|
|
19 நவம்பர்
2019 |
|
|
பொதுக்காலம்
33ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இப்போது என் உயிரை ஆண்மையுடன் கையளிப்பதன் மூலம் என்
முதுமைக்கு நான் தகுதியுடையவன் என மெய்ப்பிப்பேன்.
மக்கபேயர் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 6: 18-31
அந்நாள்களில் தலைசிறந்த மறைநூல் அறிஞர்களுள் ஒருவரும் வயதில்
முதிர்ந்தவரும் மாண்புறு தோற்றம் உடையவருமான எலயாசர் பன்றி இறைச்சி
உண்ணத் தம் வாயைத் திறக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்.
ஆனால் அவர் மாசுபடிந்தவராய் வாழ்வதை விட மதிப்புடையவராய் இறப்பதைத்
தேர்ந்து கொண்டு இறைச்சியை வெளியே துப்பிவிட்டுத் தாமாகவே
சித்திரவதைக் கருவியை நோக்கிச் சென்றார். உயிர்மேல் ஆசை இருப்பினும்,
திருச்சட்டம் விலக்கியிருந்த பண்டங்களைச் சுவைத்தும் பாராமல்
தள்ளிவிடத் துணியும் எல்லாரும் இவ்வாறே செய்யவேண்டும்.
சட்டத்திற்கு எதிரான அந்தப் பலி விருந்துக்குப் பொறுப்பாய் இருந்தவர்கள்
அவரோடு கொண்டிருந்த நீண்டகாலப் பழக்கம் காரணமாக அவரை ஒதுக்கமாக
அழைத்துச் சென்று, அவர் உண்ணக்கூடிய இறைச்சியை அவரே தயாரித்துக்
கொண்டுவருமாறும், மன்னன் கட்டளையிட்டபடி பலியிடப்பட்ட இறைச்சியை
உண்பது போல நடிக்குமாறும் அவரைத் தனிமையில் வேண்டிக் கொண்டார்கள்.
இவ்வாறு செய்வதால் அவர் சாவினின்று காப்பாற்றப்படுவார் என்றும்,
அவரோடு அவர்கள் கொண்டிருந்த பழைய நட்பின் காரணமாக மனிதநேயத்தோடு
நடத்தப்படுவார் என்றும் அவர்கள் எண்ணினார்கள்.
ஆனால் எலயாசர் தமது வயதுக்குரிய தகுதிக்கும் முதுமைக்குரிய
மேன்மைக்கும் நரைமுடிக்குரிய மாண்புக்கும் சிறு வயதுமுதல் தாம்
நடத்தியிருந்த மாசற்ற வாழ்க்கைக்கும் கடவுள் கொடுத்திருந்த
திருச்சட்டத்திற்கும் ஏற்றபடி மேலான முறையில் உறுதிபூண்டவராய்,
உடனே தமது முடிவைத் தெரிவித்து, தம்மைக் கொன்றுவிடுமாறு
கூறினார்.
அவர் தொடர்ந்து, "இவ்வாறு நடிப்பது எனது வயதுக்கு ஏற்றதல்ல;
ஏனெனில், தொண்ணூறு வயதான எலயாசர் அன்னியருடைய மறையை ஏற்றுக்
கொண்டுவிட்டார் என இளைஞருள் பலர் எண்ணக்கூடும். குறுகிய,
நிலையில்லாத வாழ்வுக்காக நான் இவ்வாறு நடிப்பேனாகில் என்
பொருட்டு அவர்கள் நெறி பிறழ நேரிடும்; அவ்வாறு நேரிட்டால் அது
என் முதுமையை நானே களங்கப்படுத்துவதும் இழிவுபடுத்துவதும் ஆகும்.
மனிதரின் தண்டனையினின்று நான் தற்காலிகமாக விடுபட்டாலும், உயிரோடு
வாழ்ந்தாலும் இறந்தாலும், நான் எல்லாம் வல்லவருடைய கைக்குத் தப்ப
முடியாது.
