|
|
18 நவம்பர்
2019 |
|
|
பொதுக்காலம்
33ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம் தூய பேதுரு, பவுல் பேராலய அர்ச்சிப்பு
=================================================================================
வருகைப் பல்லவி சங் 44: 17-18
மாநிலமனைத்திற்கும் நீர் அவர்களைத் தலைவர்களாக்குவீர்: தலைமுறை
தலைமுறையாய் உமது பெயரை நான் நினைவுகூருவேன்: என்றென்றும் மக்களினத்தார்
உம்மைக் கொண்டாடுவர்.
சபை மன்றாட்டு
இறைவா, புனிதர்களான இராயப்பர், சின்னப்பர் நினைவாக எழுப்பப்பட்ட
உரோமைப் பேராலயங்களின் நேர்ந்தளிப்பு நினைவுநாளில், நாங்கள் உம்
திருமுன் கூடிவந்துள்ளோம். ஆயிரக்கண்க்கான மக்களின்
பேருழைப்பாலும், புகழ் பெற்ற கலைஞர்களின் சீரிய திறமையாலும்,
உலகெங்குமுள்ள இறைமக்களின் பொருளுதவியாலும் கட்டியெழுப்பப்பட்ட
இவ்வாலயங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். அப்போஸ்தலர்களான
இராயப்பர், சின்னப்பருடைய விசுவாசத்தை அடித்தளமாகக் கொண்டு,
தூய ஆவியின் செயலால் நீரே கட்டி எழுப்புகின்ற உயிருள்ள ஆலயமாகிய
கிறிஸ்துவ சமூகம், அந்த விசுவாசத்திலும் அன்புறவுப்
பிணைப்பிலும் நாளும் வளர்ந்து, குன்றின்மேல் அமைந்த நகரமாகத்
துலங்கிடச் செய்வீராக. உம்மோடு.
முதல் வாசகம்
நாங்கள் உரோமை போய்ச் சேர்ந்தோம்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்
28: 11-16, 30-31
சகோதரர் சகோதரிகளே, மூன்று மாதங்களுக்குப் பிறகு, குளிர்காலத்தில்
மால்தா தீவில் ஒதுங்கியிருந்த ஒரு சிறிய கப்பலில் ஏறினோம். அதில்
மிதுனச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. அது அலக்சாந்திரியாவைச்
சார்ந்தது. நாங்கள் சிரக்கூசாத் துறைமுகத்தை அடைந்து அங்கு
மூன்று நாள் தங்கியிருந்தோம். அங்கிருந்து கரையோரமாகச் சுற்றி
வந்து இரேகியு என்னும் இடத்தை அடைந்தோம்.
ஒரு நாள் அங்கு தங்கிய பின் தெற்கிலிருந்து காற்று வீசவே இரண்டாம்
நாள் புத்தயோலி என்னும் இடம் சென்றோம். அங்கு நாங்கள் சகோதரர்
சகோதரிகளைக் கண்டோம். நாங்கள் அவர்களோடு ஏழு நாள் தங்குமாறு
அவர்கள் எங்களைக் கேட்டுக்கொண்டார்கள். அதன்பின் நாங்கள் உரோமை
போய்ச் சேர்ந்தோம்.
அங்குள்ள சகோதரர் சகோதரிகள் எங்களைப் பற்றிக் கேள்வியுற்று, `அப்பியு
சந்தை', மூன்று விடுதி' என்னும் இடங்கள் வரை எங்களை எதிர்கொண்டு
வந்தார்கள். பவுல் அவர்களைக் கண்டபோது துணிவு கொண்டு கடவுளுக்கு
நன்றி செலுத்தினார்.
நாங்கள் உரோமைக்கு வந்தபோது பவுல் தனி வீட்டில் தங்கியிருக்க
அனுமதி பெற்றுக்கொண்டார். ஆனால் படைவீரர் ஒருவர் அவரைக் காவல்
காத்து வந்தார். பவுல் அங்கு இரண்டு ஆண்டுகள் முழுவதும் தாம்
வாடகைக்கு எடுத்த வீட்டில் தங்கியிருந்தார். தம்மிடம் வந்த அனைவரையும்
வரவேற்று, இறையாட்சியைக் குறித்துப் பறைசாற்றி வந்தார். ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவைப் பற்றி முழுத்துணிவோடு தடை ஏதுமின்றிக் கற்பித்துக்
கொண்டிருந்தார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
- திபா 98: 1. 2-3. 4. 5-6 (பல்லவி: 2b) Mp3
=================================================================================
பல்லவி: பிற இனத்தார் கண்முன்னே ஆண்டவர் தம் நீதியை வெளிப்படுத்தினார்.
1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு
செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும்
அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி
2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண் முன்னே தம்
நீதியை வெளிப்படுத்தினார். 3 இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட
தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். உலகெங்குமுள்ள
அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். பல்லவி
4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப்
பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள்.
பல்லவி
5 யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி
இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். 6 ஆண்டவராகிய அரசரின்
முன்னே எக்காளம் முழங்கி, கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள்.
பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! இறைவா, உம்மை வாழ்த்துகிறோம், ஆண்டவர்
நீர் எனப் போற்றுகிறோம்; திருத்தூதர்களின் அருள்அணியும் ஆண்டவரே,
உம்மைப் போற்றிடுமே. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்.
+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
14: 22-33
இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த பிறகு, கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து
அனுப்பிக்கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித்
தமக்கு முன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப்படுத்தினார்.
மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு
மலையின் மேல் ஏறினார். பொழுது சாய்ந்த பிறகும் அங்கே அவர் தனியே
இருந்தார். அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது.
மேலும் எதிர்க்காற்று அடித்துக் கொண்டிருந்ததால் அலைகளால் படகு
அலைக்கழிக்கப்பட்டது.
இரவின் நான்காம் காவல் வேளையில் இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது
நடந்து வந்தார். அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி,
"ஐயோ, பேய்'' என அச்சத்தினால் அலறினர். உடனே இயேசு அவர்களிடம்
பேசினார். "துணிவோடு இருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்'' என்றார்.
பேதுரு அவருக்கு மறுமொழியாக, "ஆண்டவரே நீர்தாம் என்றால்
நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்'' என்றார்.
அவர், "வா'' என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை
நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார். அப்பொழுது பெருங்காற்று
வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும் போது, "ஆண்டவரே, என்னைக்
காப்பாற்றும்'' என்று கத்தினார்.
இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, "நம்பிக்கை
குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?'' என்றார். அவர்கள் படகில் ஏறியதும்
காற்று அடங்கியது. படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, "உண்மையாகவே
நீர் இறைமகன்'' என்றனர்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
காணிக்கைமீது மன்றாட்டு:
பேரருட்சுடரே இறைவா, நாங்கள் ஈடுபட்டிருக்கும் அனைத்துப் பணிகளின்
அடையாளமாக இக்காணிக்கைகளை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இவற்றை
ஏற்று, உம் திருமகனின் உடலாகவும் இரத்தமாகவும் மாற்றியருளும்.
இதனால் புனிதர்களான இராயப்பர், சின்னப்பரின் வாழ்வைப்போல், எங்கள்
வாழ்வும் உமக்கேற்ற உயிருள்ள பலியாக மாறுவதாக. எங்கள்.
தொடக்கவுரை: அப்போஸ்தலர் ஐ, பக் 297
திருவிருந்துப் பல்லவி அரு 6:68-69 காண்
ஆண்டவரே, முடிவில்லா வாழ்வுதரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன:
நீர் இறைவனின் மகனாகிய கிறிஸ்து என நாங்கள் விசுவசிக்கிறோம்.
நன்றி மன்றாட்டு
இறைவா, உம் மக்கள் நாங்கள் உம்மிடமிருந்து பெற்றுக்கொண்ட உணவால்
புத்துயிர் பெற்றுள்ளோம். அப்போஸ்தலர்களான புனித இராயப்பர்,
புனித சின்னப்பர் தங்கள் கடின உழைப்பினராய் இருப்பதில்
மகிழ்ச்சிகொள்ளும் நாங்கள், அது ஒற்றுமையிலும் அமைதியிலும்
நாளும் வளர, முழமனத்துடன் ஒத்துழைக்கச் செய்தருளும். எங்கள்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
முதல் வாசகம்
இஸ்ரயேல் மீது பேரிடர் வந்துற்றது.
மக்கபேயர் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 10-15, 41-43, 54-57,
62-64
உண்மைக் கடவுளை மறந்து சிலைகளை வழிபட்ட மக்கள்
நிகழ்வு
யூத இரபி ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் தன்னுடைய மக்களிடம்,
"கடவுள் சிலை வழிப்பாட்டை மிகவும் வெறுக்கின்றார்; அவருடைய
பார்வையில் சிலைவழிபாடு என்பது மிகவும் அருவருக்கத் தக்கது" என்றார்.
உடனே கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து, "கடவுள் சிலைவழிபாட்டை
வெறுக்கின்றார் என்றால், மனிதர்கள் வழிபடுகின்ற சிலைகளை அழித்தொழிக்கவேண்டியதுதானே...?
அவரால் அது முடியாதா என்ன?" என்றார். அதற்கு இரபி அவரிடம்,
"கடவுளால், மனிதர்கள் வழிபடுகின்ற சிலைகளை அழித்தொழிக்க
முடியும்; ஆனால், அவர் அதை விரும்பமாட்டார். மேலும் மனிதர்கள்
வழிபடுகின்ற கதிரவன், நிலவு போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமானவை.
அவற்றையெல்லாம் அவர் அழித்துவிட்டால், மனிதர்களால் இப்புவியில்
வாழமுடியாது" என்றார்.
"கடவுள் முக்கியமானவற்றை அழிக்கவேண்டாம்; மதிப்பே இல்லாத சிலைகளை
அழிக்கலாம்தானே...?" என்று அவர் மீண்டுமாகக் கேட்டார். இரபி ஒருநொடி
யோசித்துவிட்டுச் சொன்னார்:" கடவுள் மதிப்பே இல்லாத அல்லது
முக்கியமில்லாத சிலைகளை அழித்தால், முக்கியமானவற்றை ஏன் அழிக்கவில்லை
என்ற கேள்வி வரும். மேலும் "உன் கடவுளாகிய ஆண்டவர் நானே... என்னைத்
தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருந்தால் ஆகாது" என்று கடவுள்
சொல்லியிருக்கின்றார். இந்தக் கட்டளையின்படி யார் நடக்கின்றார்களோ
அவர்களுக்கு ஆசியும் நடக்காதவர்களுக்குத் தண்டனையும் தருகின்றார்."
