Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     05 நவம்பர் 2019  
                                    பொதுக்காலம் 31ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 ஒருவருக்கொருவர் உடனுறுப்புகளாய் இருக்கிறோம்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 12: 5-16a

சகோதரர் சகோதரிகளே, நாம் பலராய் இருந்தாலும் கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் ஒரே உடலாய் இருக்கிறோம்; ஒருவருக்கொருவர் உடனுறுப்புகளாய் இருக்கிறோம். ஆயினும், நமக்கு அளிக்கப்பட்டுள்ள அருளுக்கேற்ப வெவ்வேறு அருள்கொடைகளைப் பெற்றுள்ளோம்.

இறைவாக்கு உரைக்கும் கொடையை நாம் பெற்றிருந்தால் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு ஏற்றவாறு அதைப் பயன்படுத்த வேண்டும். தொண்டாற்றும் கொடையை நாம் பெற்றிருந்தால் அதைத் தொண்டு புரிவதற்குப் பயன்படுத்த வேண்டும். கற்றுக்கொடுப்போர் கற்றுக்கொடுப்பதிலும், ஊக்கமூட்டுவோர் ஊக்கம் தருவதிலும், தமக்குள்ளதை வழங்குவோர் தாராளமாய்க் கொடுப்பதிலும், தலைமை தாங்குவோர் முழு ஆர்வத்தோடு செயல்படுவதிலும், இரக்கச் செயல்களில் ஈடுபடுவோர் முக மலர்ச்சியோடு அவற்றைச் செய்வதிலும் தாம் பெற்ற அருள் கொடைகளைப் பயன்படுத்த வேண்டும்.

உங்கள் அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக! தீமையை வெறுத்து நன்மையையே பற்றிக்கொள்ளுங்கள். உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்; பிறர் உங்களை விட மதிப்புக்கு உரியவரென எண்ணுங்கள். விடாமுயற்சியோடும் ஆர்வம் மிக்க உள்ளத்தோடும் ஆண்டவருக்குப் பணிபுரியுங்கள். எதிர் நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்; துன்பத்தில் தளரா மனத்துடன் இருங்கள்; இறைவேண்டலில் நிலைத்திருங்கள். வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடம் உள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள்.

உங்களைத் துன்புறுத்துவோருக்கு ஆசி கூறுங்கள்; ஆம், ஆசி கூறுங்கள்; சபிக்க வேண்டாம். மகிழ்வாரோடு மகிழுங்கள்; அழுவாரோடு அழுங்கள். நீங்கள் ஒரு மனத்தவராய் இருங்கள்; உயர்வு மனப்பான்மை கொள்ளாமல் தாழ்நிலையில் உள்ளவர்களோடு நன்கு பழகுங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 131: 1. 2. 3  - Mp3
=================================================================================
* பல்லவி: என் நெஞ்சம் அமைதிபெற உம் திருமுன் வைத்துக் காத்தருளும்.*

1 ஆண்டவரே! என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை! என் பார்வையில் செருக்கு இல்லை; எனக்கு மிஞ்சின அரிய, பெரிய, செயல்களில் நான் ஈடுபடுவதில்லை. பல்லவி

2 மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது; தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது. பல்லவி

3 இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும் ஆண்டவரையே நம்பியிரு! பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 11: 28

அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
எனது வீடு நிரம்பும் அளவுக்கு மக்களை வற்புறுத்திக் கூட்டி வாரும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 15-24


அக்காலத்தில் இயேசுவோடு பந்தியில் அமர்ந்தவர்களுள் ஒருவர் இயேசுவிடம், "இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்" என்றார்.

இயேசு அவரிடம் கூறியது: "ஒருவர் பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து பலரை அழைத்தார். விருந்து நேரம் வரவே அவர் அழைப்புப் பெற்றவர்களிடம் தம் பணியாளரை அனுப்பி, "வாருங்கள், எல்லாம் ஏற்கெனவே ஏற்பாடு செய்தாகிவிட்டது' என்று சொன்னார்.

அவர்கள் எல்லாரும் ஒருவர் பின் ஒருவராய்ச் சாக்குப்போக்குச் சொல்லத் தொடங்கினர்.

