|
|
04 நவம்பர்
2019 |
|
|
பொதுக்காலம்
31ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இரக்கம் காட்டுவதற்காகவே கடவுள் அனைவரையும் கீழ்ப்படியாமைக்கு
உட்படுத்தினார்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்
11: 29-36
சகோதரர் சகோதரிகளே, கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த
அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை. ஒரு காலத்தில்
நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தீர்கள்; இப்பொழுது
அவர்கள் கீழ்ப்படியாமல் இருப்பதால், நீங்கள் கடவுளின் இரக்கத்தைப்
பெற்றுக்கொண்டீர்கள்.
அது போல, இக்காலத்தில் நீங்கள் இரக்கத்திற்குரியவர்களாக இருக்கிறீர்கள்;
அவர்கள் கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள்; ஆனால் அவர்களும்
விரைவில் இரக்கம் பெற்றுக்கொள்வார்கள்; அதன் பொருட்டே இவ்வாறு
நடந்திருக்கிறது.
ஏனெனில், அனைவருக்கும் இரக்கம் காட்டுவதற்காகவே கடவுள் அனைவரையும்
கீழ்ப்படியாமைக்கு உட்படுத்தினார். கடவுளின் அருள் செல்வம் எத்துணை
மிகுதியானது! அவருடைய ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானவை! அவருடைய
தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு
அப்பாற்பட்டவை!
"ஏனெனில் ஆண்டவரின் மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரையாளராய்
இருப்பவர் யார்? தமக்குக் கைம்மாறாக ஏதாவது கிடைக்கும் என முன்னதாகவே
அவரிடம் கொடுத்து வைத்தவர் யார்?" அனைத்தும் அவரிடமிருந்தே வந்தன;
அவராலேயே உண்டாயின; அவருக்காகவே இருக்கின்றன, அவருக்கே என்றென்றும்
மாட்சி உரித்தாகுக! ஆமென்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
- திபா
69: 29-30. 32-33. 35-36 (பல்லவி: 13cd) Mp3
=================================================================================
பல்லவி: உமது பேரன்பின் பெருக்கினால் கடவுளே, எனக்குப் பதில்
தாரும்.
29 எளியேன் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்; கடவுளே! நீர் அருளும்
மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக! 30 கடவுளின் பெயரை
நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை
மாட்சிமைப்படுத்துவேன். பல்லவி
32 எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித்
தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக. 33 ஆண்டவர் ஏழைகளின்
விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை
அவர் புறக்கணிப்பதில்லை. பல்லவி
35 கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்; யூதாவின் நகரங்களைக் கட்டி
எழுப்புவார்; அப்பொழுது அவர்களுடைய மக்கள் அங்கே
குடியிருப்பார்கள்; நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக்
கொள்வார்கள். 36 ஆண்டவருடைய அடியாரின் மரபினர் அதைத் தம் உரிமைச்
சொத்தாக்கிக் கொள்வர்; அவரது பெயர்மீது அன்புகூர்வோர் அதில்
குடியிருப்பர். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 8: 31b-32
அல்லேலூயா, அல்லேலூயா! என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து
வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும்
இருப்பீர்கள். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நண்பர்களையல்ல, ஏழைகளையும் ஊனமுற்றோரையும்
பார்வையற்றோரையும் அழையும்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 12-14
அக்காலத்தில் தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, "நீர்
பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர்
சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ
அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப
அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும்.
மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும்
கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர்
பேறுபெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம்
ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக்
கைம்மாறு கிடைக்கும்" என்று கூறினார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
உரோமையர் 11: 29-36
வாக்கு மாறாத இறைவன்
நிகழ்வு
அது ஒரு நகர்ப்புறப் பங்கு. அந்தப் பங்கில் சிறப்பான முறையில்
பணியாற்றிக் கொண்டிருந்த பங்குத்தந்தை, ஒருநாள் மாலைவேளையில்
ஓர் இல்லம் சந்திக்கச் சென்றார். அந்த இல்லத்தில் பெரியவர் ஒருவர்
நாற்காலியில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தார். பங்குத்தந்தை அந்தப்
பெரியவரைப் பார்த்தவுடனேயே தெரிந்துகொண்டார், அவர் பக்கவாதத்தினால்
பாதிக்கப்பட்டிருக்கின்றார் என்று.