ஆகவே இப்போது என் உயிரை ஆண்மையுடன் கையளிப்பதன் மூலம் என்
முதுமைக்கு நான் தகுதியுடையவன் என மெய்ப்பிப்பேன்; மதிப்புக்குரிய,
தூய சட்டங்களுக்காக விருப்போடும் பெருந்தன்மையோடும் எவ்வாறு
இறப்பது என்பதற்கு ஓர் உயரிய எடுத்துக்காட்டை விட்டுச்
செல்வேன்'' என்றார். இதெல்லாம் கூறி முடித்ததும் அவர் சித்திரவதைக்
கருவியை நோக்கிச் சென்றார்.
சற்றுமுன் அவரைக் கனிவோடு நடத்தியவர்கள் இப்போது கல்நெஞ்சராய்
மாறினார்கள்; ஏனெனில் அவர் கூறியது அவர்களுக்கு மடமையாகத்
தோன்றியது. அடிபட்டதால் இறக்கும் தறுவாயில் இருந்தபோது அவர் அழுது
புலம்பி, "நான் சாவினின்று விடுவிக்கப்பட்டிருக்கலாம் என்றாலும்,
அடியினால் என் உடலில் ஏற்படும் கொடிய துன்பங்களைத் தாங்கிக்
கொள்கிறேன்; ஆண்டவருக்கு நான் அஞ்சுவதால் என் உள்ளத்தில் மகிழ்ச்சியோடு
இவற்றை ஏற்றுக் கொள்கிறேன்; ஆண்டவர் தம் தூய ஞானத்தால் இவற்றையெல்லாம்
அறிகிறார்'' என்றார்.
இவ்வாறு எலயாசர் உயிர் துறந்தார். அவருடைய இறப்பு இளைஞர்களுக்கு
மட்டுமல்ல, அவருடைய நாட்டு மக்கள் அனைவருக்குமே சான்றாண்மைக்கு
எடுத்துக்காட்டாகவும் நற்பண்புக்கு அடையாளமாகவும் விளங்கியது.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
- திபா 3: 1-2. 3-4. 5-7ab (பல்லவி: 5b)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே எனக்கு ஆதரவு.
1 ஆண்டவரே, என் எதிரிகள் எவ்வளவாய்ப் பெருகிவிட்டனர்! என்னை எதிர்த்து
எழுவோர் எத்தனை மிகுந்துவிட்டனர்!
2 கடவுள் அவனை விடுவிக்க
மாட்டார்' என்று என்னைக் குறித்துச் சொல்வோர் பலர். பல்லவி
3 ஆயினும், ஆண்டவரே, நீரே எனைக் காக்கும் கேடயம்; நீரே என்
மாட்சி; என்னைத் தலைநிமிரச் செய்பவரும் நீரே. 4 நான் உரத்த குரலில்
ஆண்டவரிடம் மன்றாடுகின்றேன்; அவர் தமது திருமலையிலிருந்து எனக்குப்
பதிலளிப்பார். பல்லவி
5 நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்: ஏனெனில், ஆண்டவரே எனக்கு
ஆதரவு. 6 என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம் பகைவருக்கு நான்
அஞ்சமாட்டேன். 7யb ஆண்டவரே, எழுந்தருளும்; என் கடவுளே, என்னை
மீட்டருளும். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
01 யோவா 04: 10b
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம்
பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன்
வந்திருக்கிறார்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
19: 01-10
அக்காலத்தில் இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க்
கொண்டிருந்தார்.
அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர்
வரிதண்டுவோருக்குத் தலைவர். இயேசு யார் என்று அவர் பார்க்க
விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்ததால் அவரைப்
பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார்.
அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி
மரத்தில் ஏறிக்கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார்.
இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம்,
"சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும்; இன்று உமது வீட்டில் நான்
தங்க வேண்டும்'' என்றார்.
அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார்.
இதைக் கண்ட யாவரும், "பாவியிடம் தங்கப் போயிருக்கிறாரே இவர்''
என்று முணுமுணுத்தனர்.
சக்கேயு எழுந்து நின்று, "ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை
ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க்குற்றம்
சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத்
திருப்பிக் கொடுத்து விடுகிறேன்'' என்று அவரிடம் கூறினார்.
இயேசு அவரை நோக்கி, "இன்று இந்த வீட்டிற்கு மீட்பு
உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! இழந்து போனதைத்
தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்'' என்று சொன்னார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
குற்றமில்லாத மனிதர் உலகினில் இல்லை.
