நாம் அடிமையாகவேண்டும் என்பது அல்ல, அர்ப்பணிக்கவேண்டும் என்பதையே
ஆண்டவன் எதிர்பார்க்கிறார். பிறரின் உணர்வை மதித்து, உறவை வளர்க்க,
நம்மையே அர்ப்பணிக்கவேண்டும் என்ற உணர்வை தூண்டிவிடுவதற்காக, இந்த
திருவருகைக்கால 4ம் ஞாயிறு நம்மை வரவேற்கின்றது.
மரியாளைக் கண்டு, மனுமகனை உதரத்தில் உதிக்க செய்ய அனுமதி கேட்க தூதர்
வந்தபோது, இதோ நான் உமது அடிமை என்று அர்ப்பணம் செய்கின்றாள. இந்த
நிகழ்ச்சிக்குப்பின் எலிசபேத்தை சந்தித்து வாழ்த்தி, அவளின் உணர்வை
மதிக்கின்றாள்;. உறவை வளர்க்கின்றாள். இன்று நமக்கு மிகப் பெரிய உதாரணமாகின்றாள்.
அன்னை மரியாளைப் போல நாமும் ஆண்டவருக்கு நம்மையே அடிமையாக்கி,
முழுவிருப்பத்தோடு அர்ப்பணிக்கவேண்டும்.
அர்ப்பணித்தல் என்பது வேறு, அடிமையாதல் என்பது வேறு, அடிமையாதல்
பயத்தின் வெளிப்பாடு, அல்லது கட்டாயத்தினால் ஏற்படுத்திக் கொள்வது.
ஆனால் அர்ப்பணமாதல் நம்பிக்கையின் வெளிப்பாடு, அன்பினால் விருப்பத்தினால்
ஏற்படுவது. நாமும் அன்பினால் உந்தப்பட்டு, விருப்பத்தினால் ஆண்டவருக்கு
உரியவர்களாக மாற, இந்த ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கின்றது.
நம் குடும்பங்களில் கணவன் மனைவிக்காக, மனைவி கணவனுக்காக, பிள்ளைகள்
பெற்றோருக்காக, பெற்றோர் பிள்ளைகளுக்காக, அர்ப்பண உணர்வோடு
வாழும்போது, அங்கு மகிழ்ச்சி நிறைந்த குடும்பமாக நமது குடும்பங்கள்
காட்சி தரும்;. அர்ப்பண உணர்வை ஆழமாக்க அழைக்கின்ற இத்திருப்பலிக்கு,
நம்மை அர்ப்பணித்து, இறைவன் தரும் ஆற்றலைப் பெற்று மகிழ்வோம். பிறரது
அர்ப்பண உணர்வுகளைப் போற்றுவோம்;. போற்றுகின்ற மனிதர்களாக மாறவும்
வேண்டிக் கொள்வோம்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
அர்ப்பண உணர்வை எங்களுக்கு அள்ளித் தருகின்ற இறைவா!
தங்கள் வாழ்நாளை முழுமையாக உமக்கு அர்ப்பணித்து,
திருச்சபையில் பணிபுரியும் திருத்தந்தை, ஆயர்கள்,
குருக்கள், துறவியர் வாழ்வில் ஏற்படுகின்ற, இன்னல் இறையுறுகளையெல்லாம்
அகற்றியருளும். அவர்கள் தங்கள் அர்ப்பணவாழ்வின் ஆணிவேரிரை
ஆழமாக்கி, உம் பணிசெய்ய இன்னும் பலரை உருவாக்கிட அருள்
செய்ய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அச்சத்தை அகற்றி தைரியத்தை தருகின்ற இறைவா!
குடும்பங்களில் சந்தேகங்களாலும் கருத்து
வேற்றுமையாலும், அச்ச நடுக்கத்தோடு வாழ்க்கையில் கடமைக்காக
வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் அச்சத்தை
அகற்றி, மனதில் தைரியத்தை ஏற்படுத்தி, அர்ப்பண உணர்வால்
மகிழ்ச்சி நிறைந்த குடும்பங்களாக, இங்கு கூடியுள்ள எல்லாக்
குடும்பங்களும் மாறிட, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
உமது பணிக்கென குருக்களைத் தேர்ந்தெடுத்த இறைவா!
உமது பணி சிறக்க உழைக்கும் எங்கள் ஆன்மீகத் தந்தையின்
எல்லா செயல்பாடுகளிலும், உமது ஆவியானவர் உடனிருந்து
அவரது பணியால், பலரின் ஆன்மீகம் தழைக்கச் செய்ய அருள்
செய்ய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
உறவை வளர்க்க விரும்பும் இறைவா!
உறவோடு வாழும் உள்ளங்கள் நடுவில் தான் உமது வருகை
மிகுந்த மகிழ்ச்சி தரும். பிரிந்திருக்கின்ற உறவுகளை,
வர்மம் வைராக்கியத்தால் முறிந்திருக்கின்ற உறவுகளை உம்மிடம்
தருகின்றோம். கணவன் மனைவியை ஏற்கவும், மனைவி கணவனை ஏற்கவும்,
பிள்ளைகள் பெற்றோரை ஏற்கவும், பெற்றோர் பிள்ளைகளை ஏற்கவும்,
மகிழ்ச்சி நிறைந்த குடும்பங்களாக மாறி, எல்லாக் குடும்பங்களும்
உமது வருகைக்கு தங்களையே தயாரிக்க அருள் செய்ய
வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
உணர்வுகளை நெறிப்படுத்தும் உன்னதரே இறைவா!
ஆபத்திலிருப்பவர்கள் சங்கடமும் சிக்கலும் நிறைந்த
வாழ்க்கையால் அவமானப்பட்டு, நிலைகுலைந்து தடுமாற்ற எண்ணத்திலிருப்பவர்கள்,
தீராத உடல் உள்ள வேதனையென வெம்பியிருப்பவர்கள் உணர்வுகளுக்கு,
மதிப்பும் மரியாதையும் கிடைக்கக் கூடிய சந்தர்ப்பம் சமுதாயத்தில்
நிலவச் செய்ய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
மகிழ்ச்சி என்பது மற்றவர்கள் முன்னால் சிரிப்பது அல்ல. தனிமையில்
இருக்கும் போது அழாமல் இருப்பதே.
வாழ்க்கையில் சந்தோசம் வேண்டுமென்றால் உன்னை நேசி . சந்தோசமே
வாழ்க்கையாக வேண்டுமென்றால் உன்னை நேசிப்பவரை நேசி இவைகள்
மகிழ்ச்சி, சந்தோசம் பற்றி நம்மிடையே நிலவும் வாக்கியங்கள்.
இன்று இரு பெரும் பெண்கள் சந்திக்கின்ற நிகழ்வு நமக்கு நற்செய்தி
வாசகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இயேசுவின்
வாழ்வில் மிக முக்கியமானவர்கள்.
மரியா, எலிசபெத் அம்மாள்.
இவர்களில் மரியாள் இயேசுவின் தாய். எலிசபெத் அம்மாள் இயேசுவை
முன்னறிவித்த திருமுழுக்கு யோவானின் தாய். இயேசு பிறப்பு
விழாவிற்கு நம்மை தயாரித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில்
இவர்களின் சந்திப்பு இவர்களுக்கு மட்டுமல்லாது நமக்கும் மிகப்பெரிய
சந்தோசத்தை மகிழ்வை தருகின்றது. அமைதியின் ஞாயிறைக்
கொண்டாடும் இந்நாளில் இவர்களின் சந்திப்பு ஆழ்ந்த அமைதியும்
அர்த்தமும் பொதிந்த நாளாக வெளிப்படுகிறது. சலனம் இல்லாத
நீரில் தான் பிம்பம் தெளிவாக தெரியும் . அதுபோல் ஆழமான அமைதியுடன்
இருந்தால் தான் மனம் நிம்மதி அடையும். இவர்கள் இருவரின்
ஆழமான அமைதி மகிழ்வான சந்திப்பாக அமைந்தது. நம்முடைய மன அமைதி
நமக்கு நிறைவான மகிழ்வைத் தருகிறதா ? என்று சிந்தித்துப்
பார்ப்போம்.
இந்நாளில் அன்னை மரியாள் மற்றும் எலிசபெத் அம்மாள் இருவரின்
செயல்களையும் வாழ்த்தையும் ஆழ்ந்து சிந்தித்து செயலாற்ற
நாம் அழைக்கப்படுகின்றோம்.
அன்னை மரியாளின் செயலை நான்கு வார்த்தைகளில் நிறைவு செய்து
விடுகின்றார் நற்செய்தி ஆசிரியர். புறப்பட்டார்,
விரைந்தார், அடைந்தார், வாழ்த்தினார். இந்த நான்கு செயல்களுமே
சாதாரண செயல்கள் தான் என்றாலும் அன்னை மரியாள் அதனை, எங்கு?
எப்படி? யாரை?, எதற்கு? என்ற கோணத்தில் செயல்படுத்துகிறார்.
எங்கு புறப்பட்டார்?
தனது ஊரிலிருந்து புறப்பட்டு எலிசபெத் அம்மாவை சந்திக்க
கிட்டத்தட்ட் 150 கிலோ மீட்டர் பயணம் செய்கின்றார். பெண்களுக்கு
ஏற்ற பாதுகாப்பு இல்லாத காலகட்டம், பயணம் செய்ய ஏதுவான வாகன
வசதி இல்லாத காலம், அறிமுகம் இல்லாத நபர்கள் மற்றும் ஊர்களை
கடந்து செல்ல வேண்டிய தருணம். இவை அனைத்தையும் பொருட்படுத்தாமல்
புறப்படுகின்றார். வானதூதர் சொன்ன செய்தியின் உண்மையை அறிய
சென்றாரா என்பதல்ல நமது கேள்வி. மாற்றம், மீட்பு என்பது தன்னில்
இருந்து முதலில் துவங்கட்டும் என்று எண்ணி தனது பயணத்தைத்
துவக்குகின்றார். மாற்றத்தை பிறரில் காண முற்படும் முன் நம்மில்
ஏற்படுத்துவோம்.
எப்படி விரைந்தார்?
அவரது செயல் அனைத்துமே மிக துரிதமாக இருந்தது. கால தாமதம்
செய்யாமல் உடனடியாக செயல்படுகின்றார். பெற்றொரிடம்
தெரிவித்துவிட்டு உடனடியாக செல்கின்றார். தன்னால் இயன்ற
உதவியை தன்னுடைய உறவினர்க்கு செய்ய வேகமாக விரைந்து
செல்கின்றார். அவரின் இந்த செயல், " சொல்லுதல் யார்க்கும்
எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்". என்ற குறளுக்கு வரி
வடிவம். நாமும் பல நேரங்களில் பிறருக்கு உதவி
செய்கின்றோம். ஆனால் அவற்றை எப்படி செய்கின்றோம்? என்று
சிந்திப்போம். காத்திருந்து செய்யும் உதவியை விட கண நேரத்தில்
நாம் செய்யும் உதவிக்கு கைம்மாறு அதிகம்.
யாரை அடைந்தார்?
மரியா செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தம்மாவை சந்திக்கின்றார்.
இவரோ இளம்பெண் . அவரோ முதியவர். இந்நாள் வரை மலடி என்று பிறரால்
அவப்பெயர் சூட்டப்பட்டு இகழப்பட்டவர், ஏளனமாக கருதப்பட்டவர்.
இப்படிப்பட்ட கடை நிலையில் இருந்த எலிசபெத் அம்மாவை சந்தித்து
தன்னால் ஆன உதவிகளை செய்ய வருகின்றார். துன்பத்தில் துணை
நிற்கின்றார். தன்னைப் போல் உள்ள ஓர் இளம்பெண்ணை சந்தித்து
உண்டு உறவாடி மகிழ வரவில்லை. மாறாக அடிமை போல அவர்களுக்கு
தன்னை கையளித்து பணிபுரிய வருகின்றார். நமது தேடல் யாரை
நோக்கியதாக இருக்கின்றது. நமக்கு மிகவும் பிடித்தவர்கள்
பழக்கமானவர்கள், ஒத்த வயதுடையவர்கள், வசதியானவர்கள் இவர்களை
தேடி அடைவது நமது மகிழ்ச்சியாக இருக்கிறதா?
எதற்கு வாழ்த்தினார்?
மரியாள் கூறிய வாழ்த்து எதுவும் நமக்குக் கொடுக்கப்படவில்லை.
அவருடைய கனிவான பார்வையினாலும் தொடுதலினாலும் ஆயிரம் ஆயிரம்
வாழ்த்துப் பாக்களை பரிமாறியிருப்பார். முதிர்ந்த வயதில்
பிள்ளை பெற்றெடுக்க இருக்கும் அவரை ஆனந்தமாக்க, கடவுளின்
வாக்கை நம்பி வாழ்வு பெற்ற அவர்களின் வாழ்வு பிறருக்கு
சான்றாக அமைய, கடவுள் நம் கோரிக்கைகளை எப்படியும்
நிறைவேற்றுவார் என்பதை பிறருக்கு அறிவிக்க மரியாள் எலிசபெத்
அம்மாவை வாழ்த்துகின்றார். நம்முடைய வார்த்தைகளும்
வாழ்த்துகளும் எப்படி இருக்கின்றன? பிறரை மகிழ்விக்க,
குளிர்விக்க வேண்டும் என்பதற்காக போலியான வாழ்த்துகளாக இருக்கின்றனவா?
இல்லை உண்மையான வாழ்த்துக்களா என்பதை ஆராய்ந்து பார்த்து
செயல்படுவோம்.
