திருவருகைக்காலம்
4ம் வாரம்
- ஞாயிறு
திருப்பலி
முன்னுரை -
1ம் ஆண்டு
கடவுளின் அழைப்புக்கு நம்பிக்கையுடன் 'ஆம்' என்று சொல்ல வந்திருக்கும்
அன்புறவுகளே!
அன்று கடவுளின் அழைப்புக்கு முழுவதுமாக அடிபணிந்து உம் சொற்படியே
எனக்கு நிகழட்டும் என்ற பதில் மொழி பகர்ந்தாள் மரியா. இன்று அவளின்
நம்பிக்கை மொழியை நமதாக்க
கடவுளை நோக்கி அழைத்துச் செல்லும் நம்பிக்கை நாற்று விதைக்கப்படும்
காலமாய் வாய்த்திருக்கின்றது இன்றைய நாள். இன்று நம் இதயத்தில்
விதைக்கப்படும் இறை வார்த்தையெனும் நம்பிக்கை நாற்றுகளுக்கு உயிருட்டம்
தந்து வளர்த்தெடுப்பது நம் கடமையே!
முதலில் நம்மை நம்புவோம். கடவுளிடத்திலும் நம்பிக்கை வைப்போம். கடவுளும்
நாமும் நண்பர்கள். ஒரு வேளை நாம் கடவுளை விட்டு விலகி செல்லலாம்.
ஆனால் கடவுள் நம்மை விட்டு விலகிச் செல்லவே மாட்டார். கடவுள் நம்
நிழல் போல நம்மைத் தொடர்கிறார்.
மனித வாழ்வில் மகத்தான சக்தியாக விளங்குவது நமது எண்ணங்களே! எண்ணங்கள்
மனிதனின் அணுகு முறைக்கு வடிவமாக அமைகின்றது. மனிதனின் இந்த அணுகு
முறையை நிர்ணயிப்பது நம்பிக்கையே! நம்பிக்கை தான் வெற்றி தோல்வியை
வெளியிடுகின்றது.
உலகில் உள்ள எல்லாவற்றையும் ஈர்க்கும் சக்தி மகத்தான நம்பிக்கைக்கு
மட்டுமே உரியது என்பதை அன்னை மரியா அனுபவித்து மகிழ்ந்தாள். கடவுளின்
அழைப்புக்கு முழுவதும் நம்பிக்கை உணர்வுடன் அடிப்பணிந்து வளமையும்
நிறைவாழ்வும் பெற்று அன்னை மரியா உயர்ந்ததைப் போல, நாமும் இன்று
நமது காதுகளில் கேட்கப்படுகின்ற இறைவார்த்தைக்கு நம்பிக்கை வடிவம்
கொடுத்து உயர்வோம்.
கடவுள் காட்டும் பாதையில் இருந்து எவ்வளவு தூரம் விலகிச்
சென்றாலும், கடவுளின் அருகில் நமது நம்பிக்கை உணர்வினால் செல்ல
முடியும் என்பதை உணர்த்துவதே இன்றைய நற்;செய்தி நிகழ்வுகள்!
நாம் கடவுளிடம் கேட்க வேண்டியது: கடவுளே உம் வார்த்தைக்கு செவி
மடுத்து பலம் வாய்ந்த நம்பிக்கை மொழியால் பதில் மொழி பகிர இந்த
திருப்பலியி;ல் எங்களுக்கு அருள்புரியும் என்பதே!
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
1. நம்பிக்கையோடு காத்திருக்க கற்றுத் தந்த தேவனே!
திருச்சபையின் தலைவர்கள் இறைமக்கள் உள்ளங்களில் நம்பிக்கை
நாற்றுகளை நட்டு விசுவாசத்தோடு உமது வருகையில் பங்கேற்க
பலன் தரும் செயல்பாடுகளை வளர்த்தெடுக்க அருள் பொழிய
வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
2. நீ செல்லுமிடமெல்லாம் நான் உன்னோடு இருப்பேன் என்று
சொல்லிய தேவனே!
