Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     14 நவம்பர் 2019  
                                    பொதுக்காலம் 32ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 ஞானம் - என்றுமுள்ள ஒளியின் சுடர்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 7: 22 - 8: 1

ஞானம் ஆற்றல் கொண்டது. அவ்வாற்றல் அறிவுடையது; தூய்மையானது; தனித்தன்மை வாய்ந்தது; பலவகைப்பட்டது; நுண்மையானது; உயிரோட்டம் உள்ளது; தெளிவுமிக்கது; மாசுபடாதது; வெளிப்படையானது; கேடுறாதது; நன்மையை விரும்புவது; கூர்மையானது. ஞானம் - எதிர்க்க முடியாதது; நன்மை செய்வது; மனித நேயம் கொண்டது; நிலைபெயராதது; உறுதியானது; வீண்கவலை கொள்ளாதது; எல்லாம் வல்லது; எல்லாவற்றையும் பார்வையிடுவது; அறிவும் தூய்மையும் நுண்மையும் கொண்ட எல்லா உள்ளங்களையும் ஊடுருவிச் செல்வது.

ஞானம் - அசைவுகள் எல்லாவற்றையும் விட மிக விரைவானது. அதன் தூய்மையினால் எல்லாவற்றிலும் நிரம்பி நிற்கிறது. எல்லாவற்றையும் ஊடுருவிச் செல்கிறது.

ஞானம் - கடவுளின் ஆற்றலிலிருந்து புறப்படும் ஆவி; எல்லாம் வல்லவரின் மாட்சியிலிருந்து எழும் தூய வெளிப்பாடு. எனவே மாசுபட்டது எதுவும் அதனுள் நுழைய முடியாது.

ஞானம் - என்றுமுள ஒளியின் சுடர்; கடவுளது செயல்திறனின் கறைபடியாக் கண்ணாடி; அவருடைய நன்மையின் சாயல்.

ஞானம் - ஒன்றே என்றாலும், எல்லாம் செய்ய வல்லது; தான் மாறாது, அனைத்தையும் புதுப்பிக்கிறது; தலைமுறைதோறும் தூய ஆன்மாக்களில் நுழைகிறது; அவர்களைக் கடவுளின் நண்பர்கள் எனவும் இறைவாக்கினர்கள் எனவும் ஆக்குகிறது. ஞானத்தோடு வாழ்கின்றவர்கள் மீது அன்பு செலுத்துவது போல வேறு எதன்மீதும் கடவுள் அன்பு செலுத்துவதில்லை.

ஞானம் - கதிரவனை விட அழகானது; விண்மீன் கூட்டத்தினும் சிறந்தது; ஒளியைக் காட்டிலும் மேலானது. இரவுக்குப் பகல் இடம் கொடுக்கிறது. ஆனால், ஞானத்தைத் தீமை மேற்கொள்ளாது.

ஞானம் - ஒரு கோடி முதல் மறு கோடிவரை ஆற்றலோடு செல்கிறது; எல்லாவற்றையும் முறையாக ஒழுங்குபடுத்துகிறது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் -  திபா 119: 89,90. 91,130. 135,175 (பல்லவி: 89a) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே! என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு.

89 ஆண்டவரே! என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு; விண்ணுலகைப் போல் அது நிலைத்துள்ளது. 90 தலைமுறை தலைமுறையாய் உள்ளது உமது வாக்குப் பிறழாமை; நீர் பூவுலகை உறுதியாய் இருக்கச் செய்தீர், அது நிலைபெற்றுள்ளது. பல்லவி

91 உம் ஒழுங்குமுறைகளின்படியே அனைத்தும் இன்றுவரை நிலைத்துள்ளன; ஏனெனில், அவை உமக்கு ஊழியம் செய்கின்றன. 130 உம் சொற்களைப் பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது; அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது. பல்லவி

135 உம் ஊழியன்மீது உமது முக ஒளி வீசச் செய்யும்! உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும். 175 உயிர் பிழைத்து நான் உம்மைப் புகழ்வேனாக! உம் நீதி நெறிகள் எனக்குத் துணைபுரிவனவாக! பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 15: 5

அல்லேலூயா, அல்லேலூயா! நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 20-25

அக்காலத்தில் இறையாட்சி எப்போது வரும் என்று பரிசேயர் இயேசுவிடம் கேட்டனர்.

