விண்ணகத்து வெண்ணிலவு பூங்காற்றாய் புலம் பெயர்ந்து
மண்ணகத்தில் தவழ்கின்றது! மனிதமாய் வடிவெடுத்து பனித்துளியாய்
படுத்துக் கிடக்கிறது! இந்த பரிசுத்த ஒளியை தரிசிக்க வாருங்கள்!
வந்து பாருங்கள்! என மார்கழிப் பனியும் மாட்டுக் குடிலும்
போட்டியிட்டு நம்மை வரவேற்கின்றன!
மண்ணும் விண்ணும் புல்லரிக்கச் செய்யும் மகன் பிறக்க இடம் இல்லை
என தாய் தவிக்க...மகர விளக்கோ மாட்டுத் தொழுவத்தில் வெளிச்சமாய்
வெளிவந்தது.
மார்கழிக் குளிரில் மாடடைக் குடிலில், மாமரி மகனாய், புனிதமாய்
மனதமாய் பிறந்த பூபாலனே தாலேலோ தாலேலோ
அமைதியை அவனிக்க அளிக்க மாட்டுத் தொழுவத்தில் அவதரித்த அமைதியின்
தெய்வத்தை தொழுவோம்... இந்த மகர விளக்கு வெளிச்சம் சிந்த நம்
மனதுக்குள் இடம் கொடுப்போம். வளர்பிறையாய் மகிழ்ச்சி, அன்பு,
அமைதி, நேர்மை, நீதி, நிம்மதி, சமாதானம் காணுமிடமெல்லாம் உலகில்
உலாவரட்டும்.
கிறிஸ்மஸ் பரிசாக இந்த திருப்பலி பாலன் யேசுவிடம் அமைதியையும்
அன்பையும், நம் குடும்பங்களுக்கு சிபாரிசு செய்யட்டும்...நமது
மனசும் பாலன் யேசுவிடம் திருப்பலியில் பக்தியோடு பதியட்டும்...
1. மண்ணில் வந்த விண் நிலவே பாலனே!
திருப்பீட பணியாளர்கள் பூமியைப் புரட்டிப் போடும் தப்பெண்ணங்களை
நற்செய்தியால் அகற்ற அருள்கேட்டு மன்றாடுகிறோம்.
2. பூங்காற்றாய் பூமிக்கு வந்த பாலனே!
உலக நாடுகளில் அமைதிப் பூங்காற்றை அவதரிக்கச் செய்யும்
கருவிகளாக நாடுகளின் தலைவர்கள் செயல்பட அருள் கேட்டு
இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. பனித்துளியாய் படுத்துக் கிடக்கும் பாலனே!
பணித்தளங்களில் உம் பிறப்பை சிறப்பிக்கும் வழிபாட்டுக்
கொண்டாட்டங்களால் மக்கள் உள்ளத்தை மகிழச் செய்ய பங்கில்
உள்ள எல்லா பங்குத் தந்தையருக்கும் அருள் கேட்டு இறைவா
உம்மை மன்றாடுகிறோம். 4. மண்ணையும் விண்ணையும் புல்லரிக்கச் செய்யும்
பூபாலனே!
இந்த இரவு வேளையில் எங்கள் உள்ளங்களை புல்லரிக்கச்
செய்யும் புனிதமிகு செயல்களை நாங்கள் விரும்பிக்
கேட்கும் வரங்களாக தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. புது நிலவே பூபாலனே என் இறைவா!
இந்த இரவு வேளையில் கனத்த இதயத்தோடு இடமின்றி பனியால்
பிணியால் பல்வேறு தொல்லைகளால் இருளில் வாடுவோருக்கு உம்
நிம்மதி ஒளி புதுநிலவாய் உதிக்கச் செய்ய அருள் கேட்டு
இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா
O.S.M.
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி
கிறிஸ்து பிறப்பு பெருவிழா
(நள்ளிரவுத் திருப்பலி)
I. எசாயா 9:2-4,6-7 II. தீத்து 2:11-14 III. லூக்கா 2:1-14
ஒளி-மகிழ்ச்சி-பயணம்
மிகவும் பரிச்சயமான கதை ஒன்றுடன் தொடங்குவோம். பார்வையற்ற
நபர் ஒருவர் ஜென் துறவி ஒருவரைச் சந்திக்க மாலை வேளையில்
சென்றார். 'என்ன இந்த மாலை மங்கும் வேளையில்?' எனக்
கேட்கிறார் துறவி. 'பார்வையற்ற நபருக்குக் காலையும் இருள்தான்,
மாலையும் இருள்தான்!' என்கிறார் வந்தவர். போதனை முடிந்து
புறப்படுகிறார் பார்வையற்ற நபர். துறவி அவரிடம் ஒரு கைவிளக்கைக்
கொடுத்து, 'இதை எடுத்துச் செல்லுங்கள், இரவாயிற்று!' என்கிறார்.
'இது என்ன?' எனக் கேட்கிறார் வந்தவர்.
'கைவிளக்கு!'
'பார்வையற்ற எனக்கு விளக்கு எதற்கு?'
'விளக்கு, உனக்கு அல்ல. உன் எதிரில் வருபவருக்கு. நீ மோதாமல்
இருக்க அல்ல. உன்மேல் எவரும் மோதிவிடாமல் இருப்பதற்கு!'
ஞானம் பெற்றார் வந்தவர்.
கொஞ்ச நேரம் கண்களை மூடுங்களேன். மூடிய நீங்கள் அப்படியே
கண்கள் மூடியவாறு இங்கும் அங்கும் வேகமாக நடங்களேன்! மூடியபடி
நடப்பதா? வேகமாக நடப்பதா? - இதுதான் நம் கேள்வியாக இருக்கும்.
'காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்.
சாவின் நிழல்சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல்
சுடர் ஒளி விதித்துள்ளது!' எனத் துள்ளிக் குதிக்கிறார்
எசாயா (முதல் வாசகம்). காரிருளில் எப்படி நடக்க முடியும்?
அதாவது, காரிருள் சூழ்ந்த இடத்தில் இருப்பவர்கள் எங்கும்
நகராமல் தேக்க நிலையில் இருந்தனர். சாவின் நிழல்
சூழ்ந்திருந்ததால் மக்கள் எங்கும் செல்லாமல் படுத்த
இடத்திலேயே கிடந்தனர். அதாவது, திடீர்னு இப்ப மின்சாரம்
கட் ஆகி, மீண்டும் வந்தால் நம் முகத்தில் சிரிப்பு வருவது
போல, அன்று இருளில் இருந்தவர்களுக்கு ஒளி வருகின்றது.
கிறிஸ்து பிறப்பு தருகின்ற முதல் செய்தி ஒளி. மங்கள
வார்த்தை திருநாளிலிருந்து ஒன்பது மாதங்கள் கழித்து
என்பதாலும், குளிர்காலத்தில் தூரத்தில் தெரியும் கதிரவன்
தங்கள் அருகில் வந்து தங்களுக்கு ஒளி தர வேண்டும் என்று
மன்றாட வேண்டும் என்னும் உரோமை வழக்கத்தாலும் கிறிஸ்து
பிறப்பு டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், லூக்கா நற்செய்தியாளர் பதிவு
செய்துள்ள கிறிஸ்து பிறப்பு நிகழ்வை வாசிக்கக் கேட்டோம்.
இன்று கிறிஸ்து பிறப்பு நிகழ்வுகளை நம் தொழில்நுட்பப்
பின்னணியில் வாசித்தால், இந்த நிகழ்வில் எந்தவொரு
லாஜிக்கும் இல்லாதது போன்று தோன்றும்! 'பெயரைப் பதிவு
செய்ய மரியாவும் யோசேப்பும் நீண்ட பயணம் செய்தவற்குப்
பதிலாக, அவர்கள் கூகுள் ஃபார்ம் வழியாகப் பதிவு
செய்திருக்கலாம்! அல்லது ஆதார் எண்களைக் கொண்டு மக்கள்
தொகையைக் கணக்கிட்டிருக்கலாம்! சத்திரத்தில் இடம்
கிடைக்காமல் போகலாம் என்ற காரணத்தால் மேக்-மை-ட்ரிப்
வழியாக இடம் புக்கிங் செய்திருக்கலாம்! கீழ்த்திசை ஞானியர்
கூகுள் மேப் பயன்படுத்தி எளிதாக வந்திருக்கலாம்!' அன்றைய
நிகழ்வுகள் இன்றைய காதுகளுக்குப் புதிதாகவே இருக்கின்றன.
வெளிப்படுத்தும் வார்த்தைகள் இன்று வேறு என்றாலும்
உணர்வுகள் என்னவோ ஒன்றாகவே இருக்கின்றன. கிறிஸ்து பிறப்பு
இரவின் குளிர் மற்றும் அமைதி நம்மை அறியாமலேயே நம்மைத்
தழுவிக் கொள்ளவே செய்கின்றது.
கிறிஸ்து பிறப்பு நிகழ்வு தரும் செய்தியைத் தருகின்ற
இன்றைய நற்செய்தி வாசகத்திலிருந்து அன்றைய சமூக, அரசியல்,
பொருளாதார நிலையை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது: (அ)
அரசியல் தளத்தில், கர்ப்பிணிப் பெண்களும் நீண்ட தூரம்
பயணம் செய்து பெயரைப் பதிவு செய்ய வேண்டும் என்று
கட்டளையிடும அதிகாரத்தின் கொடுங்கோண்மை.
(ஆ) சமூகத் தளத்தில், தேவை என்று வந்த ஒருவருக்கு
சத்திரத்தில் இடம் ஒதுக்கிக் கொடுக்க இயலாத மக்களின்
கண்டுகொள்ளாத்தன்மை.
(இ) பொருளாதாரத் தளத்தில், இரவெல்லாம் தூக்கம் மறந்து
கிடைக்குக் காவல் காக்கும் தொழில் செய்யும் ஆடு
மேய்ப்பவர்களின் கையறுநிலை.
இப்படிப்பட்ட தளத்தில்தான் கிறிஸ்து பிறப்பு நிகழ்வு
நடந்தேறுகிறது.
இந்நிகழ்வு தருகின்ற முதல் செய்தி, 'ஒளி.' முதல்
வாசகத்திலும், நற்செய்தி வாசகத்திலும், 'ஒளி' என்னும்
அடையாளம் மிகவும் அழுத்தமாக முன்மொழியப்படுகிறது. முதல்
வாசகத்தில், மக்கள் 'பேரொளியைக் காண்கின்றனர்,'
'அவர்கள்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது.' ஆக, ஒளி வந்தவுடன்
அவர்கள் வாழ்வில் இயக்கமும் உற்சாகமும் வந்துவிடுகிறது.
நற்செய்தி வாசகத்தில், வயல்வெளியில் ஆண்டவரின் மாட்சி
இடையர்களைச் சுற்றி ஒளிர்கிறது.
யோவான் நற்செய்தியாளரும் உருவகமாக (பகல் திருப்பலி
நற்செய்தி வாசகம்), 'அவரிடம் வாழ்வு இருந்தது. அவ்வாழ்வு
மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளில்
ஒளிர்ந்தது. இருள் அதன்மேல் வெற்றிகொள்ளவில்லை ... அனைத்து
மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு
வந்துகொண்டிருந்தது' (யோவா 1:5,9) என்று பதிவு
செய்கின்றார். தன் பணிவாழ்வில் இயேசு தன்னையே உலகின் ஒளி
என்று அறிக்கையிடுகின்றார்.
