Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     23 நவம்பர் 2019  
                                    பொதுக்காலம் 33ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 எருசலேமில் நான் புரிந்த தீமைகளை இப்போது நினைவுகூர்கிறேன்; துயரமிகுதியால் அழிந்து கொண்டிருக்கிறேன்.

மக்கபேயர் முதல் நூலிலிருந்து வாசகம் 6: 1-13


அந்நாள்களில் அந்தியோக்கு மன்னன் மேற்கு மாநிலங்கள் வழியாகச் சென்றபோது, பாரசீக நாட்டு எலிமாய் நகர் பொன், வெள்ளி ஆகியவற்றுக்குப் புகழ் பெற்றது என்று கேள்விப்பட்டான். அதன் கோவிலில் மிகுந்த செல்வம் இருந்தது என்றும் கிரேக்க நாட்டை முதன்முதல் ஆண்ட மாசிடோனிய மன்னரான பிலிப்பின் மகன் அலெக்சாண்டர் அங்கே விட்டுச் சென்றிருந்த பொற்கேடயங்களும் மார்புக் கவசங்களும் படைக்கலன்களும் அங்கு இருந்தன என்றும் அறிய வந்தான்.

எனவே அந்தியோக்கு புறப்பட்டு நகரைக் கைப்பற்றிக் கொள்ளையடிக்க முயன்றான்; ஆனால், முடியவில்லை; ஏனெனில் அந்த நகர மக்கள் அவனது திட்டத்தை அறிந்திருந்தார்கள். அவர்கள் அவனை எதிர்த்துப் போரிட்டார்கள். ஆகவே அவன் பின்வாங்கி, பெரும் ஏமாற்றத்துடன் அங்கிருந்து பாபிலோனுக்குத் தப்பிச் சென்றான்.

யூதேயா நாட்டை எதிர்த்துச் சென்றிருந்த அவனுடைய படைகள் முறியடிக்கப்பட்ட செய்தியை அவன் பாரசீகத்தில் இருந்தபோது தூதர் ஒருவர் அவனுக்கு அறிவித்தார்; "லீசியா வலிமை வாய்ந்த படையோடு முதலில் சென்று யூதர்கள் முன் புறமுதுகு காட்டி ஓடிவிட்டான்; முறியடிக்கப்பட்ட படைகளிடமிருந்து யூதர்கள் கொள்ளையடித்த படைக்கலன்கள், மிகுதியான பொருள்கள் ஆகியவற்றால் அவர்கள் வலிமைமிக்கவர்கள் ஆனார்கள்; எருசலேமில் இருந்த பலிபீடத்தின்மேல் அந்தியோக்கு செய்து வைத்திருந்த நடுங்க வைக்கும் தீட்டை அவர்கள் தகர்த்தெறிந்தார்கள்; திருஉறைவிடத்தைச் சுற்றிலும் முன்புபோல் உயர்ந்த மதில்கள் எழுப்பியுள்ளார்கள்; அவனுடைய நகராகிய பெத்சூரைச் சுற்றிலும் அவ்வாறே செய்திருக்கிறார்கள்" என்றும் எடுத்துரைத்தார்.

இச்செய்தியைக் கேட்ட மன்னன் அதிர்ச்சியடைந்து மிகவும் நடுங்கினான்; தான் திட்டமிட்ட வண்ணம் நடவாததால் துயரம் தாங்காது நோயுற்றுப் படுத்த படுக்கையானான். கடுந்துயரம் அவனை ஆட்கொண்டதால் அங்குப் பல நாள் கிடந்தான்; தான் விரைவில் சாகவிருந்ததை உணர்ந்தான்.