தன் குற்றத்தை ஒப்புக் கொள்பவர் தன்னை உணர்ந்தவராகிறார்.
தன்னை உணர்ந்தவரே, தரணியில் சிறந்தவராகிறார்.
சக்கேயு, தன்னை உணர்ந்தார். தன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
அதற்கு தானாக முன்வந்து பரிகாரம் தேடினார். இறைபார்வையில்,
இறைஒளியில் சிறந்தவராகிறார்.
இவர் ஒருவருடைய மனமாற்றம் இவருடைய குடும்பத்திற்கே மீட்பினை
தேடித் தந்தது.
நீ உன்னையறிந்தால், உலகினில் போராடலாம். வாழ்ந்தாலும்,
தாழ்ந்தாலும் தலைநிமிர்ந்து நீ வாழலாம்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
முதல் வாசகம்
இப்போது என் உயிரை ஆண்மையுடன் கையளிப்பதன் மூலம் என்
முதுமைக்கு நான் தகுதியுடையவன் என மெய்ப்பிப்பேன்.
மக்கபேயர் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 6: 18-31
"மாசுபடிந்தவராய் வாழ்வதை விட, மதிப்புடையவராய் இறப்பது மேல்"
நிகழ்வு
பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் மறைப்பணியாளரான ஜான் ஹஸ்
(1369-1415). ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை மக்களுக்கு துணிச்சலோடு
அறிவித்ததால், கயவர்களால் கைதுசெய்யப்பட்டு, கைகள் இரண்டும்
பின்னால் கட்டப்பட்டு, கழுத்தில் சங்கிலிகள் பிணைக்கப்பட்டுக்
கொலைக்களத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டார். சுற்றிலும் இருந்த
மக்கள் அவருக்கு என்ன நடக்கப்போகிறதோ என்று வேடிக்கை
பார்த்தார்கள். அவரோ திருப்பாடல் 31: 1,5 ல் வருகின்ற,
"உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; நான் ஒருபோதும் வெட்கமடைய
விடாதேயும்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீரே என்னை
மீட்டருளினீர்" என்ற இறைவார்த்தையை தொடர்ந்து சொல்லக்கொண்டே
சென்றார்.
கொலைக்களம் வந்தது. சுற்றி ஆயிரக்கணக்கில் மக்களும் படைவீரர்களும்
நின்றுகொண்டிருந்தார்கள். அப்பொழுது அங்கு வந்த இராணுவ அதிகாரி
ஜான் ஹஸிடம், "கடைசியாக ஒரு வாய்ப்புத் தருகின்றேன். இயேசுவை
மறுதலித்துவிடு, உன்னை உயிரோடு விட்டுவிடுகின்" என்றான். அதற்கு
ஜான் ஹஸ் அவனிடம், "என்னுடைய உயிர் போனாலும் பரவாயில்லை. நான்
ஒருபோதும் என் ஆண்டவர் இயேசுவை மறுதலிக்கமாட்டேன்" என்று உறுதியாகச்
சொன்னார்.
உடனே அவரைச் சுற்றிலும் நெருப்பு மூட்டப்பட்டது. அந்த நெருப்பு
அவருடைய உடலைச் சுட்டெரித்தது. அப்பொழுது அவர் ஆண்டவரை மறுதலிக்காமல்,
"உயிருள்ள இறைவனின் திருமகனாகிய இயேசுவே! என்மேல் இரக்கமாயிரும்;
மரியின் வயிற்றில் பிறந்த இயேசுவே! என்மேல் இரக்கமாயிரும்" என்று
உரக்கச் சொன்னார். இதைக் கேட்டு அவரைச் சுற்றியிருந்த எதிரிகள்
இன்னும் சினமடைந்தார்கள். இதனால் அவர்கள் நெருப்பைப் பலமடங்கு
கூட்டினார்கள். அப்பொழுதும் அவர் "இயேசுவே என்மேல் இரக்கமாயிரும்"
என்ற வார்த்தைகளைத் தொடர்ந்து உச்சரித்துக்கொண்டே இருந்தார்.