எங்கள் நாட்டுத் தலைவர்கள் மத்தியில் நீர் இருந்து அவர்கள்
செய்யும் பணிகளால் வேற்றுமைகள் ஒழிந்து ஒற்றுமை வளர்ந்து
மக்கள் எல்லோரின் தேவைகள் நிறைவேற அருள் பொழிய
வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
4. கடவுளால் இயலாதது எதுவுமில்லை என்ற செய்தியை எமக்கு
தந்த தெய்வமே!
எங்கள் தேவைகள் நிறைவேறாத போதும், எங்கள் பிரச்சனைகள்
எங்களைத் தாக்கும் போதும் நாங்கள் விசுவாசத்தில் தளர்ந்து
நம்பிக்கை இழந்து விடுகிறோம். உம்மால் இயலாதது எதுவுமில்லை
என்ற வார்த்தையால் எங்கள் நம்பிக்கைக்கு வலுவூட்ட
வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
5. இன்று எங்கள் வீட்டைக் கட்டப் போவதாக அறிவிக்கின்ற
தேவனே!
வீடிழந்து தவிப்போருக்கும், வீடு கட்ட வேண்டும் என
திட்டமிடுவோருக்கும் இந்த உலகில் வீடு கட்டத் தேவையான
பொருட்கள் கிடைக்கவும். அதன் வழியாக வானக வீட்டிற்கு
செல்லும் நம்பிக்கை உணர்வு மிகுதியாக பெற்றுக்
கொள்ளவும் துணைபுரிய வேண்டுமென்று ஆண்டவரே உம்மை
மன்றாடுகிறோம்.
6. அனைவரின் தொல்லைகளினின்றும் உனக்கு ஓய்வு அளிப்பேன்
என்று அறிவிக்கின்ற தேவனே!
தங்கள் முதுமையால் வருந்துவோர், பணி செய்து ஓய்வு
பெற்றிருப்போர், தனிமையில் வாடுவோர் அனைவருக்கும்
மறுவுலக ஓய்வை மகிழ்ச்சியோடு வரவேற்க அவர்களை தொடரும்
தொல்லைகள் அனைத்தையும் நீக்க வேண்டுமென்று ஆண்டவரே
உம்மை மன்றாடுகிறோம்.
7. உன் வழித் தோன்றலை உனக்குப் பின் உயர்த்துவேன் என
இன்று எங்களோடு உறவாடும் தேவனே!
தங்கள் பிள்ளைகளின் நலனைக் காணப் பெற்றோருக்கு
வாய்ப்பு தாரும். பிள்ளைச் செல்வங்களால் பெற்றோர்
மகிழவும், குழந்தைப் பேறு இல்லாதோருக்கு குழந்தைப்பேறு
கிடைக்கவும் அருள் புரிய வேண்டுமென்று ஆண்டவரே உம்மை
மன்றாடுகிறோம்.
மறையுரைச்சிந்தனைகள்
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா
O.S.M.
மறையுரைச்சிந்தனை -
அருட்சகோதரி: செல்வராணி O.S.M.
திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு
உறவுகளைத் தேடி .....
பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
அன்பெனப்படுவது தன் கிளை செறாஅமை..... என்பது கலித்தொகை பாடல்.
பண்பு
என்பது யாதெனில் நல்லவர்களோடு சேர்ந்து பழகி வாழ்தல், அன்பு என்பது
யாதெனில் தன் சுற்றத்தார்களோடு சேர்ந்து அமைந்த வாழ்க்கை வாழ்வது
என்பது இப்பாடல் உணர்த்தும் பொருள். இந்த தன் கிளை செறாஅமைக்காக
தான் அன்னை மரியாள் நெடிய பயணம் மேற்கொள்கிறார். இயேசுவின் பிறப்பு
பெருவிழாவை மகிழ்வோடு நெருங்கிக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில் அன்னை
மரியாள் மற்றும் எலிசபெத் இவர்களின் சந்திப்பு நமக்கு உறவுகளின்
முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றது. உறவுகள், வாழ்வின் உயிர்
நாடிகள். அதை சரியான விதத்தில் நாம் கையாளாவிட்டால் அதற்கான
பாதிப்புக்களையும் விளைவுகளையும் நாம் தான் சந்திக்க வேண்டியதிருக்கும்.
