நம்மை விட்டுப் பிரிந்த நமது நெருங்கிய உறவினர்கள், நம்மை இன்று இந்த
திருப்பலிக்கு அன்போடு வரவேற்கின்றார்கள். இறந்த நம் உறவுகள் நிலை
வாழ்வின் கதவு திறக்கப்படும் போது உள்ளே நுழைந்து, நிலை வாழ்வின்
இன்பத்தை அனுபவிக்க, நம்மை இப்போது தங்களுக்காக ஜெபிக்க
அழைக்கின்றார்கள். மரணம் மனிதனைக் கவலையில் ஆழ்த்துகின்ற குறியீடு.
மரணத்தை ஏற்றுக் கொள்ள மனித மனம் தடுமாறுகின்றது. நமது மரணத்தை
நினைத்து அஞ்சும் நாம், நமது உறவினர்களின் இழப்பை நினைத்து இடிந்து
போகின்றோம். பிரிவை ஏற்க முடியாது மனம் பரிதவித்துப் போகின்றோம்.
மரணம் நாம் பிறக்கும் தருணத்தில் ஆரம்பமாகும் அற்புதமான செய்தியாகும்.
மரணத்தின் போது நிலை வாழ்வின் கதவு திறக்கப்படுகின்றது. நமது சாவை
அழிவாகப் பார்ப்பதைவிட நிலை வாழ்வுக்குச் செல்லும் வழியாகப் பார்க்க
அழைக்கப்படுகின்றோம்.
வாழ்வை அற்புதமாக்கி அதன் அதிசயத்தை ஒவ்வொரு நொடியிலும் நினைத்துப்
பார்த்தால் மரணத்தை ழகாக்கிக் கொள்ளலாம். மரணத்தை அற்புதமாக்கிக்
கொள்ள வாழும் நாட்களை வரமாக்க வேண்டும். மரணத்தை வரமாக்கிக் கொள்ள
மனிதனுக்குக் கிடைத்த மாபெரும் வாய்ப்பு, சரியாக வாழ்ந்து சரியாக சாவது.
ஆம் உதயத்திலும் அஸ்தமனம் அழகியது. இந்தச் செய்தியை எடுத்து
இயம்புகின்றது இன்றைய திருப்பலி.
இறந்த நம் உறவுகள் விண்ணக இன்பத்தைக் கொண்டாட அருள் தருகின்ற திருப்பலி
இது..
இறந்த நமது உறவுகள், யாரும் நினையாத ஆன்மாக்கள், உத்தரிக்கும்
ஸ்தலத்தில் வாழ்வோர் அனைவரும் நிலைவாழ்வுக்கான இன்பத்தைப் பெறவும்,
நாமும் ஒரு நாள் அந்த இன்பத்தை அடைய வாழும் நாட்களில் சரியாக வாழவும்
அருள் கேட்டு இதயத்தை இந்த திருப்பலியில் இணையச் செய்வோம்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1.மேலொரு வாழ்வு உண்டு என்று கூறிய எங்கள் மீட்பரே.!
இதோ எங்களை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர்
இவர்களை ஆசீர்வதியும். திருச்சபையின் நலனுக்காக மேன்மையாக உழைத்து
மரித்த திருப்பீடப் பணியாளரளுக்கு விண்ணகப் பேறுபலன்களால் நிறைவளிக்க
வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.
2. "சுமை சுமந்து சோர்ந்திருப்போரே-எல்லோரும் என்னிடம் வாருங்கள்.
நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்ற தேவனே!
உம் மக்களாகிய
நாங்கள் பல்வேறு சுமைகளில் அமிழ்ந்து கிடக்கிறோம். எங்களின் வேதனை,
சோதனைகளில் வல்லமையும், நம்பிக்கையையும், திடத்தையும் அளித்து.. சரியாக வாழ்ந்து உமது திருவுளத்தை நிறைவு செய்வோராக, இந்த மண்ணக வாழ்வில்
பயணிக்க உமதருள் வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.
3. எங்களை வழிநடத்தும் தந்தையே!
எங்களை அனுதினமும் வழிநடத்தும் எங்கள் பங்கு தந்தை அவர்களை
ஆசீர்வதியும். அவர் ஆற்றுகின்ற தெய்வீக பலி இறந்தோருக்காக நாங்கள்
செய்கின்ற தவச்செயல்களையும் தானதருமங்களையும் அர்த்தம் நிறைந்ததாக
மாற்றச் செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. "என்னிடம் நம்பிக்கைக் கொள்பவன் இறப்பினும் வாழ்வான்"
- என்ற
தெய்வமே!
நீர் உம்மிடம் அழைத்துக் கொண்ட எங்கள் சகோதர சகோதரிகளுக்கும் யாரும்
நினையாத ஆன்மாக்களுக்கும் உத்தரிக்கின்ற நிலையில் வாழும்
ஆன்மாக்களுக்கும் வானக வாழ்வில் இன்பம் தர உமதருள் வேண்டுமென்று இறைவா
உம்மை வேண்டுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
அந்த ஊரில் மிகப் பெரிய பணக்காரர்கள் மூன்று பேர் இருந்தார்கள்.
மூவரும் நீண்ட காலமாக நல்ல நண்பர்கள். அவர்கள் மூவருக்கும்
வயதாகிவிட்டது. எனவே அவர்களுக்கு மரண பயம் வந்துவிட்டது. மரணத்திற்குப்
பின் மோட்சம் செல்ல வேண்டும் அதற்கு என்ன செய்யலாம் என யோசித்தார்கள்.
அப்போது அருமையான வாழ்வு வாழ்ந்து மக்கள் பலருக்கு வழிகாட்டுகின்ற
முனிவர் ஒருவர் நினைவுக்கு வந்தார். அவர்கள் மூவரும் இணைந்து முனிவரை
சந்திக்க முடிவு செய்தார்கள். அந்த ஊரில் உள்ள மடாலாயத்தில்
தங்கியிருந்த முனிவரிடம் வந்தார்கள். தங்களுக்கு வயதாகிவிட்டதையும்,
மரணம் பயம் வந்துவிட்டதையும் சொல்லி மரணத்திற்குப் பின் மோட்சம் செல்ல
வழிகாட்டும்படியும் கேட்டு கொண்டார்கள்.
முனிவர் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அமைதியாக இருந்தார். சிறிது நேரம்
கழித்து "மூவரும் இப்போது சென்றுவிட்டு ஒரு மாதம் கழித்து வாருங்கள்"
என்று சொல்லி அனுப்பி விட்டார். மூவரும் திரும்பிச் சென்றார்கள்.
அப்படித் திரும்பிச் செல்லும் போது திடீரென முனிவர் ஒரு மாதம் கழித்து
"நீங்கள் திரும்பி வரும் போது மூவரில் ஒருவர் இருக்க மாட்டீர்கள்
இறந்து போவீர்கள்" என்று அவர்கள் காதில் விழும்படிக் கத்தினார்.
திரும்பிப் பார்த்து அவர் கத்தியதைக் காதில் வாங்கிக் கொண்டு மிகுந்த
கவலையோடு மூவரும் தங்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள்."நம் மூவரில்
யார் முதலில் இறந்து போவோம்" என்று தெரியவில்லையே என தங்களுக்குள்
பேசிக் கொண்டார்கள்.
வீட்டிற்குச் சென்றதும் முதலாமவர் தான் முதலில் இறந்தால் என்ன செய்வது
என யோசித்தார். உடனே தன்னிடம் இருந்த சொத்தை எல்லாம் உணவு இன்றி
தவிக்கும் ஏழையருக்கு செலவிட விரும்பி அன்னதானம் செய்தார். சத்திரங்கள்
கட்டினார். உணவின்றி ஊரில் யாரும் தவிக்கக் கூடாது என்பதில் முழுக்
கவனம் செலுத்தினார்.
இரண்டாமவர் தனது செல்வத்தை நோயினால் வாடும் ஏழைகளைத் தேடிச் சென்று
அவர்களுக்கு மருத்துவ வசதி செய்து கொடுக்க செலவழித்தார்.
மருத்துவமனைகள் கட்டி எழுப்பினார். நோயினால் வாடுவோரைத் தேற்றுவதில்
தனது முழுக் கவனம் செலுத்தினார்.
மூன்றாமவர் ஏழைகள், ஆதரவற்ற விதவைகள், குழந்தைகள் காப்பகம், முதியோர்
இல்லங்கள், தொண்டு நிறுவனங்கள், நலிவுற்றோர் எனத் தேவையில்
இருப்போரைத்தேடிச் சென்று தனது பணத்தை செலவு செய்ய ஆரம்பித்தார்.
ஒரு மாதம் கடந்து சென்றது. மூவரும் உயிரோடு இருந்தார்கள். முனிவரைத்
தேடி வந்தார்கள். மூவரும்"இந்த ஒரு மாதமும் தங்களில் யாராவது ஒருவர்
இறந்து விடுவோம்" என்று தாங்கள் செய்ததைத் தெரிவித்தார்கள்
"இது தான்
வானகம் செல்வதற்கான வழி, இதையே வாழ்நாள் முழுவதும் செய்யுங்கள்."என்று முனிவர் மூவருக்கும் சொல்லி அனுப்பினார்.
ஆம் சரியாக வாழ்ந்தால் சரியாக சாவோம் என்பது இது தான்.
நமது வாழ்வின் ஆரம்ப விதியை எல்லோரும் அறிய எழுதிய இறைவன், முடிவு
விதியை யாருக்கும் தெரியாமல் எழுதி வைத்துவிட்டார்.
ஒரு தாய் தனது வயிற்றில் குழந்தை இருக்கும் போது, அவள் அருந்திய தவறான
மாத்திரையால் குழந்தை இறந்து விட்டது. இறந்த குழந்தை எங்கே
சென்றிருக்கும் என மன வேதனையோடு குழப்பமான நிலையில் மன்றாடுகிறார்.
குழந்தைகள் எந்தத் தவறும் செய்யாதவர்கள். இறப்பிற்குப் பின்
விண்ணகத்தில் சம்மனசுக்களாய் வலம் வருவார்கள் என்பது திண்ணமல்லவா?
சமீபத்தில்: 30 வயது இளம் வாலிபர், தனது வேலைகளை எல்லாம் எல்லோருக்கும்
பணிவாகச் செய்யக்கூடியவர். திடீரென ஒரு விபத்தினால் மரணமடைந்து
விட்டார். அவருக்கு இளம் மனைவியும் இரு சிறு குழந்தைகளும் இருந்தார்கள்.
அவரது பிரிவைத்தாங்க இயலாது மன வேதனையில் துடித்தார்கள். அவரது
மரணத்தைக் கண்டு, சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கண்ணீர்
வடித்தனர். இன்றும் அந்த வாலிபனின் மரணத்தை நினைத்து ஊரும், உறவும்
அழுது புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சூழலில் ஏழ்மையான அந்தக்
குடும்பத்திற்கு வாழ வழிகாட்டும் போது, அவரது பிள்ளைகளும் மனைவியும்
சற்றே ஆறுதல் அடையலாம். அவரால் பயனடைந்தவர்களும் அப்படியான வாழ்வாதார
உதவி செய்ய முன் வரும் போது, உதவி செய்வோருக்கும் ஆத்ம திருப்தியும்
இறந்த அடியாரின் ஆன்மாவுக்காக செய்கின்ற அறநெறி செயலாகவும் அமையும்.
இதைத் தான் சமூகமும் திருச்சபையும் நம்மைப் படைத்த இறைவனும்
விரும்புகிறார்.
இறப்பிற்குப் பின் இறை அமைதியில் நிம்மதி பெற இயலாத ஆன்மாக்களுக்கு
பாவங்கள் தடையாய் உள்ளன. இத்தடைகளிலிருந்து விடுபடுவதற்கு நமது
மன்றாட்டுகளும். திருப்பலி, பிறரன்புச் செயல்கள் போன்றவையும்
தேவைப்படுகின்றன. இதனால் தான் திருச்சபை இறந்தவர்களுக்காக மன்றாடுவதில்
அக்கறை காட்டுகிறது எனவே அவற்றை உணர்ந்தவர்களாக இறந்த ஆன்மாக்களுக்காக
உருக்கமுடன் நாம் மன்றாட கடமைப் பட்டுள்ளோம்.
நம்மால் செய்ய முடிந்த நற்செயலை செய்து, இறந்த ஆன்மாக்களுக்கு விண்ணக
வாழ்வில் இடம் பெற செபிக்கும் காலம் இந்த நவம்பர். இதைச் செய்யும்போது
அவர்கள் வழியாக நம் விண்ணப்பங்களும் நிறைவேறும். இதைத் தொடர்ந்து
செய்து விண்ணக நலன்களைப் பெற்றுக் கொள்ள முன் வருவோம்.
கத்தோலிக்க பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியை மிகுந்த பக்தியானவர். தனது
பிள்ளைகளையும் ஒழுக்க நெறியில் வளர்த்து வருகின்றவர். தனது தாய் இறந்த
பிறகு சிற்றன்னையிடம் மிகவும் கொடுமைகளை அனுபவித்து வளர்ந்தவர்.
தற்போது"நான் இந்த நிலைமையில் வசதி வாய்ப்புகளோடு இருப்பதற்கு எனது
தாய் உயிரோடு இருந்தால் ஒருவேளை முடியாது போயிருக்கலாம். அவர்
விண்ணகத்தில் இருந்து என் குடும்பத்தை செழிக்கச் செய்கின்றார்" என
தன்னைச் சார்ந்தவர்களிடம் சொல்லி நெகிழ்ந்து போகிறார்.
ஆம் இறந்தவர்கள் விண்ணகத்தில் இருந்து நமக்காக பரிந்து பேசுகிறார்கள்
என விசுவசித்து செபிப்போம்.
சீடன் ஒருவன் தன் குருவிடம் கேட்டான்
"உலகிலேயே அதிசயமான விஷயம் எது?" குரு சொன்னார்
"தன் கண்முன்னே உலகத்தார் ஒவ்வொருவராக இறந்தாலும், தான்
மட்டும் இறக்கமாட்டோம்... என்பதுபோல் மனிதர் வாழ்வதே, உலகில் அதிசயமான
விஷயம்" என்றார். இன்று நாம் இறந்த அனைத்து விசுவாசிகளையும்
நினைவு கூருகிறோம். ஆனாலும் நாமும் ஒருநாள் இறப்போம் என்கிற உண்மை
மட்டும் ஏனோ நம்மை தொடுவதில்லை.
"அதாவது நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? என்ற தலைப்பில்
எழுதப்பட்ட இப்புத்தகத்தில்..."
நாம் பிறந்த போது, நாம் அழுதோம்...உலகம் சிரித்தது.
நாம் இறக்கும் போது, பலர் அழுதால் தான் நம் ஆத்மா சாந்தியடையும்" என
ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத
கருத்துக்கள் நாம் சரியாக வாழ்ந்து சரியாக சாவதற்கு வழித்தடம்
அமைக்கின்றது.
நம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் நமக்கு ஏதோ ஒன்றை
சொல்லி தருகின்றார்கள் எனவே நாம் சந்திக்கும் அனைவரிடமும் கருணையுடன்
இருப்போம்.....
நமக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும்
அதிகம் செலுத்துவோம். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காமல்
இருப்போம்.
அடிக்கடி கவலைப்படாமல் இருப்போம். தேவை எனில் கவலைப்படுவதற்கென
ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குவோம். அந்த நேரம்
அனைத்து கவலையும் குறித்து சிந்திப்போம்...
அதிகாலையில் எழ பழகுவோம்...
வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே...
தினமும் நிறைய சிரிக்க பழகுவோம்....
அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்..
நிறைய நல்ல புத்தகம் படிப்போம்
எங்கு சென்றாலும், பயணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுவோம்.
காத்திருக்கும் நேரத்தில் வாசிப்போம்.
நமது பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுவோம்
இவ்வாறு பட்டியலிடும்போதே
நம் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும்
வாய்ப்பு உண்டு...
நம் குழந்தைகளை நமக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக நினைப்போம்....
அவர்களுக்கு நாம் தரக் கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நாம் செலவிடும்
நேரமே...
இவைகளை நாம் சரியாக வாழ வழியாக அமைத்துக் கொள்ளலாம்.
எம். பி ஜான் என்றோர் பெரியவர். வார இதழ் ஒன்றை ஆங்கிலத்தில் நடத்தி
வந்தார். அவரைத் தெரிந்தவர்கள் அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைவர்கள்
மட்டுமல்ல, எழுத்துத் துறையில் சமுகத்தில் உயர்ந்த நிலையில்
இருந்தவர்கள் அனைவரும்...
90 வயதைத் தாண்டியவர், சிறந்த எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியர்,
சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் உடையவர். சமூக நலனுக்காக அவர்
எதைக் கேட்டாலும் உடனே அவர் கேட்டுக் கொண்டதைச் செய்வார்கள்.
எனவே எல்லோருக்கும் அவர் என்றால் அச்சம்.
அதுமட்டுமல்லாது அவர் தனக்காக எதையும் கேட்டதே கிடையாது.
நண்பர் ஒருவர் ஒருமுறை அவரைச் சந்திக்கச் சென்றிருந்தபோது, நூல் ஒன்றை
எழுதிக்கொண்டிருந்தார். நண்பரைப் பார்த்ததும் எழுதியதை நிறுத்திக்
கொண்டு சொன்னார்.
நண்பா"உனக்குத் தெரியுமா?. நான் நீண்ட நாளாகக் கடவுளை ஏமாற்றி
வருகிறேன். அப்படியே 90-வது வயதையும் தாண்டி வந்து விட்டேன்."
நண்பர் ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்தார்.. அவர் தொடர்ந்தார்.
"நான் எப்போதும் ஒரு நூலை எழுதி முடித்த அடுத்த நாளே, வேறு ஒரு நூலை
எழுதத் தொடங்கி விடுவேன். என் கையில் எப்போதும் ஏதாவது ஒரு முக்கிய
வேலை இருக்கும். நூல் எழுதுவதும் அதில் ஒன்று. கடவுள் எப்போதுமே ஒரு
வேலை நிறைவடையாமல் உள்ள நிலையில் ஒருவர் உயிரை எடுத்துக் கொள்ளமாட்டார்.
அந்த வேலையை முடிப்பதற்க்கு அவருக்கு அவகாசம் கொடுப்பார். எனவே புதிய
புதிய வேலையாக ஒவ்வொன்றாகச் செய்யத் தொடங்கி விடுவேன். இப்படியே பல
ஆண்டுகளாகக் கடவுளை ஏமாற்றி வருகிறேன்" என ஒரு குழந்தையைப் போல
சிரித்தபடியே சொன்னார்.
அவர் 96 வயதைக் கடந்த போது அந்தச் சந்திப்பு அப்படி வழக்கமாக நடந்தது.
அன்றும் அவர் வழக்கம் போல மகிழ்ச்சியுடன் இருந்தார். நண்பரைக் கண்டதும்
அதே சிரிப்பு.
"உனக்குத் தெரியுமா நான் இனிமேல் கடவுளை ஏமாற்ற மாட்டேன். என் வேலைகளை
எல்லாம் முடித்து விட்டேன். மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.
இறப்பதற்குக் காத்திருக்கிறேன்" என்றார்.
அன்று நண்பருடைய பிறந்தநாள் எனவே இனிப்புக் கொடுத்தார்., சாப்பிட்டார், ஆடை ஒன்றை அவருக்கு அணிவித்து அவர்தம் கால்களில் விழுந்து நண்பர்
ஆசிபெற்றார்.
அன்று இரவு அவர் இறந்து போனார்.
சிரித்துக் கொண்டே இறந்த ஒரு மகான். அந்த உதட்டில் அந்தப் புன்சிரிப்பு
அழகாகப் பதிவாகி இருந்து....
சந்தோஷமாகச் சாக முடியுமா? என்னும் வினாவுக்கு விடை கிடைத்தது.
முடியும்.
அதற்குத் தயாராக இருந்தால்.....
அதற்கு எப்படித் தயாராக இருப்பது?
எந்த வயதில்? எந்தச் சூழ்நிலையில்?
இறப்பு ஒருவனுக்கு எப்போது வரும் என்று யாராலும் சொல்ல முடியாது.
பிறப்பும் இறப்பும் இன்றும் இறைவன் கையில்.
பிள்ளைகளால் கவனிக்கப்படாமல் தெருவில் விடப்பட்ட பெற்றோர், தற்கொலை
செய்து கொள்ளக் கூட நீதிமன்ற அனுமதியை நாடுகிற அவல நிலை இன்று நாட்டில்
நிலவி வருகிறது.
இவர்கள் மரணத்தின் எல்லைக்குத் துரத்தப்பட்டு அதன் வாயில் திணிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் சந்தோஷமாகச் சாக முடியுமா?
அவர்களின் உயிர் பிரியும் போது, அந்த வினாடி அவர்களின் மரணத்துக்கு
காரணமானவர்களைச் சபித்து விட்டு இறைவன் தகுந்த தண்டனை வழங்கவேண்டும் என
இறுக்கமான மனத்தோடு, வலியோடுதான் செத்துப் போவார்கள்.
இதுதான் நிதர்சனம்.
எனவே சந்தோஷமாகச் செத்துப் போவது என்பது அற்புதமான கலை; ஓர் உன்னதமான
நிலை.
அதை அடைய வேண்டும் எனில் எதையும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளும் மனநிலை
வேண்டும்.
எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள்; எதையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்
கொள்வார்கள்.
எது நடந்தாலும் இறைவனுக்கு நன்றி சொல்லுவோம். கொஞ்சம் கொஞ்சமாக இந்த
மனநிலையை வளர்த்துக் கொள்பவர்கள் சந்தோஷமாகச் சாக முடியும்.
இறந்து கிடக்கும் ஒருவரின் முகத்தில் சிரிப்பைக் காண்பது
சரித்திரத்தில் இடம் பெறும் அளவுக்கு முக்கிமானது.
நல்லதையே நினைத்தவர்கள், நல்லதையே செய்தவர்கள், நல்லதையே நாடியவர்கள்
எல்லோரும் சந்தோஷமாகச் சாக முடியும்.
அது எந்த வயதிலும் நடக்கலாம்.
உறுப்புகளைத் தானம் செய்பவர்கள், கண்களை தானம் செய்பவர்கள்,
அடுத்தவர்களின் நலனை மட்டுமே மனதில் கொள்பவர்கள். இவர்கள் அனைவருமே சந்தோஷத்தோடே செத்துப்போவார்கள்.
ஆனாலும் செத்த பிறகும் வாழ்வார்கள்.
உண்மையில் அவர்களுக்கு மரணமில்லை.
அந்த வரிசையில் இடம் பெறுபவர் தான் அன்னை தெரெசா...
மிகச் சரியாகத் தன் வாழ்க்கையை வாழ்ந்து நம்மை விட்டு விண்ணகம் சென்ற
அன்னை தெரெசா, நமக்கு நாம் வாழும் இந்த நூற்றாண்டில் மாபெரும் பாடமாக
வாழ்ந்து காட்டிச் சென்றிருக்கிறார்.
மரணத்தை அற்புதமாக்கிக் கொள்ள மனிதனால் முடியும். சரியாக வாழ்ந்தால்
சரியாக சாகலாம் என்ற சிந்தனைக்கு மாபெரும் இலக்கணமாக வாழ்ந்து காட்டிய
அன்னை தெரெசா, மரணத்தின் பிடியில் இருந்தவர்களை எல்லாம் விண்ணகத்தின்
பிடிக்குள் அழைதுச் செல்வதில் மிகப் பிடிவாதமாக இருந்தார் என்று தான்
சொல்ல வேண்டும்.
வங்கதேசத்திற்கு வந்தபோது அங்கே மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர்
அன்பின்றி மிகப் பெரிய சாபக்கேட்டிற்கு ஆளாகி இருப்பதைக் கண்டு மனம்
வருந்துகின்றார். ஒருவர் மீது ஒருவர் அக்கறை இல்லாது, வறுமையின்
பிடிக்குள் அகப்பட்டு, போட்டி பொறாமையினால் பீடிக்கப்பட்டு, மனித
நேயமிழந்து மரணத்தோடு போராடி, மனிதம் சாக்கடைக்குள் கிடப்பதைக் கண்டு
மனம் வெதும்புகிறார். மரணமடைவது நிச்சயம் எனத் தெரிந்தாலும், விலை
உயர்ந்த மருந்து கொடுத்து சாகக் கிடக்கும் மனிதர்களை, சாக்கடையில்
இருந்து அள்ளி எடுத்து, தன் மடி மீது சுமந்து அன்பு காட்டுகின்றார்.
