானியேல் கூறியது:
``ஐயா! தயை கூர்ந்து பத்து நாள் உம் ஊழியர்களாகிய எங்களைச்
சோதித்துப் பாரும். எங்களுக்கு உண்பதற்கு மரக்கறிகளையும்,
குடிப்பதற்கு தண்ணீரையும் மட்டுமே தாரும்.
அதற்குப் பிறகு, எங்களது தோற்றத்தையும் அரசனது சிறப்புணவை உண்ணும்
மற்ற இளைஞர்களின் தோற்றத்தையும் ஒப்பிட்டுப் பாரும்; அதன்பின்
உமக்குத் தோன்றியபடி உம்முடைய பணியாளர்களாகிய எங்களுக்குச்
செய்தருளும்'' என்றார்.
அவனும் இக்காரியத்தில் அவர்களுக்கு இணங்கி அவர்களைப் பத்து
நாள் சோதித்துப் பார்த்தான். பத்து நாள்கள் ஆயின. அரசனது சிறப்புணவை
உண்டுவந்த இளைஞர்கள் அனைவரையும் விட அவர்களது தோற்றம் மிகக் களையுள்ளதாயும்
உடற்கட்டு மிகச் செழுமையுள்ளதாயும் காணப்பட்டது. ஆதலால்
மேற்பார்வையாளன் அவர்கள் உண்ண வேண்டிய சிறப்புணவுக்கும் பருக
வேண்டிய திராட்சை இரசத்திற்கும் பதிலாக மரக்கறி உணவையே அவர்களுக்குக்
கொடுத்து வந்தான்.
கடவுள் இந்த நான்கு இளைஞர்களுக்கும் அறிவையும் அனைத்து இலக்கியத்தில்
தேர்ச்சியையும் ஞானத்தையும் அருளினார். சிறப்பாக, தானியேல் எல்லாக்
காட்சிகளையும் கனவுகளையும் உய்த்துணரும் ஆற்றல்
பெற்றிருந்தார். அரசன் தன் முன்னிலைக்கு அவர்களைக் கொண்டு வரவேண்டுமென்று
குறித்த நாள் வந்தது. அலுவலர் தலைவனும் அவர்களை நெபுகத்னேசர்
முன்னிலையில் கொண்டுவந்து நிறுத்தினான்.
அரசன் அவர்களோடு உரையாடலானான்; அப்பொழுது அவர்கள் அனைவருள்ளும்
தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா ஆகியோருக்கு இணையாக யாரும்
காணப்படவில்லை; எனவே அவர்கள் அரசன் முன்னிலையில் பணிபுரியலாயினர்.
ஞானம், விவேகம் சார்ந்தவற்றில் அரசன் அவர்களோடு கலந்துரையாடினான்.
அப்பொழுது அவனது அரசில் இருந்த எல்லா மந்திரவாதிகளையும் மாயவித்தைக்காரர்களையும்
விட அவர்கள் பத்து மடங்கு சிறந்தவர்களாய் இருந்ததைக் கண்டறிந்தான்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-தானி(இ) 1: 29ac. 30-31. 32-33 (பல்லவி: 29b)
=================================================================================
பல்லவி: என்றென்றும் நீர் புகழப் பெறவும் போற்றப் பெறவும் தகுதியுள்ளவர்.
29a எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் வாழ்த்தப்
பெறுவீராக. 29உ மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர்
வாழ்த்துக்குரியது. பல்லவி
30 உமது தூய மாட்சி விளங்கும் கோவிலில் நீர் வாழ்த்தப்
பெறுவீராக; 31 கெருபுகள் மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரே,
நீர் வாழ்த்தப் பெறுவீராக. பல்லவி
32 உமது ஆட்சிக்குரிய அரியணை மீது நீர் வாழ்த்தப் பெறுவீராக.
33 உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக. பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 24: 42a,44
அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள்.
ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
வறுமையில் வாடிய ஒரு கைம்பெண் இரண்டு காசுகளை அதில் போடுவதைக்
கண்டார்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-4
அக்காலத்தில் இயேசு நிமிர்ந்து பார்த்தபோது செல்வர்கள் தங்கள்
காணிக்கைகளைக் காணிக்கைப் பெட்டிக்குள் போடுவதைக் கண்டார்.