இருளில் இருப்பவர்தான் ஒளியின் பொருளை உணர முடியும்.
படைப்பின் தொடக்கத்தில் ஆண்டவராகிய கடவுள் முதன் முதலாக
ஒளியை உண்டாக்குகின்றார். விடுதலைப் பயண நூலில் இரவில்
நெருப்புத் தூணாக ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களோடு
வழிநடக்கின்றார். இவ்வாறாக, கடவுளின் உடனிருப்பு ஒளியின்
வழியாக வெளிப்படுத்தப்படுகின்றது. இன்று நம்மைச் சுற்றி
விண்மீன்கள், ஒளிவிளக்குகள், மெழுகுதிரிகள்
ஒளிர்ந்துகொண்டிருக்கின்றன. கிறிஸ்து பிறப்பின் இரவில்
நின்றவர்களாக நாம் ஒளியை உணர்கின்றோம்.
'பொழுது புலர்ந்து விடிவெள்ளி உங்கள் இதயங்களில் தோன்றும்
வரை அது இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கைப் போன்றது' என்று
தன் திருஅவைக்கு எழுதுகின்றார் பேதுரு (2 பேது 1:19).
அதாவது, கிறிஸ்து என்னும் ஒளி நம்மில் தோன்றாதவரை நாம்
வைத்திருக்கும் அனைத்து வெளிச்சங்களும் சிறிய விளக்குகளே.
கிறிஸ்துவே இவ்விளக்குகளை அகற்றிவிட்டு நமக்கு நிரந்தரமான
ஒளியைத் தருபவர்.
ஒளிக்கு எதிரி இருள் மட்டும் அல்ல. ஏனெனில், ஒளி இருந்தும்
அதை மூடி வைப்பதால் என்ன பயன்? அல்லது ஒளி நம் செயல்களை
மற்றவர்களுக்குக் காட்டிவிடும் என்பதால் அதை நானே விரும்பி
அணைப்பதால் என்ன பயன்? இன்று என் வாழ்வில் ஒளி பெற வேண்டிய
இடங்கள் எவை?
இரண்டாவதாக, இந்த நாளின் அடுத்த செய்தி, 'மகிழ்ச்சி.' 'ஒளி
மகிழ்ச்சியூட்டும். கதிரவனைக் கண்டு கண்கள் களிக்கும்.
மனிதன் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவன் தன்
வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியுடன் இருக்கட்டும்' என்கிறார்
சபை உரையாளர் (காண். சஉ 11:7). ஆக, ஒளியிலிருந்து
மகிழ்ச்சி புறப்படுகின்றது. 'கதிரவனைக் காணுதல்'
என்பதற்குப் 'பிறத்தல்' என்பதும் பொருள். இன்றைய முதல்
வாசகத்தில், மகிழ்ச்சி மூன்று உருவகங்களால்
தரப்பட்டுள்ளது: ஒன்று, 'அறுவடை நாளின் மகிழ்ச்சி'. நாம்
பட்ட கண்ணீரெல்லாம் பலன் கொடுக்கிறது என்றும், நம்
உழைப்புக்கு ஏற்ற பயன் கிடைக்கிறது என்றும் நம்மை உணர
வைப்பது அறுவடை. இரண்டு, 'கொள்ளைப் பொருளைப் பங்கிடும்
மகிழ்ச்சி.' இது திருட்டுப் பொருளை அல்ல. மாறாக, எதிரிகள்
அழிக்கப்பட்டு, அவர்கள் நாட்டிலுள்ள கொள்ளைப் பொருள்
பங்கிடப்படுவது. பொருள் தரும் மகிழ்ச்சியைவிட எதிரியின்
அழிவு இங்கே அதிக மகிழ்ச்சி தருகிறது. மூன்று, 'ஒரு
குழந்தை பிறந்துள்ளார்.' அதாவது, ஒரு புதிய உயிர்
தோன்றியது என்பது மட்டுமல்ல. மாறாக, ஆட்சிப் பொறுப்பு அவர்
தோள்மேல் இருக்கும் என்பதால். ஆக, நம் சுமைகளைத்
தூக்கிக்கொள்ள நமக்கு ஒரு தோள் கிடைத்துவிட்டது. ஆக,
அறுவடை வழியாக உணவு, எதிரிகள் அழிவு வழியாக பாதுகாப்பு,
அரசர் பிறந்ததன் வழியாக பராமரிப்பு என மூன்று நிலைகளில்
மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். நற்செய்தி வாசகத்தில்,
இடையர்களுக்கு குழந்தையின் பிறப்புச் செய்தியை
அறிவிக்கின்ற ஆண்டவரின் தூதர், 'அஞ்சாதீர்கள். இதோ, எல்லா
மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை
உங்களுக்கு அறிவிக்கிறேன்' என்று அனைவருக்கும் மகிழ்ச்சியை
அறிவிக்கின்றார்.
'ஆண்டவர்-மெசியா-மீட்பர்' என்னும் மூன்று கிறிஸ்தியல்
தலைப்புகளைப் பயன்படுத்துகின்றார்.
'உணவு-பாதுகாப்பு-பராமரிப்பு' என்று எசாயா அறிவித்தது போல
லூக்கா மூன்று தலைப்புகளின் வழியாக மகிழ்ச்சியை
வெளிப்படுத்துகின்றார்.
ஒளியைக் காண்கின்ற முகம் மகிழ்ச்சியால் சிரிக்க வேண்டும்.
மகிழ்ச்சி என்பது பொதுவானதா? தனிநபர் சார்ந்ததா? நம்
உள்ளத்தில் உதிக்கிறதா? வெளியிலிருந்து வருகிறதா? நாம்
மகிழ்ச்சியாக இருக்கிறோமா? அல்லது மகிழ்ச்சியாக
மாறுகிறோமா? எது நிரந்தரமான உணர்வு? மகிழ்ச்சி, இன்பம்,
திருப்தி போன்றவற்றை என்னால் வேறுபடுத்தி அறிய முடிகிறதா?
கிறிஸ்து பிறப்பு தருகின்ற மூன்றாவது செய்தி, 'பயணம்.'
கடவுள் மனிதராகப் பிறந்ததே வரலாற்றில் நடந்த நீண்ட பயணம்
என்று சொல்லலாம். ஆதாம் தொடங்கி, ஆபிரகாம், ஈசாக்கு,
யாக்கோபு, மோசே, ஆரோன், அரசர்கள், இறைவாக்கினர்கள் என
தேடல் தொடர்ந்து, இன்று அது நிறைவுபெறுகிறது. கடவுள்
மனிதராகப் பிறக்கின்றார். குழந்தையின் வலுவின்மை
ஏற்கின்றார். 'குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத்
தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள். இதுவே
உங்களுக்கு அடையாளம்' என்கிறார் வானதூதர். முதல்
வாசகத்தில், காரிருளில் வாழ்ந்த மக்களின் நுகம்
உடைத்தெறியப்படுகிறது. நுகம் உடைந்ததால் இனி அவர்கள்
தங்கள் விருப்பம் போல பயணம் செய்யலாம். அவர்கள் கால்கள்
கட்டின்மையைப் பெற்றுவிட்டன. நற்செய்தி வாசகத்தில்,
யோசேப்பும் மரியாவும் நாசரேத்திலிருந்து பெத்லமேகம்
நோக்கிப் பயணம் செய்கின்றனர். வானதூதர்கள் இடையர்கள்
நோக்கிப் பயணம் செய்கின்றனர். இடையர்கள் குழந்தையை
நோக்கிப் பயணம் செய்கின்றனர். இரண்டாம் வாசகத்தில், புனித
பவுல், 'கடவுளின் அருள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது' என
எழுதுகின்றார். ஆக, மறைந்திருந்த ஒன்று வெளிச்சம் நோக்கிப்
பயணம் செய்கின்றது.
'பாதை மாறுவதே பயணம்' என்பது வாழ்வியல் எதார்த்தம்.
பாதைகள் மாற, மாற பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
பயணம் செய்தல் என்றால் என்ன? உள்ளொளிப் பயணமே நாம் இன்று
மேற்கொள்ள வேண்டிய நீண்ட பயணம்.
ஒளி-மகிழ்ச்சி-பயணம் என்னும் செய்தியைக் கிறிஸ்து பிறப்பு
நிகழ்வின் வழியாகப் பெறுகின்ற நாம், ஒளி பெற்றவர்களாக,
மகிழ்ச்சி நிறைந்தவர்களாக, இறைவன் நோக்கியும், ஒருவர்
மற்றவர் நோக்கியும் பயணம் செய்தல் சால்பு!
கிறிஸ்து பிறப்பு பெருவிழா வாழ்த்துகள்!
கடவுள் நம்மோடு
கிறிஸ்து பிறப்பு பெருவிழா (பகல் திருப்பலி)
(டிசம்பர் 25, 2021)
எசாயா 52:710
எபிரேயர் 1:16
யோவான் 1:118
ஆண்டவரின் தூதர் கிதியோனுக்குத் தோன்றி, 'வலிமை மிக்க
வீரனே! ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்!' என்றார். கிதியோன்
அவரிடம், 'என் தலைவரே! ஆண்டவர் எம்மோடு இருக்கிறார்
என்றால் ஏன் இவையெல்லாம் எமக்கு நேரிடுகின்றன? ஆண்டவர்
எம்மை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டு வரவில்லையா
என்று கூறி, எங்கள் தந்தையர் எமக்கு வியந்துரைத்த அவரது
வியத்தகு செயல்களெல்லாம் எங்கே?' (நீதித் தலைவர்கள்
6:12-13).
'இம்மானுவேல் - கடவுள் நம்மோடு' என்ற சொல்லாடலைக்
கேட்கும்போதெல்லாம் மேற்காணும் கிதியோனின் வார்த்தைகள்
எனக்கு நினைவுக்கு வருவதுண்டு. 'ஆண்டவர் எம்மோடு என்றால்
ஏன் இவையெல்லாம் நேரிடுகின்றன?' என்னும் கிதியோனின் கேள்வி
மிகவும் எதார்த்தமாகவும், அவருடைய இயலாமையையும் கையறு
நிலையை வெளிப்படுத்துவதாகவும், அவருடைய விரக்தி மற்றும்
மனச்சோர்வின் வெளிப்பாடாகவும் அமைகிறது.
'ஆண்டவர் உம்மோடு' என்பது முதல் ஏற்பாட்டில் நாம்
காண்கின்ற பொதுவான வாழ்த்துரையாக இருக்கிறது. ரூத்து
நூலில், பெத்லகேமிலிருந்து வயலுக்கு வருகின்ற போவாசு
அறுவடையாளர்களை நோக்கி, 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!'
என்று வாழ்த்த, அவர்களும், 'ஆண்டவர் உமக்கு ஆசி
வழங்குவாராக!' என்று பதில்வாழ்த்து மொழிகின்றனர் (காண்.
ரூத்து 2:4). இரண்டாம் ஏற்பாட்டில், நாசரேத்தூரிலிருந்த
கன்னியிடம் கடவுளால் அனுப்பப்படுகின்ற கபிரியேல் தூதர்,
'ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்!' என வாழ்த்துகிறார் (காண்.
லூக் 1:28).
