Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     07 நவம்பர் 2019  
                                    பொதுக்காலம் 31ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 வாழ்ந்தாலும் இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 14: 7-12

சகோதரர் சகோதரிகளே, நம்மிடையே எவரும் தமக்கென்று வாழ்வதில்லை; தமக்கென்று இறப்பதுமில்லை. வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம்; இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம்.

ஆகவே, வாழ்ந்தாலும் இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம். ஏனெனில், இறந்தோர்மீதும் வாழ்வோர்மீதும் ஆட்சி செலுத்தவே கிறிஸ்து இறந்தும் வாழ்கிறார்.

அப்படியிருக்க, நீங்கள் ஏன் உங்கள் சகோதரர் சகோதரிகளிடம் குற்றம் காண்கிறீர்கள்? ஏன் அவர்களை இழிவாகக் கருதுகிறீர்கள்? நாம் அனைவருமே கடவுளின் நடுவர் இருக்கை முன் நிறுத்தப்படுவோம் அல்லவா?

ஏனெனில், "ஆண்டவர் சொல்கிறார்: நான் என் மேல் ஆணையிட்டுள்ளேன்; முழங்கால் அனைத்தும் எனக்கு முன் மண்டியிடும், நாவு அனைத்தும் என்னைப் போற்றும" என்று மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ! ஆகவே, நம்முள் ஒவ்வொருவரும் தம்மைக் குறித்தே கடவுளுக்குக் கணக்குக் கொடுப்பர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 27: 1. 4. 13-14 (பல்லவி: 13) Mp3
=================================================================================
பல்லவி: வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன்.

1 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? பல்லவி

4 நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். பல்லவி

13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். 14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 11: 28

அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-10


அக்காலத்தில் வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர்.

பரிசேயரும் மறைநூல் அறிஞரும், "இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே" என்று முணுமுணுத்தனர்.

அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: "உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற்போனதைக் கண்டுபிடிக்கும்வரை தேடிச் செல்ல மாட்டாரா?

கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, `என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்' என்பார்.

அது போலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணாமற்போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா?

கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, `என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்' என்பார்.

அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
முதல் வாசகம்

வாழ்ந்தாலும் இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 14: 7-12

"நாம் அனைவரும் கடவுளின் நடுவர் இருக்கை முன் நிறுத்தப்படுவோம்"

நிகழ்வு

கிறிஸ்தவம் வேகமாகப் பரவிவந்த தொடக்கக் காலக்கட்டத்தில் ஸ்மிர்நாவின் (Smyrna) ஆயராக இருந்து, ஆண்டவர் இயேசுவைப் பற்றி வல்லமையோடு சான்று பகர்ந்து வந்தவர், புனித போலிகார்ப். இவர் ஆண்டவர் இயேசுவுக்குச் சான்றுபகர்ந்து வந்தது உரோமை அரசாங்திற்குத் தெரிய வந்தது. அதனால் இவர் அதிகாரிகளால் உரோமை அரசருக்கு முன்பாக இழுத்துச் செல்லப்பட்டார்.

"கிறிஸ்துவை மறுதலி; உன்னை உயிரோடு விட்டுவிடுகின்றேன்" என்றது போலிகார்ப்பைப் பார்த்துச் சொன்னார் உரோமை அரசர். அதற்கு போலிகார்ப் அவரிடம்,"எண்பத்து ஆறு ஆண்டுகளாக என் இயேசுவுக்குப் பணி நான் பணிசெய்து வருகின்றேன். இதுவரைக்கும் அவர் எனக்கு எந்தவொரு கெடுதலும் செய்யவில்லை; நன்மையை மட்டுமே செய்திருக்கின்றார். அப்படிப்பட்டவரை நான் எப்படி மறுதலிக்க முடியும்?" என்றார்.

