Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

துன்ப முடிச்சுக்களை அவிழ்க்கும் அன்னையிடம் செபம்

                                                                             முன்னுரை

றோமன் கத்தோலிக்க திருச்சபையினால் 1182ல் Germany யில் உள்ள Augsburg நகரின் மத்தியில் 1182ல் கட்டப்பட்ட St. Peter am Perlach  தேவாலயத்தில் தனிப்பட்ட மையச் சிறப்புத் தன்மையுடன் இவ்வன்னையின் படம் இருக்கிறது. இதில் சித்தரிக்கப்படும் காட்சியானது: நிலவு வளையத்தின் மேல் கன்னிமரியாள் நிற்பது போலவும், அவரது காலின் கீழ் பாம்பின் தலை மிதிக்கப்படுவதாகவும் அமைந்திருக்கின்றது. பாம்பு வடிவில் இருக்கும் நெருக்கமான பல முடீச்சுக்களை உடைய கயிறு ஒன்றை அன்னைமரியாள் தனது கையில் வைத்திருக்கின்றார். வானதூதர் ஒருவர் சிக்கலான பல முடிச்சுக்களை உடைய கயிற்றை அன்னை மரியாளிடம் ஒப்படைக்க, அதை மரியாள் தனது பொறுமை, முழுமையான அர்ப்பணிப்பின் மூலம் அவிழ்த்து சிக்கல்கள் இல்லாத மென்மையான கயிறாக மற்றொரு வானதூதரிடம் கையளிக்கின்றார். முடிச்சுக்களின் மாதா அல்லது முடிச்சுக்களை அவிழ்ப்பவர் என்று ஓவியத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார்.

இப்படம் 1700ல் உருவாக்கப்பட்டது. வசதி படைத்த பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் ieronymus  Ambrosius Langenmantel  இன் வேண்டுகோளுக்கிணங்க, St. Peter am Perlach  தேவாலயத்தில் ஸ்தாபகம் செய்யப்பட்டுள்ள அன்னை மரியாளின் படமானது Joh ann Georg Sch midtner   என்னும் பெயருடைய ஓவியரால் வரையப்பட்டது. பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்த Langznmantel இன் தம்பதிகளுக்கிடையேயான சொந்தக் குடும்பப் பிரச்சனைகளை, மரியன்னை தீர்த்து வைத்தார். இந்த நம்பிக்கையின் காரணமாக, மரியன்னையின் படத்தை வரைய இம்மனிதர் இப்பண உதவியைச் செய்தார்.

படத்தின் கீழே ஒரு வானதூதர், மனிதன் ஒருவரை மரியாளிடம் அழைத்துச் செல்வதைக் காண்கின்றோம் . நமது வாழ்க்கையில் உள்ள குழப்பங்கள், சிக்கல்கள் அனைத்தையும் நீக்கவும், நாங்கள் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வருவதற்கும், இறைவனிடம் பரிந்து பேசுவதற்கு அன்னை மரியாளின் உதவியை நாடும்படியும் அவ்வானதூதர் நம்மை அழைத்துச் செல்கின்றார்.

இப்படத்தில் ஒரு வலுவான ஈர்ப்பும், அருட்சியும் உள்ளது. இங்கு கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்களும், பிறமதத்தைச் சேர்ந்த அனைத்து வயதுப் பிரிவினரும், மற்றும் அனைத்து சமூக அமைப்பினரும் தினமும் வந்து தங்கள் கவலைகளை முறையிடுகிறார்கள்.

1985 இல் இத்தேவாலயத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் வருகை தந்ததின் பின் இதன் பக்தி வழிபாடு, தென் அமெரிக்காவில் வெகுவேகமாகப் பரவி உள்ளது. இத்தேவாலயத்திலுள்ள மக்களின் வேண்டுதல்களை பிராத்தனை செய்யும்படி, குறிப்பிடும் பிராத்தனைப் புத்தகத்தில் இருக்கும் குறிப்புகளின்படி, அனைத்துக் கண்டங்களிலிருந்தும், நாடுகளிலிருந்தும் பக்தர்கள், வழிபாட்டாளர்கள் துன்பக்கட்டுக்களை அவிழ்க்கும் அன்னை மரியாவை நோக்கி வருவதைக் காட்டுகின்றது. மீண்டும் மீண்டும் இவ்வன்னையின் வழிகாட்டுதலும், அவர் முன் பிராத்தனை செய்யும் ஆசையும் சமீபத்தில் ஏராளமாக வெளிப்பட்டுள்ளது.