வறுமையில் வாடிய ஒரு கைம்பெண்ணும் இரண்டு காசுகளை அதில் போடுவதைக்
கண்டார்.
அவர், "இந்த ஏழைக் கைம்பெண் எல்லாரையும் விட மிகுதியான
காணிக்கை போட்டிருக்கிறார் என உண்மையாகவே உங்களுக்குச்
சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த
மிகுதியான செல்வத்திலிருந்து காணிக்கை போட்டனர். இவரோ தமக்குப்
பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே
போட்டுவிட்டார்'' என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
கொடுப்பதில் மகிழ்வோம்
சீனாவிலே லின் என்ற பரம்பரை இரக்கச் செயல்களுக்கும், சேவை மனப்பான்மைக்கும்
எடுத்துக்காட்டானவர்கள். அந்த பரம்பரையில் ஒரு பெண்மணி இருந்தாள்.
பெரிய பணக்காரியாக இல்லாவிட்டாலும்கூட ஏழை எளியவருக்கு உதவுவதில்
சிறந்தவளாக இருந்தாள்.
எப்போதுமே அவள் தன்னுடைய வீட்டுக்கு முன்பாக மூன்று வேளையும்
இட்லி தயாரித்து வைத்து, அவற்றை பசியால் வாடி வருவோருக்குக்
கொடுத்துவந்தாள். அந்த ஊரிலே "தாவோ" சந்நியாசி ஒருவர் இருந்தார்.
ஒருநாள் அவர் அப்பெண்மணியை அணுகி வந்து, "அம்மா! எனக்கும் உணவு
தரமுடியுமா?" என்று கேட்ட அவள், "தாராளமாகத் தருகிறேன்" என்று
சொல்லி உணவு கொடுத்து வந்தாள்.
ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கும் மேல் தனக்கு உணவளித்து வந்த
அந்த பெண்மணியைப் பார்த்து ஒருநாள் அவர் சொன்னார், "அம்மா! எனக்கு
இத்தனை நாள்கள் அன்போடும், பாசத்தோடும் உணவளித்து வரும் உன்னை,
உன் தலைமுறையை இறைவன் சிறப்பாக ஆசிர்வதிப்பார்" என்று சொல்லி
வாழ்த்தினார்.அந்த தாவோ சந்நியாசி வாழ்த்தியதால் என்னவோ இன்றைக்கும்
சீனாவில் லின் பரம்பரை கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டதாய் இருக்கின்றது;
தங்களை நாடி வரும் மக்களுக்கு தங்களால் ஆன உதவிகளைச்
செய்துகொண்டு இருக்கிறது.
நம்மிடம் இருப்பதை பிறருக்குக் கொடுத்து வாழும்போது நாம் மட்டுமல்ல
நம்முடைய தலைமுறையும் ஆசிர்வதிக்கப்படும் என்பதை இந்நிகழ்வானது
நமக்கு எடுத்துக்கூறுகிறது.
நற்செய்தி வாசகத்திலே ஆண்டவர் இயேசு ஏழைக் கைம்பெண்ணின்
காணிக்கையை பாராட்டுகின்றார். எருசலேம் திருக்கோவிலில்
காணிக்கை செலுத்தும் பகுதியில் இருக்கும் இயேசு அங்கே செல்வந்தர்கள்
காணிக்கைப்பெட்டியில் காணிக்கை போடுவதையும், அதன் பின்னர் ஓர்
ஏழைக் கைம்பெண் காணிக்கை போடுவதையும் பார்த்துவிட்டு,
"செல்வந்தர்களைவிட, இந்த ஏழை மிகுதியாக காணிக்கை செலுத்தினார்"
என்கிறார். செல்வந்தர்களோ தங்களிடமிருந்த மிகுதியானவற்றிலிருந்து
காணிக்கை செலுத்தினார்கள். ஆனால் ஏழைக் கைம்பெண்ணோ தன்னிடம் இருப்பதை
எல்லாம் காணிக்கையாக செலுத்துகிறார். அதனால்தான் இயேசு அவரைப்
பாராட்டுகின்றார்.