'ஆண்டவர் உம்மோடு' என்னும் பொதுவான வாழ்த்துரை,
'இம்மானுவேல் - கடவுள் நம்மோடு' என்று பெயராக மாறியது
எப்படி? 'இம்மானுவேல் - கடவுள் நம்மோடு' என்பது வெறும்
கிறிஸ்து பிறப்பு வாழ்த்துச் செய்தியா? 'கடவுள் நம்மோடு
இருக்கிறார்' என்பதன் பொருள் என்ன? 'கடவுள் நம்மோடு'
இருப்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோமா? அப்படி
ஏற்றுக்கொள்வதற்குத் தடைகள் எவை? 'கடவுள் நம்மோடு'
என்றால், அவர் மற்றவர்களோடு இல்லையா? பல சமய நம்பிக்கை
உள்ள நம் நாட்டில், இத்தலைப்பை நாம் எப்படிப்
புரிந்துகொள்வது? கோவித்-19 பெருந்தொற்று, இயற்கைப்
பேரிடர், சுற்றுச்சூழல் மாசுபாடு, பொருளாதாரச் சிக்கல்கள்
போன்ற பிரச்சினைகள் நடுவே வாழும் நாம், 'கடவுள் நம்மோடு
இல்லை' என்ற சோர்வுக்கு வரக் காரணம் என்ன?
'இம்மானுவேல்' என்னும் சொல் விவிலியத்தில், முதல்
ஏற்பாட்டில் இரண்டு இடங்களிலும் (எசா 7:14ளூ 8:8), மற்றும்
இரண்டாம் ஏற்பாட்டில் ஓரிடத்திலும் (மத் 1:23) வருகின்றது.
எபிரேயத்தில் இதன் பொருள், 'கடவுள் நம்மோடு இருக்கிறார்'
என்பதாகும். எழுபதின்மர் (கிரேக்கம்) பதிப்பிலும்
'இம்மானுவேல்' என்னும் சொல்லாட்சியே
பயன்படுத்தப்படுகின்றது. 'ஏல்' ('கடவுள்') என்பது
கடவுளுக்கான பொதுப்பெயர். 'யாவே' ('ஆண்டவர்') என்பது
இஸ்ரயேல் மக்களின் கடவுளின் தனிப்பெயர். 'ஏல்' என்பது
முதல் ஏற்பாட்டில் பரவலாகப் பயன்படுத்தப்படும் கடவுளின்
பெயர். முதல் ஏற்பாட்டில் 2500க்கும் மேற்பட்ட இடங்களில்
இப்பெயர் காணப்படுகின்றது. இவரே படைப்பவராகவும்,
காப்பவராகவும், அனைத்தையும் ஆண்டு நடத்துபவராகவும்
இருக்கின்றார்.
கிமு 735ஆம் ஆண்டு ஆகாசு யூதாவை ஆட்சி செய்தார். சாலமோன்
அரசருக்குப் பின்னர் ஒருங்கிணைந்த இஸ்ரயேல் அரசு, வடக்கே
இஸ்ரயேல், தெற்கே யூதா என்று பிரிந்தது. வடக்கே உள்ள
இஸ்ரயேல் அரசு அசீரியாவின் அடிமையாக மாறி வரி செலுத்தி
வந்தது (காண். 2 அர 15:19-20). இஸ்ரயேலின் அரசனான பெக்கா,
சிரியாவின் அரசன் ரெஸினுடன் இணைந்து அசீரியாவை
எதிர்க்கவும், அசீரியாவுக்கு எதிராக ஆகாசின் படைகளைத்
திருப்பவும் திட்டமிட்டான். ஆகாசு அத்திட்டத்திற்கு உடன்பட
மறுத்ததால் அவனை நீக்கிவிட்டு, தபியேலின் மகனை தாவீதின்
அரியணையில் அமர வைக்க விரும்பி, ஆகாசின் மேல்
படையெடுத்தான். ஏறக்குறைய எருசலேமை நெருங்கியும் விட்டான்
(காண். எசா 7:1). வலுவற்ற உள்ளம் கொண்ட ஆகாசு, அச்சத்தால்
நடுங்கி அசீரியப் பேரரசன் திக்லத்-பிலேசரின் உதவியை நாட
முடிவெடுத்தான் (காண். 2 அர 16:7). அப்படிச் செய்வதற்கு
அவன் நிறைய வரிசெலுத்த வேண்டியிருந்ததுடன், நாட்டின்
சுதந்திரத்தையும் பணயம் வைக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.
இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் இறைவாக்குரைக்குமாறு எசாயா
அனுப்பப்படுகின்றார். ஆகாசு ஆண்டவராகிய கடவுளின்
துணையையோடு, தன் மக்களின் துணிவையோ நாடாமல் எதிரியின்
உதவியை நாடுகிறான். ஆகாசு அரசனின் அச்சத்தைக் களையவும்,
அசீரியாவுடன் கூட்டுச் சேர்வதைத் தடுக்கவும் இறைவாக்கினர்
எசாயா அடையாளம் ஒன்றை வழங்குகின்றார். அடையாளம் வழங்குதல்
என்பது இறைவாக்குரைத்தலின் ஒரு கூறு ஆகும். ஆண்டவரைச்
சார்ந்திருப்பதற்கு அஞ்சுகின்ற ஆகாசு, 'நான் கேட்க
மாட்டேன். ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன்' (எசா 7:12) என்று
போலியாகச் சொல்கின்றார். அவனது நம்பிக்கையின்மையைக்
கடிந்துகொள்கின்றார் எசாயா: 'மனிதரின் பொறுமையைச் சோதித்து
மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின்
பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களா?' (எசா 7:13).
தொடர்ந்து எசாயா, 'ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை
அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம்பெண் ஓர் ஆண்
மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு அவர்,
'இம்மானுவேல்' என்று பெயரிடுவார்' (எசா 7:14) என்று
அடையாளம் ஒன்றை வழங்குகின்றார். இந்த அடையாளத்துக்கான
விளக்கம் தெளிவாக இல்லை. கிரேக்க மொழிபெயர்ப்பிலும்,
மத்தேயு நற்செய்தியிலும் (1:23), 'இளம்பெண்' என்னும்
சொல்லுக்குப் பதிலாக, 'கன்னி' என்னும் சொல்
பயன்படுத்தப்பட்டுள்ளது. எசாயா இறைவாக்கு நூலில்
'இளம்பெண்' என்ற சொல் யாரைக் குறிக்கிறது? என்னும்
கேள்விக்குத் தெளிவான விடை காண நம்மால் இயலவில்லை. சில
விவிலிய அறிஞர்கள், இறைவாக்கினர் எசாயாவின் மனைவியைக்
குறிக்கலாம் என்கின்றனர். ஓசேயா இறைவாக்கினரின் மகன்கள்
அடையாளமான பெயர்களைப் பெற்றது போல, எசாயாவின் இரு
மகன்களும் அடையாளமான பெயர்களைப் பெறுகின்றனர்
'செயார்யாசிப்' ('எஞ்சியோர் திரும்பி வருவர்') (எசா 7:3),
'மகேர் சாலால் கஸ்-பாசு' ('கொள்ளைப் பொருள் வேகமாக
வருகின்றது. இரை விரைகின்றது') (எசா 8:3). 'இம்மானுவேல்'
என்பது இரண்டாவது பெயரைக் குறிக்கலாம் என்பது இவர்களின்
கருத்து. இன்னும் சிலர், 'இம்மானுவேல்' என்னும் சொல்
ஆகாசின் மகன் எசேக்கியாவைக் குறிக்கிறது என்பர். ஆனால்,
இந்த இறைவாக்கு உரைக்கப்படும்போது எசேக்கியாவுக்கு
ஏற்கெனவே ஒன்பது வயது ஆகிறது (காண். 2 அர 16:2). எசாயாவைப்
பொருத்தவரையில், 'இம்மானுவேல்' என்னும் சொல்,
'செயார்யாசிப்' என்னும் சொல்லைப் போல பெரிய
கருத்துருவையும் புரட்சியையும் தன்னிலே கொண்டுள்ளது.
ஆகையால்தான், 'இம்மானுவேலே, அதன் கிளைகள் உன் நாட்டின்
பரப்பையெல்லாம் நிரப்பி நிற்கும்' (எசா 8:8) என்று
மீண்டும் இச்சொல்லைப் பயன்படுத்துகின்றார்.
ஆகாசுக்கு ஆண்டவராகிய கடவுள் அளித்த 'இம்மானுவேல்' என்னும்
அடையாளம் நம்பிக்கை தருகின்ற வாக்குறுதியா? அல்லது அழிவை
முன்னுரைக்கும் அச்சுறுத்தலா? என்னும் கேள்வியும்
எழுகிறது. முதலில் இதை மீட்பு மற்றும் ஆசீரின்
அடையாளமாகத்தான் எசாயா முன்னுரைக்கின்றார் (எசா 7:4, 7).
அப்படி என்றால், ஆகாசின் நம்பிக்கையின்மை அடையாளத்தின்
தன்மையை மாற்றிவிட்டதா? 'எப்ராயிமின் தலைநகர் சமாரியா.
சமாரியா நகரின் தலைவன் இரமலியாவின் மகன். உங்கள்
நம்பிக்கையில் நிலைத்திராவிடில் நீங்களும்
நிலைத்துநிற்கமாட்டீர்கள்' (எசா 7:9). 'அந்தக் குழந்தை
தீமையைத் தவிர்த்து, நன்மையை நாடித் தேர்ந்து
கொள்வதற்குமுன் உம்மை நடுநடுங்கச் செய்யும் அரசர்கள்
இருவரின் நாடுகளும் பாலைநிலமாக்கப்படும்' (எசா 7:16)
என்னும் வாக்கியத்தில் வரும் 'இரு நாடுகள்' என்பது 'சிரியா
மற்றும் எப்ராயிமை' குறிக்கிறதா? அல்லது 'யூதா மற்றும்
அசீரியாவை' குறிக்கிறதா? என்பதும் தெளிவாக இல்லை. 'யூதா
மற்றும் அசீரியாவைக் குறிக்கிறது' என்றால், 'இம்மானுவேல்'
அடையாளம் அச்சுறுத்தல் மற்றும் எச்சரிக்கையாக இருக்கிறது.
மேலும், 'அவன் வெண்ணையையும் தேனையும் உண்பான்' (எசா 7:15)
என்றும் இறைவாக்குரைக்கின்றார் எசாயா. 'பாலும் தேனும்'
பாலைவனத்து உணவே அன்றி, செழிப்பான விவசாய நிலத்தின் உணவு
அல்ல. அப்படி எனில், இம்மானுவேல் பிறக்கும்போது அனைத்தும்
அழிக்கப்பட்டு நிலம் பாழாக்கப்படுமா? எசாயாவின் இந்தப்
பாடம் புரிந்துகொள்வதற்குக் கடினமாகவே இருக்கிறது.
பெரும்பாலான அறிஞர்கள், 'இது வாக்குறுதியின் அடையாளம்'
என்றே 'இம்மானுவேல்' அடையாளத்தைக் கருதுகின்றனர்.
'இம்மானுவேல்' என்னும் பெயரில் இளம்பெண்ணின் நம்பிக்கை
அடங்கியுள்ளது. குழந்தை பிறப்பதற்கு முன்னர் தன் நாடு
விடுவிக்கப்படும் என்று அவள் நம்புகிறாள். ஆனால், அந்த
நம்பிக்கை ஆகாசுக்கு இல்லை. ஆக, சிரியாவும் எப்ராயிமும்,
தொடர்ந்து வருகின்ற அசீரியப் படையெடுப்பும் அழிந்துவிடும்.