எலிசபெத் அம்மாள் அன்னை மரியாளுக்கு இரு பெரும் பெயர்களை
அளிக்கின்றார்.
1. பெண்களுள் பேறுபெற்றவர். 2. ஆண்டவரின் தாய்.
அன்னை மரியாள் பேறுபெற்றவர் என்பதை தான் உணர்ந்ததோடு மட்டுமல்லாமல்
அவர் பெண்களுள் பேறுபெற்றவர் என்று பிற பெண்கள் அறிய உயர்த்திக்
கூறுகின்றார்.
தனக்கு நிகழ்ந்ததை மட்டும் அல்லாமல் அன்னை மரிக்கு நிகழ்ந்ததையும்
உறுதியாக நம்பி அவரை ஆண்டவரின் தாய் என்று உலகிற்கு முதன்முதலில்
அறிமுகப்படுத்துகின்றார்.
இவர்களின் சந்திப்பு இவர்களுக்கு மகிழ்வையும் அமைதியையும்
கொடுத்தது. நமக்கு, நாம் எப்படிப்பட்ட வார்த்தைகளை பிறருக்கு
பயன்படுத்த வேண்டும் என்பதையும், உண்மையான வாழ்த்து என்பது
எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கின்றது.
ஆண்டவர் உனக்கு சொன்னது நிறைவேறும் என்று நம்பிய அன்னை மரியாள்
பேறுபெற்றவர். ஆண்டவர் நமக்கும் அனுதினமும் ஆசீர்வாதங்களைப்
பொழிகின்றார். முதல் வாசகத்தில் சொல்லப்பட்டது போல, அமைதியை
அருள்வார். அச்சமின்றி நம்மைக் காப்பார். மேன்மை பொருந்தியவராய்
விளங்குவார். இறைவார்த்தைகளில் நம்பிக்கையை வைத்து நமது
வாழ்வை வாழ்வோம். அமைதியின் ஞாயிறைக் கொண்டாடும் இவ்வேளையில்
உள் மன மகிழ்வை பெற்று வாழ்வோம். ஒருவரை ஒருவர் சந்தித்து
உள்ளார்ந்த விதமாக நம் அன்பை பரிமாறுவோம். சப்தத்தின்
முன்னுரை நிசப்தத்தின் முடிவுரை அமைதி. எல்லா
சூழ்நிலைக்கும் பொருந்தக் கூடியது அமைதி. பேச ஆயிரம்
வார்த்தைகள் கொட்டிக் கிடந்தாலும் அமைதியை மட்டுமே
தேர்ந்தெடுப்போம். வார்த்தைகள் தராத நிம்மதியை மகிழ்வை அது
தரும்'. சந்திப்போம் சக மனிதர்களை, சந்தோசத்தை சாரல் போல
தெளிப்போம். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தில்
உள்ள அனைவரோடும் இருந்து நம்மைக் காப்பதாக ஆமென் .
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி
அன்பின் வருகை
திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிற்றில் நாம் ஏற்றும்
மெழுகுதிரி அன்பு என்னும் மதிப்பீட்டைக் குறித்துக்
காட்டுகிறது. "ஆண்டவரே, அமைதியை அருள்வார்!" என்று மிக அழகாக
இன்றைய முதல் வாசகத்தில் பதிவு செய்கிறார் இறைவாக்கினர்
மீக்கா. "அமைதி" அன்பில் கனிகிறது.
இன்றைய இறைவார்த்தை வழிபாடு மூன்று நபர்களின் வருகை கொண்டுவரும்
உணர்வு பற்றிப் பேசுகின்றது: முதல் வாசகத்தில், இஸ்ரயேலை
ஆளப்போகின்ற அரசர் பெத்லகேமிலிருந்து வருகின்றார். இரண்டாம்
வாசகத்தில், மனுக்குலத்தை மீட்க வந்த தலைமைக்குருவான இயேசு
தன் இறைத்தன்மையிலிருந்து மனிதத் தன்மைக்கு வருகின்றார்.
நற்செய்தி வாசகத்தில், நாசரேத்தூரிலிருந்த கன்னி மரிய
யூதேயா மலைநாட்டிலுள்ள தன் உறவினர் எலிசபெத்து நோக்கி வருகின்றார்.
இன்றைய முதல் வாசகம் (காண். மீக் 5:2-5) மிகவும் முக்கியமான
மெசியா முன்னறிவிப்புப் பாடத்தைக் கொண்டிருக்கிறது. இறைவாக்கினர்
மீக்கா யூதாவாழ் மக்களுக்கு நற்செய்தியைக் கொண்டுவருகிறார்.
தாவீதின் வழிமரபில் வரும் புதிய அரசரே அந்த மெசியா. மீக்கா
கிமு 8ஆம் நூற்றாண்டில் இறைவாக்குரைத்தவர். இவரின் சொந்த
ஊர் எருசலேமிற்கு அருகில் உள்ள மொரேஷெத் என்ற ஊர். இவர்
நிறைப் பேரின் கண்களில் புகையாய் இருந்தவர். எருசலேமிற்கு
வெளியிலிருந்து வந்ததால் எருசலேமை மையமாகக் கொண்டிருந்த யூதத்
தலைவர்களின் செருப்புகளுக்குள் சிக்கிய சிறுகல்லாய் அவர்களுக்கு
நெருடலாகவே இருந்தார்.
இன்றைய வாசகம் மீக்கா நூலின் "தலைமைத்துவப் பிரச்சினை" என்னும்
பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. "அரசன் உன்னிடத்தில்
இல்லாமல் போனானோ?" (மீக் 4:5) என்ற கேள்வியோடு தொடங்குகிறார்
இறைவாக்கினர். யூதாவின் ஆட்சியாளர்கள் ஆண்டவராகிய கடவுளின்
உடன்படிக்கையை மறந்து, அவருடைய கட்டளைகளை மீறி, வேற்று
தெய்வங்களை வணங்கினர். இவர்களின் இந்தப் பாவச் செயல் எல்லா
மக்களையும் பாதித்தது. ஆள்பவர்களின் பாவங்களுக்காக ஆளப்பட்டவர்களும்
துன்பப்பட்டார்கள். இந்தப் பின்புலத்தில் புதிய அரசரின் வருகையை
முன்மொழிகிறார் மீக்கா. இந்தப் புதிய அரசரைப் பற்றிய மிக
முக்கியமான விடயம் என்னவென்றால், இவர் எருசலேமிலிருந்து
வரமாட்டார். மாறாக, எருசலேமிற்கு வெளியே இருந்து வருவார்.
எருசலேமிலிருந்து இதுவரை வந்தவர்கள் எல்லாம் மக்களை அடிமைப்படுத்தவும்,
தங்களைத் தாங்களே வளர்த்தெடுப்பதிலும் கவனமாக இருந்தனர்.
மெசியாவை எருசலேமிற்கு வெளியே பிறக்க வைப்பதால் மீக்கா
மெசியா இறைவாக்கையே தலைகீழாக்குகின்றார்: "எப்ராத்தா எனப்படும்
பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்!
ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப் போகின்றவர் உன்னிடமிருந்தே
தோன்றுவார்." மேலும், மெசியாவின் முதன்மையான பணியாக மீக்கா
முன்வைப்பது: "அவர் தம் மந்தையை மேய்ப்பார்." இதுவரை இருந்த
எருசலேம் மைய அரசர்கள் மந்தையை "மேய்ந்தார்களே" அன்றி, மந்தையை
"மேய்க்கவில்லை." தொடர்ந்து, மெசியாவின் ஆட்சியின் அடையாளமாக
"அமைதியை" மீக்கா முன்வைக்கின்றார்.
ஆக, அரசர் பெத்லகேமிலிருந்து எருசலேம் வருகின்றார். மக்கள்
அடிமைத்தனத்திலிருந்து தங்கள் நாடு திரும்புகிறார்கள்.
அரசர் தன் மந்தையை ஆயராக இருந்து மேய்க்கின்றார். மக்கள்
பாதுகாப்பாக இருக்கிறார்கள். மீக்காவின் இந்த இறைவாக்குப்
பகுதியைத்தான் ஞானியர் ஏரோதிடம் வரும் நிகழ்வில் மறைநூல்
அறிஞர்கள் எடுத்துரைக்கின்றனர் (காண். மத் 2:2). மத்தேயு
நற்செய்தியாளரைப் பொருத்தவரையில் மீக்காவின் இறைவாக்கு இயேசுவில்
நிறைவேறுகிறது. ஏனெனில், இயேசு பெத்லகேமில் பிறக்கின்றார்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபி 10:5-10), எபிரேயருக்கு
எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், இயேசுவைத் தனிப்பெரும் தலைமைக்குருவாக
உருவகித்து, அவர் அனைத்துப் பலிகளையும் விட சிறப்பான பலியைச்
செலுத்தினார் என்று மொழியும் பகுதியில், "இயேசு மனித உடல்
ஏற்ற நிகழ்வை" பதிவு செய்கின்றார். இயேசு மனுவுடல் ஏற்கும்
நிகழ்வு இறைத்திருவுளம் நிறைவேற்றும் நிகழ்வாக உள்ளது. இயேசு
மனுக்குலத்திற்கு வரும் நிகழ்வும், மனுக்குலத்தை விட்டு இறைத்தந்தையிடம்
செல்லும் நிகழ்வும் இறைவனின் திருவுளம் நிறைவேற்றும் நிகழ்வுகளாக
அமைந்துள்ளன.
யூத வழிபாட்டில் பலிகள் முதன்மையான இடம் பெற்றிருந்தன.
லேவியர் மற்றும் இணைச்சட்ட நூல்களில் பல பகுதிகள் பலிகள்
பற்றியும், பலிகள் நிறைவேற்றுவதற்கான முறைமைகள் பற்றியும்
பேசுகின்றன. இறைவாக்கினர்களின் காலத்தில் பலிகள் சடங்குகளாக
மாறியதால், கடவுளே அவற்றை வெறுக்கின்றார். எபிரேயருக்கு எழுதப்பட்ட
திருமடலின் ஆசிரியர் இயேசுவை தன் சமகாலத்து யூதர்களுக்கு
அறிமுகம் செய்யும்போது, யூத சமயத்தில் விளங்கிய முதன்மையான
அடையாளங்களான தலைமைக்குரு, ஆலயம், திரைச்சீலை, பலிகள் ஆகியவற்றின்
வழியாக அறிமுகம் செய்கின்றார்.
கடவுள் இயேசுவுக்கு ஓர் உடலை அமைத்துக் கொடுக்கின்றார்.
அதே உடலை இயேசு சிலுவையில் கையளித்து, உயிர்ப்பின் வழியாக
மீண்டும் பெற்றுக்கொள்கின்றார். எருசலேம் ஆலய வழிபாட்டில்
தலைமைக்குரு, பலி செலுத்தும் வேளையில் உள்ளேயும்
வெளியேயும் நடந்துகொண்டே இருப்பார். திரைச்சீலையைக் கடந்து
அவர் உள்ளே செல்லும்போது பலியுடன் செல்வார். வெளியே
வரும்போது பலி செலுத்துபவருக்கான அருளைக் கொண்டுவருவார்.
இயேசு பலிகளையும் கடந்து இறைத்தந்தையின் திருவுளப்படி
நடக்கின்றார். அதாவது, பலியை அன்று, கீழ்ப்படிதலையே
ஆண்டவராகிய கடவுள் விரும்புகிறார் என்று இறைவாக்கினர்
சாமுவேல் அரசர் சவுலுக்குச் சொல்வதை (காண். 1 சாமு 9),
இயேசு நிறைவேற்றுகின்றார்.
ஆக, இயேசு இவ்வுலகிற்கு வந்ததும், உயிர்ப்புக்குப் பின்னர்
கடவுளிடம் ஏறிச் சென்றதும் மனுக்குலத்திற்கு மீட்பு தரும்
நிகழ்வுகளாக உள்ளன.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 1:39-45) மரியா
எலிசபெத்தைச் சந்தித்த நிகழ்வைப் பதிவுசெய்கிறது.
கபிரியேல் தூதர் மங்கள வார்த்தை சொல்லி முடித்து
மறைந்தவுடன், தன் உறவினர் எலிசபெத்தை தேடி ஓடுகிறார்
மரியா. வானதூதர் சொன்ன "எலிசபெத்து" அறிகுறி சரியா என்று
பார்க்க ஓடினாரா? அல்லது தான் பெற்ற மகிழ்வை தன் உறவினரோடு
பகிர்ந்து கொள்ள ஓடினாரா? அல்லது கருத்தாங்கியிருக்கும்
அந்த முதிர்கன்னிக்கு கைத்தாங்கலாக இருக்க ஓடினாரா?
"எழுந்தாள். ஓடினாள். நுழைந்தாள். வாழ்த்தினாள்" - என
இரண்டு வசனங்களுக்குள் மரியாளின் நீண்ட பயணத்தை அடக்கி
விடுகிறார் லூக்கா.
இந்தப் பகுதியில் எலிசபெத்து பேசும் வார்த்தைகள் மட்டுமே
பதிவு செய்யப்பட்டுள்ளன. மரியா மூன்று செயல்கள்
செய்கின்றார்: (அ) விரைந்து செல்கின்றார், (ஆ)
வாழ்த்துகின்றார், மற்றும் (இ) மௌனம் காக்கின்றார்.