ஆகவே இதை நிறைவேற்றும் விதமாக துன்பக்கட்டுகளை அவிழ்க்கும் அன்னையின் நவநாள் செபம், இதே தேவாலயத்தின் பொறுப்பாளர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து சமூகங்களும் இவ்வன்னையின் நவநாள் செபத்தை செபிப்பதன் மூலம், தங்கள் இறைநம்பிக்கையை அனைவரும் மேலும் வளர்த்துக் கொள்ள முடியும். அத்துடன் அன்னைமரியாளின் பரிந்துரையையும் நிறைவாகப் பெறமுடியும்.தொடக்கச் செபம்

இறiவா! நாங்கள் உம்மைப் புகழ்கிறோம் . எங்கள் வாழ்க்கையின் காவலரே!
நீரே எனக்கு எல்லாமாக இருக்கின்றீர். உமது படைப்பின் மூலம் எனக்கு அனைத்தையும் வெளிப்படுத்துகின்றீர். மனித குலத்தின் படைப்பும் பாதுகாப்பும், உம்மிடம் ஒப்படைக்கப்பட்டு, அனைத்துமே உமது அனுமதியில் உருவாக்கப்பட்டிருக்கிறது என ஏற்றுக் கொள்கிறேன், நம்புகிறேன். என்னை உருவாக்கியவர் நீர் மட்டுமே. உமது படைப்பில் நான் பணியாற்றவேண்டும். நீர் எம்மை விட்டுவிடாமல் எமக்கு எல்லாமுமாக இருந்தும், நாம் சிறிதும் மனந்திரும்பாமல் பாவத்தில் விழுகின்றோம் .

இறைவன் தம்மைக் காணவும், அவரை அடையவும் இந்த நாட்களை எமக்குத் தந்து உதவுகிறார். தனது அன்பை நாங்கள் அனுபவிப்பதற்கும், நம்புவதற்கும் தம் ஒரே மகனை அபிசேகம் செய்து இவ்வுலகிற்கு அனுப்பினார்.

எங்களுடைய அன்பினாலும், இரக்கசெயல்களினாலும் அவரை நாங்கள் கண்டுணர முடியும். வார்த்தை மனுவுருவாகி, கன்னிமரியிடமிருந்து பிறந்தார். இறைவனின் திருச்சித்தத்திற்கு பணிந்து பரிசுத்த ஆவியின் வல்லமையாலும், அன்பினாலும் மரியாள் இறைவனின் தாயானார். இயேசு என்று அழைக்கப்பட்ட இவரே, எம் மீட்பர் என்பது உறுதியாகும். இவர் வழியாக எல்லாம் வல்ல இறைவா! உம்மைப் போற்றுகின்றோம் . ஆராதிக்கின்றோம் .

இறுதிச் செபம்

பரிசுத்த தேவனே உமக்கு நன்றி! நீர் அன்னை மரியாளுக்கு உமது கிருபையைக் கொடுத்துள்ளீர். தமது ஒரே மகனை உலகிற்கு கொடுக்கும் திட்டத்தை தைரியமாக முழுமனத்தோடு"ஆம்" என்ற ஒரு வார்த்தையின் மூலம் தனது பங்களிப்பை அளித்தார். ஆகவே உமது மகனாகிய இயேசுவின் மீட்புத் திட்டத்தில் அன்னை மரியாள் இணைந்திருக்கின்றார். அவர் இயேசுவின் உலக வருகையில் இணைத்துக் கொள்ளப்பட்டபோது புனித யோசேப்பினால் பாதுகாக்கப்பட்டார். இயேசுவின் இறப்பின் இறுதி மணித்துளிகளின்போது அவருடன் கூடவே நம்பிக்கையுடன் இருந்தார்.

அன்னைமரியாள் மக்கள் மத்தியில் இருந்து பரிசுத்த ஆவியின் வருகைக்காக எந்நேரமும் இறைவேண்டலில் ஈடுபட்டிருந்தார். அவர் விண்ணகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு மாட்சிமைப்படுத்தப்பட்டார் என்பதை விசுவசிக்கின்றோம். நாமும் எமது வாழ்க்கையில் கடவுளிடமிருந்து வரும் அனைத்திற்கும் "ஆம்"என்ற பணிவின் மூலம் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு, அன்னை மரியாளைக் கடவுளின் தாயாகவும், எங்கள் விசுவாசத்தின் சகோதரியாகவும் ஏற்றுக் கொள்கிறோம் .

கட்டுக்களை அவிழ்க்கும் தாயே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.


                                                   முதலாம் நாள் செபம்

கடவுள் மனிதனாக அவதரிப்பதை அன்னை மரியாள் ஏற்றுக்கொண்டார்;

பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே! ஆமென்.