இரபி சொன்ன வார்த்தைகளைக் கேட்டு, அவரிடம் கேள்வி கேட்டவரும்,
ஏன், அங்கிருந்த யாவரும் கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டியதன்
முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டார்கள்.
நாம் போலி தெய்வங்களையோ அல்லது சிலைகளையோ அல்ல உண்மைக் கடவுளை
வழிபட வேண்டும். அப்படி நடந்தால், கடவுளிடமிருந்து ஆசியும் அருளும்
கிடைக்கும் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது
சிந்தனைக்குரியது. இன்றைய முதல் வாசகம் உண்மைக் கடவுளை மறந்துவிட்டு,
சிலைகளுக்குப் பலியிட்ட யூதர்களையும், இறுதிவரைக்கும் யாவே இறைவனுக்கு
உண்மையாக இருந்த யூதர்களையும் குறித்து வாசிக்கின்றோம். இந்த
இருவகையினரில் நாம் யாராக இருக்கப்போகின்றோம் என்பதை இப்பொழுது
நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
சிலைகளுக்குப் பலியிட்ட யூதர்கள்
அந்தியோக்கு எப்பிபான் என்பவன் யூதர்களை ஆட்சி
செய்துகொண்டிருந்த சமயத்தில், யூதர்களில் ஒருசிலர்,
"வாருங்கள், நம்மைச் சுற்றிலும் இருக்கும் வேற்றினத்தாரோடு
நாம் உடன்படிக்கை செய்துகொள்வோம்; ஏனெனில், நாம் அவர்களை
விட்டுப் பிரிந்ததிலிருந்து நம்மைப் பலவகைக் கேடுகள்
நேர்ந்துள்ளன" என்று சொல்லி கடவுளோடு அவர்கள் செய்துகொண்ட தூய
உடன்படிக்கையை மறந்து, வேற்றினத்தாரோடு கலந்து எல்லாவிதத் தீமைகளையும்
செய்யத் தொடங்கினார்கள்.
இப்பகுதியில் வருகின்ற யூதர்கள் சொல்லக்கூடிய சொற்கள் மிகவும்
கவனித்ததவையாக இருக்கின்றன. அவர்கள் வேற்றினத்தாரை விட்டுப்
பிரிந்ததால்தான் கேடுகள் வந்ததாகச் சொல்கின்றார்கள். உண்மையில்
அவர்கள் யாவே இறைவனை விட்டுப் பிரிந்ததால்தான் எல்லாவிதமான
கேடுகளும் அவர்களுக்கு வந்து சேர்ந்தன. இந்த யூதர்கள் தாங்கள்
வேற்றினத்தாரோடு உடன்படிக்கை செய்து, எல்லாவிதமான தீச்செயல்களையும்
செய்தது மட்டுமல்லாமல், மற்றவர்களையும் செய்யத் தூண்டினார்கள்.
அப்படிச் செய்யாதவர்களை அவர்கள் தண்டித்தார்கள்.
கடவுள் இஸ்ரேல் மக்களிடம், "நானே உங்கள் கடவுள்; நீங்கள் என்
மக்கள் (லேவி 26:12) என்று சொன்னார். இந்தக் கட்டளைக்கு அவர்கள்
உண்மையாக இல்லாததுதான் மிகவும் வேதனையானது.
ஆண்டவருக்கு உண்மையாக இருந்த யூதர்கள்
அந்தியோக்கு எப்பிபானின் ஆட்சிக்காலத்தில் எல்லா யூதர்களும் உண்மைக்
கடவுளை மறந்துவிட்டு வேற்று தெய்வத்தை வழிபட்டார்களா? அல்லது
சிலைகளுக்குப் பலியிட்டார்களா? என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
நிறைய யூதர்கள், "யார் திருச்சட்டத்தின்படி நடக்கின்றார்களோ,
அவர்கள் அனைவரும் கொல்லப்படவேண்டும்" என்ற மன்னனின் கட்டளைக்கு
அஞ்சிடாமல், ஆண்டவர்மீது கொண்ட தங்களுடைய நம்பிக்கையில் மிக உறுதியாக
இருந்தார்கள். இவர்கள்தான் நம்முடைய கவனத்திற்கு உரியவர்களாக
இருக்கின்றார்கள். இவர்கள் கற்பாறையாம் (திபா 18: 2) ஆண்டவர்மீது
நம்பிக்கை வைத்திருந்தார்கள், அதனால்தான் எந்தவித அச்சுறுத்தலுக்கும்
இடையூருக்கும் அசைந்துகொடுக்காமல், உறுதியாக இருந்தார்கள்.