எலிசபெத்து மரியாவை மூன்று அடைமொழிகளால் வாழ்த்துகிறார்:
(அ) "பெண்களுக்குள் ஆசி பெற்றவர்," (ஆ) "ஆண்டவரின் தாய்,"
மற்றும் (இ) "ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று
நம்பியவர்." ஆண்டவர் சொன்னவை நிறைவேறும் என நம்பியதால்
கன்னி மரியா ஆண்டவரின் தாயாக உயர்கின்றார். "நான்
ஆண்டவரின் அடிமை" என்னும் மரியாவின் சரணாகதியே அவரை
இந்நிலைக்கு உயர்த்துகின்றது.
ஆக, மரியாவின் வருகை எலிசபெத்துக்கும் அவருடைய
வயிற்றிலுள்ள குழந்தைக்கும் மகிழ்ச்சி தருகின்றது. அரசரின்
வருகை, இயேசுவின் வருகை, மற்றும் மரியாவின் வருகை என்னும்
மூன்றையும் இணைக்கும் புள்ளி அன்பு.
நம் வருகை அன்பின் வருகையாக மாற நாம் என்ன செய்ய வேண்டும்?
(அ) இயேசுவை இவ்வுலகிற்குக் கொண்டு வருவதன் வழியாக.
முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் அமைதியற்ற நிலையில்
இருக்கின்றனர். அவர்களுடைய அரசரின் வருகை அவர்களுக்கு
அமைதி தருகின்றது. பெத்லகேமிலிருந்து வருகின்ற அரசர்
"அமைதியின் நகரான" எருசலேமுக்கே அமைதியைக் கொணர்கிறார்.
இயேசு தானே மனுவுடல் எடுத்து இவ்வுலகிற்கு வருகின்றார்.
மீட்படைகின்ற மனுக்குலம் அமைதி காண்கின்றது. நற்செய்தி
வாசகத்தில், இயேசுவின் திருமுன்னிலை எலிசபெத்தின்
வயிற்றிலுள்ள குழந்தையை மகிழ்ச்சியால் நிரப்புகிறது.
மனுக்குலத்தின் மீட்பு தொடங்குகின்ற நிகழ்வை மரியா
தனக்குள் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. அதை உடனடியாக
மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கின்றார். ஆக, கடவுள் இந்த
உலகிற்கு வரும் ஒரு பாதையாக நாம் இருக்கும்போது நாம்
அமைதியுடன் இருக்கின்றோம். இந்த மூன்றிலும் கடவுளின்
அன்புச் செயல் மிளிர்கிறது.
(ஆ) மற்றவர்களைத் தேடிச் செல்வது
மரியா தன் உறவினரைத் தேடி நீண்டதொரு பயணம் செய்கின்றார்.
கிறிஸ்து நம்மில் கருவாகத் தொடங்கினால் நாமும்
ஓய்ந்திருக்க முடியாது. நாமும் அடுத்தவர்களுக்குப் பணி
செய்வோம். நம் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறுவோம்.
நம் தேவைகளை மறந்து மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவோம்.
இப்போது தொடங்குகின்ற மரியாவின் பயணம், தொடர்ந்துகொண்டே
இருக்கும்: பெத்லகேமுக்கு, எகிப்துக்கு, மீண்டும்
நாசரேத்துக்கு, எருசலேம் ஆலயத்துக்கு, கானாவூருக்கு,
கல்வாரிக்கு என இனி அவர் பயணம் செய்துகொண்டே இருப்பார்.
எல்லாப் பயணங்களின் முன்னோட்டமே எலிசபெத்தை நோக்கிய பயணம்.
தான் கடவுளின் தாயாக இருந்தாலும் தாழ்ச்சியுடன்
புறப்படுகின்றார் மரியா. தன் அன்பைப் பகிர்ந்துகொள்ளச்
செயல்கிறார் மரியா. மரியாவின் அன்பும் தாழ்ச்சியுமே அவரை
எலிசபெத்தை நோக்கி உந்தித் தள்ளியது என்கிறார் புனித
பிரான்சிஸ் சலேசியார்.மரியா தன் வழியில் வேறு எந்தக் கவனச்
சிதறலும் கொள்ளவில்லை. அவருடைய இலக்குத் தெளிவு நமக்கு
ஆச்சர்யம் தருகின்றது. "எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும்
ஆட்கொள்ளப்பட்டார்" என இங்கே பதிவு செய்கின்றார் லூக்கா.
வானதூதர் கபிரியேல் சொன்ன நொடியில் தூய ஆவியால்
ஆட்கொள்ளப்பட்டார் மரியா. இப்போது ஒரு மெழுகுதிரி இன்னொரு
மெழுகுதிரியைப் பற்ற வைப்பதுபோல, தன்னிடம் உள்ள தூய
ஆவியைத் தன் உறவினருக்குக் கொடுக்கின்றார் மரியா.
(இ) ஆண்டவரில் மகிழ்வது
மரியா-எலிசபெத்து நிகழ்வு முழுவதும் மகிழ்ச்சி
இழையோடுகிறது. இந்த மகிழ்ச்சியின் ஊற்றாக இறைவன்
இருக்கின்றார். "ஆண்டவரின் மகிழ்வே நம் வலிமை" என்கிறார்
நெகேமியா (8:10). மரியாவின் வருகையில் இறைவனின் கரத்தைக்
காணுகின்றார் எலிசபெத்து. அரசரின் வருகையில் ஆண்டவரின்
திருமுன்னிலையைக் காண்கின்றார் மீக்கா.
இறுதியாக, இன்றைய பதிலுரைப் பாடலில் (திபா 80), "நாட்டின்
புதுவாழ்வுக்காக" மன்றாடும் ஆசிரியர், "உமது வலக்கை
நட்டுவைத்த கிளையைக் காத்தருளும்!" என வேண்டுதல் செய்து,
"இனி நாங்கள் உம்மை விட்டு அகலமாட்டோம்" என வாக்குறுதி
தருகிறார். கரங்களைப் பிடித்துக்கொள்ளும் நாம்
மற்றவர்களுக்கு நம் கரங்களை நீட்டினாலும் நாமும் அன்பை
ஏந்திச் செல்பவர்களே!
நற்செய்தி - தூதும், தூதுவர்களும்
இந்த நாள்களில் இணையதளம், சமூக வலைதளம், தொலைக்காட்சி, பண்பலை,
வானொலி, செய்தித்தாள் என எதைத் திறந்தாலும் செய்திகள்
குவிந்து கிடக்கின்றன. இச்செய்திகள் நற்செய்தியா? என்றால்,
பல நேரங்களில் 'இல்லை' என்றே நம் பதில் இருக்கிறது.
மேலும், இச்செய்தியைக் கொண்டு வரும் தூதர்களும் நமக்கு
விருப்பமானவர்களாக இருப்பதில்லை. ஏனெனில், ஒவ்வொரு தூதரும்
தன் செய்திதான் உண்மை எனச் சொல்வதற்கான செய்தி நிறுவனத்தால்
விலைபேசப்படுகிறார். ஆக, நம்மைச் சுற்றி கெட்ட செய்திகளும்,
பொய்களும் அழகாக, பளபளப்பாக வலம் வருகின்றன.
இந்தப் பின்புலத்தில், கிறிஸ்து பிறப்பு நாள் மிக நெருங்கி
வந்துவிட்ட நேரத்தில், 'அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும்
பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்'
(காண். லூக் 2:10) என்று வானதூதர் பெருந்திரள்
காத்திருக்கும் வேளையில், 'நற்செய்தியின் தூது மற்றும்
தூதுவர்கள்' என்ற மையச்சிந்தனையில் இன்றைய இறைவாக்கு
வழிபாட்டைக் கொண்டாடுவோம்.
நற்செய்தியாளர் லூக்காவைப் பொறுத்தவரையில் இயேசுவின் பிறப்புச்
செய்தியே நற்செய்தியாக இருக்கிறது. இந்த நற்செய்தியை அறிவிப்பதற்கு
கடவுள் மிகவும் சாதாரணமான, யாரும் கண்டுகொள்ளாத, தங்களை முதன்மைப்படுத்தாத,
எளிய மக்களைத் தேர்ந்துகொள்கிறார். அவர்களையே நற்செய்தியின்
தூதுவர்களாகவும் மாற்றுகின்றார்.
எப்படி?
இன்றைய முதல் வாசகம் (காண். மீக் 5:2-5) மிகவும் முக்கியமான
மெசியா முன்னறிவிப்புப் பாடத்தைக் கொண்டிருக்கிறது. இறைவாக்கினர்
மீக்கா யூதாவாழ் மக்களுக்கு நற்செய்தியைக் கொண்டுவருகிறார்.
தாவீதின் வழிமரபில் வரும் புதிய அரசரே அந்த மெசியா. மீக்கா
கிமு 8ஆம் நூற்றாண்டில் இறைவாக்குரைத்தவர். இவரின் சொந்த
ஊர் எருசலேமிற்கு அருகில் உள்ள மொரேஷெத் என்ற ஊர். இவர்
நிறைப் பேரின் கண்களில் புகையாய் இருந்தவர். எருசலேமிற்கு
வெளியிலிருந்து வந்ததால் எருசலேமை மையமாகக் கொண்டிருந்த யூதத்
தலைவர்களின் செருப்புகளுக்குள் சிக்கிய சிறுகல்லாய் அவர்களுக்கு
நெருடலாகவே இருந்தார்.
இன்று நாம் வாசிக்கும் முதல் வாசகம், மீக்கா நூலின் 'தலைமைத்துவப்
பிரச்சினை' என்னும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. 'அரசன்
உன்னிடத்தில் இல்லாமல் போனானோ?' (மீக் 4:5) என்ற
கேள்வியோடு தொடங்குகிறார் இறைவாக்கினர். இதன் வரலாற்றுப்
பின்புலம் பாபிலோனிய அடிமைத்தனம் என்று தெரிந்தாலும், இதன்
பின்புலம் அவ்வளவு தெளிவாக இல்லை. ஆனால், ஒன்று மட்டும்
நிச்சயமாக இருந்தது. யூதாவின் ஆட்சியாளர்கள் ஆண்டவராகிய
கடவுளின் உடன்படிக்கையை மறந்து, அவருடைய கட்டளைகளை மீறி,
வேற்று தெய்வங்களை வணங்கினர். இவர்களின் இந்தப் பாவச் செயல்
எல்லா மக்களையும் பாதித்தது. ஆள்பவர்களின் பாவங்களுக்காக
ஆளப்பட்டவர்களும் துன்பப்பட்டார்கள். இந்தப் பின்புலத்தில்
புதிய அரசனின் வருகையை முன்மொழிகிறார் மீக்கா. இந்தப்
புதிய அரசரைப் பற்றிய மிக முக்கியமான விடயம் என்னவென்றால்,
இவர் எருசலேமிலிருந்து வரமாட்டார். மாறாக, எருசலேமிற்கு
வெளியே இருந்து வருவார். எருசலேமிலிருந்து இதுவரை வந்தவர்கள்
எல்லாம் மக்களை அடிமைப்படுத்தவும், தங்களைத் தாங்களே வளர்த்தெடுப்பதிலும்
கவனமாக இருந்தனர். மெசியாவை எருசலேமிற்கு வெளியே பிறக்க
வைப்பதால் மீக்கா மெசியா இறைவாக்கையே தலைகீழாக்குகின்றார்:
'எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள்
மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என்
சார்பாக ஆளப் போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்.'
மேலும், மெசியாவின் முதன்மையான பணியாக மீக்கா முன்வைப்பது:
'அவர் தம் மந்தையை மேய்ப்பார்.' இதுவரை இருந்த எருசலேம்
மைய அரசர்கள் மந்தையை 'மேய்ந்தார்களே' அன்றி, மந்தையை
'மேய்க்கவில்லை.' தொடர்ந்து, மெசியாவின் ஆட்சியின் அடையாளமாக
'அமைதியை' மீக்கா முன்வைக்கின்றார்.
இன்றைய முதல் வாசகத்தை மொத்தமாகப் பார்த்தால், இங்கே
பேசுபொருளாக இருப்பவர்கள் இருவர்: இங்கே பேசுபொருளாக இருப்பவர்கள்
இருவர்: ஒன்று, அரசன், இரண்டு, மக்கள். 'சிறிய இடத்திலிருந்து
பெரிய அரசன் எழுவான்' - 'மக்கள் தங்கள் நாடு திரும்புவார்கள்'
- 'அரசன் தன் மந்தையை ஆயரென மேய்ப்பார்' - 'மக்கள்
பாதுகாப்பாக இருப்பார்கள்' - 'அரசனே அமைதி. ஆக, 'அரசன்-மக்கள்-அரசன்-மக்கள்-அரசன்'
என்று ஸ்பைரல் படிக்கட்டு போல தன் பாடத்தை எழுதியிருக்கிறார்
மீக்கா.
நாம் இன்று வாசிக்கும் இந்த இறைவாக்குப் பகுதியைத்தான்,
ஞானியர் ஏரோதிடம் சென்று, 'யூதரின் அரசராகப் பிறந்திருக்கிறவர்
எங்கே?' (காண். மத் 2:2) என்று கேட்டபோது, மறைநூல் அறிஞர்கள்
ஏரோதிடம் வாசித்துக் காட்டுகின்றனர். ஆக, மீக்கா
சுட்டிக்காட்டும் தூர நாட்டு, ஊழி ஊழிக்கால அரசரை இயேசு
எனக் கண்டுகொண்ட பெருமை மத்தேயு நற்செய்தியாளரையே சாரும்.
