|
|
22 நவம்பர்
2019 |
|
|
பொதுக்காலம்
33ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
புதிய எரிபலி பீடத்தின்மீது
திருச்சட்டப்படி பலி ஒப்புக்கொடுத்தார்கள்.
மக்கபேயர் முதல் நூலிலிருந்து வாசகம் 4:
36-37, 52-59
அந்நாள்களில் யூதாவும் அவருடைய சகோதரர்களும், "நம் பகைவர்கள்
முறியடிக்கப் பட்டார்கள். இப்போது நாம் புறப்பட்டுப் போய் திருஉறைவிடத்தைத்
தூய்மைப்படுத்தி மீண்டும் கடவுளுக்கு
உரித்தாக்குவோம"என்றார்கள்.
எனவே படைவீரர்கள் எல்லாரும் சேர்ந்து சீயோன் மலைக்கு ஏறிச்
சென்றார்கள். நூற்று நாற்பத்தெட்டாம் ஆண்டு கிஸ்லேவு மாதமாகிய
ஒன்பதாம் மாதம் இருபத்தைந்தாம் நாள் விடியற்காலையில் அவர்கள்
எழுந்திருந்து, தாங்கள் எழுப்பியிருந்த புதிய எரிபலி பீடத்தின்மீது
திருச்சட்டப்படி பலி ஒப்புக்கொடுத்தார்கள். வேற்றினத்தார் பலிபீடத்தைத்
தீட்டுப்படுத்தியிருந்த அதே காலத்தில் அதே நாளில் அது மீண்டும்
அர்ப்பணிக்கப்பட்டது.
அப்பொழுது பாடல்களும் நரம்பிசைக் கருவிகளும் யாழ்களும் கைத்தாளங்களும்
முழங்கின. எல்லா மக்களும் குப்புற விழுந்து தங்களுக்கு வெற்றி
அளித்த விண்ணக இறைவனை வழிபட்டு வாழ்த்தினார்கள்; பலிபீட அர்ப்பணிப்பு
விழாவை எட்டு நாள் கொண்டாடி மகிழ்ச்சியோடு எரிபலிகளைச்
செலுத்தினார்கள்; நல்லுறவுப் பலியும் நன்றிப் படையலும் ஒப்புக்கொடுத்தார்கள்;
பொன் முடிகளாலும் குமிழ்களாலும் கோவிலின் முகப்பை அணி செய்து,
வாயில்களையும் அறைகளையும் புதுப்பித்துக் கதவுகளை மாட்டினார்கள்.
மக்கள் நடுவே மிகுந்த அக்களிப்பு நிலவியது; வேற்றினத்தாரின் பழிச்சொல்
நீங்கியது. ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில், அதாவது
கிஸ்லேவு மாதம் இருபத்தைந்தாம் நாள்முதல் எட்டு நாள் வரை அக்களிப்போடும்
அகமகிழ்வோடும் பலிபீட அர்ப்பணிப்பு விழாவைக் கொண்டாட யூதாவும்
அவருடைய சகோதரர்களும் இஸ்ரயேல் சபையார் அனைவரும் முடிவு
செய்தார்கள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
- 01 குறி 29: 10b. 11ab. 11cd-12a. 12b-d (பல்லவி:
13b)
=================================================================================
பல்லவி: மாட்சிமிகு உம் பெயரைப் போற்றுகிறோம் ஆண்டவரே.
10b எங்கள் மூதாதை இஸ்ரயேலின் ஆண்டவரே, நீர் என்றென்றும்
வாழ்த்தப்பெறுவீராக! பல்லவி
11ab ஆண்டவரே, பெருமையும் வலிமையும் மாட்சியும் வெற்றியும்
மேன்மையும் உமக்கே உரியன. ஏனெனில் விண்ணுலகிலும் மண்ணுலகிலும்
இருக்கும் அனைத்தும் உம்முடையவை. பல்லவி
11cd ஆண்டவரே, ஆட்சியும் உம்முடையதே. நீர் யாவருக்கும் தலைவராய்
உயர்த்தப்பெற்றுள்ளீர். 12a செல்வமும் மாட்சியும் உம்மிடமிருந்தே
வருகின்றன. பல்லவி
12b-d நீரே அனைத்தையும் ஆள்பவர். ஆற்றலும் வலிமையும் உம்
கையில் உள்ளன. எவரையும் பெருமைப்படுத்துவதும் வலியவராக்குவதும்
உம் கையில் உள்ளன. பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 10: 27
அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச்
செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்
பின் தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீங்கள் என் இல்லத்தைக் கள்வர்
குகையாக்கினீர்கள்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
19: 45-48
அக்காலத்தில் இயேசு கோவிலுக்குள் சென்று அங்கு விற்பனை செய்து
கொண்டிருந்தோரை வெளியே துரத்தத் தொடங்கினார்.
அவர்களிடம், "என் இல்லம் இறைவேண்டலின் வீடு' என்று மறைநூலில்
எழுதியுள்ளதே; ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்''
என்று கூறினார்.