உடனே உரோமை அரசர் அவரிடம்,"நீ மட்டும் கிறிஸ்துவை மறுதலிக்கவில்லை என்றால், உன்னை நெருப்பில் தூக்கி வீசுவேன்" என்று மிரட்டினார். போலிகார்ப் அதற்குச் சிறிதும் அஞ்சாமல்,"அரசே! ஒருமணி நேரம் எரிந்து, பின் அணைந்து போகும் நெருப்பைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கின்றீர்கள்...இறுதிநாளில் எல்லாரும் என்றுமுள்ள அரசராம் ஆண்டவருக்கு முன்பாக நிறுத்தப்படுவோம்... அப்பொழுது யாரெல்லாம் ஆண்டவரை மறுத்து, அவருக்கு எதிராகச் செயல்பட்டாரோ, அவர்கள் அணையா நெருப்பில் தூக்கி வீசப்படுவார்கள். அது குறித்து நீங்கள் அறியாமல் இருக்கிறீர்கள்" என்றார்.

போலிகார்ப் தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருப்பதைப் பார்த்து, கடும் சீற்றமடைந்த உரோமை அரசர் அவரைத் தீயில் தள்ளிக் கொன்றுபோட்டார்.

இந்த நிகழ்வில் போலிகார்ப் உரோமை அரசரிடம் சொல்லக்கூடிய, 'இறுதிநாளில் எல்லாரும் என்றுமுள்ள அரசராம் ஆண்டவருக்கு முன்பாக நிறுத்தப்படுவோம். அப்பொழுது யாரெல்லாம் அவருக்கு எதிராகச் செயல்பட்டார்களோ, அவர்கள் அணையா நெருப்பில் தூக்கி வீசப்படுவார்கள்' என்ற வார்த்தைகள் நம்முடைய சிந்தனைக்குரியவையாக இருக்கின்றன. இன்றைய முதல் வாசகமும் நாம் அனைவரும் கடவுளின் நடுவர் இருக்கை முன் நிறுத்தப்படுவோம் என்ற செய்தியைத் தாங்கி வருவதாக இருக்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

நாம் அனைவரும் ஆண்டவருக்கு உரியவர்கள்

இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல்,"நாம் அனைவரும் கடவுள் இருக்கை முன் நிறுத்துப்படுவோம்" என்று கூறுகின்றார். இவ்வார்த்தைகளை, இதன் பொருளை நன்கு புரிந்துகொள்வதற்கு, இதற்கு முன்பு வருகின்ற வார்த்தைகளின் பொருளை அறிந்துகொண்டால் நன்றாக இருக்கும்.

இதற்கு முந்தைய பகுதியில் புனித பவுல், நாம் அனைவரும் ஆண்டவருக்கு உரியவர்கள் என்று கூறுவார். நாம் ஆண்டவருக்கு உரியவர்கள் என்றால், நம்முடைய சொந்த விரும்பு வெறுப்புகளுக்கு ஏற்ப வாழாமல், ஆண்டவரின் விருப்பத்திற்கு ஏற்ப வாழவேண்டும். எடுத்துக்காட்டிற்கு ஒரு தலைவரிடம் ஓர் அடிமை பணிசெய்து வருகின்றார் என்றால், தன்னுடைய தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ப வாழாமல், தன்னுடைய தலைவருடைய விரும்பம் என்னதென்று அறிந்து, அதற்கேற்றாற்போல் வாழவேண்டும். அதுபோன்றுதான் நாமும் நம் தலைவரும் ஆண்டவருமானவரின் விருப்பதற்கு ஏற்ப, ஏன் அவருக்காகவே வாழவேண்டும். அதுதான் நமக்கு அழகு