இப்பகுதி நமக்கு ஒருசில சிந்தனைகளை வழங்குகின்றது. அதில் முதலாவதாக
கொடுக்கவேண்டும் என்ற மனது. இன்றைக்கு மக்கள் கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள்.
ஆனால் அவர்களிடத்திலே பிறருக்கு தேவையில் இருப்போருக்கு
கொடுத்து வாழவேண்டும் என்ற மனநிலை துளிகூட இல்லை.
கார்ல் மார்க்ஸ் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார்,
"முதலாளித்துவம் தனக்கு ஆதாயம் கிடைக்கும் என்றால், தனக்கான
சவக்குழியை தானே தோண்டிக்கொள்ளும்" என்று. ஆம் பணத்தையும்,
பொருளையும் ஈட்ட என்னவேண்டுமாலும் செய்ய முன்வரும் மக்கள் அதனை
பிறருக்குக் கொடுக்க முன்வருவதில்லை. இத்தகைய பின்னணியில்தான்
ஏழைக் கைம்பெண்ணின் காணிக்கையை நாம் பார்க்கவேண்டும். அவள்
தான் தேவையில் இருந்தபோதும்கூட தன்னிடம் இருந்த இரண்டு
செப்புக் காசுகளையும் காணிக்கையாக செலுத்துகிறாள். 2கொரி 9:6
ல் வாசிக்கின்றோம், "நிறைவாய் விதைப்பவர் (கொடுப்பவர்),
நிறைவாய் அறுவடை செய்வார்" என்று. நாம் நிறைவாய் கொடுப்போம்.
நிறைவாய் பெறுவோம்.
அடுத்ததாக ஏழைக் கைம்பெண் தன்னிடம் இருந்த இரண்டு செப்புகாசுகளையும்
காணிக்கையாக செலுத்தியதன் வழியாக இனிமேல் கடவுள் தான் எனக்கு
எல்லாம், கடவுள் என்னுடைய வாழ்வைப் பார்த்துக்கொள்வார் என்ற
மனநிலையில் வாழ்கிறார். இதற்கு முற்றிலும் மாறாக செல்வந்தர்கள்
பணம்தான் எனக்கு எல்லாம் என்று பணத்தை நம்பி வாழ்கிறார்கள்.
நாம் ஏழைக் கைம்பெண்ணைப் போன்று கடவுளையே நம்பி வாழக் கற்றுக்கொள்ள
வேண்டும். காரணம் கடவுள் ஒருவர்தான் நமக்கு நிலைவாழ்வினைத் தரமுடியும்.
யோவான் நற்செய்தி 6:68 ல் "யாரிடம் செல்வோம் இறைவா, வாழ்வு தரும்
வார்த்தைகள் உம்மிடம் அன்றோ உள்ளன" என்று அதைதான்
வாசிக்கின்றோம்.
ஆதலால் நம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுப்பவர்களாகவும், கடவுளை
மட்டுமே நம்முடைய தலைவனாக நம்பி வாழ பழகுவோம். அதன் வழியாக இறையருள்
பெறுவோம். - Fr. Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
தானியேல் 1: 1-6, 8-20
ஆண்டவர் தன்னுடைய அடியார்களைக் கைவிடுவதில்லை
நிகழ்வு
இங்கிலாந்து நாட்டில் பிறந்த மிகச் சிறந்த எழுத்தாளரும் மறைப்பணியாளருமான
ஜான் புன்யன் (1628-1688) மறைப்பணியாளராக மாறி, ஆண்டவருடைய
வார்த்தையை எடுத்துரைக்கும் முன்பாக நடந்த நிகழ்வு இது.
இங்கிலாந்து நாட்டில் உள்நாட்டுக் கலவரம் வெடித்தபோது, லேசெஸ்டரைக்
கைப்பற்றுவதற்காக இங்கிலாந்து இராணுவத்தில் அவர் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு இராணுவத்தில் சேர்ந்து, பணிபுரிவதற்குக் கொஞ்சம்கூட
விருப்பமில்லை, இருந்தாலும் அரசாங்கத்தின் உத்தரவின் பேரில்
அவர் இராணுவத்தில் சேர்ந்து, லேசெஸ்டரைக் கைப்பற்றவேண்டிய ஓர்
இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்.
