|
|
06 நவம்பர்
2019 |
|
|
பொதுக்காலம்
31ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்
13: 8-10
சகோதரர் சகோதரிகளே, நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள்.
ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே
கடனாய் இருக்கட்டும். பிறரிடத்தில் அன்புகூர்பவர் திருச்சட்டத்தை
நிறைவேற்றுபவர் ஆவார்.
ஏனெனில், "விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே,
பிறருக்குரியதைக் கவர்ந்திட விரும்பாதே" என்னும் கட்டளைகளும்,
பிற கட்டளைகளும், "உன்மீது அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர்
மீதும் அன்புகூர்வாயாக" என்னும் கட்டளையில் அடங்கியுள்ளன.
அன்பு அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. ஆகவே அன்பே
திருச்சட்டத்தின் நிறைவு.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
- திபா 112: 1-2. 4-5. 9 (பல்லவி: 5a)
Mp3
=================================================================================
பல்லவி: மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர். அல்லது:
அல்லேலூயா.
1 ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில்
அவர்கள் பெருமகிழ்வு அடைவர். 2 அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய்
இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். பல்லவி
4 இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும்
இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர். 5 மனமிரங்கிக் கடன்
கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில்
நீதியுடன் செயல்படுவர். பல்லவி
9 அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி
என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன்
மேலோங்கும். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
01 பேது 04: 14
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவின் பொருட்டுப் பிறர் உங்கள்மீது
வசை கூறும்போது நீங்கள் பேறுபெற்றவர்கள். ஏனெனில், கடவுளின்
மாட்சிமிக்க தூய ஆவி உங்கள்மேல் தங்கும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க
முடியாது.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 25-33
அக்காலத்தில் பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர்.
அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது: "என்னிடம் வருபவர்
தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும்,
ஏன், தம் உயிரையுமே என்னை விட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க
முடியாது. தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச்
சீடராய் இருக்க முடியாது.
உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில்
உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான
பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்க மாட்டாரா? இல்லா
விட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல்
இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, `இம்மனிதன் கட்டத் தொடங்கினான்;
ஆனால் முடிக்க இயலவில்லை' என்பார்களே!
வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம்
பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க
முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க
மாட்டாரா? எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்
போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேடமாட்டாரா?
அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என்
சீடராய் இருக்க முடியாது."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
லூக்கா 14: 25-33
இயேசுவின் உண்மையான சீடராக வாழத் தயாரா?
நிகழ்வு
பிரான்ஸ் நாட்டிலுள்ள லயோன்ஸ் நகரச் சார்ந்த மிகப்பெரிய தொழிலதிபர்
பீட்டர் வால்டோ (Peter Waldo). இவர்க்கு ஒரு நண்பர் இருந்தார்;
அவர் குடியும் கூத்தும் கும்மாளமுமாக வாழ்ந்து வந்தார். ஒருநாள்
அவர் திடீரென்று இறந்துபோனார். நண்பருடைய திடீர் இறப்பினால் அதிர்ந்துபோன
பீட்டர் வால்டோ இந்த மண்ணுலக வாழ்வின் நிலையாமையை உணர்ந்தார்;
மட்டுமல்லாமல் தன்னுடைய வாழ்வைத் தன்னாய்வுக்கு உட்படுத்தி
பார்த்துவிட்டு, கிறிஸ்துவுக்காகத் தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்து,
அவருடைய நற்செய்தி எல்லா மக்கட்கும் எடுத்துச் சொல்வதுதான்
நிலையான மகிழ்ச்சியைத் தரும் என்பதை உணர்ந்தார்.
இதற்குப் பின்பு இவர் ஓரிரு ஆண்டுகள் விவிலியத்தை முறையாகக் கற்றுக்கொண்டு,
இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எங்கும் அறிவிக்கத் தொடங்கினார்.