ஆக, மீக்கா நற்செய்தியை மெசியாவின் பிறப்பு என்னும் தூதாகக்
கொண்டு வந்து, மெசியாவின் பிறப்பு கொண்டுவரும் தலைகீழ்
மாற்றத்தின் தூதுவராகின்றார். இதுவரை கண்டுகொள்ளப்படாதது
இனி கண்டுகொள்ளப்படும் என்பதும், அனைத்தும் இனி ஆண்டவர் பெயரால்
செயல்படும் என்பதும் மீக்கா தரும் ஆறுதலின் நற்செய்தியாக
இருக்கின்றது.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபி 10:5-10), எபிரேயருக்கு
எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், இயேசுவைத் தனிப்பெரும் தலைமைக்குருவாக
உருவகித்து, அவர் அனைத்துப் பலிகளையும் விட சிறப்பான பலியைச்
செலுத்தினார் என்று மொழியும் பகுதியில், 'இயேசு மனித உடல்
ஏற்ற நிகழ்வை' இங்கே பதிவு செய்கின்றார். இயேசுவின் மனுவுடல்
ஏற்றல் இங்கே நற்செய்தியாக அறிவிக்கப்படுகிறது. 'உமது
திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகின்றேன்' என்பது மட்டுமே இயேசுவின்
அடிநாதமாக இருக்கின்றது. இதுவே இயேசுவை நற்செய்தியாக
மாற்றுகிறது. நற்செய்தியின் தூதுவராக வந்த அவர் இறைத்திருவுளத்திற்குப்
பணிந்திருப்பதையே மீட்பின் கருவியாக மாற்றினார்.
பலிகள் மற்றும் எரிபலிகள் பற்றிய புரிதல் முதல் ஏற்பாட்டில்
'அடையாளம்' என்று தொடங்கி, 'அபத்தம்' என்று கடந்து போவதாக
இருக்கிறது. அதாவது, லேவியர் நூல் மற்றும் இணைச்சட்ட
நூலில் சொல்லப்படும் பலிகள் மற்றும் அதற்கான முறைமைகள், இறைவாக்கினர்களின்
காலத்திற்கு வரும்போது தலைகீழாக மாறுகிறது. சீனாய் மலையில்
'பலிகள்' பற்றி விளக்கம் தரும் இறைவன், பிற்காலத்தில் 'உங்கள்
பலிகளா நான் விரும்புபவை?' என்று சாடுகின்றார். பலிகளைப்
பற்றிக்கொண்ட மக்கள் இறைவனையும், அயலாரையும் கண்டுகொள்ளாததே
இந்த இறையியல் மாற்றத்திற்கான அடிப்படைக் காரணம். இத்திருமடல்
எழுதப்பட்ட காலத்தில் எருசலேம் ஆலயம் அழிக்கப்பட்டிருக்கலாம்.
இருந்தாலும், பலி செலுத்துதல் மக்கள் மனதில் நீங்கா இடம்
பெற்றிருந்தது. இயேசுவின் உடல் ஏற்றலின் சிறப்பு என்னவென்றால்,
அவரின் இந்த ஏற்பு மானிடரின் அனைத்து தரகுகள் மற்றும் பிரதிநிதிகளை
அழிக்கின்றது.
ஆக, ஒரு பக்கம் இயேசுவின் மனுவுரு ஏற்றலை எபிரேயருக்கு எழுதப்பட்ட
திருமடலின் ஆசிரியர் நற்செய்தியாக அறிவித்தாலும், இன்னொரு
பக்கம் இயேசுவே நற்செய்தியாக, இறைத்திருவுளம் நிறைவேற்றுவதையே
நற்செய்தியின் தூதுரையாக, தூதுரைக்கின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 1:39-45) மரியா எலிசபெத்தைச்
சந்தித்த நிகழ்வைப் பதிவுசெய்கிறது. இவ்விரண்டு தாய்மார்களும்
ஒருவர் மற்றவருக்கான நற்செய்தியின் தூதுவர்களாக மாறுகின்றனர்.
இந்த நிகழ்வு நடைபெறும் இடம் மலைநாட்டில் இருக்கும் ஒரு
வீடு. பங்கேற்போர் இரண்டு பெண்களும், அவர்களின் வயிற்றில்
இருக்கும் இரண்டு குழந்தைகளும். ஓடி வந்த பெண்ணின் வயது
14லிருந்து 18க்குள் இருக்கும். தங்கியிருந்த பெண்ணின் வயது
60க்கு மேல் இருக்கும். ஒரு சிக்ஸ்டீனும், ஒரு
சிக்ஸ்டியும் சந்திக்கும் நிகழ்வு என்றும் சொல்லலாம். ஒருவர்
மட்டுமே பேசுகின்றார். மற்றவர் அப்படியே மலைபோல மௌனம்
காக்கிறார். எலிசபெத்தை அதிக வால்யூமில் வைத்து, மரியாவை
ம்யூட் ஆக்கிவிட்டார் நற்செய்தியாளர்.
கபிரியேல் தூதர் மங்கள வார்த்தை சொல்லி முடித்து
மறைந்தவுடன், வீட்டைப் பூட்டியும், பூட்டாமலும் விட்டு,
தன் உறவினர் எலிசபெத்தை தேடி ஓடுகிறார் மரியா. வானதூதர்
சொன்ன 'எலிசபெத்து' அறிகுறி சரியா என்று பார்க்க ஓடினாரா?
அல்லது தான் பெற்ற மகிழ்வை தன் உறவினரோடு பகிர்ந்து கொள்ள
ஓடினாரா? அல்லது கருத்தாங்கியிருக்கும் அந்த
முதிர்கன்னிக்கு கைத்தாங்கலாக இருக்க ஓடினாரா? 'எழுந்தாள்.
ஓடினாள். நுழைந்தாள். கட்டிப்பிடித்தாள்' - என இரண்டு
வசனங்களுக்குள் மரியாளின் நீண்ட பயணத்தை அடக்கி விடுகிறார்
லூக்கா. ஒருவர் தன் கையால் அடுத்தவரின் முழங்கையைப்
பிடிப்பதுதான் இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும்
வாழ்த்துமுறை. மரியாள் என்ன வாழ்த்தினார் என்று
குறிப்பிடப்படவில்லை. மரியாவின் பேச்சும் பதிவு
செய்யப்படவில்லை. வானதூதரின் நிகழ்வில் வாய்விட்டு பேசிய
மரியா எலிசபெத்தோடு ஒரு வார்த்தைகூட பேசவில்லை. ஆனால் பின்
நீண்ட பாடல் ஒன்று பாடுகின்றார். நம் வீட்டிற்குள் நம்
நண்பர் வந்தால் அவருடைய பெயர் அல்லது அவரின் அன்புப்
பெயரைச் சொல்லிக் கொண்டு ஓடுவோம். ஆனால், வானதூதரும்
முதலில் மரியாளின் பெயரைச் சொல்லவில்லை. எலிசபெத்தும்
சொல்லவில்லை. வானதூதர், 'அருள்மிகப்பெற்றவரே' என்கிறார்.
எலிசபெத்து, 'பெண்களுக்குள் புகழப்பெற்றவர்' என்கிறார்.
இந்த இரண்டுமே காரணப்பெயர்கள்தாம்.
'குழந்தை துள்ளியது'. விவிலிய ஆசிரியர் கதைகளைப் பதிவு
செய்யும்போது தனக்கு எல்லாம் தெரிந்ததுபோல எழுதுவர்.
அதற்கு ஒரு உதாரணம்தான் இது. லூக்கா மருத்துவராக
இருந்ததால், கர்ப்பம் தரித்த பெண்களில் நிகழும் உடல்
மாற்றங்கள் அவருக்குத் தெரியும். ஆக, இயல்பாக
நடந்திருக்கும் ஒன்றை தானே வயிற்றுக்குள் சென்று
பார்த்ததுபோல இங்கே பதிவு செய்கின்றார். முதலில் லூக்கா
இதைச் சொல்ல, பின் எலிசபெத்தும் தன் வயிற்றில் குழந்தை
துள்ளியதாகக் குறிப்பிடுகின்றார். 'என் ஆண்டவரின் தாய்' -
மரியாளின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை பற்றி இப்போது
எலிசபெத்துக்கு தெரிவதுபோல எழுதுகிறார் லூக்கா.
மரியாளுக்கு வழங்கப்படும் பெயர்களில் எனக்கு மிக அதிகமாக
பிடித்த பெயர் இதுதான். இந்த தலைப்பில் ஆண்டவருக்கும்
தனக்குமான நெருக்கமான உறவை மிக அதிகமாக பதிவு செய்கின்றார்
எலிசபெத்து. முதலில் 'ஆசி பெற்றவர்' என அழைத்தவர், இப்போது
'பேறுபெற்றவர்' என அழைக்கின்றார். இங்கே மரியாவின்
நம்பிக்கைக்கு மணிமகுடம் சூட்டுகின்றார் எலிசபெத்து.
மரியாள் எலிசபெத்தை சந்திக்காமல் இருந்திருந்தால் என்ன
நடந்திருக்கும்? வாசகருக்கு வானதூதரின் வாக்கு பொய்யோ என்ற
சந்தேகம் வந்திருக்கும். முதலில் சக்கரியா பற்றி பதிவு
செய்யும் லூக்கா, தொடர்ந்து மரியா, பின் எலிசபெத்து என
ஒவ்வொரு கட்டமாக காட்சிகளை நகர்த்துகின்றார். மேலும்,
மரியாவை மூன்று மாதங்கள் எலிசபெத்தின் வீட்டில் தங்கச்
செய்கின்றார். ஏற்கனவே இப்போது ஆறு மாதம். இன்னும் மூன்று
மாதங்கள். ஆக, மரியாள் வீட்டை விட்டு நீங்கும்போது,
எலிசபெத்துக்கு பேறுகாலம் வரும். மூன்று மாதங்கள்
உடனிருந்த மரியாள் பேறுகாலத்திலும் உடனிருந்திருக்கலாமே?
எதற்காக மரியாவை வெளியேற்றுகிறார் லூக்கா? மரியா அங்கே
இருந்தால், திருமுழுக்கு யோவானின் பிறப்பும், அதன்
முக்கியத்துவமும் தெரியாமல் போய்விடும். பிறந்திருக்கும்
யோவான் மெசியாவா, அல்லது கருவிலிருக்கும் இயேசு மெசியாவா
என்ற குழப்பம் வரும். அந்தக் குழப்பத்தை மிக
இன்டலிஜென்ட்டாகத் தவிர்க்கின்றார் லூக்கா. மரியாளும்,
எலிசபெத்தும் ஒருவருக்கொருவர் சாட்சிகளாக இருக்கின்றனர்.
ஆக, மரியாளும் எலிசபெத்தும் ஒருவரை ஒருவர் சந்திக்கும்,
ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பகிரும், ஒருவரேடு ஒருவர்
மகிழ்வைப் பகிரும் நற்செய்தியின் தூதுவர்களாக
மாறுகின்றனர்.
இவ்வாறாக, முதல் வாசகத்தில் நற்செய்தி என்பது மெசியாவின்
எளிய பின்புலத்தின் வருகையையும், அவர் தரும் அமைதியையும்,
இரண்டாம் வாசகத்தில் நற்செய்தி என்பது இறைத்திருவுளம்
நிறைவேற்ற இயேசு மனுவுடல் ஏற்றதையும் அல்லது மனுவுடல்
ஏற்றலே அவரின் இறைத்திருவுளம் நிறைவேற்றுதலாக
இருந்ததையும், மூன்றாம் வாசகத்தில் நற்செய்தி என்பது
கருவில் இருக்கும் ஒரு குழந்தை இறைப் பிரசன்னத்தை உணர்ந்து
துள்ளிக் குதிக்க, அந்தத் துள்ளலில் துள்ளிய இரண்டு
பெண்மணிகளின் மகிழ்வில் இருந்ததையும் பார்க்கிறோம்.
இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கும் சவால் என்ன?
'கெட்ட செய்திகள் நல்ல செய்திகளைவிட மிக வேகமாகப் பயணம்
செய்கின்றன' என்று சொல்லப்படுவது உண்டு. இன்றைய உலகின்
நல்லவை மற்றும் நல்லவர்களை அனைத்தையும் மறைப்பது போல இன்று
கெட்டவை மற்றும் கெட்டவர்கள் பற்றிய செய்திகளே அதிகம்
பேசப்படுகின்றன. 'எவ்வளவு எடுத்தாலும் போதாது' என்று ஊழல்
செய்து, தன்னலம், அநீதி, கண்டுகொள்ளாத்தன்மை
மேலோங்கியிருக்கும் அரசுகள் மற்றும் ஆட்சியாளர்கள் பற்றிய
செய்திகள் நமக்கு கோபத்தை உருவாக்கினாலும், அந்தக் கோபம்
நம் கையறுநிலையில் அடங்கிவிடுகிறது. இயற்கைச் சீற்றம்,
பேரழிவு போன்ற செய்திகள் நம் கடவுள் நம்பிக்கையைக்
குலைக்கின்றன. மனிதர்களால் மனிதர்களுக்கு எதிராகத்
தொடுக்கப்படும் வன்முறை, கொலை, கொள்ளை பற்றிய செய்திகள்
நம்மில் பயத்தை உண்டாக்குகின்றன. நம் மொபைல் இன்பாக்ஸ்
எழுப்பும் 'டிங்' சப்தம், இமெயில் எழுப்பும் சப்தம் என
நிறைய சப்தங்கள் நமக்கு நெருக்கமானவர்களிடமிருந்து வரும்
செய்திகளை நமக்கு அறிவிக்கின்றன.
இவை எல்லாம் செய்திகளா? கெட்ட செய்திகளா? நற்செய்திகளா?
இவ்வளவு கெட்ட செய்திகளுக்கு நடுவில் நற்செய்தி சாத்தியமா?
- என்றால், சாத்தியமே. எப்படி?