எனவே, அங்கிருந்த அதிகாரி தன்னிடம் இருந்த வாளை எடுத்து அவருடைய
தலையை வெட்டினார். அவருடைய தலையோ வானத்தை அண்ணார்ந்து பார்த்த
வண்ணமாய் விழுந்தது. வானத்தில் ஆண்டவராகிய இயேசு தந்தையின் வலப்பக்கத்தில்
அமர்ந்தது அவருக்கு தோன்றினார்.
எதிரிகள் தன்னைக் கொடூரமாகச் சித்ரவதை செய்தபோதும், ஆண்டவர் இயேசுவின்
மீது கொண்ட நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்து, அவருக்காகத்
தன்னுடைய இன்னுயிரைத் தந்த மறைப்பணியாளரான ஜான் ஹஸ் நம்முடைய
கவனத்திற்கு உரியவராக இருக்கின்றார். இன்றைய முதல் வாசகத்திலும்
ஆண்டவர்மீதுகொண்ட நம்பிக்கைக்காக, தன்னுடைய உயிரையும் இழந்த
துணிந்த எலயாசரைக் குறித்து வாசிக்கின்றோம். அவர் ஆண்டவர்மீது
கொண்டிருந்த நம்பிக்கை எத்தகையது? அவர் எப்படி எல்லாருக்கும்
முன்மாதிரியாக இருந்தார்? என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
ஆண்டவருக்காக/ திருமறைக்காக உயிரையும் துறந்த எலயாசர்
மக்கபேயர் இரண்டாம் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில்,
மறைநூல் அறிஞரும் வயதில் முதிர்ந்தவரும் மாண்புறு தோன்றம் உடையவருமான
எலயாசர் பன்றி இறைச்சி உண்ணக் கட்டாயப்படுத்தப்படுகின்றார். பன்றி
இறைச்சியை உண்பது தீட்டு (லேவி 11: 7) என்று மோசேயின் சட்டம்
சொல்லியிருப்பதால், எலயாசர் "மாசுபடிந்தவராய் வாழ்வதை விட, இறப்பதே
மேல்"என்று சித்திரவதைக் கருவியை நோக்கிச் சொல்கின்றார்.
மேலும் தனக்குத் தெரிந்தவர்கள் தன்னிடம் வந்து, "உண்ணக்கூடிய
இறைச்சியை நீரே தயாரித்து, உண்பது போல் நடியும்"என்று சொன்னபோதும்கூட,
அவர் தன்னுடைய கொள்கையில் மிக உறுதியாக இருந்து சாகத்
துணிகின்றார்.
எலயாசரின் இத்தகைய துணிச்சல்மிக்க செயல் நம்முடைய கவனத்திற்கு
உரியதாக இருக்கின்றது. "தனக்கு வயதாகிவிட்டது; இனிமேலும்
எதற்கு திருச்சட்டத்தின் ஒழுகவேண்டும்?"என்றோ, "தனக்குத்
தெரிந்தவர்கள் சொல்லிவிட்டார்கள்"என்றோ அவர் பன்றி இறைச்சியை
உண்ணவில்லை. மாறாக, தன்னுடைய உயிர் போனாலும் பரவாயில்லை என்று
ஆண்டவர்கொண்ட நம்பிக்கையில் மிக உறுதியாக இருக்கின்றார்.
எல்லாருக்கும் முன்மாதிரியாக விளங்கிய எலயாசர்
மறைநூல் அறிஞரான எலயாசர் பன்றி இறைச்சியை உண்ணாது, சாவைத்
துணிவுடன் ஏற்றுக்கொண்டது நமக்கு ஒரு முக்கியமான செய்தியை
எடுத்துச் சொல்கின்றது. அது என்னவெனில், எல்லாருக்கும்
எடுத்துக்காட்டாக இருப்பது, இருந்தது. ஒருவேளை எலயாசர்
சாவுக்குப் பயந்து, பன்றி இறைச்சியை உண்டிருந்தால், அவரை
பார்த்து வளர்ந்த இளைஞர்களுக்கும் ஏனையோருக்கும் அவருடைய செயல்
இடறலாக இருந்திருக்கும்; ஆனால், அவர் பன்றி இறைச்சியை
உண்ணாமல், ஆண்டவருக்கு அஞ்சி சாகத் துணிந்ததால், இளைஞர்கள்
முதல் எல்லாருக்கும் அவர் முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.