அவர் மறுமொழியாக, "இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது. இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே! எனச் சொல்ல முடியாது.

ஏனெனில், இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது" என்றார்.

பின்பு அவர் சீடர்களை நோக்கிக் கூறியது: "ஒரு காலம் வரும்; அப்போது மானிட மகனுடைய நாள்களில் ஒன்றையாவது காண நீங்கள் ஆவலாய் இருப்பீர்கள். ஆனால் நீங்கள் காணமாட்டீர்கள்.

அவர்கள் உங்களிடம், 'இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே!' என்பார்கள்.

ஆனால் நீங்கள் போக வேண்டாம்; அவர்களைப் பின்தொடரவும் வேண்டாம். வானத்தில் மின்னல் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் வரைக்கும் பளீரென மின்னி ஒளிர்வது போல மானிட மகனும் தாம் வரும் நாளில் தோன்றுவார்.

ஆனால் முதலில் அவர் பல துன்பங்கள் பட்டு இந்தத் தலைமுறையினரால் உதறித் தள்ளப்பட வேண்டும்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
சாலமோனின் ஞானம் 7: 22-8:1

ஞானம் - ஒருவரைக் கடவுளின் நண்பராக்குகின்றது


நிகழ்வு

ஆற்றக்கரையோரமாய் அமைத்திருந்த ஓர் ஓலைக் குடிசையில் ஞானி ஒருவர் இருந்தார். அவரிடம் ஆலோசனைகளும் அறிவுரைகளும் பெறுவதற்காக அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்து பலர் வந்து போயினர்.

ஒருநாள் அவரைப் பார்க்க இளைஞன் ஒருவன் வந்தான். அவன் ஞானியைக் கண்டதும், அவர் முன்பாக முன் முகங்குப்புற விழுந்து வணங்கினான். பின்னர் அவன் அவரிடம், "சுவாமி! என்னுடைய உள்ளத்தைப் பல நாள்களாக வதைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு கேள்வி என்னிடம் இருக்கின்றது. அதை நான் உங்களிடம் கேட்கட்டுமா?" என்றான். "கேள் மகனே!" என்று சொல்லிவிட்டு, அவனுடைய கேள்விக்காகக் காத்திருந்தார் ஞானி.

"ஒருவர் தன்னுடைய வாழ்வில் ஞானத்தை அடைவதற்கு என்ன மாதிரியான வழியைப் பின்பற்றவேண்டும்...? என்றான் இளைஞன். ஞானி ஒரு நிமிட ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் சொன்னார்: "உன்னிடம் இருக்கின்ற குறைகளை திருத்திக்கொண்டு, தொடர்ந்து உன்னை ஒவ்வொருநாளும் புதுபித்துக்கொண்டே இருந்தால், உன்னால் ஞானத்தை மிக எளிதான அடைய முடியும்." ஞானி சொன்ன பதிலைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்த இளைஞன், அவருக்கு நன்றி கூறிவிட்டு, அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றான்.

ஒருவர் தன்னிடம் இருக்கின்ற தவறுகளைத் திருத்திக்கொண்டு, ஒவ்வொருநாளும் தன்னைப் பĭகுரியவையாக இருக்கின்றன. இன்றைய முதல் வாசகம் ஞானம் எப்படிப்பட்டது...? அதை அடை துப்பித்துக்கொண்டே இருந்தால், ஞானத்தை மிக எளிதாக அடைந்துவிடலாம் என்று சொன்ன அந்த ஞானியின் வார்த்தைகள் நமது சிந்தனைக�தற்கு ஒருவர் என்ன செய்யவேண்டும்...? ஞானத்தைப் பெற்றிருப்போருக்கு கடவுளிடமிருந்து கிடைக்கும் ஆசி எத்தகையது...? என்பவை போன்ற கேள்விகளுக்கு விடையாக இருக்கின்றது. அவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்