முதலில் ஒருவர், "வயல் ஒன்று வாங்கியிருக்கிறேன்; அதை நான் கட்டாயம் போய்ப் பார்க்க வேண்டும். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்' என்றார்.

"நான் ஐந்து ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன்; அவற்றை ஓட்டிப்பார்க்கப் போகிறேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்' என்றார்

வேறொருவர். "எனக்கு இப்போதுதான் அருட்சாதனம் ஆயிற்று; ஆகையால் என்னால் வர முடியாது' என்றார் மற்றொருவர்.

பணியாளர் திரும்பி வந்து இவற்றைத் தம் தலைவருக்கு அறிவித்தார்.

வீட்டு உரிமையாளர் சினமுற்றுத் தம் பணியாளரிடம், "நீர் நகரின் வீதிகளுக்கும் சந்துகளுக்கும் விரைந்து சென்று ஏழையர், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர் ஆகியோரை இங்கே கூட்டி வாரும்" என்றார்.

பின்பு பணியாளர், "தலைவரே, நீர் பணித்தபடி செய்தாயிற்று; இன்னும் இடமிருக்கிறது" என்றார். தலைவர் தம் பணியாளரை நோக்கி, `நீர் வழியோரங்களிலும் நடைபாதைகளிலும் போய், எனது வீடு நிரம்பும் அளவுக்கு மக்களை வற்புறுத்திக் கூட்டி வாரும். அழைக்கப் பெற்றவர்களுள் எவரும் என்னுடைய விருந்தைச் சுவைக்கப் போவதில்லை என உமக்குச் சொல்கிறேன்' " என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
லூக்கா 14: 15-24

நம்முடைய வாழ்வில் கடவுளுக்கு முன்னுரிமை வந்து வாழலாமே!

நிகழ்வு

பெருநகர் ஒன்றில் தொழிலதிபர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளை மறந்து, தன்னுடைய மனைவி, பிள்ளைகளை மறந்து எப்போதும் வேலை வேலையென்று பரபரப்பாக இருந்தார். அவருடைய மனைவி அவரிடம், "கொஞ்ச நேரமாவது கடவுளுக்கும் குடும்பத்துக்கும் ஒதுக்கலாமே....?" என்று சொல்லும்போதெல்லாம், "அவற்றிற்கெல்லாம் எனக்கு எங்கே நேரமிருக்கின்றது!" என்று சொல்லி அவர் தன்னுடைய மனைவியின் பேச்சைத் தட்டிக்கழித்து வந்தார். இன்னொரு பக்கம் அவர் தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து இரவுவிடுதிக்குச் சென்று கூத்தடிப்பதும் கும்மாளமடிப்பதுமாக இருந்தார்.

நாள்கள் மெல்ல நகர்ந்தன. திடீரென்று ஒருநாள் அவர் உடல்நலமின்றி படுக்கையில் விழுந்தார். மருத்துவர் ஒருவர் வந்து அவரைச் சோதித்துப் பார்த்தபோதுதான் தெரிந்தது, அவர்க்கு புற்றுநோய் இருக்கின்றது என்று. அவர் அதிர்ந்துபோனார். அப்பொழுது அவர் இறைவனிடம் மன்றாடத் தொடங்கினார். "இறைவா! இத்தனை நாள்களும் நான் உம்மை மறந்து, என்னுடைய மனம்போன போக்கில் சென்றுவிட்டேன். நீர் மட்டும் என்னுடைய வாழ்நாளை இன்னும் கொஞ்சம் கூட்டிக்கொடுத்தால், நான் உம்முடைய வழியில் நடந்து, உமக்குகந்த மகனாக வாழ்வேன்" என்றார். இறைவனும் அவர்மீது இரக்கம்கொண்டு, அவருடைய வாழ்நாளைக் கூட்டிக்கொடுத்தார்.

இதற்குப் பின்பு அவர் கோயில் வழிபாடுகளில் தவறாது கலந்துகொண்டார்; தன்னுடைய குடும்பத்தோடு அதிகமான நேரம் ஒதுக்கினார். இதுமட்டுமல்லாமல், தவறான வழியில் சென்றுகொண்டிருந்த தன்னுடைய நண்பர்கட்கும் உண்மையை எடுத்துச் சொல்லி, அவர்களையும் கோயிலுக்கு அழைத்து வந்தார். இதனால் அந்தத் தொழிலதிபருடைய குடும்பம் மட்டுமல்லாமல், அவர்க்கு நன்கு அறிமுகமான எல்லாரும் மகிழ்ச்சியடைந்தார்கள்.