அவர் இராணுவத்தில் சேர்ந்து லேசெஸ்டர்மீது போர்தொடுக்கச் செல்வதற்கு
முந்தின நாள், ஒருவர் அவரிடம் வந்து, "உங்களுடைய இடத்தில் நான்
நின்று போர் புரிகின்றேன், நீங்கள் உங்களுடைய வீட்டிலேயே இருங்கள்"
என்றார். அந்த மனிதர் சொன்னதைக் கேட்டு ஜான் புன்யனால் நம்ப
முடியவில்லை. பின்னர் அவர் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப, ஜான் புன்யன்
அவரைத் தன்னுடைய இடத்திலிருந்து போர் புரிய அனுப்பி வைத்தார்.
போரில் அவர் தலையில் குண்டடி பட்டு இறந்துபோனார்.
இதை அறிந்த ஜான் புன்யன், "ஒருவேளை நாம் போருக்குச்
சென்றிருந்தால், அந்த மனிதரைப் போன்று குண்டடி பட்டு இறந்துபோயிருப்போம்.
கடவுள்தான் நம்மைச் சிறப்பான முறையில் பாதுகாத்திருக்கின்றார்.
ஆதலால், அவருடைய பணியைச் செய்ய நம்மை அர்ப்பணிப்பதுதான் சிறந்தது"
என்று முடிவுசெய்துகொண்டு இறைப்பணிக்காகத் தன்னையே அர்ப்பணித்தார்.
இந்த நிகழ்வில் வருகின்ற மறைப்பணியாளரான ஜான் புன்யனை, ஆண்டவராக
கடவுள் எப்படி சிறந்தவிதமாய்ப் பாதுகாத்தாரோ, அதுபோன்று இன்றைய
முதல் வாசகத்தில் நான்கு மனிதர்களை அவர் ஆபத்திலிருந்து
பாதுகாத்து, அவர்களைப் பராமரிப்பதைக் குறித்து வாசிக்கின்றோம்.
அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து
நிறைவுசெய்வோம்.
நெபுகத்னேசர் தன் அரசவையில் பணிபுரிய தானியேல் உட்பட நால்வரைத்
தேர்ந்தெடுத்தல்
பாபிலோனிய அரசனாகிய நெபுகத்னேசர் (கிமு 636-539), யூதா அரசன்
யோயாக்கிமினின் காலத்தில் எருசலேம்மீது படையெடுத்து வந்து,
திருக்கோயிலில் இருந்த கலன்களைக் கவர்ந்துசென்றான். பின்னர்
அவன் தன்னுடைய அரசவையில் பணிபுரிவதற்காக யூத இனத்திலிருந்து
உடல் ஊனமுற்ற, அழகுமிக்க, எல்லா ஞானத்திலும் தேர்ச்சி பெற்ற,
அறிவிலும் உணவிலும் கல்வியிலும் சிறந்து விளங்கியவர்களைத்
தேர்ந்தெடுக்குமாறு அரண்மனை அலுவலரின் தலைவனாகிய அஸ்பெனாசுக்கு
ஆணையிட்டான். அரசன் கட்டளையிட்டத்திற்கு இணங்க, அஸ்பெனாசும்
யூத இனத்திலிருந்து தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா என்ற
நான்கு இளைஞர்களைத் தேர்ந்துதெடுத்து, அவர்களுக்குப் பயிற்சி
அளித்தான். அப்படிப் பயிற்சியளித்தபோது அரசன் கொடுத்த உணவாலும்
பானத்தாலும் தங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாதவாறு, நால்வர்கள்
எச்சரிக்கையாய் இருந்தார்கள். இதனால் என்ன நடந்தது என்பதைத் தொடர்ந்து
நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
நால்வரையும் காப்பாற்றிய ஆண்டவர்
அரண்மனையில் கொடுக்கப்பட்ட உணவையும் திராட்சை மதுவையும் நான்கு
பேரும் உண்ணாமலும் பருகாமலும் இருந்ததற்குக் காரணம், மோசேயின்
சட்டம் (லேவி 11: 7, 17: 10-16) ஒருசில உணவு வகைகளை உண்ணக்கூடாது
என்று சொல்லியிருந்தது. அதனால்தான் தானியேல் உட்பட அந்த நான்கு
பேரும் அரசன் கொடுத்த உணவால் தங்களைத் தீட்டுப்படுத்திக்
கொள்ளாதவாறு மிகவும் கவனமாக இருந்தார்கள். இதனால் அஸ்பெனாசு
அவர்களிடம், நீங்கள் அரசன் கொடுக்கும் உணவை உண்ணாது மெலிந்து
காணப்பட்டால், என்னுடைய தலைதான் உருளும் என்று சொல்ல, நால்வரும்,
எங்களுக்கு மரக்கட்டையும் தண்ணீரும் போதும் என்று சொல்ல, அவை
அவர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் நால்வரும் மரக்கட்டையை உண்டு,
தண்ணீரைப் பருகி பத்து நாள்கள் மற்றவர்களைவிடப் பொலிவோடும் ஞானத்தோடும்
இருந்தார்கள். இதைக் கண்டு நெபுகத்னேசர் மிகவும் வியப்படைந்தான்.