இன்றைய இறைவாக்குப் பகுதிகள் அனைத்தும் உறவுகளின் உன்னதத்தை நமக்கு
எடுத்துரைக்கின்றன. முதல் வாசகம் ஆயன்போல நம்மை தம் மந்தையாக
நினைத்து பாதுகாக்கும் அமைதியின் ஆண்டவருடனான நமது உறவைப் பற்றி எடுத்துரைக்கின்றது.
இரண்டாம் வாசகமோ தன் உடலையே நமக்காக பலியாகச்செலுத்தி நம்மை தூயவர்களாக்கிய
இயேசுவுடனான நமது உறவைப் பற்றி எடுத்துரைக்கிறது. நற்செய்தி வாசகமோ,
அன்னை மரியாள் எலிசபெத் அம்மாள் சந்திப்பை எடுத்துரைப்பதன் மூலம்,
உறவோடு வாழ நல்ல மாதிரிகையை நமக்கு காட்டுகிறது.
ஆக அனைத்து வாசகங்களும் உறவோடு வாழும் உன்னதத்தையே விளக்குகின்றன.
இன்றைய கால சூழலில் உறவோடு இருப்பது என்பது உள்ளங்கை அலைபேசியில்
தொடர்பு எண் இருப்பதோடு முடிந்துவிடுகிறது. எண் தொலைந்து போனால்
உறவே தொலைந்து போனது போல் வருந்தும் மனிதர்களும் நம் மத்தியில் உண்டு.
விடுமுறை நாட்களில் உறவுகளைத் தேடிச்சென்று பார்த்து மகிழ்ந்த காலம்
எல்லாம் கடல் கடந்து போய்விட்டது. கோடைவிடுமுறையில் இப்போது எல்லாம்
எஃஸ்சேஞ்ச் மேளா என்று இருக்கிறது .. அப்போதெல்லாம் வீட்டில் இருக்கும்
குழந்தைகள் எஃஸ்சேஞ்ச் செய்யப்படுவார்கள். இங்குள்ள குழந்தைகள் உறவினர்கள்
வீட்டிலும், உறவினர்கள் குழந்தை இங்கும் மாறி இருந்து தங்கள்
விடுமுறையைக் கழிப்பார்கள். அந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க
முடியாது. உணர்ந்து பார்த்தால் தான் புரியும். இப்படியாக உறவை மேம்படுத்திய
காலம் போய், இப்போது உறவுகளே வேண்டாம் என்ற நிலைக்கு வந்துவிட்டோம்.
என்வீடு, என்ஊர், என் விளையாட்டு பொருள்கள் என்று தன்னை சுற்றிய
வாழ்க்கைக்கு நாமும் மாறி நமது சந்ததியினரையும் மாற்றிவிட்டோம். இந்நிலையில்
மரியாள் மற்றும் எலிசபெத் இவர்களின் செயல்பாடுகள் நம்மை பழையனவற்றுக்கு
திரும்ப அழைப்பு விடுக்கின்றது.
இன்றைய நற்செய்தி பகுதிகளில் வரும் சொற்களில் ஐந்து வினையுரிச்சொற்களை
அட்வெர்பு நமது வாழ்வின் செயல்பாடுகளில் பயன்படுத்த, அதற்காக முயற்சி
செய்ய இறைவனின் அருள் நாடுவோம்.
முதலில்... வினையுரிச்சொற்கள் எனப்படுபவை ஒரு
வினையை மேலும் மிகைப்படுத்தி கூற உதவுபவை... மரியாள் எலிசபெத்
முதிர் வயதில் கருவுற்ற செய்தி கேள்விப்பட்டு விரைந்து செல்கிறார்.
எண்ணித்துணிக கருமம் என்னும் குறளுக்கு முன்னோடியாக செயல்பட்டவர்
மரியாள். எலிசபெத்தை சந்திக்க நினைத்தார். எவ்வளவு விரைவாக அவரை
சென்றடைய முடியுமோ அவ்வளவு விரைவாக சென்றார். நாமும் நற்செயல்கள்
செய்கிறோம் ஆனால் நமது நற்செயல்கள் மரியாளின் செயல்களைப் போல
விரைவாக செய்யப்படுகின்றனவா ??? நாம் பயன்படுத்தும் பொருள்கள் முதல்
வாகனங்கள் வரை அனைத்தும் விரைவானதாக இருக்க வேண்டும் என எண்ணுகிறோம்
ஆனால் நமது நற்செயல்கள் விரைவாக செய்யப்படுகின்றனவா?? நாம்
செல்கிறோம் ஆனால் விரைந்து செல்கிறோமா?? அன்னை மரியாளிடம் இருந்த
அந்த நற்செயலுக்கான விரைவு நம்மிடம் வர வளர செபிப்போம்.
