|
|
11 நவம்பர்
2019 |
|
|
பொதுக்காலம்
32ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆண்டவரின் ஆவி உலகை நிரப்பியுள்ளது.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 1: 1-7
மண்ணுலகை ஆள்பவர்களே, நீதியின்மேல் அன்பு செலுத்துங்கள்; நன்மனத்துடன்
ஆண்டவரைப் பற்றி நினைந்திடுங்கள்; நேர்மையான உள்ளத்துடன் அவரைத்
தேடுங்கள். அவரைச் சோதியாதோர் அவரைக் கண்டடைகின்றனர்; அவரை நம்பினோர்க்கு
அவர் தம்மை வெளிப்படுத்துகின்றார்.
நெறிகெட்ட எண்ணம் மனிதரைக் கடவுளிடமிருந்து பிரித்துவிடும்.
அவரது ஆற்றல் சோதிக்கப்படும்பொழுது, அது அறிவிலிகளை அடையாளம்
காட்டிவிடும். வஞ்சனை நிறைந்த ஆன்மாவில் ஞானம் நுழைவதில்லை; பாவத்திற்கு
அடிமையான உடலில் ஞானம் குடிகொள்வதில்லை. நற்பயிற்சி பெற்ற உள்ளம்
வஞ்சனையினின்று விலகியோடும்; அறிவற்ற எண்ணங்களை விட்டு அகலும்;
அநீதி அணுகுகையில் அது நாணி ஒதுங்கும்.
ஞானம் மனிதநேயமுள்ள ஆவி; ஆயினும் இறைவனைப் பழிப்போரை அது தண்டியாமல்
விடாது. கடவுள் அவர்களுடைய உள்ளுணர்வுகளின் சாட்சி; உள்ளத்தை
உள்ளவாறு உற்று நோக்குபவர்; நாவின் சொற்களைக் கேட்பவரும் அவரே.
ஆண்டவரின் ஆவி உலகை நிரப்பியுள்ளது; அனைத்தையும் ஒருங்கிணைக்கும்
அந்த ஆவி ஒவ்வொரு சொல்லையும் அறிகின்றது.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
- திபா 139: 1-3a. 3b-6. 7-8. 9-10 (பல்லவி: 24b)
=================================================================================
பல்லவி: என்றும் உள்ள வழியில் என்னை நடத்தும் ஆண்டவரே.
1 ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்! 2 நான்
அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை
எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர். 3a நான் நடப்பதையும்
படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர். பல்லவி
3b என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே. 4 ஆண்டவரே! என்
வாயில் சொல் உருவாகு முன்பே, அதை முற்றிலும் அறிந்திருக்கின்றீர்.
5 எனக்கு முன்னும் பின்னும் என்னைச் சூழ்ந்து இருக்கின்றீர்;
உமது கையால் என்னைப் பற்றிப்பிடிக்கின்றீர். 6 என்னைப் பற்றிய
உம் அறிவு எனக்கு மிகவும் வியப்பாயுள்ளது; அது உன்னதமானது; என்
அறிவுக்கு எட்டாதது. பல்லவி
7 உமது ஆற்றலை விட்டு நான் எங்கே செல்லக்கூடும்? உமது
திருமுன்னிலிருந்து நான் எங்கே தப்பியோட முடியும்? 8 நான் வானத்திற்கு
ஏறிச் சென்றாலும் நீர் அங்கே இருக்கின்றீர்! பாதாளத்தில் படுக்கையை
அமைத்துக் கொண்டாலும் நீர் அங்கேயும் இருக்கின்றீர்! பல்லவி
9 நான் கதிரவனின் இடத்திற்கும் பறந்து சென்றாலும் மேற்கே கடலுக்கு
அப்பால் வாழ்ந்தாலும், 10 அங்கேயும் உமது கை என்னை நடத்திச்
செல்லும்; உமது வலக்கை என்னைப் பற்றிக்கொள்ளும். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
பிலி 2: 15-16
அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக்கொள்ளுங்கள்.
உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நான் மனம் மாறிவிட்டேன் என்று சொல்வாரானால் அவரை மன்னித்துவிடுங்கள்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 1-6
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "பாவச் சோதனை
வருவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் ஐயோ! அதற்குக் காரணமாய் இருப்பவருக்குக்
கேடு!
அவர் இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச்செய்வதை விட அவ்வாறு
செய்பவரது கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி அவரைக் கடலில்
தள்ளிவிடுவது அவருக்கு நல்லது.
எனவே, நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். உங்களுடைய சகோதரர் சகோதரிகளுள்
ஒருவர் பாவம் செய்தால் அவரைக் கடிந்து கொள்ளுங்கள். அவர் மனம்
மாறினால் அவரை மன்னியுங்கள்.
ஒரே நாளில் அவர் ஏழு முறை உங்களுக்கு எதிராகப் பாவம் செய்து ஏழு
முறையும் உங்களிடம் திரும்பி வந்து, `நான் மனம் மாறிவிட்டேன்'
என்று சொல்வாரானால் அவரை மன்னித்துவிடுங்கள்.''
திருத்தூதர்கள் ஆண்டவரிடம், "எங்கள் நம்பிக்கையை
மிகுதியாக்கும்'' என்று கேட்டார்கள்.
அதற்கு ஆண்டவர் கூறியது: "கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால்
நீங்கள் இந்தக் காட்டு அத்தி மரத்தை நோக்கி, `நீ வேரோடே பெயர்ந்து
போய்க் கடலில் வேரூன்றி நில்' எனக் கூறினால் அது உங்களுக்குக்
கீழ்ப்படியும்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
முதல் வாசகம்
ஆண்டவரின் ஆவி உலகை நிரப்பியுள்ளது.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 1: 1-7
(நேர்மையான உள்ளத்தோடு) ஆண்டவரைத் தேடுங்கள்
நிகழ்வு
மலையடிவாரத்தில் இருந்த ஊர் அது; கிறிஸ்தவர்கள் அதிகமாக
வாழ்ந்து வந்த ஊரும்கூட. அந்த ஊரில் தாமஸ் என்றொருவன்
இருந்தான். அவன் பெயருக்குத்தான் கிறிஸ்தவனாக இருந்தானோ அன்றி,
கோயிலில் நடைபெறும் வழிபாடுகளில் கலந்துகொள்வதோ,
திருப்பலிக்குச் செல்வதோ கிடையவே கிடையாது. அங்கிருந்த
பங்குத்தைகூட அவனைப் பலமுறை கூப்பிட்டு எச்சரித்தார்.
அப்படியிருந்தும் அவன் தன்னுடைய போக்கை மாற்றிக்கொள்ளவே இல்லை.
ஒரு ஞாயிற்றுக்கிழமைக் காலையில், தாமஸ் தன்னுடைய நெருங்கி
நண்பர்கள் இருவரைக் கூப்பிட்டு, "வாருங்கள் பக்கத்திலுள்ள
காட்டிற்கு மான் வேட்டைப் போவோம்" என்றான். அவர்களோ, "இன்று
ஞாயிற்றுக்கிழமை; கடன் திருநாள் வேறு. இன்றைக்குத்
திருப்பலிக்குப் போகாமல், வேட்டைக்குப் போவோம் என்று
சொல்கின்றாயே...! இது உனக்கே நன்றாக இருக்கின்றாதா...?"
என்றார்கள். அதற்குத் தாமஸ் அவர்களிடம், "இன்று ஒருநாள்
கோயிலுக்குப் போகாவிட்டால், கடவுள் ஒன்றும் கோபித்துக்
கொள்ளமாட்டார்; வாருங்கள் வேட்டைப் போவோம்" என்றான். அவர்களும்
வேறு வழியின்றி தாமஸோடு வேட்டைக்குச் சென்றார்கள்.