தொடக்க செபம்......

மரியாளுக்கு ஒரு பாடல்


தாயே நான் உம்மை எந்நேரமும் அன்பு செய்கின்றேன்.

நற்செய்தி (லூக்:1:35-38)
வானதூதர் அவரிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில் கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்றார். பின்னர் மரியா, "நான் ஆண்டவரின் அடிமை உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

நற்செய்திப் பகுதியை அமைதியாக சிந்தித்து தியானித்தல்

செபமாலை ஒரு காரணிக்கம்

அன்னை மரியாள் பரிசுத்த ஆவியினால் ஆட்கொண்டதைத் தியானிப்போம்.

செபம்:
பரிசுத்த கன்னிமரித்தாயே! நீர் கடவுளின் வார்த்தையில் நம்பிக்கை வைத்து திறந்த மனதுடன் அதை ஏற்றுக் கொண்டீர். உமது வாழ்க்கைப் பாதை கஸ்டங்கள், பிரச்சனைகள், சோதனைகள் நிறைந்ததாய் இருந்தாலும், இறைவனில் நம்பிக்கை வைத்து புத்துணர்வுடன் இருந்தீர்.   ஆகவே துன்பமுடிச்சுக்களை அவிழ்க்கும் தாயே!
- எல்லாப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்காக பொறுமையுடனும், மகிழ்வுடனும் தங்களைத் தயார்படுத்தவும்.
- பிள்ளைகளினதும் இளைஞர்களினதும் எதிர்கால வாழ்வு நல்ல முறையில் அமையவும்.
- எங்கள் குடும்பங்களின் சகல தேவைகளும் நிறைவேறவும் வேண்டும் என்று தாயே உம்மை மன்றாடுகிறோம் ..

சொந்தக் கருத்துகளுக்காக வேண்டுதல் செய்வோம்.
அனைத்துத் தேவைகளையும் உம்மிடம் கொண்டு வருகிறேன். கட்டுக்களை அவிழ்க்கும் பரிசுத்த தாயே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மரியாளுக்கு ஒரு பாடல்

இறுதிச் செபம்:


இரண்டாம் நாள் செபம்

அன்னை மரியாள் எலிசபேத்தைச் சந்தித்தது.

பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே! ஆமென்.

தொடக்க செபம்......

மரியாளுக்கு ஒரு பாடல்


நான் இறைவனைப் போற்றுகிறேன். இறைவனில் என் உள்ளம் மகிழ்ச்சி அடைகின்றது.

நற்செய்தி (லூக்:1:39-41)
அதன்பின் மரியா புறப்பட்டு யு+தேயா மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.
மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூயஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.

நற்செய்திப்பகுதியை அமைதியாக சிந்தித்து தியானித்தல்

செபமாலை ஒரு காரணிக்கம்


அன்னை மரியாள் எலிசபேத்தை சந்தித்ததை தியானிப்போம்.

செபம்:
பரிசுத்த மரியே! கடவுளின் தாயே! உமது உறவிளனான எலிசபேத்தின் கர்ப்பகால இறுதியில் அவளுக்கு உதவி செய்ய கடினமான மலைப்பாதைகளைக் கடந்து சென்று வாழ்த்தினீரே, ஆனால் அவர் உம்மைக் கடவுளின் தாயார் என்று உம்மைப் போற்றி ஊக்கமுடன் வாழ்த்தினார்.
ஆகவே முடிச்சுக்களின் தாயே! உம்மிடம் நான் கேட்பது:
- அனைத்துப் பெற்றோரும் தங்கள் கர்ப்ப காலத்தை மகிழ்ச்சியுடன் கழிக்கவும், அந்த நேரங்களில் அவர்களுக்கு நீரே உதவியாக இருக்கவேண்டும்.
- அனைத்து கர்ப்பிணித் தாய்மாருக்கும் உதவி செய்பவர்கள் அவர்களை பாதுகாப்புடன் பராமரிக்க அருள் புரியவேண்டும்.
- எல்லாத் தாய்மாரும் பிரசவத்தின்போது ஏற்படும் அதிகசுமை வலிகளை ஏற்று, அந்நேரத்தில் கடவுளின் கிருபையை நினைத்து சந்தோசமடைய அருள் புரியவேண்டும்.

சொந்தக் கருத்துகளுக்காக வேண்டுதல் செய்வோம்.
அனைத்துத் தேவைகளையும் உம்மிடம் கொண்டு வருகிறேன். கட்டுக்களை அவிழ்க்கும் பரிசுத்த தாயே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மரியாளுக்கு ஒரு பாடல்
அருள் நிறை மரியே! நீர் முழுவதும் கருணை உள்ளவராய் இருக்கின்றீர்.

