|
|
15 நவம்பர்
2019 |
|
|
பொதுக்காலம்
32ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆண்டவரை இன்னும் மிக விரைவில் அறியத் தவறியது ஏன்?
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 13: 1-9
கடவுளை அறியாத மனிதர் அனைவரும் இயல்பிலேயே அறிவிலிகள் ஆனார்கள்.
கண்ணுக்குப் புலப்படும் நல்லவற்றினின்று இருப்பவரைக் கண்டறிய
முடியாதோர் ஆனார்கள். கைவினைகளைக் கருத்தாய் நோக்கியிருந்தும்
கைவினைஞரை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
மாறாக, தீயோ, காற்றோ, சூறாவளியோ, விண்மீன்களின் சுழற்சியோ, அலைமோதும்
வெள்ளமோ, வானத்தின் சுடர்களோதாம் உலகை ஆளுகின்ற தெய்வங்கள் என்று
அவர்கள் கருதினார்கள்.
அவற்றின் அழகில் மயங்கி அவற்றை அவர்கள் தெய்வங்களாகக் கொண்டார்கள்
என்றால், அவற்றிற்கெல்லாம் ஆண்டவர் அவற்றினும் எத்துணை மேலானவர்
என அறிந்துகொள்ளட்டும்; ஏனெனில் அழகின் தலையூற்றாகிய கடவுளே
அவற்றை உண்டாக்கினார்.
அவற்றின் ஆற்றலையும் செயல்பாட்டையும் கண்டு அவர்கள் வியந்தார்கள்
என்றால், அவற்றையெல்லாம் உருவாக்கியவர் அவற்றை விட எத்துணை வலிமையுள்ளவர்
என்பதை அவற்றிலிருந்து அறிந்து கொள்ளட்டும். ஏனெனில் படைப்புகளின்
பெருமையினின்றும் அழகினின்றும் அவற்றைப் படைத்தவரை ஒப்புநோக்கிக்
கண்டுணரலாம். இருப்பினும், இம்மனிதர்கள் சிறிதளவே குற்றச்சாட்டுக்கு
உரியவர்கள். ஏனெனில் கடவுளைத் தேடும்போதும் அவரைக் கண்டடைய
விரும்பும்போதும் ஒருவேளை அவர்கள் தவறக்கூடும். அவருடைய
வேலைப்பாடுகளின் நடுவே வாழும்பொழுது கடவுளை அவர்கள் தேடிக்
கொண்டிருக்கின்றார்கள்.
தாங்கள் காண்பதையே நம்பிவிடுகின்றார்கள்; ஏனெனில் அவை அழகாக
உள்ளன. இருப்பினும், அவர்களுக்கும் மன்னிப்பே கிடையாது! உலகை
ஆராய்ந்தறியும் அளவுக்கு ஆற்றல் அவர்களுக்கு இருந்தபோதிலும்,
இவற்றுக்கெல்லாம் ஆண்டவரை இன்னும் மிக விரைவில் அறியத் தவறியது
ஏன்?
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
- திபா 19: 1-2. 3-4 (பல்லவி: 1)
Mp3
=================================================================================
பல்லவி: வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்தும்.
1 வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி
அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. 2 ஒவ்வொரு
பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர்
இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது.
பல்லவி
3 அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல்
செவியில் படுவதுமில்லை. 4 ஆயினும், அவற்றின் அறிக்கை
உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின்
கடையெல்லை வரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு
கூடாரம் அமைத்துள்ளார். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
லூக் 21: 28
அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்;
ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 26-37
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "நோவாவின்
காலத்தில் நடந்தது போலவே மானிட மகனுடைய காலத்திலும் நடக்கும்.
நோவா பேழைக்குள் சென்ற நாள் வரை எல்லாரும் அருட்சாதனம்
செய்துகொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள்.
வெள்ளப்பெருக்கு வந்து அவர்கள் அனைவரையும் அழித்தது.
அவ்வாறே லோத்தின் காலத்திலும் நடந்தது. மக்கள் உண்டார்கள்,
குடித்தார்கள்; வாங்கினார்கள், விற்றார்கள்; நட்டார்கள்,
கட்டினார்கள். லோத்து சோதோமை விட்டுப் போன நாளில்
விண்ணிலிருந்து பெய்த தீயும் கந்தகமும் எல்லாரையும் அழித்தன.
மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும். அந்நாளில்
வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் வீட்டிலுள்ள தம் பொருள்களை
எடுக்கக் கீழே இறங்க வேண்டாம். அதுபோலவே வயலில் இருப்பவர்
திரும்பி வரவேண்டாம்.
லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள். தம் உயிரைக் காக்க
வழி தேடுவோர் அதை இழந்துவிடுவர்; தம் உயிரை இழப்பவரோ அதைக்
காத்துக்கொள்வர்.
நான் உங்களுக்குச் சொல்கிறேன்; அந்த இரவில் ஒரே கட்டிலில்
இருவர் படுத்திருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்;
மற்றவர் விட்டுவிடப்படுவார்.
இருவர் சேர்ந்து மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக்
கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.
இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்;
மற்றவர் விட்டுவிடப்படுவார்."
அவர்கள் இயேசுவைப் பார்த்து, "ஆண்டவரே, இது எங்கே நிகழும்?"
என்று கேட்டார்கள்.
அவர் அவர்களிடம், "பிணம் எங்கே இருக்கிறதோ அங்கேயே கழுகுகளும்
வந்து கூடும்" என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
சாலமோனின் ஞானம் 13: 1-9
கண்ணுக்குப் புலப்படும் நல்லவற்றினின்று
இருப்பவரைக் (கடவுளைக்) கண்டறிவோம்
நிகழ்வு
பெருநகர் இருந்த ஒரு சேரியில் சிறுவன் ஒருவன் இருந்தான். அவனுக்குத்
தந்தை கிடையாது. அவர் ஒரு விபத்தில் இறந்திருந்தார்; தாய் மட்டுமே
இருந்தார். அவர்கூட நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடைத்தார்.
இதனால் அவன்தான் வேலைக்குச் சென்று, அவனையும் அவனுடைய தாயையும்
கவனித்துக்கொள்ளவேண்டியிருந்தது.
அந்தச் சிறுவன் காலச் சூழலுக்குத் தகுந்தாற்போல் வேலை செய்து
வந்தான். அது மழைக் காலம் என்பதால், அருகாமையில் இருந்த ஒரு
பெரிய கடையில் கொஞ்சம் குடைகளை வாங்கி சாலையில் வருவோர் போவரிடம்
சிறிது இலாபம் வைத்து விற்றுவந்தான். ஒருநாள் அவன் பகல் முழுவதும்
குடைகளை விற்றும் யாரும் வாங்க முன்வரவில்லை. இதனால் அவன் மிகவும்
வருத்தத்தோடு நடைபாதையில் உட்கார்ந்திருந்தான். திடீரென்று மேகம்
திரண்டு வந்தது, மழை கொட்டோ கொட்டெனக் கொட்டியது. அந்த மழையிலும்
அவன் குடைகளை விற்றான்.
அப்பொழுது அந்த வழியாக இருசக்கர வண்டியில் இரண்டு இளைஞர்கள்
அவந்தார்கள். அவர்களிடம் அவன், "அண்ணா! குடை வாங்கிக்கொள்ளுங்கள்...
நூறுரூபாய்தான்" என்றான். அந்த இரண்டு இளைஞர்களில் பின்னால்
அமர்ந்திருந்தவன் அவன்மீது பரிவுகொண்டு தன்னிடமிருந்த ஐந்நூறு
ரூபாயை எடுத்து நீட்டினான். சிறுவனோ தன்னிடம் இருந்த ஒரு
குடையை எடுத்து அந்த இளைஞனிடம் கொடுத்துவிட்டு, மீதிப்பணத்தை
கொடுப்பதற்காக தன்னுடைய பைக்குள் கையை விட்டான். அதற்குள்
குடையைப் பெற்றுக்கொண்ட இளைஞன், அதை விரித்து அந்தச் சிறுவன்
மழையில் நனையாதவாறு இருக்க, அவனுடைய இன்னொரு கையில்
கொடுத்துவிட்டு, அங்கிருந்து வேகமாகச் சென்றுவிட்டான்.