இன்றைக்கு நாம், உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வதால் சவால்களும்
இடையூறுகளும் வருகின்றன என்று அதிலிருந்து விலகி, எல்லாரையும்
போன்று வாழ்ந்துகொண்டிருக்கின்றோமா? அல்லது எத்தகைய இடர்வரினும்
ஆண்டவர் இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கையில் உறுதியாக இருக்கின்றோமா?
என்று சிந்தித்துப் பார்ப்போம். இயேசு இவ்வாறு கூறுவார்;
"இறுதிவரை மனவுறுதியுடன் இருப்பவரே மீட்பு பெறுவர்." (ம்த் 24:
13). ஆகையால், நாம் ஆண்டவர் இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கையில்
இறுதிவரை மனவுறுதியோடு இருக்க முயற்சி செய்வோம்.
சிந்தனை
"அவரோடு நிலைத்திருந்தால் அவரோடு ஆட்சி செலுத்துவோம்; நாம் அவரை
மறுதலித்தால், அவர் நம்மை மறுதலிப்பார்" (2 திமொ 2: 11) என்பார்
புனித பவுல். ஆகையால், நாம் கடவுளுக்கு எப்பொழுதும் உண்மையுள்ளவர்களாக
அவரோடு நிலைத்திருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
லூக்கா 18: 35-43
நம்பிக்கையை மட்டும் இழக்காதே!
நிகழ்வு
பெரியவர் ஒருவர் இருந்தார். அவர் இரயில்வே துறையில் வேலைசெய்து
வந்தார். அவருடைய வேலையெல்லாம் இரயிலில் இருக்கும் ஒவ்வொரு
பெட்டிக்கும் சென்று எல்லாம் சரியாக இருக்கின்றதா என்று பார்ப்பதுதான்.
ஒருநாள் அவர் ஓர் இரயிலில் இருந்த உறைவிப்பான் பெட்டிக்குச்
(Freezer Campartment) சென்று, எல்லாம் சரியாக இருக்கின்றதா என்று
பார்த்தார். அவ்வாறு அவர் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது, அந்தப்
பெட்டியின் கதவு, காற்றில் திடீரெனப் பூட்டிக்கொண்டது. அவர் ஓரிருமுறை
திறந்து பார்த்தார்; திறக்கவில்லை. "யாராது இருக்கிறீர்களா...?"
என்று கத்திப் பார்த்தார். அவருடைய நேரம், யாரும் அவர்க்கு உதவிக்கு
வரவில்லை. இதனால் அவர் "குளிர்மிகுந்த இந்தப் பெட்டிக்குள் கிடந்தது
நான் சாவவேண்டியதுதான் போல" என்று நம்பிக்கையை இழந்து அப்படியே
நின்றார்.
சிறிது நேரத்தில் அவர் அந்தப் பெட்டியிலிருந்து உறையவைக்கும்
குளிர் வெளிப்படுவதை உணர்ந்தார். அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.
அதனால் அவர் அங்கு கிடந்த ஒரு கரிகட்டியை எடுத்து, பெட்டியின்
ஓரத்தில், "இங்கிருக்கும் குளிரை என்னால் தாங்கிக்கொள்ளவில்லை.
அதனால் இன்னும் சிறிதுநேரத்தில் செத்துவிடுவேன்" என்று எழுதி
வைத்தார். இவ்வார்த்தைகளை அவர் எழுதிய ஒருசில நொடிகளில்
உறைந்து செத்துப் போனார்.
அடுத்த நாள் காலையில் இரயில்வேயில் பணியாற்றிய வேறொரு பணியாளர்
அந்த உறைவிப்பான் பெட்டியைத் திறந்துபார்த்தார். அங்கு தன்னோடு
பணியாற்றிய பணியாளர் செத்துக்கிடப்பதைப் கிடப்பதைக் கண்டு
அதிர்ந்துபோனார். "ஏன் இவர் இப்படிச் செத்து, விரைத்துப்போய்க்
கிடக்கிறார்...?" என்று ஒன்றும் புரியாமல் பார்த்தார்.
தற்செயலாக அவர் அந்தப் பெட்டியில் எழுதப்பட்டிருந்த
வார்த்தைகளைப் படித்துப் பார்த்துவிட்டு இன்னும்
அதிர்ந்துபோனார். ஏனென்றால், அந்தப் பெட்டியில் இருந்த
உறைவிப்பான் கருவி (Freezing Apparatus) பழுதடைந்து இரண்டு
மூன்று நாள்கள் ஆகியிருந்தன. அது தெரியாமல், அந்தப் பணியாளர்,
பெட்டியில் குளிர் அதிகமாக இருக்கின்றது என்று தவறாக
நினைத்துகொண்டு, நம்பிக்கையையும் கைவிட்டுவிட்டு,
இறந்துகிடந்ததுதான் அவர்க்கு அதிர்ச்சியாக இருந்தது.
இந்த நிகழ்வில் வருகின்ற மனிதரைப் போன்றுதான், பலர் தங்களுடைய
வாழ்க்கையில் ஏதாவதொரு சிக்கல் வருகின்றபோது, அதிலிருந்து
வெளியே வருவதற்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ முயன்றுவிட்டு.