இறுதிச் செபம்

மூன்றாம் நாள் செபம்

கன்னிமரியிடமிருந்து இயேசு பிறந்தது.

பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே! ஆமென்.

தொடக்க செபம்......

மரியாளுக்கு ஒரு பாடல்


இயேசுக்கிறீஸ்துவைப் புகழ்வோம்.

நற்செய்தி (லூக்:2:4-7)
தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யு+தேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது.
அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.

நற்செய்திப்பகுதியை அமைதியாக சிந்தித்து தியானித்தல்

செபமாலை ஒரு காரணிக்கம்


இயேசுக்கிறீஸ்து கன்னிமரியிடமிருந்து பிறந்ததை தியானிப்போம்.

செபம்:
பரிசுத்த மரியே! நீர் இரட்சிப்பின் தாய்! உம்மிடமிருந்து கடவுளின் குமாரன் பிறந்தார். இவர் வழியாக இறைவனின் வார்த்தை மனிதனானார். உலக மீட்பர் தொழுவத்தில் பிறந்ததன் வழியாக பூமி இரட்சிக்கப்பட்டது. உமது மகனின் பாதையில் செல்வதற்கு ஆரம்பத்தில் இருந்தே நீர் தாயாராக இருந்தீர்.
ஆகவே முடிச்சுக்களின் தாயே! உம்மிடம் நான் கேட்பது:
- பாதுகாப்பற்ற சூழலில் பிறந்த பிள்ளைகள் அனைவரும் பாதுகாப்பாக வாழவேண்டும்.
- உடல் ஊனமுற்ற பிள்ளைகளின் பெற்றோர் அனைவரும் தங்கள் பிள்ளைகள்; கடவுளின் கொடைகள் என்ற எண்ணங்களுடன் அவர்களை அன்பு செய்ய வேண்டும்.
- துன்பப்படும் குடும்பத்தினர் அனைவருக்கும் அவர்களுக்கு தேவைப்படும் உதவிகள் கிடைக்கவேண்டும்.

சொந்தக் கருத்துகளுக்காக வேண்டுதல் செய்வோம்.
அனைத்துத் தேவைகளையும் உம்மிடம் கொண்டு வருகிறேன். கட்டுக்களை அவிழ்க்கும் பரிசுத்த தாயே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மரியாளுக்கு ஒரு பாடல்

இறுதிச் செபம்நான்காம் நாள் செபம்

இயேசுவைக் கோவிலிலே காணிக்கையாக ஒப்புக் கொடுத்தது.

பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே! ஆமென்.

தொடக்க செபம்......

மரியாளுக்கு ஒரு பாடல்


இயேசுவே நான் உமக்கு முன்பாக வெறுமையாக நிற்கிறேன்.

நற்செய்தி (லூக்:2:33-35)
குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர்.
சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, "இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" என்றார்.

நற்செய்திப்பகுதியை அமைதியாக சிந்தித்து தியானித்தல்

செபமாலை ஒரு காரணிக்கம்


கன்னி மரியாள் இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததை தியானிப்போம்.

செபம்:
பரிசுத்த மரியே! இயேசுவின் தாயே! தன் குழந்தையை புகழ்வதைக் கேட்டு எந்தத் தாய் மகிழ்ச்சியடையாமல் இருப்பாள். கடவுளால் வாக்களிக்கப்பட்ட மெசியா இவரே! இவரின் இரட்சிப்பின் பாதை கரடு முரடானதாகவும், கடினமானதாகவும் இருக்கும் இப்பாதையில் பயணிக்க அன்னையாகிய நீரும் சேர்க்கப்பட்டுள்ளீர் என்ற வார்த்தை சிமியோன் கூறக்கேட்டீர்.
ஆகவே முடிச்சுக்களின் தாயே! உம்மிடம் நான் கேட்பது:
- அனைத்து மக்களினதும் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள், துன்பங்கள் வெளிப்படும்போது, உமது வலிமையையும், தைரியத்தையும் அவர்களுக்கு அளித்தருளும்.
- தொண்டு நிறுவனங்களிலும், மற்றைய நிறுவனங்களிலும் பணிபுரியும் அனைத்து மக்களும் கௌரவமாக நடத்தப்படவும், அவர்கள் மற்றவர் தேவைகளில் பொறுமை விடாமுயற்சியுடன் நடந்து கொள்ளவும் உதவி புரியும்.
அனைத்து மத நம்பிக்கைகளுடனும் வாழும் மக்கள் மற்றைய மதம் சார்ந்தவர்களால் துன்புறுத்தப்படவும், மரண அச்சுறுத்துதல் இல்லாமலும் வாழ உதவி புரியும்.