மகிழ்ச்சியால் துள்ளிற்று;
துள்ளல், இன்பம் துன்பம் இரண்டிலும் நிகழும். இன்பம் எப்போதும் இரட்டிப்பாகும்.
இங்கே வயிற்றில் இருந்த யோவானின் மகிழ்ச்சி துள்ளல், அவரது தாயாம்
எலிசபெத் அம்மாளையும் அன்னை மரியாளையும் மகிழ்வித்தது. அதனால் உடன்
இருந்த சுற்றத்தாரும் மகிழ்கின்றனர். நமது மகிழ்வு துள்ளல்
பெரும்பாலும் ஃபார்வேர்டு துள்ளலாகத் தான் இருக்கிறது. நாம்
பார்த்து துள்ளி மகிழ்ந்த காணொளிகளை நம் நண்பர்களோடு பகிர்வதோடு
முடிந்து விடுகிறது. நமது மகிழ்ச்சி உணர்வுகள் துள்ளல்கள் வெறும்
ஊடகத்தோடு முடிந்துவிடாது உணர்வுகளை சென்றடையும் துள்ளல் மகிழ்வாக
இருக்க வேண்டும். நமது பார்வை, பேச்சு செயல் நடை உடை பாவனை அனைத்தும்
பிறருக்கு துள்ளல் மகிழ்வைத் தரக்கூடியதாக இருக்க அருள்
வேண்டுவோம்.
முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்....
தூய ஆவியின் ஆற்றல் தன்னில் இறங்குவதை கண்டுணர்ந்த எலிசபெத்தம்மாள்
முற்றிலுமாக ஆட்கொள்ளப்படுகிறார். அமைதியில் இறைஆற்றலின் வல்லமையை
உணர்ந்த அவர், தன்னை ஆவியின் பதம் அர்ப்பணிக்கின்றார். அதன் பலனாக
மங்கள வாழ்த்து சொல்லி அன்னை மரியாளை வாழ்த்துகிறார். அவர் எவ்வளவுக்கு
எவ்வளவு இறைஆற்றலால் நிரம்பப்பெற்றார் என்றால், அன்று அவர் சொன்ன
வாழ்த்துக்கள் தான் , அந்த வார்த்தைகளைத்தான் இன்று நாம் அருள்
நிறை மரியே செபத்தின் இரண்டாம் பாகமாக செபித்துக்கொண்டு வருகிறோம்.
அந்த அளவுக்கு வலிமை பெற்றவராயிருக்கிறார். நாமும் தூய ஆவி நம்மை
ஆட்கொள்ள அனுமதித்தோமானால் நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகள்
வாழ்த்துகள் கூட வல்லமை மிக்க செபமாக மாறும்... முற்றிலும் ஆட்கொள்ளப்பட
அருள் வேண்டுவோம்..
உரத்த குரலில் ;
தன் மனதில் இறை ஆவி உணர்த்தியதை உரத்த குரலில் கூடியிருந்தவர்கள்
கேட்குமாறு எடுத்துரைக்கிறார் எலிசபெத் அம்மாள். உண்மையை உரக்கச்சொல்கிறார்,
உள்ளத்தில் படுவதை வெளிப்படையாகப் பேசுகிறார். இவர் கன்னியாயிற்றே
இவர் கர்ப்பமாயிருப்பது வேறு யாருக்கும் தெரியாதே பிறர் மரியாளைப்
பற்றி என்ன நினைக்கக் கூடும் என்று எண்ணவில்லை. தூய ஆவி உணர்த்தியதை
உள்ளது உள்ளபடி உரத்தக்குரலில் கூறுகிறார். உரத்த குரல் உண்மையை
சொல்வதற்கு மட்டுமே.. சிலர் உரக்கக் கூறினால் பொய்யும் உண்மையாகிவிடும்
என்ற நினைப்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். உண்மை மட்டுமே
உரக்கச்சொன்னால் நிலைத்து நிற்கும்... நாம் நமது குரலை எப்போது உயர்த்துகிறோம்
உண்மைக்காகவா?? இல்லை உண்மை என பிறர் எண்ண வேண்டும் என்பதற்காகவா
சிந்தித்து செயல்படுவோம்..