இவர் மக்களிடம் அடிக்கடிப் போதிக்கக்கூடிய போதனை இதுதான்:
"நீங்கள் இயேசுவின் உண்மையான சீடராக இருக்கவேண்டும் என்றால்,
அவரை ஊற்றுநோக்குங்கள்; அவர் சொல்வதற்குச் செவிமடுங்கள்; அவரிடமிருந்து
கற்றுக்கொள்ளுங்கள். அப்படி நீங்கள் இயேசுவை உற்றுநோக்கி, அவர்க்குச்
செவிகொடுத்து, அவரிடமிருந்து கற்றுக்கொண்டு, அதன்படி
வாழ்ந்தீர்கள் என்றால், நீங்கள் இயேசுவின் உண்மையான சீடர்களாக
இருப்பீர்கள்."
இயேசுவின் சீடர்கள் எப்படியிருக்கவேண்டும் என்பதற்கு பீட்டர்
வால்டோ தன்னுடைய வாழ்க்கை அனுபவத்திலிருந்து சொல்லக்கூடிய
மூன்று முதன்மையான கருத்துகள் நம்முடைய சிந்தனைக்குரியவையாக இருக்கின்றன.
இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் உண்மையான சீடர் எப்படி இருக்கவேண்டும்
என்ற செய்தியைத் தருவதாக இருக்கின்றது. அது குறித்து இப்பொழுது
நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவுக்குக் முதன்மையான இடம் கொடுக்கவேண்டும்
நற்செய்தியில் இயேசு எருசலேம் நோக்கிச்
சென்றுகொண்டிருக்கின்றார்; அவர்க்குப் பின்னால் ஏராளமான மக்கள்
அவரைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றார்கள். இயேசுவுக்கு
நன்றாகவே தெரியும், தன்னைப் பின்தொடர்ந்து வருகின்றவர்களில்
பெரும்பாலானோர் ஆதாயத்திற்காகத்தான் வருகின்றார்கள் என்று. இத்தகைய
சூழ்நிலையில்தான் அவர் தன்னுடைய சீடர் எப்படி இருக்கவேண்டும்
என்பதற்கான விளக்கத்தினைத் தருகின்றார்.
இயேசு தன்னைப் பின்தொடர்ந்து வந்த மக்கள்கூட்டத்தைப் பார்த்து
முன்வைக்கின்ற முதன்மையான செய்தி, தன்னுடைய சீடர் மற்ற எல்லாரையும்விட
தனக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதாகும். ஆம், இயேசுவின்
சீடர் மற்ற எல்லாரையும்விட அவரை மேலாகக் கருதி, அவர்க்குத் தன்னுடைய
வாழ்வில் முதன்மையான இடம்கொடுக்கவேண்டும்; அவரை முதன்மையான அன்புசெய்யவேண்டும்
(மத் 10: 37) இல்லையென்றால் அவர் இயேசுவின் சீடராக இருக்கமுடியாது.
சிலுவையைச் சுமக்கவேண்டும்
இயேசு, தன்னுடைய சீடராக இருப்பவர்க்கு இருக்கவேண்டிய அடுத்த தகுதியாக
முன்வைப்பது, சிலுவை சுமப்பது. சிலுவை சுமப்பது என்றால், இயேசுவோடு
தன்னை ஒன்றிணைத்துக் கொள்வது (யோவா 12: 23-28) இதனை இன்னும்
தெளிவாகச் சொல்லவேண்டும் என்றால், இயேசுவின் பாடுகளிலும் துன்பங்களிலும்
அவமானங்களிலும் தன்னை இணைத்துக்கொள்வது. இயேசுவோடு நாம் அவருடைய
பாடுகளிலும் துன்பங்களிலும் ஒன்றிணைத்துக் கொள்ளவேண்டும் என்றால்,
நாம் நம்மை இழக்கத் தயாராகவேண்டும். நம்மை இழக்கத் தயாராக இல்லையென்றால்
நாம் இயேசுவின் சீடராக இருக்கமுடியாது.
சாரமுள்ளவர்களாக இருக்கவேண்டும்
இயேசு தன்னைப் பின்பற்றி வருகின்றவர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு
முன்வைக்கின்ற மூன்றாவது நிபந்தனை, உப்பைப் போன்று சாரமுள்ளவர்களாகவேண்டும்
என்பதாகும். இதனை இன்றைய நற்செய்தியைத் தொடர்ந்து வருகின்ற பகுதியோடு
இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால் புரிந்துவிடும்.