எஞ்சியோர் வழியாக யூதாவுக்கு மீட்பு வரும் (காண். எசா
11:11). 'இம்மானுவேல்' என்னும் பெயரைத் தொடர்ந்து வரும்,
'மகேர் சாலால் கஸ்-பாசு' ('கொள்ளைப் பொருள் வேகமாக
வருகின்றது. இரை விரைகின்றது) என்னும் பெயரும் நம்பிக்கை
தருகின்ற பெயராக இருக்கிறது. எசா 7:15, 17 என்னும்
வாக்கியங்கள் எதிர்மறையான பொருளைத் தந்தாலும், ஒட்டுமொத்த
பாடப் பகுதி நேர்முகமான பொருளையே தருகின்றது.
'இம்மானுவேல்' என்னும் சொல்லுக்கும் மெசியா
இறைவாக்குக்கும் உள்ள தொடர்பை இங்கே காண்போம். இம்மானுவேல்
என்னும் அடையாளத்தைப் பற்றிய புரிதலில், அழுத்தம்,
'இளம்பெண்ணுக்கு' தரப்பட வேண்டுமா? அல்லது 'பெயருக்கு'
தரப்பட வேண்டுமா? வழக்கமாக, கன்னிப் பிறப்புக்கு இங்கே
முக்கியத்துவம் தரப்பட்டு பொருள்கொள்ளப்படுகிறது. ஆனால்,
இங்கே பயன்படுத்தப்படுகின்ற 'அல்மா' என்ற எபிரேயச் சொல்
'இளம்பெண்' என்னும் பொருளையே தருகிறது. ஏனெனில்,
'கன்னித்தன்மை,' 'பெத்துலா' என்னும் பதத்தால்
வழங்கப்படுகிறது. சிலர், 'இளம்பெண்' என்பது 'எருசலேம்'
அல்லது 'சீயோன்' நகரைக் குறிக்கிறது என்றும், 'மகன்'
என்பது 'எதிர்கால தலைமுறையினர்' அல்லது
'எஞ்சியிருப்போரைக்' குறிக்கிறது என்றும் பொருள்கொள்வர்.
ஆனால், 'இளம்பெண்' என்ற சொல் அக்காலத்தில் உருவகமாகப்
பயன்படுத்தப்படவில்லை என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.
இந்தப் பின்புலத்தில்தான், 'இம்மானுவேல்' என்பது
'மெசியாவை' குறிக்கிறது என்று சொல்லப்படுகின்றது. நாட்டைக்
காப்பாற்றக் கூடிய மீட்பர் ஒருவர் தோன்றுவார் என்று
ஒட்டுமொத்த யூதாவும் எதிர்நோக்கியது (காண். 2 சாமு 7:12).
அப்படிப்பட்ட ஒருநபரை எதிர்நோக்குகின்ற எசாயா அவருடைய
பண்புநலன்களும் பணிகளும் எப்படி இருக்கும் என்பதை
முன்மொழிகின்றார்: 'ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்.
ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார். ஆட்சிப் பொறுப்பு
அவர் தோள்மேல் இருக்கும். அவர் திருப்பெயரோ, 'வியத்தகு
ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின்
அரசர்' என்று அழைக்கப்படும்' (எசா 9:6). அவரில் இறைத்தன்மை
முழுமையாகக் குடிகொள்ளும். அவர் 'ஈசாயின் தண்டிலிருந்து'
புறப்படுவார். யூதாவில் பொற்காலம் மலரச் செய்வார்.
தாவீதின் அரியணையைச் சுற்றிலும் பகைவர்கள் நிற்க,
அரியணையில் அமர்ந்துள்ள ஆகாசு நம்பிக்கை குன்றியவனாக
இருக்கிறார். ஆகவே, உடனடியாக வரவிருக்கின்ற மீட்பரை எசாயா
முன்னுரைக்கின்றார். பல ஆண்டுகளுக்குப் பின்னர்
நிகழவிருக்கின்ற 'கிறிஸ்துவின் கன்னிப் பிறப்பை' எசாயா
மனத்தில் வைத்து இறைவாக்குரைத்திருந்தால், 'இம்மானுவேல்'
என்ற சொல்லுக்கு உடனடிப் பொருள் எதுவும் இருக்க முடியாது.
அது ஆகாசுக்கான அடையாளமாகவும் இருக்க முடியாது.
மெசியாவுக்கான காத்திருத்தல் என்பது பேறுகால வேதனை போல
அன்று இருந்தது (காண். மீக் 5:3). பாபிலோனியாவிலும்
எகிப்திலும் மீட்பர் பிறப்பார் என்ற எதிர்பார்ப்பும் அன்று
இருந்தது. இந்தப் பின்புலத்தில் எசாயா, வரவிருக்கின்ற
மெசியா பற்றி இறைவாக்குரைக்கிறார்.
மத்தேயு நற்செய்தியாளர் தன் நற்செய்தியில் பல முதல்
ஏற்பாட்டு மேற்கோள்களைப் பயன்படுத்துகின்றார். அவர் தன்
மேற்கோள்களை எழுபதின்மர் பதிப்பிலிருந்து (கிரேக்கம்)
கையாளுகின்றார். குறிப்பாக, இயேசு பிறப்பு நிகழ்வில் பல
முதல் ஏற்பாட்டு இறைவாக்குகள் நிறைவேறுவதாக
முன்மொழிகின்றார். எடுத்துக்காட்டாக, 'யூதேயாவிலுள்ள
பெத்லகேமில் மெசியா பிறக்க வேண்டும். ஏனெனில், 'யூதா
நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே
இல்லை. ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலே ஆயரென ஆள்பவர்
ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்' என்று இறைவாக்கினர்
எழுதியுள்ளார்' (மத் 2:5-6ளூ மீக் 5:2). முதல் இறைவாக்காக
மத்தேயு முன்மொழிவது, ''இதோ! கன்னி கருவுற்று ஓர்
ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல்
எனப் பெயரிடுவர்' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர்
உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல்
என்றால் 'கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பது பொருள்''
(மத் 1:22-23). இங்கே மத்தேயு, 'இம்மானுவேல்' என்ற
சொல்லின் பொருளையும் முன்மொழிகின்றார். மத்தேயு
நற்செய்தியார், 'இம்மானுவேல்' என்னும் அடையாளம் 'இயேசு'
என்னும் 'ஆபிரகாமின் மகனை, தாவீதின் மகனை' குறிப்பதாகப்
பதிவு செய்கின்றார்.
யோவான் நற்செய்தியாளர், இதே கருத்துருவை, 'வாக்கு
மனிதரானார். நம்மிடையே குடிகொண்டார்' (யோவா 1:14) என்று
பதிவிடுகின்றார்.
திருஅவையின் போதனையிலும், கடவுள் நம்மோடு என்ற செய்தி
தொடர்ந்து வலியுறுத்தப்படுகின்றது. எடுத்துக்காட்டாக,
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடைய 'அனைவரும்
உடன்பிறந்தோர்' (2020) என்னும் சுற்றுமடல் இச்செய்தியை
உள்வாங்கி, கடவுள் நம்மோடு இருக்கிறார் என்னும் அனுபவம்,
நாம் ஒருவர் மற்றவருடன் உடனிருக்குமாறு நம்மைத் தூண்ட
வேண்டும் என்று கற்பிக்கிறது.
'கடவுள் நம்மோடு' என்பது மூன்று நிலைகளில்
பிறழ்வுக்குள்ளாக்கப்படுகிறது. அப்பிறழ்வுகள் எவை எனவும்,
அவற்றை எப்படிக் களைவது எனவும் அறிதல் முதன்மையான
வாழ்வியல் சவால்.
(அ) கடவுள் நம்மோடு இல்லை என்னும் பிறழ்வு
முதல் ஏற்பாட்டில் சில கதைமாந்தர்களை விட்டு கடவுள்
நீங்குகின்றார். சோரேக்குப் பள்ளத்தாக்கில் வாழ்ந்த தெபோரா
சிம்சோனின் தலையை மழித்தபோது, சிம்சோன் நாசீர் விதிகளை
மீறியதால் ஆண்டவராகிய கடவுள் அவரை விட்டு நீங்குகின்றார்:
'ஆண்டவர் அவரிடமிருந்து அகன்று விட்டார் என்பதை அவர்
அறியவில்லை' (காண். நீத 16:20). சவுல் ஆண்டவராகிய
கடவுளுக்குக் கீழ்ப்படிய மறுத்தபோது, 'ஆண்டவரின் ஆவி சவுலை
விட்டு நீங்க, ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி அவரைக் கலக்கமுறச்
செய்கிறது' (காண். 1 சாமு 16:14). பாபிலோனிய அரசர்
நெபுகத்னேசர் எருசலேம் நகரையும் ஆலயத்தையும்
தீக்கிரையாக்கி, யூதா நாட்டினரை நாடுகடத்தியபோது
ஆண்டவராகிய கடவுளின் மாட்சி எருசலேம் நகரை விட்டு
நீங்குகிறது (காண். எசே 11:23). ஆக, தனிநபர்களும்
ஒட்டுமொத்த குழுவும், 'கடவுள் நம்மோடு இல்லை' என்ற
உணர்வைப் பெறுகிறது. 'கடவுள் நம்மோடு இல்லை' என்பது இங்கே
ஒரு வாழ்வியல் அனுபவமாக அவர்களுக்கு இருக்கிறது. சில
நேரங்களில் நம் வாழ்வில் நாம் நம்பிக்கை இழக்கிறோம். நம்
அன்புக்குரியவரின் இறப்பு, எதிர்பாராமல் நிகழும் இழப்பு,
குணப்படுத்த இயலாத நோய், மீள முடியாத தீய பழக்கம் ஆகியவை,
'கடவுள் என்னோடு இல்லை' என்ற ஒருவித விரக்தி உணர்வை
நம்மில் ஏற்படுத்துகிறது. கோவித்-19 பெருந்தொற்று மற்றும்
இயற்கைச் சீற்றங்களின்போது, கடவுள் நம்மை விட்டு
நீங்கிவிட்டதாக நாம் உணர்கிறோம். சிலர் தங்கள் வாழ்வில்
தாங்கள் செய்த தவறான செயல்களுக்காகக் கடவுள் தங்களைத்
தண்டிக்கிறார் என்று நினைப்பதுண்டு. எடுத்துக்காட்டாக,
அறியாமல் செய்த கருச்சிதைவினால், தங்களுக்கு குழந்தைப்பேறு
இல்லாமல் கடவுள் செய்துவிட்டார் என்றும், நாம்
ஆன்மிகத்தில் நன்றாக இல்லாததால், கடவுள் நமக்குத் தீமைகளை
அனுப்புகிறார் என்றும் சில நேரங்களில் நாம் எண்ணுகிறோம்.
கடவுள் நம் தீச்செயலின் பொருட்டு தன் உடனிருப்பை
நம்மிடமிருந்து விலக்கிக்கொள்வதில்லை. ஆக, 'கடவுள் நம்மோடு
இல்லை' என்ற அவநம்பிக்கையை நம் உள்ளத்திலிருந்து வெளியேற்ற
வேண்டும்.
(ஆ) கடவுள் நம்மோடு இருக்கத் தேவையில்லை என்னும் பிறழ்வு
அறிவொளி இயக்கம் தொடங்கிய காலம் தொட்டே, அறிவு அரியணையில்
ஏற்றப்பட்டு, நம்பிக்கை வெளியே விரட்டப்பட்டு வருகிறது.