ஆண்டவரின் தாய்;
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை என்பதற்கேற்ப தாய்க்கெல்லாம் தாயாம்
அன்னை மரியாளை ஆண்டவனின் தாய் என் முதன் முதலாக அழைத்த பெருமை
எலிசபெத் அம்மாளையேச் சேரும். சொல்லின் செல்வர் என்றே அவரை
அழைக்கலாம் அந்த வகையில் தான் கூற விரும்புவதை வாழ்த்த நினைப்பதை
தெளிவாகக் கூறி வாழ்த்தி மகிழ்கிறார். ஆண்டவருக்கு வழியை ஆயத்தம்
செய்ய இருக்கும் மகனைப் பெற்றெடுக்க விருக்கும் தாயும் முன்னோடியாக
செயல்படுகிறார். யோவான் வழியை ஆயத்தம் செய்யும் முன்னோடி ,
எலிசபெத் அன்னை மரியாளின் சிறப்புப் பெயர்களுக்கு முன்னோடி.
ஏனெனில் பெண்களுக்குள் பேறுபெற்றவர். அருள் நிறைந்தவர், ஆண்டவரின்
தாய் என முதன் முதலில் அழைத்தவர் இவரே. நாம் எப்படி பேசுகிறோம்??
நமது வாழ்த்துக்கள் நிலைத்து நிற்கின்றனவா?? சிந்தித்து
செயல்படுவோம்...
ஆக விரைந்து, மகிழ்ந்து , முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டு , உரத்த
குரலில் ஆண்டவனின் தாய் என அழைத்த எலிசபெத் போல நாமும் செயல்பட
முயல்வோம். நமது வினைச்செயல்களுக்கு மேலும் ஒரு சிறப்பு
கொடுக்கமுயற்சிப்போம். உறவுகளைத் தேடி வந்த மரியாளுக்கு உறவின்
மேன்மையை தன் செயல்களாலும் சொல்லாலும் காட்டிய எலிசபெத் போல வாழ
நினைப்போம். இன்றைய தினம் ஏற்றப்பட்ட நான்காம் மெழுகுதிரி நமது
உறவின் மேன்மைக்காக ஏற்றப்பட்ட திரி என்பதை மனதில் கொண்டு
செயல்படுவோம். உறவுகளின் உன்னதமும் உதுப்பிடமுமாய் இருக்கின்ற
இறைஇயேசுவின் வருகையில் மகிழ்ந்து வாழ்வோம்... தங்கிளைச்செறா
அமைக்காக நம் உறவுகளை நாடிச்செல்வோம் உயர் மகிழ்வுடன் வாழ்வோம்.
இறை ஆசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தாரோடும் இருப்பதாக
ஆமென்.
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி
தூக்கத்திலிருந்து விழித்தெழுதல்
திருவருகைக்காலத்தின் நான்கு ஞாயிறு நற்செய்தி வாசகங்களும் ஒன்றோடொன்று
இணைந்து நகர்கின்றன: (1) விழித்திருங்கள்! (2) தயாரியுங்கள்! (3)
மகிழுங்கள்! மற்றும் (4) ஏற்றுக்கொள்ளுங்கள்!
இன்று நாம் ஏற்றுகின்ற மெழுகுதிரி அமைதியைக் குறித்துக் காட்டுகின்றது.