இன்றைய நற்செய்தியைத் தொடந்து வருகின்ற பகுதியில் (லூக் 14:
34-35) இயேசு, உப்பு உவர்ப்பற்றுப் போனால், அது வெளியே கொட்டப்பட்டு,
மனிதர்களால் மிதிபடும் என்று கூறுகின்றார். உப்பின் தன்னை உவர்ப்புடையதாக;
சாரமுள்ளதாக இருக்கவேண்டும். அப்படி இல்லையென்றால் அதனால் எந்ததொரு
பயனும் இல்லை. அதுபோன்றுதான் இயேசுவின் சீடர் சாரமுள்ளவராக, இயேசுவின்
விழுமியங்களின் படி வாழ்பவராக இருக்கவேண்டும். இல்லையென்றால்
அவர் இயேசுவின் சீடராக இருக்கமுடியாது.
நற்செய்தியில் இயேசு குறிப்பிடுகின்ற கோபுரம் கட்டுகிறவர், எதிரி
நாட்டோடு போருக்குச் செல்பவர், யாரைக் குறிக்கின்றது என்பதையும்
நாம் தெரிந்துகொள்ளவேண்டும். அது வேறு யாருமல்ல, இயேசுதான். எப்படியென்றால்,
ஒரு கோபுரம் கட்டுகின்றவர் எப்படி எல்லாவற்றையும் பார்த்துப்
பார்த்துக் கட்டுவாரோ அதுபோன்று இயேசுவும் தன்னுடைய திருஅவையை
என்ற கோபுரத்தைப் பார்த்துப் பார்ப்பதுக் கட்ட
விரும்புகின்றார். அப்படி அவர் கட்டும்போது அதற்குத் தகுந்தவர்கள்;
சாரமுள்ளவர்கள் இருப்பதுதானே நல்லது!
ஆகையால், நாம் இயேசுவின் உண்மையான சீடர்களாக வாழ அவர்க்கு முதன்மையான
இடம் தருகின்றவர்களாகவும் சிலுவையை சுமப்பவர்களாகவும் சாரமுள்ளவர்களாகவும்
வாழ முற்படுவோம்.
சிந்தனை
"நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்" (மத் 5:13) என்பார்
இயேசு. ஆகையால், நாம் சாரமுள்ளவர்களாய் இருந்து இயேசுவின் சீடர்களாய்
இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
லூக்கா 14: 25-33
இயேசுவின் உண்மையான சீடர்
தந்தை ஒருவர் தன்னுடைய அன்புமகனை ஒரு துறவியாக்க விரும்பினார்.
அதனால் அவ்வூரில் இருந்த புகழ்பெற்ற துறவியிடம் அனுப்பிவைத்தார்.
ஆறு ஆண்டுகளுக்கு மேல் ஓடியிருக்கும். அப்போது ஒருநாள் தந்தை
தன்னுடைய மகனின் துறவுநிலையை அறிந்துவர அவனுடைய அக்காவை அனுப்பிவைத்தார்.
துறவுமடத்திற்கு அவனுடைய அக்கா வந்திருக்கும் செய்தி அவனுக்குச்
சொல்லப்பட்டது. அதைக் கேள்விபட்டதும், அவன், "என்னுடைய அக்காவைத்
துறந்தேன்" என்று பதில்சொல்லி அனுப்பிவிட்டான். இதைக்கேட்ட தந்தை,
தன்னுடைய மகன் துறவுநிலையின் மேன்மையை அடைந்துகொண்டிருக்கிறான்
என்று பெருமைப்பட்டார்.