ஞானத்தின் சிறப்புகள்

சாலமோனின் ஞான நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய வாசகம், ஞானத்தின் சிறப்புகளைக் குறித்துப் பேசுகின்றது. குறிப்பாக இந்த நூலின் ஆசிரியர் ஞானம் எப்படிப்பட்டது என்று 21 சிறப்புகளைப் பட்டியலிடுகின்றார். "ஞானம் ஆற்றம் கொண்டது" என்று தொடங்கும் நூலாசிரியர், "ஞானம் எல்லாவற்றையும் ஊடுருவிச் செல்கின்றது" என்று சொல்லி நிறைவுசெய்கின்றார். இத்தகைய ஞானத்தை ஒருவர் எப்படிப் பெற்றுக்கொள்ளலம் என்பதற்கான பதிலை இதற்கு முந்தைய அதிகாரத்தில் இவரே (6:17) கூறுகின்றார். அங்கு நாம் இவ்வாறு வாசிக்கின்றோம்: "நற்பயிற்சி கொள்வதில் கொள்ளும் உண்மையான நாட்டமே ஞானத்தின் தொடக்கம்." ஒருவர் நற்பயற்சி பெறுவதில் உண்மையான நாட்டம் கொண்டிருந்தால், அவர் ஞானத்தைப் பெற்றுக்கொள்ளத் தொடங்கிவிடலாம் என்ற செய்தி நம்முடைய ஆழமான சிந்தனைக்குரியதாக இருக்கின்றது.

திருவிவிலியத்தின் ஏனைய பகுதிகளில், "ஆண்டவரின் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்" (நீமொ 9: 10; சீஞா 1:11) என்று வருகின்றது. அப்படியானால், ஒருவர் ஆண்டவருக்கு அஞ்சி, அவருடைய வழியில் நடந்தால் அவர் ஞானத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது உண்மையாகின்றது.

ஞானத்தைக் கொண்டிருப்போர் கடவுளின் நண்பர்கள் ஆவார்கள்

நூலாசிரியர் ஞானத்தின் சிறப்புகளைக் கூறுகின்றபோது, ஞானத்தைக் கொண்டிருப்போர் கடவுளின் நண்பர்களாகவும் இறைவாக்கினர்களாகவும் ஆவார்கள் என்கின்றார். இக்கருத்தும் நம்முடைய சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. எத்தனையோ இறைவனுடைய அடியார்கள் ஆண்டவருக்கு அஞ்சி நடந்ததால், ஞானத்தைப் பெற்றுக்கொண்டார்கள். அந்த ஞானத்தாலேயே அவர்கள் ஆண்டவரின் நண்பர்கள் ஆனார்கள்.

இந்த இடத்தில் இயேசு தன்னுடைய சீடர்களைப் பார்த்துச் சொல்கின்ற, "இனி நான் உங்களைப் பணியாளர்கள் என்று சொல்லமாட்டேன்; நண்பர்கள் என்று சொல்வேன்" (யோவா 15:15) என்ற வார்த்தைகளை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. இயேசுவின் சீடர்கள், கடவுள் அவர்களுக்கு அருளிய ஞானத்தால், வெளிப்பாட்டினால் (மத் 11: 25) ஞானத்தைப் பெற்றார்கள். அதனாலேயே அவர்கள் இயேசுவின் நண்பர்கள் ஆனார்கள். நாமும் ஆண்டவருக்கு அஞ்சி, அதனால் கிடைக்கும் ஞானத்தைப் பெற்றுக்கொண்டால், இயேசுவின் நண்பர்கள் ஆவோம் என்பது நிச்சயம்.

ஞானத்தோடு வாழ்கின்றவர்களைக் கடவுள் அன்புசெய்கின்றார்

இன்றைய முதல் வாசகத்தின் இறுதியில் நூலாசிரியர், "ஞானத்தோடு வாழ்கின்றவர்களைக் கடவுள் அன்புசெய்கின்றார்" என்று கூறுகின்றார். அது எப்படி என்று சிந்தித்துப் பார்ப்போம்.