நமது வாழ்வும் நமது செயல்பாடும் பிறருக்கு முன்மாதிரியாக
இருக்கின்றதா? அல்லது இடறலாக இருக்கின்றதா? என்று
சிந்திப்போம். அடுத்தவருக்கு இடறலாக இருப்போருடைய கழுத்தில்
எந்திரக் கல்லைக் கட்டிக் கடலில் ஆழ்த்துவது நல்லது (மத் 18:
6) என்பார் இயேசு. ஆகையால், நம்முடைய வாழ்வாலும்
வார்த்தையாலும் எலயாசரைப் போன்று எல்லாருக்கும்
எடுத்துக்காட்டாக இருப்போம்.
சிந்தனை
"ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய்
இருக்கும்"(திபா 112: 7) என்பார் திருப்பாடல் ஆசிரியர்.
ஆகையால், நாம் ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு, உறுதியான இதயம்
கொண்டவர்களாய் வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
லூக்கா 19: 1-10
பணமிருந்தும் நிம்மதியில்லாத மனிதர்கள்!
நிகழ்வு
முன்பொரு காலத்தில் பெர்சியாவில், அலி ஹஃபெத் (Ali Hafed) என்றொரு
செல்வந்தர் இருந்தார். அவர்க்கு நூற்றுக்கணக்கான ஏக்கர்களில்
பழத்தோட்டமும் வயல்களும் இருந்தன. அவற்றைக்கொண்டு அவர் மனநிறைவாகவும்
நிம்மதியாகவும் வாழ்ந்து வந்தார். ஒருநாள் அவருடைய வீட்டிற்கு
விருந்தினர் ஒருவர் வந்தார். அவர் அலி ஹஃபெத்திடம், "உங்களிடம்
நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் பழத்தோட்டமும் வயல்களும் இருப்பதை
விடவும், வைரம் இருந்தால் நீங்கள்தான் இந்த உலகத்தில் பெரிய
பணக்காரர்" என்றார்.
வந்திருந்த விருந்தினர் சொன்ன வார்த்தைகள் அலி ஹஃபெத்தின் உள்ளத்தில்
ஒருவிதமான கலவரத்தை உண்டுபண்ணின. அவர் அங்கிருந்து போனபின்பு,
அலி ஹஃபெத் அதைக் குறித்து சிந்திக்கத் தொடங்கினார்: "நம்மிடம்
வைரம் இருந்தால், இந்த உலகத்தில் நாம் பெரிய பணக்காரராகிவிடுவோமோ?
அப்படியானால் அதற்கு என்ன செய்வது...?"இவ்வாறு அவர்
யோசித்துக்கொண்டிருக்கும்போதே, "நம்மிடம் இருக்கின்ற நிலத்தை
விற்றுவிட்டு, உலகம் முழுவதும் தேடியலைந்தால், எங்காவது வைரம்
கிடைக்கும்தானே. அதைக்கொண்டு பெரிய பணக்காரவிடலாம்"என்ற எண்ணம்
அவர்க்குள் உதித்தது.
மறுநாள் அவர் தன்னுடைய நிலத்தைத் தனக்குத் தெரிந்த ஒருவர்க்கு
விற்றுவிட்டு, வைரத்தைத் தேடி, பயணத்தைத் தொடங்கினார். பல நாள்களாகக்
காடு, மலை, ஆறு, என்று பல இடங்களில் வைரத்தைத்
தேடிப்பார்த்தார். எங்கும் அவரால் வைரத்தைக் கண்டுபிடிக்க
முடியாது. இதனால் மனம் சோர்ந்து. உடல் மெலிந்து போனார். ஒரு கட்டத்தில்
அவர், "இனிமேலும் நம்மால் வைரத்தைக் கண்டுபிடிக்க முடியாது"என்று
விரக்தியின் உச்சக்கட்டத்திற்குச் சென்று, தற்கொலை
செய்துகொண்டார்.