ஆகவே அவன் தன் நண்பர் எல்லாரையும் அழைத்து, "என் கண்களினின்று தூக்கம் அகன்றுவிட்டது; கவலையினால் என் உள்ளம் உடைந்து விட்டது. "எவ்வளவு துயரத்திற்கு ஆளானேன்! இப்போது எத்துணைப் பெரும் துயரக் கடலில் அமிழ்ந்துள்ளேன்! நான் ஆட்சியில் இருந்தபோது அன்பு செலுத்தி, அன்பு பெற்றேனே' என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

ஆனால் எருசலேமில் நான் புரிந்த தீமைகளை இப்போது நினைவுகூர்கிறேன்; அங்கு இருந்த பொன், வெள்ளிக் கலன்கள் அனைத்தையும் கவர்ந்து சென்றேன்; யூதேயாவில் குடியிருந்தவர்களைக் காரணமின்றி அழித்தொழிக்கும்படி கட்டளையிட்டேன். இதனால்தான் இந்தக் கேடுகள் எனக்கு வந்துற்றன என நான் அறிவேன். இப்போது அயல்நாட்டில் துயரமிகுதியால் அழிந்து கொண்டிருக்கிறேன்" என்று கூறினான்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் -  திபா 9: 1-2. 3, 5. 15,18 (பல்லவி: 14b)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, நீர் அளிக்கும் விடுதலைகுறித்து அகமகிழ்வேன்.

1 ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்; வியத்தகு உம் செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன். 2 உம்மை முன்னிட்டு மகிழ்ந்து களிகூர்வேன்; உன்னதரே, உமது பெயரைப் போற்றிப் பாடுவேன். பல்லவி

3 என் எதிரிகள் பின்னிட்டுத் திரும்புவார்கள்; உமது முன்னிலையில் இடறிவிழுந்து அழிவார்கள். 5 வேற்றினத்தாரைக் கண்டித்தீர்; பொல்லாரை அழித்தீர்; அவர்களது பெயர் இனி இராதபடி அடியோடு ஒழித்துவிட்டீர். பல்லவி

15 வேற்றினத்தார் வெட்டின குழியில் அவர்களே விழுந்தனர்; அவர்கள் மறைத்து வைத்திருந்த வலையில் அவர்கள் கால்களே சிக்கிக்கொண்டன. 18 மாறாக, வறியவர் என்றுமே மறக்கப்படுவதில்லை; எளியோரின் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது. பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
2 திமொ 1: 10b

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 27-40


அக்காலத்தில் உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி, "போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதிவைத்துள்ளார்.

இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். இரண்டாம், மூன்றாம் சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்; கடைசியாக அப்பெண்ணும் இறந்தார். அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே?" என்று கேட்டனர்.

அதற்கு இயேசு அவர்களிடம், "இக்கால வாழ்வில் மக்கள் அருட்சாதனம் செய்து கொள்கின்றனர். ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது அருட்சாதனம் செய்து கொள்வதில்லை. இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப் போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே.

இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, "ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்' என்று கூறியிருக்கிறார். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே" என்றார்.

மறைநூல் அறிஞருள் சிலர் அவரைப் பார்த்து, "போதகரே, நன்றாகச் சொன்னீர்" என்றனர். அதன்பின் அவர்கள் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

மடக்கப் பார்த்து மனிதனை அவமானப்படுத்தப் பார்க்கும் மனிதக் கூட்டம் இன்று அதிகம்.

பேச்சிலோ, செயலிலோ பிறமனிதனை மடக்கிப் போட்டு, மதியிழந்து, மயங்கிப் போகும் மக்கள் கூட்டம் இன்று அதிகரித்து வருகின்றது.

இதனால் யாருக்கு என்ன லாபம்.