சிறுவன் நடந்தது எஹ்டையும் நம்ப முடியாதவனாய், அந்த இரண்டு இளைஞர்களும்
போன திசையை நோக்கிச் சிறிதுநேரம் பார்த்துக்கொண்டே இருந்தான்.
பின்னர் அவன் அங்கிருந்து கிளம்பி தன்னுடைய வீட்டிற்கு வந்து,
தன்னுடைய தாயிடம், "அம்மா! இன்று நான் கடவுளைக் கண்டேன்" என்றான்.
அவள் அவனிடம், "எங்கே?" என்று கேட்க, அவன் நடந்தது அனைத்தையும்
கூறினான். மகன் சொன்னதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த தாய், கடவுளைப்
போற்றிப் புகழத் தொடங்கினாள்.
அண்மையில் நான் கண்ட காணொளியின் எழுத்துவடிவம்தான் இந்த நிகழ்வு.
கடவுள், நாம் ஒவ்வொருநாளும் காண்பவற்றிலும் காண்பவரிலும் இருக்கின்றார்
என்ற உண்மையை இந்த நிகழ்வானது மிக அருமையான எடுத்துக்கூறுகின்றது.
இன்றைய முதல் வாசகமும் கண்ணுக்குப் புலப்படும் நல்லவற்றினின்று
கடவுளைக் கண்டுகொள்ளவேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. அது
குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
கடவுளை அறியாத மனிதர்கள் அறிவிலிகள்
சாலமோனின் ஞானநூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், கண்ணுக்குப்
புலப்படும் நல்லவற்றினின்று இருப்பவரை அதாவது கடவுளைக் கண்டுகொள்ளாதவரகளை
அறிவிலிகள் என்று சாடுகின்றது.
ஒவ்வொருநாளும் கடவுள் தன்னை இயற்கையின் மூலமாக, மனிதர்கள் மூலமாக
வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றார். ஆனால், பலரால் அவரைக்
கண்டுகொள்ள முடியவில்லை. இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்களை
இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இயேசு தன்னுடைய போதனையின்
மூலமாகவும் வல்ல செயல்கள் மூலமாகவும் கடவுளின் உடனிருப்பை மக்களுக்கு
வெளிப்படுத்தினார். அவர்களோ அவற்றைக் கண்டு, இயேசுவின்மீது நம்பிக்கை
கொள்ளாமல், "போதகரே, நீர் அடையாளம் ஒன்று காட்டவேண்டும்" (மத்
12: 38) என்று அவரிடம் கேட்டார்கள். இந்தப் பரிசேயர்களைப்
போன்றுதான் இன்று பலர் கடவுளை அறிந்துகொள்ளதவர்களாக, அறிவிலிகளாக
இருக்கின்றார்கள்.
கைவினைகளை விட கைவினைஞர் பெரியவர்
"கடவுளை அறியாத மனிதர்கள் அறிவிலிகள்" என்று சொல்லும் சாலமோனின்
ஞான நூல் ஆசிரியர், தீயையும் காற்றையும் சுறாவளியையும் இன்னபிறவற்றையும்
தெய்வங்களாக நினைத்து வழிபடுகின்றவர்களைக் கடுமையாகச்
சாடுகின்றார். இப்படிப்பட்டவர்களுக்கு நூலாசிரியர் ஓர் உண்மையை
எடுத்துச் சொல்கின்றார். அது என்னவேனில், தீ, காற்று, விண்மீன்
போன்றே கடவுளால் படைக்கப்பட்டவையே இத்துணை அழகாக, உயர்ந்தவையாக
இருக்கின்றபோது, அவற்றையெல்லாம் படைத்த கைவினைஞரான கடவுள் எத்துணை
உயர்ந்தவராக இருப்பார்... இதனை இவர்கள் அறிந்துகொள்ளட்டும் என்று
கூறுகின்றார்.
இந்த இடத்தில் இஸ்ரயேல் மக்களை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
உண்மைக் கடவுளாம் யாவே இறைவன், அத்துணை மேன்மை பொருந்திருந்தவராகவும்
வல்லவராகவும் இருந்தார். ஆனால், அவர்கள் இந்த உண்மையை உணராமல்,
பொன்னாலான கன்றுக்குட்டியைச் செய்து வழிபட்டார்கள்; போலியான
பாகால் தெய்வத்தை வழிபட்டார்கள். இதனாலேயே அவர்கள் கடுமையாகத்
தண்டிக்கப்பட்டார்கள்.