நாம் நம்முடைய வாழ்வில் கடவுளை மறந்துவாழக்கூடாது, மாறாக, அவர்க்கு முதன்மையான இடம்கொடுத்து வாழவேண்டும். அப்படி நாம் வாழ்ந்தோமெனில் கடவுளின் ஆசி நம்மில் நிறைவாகத் தங்கும் என்ற உண்மையை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகமும் கடவுள் நமக்குக் கொடுக்கும் அழைப்பினை நாம் உதறித் தள்ளாமல், அவர்க்கு முதன்மையான இடம் கொடுத்து வாழவேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கடவுளின் அழைப்பினை உதாசீனப்படுத்திய யூதர்கள்

லூக்கா நற்செய்தி பதினான்காம் அதிகாரம் முழுவதும் விருந்து குறித்த இயேசுவின் போதனையாக இருக்கின்றது. இன்றைய நற்செய்தியின் முந்தைய பகுதியில் நேற்றைய நற்செய்தியின் இறுதியில் இயேசு, வறியோர்க்கு விருந்துகொடுத்தால் நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது கைம்மாறு கிடைக்கும்"என்று சொல்வார். இதைக் கேட்டு அங்கு நடந்த விருந்தில் கலந்துகொண்ட ஒருவர் இயேசுவிடம், "இறையாட்சி விருந்தில் பங்குபெறுவோர் பேறுபெற்றோர்"என்கிறார். அப்பொழுதுதான் இயேசு பெரிய விருந்து உவமையைச் சொல்கின்றார். இயேசு சொல்லும் உவமையைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னம், யூதர்களின் மனப்பான்மை எப்படி இருந்தது என்று தெரிந்துகொள்வது நல்லது.

யூதர்கள் இறையாட்சியை ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு போன்றோரோடு உண்ணக்கூடிய ஒரு பெரிய விருந்தோடு ஒப்பிட்டுப் பார்த்து வந்தார்கள் (லூக் 13: 28; எசா 25:6) இன்னொரு முக்கியமான செய்தி, யூதர்கள் தாங்கள் எப்படி இருந்தாலும் இறையாட்சி விருந்தில் கலந்துகொள்ளலாம்; அதில் எப்படியும் பங்குபெற்றுவிடலாம் என்ற தவறான எண்ணத்தோடு இருந்தார்கள். இத்தகைய பின்னணியில்தான் இயேசு விண்ணரசைப் பெரிய விருந்துக்கு ஒப்பிடுகின்றார்.

இயேசு சொல்லும் உவமையில், விருந்து ஏற்பாடு செய்தவர் கொடுத்த அழைப்பினை உதாசீனப்படுத்திபடுத்தி ஒருவர் வயல் வாங்கியிருப்பதாகவும்... இன்னொருவர் ஏர்மாடுகள் வாங்கியிருப்பதாகும்... மற்றொருவர் இப்போதுதான் திருமணமாகியிருப்பதாகவும்... சாக்குப்போக்குச் சொல்லி விருந்துக்கு வராமல் இருக்கின்றார்கள். இவர்கள் யாவரையும் யூதர்களோடு ஒப்பிடலாம். ஏனென்றால், யூதர்கள் கடவுள் கொடுத்த அழைப்பினை உதாசீனப்படுத்தி இறைவனுக்கு அவர்க்கு முதன்மையான இடம் கொடுக்காமல் வாழ்ந்துவந்தார்கள். இதனால் தண்டிக்கப்பட்டார்கள்.

கடவுளின் அழைப்பை ஏற்றுக்கொண்ட ஏழைகள்/ புறவினத்தார்

இறையாட்சி விருந்தில் பங்குபெற (சிறப்பு) அழைப்புப் பெற்ற யூதர்கள் அவ்விருந்தில் கலந்துகொள்ள விருப்பமில்லாமல் தட்டிக்கழித்ததால், புறவினத்தார்க்கும் ஏழைகள் மற்றும் வறியவர்கட்கும் விருந்தில் கலந்துகொள்ள அழைப்புக் கொடுக்கப்பட்டது. இவர்கள் தங்களுடைய தகுதியின்மையை உணர்ந்தபோதும், விருந்தில் கலந்துகொண்டு கடவுளின் ஆசியைப் பெற்றுக்கொண்டார்கள்.

