|
|
16 நவம்பர்
2019 |
|
|
பொதுக்காலம்
32ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆண்டவராகிய உம்மைப் புகழ்ந்துகொண்டே
சென்றனர்.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 18: 14-16; 19: 6-9
எல்லாம் அமைதியில் ஆழ்ந்திருந்தபோது, நள்ளிரவு கடந்துவிட்ட
வேளையில், எல்லாம் வல்ல உம் சொல் விண்ணகத்திலுள்ள அரியணையைவிட்டு
எழுந்து, அஞ்சா நெஞ்சம் கொண்ட போர் வீரனைப் போல் அழிவுக்கெனக்
குறிக்கப்பட்ட நாட்டின் மீது வந்து பாய்ந்தது.
உமது தெளிவான கட்டளையாகிய கூரிய வாளை ஏந்தியவண்ணம் அது நின்று
கொண்டு, எல்லாவற்றையும் சாவினால் நிரப்பியது; மண்ணகத்தில் கால்
ஊன்றியிருந்த போதிலும், விண்ணகத்தைத் தொட்டுக்கொண்டிருந்தது.
உம் பிள்ளைகள் தீங்கின்றிக் காக்கப்படும்படி, படைப்பு முழுவதும்
உம் கட்டளைகளுக்குப் பணிந்து, மீண்டும் தன் இயல்பில்
புத்துயிர் பெற்றது. அவர்களது பாசறைக்கு முகில் நிழல் கொடுத்தது.
முன்பு தண்ணீர் இருந்த இடத்தில் பின்பு உலர்ந்த தரை
தோன்றிற்று.
செங்கடலினூடே தங்குதடை இல்லாத வழியும், சீறிப்பாயும் அலைகளினூடே
புல்திடலும் உண்டாயின. உமது கைவன்மையால் காப்பாற்றப்பட்ட மக்கள்
அனைவரும் அவ்வழியே கடந்து சென்றனர். உம்முடைய வியத்தகு செயல்களை
உற்றுநோக்கிய வண்ணம் சென்றனர். குதிரைகளைப் போலக் குதித்துக்
கொண்டும், ஆட்டுக்குட்டிகளைப் போலத் துள்ளிக்கொண்டும், தங்களை
விடுவித்த ஆண்டவராகிய உம்மைப் புகழ்ந்துகொண்டே சென்றனர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
- திபா 105: 2-3. 36-37. 42-43 (பல்லவி: 5a)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்!
2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம்
வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! 3 அவர் தம்
திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம்
அக்களிப்பதாக! பல்லவி
36 அவர் அவர்களது நாட்டின் தலைப்பேறுகள் அனைத்தையும்
தாக்கினார்; அவர்களது ஆண்மையின் முதற்பேறுகள் அனைத்தையும்
வீழ்த்தினார். 37 அவர் இஸ்ரயேலரை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படச்
செய்தார்; அவர்கள் குலங்களில் எவரும் தளர்ந்து போகவில்லை. பல்லவி
42 ஏனெனில், தம் அடியார் ஆபிரகாமுக்கு அளித்த தமது தூய
வாக்குறுதியை அவர் நினைவுகூர்ந்தார். 43 அவர்தம் மக்களை மகிழ்ச்சியோடு
வெளிக்கொணர்ந்தார்; அவர் தாம் தெரிந்தெடுத்தவர்களை ஆரவாரத்தோடு
கூட்டிச் சென்றார். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
2 தெச 2: 14
அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின்
மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின்
வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தாம் தேர்ந்துகொண்டவர்களுக்கு கடவுள் நீதி வழங்காமல் இருப்பாரா?
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-8
அக்காலத்தில் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட
வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். "ஒரு நகரில் நடுவர்
ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும்
மதிப்பதில்லை.
அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய்,
"என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்' என்று
கேட்டுக் கொண்டேயிருந்தார்.
நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு
அவர், "நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.
என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால்
நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை
வாங்கிக்கொண்டேயிருப்பார்' என்று தமக்குள்ளே
சொல்லிக்கொண்டார்.''
பின் ஆண்டவர் அவர்களிடம், "நேர்மையற்ற நடுவரே இப்படிச்
சொன்னார் என்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை
நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல்
இருப்பாரா? அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்துவாரா?
விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச்
சொல்கிறேன்.
ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக்
காண்பாரோ?'' என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
சாலமோனின் ஞானம் 18: 14-16, 19: 6-9
தன்னை நம்பினோரை விடுவிக்கும் ஆண்டவர்
நிகழ்வு
மிகச் சிறந்த கல்வியாளரும் மிரா இயக்கத்தை நிறுவியவருமான சாது
வாஸ்வானி, 1910 ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு உரை நிகழ்த்தச்
சென்றார். அவர் எங்கெல்லாம் சென்றாரோ, அங்கெல்லாம் மக்கள் அவருடைய
உரையை ஆர்வமாய்க் கேட்டார்கள். மட்டுமல்லாமல், அங்குள்ள மக்கள்
அவரிடம் இந்திய மண்ணின் ஆன்மிக வளங்களையும் பெருமைகளையும்
தெளிவுறக் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள்.
எல்லா இடங்களுக்கும் சென்று உரை நிகழ்த்தியபின், இந்தியா
திரும்பிச் செல்வதற்கான பயணச்சீட்டு வாங்குவதற்குப் போதுமான
பணம் தன்னிடம் இருக்கின்றதா என்று பார்த்தார் சாது வாஸ்வானி.
அவரிடம் பயணச் சீட்டு வாங்குவதற்குப் போதுமான பணம் இல்லை என்பதை
அறிந்ததும் திடுக்கிட்டார். இருந்தாலும் அவர் அதை நினைத்துக்
கவலைப்பட்டுக்கொண்டிருக்காமல், ஆண்டவர் எனக்குப் பயணச்சீட்டைப்
பெற்றுத் தருவார் என்ற உறுதியான நம்பிக்கையோடு இருந்தார்.
இந்தியாவிற்குச் செல்லக்கூடிய கப்பல் புறப்படுவதற்கு முந்தைய
நாள், கூச் பீகார் அரசியால் சாது வாஸ்வானி அழைக்கப்பட்டார்.
கூச் பீகார் என்பது மேற்கு வங்கத்தில் இருக்கின்ற ஒரு முக்கிய
இடம். இந்தக் கூச் பீகார் அரசி அந்த நேரத்தில் ஐரோப்பாக் கண்டத்தைச்
சுற்றிப் பார்க்க வந்திருந்தார். அவர் சாது வாஸ்வானி அங்கு இருக்கின்றார்
என்பதைத் தெரிந்துகொண்டு, அவரைத் தான் தங்கிருந்த இடத்திற்கு
அழைத்தார். சாதுவாஸ்வானியும் அரசியின் அழைப்பை ஏற்று, அவர் தங்கியிருந்த
இடத்திற்குச் சென்றார்.
அரசி, சாது வாஸ்வானியைக் கண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்.
பின்னர் இருவரும் சிரித்து மகிழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். இடையில்
அரசி சாது வாஸ்வானியிடம், "பெருந்தகையே! உங்களுக்கு நான் ஓர்
உதவி செய்யலாம் என்று இருக்கின்றேன்... நான் உங்களுக்கு அந்த
உதவியைச் செய்ய நீங்கள் என்னை அனுமதிப்பீர்களா...?" என்று
கேட்டார். சாது வாஸ்வானி சரி என்பதுபோல் தலையாட்டினார். உடனே
அரசி அவரிடம், "நாளைய நாளில் நீங்கள் இந்தியாவிற்குத்
திரும்பிச் செல்கின்றீர்கள்தானே...? நானும் உங்களோடு இந்தியாவிற்குத்
திரும்பிச் செல்கின்றேன். அதனால் உங்களுக்கும் சேர்த்து இரண்டு
பயணச்சீட்டுகளை வாங்கட்டுமா...?" என்றார். சாது வாஸ்வானிவோ,
மிகுந்த மகிழ்ச்சியோடு சரி என்று சொன்னார்.
பின்னர் அவர் அரசியிடமிருந்து விடைபெற்று தான் தங்கியிருந்த
இடத்திற்குத் திரும்பி வரும்போது, "கடவுள் எனக்கு எப்படியும்
பயணச்சீட்டைப் பெற்றுத் தருவார் என்று உள்ளூர நம்பினேன்...
நான் நம்பியது வீண்போகவில்லை" என்று சொல்லி கடவுளைப் போற்றிப்
புகழ்ந்தார்.
