தேவாலயத்தில் குழந்தை மாமரி அன்னை
ஒப்புக் கொடுக்கப்படல் |
தேவமாதா எளியவர் மீதும், பாவிகள் மீதும் இரக்கம்
கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு வயதாக இருந்தபோதே, தனக்குக்
கிடைத்ததை பிறருக்கு கொடுத்து மகிழ்ந்தார். ஆசான்களை விட அறிவில்
சிறந்து விளங்கினாலும், ஆசான்களுக்குப் பணிந்து நடந்தார். தேவாலயத்தில்
தன்னை ஒப்படைக்க வேண்டுமென்பதை பெற்றோர் உணர வேண்டுமென்று மன்றாடினார்.
அதனால், பெற்றோர் மனதில் தூண்டுதல் ஏற்பட்டது. இவரை தேவாலயத்தில்
ஒப்படைப்பதற்காக நாசரேத்தை விட்டு எருசலேம் நோக்கிப் பயணம்
மேற்கொண்டனர் தேவ மாதாவின் பெற்றோர். அப்போது வான தூதர்கள்
கூட்டம் கூட்டமாக அவர்களை எதிர் கொண்டு வந்து, இன்னிசைப் பாடல்களை
முழங்கிச் சென்றனர்.
தேவாலயத்தினுள் நுழைந்தவுடன், புனித அன்னம்மாவுக்கு அதிசயக் குரல்
ஒன்று கேட்டது. "நாம் தேர்ந்தெடுத்த புண்ணியவதியே வருக! எனது
ஆலயத்தில் மிகவும் வணக்கத்திற்குரியப் பலிபொருளை எமக்குத் தருக!"
என அக்குரல் மொழிந்தது. அருள் வரங்களிலும், இறை பராமரிப்பிலும்
வளர்ந்த தேவமாதா, தேவாலயத்தில் ஒப்புக் கொடுக்கப்பட்டார்கள்.
குழந்தை தேவ மாதாவை யூதா, லேவி கோத்திரப் பெண்கள் ஒரு மாடி
வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அம்மாடி வீட்டில் பதினைந்து படிகள்
இருந்தன( இந்த பதினைந்து படிகள் பதினைந்து தேவ இரகசியங்களை
குறிக்கிறது, மகிழ்ச்சி, துக்கம், மகிமை ) மென்மையாக கடந்து
சென்றார்.
பெரிய குருவான சிமியோன் குழந்தை தேவமாதாவை அன்னாள் என்னும் இறைவாக்கினியிடம்
ஒப்படைத்தார். புனித அன்னாளின் திருவடிகளைப் பணிந்து, வணங்கிய
குழந்தை தேவ மாதா, தனக்கு ஆன்மீக ஞானத்தைக் கற்பிக்கும்படி
கேட்டுக் கொண்டார்கள். அன்னாளின் வேண்டுகோள்படி பிற அருட்சகோதரிகளை
நேச உணர்வுடன் தழுவி, பாசத்தைப் பரிமாறிக் கொண்டார்கள்.
அதன்பின், பணிவுடன் மாடி வீட்டின் தரையை முத்தம் செய்தார்கள்.
இறைவன் தனக்குச் செய்து வரும் நன்மைகளுக்கு நன்றி கூறினார்கள்.
அதன்பின், குழந்தை மாமரியாள் தனக்குக் காவலாக இருந்து
கொண்டிருந்த பன்னிரு தூதர்களையும் தனது பெற்றோரிடம் அனுப்பி,
அவர்களுக்கு ஆறுதல் கூறி, தேற்றி வரும்படி, கேட்டுக் கொண்டார்கள்.
பன்னிரு தூதர்களும் அவரது பெற்றோரை தேற்றுவதற்காகச் சென்றனர்.
அந்நேரம் இறைவன் குழந்தை மாமரியை காத்து நின்ற மேலும் அறுபது
தூதர்களிடம் அவரை பரலோகத்திற்குத் தூக்கி வரும்படி கூறினார்.
உடனே தூதர்கள் இறைவனின் கட்டளைக்குப் பணிந்து, மாமரியைத்
தூக்கிச் சென்றனர். அந்நேரம் மாமரி அன்னை இறைப் பரவசத்துடன் காணப்பட்டார்கள்.
மாமரி அன்னை இறைவனை மிகுந்தத் தாழ்ச்சியுடன் பணிந்து,
இறைவனின் அன்புக்காக நான் துன்பப்படவும், ஏழ்மையாயிருக்கவும்,
கற்போடிருக்கவும் தேவையான வரங்களைத் தர வேண்டுமென்று" கேட்டார்கள்.
அவரது மன்றாட்டு உடனே கேட்கப்பட்டது. பின் தேவமாதா பரலோக
பேரின்பங்களால் அணி செய்யப்பட்டார்கள். வான தூதர்கள் அங்கு வந்து
கூடினர். அழகு மிகுந்த பீதாம்பரச் சட்டையை அன்னைக்கு கொடுத்தனர்.
வண்ண வண்ண முத்துக்கள் பதித்தக் கச்சையைக் கட்டினர். இவை மாமரியின்
வீரமிக்கப் புண்ணியங்களின் அடையாளமாய் இருந்தன. பின், அவரின்
திருக்கழுத்தில் மூவித மாணிக்கத் தாவட்டத்தைப் பூட்டினர். இது
இறை நம்பிக்கை, இறையன்பு, விசுவாசத்தின் அடையாளமாக அணிவிக்கப்பட்டது.
அவரின் மரகத விரல்களில் ஒளிவீசும் ஏழு மோதிரங்களை அணிவித்தனர்.
அவை பரிசுத்த ஆவியின் ஏழு வரங்களின் அடையாளமாக அமைந்திருந்தன.
மாமரி அன்னை பரலோக, பூலோக அரசி என்பதன் அடையாளமாக இறைவன் அவரது
தலையில் மணிமுடி சூட்டினார்.(அப்போது தேவமாதாவுக்கு வயது 2) மாமரி
அன்னை எல்லாம் வல்ல இறைவனின் மகளும், பரிசுத்த ஆவியின் பத்தினியும்,
மெய்யான ஒளியின் (இயேசு கிறிஸ்து) அன்னையுமாயிருக்கிறார், என்கிற
எழுத்துகள் அவரது ஆடையில் தங்க நிறத்தில் பொறிக்கப்பட்டு இருந்தன.
இங்ஙனம் மாமரி அன்னை பரலோக அழகு சாதனங்களால் அழகூட்டப்பட்டார்கள்.
இயேசுவுக்கு புகழ் !!! மாமரித்தாயே வாழ்க
|
|
|