இயேசு ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்து வந்தார். தலைமைக்
குருக்களும் மறைநூல் அறிஞர்களும் மக்களின் தலைவர்களும் அவரை ஒழித்துவிட
வழி தேடினார்கள். ஆனால் என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை.
ஏனென்றால் மக்கள் அனைவரும் அவர் போதனையைக் கேட்டு அவரையே பற்றிக்கொண்டிருந்தனர்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
என் இல்லம் இறைவேன்டலின் வீடு
ஒருமுறை சுவாமி விவேகானந்தர் ஆன்மீகச் சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தார்.
திரண்டிருந்த மக்கள் கூட்டம் அவரது பேச்சை ஆர்வமாய்
கேட்டுக்கொண்டிருந்தது.
அப்போது கூட்டத்திலிருந்து எழுந்து ஒருவன் குறுக்கிட்டான்,
"சுவாமி! ஆண்டவனை நேரடியாக அடைந்துவிடலாமே; ஆலயம் கோவில்
என்ற ஒன்று எதற்கு?" என்று கேட்டான். அப்போது விவேகானந்தர் அவனிடம்,
"எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவர முடியுமா?" என்று
கேட்டார். அவன் வெளியே போய் ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்தான்.
அதைப் பார்த்து விவேகானந்தர், "உன்னிடம் தண்ணீர் தானே கொண்டுவரச்
சொன்னேன், எதற்கு சொம்பையும் தூக்கிக் கொண்டு வந்திருக்கிறாய்;
சொம்பு இல்லாமல் உன்னால் தண்ணீர் கொண்டுவர முடியாதா?" என்று
கேட்டார். அதற்கு அவன், "சொம்பு இல்லாமல் எப்படி தண்ணீர்
கொண்டுவர முடியும்?, அது முடியாது" என்று பதிலளித்தான்.
உடனே அவர் அவனிடம், "எப்படி சொம்பு இல்லாமல் தண்ணீர் கொண்டுவர
முடியாதோ, அதுபோன்றுதான் கடவுளைக் காண ஓரிடம் தேவைப்படுகிறது.
அந்த இடத்திற்குப் பெயர்தான் ஆலயம்" என்று முடித்தார். திரண்டிருந்த
மக்கள்கூட்டம் விவேகானந்தரின் பதிலைக் கேட்டு, சத்தமாக தங்களுடைய
கைகளைத் தட்டி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தது.
இறைவனைக் காண ஓரிடம் தேவைப்படும் என்று சொன்னால் அதுதான்
கோவில். (கோ கடவுள், வில் இல்லம் = கடவுள் வாழும் இல்லம்).
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு எருசலேம்
திருக்கோவிலைத் தூய்மைப்படுத்துகிறார். ஏனென்றால் உலங்கெங்கும்
பரவிக்கிடந்த யூதர்கள் ஒவ்வொரு ஆண்டும் பாஸ்காவிழாக் கொண்டாட
எருசலேம் திருக்கோவிலுக்கு வருவர். (இயேசுவும் இந்த
பாஸ்காவிழாவில் கலந்துகொள்ளத்தான் எருசலேம் வந்தார் என்று
யோவான் நற்செய்தியானது நமக்கு எதுத்துக்கூறுகிறது). அத்தகைய நேரங்களில்
பலிசெலுத்த, நேர்ச்சை செலுத்த மக்களுக்குப் பொருட்கள் தேவைப்பட்டதன.
இதனைப் பயன்படுத்தி கொண்ட வணிகர்கள் பொருட்களை எருசலேம்
திருக்கோவிலிலே விற்றார்கள்; அதனைச் சந்தைவெளிபோல் ஆக்கினார்கள்;
சாதாரண மக்களும், புறவினத்தாரும் ஜெபிப்பதற்கு மிகப்பெரிய இடையூறாய்
இருந்தார்கள். இதனால்தான் இயேசு சாட்டை எடுத்து அவர்களை விரட்டி
அடிக்கின்றார்; "என் இல்லம் இறைவேன்டலின் வீடு, அதை கள்வர்
குகையாக்காதீர்கள்" என்று கோபம் கொள்கிறார்.
கோவிலானது யூதர்களின் வாழ்விலிருந்து பிரிக்க முடியாத ஒன்று.
நாடோடிகளைப் போன்று வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள் உடன்படிக்கைப்
பேழையில் இறைவனின் பிரசன்னத்தை உணர்ந்தார்கள். அதன்பிறகு சாலமோன்
ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட எருசலேம் திருக்கோவிலில் கடவுள்
உண்மையாக உறைந்திருக்கிறார் என்பதை உணர்ந்தார்கள். பாபிலோனியர்களால்
நாடு கடத்தப்பட்டபோது இறைவன் வாழும் கோவிலைவிட்டுப்
பிரிந்திருக்கிறோமே என்ற மனம் வருந்தி அழுதார்கள். திருப்பாடல்
137: 1 ல் வாசிக்கின்றோம், "பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து,
நாங்கள் சியோனை நினைத்து அழுதோம்" என்று. அந்தளவுக்கு அவர்கள்
எருசலேம் திருக்கோவிலின் மீது ஆழ்ந்த பற்றுகொண்டு வாழ்ந்தார்கள்.