மரணம் அடையும் போதாவது பாசத்தை அனுபவிக்கட்டும். படைத்தவனை
நேசிக்கட்டும் என மனதார நற்பணி செய்ய தன்னைக் கையளிக்கின்றார். கைமாறு
கருதாது தன் பணி செய்து, இன்று கைமேல் பலனாக நிலைவாழ்வுக்குள்
நுழைந்துவிட்டார். அநேகரை நிம்மதியாக நிலைவாழ்வுக்குள் நுழையவும்
செய்து விட்டார். இதைத் தான் நாமும் செய்ய வேண்டும் என இந்த கல்லறை
திருவிழா நம்மை நமது வாழ்வைத் திருப்பிப் பார்க்கச் செய்கிறது.
இறந்த விசுவாசிகளுக்காக செபிக்கும் இந்த நாளில் நம் நினைவில் நிறுத்த
வேண்டிய சில முக்கியச் செய்திகள்.
1. இறந்தோரை நினைத்து அழுது கவலைப்பட்டு புலம்புவதைவிட விண்ணக வாழ்வில்
மறுபிறப்பு
எடுத்துள்ளார். என நினைத்து ஆறுதல் அடையவும் நமது
விசுவாசத்தை ஆழமாக்கவும் முன் வருவோம்.
2. இறந்தோர் விண்ணகம் செல்ல அவரது பாவங்கள் தடையாக இருப்பதை தவிர்க்க
திருப்பலி
ஒப்புக்கொடுத்தல், அவரது பெயரால் தர்மங்கள் செய்து ஆன்ம
இளைப்பாற்றிக்காக செபிக்க முன்வருவோம்.
3. மரணத்தை நினைத்து அஞ்சுவதைவிட நாம் ஒரு நாள் மரணம் அடைவது நிச்சயம்
என்பதை உணர்வோம். அன்றாட வாழ்க்கையை சரியாக வாழ்வோம் மரணத்தை அற்புதமான
விஷயமாக மாற்றிக் கொள்வோம்.
4. இழப்புகளை சந்தோஷமாக சந்திக்க தயாரோவோம். வாழ்க்கை அழுகையில் தொடங்கி அழுகையில் முடிகிறது."முதல் அழுகை எப்படி
வாழப்போகிறோம் என்பதையும்""கடைசி அழுகை எப்படி வாழ்ந்தோம்"
என்பதையும் குறிக்கிறது.
இறந்த நம்பிக்கையாளர் அனைவர் நினைவு நவம்பர் 02, 2025
திருப்பலி முன்னுரை
அனைத்து புனிதர்களின் விழாவைத் தொடர்ந்து, இன்று அனைத்து
இறந்தவர்களின் நினைவை திருஅவை நினைத்துப் பார்க்க அழைக்கின்றது.
புனிதர்கள் தங்களது வாழ்விலே, பல துன்பங்கள் வழியாக தங்களையே
புனிதப்படுத்திக் கொண்டார்கள். கிறிஸ்துவின் இரத்தத்தினால் தங்களை
கழுவி தூய்மையாக்கிக் கொண்டவர்கள்.
இறந்த அன்பர்கள் எல்லாரும் அத்தகைய உயர்நிலை பெற்றவர்கள்
இல்லையென்பதை நாம் அறிவோம். சிலர் தங்களது பாவங்களாலும்,
குற்றங்களாலும், பலவீனத்தாலும், கடவுளுக்கு விரோதமாக நடந்து
அவருடைய இரக்கத்தை பெற வேண்டியது அவசியமாகியிருப்பதால்,
அவர்களையெல்லாம் நினைத்து மன்றாட அழைப்புத் தருகின்றது திருஅவை.
இறப்பை ஏற்க முடியாது, வருந்துவதையோ, துயரப்படுவதையோ, கண்ணீர்
சிந்துவதையோ விடுத்து, அந்த ஆன்மாக்கள் இறை இரக்கத்தை பெற
நம்பிக்கையுடனே மன்றாடுவோம். ஒப்புக் கொடுக்கும் பலியின் பலனை அந்த
ஆன்மாக்கள் பெறச் செய்வோம்.
முதல் வாசக முன்னுரை (சாலமோனின் ஞானம் 3:1-9)
நேர்மையாளராக இவ்வுலகில் வாழ்ந்த மனிதர் மறுவுலகில் அமைதி காண்பர்;
ஆனால் இறைப்பற்றின்றி வாழ்வோர் தண்டனை பெறுவர். ஆகவே, நம்மை
அழைக்கின்ற கடவுளுக்கு நாம் எவ்விதத்தில் பதில் அளிக்கின்றோமோ
அதைப் பொறுத்தே நமது மறுவுலக வாழ்வு அமையும் என இன்றைய முதல்
வாசகம் நமக்கு விளக்குவதை கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
(உரோமையர் 5:5-11)
தூய ஆவியின் வழியாகக் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில்
பொழியப்பட்டுள்ளது; அந்த அன்பைப் பெற்றுள்ள நாம் ஒருபோதும்
ஏமாற்றம் தராத எதிர்நோக்கையும் கொண்டுள்ளோம். எனவே, கடவுள் தம்
வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்னும் உறுதி நமக்கு இருப்பதால்
நாம் எதைக் கண்டும் அஞ்சவேண்டியதில்லை என்று புனித பவுலடியார்
இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூறுவதை கேட்போம்.
மன்றாட்டுகள்:
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
1. உயிர்ப்பும் உயிருமான தெய்வமே! திருஅவை பொறுப்பாளர்கள்
இறப்புக்குப் பின் உள்ள வாழ்வை தெளிவுற அறிவுறுத்தி ஆன்மாக்களை
மீட்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. உயிர்ப்பும் உயிருமான தெய்வமே! நாட்டுத் தலைவர்கள் நிரந்தரம்
இல்லாத உலக வாழ்க்கையையும், மறுவுலக வாழ்வின் மீது நம்பிக்கையும்
கொண்டு அதனை அடைய முனைப்போடு உண்மையாய் உழைக்க அருள்தர இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
3. உயிர்ப்பும் உயிருமான தெய்வமே! பலியிலே பங்கேற்கும் நாங்கள்,
மறுவுலக வாழ்வு கூறித்து, நம்பிக்கை கொண்டவர்களாக இவ்வுலக வாழ்வை
சிறப்புடனே கடத்திட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. உயிர்ப்பும் உயிருமான தெய்வமே! எம்மோடு வாழ்ந்து மரித்த
அன்பர்கள் உம் இரக்கம் பெற்று, உம்மை முகமுகமாய் சந்திக்கும் வரம்
பெற, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. உயிர்ப்பும் உயிருமான தெய்வமே! இறப்பை ஈடுகட்ட முடியாது
பரிதவிக்கும் அன்பர்கள் உம் ஆறுதலையும், அன்பையும் பெற்று
சந்திப்போம் என்ற நம்பிக்கையுடனே பயணிக்க, அருள்தர இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
அரிதாள் நடுவே தீப்பொறிபோல் பரந்து சுடர்விட்டுக்
கொண்டிருக்கின்ற இறந்த நம்பிக்கையாளர்களின் நினைவேந்தல்
திருப்பலியில் பங்கெடுக்க வருகை தந்துள்ள அன்பு இறைமக்களே,
உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
தென்பொதிகை சந்தனமாய், நம் நெஞ்சில் இனிக்கும் தேன்
துளியாய், நம் வாழ்வின் கண்மணியாய், காலத்தின் பரிசாய்,
நாம் கண்டு கண்டு மகிழ்ந்த கடலாய் வாழ்ந்தவர்கள் இறந்தாலும்,
இறந்தப் பிறகும் அவர்கள் வாழ்கிறார்கள் என்பதை அடையாளப்படுத்துகிறது
இன்றைய நாள்.
மனிதனே நீ மண்ணாய் இருக்கிறாய் திரும்பவும் மண்ணுக்கே
திரும்புவாய் என்ற திருமறை தத்துவத்தையும், என்னில் விசுவாசம்
கொள்பவன் இறப்பினும் வாழ்வான் என்ற விசுவாச உண்மையையும் இன்றைய
நாள் நம் நெஞ்சங்களில் விதைக்கிறது.
மனிதன் காற்றில் ஏறி விண்ணைச் சாடினான். கடல் அலைகள்
மீதும் சாகசம் செய்தான். மண்ணின்மீது மகத்தான சாதனைகளைப்
புரிந்தான். ஆனால் மரணத்தை வெல்லும் மார்க்கத்தை மட்டும்
அவனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. மனித குலத்திற்கு மரணம்
மட்டும்
இல்லாமல்போனால் வாழ்க்கை வண்ணங்கள் இல்லாத வானவில்லாகி
விடும். மரணம் ஆராதனைக்குரியது, வாழ்க்கையை சரியான வழியில்
அதுதான் செலுத்துகிறது. நம் வாழ்க்கையை அதுதான் செதுக்கு
கிறது.
உலகில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை இருக்கிறது.
ஒவ்வொரு பிறப்புக்கும் பின்னாலும் ஓர் அர்த்தம் இருக்கிறது.
கடமைகளை முடித்த ஒவ்வொரு ஜீவனும் மரணத்தை தன் மடியில் ஏந்திக்கொள்கிறது.
இறந்தோர் இறைவனில் இளைப்பாறுதல் பெற இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு
விசுவாசியும் தம் செபத்தால், தவத்தால் உதவி செய்ய செய்ய
முடியும் என்பது திருச்சபையின் போதனை. இதுவே இன்றைய
விழாவின் நோக்கம்.
மரித்த விசுவாசிகள் முடிவில்லா இளைப்பாற்றியை அடைந்திட,
அவர்கள் நம்மைப் படைத்தவரும் மீட்பருமான கடவுளை முகம் முகமாய்
கண்டு மகிழும் பாக்கியத்தைப் பெற, அவர்கள் ஆவலோடு
விரும்பிக் காத்திருக்கிற பாவப் பொறுத்தலையும், ஆன்ம அமைதியையும்
பெற்றிட இத்திருப்பலி வழியாக இறையருளை வேண்டுவோம்.
முதல் வாசக
முன்னுரை
இன்றைய முதல் வாசகம் நீதிமான்களின் அகால மரணத்தைப் பற்றியும்,
ஆண்டவர் அவர்களுக்கு அளிக்கும் மீட்புப் பற்றியும் எடுத்துரைக்கிறது.
இறந்தவர்களின் வாழ்வு அழிவதில்லை, அவர்கள் கடவுள் திருமுன்
க என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை எடுத்துரைக்கும்
இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.
இரண்டாம் வாசக
முன்னுரை
தூய ஆவியின் வழியாக கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது.
அந்த அன்பைப் பெற்றுள்ள நாம் ஒரு போதும் ஏமாற்றம்தராத எதிர்நோக்கையும்
கொண்டுள்ளோம். கடவுள் தம் வாக்குறுதி களை நிறைவேற்றுவார்
என்னும் உறுதி நமக்கு இருப்பதால் நாம் எதைக் கண்டும் அஞ்ச
வேண்டியதில்லை என்று புனித பவுலடியார் இன்றைய இரண்டாம் வாசகம்
வழியே எடுத்துரைப்பதை கவனமுடன்
கேட்போம்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. அனைத்து தீங்கிலிருந்தும் விடுவித்து காக்கின்ற இறைவா,
எத்தகைய தீய சக்தியும் எம்மை தீண்டாது. வலியவராய்
இருந்து எம்மை காத்து வழி நடத்தும் எம் திருத்தந்தை, ஆயர்கள்,
அருட்பணியாளர் கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதியும். அவர்களுக்கு
நல்ல உடல் நலத்தையும், செயல் ஆற்றலையும், ஆரோக்கியத்தையும்,
ஆன்ம பலத்தையும் நிறைவாக தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
2. இறந்தோரிடமிருந்து இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த
எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா, சாவுக்குரிய எங்கள் உடலுக்கும்,
நீர் உயிர் அளிப்பவர் என்பதால் நீர் அழைத்துக்கொண்ட உம் அடியார்களுக்காக
இன்று நாங்கள் விசுவாசத்துடன் மனமுருகிச் செய்யும் வேண்டுதல்களுக்கு
செவிசாய்த்தருளும். சாவுக்குரிய தளைகளில் இருந்து இறந்த உம்
அடியார்களை விடுவித்து, உயிர்த் தெழும் நாளில் அவர்கள் உம்
திருமுன் வந்து சேரவும், உம் புனிதரோடு பேரின்ப மகிமையில்
பங்குபெறவும் அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3 அன்பு இறைவா, உம் திருமகன் இயேசுவோடு இணைந்திருக்கும்
நாங்கள் அனைவரும் அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம்
என்பதை முழுமையாக உணர்ந்து, பாவத்துக்கு உட்பட்ட மனித இயல்பை
விட்டகன்று, நீதிமான்களாகவும், உண்மையுள்ளவர் களாகவும்
வாழ்ந்து நிலைவாழ்வை நோக்கிப் பயணிக்கவும், உம் திருமகன்
இயேசு உயிர்த்தெழுந்தது போலவே நாங்களும் அவரோடு ஒன்றித்து
உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கையுடன் வாழவும் வரமருள
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. நயீன் ஊர் கைம்பெண்ணின் ஒரே மகனுக்கு உயிர் கொடுத்து உம்
பரிவிரக்கத் தால் அவருடைய கண்ணீரைத் துடைத்த இறைவா, எங்கள்
குடும்பங்களிலே நாங்கள் அன்பு செய்தவர்களை இழந்து அழுது புலம்பும்
இந்நேரம் எமக்கு ஆறுதல் அளித்தருளும். அவர்களுக்கு
முடிவில்லா வாழ்வு ஒன்று உண்டு, அவர்களது வாழ்வு நிலைகள்
மாறுபட்டுள்ளதே அன்றி அழிக்கப்படவில்லை. அவர்களுக்காக விண்ணகத்தில்
நிலையான வீடு ஆயத்த மாயிருக்கிறது என்ற திண்ணமான உண்மையை
எண்ணி அவர்கள் அமைதி பெற இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரைச்சிந்தனை
- அருள்பணி ஏசு கருணாநிதி
இறப்பும் நினைவும்
இறப்பை நமக்குப் பிடிப்பதில்லை. நான் இறந்து கடவுளோடு இருக்க
வேண்டும் என்று சொல்லி மோட்சம் செல்ல விரும்புபவர்களும்
இறப்பை விரும்புவதில்லை. பிறப்பைப் பிடிக்கும் அளவுக்கு
இறப்பை நமக்குப் பிடிப்பதில்லை. இறப்பு நம் அன்புக்குரியவர்களை
நம்மிடமிருந்து பிரித்துவிடுகிறது. நாம் கட்டிய கோட்டைகளை
உடைத்துவிடுகிறது. நாம் கண்ட கனவுகளைச் சிதைக்கிறது. இறப்பு
நமக்கு மறுவாய்ப்பை வழங்குவதில்லை. ஆனால், நாம்
விரும்புகிறோமோ இல்லையோ நம் அழையா விருந்தினராக நம்
வீட்டின் நடுவறைக்கு வந்து செல்கிறது இறப்பு.
ஆனால், இறப்பு என்பது ஓர் எதார்த்தம். நாம் பேசும்போது
பேசுகிற முதல் வார்த்தை இறந்தால்தான் அடுத்த வார்த்தை பிறக்கிறது
வாக்கியம் நிறைவு பெறுகிறது. நாம் நடக்கும்போது எடுத்து
வைக்கிற முதல் அடி இறந்தால் தான் அடுத்த அடி பிறக்கிறது
பயணம் நிறைவு பெறுகிறது. நம் உடலில் உள்ள செல்களின் இறப்பே
நம் வளர்ச்சியாக மாறுகிறது.
இறப்பை நாம் நினைவுகூர்கிறோம். நமக்கு வலி தருவது எல்லாம்
நம் நினைவில் நிற்கிறது. இன்னொரு பக்கம் இறப்பை நாம் நம்
கண்முன்னிருந்து அகற்றிவிட்டோம். ஆகையால், இறப்பைப் பற்றிய
நினைவும் மறைந்து வருகிறது.
இன்றைய நாளில் இறந்த நம் முன்னோர்களை நினைவுகூறுகின்றோம்.
நேற்று நாம் நினைவுகூர்ந்தவர்களும் இறந்த நம் முன்னோர்களே.
அவர்கள் மகிமை பெற்றவர்கள். கடவுளை நேருக்கு நேர்
பார்க்கும் பாக்கியம் பெற்றவர்கள். இன்று நாம் நினைவுகூர்பவர்கள்
பாதி வழி சென்று மீதி வழி செல்ல முடியாதவர்கள்.
துன்புறும் திருச்சபையில் உள்ள இந்த உறுப்பினர்களுக்காக
நாம் இன்று செபிக்கின்றோம்.
துன்புறும் நிலை அல்லது உத்தரிக்கிற நிலை என்றால் என்ன?
நம்முடைய கத்தோலிக்க நம்பிக்கையில் மோட்சமும் நரகமும் உண்டு.
மோட்சம் போகும் அளவிற்கு புண்ணியம் செய்யாதவர்கள் அல்லது
நரகத்தில் வீழ்த்தப்படும் அளவிற்கு மோசமாக இல்லாதவர்கள்
என்னும் இடைப்பட்ட மக்கள், சிறிதுகாலம் துன்புற்று, தங்கள்
தவற்றுக்குப் பரிகாரம் செய்து மோட்சத்திற்குள் நுழைபவர்கள்
இவர்கள்.
இறந்தவர்களுக்காக செபிப்பது சரியா?
காலத்தையும் இடத்தையும் கடந்த நம் முன்னோர்களுக்கு, காலத்திற்கு
இடத்திற்கும் உட்பட்டு நாம் செய்யும் செபமும், ஒப்புக்கொடுக்கும்
திருப்பலியும் பலன் தருமா? இயேசு எல்லாப் பாவங்களுக்காகவும்
இறந்து மீட்பைக் கொண்டுவந்துவிட்டார் என்றால், நான்
செய்யும் செபம் அவருடைய இறப்பைவிடப் பெரியதா? அவர் செய்த
மீட்புச் செயல் இறந்தவர்களுக்கு கிடையாதா? துன்பத்தை உணர
உடல் அவசியம். உடல் இல்லாத ஆன்மாக்கள் எப்படி துன்புற
முடியும்? வெறுங்கையராய் வீடு திரும்பிய இளைய மகனை தந்தை
ஏற்றுக்கொள்வது போல, புண்ணியம் ஏதும் இல்லாத வெறுங்கையராய்
நாம் செல்லும்போது கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டாரா?
கிறிஸ்தவ மதம் சாராதவர்களுக்கு என்ன நடக்கும்? போன்ற
கேள்விகள் இந்த நாளுக்குச் சவாலாக இருக்கின்றன. இறப்பைப்
போலவே மேற்காணும் கேள்விகளுக்கும் நம்மிடம் விடை இல்லை.
2 மக்கபேயர் 12-இல் இறந்தோர்க்காக செபிக்க யூதா பணம் திரட்டுவதைப்
பார்க்கிறோம். மேலும், 1 கொரி 15-இல் வாழ்வோர் ஒருவர் இறந்த
ஒருவரின் சார்பாக திருமுழுக்கு பெறும் நிகழ்வைப்
பார்க்கிறோம். இறப்புக்குப் பின் வாழ்வு உண்டா? இந்தக்
கேள்விக்குச் சில இடங்களில் ஆம் என்றும், பல இடங்களில்
இல்லை என்றும் விடையளிக்கிறது திருவிவிலியம்.
இன்றைய நாளில் நாம் என்னதான் செய்கிறோம்? இன்று இருப்போர்
நேற்று இருந்தோரை நினைவுகூறும் நாள் இந்நாள்.அவர்கள்
நேற்று நம்மோடு, நமக்காக இருந்ததால், இன்றும் என்றும் அவர்கள்
என்றும் நம்மோடும் நமக்காகவும் இருக்கிறார்கள்.
புனித அகுஸ்தினார், தன் ஒப்புகைகள் நூலில், தன் தாய்
மோனிக்காவின் இறப்பைப் பதிவு செய்யும் இடத்தில்
குறிப்பிடும் விடயம் நமக்கு விடை தருகின்றது.
அது என்ன?
என் தாய் இறந்த பின்னர் அவரை நாங்கள் அவருடைய கணவருக்கு
அருகில் அடக்கம் செய்ய வேண்டும் என நினைப்பார் என்று எண்ணினோம்.
ஆனால், அவரோ, என்னை எங்கு வேண்டுமானாலும் அடக்கம் செய்.
ஆனால், பீடத்தில் என்னை நினைக்க மறவாதே. என் ஆண்டவர் என்னை
எங்கிருந்தும் உயிர்ப்பிக்க வல்லவர் என்றார்.
அகுஸ்தினாரின் இந்தப் பதிவு நமக்கு மூன்று விடயங்களைச்
சொல்கின்றது:
(அ) நம் இறப்புக்குப் பின்னர் உடல் ஒரு பொருட்டு அல்ல. அல்லது,
உடல் இறந்துவிடுகிறது. ஆன்மா வாழ்கிறது. (ஆ) இறந்தவர்களை
நாம் இறைவேண்டலில் நினைவுகூர வேண்டும். (இ) இறந்த நாம் அனைவரும்
உயிர்ப்போம். நம்மை உயிர்ப்பிக்க ஆண்டவரால் மட்டுமே இயலும்.
ஏறக்குறைய இந்த விடயங்களைத்தான் இன்றைய நாளில் நாம்
நினைவுகூருகின்றோம். மனித ஆன்மா அழிவுறுவதில்லை என்ற நம்பிக்கை
சமயங்களைக் கடந்த ஒன்றாகவும், பல மெய்யிலளார்களின் கூற்றாகவும்
உள்ளது. ஆன்மா அணிந்துகொள்ளும் ஆடைதான் உடல். அல்லது, ஆன்மா
குடியிருக்கும் வாடகை வீடுதான் உடல். பொய்யுடல் அழியத்தான்
வேண்டும். கண்ணுக்குத் தெரியாத அந்த ஆன்மா நம் கண்களுக்குப்
புலப்படாத ஓர் இடத்தில் அல்லது ஒரு நிலையில் வாழ்கின்றது.
அந்த நிலையில் அது இறைவனில் இளைப்பாறுகிறது.
இன்றைய திருநாள் நமக்கு மூன்று பாடங்களைத் தருகின்றது:
(அ) வாழ்வின் நிலையாமை
எந்த நேரத்திலும் எதுவும் நேரிடலாம். இங்கு வந்தவர் எல்லாம்
அங்கு செல்ல வேண்டும் என்பது வாழ்வின் எதார்த்தம். அவர்கள்
சென்றுவிட்டார்கள், நாம் செல்வோம் என்பதும் எதார்த்தம்.
நாம் இன்று கல்லறைகளில் ஏற்றும் மெழுகுதிரி உருகி மறைவது
போல, நம் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் உருகி மறைகின்றது. நாம்
ஏற்றும் அகர்பத்திகள் புகையாய் காற்றில் மறைவது போல,
நாமும் மறைகின்றோம். ஆனால், அதுவரை நாம் எரிகின்றோம். அதுவரை
மணம் வீசுகின்றோம். கண்களைத் திறந்து பார்க்கும்போது நம்
கண்முன் நிற்கும் அனைத்துக்கும் உயிர் இருக்கின்றது. கண்களை
மூடிவிட்டால் அனைத்தும் மறைந்துவிடுகின்றன. மறைந்து போகாத
கடவுளைக் காண நாம் உடலின் கண்களை மூடித்தான் ஆக வேண்டும்.
ஆக, அந்த நாளை மனத்தில் நிறுத்த இந்த நாள் நம்மை அழைக்கிறது.