உடனே பங்குத்தந்தை அந்தப் பெரியவரிடமும் வீட்டிலிருந்த மற்ற அனைவரிடமும்
பேசத் தொடங்கினார். பெரியவரோடு பங்குத்தந்தை பேசிய சிறிதுநேரத்திற்குள்ளேயே
அவர் ஆழமான இறைநம்பிக்கை கொண்டவர் என்ற உண்மை பங்குத்தந்தைக்குத்
தெரியவந்தது. இதற்கு நடுவில் பெரியவருக்கு முன்பாக இருந்த
சிறிய மேசையில், திறந்த நிலையில் திருவிவிலியம் ஒன்று இருப்பதையும்,
அதன் பக்கங்களில் ஆங்காங்கே 'நிறைவேறிற்று' என்ற வார்த்தை எழுதப்பட்டிருப்பதையும்
அவர் பார்த்தார்.
அதைப் பார்த்ததும் பங்குத்தந்தை அந்தப் பெரியவரிடம், "ஐயா! இந்தத்
திருவிவிலியத்தின் ஓரத்தில் ஆங்காங்கே 'நிறைவேற்றிற்று' என்ற
வார்த்தை எழுதப்பட்டிருக்கின்றதே, இதன் பொருள் என்ன?" என்று
கேட்டார் அதற்கு பெரியவர் பங்குத்தந்தையிடம் குழறிக் குழறிப்
பேசத் தொடங்கினார்; "சுவாமி! எனக்குப் பத்து வயது நடக்கும்போதே
திருவிவிலியத்தை வாசிக்கத் தொடங்கிவிட்டேன். அவ்வாறு நான்
வாசிக்கத் தொடங்கியபோது, இறைவன் எனக்குப் பல வாக்குறுதிகளை இத்திருவிவிலியத்தின்
வழியாகத் தருவதை உணர்ந்தேன். நாள்கள் செல்லச் செல்ல இறைவன் எனக்குக்
கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் என்னுடைய வாழ்வில் நிறைவேற்றுவதை
உணர்ந்தேன். அதனால்தான் இறைவன் கொடுத்த வாக்குறுதிகள் என்
வாழ்வில் நிறைவேற்றிற்று என்பதைக் குறிக்கும் வண்ணமாக
'நிறைவேற்றிற்று' என்று எழுதி வைத்தேன்."
பெரியவர் சொன்ன இவ்வார்த்தைகளைக் கேட்ட பங்குத்தந்தை 'இறைவன்
வாக்குறுதி மாறாதவர்' சொல்லி, அந்தக் குடும்பத்தில் இருந்த எல்லாரோடும்
சேர்ந்து, இறைவனைப் போற்றிப் புகழ்ந்தார்.
ஆம், இறைவன் வாக்கு மாறாதவர். அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக
இருப்பதுதான் இந்த நிகழ்வு. இன்றைய முதல் வாசகமும் நமக்கு இதே
செய்தியைத்தான் எடுத்துச் சொல்கின்றது. எனவே, நாம் அதைக்
குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்
விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திருப்பப்பெறாத
இறைவன்
புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட
இன்றைய முதல் வாசகத்தில், "கடவுள் தாம் விடுத்த அழைப்பினையும்
கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை" என்று
கூறுகின்றார். இவ்வார்த்தைகளை எப்படிப் புரிந்துகொள்வது என்பதை
இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களிடம், "நீங்கள் என்னுடைய மக்களாக
இருப்பீர்கள்; நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்" (எசே 36: 28)
என்று வாக்குறுதி கொடுத்தார். அந்த வாக்குறுதியை அல்லது கடவுள்
இஸ்ரயேல் மக்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையை இஸ்ரயேல் மக்கள்
காற்றில் பறக்கவிட்டுவிட்டு, வேற்று தெய்வங்களை வழிபட்டுப் பாவம்
செய்தார்கள். அப்படியிருந்தும் இஸ்ரயேல் மக்கள், கடவுளுக்கு மக்களாகவே
இருந்தார்கள். அதற்கு முக்கியமான காரணம். இஸ்ரயேல் மக்களின் தகுதி
அல்ல, கடவுளின் அருள்பெருக்கே ஆகும். ஆம், கடவுள் இஸ்ரயேல் மக்களைத்
தன் சொந்த மக்களாகத் தேர்ந்தெடுத்தார் (இச 7:6). அதனால் அவர்கள்
பாவம் செய்து, பின் மனம்வருந்தி தன்னிடம் திரும்பிவந்தபோதும்,
தான் வாக்களித்த கொடைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளாமல், அவர்கள்மீது
தன்னுடைய அருள்கொடைகளைப் பொழிந்தார்.