இதற்கு இயேசுவும் விதிவிலக்கல்ல. இயேசு எருசலேம் திருக்கோவிலை,
"என் தந்தையின் இல்லம்" என்கிறார். (யோவான் 2: 16).
ஆக, கோவில் என்பது இறைவன் வாழும் இல்லம். இது இறைவேண்டலுக்கு
மட்டுமே பயன்பட வேண்டுமே ஒழிய வாணிபம் செய்வதற்கு அல்ல என்பது
இயேசுவின் ஆழமான புரிதல். இன்றைக்கு நாம் கோடிக்கணக்கில் பணத்தைக்
கொட்டி வானுயர்ந்த கோவிலைக் கட்டிக் எழுப்புகிறோம். ஆனால் அதில்
இறைவன் குடிகொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்திருக்கிறோமா? அல்லது
அதற்குரிய மரியாதையை, வணக்கத்தைச் செலுத்துகிறோமா என்பது
சிந்தித்தப் பார்க்கவேண்டிய ஒன்று.
வானுயர்ந்த கோவிலைக் கட்டிவிட்டு வாடிநிற்கும் வறியவர்கள், எளியர்களைக்
கண்டும், காணாதும் நாம் வாழ்ந்தால் அதனால் என்ன நன்மை நமக்குக்
கிடைத்துவிடப் போகிறது. "நடமாகும் கோவிலுக்கு நன்மை ஒன்று
செய்தால் அது நடமாடக் கோவிலுக்குப் போய்சேரும்" என்பார் திருமூலர்.
நாம் நம்மோடு வாழும் உயிருள்ள கோவிலுக்கு நடமாடும்
கோவிலுக்கு - நன்மை செய்து வாழுவோம். அதே வேளையில் இறைவன்
குடியிருக்கும் கோவிலுக்கு உரிய மரியாதை செலுத்துவோம். இறையருள்
பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
லூக்கா 19: 45-48
கோயில் எல்லார்க்குமான இறைவேண்டலின்
வீடு
நிகழ்வு
பல ஆண்டுகட்கு முன்பு தெற்குப் பசிபிக் கடலில்
சென்றுகொண்டிருந்த ஒரு கப்பல் பனிப்பாறையின்மீது மோதி உடைந்துபோனது.
அதில் பயணம் செய்த பலர் உயிரிழந்தனர்; ஒருசிலர் மட்டுமே ஒரு
தீவினில் ஒதுங்கி உயிர்தப்பினர். அந்தத் தீவும்கூட மனித மாமிசம்
சாப்பிடுபவர்கள் (Cannibals) அதிகமாக வாழும் ஒரு தீவு என்று
அவர்கட்குத் தெரிந்ததும், அவர்கள் அதிர்ந்துபோனார்கள்.
அப்பொழுது அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர், "அதோ ஒரு மலை இருக்கின்றது
பாருங்கள! அந்த மலைக்கு நம்மில் ஒருவரை அனுப்பிவைப்போம். அவர்
அந்த மலைமேல் ஏறி, மனித மாமிசம் சாப்பிடுபவர்கள் எந்தப் பகுதியில்
இல்லையென்று பார்த்துவிட்டு வரட்டும். அதன்பிறகு நாம்
செல்வோம். எப்பொழுது இந்தப் பகுதி வழியாகக் கப்பல் வருகின்றதோ,
அதுவரைக்கும் நாம் அங்கு இருப்போம்" என்றார். எல்லாரும் அதற்குச்
சம்மதிக்கவே, அவர்களில் ஒருவர் சற்றுத் தொலைவில் தெரிந்த அந்த
மலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அவர் அந்த மலையின் உச்சியில் ஏறிப் பார்த்தபோது மிகவும் ஆச்சரியப்பட்டார்.
ஆம், அங்கு ஒரு திருக்கோயில் இருந்தது. அதைப் பார்த்துதான் அவர்
மிகவும் ஆச்சரியப்பட்டார். அப்பொழுது அவர் தன்னோடு வந்தவர்கட்குச்
சைகை காட்டி, "இங்கொரு கோயில் இருக்கின்றது; கோயில் இருப்பதால்
இவர்கள் இப்பொழுது மனித மாமிசம் சாப்பிடுபவர்களாக இருக்க
வாய்ப்பில்லை" என்று உரக்கக் கத்தினார். உடனே அந்தக் குழுவில்
இருந்த இருந்தவர்கள், அந்தத் தீவுக்குள் சென்று, எந்தவோர் அச்சமின்றித்
தங்கினார்கள். அவர்கள் அங்கு தங்கியிருந்த நாள்களில் அவர்கட்கு
அங்கிருந்த மனிதர்களிடமிருந்து எந்தவோர் ஆபத்தும் வரவில்லை.
சில நாள்கள் கழித்து, அந்த வழியாக ஒரு கப்பல் வந்தது. அதில்
அவர்கள் ஏறித் தங்களுடைய நாட்டிற்கு பாதுகாப்பாகத் திரும்பிச்
சென்றார்கள்.