புலன்களால் உணர முடியாத எதுவும் இருத்தல்
கொண்டிருப்பதில்லை எனக் கற்பிக்கின்ற அறிவுமைய வாதம்
கடவுளையும் புலன்களுக்குள் அடக்கிவிட நினைக்கிறது. ஆக,
அறிவொளி இயக்கம் கடவுள் நம்பிக்கையை சுமையாகப்
பார்க்கிறது. மேலும், சமயச் சடங்குகள் அனைத்தும் மூட
நம்பிக்கைகளாக பார்க்கப்படுகின்றன. இரண்டாவதாக, சமயத்தின்
பெயரால் நடந்தேறும் வன்முறை, போர், அறநெறிப் பிறழ்வுகள்
ஆகியவற்றைக் காண்கின்ற சிலர், கடவுள் இல்லாமல் இருந்தால்
இத்தகைய சண்டைகள் தவிர்க்கப்படலாம் என்றும், கடவுள்
இருப்பது நமக்கு ஒரு பெரிய நேர விரயம் என்றும்
கருதுகின்றனர். சிலர் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தாலும்
ஆலயம், அருள்பணி நிலை போன்ற அமைப்புகள் தேவையற்றவை எனக்
கருதுகின்றனர். மூன்றாவதாக, கடவுள் நம்மோடு இல்லை என்றால்
நாம் விரும்பியதை நம்மால் செய்ய இயலும் என்று சொல்கின்ற
சிலர், கடவுள் இருப்பதால்தான் அறநெறிக் கோட்பாடுகள்
இருக்கின்றன என்று சொல்லி, கடவுள் நம்மோடு இருக்கத்
தேவையில்லை என முன்மொழிகின்றனர். யோபும் கூட தன்
துன்பத்தின் ஒரு கட்டத்தில், 'என்னுடைய நாள்கள்
சிலமட்டுமே. என்னிடமிருந்து எட்டி நிற்பீரானால், மணித்துளி
நேரமாவது மகிழ்ந்திருப்பேன்' (யோபு 10:20) என்கிறார். தன்
மகிழ்ச்சியைத் தடைசெய்கின்ற நபராக கடவுளைக் காண்கின்றார்
யோபு. அறிவுவாதத்தின் கூற்று உண்மை போல இருந்தாலும்,
வெறும் புலனறிவு மட்டுமே மனித அறிவு அல்ல. புலன்களால் உணர
முடியாத பல எண்ணங்கள் நம் மூளையில் இருக்கின்றன.
இறையனுபவம் என்பது புலனறிவுக்கு அப்பாற்பட்டது. கடவுள்
பெயரால் நாம் பல நேரங்களில் பிளவுபட்டிருந்தாலும், சமயம்
மானுடருக்கு அளிக்கப்பட்ட மயக்கமருந்து என்றாலும்,
சமயத்தின் வழியாக நிறைய மேம்பாடு மனித இனத்தில்
நடந்துள்ளது என்பதையும் நாம் மறுக்க இயலாது. கடவுள்
நம்பிக்கை இல்லை என்றாலும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய
உண்மை, நீதி போன்ற கோட்பாடுகள் இருக்கவே செய்கின்றன. ஆக,
கடவுள் நம்மோடு இருக்கத் தேவையில்லை என்ற கூற்று
ஆபத்தானது.
(இ) கடவுள் எங்களோடு மட்டும் என்னும் பிறழ்வு
'கடவுள் நம்மோடு' என்ற சொல்லாட்சி, 'கடவுள் எங்களோடு'
அல்லது 'கடவுள் எங்களோடு மட்டும்' என்று மாறும்போது சமய
அடிப்படைவாதம் தோன்றுகிறது. மனிதர்களுக்குள் பிளவை
ஏற்படுத்துவதோடு, தங்களைச் சாராத மற்றவர்களை அழிக்கவும்
இது தூண்டுகிறது. கடவுள் யாருடைய தனிப்பட்ட உரிமைப்
பொருளும் அல்ல. பல நேரங்களில் கடவுளைக் காப்பாற்றுவதிலும்,
கடவுள்சார் கோட்பாடுகளைத் தூக்கிப் பிடிப்பதிலும் நாம்
நேரத்தையும் ஆற்றலையும் பணத்தையும் செலவழிக்கின்றோம்.
'எங்கள் கடவுளே உண்மைக் கடவுள்' என்ற மனநிலையே
காலனியாதிக்கத்திற்கும் கட்டாய சமயமாற்றத்திற்கும்
வழிவகுத்தது. உண்மைக் கடவுள் யார் என உறுதி செய்ய
நடந்தேறிய போர்களை வரலாறு அறியும். கடவுள் எங்களோடு
மட்டும் என்ற மனநிலையில்தான் தூய்மை-தீட்டு, மேல்-கீழ்,
உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்னும் பாகுபாடுகள் வருகின்றன. ஆக,
'கடவுள் நம்மோடு' என்பது ஒட்டுமொத்த மானுட அனுபவமாக இருக்க
வேண்டுமே தவிர, தனிப்பட்ட குழுவின் அடிப்படைவாத நிகழ்வாக
மாறக் கூடாது.
'இம்மானுவேல் - கடவுள் நம்மோடு' என்னும் சொல்லாடலின்
விவிலியப் பின்புலம், இறையியல் புரிதல், மற்றும் வாழ்வியல்
சவால்கள் ஒவ்வொரு கிறிஸ்து பிறப்பு விழாவின்போது நாம்
சிந்திக்கும் ஒரு கருப்பொருளாக இது சுருங்கி விடாமல், நம்
அன்றாட அனுபவமாக மாறி, நம் உள்ளத்தில் இருக்கின்ற
அவநம்பிக்கை அகற்றி, ஒருவர் மற்றவரைக் கொண்டாடவும்,
நீதியுடன் நடத்தவும் இது நம்மைத் தூண்ட வேண்டும்.
'கடவுள் நம்மோடு' என்று இறங்கி வந்த இயேசு, 'கடவுள்
நமக்காக' என்று விண்ணேறிச் சென்றார். கடவுள் நம்மோடு
இருக்கிறார் எனில், நாம் அவரோடும், அவர் வழியாக ஒருவர்
மற்றவரோடும் இணைந்து நின்றால் எத்துணை நலம்!
(அருட்தந்தை: யேசு கருணாநிதி)
மதுரை உயர்மறைமாவட்டம்
நிகழ்வு
முன்பொரு காலத்தில் மாமன்னர் ஒருவர் இருந்தார். அவர் இரவு
நேரங்களில் மாறுவேடம் பூண்டு, நகர்வலம் செல்வார். அப்படி
அவர் செல்லும்போது, மக்கள் அரசாங்கத்தைப் பற்றிச் சொல்லக்கூடிய
குறைகளைக் கருத்தில் எடுத்துக்கொண்டு, அவற்றை நிவர்த்தி
செய்வார். இவ்வாறு அவர் மக்களுக்குப் பொற்கால ஆட்சியை வழங்கினார்.
ஒருமுறை அவர் நகர்வலம் சென்றிருந்தபோது, ஒரு குடிசையில்
மூதாட்டி ஒருத்தி தனியாக இருக்கக் கண்டார். மூதாட்டியோடு
அவர் பேசும்போதுதான் தெரிந்தது, அவர் தன் கணவராலும் பிள்ளைகளாலும்
கைவிடப்பட்டவர் என்பது. இதனால் மாறுவேடத்தில் இருந்த மாமன்னர்
மூதாட்டியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று, அவரோடு
பேசினார்; அவர் கொடுத்த உணவினை உட்கொண்டார்.
இப்படி இருக்கையில், ஒருநாள் மாமன்னர் மூதாட்டியிடம் தான்
யார் என்பதை வெளிப்படுத்த முடிவுசெய்தார். அதனால் அவர்
மூதாட்டியிடம், "இத்தனை நாள்களும் நான் உங்களுடைய
வீட்டிற்கு வருகின்றேனே! நான் யார் என்று உங்களுக்குத்
தெரியுமா?" என்றார். மூதாட்டி, "தெரியாது" என்று பதில்
சொன்னதும், மாமன்னர் அவரிடம், "நான்தான் இந்நாட்டு மன்னர்"
என்றார். '
இத்தனை நாள்களும் என்னுடைய வீட்டிற்கு மன்னர்தான்
வந்திருக்கின்றாரா?'
என்று மூதாட்டி அவரை வியந்து
பார்த்துக்கொண்டிருக்கையில், மாமன்னர் அவரிடம், "அம்மா! உங்களுக்கு
ஒரு பரிசு தரப்போகிறேன். அதனால் நீங்கள் என்ன
வேண்டுமானாலும் கேளுங்கள், தருகின்றேன்" என்றார். அதற்கு
மூதாட்டி, "ஒவ்வொரு நாளும் என்னைத் தேடி வந்து, என்னிடத்தில்
ஆறுதலாகப் பேசி, நான் கொடுத்த மிகச் சாதாரண உணவினையும் உண்டு
வந்தீர்களே! இதைவிடவா பெரிய பரிசு எனக்கு வேண்டும்?" என்று
மகிழ்ச்சி பொங்கப் பதில் சொன்னார்.
ஆம், மாமன்னர் ஒரு சாதாரண மூதாட்டியைத் தேடி வந்தார். ஆண்டவர்
இயேசு ஒரு சிறு குழந்தையாக நம்மைத் தேடி வந்திருக்கின்றார்.
அதைத்தான் இன்று நாம் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவாகக்
கொண்டாடுகின்றோம். மகிழ்ச்சி பொங்கும் இந்நேரத்தில், இப்பெருவிழா
நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்திப்போம்.
என்றுமுள தந்தையே குழந்தையாய் வரல்
குழந்தைக்காக ஏங்குவோர் இங்கு எத்தனையோ பேர் உண்டு. ஏறாத
கோயிலெல்லாம் ஏறி, வேண்டாத சுவாமியை எல்லாம் வேண்டி,
செய்யாத தவமெல்லாம் செய்து ஒரு குழந்தைக்காக எந்த எல்லைக்கும்
செல்லக்கூடியவர்கள் ஏராளமான பேர் உண்டு. இவர்களுக்கு ஒரு
குழந்தை, அதுவும் ஆண் மகவு பிறந்திட்டால், அந்த மகிழ்ச்சியை
வார்த்தையால் விவரித்துச் சொல்ல முடியாது.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்
வாசகம், "ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண் மகவு
நமக்குத் தரப்பட்டுள்ளது" என்கிறது. மேலும் இக்குழந்தையின்
திருப்பெயர் வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன், என்றுமுள்ள
தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும் என்கிறது. என்றுமுள்ள
தந்தையே ககுழந்தையாகப் பிறந்திருக்கின்றார் எனில் அல்லது
பிறந்திருக்கும் குழந்தை என்றுமுள்ள தந்தை எனில், அவர் தன்
மக்கள்மீது எத்துணை அன்பாய் இருப்பார் என்பதை நாம் கற்பனை
செய்து பார்த்துக் கொள்ளலாம்.
பிறந்திருக்கும் குழந்தை என்றுமுள்ள தந்தையாய் இருப்பார்
எனில், அவர் பிள்ளைகளாகிய நமக்கு எத்தகைய ஆசிகளையெல்லாம்
தருவார் என்பதைப் பற்றி எடுத்துக்கூறுகின்றது இன்றைய நற்செய்தி
வாசகம்.