கடவுள் எல்லாரையும் ஒன்றெனக் கருதுகின்றவர் (சாஞா 6: 7); எல்லாரையும் ஒன்று போல் அன்பு செய்கின்றவர். அப்படியிருக்கும்போது "ஞானத்தோடு வாழ்கின்றவர்களைக் கடவுள் அன்பு செய்கின்றார்" என்று நூலாசிரியர் சொல்கின்றாரே...? இதனை நாம் எப்படிப் புரிந்துகொள்வது என்று சிந்தித்துப் பார்க்கையில், கடவுள் எல்லாரையும் அன்பு செய்கின்றார் என்றாலும் "அவருக்கு அஞ்சி நடப்போர்க்குத் தலைமுறை தலைமுறையாக அவர் இரக்கம் காட்டி வருகின்றார்" (லூக் 1:50) என்ற இறைவார்த்தை இதற்குப் பதிலாக அமைகின்றது. அப்படியானால், ஆண்டவருக்கு அஞ்சி, அதனால் கிடைக்கும் ஞானத்தோடு வாழ்கின்றவரை அவர் அதிகமாய் அன்பு செய்வார் என்பது உறுதி.

நாம் ஞானத்தோடு வாழ்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

"ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர் எவரோ அவருக்கு தாம் தேர்ந்துகொள்ளும் வழியை அவர் கற்பிப்பார்" (திபா 25:12) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், ஞானத்தின் ஊற்றாக இருக்கும் ஆண்டவருக்கு அஞ்சி நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாக பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
லூக்கா 17: 20-25

இறையாட்சி - அது இயேசுவின் ஆட்சி

நிகழ்வு

முன்பொரு காலத்தில் தமஸ்கு நகரில் ஒரு பெரிய கோயில் இருந்தது. கிறிஸ்தவம் வேகமாகப் பரவிவந்தபோது, அந்தக் கோயிலுக்கு வந்துபோன அனைவரும் கிறிஸ்தவர்களானார்கள். இதனால் கிறிஸ்தவ வழிபாடுகள் அங்கு நடைபெற்றத் தொடங்கின. இதற்கு நடுவில் அந்தக் கோயிலுக்கு அடிக்கடி வந்த சிற்பி ஒருவர் கோயிலின் முகப்பில் "கிறிஸ்துவின் ஆட்சி என்றுமுள்ள ஆட்சி; அது தலைமுறை தலைமுறையாக நீடித்திருக்கும் ஆட்சி" என்று எழுதிவைத்தார்.


ஆண்டுகள் மெல்ல உருண்டோடத் தொடங்கின. பல ஆண்டுகட்குப் பிறகு அந்தக் கோயில் இருந்த பகுதியில் இஸ்லாமியர்களின் படையெடுப்பு நடந்தது. அதில் அவர்கள் அந்தக் கோயிலைக் கைப்பற்றினார்கள். இதற்குப் பின்பு அவர்களுடைய வழிபாடு அந்தக் கோயிலில் நடைபெற்றத் தொடங்கியது. கால ஓட்டத்தில் அந்தக் கோயிலை இடி, மின்னல், மழை என்று ஏராளமானவை தாக்கின. கோயிலில் இருந்த மற்ற பகுதிகள் சேதமுற்றாலும், "கிறிஸ்துவின் ஆட்சி என்றுமுள்ள ஆட்சி; அது தலைமுறை தலைமுறையாக நீடித்திருக்கும் ஆட்சி" என்ற வார்த்தைகள் மட்டும் அழியவே இல்லை.


ஆம். கிறிஸ்துவின் ஆட்சி அல்லது இறையாட்சி என்றுமுள்ள ஆட்சி; தலைமுறை தலைமுறையாக நீடித்திருக்கும் ஆட்சி என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த வரலாற்று உண்மை நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. நற்செய்தியில் இறையாட்சியைக் குறித்த கேள்வி வருகின்றது. இயேசு அதற்கு எத்தகைய விளக்கத்தினை அளிக்கின்றார்? இந்த இறையாட்சியில் உட்படுவதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? என்பவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.


இறையாட்சி எப்போது வரும்?

நற்செய்தியில் பரிசேயர் இயேசுவிடம், இறையாட்சி எப்போது வரும் என்றொரு கேள்வியைக் கேட்கின்றனர். இயேசு அவர்களிடம் என்ன மறுமொழி கூறினார் என்று சிந்தித்துப் பார்க்கும் முன்னம், யூதர்கள் இறையாட்சியை எப்படிப் புரிந்து வைத்திருந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது.