வெற்றி கொண்டு விட்டோம் என்ற வெறி தானே தவிர, வேறு என்ன. ஒருவரிடம் வெற்றியென்றால், இன்னொருவரிடம் தோல்வி காணத் தானே செய்யனும். அப்பொழுது அடையும் மனவலி மற்றவருக்கு ஏற்படுத்த நினைப்பது எவ்வளவு மதீயினமானது என்பதை உணர்ந்தவர் வாழ்வையடைவார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
1 மக்கபேயர் 6: 1-3

"ஒவ்வொருவருக்கு அவரவர் செயலுக்கேற்ப கைம்மாறு கிடைக்கும்"

நிகழ்வு

ஒருகாலத்தில் மிகப்பெரிய செல்வந்தவராக வாழ்ந்து வந்தவர் பட்டினத்தார். அப்படிப்பட்டவர் உலக வாழ்வின் நிலையாமையை உணர்ந்து, எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு, முற்றும் துறந்த முனிவராக வாழத் தொடங்கினார். தன்னுடைய சாப்பாட்டிற்கு அவர் வீடுகளில் பிச்சை எடுத்தும் ஊரில் இருந்த மண்டபத்தில் தங்கியும் வந்தார்.

இதற்கு நடுவில் பட்டினத்தாருடைய சகோதரியின் மகளைப் "பெண்பார்க்க" வந்தவர்கள், அவருடைய மாமா (பட்டினத்தார்) வீடுகளில் பிச்சையெடுத்து உண்பதை அறிந்து, பெண்ணை வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே போனார்கள். இதைப் பார்த்த பட்டினத்தாரின் சகோதரி, தன்னுடைய அண்ணன் உயிரோடு இருப்பதால்தான் இப்படியெல்லாம் நடக்கின்றது என்று அவரை எப்படியாவது ஒழித்துக் கட்டவேண்டும் என்று திட்டம் தீட்டினாள்.

ஒருநாள் அவள் தன்னுடைய அண்ணன் பட்டினத்தாரிடம் சென்று, "அண்ணா! இன்று நான் என்னுடைய வீட்டில் உனக்காக விருந்து ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றேன். அருள்கூர்ந்து வீட்டிற்கு உணவருந்த வாருங்கள்" என்றாள். தங்கையின் அழைப்பை ஏற்று, பட்டினத்தாரும் அவளுடைய வீட்டிற்குச் சென்றார். அவருக்கு முன்பாக அறுசுவை உணவு படைக்கப்பட்டது. அவர் உணவை எடுத்து, தன்னுடைய வாயருகே கொண்டுபோனபோதுதான் தெரிந்தது, சாப்பாட்டில் நஞ்சு கலந்திருக்கின்றது என்று. அவருக்குக் கடுமையான கோபம் வந்தது.

உடனே அவர் அந்த நஞ்சு கலந்த உணவை எடுத்து, தன்னுடைய தங்கையின் வீட்டுக்குக் கூரையில் எறிய, வீடு முழுவதும் பற்றி எரிந்து சாம்பலானது. அப்பொழுதுதான் பட்டினத்தாரின் தங்கை, தன்னுடைய தவற்றை நினைத்துப் பெரிதும் வருந்தினாள்.

நாம் எதை விதைக்கின்றோமோ அதையே அறுவடை செய்கின்றோம்... நன்மையை விதைத்தால், நன்மையை அறுவடை செய்வோம்; தீமையை விதைத்தால் தீமையைத்தான் அறுவடை செய்யவேண்டும் என்ற செய்தியை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துகூறுகின்றது. இன்றைய முதல் வாசகத்தில் கடவுளுக்கும் அவருடைய மக்களுக்கும் எதிராகத் தீமை செய்த அந்தியோக்கு மன்னன் எப்படி அழிந்துபோனான் என்பதைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

எருசலேம் திருக்கோயிலைத் தீட்டுப்படுத்தியவனும் இஸ்ரயேல் மக்களைத் துன்புருத்தியவனுமான அந்தியோக்கு மன்னன்