போர் மற்றும் எதிரியின் அச்சுறுத்தல்களால் குழப்பம் அடைந்த ஆகாசு
அரசனின் மனம் இறைவன் தருகின்ற 'இம்மானுவேல்' அடையாளத்தால் அமைதி
பெறுகிறது. மரியாவை ஏற்றுக்கொள்வதா அல்லது யாருக்கும் தெரியாமல் விலக்கி
விடுவதா எனக் குழப்பம் அடைந்த யோசேப்பின் மனம் இறைவனின்
வெளிப்பாட்டில் அமைதி பெறுகிறது. ஆகாசு மற்றும் யோசேப்பு தூக்கத்திலிருந்து
விழித்தெழுகின்றனர். தூக்கத்திலிருந்து விழித்தெழுகின்ற எவரும் அமைதியைத்
தழுவிக் கொள்கிறார். ஆக, தூக்கம் நம் வாழ்வுக்கு உடல் அளவில் அமைதி
தந்தாலும், மன அமைதியைப் பெற்றுக்கொள்ள நாம் தூக்கம் கலைப்பது அவசியம்.
இன்றைய வாசகங்கள் மூன்று மனிதர்களையும், அவர்களுடைய தூக்கங்களையும்,
அவற்றிலிருந்து அவர்கள் விழித்தெழுவதையும் நம் கண் முன் கொண்டுவருகின்றன.
கிமு 735ஆம் ஆண்டு ஆகாசு யூதாவை ஆட்சி செய்தார். சாலமோன்
அரசருக்குப் பின்னர் ஒருங்கிணைந்த இஸ்ரயேல் அரசு, வடக்கே இஸ்ரயேல்,
தெற்கே யூதா என்று பிரிந்தது. வடக்கே உள்ள இஸ்ரயேல் அரசு
அசீரியாவின் அடிமையாக மாறி வரி செலுத்தி வந்தது (காண். 2 அர
15:19-20). இஸ்ரயேலின் அரசனான பெக்கா, சிரியாவின் அரசன் ரெஸினுடன்
இணைந்து அசீரியாவை எதிர்க்கவும், அசீரியாவுக்கு எதிராக ஆகாசின்
படைகளைத் திருப்பவும் திட்டமிட்டான். ஆகாசு அத்திட்டத்திற்கு
உடன்பட மறுத்ததால் அவனை நீக்கிவிட்டு, தபியேலின் மகனை தாவீதின்
அரியணையில் அமர வைக்க விரும்பி, ஆகாசின் மேல் படையெடுத்தான்.
ஏறக்குறைய எருசலேமை நெருங்கியும் விட்டான் (காண். எசா 7:1).
வலுவற்ற உள்ளம் கொண்ட ஆகாசு, அச்சத்தால் நடுங்கி அசீரியப் பேரரசன்
திக்லத்-பிலேசரின் உதவியை நாட முடிவெடுத்தான் (காண். 2 அர 16:7).
அப்படிச் செய்வதற்கு அவன் நிறைய வரிசெலுத்த வேண்டியிருந்ததுடன்,
நாட்டின் சுதந்திரத்தையும் பணயம் வைக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.
இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் இறைவாக்குரைக்குமாறு எசாயா
அனுப்பப்படுகின்றார் (முதல் வாசகம்). ஆகாசு ஆண்டவராகிய கடவுளின்
துணையையோடு, தன் மக்களின் துணிவையோ நாடாமல் எதிரியின் உதவியை
நாடுகிறான். ஆகாசு அரசனின் அச்சத்தைக் களையவும், அசீரியாவுடன்
கூட்டுச் சேர்வதைத் தடுக்கவும் இறைவாக்கினர் எசாயா அடையாளம் ஒன்றை
வழங்குகின்றார். அடையாளம் வழங்குதல் என்பது இறைவாக்குரைத்தலின் ஒரு
கூறு ஆகும். ஆண்டவரைச் சார்ந்திருப்பதற்கு அஞ்சுகின்ற ஆகாசு, 'நான்
கேட்க மாட்டேன். ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன்' (எசா 7:12) என்று
போலியாகச் சொல்கின்றார். அவனது நம்பிக்கையின்மையைக்
கடிந்துகொள்கின்றார் எசாயா: 'மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம்
சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப்
பார்க்கிறீர்களா?' (எசா 7:13).
தொடர்ந்து எசாயா, 'ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை
அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம்பெண் ஓர் ஆண் மகவைப்
பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு அவர், 'இம்மானுவேல்' என்று
பெயரிடுவார்' (எசா 7:14) என்று அடையாளம் ஒன்றை வழங்குகின்றார்.