பிறரைத் தீர்ப்பிடுவதோ, இழிவாக நடத்துவதோ கூடாது

நாம் அனைவரும் ஆண்டவருக்கு உரியவர்கள் என்றால், அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப வாழவேண்டும் என்று சிந்தித்துப் பார்த்தோம். அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப, அவருக்காக வாழவேண்டும் என்றால், அடுத்தவரைத் தீர்ப்பிடுவதோ, இழிவாக நடத்துவதோ கூடவே கூடாது. உரோமையர்களிடம் இருந்த வலியவர்கள் வறியவர்களை இழிவாக நடத்திக்கொண்டிருந்தார்கள். அதே நேரத்தில் வறியவர்களோ வலியவர்களைத் தீர்ப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இத்தகைய போக்கு அவர்களிடம் தொடர்ந்து நடைபெற்று வந்ததால்தான், புனித பவுல் அவர்களிடம், நீங்கள் யாரையும் தீர்ப்பிட்டுக்கொண்டோ, இழிவாக நடத்திக்கொண்டோ இருக்காதீர்கள். ஏனெனில் நாம் அனைவரும் கடவுளின் நடுவர் இருக்கை முன் நிறுத்தப்படுவோம் என்று கூறுகின்றார்.

ஆம், நாம் அனைவரும் கடவுளின் நடுவர் இருக்கை முன் நிறுத்தப்படுவோம். அப்பொழுது நம் ஒவ்வொருவருடைய செயல்களுக்கு ஏற்ப அவர் நமக்குத் தீர்ப்பளிப்பார். அதனால்தான், நீங்கள் யாரையும் தீர்ப்பிடாதீர்கள்; இழிவாக நடத்தீர்கள் என்று புனித பவுல் கூறுகின்றார். நாம் பிறரைத் தீர்ப்பிடக் கூடாது. மாறாக அவர்களை நம்மை விட உயர்வாக நினைக்கவேண்டும் (உரோ 12:10) என்பதையும் புனித பவுல் கூறுகின்றார். ஆகையால், நாம் இறுதிநாளில் கடவுளின் நடுவர் இருக்கைக்கு முன் நிறுத்தப்படுவோம் என்ற உண்மையை உணர்ந்தவர்களாய், பிறரைத் தீர்ப்பிடாமலும் இழிவாக நடத்தாமலும் ஆண்டவருக்கு உரியவர்கள் என்ற மனப்பான்மையோடு அவருக்கு உகந்த வாழ்க்கை வாழ முயற்சி செய்வோம்.

சிந்தனை

'பிறருக்கு எதிராகத் தீர்ப்பளிக்கும்போது நீங்கள் உங்களுக்கே தண்டனைத் தீர்ப்பை அளிக்கிறீர்கள்' (உரோ 2:1) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் கடவுளே நீதியுள்ள நடுவர் என்பதையும் அவர் ஒவ்வொருவருக்கும் அவருடைய செயல்களுக்கு ஏற்பத் தீர்ப்பு வழங்குவார் என்பதையும் உணர்ந்தவர்களாய், யாரையும் தீர்ப்பிடாமலும் இழிவாக நடத்தாமலும் இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
லூக்கா 15: 1-10

பாவிகளைத் தம்மிடம் நெருங்கி வரச் செய்த இயேசு

நிகழ்வு

அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தன்னுடைய வீட்டிற்கு மிக அருகில் இருந்த கோயிலில் நடைபெற்று வந்த ஞாயிறு மறைக்கல்வி வகுப்பிற்குச் செல்லாமல், சற்றுத் தொலையில் இருந்த ஒரு கோயிலில் நடைபெற்று வந்த மறைகல்வி வகுப்பிற்குச் சென்று வந்தான்.

இதைக் கூர்ந்து கவனித்து வந்த, அந்தச் சிறுவனுக்கு மிகவும் அறிமுகமான ஒருவர்,"நீ ஏன் உன்னுடைய வீட்டிற்கு மிக அருகில் இருக்கின்ற கோயிலில் நடைபெறும் ஞாயிறு மறைக்கல்வி வகுப்பிற்குச் செல்லாமல், எங்கோ இருக்கின்ற கோயிலில் நடைபெறுகின்ற ஞாயிறு மறைக்கல்வி வகுப்பிற்குச் செல்கின்றாய்...?" என்று கேட்டார். சிறுவன் ஒருநொடி அமைதியாக இருந்துவிட்டு சொன்னான்;"அங்கு ஞாயிறு மறைக்கல்வி நடத்துகின்றவர் என்னை மிகவும் அன்புசெய்கின்றார். அதனால்தான் நான் சிரமம் பார்க்காமல் அங்கு நடைபெறும் ஞாயிறு மறைக்கல்வி வகுப்பிற்குச் செல்கிறேன்."