இவ்வுலகில் எதுவும் நிரந்தரமல்ல என்பதை நமக்கு
நினைவூட்டுகின்றது இந்நாள். நாம எப்பவும் இருப்போம் என்று
நினைத்து வாழ்ந்தவர்கள் இன்று கல்லறைகளில் இருக்கிறார்கள்.
இப்படி நினைத்து வாழும் நாமும் ஒருநாள் கல்லறையில் இருப்போம்.
இதுதான் இயற்கையின் நியதி. ஆகையால்தான் சபை உரையாளர்,
வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று அவனுக்குத் தெரியாது.
அது எப்படி நடக்கும் என்று அவனுக்குச் சொல்வாருமில்லை.
காற்றை அடக்க எவனாலும் இயலாது. அதுபோல, தன் சாவு நாளைத் தள்ளிப்போடவும்
எவனாலும் இயலாது. சாவெனும் போரினின்று நம்மால் விலக
முடியாது. பணம் கொடுத்தும் தப்ப முடியாது (காண். 8:7-8)
என்கிறார். ஆனால், நாம் பயப்படத் தேவையில்லை. இறப்புதான்
வாழ்க்கையை நாம் இனிமையாக வாழ நம்மைத் தூண்டுகிறது. எனவே,
நிலையற்ற இத்தருணத்தை ஒளியை பயன்படுத்தி, நிலையானதைச்
சம்பாதிக்க வேண்டும். நம்முடையை நிலையாமையை, வலுவின்மையைக்
கொண்டாடும் மனமுதிர்ச்சி அவசியம். இந்த மனமுதிர்ச்சி பெற
நாம் பற்றுக்களைக் களைதல் வேண்டும். பயம் மற்றும் குற்றவுணர்வு
விடுத்தல் வேண்டும்.
(ஆ) இறப்புக்குப் பின் உள்ள வாழ்வை நிர்ணயிப்பது இறப்புக்கு
முன் உள்ள வாழ்வே
இறப்புக்குப் பின் உள்ள வாழ்வைப் பற்றிப் பல நேரங்களில்
சிந்திக்கும் நாம் இறப்புக்கு முன் உள்ள வாழ்வை மறந்துவிடுகின்றோம்.
இந்த வாழ்வே அந்த வாழ்வைத் தீர்மானிக்கிறது எனில், குறுகிய
இந்த வாழ்வை நன்முறையில் வாழ்தல் நலம். இதையே மேலாண்மையியலில்,
பின்னோக்கி வாழ்தல் என்று அழைக்கின்றனர். அதாவது, என்
அடக்கச் சடங்கின்போது அங்கு நிற்பவர்கள் என்னைப் பற்றி என்ன
பேச வேண்டும் என்பதை நான் எழுதுவது. பின் அதை அப்படியே
வாழ்வாக்குவது. எடுத்துக்காட்டாக, இவர் மிகவும் எளிமையாக
வாழ்ந்தார் என்று அவர்கள் சொல்ல வேண்டும் என நான்
விரும்புகிறேன் என்றால், நான் இப்போது எளிமையாக வாழ்வது.
எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகளே. வலிமை மிகுந்தோர்க்கு
எண்பது. அவற்றில் பெருமைக்கு உரியன துன்பமும் துயரமுமே! அவை
விரைவில் கடந்துவிடுகின்றன. நாங்களும் பறந்துவிடுகின்றோம்
என்கிறார் திருப்பாடல் ஆசிரியர் (90:10). ஆண்டுகள் எழுபது
என்றாலும், பத்தாண்டுகள் எனக் கணக்கிட்டால், வெறும் ஏழு பத்தாண்டுகளே.
இவற்றில் முதல் 35 ஆண்டுகள் கற்றலிலும் நிற்றலிலும் கடந்து
விடுகிறது. அதற்குப் பின்னர் வரும் ஆண்டுகளில் நாம் வற்றத்
தொடங்குகின்றோம். கற்றல், நிற்றல், வற்றல் என நகரும் ஆண்டுகளில்
நாம் நன்மதிப்பீடுகளைப் போற்றல் நலம்.
(இ) இறப்பில் நாம் தனியர்கள் இல்லை
இறப்பு ஒரு கொடிய அனுபவமாக இருக்கக் காரணம் அதை நாம் தனியாக
அனுபவிக்க வேண்டிய நிர்பந்தம்தான். ஆனால், இறப்பில் நாம்
தனியாக இல்லை. நம்மை நினைவுகூர உறவினர்கள் மற்றும் நண்பர்கள்
இருக்கிறார்கள் என்பதை இன்றைய நாள் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.
இறந்த நம் முன்னோர்களுடன் நாம் இறைவேண்டலில் துணைநிற்பது
போல, நம்மோடும் நமக்குப் பின் வரும் தலைமுறையினர் துணைநிற்பர்.
ஆக, இறப்பு நம்மை ஒருபோதும் பிரித்துவிடவோ, தனித்துவிடவோ
இயலாது. இன்றைய நாளில் நாம் முடிந்தவரை பல இறந்தோரை
நினைத்துப் பார்ப்போம். செல்டிக் நாகரீகத்தில், இறந்தோர்
அனைவரும் வானத்துக்கு ஏறிச்செல்லும் ஓட்டைகளே நட்சத்திரங்கள்
என்று சொல்லப்படுவதுண்டு. அந்த ஓட்டைகள் வழியே வானின் ஒளி
நட்சத்திரங்களாக நம் கண்களுக்குத் தெரிகின்றன. அந்த நட்சத்திரங்கள்
ஒளியில் நம் மெழுகுதிரி ஒளியை இணைத்துக்கொள்வோம்.
இறுதியாக,
சில நாள்களுக்கு முன் நான் வாசித்த போஸ்டர் ஒன்றுடன் சிந்தனையை
நிறைவு செய்கின்றேன்.
யாராவது இறந்தால் ரெஸ்ட் இன் பீஸ் அமைதியில் இளைப்பாறுங்கள்!
என்கிறோம். யாரையாவது பார்த்து, லிவ் இன் பீஸ் அமைதியில்
வாழுங்கள்! என்று சொல்கிறோமா? இறந்தோருக்கு அல்ல,
வாழ்வோருக்கே இன்று அமைதி தேவைப்படுகிறது.
எதார்த்தமான பதிவு இது. வாழ்வோருக்கு அமைதி தேவையே. ஆனால்,
அதை அவர்களே இழக்கின்றனர். அவர்களால் அதைப் பெற்றுக்கொள்ள
இயலும். ஆனால், இறந்தோர் தங்கள் அமைதியைப் பெற்றுக்கொள்ள
அவர்களால் இயலாது. நாமே அதற்கு உதவி செய்ய வேண்டும்.
அமைதியை ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர் (மத் 5:9) என்னும்
மலைப்பொழிவுச் சொற்களை நான் இப்படித்தான்
புரிந்துகொள்கின்றேன்: தங்கள் இறைவேண்டல் வழியாக இறந்தோருக்கு
அமைதியை ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர். ஏனெனில், அவர்கள் இறைவனின்
பிள்ளைகள் என அழைக்கப்படுவர்.
உத்தரிக்கிற நிலை ஆன்மாக்களே! எங்களுக்காக
வேண்டிக்கொள்ளுங்கள்! எங்களது இறைவேண்டல் உங்களை அடைகிறது
என்பது எங்கள் நம்பிக்கை. உங்கள் ஆசீர் எங்களை அடைகிறது என்பது
எங்கள் எதிர்நோக்கு. உங்களையும் எங்களையும் இணைத்ததும் இணைப்பதும்
அன்பு.
ஆண்டவரே, இறந்த நம்பிக்கையாளர்கள் உம் இரக்கத்தால் நிலையான
அமைதியில் இளைப்பாறுவார்களாக! முடிவில்லாத ஒளி அவர்கள்மேல்
ஒளிர்வதாக! இன்றும்! என்றும்!!
இறந்த நம்பிக்கையாளர் அனைவர் நினைவு
நவம்பர் 02, 2025
நீத்தார் நினைவு
'இறப்புக்குப் பின் வாழ்வு உண்டா?' - இந்தக் கேள்விக்குச்
சில இடங்களில் 'ஆம்' என்றும், பல இடங்களில் 'இல்லை'
என்றும் விடையளிக்கிறது திருவிவிலியம்.
'ஆன்மாக்கள் துன்புறுவது என்பது இடம் சார்ந்த ஒன்றா?
அல்லது நிலை சார்ந்த ஒன்றா?' 'துன்புறுதல் என்பது இடம்'
என்கிறது திரிதெந்தின் திருச்சங்கப் புரிதல். 'துன்புறுதல்
என்பது நிலை' என்கிறது இரண்டாம் வத்திக்கான் சங்கப்
புரிதல்.
இறப்புக்குப் பின் வாழ்வு உண்டா அல்லது இல்லையா? என்றும்,
துன்புறுதல் இடமா அல்லது நிலையா? என்று கேள்வி கேட்கின்ற
நாள் அல்ல இந்த நாள்.
'இயேசுவின் பாடுகள், இறப்பு, மற்றும் உயிர்ப்பு நம்
பாவங்களைப் போக்கிவிட்டது என்றால், நாம் ஏன் இறந்த
பின்னரும் துன்புற வேண்டும்?'
'காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்டு நாம் செய்யும்
இறைவேண்டல், காலத்தையும் இடத்தையும் கடந்த ஆன்மாக்களை
எப்படிச் சென்றடையும்?'
'மோட்சம், நரகம், துன்புறும் நிலை ஆகியவை பற்றிய நம்பிக்கை
இல்லாத சமயத்தவர்கள், அல்லது இறப்புக்குப் பின்னர் வாழ்வு
உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளாத நபர்களுக்கு என்ன நேரிடும்?'
இறப்பைப் போலவே மேற்காணும் கேள்விகளுக்கும் நம்மிடம் விடை
இல்லை.
இன்றைய நாளில் நாம் என்னதான் செய்கிறோம்? இன்று இருப்போர்
நேற்று இருந்தோரை நினைவுகூறும் நாள் இந்நாள்.அவர்கள்
நேற்று நம்மோடு, நமக்காக இருந்ததால், இன்றும் என்றும்
அவர்கள் என்றும் நம்மோடும் நமக்காகவும் இருக்கிறார்கள்.
அவர்கள் மூன்று நிலைகளில் நமக்கு முக்கியத்துவம்
பெற்றவர்கள் ஆகிறார்கள்:
(அ) வழி விட்டவர்கள்: வந்தவர்கள் எல்லாம் இங்கே
தங்கிவிட்டால் வருபவர்களுக்கு இடம் இராது. நாம் இந்த
உலகத்திற்கு வருவதற்கு இவர்கள் நமக்காக வழி விட்டவர்கள்.
(ஆ) வழி காட்டியவர்கள்: தந்தை, தாய், கணவன், மனைவி, மகன்,
மகள், நண்பர், உறவினர், நலவிரும்பி, ஆன்மீக வழிகாட்டி எனப்
பல நிலைகளில், பல விழுமியங்களை வாழ்ந்து நமக்கு
வழிகாட்டியவர்கள் இவர்கள்.
(இ) வழி வருபவர்கள்: நம் வழித்துணையாகவும் இவர்கள் நம்மோடு
வருகிறார்கள். நம்மைக் கண்காணிக்கிறார்கள்,
பாதுகாக்கிறார்கள். நமக்காகப் பரிந்து பேசுகிறார்கள்.
புனித அகுஸ்தினார், தன் 'ஒப்புகைகள்' நூலில், தன் தாய்
மோனிக்காவின் இறப்பைப் பதிவு செய்யும் இடத்தில்
குறிப்பிடும் விடயம் நமக்கு விடை தருகின்றது.
அது என்ன?
'என் தாய் இறந்த பின்னர் அவரை நாங்கள் அவருடைய கணவருக்கு
அருகில் அடக்கம் செய்ய வேண்டும் என நினைப்பார் என்று
எண்ணினோம். ஆனால், அவரோ, 'என்னை எங்கு வேண்டுமானாலும்
அடக்கம் செய். ஆனால், பீடத்தில் என்னை நினைக்க மறவாதே. என்
ஆண்டவர் என்னை எங்கிருந்தும் உயிர்ப்பிக்க வல்லவர்'
என்றார்.'
அகுஸ்தினாரின் இந்தப் பதிவு நமக்கு மூன்று விடயங்களைச்
சொல்கின்றது:
(அ) நம் இறப்புக்குப் பின்னர் உடல் ஒரு பொருட்டு அல்ல.
அல்லது, உடல் இறந்துவிடுகிறது. ஆன்மா வாழ்கிறது.
(ஆ) இறந்தவர்களை நாம் இறைவேண்டலில் நினைவுகூர வேண்டும்.
(இ) இறந்த நாம் அனைவரும் உயிர்ப்போம். நம்மை உயிர்ப்பிக்க
ஆண்டவரால் மட்டுமே இயலும்.
ஏறக்குறைய இந்த விடயங்களைத்தான் இன்றைய நாளில் நாம்
நினைவுகூருகின்றோம். 'மனித ஆன்மா அழிவுறுவதில்லை' என்ற
நம்பிக்கை சமயங்களைக் கடந்த ஒன்றாகவும், பல
மெய்யிலளார்களின் கூற்றாகவும் உள்ளது. ஆன்மா
அணிந்துகொள்ளும் ஆடைதான் உடல். அல்லது, ஆன்மா
குடியிருக்கும் வாடகை வீடுதான் உடல். பொய்யுடல் அழியத்தான்
வேண்டும். கண்ணுக்குத் தெரியாத அந்த ஆன்மா நம்
கண்களுக்குப் புலப்படாத ஓர் இடத்தில் அல்லது ஒரு நிலையில்
வாழ்கின்றது. அந்த நிலையில் அது இறைவனில் இளைப்பாறுகிறது.
இன்றைய திருநாள் நமக்கு மூன்று பாடங்களைத் தருகின்றது:
(அ) வாழ்வின் நிலையாமை
எந்த நேரத்திலும் எதுவும் நேரிடலாம். இங்கு வந்தவர்
எல்லாம் அங்கு செல்ல வேண்டும் என்பது வாழ்வின் எதார்த்தம்.
அவர்கள் சென்றுவிட்டார்கள், நாம் செல்வோம் என்பதும்
எதார்த்தம். நாம் இன்று கல்லறைகளில் ஏற்றும் மெழுகுதிரி
உருகி மறைவது போல, நம் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் உருகி
மறைகின்றது. நாம் ஏற்றும் அகர்பத்திகள் புகையாய் காற்றில்
மறைவது போல, நாமும் மறைகின்றோம். ஆனால், அதுவரை நாம்
எரிகின்றோம். அதுவரை மணம் வீசுகின்றோம். கண்களைத் திறந்து
பார்க்கும்போது நம் கண்முன் நிற்கும் அனைத்துக்கும் உயிர்
இருக்கின்றது. கண்களை மூடிவிட்டால் அனைத்தும்
மறைந்துவிடுகின்றன. மறைந்து போகாத கடவுளைக் காண நாம்
உடலின் கண்களை மூடித்தான் ஆக வேண்டும். ஆக, அந்த நாளை
மனத்தில் நிறுத்த இந்த நாள் நம்மை அழைக்கிறது.
(ஆ) இறப்புக்குப் பின் உள்ள வாழ்வை நிர்ணயிப்பது
இறப்புக்கு முன் உள்ள வாழ்வே
இறப்புக்குப் பின் உள்ள வாழ்வைப் பற்றிப் பல நேரங்களில்
சிந்திக்கும் நாம் இறப்புக்கு முன் உள்ள வாழ்வை
மறந்துவிடுகின்றோம். இந்த வாழ்வே அந்த வாழ்வைத்
தீர்மானிக்கிறது எனில், குறுகிய இந்த வாழ்வை நன்முறையில்
வாழ்தல் நலம். இதையே மேலாண்மையியலில், 'பின்னோக்கி
வாழ்தல்' என்று அழைக்கின்றனர். அதாவது, என் அடக்கச்
சடங்கின்போது அங்கு நிற்பவர்கள் என்னைப் பற்றி என்ன பேச
வேண்டும் என்பதை நான் எழுதுவது. பின் அதை அப்படியே
வாழ்வாக்குவது. எடுத்துக்காட்டாக, 'இவர் மிகவும் எளிமையாக
வாழ்ந்தார்' என்று அவர்கள் சொல்ல வேண்டும் என நான்
விரும்புகிறேன் என்றால், 'நான் இப்போது எளிமையாக வாழ்வது.'
'எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகளே. வலிமை மிகுந்தோர்க்கு
எண்பது. அவற்றில் பெருமைக்கு உரியன துன்பமும் துயரமுமே!
அவை விரைவில் கடந்துவிடுகின்றன. நாங்களும்
பறந்துவிடுகின்றோம்' என்கிறார் திருப்பாடல் ஆசிரியர்
(90:10). ஆண்டுகள் எழுபது என்றாலும், பத்தாண்டுகள் எனக்
கணக்கிட்டால், வெறும் ஏழு பத்தாண்டுகளே. இவற்றில் முதல் 35
ஆண்டுகள் கற்றலிலும் நிற்றலிலும் கடந்து விடுகிறது.
அதற்குப் பின்னர் வரும் ஆண்டுகளில் நாம் வற்றத்
தொடங்குகின்றோம். கற்றல், நிற்றல், வற்றல் என நகரும்
ஆண்டுகளில் நாம் நன்மதிப்பீடுகளைப் போற்றல் நலம்.
(இ) இறப்பில் நாம் தனியர்கள் இல்லை
இறப்பு ஒரு கொடிய அனுபவமாக இருக்கக் காரணம் அதை நாம்
தனியாக அனுபவிக்க வேண்டிய நிர்பந்தம்தான். ஆனால், இறப்பில்
நாம் தனியாக இல்லை. நம்மை நினைவுகூர உறவினர்கள் மற்றும்
நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதை இன்றைய நாள் நமக்குக்
கற்றுக்கொடுக்கிறது. இறந்த நம் முன்னோர்களுடன் நாம்
இறைவேண்டலில் துணைநிற்பது போல, நம்மோடும் நமக்குப் பின்
வரும் தலைமுறையினர் துணைநிற்பர். ஆக, இறப்பு நம்மை
ஒருபோதும் பிரித்துவிடவோ, தனித்துவிடவோ இயலாது. இன்றைய
நாளில் நாம் முடிந்தவரை பல இறந்தோரை நினைத்துப்
பார்ப்போம். செல்டிக் நாகரீகத்தில், இறந்தோர் அனைவரும்
வானத்துக்கு ஏறிச்செல்லும் ஓட்டைகளே நட்சத்திரங்கள் என்று
சொல்லப்படுவதுண்டு. அந்த ஓட்டைகள் வழியே வானின் ஒளி
நட்சத்திரங்களாக நம் கண்களுக்குத் தெரிகின்றன. அந்த
நட்சத்திரங்கள் ஒளியில் நம் மெழுகுதிரி ஒளியை
இணைத்துக்கொள்வோம்.
இறுதியாக,
சில நாள்களுக்கு முன் நான் வாசித்த போஸ்டர் ஒன்றுடன்
சிந்தனையை நிறைவு செய்கின்றேன்.
'யாராவது இறந்தால் 'ரெஸ்ட் இன் பீஸ்' அமைதியில்
இளைப்பாறுங்கள்! என்கிறோம். யாரையாவது பார்த்து, 'லிவ் இன்
பீஸ்' அமைதியில் வாழுங்கள்! என்று சொல்கிறோமா?
இறந்தோருக்கு அல்ல, வாழ்வோருக்கே இன்று அமைதி
தேவைப்படுகிறது.'
எதார்த்தமான பதிவு இது.
வாழ்வோருக்கு அமைதி தேவையே. ஆனால், அதை அவர்களே
இழக்கின்றனர். அவர்களால் அதைப் பெற்றுக்கொள்ள இயலும்.
ஆனால், இறந்தோர் தங்கள் அமைதியைப் பெற்றுக்கொள்ள அவர்களால்
இயலாது. நாமே அதற்கு உதவி செய்ய வேண்டும்.
'அமைதியை ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்' (மத் 5:9) என்னும்
மலைப்பொழிவுச் சொற்களை நான் இப்படித்தான்
புரிந்துகொள்கின்றேன்: 'தங்கள் இறைவேண்டல் வழியாக
இறந்தோருக்கு அமைதியை ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்.
ஏனெனில், அவர்கள் இறைவனின் பிள்ளைகள் என அழைக்கப்படுவர்.'
'உத்தரிக்கிற நிலை ஆன்மாக்களே! எங்களுக்காக
வேண்டிக்கொள்ளுங்கள்!'
எங்களது இறைவேண்டல் உங்களை அடைகிறது என்பது எங்கள்
நம்பிக்கை.
உங்கள் ஆசீர் எங்களை அடைகிறது என்பது எங்கள் எதிர்நோக்கு.
உங்களையும் எங்களையும் இணைத்ததும் இணைப்பதும் அன்பு.
- அருள்திரு. யேசு கருணாநிதி, மதுரை உயர்மறைமாவட்டம்.
மறையுரைச் சிந்தனை
இறந்த நம்பிக்கையாளர் அனைவர் நினைவு நவம்பர் 02
1644 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் நிமோர்ஸ் என்ற ஒரு நிலபிரபு
இருந்தான். அவனுக்கும், இன்னொரு நிலபிரபுவுக்கும் அடிக்கடி
சண்டை வந்துகொண்டே இருந்தது. ஒருநாள் கோபம் தாங்காமல்
நிமோர்ஸ் என்ற அந்த நிலபிரபு எதிரியின் மீது படையெடுத்துச்
சென்றான். இருவருக்குமான சண்டை நீண்டநேரம் நீடித்தது. இறுதியில்
நிமோர்ஸ் தலைவெட்டப்பட்டு கொல்லப்பட்டான்.
இதனைக் கேள்விப்பட்ட மக்கள் அருட்சாதனம் எதுவும் பெறாமல்,
பாவ மன்னிப்புப் பெறாமல் இறந்ததால் நிமோர்ஸ் நிச்சயம் நரகத்திற்குத்தான்
போவான் என்று பேசிக்கொண்டார்கள்.
அந்நேரத்தில் இறை ஏவுதலால் அங்கு வந்த மேரிமார்டிக்னேட் என்ற
அருட்சகோதரி, "நிமோர்ஸ் தான், இறப்பதற்கு முன்பாக தன்னுடைய
தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டதாலும், மக்கள் அவனுக்காக
இறைவனிடம் வேண்டியதாலும் அவன் நரகம் செல்வதிலிருந்து
காப்பாற்றப்பட்டான்" என்றார். தொடர்ந்து அந்த அருட்சகோதரி
அவர்களிடம், மக்களாகிய உங்கள் ஒவ்வொருவரின் ஜெபத்தினால்தான்
நிமோர்ஸ் நரகத் தண்டனையிலிருந்து மீட்கப்பட்டு, உத்தரிக்கிற
தலத்தில் ஆன்ம தூய்மைக்காக வைக்கப்பட்டிருக்கிறான்" என்றார்.
அதைக்கேட்ட மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்து, இறைவனைப்
போற்றிப் புகழ்ந்தனர்.
இறந்த ஒருவருக்காக நாம் ஜெபிக்கின்றபோது அவருடைய பாவங்கள்
மன்னிக்கப்பட்டு, அவர் இறைவனின் பேரின்ப வீட்டிற்குள் ஏற்றுக்கொள்ளப்படுவார்
என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
இன்று திருச்சபையானது இறந்த அனைத்து விசுவாசிகளின்
நினைவுநாளைக் கொண்டாடுகின்றது. இந்த நல்ல நாளிலே நம்முடைய
குடும்பங்களில், சமுதாயத்தில் வாழ்ந்து மரித்த அனைத்து ஆன்மாக்களுக்காக
அதிலும் சிறப்பாக உத்தரிக்கிற தலத்தில் இருக்கக்கூடிய ஆன்மாக்களுக்காக
ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம்.