இந்த அடையாளத்துக்கான விளக்கம் தெளிவாக இல்லை. கிரேக்க
மொழிபெயர்ப்பிலும், மத்தேயு நற்செய்தியிலும் (1:23), 'இளம்பெண்'
என்னும் சொல்லுக்குப் பதிலாக, 'கன்னி' என்னும் சொல்
பயன்படுத்தப்பட்டுள்ளது. எசாயா இறைவாக்கு நூலில் 'இளம்பெண்' என்ற
சொல் யாரைக் குறிக்கிறது? என்னும் கேள்விக்குத் தெளிவான விடை காண
நம்மால் இயலவில்லை. சில விவிலிய அறிஞர்கள், இறைவாக்கினர் எசாயாவின்
மனைவியைக் குறிக்கலாம் என்கின்றனர். ஓசேயா இறைவாக்கினரின் மகன்கள்
அடையாளமான பெயர்களைப் பெற்றது போல, எசாயாவின் இரு மகன்களும்
அடையாளமான பெயர்களைப் பெறுகின்றனர் 'செயார்யாசிப்' ('எஞ்சியோர்
திரும்பி வருவர்') (எசா 7:3), 'மகேர் சாலால் கஸ்-பாசு' ('கொள்ளைப்
பொருள் வேகமாக வருகின்றது. இரை விரைகின்றது') (எசா 8:3).
'இம்மானுவேல்' என்பது இரண்டாவது பெயரைக் குறிக்கலாம் என்பது
இவர்களின் கருத்து. இன்னும் சிலர், 'இம்மானுவேல்' என்னும் சொல்
ஆகாசின் மகன் எசேக்கியாவைக் குறிக்கிறது என்பர். ஆனால், இந்த
இறைவாக்கு உரைக்கப்படும்போது எசேக்கியாவுக்கு ஏற்கெனவே ஒன்பது வயது
ஆகிறது (காண். 2 அர 16:2). எசாயாவைப் பொருத்தவரையில்,
'இம்மானுவேல்' என்னும் சொல், 'செயார்யாசிப்' என்னும் சொல்லைப் போல
பெரிய கருத்துருவையும் புரட்சியையும் தன்னிலே கொண்டுள்ளது.
ஆகையால்தான், 'இம்மானுவேலே, அதன் கிளைகள் உன் நாட்டின்
பரப்பையெல்லாம் நிரப்பி நிற்கும்' (எசா 8:8) என்று மீண்டும்
இச்சொல்லைப் பயன்படுத்துகின்றார்.
ஆகாசுக்கு ஆண்டவராகிய கடவுள் அளித்த 'இம்மானுவேல்' என்னும்
அடையாளம் நம்பிக்கை தருகின்ற வாக்குறுதியா? அல்லது அழிவை
முன்னுரைக்கும் அச்சுறுத்தலா? என்னும் கேள்வியும் எழுகிறது.
முதலில் இதை மீட்பு மற்றும் ஆசீரின் அடையாளமாகத்தான் எசாயா
முன்னுரைக்கின்றார் (எசா 7:4, 7). அப்படி என்றால், ஆகாசின்
நம்பிக்கையின்மை அடையாளத்தின் தன்மையை மாற்றிவிட்டதா? 'எப்ராயிமின்
தலைநகர் சமாரியா. சமாரியா நகரின் தலைவன் இரமலியாவின் மகன். உங்கள்
நம்பிக்கையில் நிலைத்திராவிடில் நீங்களும்
நிலைத்துநிற்கமாட்டீர்கள்' (எசா 7:9). 'அந்தக் குழந்தை தீமையைத்
தவிர்த்து, நன்மையை நாடித் தேர்ந்து கொள்வதற்குமுன் உம்மை
நடுநடுங்கச் செய்யும் அரசர்கள் இருவரின் நாடுகளும்
பாலைநிலமாக்கப்படும்' (எசா 7:16) என்னும் வாக்கியத்தில் வரும் 'இரு
நாடுகள்' என்பது 'சிரியா மற்றும் எப்ராயிமை' குறிக்கிறதா? அல்லது
'யூதா மற்றும் அசீரியாவை' குறிக்கிறதா? என்பதும் தெளிவாக இல்லை.