சிறுவன் சொன்ன அந்த ஞாயிறு மறைக்கல்வி ஆசிரியர் வேறு யாருமல்ல, புகழ்பெற்ற மறைப்பணியாளரான டி.எல்.மூடி (D.L.Moody) என்பவரே ஆவார். டி.எல்.மூடி தன்னிடம் வந்த எல்லாரையும் மிகவும் அன்புசெய்தார். அதனால்தான் அவர் நடத்திய ஞாயிறு மறைக்கல்வி வகுப்பிற்கும் வழிபாட்டிற்கும் மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்றார்கள்.

இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்வதைக் கேட்க வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் அவரை நெருங்கிச் சென்றனர் என்று வாசிக்கின்றோம். இதற்குக் காரணமென்ன...? இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியை என்ன...? என்பவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

பாவிகளை அன்புசெய்த இயேசு

இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்வதைக் கேட்க வரிதண்டுவோரும் பாவிகளும் அவரை நெருங்கி வந்ததாக வாசிக்கின்றோம். இன்றைய நற்செய்தியில் மட்டுமல்லாது, நற்செய்தியின் பல இடங்களில் இதுபோன்ற செய்தியினை வாசிக்கின்றோம். இதற்கு முக்கியமான காரணம், அவர் பாவிகளை மிகவும் அன்புசெய்தார் என்பதுதான்.

இயேசு பாவங்களை வெறுத்தார். ஆனால், பாவிகளை மிகவும் அன்பு செய்தார். இயேசு பாவிகளை அன்பு செய்ததால்தான் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் (மத் 9:13) என்றும் இழந்துபோனதைத் தேடிமீட்கவே மானிடமகன் வந்திருக்கின்றார் (லூக் 19:10) என்றும் கூறினார். இவ்வாறு கூறியதோடு மட்டுமல்லாமல், அவர் அவர்களை அதிகமாக செய்தார். இன்னுமோர் உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், இந்த உலகில் பிறந்த யாரும் பாவிகள்தான். இயேசுவின் காலத்தில் வாழ்ந்துவந்த பரிசேயக் கூட்டத்திற்கு இந்த உண்மை புரியவில்லை. அதனால்தான் அந்தக் கூட்டம் தன்னை நேர்மையானது என நினைத்துக்கொண்டு, இயேசு அளிக்கவந்த மீட்பினைப் பெற்றுக்கொள்ளாமலே போனது.

இயேசு பாவிகளை மிகவும் அன்பு செய்ததாலும் அவர்களைத் தேடிச் சென்றதாலும்தான், அவர்கள் அவரைத் தேடி வந்தார்கள்; அவருடைய போதனையை, அவர் சொல்வதைக் கேட்க, அவரை நெருக்கி வந்தார்கள். இது மறுக்க முடியாத உண்மை.

பாவிகளை வெறுத்த பரிசேயர்கள்

இயேசு பாவிகளை அன்பு செய்தது ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் பரிசேயர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் பாவிகளை வெறுத்து வந்தார்கள். இதற்கொரு நல்ல எடுத்துக்காட்டுதான் இயேசு சொல்கின்ற பரிசேயர் வரிதண்டுபவர் உவமை (லூக் 18: 9-14) இவ்வுவமையில் வருகின்ற பரிசேயர், தன்னோடு வேண்டுகின்ற வரிதண்டுபவரை மிகவும் வெறுக்கின்றார்; அவரைக் குறித்துக் கடுமையான வார்த்தைகளை உதிர்க்கின்றார்.