இதற்கான விடை இன்றைய பதிலுரைப் பாடலில் (திபா 80)
இருக்கின்றது. 'நாட்டின் புதுவாழ்வுக்காக' மன்றாடும்
ஆசிரியர், 'உமது வலக்கை நட்டுவைத்த கிளையைக் காத்தருளும்!'
என வேண்டுதல் செய்து, 'இனி நாங்கள் உம்மை விட்டு
அகலமாட்டோம்' என வாக்குறுதி தருகிறார். இறைவனின் அருள்கரம்
செயலாற்றும் அனைத்தும் நற்செய்தியே. அவரின் அருள்கரத்தால்
தொடப்பட்டவர்கள் அனைவருமே நற்செய்தியின் தூதுவர்களே.
'நற்செய்தி என்பது திறக்கப்பட்ட வாசனைத் திரவியம் போன்றது.
அதை அதிமாக நாம் பகிரப் பகிர அது நம் கைகளுக்கும் நறுமணம்
தரும்' என்பது ஆப்பிரிக்கப் பழமொழி. தான் பெற்ற இறைவாக்கை
மெசியா பற்றிய நற்செய்தியாக பகர்கிறார் மீக்கா. தன் உடலையே
நற்செய்தியாக இறைத்திருவுளத்திற்கு கையளிக்கிறார் இயேசு.
தன் மகிழ்வைப் பகிர தன் உறவினர் இல்லம் நோக்கி ஓடுகிறார்
மரியா. அவரைக் கட்டியணைத்து வாழ்த்துகிறார் எலிசபெத்து.
அவரின் வயிற்றிலிருந்த குட்டிக் குழந்தை அக்களிக்கிறது.
இவை அனைத்திலும் இறைவனின் கரம் இருந்தது. அவரின்
கரத்திலிருந்து வரும் நறுமணத் தைலம் நம் கைகளையும், நாம்
தொடும் கைகளையும் மணக்கச் செய்கிறது.
நிகழ்வு
"நாடுகளுக்கிடையே அமைதி ஏற்பட வேண்டும்" என்பதற்காக ஓராண்டு,
ஈராண்டு ஆண்டுகள் அல்ல, முப்பது ஆண்டுகள் நடைபயணம்
மேற்கொண்ட ஒருவரை உங்களுக்குத் தெரியுமா? சொல்கிறேன்
கேளுங்கள்.
அமெரிக்காவில் உள்ளா கலிபோனியா மாகாணத்தைச் சார்ந்தவர்
மில்ட்ரெட் லிசெட் நார்மன் (Mildred Lisette Norman) என்ற
பெண்மணி. இவர் உலக நாடுகள் அமைதி இல்லாமல் இருப்பதை அறிந்தார்.
குறிப்பாக, இவர் அமெரிக்கா, கொரியாவின்மீதும் வியட்நாம்மீதும்
போர்தொடுத்து, அமைதிக்குப் ஊறுவிளைவிப்பதை அறிந்தார். ஆகவே,
இவர், நாடுகள்மீது போர்தொடுத்து அமைதிக்கு ஊருவிளைத்துக்கொண்டிருக்கும்
அமெரிக்கா அமைதி வழிக்குத் திரும்ப வேண்டும் என்றும், பிற
நாடுகளும் அமைதி வழிக்குத் திரும்ப வேண்டும் என்றும் நடைபயணத்தை
மேற்கொண்டார்.
1953, ஜனவரி 1 அன்று கலிபோனியாவில் உள்ள பசதெனா (Pasadena)
என்ற இடத்திலிருந்து தன்னுடைய நடைபயணத்தைத் தொடங்கிய இவர்,
நாற்பதாயிம் கிலோமீட்டர் தூரம் நடந்தார். இடை இடையே இவர்
கோயில்கள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் அமைதியை வலியுறுத்தி
உரை நிகழ்த்தினார். வானொலி, தொலைகாட்சியிலும்கூட இவர் அமைதியை
வலியுறுத்தி உரை நிகழ்த்தினார். தனக்குக் கிடைத்த உணவினை
உண்டு, கிடைத்த இடத்தில் தங்கி, வழியெங்கும் அமைதியை வலியுறுத்திச்
சென்ற இவர் உலக நாடுகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். இதனால்
இவர், "அமைதியின் திருப்பயணி" என அழைக்கப்பாடலானார்.
ஆம், உலக நாடுகள் அமைதி வழிக்குத் திரும்பவேண்டும் என்பதற்காக
முப்பது ஆண்டுகள், அமைதியை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்ட
மில்ட்ரெட் லிசெட் நார்மன் இந்த உலகிற்கு அமைதி எவ்வளவு
தேவையாக இருக்கின்றது என்பதைத் அருமையாக உணர்த்துகின்றார்.
திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட
இறைவார்த்தை, மெசியாவாம் இயேசு நமக்கு அமைதி அருள்வார் என்ற
செய்தியைத் தருகின்றத
இறைவாக்கினர் மீக்கா அறிவித்த நம்பிக்கைச் செய்தி:
இறைவாக்கினர் மீக்கா (கி.மு. 740-670) கி.மு எட்டாம்
நூற்றாண்டில் தென்னாடான யூதாவில் பிறந்தவர். இறைவாக்கினர்கள்
எசாயா, ஆமோஸ், ஓசேயா ஆகியோரின் சமகாலத்தில் வாழ்ந்தவரான
இவர், வடநாட்டைப் போலவே தென்னாட்டிலும் பணக்காரர்கள் ஏழைகளை
ஒடுக்கியும், நலிந்தவர்களை வஞ்சித்தும் வாழந்ததால், அவர்களுக்கு
எதிரான கடவுளின் தண்டனைத் தீர்ப்பினை முன்னறிவித்தார். கூடவே
அவர்களுக்கு மீட்புச் செய்தியை அல்லது நம்பிக்கைச்
செய்தியையும் இவர் முன்னறிவிக்கின்றார்.
மீக்கா முன்னறிவித்தது போன்று, உண்மைக் கடவுளை மறந்து
வேற்று தெய்வங்களை வழிபட்டும், ஏழைகளை வஞ்சித்தும் வாழ்ந்த
யூத நாட்டினர்மீது தண்டனைத் தீர்ப்பு வந்தது. அது
பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் வழியாக வந்தது. அதேநேரத்தில்
எல்லாம் முடிந்துபோய்விட்டது என்றிருந்த யூதா நாட்டினருக்கு,
"பெத்லகேமே! இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகிறவர் உன்னிடமிருந்தே
தோன்றுவார்; அவர் தம் மந்தையை மேய்ப்பார்; அவர்களும் அச்சமின்றி
வாழ்வார்கள்; அவரே அமைதியை அருள்வார்" என்ற நம்பிக்கைச்
செய்தியும் வந்தது.
ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதியை அருள்வார் எனில், இனிமேல்
அவர்களுடைய வாழ்வில் துன்பமே இருக்காது என்று அர்த்தமில்லை;
மாறாக, ஆண்டவர் அவர்களோடு எப்போதும் இருப்பார் என்ற நம்பிக்கையே,
ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதியை அருள்வார் என்பதன் அர்த்தமாகும்.
இத்தகைய அமைதியை ஆண்டவர் தம் மக்களுக்கு எத்தகைய வகையில்
அருளினார் என்று தொடர்ந்து நாம் சிந்திப்போம்.
அமைதி ஏற்பட தன்னையே தன்னையே தந்த இயேசு
ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதியை அருள்வார் என்று இறைவாக்கினர்
மீக்கா முன்னறிவித்த வார்த்தைகள் இயேசுவில் நிறைவேறின; ஆனால்,
யூதர்கள் எதிர்பார்த்தது போன்று, ஆண்டவர் இயேசு அமைதியை அருளவில்லை.
யூதர்கள் எதிர்பார்த்தது, மெசியா தம் அதிகாரத்தினால் அமைதியை
நிலைநாட்டுவார் என்பது. உண்மையில் நடந்ததோ, இயேசு அன்பினால்
அமைதியை நிலைநாட்டியது. அதிகாரத்தால் நிலைநாட்டப்படும் அமைதி
நீண்ட நாள்கள் நீடித்து இருப்பதில்லை; அன்பினால் நிலைநாட்டப்படும்
அமைதியே நீடித்து இருக்கும். அதனாலேயே இயேசு, "நான் உங்களுக்குத்
தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல" (யோவா 14:27)
என்கிறார். மேலும், இவ்வாறு சொன்ன இயேசு, யூதர்கள், பிற
இனத்தார் என்ற இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை
என்னும் சுவரை, தம் உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து,
அவர்களை ஒன்றுபடுத்தினார் (எபே 2: 14).
இயேசு இரு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்ற சுவரைத்
தகர்த்தெறிந்தார் எனில், அது அவருடைய உடலில் ஏற்ற துன்பத்தின்
வழியாகவே சாத்தியப்பட்டது. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து
எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், "உமது திருவுளத்தை
நிறைவேற்ற இதோ வருகின்றேன்" என்று சொல்லி, இயேசு தம் உடலையே
பலியாக செலுத்தியது குறித்து வாசிக்கின்றோம். இயேசு, தந்தையின்
திருவுளமான அமைதியை அருள்வதற்கு வந்தார் எனில், அவர் தம்
உடலையே பலியாகச் செலுத்தி அமைதியை அருளினார். இதுதான் இந்த
உலகம் அருளும் அமைதிக்கும், இயேசு அருளும் அமைதிக்கும் உள்ள
வித்தியாசமாகும். இயேசு தம்மையே பலியாகச் செலுத்தி இவ்வுலகிற்கு
அமைதியை அருளினார் எனில், அவர் வழியில் நடக்கும் ஒவ்வொருவரும்
தம்மையே கையளித்து, இவ்வுலகில் அமைதியை நிலைநாட்ட முன்வரவேண்டும்.
அமைதியின் தூதுவரான மரியா:
பன்னிருவரைப் பணித்தளங்களுக்கு அனுப்புகிறபோது இயேசு அவர்களிடம்,
".....வீட்டுக்குள் செல்லும்பொழுது வீட்டாருக்கு
வாழ்த்துக் கூறுங்கள்" (மத் 10:12) என்பார். திருத்தந்தை
பிரான்சிஸ் சொல்வதுபோல், "இயேசுவைப் பின்தொடர்வதில் நம் அனைவருக்கும்
முன்னோடியாக இருப்பவர் மரியா". அந்த வகையில், மரியா, தன்
முதிர்ந்த வயதில் கருவுற்றிருந்த எலிசபெத்தின்
வீட்டிற்குச் சென்று, அவரை வாழ்த்துகின்றார். மரியாவின்
வாழ்த்தில் அமைதி உட்பட எல்லா ஆசிகளும் நிறைந்திருந்தன.
அதனாலேயே எலிசபெத்தின் வயற்றில் இருந்த குழந்தை மகிழ்ச்சியால்
துள்ளுகின்றது. இதன்மூலம் மரியா இயேசுவின் உண்மையான சீடராக,
அமைதியின் தூதுவராகச் செயல்பட்டார் என்று சொல்ல வேண்டும்.
ஆம், இயேசு தன் உடலில் ஏற்ற துன்பங்களின் வழியாக இவ்வுலகிற்கு
அமைதியை அருளினார், அவருடைய சீடர்களாகிய நாம் ஒவ்வொருவரும்
மரியாவைப் போன்று மக்களுக்கு அமைதியை வழங்கவேண்டும். ஏனெனில்,
இவ்வுலகிற்கு வேறு எப்போதும் இல்லாத அளவிற்கு அமைதி தேவைப்படுகின்றது.
எனவே, நாம் கடவுள் அருளிய அமைதியை, மரியாவைப் போன்று மற்றவர்களுக்கு
வழங்கி, இந்த வையகம் அமைதியில் திளைத்திடச் செய்வோம்.
சிந்தனை
"உண்மையின்றி உண்மையான அமைதி கிடையாது" என்பார் திருத்தந்தை
பிரான்சிஸ். எனவே, நாம் உண்மையாம் இயேசுவின் வழியில் நடந்து,
இவ்வுலகில் உண்மையான அமைதியை நிலைநாட்டி, இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
மறையுரைச் சிந்தனை: அருள்பணி
மரிய அந்தோணி பாளையங்கோட்டை
இரண்டு உள்ளங்களின் மகிழ்வு
நான்கு கண்களின் சந்திப்பு.
ஒரு முறை காட்டில் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் இடையே
சண்டை வந்தது. இந்தச் சண்டையில் ஒரு வெளவால் மட்டும் ஒதுங்கிக்
கொண்டது. சண்டையில் விலங்குகள் வெற்றி பெற்றன. உடனே வெளவால்
விலங்குகளிடம் சென்று நானும் ஒரு விலங்குதான் என்று சொல்லி
விலங்குகள் கொடுத்த விருந்தில் கலந்துகொண்டது. சில மாதங்களுக்குப்
பிறகு மீண்டும் சண்டை வந்தது. வெளவால் ஒதுங்கியே வேடிக்கை
பார்த்தது. இந்த முறை பறவைகள் வெற்றி பெற்றன. வெளவால் பறவைகளிடம்
சென்று நானும் பறவை இனம்தான் என்று தனது சிறகுகளை
விரித்துக் காட்டியது. சில மாதங்களுக்குப் பிறகு பறவைகளும்,
விலங்குகளும் சமரசம் செய்துகொண்டன. நம்மால் இந்தக் காடு சேதமடைகிறது.