நான்கு பேரும் வெறும் மரகட்டையை உண்டு, தண்ணீரைப் பருகியே
பொலிவோடு இருந்ததற்குக் காரணம், அந்த நான்கு பேரும் ஆண்டவர்மீது
நம்பிக்கை வாழ்ந்ததால்தான். திருப்பாடல் ஆசிரியர் சொல்வாரே,
"சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும்,
ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாதே" (திபா 34: 10) என்று,
அதுதான் அந்த நான்கு பேரின் வாழ்க்கையிலும் நடந்தது. அப்படியானால்,
நாம் ஆண்டவர்மீது நம்பிக்கை வாழ்கின்றபோது, அவர் நமக்கு எல்லா
நலனும் தந்து, எல்லாவிதமான நெருக்கடியிலிருந்தும் காப்பார் என்பது
உறுதி.
சிந்தனை
"ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டோரே பேறுபெற்றோர்" (திபா 40:4) என்பார்
திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் ஆண்டவர்மீது நம்பிக்கை
வைத்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
லூக்கா 21: 1-4
எவ்வளவு கொடுக்கின்றோம்
என்பதைவிடவும்எப்படிக் கொடுக்கின்றோம் என்பது முக்கியம்
நிகழ்வு
அருள் என்றொரு சிறுவன் இருந்தான். அவனுடைய தந்தை அவன் இறையச்சத்திலும்
இறைநம்பிக்கையிலும் வளரவேண்டும் என்பதற்காக, அவன்மீது தனிக்கவனம்
செலுத்தி வளர்த்து வந்தார்.
ஒரு ஞாயிறுக்கிழமையின்போது, அருளின் தந்தை அவனைக் கூப்பிட்டு,
அவனுடைய ஒரு கையில் ஒரு ஐம்பது ரூபாயையும் இன்னொரு கையில் ஒரு
பத்து ரூபாயையும் கொடுத்து, "தம்பி! நீ ஞாயிறு மறைக்கல்வித்
திருப்பலியில் கலந்துகொள்கின்றபோது, உன்னிடம் நான்
கொடுத்திருக்கின்ற இந்த ஐம்பது ரூபாய் மற்றும் பத்து
ரூபாயிலிருந்து எதைக் காணிக்கையாகச் செலுத்தவேண்டும் என்று
நினைக்கிறாயோ, அதைச் செலுத்திவிடு; இன்றொன்றை நீ வைத்துக்கொள்"
என்றார். அருளும் அதற்குச் சரியென்று தலையாட்டிக்கொண்டு,
ஞாயிறு மறைக்கல்வித் திருப்பலியில் கலந்துகொண்டான். அவனுடைய தந்தையும்
தாயும் பங்குக்கோயிலில் நடைபெற்ற திருப்பலியில் கலந்துகொண்டார்கள்.
மறைக்கல்வித் திருப்பலியில் கலந்துகொண்டுவிட்டு, அருள் அவனுடைய
தந்தையிடம் ஓடிவந்தான். அப்பொழுது அவனுடைய தந்தை அவனிடம்,
"தம்பி! திருப்பலியில் கடவுளுக்கு எதைக் காணிக்கையாகச்
செலுத்தினாய்? ஐம்பது ரூபாயையா...? பத்து ரூபாயையா?" என்றார்.