சொந்தக் கருத்துகளுக்காக வேண்டுதல் செய்வோம்.
அனைத்துத் தேவைகளையும் உம்மிடம் கொண்டு வருகிறேன். கட்டுக்களை அவிழ்க்கும் பரிசுத்த தாயே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மரியாளுக்கு ஒரு பாடல்

இறுதிச் செபம்


ஐந்தாம் நாள் செபம்

எகிப்து நாட்டிற்கு தப்பிச் செல்லுதல்.

பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே! ஆமென்.

தொடக்க செபம்......

மரியாளுக்கு ஒரு பாடல்


கடவுள் செய்வது அனைத்தும் நல்லதாகவே அமையும்.

நற்செய்தி (மத்;:2:13-14)
அவர்கள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, "நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்" என்றார்.
யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.

நற்செய்திப்பகுதியை அமைதியாக சிந்தித்து தியானித்தல்

செபமாலை ஒரு காரணிக்கம்


இயேசுவைப் பாதுகாப்பதற்கு கன்னிமரியாள் அடைந்த கவலையைத் தியானிப்போம்.

செபம்:
பரிசுத்த மரியே! இயேசுவின் தாயே! இவ்வுலகத்தின் ஆட்சியாளர் தங்கள் செல்வாக்கு பற்றிய அச்சம் காரணமாக நீர் உமது கணவராகிய யோசேப்புடன் குழந்தை இயேசுவைப் பாதுகாப்பதற்கு தூரதேசத்திற்கு வெளியேறினீர். நாட்டைவிட்டு வெளியேறுதல் பற்றிய கவலையும், அச்சமும் அதிக மக்களுக்கு சிந்திக்க மட்டுமே முடியும். அது எவ்வளவு கடினமானது என்று சில மக்களுக்கு இன்றைய நாளில் தெரிகின்றது.  ஆகவே முடிச்சுக்களின் தாயே! உம்மிடம் நான் கேட்பது:
- நாடு நாடாக இடம் பெயரும் மக்களை அவர்கள் பயத்தைப் போக்க மனிதர்களும் நிறுவனங்களும் உருவாக உதவி செய்யும்.
- நாடுகளில் இருக்கும் அரசாங்கங்கள் அகதிகளாக வரும் மக்களை அரவணைக்கும் சட்டங்களைக் கொண்டுவர உதவி புரியும்.
- உலகத்தில் அதிகாரத்தில் உள்ளோர் தங்கள் சிந்தனைகளிலிருந்து மாறுபட்டு அகதிகளாக வருபவர்க்கு உதவும் மனம் வர அருள் புரியும்.

சொந்தக் கருத்துகளுக்காக வேண்டுதல் செய்வோம்.
அனைத்துத் தேவைகளையும் உம்மிடம் கொண்டு வருகிறேன். கட்டுக்களை அவிழ்க்கும் பரிசுத்த தாயே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மரியாளுக்கு ஒரு பாடல்

இறுதிச் செபம்


ஆறாம் நாள் செபம்

இயேசு பன்னிரண்டு வயதில் காணாமல் போய் கண்டடைந்தது.

பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே! ஆமென்.

தொடக்க செபம்......

மரியாளுக்கு ஒரு பாடல்


பரிசுத்தர்! பரிசுத்தர்! ஆண்டவரே நீர்; பரிசுத்தர்!

நற்செய்தி (லூக்:2:46:48-49)
மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார். அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, "மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே" என்றார். அவர் அவர்களிடம் "நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?" என்றார்.

நற்செய்திப்பகுதியை அமைதியாக சிந்தித்து தியானித்தல்

செபமாலை ஒரு காரணிக்கம்


கன்னிமரியாள் இயேசுவைக் கோவிலில் கண்டடைந்ததை தியானிப்போம்.