அவர்கள் மூவரும் காட்டுக்குள் வேட்டைக்குச் சென்றிருந்த நேரம்,
மழை பெய்து ஓய்ந்திருந்தது. இதனால் மிருகங்களின்
காலடித்தடங்கள் மண்ணில் பதிந்திருந்தது எளிதாகத் தெரிந்தன.
அவற்றைப் பார்த்துவிட்டு தாமஸ் தன்னுடைய நண்பர்களிடம், "இந்தக்
காலடித் தடங்களைப் பார்க்கின்ற மிருகங்கள் அருகில்தான்
சுற்றித் திரிவதுபோல் தெரிகின்றது" என்றான். அவனோடு வந்த
நண்பர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக வந்தார்கள்.
அவர்கள் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கும்போது ஓரிடத்தில்
இரத்தக் கறை படிந்திருப்பதைக் கண்டார்கள். அதைப்
பார்த்துவிட்டு தாமசின் நண்பர்களில் ஒருவர், "எனக்கென்னமோ
கொடிய விலங்குகள் இந்த பக்கம் அலைவதுபோன்று தெரிகின்றது.
அதனால் இத்துடன் நம்முடைய பயணத்தை முடித்துக்கொண்டு
வீட்டுக்குத் திரும்பிச் செல்வதுதான் நல்லது" என்றார். அதைக்
கேட்ட தாமஸ் அவனிடம், "சரியாக விவரம் ஆளாய் இருப்பாய் போல...!
இரத்தக் கறை படிந்திருந்தது என்றால், விலங்குகள் அதிகமாகச்
சிக்கும்... இன்றைக்கு நமக்கு சரியான வேட்டை என்று எனக்குத்
தோன்றுகின்றது... பொறுத்திருந்து பார்" என்றான்.
தாமஸின் நண்பர்களோ அவனிடம், "எங்களுக்குப் பயமாக
இருக்கின்றது... நீ வேண்டுமானால் உள்ளே போ; நாங்கள் இங்கேயே
இருக்கின்றோம்" என்றார்கள். இதைத் தொடர்ந்து தாமஸ் மட்டும்
காட்டுக்குள்ளே சென்றான். அவன் உள்ளே சென்ற சிறிதுநேரத்தில்
பெரிய அலறல் சத்தம் கேட்டது. அது தாமஸின் சத்தம்தான் என்பதைக்
கண்டுபிடிக்க அவர்களுக்கு வெகுநேரம் ஆகவில்லை. அவர்கள்
அவனுக்கு என்ன ஆயிற்று என்று உற்றுப் பார்த்தபோது, அவன் ஒரு
புலியிடம் மாட்டிக்கொண்டது நன்றாகத் தெரிந்தது. அக்காட்சியைக்
கண்ட தாமஸின் நண்பர்கள் இருவரையும் பயங்கர அச்சம்
தொற்றிக்கொண்டது. உடனே அவர்கள் இருவரும் தப்பித்தோம்
பிழைத்தோம் என்று அங்கிருந்து தலைதெறிக்க ஊருக்கு
ஓடிவந்தார்கள்.
இந்த நிகழ்வில் வருகின்ற தாமஸைப் போன்றுதான் பலரும் கடவுளைத்
தேடாமல், அவருடைய வழியில் நடக்காமல், தவறான வழியில் நடந்து,
இறுதியில் அழிந்தும் போகின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில்
இன்றைய முதல் வாசகம், ஆண்டவரைத் தேடவேண்டும் அதுவும் நேர்மையான
உள்ளத்தோடு தேடவேண்டும் என்ற சிந்தனையை நமக்கு
எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்து
பார்ப்போம்.