உடனே அருள், "பத்து ரூபாய்" என்றான். "நீயேன் பத்து ரூபாயைக்
கடவுளுக்குக் காணிக்கையாகச் செலுத்தினாய்...? என்று அருளின் தந்தை
அவனிடம் திருப்பிக் கேட்டதற்கு அவன், "அப்பா! நான் திருப்பலிக்குப்
போகிறபோது, ஐம்பது ரூபாயைக் காணிக்கையாகச் செலுத்தவேண்டும் என்ற
முடிவோடு போனான். திருப்பலி நிறைவேற்றிய தந்தைதான் மறையுரையின்போது,
"முகமலர்ச்சியோடு கொடுப்பவர்தான் கடவுளின் அன்புக்குரியவர் (2
கொரி 9:7) என்று போதித்தார். அதனால் நான் ஐம்பது ரூபாயை வருத்தத்தோடு
காணிக்கையாகச் செலுத்துவதைவிடவும், பத்து ரூபாயை மகிழ்ச்சியாகச்
செலுத்துவதுதான் நல்லது என்று உணர்ந்தேன். அதன்படியே நான் பத்துரூபாயை
மகிழ்ச்சியோடு காணிக்கையாகச் செலுத்தினேன்" என்றான்.
அருள் இவ்வாறு சொன்னதைக் கேட்டு, அவனுடைய தந்தையால் எதுவும் பேசமுடியவில்லை.
வேடிக்கையாகச் சொல்லப்பட்ட நிகழ்வாக இருந்தாலும், நாம் கடவுளுக்குக்
காணிக்கை செலுத்துகின்றபோது அதை எத்தகைய மனநிலையோடு காணிக்கை
செலுத்துகின்றோம் என்ற கேள்வியை நமக்குள் எழுப்புவதாக இருக்கின்றது.
இன்றைய நற்செய்தி வாசகமும் நாம் கடவுளுக்குக் காணிக்கை
செலுத்துகின்றபோது, எத்தகைய மனநிலையோடு காணிக்கை செலுத்தவேண்டும்
என்ற கேள்விக்கு விடையாக அமைந்திருக்கின்றது. அது குறித்து இப்பொழுது
நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தங்களுடைய பெயர்விளங்கக் காணிக்கை செலுத்திய பணக்காரர்கள்
நற்செய்தியில், இயேசு எருசலேம் திருக்கோயிலுக்குள் சென்று, அங்கு
காணிக்கை செலுத்துவோரைப் பார்க்கின்ற ஒரு நிகழ்வானது நடைபெறுகின்றது.
எருசலேம் திருக்கோயிலில் பதிமூன்று காணிக்கைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும்.
அவற்றிலிருந்து பெறப்படும் காணிக்கைகள் திருக்கோயிலின் பராமரிப்புக்காகவும்
இன்னபிற தேவைகட்காகவும் பயன்படுத்தப்படும். இதில் இன்னொரு
முக்கியமான செய்தி, முதலில் இருக்கக்கூடிய பன்னிரண்டு
காணிக்கைப்பெட்டிகளில் மக்கள் தங்களுடைய கருத்துகள் மற்றும் பெயர்களை
எழுதி காணிக்கை செலுத்துவார்கள். அவ்வாறு எழுதப்பட்ட பெயர்களும்
கருத்துகளும் குருவால் வாசிக்கப்பட்டு, ஒருவர் எவ்வளவு பணம்
காணிக்கையாக செலுத்தியிருக்கின்றார் என்பதும் அவரால் உரக்க
வாசிக்கப்படும். இதற்காகவே பணக்கார்கள் அந்தப் பன்னிரண்டு
காணிக்கைப் பெட்டிகளில் மிகுதியாகக் காணிக்கை செலுத்தினார்கள்.
இப்படி தங்களுடைய பெயர் விளங்குவதர்க்காகக் காணிக்கை செலுத்தியவர்களை
இயேசு பாராட்டவில்லை. மாறாக, ஏழைக் கைம்பெண்ணைப் பாராட்டினார்.
