Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     13 நவம்பர் 2019  
                                    பொதுக்காலம் 32ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 மன்னர்களே, நீங்கள் ஞானத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 6: 1-11

மன்னர்களே, நான் சொல்வதற்குச் செவிசாய்த்துப் புரிந்து கொள்ளுங்கள்; உலகின் கடையெல்லை வரை நீதி வழங்குவோரே, கற்றுக் கொள்ளுங்கள். திரளான மக்களை ஆள்வோரே, பல மக்களினங்களைப் பற்றிப் பெருமை பாராட்டுவோரே, எனக்குச் செவிசாயுங்கள்.

ஆண்டவரிடமிருந்தே உங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது; உன்னத இறைவனிடமிருந்தே உங்களுக்கு ஆட்சியுரிமை கிடைத்தது. அவரே உங்கள் செயல்களைச் சோதித்து அறிபவர்; உங்கள் திட்டங்களை ஆராய்பவரும் அவரே. அவரது அரசின் பணியாளர்களாய் இருந்தும், நீங்கள் நேர்மையுடன் தீர்ப்பு வழங்கவில்லை; திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கவில்லை; கடவுளின் திருவுளப்படி நடக்கவில்லை. கொடுமையாகவும் விரைவாகவும் அவர் உங்கள்மேல் வருவார்; உயர் நிலையில் உள்ளவர்களுக்குக் கடும் தீர்ப்பு வழங்குவார்.

எளியோர்க்கு இரக்கங்காட்டி அவர்களைப் பொறுத்தருள்வார்; வலியோரை வன்மையாகத் தண்டிப்பார். அனைத்திற்கும் ஆண்டவர் யாருக்கும் அஞ்சி நடுங்க மாட்டார்; உயர்ந்தோர்க்கென்று தனி மதிப்பு அளிக்க மாட்டார். ஏனெனில் பெரியோரையும் சிறியோரையும் படைத்தவர் அவரே; எல்லாரும் ஒன்று என எண்ணிக் காப்பவரும் அவரே. அவர் வலியோரிடம் கண்டிப்பான கணக்குக் கேட்பார்.

எனவே, மன்னர்களே, நீங்கள் ஞானத்தைக் கற்றுக் கொள்ளவும், நெறி பிறழாது நடக்கவும், உங்களுக்கு நான் கூறுகிறேன்; தூய்மையானவற்றைத் தூய்மையாய்க் கடைப்பிடிப்போர் தூயோர் ஆவர்; தூய்மையானவற்றைக் கற்றுக் கொண்டோர் தங்கள் செயல்களை முறைப்படுத்த வழி காண்பர். எனவே என் சொற்கள்மீது நாட்டங்கொள்ளுங்கள்; ஏக்கங்கொள்ளுங்கள். நீங்கள் அவற்றால் நற்பயிற்சி பெறுவீர்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 82: 3-4. 6-7 (பல்லவி: 8a)
=================================================================================
பல்லவி: கடவுளே, உலகில் எழுந்தருளும், நீதியை நிலைநாட்டும்.

3 எளியோர்க்கும் திக்கற்றவர்க்கும் நீதி வழங்குங்கள்; சிறுமை யுற்றோர்க்கும் ஏழைகட்கும் நியாயம் வழங்குங்கள்! 4 எளியோரையும் வறியோரையும் விடுவியுங்கள்! பொல்லாரின் பிடியினின்று அவர்களுக்கு விடுதலை அளியுங்கள்! பல்லவி

6 நீங்கள் தெய்வங்கள்; நீங்கள் எல்லாரும் உன்னதரின் புதல்வர்கள். 7 ஆயினும், நீங்களும் மனிதர்போன்று மடிவீர்கள்; தலைவர்களுள் ஒருவர் போல வீழ்வீர்கள்' என்றேன். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
1 தெச 5: 18

அல்லேலூயா, அல்லேலூயா! எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 11-19


அக்காலத்தில் இயேசு எருசலேமுக்குப் போய்க்கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார்.

ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்துத் தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்றுகொண்டே, "ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்" என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்.

அவர் அவர்களைப் பார்த்து, "நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்" என்றார்.

அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும் போது அவர்கள் நோய் நீங்கிற்று. அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர்.

இயேசு அவரைப் பார்த்து, "பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!" என்றார்.

பின்பு அவரிடம், "எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது" என்றார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================

லூக்கா 17: 11-19

ஆண்டவர்க்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்

நிகழ்வு

இரண்டாம் உலகப்போர் முடிந்திருந்த சமயம் அது. அமெரிக்காவில் இருந்த ஒரு பிரபலமான திருக்கோயிலில் பணியாற்றிவந்த குருவானவர், ஒரு ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலியின்போது மக்களைப் பார்த்து, "போரினால் நம்முடைய கோயில் அதிகமாகச் சேதமடைந்துள்ளது. இதனைச் சரிசெய்வதற்கு இறைமக்கள் அனைவரும் தாராளமாக நன்கொடைகளைத் தந்து உதவவேண்டும்" என்று அறிவித்தார்.

அவர் இவ்வாறு அறிவித்ததைத் தொடர்ந்து பலர் அவரிடம் போட்டிபோட்டுக்கொண்டு வந்து நன்கொடைகளைக் கொடுத்துவிட்டுச் சென்றனர். எல்லாரும் போனபின்பு இரண்டு தாய்மார்கள் அவரிடம் வந்தார்கள். அதில் முதலாவது வந்தவர் குருவானவரிடம், "போரில் என்னுடைய மகன் இறந்துவிட்டான்; அவனுடைய இழப்பிலிருந்து என்னால் மீண்டுவர முடியவில்லை. இருந்தாலும், இறைவன் அவனை என்னோடு இத்தனை ஆண்டுகளும் வாழ வைத்திருந்தாரே... அதற்கு நன்றியாக இந்த இருநூறு டாலரை கோயில் திருப்பணிக்காக வைத்துக்கொள்ளுங்கள்" என்று இருநூறு டாலரைக் குருவானவரிடம் கொடுத்துச் சென்றார்.

அந்தத் தாய் அங்கிருந்து சென்றதும், அவர்க்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த இன்னொரு தாய் குருவானவரிடம், "தந்தையே! போருக்குச் சென்ற என்னுடைய மகன் உயிரோடு திரும்பி வந்திருக்கின்றான். அந்த நன்றிப்பெருக்கின் அடையாளமான இந்த ஐநூறு டாலரை கோயில் திருப்பணிக்காக வைத்துக்கொள்ளுங்கள்" என்றார். இப்படிச் சொல்லிவிட்டு அவர் தொடர்ந்து குருவானவரிடம் பேசத் தொடங்கினார். "தந்தையே! கோயில் திருப்பணிக்காக முதலில் நான் இருநூறு டாலர்தான் கொடுக்கலாம் என்று இருந்தேன். ஆனால், போரில் தன்னுடைய மகனை இழந்த தாயே இருநூறு டாலர் கொடுத்ததைப் பார்த்தபின்பு, போருக்குச் சென்று உயிரோடு திரும்பி வந்திருக்கின்ற ஒரு மகனைப் பெற்றிருக்கின்ற தாயாகிய நான் இருநூறு ரூபாய் கொடுத்தால் நன்றாக இருக்காது என்று ஐநூறு டாலர் கொடுத்தேன்." அந்தத் தாய் இவ்வாறு சொன்னதைக் கேட்டு குருவானவர் வியந்துநின்றார்.

கடவுள் நமக்கு எத்தனையோ நன்மைகளைச் செய்திருக்கின்றார். அப்படிப்பட்டவர்க்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்கவேண்டும் என்ற செய்தியை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகமும் இதே செய்தியைத்தான் எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவர்க்கு நன்றி செலுத்தாத ஒன்பது யூதர்கள்

நற்செய்தியில் இயேசு பத்துத் தொழுநோயாளர்களை நலப்படுத்துவதைக் குறித்து வாசிக்கின்றோம். இந்தப் பத்துத் தொழுநோயாளர்களில் ஒன்பது பேர் யூதர்கள்; ஒருவர் சமாரியர். இதில் நாம் கவனிக்கவேண்டிய மிக முக்கியமான உண்மை, பத்துப்பேர்களும் தொழுநோயாளர்களாக இருந்தபோது, ஒன்றாக இருந்தார்கள்; அவர்கட்குள் எந்தவொரு வேறுபாடு இல்லை. யூதர்கள் சமாரியர்களோடு உறவுகொள்வதில்லை; பேசுவதில்லை. அப்படியிருக்கையில் அவர்கட்கு வந்த தொழுநோய் அவர்களை ஒன்றுசேர்த்தது. எவ்வளவு பெரிய ஆச்சரியம்!