நாட்கள் சென்றன. ஒருசில மாதங்களுக்குப் பிறகு அவர் அவனுடைய அன்புத்தாயை
அனுப்பிவைத்தார். அவனுடைய தாய் அங்கே வந்திருக்கும் சேதி அவனிடம்
சொல்லப்பட்டது. அதைக் கேட்டதும் அவன், "என்னுடைய தாயைத் துறந்தேன்"
என்று சொல்லி, அவரை அங்கிருந்து அனுப்பிவைத்தான். இச்செய்தியைக்
கேள்விப்பட்ட அவனுடைய தந்தை இன்னும் மகிழ்ச்சியடைந்தான். தன்னுடைய
அன்புமகன் துறவுநிலையின் அதிமிகு உன்னத நிலையை அடைந்து
கொண்டிருக்கிறான் என்று மிகவும் சந்தோசப்பட்டார்.
இன்னும் ஒருசில மாதங்களுக்குப் பிறகு துறவுமடத்திற்கு அவனுடைய
அத்தை மகளை அனுப்பிவைத்தார். அத்தை மகள் துறவுமடத்திற்கு வந்திருக்கும்
செய்தி அவனிடம் சொல்லப்பட்டது. அதைக்கேட்டதும் அவன், "என்னுடைய
துறவுவாழ்க்கையே துறந்தேன்" என்று துள்ளிக்குதித்து வந்து அத்தை
மகளோடு வெளியேறினான்.
உண்மையான துறவுவாழ்க்கை என்பது எல்லா உறவுகளையும் துறப்பது என்பதை
இக்கற்பனைக் கதையானது நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய
சீடர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று போதிக்கின்றார். இயேசுவின்
சீடர்கள் தந்தை, தாய், பிள்ளைகள், சகோதர, சகோதரிகள், உடமைகள்
எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவை பின்தொடர்பவர்களாக இருக்கவேண்டும்.
காரணம் இயேசுவின் பணி அல்லது இறையட்சிப் பணி எனது எல்லா மக்களுக்கும்
பொதுவானது. குடும்பம், உறவுகள் என்று வாழ்வோரால் எப்படி பிறர்நலப்
பணிபுரியமுடியும் என்ற எண்ணத்தில்தான் இயேசு எல்லாரையும்
விட்டுவிட்டு துறந்துவிட்டு தன்னைப் பின்பற்றி வரவேண்டும்
என்று அறிவுறுத்துகிறார்.
இயேசு கிறிஸ்துகூட இப்படிப்பட்ட ஒரு பரந்துபட்ட
நோக்கத்தோடுதான் தன்னுடைய பணிவாழ்வைச் செய்தார். அதனால்தான்
தன்னுடைய தாயும், சகோதர, சகோதரிகளும் தன்னைப் பார்க்கவந்தபோது,
"யார் என்னுடைய தாய், யார் என்னுடைய சகோதர, சகோதரிகள்?" என்று
கேட்டுவிட்டு, "இறைவார்தையைக் கேட்டு, அதன்படி நடப்போரே
என்னுடைய தாயும், சகோதர, சகோதரிகளும்" என்கிறார். ஆக,
இயேசுவைப் பொறுத்தளவில் இறையாட்சிதான் முதன்மையான இடம்
வகித்தது. குடும்பம், உறவுகள் எல்லாம் அதற்குப் பின்னால்தான்.
விவேகானந்தர் கூறுவார், "தன்னலம் மறுத்துப் பொதுநலத்துக்காக
தொண்டு ஆற்றுபவர்கள்தான் உண்மையான துறவிகள். ஆம், யார் ஒருவர்
தன்னுடைய ஆசைகள், விருப்பங்கள் எல்லாவற்றையும் பொதுநலத்திற்காக
துறக்கிறார்களோ அவர்களே உண்மையான துறவிகள்.
இப்படி எல்லா உறவுகளையும் துறந்து, இயேசுவுக்காக,
இறையாட்சிக்காக வாழ்பவர்களுக்கு இறைவன் அளிக்கும் கைம்மாறு
மிகுதியாகும். மத்தேயு நற்செய்தி மத் 19:29 ல் வாசிக்கின்றோம்
"என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ,
தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட
எவரும் நூறு மடங்காகப் பெறுவார். நிலைவாழ்வையும்
உரிமைப்பேறாகப் பெறுவார்" என்று.
