|
|
08 நவம்பர்
2019 |
|
|
பொதுக்காலம்
31ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
கடவுளின் நற்செய்தியை அறிவிப்பதே என் குருத்துவப் பணி.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்
15: 14-21
என் சகோதரர் சகோதரிகளே, நீங்கள் நன்னயம் நிறைந்தவர்களாயும், எல்லா
அறிவும் நிரம்பப் பெற்றவர்களாயும், ஒருவர் மற்றவரை அறிவுறுத்தக்
கூடியவர்களாயும் இருக்கிறீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.
ஆயினும் உங்களுக்கு நினைவூட்டும் வகையில் சிலவற்றை இக்கடிதத்தில்
மிகத் துணிவோடு எழுதியுள்ளேன்.
நான் கடவுளின் அருளைப் பெற்றவன் என்பதால்தான் அவ்வாறு எழுதினேன்.
அந்த அருள்தான் என்னைப் பிற இனத்தாருக்குப் பணி செய்யக்
கிறிஸ்து இயேசுவின் ஊழியனாக்கிற்று. பிற இனத்தார் தூய ஆவியால்
அர்ப்பணிக்கப்பட்ட, கடவுளுக்கு உகந்த காணிக்கையாகும்படி அவர்களுக்குக்
கடவுளின் நற்செய்தியை அறிவிப்பதே என் குருத்துவப் பணி.
ஆகையால், கடவுளுக்காகச் செய்யும் இந்தப் பணியை முன்னிட்டு,
கிறிஸ்து இயேசுவுக்குரியவனாகிய நான் பெருமை பாராட்டிக்கொள்ள
இடமுண்டு.
பிற இனத்தார் தமக்குக் கீழ்ப்படியும் பொருட்டுக் கிறிஸ்து என்
வழியாய்ச் சொல்லாலும் செயலாலும், அரும் அடையாளங்கள், அருஞ் செயல்களின்
வல்லமையாலும், கடவுளின் ஆவியின் வல்லமையாலும் செய்து முடித்தவற்றைத்
தவிர வேறெதைப் பற்றியும் பேச நான் துணியமாட்டேன்.
இவ்வாறு, எருசலேம் தொடங்கி இல்லிரிக்கம் மாநிலம் வரை எங்கும்
சுற்றிக் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும் பணியை
முடித்துவிட்டேன். கிறிஸ்துவின் பெயரைக் கேள்விப்படாத இடங்களில்
மட்டும் நற்செய்தி அறிவிப்பதே என் நோக்கமாய் இருந்தது.
ஏனெனில் வேறொருவர் இட்ட அடித்தளத்தின்மேல் கட்டி எழுப்ப நான்
விரும்பவில்லை. ஆனால், "தங்களுக்குச் சொல்லப்படாததை அவர்கள்
காண்பர்; தாங்கள் கேள்விப் படாததை அவர்கள் புரிந்துகொள்வர்."
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 98: 1. 2-3ய. 3b-4 (பல்லவி: 2b காண்க)Mp3
=================================================================================
பல்லவி: பிற இனத்தார் கண் முன்னே ஆண்டவர் மீட்பை வெளிப்படுத்தினார்.
1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு
செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும்
அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி
2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம்
நீதியை வெளிப்படுத்தினார்.
3a இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட
தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி
3b உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப்
பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள்.
பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
1 யோவா 2: 5
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவின் வார்தையைக் கடைப்பிடிப்போரிடம்
கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது; நாம் அவரோடு இணைந்திருக்கிறோம்
என அதனால் அறிந்து கொள்ளலாம். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் முன்மதியுள்ளவர்களாய் நடந்து
கொள்ளுகிறார்கள்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 1-8
அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: "செல்வர் ஒருவருக்கு
வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப்
பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப்பட்டது.
தலைவர் அவரைக்
கூப்பிட்டு, "உம்மைப் பற்றி நான் கேள்விப்படுவது
என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப்
பொறுப்பாளராய் இருக்க முடியாது' என்று அவரிடம் கூறினார்.
அந்த வீட்டுப் பொறுப்பாளர்,
"நான் என்ன செய்வேன்? வீட்டுப்
பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கிவிடப்போகிறாரே! மண்
வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது.
வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும்போது பிறர் என்னைத்
தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும்
என எனக்குத் தெரியும்' என்று அவர் தமக்குள்ளே சொல்லிக்
கொண்டார்.
பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார்.
முதலாவது வந்தவரிடம், "நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?'
என்று கேட்டார். அதற்கு அவர், "நூறு குடம் எண்ணெய்' என்றார்.
வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், "இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து
ஐம்பது என்று உடனே எழுதும்' என்றார்.
பின்பு அடுத்தவரிடம், "நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று
கேட்டார். அதற்கு அவர், "நூறு மூடை கோதுமை' என்றார்.
அவர், "இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்' என்றார்.
நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல் பட்டதால்,
தலைவர் அவரைப் பாராட்டினார்.
ஏனெனில், ஒளியின் மக்களை விட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில்
மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
உரோமையர் 15: 14-21
'கிறிஸ்துவின் பெயரைக் கேள்விப்படாத இடங்களில் மட்டும்
நற்செய்தி அறிவிப்பதே என் நோக்கமாய் இருந்தது'
நிகழ்வு
ஒரு சிற்றூரில் சந்திரன் என்ற பெரியவர் ஒருவர் இருந்தார். அவர்
ஒவ்வொரு நாளும் முட்டாள்களுக்கும் எதுவும் தெரியாதவர்களுக்கும்
அறிவுரை சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதற்கு அவர் சொன்ன
காரணம் இதுதான்: "அறிவாளிகளுக்கும் எல்லாம் தெரிந்தவர்களுக்கும்
அறிவுரை சொல்லி என்ன பயன்...? அவர்கள்தான் எல்லாம் தெரிந்தவர்களாக,
அறிவாளிகளாக இருக்கின்றார்களே...! முட்டாள்களுக்கும் எதுவும்
தெரியாதவர்களுக்கும் அறிவுரை சொல்கின்றபோதுதான் அவர்கள் ஏதாவது
தெரிந்துகொண்டு நல்ல வழியில் நடப்பதற்கு வாய்ப்பிருக்கின்றது."
ஒருநாள் அவர், "அறிவுரை சொல்கின்ற அளவுக்கு யாரும் கண்ணில்
தென்படவில்லையே?" என்று யோசித்துக்கொண்டிருந்தார்; நேரம் வேறு
கடந்துபோய்க் கொண்டிருந்தது.
இரவு ஏழு மணி இருக்கும். அந்நேரத்தில் ஒரு மனிதர்
தெருக்கோடியில் இருந்த மின்கம்பத்திற்கு அடியில் எதையோ
தேடிக்கொண்டிருந்தார். அவர் அருகே சென்ற சந்திரன் அவரிடம்,
"தம்பி! நீங்கள் என்ன தேடிக்கொண்டிருக்கின்றீர்கள்...?" என்று
கேட்டார். அதற்கு அந்த மனிதர், "என்னுடைய வீட்டுச் சாவியைத்
தொலைத்துவிட்டேன்... அதனால்தான் அதைத்
தேடிக்கொண்டிருக்கின்றேன்" என்றார். "வீட்டுச் சாவியைத்
தொலைத்துவிட்டீர்களா...? அதை எங்கே தொலைத்தீர்கள்...?" என்று
கேட்டார் சந்திரன். "அதுவா...? வேலை நிமித்தமாகப் பக்கத்து ஊருக்க்குச்
சென்றேன். அப்பொழுதெல்லாம் வீட்டுக்குச் சாவி என்னுடைய
கையிலேயேதான் இருந்தது. வரும் வழியில்தான் எங்கோ
தொலைத்துவிட்டேன்" என்றார் அவர்.
"வரும் வழியில் சாவியைத் தொலைத்துவிட்டீர்கள் என்றால், அங்கு
போய்த் தேடவேண்டியதுதானே...! எதற்கு இந்த மின்கம்பத்திற்கு
அடியில் வந்து தேடிக்கொண்டிருக்கின்றீர்கள்...?" என்று அவர்
சற்றுக் கோபத்தோடு கேட்டார். உடனே அந்த மனிதர், "வரும் வழியில்
ஒரே இருட்டாக இருந்தது; இந்த இடத்தில்தான் கொஞ்சம் வெளிச்சமாக
இருந்தது. அதனால்தான் இங்குவந்து தொலைந்துபோன என்னுடைய
வீட்டுச்சாவியைத் தேடிக்கொண்டிருகின்றேன்" என்றார்.