திருச்சபைத் தலைவர்கள் மூன்றுவிதமான திருச்சபை இருப்பதாக
சொல்வார்கள். முதலாவது மீட்கப்பட்ட அல்லது வெற்றிபெற்ற
திருச்சபை (Triumphant Church), இரண்டாவது பயணமாகும்
திருச்சபை (Pilgrim Church), மூன்றாவது போராடும் திருச்சபை
(Suffering Church). மீட்கப்பட்ட திருச்சபை என்பது விண்ணகத்தையும்,
பயணமாகும் திருச்சபை என்பது மண்ணகத்தையும், துன்புறும்
திருச்சபை என்பது உத்தரிக்கும் தலத்தில் இருக்கும் ஆன்மாக்களைக்
குறிக்கின்றது. இதில் பயணமாகும் திருச்சபையில் இருக்கும்
நாம் துன்புறும் திருச்சபையில் இருக்கும் உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக
ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம். ஏனெனில் அவர்கள் நம்முடைய ஜெபஉதவியை
நாடி நிற்கின்றார்கள். நாம் அவர்களுக்காக ஜெபிக்கின்றபோது
இறைவன் அவர்களது குற்றங்களை மன்னித்து, அவர்களை விண்ணகத்தில்
ஏற்றுக்கொள்வார்.
இன்று நாம் கொண்டாடும் இறந்த விசுவாசிகளின் நினைவு நாள்
விழாவானது கி.பி. 962 ஆம் குளூனி என்ற இடத்தில் வாழ்ந்த ஒடில்லோ
என்ற துறவியால் நவம்பர் மாதம் இரண்டாம் தேதியானது
நினைவுகூர்ந்து கொண்டாடப்பட்டு, பின்னர் அது எல்லாத் துறவற
சபைகளுக்கும் பரவியது. பதினான்காம் நூற்றாண்டில் இருந்துதான்
இவ்விழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆனால்
விவிலியத்திலே மக்கபேயர் காலத்திலிருந்தே இறந்தவர்களுக்காக
பாவப்பரிகார பலிகள் ஒப்புக்கொடுக்கும் வழக்கம் இருந்துவருவதை
வாசிக்கின்றோம் (2 மக் 12:42-46).
இவ்விழா நாளிலே இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் நமக்கு
என்ன செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப் பார்ப்போம்.
இறைவாக்கினர் எசாயாப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட
இன்றைய முதல் வாசகத்தில், கடவுள் இஸ்ரயேல் மக்கள்மீது
கிடந்த துயரத்தின் முக்காட்டை, துன்பத்தைத், சாவை,
கண்ணீரை, நிந்தனையைத் துடைத்துவிட்டு, புதுவாழ்வு தருவதாக
வாக்களிக்கின்றார். இதனை இயேசு நற்செய்தி வாசகத்தில் நயின்
நகரக் கைம்பெண்ணின் இறந்த மகனை உயிர் பெற்றெழச் செய்வதன்
வழியாக நிரூபித்துக் காட்டுகின்றார். ஆம், ஆண்டவராகிய
இயேசு தன்னுடைய பாடுகள், சிலுவைச்சாவின் வழியாக சாவை
வென்று நமக்குப் புதுவாழ்வு தருகின்றார். அதனால்தான்
பவுலடியார் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 15:55
ல் கூறுகின்றார், "சாவே உன் வெற்றி எங்கே? சாவே உன்
கொடுக்கு எங்கே?" என்று.
ஆதலால் இயேசு தன்னுடைய பாடுகளின் வழியாக மரணத்தை வென்றதால்
நாம் மரணத்தைக் குறித்து கவலைப்படத் தேவையில்லை. இதுவே
இறைவார்த்தை நமக்குத் தரும் முதன்மையான சிந்தனையாக
இருக்கின்றது.
இரண்டாவதாக நாம் பாவிகளாக இருந்தபோதும் இயேசு நம்மீது
கொண்ட அளவுகடந்த அன்பினால் நமக்காக உயிரைத் தந்தார் என்று
சொன்னால், நாமும் அளவு கடந்த விதத்தில் அன்புகொண்டு ஒருவர்
மற்றவருக்காக வாழவேண்டும் என்பதே நாம்
புரிந்துகொள்ளக்கூடிய காரியமாக இருக்கின்றது.
இப்படி நாம் ஒருவர் மற்றவருக்காக வாழும்போதுதான் நாம்
இறைவன் தரும் விண்ணரசைப் பெறமுடியும்.
நாம் அப்படி பிறருக்காக தியாக மனப்பான்மையோடு வாழ்கிறோமா
என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். கவிஞர் சிற்பி
பாலசுப்ரமணியம் ஒருமுறைக் கூறினார், "சொர்க்கமும், நரகமும்
நம் வாழ்க்கையில் தான் இருக்கின்றன. எப்போது மனம் நிறைவு
அடைகின்றதோ அப்போது முக்தியை அடைந்துவிட்டோம் என்று
பொருள். இந்த முக்தியை, மனநிறைவை மக்களுக்குச் சேவை
செய்வதில்தான் காணமுடியும்" என்று குறிப்பிடுகின்றார்.
ஆம், நாம் பிறருக்கு சேவை செய்கிறபோதுதான் முக்தியை,
சொர்க்கத்தை அடையமுடியும் என்பது கவிஞர் சிற்பியின்
அருமையான கருத்து.
ஒரு கிராமத்திலே தச்சர் ஒருவர் வாழ்ந்துவந்தார். ஒருநாள்
அவரிடம் வானதூதர் ஒருவர் வந்து, "உன் வாழ்நாட்கள்
முடிந்துவிட்டது, சொர்க்கம் செல்வதற்கு நேரம்
வந்துவிட்டது" என்றுசொல்லி அழைத்துப் போக வந்தார். அதற்கு
அந்த தச்சர், "ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் ஊரில்
மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது. அதனால் நிலத்தை உழ
ஆரம்பித்திருக்கும் விவசாயிகளுக்கு கலப்பை செய்து
தந்துவிட்டு, பின்னர் வருகிறேன்" என்றார். உடனே வானதூதர்
அவ்விடத்திலிருந்து அகன்றார்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டுமாக அந்த வானதூதர்
அவரிடம் வந்து, அவரை சொர்க்கத்திற்கு அழைத்துப் போக
வந்தார். ஆனால் அவரோ, "இப்போதுதான் உழவர்கள் வயலில் உழ
ஆரம்பித்திருக்கிறார்கள். ஆதலால் அவர்களுக்கு மாட்டுவண்டி
செய்து தந்துவிட்டு, வருகிறேன்" என்றார். இதைக்கேட்டதும்
வானதூதர் அவ்விடம் இருந்து அகன்றார். மீண்டுமாக
மூன்றுமாதம் கழித்து அவரை அழைத்துப் போக வானதூதர் அவரிடம்
வந்தார். அதற்கு அந்த தச்சர், "இன்னும் மண்வெட்டி மட்டும்
செய்துகொடுத்துவிட்டால் என்னுடைய வேலை முடிந்துவிடும்.
அப்புறம் நானே வந்துவிடுகிறேன்" என்று கெஞ்சிக்கொண்டார்.
அவரது வேண்டுதலைக் கேட்டு வானதூதர் அங்கே இருந்து
அகன்றார்.
அடுத்த மூன்று மாதம் கழித்து மீண்டுமாக வானதூதர் அவரிடம்
வந்தார். அப்போது தச்சர், "நான் விவசாயிகளுக்குத் தேவையான
கலப்பை, மாட்டுவண்டி, மண்வெட்டி எல்லாவற்றையும் செய்து
தந்துவிட்டேன். இப்போது என்னை நீங்கள் சொர்க்கத்திற்க்கு
அழைத்துக்கொண்டு போகலாம்" என்றார். அதற்கு அந்த வானதூதர்
வேண்டாம் என்று சொன்னது. அவர் ஏன் என்று அதனிடம்
கேட்டதற்கு, "எல்லாருக்கும் நீ உதவிசெய்து வாழ்வதால் இந்த
மண்ணுலகமே உனக்கு சொர்க்கம், ஆதலால் எதற்கு உனக்கு இன்னொரு
சொர்க்கம்" என்று சொல்லி, அவ்விடத்திலிருந்து அகன்றது.
உண்மையான அன்போடு எல்லாருக்கும் உதவிசெய்து வாழ்ந்தால்
நாம் வாழும் இடமே சொர்க்கம்தான்.
ஆகவே இறந்த அனைத்து ஆன்மாக்களுடைய நினைவுநாளைக் கொண்டாடும்
வேளையில் இறந்த அவர்களுக்காக ஜெபிப்போம். அத்தோடு நாம்
வாழும் இந்த மண்ணுலக வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவோம். அன்பு
செய்து வாழ்வோம். அதன் வழியாக இறைவன் தரும் விண்ணக
மகிமையைப் பெறுவோம்.
மறையுரைச் சிந்தனை
இறந்த நம்பிக்கையாளர் அனைவர் நினைவு நவம்பர் 02
ஓர் ஊரில் தந்தையும் மகளும் வாழ்ந்து வந்தார்கள். தந்தை தன்னுடைய
மகளை அதிகமாக அன்பு செய்துவந்தார். அவளை தன்னுடைய உயிராக
நினைத்து வாழ்ந்து வந்தார்.
ஒருநாள் அன்பு மகள் நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையானாள்.
அப்போது அந்த தந்தை நகரில் இருந்த எல்லா மருத்துவர்களிடமும்
சென்று சிகிச்சை அளித்துப் பார்த்தார். ஆனால் யாராலும் அவளைக்
குணப்படுத்த முடியவில்லை. ஒருநாள் இரவில் மகள் இறந்துபோனாள்.
அப்போது அந்த தந்தை அடைந்த துக்கத்திற்கு அளவே இல்லை. தன்னுடைய
உலகமே இருண்டுபோய்விட்டது என நினைத்தார். எல்லாரிடமிருந்து
தன்னைத் தனிமைப் படுத்திக்கொண்டு தனிமையான வாழ்வு வந்தார்.
தன்னுடைய மகளின் ஞாபகம் வரும்போதெல்லாம் கண்ணீர் விட்டு அழுதார்.
ஒருநாள் அவர் தூங்கும்போது கனவு ஒன்று கண்டார். அந்தக்
கனவில் அவர் மேலுலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
அங்கே வெண்ணிற ஆடை அணிந்த குழந்தைகள் தங்களுடைய கைகளில்
எரியும் மெழுகுதிரியை ஏந்தி கடவுளின் திருமுன் வரிசையாக
நின்றுகொண்டிருந்தார்கள். ஒரே ஒரு குழந்தை மட்டும் அணைந்த
மெழுகுதிரியோடு நின்றுகொண்டிருந்தது. அருகே சென்று
பார்த்தபோதுதான் தெரிந்தது அது தன்னுடைய குழந்தை என்று.
உடனே அவர் அந்தக் குழந்தையை (மகளை) அள்ளி எடுத்துக்கொண்டு,
"மகளே எல்லாருடைய திரியும் எரிந்துகொண்டிருக்க, உன்னுடைய
திரி மட்டும் ஏன் அணைந்துபோய் இருக்கின்றது?" என்று
காரணத்தைக் கேட்டார். அதற்கு அந்த குழந்தை, "அப்பா!
என்னுடைய திரி மற்ற குழந்தைகளின் திரிகளைப் போன்று
நன்றாகத்தான் எரியும். ஆனால் நீ தொடர்ந்து வடிக்கும்
கண்ணீர் பட்டுதான் என்னுடைய திரி அணைந்துபோய்விடுகிறது?"
என்றது.
தொடர்ந்து அந்தக் குழந்தை தன்னுடைய தந்தையைப் பார்த்துச்
சொன்னது, "அப்பா எதற்காக இப்படி அழுதுகொண்டே இருக்கிறாய்.
நான் உன்னைவிட்டுப் பிரிந்தாலும், இங்கே உயிரோடுதானே
இருக்கிறேன். அதனால் என்னைப்பற்றி நினைத்து நீ இனிமேலும்
அழுதுகொண்டிருக்காதே" என்று. உடனே அந்த தந்தை
தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தார். தன்னுடைய மகள்
விண்ணகத்தில் உயிரோடுதான் என்று ஆறுதல் அடைந்தார்.
"வாழ்வு மாறுபடுகிறதே அன்றி, அழிந்து போவதில்லை" என்பதற்கு
இந்த நிகழ்வு எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது.
இன்று அன்னையாம் திரு அவை இறந்த அனைத்து ஆன்மாக்களின்
நினைவுநாளைக் கொண்டாடி மகிழ்கின்றது. இந்த நல்ல நாளில்
நம்முடைய குடும்பங்களில் இறந்த அன்பான உறவுகளுக்காக,
இன்னும் யாரும் நினையாத ஆன்மாக்களுக்காக சிறப்பாக ஜெபிக்க
அழைக்கப்படுகின்றோம்.
இன்று நாம் கொண்டாடும் இறந்த அனைத்து ஆன்மாக்களின் நினைவு
நாள் தொடக்கத்தில் குளூனி நகரில் பிறந்த ஓடிலோ என்ற
துறவியால் கி.பி.906 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அதன்பின்
இவ்விழா படிப்படியாக எல்லா துறவுமடங்களுக்கும் பரவி, இறந்த
ஆன்மாக்களுக்காக விழா எடுத்துக் கொண்டாடும் நிலை உருவானது.
பதினான்காம் நூற்றாண்டிலிருந்து இவ்விழா நவம்பர் 2 ஆம்
தேதி கொண்டாடும் நிலை உருவானது. விவிலியத்தில் கூட இறந்த
ஆன்மாக்களுக்காக பலிகொடுக்கும் நிலை இருந்ததை நாம்
வாசிக்கின்றோம் (2 12: 43-45).
இப்போது இவ்விழா நமக்கு உணர்த்து செய்தி என்ன என்று
சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
முதலாவதாக இவ்விழா உணர்த்தும் செய்தி, நாமும் ஒருநாள்
உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கையைத் தருவதாக இருக்கின்றது.
உரோமையருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட
இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் கூறுவார்,
"கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே
நாம் கொண்டுள்ள நம்பிக்கை" என்று. ஆகவே நம்முடைய மண்ணுலக
வாழ்க்கை சாவோடு முடிந்துபோகின்ற ஒன்று அல்ல, மாறாக நாம்
இறந்தபின்னும் உயிர்வாழ்வோம் என்பதே ஆகும். அத்தகைய
நம்பிக்கை நிறைந்த வாழ்க்கை வாழ்வதுதான் உண்மையான கிறிஸ்தவ
வாழ்க்கையாகும்.
இரண்டாவதாக இவ்விழா இறந்த ஆன்மாகளுக்காக, குறிப்பாக
உத்தரிக்க தலத்தில் உள்ள ஆன்மாக்களுக்காக ஜெபிக்க
அழைப்புத் தருகின்றது. "புனிதர்களின் சமூக உறவை
விசுவாசிக்கிறோம்" என்று சொல்லும் நாம் துன்புறும்
திருச்சபையில் உள்ள (உத்தரிக்க தலத்தில் உள்ளவர்கள்)
ஆன்மாக்களுக்காக ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம்.
அவர்களுக்கான நம்முடைய ஜெபம், அவர்களுடைய தண்டனையைக்
குறைத்து அவர்களை வெற்றிபெற்ற திருச்சபையில் (விண்ணகம்)
சேர்த்துக்கொள்ளும். எனவே நாம் அவர்களுக்காக ஜெபிப்போம்.
மூன்றாக இவ்விழா உணர்த்தும் செய்தி, நாம் இறைவன் தரும்
மகிமையை, விண்ணகத்தைப் பெறவேண்டும் என்றால், நம்மோடு
வாழக்கூடிய சின்னஞ் சிறிய சகோதரிகளுக்கு நம்மாலான
உத்திகளைச் செய்யவேண்டும். இன்றைய நற்செய்தி வாசகத்தில்
ஆண்டவர் இயேசு சின்னஞ் சிறிய சகோதர சகோதரிகளுக்கு உதவி
செய்தவர்களுக்குத்தான் விண்ணகத்தை பரிசாகத் தருகின்றார்.
எனவே, இந்த நல்ல நாளில் இறந்த ஆன்மாக்களுக்காக சிறப்பாக
ஜெபிப்போம். அதோடு நாமும் இறைவனுக்கு உகந்த நல்ல வழியில்
நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
"If Jobs sons were purified by their fathers
sacrifice, why should we doubt that our offerings for
the dead bring them some consolation? Let us not
hesitate to help those who have died and to offer our
prayers for them" ஜான் கிரிஸ்சோஸ்டம்.
நேற்று நாம் அனைத்துப் புனிதர்களின் பெருவிழாவைக்
கொண்டாடினோம். இறந்து, நம்மை விட்டுப் பிரிந்து சென்ற
சகல ஆன்மாக்களை நினைவுகூற இன்று அழைக்கப்படுகிறோம்.
கல்லறைகளை அலங்கரித்து, பூக்கள் தூவி விட்டு வரும்
சடங்குகளால் மட்டுமல்ல. அவர்களின் ஆன்மாக்களின்
சாந்தியடைய செபிக்க, நல்ல செயல்கள் செய்ய அழைக்கப்
படுகிறோம்.
கத்தோலிக்கத் திருச்சபையானது மூன்று நிலைகளை
உள்ளடக்கியது. முதலாவது, உலக வாழ்வில் அர்ப்பணத்தோடு
வாழ்ந்து விண்ணகப் பரிசைப் பெற்றுள்ள புனிதர்கள் ஒரு
பகுதியினர். இவர்கள் நிறை அமைதியும், நிறை வாழ்வும்.
பெற்றவர்கள். இவர்களை வெற்றித் திருச்சபை (Triumphant
Church) என்று அழைக்கிறோம். இரண்டாவது, இறந்தவர்கள்
தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புப் பெற முடியாமலும்,
முழுப் பரிகாரம் செய்ய முடியாத நிலையிலும்
இறந்தவர்கள். இவர்கள் வேதனையில் உழல்பவர்கள்.
இவர்களும் திருச்சபையில் அங்கம் வகிக்கும் குழுவினர்
(பிலி. 2:10). இவர்களை துன்புறும் திருச்சபை (Suffering
Church) என்று அழைக்கிறோம்.
மூன்றாவதாக இந்த உலகில் நன்மைக்கும், தீமைக்குமிடையே
போராட்டத்தில் ஈடுபட்டு, தீமையை அகற்றி, நன்மை செய்ய
ஆன்மீகப் போராட்டத்தில் ஈடுபட்டு வாழும் நம்மைக்
குறிக்கிறது. இதனால் நாம் பயணம் போகும் திருச்சபை,
அல்லது போராடும் சபையினர் (Militant Chயாch) என்றும்
அழைக்கப்படுகிறோம். இந்த மூன்றையும் உள்ளடக்கியதுதான்
நிறைவான கத்தோலிக்கத் திருச்சபை. இதற்கிடையே பரஸ்பர உறவு
உண்டு.
நவம்பர் மாதம் இரண்டாம் தேதி திருச்சபையானது இப்படி
இறந்தும் விண்ணகம் செல்ல முடியாத நிலையில் இருக்கும்
உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காகச் செபிக்க, பரிகாரம் செய்ய
அழைப்பு விடுக்கிறது. ஏனெனில் திருச்சபையானது இயேசுவின்
மறைஉடல். இதில். ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டால், உடல்
முழுவதும் பாதிக்கப்படும் அன்றோ! இந்த பேருண்மையைத்தான்
திருத்தூதர் பவுல் கொந்தியருக்கு எழுதும் திருமடலில்
(1 கொ. 12:12-27) தெளிவாக்குகிறார். பிறந்த மனிதன் இறக்க
வேண்டும். இது நியதி. ஏனெனில் பாவத்திற்குக் கிடைத்த
கூலி (உரோ. 6:23) சாவு அல்லவா? ஆனால் கடவுள் கொடுக்கும்
அருள்கொடை. நம் ஆண்டவர் இயேசுவோடு இணைந்து வாழும்
நிலைவாழ்வு. இந்த நிலைவாழ்வு பெறாத நிலையில் ஆன்மாக்கள்
தவித்துக் கொண்டிருப்பார்கள் என்றால், அவர்களின்
வேதனையை நீக்க, இறைவனிடம் சேர்க்க, நாம் நம்
செபத்தாலும், நற்செயல்களாலும் தாங்க அழைக்கப்படுகிறோம்.
இதைத் தெளிவாக்க வீழ்ந்தோர் மீண்டும் எழுவர் என்பதை
எதிர்பார்த்திருக்கவில்லையென்றால் அவர் இறந்தோருக்காக
மன்றாடியது தேவையற்றதும், மடமையும் ஆகும். ஆகவே
இறந்தவர்கள் தங்கள் பாவங்களினின்று விடுதலை பெறும்படி
அவர்களுக்காக பாவம் போக்கும் பலி ஒப்புக் கொடுத்தார்
(1மக்க.12:44-45)எ
சாவு வழி சாவில்லா வாழ்வு
நீத்தார் நினைவு நவம்பர் 2
பிறந்தவர்கள் இறப்பது பேருலக விதிதான் ஆனால் சிறந்தவர்கள்
நீங்குகையில் சிந்தை யெல்லாம் அழுகிறது.
இறப்பின் சக்தியைக் குறித்து ஆங்கிலக் கவிஞன் ஷேக்ஸ்பியர்
சொல்கிறான், செங்கோலும் மணிமுடியும், சாவே உண்மைப் பணியும்
என்று. Sceptre and crown must humble down.
மனிதன் இன்றுவரை சாவை வென்றதில்லை. இனியும் வெல்லப் போவதில்லை.
வெல்ல வேண்டிய தேவையும் இல்லை. இயேசுகூட சாவில்லா வாழ்வு
என்றல்ல, சாவு வழிச் சாவில்லா வாழ்வு, இறப்பு வழி இறப்பில்லாப்
பெருவாழ்வு என்றுதான் சிந்தித்தார். போதித்தார்.
மனிதன் சாவை வெல்லத் தேவையில்லை. ஆனால் சாவை மனிதன் தன் கட்டுக்குள்
வைத்திருக்க வேண்டும். எந்த மனிதனும் அதனைத் தன் ஆளுகைக்குள்
கொண்டு வர வேண்டும் கொண்டு வர முடியும்.
எப்படி? எப்போது?
1. சாவுபற்றிய சரியான புரிதலைக் கொண்டிருக்கும் போது... மனிதன்
சாவை ஆளுகை செய்கிறான்.
அப்துல் ரகுமானின் புதுக்கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.
"மரணத்தைக் கண்டு அழுபவனே!
மரணம் உன் அறியாமையைக் கண்டு சிரிக்கிறது.
மரணம் என்றால் அழிவு என்கின்றாய்
அது நிறைவு என்பதனை நீ கவனித்ததில்லையா?
ஒரு ராகம் நிறைவடையும்போது நின்று போகிறதல்லவா...?!"
திருப்பலியின் தொடக்கவுரையில் வரும் "வாழ்வு மாறுபடுகிறதேயன்றி
அழிக்கப்படுவதில்லை" என்று கூற்றுக் கூட எந்த அளவுக்குச்
சரியானது? வாழ்வு நிறைவடைகிறதேயன்றி அது அழிந்துபடுவதில்லை
என்பதே சரியான கிறிஸ்தவப் பார்வை. நம்பிக்கை அறிக்கை
குறிப்பிடுவது மறுமையில் நம்பிக்கை அல்ல. நிலைவாழ்வில் நம்பிக்கை.
அது இம்மை இணைந்தது, இம்மை கலந்தது. அதனால்தான் "இன்றும்
என்றும் வாழ்விலும் சாவிலும் முழுத் துணிவுடன் கிறிஸ்துவை
என் உடலால் பெருமைப்படுத்துவேன். இதுவே என் பேராவல். இதுவே
என் எதிர்நோக்கு. ஏனெனில் நான் வாழ்ந்தால் அது
கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே"
(பிலிப். 1:20,21) என்கிறார் திருத்தூதர் பவுல்.
2.மனிதன் செய்யும் பல செயல்களைப் போலவே அவனுடைய இறுதிமூச்சும்
அருப்பணம் என்பது போல் அமைந்தால்... மனிதன் சாவை ஆளுகை
செய்கிறான் என்று சொல்லாம்.
கிறிஸ்தவச் சாவு என்பது ஒரு வழிபாடு. கல்வாரியில் நடந்தது
படுகொலையா? அது வழிபாடு. "தந்தையே உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்
என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார்" (லூக்.