முடியாமல் போகின்றபோது நம்பிக்கையை இழந்து, இறுதியில்
அழிந்துபோக அவலத்தைக் காணமுடிகின்றது. ஆனால், இதற்கு
முற்றிலும் மாறாக, நம்பிக்கையோடு, அதுவும் தளரா நம்பிக்கையோடு
செயல்பட்டு கடவுளின் ஆசியைப் பெற்ற ஒருவரைக் குறித்து இன்றைய
நற்செய்தி வாசகம் எடுத்துச் சொல்கின்றது. நற்செய்தியில்
வருகின்ற அவர் யார்? அவருடைய நம்பிக்கை எப்படி இருந்தது?
என்பவை பற்றி இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தளரா நம்பிக்கை கொண்டிருந்த பார்வையற்றவர்
நற்செய்தியில் இயேசு பார்வையற்ற ஒருவர்க்குப்
பார்வையளிக்கின்றார். மத்தேயு நற்செய்தியில் இயேசு
இருவர்க்குப் பார்வையளித்ததாக வாசிக்கின்றோம் (மத் 20: 29-34).
அது ஒரு பக்கம் இருந்தாலும், இயேசு பார்வையற்றவர்க்கு எவ்வாறு
பார்வையளித்தார் என்பதுதான் நம்முடைய கவனத்திற்குரியதாக
இருக்கின்றது.
வழியோரம் இருந்து பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் பார்வையற்ற
மனிதர், இயேசு அவ்வழியாக வருவதைக் குறித்துக்
கேள்விப்படுகின்றார். உடனே அவர் "தாவிதின் மகனே! எனக்கு
இரங்கும்" என்று உரக்கக் கத்தத் தொடங்குகின்றார். மக்கள்
அவரைக் கத்தவேண்டம் என்று அதட்டுகின்றார்கள். அப்படியிருந்தும்
அவர் நம்பிக்கையோடு தொடர்ந்து கத்தி இயேசுவின் கவனத்தை
ஈர்க்கின்றார். இங்கு இன்னொரு செய்தியையும் நாம்
தெரிந்துகொள்ளவேண்டும். அது என்னவெனில், யூத இரபிகள் தங்களுடைய
பயணத்தின்போது மக்கட்குப் போதிப்பது வழக்கம். இயேசுவும்
அப்படித்தான் தன்னுடைய பயணத்தின்போது மக்கட்கும் சீடர்கட்கும்
போதித்துக்கொண்டே சென்றிருக்கக்கூடும். இவையெல்லாம் பார்வையற்ற
மனிதர்க்கு நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனாலும் அவர்
மக்கள்கூட்டத்தை தன்னை அதட்டுகின்றதே...! தான் கத்தினால்
போதிக்கொண்டே சென்றுகொண்டிருக்கும் இயேசுவுக்குத் தொந்தரவாக
இருக்குமே" என்றெல்லாம் நினைக்காமல், நம்பிக்கையோடு கத்தி
இயேசுவின் கவனத்தை ஈர்க்கின்றார்.
நம்பினோர்க்கு நலமளிக்கும் இயேசு
இயேசு தன்னுடைய பணிவாழ்வில் யாரெல்லாம் தன்மீது
நம்பிக்கைகொண்டார்களோ, அவர்கட்கு நலமளித்தர். நற்செய்தியில்
வருகின்ற பார்வையற்றவர் தன்மீது நம்பிக்கை வைத்துக்
கத்துகின்றார் என்று தெரிந்ததும், இயேசு அவரைத் தம்மிடம்
அழைத்து, "உமக்கு என்ன செய்யவேண்டும்?" என்று கேட்க அவர்,
"மீண்டும் பார்வை பெறவேண்டும்" என்று சொன்னதும், "உம்முடைய
நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று" என்று நலமாக்குகின்றார். ஆம்,
நம்பிக்கைதான் நலம்தரும் மருந்து. அது பார்வையற்ற மனிதரிடம்
நிறையவே இருந்ததால், இயேசு அவர்க்கு நலமளிக்கின்றார். ஆகையால்,
நாமும் பார்வையற்ற மனிதரைப் போன்று இயேசுவின்மீது ஆழமான,
அசைக்க முடியாத, தளரா நம்பிக்கை கொண்டிருந்தால், அவரிடமிருந்து
ஆசியைப் பெறுவோம் என்பது உறுதி.
சிந்தனை
"உங்களிடம் நம்பிக்கை இருந்தால் எதையும் செய்ய முடியும்.
அவநம்பிக்கை இருந்தால் ஒன்றையும் செய்யமுடியாது" என்பார்
சாமுவேல் பட்லர் என்ற எழுத்தாளர். ஆகையால், எல்லா நன்மைகட்கும்
ஊற்றாக இருக்கும் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டு வாழ்வோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
தூய பேதுரு, பவுல் பேராலய அர்ச்சிப்பு
"என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின்
வீடு என அழைக்கப்படும்" (மாற் 11:17)
வரலாற்றுப் பின்னணி
உரோமையை ஆண்டுவந்த நீரோ மன்னனுடைய காலத்தில், வத்திக்கான்
குன்றின் கீழ் கி.பி. 64 ஆம் ஆண்டு, திருத்தூதர்களின் தலைவரும்
முதல் திருத்தந்தையுமான பேதுரு கொல்லப்பட்டார் என்பது வரலாறு.