முதல் வாசகத்தில், அந்தியோக்கு மன்னன் பாரசீக நாட்டில் உள்ள எலிமாய் நகரில் பொன், வெள்ளி, இன்னபிற பொருள்கள் இருக்கின்றன என்ற செய்தியைக் கேள்விப்பட்டு அந்நகரைக் கைப்பற்ற முயல்வதைக் குறித்து வாசிக்கின்றோம். அவன் அந்நகரைக் கைப்பற்ற வருகின்ற செய்தியைக் கேள்விப்பட்டு, அந்நகரில் இருந்தவர்கள் அவனை எதிர்த்துப் போராடுகின்றார்கள். இதனால் அவன் தப்பித்துப் பாபிலோனுக்கு ஓடிப்போகிறான். மேலும் யூதாவை எதிர்த்துப் போரிடச் சென்ற அவனுடைய படையும் விரட்டியடிக்கப் படுகின்றது. இதனால் அவன் தான் நினைத்தது எது நடக்கவில்லை என்று நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்கின்றான்; அதன்பிறகு அவன் தான் எருசலேம் திருகோயிலில் கொள்ளையடித்ததையும், அங்குள்ள மக்களையும் அழித்ததையும் எண்ணி, மிகுந்த வேதனை அடைகின்றான்.

அரசியலில் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" என்று சிலப்பதிகாரத்தில் ஒரு வாக்கியம் வருமே, அதுபோன்று அந்தியோக்கு மன்னன் தன்னுடைய அரச அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி எருசலேம் திருக்கோயிலைத் தீட்டுப்படுத்தினான்; மக்களையும் கொடுமைப்படுத்தினான். இதனால் அவன் செய்த தவறுகளே அவனுக்கு பெரிய வினையாய் வந்து, அவனுடைய வாழ்வைப் பறிக்கின்றன.

இங்கு அந்தியோக்கு மன்னனின் செயல்கள் அல்லது அவனுடைய வாழ்க்கை நமக்கு என்ன பாடத்தைக் கற்பிக்கின்றது என்பது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

ஒவ்வொருவருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்ப கைம்மாறு உண்டு

"மானிட மகன் தன் தந்தையின் மாட்சியோடு வானதூதர்களோடு வருகின்றபோது, ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்ப அவர் கைம்மாறு அளிப்பார்" (மத் 16: 27) என்பார் இயேசு. இங்கு இயேசு கூறுகின்ற இவ்வார்த்தைகளை அந்தியோக்கு மன்னனுடைய வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது, அவன் செய்த தீச்செயல்களே அவனுக்குக் கைமாறாய் வந்தன என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். எருசலேம் திருக்கோயில் கடவுள் வாழும் இல்லம்; இறைமன்றாட்டின் வீடு (எசா 56:7). அப்படிப்பட்ட ஓர் இடத்தை அந்தியோக்கு மன்னன் தீட்டுப்படுத்தி, அதிலிருந்த பொன், வெள்ளி போன்ற எல்லாவற்றையும் கொள்ளையடித்தான். இதனாலேயே அவன் கொடிய சாவுக்கு உள்ளானான்.

கடவுள் நமக்கு ஒரு பொறுப்பினை கொடுத்திருக்கின்றார் என்றால், அதனை கடவுளுக்கு ஏற்ற வழியில் பயன்படுத்தி, அவருக்குப் பெருமை சேர்க்க வேண்டுமே ஒழிய, ஒருபோதும் அதைத் தன்னலத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என்பதை நாம் உணர்ந்து வாழ்வது நல்லது.

சிந்தனை

"நன்மையை நாடுங்கள்; தீமையைத் தேடாதீர்கள். அப்பொழுது படைகளின் ஆண்டவர் உங்களோடு இருப்பார் " (ஆமோ 5:14) என்பார் ஆமோஸ் இறைவாக்கினர். ஆகையால், நாம் தீமைகளை விட்டொழித்து, நன்மையை நாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
லூக்கா 20: 27-30

"போதகரே, நன்றாகச் சொன்னீர்"

நிகழ்வு

ஒருங்கிணைந்த சோவியத் யூனியனின் தலைவராக இருந்தவர் லியோனிட் பிரஸ்னேவ். கிறிஸ்தவராக இருந்தாலும், கடவுள்மீதும் உயிர்ப்பின்மீதும் சிறிதும் நம்பிக்கை இல்லாமல் இருந்தார் இவர். இவர்க்கு முற்றிலும் நேர் எதிராக இருந்தவர் இவருடைய மனைவி. அவர் கடவுள்மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார்.