கடவுளை நம்பினோரைக் கடவுள் ஒருபோதும் கைவிடப்மாட்டார்; அவர்களை
அவர் எல்லாவிதமான நெருக்கடியிலிருந்தும் விடுவிப்பார்; அவர்களுக்குப்
பக்க பலமாக இருப்பார் என்ற செய்தியை மேலே உள்ள நிகழ்வானது நமக்கு
எடுத்துக்கூறுகின்றது. இன்றைய முதல் வாசகம் நமக்கு இதே
செய்தியைத்தான் எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது
நாம் சிந்தித்துப் பார்ப்போம்
ஆண்டவரிடம் நம்பிக்கை கொள்ளாதோர் தண்டிக்கப்படல்
சாலமோனின் ஞான நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் ஒரு
கவிதை வடிவில் இருக்கின்றது. இது இஸ்ரயேல் மக்களை அடிமைப்படுத்தியிருந்த
எகிப்தியர்கள் எப்படித் தண்டிக்கப்பட்டார்கள் என்பதையும் ஆண்டவரிடம்
நம்பிக்கை கொண்டிருந்த (?) இஸ்ரயேல் மக்கள் எப்படி விடுவிக்கப்பட்டார்கள்
என்பதைக் குறித்தும் பேசுகின்றது. முதலில் ஆண்டவர்மீது நம்பிக்கை
கொள்ளாத அல்லது ஆண்டவருடைய மக்களைத் தண்டித்த எகிப்தியர்கள் எப்படித்
தண்டிக்கப்பட்டார்கள் என்று பார்ப்போம்.
எகிப்தியர்கள் இஸ்ரயேல் மக்களைக் கடுமையாகச் சித்ரவதை செய்தார்கள்.
எந்தளவுக்கு என்றால், இஸ்ரயேல் மக்களுடைய குரல் ஆண்டவருடைய
செவிகளை அடையும் அளவுக்கு அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள்.
இதனால் இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிப்பது போன்று,
"ஆண்டவரின் சொல் அழிவுக்கெனக் குறிக்கப்பட்ட (எகிப்து)
நாட்டின்மீது வந்து பாய்ந்தது... எல்லாவற்றையும் சாவினால் நிரப்பியது"
என்ற நிலையானது ஏற்பட்டது. அப்படியானால், ஆண்டவரின்மீது நம்பிக்கை
வைக்காமல், அவருடைய மக்களைத் துன்புறுத்துவோருக்கு இத்தகையதொரு
நிலைதான் ஏற்படும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டோர் விடுவிக்கப்படல்
ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் தண்டிக்கப்பட்டத்தைப்
பேசிய பேசிய சாலமோனின் ஞானநூல் ஆசிரியர், ஆண்டவர்மீது நம்பிக்கை
நம்பிக்கை வைத்து வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள் எப்படி பகைவர்களிடமிருந்து
விடுவிக்கப்பட்டார்கள் என்பதைக் குறித்தும் பேசுகின்றார். எகிப்தியர்களிடம்
அடிமைப்பட்டுக் கிடந்த இஸ்ரயேல் மக்களை விடுவிப்பதற்காக கடவுள்
அவர்கள் நடுவில் பத்துவிதமான கொள்ளை நோய் அனுப்பினார். இதனால்
மனம்மாறிய பார்வோன் அரசன், இஸ்ரயேல் மக்களை அங்கிருந்து போக அனுமதித்தான்.
ஆனாலும் அவன் தன்னுடைய படைவீரர்களை அவர்கள் பின்னாலேயே அனுப்பினான்.
இதனால் அவர்கள் செங்கடலில் மூழ்கடிக்கப்பட்டார்கள். இவ்வாறு ஆண்டவர்
இஸ்ரயேல் மக்களை எதிரிகளிடமிருந்து விடுவித்தார். அதற்காக அவர்கள்
ஆண்டவரைப் புகழ்ந்தார்கள் என்று இன்றைய முதல் வாசகத்தின் இறுதியில்
வாசிக்கின்றோம்.
இன்றைய முதல் வாசகத்தை, குழந்தை இயேசுவைத் தன்னுடைய கையில் ஏந்திய
சிமியோன் சொன்ன, "இக்குழந்தை பலருடைய வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும்
காரணமாக இருக்கும்" (லூக் 2: 34) என்ற வார்த்தைகளோடு இணைத்துச்
சிந்தித்துப் பார்த்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும். இயேசு
பலருடைய வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருந்தார் என்றால்,
அவர்மீது நம்பிக்கை கொண்டோருடைய எழுச்சிக்கும் அவர்மீது நம்பிக்கை
கொள்ளாதவருடைய வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்தார் என்று சொல்லலாம்.