23:46). இயேசுவின் இறைமனிதச் செயலில் இந்த அருப்பணத்தைப்
பார்க்கிறோம். கிறிஸ்துவின் இறப்பு நம் சொந்த இறப்பை அருத்தமுள்ளதாக்குகிறது.
நமது சாவை நமது வழிபாடாகவும் நமது பலியாகவும் ஆக்குகிறது.
சாவுமட்டும், சாவிலும் இயேசுவின் விருப்பத்தை இறைத்தந்தையின்
விருப்பத்திற்குப் பணியச் செய்தது. வசீகர வார்த்தை: இறைவனின்
திருவுளம். அதனால் "வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே
வாழ்கிறோம். இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம். ஆகவே
வாழ்ந்தாலும் இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம்"
(உரோ. 14:8).
இறப்பு மனிதர்களை வெற்றி கொள்ளலாம். புனிதர்கள் இறப்பைத்
தோற்கடிக்கிறார்கள். எனவே சாவு தீயவர்களுக்குத் தண்டனைத்
தீர்ப்பு. நல்லவர்களுக்கு விண்ணக வாசலின் திறவுகோள்.
மரணத்தைக் கண்முன் வைத்து வாழும்போது உயிர்ப்புக்குத் தயாராகிறோம்.
மனிதன் என்ற முறையில் சாவு என்பது பிரிவுதான். கிறிஸ்தவன்
என்ற முறையில் இயேசுவோடு ஒன்றிப்பன்றோ! Parting is sweet
sorrow for a christian. பிரிவு என்பது இனிய சோகம். அதனால்
"உடலைவிட்டுப் பிரிந்து கிறிஸ்துவோடு இணைந்திருக்கப் பேராவல்
கொண்டிருக்கிறேன்" என்றார் திருத்தூதர் பவுல்.
இயேசுவின் சிலுவை எந்த விதத்திலும் நமது சிலுவையை அகற்றுவதில்லை.
அதற்கு எதிரானதே உண்மையாகும். இளமையில் சாவு, எதிர்பாராத
விபத்தில் சாவு மிகுந்த வேதனையைத் தருகிறது. கடவுள் இந்த
வேதனைக்கேன் ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறார்? என்று கேட்கலாம்.
புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் வீரர் ஆர்தர் ஆஷீ. அவர்
புற்றுநோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது, உலகமெங்குமிருந்து
அவரது விசிறிகள் பலர் அவருக்குக் கடிதங்கள் எழுதினர். அவற்றில்
ஒரு கடிதம் இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தது. "இந்த மோசமான
நோயால் வேதனைப்பட கடவுள் ஏன் உங்களைத் தேர்ந்தெடுத்தார்?"
இதற்கு ஆர்தர் ஆஷீ அளித்த பதில், வாழ்க்கையைப் பற்றிய அவரது
சரியாத புரிதலை எடுத்துக் காட்டியது. அவரது மனமுதிர்ச்சியை,
பண்பட்ட பக்குவத்தை வெளிப்படுத்தியது. இதோ அந்தப் பதில் கடிதம்:
"உலகமுழுவதிலிருந்தும் ஐந்து கோடிக் குழந்தைகள் டென்னிஸ்
விளையாடத் தொடங்கி இருக்கின்றனர். ஐம்பது இலட்சம் பேர்
டென்னிஸ் விளையாடக் கற்றுக் கொண்டிருக்கின்றனர். அவர்களில்
ஐந்து இலட்சம் பேர் தொழிலாக டென்னிஸ் விளையாட்டை ஏற்றுக்
கொண்டிருக்கின்றனர். உலக டென்னிஸ்போட்டி வட்டத்திற்குள் ஐம்பதாயிரம்
பேர் வந்துள்ளனர். ஐயாயிரம் பேர் கிராண்ட்ஸ்லாம் போட்டி வரை
வந்திருக்கின்றனர். நான்குபேர் அரை இறுதி ஆட்டம்வரை வந்தனர்.
இரண்டுபேர் மட்டும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.
நான் வெற்றிக் கோப்பையைக் கையிலேந்தியபோது, "ஏன் என்னை இந்த
வெற்றிக்குத் தேர்ந்தெடுத்தீர்?" என்று இறைவனை நான் கேட்கவில்லை.
இன்று நான் நோயால் வேதனைப்படும்போது மட்டும் ஏன் இந்தக்
கேள்வியைக் கேட்க வேண்டும்?"
"மகிழ்ச்சி நம்மை இனிப்பாக வைத்திருக்கிறது. சோதனை நம்மை
உறுதியாக வைத்திருக்கிறது. துன்பம் நம்மை மனிதனாக (நேயத்துடன்)
வைத்திருக்கிறது. தோல்வி நம்மைத் தாழ்மையாக வைத்திருக்கிறது.
வெற்றி நம்மை ஒளிர வைத்திருக்கிறது. ஆனால் இறைவன்தான் நம்மைத்
தொடர்ந்து நடத்திச் செல்கிறார்".
என்றும் வாழ்ந்து கொண்டிருக்கப் போகிறோம் என்று கற்றுக்
கொண்டே இருப்போம். நாளைக்கே இறந்துவிடுவோம் என்று வாழக் கற்றுக்
கொள்வோம். வாழ்வில் இதனை வாழ முயல்வோம்.
"கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார். நம் சொந்த
இயல்பின் சாயலில் அவர்களை உருவாக்கினார். ஆனால் அலகையின்
பொறாமையால் சாவு உள்ளே நுழைந்தது. அதைச் சார்ந்து நிற்போர்
இறப்புக்கு உள்ளாவர்" (சா.ஞா. 2:23-24).
"தந்தையே, எங்களுக்கு ஏதாவது ஒரு செய்தி...?" என்று கேட்ட
தன் சீடர்களைப் பார்த்துப் புனித பிரான்சிஸ் அசிசியார்-
மென்மையான புன்முறுவலோடு சொல்கிறார்:
"நான் இறந்த பிறகு என் கல்லறையில் சிலுவை ஒன்றை நடுவீர்கள்.
அதன் அடியில் -
நான் பிறந்த நாள் இருக்கும்.
நான் இறந்த நாள் இருக்கும்.
நான் வாழ்ந்த நாள் எங்கே?
கிறிஸ்துவில் வாழ்ந்த நாள்? நற்செய்தியில் வாழ்ந்த நாள்?
ஏழ்மையில்
வாழ்ந்த நாள்? பகிர்வில் வாழ்ந்த நாள்? சகோதரத்துவத்தில்
வாழ்ந்த நாள்?
நான் வாழ்ந்த அந்த நாளை நீங்களும் வாழ்ந்து என்
திருவிழாவைக் கொண்டாடுங்கள்.
அதுவரை என் திருவிழாச் சடங்குகளை ஒத்திப்போட முடியுமா? என்று
முயன்று பாருங்கள்".
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச.
திருச்சி
ஞாயிறு சிந்தனை
நவம்பர் மாதம் இறந்தோரை அடிக்கடி நினைவுகூரும் ஒரு மாதம்.
கல்லறைகளுக்குச் செல்லுதல், இறந்தோருக்கான திருப்பலிகள் என்று
பல அர்த்தமுள்ள செயல்களில் நாம் ஈடுபடுகிறோம். இந்தச் சூழலில்
இன்று நமக்குத் தரப்பட்டுள்ள ஞாயிறு வாசகங்கள் பொருத்தமானவைகளாகத்
தெரிகின்றன. வாழ்வு, மரணம், மறுவாழ்வு ஆகியவைகளைச்
சிந்திக்க இது நல்லதொரு வாய்ப்பு.
வீரம் மிகுந்த, விசுவாசம் நிறைந்த ஒரு தாய், அவரது ஏழு மகன்கள்
ஆகியோரைப் பற்றி இரண்டாம் மக்கபேயர் நூலின் 7ம்
பிரிவிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் நமக்குச்
சில பாடங்களைச் சொல்லித் தருகிறது. தாங்கள் நம்பும் இறைவனுக்கு
முன் துன்பம் மரணம் இவைகளுக்கு எந்தச் சக்தியுமில்லை என்று
இவர்கள் சாவைச் சந்திக்கத் துணிகின்றனர். இவர்களைப் பொறுத்தவரை,
மரணம் ஒரு முடிவு அல்ல, மறுவாழ்வைத் திறக்கும் ஒரு கதவு.
இதற்கு நேர் மாறான எண்ணங்கள் கொண்ட சதுசேயர்களை இன்றைய நற்செய்தியில்
நாம் சந்திக்கின்றோம். லூக்கா நற்செய்தியின் 20ம் பிரிவில்
இயேசுவைத் தங்கள் வாதத் திறமையால் மடக்க வந்த சதுசேயர்களுக்கு
இவ்வுலகம் மட்டுமே உண்மை. மறு உலகம் என்பதெல்லாம் மயக்கம்
தரும் கற்பனை. இந்த மறு உலகைப் பற்றி மீண்டும், மீண்டும்
கூறிவந்த இயேசுவை மக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தும் எண்ணத்துடன்
இயேசுவிடம் ஒரு புதிரான கேள்வியை எழுப்புகின்றனர் சதுசேயர்கள்.
ஏழு சகோதரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஒரு பெண்ணை மணக்கின்றனர்.
இறக்கின்றனர். அந்தப் பெண்ணும் இறக்கிறார். மறு உலகில் அந்தப்
பெண் யாருடைய மனைவியாக இருப்பார் என்பதுதான் இந்தப்
புதிர். மோசேயின் நெறிமுறைகள் குறித்த உண்மையைப் புரிந்து
கொள்வதற்கு இந்தக் கேள்வியைக் கேட்டதாக அவர்கள்
சொன்னாலும், மறு வாழ்வைக் குறித்து கேலி செய்யும் தொனியுடன்
அவர்கள் கேட்ட இந்தக் கேள்வியை இயேசு புரிந்து கொண்டு, இந்தப்
புதிருக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், மறு வாழ்வைக்
குறித்து, அந்த வாழ்வில் நாம் சந்திக்கவிருக்கும் இறைவனைக்
குறித்து அழகான விளக்கங்களைத் தருகிறார். மறு வாழ்வில்
நாம் வானதூதர்களைப் போல் இருப்போம், நமது இறைவன் இறந்தோரின்
இறைவன் அல்ல, வாழ்வோரின் இறைவன் என்பவை இயேசு தந்த அழகான
எண்ணங்கள்.
உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் (பார்க்கப் போனால்,
எல்லா உயிரினங்களுக்கும்) பிறப்பு, இறப்பு என்ற இரு புள்ளிகள்
உண்டு. இவ்விரு புள்ளிகளையும் இணைத்து நாம் வரையும் கோலம்
நமது வாழ்வு. பல நேரங்களில் நாம் வரையும் கோலம் அலங்கோலமாய்
மாறினாலும், அதை அழித்துத் திருத்தி மீண்டும் மீண்டும் அழகானக்
கோலம் வரைய நமக்கு அழைப்பு வந்த வண்ணம் உள்ளது.
இவ்விரு புள்ளிகளில் பிறப்பு என்ற புள்ளி எல்லாருக்கும்
தெளிவாகத் தெரியும். இறப்பு என்ற புள்ளி கட்டாயம் எங்கோ ஓரிடத்தில்
இருக்கிறதென்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால், அந்தப்
புள்ளியைப் பற்றிய தெளிவு நம்மில் பலருக்குக் கிடைப்பதில்லை.
அனைவரும் இறப்போம் என்பது நிச்சயம். ஆனால், எப்போது, எங்கே
எப்படி இறப்போம் என்பது பலருக்குத் தெரியாது. ஒரு சிலருக்கே
இந்த வாய்ப்பு கிடைக்கிறது.
மரணத்தைச் சந்தித்துத் திரும்பிய ஒரு சிலரை நாம்
பார்த்திருப்போம். எனக்குத் தெரிந்த ஒரு குரு இவ்வாண்டு மே
மாதம் உரோமையிலிருந்து கனடாவிற்கு விமானத்தில் பறந்து
கொண்டிருந்தார். நடு வானில் ஹார்ட் அட்டாக் வந்தது அவருக்கு.
அவருக்காக அந்த விமானம் நடுவில் ஓர் இடத்தில் தரையிறக்கப்பட்டு,
அவர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இன்னும் பத்து
நிமிடங்கள் தாமதித்திருந்தால், அவரது உயிர்
பிரிந்திருக்கும் என்று மருத்துவர்கள் அவரிடமே சொன்னார்களாம்.
அவர்கள் அப்படி சொன்னபோது, அவருக்குள் இனம் தெரியாத ஒரு
வித அமைதி வந்ததென அவர் கூறினார். மரணத்தை இவ்வளவு அருகில்
பார்த்தபின் வேறு என்ன உள்ளது? என்று அவர் எண்ணங்கள் ஓடின.
வாழ்வைப் பற்றிய ஒரு புது கண்ணோட்டம் தான் பெற்றதாக அவர்
சொன்னார்.
மிக ஆபத்தான சாலை விபத்தில் பலமாக அடிபட்டு, மரண போராட்டம்
நிகழ்த்தி வெற்றி கண்ட ஒர் அருள்சகோதரி இன்று அர்த்தமுள்ள
பணிகள் செய்துவருவதை நான் அறிவேன். அன்புள்ளங்களே, மரணத்துடன்
கை குலுக்கிவிட்டு மீண்டும் வாழும் வரம் பலருக்குக்
கிடைக்காது. அந்த வரம் கிடைத்தவர்களுக்கு வாழ்க்கை பழையபடி
இருக்காது.
ஒரு சிலருக்கு மரணத்திற்கு நாள் குறிக்கப்படுகிறது.
புற்றுநோய் போன்ற உயிர் கொல்லி நோய் பலருக்கு மறு உலக
வாழ்வைத் தருவதற்கு முன், இவ்வுலகிலேயே மாறியதொரு, புதியதொரு
வாழ்வைத் தந்துள்ளது. இப்புதிய வாழ்வினால் ஒரு சிலர் அற்புத
குணங்களும் பெற்றுள்ளனர். ஒரு சிலர் குணம் பெற முடியவில்லை
எனினும் மரணத்தைச் சந்திக்கும் முன் இவ்வுலகையும், தங்களை
சுற்றி உள்ளவர்களையும் வெகுவாக மாற்றியுள்ளனர்.
1984ம் ஆண்டு Greg Anderson என்பவருக்கு நுரையீரலில்
புற்றுநோய் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு மருத்துவர்கள்
அளித்த வாழ்க்கை முப்பது நாட்களே. அவர்கள் சொன்ன அந்த முப்பது
நாட்கள் முடிந்தன. இன்று 25 ஆண்டுகள் கழிந்து விட்டன. Greg
Anderson இன்று உலகெங்கும் சென்று புற்றுநோயுடன் எப்படி
வாழ முடியும், புற்றுநோயை எப்படி வெல்ல முடியும் என்று
சொல்லித் தருகிறார். அவர் எழுதிய பல புத்தகங்களில், அவர்
1995ல் வெளியிட்ட புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக்
கிடைத்தது. அப்புத்தகத்தின் தலைப்பு: "நலமான வாழ்வடைய
சிறிதும் பிசகாமல் கடைபிடிக்க வேண்டிய 22 விதி முறைகள்"
(The 22 Non-Negotiable Laws of Wellness). புற்று நோய் உள்ளவர்களுக்கென
எழுதப்பட்ட இந்த விதி முறைகள் நம் எல்லாருக்கும் தேவையான
விதி முறைகள்.
வாழ்வை உற்சாகமாகச் சந்திக்க வேண்டும் என்று ஆரம்பமாகிறது
முதல் விதி முறை.
தேவையின்றி உடலைப் புண்படுத்தாதே என்பது ஒரு முக்கிய விதி
முறை. மருத்துவம் வெகுவாக வளர்ந்துள்ள இந்த காலத்தில் எதற்கெடுத்தாலும்
அறுவை சிகிச்சையை நாடுவதற்கு எதிரான ஒரு விதிமுறை இது.
உன்னிடம் உள்ளவற்றை வளர்ப்பது உன் கடமை என்பது மற்றொரு
விதிமுறை. இதே எண்ணத்தை அமெரிக்க எழுத்தாளரும், போதகருமான
Henry Van Dyke வேறு வகையில் கூறியுள்ளார்: "நல்ல குரலுடையப்
பறவைகள் மட்டுமே பாட வேண்டும் என்று நினைத்தால்,
காடெல்லாம் மயான அமைதி பெற்று விடும்."
பிறருக்கு ஆற்றும் சேவை மூலம் வாழ்வின் குறிக்கோளை அடைய
வேண்டும் என்று Greg Anderson கூறும் விதிமுறையை, புகழ்பெற்ற
அறிவியலாளர் Albert Einstein பின்வருமாறு கூறினார்: "சமுதாயத்தில்
வெற்றி பெறும் மனிதராவதை விட, சமுதாயத்திற்குப் பயன்படும்
மனிதராவதற்கு முயற்சி செய்."
இவ்விதம் 21 விதிகளைக் கூறிய Greg Anderson
இவைகளுக்கெல்லாம் சிகரமாக 22வது விதிமுறையைத் தந்துள்ளார்.
"நிபந்தனையின்றி மன்னிக்கும் மனதை வளர்த்துக் கொள்."
என்பது அவர் தந்துள்ள விதிகளின் சிகரம். இந்தச் சிகரத்தை
அடைவது எவ்வளவு சிரமமென்று தன் வாழ்க்கையிலிருந்தே
கூறுகிறார். அவரது மரணத்திற்கு மருத்துவர்கள் நாள்
குறித்ததும், அவர் மேற்கொண்ட முதல் முயற்சி பிறரை
மன்னிக்கும் முயற்சி... தன் மனதில் மன்னிக்க முடியாமல்
பூட்டி வைத்திருந்தவர்களை விடுவிக்க முயன்றார். பல முறை
தோற்றார். தன் தந்தையை மன்னித்ததிலிருந்து ஆரம்பமான இந்த
முயற்சியால், விரைவில் தன் உடல்நலனில் முன்னேற்றம்
ஏற்பட்டதென அவர் கூறியுள்ளார்.
Greg Anderson போலவே மரணத்திற்கு நாள் குறிக்கப்பட்ட
மற்றொருவர் Randy Pausch என்ற பேராசிரியர். கணணித்துறையில்
வல்லுனரான இவருக்கு மனைவி, மூன்று குழந்தைகள் என்று அழகான
குடும்பம். 2007ம் ஆண்டு இவரது கணையத்தைக் கரைத்துக்
கொண்டிருந்த புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாண்டு
அவர் பேராசிரியராகப் பணிசெய்த பல்கலைக் கழகத்தில் அவர்
அளித்த "இறுதி சொற்பொழிவு" (The Last Lecture) இன்று உலகப்
புகழ்பெற்ற ஒரு சொற்பொழிவாக உள்ளது. YouTubeல் இந்த
சொற்பொழிவைக் கோடிக்கணக்கானோர் பார்த்து வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐயாயிரம் பேர் இந்த உரையை
இன்றும் பார்த்து வருகின்றனர். உங்களது நேரத்தை ஒதுக்கி
இந்த ஒரு மணி நேர உரையைக் கட்டாயம் கேளுங்கள். வாழ்வைப்
பற்றிய பலத் தெளிவுகள் உங்களுக்கு உண்டாகும்.
Randy Pausch புற்று நோயோடு மேற்கொண்ட போராட்டம் 2008ம்
ஆண்டு ஜூலை மாதம் அவரது 48வது வயதில் முடிந்தது. அவர்
விட்டுச் சென்ற எண்ணங்கள், அவரது அந்த இறுதி சொற்பொழிவு
"The Last Lecture" என்ற ஒரு புத்தகமாக இப்போது பலரது
வாழ்வில் தாக்கங்களை உண்டாக்கி வருகிறது. அவரது
மரணத்திற்கு முன் தன் மனைவிக்கும், மூன்று
குழந்தைகளுக்கும் அவர் 'இன்னும் சிறந்த வாழ்வுக்கு'
("guide to a better life") என்று எழுதி வைத்த விதி
முறைகளில் ஒரு சில இதோ:
மற்றவர் வாழ்வோடு உன் வாழ்வை ஒப்பிடாதே. அவர்கள் மேற்கொண்ட
பயணம் என்னவென்று உனக்குத் தெரியாது.
உனக்குத் தேவையான எல்லாமே உன்னிடம் உள்ளன. எனவே,
பொறாமையால் புழுங்குவது வீண்.
உன் மகிழ்வுக்கு நீ மட்டுமே பொறுப்பு. வேறு யாருமல்ல.
ஒவ்வொரு நாளும் மற்றவர்களுக்கு நல்லது எதையாவது செய்.
கடவுளை நீ அறிந்தால், உன் மகிழ்வுக்கு முடிவிருக்காது.
Greg Anderson, Randy Pausch போலவே, மரணத்திற்கு நாள்
குறிக்கப்பட்ட இந்திய இளம்பெண் கீதாஞ்சலி (Gitanjali Ghei)
16 வயதிலேயே புற்று நோய்க்குப் பலியாகி இவ்வுலகை விட்டுச்
சென்றாலும், தன் கவிதைகள் மூலம் இன்னும் தொடர்ந்து
வாழ்ந்து வருகிறார். அவர் எழுதிவைத்த கவிதைகள் அவரது
மரணத்திற்குப் பின் கண்டு பிடிக்கப்பட்டன. அவைகள் எல்லாமே
பலருக்கும் நம்பிக்கை தரும் அற்புதச் செய்திகள். அந்தக்
கவிதைத் தொகுப்பில் ஒன்று "அன்பு இறைவா" என்ற தலைப்பில்
எழுதப்பட்டுள்ளது. அன்பு இறைவா என் செபத்தைக் கேட்டருளும்.
உமது சித்தத்தை ஏற்றுக் கொள்ள எனக்குச் சக்தி தாரும்.
என் குற்றங்களை மன்னித்தருளும்.
என்னை இவ்வுலகினின்று எடுத்துக் கொள்வது உமக்கு
விருப்பமானால்,
என் மீது அன்பு கொண்டவர்களுக்குச் சக்தியையும், மன
உறுதியையும் தாரும்.
இது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி, நான் சுய பரிதாபத்தில்
பிதற்றாமல் என்னைக் காத்தருளும்.
உமது விருப்பமே எனக்குச் சிறந்ததென என்னை நம்பச்
செய்தருளும்.உம்மீது கொண்ட பயத்தினால் அல்ல; உம்மீது கொண்ட
அன்பினால் உம்மை நம்பும் வரம் அருளும்.
இயேசு இன்றைய நற்செய்தியில் மறுவாழ்வைப் பற்றிக்
கூறும்போது, "அவர்கள் வான தூதர்களைப் போல் இருப்பார்கள்"
என்றார். மறு வாழ்வை நோக்கி நாம் மேற்கொள்ளும் பயணத்தில்
Greg Anderson, Randy Pausch, Gitanjali Ghei போன்ற பல
வானதூதர்களைச் சந்திக்க முடியும். கண்களையும்,
உள்ளத்தையும் திறந்து இவ்வுலகப் பயணத்தை மேற்கொள்வோம்.
நவம்பர் மாதம் என்றாலே கல்லறைத்
தோட்டங்கள் எல்லாம் அழகு செய்யப்படுகின்றன. புதர் மண்டிப்
போய் கிடந்த கல்லறைகள் எல்லாம் மீண்டும் புதுப் பொலிவுடன்
தோற்றம் தருகின்றன. கல்லறைகளைச் சுத்தம் செய்து
வெள்ளையடித்தல், கல்லறைகளை சந்தித்தல், இறந்தவர்களுக்கான
திருப்பலி நிறைவேற்றல், இறந்தவர்களை நினைத்து சிறப்பு
அன்னதானம் வழங்கல்.... இப்படியாக பல்வேறு நிகழ்ச்சிகளால்
கார்த்திகை மாதம் முக்கியமானதாக அமைந்துவிடுகின்றது.
ஏன் இந்தக் கொண்டாட்டங்கள். ஏன் இந்த ஆர்ப்பரிப்பு?
எதற்காக நாம் இறந்தவர்களை நினைவு கூறுகின்றோம். அனைத்து
ஆன்மாக்களின் நினைவு தினம் நமக்கு என்ன, எதைக்
கற்றுத்தருகின்றது.
