|
|
17 நவம்பர்
2019 |
|
| பொதுக்காலம்
33ம் ஞாயிறு
- 3ம் ஆண்டு |
| |
|
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான்.
இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம்
4: 1-2a
"இதோ! சூளையைப் போல் எரியும் அந்த நாள் வருகின்றது. அப்போது
ஆணவக்காரர், கொடுமை செய்வோர் அனைவரும் அதனுள் போடப்பட்ட சருகாவர்;
வரப்போகும் அந்த நாள் அவர்களுடைய வேரையோ, கிளையையோ
விட்டுவைக்காது; முற்றிலும் சுட்டெரித்துவிடும்'' என்கிறார் படைகளின்
ஆண்டவர்.
"ஆனால் என் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல் நீதியின் கதிரவன்
எழுவான். அவனுடைய இறக்கைகளில் நலம் தரும் மருந்து இருக்கும்.''
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா:
98: 5-6.
7-8. 9 (பல்லவி: 9d) Mp3
=================================================================================
பல்லவி: மக்களினங்களை ஆண்டவர் நேர்மையுடன் ஆட்சி செய்வார்.
5 யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி
இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். 6 ஆண்டவராகிய அரசரின்
முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள்.
பல்லவி
7 கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக!
8 ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். பல்லவி
9 ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர்
உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்;
மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார். பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது.
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து
வாசகம் 3: 7-12
சகோதரர் சகோதரிகளே, எங்களைப் போல் ஒழுகுவது எப்படி என்பது உங்களுக்கே
தெரியும். ஏனெனில், உங்களிடையே இருந்தபோது நாங்கள் சோம்பித்
திரியவில்லை. எவரிடமும் இலவசமாக நாங்கள் உணவருந்தவில்லை.
மாறாக, உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, இராப்பகலாய்ப்
பாடுபட்டு உழைத்தோம். எங்களுக்கு வேண்டியதைப் பெற உரிமை இல்லை
என்பதால் அல்ல, மாறாக, நீங்களும் எங்களைப் போல நடப்பதற்காக உங்களுக்கு
முன்மாதிரி காட்டவே இவ்வாறு செய்தோம்.
`உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது' என்று நாங்கள் உங்களிடையே
இருந்தபோதே உங்களுக்குக் கட்டளை கொடுத்திருந்தோம். உங்களுள் சிலர்
எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறிகளாகச் சுற்றித்திரிந்து, பிறர்
வேலையில் தலையிடுவதாகக் கேள்விப்படுகிறோம். இத்தகையோர் ஒழுங்காகத்
தங்கள் வேலையைச் செய்து, தாங்கள் உண்ணும் உணவுக்காக உழைக்க
வேண்டும் என ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் கட்டளையிட்டு
அறிவுறுத்துகிறோம்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
லூக் 21: 28
அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில்
உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக்
காத்துக்கொள்ளுங்கள்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 5-19
அக்காலத்தில் கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். கவின்மிகு
கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப் பட்டிருக்கிறது
என்று சிலர் பேசிக்கொண்டிருந்தனர்.
இயேசு, "இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்;
அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்''
என்றார்.
அவர்கள் இயேசுவிடம், "போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்?
இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?'' என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், "நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்; ஏனெனில்
பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, `நானே அவர்' என்றும்,
`காலம் நெருங்கி வந்துவிட்டது' என்றும் கூறுவார்கள்; அவர்கள்
பின்னே போகாதீர்கள்.
ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது
திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும்.
ஆனால் உடனே முடிவு வராது'' என்றார். மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து
கூறியது: "நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும்.
பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும்
ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில்
தோன்றும்.
இவை அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத்
துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்:
சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின் பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும்
இழுத்துச் செல்வார்கள். எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு
வாய்ப்பளிக்கும்.
அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட
வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில்
நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள்
எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும்
முடியாது.
ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும்
உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள்.
என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும்
உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது.
நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக்
காத்துக்கொள்ளுங்கள்'' என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
I மலாக்கி 4: 1-2a
II 2 தெசலோனிக்கர் 3: 7-12
III லூக்கா 21: 5-19
"இறுதிவரை மனவுறுதியோடு இரு"
நிகழ்வு
கொரியாவில் ஜூன்-கோன் கிம் (Joon-Gon Kim) என்றொரு கிறிஸ்தவத்
தலைவர் இருந்தார். கிறிஸ்துவின்மீது ஆழமான நம்பிக்கை
கொண்டிருந்த அவர், கிறிஸ்துவைக் குறித்து மக்களிடம் மிகத்
துணிச்சலாக அறிவித்து வந்தார். நாள்கள் செல்லச் செல்ல,
ஜூன்-கோன் கிம் மட்டுமல்லாது, அவருடைய தந்தையும் அவருடைய மனைவியும்
கிறிஸ்துவைக் குறித்து நற்செய்தியை மக்கட்கு அறிவிக்கத் தொடங்கினார்கள்.
இது அங்கிருந்த கம்யூனிஸ்ட்கட்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை.
அவர்கள் ஜூன்-கோன் கிம்மிடமும் அவருடைய தந்தையிடமும் மனைவியிடமும்
கிறிஸ்துவைக் குறித்து நற்செய்தியை யாருக்கும் அறிவிக்கக்கூடாது...
மீறினால் கொலைசெய்யப்படுவீர்கள் என்று எச்சரிக்கப்பட்டார்கள்.
அவர்கள் அதற்கெல்லாம் அஞ்சாமல் கிறிஸ்துவைக் குறித்து நற்செய்தியை
மக்கட்குத் தொடர்ந்து அறிவித்து வந்தார்கள். ஒருநாள் ஜூன்-கோன்
கிம்மின் தந்தையும் அவருடைய மனைவியும் ஒரு பொது இடத்தில்
கிறிஸ்துவைக் குறித்து நற்செய்தியை அறிவித்துக்
கொண்டிருக்கும்போது, அங்கு வந்த கம்யூனிஸ்டுகள், அவர்கள் இருவரையும்
அடித்தே கொன்றார்கள்; அதைப் பார்த்துவிட்டுக் கூட்டம் சிதறி ஓடியது.
செய்தி அறிந்த ஜூன்-கோன் கிம் மிகுந்த வேதனை அடைந்தார்.
"தன்னுடைய தந்தையையும் மனைவியையும் கயவர்கள் இப்படிக்
கொன்றுபோட்டுவிட்டார்களே" என்று அவர் அவர்களைப் பழித்துரைத்துக்
கொண்டிருக்காமல், அவர்களை மனதார மன்னித்தார். மட்டுமல்லாமல்,
அவர்கள் மனமாற்றம் பெறவேண்டும் என்று இறைவனிடம் மன்றாடிவந்தார்.
இதற்குப் பின்பு அவர் புதிய உத்வேகத்துடன் கிறிஸ்துவைக்
குறித்து நற்செய்தி அறிவிக்கத் தொடங்கினார். எல்லாம் நன்றாகச்
சென்றுகொண்டிருந்த தருணத்தில், ஒருநாள் அவர் நற்செய்தியை அறிவித்துவிட்டு,
தன்னுடைய இல்லத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, முன்பு
அவருடைய தந்தையையும் மனைவியும் கொன்றுபோட்ட அதே கயவர்கள் அவர்மீது
பாய்ந்து, அவரை அடித்துக் குற்றுயிராய்ப் போட்டுவிட்டுச்
சென்றார்கள். அந்த நேரத்தில் தற்செயலாக அங்கு வந்த ஜூன்-கோன்
கிம்மிற்கு அறிமுகமான ஒருவர் அவரை மருத்துவமனைக்குக்
கொண்டுசென்று, காப்பாற்றினார். இந்தக் கொடிய நிகழ்விற்குப் பிறகு
ஜூன்-கோன் கிம்மிற்குத் தெரிந்தவர்களெல்லாம், அவரிடம்
கிறிஸ்துவைக் குறித்து நற்செய்தி அறிவிப்பதை விட்டுவிடுமாறு
கெஞ்சிக்கேட்டார்கள். அவரோ, நற்செய்தி அறிவிப்பது என்னுடைய
கடமை. அந்தக் கடமையை என்னுடைய உயிர் உள்ளவரை ஆற்றுவேன் என்றார்.
நன்றாக உடல்நலம் தேறியதும் ஜூன்-கோன் கிம் முன்பைவிட மிகுந்த
வல்லமையோடு கிறிஸ்துவைக் குறித்து நற்செய்தி அறிவிக்கத் தொடங்கினார்.