அதுபோன்றுதான் எகிப்தியர்கள் ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளாததால்
வீழ்ந்தார்கள், இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டதால்,
விடுவிக்கப்பட்டார்கள். ஆகையால், நாம் ஆண்டவர்மீது நம்பிக்கை
கொண்டு வாழ்ந்தால், அவர் தருகின்ற மீட்பையும் எல்லா ஆசியையும்
பெறுவோம்.
சிந்தனை
"இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்?" (
1 யோவா 5:5) என்பார் புனித யோவான். ஆகையால், நாம் இயேசுவின்
மீது நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
இறையாசியைப்
பெற்றுத்தரும் இறைவேண்டல்
நிகழ்வு
சீனாவில் மருத்துவப் பணியையும் மறைப்பணியையும் ஒருசேரச் செய்துவந்தார்
குருவானவர் ஒருவர். ஒருநாள் அவர் தன்னுடைய பணிகளை
முடித்துவிட்டு, தான் இருந்த இடத்திற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தபோது,
கொள்ளைக்கூட்டம் ஒன்று அவரைச் சுற்றி வளைத்துக்கொண்டு, அவரிடம்
இருப்பதையெல்லாம் கொடுத்துவிடுமாறு கேட்டது. அவரிடம் அந்தக்
கொள்ளைக்கூட்டத்திடம் கொடுக்கின்ற மாதிரி எதுவும் இல்லை;
திருவிவிலியம் மட்டுமே இருந்தது. அதனால் அவர் கொள்ளைக்கூட்டத்
தலைவனிடம், "உங்களிடம் கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை; என்னை
விட்டுவிடுங்கள்" என்றார்.
அவனோ அவர் சொன்னதை நம்பவில்லை. "நீ என்னிடமே பொய்
பொய்சொல்கிறாய்! அதனால் நான் உன்னை அருகில் இருக்கும் குகையில்
வைத்துக் கொல்லப்போகிறேன்" என்றான். இவ்வாறு சொன்னபிறகு அவனோடு
இருந்த மற்ற கொள்ளையர்கள் குருவானவரை அருகாமையில் இருந்த
குகைக்கு இழுத்துக்கொண்டு போனார்கள். குருவானவர்க்குப் பயம்
தொற்றிக்கொண்டது. உடனே அவர் இறைவனை நோக்கி மன்றாடத் தொடங்கினார்:
"இறைவா! என்மேல் இரக்கமாயிரும்! இவர்கள் என்னை எப்படியும் கொல்லத்தான்
போகிறார்கள்; அதை நினைத்து எனக்குக் கவலையில்லை. ஆனாலும், நான்
என்னுடைய சாவை மனவலிமையோடும் எந்தவோர் அச்சமும் இல்லாமல்
துணிச்சலோடு எதிர்கொள்ளவேண்டும். அதற்கு உம் அருள்தாரும்."
குருவானவர் இவ்வாறு இறைவனிடம் வேண்டிக்கொண்டு போகும்போதே குகை
ஒன்று வந்தது. பின்னர் அந்தக் கொள்ளையர்கள் அவரை குகைக்குள்
நிறுத்த, கொள்ளைக்கூட்டத் தலைவன் தன்னிடம் இருந்த
துப்பாக்கியால் குருவானவரைச் சுடுவதற்கு, துப்பாக்கியைத்
தூக்கினான். அப்பொழுது குருவானவரின் முகத்தில் எந்தவோர் அச்சமும்
இல்லாததைக் கண்டு திடுக்கிட்டு, "இவரிடம் எதுவும் இருந்திருந்தால்
அஞ்சி நடுங்கிக்கொண்டிருப்பார்; இவர் அஞ்சாமல் இருப்பதைப்
பார்க்கும்போது, இவரிடம் எதுவுமில்லை என்பது நன்றாகத் தெரிகின்றது.
அதனால் இவரை விட்டுவிட்டுவிடோம்" என்று விட்டுவிட்டான்.
குருவானவரோ "நாம் இறைவனிடம் வேண்டியது வீண்போகவில்லை" என்ற மகிழ்ச்சியில்
அங்கிருந்து தான் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பி வந்தார்.