உணவாய் வந்த இயேசு
"கடவுள் இவ்வுலகிற்கு வந்தார் எனில், ரொட்டியாய்த்தான் வருவார்"
என்று காந்தியடிகள் ஒருமுறை குறிப்பிட்டார். காந்தியடிகள்
இவ்வார்த்தைகளைக் குறிப்பிடுவதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே கடவுளும் என்றுமுள்ள தந்தையுமான இயேசு ரொட்டியாக,
உணவாக வந்துவிட்டார். எப்படியெனில், விடுதியில் இடம்
கிடைக்காத நிலையில், இயேசுவைப் பெற்றெடுத்த மரியா, அவரைத்
துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடைத்துகின்றார்.
தீவனத் தொட்டி என்பது மாடுகள் உணவு உண்ணும் இடம். இயேசு
துணிகளில் பொதியப்பட்டுத் தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டார்
என்பதன் மூலம், அவர் இந்த உலகிற்கு வந்தார் என்பது அடையாளமாகச்
சொல்லப்படுகின்றது.
இதையேதான் பின்னாளில் இயேசு, "விண்ணகத்திலிருந்து இறங்கி
வந்த வாழ்வு தரும் உணவு நானே" (யோவா 6:51) என்கிறார். இயேசு
இத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், பசியோடு இருந்த மக்களுக்கு
உணவுகிடைக்கும் வகையில், "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்"
என்று தம் சீடர்களிடம் சொல்வதன் மூலம், தன்னுடைய இடத்தில்
இருந்து, ஒவ்வொருவரும் பசியோடு இருக்கும் மக்களுக்கு உணவு
கொடுத்து, அவர்களது பசியினைப் போக்கவேண்டும் என்ற அழைப்பினைத்
தருகின்றார்.
மேலும் இயேசுவின் பிறப்பின்போது விண்ணத் தூதரணி, ".....
உலகில் அவருக்கு உகந்தவருக்கு அமைதி உண்டாகுக" என்று பாடியதாலும்,
இன்றைய முதல் வாசகம், பிறந்திருக்கும் குழந்தையின்
திருப்பெயர் அமைதியின் அரசர் என்று என்று கூறுவதாலும், இயேசு
தன்மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு உணவாக வந்தது மட்டுமல்லாமல்,
அமைதியை அருள வந்தார் என்றும் சொல்லலாம்.
ஒவ்வொருவரும் நற்செய்தியில் ஆர்வமுள்ளவர்களாக இருக்க அழைப்பு
என்றுமுள்ள தந்தையாய் நம்மீது பேரன்புகொண்ட இயேசு, இவ்வுலகிற்கு
உணவாய் வந்தார், அமைதியைத் தந்தார் என்று இன்றைய நற்செய்தி
வாசகம் கூறுகின்ற அதே வேளையில், இன்றைய இரண்டாம் வாசகத்தில்
பவுல், "அவர் (இயேசு) நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும்
மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத்
தூய்மைப்படுத்த தம்மையே ஒப்படைத்தார்" என்கிறார். எனில்,
நாம் ஒவ்வொருவரும் நற்செயல்களில் ஆர்வமுள்ளவர்களாக இருக்க
வேண்டும் என்பதே நமக்குக் கொடுக்கப்படும் அழைப்பாக இருக்கின்றது.
நாம் நற்செயல்களில் ஆர்வமுள்ளவர்களாய் இருக்கவேண்டும் என்றால்,
நாம் ஆண்டவரோடு ஒன்றித்திருக்கவேண்டும். ஏனெனில், இயேசு,
தந்தைக் கடவுளோடு ஒன்றித்திருந்ததால்தான் அவரால் சென்ற இடங்களில்
எல்லாம் நன்மை செய்ய முடிந்தது. அதனால் நாம் ஒவ்வொருவரும்
ஆண்டவரோடு ஒன்றித்திருக்கவேண்டும். அப்போதுதான் நம்மால் நற்செயல்களில்
ஆர்வமுள்ளவர்களாய் இருக்க முடியும்.
ஒரு பெரிய உணவகத்தில் இருவர் உணவுண்டு மகிழ்ந்து
கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்கள் இருவருக்கும் அறிமுகமான
ஒருவர் அங்கு வந்தார். அவர் அங்கிருந்த ஒருவரைப் பார்த்து,
"இன்றைக்கு என்ன சிறப்பு, ஒரே அமர்க்களமாக இருக்கின்றதே?"
என்றார். அதற்கு அந்த மனிதர், "இன்றைக்கு என் மகனுடைய பிறந்தநாள்.
அதனால்தான் இந்த ஏற்பாடு!" என்றார். "உங்களுடைய மகனுக்குப்
பிறந்த நாளா, அப்படியானால் அவன் எங்கே?'
என்று கேட்டதற்கு,
அந்த மனிதர், "அவன் வீட்டில் இருக்கின்றான்" என்று அசடு
வழியப் பதில் சொன்னார். அப்போது வந்தவர் அவரிடம், "பிறந்த
நாள் கொண்டாடும் மகனை வீட்டில் வைத்துக்கொண்டு, இங்கே அமர்க்களமாக
எல்லா ஏற்பாடுகளையும் செய்திருப்பது உங்களுக்கு அபத்தமாகத்
தெரியவில்லையா?" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து
சென்றுவிட்டார்.
ஆம், பிறந்த நாள் கொண்டாடும் மகன் உடன் இல்லாமல் பிறந்த
நாள் கொண்டாடுவது எவ்வளவு பெரிய அபத்தமோ, அவ்வளவு பெரிய
அபத்தம் நாம் இயேசுவோடு ஒன்றித்திருக்காமல், அவருடைய
விழுமியங்களைக் கடைப்பிடிக்காமல் கிறிஸ்து பிறப்புப்
பெருவிழாவைப் கொண்டாடுவது! கிறிஸ்து இவ்வுலகிற்கு உணவாய்
வந்தார் எனில், நாம் பசியோடு இருப்பவர்களின் பசியைப் போக்க
வேண்டும். இயேசு இவ்வுலகிற்கு அமைதியின் அரசராய் வந்தார்
எனில், நாம் இவ்வுலகில் அமைதியை ஏற்படுத்த உழைக்க
வேண்டும். இயேசு நம்மை நற்செயல்களில் ஆர்வமுள்ளவர்களாக இருக்க
அழைக்கின்றார் எனில், நாம் நற்செயல்களில் ஆர்வமுள்ளவர்களாய்
இருக்கவேண்டும். இவ்வாறு நாம் வாழும்போது மட்டுமே கிறிஸ்து
பிறப்புப் பெருவிழாவை அர்த்தமுள்ளதாக்க முடியும்.
சிந்தனை:
'
கிறிஸ்மஸ் என்பது ஒரு காலம் அல்ல, அது ஓர் உணர்வு'
என்பார்
எண்டா பெர்பர் என்ற எழுத்தாளர். எனவே, நாம் கிறிஸ்து பிறப்புப்
பெருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் வந்து போகும் ஒரு சாதாரண நிகழ்வாக
மட்டும் பார்க்காமல், அதை ஓர் உணர்வாக, இயேசுவின் விழுமியங்களைக்
கடைப்பிடித்து வாழக்கூடிய ஒரு தருணமாக பார்த்து, கிறிஸ்து
பிறப்புப் பெருவிழாவை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடுவோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
மறையுரைச் சிந்தனை: அருள்பணி
மரிய அந்தோணி பாளையங்கோட்டை
இதோ நாம் கிறிஸ்மஸ் பெருவிழாவை இந்த நள்ளிரவில்
கொண்டாடுகிறோம். நம் வீடுகள் இன்று அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன.
நம் ஆலயங்கள் இன்று ஒளியூட்டி அலங்காரக் கோலத்தில்
காட்சித் தருகின்றது. நம் உடலானது புத்தாடையால் பொலிவுடன்
காட்சித் தருகிறது. நம் நாவிற்கு இனிய சுவையுள்ள உணவுகள்
கிடைத்திருக்கின்றன. நம் காதுகள் எதிரொலிக்க மத்தாப்புகள்
கொளுத்தப்படுகின்றன. கண்ணுக்கினிய காட்சிகளையெல்லாம் காணத்
துடித்துக் கொண்டிருக்கிறோம். ஏனெனில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பு யூதேயா தேசத்தில் பெத்லகேம் என்ற சிற்றூரிலே
மாட்டுக் குடிலிலே ஏழை மகனாக இயேசு பிறந்தார் என்பதை
நினைத்துத் தானே கொண்டாடுகிறோம்.
என்னோடு சிறிது நேரம் பெத்லேகம் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.
அங்கே பாருங்கள் ஏழையாக, வாட்டும் குளிரிலே இயேசு பிறந்து
கிடக்கின்றார். நீங்கள் காண்பது, கன்னி மரியா அமைதியிலே
குழந்தையைப் பார்த்த வண்ணமாக, சூசை சிந்தனையில் அமர்ந்தவராக,
ஆடுகளும் மாடுகளும் தங்கள் பாணியிலே பார்க்கும்
காட்சி. ஏழை இடையர் கூட்டம் கூடி நின்று அற்புதக் குழந்தையைக்
கண்டு, அவர்களது கலாச்சாரத்தில் ஆராதிக்கும் காட்சி.
இன்று நீங்களும் நானும் என்ன செய்யப் போகின்றோம்? ஆலயத்தின்
ஒரு பகுதியிலே சின்னக் குடிலிலே அழகாக விதவிதமான விளக்குகளுடன்
மண்ணால் செய்யப்பட்ட இயேசுவை வைத்து வணக்கமிட்டு, ஆசைக்கு
சிறு காணிக்கை போட்ட திருப்தியில், நாம் வீடு செல்லப்
போகின்றோமா? மண்ணால் செய்த இந்த இயேசுவின் உருவத்தைக்
கும்பிட்டுவிட்டு, உண்மையான, உயிருள்ள இயேசுவை இன்னும் கந்தல்
துணியில் சுற்றி மாட்டுக் கொட்டகையில் படுக்க
வைத்துவிட்டுப் போகப் போகின்றோமா?
ஏழை எளியவர் மீது இரக்கம் ,காட்டுவோர், ஏழைகளை வாழ வைப்பர்.
கொடுமைகளினின்று, துன்பங்களினின்று அனைவரையும் விடுவிப்பர்.
திக்கற்றவருக்குத் துணையாக இருப்பர் என்றெல்லாம்
கேட்டிருக்கின்றோம் (லூக். 4:18,19). நசுக்கப்பட்ட ஏழைகளுக்காக,
அடிமைப்படுத்தப்பட்டு உரிமை இழந்தவர்களை விடுவிக்க, அன்பு,
சமாதானம் இவைகளை விதைத்துவிட்டு சுயநலக்காரர்களுக்குச்
சாவு மணி அடிக்கவுமே இயேசு மனிதனாகப் பிறந்தார்.
மீட்பர் பிறந்திருக்கின்றார் என்று நாம் பாடுகின்றோம்.
ஆனால் அந்த மீட்பர், பாவத்திலிருந்து மட்டுமல்ல பாவநாட்டங்களாகத்
திகழ்கின்ற அடிமைத் தனத்திலிருந்தும், துன்பத்திலிருந்தும்,
சமுதாயக் கொடுமைகளிலிருந்தும், விடுதலை தர வந்தவர் என்பதை
நாம் மறந்துவிட்டோம்.