இது ஒருபக்கம் இருக்கையில் இயேசு, தாங்கள் இருக்கும் பகுதி வழியாக வருவதைப் பார்த்துவிட்டு பத்துத் தொழுநோயாளர்களும் அவரிடம் "ஐயா! இயேசுவே, எங்கட்கு இரங்கும்" என்று வேண்டுகின்றார்கள். இவர்கள் இயேசுவை நோக்கி ஐயா என்று அழைப்பது, லூக்கா நற்செய்தி 5:5 ல், சீமோன் பேதுரு இயேசுவை நோக்கி "ஐயா"என்று அழைப்பதை ஒத்திருக்கின்றது. இதற்குப் பொருள் இயேசு எல்லா அதிகாரத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கின்றார் என்பதாகும். இந்த நம்பிக்கையோடு அவர்கள் இயேசுவை வேண்டியதைத் தொடர்ந்துதான் அவர் அவர்களிடம், நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்" என்கின்றார். அவர்களும் அவருடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டு குருக்களின் காண்பிக்கச் செல்கின்றார்கள். அவ்வாறு அவர்கள் போகிற வழியிலேயே அவர்கள நோய் நீங்குகின்றது. ஆனால், சமாரியரைத் தவிர்த்து மற்ற ஒன்பது பேர்களும், தங்கட்கு நலம்தந்த இயேசுவுக்கு நன்றி செலுத்தவேண்டும் என்ற எண்ணமில்லாமல் செல்கின்றார்கள்.

இங்குதான் யூதர்களும் சமாரியர்களும் வித்தியாசப்படுகின்றார்கள். யூதர்கள் இயேசுவுக்கு நன்றி செலுத்த வந்திருக்கவேண்டும் (1 அர 5: 1-14), வராததால் உடலளவில் மட்டும் நலம்பெற்றுச் செல்கின்றார்கள்.

ஆண்டவர்க்கு நன்றி செலுத்திய ஒரு சமாரியர்

யூதர்கள் நடந்துகொண்டதற்கு முற்றிலும் மாறாக, சமாரியர் தன்னுடைய நோய் நீங்கியதை உணர்ந்து, கடவுளைப் போற்றிப் புகழ்ந்து, இயேசுவுக்கு நன்றி செலுத்த வருகின்றார். இதனால் இயேசு அவரிடம், "உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது" என்று கூறுகின்றார். இயேசு சமாரியரிடம் சொன்ன இவ்வார்த்தைகள், இயேசு தன்னுடைய காலடிகளைக் கழுவிய பெண்ணிடம் சொன்ன, "உமது நம்பிக்கை உம்மை மீட்டது" (லூக் 7:50) என்ற வார்த்தைகளை ஒத்திருப்பதாகத் திருவிவிலிய அறிஞர்கள் கூறுவர். ஆம், சமாரியர் இயேசுவுக்கு நன்றி செலுத்தியதால், அவருடைய உடல் நோய் மட்டுமல்ல, அவருடைய பாவங்களும் மன்னிக்கப்பட்டன.

இந்த நிகழ்வைக் குறித்து சிந்தித்துப் பார்க்கின்ற நாம் இறைவனுக்கு நன்றியுடைவர்களாக இருக்கின்றோமா? என்று சிந்திப்போம். பல நேரங்களில் நாம் இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்ட நன்மைகட்கு நன்றியுணர்வு இல்லாதவர்களாகவே இருக்கின்றோம் என்பது வேதனை கலந்த உண்மை. ஆகையால், நாம் இறைவனிடமிருந்து பெற்ற நன்மைகட்கு நன்றியுடையவர்களாக இருக்க முயற்சி செய்வோம்.