இதற்குப் பின்பு அவர் கொல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்குச்
சென்று வந்த தொடக்ககாலக் கிறிஸ்தவர்கள் அவருக்கு மிகுந்த மரியாதை
செலுத்திவந்தார். இவ்வழக்கம் நூற்றாண்டு காலமாகப்
போய்க்கொண்டிருந்தது.
இதற்கிடையில் உரோமையை ஆண்டுவந்த கான்ஸ்டான்டைன் என்ற மன்னர்
பேதுருவின் கல்லறை இருந்த இடத்தில் மிகப்பெரிய ஆலயம் ஒன்றைக்
கட்டியெழுப்பினார். இதைத் தொடர்ந்து மக்கள் அங்கு கூட்டம் கூட்டமாக
வரத் தொடங்கினார். திருச்சபையில் நடந்த ஒருசில முக்கியமான நிகழ்வுகளுக்குப்
பிறகு, இது முக்கியமான இடமாக மாறிப்போனது. ஆண்டுகள் செல்லச்
செல்ல, கான்ஸ்டான்டைன் மன்னர் கட்டிய ஆலயம் பழுதடைந்தது. இதைப்
பார்த்த திருத்தந்தை இரண்டாம் ஜூலியஸ், 1506 ஆம் ஆண்டு, அங்கு
புதிதாக ஆலயம் ஒன்றைக் கட்டி எழுப்பத் தொடங்கினார். இந்த ஆலயம்
கட்டி எழுப்பப்பட 120 ஆண்டுகள் ஆனது. திருத்தந்தை இரண்டாம்
ஜூலியஸ் தொடங்கிய இந்தப் பணியை, திருத்தந்தை எட்டாம் அர்பன் என்பவர்தான்
1626 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 18 ஆம் நாள் நிறைவுசெய்தார். இந்தப்
பேராலயத்தில் மைக்கேல் அஞ்சலோவின் வேலைபாடுகள் உட்பட, பல சித்ரவேலைப்பாடுகள்
உள்ளடங்கி இருக்கின்றன.
இப்படி பலருடைய உழைப்பில், பல ஆண்டுகளாகக் கட்டி எழுப்பப்பட்ட
தூய பேதுருவின் பேராலயம் இன்றைக்கும் அதே பொழிவோடும் எழிலோடும்
மக்களுக்குக் காட்சி அளிக்கிறது.
அடுத்ததாக, புறவினத்தாரின் திருத்தூதர் என்று அழைக்கப்படுகின்ற
தூய பவுல் ஒஸ்டின் நகர் நோக்கிச் செல்கின்ற சாலையில் உள்ள அகுவா
சால்வியே (Aquae Salviae) என்ற இடத்தில் கொல்லப்பட்டார் என்பது
யாவரும் அறிந்த செய்தி. இங்கே காண்டாண்ட்ஸ் மன்னர் பவுலுக்கென்று
பேராலயம் கட்டத் தொடங்கினார். ஆனால், அது அவரால் முடியாமல் போகவே,
திருத்தந்தை பெரிய லியோவின் ஆசியோடு முதலாம் தியோடர் என்ற மன்னர்
அதை நிறைவுசெய்தார்.
இப்பேராலயமோ 1833 ஆண்டு ஏற்பட்ட தீவிபத்தில் கடுமையாக சேதமடைந்தது.
எனவே திருத்தந்தை பதினோறாம் பத்திநாதருடைய காலத்தில், உலகெங்கிலும்
பரவியிருந்த கிறிஸ்தவர்களிடமிருந்து நீதி திரட்டப்பட்டு, தூய
பவுல் பேராலயமானது கட்டி எழுப்பப்பட்டது. இப்பேராலயப் பணிகள்
1854 ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆண்டு நிறைவுபெற்று, அர்ச்சிக்கப்பட்டது.
தொடக்கத்தில் இப்பேராலயத்தின் அர்ச்சிப்புப் பெருவிழா டிசம்பர்
10 அன்று கொண்டாடப்பட்டு வந்தாலும், பின்னாளில் அது நவம்பர் 18
ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு, இன்றுவரை அதே தேதியில் கொண்டாடப்பட்டு
வருகின்றது.
விழா உணர்த்தும் செய்தி
தூய பேதுரு, பவுல் பேராலய அர்ச்சிப்பு விழாவைக் கொண்டாடும்
நாம், இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று
சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
1. உயிருள்ள ஆலயங்களாக விளங்குவோம்
தூய பேதுரு, பவுல் பேராலயங்கள் கட்டியெழுப்பப்பட்ட வரலாற்றுப்
பின்னணியைப் பார்க்கின்றபோது, அவை அவ்வளவு எளிதாகக் கட்டிமுடிக்கப்படவில்லை
என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். இப்பேராலயங்கள் கட்டி எழுப்பப்பட
பலர் பல்வேறு தியாகங்களைச் செய்தார்கள். இன்றைக்கும் கூட ஒவ்வொரு
ஆலயமும் கட்டியெழுப்பப் படுவதற்குப் பின்னால், பலருடைய தியாகம்
அடங்கியிருக்கின்றது என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அசிசி நகர தூய பிரான்சிஸ், சான் தமியானோ என்ற பழுதடைந்த ஆலயத்தில்
ஜெபித்துக்கொண்டிருக்கும்போது, "பிரான்சிஸ்! எனக்கொரு ஆலயம் கட்டுவாயா?"