லியோனிட் பிரஸ்னேவ், ஒருநாள் தீடிரென இறந்து போனார். இவர்க்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் தலைவர்கள் வந்திருந்தார்கள்; அமெரிக்காவிலிருந்து ஜார்ஜ் புஷ்சும் (மூத்தவர்) வந்திருந்தார். அந்நாட்டு வழக்கப்படி லியோனிட் பிரஸ்னேவின் உடலுக்குச் செய்யவேண்டிய மரியாதை எல்லாம் செய்யப்பட்டது; கல்லறையில் அவருடைய உடலை அடக்கவேண்டியதுதான் பாக்கி இருந்தது. ஆதலால் படைவீரர்கள், லியோனிட் பிரஸ்னேவின் உடலை அடக்கம் செய்வதற்காக கல்லறைக்குக் கொண்டுசென்றார்கள்.

அங்கு சவப்பெட்டியில் இருந்த அவருடைய உடலைக் குழிக்குள் இறக்குவதற்கு முன்னம், படைவீரர் ஒருவர், "தலைவருடைய உடலைக் குழிக்குள் இறக்கப்போகிறோம்... அதனால் கடைசியாக அவருடைய முகத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்" என்றார். அங்கிருந்தவர்களும் அவருடைய முகத்தை பார்த்துக்கொண்டார்கள். அப்பொழுது யாரும் எதிர்பாராத ஒரு செயல் நடந்தது. அதைக் கண்டு அங்கிருந்த எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள். அது என்னவென்றால், அதுவரைக்கும் அமைதியாகவே இருந்த லியோனிட் பிரஸ்னேவின் மனைவி, லியோனிட் பிரஸ்னேவின் நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்து, "இயேசுவே! உம்மீது நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்தவர் இவர்; இவருடைய குற்றங்களை நீர் மன்னித்து, இவர்க்கு நிலைவாழ்வை அளித்தருளும்" என்று வேண்டினார். இதைக் கண்டுதான் அங்கிருந்த எல்லாரும் ஜார்ஜ் புஷ் உட்பட, "கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர்க்கு கடவுள்மீதும் உயிர்ப்பின்மீதும் நம்பிக்கைகொண்டு இப்படியொரு மனைவியாக?" என்று ஆச்சரியப்பட்டார்கள்.

இந்த நிகழ்வில் வருகின்ற லியோனிட் பிரஸ்னேவ் எப்படி கடவுள்மீது, அதிலும் குறிப்பாக உயிர்ப்பின்மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தாரோ, அதுபோன்று இன்றைய நற்செய்தியிலும் உயிர்ப்பின்மீது நம்பிக்கையில்லாத சதுசேயர்களையும் அவர்கள் இயேசுவிடம் உயிர்ப்பு தொடர்பாக எழுப்புகின்ற சிக்கலான கேள்வியையும் அதற்கு இயேசு என்ன மறுமொழி கூறினார் என்பதையும் குறித்து வாசிக்கின்றோம். அவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

யார் இந்த சதுசேயர்கள்?