ஆகையால், நாம் இஸ்ரயேல் மக்கள் செய்த தவற்றினை நாமும் செய்யாமல்,
உண்மையான, வல்லவரான இறைவனை அறிந்து, அவர் வழியில் நடக்கும் மக்களாக
இருக்க முயற்சி செய்வோம்.
சிந்தனை
"உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு
கிறிஸ்துவை அறிவதே நிலைவாழ்வு" (யோவா 17:3) என்பார் இயேசு. ஆகையால்,
நாம் உண்மையான கடவுளையும் அவர் மகன் இயேசுவையும் அறிந்துகொள்ள
முயற்சிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
லூக்கா 17: 26-27
கவனமாக இருங்கள்!
நிகழ்வு
ஒரு பெருநகரில்
இருந்த ஒரு நிறுவனத்தில், கப்பலில் பணிசெய்வதற்கான நேர்காணல்
(Interview) நடைபெற்றது. அதில் கலந்துகொள்வதற்கு நூற்றுக்கணக்கான
இளைஞர்கள் வந்திருந்தார்கள். வந்திருந்த எல்லாரும் உள்ளே என்ன
மாதிரிக் கேள்வி கேட்பார்கள்? அதற்கு நாம் எப்படிப் பதில் சொல்லவேண்டும்?
என்று சத்தம் போட்டுப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்ததால், நேர்காணல் நடந்துவோரிடமிருந்து
வந்த அழைப்பை யாரும் கவனிக்கவில்லை; ஒரே ஓர் இளைஞன் மட்டும்
கவனித்தான். அவன் வேகமாக உள்ளே சென்று, வேலையோடு திரும்பி வந்தான்.
அவனைப் பார்த்து எல்லாரும் ஆச்சரியபட்டார்கள். "உனக்கு மட்டும்
எப்படி வேலை கிடைத்தது?" என்று அங்கிருந்த ஒருவன் அவனிடம்
கேட்க, அவன், "நேர்காணல் தொடங்கப் போகிறது... நேர்காணலுக்கு
யார் முதலில் வருகின்றாரோ, அவர்க்கு உடனடியாக வேலை தரப்படும்"
என்றோர் அறிவிப்பு வந்தது. நீங்கள் அனைவரும் சத்தம் போட்டுப்
பேசிக்கொண்டும் விவாதித்துக் கொண்டும் இருந்ததால், வந்த அழைப்பினை
யாரும் கவனிக்கவில்லை; ஆனால், நான் கவனித்தேன். அதனால் நான் வேகமாகச்
சென்று நேர்காணலில் கலந்துகொண்டேன்; வேலையையும் கையோடு
பெற்றுக்கொண்டேன்" என்றான். இதைக் கேட்டுக்கொண்டிருந்த அங்கிருந்த
எல்லாரும் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருந்தால்,
எத்தகைய நன்மைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற செய்தியைத் தாங்கி
வரும் இந்த நிகழ்வு நமது கவனத்திற்கு உரியது. இன்றைய நற்செய்தி
வாசகம் நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் ஆன்மிக
வாழ்க்கையிலும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும்
என்று செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது
சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
கண் இமைக்கும் நேரத்தில் இருக்கும் மானிடமகன்
வெளிப்படும் நாள்
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர்
இயேசு, மானிடமகன் வெளிப்படும் நாள் எப்படி இருக்கும்? அப்பொழுது
என்னென்ன நடக்கும்? என்பவை குறித்துப் பேசுகின்றார். மானிட மகன்
வெளிப்படும் நாளில் என்ன நடக்கும் என்பதைக் குறித்துச்
சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னம், அது எப்பொழுது வரும் என்பதைக்
குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம்.