என்று பாடுபட்ட சிரூபத்திலிருந்து இயேசுவின் குரல் கேட்டதால்,
அந்த ஆலயத்தைக் கட்ட. பிரான்சிஸ் தன்னுடைய துணிக்கடையிலிருந்த
ஆடைகளை எல்லாம் விற்றதும் அதற்கு அவருடைய தந்தை அவருடைய அவரை
வீட்டைவிட்டுத் துரத்திவிட்டதுமான செய்தியைக் நாம் கேள்விப்பட்டிருப்போம்.
இது போன்று எத்தனையோ தியாகச் செயல்கள் ஒவ்வொரு ஆலயமும் கட்டி
எழுப்பட்டதற்குப் பின்னால் இருக்கின்றன. இப்படி ஒவ்வொரு ஆலயத்தையும்
கட்டியெழுப்ப எவ்வளவோ தியாகங்களைச் செய்யும் நாம், உயிருள்ள
ஆலயங்களாக இருக்கின்ற மனிதர்களை கட்டியெழுப்ப, அவர்களுடைய
வாழ்வாதாரத்தை உயர்த்த தியாகங்கள், உதவிகள் செய்கின்றோமா? என்று
சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
கற்களால் கட்டியெழுப்பப்படும் ஆலயங்கள் முக்கியமானதுதான். ஆனால்,
அதைவிட முக்கியமானவர்கள் கடவுளால் கட்டி எழுப்பபட்ட உயிருள்ள
ஆலயங்களாகிய நாம். நாம் நம்முடைய வாழ்வை அர்த்தமுள்ளதாக
மாற்றினால், அது இறைவனுக்கு உகந்த உயிருள்ள பலியாக இருக்கும்;
நாம் அனைவரும் இறைவன் தங்கும் இல்லிடமாகவும் மாறமுடியும்.
ஆகவே, நம்முடைய வாழ்வை இறைவனுக்கு உகந்ததாக மாற்றி, இறைவன் தங்கும்
இல்லிடமாக நாம் மாறுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
தூய பேதுரு, பவுல் பேராலய அர்ச்சிப்பு
=================================================================================
"என் இல்லம் இறைவேண்டலின் வீடு"
பெருநகர் ஒன்றில் பிரிவினை சபையைச் சேர்ந்த மதபோதகர் ஒருவர் இருந்தார்.
அவருக்கு குதிரைகளின்மீதும், குதிரைப் பந்தயத்தின்மீது அதிகமான
ஈடுபாடு இருந்தது. தன்னுடைய வீட்டில்கூட ஒரு உயிர்தரக்
குதிரையை வாங்கி வைத்திருந்தார். குதிரைகளின்மீது இவருக்கு இருந்த
அதிகமான நாட்டத்தைக் கண்ட ஒரு குதிரை வியாபாரி ஒருவர், தன்னிடம்
இருந்த குதிரையை விற்கவேண்டும் என நினைத்து, அவரிடம் பேச்சுக்
கொடுத்தார்:
"ஐயா உங்களுக்கு குதிரையின்மீது அதிகமான நாட்டம் இருக்கிறது என்பதை
நான் அறிவேன். என்னிடம் ஒரு குதிரை இருக்கிறது. அது பார்ப்பதற்கு
மிகவும் அழகாக இருக்கும். அரபு நாட்டிலிருந்து பிரத்யோகமாக இறக்குமதி
செய்யப்பட்ட குதிரை அது. பழகுவதற்கு மிகவும் சாதுவானது. சிறிய
குழந்தைகள்கூட அதில் ஏறிக்கொண்டு சவாரி செய்யலாம். அதற்காக
நீங்கள் பெரிதாக எதையும் செலவழிக்கவேண்டாம். பராமரிப்புச் செலவுகூட
மிகக்குறைவு.
மேலும் அதைப் பார்த்து நீங்கள் போ என்றால் போகும். நில் என்று
சொன்னால் நிற்கும். அவ்வளவு கீழ்படிதலுள்ள குதிரை அது. இப்படிப்பட்ட
ஒரு குதிரையை உங்கள் வாழ்நாளில் நீங்கள் பார்த்திருக்கவே
மாட்டீர்கள். அதனால் நீங்கள் அந்தக் குதிரையை வாங்கிக்கொள்ளுங்கள்"
என்று அந்த குதிரை வியாபாரி மதபோதகரைக் கெஞ்சிக் கேட்டார்.
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த மதபோதகர்
வியாபாரி, "இவ்வளவு கீழ்படிதலுக்கு ஒரு குதிரையை என்னுடைய ஆலயத்தில்
உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளலாமா?, ஏனென்றால் என்னுடைய ஆலயத்திற்கு
வரும் இறைமக்கள் யாருமே என்னுடைய சொல்பேச்சுக் கேட்பதில்லை,
எனக்குக் கீழ்படிந்து நடப்பதுமில்லை" என்றார்.