இதைப் பார்த்துவிட்டு அவருடைய எதிரிகள் ஆச்சரியப்பட்டார்கள்.
நாள்கள் மெல்ல நகர்ந்துகொண்டு சென்றன. ஜூன்-கோன் கிம்
கிறிஸ்துவைப் பற்றித் தொடர்ந்து நற்செய்தி அறிவித்துவந்தார்.
அதே நேரத்தில் தன்னுடைய எதிரிகட்காக இறைவனிடம் மன்றாடியும் வந்தார்.
இதனால் யாரெல்லாம் அவருடைய தந்தையுயையும் மனைவியையும்
கொன்றுபோட்டு, அவரை அடித்துத் துன்புறுத்தினார்களோ, அவர்களே
அவரிடம் வந்து மன்னிப்புக் கேட்டு, கிறிஸ்துவைத் தங்களுடைய ஆண்டவராகவும்
மீட்பராகவும் ஏற்றுக்கொண்டார்கள்.
ஜூன்-கோன் கிம், "எதிரிகள் தன்னுடைய தந்தையையும் மனைவியையும்
கொன்றுபோட்டுவிட்டார்கள்... அதனால் கிறிஸ்துவைக் குறித்து நற்செய்தியை
அறிவிப்பதை விட்டுவிடவேண்டும்" என்று நினைக்காமல், மனவுறுதியோடு
கிறிஸ்துவின் நற்செய்தியை மக்கட்கு அறிவித்து வந்தார். இதனால்
எதிரிகளே அவர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு மனம்மாறினார்கள்.
ஜூன்-கோன் கிம்மைப் போன்று நாமும் இறுதிவரை மனவுறுதியோடு இருந்து
ஆண்டவர்க்குச் சான்றுபகரவேண்டும். அதைத்தான் இன்றைய இறைவார்த்தை
எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
ஏமாறவேண்டாம்!
இன்றைய நற்செய்தி வாசகம் எருசலேம் திருக்கோயிலின் அழிவு
குறித்தும் மானிடமகனுடைய வருகையின்போது நிகழும் அடையாளங்கள்
குறித்தும் இறுதி நாளைக் குறித்தும் எடுத்துக் கூறுகின்ற அதேவேளையில்,
நாம் நம்முடைய வாழ்வை எப்படி வாழவேண்டும் என்பது குறித்த ஒருசில
தெளிவுகளைத் தருகின்றது. அவை குறித்து இப்போது சிந்தித்துப்
பார்ப்போம்.
இயேசு கிறிஸ்து, இறுதிநாளைக் குறித்துப் பேசுகின்றபோது சொல்லக்கூடிய
முதலாவது செய்தி, "ஏமாறவேண்டாம்" என்பதாகும். யாரிடம் ஏமாறவேண்டும்
என்பதையும் இயேசு மிக அழகாக எடுத்துச் சொல்கின்றார். இயேசுவின்
காலத்தில் பலர் தாங்கள்தான் மெசியா... காலம் நெருங்கிவந்துவிட்டது...
என்றுசொல்லி மக்களை மூளைச் சலவை செய்து ஏமாற்றிவந்தார்கள். இன்றைக்கும்
பலர் அப்படியொரு செயலில் ஈடுபடுவதைக் காணமுடிகின்றது. இவர்களிடம்தான்
யாரும் ஏமாறவேண்டாம் என்று இயேசு உறுதியாகச் சொல்கின்றார். காரணம்,
அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தை ஒருவரைத் தவிர வேறு
யாருக்கும் தெரியாது (மத் 24: 36). தந்தை ஒருவருக்குத்தான் அந்த
நாளைப் பற்றி, அந்த வேளையைப் பற்றித் தெரியும் என்பதால்,
யாரும் ஏமாறவேண்டாம் என்று இயேசு கூறுகின்றார்.
திகிலுறவேண்டாம்!
இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்கின்ற இரண்டாவது செய்தி,
திகிலுறவேண்டாம் அல்லது அஞ்சவேண்டாம் என்பதாகும். எவற்றைக்
குறித்துத் திகிலுறவேண்டாம் என்றால், உலகில் ஏற்படும் இயற்கைப்
பேரிடர்கள், போர்கள், கலவரங்கள் போன்றவற்றைக் குறித்து ஆகும்.