கோயில் வெறும் கற்களால் கட்டப்பட்ட ஒரு கட்டடம் அல்ல; அது
அரசர்கட்கெல்லாம் அரசராகிய ஆண்டவர் உடனுறையும் (பிரசன்னமாக இருக்கும்)
ஓர் இல்லம்; அவருடைய ஆசியை அபரிமிதமாகப் பெற்றுத் தரும் இல்லம்.
அப்படிப்பட்ட ஓர் இல்லம் எங்கிருந்தாலும், அது அங்கிருப்பவர்கட்கு
ஆசியையும் வாழ்வில் மாற்றத்தையும் கொண்டுவந்து தரும். மேலே
சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் மனித மாமிசம் சாப்பிடுபவர்கள்
சாதாரண மனிதர்களாக மாறியிருந்தார்கள் என்றால், அதற்கு முதன்மையான
காரணம் அவர்கள் நடுவில் இருந்த கோயில் என்றால் அது மிகையில்லை.
இஸ்ரயேல் மக்களுடைய வாழ்விலும் எருசலேம் திருக்கோயில் மிகப்பெரிய
மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்! ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
அந்த மாற்றம் நிகழாததற்குக் காரணமென்ன...? இயேசு ஏன் எருசலேம்
திருகோயிலில் வாணிபம் செய்தவர்களை விரட்ட்யடித்தார்...? என்பவற்றைக்
குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
கள்வர்குகையாக மாறிப்போன இறைவேண்டலின் வீடு
எருசலேம் திருக்கோவில், இறைவாக்கினர் எசாயா சொல்வதுபோன்று,
"மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய "இறைமன்றாட்டின் வீடு" (எசா
56: 7). அத்திருக்கோயில் இறைமன்றாட்டின் வீடாக இருந்திருக்க
வேண்டும். ஆனால், அது இறைமன்றாட்டின் வீடாக, இல்லாமல் கள்வர்
குகையாக (எரே 7:11), இன்னும் சொல்லப்போனால், திருக்கோயிலை
மேலாண்மை (நிர்வாகம்) செய்துவந்த தலைமைக்குருக்கள் மட்டும் ஏனையோரின்
தன்னலப்போக்கினால், வணிகத்தலமாக மாறிப்போனதால், இயேசு அங்கு
வாணிபம் செய்துவந்தவர்களை விரட்டியடிக்கின்றார். உப்பு
கோயில்- உவர்ப்போடு இருக்கவேண்டும். அது சாரமற்றுப் போனால் அல்லது
அதற்குரிய மாண்பினை இழந்தால், கடவுளின் சினத்திற்கு உள்ளாகவேண்டிய
நிலைதான் ஏற்படும். எருசலேம் திருகோயிலில் அதுதான் நடந்தது.
இருளாக மாறிப்போன ஒளியாக இருக்கவேண்டிய யூதர்கள்
எருசலேம் திருக்கோயில் ஒரு குறிப்பட்ட மக்கட்கான இறைமன்றாட்டின்
வீடு அல்ல; மக்களினங்கள் அனைத்திற்குரிய இறைமன்றாட்டின் வீடு
என்று மேலே பார்த்தோம். அப்படியானால், அது எல்லாரும் மன்றாடுவதற்கான
இடமாக இருந்திருக்கவேண்டும். இலாப நோக்கத்தோடு செயல்பட்ட எருசலேம்
திருக்கோயிலை மேலாண்மை செய்துவந்தவர்களோ, புறவினத்தாருடைய இடத்தை
வாணிபத்திற்குப் பயன்படுத்தி, அவர்களை வழிபாடு செய்யவிடாமல் தடுத்தார்கள்.
அதனால்தால் இயேசு அங்கு வாணிபம் செய்தவர்களை விரட்டி அடித்தார்.
இதில் இன்னொரு முக்கியமான உண்மை. யூதர்கள் எல்லார்க்கும் ஒளியாக
இருக்கக் கடவுளால் அழைக்கப்பட்டிருந்தார்கள் (எசா 60:3) ஆனால்,
நடைமுறையில் அவர்கள் புறவினத்தாரை மனிதர்களாகக் கூட மதியாமல்,
அவர்களை வஞ்சித்தும் இன்னும் பல்வேறு செயல்களால் அவர்கட்கு இருளாக
இருந்து வந்தார்கள். அதனாலும் இயேசு அவ்வளவு சினம்கொண்டு அவர்களை
விரட்டியடிக்கின்றார்.
புனித பவுல் சொல்வது போன்று தூய ஆவியார் தங்கும் உயிருள்ள
கோயிலாகிய நாமும்கூட (1 6:19 பிறர்க்கு ஒளியாக இருக்கவேண்டும்.
இருக்கவேண்டியது நம்முடைய கடமை. அப்படி நாம் இல்லாத பட்சத்தில்
கடவுளின் சினத்திற்கு ஆளாவோம் என்பது உறுதி. ஆகையால், நம்முடைய
நற்செயல்களால், நம்பிக்கை நிறைந்த வாழ்வினால் உயிருள்ள கோயிலாக
இருந்து, பிறர்க்கு ஒளியாக இருக்க முயற்சி செய்வோம்.