✠ வேண்டாம் மரணம் ✠
மரணம் நிகழாத நாளில்லை, மரணம் நிகழாத வீடில்லை என்றே சொல்ல
வேண்டும். இயற்கையாக ஏற்படும் மரணம் முதல் தற்கொலை வரை
ஏற்படும் மரணச் செய்திகள், பத்திரிகைகளில் ஒவ்வொரு நாளும்
வராமல் இருந்ததில்லை. இதனால் தான் மரணம் என்பதுமே
எல்லோருக்கும் இயல்பான ஒரு பயம் ஏற்படுகின்றது. மரணம்
என்பது ஓர் எதார்த்தம். மரணத்தை இறப்பு என்றும், சாவு
என்றும் செத்துப்போதல் என்றும் குறிப்பிடுவர். மரணமா? அது
வேண்டாம் என்று எண்ணுவோரே அதிகம். காரணம் மரணம் வாழ்வின்
மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்துகின்றது. இருப்பினும்
மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் இறப்பைச் சந்தித்தே
ஆகவேண்டும். மரணம் எனக்கு வேண்டாம் என்று தப்பித்துக்
கொள்ள முடியாது. மாறாக அனைத்து உயிர்களும், அதிலும்
குறிப்பாக ஒவ்வொரு மனிதரும் சந்தித்தே ஆகவேண்டியது
வாழ்வின் எதார்த்தம்.
ஆகவே நவம்பர் மாதம் 2ஆம் திகதி அனைத்து ஆன்மாக்களின்
நினைவு நாளாக, அதாவது இறந்தோர் தினமாக திருச்சபை
சிறப்பித்து வருகின்றது. பாமர மக்கள் இதைக் கல்லறைத்
திருநாள் என்று அழைக்கின்றனர். எவ்வாறு இவ்விழா
வழக்கத்திற்கு வந்தது என்பதை சற்று பார்ப்போம்.
தொடக்க திருச்சபையின் வாழ்வு மிகவும் போராட்டம் நிறைந்த
வாழ்வாக அமைந்திருந்தது. முதல் இரண்டு நூற்றாண்டுகளில்
உரோமையில் அவ்வப்போது ஏற்பட்ட வேதக்கலாபனையில் பலரும்
இயேசுவுக்கு சாட்சியாக இறந்தனர். மிகக்குறிப்பாக
திருச்சபையின் இரு தூண்கள் எனப்படும் புனித பேதுரு மற்றும்
புனித பவுலின் கல்லறைகள் மக்களிடையே விரும்பிச்
சந்திக்கப்பட்ட இடங்களாக மாறின. காலஞ்செல்லச் செல்ல மறைச்
சாட்சிகளாக இறந்த இவர்களின் கல்லறைகளில் கி.பி 3ஆம்
நூற்றாண்டுக்குப் பிறகு திருச்சபை உரோமையில் வேரூண்ட
ஆரம்பித்த பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் சாட்சிய
வாழ்வை நினைவு கூர்ந்து மக்கள் விழாக் கொண்டாடி அவர்களின்
கல்லறைகளைச் சந்தித்து வந்தனர்.
வேதக்கலாபனைகளில் மறைசாட்சிகளாக இறந்தவர்களை ஒட்டுமொத்தமாக
அடக்கம் செய்யும் பழக்கமும் இருந்தது. திருத்தூதர்களின்
கல்லறைகள் போன்றே அவர்களின் கல்லறைத் தோட்டங்கள் காலப்
போக்கில் மக்கள் விரும்பிச் சந்திக்கும் இடங்களாகவும்
மாறின. இதற்கு சிறந்த உதாரணம் திருத்தொண்டராக இருந்து
மறைசாட்சியாக மரித்த புனித லோரன்ஸ் என்பவரின் இடத்தில்
இன்றும் அவரின் பெயரில் ஆலயம் உள்ளது. அதை ஒட்டிய மிகப்
பெரிய கல்லறைத் தோட்டம் இன்றளவும் உள்ளது. மக்கள் ஒவ்வொரு
ஆண்டும், சிறப்பான வகையில் இங்கு திருப்பலி நிறைவேற்றி
மறைசாட்சிகளாக இறந்தவர்களை நினைவு கூறுகின்றனர்.
இருப்பினும் இக்கல்லறை விழா உலகத் திருச்சபை அளவில்
கொண்டாடப்படும் விழாவாக இருக்கவில்லை.
கி. பி 998இல் புனித ஓதிலோ என்பவர் தன்னுடைய குளுனி
சபையினருக்கு இதனை அறிமுகப்படுத்தினார். இவர் குளுனி
சபையின் முதல் மடாதிபதியாக இருந்தார். தன்னுடைய துறவற
மடத்தில் வாழ்வோர் இறந்தவர்களுக்காக சிறப்பான செபங்களைச்
செய்ய வேண்டும் என்பதற்காக இவ்விழாவை அறிமுகப்படுத்தினார்.
11ஆம் நூற்றாண்டில் இறந்தவர்களுக்காக மன்றாடும் குளுனி
சபையினரின் வழக்கம் ஐரோப்பிய நாடுகளிம், இலத்தீன்
அமெரிக்கா நாடுகளும், மிக விரைவாகப் பரவியது. இறந்த
ஆன்மாக்களுக்காக மன்றாடும் இவ்விழாவைத் தாய் திருச்சபை
கி.பி 13ஆம் நூற்றாண்டில் அனைத்துலகின் விழாவாக கொண்டாட
அனுமதி வழங்கியது.
✠ இறந்தவர்களுக்காக மன்றாடுதல் ✠
இறந்தவர்களுக்காக மன்றாடும் வழக்கம் விவிலிய வழக்கமாகும்.
இது மக்கபேயர் காலத்திலிருந்து வருகின்றது.(2மக் 12:43-45)
யூதா, மக்கபே இறந்தவர்களுக்காகப் பாவப்பரிகாரப் பலி
ஒப்புக் கொடுக்க எருசலேமிற்கு ஆள்களை அனுப்பினார். இந்த
மரபு புனித பவுலின் காலத்தில் இயேசு வழியாக இறந்தவர்கள்
மீட்பைப் பெறுவதற்காக வாழ்ந்து கொண்டிருந்தோர் அவர்கள்
பெயரில் திருமுழுக்குப் பெற்றுக் கொண்டனர் (1கொரி 15:29).
இதன் பின்னணியில்தான் காலப்போக்கில் இறந்தவர்களுக்காகச்
செபிக்கும் பழக்கமும், கல்லறைத் தோட்டச் சந்திப்புக்களும்,
திருப்பலி ஒப்புக் கொடுக்கும் பழக்கமும் தாய்
திருச்சபையின் மரபில் வளர்ந்தது.
பழைய ஏற்பாட்டு பலிகளைவிட இயேசுவின் ஒப்புயர்வற்ற
கல்வாரிப்பலி அனைத்து பாவங்களையும் போக்குகின்றது.
எனவேதான் நவம்பர் மாதம் இறந்தவர்களுக்காக திருப்பலிகள்
ஒப்புக்கொடுக்கப்படுகின்றன. ஆகவே நவம்பர் மாதம் ஏன் நாம்
இறந்த ஆன்மாக்களின் தினமாக கொண்டாடுகின்றோம் என்பது எமக்கு
தெளிவாகின்றது. எனவே இறந்தவர்களை நினைத்து நாமும்
திருப்பலி ஒப்புக்கொடுத்து செபிப்போம்.
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்று நம் தாய்த் திருஅவையானது இறந்துபோன ஆன்மாக்களை
நினைவு கூருவதற்காக, இறந்துபோன ஆன்மாக்களுக்காக இன்றைய
நாளில் சிறப்பாக ஜெபிக்க நம் அனைவரையும் அழைக்கிறது.
ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி என்றால்
இந்த நாளை இறந்தவர்களுக்காக ஜெபிக்க கூடிய நாளாக நாம்
கருதி கல்லறைக்குச் செல்வது வழக்கம். கல்லறைக்குச் சென்று
கல்லறையை சுத்தம் செய்து சாம்பிராணி இட்டு, அங்கு
திருப்பலி அருட்தந்தையர்களால் நிறைவேற்றப்படும். அந்தத்
திருப்பலியில் பக்தியோடு பங்கெடுத்து இறந்துபோன ஆன்மாக்களை
நாம் நினைவு கூறக் கூடிய ஒரு மகத்தான செயலை செய்து
கொண்டிருக்கிறோம். இந்த செயல் மிகவும் நல்ல ஒரு செயலாகும்.
இந்த உலகத்தில் வாழக்கூடிய மனிதர்கள் இறந்து போனால்
அவர்கள் நினைக்கப்படுவார்களா? என தெரியாது. ஆனால் நமது
திருஅவையின் வழிகாட்டலின் படி இந்த நவம்பர் 2ஆம் தேதி
கண்டிப்பாக இறந்து போனவர்களின் கல்லறைகளுக்கு மக்கள்
வருவதும் இறந்தவர்களை நினைவு கூர்வதும் வழக்கமாக
நடக்கக்கூடிய செயலாக அமைந்திருக்கிறது. நாளை நாம் இறப்பை
சந்தித்தாலும் நமது குடும்பத்தில் உள்ளவர்கள் நம்மை
மறந்தாலும் இந்த நவம்பர் இரண்டாம் தேதி அவர்கள் நம்மை
கல்லறையில் வந்து நினைவு கூறுவார்கள் என்ற எண்ணமானது ஆழமாக
ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.
இன்றைய நாளின் வாசகங்கள் அனைத்தும் இப்பை மையப்படுத்தி
அமைகின்றன. இறப்பு வாழ்க்கையில் பலவிதமான பாடங்களை நமக்கு
கற்றுக் கொடுக்கிறது. மனிதனாக இம்மண்ணில் பிறந்த
ஒவ்வொருவரும் என்றாவது ஒருநாள் இறப்பை சந்தித்தே தீர
வேண்டும். எனக்கு 27 வயதாகிறது என்று நான் கூறுகிறேன்
என்றால் எனது இறப்பை நோக்கிய பயணத்தில் 27 ஆண்டுகளை நான்
கடந்துவிட்டேன் என்பதுதான் உண்மையாக இருக்கிறது. ஒவ்வொரு
நாளும் நாம் நமது இறப்பை எதிர்நோக்கிச் சென்று கொண்டுதான்
இருக்கிறோம். நாம் இம்மண்ணில் பிறந்திருக்கிறோம். நாம்
அனைவரும் கண்டிப்பாக ஒருநாள் இந்த மண்ணை விட்டு
மறைந்துபோவோம். மறைவதற்குள் நாம் கண்டிப்பாக பலவிதமான நல்ல
செயல்களை செய்தாகவேண்டும்.
இதையே இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு உணர்த்துகிறார்.
இறுதிநாளில் தீர்ப்பு வழங்கும் போது தாகமாய் இருந்தேன்
எனக்கு தண்ணீர் கொடுத்தாய். பசியாய் இருந்தேன் உணவு
கொடுத்தாய். ஆடை இன்றி இருந்தேன் நீ ஆடை கொடுத்தாய்.
சிறையில் இருந்தேன், என்னைப் பார்க்க வந்தாய் என்ற
இயேசுவின் வார்த்தைகள் ஆறுதலைத் தர கூடியதாக அமைகிறது.
இன்று நாம் இம்மண்ணில் வாழும் போது எத்தகைய நற்செயல்களை
செய்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியை எழுப்பி பார்க்க
உங்களை அழைக்கின்றேன். நாம் உண்மையில் தாகமாய்
இருப்பவருக்கு தண்ணீர் தருகிறோமா? ஏழைகளுக்கு
உணவளிக்கின்றோமா? பசியால் வாடுவோருக்கு உணவளிக்கின்றோமா?
ஆடையில்லாமல் இருப்பவருக்கு உடுத்த ஆடை கொடுக்கிறோமா?
கேள்வியை எழுப்பி பார்ப்போம் நமக்குள். ஆனால் இறுதி நாளில்
ஆண்டவர் நம்முடைய செயல்களை முன்னிட்டே நமக்கு தீர்ப்பு
வழங்குவார் என இன்றைய நற்செய்தி வாசகங்கள் நமக்கு தெளிவாக
எடுத்துரைக்கின்றன.
இறப்பு என்றால் வாழ்க்கை முடிந்து விட்டது என்பதல்ல.
இறப்பு என்பது ஒரு வெற்றிடம் ஆகிறது. இங்கு இறக்கக்கூடிய
ஒவ்வொரு ஆன்மாவும் விண்ணுலகில் பிறக்கிறார்கள். மண்ணுலகில்
மறையக் கூடிய ஒரு ஆன்மா விண்ணகத்தில் புதிதாகப்
பிறக்கிறது. இதுவே நமது திருஅவை நமக்கு கற்பிக்கக் கூடிய
ஆழமான மறை உண்மையாக உள்ளது. இந்த மறை உண்மை அடிப்படையில்
இறப்பை நோக்கி நகரக்கூடிய நாமும் இன்றைய நாளில் ஒரு
நிமிடம் ஆழமாக அமர்ந்து யோசித்து பார்ப்போம். இறந்தவர்களை
நினைவு கூறும் பழக்கம் என்பது இப்போது நேற்றோ இன்றோ அல்லது
கடந்த வருடத்தில் தொடங்கி ஒன்றோ அல்ல. நெடுங்காலமாக இருந்த
ஒன்று.
நம்முடைய பாரம்பரியத்தை திருப்பி பார்க்கும் பொழுது தமிழர்
பாரம்பரியத்தில் இறந்து போன முன்னோர்களை நினைத்து
வழிபடக்கூடிய பழக்கமானது இருந்தது. அந்த பழக்கத்தின்
அடிப்படையில் உருவானதாகத்தான் இந்த கல்லறை திருநாளையும்
இன்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது.
இறப்பைப் பற்றி ஆழமாக சிந்திக்கும்போது நெடுங்காலமாக இந்த
பண்பு இருப்பதை நாம் உணர முடிகிறது. தொடக்க காலத்தில்
யாராவது ஒருவர் இறந்துபோனால் அவர்களை நாம் நினைவு
கூரக்கூடிய பழக்கமானது வழிவழியாக தொடர்ந்துகொண்டுதான்
இருக்கிறது. இறந்தவர்களை நினைவு கூறுகிறோம். இன்று
இறந்தவர்கள் எல்லாம் நமக்காக இறைவனிடத்தில் பரிந்து
பேசுவார்கள் என்பது உண்மை.
நம்முடைய திரு விவிலியத்திலே ஏழை இலாசரும் செல்வந்தனும்
என்ற நிகழ்வை நாம் படித்திருப்போம். அந்த நிகழ்விலே
ஆடம்பரமாக வாழ்ந்த செல்வந்தன் நரகத்தில் நெருப்பில்
துன்புற்று கொண்டிருக்கும்போது இலாசரை அனுப்பி வையும்.
என்னுடைய சகோதரர்கள் அவனை கண்டால் தங்கள் வாழ்வை மாற்றிக்
கொள்வார்கள் என இறைவனிடத்தில் வேண்டுவதை நாம்
வாசிக்கிறோம். மண்ணகத்தில் வாழ்ந்து மரித்து நரகத்திற்கு
போன ஒருவர் கூட தன்னுடைய குடும்பத்திலுள்ளவர்களுக்காக
இறைவனிடத்தில் பரிந்து பேசுகிறார் என்றால் கண்டிப்பாக நமது
குடும்பத்தில் இருந்த, நமக்கு பிடித்தமான, நம் நெஞ்சுக்கு
நெருக்கமான, நம்மோடு ஒட்டி உறவாடிய நமது உடன்பிறப்புகள்,
நம்மை விட்டு பிரிந்து சென்றாலும், நமக்காக இறைவனிடத்தில்
அனுதினமும் ஜெபித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஜெபம்
நம்மை வாழவைக்கும், எனக்கு தெரிந்த , அருட்தந்தை அந்தோணி
ரமேஷ் அவர்கள் அடிக்கடி என்னிடம் கூறுவார், "எப்போதெல்லாம்
வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் சென்று உன்னுடைய
குடும்பத்து கல்லறைக்குச் சென்று செபித்து விட்டு வா என்று
கூறுவார். பல நேரங்கள் என்னடா இவர், கல்லறைக்குச் சென்று
ஜெபிக்க சொல்கிறாரே, என்றே எண்ணம் எனக்குள் எழும். ஆனால்
கல்லறை கற்றுத்தரும் பாடம் ஏராளம். ஒரு நாள் நானும் இந்த
இடத்தில் புதைக்கப்படப் போகிறேன் என்பது உண்மை. இந்த
இடத்திற்கு நான் வரும்போது என்னிடம் எதுவும் இருக்காது.
ஆனால் இன்று உயிரோடு இருக்கும் போது இன்று எதைஎதையோ எண்ணி,
தேடிக் கொண்டிருக்கிறேன் என்ற பாடத்தை அனுதினமும்
உணர்த்தக் கூடிய இடமாக இந்தக் கல்லறை அமைகிறது. இறப்பை
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இறப்பு பொறுப்பை
அதிகப்படுத்துகிறது. குடும்பத்தில் ஒருவராக இருந்து
தேவைகளை நிறைவு செய்த ஒரு நபர் இறந்து போனால் அந்த
குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு அப்பொறுப்பானது
தரப்படுகிறது. இனி அந்த குடும்பத்தை தூக்கி நிறுத்தக்கூடிய
பொறுப்பை இன்னொருவர் கையில் எடுக்கிறார். இறப்பு
ஒவ்வொருவருக்குள்ளும் மாற்றத்தை உருவாக்கும்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பாடத்தை கற்பிக்கும்.
கற்றுக்கொண்ட பாடங்களை வாழ்க்கையில் செயலாக்க வேண்டும்.
இன்று பரபரப்பாக இயங்க கூடிய இந்த உலகத்தில், கல்லறைகளிலோ
துக்க வீட்டிலோ நேரம் செலவிட நம்மால் இயலவில்லை. ஒரு காலம்
இருந்தது. ஒருவர் இறந்து போனால் இரண்டு நாட்கள் மூன்று
நாட்கள் வரை அவரை வைத்திருந்து அவர்களது உறவினர்கள்
எல்லாம் வந்த பிறகு அந்த உடலை எடுத்துச் சென்று அடக்கம்
செய்வார்கள். அப்போதெல்லாம் இந்த குளிர்சாதன பெட்டிகள்
என்பதும் இல்லை. ஆனால் இன்று இந்நிலை முற்றிலுமாக மாறி
இருக்கிறது. ஒருவர் இறந்தால் குறைந்தது 4 மணி நேரம் (அ) 5
மணி நேரத்திற்குள் அந்த உடலை எடுத்து விட வேண்டும் எனக்
கூறுபவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். முன்பெல்லாம்
வீட்டில் ஒருவர் இறந்துவிட்டால், உறவினர்கள் எல்லாம்
ஒன்றிணைந்து அவருடன் இருந்து அவரைத் தேற்றி,
ஆறுதல்படுத்தி, பல நாட்கள் அவருடன் இருந்து
ஊக்கமூட்டுவார்கள். ஆனால் இன்று, நான்கு மணிக்கு அடக்கமா?
அப்பொழுது வருகிறேன் என்று கூறக் கூடியவர்களாக
மாறிவிட்டார்கள். எப்பொழுது திருப்பலி எனச் சொல்லுங்கள்.
அப்போது வந்து விடுகிறோம் என்று சொல்லக்கூடிய குருக்களும்
இருக்கின்றார்கள்.
இன்றைய நாளில் வெறுமனே கல்லறைக்குச் சென்று விட்டு
திரும்புபவர்களாக இல்லாமல், நாம் எப்படி மாறி இருக்கிறோம்
என சற்று ஆழமாக யோசித்துப் பார்ப்போம். என்னுடைய
கல்லூரியில் பேராசிரியர் செல்வகுமார் என்பவர் எங்களுக்கு
கற்பித்த ஒரு பாடம், ஒரு மங்களகரமான நிகழ்வு என்றால் உன்னை
அழைத்தால் மட்டும் செல். அதுவே ஒரு துக்க காரியம் என்றால்,
உன் காதுக்கு அந்தச் செய்தி எட்டினால், உடனே சென்று வா.
இன்று துக்க வீட்டிற்கு செல்ல எத்தனை பேர் தயாராக
இருக்கிறோம்? மகிழ்ச்சியில் பங்கெடுக்க ஆர்வத்தோடு
இருக்கிறோம். துன்புற கூடிய, துக்கத்தில்
இருக்கக்கூடியவர்கள் வீட்டில் அவர்களைத் தேற்றக்
கூடியவர்களாக இருக்கிறோமா? அல்லது கடமைக்குச் சென்று
கடமைகளை செய்து விட்டு வரக் கூடியவர்களாக மட்டும் நாம்
இருக்கிறோமா? கடமைக்குச் செய்வதல்ல மாறாக எதையும் ஆழமாக
பொறுப்புணர்வோடு அர்த்தத்தோடு செய்ய நாம் அனைவரும்
அழைக்கப்படுகிறோம். இதோ இன்றைய நாளில் கல்லறைக்குச்
செல்லக்கூடிய நாம் அனைவரும் வெறுமனே கல்லறைகளை
பார்த்துவிட்டு வராமல் கல்லறைகளில் இருந்து பாடம் கற்போம்.
வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொள்வோம். இந்த வாழ்க்கை பாடத்தை
வாழ்க்கையில் செயலாக்கப்படுத்துவோம். வாழ்வில் மாற்றத்தை
கொண்டுவர முயலுவோம். ஒருவரின் வீட்டில் துக்க காரியம்
என்றால் உடனே துணை நிற்க இன்றைய நாளில் இறையருளை வேண்டி
இணைந்து ஜெபிப்போம் இறந்துபோன ஆன்மாக்களுக்காக. அவர்களும்
நமக்காக இறைவனிடம் ஜெபிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு
இறந்தவர்களை நினைவு கூருவோம். அவர்களுடைய நல்ல பண்புகளை
நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துவோம் வாருங்கள்!
இறந்தவர்களுக்காகச் செபிப்பதில் இருக்கும் ஐந்து சவால்கள்:
1. இறந்தவர்கள் காலத்தையும், இடத்தையும் கடந்து
விடுகிறார்கள். இனி அவர்கள் காலத்திற்கும், நேரத்திற்கும்
உட்பட்டவர்கள் அல்லர். ஆனால் நாம் செய்யும் செபம்
காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டது. உதாரணத்திற்கு,
இன்று நான் இறந்தவர்களுக்காக நிறைவேற்றும் திருப்பலி
காலத்திற்கும் (மாலை 6:30 மணி), இடத்திற்கும் (தூய யூதா
ததேயு ஆலயம்) உட்பட்டது. காலத்திற்கும், இடத்திற்கும்
உட்படாத இறந்தவர்களுக்குக் காலத்திற்கும், இடத்திற்கும்
உட்பட்டு நிறைவேற்றும் திருப்பலி எப்படி பலன் தர முடியும்?
2. இயேசுவின் பாடுகள், இறப்பு அனைத்துப் பாவங்களையும்
அழித்து, அனைவருக்கும் மீட்பைக் கொண்டு வந்தது. தன் ஒரே
பலியால் கல்வாரி மலையில், சிலுவையில் எக்காலத்திற்குமான
பாவப்பரிகாரப் பலியை அவர் நிறைவேற்றிவிட்டார். அவர் வழியாக
பாவிகள் அனைவரும் மற்றும் எல்லோரும் மீட்பு
பெற்றுவிட்டனர். அப்படியிருக்க, எதற்காக உத்தரிக்கிற
நிலையில் ஆன்மாக்கள் துன்புற வேண்டும்? இயேசுவின் பலி
பரிகாரம் செய்ய முடியாத அளவிற்கு அவர்கள் பாவம்
செய்துவிட்டார்களா? அல்லது இயேசுவின் பலி முழுமையான பலி
இல்லையா? அல்லது நம் செபங்கள் இயேசுவின் பாடுகளையும்,
தியாகத்தையும், சிலுவைச்சாவையும் விட மேலானவையா?