ஆண்டவரை நேர்மையான உள்ளத்தோடு தேடுவோம்
சாலமோனின் ஞானநூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில்
அதன் ஆசிரியர், "நேர்மையான உள்ளத்தோடு ஆண்டவரைத் தேடுங்கள்"
என்று கூறுகின்றார். கிமு முதலாம் நூற்றாண்டில்
அலெக்சாந்திரியா வாழ்ந்த ஒருவரால் எழுதப்பட்ட இந்த நூலானது,
அதிலும் குறிப்பாக இன்றைய நாள் வாசகமானது, நேர்மையான
உள்ளத்தோடு ஆண்டவரைத் தேடுவதன் முக்கியத்துவத்தை நமக்கு
எடுத்துக்கூறுகின்றது.
நேர்மையான உள்ளத்தோடு ஆண்டவரைத் தேடுவதால் ஒருவருக்கு
கிடைக்கும் ஆசியைப் பற்றியும் இந்த நூலின் ஆசிரியர் மிகத்
தெளிவாக எடுத்துக்கூறுகின்றார். நேர்மையான உள்ளத்தோடு
ஆண்டவரைத் தேடுகின்றவர் அவரைக் கண்டு கொள்கின்றார்; ஞானம்
அவருள் குடிகொள்ளும் என்று நூலாசிரியர் மிக அழகாகக்
கூறுகின்றார். இவர் கூருகின்ற வார்த்தைகள், நற்செய்தியில்
இயேசு சொல்கின்ற, "தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில்
அவர்கள் கடவுளைக் காண்பார்கள்" (மத் 5: 8) என்ற வார்த்தைகளை
நமக்கு நினைவுபடுத்துகின்றன. ஆகையால், நாம் கடவுளைத் தேடுவோம்.
அதுவும் நேர்மையான உள்ளத்தோடு தேட முயற்சி செய்வோம்.
சிந்தனை
"தேடுவோர் கண்டடைகின்றனர்" (மத் 7:8) என்பார் இயேசு. ஆகையால்,
நாம் கடவுளை நேர்மையான உள்ளத்தோடு தேடுவோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
லூக்கா 17: 1-6
யாருக்கும் இடறலாய் இருக்கவேண்டாம்!
நிகழ்வு
அது ஒரு பழமையான பங்கு. அந்தப் பங்கில் ஒவ்வோர் ஆண்டும்
தவக்காலத்தில், இயேசுவின் பாடுகள் நாடகமாக நடித்துக்
காட்டப்படும். அந்த ஆண்டும் அதுமாதிரி இயேசுவின் பாடுகளை
நாடகமாக அரகேற்றும் நாள் வந்தது.
வழக்கத்திற்கு மாறாக அந்த ஆண்டு புதியவர் ஒருவர் இயேசுவாக
நடித்தார். அவர் தன்மேல் சிலுவையைத் தூக்கிக்கொண்டு கல்வாரி
மலையை நோக்கி நடக்கும்பொழுது, அவர்க்கு பிடிக்காத ஒருவர் கீழே
இருந்துகொண்டு, அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டத்
தொடங்கினார். இது இயேசுவாக நடித்தவர்க்கு கடுங்கோபத்தை
வரவழைத்தது. இதனால் அவர் சிலுவையைக் கீழே இறக்கி வைத்துவிட்டு,
தன்னைத் தகாத வார்த்தைகளால் திட்டியவரை அடிஅடியென அடித்துத்
துவைத்தார். நிலைமை மிகவும் மோசமாகப் போய்க்கொண்டிருப்பதைப்
பார்த்த நாடக இயக்குநர் அவர்கள் இருவரையும்
சமாதானப்படுத்தினார். அதற்குள் கூட்டம் அங்கிருந்து
கலைந்துசென்றதால், நாடகத்தை மறுநாள் அரகேற்றலாம் என்று
முடிவுசெய்தார் இயக்குநர்.
மறுநாள் மக்கள் அனைவரும் கூடிவந்த பிறகு நாடகம் அரங்கேறியது.