நற்செய்தியில் இயேசுவைச் சிக்கலில் மாட்டிவிடவேண்டும் என்று அவரிடம் வருகின்றார்களே சதுசேயர்கள், அவர்கள் யார் என்பதை முதலில் தெரிந்துகொள்வோம். சதுசேயர்கள், சாதோக்கின் வழிவந்தவர்கள் (எசே 44: 15); பழைய ஏற்பாட்டில் வருகின்ற முதல் ஐநூல்களை மட்டும் ஏற்றுக்கொண்டவர்கள்; வானதூதர்கள்மீதோ, உயிர்ப்பின்மீதோ நம்பிக்கை இல்லாதவர்கள் (திப 23: 6-8) இவர்கள் வானதூதர்கள்மீதும் உயிர்ப்பின்மீதும் நம்பிக்கை இல்லாமல் இருந்ததற்குக் காரணம், இவர்கள் ஏற்றுக்கொண்ட ஐநூல்களில் அவற்றைப் பற்றிச் சொல்லப்படவில்லையாம் (என்னவோர் அறிவார்ந்த செயல்!). இப்படிப்பட்டவர்கள்தான், ஒருவன் தன்னுடைய மனைவிக்குக் குழந்தை கொடுக்காமல் இறந்துபோனால், கொழுந்தனே மணந்து குழந்தை கொடுக்கலாம் என்ற சட்டத்தோடு வருகின்றார்கள் (இச 25: 5ff; தொநூ 38: 8; ரூத் 3:9; 4:12). இவர்கட்கு இயேசு என்ன மறுமொழி கூறினார் என்பதைத் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்

வருங்கால வாழ்வு எப்படி இருக்கும்?

சதுசேயர்கள் தன்னைச் சிக்கலில் மாட்டிவிடத்தான் வந்திருக்கின்றார்கள் என்று இயேசுவுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். இருந்தாலும் அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவர்களுடைய அறியாமை விளக்கி, அறிவொளி ஊட்டுகின்றார் இயேசு. "இவ்வுலகில் இருப்பது போன்று மறுவுலகில் அருட்சாதனம் நடைபெறுவதில்லை; இனி அவர்கள் சாகமுடியாது என்பதால் வானதூதர்களைப் போன்றும் கடவுளின் மக்களாகவும் இருப்பார்கள்" என்று இயேசு சதுசேயர்கட்குச் சொல்கின்ற வார்த்தைகள் இறந்து உயிர்த்தெழும்போது என்ன நடக்கும் என்பதற்கு விடையாக அமைகின்றது.

மேலும் இயேசு, விடுதலைப்பயண நூல் 3:6 ல் வருகின்ற வார்த்தைகளை மேற்கோள் காட்டிப் பேசுவது, கடவுள் இறந்தோரின் கடவுள் அல்ல, அவர் வாழ்வோரின் கடவுள் என்கின்ற தெளிவை சதுசேயர்க்கும் ஏன், நமக்கும் தருவதாக இருக்கின்றன. சதுசேயர்கள் எந்தப் பகுதியில் உயிர்ப்பைக் குறித்தோ, வானதூதர்களைக் குறித்தோ ஒன்றுமில்லை என்று நினைத்துக்கொண்டிருந்தார்களோ, அந்தப் பகுதியிலிருந்தே இயேசு அவர்கட்கு விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து மறைநூல் அறிஞர்களில் ஒருசிலர், "போதகரே, நன்றாகச் சொன்னீர்" என்கிறார்கள்.

இயேசு சதுசேயர்கட்குக் கொடுத்த விளக்கம், கடவுள் இன்றைக்கும் நம் நடுவில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார் என்கின்ற மிக அருமையான உண்மையாய் எடுத்துகூறுவதாக இருக்கின்றது. ஆகையால், இத்தகைய வாழ்வோரின் கடவுட்கு நாம் உகந்தவர்களாக இருக்கவேண்டும் என்றால், அவர்மீது நம்பிக்கை வைத்து, அவர் வழியில் நடப்பது சாலச் சிறந்தது. நாம் வாழ்வோரின் கடவுள்மீது நம்பிக்கை கொண்டு வாழ்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

"அவர் இறந்ததுபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர் உயிர்த்தெழுந்தது போலவே, நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம்" (உரோ 6:5) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் புனித பவுல் கூறுவதுபோலவே இயேசுவோடு ஒன்றித்து, அவர்மீது நம்பிக்கை வைத்து, அவருடைய வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!