செபம்:
பரிசுத்த மரியே! இறைவனின் தாயே! நீரும் உமது பக்தாவாகிய சூசையும் மூன்று நாட்களாக பணத்துடன் இயேசுவைத் தேடினீர்கள். பிள்ளைகள் இருக்கும் பெற்றோருக்கு விளங்கும், இது எவ்வளவு துன்பமும், மனச்சஞசலமும் அளிக்கும் என்று. ஆனாலும் உமக்கு கொஞசம் கொஞ்சமாகத் தெரியவேண்டும், இயேசு உமது மகன் மட்டுமல்ல, அதற்கும் உயர்வானவர் என்றும், அவர் உமக்குச் சொந்தமானவர் மட்டுமல்ல, இந்த உலகத்தை இரட்சிக்க வந்த மீட்பர் என்றும் தெரியப்படுத்தினார்.
ஆகவே முடிச்சுக்களின் தாயே! உம்மிடம் நான் கேட்பது:
- பிள்ளைகளைப்பற்றி கவலைப்படும் குடும்பத்தினருக்கு நிறைவான ஆறுதலையும், பிள்ளைகள் பற்றி பெற்றோரும், பெற்றோர் பற்றி பிள்ளைகளும் சரியான புரிந்துணர்வுடன் இருக்க அருள்புரியும்
- இணைந்து வாழும் குடும்பங்கள் போதுமான புரிந்துணர்வுடன் வாழ்ந்து, அவர்கள் ஒருவர் ஒருவருடன் பேசவும், கேட்கவும் தயாராக அருள்புரியும்.
- குடும்பங்களில் உள்ள பிள்ளைகளை வழி நடத்தும், பராமரிக்கும் அனைத்து உறுப்பினர்களும், நிறுவனங்களும் பொறுப்புடனும், அன்புடனும் நடந்து கொள்ள உதவிபுரியும்.

சொந்தக் கருத்துகளுக்காக வேண்டுதல் செய்வோம்.
அனைத்துத் தேவைகளையும் உம்மிடம் கொண்டு வருகிறேன். கட்டுக்களை அவிழ்க்கும் பரிசுத்த தாயே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மரியாளுக்கு ஒரு பாடல்
அருள் நிறை மரியே! நீர் முழுவதும் கருணை உள்ளவராய் இருக்கின்றீர்.

இறுதிச் செபம்

ஏழாம் நாள் செபம்

இயேசு சிலுவையில் அறையப்பட்டது.

பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே! ஆமென்.

தொடக்க செபம்
......

மரியாளுக்கு ஒரு பாடல்


வலியுடன் இருந்த இயேசுவின் தாய்

நற்செய்தி (யோவா: 19:25-27)

சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், "அம்மா, இவரே உம் மகன்" என்றார். பின்னர் தம் சீடரிடம், "இவரே உம் தாய்" என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.

நற்செய்திப் பகுதியை அமைதியாக சிந்தித்து தியானித்தல்.

செபமாலை ஒரு காரணிக்கம்


இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டதை தியானிப்போம்.

செபம்:
பரிசுத்த மரியே! இறைவனின் தாயே! ஒருதாய் தன் பிள்ளையின் இறப்பைப் பார்ப்பது எவ்வளவு வலி. அதைவிடப் பெரிய வலி, மக்கள் மேல் அன்பு வைத்திருந்த தன் மகன் குற்றவாளியைப்போல் சிலுவையில் அறையப்பட்டது. அந்த நேரத்திலும்கூட அவர் தன் அன்பை உம்மேல் காட்டினார்.

ஆகவே முடிச்சுக்களின் தாயே! உம்மிடம் நான் கேட்பது:
- பிள்ளைகளை இழந்துபோகும் அனைத்துப் பெற்றோர்களும் அதன் வலியில் இருந்து விடுபட அருள்புரியும்.
- இவ்வலிகளில் இருந்து வெளியேற முடியாத பெற்றோர்களுக்கு நீரே துணையும் உதவியுமாக இருந்து அருள்புரியும்.
- இந்த இழப்புக்களினால் தனிமைப்படும் அனைவருக்கும் தங்கள் வாழ்க்கையை  திரும்பச் சீராக்க நீரே உதவிபுரியூம்.

சொந்தக் கருத்துகளுக்காக வேண்டுதல் செய்வோம்.
அனைத்துத் தேவைகளையும் உம்மிடம் கொண்டு வருகிறேன். கட்டுக்களை அவிழ்க்கும் பரிசுத்த தாயே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மரியாளுக்கு ஒரு பாடல்

அருள் நிறை மரியே! நீர் முழுவதும் கருணை உள்ளவராய் இருக்கின்றீர்.

இறுதிச் செபம்

எட்டாம் நாள் செபம்

பரிசுத்த ஆவியின் வருகை

பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே! ஆமென்.

தொடக்க செபம்
......

மரியாளுக்கு ஒரு பாடல்


படைப்பின் ஆவியே வருக!