3. உத்தரிக்கிற நிலை எப்படி இருக்கும்? ஒரு பெரிய அறை
இருக்கும். அங்கே எந்நேரமும் நெருப்பு எரியும். பேய்கள்
அல்லது வானதூதர்கள் எண்ணெய் ஊற்றிக்கொண்டே இருப்பார்கள்.
ஒரே அழுகையும், அங்கலாய்ப்புமாய் இருக்கும் - என நாம் நம்
மறைக்கல்வி வகுப்புகளில் படிக்கின்றோமே அந்த மாதிரி
இருக்குமா? அது எப்படி இருக்கும் என யாரும் அந்தப்
பக்கத்திலிருந்து இந்தப் பக்கம் வந்து சொன்னது கிடையாது.
பூமி என்ற கிரகத்தில் வாழும் திருச்சபை இருக்கிறது
என்றால், வானக எருசலேமும், உத்திரிக்கிற நிலையும் வேறு
கிரகங்களில் இருக்குமா? இறந்தவர்களின் உடல்களை நாம்
அடக்கம் செய்து விடுகிறோம். வேற்று உலகில் அவர்கள்
நெருப்பில் உழல்வார்கள் என்றால், உடம்பு இல்லாமல் வேறு
எதைக்கொண்டு அவர்கள் துன்பத்தை உணர்வார்கள்?
4. எல்லாவற்றையும் இழந்து விட்டு வெறுங்கையராய்த் திரும்பி
வந்த ஊதாரி மைந்தனை ஏற்றுக்கொண்டு புத்தாடையும், காலுக்கு
மிதியடியும், கைக்கு மோதிரமும் அணிவித்த தந்தையைப் போல
வானகத் தந்தை இருக்கிறார் என்றால் தங்கள் வாழ்வில் தங்கள்
பாவத்தால் அனைத்தையும் இழந்து விட்டு வெறுங்கையராய் நம்
முன்னோர்கள் (பின் நாமும்!) செல்லும்போது இரக்கம்
காட்டாமல் துன்புறத்தத் துணிவாரா? இயேசுவோடு சிலுவையில்
அறையப்பட்ட நல்ல கள்வன் இயேசுவைப் பார்த்து, 'நீர்
அரசுரிமையோடு வரும்போது என்னையும் நினைவுகூறும்!' என்று
சொல்லும்போது, 'இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாய்!'
என்று வாக்குறுதி கொடுக்கும் இயேசு, நம் முன்னோர்கள்
(அல்லது நாமோ) செல்லும்போது 'இன்று நீ உத்தரிக்கிற
நிலைக்குப் போ. நாளை என் வான்வீட்டிற்கு வரலாம்!' எனச்
சொல்வாரா?
5. இந்த உலகில் எண்ணற்ற மனிதர்கள் வாழ்கின்றார்கள்:
இந்துக்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள், இசுலாமியர்கள்,
பௌத்தர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்களிலேயே கத்தோலிக்கர்கள்,
லூத்தரன்கள், கால்வினிஸ்டுகள், மெத்தடிஸ்டுகள்,
பிராடஸ்டன்டுகள் (என இன்னும் பல), நாத்திகர்கள், கடவுள்
இருக்கிறாரா அல்லது இல்லையா எனக் கவலைப்படாத நடுநிலையினர்
எனப் பலர் இருக்கின்றார்கள். நாத்திகர்களுக்கும், கடவுளைக்
கண்டுகொள்ளாதவர்களுக்கும் மோட்சம், நரகம் பற்றிய கவலை
இல்லை - இருக்கிற ஒரு வாழ்க்கையை நன்றாக வாழ்வோம் என்பதே
அவர்களின் மோட்சம். இப்படியிருக்க, கிறித்தவ மதம் என்ற
ஒன்றில் இருப்பதால் மட்டும்தானே 'நரகம், உத்தரிக்கிற
நிலை!' என்ற பயம் வருகிறது. கிறித்தவ மதத்தில் இல்லாத என்
பக்கத்து வீட்டுக்காரருக்கு பயமில்லையே. அப்படியிருக்க,
என் கடவுள் என்னைப் பயத்தோடு வாழ்வதற்காகவா படைத்தார்.
கிறித்தவனாக மாறியது ஒரு குற்றமா?
இறந்தவர்களுக்காகச் செபிப்பதின் ஐந்து வாக்குறுதிகள்:
1. இறந்தவர்களுக்காக செபிப்பதைப் புரிந்து கொள்ள
வேண்டுமென்றால் 'பிரபஞ்சம்' பற்றிய நம் சிந்தனையை மாற்ற
வேண்டும். இருப்பவர்கள் இவ்வுலகத்திலும், இறப்பவர்கள்
மற்றொரு உலகத்திலும் இருக்கிறார்கள் என்று நினைப்பதை
விடுத்து அனைத்தையும் ஒன்றாக இணைத்துப் பார்க்க வேண்டும்.
அப்படி இணைத்துப் பார்க்க கிறித்தவ மதம் பயன்படுத்தும்
வார்த்தை 'இறையரசு'. நாம் இருந்தாலும், இறந்தாலும்
இறையரசின் மக்களே. ஆகையால் இந்த அரசின் எந்த இடத்தில்
இருந்தாலும் நம் செபம் மற்றவர்களுக்குப் பயன்தரும்.
2. இறந்தவர்களுக்காக நாம் செபிக்கும்போது நம்மையறியாமலே
நாம் அவர்களோடு இணைந்து விடுகிறோம். இறப்பு என்பது ஒரு
மெல்லிய வேலி. நாம் நேற்று அன்பு செய்தவர்கள் இன்று
வேலியின் அந்தப்புறம் இருக்கின்றனர். நாம் இன்று அன்பு
செய்பவர்கள் வேலியின் இந்தப்புறம் இருக்கிறார்கள். இரண்டு
பக்கத்தையும் பிரிக்கும் குறுக்குச் சுவர் அல்ல இறப்பு.
இரண்டையும் இணைக்கும் பாலம். அன்பிலிருந்து அன்பிற்குக்
கடந்து செல்கிறோம் இறப்பில். ஆகையால் இந்த அன்பு
இறந்தவர்களுக்காக நாம் செய்யும் செபத்தை ஒன்றாக
இணைக்கிறது.
3. இறப்பு ஒரு கொடிய எதார்த்தம். மோட்சத்திற்குப் போக
விரும்புபவர்கள் கூட இறப்பை வேண்டாம் என்றே சொல்கின்றனர்.
இறப்பு எதற்காக நமக்குப் பயமாக இருக்கின்றது? நாம் தனியாய்
இறக்கின்றோமே அதனால் தான் பயப்படுகின்றோம். 'நாம் இறந்து
விடுவோம். ஆனால் மற்றவர்கள் எல்லாம் வாழ்வார்களே!' என்ற
எண்ணம் நம் பயத்தை இன்னும் அதிகமாக்குகிறது. இறப்பு இந்த
நிலையில் ஒரு தண்டனையாகவும் பார்க்கப்படுகிறது. ஒரு
விபத்தில் அல்லது இயற்கைச் சீரழிவில் நூற்றுக்கணக்காக
மக்கள் இறந்தாலும், இறப்பு என்னவோ ஒவ்வொருவரையும்
தனித்தனியாகவே எதிர்கொள்கிறது. வேறுமாதிரி சொல்ல
வேண்டுமென்றால், ஒவ்வொருவரும் தனித்தனியாகவே இறப்பைச்
சந்திக்க வேண்டும். இந்தத் தனிமையில் நமக்கு உதவுவது தான்
செபம். நாம் தனியாய் இறந்து போனாலும் நம்மவர்கள் நம்மை
நினைத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை நம் தனிமை உணர்வைக்
குறைக்கின்றது. நாம் இறந்தவர்களுக்காகச் செபிக்கும்போது,
'நீங்கள் தனியாக இல்லை. நாங்கள் உடனிருக்கிறோம்' என்ற நம்
உடனிருப்பை அவர்களுக்கு உறுதி செய்கிறோம்.
4. இறந்தவர்களுக்காகச் செபிப்பது இருப்பவர்களுக்கும்
உடனிருப்பைக் காட்டுகின்றது. இறப்பு ஈடுசெய்ய முடியாத ஒரு
இழப்பை உருவாக்குகிறது. ஒரு குடும்பத்தில் மட்டுமல்ல, ஒரு
சமூகத்திலும் இறப்பு ஒரு வெற்றுக்கோட்டை
விட்டுச்செல்கிறது. ஆகையால்தான் பிறப்பைப்போலவே இறப்பும்
ஒரு சமூக நிகழ்வாகவே அணுகப்படுகின்றது. இறந்தவர்களுக்கு
நாம் செய்யும் செபங்களைப் போல இருப்பவர்களுக்கும் நாம்
ஆறுதலும், நம்பிக்கையும் தருகின்றோம். இறந்தோருக்காகச்
செபிப்பது நம் குழும உணர்வை அதிகப்படுத்துகிறது. நான்
தனிமரம் இல்லை. என்னை அன்பு செய்ய என் உறவுகளும், ஊராரும்
இருக்கின்றனர் என்பதை நமக்கு உணர்த்துகிறது. இந்தக் குழும
உணர்வு வாழ்வின் கஷ்டங்களையும், பிரச்சினைகளையும்
எதிர்கொள்ளத் துணிச்சலையும், மனத்திடத்தையும் தருகின்றது.
5. இறந்தவர்களுக்காகச் செபிப்பது நம் வாழ்வை மறுஆய்வு
செய்ய நம்மைத் தூண்டுகிறது. நாம் யாருக்காகச்
செபிக்கின்றோமோ அவர் கண்ட கனவை நனவாக்க வேண்டிய கடமையும்,
பொறுப்புணர்வும் நமக்கு இருக்கின்றது. அதே வேளையில் இறப்பு
என்ற அழையா விருந்தாளி எந்நேரமும் நம் நடுவீட்டிற்கும்
வந்து போகலாம் என்பதால் நம் வாழ்வையும் நல்வாழ்வாக
அமைத்துக்கொள்ள நம்மைத் தூண்டுகிறது. 'பிறந்தோம்.
பிறந்ததால் வாழ்வோம்' என்று வாழ்வை
இழுத்துக்கொண்டிராமலும், 'நாளை என்பது நிஜமல்ல. இன்றை
எப்படியும் வாழ்வோம்' என்று ஏனோ-தானோவென இல்லாமலும்,
'இவர்போல யாரென்று ஊர்சொல்ல வேண்டும்!' என்ற நிலையில் வாழ
நம்மையறியாமலேயே நாம் இன்று வாக்குறுதி எடுக்கிறோம்.
'அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார்.
இனிமேல் சாவு இராது, துயரம் இராது, அழுகை இராது, துன்பம்
இராது!' (திருவெளிப்பாடு 21:4) என நமக்கு வாக்குறுதி
தந்தாலும், இன்று நம் கண்களில் கண்ணீரும், கண்ணெதிரே
இறப்பும், அது தரும் இழப்பும், துன்பமும் இருந்து
கொண்டிருக்கிறது என்பதே எதார்த்தம். வாழ்வின்
எதார்த்தங்களே நமக்குப் பல நேரங்களில் புதிராக
இருக்கும்போது, இறப்பின் எதார்த்தங்கள் எப்படி இருக்கும்?
அக்காடியக் கதை ஒன்றில் அழியா வாழ்வைத் தேடி அலைந்த
கில்கமேசுக்கு வயதான மூதாட்டி ஒருத்தி இப்படி அறிவுரை
கூறுகின்றாள்: 'நன்றாகக் குளி! நல்ல ஆடை அணி! நீ அன்பு
செய்பவர்களின் கண்ணில் கண்ணீர் வரவைக்காதே! உன்னை அன்பு
செய்பவளின் மார்பில் சாய்ந்துகொள்! இதுவே அழியா வாழ்வு!'
இன்றைய நாளில் அனைத்து ஆன்மாக்களின் திருவிழாவை
தாய்த்திருச்சபையோடு இணைந்து கொண்டாட இருக்கிறோம். இந்த
கல்லறைத் தோட்டத்தில் பல பேர் அமைதியாக
இளைப்பாறிக்கொண்டிருக்கிறார்கள். இங்கே மண்ணில்
புதைக்கப்பட்டிருக்கிற பலபேர் நாம் அறிந்தவர்களாக
இருக்கலாம். நமது ஊரில் உள்ள பெரியவர்கள், நமது நெஞ்சுக்கு
நெருக்கமானவர்கள், நமது உடன்பிறந்தவர்கள், நாம் அதிகமாக
அன்பு செய்தவர்கள் என்று பலதரப்பட்ட மனிதர்கள் இங்கே
அமைதியாக இளைப்பாறுகிறார்கள். இவர்களது இறப்பு நமக்கு
தரக்கூடிய செய்தி என்ன?
ஏழை, பணக்காரர், நீதியோடு வாழ்கிறவர், அநீதி செய்கிறவர்,
நல்லவர், கெட்டவர் என ஒருவர் எப்படி வாழ்ந்தாலும்,
என்றாவது ஒருநாள், இந்த பயணத்திற்கு ஒரு முடிவு வந்தே
தீரும். அந்த முடிவு எப்போது வரும் என்று யாருக்குமே
தெரியாது. இங்கே இருக்கிறவர்களில் யாராவது, நாம் இன்றைக்கு
இறந்து விடுவோம் என்று நினைத்திருப்பார்களா? நிச்சயமாக
இல்லை. ஒருவேளை அவர்கள் மருத்துவமனையில் கடினமான நோயினால்
தாக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தாலும்,
மருத்துவர்களால் கைவிடப்பட்டிருந்தாலும், ஏதோ ஒரு
நம்பிக்கையோடு தான், நாட்களை நகர்த்தியிருப்பார்களே தவிர,
இறப்பு இன்னநேரத்தில் வரும் என்று அறிந்திருக்க
மாட்டார்கள். ஆனால், இறப்பு வந்தே தீரும், அதுதான், இங்கே
இந்த கல்லறைத்தோட்டம் நமக்கு கற்றுத்தரக்கூடிய பாடம். இந்த
பாடம் நாம் பயப்படுவதற்காக அல்ல, மாறாக, நமது வாழ்வை
நல்லமுறையில் வாழ்வதற்காக உதவியாக இருக்க வேண்டும்.
இந்த வாழ்க்கையை எப்போதும் கடவுளுக்கு பிரியமான வகையில்
நாம் வாழ்வதற்கு சிரத்தை எடுக்க வேண்டும். எப்போதும்
கடவுளின் அருளுக்காக, அவரது ஆசீர்வாதத்தோடு சிறப்பாக வாழ
வேண்டும் என்பதற்காக, நாம் வாழ வேண்டும். இறப்பைப் பற்றி
கவலை கொள்ளாமல், சிறப்பாக வாழ வேண்டும் என்கிற கவலை, நம்மை
சிறப்பாக வாழ தூண்டுகோலாக இருக்கட்டும்.
இறைவனுடைய அரசில் இடம்பெறுகிறவர் யார்?
மத்தேயு 25 வது அதிகாரம், மத்தேயு நற்செய்திக்கே உரிய
சிறப்பான பகுதி. தாலந்து உவமையைத்தவிர மற்ற இரண்டு
பகுதிகளும் வேறு எந்த நற்செய்தியிலும் இல்லாதவை. இந்த
அதிகாரம் முழுவதும் இறுதிக்காலத்தைப்பற்றி அதாவது,
இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப்பற்றிச் சொல்வதாக
இருக்கிறது. இயேசுவின் இரண்டாம் வருகையின்போது நாம்
இயேசுவை வரவேற்க தகுதியாக்கிக்கொள்ள என்னென்ன செய்ய
வேண்டும்? என்பதையும் இது கற்றுத்தருகிறது.
மேற்கூறிய பிண்ணனியில், இறைவனுடைய அரசில் இடம்பெறுகிறவர்
யார்? என்ற கேள்விக்கு விடையாக வருவதுதான் இன்றைய
நற்செய்தி. இறைவனுடைய அரசில் நுழைவதற்கு செல்வமோ, புகழோ,
அதிகாரமோ தகுதியாக இருக்க முடியாது. மாறாக, தேவையில்
இருக்கிறவர்களுக்கு உதவுவதுதான் கடவுளின் அரசில்
நுழைவதற்கான தகுதியைப்பெற்றுத்தரும். விண்ணரசில்
நுழைவதற்கு இயேசு கடினமான செயல்பாடுகளை நம்மிடம்
எதிர்பார்;க்கவில்லை. பெரிய சாதனை செய்திருக்க வேண்டும்
என்றோ, இறையியல் கோட்பாடுகளைக் கரைத்துக்குடித்திருக்க
வேண்டும் என்றோ, இருப்பதை எல்லாம் விட்டுவிட்டு
தரித்திரமாக வாழ வேண்டும் என்பதோ இயேசுவின் எண்ணமல்ல.
இயேசு எதிர்பார்ப்பது அனைவராலும் செய்யக்கூடிய ஒன்று,
அனைவரும் செய்ய முடிகின்ற ஒன்று. பசித்திருக்கிறவருக்கு
உணவு கொடுப்பதோ, தாகமாய் இருக்கிறவர்களுக்கு தண்ணீர்
கொடுப்பதோ, நோயுற்றவர்ளுக்கு ஆறுதல் சொல்வதோ கடினமானவை
அல்ல. எளிய செயல்கள் தான். அப்படிப்பட்ட எளிய
செயல்பாடுகளில் நாம் அக்கறையோடு இருப்பது, நம்முடைய
வாழ்வையே மாற்றுவதாக இருக்கும் என்பதுதான் இயேசுவின்
எதிர்பார்ப்பு. மலைமீது ஏறுகிறவர் பெரிய பாறாங்கற்கள்
தடுக்கிக்கீழே விழுவதில்லை, சிறிய கூழாங்கற்கள்தான் கீழே
விழ காரணமாகிவிடுகிறது. இந்த சிந்தனையை சற்று எதிர்மறையாக
சிந்தித்தால், இறைவனுடைய அரசில் நுழைவதற்கு நாம் பெரிய
காரியங்கள்தான் செய்ய வேண்டும் என்பதில்லை, நாம் செய்கின்ற
சிறிய காரியங்கள்தான் நம்மை உயர்ந்த இடத்திற்கு
அழைத்துச்செல்லும்.
எளிய இரக்கத்தை வெளிப்படுத்தும் செயல்கள் விண்ணரசிற்கு
செல்லும் ஏணிப்படிகள். நாம் செய்கின்ற இரக்கச்செயல்கள்
அனைத்தும் நம்மை விண்ணரசில் உயர்ந்த இடத்திற்கு கொண்டு
செல்பவை. எளிமையானவர்களாக, இரக்கமுள்ளவர்களாக, தேவையில்
இருக்கிறவர்களுக்கு உதவுகிறவர்களாக வாழும் வரம் வேண்டி
இறைவனிடம் மன்றாடுவோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க் கழகம்,
பெங்களூர்
இறந்த விசுவாசிகளின் நினைவு (நவம்பர் 2)
இன்றைய நாளை அன்னை திருச்சபை அனைத்து ஆன்மாக்களின் விழா
என்று குறிப்பிட்டாலும், பொதுவாக மக்கள் ஆன்மாக்களின்
விழாவைக் 'கல்லறைத் திருவிழா' என்றே அழைக்கின்றனர். பண்டைய
உரோமையர்களின் சிந்தனைபடி கல்லறைகள் இறந்தவர்களின் நகரம்
என்று கருதப்பட்டது. ஆனால் அன்றைய கிறிஸ்தவர்களுக்கு இது
வாழ்வோரின் நகரமாக விளங்கியது. இன்று அக்கல்லறைகளுக்கு
வாழ்வோராகிய நாம் எடுக்கும் இந்த விழா, நமது வாழ்வு
முடிவற்ற திருப்பயணம் என்பதை உலகிற்கு
எடுத்துக்காட்டுகின்றது. இறைவன் நமக்கு வழங்கியுள்ள வாழ்வு
மயானத்துடன் முடிந்துவிடும் மாயை அன்று. மாறாக இது உண்மை,
அன்பு, சகோதரத்துவம் என்னும் இறையாட்சி விழுமியங்களைக்
கட்டியெழுப்பும் கல்வெட்டுக் காப்பியங்கள். எனவே இன்று
இருந்துவிட்டு நாளை இடிந்துவிடும் மணல் வீடல்ல நம்முடைய
வாழ்வு. மாறாக நம் வாழ்வு என்றும் நிலைத்திருக்கும் நிஜம்.
ஏனெனில் இயேசுவில் நம்பிக்கைக் கொள்வோர் என்றுமே வாழ்வார்.
நீத்தாரை நினைவு கூறும் வழக்கம் தொன்று தொட்டே வந்துள்ளது.
உதாரணமாக எகிப்து நாட்டில், பெரிய பிரமீடுகள் கட்டி,
இறந்தவர் உடலைப் பதப்படுத்தி, அங்கு அதை வைத்து, இறந்தவர்
உயிருடனிருந்தபோது விரும்பிய உணவையும் அங்கு வைத்தனர்.
இறந்தவர்மீது கொண்டிருந்த நன்றி மற்றும் பய உணர்வு
இம்மக்களுக்குக் காரணமாய் அமைந்தது. ஆவி அடித்துவிடும்
என்று மக்கள் மூடநம்பிக்கையும் கொண்டிருந்தனர். மூடப்பழக்க
வழக்கங்களுடன் இருக்கிறது என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படக்
கூடாது என்பதற்காக ஆரம்ப காலத்தில் நீத்தார் நினைவு நாள்
ஆடம்பரமாகக் கொண்டாடப்படவில்லை. இறந்த விசுவாசிகளின்
நினைவு கூறும் நற்பழக்கம் முதலில் துறவிகள் மத்தியில்
ஆரம்பமானது. ஸ்பெயின் நாட்டில் புனித இசிதோர் என்பவர்
பரிசுத்த ஆவி பெருவிழாவை அடுத்து வந்த திங்கள் கிழமை இறந்த
விசுவாசிகளின் நாளாகக் கொண்டாடினார். 11-ஆம் நூற்றாண்டில்
புனித ஓதில்யோ என்பவர் பிரான்சில் இருந்தக் குளுனி
துறவறங்களில் நவம்பர் 2-ஆம் நாளை இறந்த துறவியர் நாளாகக்
கொண்டாடும்படிப் பணித்தார். பிற்காலத்தில் இலத்தீன்
திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப் பட்டது.
ஓடும் மானும், பாடும் பறவையும், நீந்தித் திரியும் மீனும்
ஒரு நாள் இறக்கின்றன. பிறந்தக் குழந்தையும் ஒரு நாள்
இறக்கிறது. வாழ வேண்டும் என்ற ஆசையில் பாதி நிலை
கடந்துவிட்ட மனிதனும் திடீரென இறக்கின்றான். இப்படி
அனைத்துமே இறக்கின்றன. இறப்பு இதுவரை ஒரு புரியாதப்
புதிராகவே இருக்கிறது. எனவேதான் ஒரு கவிஞன் சொன்னான்,
"சாவே உனக்குச் சாவு வந்து நேராதா" என்று. சாவுக்குச் சாவு
வரும் என்று நாம் காத்திருந்தால், நாம் சாகும் வரைக்கும்
சாவு வராது என்பது மட்டும் எதார்த்தமான உண்மை. இறப்பு
இறைவன் இருக்கிறான் என்ற பாடத்தைக் கற்றுத் தருகிறது.