வருடா வருடம் வந்து போகும் கிறிஸ்மஸ் விழாபோல் இதுவும்
அமைந்துவிடாமல் இறைவனின் அன்பின் கொடைகளை, நீதியின்
கொடைகளை உய்த்து உணர்ந்து ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க
இந்த விழா ஒளியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் என்
நண்பன், ஒவ்வொரு மனிதனும் என் சகோதரன் என்ற பாடல்
வார்த்தைகளோடு நின்று விடாமல் வாழ்வின் எல்லா அசைவுகளிலும்
அது பிரதிபலிக்க வேண்டும். எளியோர்க்கு நற்செய்தி, சிறைப்பட்டோருக்கு
விடுதலை, குருடருக்குப் பார்வை, ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை
வாழ்வு (லூக். 4:18) என்ற கிறிஸ்துவின் வார்த்தைகள் நம்
அனைவரின் அடிமனத்திலும் ஆழமாகப் பதிய வேண்டும்.
அதே நேரத்தில் புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு,
இப்படி ஒரு எச்சரிக்கை! - தொடர்ந்து இழுக்க, இழுக்க இன்பம்.
இறுதிவரை புகையுங்கள் சிகரெட்! இப்படி ஒரு விளம்பரம்.
குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தைக்
கெடுக்கும், இப்படி ஒரு எச்சரிக்கை. ஆனால் மதுபானக் கடைகளின்
எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
விபசார விடுதிகளை ஒழித்துக்கட்டுவோம். இது ஒரு எச்சரிக்கை.
ஆனால் அதே விபச்சார விடுதிகளுக்கு லைசன்ஸ் வழங்கி உள்ளே
நுழையும் கூட்டம் பெருகிக் கொண்டே உள்ளது. ஏழைகளுக்கு
வாழ்வு தருவோம் என்றதொரு பிரச்சாரம்! அதேநேரத்தில் பணக்காரர்களுக்குக்
கை கொடுக்கும் நிலை. இன்றைய சமுதாயத்தின் நிலை இதுதான்.
நாம் என்ன செய்யப் போகின்றோம்? சமுதாயத்தில் மலிந்து
கிடக்கும் அநீதிகளை, அநாச்சாரங்களை, அக்கிரமங்களைக் கண்டு
என்னால் என்ன செய்ய முடியும் என்ற திகைப்பு ஏற்படலாம்.
ஆனால் ஒன்று! சமுதாயத்தை உன்னால் உடனே மாற்ற முடியாமல்
இருக்கலாம். தளர்ச்சி அடையாதே! ஆனால் உன்னை மாற்ற
முடியுமே!
அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை
உன் மாசற்ற முத்தத்தைத் தா என்கின்றார் குழந்தை இயேசு
அன்புமிக்க சகோதர, சகோதரிகளே! குழந்தைகளுக்கு மிகவும்
பிரியமானது, பிழத்தமானது முத்தம்!
நாம் எப்பழப்பட்ட முத்தத்தை குழந்தை இயேசுவுக்கு இன்று
இரவு கொடுக்கப்போகின்றோம்?
முத்தங்களிலே 4 வகையான முத்தங்கள் உள்ளன!
முதல் முத்தம் : அது மாதா குழந்தை இயேசுவுக்கு கொடுத்த
முத்தம்!
அது தாய்மை இழைந்தோடும் முத்தம்.
அது மருவற்ற முத்தம்!
அது குற்றமில்லா முத்தம்!
அது குறையில்லா முத்தம்!
இரண்டாவது வகையான முத்தம் இயேசுவுக்கு யூதாஸ் கொடுத்த
முத்தம்! இயசு என்ன குற்றம் செய்தார்? கடவுள் ஒருவரே
என்றாரே-அது குற்றமா?
கடவுளையும், மனிதரையும் அன்பு செய்யுங்கள் என்றாரே- அது
குற்றமா? 3 நாள்களுக்குள் கல்லறையிலிருந்து உயிர்த்தெழுவேன்
என்றார - அது குற்றமா? 4 நாள்கள் கல்லறைலிருந்த இலாசரை உயிர்ப்பித்தார-
அது குற்றமா?
5 அப்பங்களையும் 2 மீன்களையும் கொண்டு ஐயாயிரம்
பேருக்கு உணவளித்தாரே-அது குற்றமா?
6 கல்தொட்டிகள் நிறைய தண்ணீரை நிரப்பச்சொல்லி அதைத்
திராட்சை இரசமாக்கிப் புதுமை செய்தாரே- அது குற்றமா?
மகதலா மரியாவிடமிருந்து 7 பேய்களை ஓட்டினாரே- அது குற்றமா?
இது பொருளாசை முத்தம்!
இது துடராக முத்தம்!
இது அநியாய முத்தம்!
இது அக்கிரம முத்தம்!
இது வஞ்சக முத்தம்!
மூன்றாவது வகையான முத்தம்!
அது மகதலா மரியா இயேசுவுக்குக் கொடுத்த முத்தம்! அவள்
ஒரு பாவி!
ஆடூம்வரை ஆடி விட்டாள்! ஆட்டத்தையும் முடித்துவிட்டாள்!
ஆட்டத்தின் முழிவினில சுபம் இல்லை! செல்வச் சீமான்
சீமான் வீட்டிலே இயேசு விருந்தாடிக் கொண்டிருக்கின்றார்
என்பதை அறிந்து, அவள் அங்கக சென்று அவர் காலிலே
விழுந்தாள்! விழுந்து அழுதாள்! அவள் உடலும் அழுதது,
அவளது உள்ளமும் அழுதது. கண்ணீரால் இயேசுவின் பாதங்களைக்
கழுவி, அவற்றை அவளுடைய கூந்தலால் துடைத்து, இயேசுவின் பாதங்களை
முத்தம் செய்தாள் !
அவள் இயேசுவுக்கு கொடுத்த முத்தம்!
அது வருந்திய முத்தம்!
திருந்திய முத்தம்!
அதிசய முத்தம்!
ஆனந்த முத்தம்!
நன்றியின் முத்தம்!
நான்காவது வகையான முத்தம் இயேசு அவருடைய திருத்தூதர்களுக்குக்
கொடுத்த முத்தம். அன்று பரிய வியாழக்கிழமை இயேசு பன்னிருவரையும்
அழைத்து பந்தியிலே அமரச் செய்து, தாமும் அவர்களுடன் அமர்ந்துகொண்டு
உணவருந்திய பின் அவர்களுடைய பாதங்களைக் கழுவி அவற்றை
முத்தம் செய்தார்!
அது தலைவன் - அடிமை என்ற வேறுபாடற்ற முத்தம்!
அருள் நிறைந்த முத்தம்!
ஆசி நிறைந்த முத்தம்!
மாண்பு நிறைந்த முத்தம்!
மகிமை நிறைந்த முத்தம்!
மன்னிப்பு நிறைந்த முத்தம்!
அது முத்தத்திற்கு இலக்கணம் வகுத்த இலக்கிய முத்தம்! அன்புமிக்க
சகோதர, சகோதரிகளே! நாம் எப்படிப்பட்ட முத்தத்தை குழந்தை
இயேசுவுக்கு அளிக்கப்போகின்றோம்.
முதல் முத்தம்! அது மரியா இயேசுவுக்குக் கொடுத்த முத்தம்!
அதை நாம் விரும்பினாலும் நம்மால் கொடுக்க முடியாது! காரணம்
நம்மில் யாரும் மரியாவைப் போன்று அருள் நிறைந்தவர் இல்லை!
இரண்டாவது முத்தம்! அது யூதாஸின் முத்தம். அந்த முத்தத்தை
நம்மில் யாரும் யாருக்கும் கொடுக்கக்கூடாது.
மூன்றாவது முத்தம் ! மனம் திரும்பிய பாவி மகதலா மரியா இயேசுவுக்குக்
கொடுத்த முத்தம் ! அந்த முத்தத்தை நாம் இமேயசுவுக்குத்
தரலாம்.
நான்காவது முத்தம்! அது இயேசு ஆண்டவர் அவருடைய திருத்தூதர்களுக்குக்
கொடுத்த முத்தம்! இப்படிப்பட்ட முத்தத்தையும் நம்மால்
இயேசுவுக்குக் கொடுக்க முடியாது! காரணம் இயேசுவைப் போல,
உங்களில் யார் என்மீது குற்றம் கண்டுபிடிக்கமுடியும்?
என்று கேட்கும் அளவுக்கு தூயவர் நம்மில் யாரும்
கிடையாது.
புனித பவுலடிகளார் உரோமையருக்கு எழுதிய திருமடலில்
3:9-18 முடிய உள்ள இறைவாக்கியங்களில் கூறுவது போல நாம்
எல்லாரும் பாவிகளே!
நாம் அறிந்தும் பாவம் செய்திருக்கின்றோம்! அறியாமலும்
பாவம் செய்திருக்கின்றோம். இரண்டுக்கும் இரண்டு உதாரணங்கள்!
ஒரு பேருந்திலே ஓர் அம்மா பயணம் செஞ்சிகிட்டு இருந்தாங்க!
அவங்களுக்கு 4 வயசிலே ஒரு பையன்! கண்டக்டர் டிக்கெட்டு
கொடுத்துகிட்ட வந்தாரு.
அப்போ அந்த அம்மா அந்தப் பையன் தலையை பிடிச்சி இடது
கையாலே அமுக்குது! அந்தப் பையன், ஏம்மா தலையை புடிச்சி
அமுக்குறேன்னு? கேட்டான்! அதற்கு அந்த அம்மா, கண்டக்டர்
வர்றாருடா! வந்தா என்னம்மா? என்றான் சிறுவன். டேய்
கேள்வி கேட்கிற நேரமா இது? என்றார் அந்த அம்மா!
பேசாம இருந்து தொலைடா அப்படின்னாங்க அந்த அம்மா! அதுக்குள்ளே
கண்டக்டர் வந்திட்டாரு! இந்த அம்மா லெஃப்டாலே பையன் தலையை
புடிச்சி அமுக்கிக்கிட்டு ரைட்டாலே ஒரு டிக்கட் கொடுங்கன்னு
சத்தமா கேட்டுச்சி. கண்டக்டர், அங்கே கையாலே வச்சி அமுக்கிக்கிட்டுயிருக்கியே!
அது யாரு? அப்பழன்னாரு. ஏன், என் மவன்தான்னுச்சி! வயசு
என்ன? ரெண்டரை. அப்போ அந்தப் பொடியன் எழுந்திருச்சி, இரண்டரை
இல்லேம்மா நாலுன்னான்! அதுக்கு அந்த அம்மா, டேய் என்ன அரிச்சந்திரன்
வீட்டுக்கு அடுத்தவீட்டுகாரனா நீ! சும்மாயிருரான்னு அவனை
அடக்குச்சு. கண்டக்டர்கிட்ட, அவன் சின்ன புள்ளெ, புரியாம
பேசுறான். நீங்க போங்க அப்படின்னிச்சி.
அதற்கு அந்தம்மா, கொஞ்சுறியே! அறைஞ்சன்னா தெரியுமா? அப்படின்னுச்சி!
அதற்கு அந்தப் பொடியன், அம்மாவைப் பார்த்து, மேலே கையை
வச்சிருவியா? வை பார்ப்போம்! மேல கையை வச்சே கண்டக்டரை
கூப்பிட்டு உண்மையான வயசைச் சொல்லிபுடுவேன் என்றான்.
இந்த நிகழ்ச்சியிலே வந்த அம்மாவுக்கு 3 வயசு ஆனா பஸ்ஸில
1/2 மக்கட் எடுக்கணும்கிறது தெரியும்! தெரிந்து,
புரிந்து, அறிந்து அந்த அம்மா பாவம் செய்தது.