சிந்தனை
"கோயில் என்பது நற்செய்தி அறிவிப்புக்கான இடமாகவும் நற்செயல்கட்கான
விளைநிலமாகவும் இருக்கவேண்டும். இவற்றில் ஏதாவது ஒன்று
குறைந்தாலும் கோயில் தன்னுடைய மாண்பினை இழந்துவிடும்" என்பார்
ராபர்ட் டி.தேஹன் (Robert D. Dehann) என்ற எழுத்தாளர். ஆகையால்,
நாம் கோயில் என்பதை வெறும் கட்டடமாகப் பார்க்காமல், அது உயிருள்ள
இறைவன் தங்கும் ஓர் இல்லம் என்பதை உணர்ந்து, அங்கிருந்து நற்செய்தியையும்
நற்செயல் செய்வதற்கான உத்வேகத்தையும் பெற்று, உயிருள்ள கோயில்களாக
விளங்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
தூய செசிலியா (நவம்பர் 22)
நிகழ்வு
மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து, மறைசாட்சியாக உயிர்நீத்த
செசிலியாவின் உடல் ஸ்ரஸ்ட்டேவர் என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இவருடைய கல்லறை 1599 ஆம் ஆண்டு ஒரு சில காரணங்களுக்காகத்
தோண்டி எடுக்கப்பட்டது. அப்போது சைப்ரஸ் என்னும் மரத்தால் செய்யப்பட்ட
பெட்டியில் வைத்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்தது
தெரியவந்தது. பின்னர் அவர் அடக்கம் செய்து வைக்கப்பட்ட
பெட்டியைத் திறந்து பார்த்தபோது, அவருடைய உடல் அழியாமல், அப்போதுதான்
இறந்ததுபோன்று இருப்பதைக் கண்டு எல்லோரும் ஆச்சரியப்பட்டு
நின்றார்கள். "செசிலியா தன்னுடைய பாக்களால் இறைவனுக்கு மகிமை
செலுத்தினாள், இறைவனும் செசிலியாவின் உடலை அழியாமல் காத்து மகிமைப்படுத்தினார்"
என்று அனைவரும் அவரை வாயாரப் புகழ்ந்துகொண்டே சென்றார்கள்.
வாழ்க்கை வரலாறு
செசிலியாவைப் பற்றித் தெரிந்துகொள்ள நமக்கு இருக்கும் ஒரே ஆதாரம்
"தூய செசிலியாவின் திருப்பாடுகள்" என்ற புத்தகம்தான். இதில்
செசிலியா மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தவர் என்றும் உரோமையை ஆண்ட
அலெக்ஸாண்டர் என்ற மன்னனின் ஆட்சிக் காலத்தில் மறைசாட்சியாகக்
கொல்லப்பட்டார் என்றும் சொல்லப்படுகின்றது.
செசிலியா குழந்தைப் பருவத்திலிருந்தே தூய, மாசற்ற வாழ்க்கையை
வாழ்ந்து வந்தாள். தன்னுடைய கன்னிமை முழுவதையும் ஆண்டவருக்காக
ஒப்புக் கொடுத்து வந்தார். இத்தகைய தருணத்தில்தான் இவருடைய
பெற்றோர் இவருடைய விருப்பம் இல்லாமலே இவரை வலேரியான் என்ற இளைஞனுக்கு
மணமுடித்துக் கொடுத்தார்கள். செசிலியாவோ வலேரியாரிடம், "நான்
என்னுடைய உடலை எனது மணவாளனாகிய ஆண்டவர் இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டேன்.
ஆகையால் எந்தவிதத்திலும் என்னுடைய உடலை உனக்குத் தரமாட்டேன்;
என்னுடைய கற்பை எப்போதும் வானதூதர் ஒருவர் பாதுகாத்து வருகின்றார்"
என்றார். இதைக் கேட்ட வலேரியான், "உன்னுடைய கற்பை வானதூதர் காவல்காத்து
வருகின்றாரா?, என்னால் நம்பமுடியவில்லையே" என்றான். அதற்கு
செசிலியா, "இதெல்லாம் திருமுழுக்குப் பெற்றோரின் கண்களுக்கு மட்டுமே
தெரியும், வேறு எவரது கண்களுக்கும் தெரியாது" என்றார்.
உடனே வலேரியான் அர்பன் (Urban) என்ற திருத்தந்தையிடம் சென்று
திருமுழுக்குப் பெற்று வந்தான். அவன் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது
செசிலியா தன்னுடைய அறையில் ஜெபித்துக்கொண்டிருந்தார். அப்போது
அவன் கண்ட காட்சி அவனை மெய்சிலிர்க்க வைத்தது. செசிலியா சொன்னதுபோன்றே,
அவருக்குப் பக்கத்தில் வானதூதர் நின்றுகொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சிக்குப்
பிறகு வலேரியான் இறைவன்மீது முழுமையாக நம்பிக்கைகொண்டு வாழத்தொடங்கினான்.