நற்செய்தி (அப்.பணி.1,12-14)
பின்பு அவர்கள் ஒலிவ மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பினார்கள். இம்மலை எருசலேமுக்கு அருகில், ஓய்வு நாளில் செல்லக்கூடிய தொலையில் உள்ளது. பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா, பிலிப்பு, தோமா, பர்த்தலமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதியான சீமோன், யாக்கோபின் மகன் யுதா ஆகியோர் திரும்பி வந்தபின் தாங்கள் தங்கியிருந்த மேல்மாடிக்குச் சென்றார்கள். அவர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்.

நற்செய்திப் பகுதியை அமைதியாக சிந்தித்து தியானித்தல்

செபமாலை ஒரு காரணிக்கம்


பரிசுத்த ஆவியானவர் எழுந்தருளியதைத் தியானிப்போம்.

செபம்:
பரிசுத்த மரியே! வணக்கத்துக்குரிய தாயே! நீர் உமது மகன் பரலோகத்துக்கு எழுந்தருளியபின் அப்போஸ்தலர்களுடனும், சீடர்கள், பெண்களுடனும் புதிய நம்பிக்கையுடன் ஒரே இடத்தில் இருந்து பரிசுத்தஆவியின் வருகையை எதிர்பார்த்து ஒரே மனதாகச் செபித்தீர்கள். இறைவன் இயேசுவின் வாக்குறுதியின்படி பரிசுத்த ஆவியின் வல்லமை அனைவரின் மேலும் அருளப்பட்ட அக்கணமே உங்கள் அச்சங்கள் பயங்கள் அகன்று உங்கள் உள்ளக்கதவுகள் திறக்கப்பட்டது.
ஆகவே முடிச்சுக்களின் தாயே! உம்மிடம் நான் கேட்பது:
- எல்லா ஆலயங்களிலும் ஒவ்வொரு நேரங்களிலும் அதன் தன்மை அறிந்து வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ள அருள்புரியும்
- பரிசுத்த பாப்பரசர் மற்றும் ஆயர்கள் குருக்கள், துறவிகள், கன்னியர் அனைவரும் இதே வெளிப்படைத் தன்மையுடன் மக்களை அன்பு செய்து வாழ அருள்புரியும்.
- மக்கள் அனைவரும் கடவுளின் படைப்பாளிகள் என்ற எண்ணக் கருவை மனதில் இருத்தி அவர்கள் நல்ல முறையில் வழிநடத்தப்பட அருள்புரியும்.

- சொந்தக் கருத்துகளுக்காக வேண்டுதல் செய்வோம்.
அனைத்துத் தேவைகளையும் உம்மிடம் கொண்டு வருகிறேன். கட்டுக்களை அவிழ்க்கும் பரிசுத்த தாயே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மரியாளுக்கு ஒரு பாடல்

இறுதிச் செபம்

ஓன்பதாம் நாள் செபம்

மரியாள் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே! ஆமென்.

தொடக்க செபம்......

மரியாளுக்கு ஒரு பாடல்

நாங்கள் மனமகிழ்ச்சி அடைகிறோம்  அல்லேலூயா

நற்செய்தி (எபே: 1:17,20-22)
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும், மாட்சி மிகு தந்தையுமானவர். அவரை முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ளுமாறு ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாரக!
கடவுள் வலிமைமிக்க தம் ஆற்றலை, கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, இறந்த அவரை உயிர்த்தெழச் செய்து, விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்ந்தினார். அதன் மூலம் ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர், வல்லமை உடையோர், தலைமை தாங்குவோர் ஆகிய அனைவருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார். அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச்செய்து, அனைத்துக்கும் மேலாக, அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே அவரது உடல். எங்கும் எல்லாவற்றையும் நிரப்புகின்ற அவரால் அது நிறைவு பெறுகின்றது.

நற்செய்திப்பகுதியை அமைதியாக சிந்தித்து தியானித்தல்

செபமாலை ஒரு காரணிக்கம்


தேவதாயார் பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதை தியானிப்போம்.