இன்னொரு பக்கம் அலி ஹஃபெத்தின் நிலத்தை விலைக்கு வாங்கிய மனிதர்
ஒரு நண்பகல் வேளையில், தன்னுடைய ஒட்டகத்திற்குத் தண்ணீர்
காட்டுவதற்குப் பழத்தோட்டத்தின் நடுவில் ஓடிக்கொண்டிருந்த
சிற்றாறுக்கு கூட்டிக்கொண்டு போனார். ஒட்டகம் சிற்றாறின் அருகே
சென்றதும், தாகத்தில் தண்ணீரை வேகவேகமாகப் குடிக்கத் தொடங்கியது.
அப்பொழுது அந்தச் சிற்றாற்றுக்குள் இருந்து, ஏதொவொன்று மின்னுவதைப்
பார்த்த மனிதர், அது என்ன என்று குனிந்து, எடுத்துப்
பார்த்தார். அது சாதாரண கல் இல்லை; வைரக்கல் என்று கண்டுபிடிக்க
அவர்க்கு வெகுநேரம் பிடிக்கவில்லை. சற்றுத் தொலைவில் அவர்
பார்த்தார். அங்கேயும் அதுபோன்ற வைரக்கற்கள் கிடப்பதை கண்டு மகிழ்ச்சியில்
துள்ளிக் குதித்தார். இதற்குப் பின்பு அவர் அந்த வைரக்கற்களையெல்லாம்
விற்று உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர் ஆனார்.
மிகப்பெரிய எழுத்தாளரும் மறைப்பணியாளருமான ரசல் கோன்வெல் சொல்லக்கூடிய
இந்தக் கதையில் வருகின்ற அலி ஹஃபெத்தைப் போன்றுதான் இன்றைக்குப்
பலர், தங்களிடம் ஏராளமான பணமும் சொத்துகளும் இருந்தபோதும், அவற்றைக்கொண்டு
வாழ்க்கையை நிம்மதியாக வாழத் தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள்.
இன்றைய நற்செய்தியிலும் ஏராளமான பணமிருந்தும் மனநிம்மதியின்றி
அலைந்த ஒருவரைக் குறித்து வாசிக்கின்றோம். அவர் யார்? அவர் தன்னுடைய
வாழ்வில் மனநிம்மதியை, மகிழ்ச்சியை, மீட்பினை எப்படிப்
பெற்றுக்கொண்டார்? என்பவற்றைக் குறித்து சிந்துத்துப்
பார்ப்போம்.
பணமிருந்தும் நிம்மதியின்றி அலைந்த சக்கேயு
நற்செய்தியில் சக்கேயுவைக் குறித்து வாசிக்கின்றோம். சக்கேயு
சாதாரண மனிதர் இல்லை; வரிதண்டுபவர்கட்குத் தலைவர். அப்படியானால்
உரோமை அரசாங்கம் மக்கள்மீது விதித்த வரியை விட, அதிகமான வரியை
விதித்து, அதன்மூலம் பணத்தை ஏராளமாகக் குவித்திருக்கவேண்டும்
என்று சொல்லவேண்டும். இப்படி மக்களை வஞ்சித்தும் ஏமாற்றியும்
சம்பாதித்த பணத்தைக்கொண்டு சக்கேயு மகிழ்ச்சியாக இருந்தாரா? என்றால்
நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இயேசு கூறுவார்:
"மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் மட்டும் ஒருவர்க்கு
வாழ்வு வந்தது." (லூக் 12:15). சக்கேயுவிடம் மிகுதியாகப் பணம்
இருந்தது; மகிழ்ச்சிதான் இல்லை. உண்மையான மகிழ்ச்சி கிடைக்க
அவர் என்ன செய்தார் என்று பார்ப்போம்.
தன்னிடமிருந்ததைப் பிறர்க்குக் கொடுக்க முன்வந்ததால் மகிழ்ச்சியடைந்த
சக்கேயு
மனநிம்மதியை, மகிழ்ச்சியைத் தேடியலைந்த சக்கேயு, இயேசுவைத்
தேடிச்சென்றால் அவை கிடைக்கும் என்று உறுதியாக நம்பியிருக்கக்கூடும்.