அவனுடைய சகோதரனாகிய திபெர்தியுஸ் என்பவனும் ஆண்டவர்மீது நம்பிக்கைகொள்ளத்
தொடங்கினான்.
இச்செய்தி எப்படியோ உரோமை ஆளுநராகிய அல்மாக்கியுஸ் என்பவனுக்குத்
தெரிந்தது. அவன் மாக்சிமஸ் என்ற தன்னுடைய படைத்தளபதியிடம்
சொல்லி வலேரியானையும் திபெர்தியுசையும் கைதுசெய்து கொலை செய்யச்
சொன்னான். அதன்படியே அவர்கள் இருவரும் தலை வெட்டப்பட்டு கொலை
செய்யப்பட்டார்கள். சில நாட்களுக்குப் பிறகு அல்மாகியுஸ் என்ற
அந்த ஆளுநன் செசிலியாவிடம் கிறிஸ்துவை மறுதலிக்கச் சொன்னான்.
ஆனால் செசிலியாவோ, "நான் ஒருபோதும் கிறிஸ்துவை மறுதலிக்க
மாட்டேன்" என்று சொல்லி தன்னுடைய நம்பிக்கையில் மிக உறுதியாக
இருந்தார். இதைப் பார்த்து சினம்கொண்ட ஆளுநன் தன்னுடைய படைவீரர்
ஒருவனை அழைத்து, அவரைக் கொன்றுபோடச் சொன்னான். படைவீரனோ
செசிலியாவின் கழுத்தில் வாளை இறக்கினான். அப்போது செசிலியாவின்
உடலிலிருந்து இரத்தம் வெளியேறியதே ஒழிய, அவருடைய உயிர் அவரை
விட்டுப் போகவில்லை. அந்நேரத்திலும் அவர் தன்னுடைய இனிமை மிகு
பாக்களால் இறைவனைப் புகழ்ந்துகொண்டே இருந்தார். ஏறக்குறைய
மூன்று நாட்களுக்குப் பின்தான் அவருடைய உயிர் அவருடைய உடலை
விட்டு நீங்கியது.
செசிலியா தன்னுடைய மறைசாட்சிய வாழ்வால், இனிமைமிகு பாக்களால்
இறைவனுக்கு மகிமையும் புகழும் செலுத்தியவளாய் மாறினாள்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
திரு இசையின் பாதுகாவலியான தூய செசிலியாவின் விழாவைக்
கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்
என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
1. கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளால் அவரைப் புகழ்வோம்
செசிலியா தன்னுடைய வாழ்வு முழுவதும் கடவுள் தனக்குக் கொடுத்த
திறமையைப் பயன்படுத்தி இறைவனைப் புகழ்ந்துகொண்டே இருந்தார்,
அதன்வழியாக அவருக்குப் பெருமை சேர்த்தார். அவருடைய விழாவைக்
கொண்டாடும் நாம் அவரைப் போன்று கடவுள் நமக்குக்
கொடுத்திருக்கும் திறமைகளால் கடவுளைப் புகழ்கின்றோமா? என
சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
திருப்பாடல் 9:11 ல் வாசிக்கின்றோம், "சீயோனில் தங்கியிருக்கும்
அனைவரும் ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; அவருடைய செயல்களை மக்களினத்தாரிடையே
அறிவியுங்கள்!" என்று. நாம் ஒவ்வொருவரும் இறைவனைப் புகழ்ந்துபாடவேண்டும்
என்பதுதான் நமக்கு முன்பாக வைக்கப்படும் வேண்டுகோளாக இருக்கின்றது.
முன்பொரு காலத்தில் ஒரு குக்கிராமத்தில் விறகுவெட்டி வெட்டி ஒருவன்
இருந்தான். அவன் தான் வெட்டிய விறகை விற்று, அதிலிருந்து
கிடைத்த சொற்ப வருமானத்தை வைத்து வாழ்க்கை நடத்திவந்தான். ஆனாலும்
அவன் அன்றாடம் கிடைக்கும் விறகுக்காக இறைவனைப் புகழ்ந்துகொண்டே
வந்தான். இறைவன் தனக்கு அன்றாடம் தரும் உணவிற்காக, உடைக்காக,
உறைவிடத்திற்காக இறைவனைப் புகழ்ந்து வந்தான். தன் மனைவிக்காக,
மக்களுக்காகவும் அவன் இறைவனைப்புகழ்ந்து வந்தான்.
ஒரு நாள் அவன் இப்படி இறைவனைப் புகழ்ந்து கொண்டிருந்தபோது,
மேலிருந்து மலர்கள் அவன் மீது பொழியப்பட்டன. அவன் ஏறெடுத்துப்பார்த்தான்.
அப்போது ஆயிரக்கணக்கானோர் மலர்களை தூவிக்கொண்டிருந்தார்கள்.
உடனே அவன் அவர்களிடம் "நீங்கள் எல்லாம் யார்?" என்று கேட்டான்.
அதற்கு விறகு வெட்டி. "நாங்கள் கடவுளுடைய தூதர்கள்." என்றார்கள்.