ஒருசிலர் உலகில் நடைபெறும் போர்கள், இயற்கைப் பேரிடர்கள் ஆகியவற்றைக்
கண்டு, "கடவுள் இவ்வுலகை அழிப்பதற்குத்தான் இதுபோன்ற இயற்கைப்
பேரிடர்களை அனுப்புகின்றார்" என்று பேசுவதுண்டு. இத்தகையோர்
கடவுள் தன் திருமகன் இயேசுவை இந்த உலகை அழிப்பதற்கு அல்ல,
வாழ்வுகொடுக்கவே அனுப்பினார் (யோவா 10:10) என்ற உண்மையை உணர்வது
நல்லது.
மேலும் புனித பவுல் எபேசியர்க்கு எழுதிய திருமுகத்தில் கூறுவதுபோல்,
கடவுள் தமது திருவுளத்தின் திட்டத்தின்படி அனைத்தையும் செயல்படுத்தி
வருகின்றார் (எபே 1:11). ஆகையால், நிகழும் பலவகையான இயற்கைச்
சீற்றங்களைக் குறித்து அஞ்சிக் கொண்டிருக்காமல், அஞ்சாமல் ஆண்டவரிடம்
நம்பிக்கைகொண்டு வாழ்வது சிறப்பானது.
கவலைப்படவேண்டாம்!
நற்செய்தியில் இயேசு சொல்கின்ற மூன்றாவது செய்தி, கவலைப்படவேண்டாம்
என்பதாகும். எவற்றைக் குறித்த கவலை என்றால், கிறிஸ்து இயேசுவைக்
குறித்து அறிவித்து, சான்று பகர்கின்றபோது மக்களிடமிருந்தும்
சொந்தக் குடும்பத்திடமிருந்தும் வரும் எதிர்ப்புகள், துன்பங்கள்,
வேதனைகள் ஆகியவற்றால் வரும் கவலை. இவற்றிற்காக நாம் கவலைப்படவேண்டாம்
என்பதுதான் இயேசு நமக்குச் சொல்லும் செய்தி.
நாம் ஏன் கவலைப்படவேண்டாம் என்பதற்கான காரணங்களையும் இயேசு
சொல்கின்றார். அவைதான் இறைவன் தரும் நாவன்மை, பாதுகாப்பு, உடனிருப்பு
ஆகியவையாகும். ஆம், இறைவன் தருகின்ற பாதுகாப்பையும் உடனிருப்பையும்
ஆசியையும் ஒருவர் உணர்ந்துகொண்டால், அவர் யாருக்கும் எதற்கும்
கவலைப்படத் தேவையில்லை. இவற்றைவிட இன்னொரு முக்கியமான
செய்தியையும் இயேசு சொல்கின்றார், அதுதான் இறுதிவரை மனவுறுதியோடு
இருப்பது. கிறிஸ்துவின் மதிபிடுகளின்படி வாழ்கின்றபோது எதிர்வரும்
துன்பங்கள், சாவால்கள் யாவற்றைக் கண்டு அஞ்சாமல், மனவுறுதியோடு
இருந்தால், நம்மால் நிச்சயம் நம்முடைய வாழ்க்கைக் காத்துக்கொள்ளலாம்.
ஆகையால், நாம் இறுதிவரை மனவுறுதியோடு இருந்து ஆண்டவர்க்குச்
சான்றுபகர முயற்சி செய்வோம்.
சிந்தனை
"சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள்; எனவே அஞ்சாதிருங்கள்"
(மத் 10: 31) என்பார் இயேசு. ஆகையால், நாம் ஆண்டவரைத் தவிர
வேறு யாருக்கும் எதற்கும் அஞ்சாமல், மனவுறுதியோடு இருந்து, ஆண்டவர்க்குச்
சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
=================================================================================
திருப்பலி முன்னுரை
=================================================================================
மன உறுதியோடு இருந்து வாழ்வை காத்துக்கொள்ளுங்கள் என்பதை வலியுறுத்தும்
பொதுக்காலம் முப்பத்து மூன்றாம் ஞாயிறு திருப்பலி கொண்டாட்டத்திற்கு
அன்புடன் அழைக்கின்றோம்.
வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை கவலைகள் மறைத்துக்
கொண்டிருந்தாலும், "காலங்கள் அவருடையன, யுகங்களும் அவருடையன"
என்ற ஆண்டவரின் வாக்கு நம்முள் நம்பிக்கை ஒளியை ஏற்றுகின்றது.