இயேசு இங்கு உவமையாகச் சொன்னது நடைமுறையிலும் பிரதிபலித்தது. பரிசேயர்கள் தங்களை ஒழுக்கசீலர்கள், நேர்மையாளர்கள் என்று எண்ணினார்கள். மறுபக்கம் பாவிகளை இழிவாகக் கருதி அவர்களை வெறுத்து ஒதுக்கினார்கள். இதனால்தான் பாவிகளும் வரிதண்டுபவர்களும் விளிம்புநிலையில் இருந்தவர்களும் தங்களை வெறுத்து ஒதுக்கிய பரிசேயர்களிடம் செல்லாமல், தங்களை அப்படியே ஏற்றுக்கொண்டு அன்புசெய்த இயேசுவிடம் சென்றார்கள்.

இவர்களில் நாம் யார்?

இயேசு பாவிகளை அன்பு செய்ததையும் பரிசேயர்கள் பாவிகளை வெறுத்தததையும் சிந்தித்துப் பார்த்த நாம், இவர்களில் நாம் யாராக இருக்கின்றோம் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பலநேரங்களில் பாவிகளையும் குற்றம் செய்தோரையும் வெறுத்து ஒதுக்கின்ற போக்குதான் நம் நடுவில் நிலவிக் கொண்டிருக்கின்றது. அசிசி நகரப் பிரான்சிஸின் தோள்மேல் பறவைகள் வந்து அமருமாம்; கொடிய விலங்குகள் அவர்க்கு வழிவிடுமாம்! அவருடைய உள்ளத்தில் உண்மையான அன்பு இருந்ததால்தான் இதெல்லாம் நடந்தன. நாமும் பாவிகள் மட்டில் உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டு வாழக் கற்றுக்கொள்வோம். அப்பொழுது அவர்கள் நம்மை நெருங்கி வருவார்கள்.

சிந்தனை

'உண்மையில் நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்' (ஒசே 6:6). என்பார் ஆண்டவர். ஆகையால், ஆண்டவரைப் போன்று இரக்கத்தை விரும்புகின்றவர்களாகவும் இரக்கமுடையவர்களாகவும் இருந்து, பாவிகளை அன்போடு ஏற்று அரவணைப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
லூக்கா 15: 1-10

 மனமாற்றத்தால் உண்டாடும் மகிழ்ச்சி

கேரள மாநிலத்தில் பைனாவு என்ற இடத்தில் உள்ளது அரசு மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி. இதிலே பணியாற்றியவர் மீனாட்சி குட்டி என்ற ஆசிரியை.

ஒருமுறை மாணவர்கள் மாநிலஅளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு பெற்ற பரிசுத்தொகையை தன்னுடைய அறையில் வைத்திருக்க, அது களவுபோனது கண்டுபிடிக்கப்பட்டது."பணத்தை எடுத்தவர் அதை திருப்பி ஒப்படைக்குமாறு அறிவிப்பு விடப்பட்டது. ஆனால் எடுத்தவர் பணத்தை திருப்பி ஒப்படைப்பதாக இல்லை.

இதனால் விரக்தியடைந்த ஆசிரியை கையில் ஒரு பிரம்பை எடுத்துக்கொண்டு, பள்ளியின் மைதானத்திற்கு வந்தார். பிரம்பால் தன்னையோ அடித்துக்கொண்டு உடலை வருத்திக்கொண்டார். இதனைப் பார்த்த அங்கே இருந்த மற்ற ஆசிரியர்கள் அவரைத் தடுத்துப் பார்த்தார்கள். ஆனால் அவரோ அதை விடுவதாய் இல்லை. காலையில் தொடங்கியது மதியம் வரைக்கும் அது நீண்டுகொண்டே சென்றது.

அந்த ஆசிரியை மயங்கிக் கீழேவிழக்கூடிய தருணம். ஒரு மாணவன் ஓடோடிச் சென்று, அந்த ஆசிரியையின் காலில்விழுந்து,"நான்தான் அந்தப் பணத்தைத் திருடினேன், என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்" என்று கண்ணீர்விட்டு அழுதான். சிறுது நேரத்தில் அவனோடு சேர்ந்து பள்ளிக்கூடமே கண்ணீர்விட்டு அழுதது.