இதைக் கேட்டு அந்த குதிரை வியாபாரி பேச்சற்று நின்றார்.
ஆலயமும், அதில் நடக்கும் வழிபாடும் மக்களின் மனதில் மாற்றத்தையும்,
தூய அன்பையும் கொண்டுவரவேண்டும். அத்தகைய மாற்றமும், அன்பும்
நிகழவில்லை என்றால், ஆலயத்தாலும், அதில் நிகழும் வழிபாட்டுக்
கொண்டாட்டங்களாலும் ஒரு பயனும் இல்லை.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு எருசலேம் திருக்கோவிலில்
வியாபாரம் செய்துவந்தவர்களை விரட்டி அடிக்கின்றார்; அதன் புனிதத்தன்மையையும்,
மாண்பையும் நிலைநாட்டுகிறார். இயேசுவின் இந்த தீரமிக்க/வீரமிக்க
செயலுக்குப் பின்னால் இருக்கும் உண்மையைச் சிந்தித்துப் பார்ப்பது
நமது கடமையாகும்.
தொடக்க காலத்தில் யூத சமூகம் ஒரு நாடோடிச் சமூகமாகவே வாழ்ந்துவந்தது.
எனவே அவர்களுக்கென்று கோவில் கிடையாது. அவர்கள் இறைவனை மலைதனிலும்,
(யோவான் 4:20) இன்ன பிற இடத்திலும் வழிபாட்டு வந்தார்கள். அதன்பிறகு
ஆண்டவராகிய கடவுள் மோசேக்கு சீனாய் மலையில் கொடுத்த பத்துக்கட்டளைகளையும்,
ஆரோனின் கோலையும், மன்னாவையும் உடன்படிக்கைப் பேழையில் வைத்து,
அதில் கடவுளின் பிரசன்னத்தை உணர்ந்து வாழ்ந்துவந்தார்கள். முதல்முறையாக
தாவீது அரசன் கடவுளுக்குக் கோவில் கட்ட நினைத்தபோது, கடவுள்
அவரிடம், "நீ மிகுதியான குருதியைச் சிந்தினாய், பெரும் போர்களை
நடத்தினாய், எனக்கு முன்பாகத் தரையில் நீ மிகுதியான குருதியைச்
சிந்தியதால், என் பெயருக்கு நீ கோவில் கட்டவேண்டாம்" என்கிறார்.
(1குறி: 22:8)
எனவே, யூத மக்களுக்கான முதல் ஆலயம் தாவீதின் மகனான சாலமோனின்
காலத்தில்தான் கட்டப்படுகிறது. அவர் கடவுளுக்காக கோவிலைக் கட்டி,
அதை இவ்வாறு நேர்ந்தளிக்கிறார், "இஸ்ரயேல் மக்களைச் சாராத அன்னியர்
ஒருவர் உமது பெயரை முன்னிட்டுத் தொலை நாட்டிலிருந்து வந்து,
மாண்புமிக்க உமது பெயரையும், வலிமை வாய்ந்த உமது கையையும், ஆற்றல்
மிகுந்த உமது புயத்தையும் பற்றிக் கேள்விப்பட்டு வந்து, இந்தக்
கோவிலை நோக்கி வேண்டுதல் செய்தால், உமது உறைவிடமாகிய
விண்ணிலிருந்து நீர் அவருக்கு செவிசாய்த்து அந்த அன்னியர் கேட்பதை
எல்லாம் அருள்வீராக".
ஆதலால், சாலமோன் அரசரால் கட்டப்பட்ட ஆலயம் எல்லா மக்களுக்கும்
பொதுவானது என்பதை நம்முடைய மனதில் இருத்திக்கொளகொள்ளவேண்டும்.
இறைவாக்கினர் எசாயா இக்கருத்தை இன்னும் அழுத்தம் திருத்தமாகக்
கூறுவார், "என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைமன்றாட்டின்
வீடு" என்று (எசா 56:7). ஆகவே, எருசலேம் ஆலயம் யூதர்களுக்கு மட்டுமல்லாமல்
எல்லாருக்கும் பொதுவாக இருந்து, அதில் புறவினத்து மக்கள்
ஜெபிக்கக்கூடிய பகுதியில் வியாபாரம் நடந்ததால்தால்தான் ஆண்டவர்
இயேசு அங்கே வியாபாரம் செய்கின்றவர்களை விரட்டி அடிக்கின்றார்.
ஆலயம் இறைவேன்டலின் வீடு, அது வியாபாரத் தளமல்ல" என்பதை எண்பிக்கின்றார்.
இறைமக்கள் சமூகமாகிய நாம் இறைவன் தங்கிவாழும் இல்லத்திற்கு எந்தளவுக்கு
முக்கியத்துவமும், மதிப்பும் தருகிறோம் என்று சிந்தித்துப்
பார்க்கவேண்டும். "ஆண்டவன் சன்னதி, மனதிற்கு நிம்மதி" என்பார்கள்.
எனவே நாம் ஆலயத்தின் புனிதத்தன்மையை உணர்வோம். ஆர்வமாய் ஆண்டவரை
நாடிச் செல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
"He who doesnot go to church in bad weather will go to hell
when it is fair"
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். |
|