மனிதர்கள் மாறலாம்; இறைவன் மாறுவதில்லை
கடவுள் தாம் விடுத்த அழைப்பினையும் கொடுத்த அருள்கொடைகளையும்
திரும்பப் பெறாமல் இருப்பது, அவர் வாக்குறுதி மாறாதவர் என்ற உண்மையை
மிக அழுத்தம் திருத்தமாக எடுத்துக்கூறுகின்றது. இதற்கு வலுசேர்க்கும்
வண்ணமாக இருக்கின்றது மலாக்கி நூலில் வருகின்ற, "ஆண்டவராகிய
நான் மாறாதவர்; அதனால்தான் நீங்கள் இன்னும் அழியாதிருக்கின்றீர்கள்"
(மலா 3:6) என்ற வார்த்தைகள். ஒருவேளை கடவுள் மட்டும் கொடுத்த
வாக்குறுதியை மனிதர்களைப் போன்று மீறுபவராக இருந்தால், அவருக்கு
முன்னால் யாரும் நிலைத்து நிற்கமுடியாது என்ற நிலைதான் ஏற்பட்டிருக்கும்.
ஆனால், அவர் அப்படியொன்றும் வாக்குறுதியிலிருந்து மாறுகின்றவர்
அல்லர்; அவர் வாக்குறுதியில் மாறாதவர்.
இந்த இடத்தில், கடவுளுக்கு நாம் கொடுத்திருக்கும் 'ஆண்டவருக்கு
ஊழியம் செய்வோம்; அவருக்குக் கீழ்ப்படிவோம்' (யோசு 24: 24) என்ற
வாக்குறுதிக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கின்றோமா? சிந்தித்துப்
பார்ப்போம். கடவுளுக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறுபவர்களாக
இல்லாமல், அதைக் கடைப்பிடிப்பவர்களாக இருந்து, இறைவனின் அன்பு
மக்களாவோம்.
சிந்தனை
'பொய் சொல்வதற்குக் கடவுள் மனிதன் அல்லர்; மனத்தை
மாற்றிக்கொள்ள ஒரு மனிதப் பிறவியும் அல்லர்' (எண் 23: 19) என்கிறது
இறைவார்த்தை. ஆம், நம் இறைவன் மாறாதவர். ஆகையால், நாம் கடவுளைப்
போன்று கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களாகவும் உண்மையுள்ளவர்களாகவும்
இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
லூக்கா 14: 12-14
யாருக்கு விருந்தில் முதன்மையான இடம் கொடுக்கவேண்டும்?
நிகழ்வு
ஒருகாலத்தில் எலிமேலக், சூசா என்ற இரண்டு யூத இரபிகள் இருந்தார்கள்.
அவர்கள் இருவரும் அண்ணன் தம்பிகள்; இருவரும் சாதாரண உடை அணிந்துகொண்டு
ஊர் ஊராகச் சென்று போதித்து வந்தார்கள். ஒருநாள் அவர்கள்
போதித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார்கள்.
வழியில் இருட்டிவிட்டதால், இனிமேலும் ஊருக்குப் போவது அவ்வளவு
பாதுகாப்பானது அல்ல என்பதை உணர்ந்து, சற்றுத் தொலைவில் தெரிந்த
ஓர் ஊருக்குச் சென்றார்கள். அந்த ஊரின் பெயர் லோத்மிர் (Lodmir).
அவ்வூருக்குள் நுழைகையில் விளக்குகள் எரிந்துகொண்டிருந்த ஒரு
பெரிய வீட்டைக் கண்டார்கள். உடனே அவர்கள் இருவரும் அவ்வீட்டின்
கதவைத் தட்டினார்கள்.
கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் வெளியே வந்தார்.
அவரிடம் அந்த இரண்டு யூத இரபிகளும், "நாங்கள் இருவரும் தொலைதூரத்திலிருந்து
வருகின்றோம். இன்று இரவு மட்டும் உங்களுடைய வீட்டில் தங்கிக்கொள்ளட்டுமா?"
என்று கேட்டார்கள். உடனே அந்த வீட்டின் உரிமையாளர் அவர்களிடம்,
"பஞ்சப் பாராரிகளெல்லாம் வந்து தங்கிவிட்டுப் போவதற்கு நானென்ன
சத்திரமா நடத்துகிறேன்...? உங்களையெல்லாம் என்னுடய வீட்டில் அனுமதிக்க
முடியாது! நீங்கள் தங்குவதென்றால், இந்த ஊரின் எல்லையில் ஒரு
மறைநூல் வல்லுநரின் வீடு இருக்கின்றது. அங்கு போய்த் தங்குங்கள்;
அவர் உங்களைத் தன்னுடைய வீட்டில் தங்க வைப்பார்" என்றார். அவர்களும்
சரியென்று சொல்லிவிட்டு, நடக்கத் தொடங்கினார்கள்.