செபம்:
பரிசுத்த மரியே! பரலோகத்தின் இராக்கினயே! நீர் இயேசுவை உலகிற்கு அளிக்கச் சித்தமாகி அவரின் வாழ்க்கைப்பயணத்தில் துணை இருந்தீர். இப்பொழுது இயேசு உமக்கும் எல்லா மக்களுக்கும் வாழ்க்கை அளிப்பவராக இருக்கின்றார். வானத்தையும், பூமியையும், கடவுளையும், மக்களையும் நித்தியத்திற்கும் இணைக்கின்றார். நீரும் உமது மகனும் கடவுளின் அரியணையில் வீற்றிருக்கிறீர்கள் என்பது தொடக்கத்திலிருந்தே அறியப்பட்ட உண்மை.
ஆகவே முடிச்சுக்களின் தாயே! உம்மிடம் நான் கேட்பது:
- அனைத்து மனிதர்களும் மற்றைய மனிதர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு தேவையான நம்பிக்கையையும், அன்பையும் கடவுள் கொடுக்க உதவிபுரியும்
- நம்பிக்கையையும் அன்பையும் கொடுக்க முடியாமல் கடினப்பட்ட மனமுடைய அனைத்து மக்களினதும் உள்ளங்கள் திறக்கப்பட அருள்புரியும்.
- எங்கள் ஒவ்வொருவர் மேலும் பரிசுத்த ஆவியின் வல்லமை எந்நேரமும் கிடைக்கப்பெற்று நாங்கள் கடவுளின் நம்பிக்கையுள்ள சாட்சிகளாய் வாழ அருள் புரியும்.

சொந்தக் கருத்துகளுக்காக வேண்டுதல் செய்வோம்.
அனைத்துத் தேவைகளையும் உம்மிடம் கொண்டு வருகிறேன். கட்டுக்களை அவிழ்க்கும் பரிசுத்த தாயே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மரியாளுக்கு ஒரு பாடல்

அருள் நிறை மரியே! நீர் முழுவதும் கருணை உள்ளவராய் இருக்கின்றீர்.

இறுதிச் செபம்


துன்ப முடிச்சுக்களை அவிழ்க்கும் அன்னையிடம் செபம்


கன்னிமரியே! அழகு அன்புத்தாயே!
மன்றாடும் குழந்தையை/
ஒருபோதும் புறக்கணியாத அன்னையே!
உமது திருஇதயத்திலிருந்து/
பெருக்கெடுத்து வழியும் அன்பினாலும்/
முடிவில்லாத இரக்கத்தினாலும்/
குழந்தைகள் எமக்காய் அயராது உழைக்கும்/
திருக்கரங்கள் கொண்ட திருவே/
உமது கருணைப் பார்வையை எம்மீது திருப்பி/
எனது வாழ்வைத் திணறவைக்கும் முடிச்சுக்களைக் கண்ணோக்கியருளும/
எனது துன்பம்/ வலி/
செயலிழக்கச் செய்யும் துன்பமுடிச்சுக்கள்/
அனைத்தையும் நீர் அறிவீர் /
எங்கள் வாழ்க்கை நுர்லில் விழும் முடிச்சுக்களை அவிழ்க்க/
கடவுளிடமிருந்து பொறுப்பு பெற்றதாயே/
உமது திருக்கரங்களில் எனது வாழ்வை ஒப்படைக்கிறேன்/
உமது இரக்கப்பெருக்கை /ஒருபோதும் ஒருவரும்
நிறுத்த முடியாதென்றும்/ உம்மால் அவிழ்க்க முடியாத முடிச்சு/
உலகில் ஒன்றுமில்லை என்றும் நம்புகிறேன்/
வல்லமையின் தாயே/ ஆண்டவர் இயேசுவிடம்
பரிந்து பேசும் உமது பலத்தினால்/ என்னை வாட்டி வதைக்கும்
இச்சிக்கலான துன்பமுடிச்சுகளை/
(அமைதியாக ஒரு நிமிடம் துன்ப முடிச்சுக்களை மனக்கண்முன் கொண்டுவரவும்)
உமது தூய திருக்கரங்களில் பெற்றுக்கொள்ளும்/
தந்தையாம் கடவுளின் உன்னத மகிமை வெளிப்படும்படி/
எனது துன்பமுடிச்சுக்களை/  இப்பொழுதும்/
என்றென்றைக்கும் அவிழ்த்துப்போடும்/
எனக்கு ஆறுதல் வழங்க கடவுளால் அருளப்பட்டவர் நீர் /
எனது பலவீனத்தில் என் வலிமை நீர் /
உம் திருமகன் இயேசுவிடமிருந்து/
என்னைப்பிரிக்கும் சக்திகளை அழிப்பவரும் நீரே
அம்மா எனக்குப் பதில் தாரும்/ பாதுகாத்தருளும்/
வழிநடத்தும்/ காப்பாற்றும்/
ஏனெனில் நீரே என் உறுதியான அடைக்கலம்/
உம்மீது என் நம்பிக்கையை வைக்கிறேன். - ஆமென்.

எங்கள் துன்ப முடிச்சுக்களை அவிழ்க்கும் அன்னையே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

 

எம் குறை தீர்ப்பாயா - எம் நோய் தீர்ப்பாயா..... உம் வழி நடந்திட - நீ துணை வருவாயா.....