சிந்தனை

'நன்றியுணர்வு இல்லாத உள்ளம் எல்லாப் பாவங்கட்குமான விளைநிலம்" (உரோ 1:21f) என்பார் பவுல். ஆகையால், நாம் இறைவனுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மன்னர்களே, நீங்கள் ஞானத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 6: 1-11

அடக்கியாள அல்ல, அன்பு செலுத்தவே அதிகாரம்

நிகழ்வு

விவசாயி ஒருவர் இருந்தார். அவர் தன்னுடைய தோட்டத்தில் இடி விழுந்து கருகிப்போயிருந்த மரத்தை வெட்டி, அப்புறப்படுத்துவதற்காக வேலையாள் ஒருவரை நியமித்தார்; அதற்குக் கூலியாக அவருக்கு ஐநூறு ரூபாய் தருவதாக ஒத்துக்கொண்டார். வேலையாள் தான் ஒத்துக்கொண்டதற்கு ஏற்ப, கருகிப்போயிருந்த மரத்தை வெட்டத் தொடங்கினார். இதற்கிடையில் விவசாயி வேலையாளிடம், "வீட்டில் எனக்கொரு முக்கியமான வேலையிருக்கின்றது... அதை முடித்துக்கொண்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு, வேலையாளிடமிருந்து விடைபெற்று வீட்டுக்குப் போனார்.

போனவர் வேலையை முடித்துவிட்டு தன்னுடைய தோட்டத்திற்குத் திரும்பி வந்தார். அங்கு அவர் கண்ட காட்சி அவரை ஆச்சரியப்பட வைத்தது. ஆம், அவர் வேலைக்கு அமர்த்திய வேலையாள் அருகில் இருந்த மரநிழலில் அமர்ந்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்; அவருக்குப் பக்கத்தில் இன்னொரு வேலையாள் கருகிப்போயிருந்த மரத்தை வெட்டிக் கொண்டார்.

உடனே விவசாயி தான் வேலைக்கு நியமித்த வேலையாளிடம், "என்னப்பா! கொடுத்த வேலையைச் செய்யாமல் இப்படி மரத்தின் அடியில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றாயே...! உனக்கு என்னவாயிற்று...? உன்னுடைய இடத்தில் இன்னோர் ஆள் வேலை செய்துகொண்டிருக்கின்றாரே...?" என்றார். "நான்தான் அவரை வேலைக்கு அமர்த்தினேன்" என்றார் அந்த வேலையாள். "நீதான் இவரை வேலைக்கு அமர்த்தினாயா...? அது சரி, இவருக்கு எவ்வளவு கூலி தருவதாக ஒத்துக்கொண்டாய்?" என்று விவசாயி கேட்க, வேலையாள் அவரிடம் "ஐநூற்று ஐந்து ரூபாய்" என்றார்.

வேலையாளிடமிருந்து இப்படியொரு பதிலை எதிர்பார்த்திராத விவசாயி அவரிடம் மீண்டுமாக, "நான் உனக்கு ஐநூறு ரூபாய் தருவதாகத்தான் ஒத்துக்கொண்டிருக்கின்றேன். அப்படியிருக்கையில் இவருக்கு நீ ஐநூற்று ஐந்து ரூபாய் தருவதாக ஒத்துக்கொண்டிருக்கின்றாயே...! இது எப்படி உனக்குக் கட்டுபடியாகும்?" என்றார். வேலையாள் விவசாயியை ஒருமுறை உற்றுப்பார்த்துவிட்டுச் சொன்னார்: "முதலாளியாக இருந்து அடுத்தவரை வேலை வாங்கினால் எப்படி இருக்கும் என்று பார்க்க நினைத்தேன். அதனால்தான் நீங்கள் கொடுப்பதாகச் சொன்ன ஐநூறு ரூபாயோடு இன்னோர் ஐந்து ரூபாயைச் சேர்த்து இவரை வேலைக்கு அமர்த்தினேன். முதலாளியாக இருந்து அடுத்தவரை வேலைவாங்குவது நன்றாகத்தான் இருக்கின்றது." இதைக் கேட்ட விவசாயியால் எதுவும் பேசமுடியவில்லை.