தன் தவறை உணர்ந்து, மன்னிப்புக் கேட்ட அந்த மாணவனை ஆசிரியை மனதார மன்னித்தார். அதனால் அந்தப் பள்ளிக்கூடத்திற்கு மீண்டும் மகிழ்ச்சி திரும்பியது.

தவறு செய்தவர் மனம்மாறவேண்டும், அப்படி மனமாறி வருகின்றபோது அதனால் உண்டாடும் மகிழ்ச்சி அளப்பெரியது என்பதை இக்கதையானது நமக்கு எடுத்துக் கூறுகிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு காணமல்போன ஆடு மற்றும் காணாமல்போன திராக்மா உவமைகளைக் குறித்துப் பேசுகின்றார். இந்த இரண்டு உவமைகளிலும் காணாமல்போன ஆடும், திராக்மாவும் திரும்பக் கிடைக்கின்றபோது அதனால் அந்த உரிமையாளர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இதைப் போன்றுதான் மனம்மாறி கடவுளிடம் திரும்பி வரும் ஒருவரால் விண்ணகத் தூதரணியிடம் பெருமகிழ்ச்சி உண்டாகும் என்கிறார் இயேசு. கடவுளை மறந்து, தன்னுடைய மனம்போன போக்கில் சென்றுகொண்டிருக்கும் ஒவ்வொருவரே அவரது அன்பை உணர்ந்து, அவரிடம் திரும்பி வரவேண்டும் என்றுதான் இறைவார்த்தை நமக்கு அழைப்புத் தருகின்றது.

ஆனால் பலநேரங்களில் இன்றைய நற்செய்தியில் வரும் பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்களைப் போன்று 'நான் நேர்மையாளன்', 'பாவமற்றவன்', 'என்னிடத்தில் என்ன தவறு இருக்கிறது?' 'நான் ஏன் மனம்மாறவேண்டும்?' என்ற மனநிலையில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

நீதிமொழிகள் புத்தகம் 24:16 ல் வாசிக்கின்றோம்,"நல்லவர் ஏழுமுறை விழுந்தாலும் எழுந்து நிற்பர்" என்று. இங்கே நல்லவரே ஏழுமுறை தவறு செய்கிறபோது சாதாரண மனிதர்களின் நிலையைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. எனவே ஒவ்வொரு மனிதரும் தன்னுடைய வாழ்க்கையை சுய ஆய்வு செய்துபார்த்து, தனது வாழ்க்கையைத் திருத்திக் கொள்ளவேண்டும்; இறைவனிடம் திரும்பி வரவேண்டும்.

சீராக் ஞானநூல் 17:25 ல் வாசிக்கின்றோம்,"ஆண்டவர் முன் திரும்பி வாருங்கள்; பாவங்களை விட்டு விலகுங்கள்; அவர் திருமுன் வேண்டுங்கள்; குற்றங்களைக் குறைத்துகொள்ளுங்கள்" என்று. ஆம், நாம் ஒவ்வொருவருமே நமது பாவங்கள், குற்றங்குறைகளை விட்டுவிட்டு ஆண்டவரிடம் திரும்பி வரவேண்டும் என்றுதான் அவர் விரும்புகிறார். தன்னை நேர்மையாளராக, குற்றமற்றவராக காட்டிகொள்வதை அவர் ஒருபோதும் விரும்புவதில்லை.

ஆதலால் குற்றங்கள் பல புரிந்து, ஆண்டவரை விட்டுப்பிரிந்து வெகுதொலைவில் வாழக்கூடிய நாம் அவரது மேலான அன்பை உணர்ந்து, அவரிடம் திரும்பி வருவோம். அப்படி வந்தால் அது நமக்கு மட்டுமல்ல, நம்மைச் சார்ந்தவர்களுக்கும், ஏன் விண்ணகத்தில் உள்ளவர்களுக்கும் கூட பெருமகிழ்ச்சியைத் தரும்.

எனவே மனமாற்றம் பெற்ற மக்களாய் வாழ்வோம். இறையருள் பெறுவோம்.
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!