அவன் மீண்டுமாக அவர்களிடம், "என் மீது ஏன் மலர்களை தூவுகிறீர்கள்?,
நான் அப்படி ஒன்றும் கடவுளிடம் கேட்கவில்லையே" என்றான்.
"அதற்காகத் தான் கடவுள் உன்மீது மலர்களை தூவச்சொன்னார். உலகில்
வாழும் கோடிக்கணக்கான மக்களில் நீ ஒருவன் மட்டும்தான் எதையும்
கேட்டதில்லை. மற்றவர்கள் எல்லாம் பட்டியல் போட்டு கடவுளை கேட்ட
வண்ணமாய் இருக்கிறார்கள். நீயோ எதையும் கேட்டதில்லை. மாறாக இறைவனைப்
புகழ்ந்துகொண்டே இருக்கின்றாய். எனவே தான் இறைவன் மகிழ்ந்து உன்னைப்
பெருமைப்படுத்தினார்" என்றார்கள்.
நாம் இறைவனைப் புகழும்போது இறைவன் நமக்கு ஆசிர்வாதம் வழங்கிக்கொண்டே
இருப்பார். அதைத்தான் இந்தக் கதை நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
ஆகவே, தூய செசிலியாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் இறைவனை
எப்போதும் புகழ்ந்துகொண்டே இருப்போம் என்ற உறுதி எடுப்போம். இறைவனுக்கு
உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்
பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
புதிய எரிபலி பீடத்தின்மீது திருச்சட்டப்படி
பலி ஒப்புக்கொடுத்தார்கள்.
மக்கபேயர் முதல் நூலிலிருந்து வாசகம் 4: 36-37, 52-59
"திருவுறைவிடத்தைத் தூய்மைப்படுத்தி
மீண்டும் கடவுளுக்கு உரித்தாக்குவோம்"
நிகழ்வு
ஒருவர் கனவு ஒன்று கண்டார். அந்தக் கனவில் அவர் ஒரு பெரிய நகரில்
இருக்கக் கண்டார். அந்த நகரில் பெரிய பெரிய கட்டடங்களும் மாட
மாளிகைகளும் வானுயர்ந்த கோபுரங்களும் இருக்கக் கண்டார். அவற்றுக்கு
நடுவில் ஒரு சிறிய கட்டடம் இருந்தது. அதில் மக்கள் உள்ளே போவதும்
வருவதுமாக இருந்தார்கள்.
நூறு ஆண்டுகள் கடந்தன. அந்த மனிதர் முன்பிருந்த அதே நகரில்
தான் இருக்கக் கண்டார். அந்த நகரமே முற்றிலும் மாறியிருந்தது.
விண்ணை முட்டும் கட்டடங்கள், மாட மாளிகைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்
என்று அந்த நகரம் புதிய தோற்றத்தில் இருந்தது; ஆனால்,
குறிப்பிட்ட அந்தக் கட்டடம் மட்டும் மாறாமல் அப்படியே இருந்தது;
அந்தக் கட்டடத்தில் மக்கள் முன்பு போல் உள்ளே போவதும் வருவதுமாய்
இருந்தார்கள்.
ஆயிரம் ஆண்டுகள் கடந்தன. அந்த மனிதர் முன்பிருந்த அதே நகரில்
தான் இருக்கக் கண்டார். அவர் அந்த நகரில்தான் இருக்கின்றார் என்று
கண்டுபிடிப்பதற்காக அவருக்கு நீண்டநேரம் ஆனது. காரணம் அந்த நகரில்
நிறையத் தொழிற்சாலைகள், பள்ளிக்கூடங்கள், பெரிய பெரிய வணிகக்கூடங்கள்,
கேளிக்கை விடுதிகள், எழில்மிகு கோபுரங்கள் என்று அந்த நகரமே
புதுப்பொழிவோடு இருந்தது. அவற்றுக்கு நடுவில் குறிப்பிட்ட அந்தக்
கட்டடம் சிறு சிறு மாற்றங்களோடு இருந்தது; ஆனால், மக்கள் மட்டும்
அந்தக் கட்டத்திற்குள் போவதையும் வெளியே வருவதையும் நிறுத்தவே
இல்லை. இது அந்த மனிதருக்கு மிகுந்த வியப்பைத் தந்தது.
உடனே அந்த மனிதர், குறிப்பிட்ட அந்தக் கட்டடத்திற்குள் நுழைய
இருந்த ஒரு மனிதரை அழைத்து, "இது என்ன கட்டடம்...? ஏன் இந்தக்
கட்டடம் மட்டும் மாறாமல் அப்படியே இருக்கின்றது...? எதற்காக இந்தக்
கட்டடத்திற்குள் மக்கள் உள்ளே போவதும் வெளியே வருவதுமாக இருக்கின்றார்கள்...?"