அதனால்தான் அவர் இயேசுவைத் தேடிச் சென்றார். இதற்கிடையில் சக்கேயு
தன்னைத் தேடி வந்திருப்பதை அறிந்த இயேசு அவரைக் கீழே வா என்றும்
உம்முடைய வீட்டில் தங்கப் போகிறேன் என்றும் சொல்கிறார். மறுநொடி
சக்கேயு இயேசுவிடம், "என் உடைமைகளில் பாதியை ஏழைகட்கும் எவர்மீதாவது
பொய்க்குற்றம் சுமத்தி, எதையாவது கவர்ந்திருந்தால் அதை நான்கு
மடங்காகத் திரும்பிக் கொடுத்துவிடுகிறேன்" என்கிறார். அப்பொழுதுதான்
இயேசு அவரிடம், "இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று" என்கிறார்.
ஆம், சக்கேயு பணத்தைத் தான் மட்டுமே வைத்து அனுபவிக்கவேண்டும்
என்று எண்ணிக்கொண்டிருந்த வரைக்கும் அவரிடம் மனநிம்மதியோ, மகிழ்ச்சியோ
இல்லை. எப்பொழுது அவர் தன்னிடம் இருந்து பணத்தை ஏழைகட்கும் பிறர்க்கும்
கொடுக்க முன்வந்தாரோ, அப்பொழுதே அவர்க்கு மனநிம்மதியும் மகிழ்ச்சியும்
ஏன், மீட்பும் கிடைக்கின்றன. ஆகையால் நம்முடைய வாழ்க்கையில்
மனநிம்மதியும் மகிழ்ச்சியும் பிறக்கவேண்டும் என்றால், நம்மிடம்
இருப்பதைப் பிறர்க்குக் கொடுக்க முன்வருவது இன்றியமையாததாக இருக்கின்றது.
சிந்தனை
"நல்லாரின் வீட்டில் நிறைசெல்வம் நிலைத்திருக்கும்; பொல்லாரின்
வருவாயால் விளைவது தொல்லையே"(நீமொ 15:6) என்கிறது நீதிமொழிகள்
நூல். நம்மிடம் இருப்பதைப் பிறர்க்குப் பகிர்ந்துகொடுக்கும் நல்லாராக
விளங்குவோம். அதன்வழியாக இறைவன் தரும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும்
இறையருளையும் நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
லூக்கா 19: 1-10
மனம் மாறுவோம், இறைவழியில் நடப்போம்.
குரு ஒருவர் தன்னுடைய சீடர்களோடு பக்கத்து ஊருக்கு பயணமானார்.
அங்கே அன்பர் ஒருவர் அவர்களுக்கும், ஊர் மக்கள் எல்லாருக்கும்
சேர்த்து உணவு கொடுப்பதால் தட்டும், டம்ளரையும் தவிர வேறு எதுவும்
எடுத்துகொண்டு போகவில்லை. சீடர்களும் தங்களுக்கு உரிய தட்டையும்,
டம்ளரையும் தங்களோடு எடுத்துகொண்டு சென்றனர்.
நேரமானதால் இரவு அவர்கள் வழியில் இருந்த ஒரு சத்திரத்தில் தங்கினார்கள்.
அப்போது எல்லாரும் தூங்கிகொண்டிருந்த நேரம் பார்த்து, திருடன்
ஒருவன் குரு வைத்திருந்த தட்டைத் தூக்கிக்கொண்டு ஓடினான். சத்தம்
கேட்டு விழித்தெழுந்த சீடர்கள் அவனைத் துரத்திக்கொண்டு ஓடினார்கள்.
அதற்குள் சத்தம்கேட்டு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த
குருவும் திருடனைத் துரத்திக்கொண்டு ஓடினார். "நாம்தான் திருடனுக்குப்
பின்னால் ஓடுகிறோமே, எதற்காக குரு ஓடிவரவேண்டும். என்ன இருந்தாலும்
குருவுக்கு இது ஆகாது என்று சொல்லிக்கொண்டே ஓடினார்கள்.
ஆனால் குரு அவர்களது பேச்சை எல்லாம் சட்டை செய்யாமல், அவர்களைவிட
வேகமாக ஓடி திருடனைப் பிடித்தார். பின்னாலே வந்தே சீடர்கள்
திருடனை சூழ்ந்துகொண்டார்கள். அவன் அவ்வூரில் வாழ்ந்த மிகப்பெரிய
திருடன். குரு வைத்திருந்தது தங்கத்தட்டு என்று நினைத்துதான்
அதைத் திருடினான் என்ற உண்மை அவனை விசாரித்தபிறகு தெரிந்தது..