முன்பு அவர்கள் சந்தித்த பணக்காரர் சொன்னதுபோன்று ஊர் எல்லையில்
ஒரு குடிசைவீடு இருந்தது; அதில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது.
இரபிகள் இருவரும் அந்த வீட்டின் கதவைத் தட்டினார்கள். உடனே உள்ளேயிருந்து
ஒரு பெரியவர் வந்தார். அவரிடம் அவர்கள், "இந்த இரவு மட்டும் இங்கு
தங்கிக்கொள்ளட்டுமா...?" என்று கேட்டபோது, "தாராளமாகத் தங்கி
ஓய்வெடுத்துவிட்டு செல்லுங்கள்" என்றார். பின்னர் அந்தப் பெரியவர்
வந்திருந்த இருவரும் மிகவும் களைப்பாக இருப்பதைப்
பார்த்துவிட்டு, சுட்ட இரண்டு ரொட்டிகளைத் தந்தார். இருவரும்
அதைச் சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்கத் தொடங்கினார்கள். காலையில்
அவர்க்கு நன்றி சொல்லிவிட்டு, அவர்கள் அவரிடமிருந்து
விடைபெற்றார்கள்.
இது நடந்து பல ஆண்டுகள் கழித்து, எலிமேலக்கும் சூசாவும் புகழ்பெற்ற
இரபிகள் ஆனார்கள். அதனால் லோத்மிர் என்ற ஊருக்குப் போதிப்பதற்கு
சிறப்பு விருந்தினர்களாக அழைக்கபட்டார்கள். இருவரும் அந்த ஊராரின்
அழைப்பு ஏற்று, அங்கு போதிக்கச் சென்றார்கள். இந்த முறை அவர்கள்
சாதாரண உடையில் அல்ல, மிகவும் விலையுயர்ந்த ஆடையில், ஒரு
குதிரை வண்டியில் சென்றார்கள். எல்லாரும் அவருடைய போதனையைக்
கேட்டு மிகவும் வியப்படைந்தார்கள். போதனையின் முடிவில் அவ்வூரில்
இருந்த பணக்காரர் அவர்களிடம் வந்து, "இன்றிரவு உங்கட்கு என்னுடைய
வீட்டில் விருந்து கொடுக்கவேண்டும் என்று ஊர் நிர்வாகம்
சொல்லியிருக்கின்றது. அதனால் நான் முன்னே சென்று விருந்துக்கு
ஏற்பாடு செய்கிறேன்... நீங்கள் பின்னே வாருங்கள்" என்று
சொல்லிவிட்டுச் சென்றார்.
வீட்டுக்குச் சென்ற பணக்காரர் நீண்டநேரமாகியும் இரபிகள் இருவரும்
தன்னுடைய வீட்டிற்கு வராதைக் கண்டு, தன்னுடைய வீட்டைவிட்டு
வெளியே வந்து பார்த்தார். அங்கு இரபிகள் வந்திருந்த குதிரை வண்டியும்
அதனுள் அவர்கள் இருவரும் அணிந்த விலையுயர்ந்த ஆடையும் இருந்தது.
பக்கத்தில் குதிரை வண்டிக்காரன் நின்றுகொண்டிருந்தான். பணக்காரன்
குதிரையோட்டியிடம், "அவர்கள் எங்கே?" என்று கேட்க, "அவர்கள் இந்த
ஊரின் எல்லையில் இருக்கின்ற மறைநூல் வல்லுநரின் வீட்டில் இருக்கின்றார்கள்;
'நீ மட்டும் இந்தக் குதிரை வண்டியோடு அந்தப் பணக்காரரின்
வீட்டிற்குப் போ' என்றுசொல்லி, என்னை அவர்கள் இங்கு அனுப்பி
வைத்தார்கள்" என்றான்.