என்று கேட்டார். அதற்கு அந்த மனிதர், "இது சாதாரண கட்டடம்
கிடையாது... கடவுள் உறைந்திருக்கும் இல்லம். இந்த உலகத்திலுள்ள
யாராலும் தரமுடியாத அமைதியை, இந்தக் கோயிலில் உறைந்திருக்கும்
கடவுள் தருகின்றார். அதனால்தான் இந்தக் கோயிலுக்குள் பலநூறு ஆண்டுகளாக
மக்கள் போவதும் வருவதுமாக இருக்கின்றார்கள்" என்றார். இதைக்
கேட்டு அந்த மனிதரும் கடவுளின் திருவுறைவிடத்திற்குள்
நுழைந்தார்.
கடவுளின் திருவுறைவிடமாம் கோயிலைத் தவிர, இவ்வுலகில் மன அமைதியையும்
நிம்மதியையும் தரக்கூடிய ஓர் இடம் இருந்துவிட முடியுமா...?
நிச்சயமாக இருக்க முடியாது. அப்படிப்பட்ட ஓர் இல்லத்தை, இடத்தைத்
தூய்மையாக வைத்திருப்பது நம்முடைய கடமையல்லவா! சிந்தித்துப்
பார்க்கவேண்டிய ஒரு விசயம். இன்றைய முதல் வாசகத்தில் கடவுளின்
திருவுறைவிடத்தைத் தூய்மைப்படுத்திக் கடவுளுக்கு உரிதாக்குவதைக்
குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
கடவுளின் திருவுறைவிடம் தீட்டுப்படுத்தப்படல்
யூதர்களைப் பொறுத்தளவில் கடவுளின் திருவுறைவிடமாம் எருசலேம்
திருக்கோயில் ஒரு முக்கியமான இடமாக, இன்னும் சொல்லப்போனால்,
அவர்களுடைய வாழ்வில் ஓர் அங்கமாகக் கருதப்பட்டது. அப்படிப்பட்ட
திருக்கோயிலானது கிரேக்க அரசனாகிய அந்தியோக்கினால் தீட்டாக்கப்பட்டது.
குறிப்பாக எருசலேம் திருக்கோயிலில் இருந்த பலிப்பீடத்தில்
பாகால் தெய்வத்திற்கு பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இவ்வாறு கடவுளின்
திருவுறைவிடமாம் எருசலேம் திருக்கோயில் தீட்டாக்கப்பட்டது. இந்நிலை
தொடர்ந்து நடைபெற்றதா? இல்லையா? என்பதை இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
கோயில் தூய்மைப்படுத்தப்பாடல்
எருசலேம் திருக்கோயிலில் பிற தெய்வ வழிபாடு நடந்ததற்கு, யூதர்களிடமிருந்து
ஆங்காங்கே எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக மத்தத்தியாவின்
குடும்பத்திலிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ஒரு கட்டத்தில்
இத்தகைய பாதகச் செயலைச் செய்துவந்த அந்தியோக்கு அரசனின் ஆட்சி
முறியடிக்கப்பட்டது. அதனால் மத்தத்தியாவின் மகனான யூதா, தன்னோடு
இருந்தவர்களிடம், "இப்பொழுது நாம் புறப்பட்டுப் போய்த்
திருவுறைவிடத்தைத் தூய்மைப் படுத்தி, மீண்டும் கடவுளுக்கு உரித்தாக்குவோம்"
என்று அதன்படியே செய்கின்றார். அதுதான் இன்றைய முதல் வாசமாக இருக்கின்றது.
யூதாவும் அவரோடு இருந்தவர்களும் கடவுளின் திருவுறைவிடத்தைத்
தூய்மைப்படுத்தியபின், ஒன்பதாம் மாதமான கிஸ்லோ மாதத்தின் இருபத்தைந்தாம்
நாளில் பலி ஒப்புக்கொடுத்தார்கள். அதன்பின் எல்லாரும் சேர்ந்து
பலிபீட அர்ப்பணிப்பு விழாவைக் கொண்டாடினார்கள். அதுதான்
பின்னாளில் கோயில் அர்ப்பணிப்பு விழாவாகக் கொண்டாடப்பட்டது
(யோவா 10: 22-23).
முதல் வாசகத்தில் இடம்பெறும் இந்த நிகழ்வு நமக்கு முன்
வைக்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்: அதுதான் கடவுளின் திருவுறைவிடமான
கோயிலையும் தூய ஆவியார் தங்கும் கோயிலான நம்மையும் தூய்மையாக
வைத்திருக்கின்றோமா? என்பதாகும். பலநேரங்களில் நம்முடைய தீச்செயல்கள்
இரண்டையும் தீட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். இத்தகையதொரு
செயலை நம்மிடமிருந்து மாற்றி, கடவுளின் திருவுறைவிடத்தையும் நம்மையும்
தூய்மையாக வைத்திருக்க முயற்சி செய்வோம்.
சிந்தனை
"உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவியார்
தங்கும் கோயில் என்பது உங்களுக்குத் தெரியாதா?" (1 கொரி 6: 19)
என்பார் புனித பவுல். ஆகையால், நாம் கடவுளின் திருவுறைவிடத்தையும்
நம்மையும் தூய்மையாக வைத்திருக்க முயற்சி செய்வோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். |
|