அப்போது குரு திருடனைப் பார்த்து, "மகனே! அது தங்கத்தட்டு எல்லாம்
ஒன்றும் கிடையாது. அது ஓட்டை விழுந்த பழைய தட்டு. மேலும் அப்படிப்பட்ட
ஓட்டைத்தட்டை நீ தூக்கிக்கொண்டு போனால் அது உனக்குப் பயன்படாது
என்பதற்காகத்தான் என்னிடம் இருந்த புதுத்தட்டை உன்னிடம் கொடுப்பதற்காக
வந்தேன்" என்றார்.
குருவின் பேச்சைக் கேட்ட திருடன், "இப்படிப்பட்ட ஒரு மகானிடமா
திருட வந்தோம் என்று தன்னுடைய தவறை உணர்ந்தான். அதன்பிறகு மனந்திரும்பி
சீடராக வாழ்ந்துவந்தான். அன்போடும், கரிசனையோடும் ஒருவரிடம்
நடந்துகொண்டால் எப்படிப்பட்ட தீயவனும் மனம்திருந்துவான் என்பதை
இக்கதையானது நமக்கு அருமையாக விளக்குகின்றது.
நற்செய்தியில் சக்கேயுவின் மனமாற்ற நிகழ்வைக் குறித்து
வாசிக்கின்றோம். சக்கேயு வரிதண்டுபவர்களுக்கு எல்லாம் தலைவன்.
வரிதண்டுபவர்கள் யூத மக்களால் "நாட்டைக்
காட்டிக்கொடுப்பவர்களுக்கு இணையாக"சித்தரிக்கப்பட்டார்கள்;
அவர்கள் மக்களால் பாவிகள் என்றே கருதப்பட்டார்கள்.. அதனால்
சக்கேயு தன்னுடைய உள்ளத்தில் ஒரு வெறுமையை உணர்கிறான்.
இயேசுவைப் பற்றிக் கேள்விப்படும் அவன், அவரை எப்படியாது
பார்த்துவிடவேண்டும் என நினைக்கிறான்.
அவ்வேளையில் அந்த வழியாக வரும் இயேசு, "சக்கேயுவே இறங்கிவா,
இன்று நான் உன்னுடைய வீட்டில் தங்கவேண்டும்" என்கிறார். இதைச்
சற்றும் எதிர்பாராத அவன் தன்னுடைய பாவத்தை உணர்ந்து, "ஆண்டவரே!
என் உடமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்;
எவர்மீதாவது பொய்குற்றம் சுமத்தி, எதையாவது கவர்ந்திருந்தால்
அதை நான்கு மடங்காத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்"
என்கிறான். உடனே இயேசு அவரைப் பார்த்து, "இன்று இந்த
வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று" என்கிறார்.
சக்கேயுவின் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வு நாம் எப்படி
மனமாற்றம் அடையவேண்டும் என்பதை மிகத் தெளிவாக
எடுத்துக்கூறுகிறது. சக்கேயு முதலில் தன்னுடைய தவறை
உணர்கிறான்; அதன்பின்னர் ஆண்டவரிடம் அறிக்கையிடுகிறான்.
த்திற்கான பரிகாரம் செய்கிறான். இனிமேல் இப்படிப்பட்ட தவறு
செய்வதில்லை என்று உறுதியேற்று மனம்திருந்தி வாழ்கிறான்.
இயேசுவின் அன்பை விட்டுவிலகி வெகுதொலைவில்
வாழ்ந்துகொண்டிருக்கும் நாம், நமது தவறை உணர்ந்து, அதை
இறைவனிடம் அறிக்கையிட்டு மனம்திரும்பி வாழ்வோம்.
திருப்பாடல் 51:17 ல் வாசிக்கின்றோம், "கடவுளுக்கு ஏற்ற பலி
நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உள்ளத்தை
நீர் அவமதிப்பதில்லை". ஆம் ஆண்டவர் மனந்திரும்பி வரும்
தன்னுடைய பிள்ளையை அன்போடு ஏற்றுகொள்கிறார்.
ஆதலால் மனந்திரும்பி வாழ்வோம், இறையருள் நிறைவாய் பெறுவோம். |
|