இறைவனிடம் நாம் இடைவிடாது எழுப்புகின்ற வேண்டுதலும் மன்றாட்டும்
ஒதுபோதும் வீண்போவதில்லை; அவற்றிற்குத் தக்க பலன் உண்டு என்ற
செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.
நற்செய்தியில் இயேசு இடைவிடாது இறைவனிடம் மன்றாடுவதன் முக்கியத்துவைக்
குறித்துப் பேசுகின்றார். அதுகுறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
கைம்பெண்ணும் நேர்மையற்ற நடுவரும்
நற்செய்தியில் இயேசு இடைவிடாது இறைவனிடம் வேண்டுவதன் முக்கியத்துவத்தைக்
குறிப்பிடுவதற்காக கைம்பெண், நேர்மையற்ற நடுவர் உவமையைக்
கூறுகின்றார். பெண்கள் பொது இடங்கட்கு வரக்கூடாது; பேசக்கூடாது
என்று இருந்த அந்தக் காலத்தில், உவமையில் வருகின்ற பெண், அதுவும்
கணவரை இழந்து, யாருடைய ஆதரவும் இல்லாத கைம்பெண், சாதாரண நடுவரல்ல,
(கையூட்டுக் கொடுத்தால் மட்டும் தீர்ப்பு வழங்குகின்ற) நேர்மையற்ற
நடுவரிடமிருந்து தனக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று
போராடுகின்றார். முடிவில் அந்தக் கைம்பெண்ணின் தொல்லையின்
பொருட்டு அவர் அவர்க்குக் நீதி வழங்குகின்றார்.
இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான செய்தி, நேர்மையற்ற
நடுவரே கைம்பெண்ணுக்கு நீதி வழங்குகின்றபோது, இரக்கமுள்ள தந்தை
(லூக் 6:36) தன்னுடைய மக்கள் தன்னிடம் மன்றாடுகின்றபோது எவ்வளவு
ஆசியைத் தருவார் என்பதுதான். இதுகுறித்துத் தொடர்ந்து நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
இறைவேண்டல் நம்முடைய சுவாசத்தைப் போன்று இருக்கவேண்டும்
நற்செய்தியில் இயேசு சொல்லும் உவமையை ஒருசில நேரங்களில் நாம்
தவறாக எடுத்துக்கொள்வதுண்டு. எப்படியென்றால், உவமையில் வருகின்ற
கைம்பெண்தான் நாம் என்றும் நேர்மையற்ற நடுவர்தான் கடவுள் என்றும்.
இயேசு கூற விழைவது அதுவல்ல. உவமையில் வருகின்ற கைம்பெண்ணுக்கு
ஆதரவு என்று யாரும் கிடையாது. ஆனால், நாம் கடவுளின் மக்கள்;
நமக்காகப் பரிந்துபேச இயேசுவும் (எபி 8: 26-27) தூய ஆவியாரும்
(உரோ 8:26-27) இருக்கிறார்கள். மேலும் உவமையில் வருகின்ற நடுவர்
நேர்மையற்றவர். ஆனால், ஆண்டவர் நீதி, நேர்மை, அன்பின் பிறப்பிடம்.
அப்படிப்பட்டவர் அவருடைய மக்களாகிய நாம் அவரிடம் மன்றாடுகின்றபோது,
நம்முடைய மன்றாட்டிற்குப் பதிலளிப்பார் என்பதுதான் இயேசு
கூறும் செய்தியாக இருக்கின்றது.
ஒருவேளை நாம் மன்றாடுவது கிடைக்கவில்லை என்றாலோ காலதாமதமாகின்றது
என்றாலோ, அது இறைவனின் திருவுளத்திற்கு ஏற்றாற்போல் போல் இல்லை
(1 யோவா 5: 14-15) என்று கூறுவார் யோவான். ஆகையால், இறைவேண்டலை
நம்முடைய சுவாசத்தைப் போன்று மாற்றி, இறைவனிடம் தொடர்ந்து மன்றாடி
ஆசி பெறுவோம்.
சிந்தனை
"இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்" (1 தெச 5:17) என்பார் பவுல்.
ஆகையால், நாம் நம் இயேசு சொல்வதுபோல், புனித பவுல் சொல்வது
போல் இறைவனிடம் இடைவிடாது மன்றாடுவோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
|
|