இதைக் கேட்ட அந்தப் பணக்காரர்க்கு கோபமாய் வந்தது. 'என்ன இவர்கள்
இப்படிச் செய்துவிட்டார்கள்...!' என்று அவர் ஊரின் எல்லையில்
இருந்த மறைநூல் வல்லுநரின் வீட்டுக்கு விரைந்து சென்று, அங்கிருந்த
இரபிகள் இருவரிடமும், "நீங்கள் ஏன் என்னுடைய வீட்டிற்கு
விருந்துக்கு வரவில்லை?" என்று கேட்டபோது, அவர்கள் அவரிடம் பழசை
நினைவுபடுத்தி, "நீர் உம் வீட்டில் வசதிபடைத்தவர்க்குத்தானே தங்க
இடம்கொடுத்து, விருந்துகொடுப்பாய்! பஞ்ச பாராரிக்கெல்லாம் எங்கே
விருந்துகொடுப்பாய்...? அதனால்தான் நாங்கள் அணிந்திருந்த
விலையுயர்ந்த ஆடையையும் நாங்கள் வந்த குதிரை வண்டியையும் உம்முடைய
வீட்டிற்கு அனுப்பி வைத்தோம். வேண்டுமானால் அவற்றுக்கு
விருந்துக்கு கொடும். அவைதான் உம்முடைய வீட்டில் விருந்துண்ணத்
தகுதி பெற்றவை" என்றார். இதைக் கேட்டு அந்தப் பணக்காரர்
வெட்கித் தலைகுனிந்து நின்றார்.
இந்த நிகழ்வில் வருகின்ற பணக்காரரைப் போன்றுதான் பலரும் பணக்காரர்க்கும்
வசதிபடைத்தவர்க்குமே விருந்து கொடுப்பவர்களாக இருக்கின்றார்கள்!
இப்படிப்பட்ட விருந்து விருந்தே அல்ல என்பதையும் யாருக்கு
விருந்து கொடுக்கவேண்டும் என்பதையும் இன்றைய நற்செய்தி வாசகம்
எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
வறியோரை விருந்துக்கு அழையுங்கள்
நற்செய்தியில், இயேசு தம்மை விருந்துக்கு அழைத்த பரிசேயத் தலைவரிடம்,
நீர் விருந்தளிக்கின்றபோது வசதிபடைத்தவர்களை அல்ல, வறியவரை அழையும்
என்று கூறுகின்றார். காரணம் வசதி படைத்தவரால் அவரைத் திரும்ப
அழைக்க முடியும்; அதுவே அவர்க்கு கைம்மாறாக மாறிவிடும். மாறாக,
வறியவர்களால் திரும்ப அழைக்க முடியாது; அப்பொழுது அவர்க்கு மனிதரிடமிருந்து
அல்ல, கடவுளிடமிருந்து கைம்மாறு கிடைக்கும். இந்த உண்மையை உணர்த்தவே
இயேசு அவரிடம் அப்படிச் சொல்கின்றார்.
இன்றைக்குக் கொடுக்கப்படும் பெரும்பாலான விருந்துகள் இரண்டு
நிலைகளில் அடங்கிவிடுகின்றன. ஒன்று பெற்ற விருந்தைத் (கடனை)
திரும்பிச் செலுத்துவது. இன்னொன்று, விருந்து (கடன்) கொடுத்து,
மற்றவரைக் விருந்துகொடுக்கச் செய்வது அல்லது கடன்காரராக மாற்றுவது.
இப்படிப்பட்ட விருந்துகள் ஒருபோதும் உண்மையான விருந்தாக இருக்காது;
அது கொடுக்கல் வாங்கலாகவும் பெருமையைப் பறைசாற்றுவதாகவும் இருக்குமே
அன்றி, உண்மையான விருந்தாக இருக்காது என்பது இயேசுவின் போதனையாக
இருக்காது.
நாம் கொடுக்கின்ற விருந்து நம்முடைய பெருமையைப் பறைசாற்றுவதாக
இல்லாமல், கடவுளுக்குப் பெருமை சேர்க்கக்கூடியதாக
இருக்கவேண்டும் (மத் 5:13). கடவுளுக்குப் பெருமை
சேர்க்கவேண்டும் என்றால், நாம் நம்மோடு வாழ்கின்ற
வறியவர்கட்கும் எளியவர்கட்கும் விருந்து கொடுக்கவேண்டும்.
அப்பொழுதுதான் நம்மால் கடவுளுக்குப் பெருமை சேர்க்க முடியும்.
கடவுளும் நமக்குத் தகுந்த கைம்மாறு தருவார். ஆகையால்,
இயேசுவின் இத்தகைய போதனையை உள்வாங்கியவர்களாய் நாம் அளிக்கின்ற
விருந்துகளில் எளியவர்க்கும் வறியவர்க்கும் முதன்மையான இடம்
கொடுப்போம்.
சிந்தனை
'விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்' (மத் 6:
20) என்பார் இயேசு. ஆகையால், நாம் நம்மோடு வாழும் வறியவர்க்கு
விருந்துகளில் முதன்மையான இடம் தந்து, விண்ணில் செல்வம்
சேர்த்து வைப்போம்; இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
|
|