இதைக்கேட்டு ஆச்சரியப்பட்ட பெரியவர் சந்திரன், "இப்படி எல்லாமா
மனிதர்கள் அடி முட்டாள்களாக இருப்பார்கள்!" என்று
நினைத்துக்கொண்டு, அவர் அந்த மனிதருக்கு நல்லமுறையில் அறிவுரை
சொல்லி அனுப்பி வைத்தார்.
எல்லாம் தெரிந்தவர்களுக்கும் அறிவாளிகளுக்கும் அறிவுரை
சொல்லாமல், முட்டாள்களுக்கும் எதுவும் தெரியாதவர்களுக்கும்
அறிவுரை சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தி வந்த பெரியவர்
சந்திரன் நம்முடைய பாராட்டிற்கு உரியவராக இருக்கின்றார்.
இன்றைக்கு பலர் "எல்லாம் தெரிந்தவர்களுக்கும்"
"அறிவாளிகளுக்கும்" அல்லது வெளிச்சத்தில் இருப்பவர்களுக்கு
மட்டுமே மீண்டும் மீண்டும் அறிவுரை சொல்லி, அவர்களை நல்வழிப்
படுத்துகின்ற ஒரு நிலை இருக்கின்றது. இப்படிப்பட்ட நிலையில்
இருட்டில் இருப்பவர்களுக்கு அறிவுரை சொல்லி, அவர்களை
நல்வழிப்படுத்துகின்ற பெரியவர் சந்திரன் உண்மையில் நம்முடைய
கவனத்திற்கு உரியவராக இருக்கின்றார்.
இன்றைய முதல் வாசககத்தில் புனித பவுல், கிறிஸ்துவின் பெயரைக்
கேள்விப்படாத அல்லது "இருளில் இருந்த" மக்களுக்கு மட்டும்
நற்செய்தி அறிவிப்பதே என்னுடைய நோக்கமாக இருந்தது"
என்கின்றார். புனித பவுல் கூறுகின்ற இவ்வார்த்தைகள் நமக்கு
என்ன செய்தியைத் தருகின்றது என்பதை இப்பொழுது சிந்தித்துப்
பார்ப்போம்.
எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துகொள்ளவும்
விரும்பிய இறைவன்
புனித பவுல் திமொத்தேயுக்கு எழுதிய முதல் திருமுகத்தில்
இவ்வாறு கூறுவார்: "எல்லா மனிதரும் மீட்பு பெறவும் உண்மையை
அறிந்துணரவும் வேண்டுமென கடவுள் விரும்புகின்றார்." (1 திமொ 2:
4) ஆம், கடவுளின் திருவுளம் யாரும் அழிந்துபோகாமல், எல்லா
மனிதரும் மீட்புப்பெறவேண்டும்; உண்மையை அறிந்துகொள்ளவேண்டும்
என்பதுதான். அதற்காகத்தான் அவர் பவுலை, புறவினத்து மக்கள்
கிறிஸ்துவை அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்
தேர்ந்தெடுத்தார் (திப 9). பவுல் கடவுளின் அழைப்பை
உணர்ந்தவராய் கிறிஸ்துவைப் பற்றி அறியாத புறவினத்து மக்களுக்கு
நற்செய்தி அறிவிக்கத் தொடங்கினார்.
கிறிஸ்துவைப் பற்றிக் கேள்விப்படாத மக்களுக்கு நற்செய்தி
அறிவித்த பவுல்
கடவுளின் திருவுளம், எல்லா மனிதரும் மீட்புப்பெறவேண்டும்
உண்மையை அறிந்துகொள்ளவேண்டும் என்பதை உணர்ந்த பவுல், அதற்காக
தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தார்; பல்வேறு விதமான
துன்பங்களை அனுபவித்து ( 2 கொரி 11: 26-27) அவர்களுக்கு
நற்செய்தியை அறிவித்தார். இவற்றையெல்லாம் அவர் கடவுளின்
ஆற்றலைக் கொண்டு, கடவுளின் திருப்பெயர் விளங்குவதற்காக
செய்தார் (கொலோ 1: 18) என்று சொல்லவேண்டும் இவ்வாறு அவர்
கிறிஸ்துவைப் பற்றி அறியாத புறவினத்து மக்கள், கிறிஸ்துவைக்
குறித்து அறிவதற்குக் காரணமாக இருந்தார்.