பல ஆண்டுகளாக யூதர்கள், தங்களுடைய குலத்திலிருந்து மெசியா தோன்றுவார்; அவர் எல்லா நாடுகளையும் வீழ்த்தி ஆட்சி செலுத்துவார் என்று நினைத்தார்கள். திருமுழுக்கு யோவான் வந்தபோது, அவர் வழியாக இறையாட்சி வருமா? என்று எதிர்பார்த்தார்கள். அதன்பின் இயேசு அப்பங்களைப் பலுகச் செய்தபோது (யோவா 6:15) அவர் வழியாக இறையாட்சி வருமா? என்று எதிர்பார்த்தார்கள். இவ்வாறு அவர்கள் இறையாட்சி இதோ வந்துவிடும், அதோ வந்துவிடும் என்று எதிர்பார்த்துக்கொண்டே இருந்தார்கள்.

இங்கு யூதர்கள் இறையாட்சி என்று எதைப் புரிந்துவைத்திருந்தார்கள், அது இயேசு சொல்கின்ற இறையாட்சியோடு எப்படி வேறுபட்டு இருக்கின்றது என்பதை நுட்பமாகக் கவனிக்கவேண்டும். யூதர்கள் எதிர்பார்த்த இறையாட்சியோ அரசியல் சம்பந்தப்பட்டது; இயேசுவின் இறையாட்சியோ ஆன்மிகம் சம்பந்தப்பட்டது. யூதர்கள் எதிர்பார்த்த இறையாட்சியோ யூதர்களை மட்டும் உள்ளடக்கியது; இயேசுவின் இறையாட்சியோ எல்லா மக்களையும் உள்ளடக்கியது. இப்படி அரசியல் சம்பந்தப்பட்ட, யூதர்களை மட்டுமே உள்ளடக்கிய இறையாட்சி எப்போது வரும் என்று பரிசேயர் கேட்கிறபோது இயேசு அதற்குத் தெளிவான விளக்கத்தைத் தருகின்றார். இயேசு அவர்கட்கு அளித்த விளக்கமென்ன என்பதை இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

இறையாட்சி நம் நடுவே செயல்படுகின்றது

பரிசேயர் (குறுகிய எண்ணத்தோடு) இறையாட்சி எப்போது வரும் என்று கேட்டதற்கு, இயேசு அவர்களிடம், "...இறையாட்சி உங்கள் நடுவே செயல்படுகின்றது" என்று குறிப்பிடுகின்றார். இயேசு சொல்வதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், இறையாட்சி எப்போது வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் மூடர்களே! அது ஏற்கனவே வந்துவிட்டது என்று சொல்வதாகப் புரிந்துகொள்ளலாம்.

ஆம், இயேசு செய்த அருமடையாளங்கள் வழியாக, போதனையின் வழியாக இறையாட்சி ஏற்கனவே வந்துவிட்டது. அதைப் புரிந்துகொள்ளாமல், பரிசேயர் இயேசுவிடம் இறையாட்சி எப்போது வரும் என்று கேட்பது அறிவில்லாதோருடைய செயலாக இருக்கின்றது. இறைவாக்கினர் எசாயா, இறையாட்சி வருகின்றபோது பார்வையற்றோர் பார்வைபெறுவர்; காதுகேளாதோர் கேட்போர்; கால் ஊனமுற்றோர் எழுந்து நடப்பர் என்று இறைவாக்கு உரைத்திருந்தார். அவர் உரைத்த இறைவாக்கு இயேசுவில் நிறைவேறின. அப்படியிருந்தும் பரிசேயர், இறையாட்சி எப்போது வரும் என்று கேட்பது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருகின்றது.

நாமும்கூட இறைவன் நம் நடுவில் செயல்படுகின்றார்; நாம் அனைவரும் அவருடைய ஆட்சியின் விழுமியங்கட்கு ஏற்ப நடக்கவேண்டும் என்பதை உணராதவர்களாகவே இருக்கின்றோம். ஆகவே, நாம் இயேசுவின் ஆட்சி நம் நடுவில் செயல்படுகின்றது என்ற உண்மையை உணர்ந்தவர்களாய், அவருடைய ஆட்சியின் மதிப்பிடுகட்கு ஏற்ப நடக்க முற்படுவோம்.

சிந்தனை

"இறையாட்சி தூய ஆவியார் அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை" (உரோ 14:17) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் தூய ஆவியார் அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகிய விழுமியங்களின் படி நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!