அன்றைய நாளில் முந்தைய நாளில் இயேசுவாக நடித்தவரை வசைபாடியவர்
அங்கு இல்லை. இதனால் நாடக இயக்குநர், "இன்றைக்கு எந்தவோர்
இடையூறும் இல்லாமல் நாடகம் அரங்கேறும்" என்று மனதில்
நினைத்துக்கொண்டார். நாடகம் தொடங்கி இயேசுவாக நடித்தவர் தன்
தோள்மேல் சிலுவையைச் சுமந்துகொண்டு கல்வாரி மலையை நோக்கி
நடக்கத் தொடங்கினார். அப்பொழுது எங்கிருந்தோ வந்த வசைபாடும்
மனிதர் இயேசுவாக நடித்தவரை நோக்கி முந்தைய நாளைவிட கடுமையாக
வசைபாடத் தொடங்கினார். இதனால் இயேசுவாக நடித்தவர்க்கு
கடுமையாகக் கோபம் வர, அவர் கீழே இறங்கி வந்து அவரை அடித்துத்
துவைத்தார். இதனால் அந்த இடமே போர்க்களமானது.
அவர்கள் இருவரும் சண்டைபோடுவதைப் பார்த்து மக்கள் அங்கிருந்து
களைந்து சென்றனர். நாடக இயக்குநர்தான் அவர்கள் இருவரையும்
பிரித்துவிட்டார். பின்னர் அவர் இயேசுவாக நடித்தவரைப்
பார்த்து, "இயேசுவாக நடிப்பவர் இவ்வளவு முரட்டுத்தனமாக
நடந்துகொள்வது நல்லதல்ல அதனால் நாளைக்கு வேறோர் ஆளை வைத்து
நாடகத்தை நடத்தப் போகிறேன்" என்று சற்று கோபத்தோடு சொன்னார்.
இதைக் கேட்டு அதிர்ந்துபோன இயேசுவாக நடித்த மனிதர்,
"தயவுசெய்து அப்படிச் செய்துவீடாதீர்கள்... இனிமேல் நான்
எக்காரணத்தைக் கொண்டும் கோபம்கொள்ளமாட்டேன்" என்று
உறுதிகூறினார். இதனால் நாடக இயக்குநர் அவரையே இயேசுவாக நடிக்க
வைத்தார்.
மறுநாள் நாடகம் அரங்கேறியது. அன்று இயேசுவாக நடித்தவருடைய
முகத்தில் அவ்வளவு அமைதி வெளிப்பட்டது; அவரை வழக்கமாக
வசைபாடுகிறவன் அவ்வப்பொழுது அவரை வசைபாடிக்கொண்டிருந்தாலும்
அவர் எதையும் கண்டுகொள்ளாமல் நடிப்பதிலேயே கவனமாக இருந்தார்.
வசைபாடியவனின் போக்கு எல்லைமீறிப் போவதைப் பார்த்த இயேசுவாக
நடித்தவர், சிலுவையை இறக்கி வைத்துவிட்டுக் கீழே இறங்கி
வந்தார். நாடக இயக்குநரும் மக்களும் இன்று என்ன நடக்கப்
போகின்றதோ என்று பார்த்துக்கொண்டிருந்தனர். இயேசுவாக நடித்தவர்
தன்னை வசைபாடியவனின் அருகில் வந்து, அவனுடைய காதுக்குள்,
"இயேசு உயிர்க்கட்டும் அதன்பிறகு உன்னைக்
கவனித்துக்கொள்கிறேன்" என்று சொல்லிச் சென்றார். இதற்குப்
பின்பு இயேசுவாக நடித்தவரை வசைபாடிக்கொண்டிருந்தவன் வாயைத்
திறக்கவேயில்லை.