இது அமைதியான இடம், பல முனிவர்கள் இங்கு வந்து தியானம்
செய்கிறார்கள். நம்மால் பிறருக்குத் துன்பம் வரக்கூடாது என்று
கூறி சமரசம் செய்துகொண்டன. ஆனால், எந்தப் பக்கமும் சேராத
வௌவாலை எக்காரணத்தைக் கொண்டும் நம்மோடு சேர்த்துக் கொள்ளக்கூடாது
என்று தீர்மானித்தன. அதனால்தான், வெளவால் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும்
அஞ்சி இரவில் பறக்கின்றன என்று ஈசாப் கதை கூறுகிறது.
நாம் வாழும் சமுதாயத்தில் சந்தர்ப்பவாத வெளவால்களைப்
பார்க்கிறோம். தேவைக்கு மட்டும் மற்றவர்களைப் பயன்படுத்திக்
கொண்டு பிளாஸ்டிக் புன்னகையை உதடுகளில் உதித்துக் கொண்டு
வாழும் போலி உறவுகளைப் பார்க்கிறோம். இன்றைய நற்செய்தியில்
மரியா, எலிசபெத் சந்திப்பின் உறவில், எலிசபெத் மட்டுமல்ல,
அவளது வயிற்றில் இருந்த குழந்தையும் மகிழ்வால் துள்ளியது.
மீட்பரின் பிறப்பைப் பற்றிய மங்களச் செய்தியைப் பெற்றுக்
கொண்ட மரியா மகிழ்வதையும், மீட்பரின் வருகையைப் பற்றி அறிய
வந்த எலிசபெத் மகிழ்ச்சி அடைந்ததையும், மெசியாவின் பிரசன்னத்தை
உணர்ந்து, தாயின் உதரத்தில் கருவாகி இருந்த குழந்தை அக்களிப்பால்
துள்ளியதையும், இன்றைய நற்செய்தியில் சிந்திக்கிறோம். ஈரமான
இதயங்கள் துன்பங்களையும் துயரங்களையும் பார்ப்பதில்லை !
இதயங்களின் உறவுகளையே பார்க்கிறது (லூக். 1:39 - 41). எலிசபெத்துக்கு
உதவி தேவைப்படுகிறது என்று அறிந்தவுடன் தனது துன்பத்தைப்
பார்க்காமல் உதவிட ஓடியவள் தான், இந்த மரியா. ஒரு ஆண் ஒரு
பெண்ணை புரிந்து கொள்வதைவிட ஒரு பெண் தான் அடுத்த பெண்ணை
நன்கு புரிந்துகொள்ள முடியும் என்பார்கள். இது மரியா எலிசபெத்
சந்திப்பில் உண்மையாகிறது எனலாம்.
மரியா, எலிசபெத் என்ற இரண்டு உள்ளங்களின் மகிழ்வு நான்கு
கண்களின் சந்திப்பு. இது இனிய உறவின் இதய சந்திப்பாக அமைந்தது.
இறைமகன் இயேசுவும் இவ்வுலகத்தின் மீட்புக்காக மனிதனாகப் பிறந்தார்.
உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகிறேன் என்று தன்னையே
பலியாக ஒப்புக்கொடுத்தார். இயேசுவின் வரவால் உலகம் மகிழ்ந்தது
(எபி 10:7).
இறைச் சாயலை இழந்து போன மனித குலம், இயேசு மனித உரு எடுத்ததன்
வழியாக, மனிதன் மீண்டும் இறைச்சாயலைப் பெற்று உயர்வடையச்
செய்கிறது. கடவுளிடமிருந்து துண்டிக்கப்பட்ட உறவு சரி செய்யப்பட்டு
கடவுளின் பிள்ளைகள் என்ற உயர் நிலையை இயேசுவின் மனிதப் பிறப்பால்
மீண்டும் பெற்றுக்கொள்கிறோம். இயேசுவின் பிறப்பாலும், சந்திப்பாலும்,
சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட பாமர மக்கள், ஏழைகள்,
நோயாளிகள், விபசாரிகள், இடையர்கள் போன்றோர் அனைவரும் இறையாட்சியின்
முதல் குடிமக்கள் என்ற உரிமையைப் பெறுவதும், உயர்வடைவதும்
இயேசுவின் பிறப்பாலே தான்.
மரியா, எலிசபெத் சந்திப்பு மகிழ்வைத் தந்தது. குழந்தை அக்களிப்பால்
துள்ளியது (லூக். 1:41). இன்றைய சூழலில் மகிழ்ச்சி என்பது
உதட்டில் பூசப்படும் சாயங்கள் மட்டுமே என்பதை நாம்
பார்க்கிறோம். நாமும் செயல்படுகிறோம் என்பது உண்மை ! நமது
மகிழ்ச்சி, உணவால், உடையால், பணத்தால், பதவியால் வருகின்ற
மேலோட்டமான மகிழ்ச்சியா? அல்லது மற்றவர்களின் உணர்வுகளையும்,
உறவுகளையும் புரிந்து கொள்ளும் நிறைவான மகிழ்ச்சியா...? மரியா,
எலிசபெத் இவர்களின் மகிழ்ச்சியைப் போல் அமைந்தால் அங்கே பகைமை,
பகட்டு இருக்காது. உறவின் அடிப்படையில், மகிழ்வின் அடிப்படையில்
துள்ளாத மனமும் துள்ளுவதாக அமையும்.
சுய ஆய்வு
மரியாவின் சந்திப்பால் எலிசபெத்தும் வயிற்றிலிருந்த குழந்தையும்
மகிழ்ச்சியால் துள்ளியது. இயேசுவை சந்தித்த நோயாளிகள், ஏழைகள்,
பாவிகள், கைவிடப்பட்டோர் மகிழ்வைக் கண்டனர்.
இன்று நம்மைச் சந்திக்கும் மனிதர்களுக்கு இதமான ... இனிமையான
வார்த்தைகளால் உறவின் மகிழ்வைத் தருகிறோமா...?
சில சந்திப்புகள் சங்கடத்தை உருவாக்குகிறது!
சில சந்திப்புகள் சந்தேகத்தை உருவாக்குகிறது!
சில சந்திப்புகள் சமாதானத்தை உருவாக்குகிறது! உங்கள் சந்திப்பு...
?
எதையும் எதிர்பாராமல் அன்னை மரியாவைப் போன்று பிறரை அன்பு
செய்பவர்கள் (நற்செய்தி) வாழ்வார்கள். எதையாவது எதிர்பார்த்து
பிறரை அன்பு செய்பவர்கள் வீழ்வார்கள்.
இந்த உண்மையை எடுத்துச் சொல்ல இதோ ஒரு கதை :
ஒரு காட்டுக்குள்ளே துறவி ஒருவர்! அவருக்கு வயிற்றுப்பசி!
காட்டைவிட்டு நாட்டுக்குள் வந்து ஒரு பெரிய பணக்காரர்
வீட்டுக் கதவைத் தட்டினார்! அவர் கதவைத் தட்டிய நேரத்தில்
அந்த வீட்டிலிருந்தவர்கள் ஏதோ ஒரு டி.வி. சீரியலைச் இரசித்துப்
பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
பணக்காரர் வீட்டைவிட்டு வெளியே வந்து, இப்போது உமக்கு உணவு
கொடுக்க நேரமில்லை, பிறகு வாரும் என்று கூறிவிட்டார். சரி
பரவாயில்லை என்று சொல்லிவிட்டு துறவி, அந்தப் பணக்காரர்
வாழ்ந்த வீட்டுக்கு எதிரேயிருந்த ஒரு குடிசையின் கதவைத் தட்டினார்.
வயிற்றுப் பசி என்றார் அந்தத் துறவி. உடனே அந்த
வீட்டிலிருந்த ஏழை அவரை அழைத்து அமரவைத்து, அவர்
வீட்டிலிருந்த உணவைப் பரிமாறினார். துறவிக்கு மிக்க மகிழ்ச்சி!
என் வயிறு நிறைந்துவிட்டது! உனது வாழ்வு நிறைய நான் ஏதாவது
கொடுக்க விரும்புகின்றேன். நீ மூன்று வரங்களைக் கேள், நான்
தருகின்றேன் என்றார். அந்த ஏழை மனிதரோ, ஐயா! நான் எதையும்
எதிர்பார்த்து யாருக்கும் உதவி செய்வதில்லை! இல்லாதவர்களோடு
பகிர்ந்துகொள்வது என் கடமை என நினைத்து நான் வாழ்ந்து
கொண்டிருக்கின்றேன். நான் மகிழ்ச்சியாகத்தான்
வாழ்ந்துகொண்டிருக்கின்றேன். எனக்கு எந்த வரமும் வேண்டாம்
எனச் சொல்லிவிட்டார். ஆனால் துறவியோ, சரி பரவாயில்லை, உனக்கு
ஆசியளித்துவிட்டுச் செல்கின்றேன் எனக்கூறி கையை உயர்த்தினார்.
அவர் கையை உயர்த்திய உடனே அந்தக் குடிசை கோபுரமாக மாறியது.
பெரிய மாளிகையாகிவிட்டது. துறவி காடு திரும்பினார்.
குடிசைக்கு எதிராக இருந்த பணக்காரனுக்கு, ஐயோ ஏமாந்து
போய்விட்டோமே என்ற ஏக்கம்!
காரை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் சென்றான். துறவியின்
காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். பிறகு துறவியைப்
பார்த்து, ஒரு வேண்டுகோள் என்றான். துறவி, என்ன? என்றார்.
அதற்கு அந்தப்பணக்காரன், எதிர்வீட்டு ஏழைக்கு நீங்கள்
மூன்று வரங்கள் தருவதாகச் சொன்னீர்களாம். அவர் வேண்டாம் என்று
சொல்லிவிட்டாராம் என்றான். ஆம். அதற்கு என்ன? என்றார் அந்தத்
துறவி.
அதற்கு அந்தப் பணக்காரன் தயங்கியபடியே, அந்த மூன்று வரங்களையும்
எனக்குக் கொடுத்தால் நல்லாயிருக்கும் என்றான்.
துறவி, சரி உனக்கு அந்த மூன்று வரங்களையும் நான் தருகின்றேன்!
நீ சற்று கவனமாக இருக்க வேண்டும்! நீ என்ன நினைக்கின்றாயோ
அது அப்படியே நடக்கும்! மூன்று முறை நினைக்கலாம்! கவனமாக
இரு என்றார்.
சரி எனச் சொல்லிவிட்டு பணக்காரன் காரில் ஏறி அமர்ந்தான்.
காட்டுப்பாதை! முதல் நாள் பெய்த மழையால் சாலையில் நல்ல
சேறு. சேற்றிலே கார் அகப்பட்டுக்கொண்டது.
பணக்காரனுக்கு கோபம் வந்துவிட்டது. காரைப் பார்த்து, இதெல்லாம்
ஒரு காரு! இது இருந்தாலும் ஒன்றுதான் எரிந்தாலும் ஒன்றுதான்
என்றான் - கார் எரிஞ்சி போச்சு!
முதல் வரம் போச்சு!
நல்ல வெயில். வியர்த்துக்கொட்டியது! கோபத்தோடு
வீட்டுக்குள்ளே நுழைந்தான்! அவன் மனைவி நாற்காலியில் உட்கார்ந்து
ஏஸி ரூம்ல டி.வி. பார்த்துக்கொண்டிருந்தாள்! பணக்காரன் அவளைப்
பார்த்து, உனக்கு கணவன் மேலே கொஞ்சமாவது அக்கறை இருந்தா
வீட்டைவிட்டு போனவரைக் காணோமே என்று என்னைத்
தேடிப்பார்த்துவிட்டு வர வேலையாளை அனுப்பியிருக்கமாட்டே.
எல்லாம் இந்த டி.வி. பண்ற வேலை! அதிலும் இந்த சீரியல் பண்ற
வேலை! இந்த டி. வி. எப்போ நாசமா போவுமோ? என்றான்! உடனே
டி.வி. ரிப்பேராகிவிட்டது.
அதைப்பார்த்த மனைவி, அட பாவி மனுஷா, சீரியல் போச்சுய்யா.
நீ போனாலும் பரவாயில்லை. உனக்கு என்ன ஆச்சு? என்றாள். அதற்கு
அந்தப் பணக்காரன் , என்ன பேச்சு ஓவரா போவுது! இதுக்கு மேல
வாயத் துறந்தே! அறைஞ்சிடுவேன், வாயில பல் இருக்காது என்றான்!
உடனே மனைவி வாயிலே இருந்த எல்லா பற்களும் கொட்டிவிட்டன! ஒரே
வினாடியிலே மனைவி கிழவியாகிவிட்டாள்.
கதை முடிந்தது! கருத்து என்ன?
எதிர்பாராமல் அன்பு செய்பவர்கள் வாழ்வார்கள்; எதிர்பார்த்து
அன்பு செய்பவர்கள் வீழ்வார்கள்.
இன்றைய நற்செய்தியின் வழியாக அன்னை மரியா, நமக்கு வழங்கும்
அருள்வாக்கு என்ன? என்னைப் போலே நீங்கள் எதையும் எதிர்பார்க்காமல்
பிறருக்கு உதவி செய்யுங்கள், அன்பு காட்டுங்கள்; அப்போது
வாழ்வீர்கள் என்கின்றார்!
மரியா எதையுமே எதிர்பார்க்காமல் பிறரை அன்பு செய்தவர்!
இதோ ஆண்டவருடைய அடிமை. உமது வார்த்தையின் படியே எனக்கு நிகழட்டும்
என்றார். அப்போது வானதூதரிடமிருந்து அவர் எதையும் எதிர்பார்க்கவில்லை.
கானாவூரில், இதோ இரசம் தீர்ந்துவிட்டது என்றார். அப்போது
மணமக்களிடமிருந்து அவர் எதையும் எதிர்பார்க்கவில்லை!