இவ்வொளி நம் மனதினுள் தூண்டப்பட்டு மன உறுதியுடன் ஆண்டவரின்
நாளுக்காக விழிப்பாய் இருக்க நம்மைத் தகுதிப்படுத்துவோ.
இன்றைய முதல் வாசகத்தில், என் பெயருக்கு அஞ்சி நடக்கிற உங்கள்மேல்
நீதியின் சூரியன் உதிக்கும் என்ற நல் வாக்கைத் தருகிறார் இறைவாக்கினர்
மலாக்கி. இறுதி நாளில் என்ன நடக்கும் என்பதைக் கூறுகிறார்.
கொடுமை செய்வோர் அனைவரும் சருகாவர். ஆனால் அவரது பெயருக்கு அஞ்சுபவர்
மேல் நீதியின் சூரியன் உதிக்கும் என்ற ஆசீர்வாதத்தைப்
பொழிகின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் உலக அச்சுறுத்தல்களின் போதும்
நீங்கள் உறுதியோடு இருங்கள் என்கிறார் இயேசு. உலகத்தின் போக்கு
குறித்த கவலைகளும் பயமும் இயேசுவின் காலத்தில் மட்டுமல்ல, இன்றைய
சூழலிலும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றது. அனைத்து வழிகளிலிருந்தும்
பூமியின் அழிவு பற்றி ஆய்வுகள் அறிவியல் பூர்வமாக முன்வைக்கப்பட்டாலும்,
நம்பிக்கையை எவரும் தருவதில்லை. எனவே போலி தீர்க்கதரிசிகளை கண்டோ,
சப்தமிட்டு பேசி செபிக்கிறவர்களை கண்டோ கலங்காதீர்கள்; திடங்கொள்ளுங்கள்.
இயேசுவில் ஆழமான நம்பிக்கை கொண்டு இவ்வுலகை ஜெயிப்போம் என்ற
விசுவாசத்தோடு இப்பலியில் பங்கேற்போம்.
=================================================================================
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
=================================================================================
1. நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன் என்றவரே எம் இறைவா!
எம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் மற்றும்
துறவறத்தார் அனைவரும் உமது ஞானத்தைப் பெற்று நாவினால் நற்செய்தியை
அறிவிக்கவும், போலித் தீர்க்கதரிசிகள் பற்றிய விழிப்புணர்வை மக்கள்
மனதில் ஏற்படுத்தி, இயற்கையோடு இணைந்து, மக்களை வழிநடத்த ஞானம்
தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
2. மன உறுதியோடு வாழ கற்றுக்கொள்ளுங்கள் என்றவரே எம் இறைவா!
எம் நாட்டை வழிநடத்தும் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் நாட்டை அமைதியின்
பாதையில் வழிநடத்தவும் நாட்டு மக்களின் மீது வரிச்சுமையை சுமத்தாமல்,
நாடு நலமும் வளமும் பெறுவதில் மட்டுமே அக்கறை கொள்ளும் வரம் அருள
வேண்டும் என உம்மை மன்றாடுகின்றோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
3. என் பெயருக்கு அஞ்சி நடங்கள் என்றவரே எம் இறைவா!
அன்றாட வாழ்வில் மேற்கொள்ளும் சவால்கள், போராட்டங்களினால் இறை
பாதையில் இருந்து விலகிச் செல்லாமலும் வேலைப்பளுவில் எதிர்காலத்தை
இழக்காமலும், இறைவனுக்கு அஞ்சி நலம் தரும் செயல்களை செய்ய வரம்
அருள வேண்டும் என உம்மை மன்றாடுகின்றோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
4. நலன்களின் நாயகனே எம் இறைவா!
எம் பகுதியில் போதிய பருவ கால சூழ்நிலையைத் தந்து வேளாண்மை சிறப்படையும்,
நீர்நிலைகள் மாசடையாமல் பேணப்பட்டு முறையாக பயன்படுத்தப்படவும்,
இயற்கையோடு இணைந்து வாழ்வை நடத்தவும், குடும்ப அமைதி, மகிழ்ச்சி
பெருகவும், கல்வி, வேலைவாய்ப்பு, அருட்சாதனம்
, குழந்தை வரம்
வேண்டுவோர் உமது அருளால் பெற்ற மகிழவும் வேண்டுமென்று உம்மை
கெஞ்சி மன்றாடுகின்றோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
நன்றி: திருமதி ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம். |
|