எதற்காக என்பதைத் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.
எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பாராமல் காணிக்கை செலுத்திய
கைம்பெண்
எருசலேம் திருக்கோயிலில் இருந்த பதிமூன்று காணிக்கைப் பெட்டிகளில்
முதல் பன்னிரண்டு காணிக்கப்பெட்டிகளில் காணிக்கை செலுத்துவோர்
தங்களுடைய பெயர், கருத்துகளை எழுத்திக் காணிக்கை செலுத்துவர்
என்று மேலே பார்ப்போம். பதிமூன்றாவதாக இருக்கும்
காணிக்கைப்பெட்டியில் மக்கள் தங்களுடைய பெயர் மற்றும் கருத்துகளை
எழுதாமல் அப்படியே காணிக்கை செலுத்தவேண்டும். இந்தப்
பெட்டியில் காணிக்கை செலுத்துவதால் மற்றவருடைய கவனத்தை ஈர்க்கமுடியாது;
பாராட்டையும் பெறமுடியாது. இந்தப் பதிமூன்றாவது பெட்டியில்தான்
கைம்பெண், தன்னுடைய பிழைப்பிற்காக வைத்திருந்த இரண்டு காசுகளைக்
காணிக்கையாக செலுத்துகின்றார்.
கைம்பெண்கள் மறைநூல் அறிஞர்களால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டார்கள்
(லூக் 20:27). நற்செய்தியில் வரும் கைம்பெண்ணும் மறைநூல் அறிஞர்களால்,
அதிகாரத்தில் இருந்தவர்களால் வஞ்சிக்கப்பட்டிருக்கக்கூடும். அப்படிப்பட்ட
நிலையிலிருந்தும் அவர் தன்னுடைய பிழைப்பிற்காக வைத்திருந்ததை,
"இனி கடவுள் என்னுடைய வாழ்வைப் பார்த்துக்கொள்வார்" என்ற நம்பிக்கையோடு,
யாருடைய பாராட்டையும் எதிர்பாராமல் காணிக்கை செலுத்தியதால், ஆண்டவர்
இயேசு அவரைப் பாராட்டுகின்றார். இந்தக் கைம்பெண், நமக்கு உணர்த்துகின்ற
செய்தி ஒன்றே ஒன்றுதான், அதுதான்: நாம் காணிக்கை செலுத்துகின்றபோதும்
எந்ததொரு நற்செயலையுச் செய்கின்ற போதும், யாருடைய பாராட்டுக்காகவும்
பெருமைக்காகவும் செய்யாமல் உள்ளார்ந்த அன்போடு செய்யவேண்டும்
என்பதாகும். ஆகையால், நாம் கைம்பெண்ணைப் போன்று எந்தவொரு பிரதிபலனையும்
எதிர்பாராமல், உள்ளார்ந்த அன்போடு எதையும் செய்யக் கற்றுக்கொள்வோம்.
சிந்தனை
"மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப்
பார்க்கின்றார்" (1 சாமு 16:7) என்கிறது இறைவார்த்தை. ஆகையால்,
நாம் ஆண்டவர் நம்முடைய அகத்தைப் பார்க்கின்றார் என்ற உண்மையை
உணர்ந்தவர்களாய், உள்ளார்ந்த அன்போடு எந்தவொரு செயலையும்
செய்வோம்; வெளிவேடத்தைத் தவிர்ப்போம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
இனி எல்லாம் சுகமே!
இரண்டும் இரண்டும் ஐந்து
நேற்று இரவு 'இரண்டும் இரண்டும் ஐந்து' என்ற இரானிய மொழி
குறும்படம் பார்த்தேன்.
இதைப் பார்க்கத் தூண்டியது இந்த வாரம் ஆனந்த விகடனில்
வெளியாகியிருக்கும் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களின் கட்டுரை.
ஒரு வகுப்பறையின் கரும்பலகையோடு படம் தொடங்குகிறது. மாணவர்கள்
பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர் வகுப்பறைக்குள் வருகிறார்.