மானிடமகன் வெளிப்படும் நாள், எந்த நாள்? என்பதற்கு இயேசு,
"அவர் வரும் நாளோ வேளையோ உங்கட்குத் தெரியாது; நினையாத நேரத்தில்
அவர் வருவார் (மத் 25: 13; லூக் 12: 40) என்று கூறுவார். இன்னும்
சொல்லப்போனால், அந்த நாளைக் குறித்து தந்தை ஒருவரைத் தவிர,
வேறு யாரும் அறியார் (மத் 24: 36) என்றும் இயேசு கூறுவார். இப்படி
யாரும் அறியாத வேளையில், கண்ணிமைக்கும் நேரத்தில் (1 கொரி
15:52) நிகழும் மானிடமகன் வெளிப்படும் நாளுக்கு நாம் என்ன செய்யவேண்டும்
என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது.
கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும்
மானிட மகனுடைய வருகையைக் குறித்துப் பேசும்போது, இயேசு பழைய ஏற்பாட்டிலிருந்து
இரண்டு எடுத்துக்காட்டுகளைத் தருகின்றார். ஒன்று நோவா (தொநூ
6-8) இன்னொன்று லோத்து (தொநூ 19). இவர்கள் இவருடைய காலத்திலும்
மக்கள் உண்டார்கள்; குடித்தார்கள்; தாறுமாறான வாழ்க்கை
வாழ்ந்துவந்தார்கள். அப்படிப்பட்ட சமயத்தில் கடவுள் நோவா வழியாகவும்
லோத்து வழியாகவும் மக்களை எச்சரித்தார். ஆனால் மக்கள் கடவுளுடைய
குரலுக்குச் செவிமடுக்காமல் போனதால், நோவாவின் காலத்தில் வெள்ளம்
வந்து மக்களை அழித்தது; லோத்துவின் காலத்தில் கந்தக மழை வந்து
அழித்தது.
இயேசு இந்த இரண்டு எடுத்துக்காட்டுகளையும் குறிப்பிட்டுவிட்டு,
மானிட மகன் வெளிப்படும் நாளில் இப்படியே நடக்கும் என்று
கூறுகின்றார். அப்படியானால், மானிட மகனுடைய வருகையை நாம் எதிர்கொள்ளவேண்டும்
என்றால், அதற்கு நோவாவின் காலத்தின் வாழ்ந்த மக்களைப் போன்று,
லோத்துவின் காலத்தில் வாழ்ந்த மக்களைப் போன்று இல்லாமல், கடவுளின்
குரலைக் கேட்டு கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டியது
இன்றியமையாதது.
எடுத்துக்கொள்ளப்படுதலும் விட்டுவிடப்படுதலும்
மானிட மகனுடைய நாளைக் குறித்துப் பேசும்போது இயேசு, ஒருவர்
எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார் என்று
கூறுகின்றார். எடுத்துக்கொள்ளப்படுதல் என்றால், நோவா மற்றும்
லோத்துவின் காலத்தில் மெத்தனமாக, கடவுளின் குரலைக் கேளாமல்
இருந்தவர்களைப் போன்று தண்டனைத் தீர்ப்பிற்கு
எடுத்துக்கொள்ளப்படுத்தல். விடுவிடப்படுதல் என்றால் நோவாவைப்
போன்று லோத்துவைப் போன்று இவ்வுலகில் இறைவனின் ஆசியோடு,
அவர்க்குச் சான்று பகர்ந்து வாழ விட்டுவிடப்படுத்தல். நாம்
இம்மண்ணுலகில் இருந்து இறைவனுக்குச் சான்று பகர்ந்து
வாழவேண்டும் என்றால், அதற்கு நாம் இயேசுவுக்காக நம்முடைய
வாழ்வை இழக்கத் தயாராகவேண்டும். ஏனெனில், இயேசுவின் பொருட்டு
உயிரை இழக்கத் தயாராக இருப்போரே அதைக் காத்துக்கொள்வர்.
ஆகையால், நாம் இந்த மண்ணுலகில் இயேசுவுக்குச் சாட்சியாகத்
திகழ, அவர்க்காக நம்முடைய உயிரையும் இழக்கத் தயாராவோம்.
சிந்தனை
"என் குரலுக்குச் செவிகொடுங்கள்; அது உங்களுக்கு நலம்
பயக்கும்" (எரே 7:23) என்கிறார் ஆண்டவர். ஆகையால், நாம்
கடவுளின் குரலுக்குச் செவிகொடுத்து, அவருடைய வழியில் நடந்து,
மானிடமகனுடைய வருகைக்குத் தயாராக இருப்போம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை
மறைமாவட்டம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
|
|