மலைநாட்டு மங்கை எலிசபெத்தை தேடிச்சென்று வாழ்த்தினார். அப்போது
எலிசபெத்திடமிருந்து அவர் எதையும் எதிர்பார்க்கவில்லை!
கல்வாரி மலையிலே உலக மாதாவானார். அப்போதும் உலக மக்களிடமிருந்து
அவர் எதையும் எதிர்பார்க்கவில்லை.
நல்லாயரான (முதல் வாசகம்) இயேசு, தனது உடலை உலகுக்கு அளித்த
ஆண்டவர் (இரண்டாம் வாசகம்) எதிர்பார்க்காமல் அன்பு
செய்யும் அனைவரின் தேவைகளையும் கவனித்துக்கொள்வார்.
மேலும் அறிவோம் :
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது (குறள் : 103).
பொருள் : எந்தப் பயனையும் எதிர்பாராமல் ஒருவர் செய்த பேருதவியின்
பயன்பாட்டை ஆராய்ந்தால் அந்த நன்மை ஆழ்கடலைக் காட்டிலும்
பெருஞ்சிறப்பு வாய்ந்தது ஆகும்.
ஓர் அப்பா தமது ஐந்து வயது மகனைத் தமது வீட்டுக்கு
முன்னால் இருந்த ஒரு வேப்ப மரத்தின் கிளையில் அமரச்
சொன்னார், பின்பு அவனைக் கீழே குதிக்கும்படி கேட்டார். அவன்
கீழே விழாமல் அவனைத் தாங்கிப் பிடித்துக் கொள்வதாகவும் அவனுக்கு
வாக்குறுதி அளித்தார். சிறுவன் முதலில் தயங்கினாலும், பின்
தன்னுடைய அப்பாவை நம்பிக் கீழே குதித்த போது, அவனுடைய அப்பா
அவனைத் தாங்கிப் பிடிக்கவில்லை , கீழே விழுந்த சிறுவன்
கால் பிசகி வலி பொறுக்க முடியாமல் அழுதான். ஆனால் அவனுடைய
அப்பாவோ சிரித்துக் கொண்டு அவனிடம், "மகனே! உலகில்
யாரையும் நம்பாதே; உன் அப்பனையும் நம்பாதே. இதுதான் நான்
உனக்குக் கற்றுக் கொடுக்க விரும்பிய பாடம்" என்றார்!
இன்றைய உலகில் மனிதர் மனிதரை எளிதாக நம்புவதில்லை . இந்நிலையில்
கடவுள் நம்பிக்கையும் குறைந்து கொண்டு வருகிறது. இத்தகைய
நிலை வரும் என்பதை முன்கூட்டியே அறிந்த இயேசு கிறிஸ்து.
"மானிட மகன் வரும்போது நம்பிக்கையைக் காண்பாரோ?" (லூக்
18:8) என்னும் கேள்வியை எழுப்பிவிட்டுச் சென்றுள்ளார்.
திருவருகைக் காலத்தின் இறுதி ஞாயிறு அன்று "நம்பிக்கையின்
நங்கையாகிய" மரியாவைத் திருவழிபாடு நம்முன் நிறுத்துகிறது.
மரியாவின் தனிச் சிறப்பு என்ன? "ஆண்டவர் உமக்குச் சொன்னவை
நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" (லூக் 1:45)
என்று மரியாவிடம் இன்றைய நற்செய்தியில் எலிசபெத்து அறிக்கையிடுகிறார்,
கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை மரியா நம்பினார்.
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் மீக்கா கூறியதை நம்பினார்.
யூதாவின் குடும்பங்களில் மிகச் சிறியது எனக் கருதப்படும்
பெத்லகேமிலிருந்து மெசியா தோன்றுவார். தம் மந்தையை
மேய்ப்பார். மக்கள் அச்சமின்றி வாழ்வர் (காண். மீக்கா
5:2-5).
அனைத்துக்கும் மேலாக "கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" (லூக்
1:37) என்னும் வானதூதரின் வார்த்தையை மரியா நம்பினார். அந்த
நம்பிக்கையின் விளைவாகக் கன்னிமையில் மீட்பரின் தாயாகும்
பேறு பெற்றார், "கன்னி நம்பினார்; கன்னி நம்பிக் கருவுற்றார்.
உடலால் கருவுறு முன் உள்ளத்தால் கருவுற்றார். அவர் உடலில்
தாங்கிய கிறிஸ்துவைவிட உள்ளத்தில் தாங்கிய "கிறிஸ்து மேலானவர்.
ஏனெனில் உடலில் கிறிஸ்துவை பத்து மாதங்கள் மட்டுமே சுமந்தார்.
ஆனால் உள்ளத்திலோ கிறிஸ்துவை ஆயுள் முழுவதும் சுமந்தார் "
(புனித அகுஸ்தினார்).
வெளிநாட்டிலிருந்து திருச்சிக்குச் சுற்றுலா பயணிகளாக வந்த
ஒரு காதல் ஜோடியை நான் சந்தித்தபோது அவர்களிடம், "நீங்கள்
கடவுளை நம்புகிறீர்களா?" என்று கேட்டதற்கு அவர்கள். "ஆலயத்தில்
இருக்கும் கடவுளைவிட எங்கள் அகத்தில் இருக்கும் கடவுளை நம்புகிறோம்"
என்று அவர்கள் கூறியது எனக்கு வியப்பளித்தது.
"மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச்
சிந்தித்துக் கொண்டிருந்தார்" (லூக் 2:19) என்று நற்செய்தியில்
நாம் வாசிக்கிறோம்.
"உடலில் "சுகர்" இருந்தாலும் ஆபத்து; உள்ளத்தில் "ஃபிகர் "
இருந்தாலும் ஆபத்து" என்று சொல்லப்படுகிறது, நமது உள்ளத்தில்
கிறிஸ்து குடியிருக்கிறாரா? அல்லது வேறு "ஃபிகர்"
குடியிருக்கிறதா ? ஆண்டுதோறும் கிறிஸ்துவைக் குடிலில் பிறக்கச்
செய்வதால் என்ன பயன்? நாள்தோறும் அவரை நமது உள்ளத்தில்
குடி வைக்கும் வண்ணம் மாயா நம்மை அழைக்கின்றார்.
ஒரு குருத்துவக் கல்லூரியில் மரியியல் பேராசிரியர் மாணவர்களிடம்,
"மரியா "ஆகட்டும்" என்று சொல்லாதிருந் திருந்தால் என்ன நடந்திருக்கும்?"
என்று கேட்டதற்கு, "போரடிக்கும் உங்கள் மரியியல் வகுப்புகள்
நடைபெறாது" என்று அவர்கள் சொன்னார்கள்! பேராசிரியர் எதிர்பாராத
பதில்!
மரியா "ஆகட்டும்" என்றார். "வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே
குடிகொண்டார்" (யோவா 1:14). இன்றைய இரண்டாம் வாசகத்தில், "என்
கடவுளே உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகிறேன்" (எபி
10:7) என்று சொல்லிக்கொண்டு இவ்வுலகிற்கு வந்த கிறிஸ்து
கெத்சமனித் தோட்டத்தில் "ஆகட்டும்" (மத் 6:39) என்றார்;
உலகம் மீட்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவையும் அவர் தாய் மரியாவையும்
இயக்கிய உந்து சக்தி, உள்ளுயிர் "ஆகட்டும்" என்ற தாரக மந்திரம்.
நாம் கடவுளை உண்மையாகவே நம்பினால் அவருடைய விருப்பத்திற்கு
"ஆகட்டும்" என்று துணிவுடன் சொல்ல வேண்டும். "உம் திருவுளம்
விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக" (மத்
6:10). "நம்பிக்கையின் தந்தை" என்று அழைக்கப்படும் ஆபிரகாம்,
தாம் எங்கே போகவேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச்
சென்றார் (எபி 11:8), தமக்குக் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கைக்கு
இடமில்லா நிலையிலும் கடவுளை நம்பினார் (உரோ 4:18-20), தமக்குப்
பிறந்த வாக்குறுதியின் ஒரே மகன் ஈசாக்கையும் பலியிட அவர்
தயங்கவில்லை .
சொத்தையும் சுகத்தையும் இழந்த யோபு கடவுள்மீது நம்பிக்கை
இழக்கவில்லை. "அவர் என்னைக் கொன்றாலும் கொல்லட்டும்" (யோபு
13:15). "காயப்படுத்தினாலும் கட்டுப்போடுபவர் அவரே. அடித்தாலும்
ஆற்றுகின்ற கை அவரதே" (யோபு 5:18) என்று அவரால் சொல்ல
முடிந்தது.
கடவுளை நம்புவோர்க்கு மற்றவர்களைவிட அதிகம் துன்பங்கள் வரும்.
ஏன்? அழிந்துபோகும் பொன்கூட நெருப்பில் புடமிடப்படுகிறது.
அப்படியானால், அதைவிட விலையுயர்ந்த நமது நம்பிக்கை புடமிடப்பட
வேண்டும் (1 பேது. 1:7) "உலகை வெல்லுவது நமது நம்பிக்கையே"
(1 யோவா 5:4). "எந்நிலையிலும் நம்பிக்கையைக் கேடயமாகப்
பிடித்துக்கொண்டு தீயோனின் தீக்கணைகளை அணைத்துவிட
முடியும்" (எபே 6:16).
- கடவுள் நம்பிக்கையுடன் தன்னம்பிக்கையும் இணைந்து செல்ல
வேண்டும். "நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்; இலட்சியம்
நிச்சயம் வெல்லும் ஒருநாளில்." கைரேகைகளை நம்பி வாழ்வது
முட்டாள் தனம்; 10 விரல்களே நமது மூலதனம்! முயற்சித்
திருவினையாக்கும்.
நிலக்கரி, வைரம் ஆகிய இரண்டுமே கரி வகையைச் சேர்ந்தவை;
பூமிக்கடியில் இருக்கிறது. பூமியின் அழுத்தம் பொறுக்க
முடியாமல் வெளியில் வந்த கரி. நிலக்கரி, பல நூறு ஆண்டுகள்
அழுத்தத்தைப் பொறுத்துக்கொண்ட கரிதான் வைராமாகிறது. துன்பத்தின்
முடிவு இன்பம், வாழ்க்கையில் சோதனைகள் வருவது சிரமப்படுத்த
அல்ல. மாறாகப் பட்டை தீட்ட !
நம்பிக்கையின் விண்மீன், புதுயுகம் படைத்த புதிய ஏவா மரியன்னையைப்
பின்பற்றி "ஆகட்டும்" என்று துணிந்து சொல்வோம்; அகிலத்தை
மாற்றி அமைப்போம்; ஆனந்தம் அடைவோம்.
தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
கிறிஸ்துமஸ் வாழ்த்து... பகிர்ந்து மகிழ்ந்திருக்கிறோம்.
கிறிஸ்துமஸ் எச்சரிக்கை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இதோ குழந்தை இயேசுவே கொடுக்கும் ஒரு கிறிஸ்துமஸ் எச்சரிக்கை
.
""என் பிறப்பு நாள் எச்சரிக்கை இது!" மத அமைப்பிற்கப்பால்
மனிதனானவன் நான்.
என்னையே இழந்து இகத்தில் எழுந்தவன்! ஏழ்மை என் உடன்பிறப்பு,
வறுமை ஆருயிர் நண்பன். கோவிலில் நான் குழந்தையாகப் பிறக்கவில்லை,
மாட்டுத் தொழுவத்தில் மழலையாக மலர்ந்தேன்.
செல்வத்தில் திளைத்துச் சிரித்துத் தினம் மகிழ...
சொத்துக்களால் சுகம் காண விழையும்....
சோதர சோதரிகளே எனது பிறப்பை
எப்படி நீங்கள் ஆலயத்தில் கொண்டாடலாம்?
எச்சரிக்கிறேன். அசிங்கப்படுத்தாதீர்கள் என்னை.
துணிவிருந்தால் சேரிக்கு வாருங்கள்.
சேர்ந்து கொண்டாடுவோம்.
எனது பிறப்பில் இணைந்து மகிழ்வோம். எச்சரிக்கிறேன்.
அலங்கார ஆலயத்தில் எனது பிறப்பைக்
கொண்டாடி அசிங்கப்படுத்தாதீர்கள் என்னை.
எச்சரிக்கிறேன்"". ( நன்றி: திருஇருதயத்தூதன்)
மருத்துவமனையில் பிறந்தேன் என்பதற்காக, ஒவ்வொரு பிறந்த
நாளையும் கொண்டாட மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டுமா என்ன
!
என்றாலும் இயேசுவின் மன உணர்வு... ...
பொருட்படுத்தாமல் இருக்க முடியாது.
காலிழந்து நின்றால் தோள் கொடுக்கும் உள்ளம்
கண்ணிழந்து நின்றால் கை கொடுக்கும் உள்ளம்
ஏழை என்று கண்டால் ஏற்றுக் கொள்ளும் உள்ளம்
இல்லை என்று கேட்டால் அள்ளிக் கொடுக்கும் உள்ளம்
ஆலயமோ, அடுத்திருக்கும் சேரியோ.... கனிவு கொண்ட இவ்வுள்ளங்கள்
உலகில் இருக்கும் வரை, தெய்வம் மீண்டும் மீண்டும் பிறக்கத்தான்
செய்கிறார்.