இயேசுவின் பணியைத் தொடர்பவற்கு அவர் அளிக்கும் கைம்மாறு
மிகுதியாகும். எனவே இயேசுவின் சீடர்களாக வாழ
அழைக்கப்பட்டிருக்கும் நாம் எல்லாவற்றையும் உலகு
சம்பந்தப்பட்ட காரியங்களை - விட்டுவிட்டு இறைவனை சிக்கெனப்
பற்றிக்கொள்வோம். இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
முதல் வாசகம்
அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்
13: 8-10
அன்பே திருச்சட்டத்தின் நிறைவு
நிகழ்வு
தென் அமெரிக்காவில் இருந்த குழந்தைகள் காப்பகம் அது. நன்றாக
இயங்கிக்கொண்டிருந்த அந்தக் குழந்தைகள் காப்பாகத்தில்
திடீரென்று ஒவ்வொரு குழந்தையாகச் சாகத் தொடங்கியது. தங்களோடு
இருந்த குழந்தைகள் செத்து மடிவதைக் கண்ட மற்ற குழந்தைகளுக்கு
எங்கே நாமும் அவர்களைப் போன்று இறந்துபோய்விடுவோமோ...!" என்ற
சாவு பயம் தொற்றிக்கொண்டது. இதனால் அந்தக் குழந்தைகள்
முன்புபோல் ஓடியாடி விளையாடாமலும் சரியாகச் சாப்பிடாமலும் உடல்
மெலிந்தும் அதனால் இறந்தும்போனார்கள்.
இதையெல்லாம் பார்த்துவிட்டு அந்தக் குழந்தைகள் காப்பாகத்தை நடத்தி
வந்தவர் அதிர்ந்துபோனார். இதற்கு நடுவில் இச்செய்தி அரசாங்கத்திற்குச்
சென்றது. அரசாங்கம் அங்கு என்ன நடக்கிறது என்பதை ஆய்வுசெய்வதற்காக
மருத்துவக் குழு ஒன்றை அனுப்பிவைத்தது.
குழந்தைகள் காப்பாகத்திற்கு வந்த அந்த மருத்துவக் குழு அங்கு
கொடுக்கப்படும் உணவு வகைகள், பேணப்படும் சுகாதாரம் என எல்லாவற்றையும்
ஆய்வுசெய்து பார்த்தது. எல்லாமும் மற்ற குழந்தைகள் காப்பகத்தில்
கொடுக்கப்படுவைகளிலிருந்து ஒருபடி உயர்ந்தே இருந்தன. இதனால் மருத்துவக்
குழு காரணம் புரியாமல் திகைத்தது. அப்பொழுது அந்த மருத்துவக்
குழுவில் இருந்த ஒருவர், அந்தக் குழந்தைகள் காப்பாகத்தில் பணியாற்றும்
பணியாளர்கள் அங்குள்ள குழந்தைகளைச் சரியாக அன்பு செய்வதில்லை
என்ற உண்மையை உணர்ந்தார். உடனே அவர் அதை தன்னுடைய குழுவில் இருந்த
மற்றவர்களிடம் மற்றவர்களிடம் சொன்னபோது, அவர்கள் அந்த குழந்தைகள்
காப்பாகத்தில் இருந்த பணியாளர்கள் அனைவரும் ஓரிடத்தில்
கூடுமாறு கேட்டுக்கொண்டார்கள்.
எல்லாரும் ஓரிடத்தில் கூடிவந்த பிறகு, அந்த மருத்துவக்
குழுவின் தலைவர் அவர்களோடு பேசத் தொடங்கினார்; இந்தக் குழந்தைகள்
காப்பாகத்தில் இருக்கின்ற குழந்தைகள் ஒவ்வொருவராகச் செத்து மடியக்
காரணம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா...? நீங்கள் இந்தக்
குழந்தைகளை சரியாக அன்புசெய்யவில்லை. அதுதான் காரணம். இனிமேலாவது
இந்தக் குழந்தைகள் முழுமையாய் அன்புசெய்யுங்கள்; அவர்களை உங்களுடைய
குழந்தைகளைப் போன்று பாவித்து அவர்களைத் தூக்கிக் கொஞ்சுங்கள்;
அன்புமழை பொழியுங்கள்.