புனித பவுல் தன்னுடைய பணிவாழ்வின் மூலம் நமக்குச் சொல்கின்ற
செய்தி ஒன்றே ஒன்றுதான்: அதுதான் நாம் கிறிஸ்துவை குறித்து,
அவரைப் பற்றி அறியாத மக்களுக்கு எடுத்துரைக்கவேண்டும்
என்பதாகும். நாம் கிறிஸ்துவைக் குறித்து அவரைப் பற்றி அறியாத
மக்களுக்கு எடுத்துச் சொல்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
"உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப்
பறைசாற்றுங்கள்" (மாற் 16:15) என்பார் இயேசு. ஆகையால், நாம்
இயேசுவின் இந்த அன்புக் கட்டளைக்குப் பணிந்து, புனித பவுலைப்
போன்று எல்லா மக்களுக்கும் அதிலும் குறிப்பாக, அவரைப் பற்றி
அறியாத மக்களுக்கு அவரைப் பற்றி எடுத்துரைப்போம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
லூக்கா 16: 1-8
கடவுள் பார்த்துக்கொண்டிருக்கின்றார்; அவர்க்குக் கணக்குக்
கொடுக்கவேண்டும்
நிகழ்வு
ஓர் ஊரில் மிக அருமையாக வண்ணம் பூசுகின்ற குழு ஒன்று இருந்தது.
அந்தக் குழுவிடம் நகரில் இருந்த ஒரு திருக்கோயிலுக்கு வண்ணம்
பூசுகின்ற பொறுப்பானது கொடுக்கப்பட்டது. அந்தக் குழுவும்
கொடுப்பட்ட பொறுப்பினை ஏற்றுக்கொண்டு திருக்கோயிலுக்கு வண்ணம்
பூசத் தொடங்கியது. திங்கட்கிழமை காலையில் வண்ணம்பூசத் தொடங்கிய
அந்தக் குழு மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும்
திருக்கோயிலுக்கு வண்ணம் பூசிக்கொண்டு வந்தது. சனிக்கிழமை
மாலையில் ஏறக்குறைய எல்லா இடத்திலும் வண்ணம்
பூசிமுடித்திருந்தது; கோபுரத்தின் உச்சியில் இருந்த சிறிது
இடத்தில் மட்டும் வண்ணம் பூசப்படாமல் இருந்தது. அதற்குள்
இருட்டிவிட்டது.
அப்பொழுது அந்தக் குழுவில் இருந்த ஒரு பணியாளர் குழுவின்
தலைவரைப் பார்த்து, "ஏறக்குறைய எல்லா இடத்திலும் வண்ணம்
பூசிமுடித்துவிட்டோம்; இந்த ஓரிடத்தில் மட்டும்தான் வண்ணம்
பூசாமல் இருக்கின்றது. இதுகூட கீழிலிருந்து பார்க்கின்ற
யாருக்கும் தெரியாது. அதனால் வீட்டுக்குக் கிளம்பலாமா...?"
என்றார். அதற்கு அந்த வண்ணம் பூசுகின்ற குழுவின் தலைவர்
அவரிடம், "மனிதர்கள் பார்க்கின்றார்களோ இல்லையோ...? கடவுள்
நாம் செய்கின்ற ஒவ்வொன்றையும் பார்த்துக்கொண்டே இருக்கின்றார்.
அதனால் நாம் நம்மிடம் கொடுக்கப்பட்டிருக்கின்ற இந்தப்
பொறுப்பினை நல்லமுறையில் முடித்துக் கொடுத்துவிட்டுப் போவோம்"
என்றார். இதற்குப் பின்பு அந்தப் பணியாளரும் அவரோடு பணிசெய்த
ஏனையோரும் மீதிமிருந்த பகுதியில் வண்ணம் பூசிமுடித்துவிட்டு
தங்களுடைய வீட்டிற்குச் சென்றார்கள்.