"தூங்கும்போது மூச்சு சுழிமாறிப் போனாலும் போச்சு" என்ற
பழமொழியைப் படித்த பின்பும், மனிதனின் ஆட்டம் அடங்கி
விடுகிறது என்ற உண்மை தெரிந்த பின்பும், இன்றைய
எதார்த்தமான உலகிலே மனிதன் பொன்னையும், பொருளையும்,
பணத்தையும், புகழையும் சேர்ப்பதற்காக, அடுத்தவனை
மதிக்காது, அன்பு செய்யாது, ஆணவத்தோடு வாழ்கிறானே, அது
ஏன்? உலகத்தையே வென்று தன் காலடியில் கொண்டு வர
வேண்டுமென்ற எண்ணம் கொண்ட அலெக்சாண்டரும், வரலாற்றில்
வலுவான இடம் பிடிக்க ஏங்கிய நெப்போலியனும்,
பல்லாயிரக்கணக்கான யூதர்களின் உயிர்களைக் குடித்துப்
படுத்த ஹிட்லரும் இந்த மண்ணில் இல்லை என்பதைக் கண்ட
பின்னும், தான் வாழ வேண்டும் என்பதற்காக அடுத்தவர்களை
நசுக்கும் அதிகாரம் கொண்டு வாழ்கிறோமே! இறந்தவர்கள்
எதையும் எடுத்துச் செல்வதில்லை என்பதை, இறந்தவர்களைப்
பார்த்து அறிந்தப் பின்பும் நாம் பொருளைச் சேர்க்க
ஓடுகிறோம், அலைகிறோம். இதை உணர்ந்த மாவீரன் அலெக்ஸாண்டர்,
"நான் இறந்தப் பிறகு என் இரண்டு கைகளையும் என்
சவப்பெட்டிக்கு வெளியே வையுங்கள், இதைப் பார்க்கும்
அனைவரும், உலகையே வெல்ல வேண்டுமென்று துடித்த இந்த மனிதன்
இறந்தபோது எதையுமே எடுத்துச் செல்லவில்லை என்பதை அறிந்து
கொள்ளட்டும்" என்றார்.
'மனிதனே, நீ மண்ணாக இருக்கிறாய் திரும்பவும் நீ மண்ணுக்கே
திரும்புவாய்' என்ற உண்மைச் செய்தியைத் திருமறை கல்லறைத்
திருநாளில் தந்தாலும், அதேத் திருமறைத் திரும்பவும்
'என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வான்' என்ற
மகிழ்வு செய்தியையும் சொல்கிறது. இதற்கு மேலாக இயேசு தாம்
உயிருடன் இருந்தபோது, மரித்த மூன்றாம் நாளில் உயிர்ப்பேன்
என்று சொன்னபடி மரித்து உயிர்த்தார். புனித பவுல் அழகாகக்
குறிப்பிடுவார், "கிறிஸ்துவோடு நாம் மரித்தால்,
கிறிஸ்துவோடு நாமும் உயிர்ப்போம்" என்று இயேசு உடலோடு
வாழ்கின்றார் என்பதை வலியுறுத்தத் தொடக்கக் கால
கிறிஸ்தவர்கள் காலியாக இருந்த கல்லறையை முன்னிலைப்
படுத்தினர். "இயேசு இறந்தும் வாழ்கிறார்" (உரோ 14:9) என்று
புனிதப் பவுல் கூறுகிறார். "கோதுமை மணி மண்ணில் விழுந்து
மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான்
மிகுந்தப் பயனளிக்கும்" (யோவான் 12:24). விதை மண்ணில்
மடிவது இறப்பு அன்று. மாறாகப் பலன் கொடுப்பதற்கான புதிய
வாழ்வின் பிறப்பு. வாழ்வு மாறுபடுகிறது அவ்வளவுதான்.
கிறிஸ்தவர்கள் இறக்கும்போது வாழ்வு மாறுபடுகிறதேயென்று
அழிக்கப்படுவதில்லை. கிறிஸ்துவில் உயிர்ப்பு உண்டு என
உண்மையாக நம்பப்படுகிறது இதைத்தான் புனித பவுல் "இறந்த
கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன்
எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது" (1கொரி 15:20)
என்று கூறுகிறார். இதையே கிறிஸ்துவும் முன் மொழிந்து
சென்றார். "உயிர்ப்பும் உயிரும் நானே; என்னில் விசுவாசம்
கொள்பவன் ஒருபோதும் சாகான்" (யோவான் 11:25).
நாமும் கிறிஸ்தவர்கள்; கிறிஸ்துவைப் போல் உயிர்க்கப்
போகிறவர்கள். ஏதோ வருடம் ஒருநாள் மட்டும்
இறந்தவர்களுக்குத் திருப்பலி வைத்துக் கல்லறைக்கு
மாலையும், தூபமும் காட்டி, ஒரு சொட்டு கண்ணீர் விட்டு
அவர்களது நினைவைக் கொண்டாடி திருப்தியடையும் வழக்கமான
பழக்கத்தோடு நின்றுவிடாமல், வேறுபாடான முறையில் நாம்
இறந்தவர்களின் நினைவைக் கொண்டாடுவோம். நாம் நினைவு கூறும்
இறந்த மனிதர் இந்த மண்ணிலே வாழ்ந்தபோது, ஏழைகளுக்கு
உதவினார், கல்விப்பணிக்குத் தன்னையே அர்ப்பணித்தார்
என்றால், அவரை நினைவு கூறும் வண்ணமாக ஓர் ஏழை மாணாக்கரைப்
படிக்க வைத்து, வாழ்க்கையில் முன்னேற்றி விடுவோம். நாம்
இன்று நினைவு கூறும் ஒருவர், நீதிக்காகப் போராடித்
தன்னையேச் சமுதாயத்திற்காகப் பலியிட்டவராக இருக்கலாம்.
அவரைப் போல் நாமும் நீதிக்காகக் குரல் கொடுத்து
நசுக்கப்படும் ஏழைகள் சார்பாக நின்று நாம் செயல்படுவோம்.
இப்படி நாம் செயல்படுகின்றபோது அவர்கள் நம்மிலே
வாழ்கிறார்கள். இதுதான் உண்மையான நினைவு கூர்தலாக இருக்க
முடியும். எனவே, இறப்பு என்ற எதார்த்தத்தை துணிவோடு
சந்திப்பவர்களாகவும், அதன் பொருளை உணர்ந்தவர்களாகவும் வாழ
முற்படுவோம். ஏனெனில் இறப்பு நமக்கு முடிவன்று. அது புதிய
வாழ்வின் பிறப்பு. எனவே, வாழும்போது நாம் இயேசுவைப் போல
அடுத்தவர்கள் வாழ நன்மைகள் செய்து அவரது மதிப்பீகளின் படி
வாழ முற்படுவோம்.
நம் வாழ்வும், இறப்பும் பலருக்கு வாழ்வு கொடுக்க வேண்டும்.
மனித வாழ்வு கடவுளால் கொடுக்கப்பட்ட ஒரு மாபெரும் கொடை.
இதைச் சரியாகப் புரிந்து கொண்டு இலட்சியத்திற்காய்,
கொள்கைகளுக்காய், பலருடைய வாழ்விற்காய், நம்மையே இறப்பு
என்ற பெயரில் இழந்தாலும், இயேசுவின் தோழமையில்,
உயிர்ப்பில் பங்குக் கொள்கிறோம். இப்படி இறக்கின்றபோது
நாமும் இயேசுவைப் போல என்றுமே வாழ்ந்து கொண்டிருப்போம்.
விசுவாச வாழ்வில் மரணம் வித்தியாசமாகத் தோன்றினாலும்
இயேசுவின் மரணம், உயிர்ப்பு சொல்லித் தரும் பாடம் நாமும்
மரிப்போம், இயேசுவைப் போல் கடவுள் துணையால் உயிர்ப்போம்,
நல் வாழ்வின் பரிசைப் பெறுவோம். வாழ்வின் நாயகனோடு
இணைவோம். கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால்
நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும், நீங்கள் கொண்டிருக்கிற
நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும் (1கொரி 15:14).
அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட்
அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
இறந்தோர் நினைவு (நவம்பர் -2)
முதல் வாசகம் : சாஞா 4:7 - 15
இன்று திருச்சபையிலே, சிறப்பாக இறந்தோரை நினைவு
கூர்கிறோம். இறந்தோர் நம்மை விட்டுப் பிரிந்தாலும் அவர்களுடைய
வாழ்க்கை நம்மோடு தொடர்புடையது. அவர்களோடு சேர்ந்துதான்
திருச்சபை முழுமை பெறுகிறது. "புனிதர்களுடைய உறவை விசுவசிக்கிறோம்"
என்று கூறுவதன் பொருள்தான் இது. இறந்தோரைச் சிறப்பாக
நினைவுறும் இந்நாளுக்கெனப் பல வாசகங்கள் தரப்படுகின்றன. சாலமோனின்
ஞானத்திலிருந்து எடுக்கப்பட்ட இவ்வாசகம் நீதிமான்களின் அகால
மரணத்தைப் பற்றியும், ஆண்டவர் அவர்களுக்கு அளிக்கும்
மீட்புப் பற்றியும் கூறுகிறது.
நீதிமான் இளைப்பாற்றி அடைவான்
கிறிஸ்து நமக்காக இறந்தார். அவருடைய இறப்பிலே நாமும்
இறக்கிறோம். அதே போன்று அவருடைய உயிர்ப்பிலே நாமும்
பங்குபெறுகிறோம் என்பது உண்மை. "கிறிஸ்துவே முதலில்
உயிர்பெற்றார். அடுத்து, கிறிஸ்துவின் வருகையின்போது
அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர்" (1 கொரி 15: 23). வாழும்
நாட்களைப் பொறுத்து முடிவு அமைவதில்லை. ஆனால் வாழும்
வாழ்வைப் பொறுத்தே முடிவு அமையும். மரம் எப்பக்கம்
சாய்ந்திருக்கிறதோ அப்பக்கமே விழும் என்பது உறுதி. எனவே
"அறிவுடைமையோடு", "கடவுளுக்கு உகந்தவராய் மாசற்ற வாழ்வு
வாழ்பவருக்கு" (4:9-10), சாவு நாம் எதிர்பாராத வேளையில்
வரும் திருடனாக அமையாது. தொடர்ந்து நம் அன்பு வாழ்வை,
மாசற்ற வாழ்வை மிகச் சிறப்புடன் முழுமையாக வாழ
விடுக்கப்படும் அழைப்பாகும். "ஆறிலும் சாவு நூறிலும் சாவு"
என்பது உண்மை. இந்த ஆறிலும் சரி நூறிலும் சரி இறையன்பு,
பிறரன்பு ஆகிய இரண்டு பெருந்துணைகள் நம் வாழ்வைப்
புனிதப்படுத்த வேண்டும். திருமுழுக்கு வாழ்வையும், அர்ப்பண
வாழ்வையும் முழுமையாக வாழ முயல்வோம். நமக்கு முன் இறையடி
அடைந்த புனிதர்கள் நமக்கு வழித் துணையாக அமையட்டும்.
தம்முடைய திருமுழுக்கு, அர்ப்பண வாழ்வை நிறைவுற
வாழாதவர்கள் இன்னும் இறைவனின் பிரசன்னத்தை முழுமையும்
அடையாத நிலையிலே இருக்கிறார்கள். அவர்களுக்காக வேண்டிக்
கொள்வது நமது கடன். துயருறும் திருச்சபைக்கு உதவுதல் நமது
குடும்பக் கடமையென்பதை உணர்ந்து, சிறப்பாக, இறந்த நம்
உற்றார் உறவினருக் காகவும், நமது செப உதவி
தேவைப்படுபவர்களுக்காகவும் வேண்டுவோம்.
ஆண்டவர் அருளும் இரக்கமுள்ளவர்
தம்முடைய மக்களுக்கு இன்று மட்டுமன்று, என்றும் உறுதுணையா
யிருப்பவர் ஆண்டவர். "அருளும் இரக்கமும்" அவருக்கே உரியன
(4:15). "என்றும் உள்ளது அவரது பேரன்பு (திபா. 136) என்ற
சொற்கள் நமக்கு ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்க வேண்டும்.
"உதவி எனக்கு எங்கிருந்து வரும்?" என்று நாம் கேட்கும்
கேள்விக்கு, "ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும்" (திபா.
121:1-2) என்ற பதில் நமக்கு வலிமை தர வேண்டும். "ஆண்டவர்
உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; அவர் உம்
உயிரைக் காத்திடுவார். நீர் போகும்போதும், உள்ளே
வரும்போதும், இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக்
காத்தருள்வார்" (திபா. 121:7- 8) என்ற சொற்கள் இறந்தோரைப்
பொறுத்தமட்டில் உண்மை.
எனவே, இறந்தோருக்காக நம்பிக்கையோடு வேண்டுவோம்.
உயிரோடிருக்கும் நம்முடைய வாழ்விலே, அருளும், இரக்கமும்
கொண்ட இறைவன்பால் நம்பிக்கை வளரவும் வேண்டுவோம்.
அவநம்பிக்கை நம்மை அவலத்திற்கும், நம்பிக்கை நம்மை
நல்வாழ்வுக்கும் நலத்துக்கும் இட்டுச்செல்லும் என்பதை
உணர்ந்து கிறிஸ்துவ நம்பிக்கையோடு வாழ்வோம்.
தம் பரிசுத்தர்களை அவர் கண்காணிக்கிறார்.
இரண்டாம் வாசகம் : 2 கொரி 5:1.6-10
பாவத்தின் கூலியே மரணம் (உரோ 6 : 23) என்பதும், மனிதன்
வழியாகச் சாவு உண்டானதுபோல், மனிதன் வழியாகவே இறந்தோர்
உயிர்த்தெழுதல் உண்டு (1 கொரி 15:21) என்பதும், அவரோடு,
அவரில் மரித்தால் அவரோடு அரசு புரிவோம் என்பதும் (2 திமொ
2:11), இறுதி நாளில் நமது உடலையும் அவரது உடலைப் போல்
நமதாண்டவர் மாற்றுவார் என்பதும் (பிலி 3:21) உண்மை.
இறைவனது பிரசன்னத்திற்குத் தகுதியற்றவர்கள் இறக்கும்
பொழுது உத்தரிக்கிற தலம் செல்வர் என்பதும், இவர்களால்
கழுவாய் தேடமுடியாத நிலையில், இவ்வுலகில் வாழும்
விசுவாசிகள் தம் செபத்தால், தவத்தால் உதவிசெய்ய முடியும்
என்பதும் திருச்சபையின் போதனை. இறந்தவர்களுக்கு நாம்
காட்டும் நன்றிக்கடன், அவர்களது தற்காலிகத் தண்டனையை நமது
பரிகாரத்தால் குறைத்து அவர்களைக் கரையேற்றுவதேயாகும்.
இதுவே இன்றைய விழாவின் நோக்கம்.
மனித வாழ்வு நிலையற்றது
இவ்வுலக வாழ்வு நிலையற்றது. நாடோடி வாழ்வு. வாழும்
மக்களும், போருக்குச் செல்லும் வீரர்களும் தம் கூடாரங்களை
ஆங்காங்கே அமைக்கின்றனர். தம் வேலை முடிந்த உடன் அவற்றைச்
சுருட்டி மடக்கிக் கொண்டு வேறிடம் செல்லுகின்றனர்.
மனிதவாழ்வை ஒரு கூடாரத்திற்கு ஒப்பிடுகிறார் பவுல் (5 :
1). இறைவாக்கினர் எசாயா வாக்கு சிந்தனைக்குரியது:
"என் உறைவிடம் மேய்ப்பனின் கூடாரத்தைப் போல்
பெயர்க்கப்பட்டு என்னை விட்டு அகற்றப்படுகிறது. நெசவாளன்
பாவைச் சுருட்டுவதுபோல் என் வாழ்வை முடிக்கிறேன் "(எசா 38:
12). இந்த நில்லா உலகில் வாழும் நாம் இடைக்கால மக்கள்
தாம்.
"நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
புல்லரிவாண்மை கடை"- (குறள் 331)
இறந்தோருக்காகச் செபிப்பது நமது கடமை
உடலாகிய கூடாரத்தை இவ்வுலகிலே விட்டுச்செல்லும் ஆன்மா
இறைவனது தீர்ப்புக்கு ஏற்ப அவருடன் அரசாள அழைக்கப்படலாம்
(மத் 25 : 34) அல்லது சபிக்கப்பட்டவராய் நித்திய
தண்டனைக்கு ஆளாகலாம் (மத் 25 : 41); அல்லது மன்னிக்கப்பட்ட
பாவங்களுக்குத் தக்க பரிகாரம் செய்வதற்காய்,
கறைகழுவுமிடமாகிய உத்தரிக்கிற தலத்திற்கு அனுப்பப் படலாம்
(மத் 5:26). அங்கு இவர்கள் இறைவனை நோக்கி அபயக்குரல்
எழுப்புவதைத் தவிர வேறு எதுவும் செய்வதறியார்;
"துணைவேண்டிக் காலை வரை கதறினேன்; சிங்கம்போல் அவர் என்
எலும்புகள் அனைத்தையும் நொறுக்குகிறார்; காலைத் தொடங்கி
இரவுக்குள் நீர் எனக்கு முடிவுகட்டுவீர். சிட்டுக்குருவி
போலும் நாரை போலும் கூக்குரலிடுகிறேன்; மாடப்புறாப்போல்
விம்முகிறேன்" என்ற எசாயா இறைவாக்குகள் (38: 13- 14)
இவர்களுக்குப் பொருந்தும்.
"என் உடலால் நான் வெட்கமும் வேதனையும் அடைகிறேன்" என்றான்
புளோட்டைனஸ். "அழியக்கூடிய உடல் ஆன்மாவைப்
பளுவாக்குகின்றது. இந்த மண்குடிசை சிந்தனை நிறைந்த மனத்தை
அழுத்துகிறது" என்பது சாலமோனின் ஞானம் (9:15). எனினும்
உடலும் ஆன்மாவும் இணைந்ததே மனித வாழ்வு. எனவேதான் உடலை
இறைவனின் ஆலயமாகப் பேண வேண்டியது என்கிறார் பவுல். நமது
உடல், ஆன்மாவுடன் நன்மைக்கோ அல்லது தீமைக்கோ
ஒத்துழைக்கிறது. இந்த அடிப்படையில் தான் தீர்ப்பு
அளிக்கப்படும். மரணத்திற்குப் பிறகு பேறுபலன்களைக்
கூட்டவோ, பரிகாரம் செய்து தண்டனையைக் குறைக்கவோ அவரால்
முடியாது. எனவேதான் வேதனை தளத்திலே வெந்துகொண்டிருக்கும்
ஆன்மாக்கள் நம் உதவியை நாடுகின்றனர். இவர்களுக்கு நாம்
உதவுவதுடன், நமது மரணத்திற்குப் பிறகு இதே நிலை நமக்கு
வராதபடி காத்துக்கொள்வதும் நமது கடமையாகும். என்
பாவங்களுக்கு வேண்டிய அளவு நான் உத்தரித்துவிட்டேனா?
அனைத்து ஆன்மாக்கள் விழாவுக்கெனப் பல வாசகங்கள்
தரப்பட்டுள்ளன. பொதுத்தீர்வை பற்றிய வாசகம் நம்
தியானத்திற்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டு ஈண்டு
விளக்கமுறுகிறது.
இறைவன் எதிர்பார்ப்பது
இறைவன் நம் அனைவரிடமிருந்து எதிர்பார்ப்பது நமது பலிகளல்ல,
நமது கொண்டாட்டங்களல்ல, நமது விழாக்களும் பவனிகளுமல்ல,
நமது தீப தூப மலர்க் காணிக்கைகளுமல்ல; மாறாக, "நீதியைத்
தேடுதல், ஒடுக்கப் பட்டோருக்கு உறுதுணையாதல்,
திக்கற்றவருக்கு வாழ்வு வழங்கல், கைம்பெண்களுக்கு உதவல்"
முதலியனவே (காண்: எசா. 1: 11-20). ப.ஏ. இல் பலமுறை
அழுத்திக் கூறப்படும் இவையன்ன அன்புச் செயல்களே (இசை 58: 7
; யோபு2267; 31: 17, 19-21) இறைவன்முன் நம்மை
நீதிமான்களாக்கத் தக்கன; இறைவனிடம் நமக்கு மீட்பைப்
பெற்றுத்தர வல்லன. எனவே நமது அன்றாட வாழ்வு, அன்பு,
இரக்கம், பரிவு, நீதி ஆகிய மலர்களால் தொடுக்கப்படும் ஒரு
முடிக்கப்படாத நெடிய பூமாலையாக அமையுமா? "அன்பு மட்டும்
செய்; வேறெதுவும் நீ செய்யலாம்" என்ற அகுஸ்தீனாரின் வாக்கு
நமக்கு வழிகாட்டியாக அமையுமா?
சிறு காரியங்களில் அன்பு
நம்மில் பலர் தம் அன்பைப் பிறருக்கு வெளிப்படுத்தப் பெரிய
தியாகங்கள் செய்யக் காத்திருக்கிறோம். இது "ஓடு மீன் ஓட
உறு மீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு" என்பது போல்
ஆகிவிடக் கூடாது. ஆண்டவர் நம்மிடம் கேட்கும் அன்பு சிறு
சிறு காரியங்களை அடுத்தது. பல துளி பெருவெள்ளமல்லவா?
பசியென வந்தவனுக்குப் புசியென ஒரு கை உணவளித்தல், மூன்று
வேளை வயிராற உண்டு மகிழும் நமக்கென்ன பெரிய காரியமா?
தாகமென்று தவிப்பவனுக்கு ஒரு குவளை தண்ணீர் தருவது, நாள்
முழுவதும் காப்பி, தேநீர் என்றிருக்கும் நமக்கு
முடியாததொன்றா? இவையன்ன சிறுசிறு அன்புச் செயல்கள் செய்ய
நமக்கு ஆயிரமாயிரம் வாய்ப்புகள் அன்றாடம் வருகின்றன.
இவைகளைச் செய்யாது, பெரிய வாய்ப்புக்களுக்காகக்
காத்திருப்பது, நாம் சிறிய நன்மைகள் கூடச் செய்ய இயலாது
நம்மைத் தடுத்து விடுகிறது; பெரிய வாய்ப்புகளும் நமக்குக்
கிட்டாது நம்மை ஏமாற்றிவிடுகின்றன. எனவே பேரையும்
புகழையும் எதிர்பாராது அன்றாட வாழ்வில் அன்புச் செயல்கள்
புரிய நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைத் தொடர்ந்து
பயன்படுத்துவோம்.
பலன் எதிர்பாரா அன்பு
இன்றைய வாசகத்தில் கூறப்பட்டுள்ள அன்புச் செயல்கள்
அனைத்தும் பயன்கருதிச் செய்யப்பட்டனவல்ல என்பது தெளிவு.
"ஆண்டவரோ எப்போது நீர் பசியாயிருக்கக் கண்டு உணவு
கொடுத்தோம்? தாகமாய் இருக்கக்கண்டு குடிக்கக் கொடுத்தோம்?"
(25 : 37) என்ற வினாக்களிலிருந்து, இந்நற்செயல்கள்
புரிந்தவர்கள் பதிலையோ, சன்மானத்தையோ
எதிர்பார்க்கவில்லையென்! 'து புலனாகின்றது. எனவே
ஆண்டவருக்காக, அவர் பெயரிலே எளியோருக்கு அன்பு காட்டுவது
சாலச்சிறந்ததெனினும், ஏழைகள் நமது சகோதரர்கள், நம்மைப்
போன்று மனிதத் தன்மையுடன் வாழவேண்டியவர்கள், அவர்களுக்கு
உதவுவது நமது கடன் என்பதை உணர்ந்து செயல்படுவதும்
விரும்பத்தக்கதாகும். எனவே பலன் கருதாது, வாய்ப்புக்
கிடைத்தபொழுதெல்லாம் அன்பாக நினைப்போம். அன்புச் சொற்களைப்
பேசுவோம், அன்புச் செயல்கள் புரிவோம்.
அது கடவுளுக்கே செய்யும் அன்பு
கண்காணாத கடவுளுக்கு நாம் நேர்முகமாக அன்பு செய்தல்
இயலாது. காணும் நம் அயலாருக்கு நாம் அன்பு காட்டும்
போதெல்லாம் அது நாம் கடவுளுக்கே செய்யும் அன்பின்
அருட்சாதனமாகிறது. "சின்னஞ்சிறிய என் சகோதரருள் ஒருவனுக்கு
நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்"
(25:40) என்ற இயேசுவின் சொற்கள் நம் ஒவ்வொரு அன்புச்
செயலையும் முத்திரையிடுகின்றன. "ஏழையின் சிரிப்பிலே
இறைவனைக் காண்போம்" என்பது எவ்வளவு உண்மையாகிறது!
இறந்தோருக்கு நாம் செய்யும் செபம், இருப்போருக்காக நாம்
செய்யும் அன்புச் செயல்கள் வழி வெளிப்படுவதாக.
எனக்கே செய்தீர்கள்.
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