மருத்துவக் குழுத் தலைவர் சொன்னதைக் கேட்டு, குழந்தைகள் காப்பாகத்திலிருந்த
பணியாளர்கள் யாவரும் அதுபோன்று செய்வோம் என்று வாக்குறுதி
கொடுத்து, தாங்கள் சொன்னதுபோன்றே காப்பாகத்தில் இருந்த எல்லாக்
குழந்தைகளையும் தங்களுடைய பிள்ளைகளைப் போன்று பாவித்து அன்புசெய்யத்
தொடங்கினார்கள். இதனால் அந்தக் குழந்தைகள் காப்பகமே ஆனந்தம்,
மகிழ்ச்சி பொங்கி வழியும் ஓர் இல்லமாக மாறியது.
ஆம், அன்பிருக்கும் இடத்தில் ஆனந்தம் இருக்கும்; மகிழ்ச்சி இருக்கும்;
எல்லாமும் இருக்கும். அத்தகைய அன்பு திருச்சட்டத்தின் நிறைவு
என்று புனித பவுல் கூறுகின்றார். அது எப்படி என்று இப்பொழுது
நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
எல்லாக் கட்டளைகளும் அன்புக் கட்டளையில் அடங்கிவிடுகின்றன
முதல் வாசகத்தில் புனித பவுல், உன்மீது அன்புகூர்வதுபோல், உனக்கு
அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக என்று ஆண்டவர் இயேசு
சொல்லும் அன்பு கட்டளையில் (யோவா 13: 34) அடக்கி விடுகின்றது
என்று கூறுகின்றார். அது எப்படியெனில், கடவுள் கொடுத்த பத்துக்
கட்டளைகளாக இருக்கட்டும், இன்னபிற கட்டளைகளாக இருக்கட்டும் இவையெல்லாம்
அன்பையே ஆதார சுருதியாகக் கொண்டிருந்தன. இன்னும் சொல்லப்போனால்,
ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்கின்றார் என்றால், அவர் மற்றவருக்குத்
தீமை செய்யமாட்டார். ஏனெனில் பவுல் சொல்வதுபோன்று அன்பு ஒருபோதும்
அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. அதனால்தான் பவுல் அன்புக்
கட்டளைகளில் எல்லாக் கட்டளைகளும் அடங்கிவிடுகின்ற என்று
கூறுகின்றார்.
அன்பே திருச்சட்டத்தின் நிறைவு
புனித பவுல் சொல்லக்கூடிய இன்னொரு முக்கியான செய்தி, அன்பே
திருச்சட்டத்தின் நிறைவு என்பதாகும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு,
திருச்சட்ட அறிஞர் கேட்ட, முதன்மையான கட்டளை எது? என்று
கேள்விக்குப் பதிலளிக்கும்போது, "...ஆண்டவரின் அன்பு செலுத்து;
...அடுத்திருப்பவர்மீது அன்புகூர்வாயாக" என்ற இரு கட்டளைகளிலும்தான்
திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் அடிப்படையாய்
அமைந்திருக்கின்றன என்று கூறுவார் (மத் 22: 36-40). இங்கு
புனித பவுல் இயேசு கூறியதை உள்வாங்கிக் கொண்டவராய் அன்பே
திருச்சட்டத்தின் நிறைவு என்று கூறுகின்றார். அப்படியானால் எவர்
ஒருவர் ஆண்டவரிடம் அன்பு கூர்ந்து, அடுத்திருப்பவரிடம்
கூறுகின்றாரோ, அவர் திருச்சட்டத்தை நிறைவேற்றுகின்றார் என்பது
உண்மையாகின்றது.
நாம், அன்புக்கட்டளையைக் கடைப்பிடித்து, திருச்சட்டத்தை
நிறைவேற்றுபவர்களாக இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
"அன்பு பூமிக்கு இன்னொரு சூரியன்" என்பர். ஆகையால், இன்னொரு
சூரியனாக இருக்கும் அன்பை நம்முடைய உள்ளத்தில் தாங்கிக்கொண்டு,
எல்லாரையும் அன்புசெய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். |
|