கடவுள் நம் ஒவ்வொருவரையும் பார்த்துக்கொண்டிருக்கின்றார்;
அவர்க்கு நாம் ஒருநாள் கணக்குக் கொடுக்கவேண்டும் என்ற உண்மையை
எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு சொல்கின்ற முன்மதியோடு
செயல்பட்ட அதேநேரத்தில் நேர்மையின்றி செயல்பட்ட வீட்டுப்
பொறுப்பாளரைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசு சொல்லும் இந்த
நிகழ்வின் வழியாக நாம் கற்றுக்கொள்ளவேண்டியை என்ன என்பது பற்றி
இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
நம்மிடம் கொடுக்கப்பட்டுள்ள உடைமைகட்கு நாம் கணக்குக்
கொடுக்கவேண்டும்
இயேசு சொல்லும் உவமையில் வருகின்ற வீட்டுப் பொறுப்பாளர்
முன்மதியோடு செயல்பட்டது ஒருபக்கம் இருந்தாலும். அவர் வீட்டுப்
பொறுப்பாளர்க்குரிய கடமையிலிருந்து தவறியவர் என்பதை இங்கு நாம்
நினைவுகூர்வது நல்லது. அவருடைய தலைவர் அவரை நம்பி வீட்டுப்
பொறுப்பை ஒப்படைத்திருக்கின்றார் என்றால், அவர் அந்த வீட்டில்
இருந்த உடைமைகட்கும் யாவற்றுக்கும் நம்பிக்கைக்குரியவராக
இருந்திருக்கவேண்டும் (1 கொரி 4:2). ஆனால், அவர் தன்னிடம்
ஒப்படைக்கப்பட்ட பொறுப்பில் நம்பிக்கைக்குரியவராக இல்லாமல்
இருக்கின்றார். இது மிகப்பெரிய குற்றமல்லவா!
உவமையில் வருகின்ற வீட்டுப் பொறுப்பாளரைப் போன்று கடவுள்
நம்மிடமும் செல்வங்களையும் உடைமைகளையும்
ஒப்படைத்திருக்கின்றார் (இச 8:18) இவற்றுக்கு நாம்
நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கின்றோமா? சிந்திப்போம்.
நம்மிடம் கொடுக்கப்பட்டுள்ள நேரத்திற்கு/காலத்திற்கு நாம்
கணக்குக் கொடுக்கவேண்டும்
கடவுள் நம்மிடம் உடைமைகளையும் செல்வங்களையும் மட்டுமல்ல,
நேரத்தையும் அல்லது காலத்தையும் கொடுத்திருக்கின்றார் (எபே
5:16). அதை நாம் சரியான முறையில் பயன்படுத்துகின்றோமா...?
சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் நமக்குக்
கடவுள் கொடுத்திருக்கின்ற நேரத்தை, இந்த வாழ்க்கையை எப்படிப்
பயன்படுத்தவேண்டும் என்று தெரியாமலேயே இருக்கின்றோம்.
இந்நிலையில் புனித பவுல் கூறுவதுபோன்று காலத்தை முற்றிலும்
நல்லமுறையில் பயன்படுத்த முயற்சி செய்வோம்.
நம்மிடம் கொடுக்கப்பட்டுள்ள நற்செய்திக்கு நாம் கணக்குக்
கொடுக்கவேண்டும்
கடவுள் நம்மிடம் செல்வத்தையும் நேரத்தையும் மட்டுமல்ல,
உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்
(மாற் 16:15) என்ற நற்செய்தியை அறிவிக்கின்ற பொறுப்பினையும்
தந்திருக்கின்றார் (1திமொ 6:20). இதனை நாம் சரியாகச் செய்து,
இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கின்றோமா? என்று சிந்தித்துப்
பார்க்கவேண்டும். புனித பவுல் நற்செய்தி அறிவிப்பதை தன்னிடம்
ஒப்படைக்கப்பட்ட கடமையாகவே (1 கொரி 9:16) உணர்ந்து
செயல்பட்டார். ஆகையால், நாம் ஒவ்வொருவரும் நற்செய்தி
அறிவிப்பதையும் இன்ன பிற பொறுப்புகளையும் நம்பிக்கைக்குரிய
வகையில் செய்து, ஆண்டவர்க்கு நல்லமுறையில் கணக்குக் கொடுக்க
முயற்சி செய்வோம். ஏனெனில் ஒருநாள் நாம் அனைவரும் கடவுளின்
நடுவர் இருக்கைக்கு முன்பாக நிறுத்தப்படுவோம் (உரோ 14: 10)
என்பது உறுதி.
சிந்தனை
"நீங்கள் கடவுளுடைய பல்வகை அருள்கொடைகளின் சீரிய
பொறுப்பாளர்கள். எனவே உங்களுள் ஒவ்வொருவரும் தாம்
பெற்றுக்கொண்ட அருள்கொடைகளைப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர்
பணிபுரியுங்கள் (1 பேது 4:10) என்பார் புனித பேதுரு. ஆகையால்,
கடவுள் நம்மிடம் கொடுத்திருக்கும் பொறுப்புகளை, கொடைகளை
நல்லமுறையில் பயன்படுத்தி இறைவனுக்குப் பெருமை சேர்ப்போம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
|
|