இந்த அம்மாவைப் போன்று நாமும் தெரிந்து, புரிந்து,
அறிந்து பாவங்கள் செய்திருக்கின்றோம்.
அறியாமல் செய்யும் பாவம்! இயேசுநாதரைக்கூட சில
யூதர்கள் அவர் கடவுள் என்பதை அறியாமல்தான்
கொன்றார்கள்.
நாம் இயேசுவைக் கொன்ற அந்த யூதர்களைப் போல அறியாமலும்
கடவுளுக்கு எதிராகவும் பாவம் செய்திருக்கின்றோம்.
ஆகவே, நம்மால் மகதலா மரியா இடயசுவுக்குக் கொடுத்த மனம்
திரும்பிய, மனம் வருந்திய முத்தத்தைப் போன்றதொரு
முத்தத்தையே இயேசுவுக்குக் கொடுக்க முடியும். வரம்
தரும் பெருவிழாவாக கிறிஸ்துமஸ் அமைய இயேசுவின்
கன்னத்தில் முத்தமிடுவோம்! அது மனம் திரும்பி நாம்
அவருக்குத் தரும் முத்தமாக இருக்கட்டும்!
ஒரு பள்ளியின் மாடிப்படியின் மேல்படியில்
நான் நின்று கொண்டிருந்தேன், கீழ்ப்படியில் இருந்த கவிதா
என்ற சிறுமியைப் பார்த்து, "கவிதா மேலே ஏறிவா" என்று அழைத்தேன்.
அவளால் ஏறி வர முடியவில்லை. அவள் என்னைப் பார்த்து, "நீங்க
கீழே இறங்கி வாங்க" என்றாள். நானும் கீழே இறங்கி வந்து அவளை
மேலே தூக்கிச் சென்றேன்.
மனிதன் கடவுளுடைய நிலையை எட்டிப் பிடிக்க முயன்றான்.
அந்நிலையில் கடவுளே மனிதனுடைய நிலைக்குத் தாழ்ந்து வந்து
அவனைக் கடவுளுடைய நிலைக்கு உயர்த்தினார். மனிதனைத்
தெய்வமாக்க தெய்வம் மனிதரானது. மனிதர் இறைத்தன்மையில்
பங்குபெற்றுள்ளனர் (1 பேது. 1:4).
கிறிஸ்து பிறப்பு விழா உணர்த்தும் உண்மைகள்: கடவுள்
மனிதரானார்; கடவுள் குழந்தையானார்; கடவுள் ஏழையானார்,
முதலாவதாக "வாக்கு மனிதரானார்; நம்மிடையே குடிகொண்டார்" (1
யோவா 1:14). நாம் கடவுளைக் கண்ணால் கண்டோம்; அவரைக் கைாயல்
தொட்டோம்; அவரது வாக்கைக் காதால் கேட்டோம் (1 யோவா 1:1).
இனி கடவுள் நமக்கு அந்நியர் அல்ல; மாறாக, நம்மிலே ஒருவர்;
நமது இரத்தத்தின் இரத்தம்; நமது தசையின் தசை.
கடவுள் மனிதரானது நமக்காகவும் நமது மீட்புக்காகவும்.
"இன்று மீட்பர் உங்களுக்காகப் பிறந்திருக்கிறார் " (லூக்
2:10). "குழந்தை நமக்காகப் பிறந்துள்ளார்; ஓர் ஆண் மகவு
நமக்குத் தரப்பட்டுள்ளார் " (எசா 9:6). மானிடராகிய
நமக்காகவும் நமது மீட்புக்காகவும் வானகமிருந்து வையகம்
வந்தார். தமது ஒரே மகனை கையளிக்கும் அளவுக்கு கடவுள்
நம்மீது அன்பு கூர்ந்துள்ளார் (யோவா 3:16). இன்று ஆண்டவர்
பிறந்த நன்னாள், எனவே அகமகிழ்வோம்: அக்களிப்போம்.
கடவுள் மனிதராகப் பிறந்தார் என்னும் இறையியல் உண்மையைத்
திருத்தூதர் பவுல், "நம் மீட்பராம் கடவுளின் நன்மையும்
மனித நேயமும் வெளிப்பட்டது" (தீத் 3:4) என்று கூறுகிறார்.
கிறிஸ்துவில் கடவுளுடைய இரக்கமும் மனித நேயமும் ஊன் உடல்
எடுத்தன. ஊன் உடல் எடுத்த கிறிஸ்து நம் பிணிகளைத் தாங்கிக்
கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார் (எசா 53:4).
கிறிஸ்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார் (திப
10:38).
நம்மிடத்தில் மனித நேயம் மலர்ந்துள்ளதா? மாட்டுக்கும்
மனிதனுக்கும் உள்ள வேறுபாடு என்ன? "மாட்டுக் கழுத்தில்
தொங்குவது "பெல்" மனிதர் கழுத்தில் தொங்குவது "செல்";
என்று சொல்லப்படுகிறது. "ஒரு மாடு அடுத்த மாட்டைப் பற்றி
அக்கறை கொள்ளாது. ஒரு மனிதர் அடுத்த மனிதரைப் பற்றி அக்கறை
கொள்வார். அடுத்தவனைப் பற்றி அக்கறை கொள்ளாதவன் நன்றாகத்
தின்று கொழுத்த பன்றி" (சாக்ரட்டீஸ்). இன்றைய அறிவியல்
பலவற்றைப் புதிதாகக் கண்டுபிடித்துள்ளது. ஆனால் மனித
நேயத்தைத் தொலைத்து விட்டது. இந்நிலையில் கிறிஸ்துவின்
மனித நேயம் நம்மை ஆட்கொள்வதாக. அதன் விளைவாக அழுவாரோடு
அழுது. மகிழ்வாரோடு மகிழ்வோம் (உரோ 12:15).
இரண்டாவதாக, கடவுள் குழந்தையானார். கிறிஸ்துவின் பிறப்பை
அறிவித்த வானதூதர், "குழந்தையைத் துணிகளில் சுற்றித்
தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள், இதுவே
லடங்களுக்கு அடையாளம் என்றார்" (லூக் 2:12)
குழந்தை வலுவற்றது. தனக்குத்தானே எந்த உதவியையும் அதனால்
செய்துகொள்ள முடியாது: தனது தேவைகள் அனைத்துக்கும்
மற்றவர்களையே சார்ந்துள்ளது. உலகை மீட்க வந்தவர் ஒரு
குழந்தையாக அதாவது, வலுவற்றவராகப் பிறந்தார். "மனித
வலிமையைவிட கடவுளுடைய வலுவின்மை வலிமை மிக்கது" (1 கொரி
1:25) என்பதை உணர்ந்த வலிமை மிக்க கடவுள் வலுவற்றவராகப்
பிறந்தார், மடமை எனக் கருதப்பட்ட சிலுவையால் உலகை
மீட்டார்.
மதம் பிடித்த யானை வீதியின் நடுவே அமர்ந்திருந்த ஒரு
குழந்தையைத் தன் தும்பிக்கையால் தொட்டு, அக்குழந்தை அருகே
படுத்துக் கொண்டது. ஒரு குழந்தையின் முன்பு யானையின்
வெறிகூட மாயமாக மறைந்துவிட்டது, குழந்தையைப் பற்றிப்
பாரதி. "முல்லைச் சிரிப்பால் என் மூர்க்கம்
தவிர்த்திடுவாய்" என்று பாடியுள்ளார். குழந்தையின்
சிரிப்பு நமது மூர்க்கக் குணத்தை நிர்மூலமாக்கி விடுகிறது.
ஆணவத்தினால் பிரிந்து வாழும் குடும்பங்களும் தனி நபர்களும்
குழந்தை இயேசுவின் முன்னால் மீண்டும் ஒன்று சேர வேண்டும்.
பெத்லகேமில் இயேசு பிறந்த இடத்திற்குச் செல்லத் தலை குனிய
வேண்டும், தம்மைத் தாழ்த்தாத எவரும் கடவுளை அணுக முடியாது.
குழந்தை இயேசுவிடமிருந்து "கனிவையும், மனத்தாழ்மையையும்"
(மத் 11:29) கற்றுக்கொள்வோம். நாம் குழந்தைகளாக
மாறாவிட்டால் விண்ண ரசில் நுழைய முடியாது (மத் 18:3).
| மூன்றாவதாக, கடவுள் ஏழையானார். விண்ணுக்கும் மண்ணுக்கும்
சொந்தக்காரர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் (லூக் 2:7).
செல்வந்தராக இருந்தும் நமக்காக ஏழையானார் (2 கொரி 8:3).
மண்ணிலே அவருக்குத் தலைசாய்க்கக்கூட இடமில்லை (லூக் 9:8).
ஏழைகளுக்கு அவர் நற்செய்தி அறிவித்தார் (லூக் 4:18).
ஏழைகள் பேறுபெற்றவர்கள் என்று அறிக்கையிட்டார் (லுக்:
6:20).
ஏழையாகப் பிறந்த கடவுள் ஏழைகளின் கடவுள். திக்கற்ற ஏழையின்
குரலுக்குச் செவிமடுக்கும் கடவுள் (திப 34:6), நுகர்வுக்
கலாச்சாரத்தில் சிக்கி, அங்காடியின் சிலைவழிபாட்டில்
ஈடுபட்டுள்ளது இன்றைய உலகம். திருச்சபை இதற்கு
விதிவிலக்கல்ல. நோவாவின் பேழையைக் கட்ட வேண்டிய திருச்சபை
'டைட்டானிக்' கப்பலைக் கட்டிக்கொண்டிருக்கிறது. டைட்டானிக்
கப்பலைத் திருச்சபை கட்டினால் நுகர்வுக் கலாச்சாரம்
என்னும் பனிப்பாறையில் மோதி மூழ்கிவிடும். மாறாக, நோவாவின்
பேழையைக் கட்டினால் தன்னையும் உலகையும் காப்பாற்றும்.
இன்றைய உலகை அச்சுறுத்தும் நுகர்வுக் கலாச்சாரமாகிய
கோலியாத் என்னும் அரக்கனைத் தாவீதின் எளிமை என்னும் கவணால்
மட்டுமே வீழ்த்த முடியும். குழந்தை இயேசு நமக்கு
விடுக்கும் செய்தி, "நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும்
பணிவிடை செய்ய முடியாது" (மத் 6:24).
கிறிஸ்து பிறப்பு விழாவில் ஏழை எளியவர்களைத் தேடிச்
செல்வோம். குறிப்பாக, ஏழை மற்றும் அனாதைக் குழந்தைகளுக்கு
உணவும் உடையும் கொடுத்து அவர்களை மகிழ்விப்போம்,
ஏழைகளுக்கு நாம் செய்யும் உதவி இயேசுவுக்கே செய்யும் உதவி
என்பதை நினைவுகூர்வோம் (மத் 25:40).
முடிவாக, கடவுள் மனிதரானார்; நாம் மனிதராவது எப்போது?
கடவுள் குழந்தையானார்; நாம் குழந்தையாவது எப்போது? கடவுள்
ஏழையானார்; நாம் ஏழையாவது எப்போது? விண்ணகத்தில்
கடவுளுக்கு மகிமையும் மண்ணகத்தில் மாந்தர்க்கு அமைதியும்
உரித்தாகுக! கிறிஸ்து பிறப்பு இனிய நல்வாழ்த்துக்கள்!
தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்