இந்த நிகழ்வில் வருகின்ற வசைபாடுகின்றவன் இயேசுவாக
நடித்தவர்க்கு எப்படி இடறலாக இருந்தானோ, அதுபோன்று பலரும்
இன்று இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு வாழ்வோர்க்கு இடறலாக
இருக்கின்றார்கள். இவர்கட்கு எத்தகைய தண்டனை கிடைக்கும் என்று
இன்றைய நற்செய்தி வாசகம் கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது
நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
யார் சிறியோர்?
நற்செய்தியில் இயேசு, இச்சிறியோருள் எவரையும் பாவத்தில் விழச்
செய்ய வேண்டாம்; இழிவாகக் கருதவேண்டாம் (மத் 18: 10)
என்கின்றார். முதலில் யார் இந்தச் சிறியோர் என்று சிந்தித்துப்
பார்ப்பது நல்லது.
இயேசு, சிறியோர் என்று குறிப்பிடுகின்ற அட்டவனையில், வயதில்
சிறியவர்கள் மட்டும் கிடையாது; இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு
வாழ்வோர்; பாவிகள் (லூக் 15:1) எனப் பலர் அடங்குவர். இவர்களுள்
ஒருவரையும் பாவத்தில் விழச் செய்துவிடக்கூடாது என்று இயேசு
கண்டிப்பாகக் கூறுகின்றார். இயேசுவின் காலத்தில் வாழ்ந்து வந்த
பரிசேயர்கள், இயேசுவின்மீது நம்பிக்கைவைத்து வாழ்ந்து வந்த
பாவிகள் மற்றும் வறிதண்டுபவர்களை இழிவாக நினைத்து, அவர்களைப்
பாவத்தில் விழச் செய்தார்கள். அவர்களை நோக்கித்தான் இயேசு
இத்தகைய வார்த்தைகளை உதிர்க்கின்றார்.
இடறலாக இருப்போர்க்கு எத்தகைய தண்டனை கிடைக்கும்?
இயேசு, "இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச்செய்வதைவிட,
அவ்வாறு செய்பவரது கழுத்தில் ஓர் எந்திரக்கல்லைக் கட்டி அவரைக்
கடலில் தள்ளுவது அவர்க்கு நல்லது" என்கின்றார்.
இயேசுவின் காலத்தில் இருவகையான எந்திரக் கற்கள்
பயன்படுத்தப்பட்டன. ஒன்று சிறிய அளவில் இருந்த, பெண்கள்
மாவரைக்கப் பயன்படுத்திய எந்திரக் கல். இன்னொன்று பெரியதும்
சுமக்க முடியாதட்டும் கழுதை, எருது போன்ற விலங்குகளால் மட்டுமே
இழுக்கக்கூடியதுமான எந்திரக் கல். நற்செய்தியில் இயேசு
பயன்படுத்துவது இரண்டாவது வகையான கல். இத்தகைய கல்லை பிறர்க்கு
இடறலாக இருப்போருடைய கழுத்தில் கட்டி, கடலில் ஆழ்த்தினால்,
அவர் யாருக்கும் இடறலாக இருக்க மாட்டார் என்பதலேயே இயேசு
அப்படிக் கூறுகின்றார்.
இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம் பிறர்க்கு இடறலாக
இருக்கின்றோமா? அல்லது பிறருடைய வளர்ச்சிக்குக் காரணமாக
இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டிய தேவையில்
இருக்கின்றார். இயேசு எப்போதும் பிறருடைய வளர்ச்சிக்குக்
காரணமாக இருந்தார். அவரைப் போன்று நாமும் பிறர்க்கு இடறலாக
இல்லாமல், பிறருடைய வளர்ச்சிக்குக் காரணமாக இருப்போம்.
சிந்தனை
"சகோதர சகோதரிகட்குத் தடைக்கல்லாகவோ இடையூறாகவோ இருப்பதில்லை
எனத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்" (உரோ 14:13). எனவே நாம்
பிறர்க்கு தடைக்கல்லாகவோ இடறலாகவோ இல்லாமல், வளர்ச்சிக்குக்
காரணமாக இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
|
|