அனைவரும் எழுந்து நிற்கின்றனர். 'வணக்கம்'. அந்நேரம் தலைமையாசிரியரின்
அறிவிப்பு வகுப்பறையின் ஸ்பீக்கரில் ஒலிக்கிறது: 'மாணவர்களே,
இன்றிலிருந்து எல்லாமே வித்தியாசமாக இருக்கும். அது பற்றி உங்கள்
ஆசிரியர்கள் உங்களுக்குச் சொல்வார்கள்.' அனைவரும் அமர, கரும்பலகைக்குச்
செல்லும் ஆசிரியர், '2+2=5' என எழுதுவார். வகுப்பில் சலசலப்பு
ஏற்படும். 'சைலன்ஸ்' என்று அதட்டுவார். பின் தான் எழுதியதை சத்தமாகச்
சொல்வார். சொல்வதை மாணவர்கள் திரும்பச் சொல்ல வேண்டும் என்பார்.
ஒரு மாணவன் எழுந்து, 'இரண்டும், இரண்டும் நான்கு' என்பான். ஆசிரியர்
அதட்ட, அவனும், 'இரண்டும், இரண்டு ஐந்து' என சொல்லிவிட்டு அமர்ந்துவிடுவான்.
பின்னால் ஒரு மாணவன் கையை உயர்த்துவான். 'இரண்டும், இரண்டும்
நான்கு' என்பான். ஆசிரியருக்குக் கோபம் வந்துவிடும். வேகமாக
வெளியே போய் மேல்வகுப்பு மாணவர்கள் மூன்று பேரை அழைத்து வருவார்.
மறுபடியும் போர்டில் '2+2=?' என எழுதி, 'எத்தனை?' என்று
கேட்பார். அவர்கள் 'ஐந்து' என்பார்கள். 'பார்த்தாயா, நம் பள்ளியின்
பெஸ்ட் ஸ்டூடன்ஸ் இவர்களே 'ஐந்து' என்றுதான் சொல்கிறார்கள் என்பான்.
ஆனால் இந்த மாணவன் போர்டில் 'நான்கு' என எழுதுவான். உடனே
துப்பாக்கி குண்டுகள் அவன் நெற்றியில் பாய அப்படியே சுருண்டு
விழுந்து இறந்துவிடுவான். வந்திருந்த மேல் வகுப்பு மாணவர்கள்
அவனை அப்புறப்படுத்துவார்கள். போர்டில் படிந்திருந்த இரத்தத்தை
அழித்துவிட்டு, '2+2=5' என ஆசிரியர் மறுபடி எழுதி, 'எல்லாரும்
இதை உங்கள் நோட்டில் காப்பி செய்யுங்கள்' என்பார்கள். எல்லாரும்
அப்படியே காப்பி செய்வார்கள். கடைசி இருக்கையில் அமர்ந்திருக்கும்
மாணவன் மட்டும், 'ஐந்தை' இரப்பரால் அழித்துவிட்டு, 'நான்கு' என
எழுத படம் முடிந்துவிடும்.
இந்தக் குறும்படத்தைக் காண இங்கே சொடுக்கவும்: Two Plus Two
Equals Five
இந்தக் குறும்படம் சொல்லும் கருத்துக்கள் இரண்டு:
1. எல்லாரும் ஒத்துக்கொள்வதாலோ, மேலான சிந்தனையாளர்கள் சொல்வதாலோ
பொய் ஒருபோதும் உண்மை ஆகிவிடாது.
2. உண்மைக்காக வாழ்ந்த ஒருவன் உயிர்விட்டாலும், அந்த இரத்தம்
இன்னொருவனை உண்மைக்காக வாழ உருவாக்கும்.
நாளைய முதல் வாசகத்தில் (காண். தானி 1:1-6, 8-20) இந்தப்
போராட்டம்தான் இருக்கிறது.
உண்மையான கடவுள் யார்? நெபுகத்னேசரின் கடவுளா அல்லது
தானியேலின் கடவுளா?
உண்மைக்காக தானியேல் அனுபவிக்கும் துன்பங்களின் தொடக்கமே இந்த
வாசகம்.
உண்மை சில நேரங்களில் உறங்கினாலும், ஒருநாளும் அழிந்துவிடுவதில்லை.
இல்லையா? Fr. Yesu, Madurai. |
|