இயேசு சொல்லும் இவ்வுவமை நம்முன் வைக்கும் முதன்மையான கேள்வி. நாம் நம்முடைய வாழ்வில் கடவுளுக்கு முதன்மையான இடம் தந்து வாழ்கின்றோமா...? என்பதுதான். பல நேரங்களில் நாம் யூதர்கள் எப்படி கடவுளின் அழைப்பினைத் தட்டிக்கழித்து, மற்ற செயல்களில் தீவிரமானார்களோ, அதுபோன்றுதான் இருக்கின்றோம். இத்தகைய போக்கினை நாம் நம்முடைய வாழ்விலிருந்து அகற்றிவிட்டு, கடவுளுக்கு முதன்மையான இடம் தரும் மக்களாக வாழ்வோம்.

சிந்தனை

"ஆகவே, அனைத்திற்கும் மேலாக கடவுளது ஆட்சியையும் அவர்க்கு ஏற்புடயவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்கட்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்" (மத் 6:33) என்பார் இயேசு. ஆகையால், நாம் நம்முடைய வாழ்வில் கடவுளுக்கு முதன்மையான இடம் தந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
உரோமையர் 12: 5-16

கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் கொடைகளைப் பிறருக்காகவும் பயன்படுத்துவோம்

நிகழ்வு

ஒருமுறை அரபு நாட்டை ஆண்டுவந்த கலிப்பாக்களில் ஒருவர் குதிரையில் சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது பெரியவர் ஒருவர் வழியோரத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்துக்கொண்டிருந்தார். அதைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்ட கலிபா, அந்தப் பெரியவரின் அருகே சென்று, "ஐயா! உங்களுக்கு இப்பொழுது எத்தனை வயதிருக்கும்?"என்று வாஞ்சையோடு கேட்டார். அதற்குப் பெரியவர், "எனக்கு இப்பொழுது 80 வயது"என்றார்.

"80 வயதில் மரக்கன்றுகளை நடுகின்றீர்களே! இந்த மரக்கன்றுகள் வளர்ந்து, கொடுக்கின்ற பலனை உங்களால் பெறமுடியாமல்கூட போய்விடும். அப்படியிருக்கையில் எதற்காக இந்த மரக்கன்றுகளை நட்டு வைக்கின்றீர்கள்?"என்றார் கலிபா. பெரியவர் ஒருநொடி கல்பாவைப் பார்த்துவிட்டுப் பொறுமையாகச் சொன்னார்: "இந்த மரக்கன்றுகளிலிருந்து நான் பலன்பெறுவதற்காக இவற்றை நட்டுவைக்கவில்லை; எனக்குப் பின் வரும் சந்ததியினர் பலன் பெறுவதற்காகவே இவற்றை நட்டு வைக்கின்றேன். முன்பு நம் மூதாதையர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள். அதனால் நாம் பலன்பெற்றோம். இப்பொழுது நான் மரக்கன்றுகளை நட்டு வைக்கின்றேன்; எனக்குப் பின்னால் வரும் தலைமுறை இதிலிருந்து பலனை அனுபவிக்கட்டுமே!"

பெரியவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்த கலிபா, தன்னிடமிருந்த தங்கக்காசுகளை அள்ளி அவருக்குக் கொடுத்தார். அவற்றை அன்போடு பெற்றுக்கொண்ட பெரியவர் கலிபாவிடம், "இந்த வயதில் மரக்கன்றுகளை வைத்தால் உங்களுக்கு எப்படிப் பலன் கிடைக்கும் என்று என்னிடம் கேட்டீர்கள்...? இதோ அதற்கான பலன் கிடைத்துவிட்டது!"என்றார். அதைக் கேட்ட கலிபா புன்னகையோடு எங்கிருந்து கிளம்பினார்.

கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கும் கொடைகளை நமக்காக மட்டுமல்ல, பிறருக்காகவும் பயன்படுத்தவேண்டும். அப்படி நாம் பயன்படுத்தினால், அதற்காக பலனை நிச்சயம் பெறுவோம் என்று உண்மையை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய முதல் வாசகமும் நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துக்கூறுகின்றது. எனவே, அதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

நாம் ஓருடலின் உறுப்புகள்

புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில், அதாவது இன்றைய முதல் வாசகத்தில், "நாம் பலராயிருந்தாலும் கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் ஒரே உடலாய் இருக்கின்றோம்; ஒருவருக்கொருவர் உடனுப்புகளாய் இருக்கின்றோம்" என்று கூறுகின்றார். புனித பவுல் இதே செய்தியை தன்னுடைய திருமுகங்களில் ஆங்காங்கே வலியுறுத்திக்கூறுகின்றார் (1 கொரி 12; எபே 4: 7-16). பவுல் சொல்வதுபோல், நாம் அனைவரும் கிறிஸ்து என்ற ஓருடலின் உறுப்புகள் என்றால், உடலில் உள்ள ஓர் உறுப்புத் துன்புருகின்றது; தேவையில் இருக்கின்றது என்றால், அதை மற்ற உறுப்புகள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. அதுபோன்று இந்த உலகில் உள்ள அனைவரும் கிறிஸ்துவின் உறுப்புகளாய் இருக்கின்றோம் என்றால், துன்புறுகின்ற அல்லது தேவையில் உள்ள ஒருவரைப் பார்த்துவிட்டு, இன்னொருவர் சும்மா இருக்கமாட்டார்; அவர் அவருக்கு வேண்டியதைச் செய்வார். இதுதான் கிறிஸ்து என்ற உடலின் உறுப்புகளாக இருக்கின்ற நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டியதாக இருக்கின்றது. இதற்கு எத்தகைய மனநிலை வேண்டும் என்பதைத் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

தூய ஆவியாரின் கொடைகள் பொதுநன்மைக்காகவே

நாம் அனைவரும் ஓருடலின் உறுப்புகள் என்று சொன்ன புனித பவுல், கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் வழங்கியிருக்கும் கொடைகளை நமக்காக மட்டுமல்ல, பிறருக்காவும் பயன்படுத்தவேண்டும் என்று செய்தியை எடுத்துச் சொல்கின்றார். இக்கருத்தினை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் வருகின்ற, "தூய ஆவியாரின் கொடைகள் யாவும் பொதுநன்மைக்காகவே" (1 கொரி 12:7) என்ற வார்த்தைகளோடு இணைத்துச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தூய ஆவியார் கொடுத்திருக்க இறைவாக்குரைக்கும் கொடை, தொண்டாற்றும் கொடை, கற்றுக்கொடுக்கும் கொடை, தாளாரமாக வழங்கும் கொடை, தலைமை தாங்கும் கொடை... போன்ற கொடைகளைப் பெற்றிருக்கின்ற ஒருவர் அவற்றைத் தனக்காக மட்டும் பயன்படுத்தக் கூடாது. மாறாக, பிறருக்காகாவும் பயன்படுத்தவேண்டும். அதில்தான் சிறப்பு இருக்கின்றது. மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் பெரியவர், தான் பெற்ற கொடைகளைப் பிறருக்காகப் பயன்படுத்தினார். அதுபோன்று நாம் ஒவ்வொருவரும் கடவுளிடமிருந்து பெற்றிருக்கும் கொடைகளை நமக்காக மட்டும் அல்ல, பிறருக்காகவும் பயன்படுத்தவேண்டும். அதுவும் உளம் கனிந்த அன்போடு பயன்படுத்தவேண்டும். அப்பொழுதுதான் நாம் இறைவனிடம் அன்புக்கு உரியவர்களாக இருக்கமுடியும்.

சிந்தனை

'நான் எனக்குப் பயன்தருவதை நாடாமல், பலரும் மீட்படையும் படி அவர்களுக்குப் பயன்தருவதை நாடுகின்றேன்' (1கொரி 10:33) என்பார் புனித பவுல். புனித பவுலிடம் விளங்கிய இந்த மனப்பான்மையை நாமும் பெற்றுக்கொண்டு, பிறருக்குப் பலன்தருவதை நாடுவோம். அதற்கு நாம் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் கொடைகளை பொதுநலனுக்காகப் பயன்படுத்துவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!