கிறிஸ்மஸ் கொண்டாட்டம் என்பது என்ன? கடவுள் தன் பேரன்பை மனிதனோடு
எப்படிப் பகிர்ந்து கொள்கிறார் என்பது தானே! அந்த அன்பைப்
பெற்று, அனுபவிக்கிற நாம் எப்படிப் பிறரோடு பகிர்ந்து கொள்வது
என்பதன் வெளிப்பாடுதான் எலிசபெத்து, அன்னை மரியா இவர்களின்
இனிய சந்திப்பு.
இறை அனுபவம் பெற்ற இரு பெண்கள் சந்திக்கிறார்கள்; தங்கள்
அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். எலிசபெத்துக்கு இறைவன்
செய்த மாபெரும் செயலைக் குறித்து மகிழ்ந்து நிற்கும் மரியா,
"என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?" (லூக்.1:43)
என்று வியந்து போற்றும் எலிசபெத்து. ஒருவர் கணவனை அறியாத
கன்னிப் பெண், மற்றவர் கருவுற இயலாத வயதான மலடி. இரண்டு
பேருமே தங்கள் வயிற்றில் சுமக்கும் கருவில் கடவுளின் அருளைக்
கண்டவர்கள். கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்ற கடவுளின்
ஆற்றல் கொண்டவர்கள்.
இறை அனுபவத்தின் வெளிப்பாடு பிறரோடு அவ்வனுபவத்தைச் செயல்
மூலம் பகிர்ந்து கொள்வதாகும். தன்னிலே இறைவனை உணர்பவர் பிறரிலும்
இறைவனைச் சந்திப்பார். அவரின் சொல்லிலும் செயலிலும் பிறரன்பு
மிளிரும்; மனித நேயம் மலரும்!
அன்னை மரியாவின் ஆன்மீகம், அவளது புனிதம் இரு அம்சங்களைக்
கொண்டது:
1. இறைவன் நோக்குடைய திருவுளம்.
"நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்"
என்ற அர்ப்பணத்தில் பார்க்கலாம்.
2. மனித நேய நோக்குடைய பிறர்பணி.
எலிசபெத்துக்கு உதவ விரைந்த நிகழ்விலும்,
ஏன் கானாவூர்த் திருமணத்திலும் காணலாம்; கல்வாரிச் சிலுவையடியிலும்
சிந்திக்கலாம்!
எந்த பக்தி முயற்சியும் இறைவனை நோக்கி மேலே, மனிதனை நோக்கி
கீழே என்று இருவழிப் பயணமே!
ஓர் ஆடு தொலைந்து விட்டது. அதை அன்போடு வளர்த்த பெண்
தேடுகிறாள். பிரிவைத் தாளாமல் ஊர் ஊராகத் தேடுகிறாள். அது
பற்றிக் கேள்விப்பட்ட கசாப்புக் கடைக்காரனும் தேடுகிறான்.
அது கிடைத்தால் காசாக்கலாமே என்ற நினைப்பு. தேடும்
முயற்சியில் இருவரும் சந்திக்கிறார்கள். அப்போது ஒருவர்
ஒருவரைப் பார்த்துக் கேட்ட கேள்வி: "ஆட்டைப் பாத்தாயா?"
அவளது சந்திப்பு - வாழ்வு தரும் சந்திப்பு - வளர்க்க
வேண்டுமென்று!
அவனது சந்திப்பு - அழிவு தரும் சந்திப்பு - கொல்ல
வேண்டுமென்று!
விவிலியத்தில் பல சந்திப்புகள். ஏரோது மூன்று ஞானிகளைச்
சந்திக்கிறான்; ஆர்வத்தோடு வினவுகிறான். பின்னணி கொலைவெறி!
பவுல் இயேசுவைச் சந்திக்கிறார். நேர்மையோடு என்றாலும் தீமை
செய்த அவரைத் தடுத்து இயேசுவால் ஆட்கொள்ளப்பட்ட சந்திப்பு.
அதன் விளைவு?
இயேசுவைச் சந்தித்தார். வாழ்வு பெற்றார். இயேசுவில்
மனிதனைச் சந்தித்தார்.
- "எல்லாருக்கும் எல்லாமும் ஆனேன்" என்று பிறருக்காகத்
தன்னையே தியாகம் செய்யும் அளவுக்கு!
- "யூதனென்றும் கிரேக்கனென்றும், ஆண் என்றும் பெண் என்றும்
இல்லாத சமத்துவ உலகைப் படைக்கத் துடிக்கும் அளவுக்கு.
வாழ்க்கை கடவுள் தந்த கொடை. நாமும் வாழ்ந்து பிறரையும் வாழ
வைப்போம். நாமும் மகிழ்ந்து பிறரையும் மகிழச் செய்வோம்.
திருவுரைத் தேனடை
அருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச.
திருச்சி
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
மறையுரை அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு
முதல் வாசகம்
மு.வா : மீக்: 5: 2-5
ப.பா: திபா: 80: 1-2. 14-15. 17-18
இ.வா: எபி: 10: 5-10
ந. வா : லூக் 1: 39-45
"உணர்வுகளையும் உறவினையும் மதித்து
அமைதி வழி சமுகத்தைப் படைப்போம்!"
நாம் வாழும் இந்த சமூகத்தில் அமைதி வேண்டும் என்று
எல்லோரும் ஆசைப்படுகிறோம். ஆனால் அந்த அமைதியை முழுமையாக
அனுபவிக்க முடிவதில்லை. காரணம் உணர்வுகளுக்கும்
உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படாத நிலையாகும்.
நம்முடைய உணர்வுகள் புரிந்து கொள்ளப்படாத நிலையில் மன
அமைதியை இழக்கின்றோம். நாம் உறவுகளால் புறக்கணிக்கப்படும்
பொழுது மன அமைதியை இழக்கின்றோம். ஆண்டவர் இயேசுவின்
பிறப்பு நமக்கு அமைதியின் அடையாளமாக இருக்கிறது. காரணம்
நம்முடைய உணர்வுகளையும் உறவுகளையும் புரிந்து கொள்ளும்
விதமாக ஆண்டவர் இயேசுவின் பிறப்பானது இருக்கின்றது.
ஆண்டவர் இயேசுவின் பிறப்பு மனிதர்களாகிய நம்மை நம்மோடு
நல்ல உறவு கொள்ளவும் பிறரோடும் நல்ல உறவு கொள்ளவும்
கடவுளோடும் நல்ல உறவு கொள்ளவும் அழைப்பு விடுக்கின்றது.
நான் வாழ்ந்த சமூகத்தில் 30000 கிலோ மீட்டருக்கு
தள்ளியுள்ள முகநூல் நண்பர்களை நம்மால் இணையதளத்தின் வழியாக
சந்தித்து முகமுகமாய் வீடியோ காலில் பேச முடிகிறது. ஆனால்
நம்மோடு வாழக்கூடிய உறவுகளோடும் தேவையில் இருப்பவர்களோடும்
நல்லுறவு கொள்ள முடிவதில்லை. இதுதான் நாம் வாழும்
இடத்திலேயே அமைதியை இழப்பதற்கு காரணமாக இருக்கின்றது. எனவே
நாம் வாழும் இந்த வாழ்க்கையில் பிறருடைய உணர்வுகளைப்
புரிந்து கொள்பவர்களாகவும் உறவுகளை மதிப்பவர்களாகவும் வாழ
முயற்சி செய்வோம். இதுதான் உண்மையான மன அமைதியைக்
கொடுக்கும்.
திருவருகைக் காலத்தின் நான்காம் வாரத்தில் இருக்கின்ற நாம்
அமைதியின் மெசியாவை வரவேற்க, பிறரின் உணர்வுகளுக்கும்
உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க முயற்சி செய்வோம்.
இன்றைய நற்செய்தியில் கன்னி மரியாள் எலிசபெத்தம்மாளை
சந்தித்த நிகழ்வை வாசிக்கிறோம். அன்னை மரியா தூய ஆவியின்
வல்லமையால் இயேசுவைக் கருவாக கருத்தரித்தாள். இப்படிப்பட்ட
சூழலில் கூட தன் உறவினரான எலிசபெத்து முதிர்ந்த வயதில்
கருவுற்றிருக்கிறார் என கேள்விப்பட்டதும் கிட்டத்தட்ட 100
கிலோ மீட்டர் நடந்து சென்று உதவி செய்ததாக வரலாற்று
மரபுகள் எடுத்துரைக்கின்றது. இந்த செயல்பாடு அன்னை
மரியாவின் உயர்ந்த மனநிலையைச் சுட்டிக்காட்டுகிறது. அன்னை
மரியாளின் இளம்வயதிலேயே தூய ஆவியின் வல்லமையால் கருவுற
வேண்டிய அந்த நிலை ஏற்பட்டாலும், தன்னுடைய உடல் நிலையையும்
பொருட்படுத்தாமல் ஒரு வீரப் பெண்ணாக எலிசபெத்தம்மாளுக்கு
உதவி செய்தார். அதிலும் குறிப்பாக யூத சமூகத்தில்
குழந்தைகள் கடவுளின் கொடைகளாகக் கருதப்பட்டனர். குழந்தை
இல்லாதவர்கள் கடவுளின் சாபத்தைப் பெற்றவர்களாக்
கருதப்பட்டனர். ஆனால் கடவுள் திருமுழுக்கு யோவானை
எலிசபெத்தம்மாளின் வழியாக பிறக்க வைத்தது கடவுளின்
திருவுளமாக இருக்கின்றது. எனவே இந்த மகிழ்ச்சியின்
செய்தியை கொண்டாடும் விதமாகவும் எலிசபெத்தம்மாளின்
உணர்வுகளையும் உறவுகளையும் புரிந்து கொள்ளும் விதமாக
இவர்களின் சந்திப்பு அமைந்துள்ளது. இவர்களின் சந்திப்பு
பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் இடையே உள்ள
இணைப்புப் பாலமாக இருக்கின்றது. திருமுழுக்கு யோவான் பழைய
ஏற்பாட்டின் இறைவாக்கினர்களின் நிறைவாக இருக்கின்றார்.
ஆண்டவர் இயேசு புதிய ஏற்பாட்டின் தொடக்கமாக இருக்கின்றார்.
புதிய ஏற்பாட்டின் தொடக்கமாகிய ஆண்டவர் இயேசுவை
அறிமுகப்படுத்தி ஆயத்தப்படுத்தியவர் திருமுழுக்கு யோவான்
ஆவார்.
அன்னை மரியாள் எலிசபெத் அம்மாளின் உணர்வுகளையும்
உறவுகளையும் சரியாகப் புரிந்து கொண்ட காரணத்தினால் தான்
அவரால் அந்த அளவுக்கு உதவி செய்ய முடிந்தது. கடவுளும்
நம்முடைய உறவுகளையும் உணர்வுகளையும் புரிந்து
கொண்டதால்தான் தன் ஒரே மகனை அமைதியின் அடையாளமாகவும்
மீட்பின் அடையாளமாகவும் இந்த உலகத்திற்கு அனுப்ப
முடிந்தது. இஸ்ராயேல் மக்கள் 480 ஆண்டுகளாக அடிமைகளாக
இருந்த சூழலில் கடவுள் அவர்களுடைய உணர்வுகளை
புரிந்துகொண்டு உறவைப் புதுப்பித்த காரணத்தினால்தான்
மோசேயின் வழியாக அவர்களுக்கு விடுதலை அளித்தார்.
எனவே இன்றைய நற்செய்தி வாசகம் நம்மைப் பிறரின் உணர்வுகளை
மதிக்கக்கூடியவர்களாகவும் உறவுகளுக்கு முக்கியத்துவம்
கொடுக்கக் கூடியவர்களாகவும் வாழ அழைப்பு விடுக்கின்றது.
நம்மோடு வாழக்கூடிய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள்,
உடன் பயணிப்பவர்கள் போன்றவர்களின் உணர்வுகளை மதிக்கின்ற
பொழுது, நாம் அவர்களோடு உறவை புதுப்பித்துக்கொள்ள
முடியும். அதன்? வழியாக இயேசு கொண்டு வந்து அமைதியை
நம்மால் முழுமையாகச் சுவைக்க முடியும். எனவே இயேசு
தருகின்ற அமைதியை நாமும் சுவைத்திட அன்னை மரியா
கொண்டிருந்த மனநிலையை நாமும் கொண்டிருக்க முயற்சி
செய்வோம். நம்மால் முடிந்தவரை ஏழை எளிய தேவையிலுள்ள
மக்களுக்கு உதவி செய்ய முயற்சி செய்வோம். அப்பொழுது நாம்
கொண்டாடுகின்ற கிறிஸ்து பிறப்பு விழா நமக்கு மன அமைதியை
வழங்கக் கூடியதாக இருக்கும். நாம் ஒவ்வொரு முறையும் உதவி
செய்கின்ற பொழுது நமக்குள்ளே ஆத்ம திருப்தி ஏற்படும்.
அந்தத் திருப்தி நமக்கு முழுமையான அமைதியைக் கொடுக்கும்.
எனவே அன்னை மரியாளைப் போல பிறரின் உணர்வுகளுக்கும்
உறவுகளுக்கும் நம்மால் முடிந்தவரை முக்கியத்துவம் கொடுக்க
முயற்சி செய்வோம். அதன் வழியாக இறைவன் தருகின்ற நிலையான
அமைதியை பெறுவோம். அதற்கு தேவையான நல்ல மனநிலையைக்
கேட்போம்.
இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! மன அமைதிக்காக ஏங்கும் அத்தனை நல்ல
உள்ளங்களையும் ஆசீர்வதித்து, பிறரின் உணர்வுகளுக்கும்
உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நல்ல மனநிலையைத்
தாரும். ஆமென்.
அருள்பணி: மாணிக்கம் - திருச்சி
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