இந்த நிகழ்வில் வருகின்ற வேலையாளைப் போன்றுதான் பலருக்கும் தன்னிடம் இருக்கும் அதிகாரத்தைக் கொண்டு அடுத்தவரை அடக்கியாளவேண்டும் என்ற எண்ணமானது இருக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில், இன்றைய இறைவார்த்தை அதிகாரம் என்பது யாரால் கொடுக்கப்பட்டது, எதற்காகக் கொடுக்கப்பட்டது போன்ற கேள்விகளுக்கு விடை தருகின்றது. அவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

எல்லா அதிகாரமும் ஆண்டவரிடமிருந்தே வருகின்றது

சாலமோனின் ஞான நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், அதிகாரம் ஆண்டவரிடமிருந்தே வருகின்றது என்ற உண்மையை எடுத்துக்கூறுகின்றது. அதிகாரம் ஆண்டவரிடமிருந்து வருகின்றது என்றால், அந்த அதிகாரத்தைப் பெற்றிருப்போர் அல்லது அதிகாரத்தைக் கொண்டிருப்போர், தாங்கள் ஆண்டவருடைய பணியாளர்கள் என்ற உண்மையை உணர்ந்தவர்களாய், அதிகாரத்தை ஆண்டவருடைய திருவுளத்திற்கு ஏற்ப பயன்படுத்தவேண்டும். ஒருவேளை அவர்கள் ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால், ஆண்டவரால் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்பது உறுதி.

எடுத்துக்காட்டாக, தாவீது அரசன் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி, உரியாவின் மனைவியை தன்னுடைய ஆசைக்கு உட்படுத்தினான். அதனால் அவனுடைய கண்முன்னாலேயே அவனுடைய குழந்தை இறந்தது. மோசே ஆண்டவர் கொடுத்த அதிகாரத்தின்மீது நம்பிக்கை கொள்ளாமல் அல்லது அவருடைய வார்த்தையில் நம்பிக்கை கொள்ளாமல், பாறையில் கோலை இரண்டுமுறை தட்டினார். இதனால் வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டிற்குள் நுழைய முடியாமலேயே போனார். இதுபோன்று பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம் இவையெல்லாம் சொல்லக்கூடிய செய்தி ஒன்றே ஒன்றுதான். அதுதான் ஆண்டவரிடமிருந்து பெற்ற அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தாமல், அவருடைய விருப்பத்திற்கு ஏற்பப் பயன்படுத்தவேண்டும் என்பதாகும்.

அதிகாரத்தைத் தூய்மையாகக் கடைப்பிடிப்போர் தூயோர் ஆவர்

இன்றைய முதன்வாசகத்தின் இரண்டாவது பகுதியில், நூலாசிரியர் அதிகாரத்தைத் தூயதாக அல்லது ஆண்டவரின் திருவுளத்திற்கு ஏற்பப் பயன்படுத்துவோர் தூயோர் ஆவர் என்கின்றார். இதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டு நம் ஆண்டவர் இயேசு. ஆம், ஆண்டவர் இயேசு எல்லா அதிகாரத்தையும் கொண்டிருந்தார் (மத் 28: 18); அந்த அதிகாரத்தைத் தன்னுடைய நலனுக்காகவோ அல்லது அடுத்தவரை அடக்கி ஆளவோ பயன்படுத்தவில்லை. மாறாக, மற்றவருக்குப் பணிவிடை செய்யப் பயன்படுத்தினார். ஆகையால், அதிகாரத்தில் இருப்போர், அது யாராக இருந்தாலும், அந்த அதிகாரத்தை அடுத்தவரை அடக்கி ஆள்வதற்கு அல்ல, பணிவிடை செய்யவும் அன்புசெலுத்தவும் பயன்படுத்தினால், ஆண்டவரிடமிருந்து ஆசியைப் பெறுவது உறுதி.

சிந்தனை

"உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்கட்டும்"(மத் 23: 11) என்பார் இயேசு. ஆகையால், நமக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தைக் கொண்டு அடுத்தவரை அடக்கியாள நினைக்காமல், இயேசுவைப் போன்று பணிவிடை செய்யக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!