'யூதா மற்றும் அசீரியாவைக் குறிக்கிறது' என்றால், 'இம்மானுவேல்'
அடையாளம் அச்சுறுத்தல் மற்றும் எச்சரிக்கையாக இருக்கிறது. மேலும்,
'அவன் வெண்ணையையும் தேனையும் உண்பான்' (எசா 7:15) என்றும்
இறைவாக்குரைக்கின்றார் எசாயா. 'பாலும் தேனும்' பாலைவனத்து உணவே
அன்றி, செழிப்பான விவசாய நிலத்தின் உணவு அல்ல. அப்படி எனில்,
இம்மானுவேல் பிறக்கும்போது அனைத்தும் அழிக்கப்பட்டு நிலம்
பாழாக்கப்படுமா? எசாயாவின் இந்தப் பாடம் புரிந்துகொள்வதற்குக்
கடினமாகவே இருக்கிறது. பெரும்பாலான அறிஞர்கள், 'இது வாக்குறுதியின்
அடையாளம்' என்றே 'இம்மானுவேல்' அடையாளத்தைக் கருதுகின்றனர்.
'இம்மானுவேல்' என்னும் பெயரில் இளம்பெண்ணின் நம்பிக்கை
அடங்கியுள்ளது. குழந்தை பிறப்பதற்கு முன்னர் தன் நாடு
விடுவிக்கப்படும் என்று அவள் நம்புகிறாள். ஆனால், அந்த நம்பிக்கை
ஆகாசுக்கு இல்லை. ஆக, சிரியாவும் எப்ராயிமும், தொடர்ந்து வருகின்ற
அசீரியப் படையெடுப்பும் அழிந்துவிடும். எஞ்சியோர் வழியாக
யூதாவுக்கு மீட்பு வரும் (காண். எசா 11:11). 'இம்மானுவேல்' என்னும்
பெயரைத் தொடர்ந்து வரும், 'மகேர் சாலால் கஸ்-பாசு' ('கொள்ளைப்
பொருள் வேகமாக வருகின்றது. இரை விரைகின்றது) என்னும் பெயரும்
நம்பிக்கை தருகின்ற பெயராக இருக்கிறது. எசா 7:15, 17 என்னும்
வாக்கியங்கள் எதிர்மறையான பொருளைத் தந்தாலும், ஒட்டுமொத்த பாடப்
பகுதி நேர்முகமான பொருளையே தருகின்றது.
மத்தேயு நற்செய்தியாளர் தன் நற்செய்தியில் பல முதல் ஏற்பாட்டு
மேற்கோள்களைப் பயன்படுத்துகின்றார். அவர் தன் மேற்கோள்களை
எழுபதின்மர் பதிப்பிலிருந்து (கிரேக்கம்) கையாளுகின்றார்.
குறிப்பாக, இயேசு பிறப்பு நிகழ்வில் பல முதல் ஏற்பாட்டு
இறைவாக்குகள் நிறைவேறுவதாக முன்மொழிகின்றார். எடுத்துக்காட்டாக,
'யூதேயாவிலுள்ள பெத்லகேமில் மெசியா பிறக்க வேண்டும். ஏனெனில்,
'யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே
இல்லை. ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலே ஆயரென ஆள்பவர் ஒருவர்
உன்னிலிருந்தே தோன்றுவார்' என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார்' (மத்
2:5-6ளூ மீக் 5:2). முதல் இறைவாக்காக மத்தேயு முன்மொழிவது, ''இதோ!
கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு
இம்மானுவேல் எனப் பெயரிடுவர்' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர்
உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால்
'கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பது பொருள்'' (மத் 1:22-23).
இங்கே மத்தேயு, 'இம்மானுவேல்' என்ற சொல்லின் பொருளையும்
முன்மொழிகின்றார். மத்தேயு நற்செய்தியார், 'இம்மானுவேல்' என்னும்
அடையாளம் 'இயேசு' என்னும் 'ஆபிரகாமின் மகனை, தாவீதின் மகனை'
குறிப்பதாகப் பதிவு செய்கின்றார்.
ஆக, அச்சம் என்னும் தூக்கத்திலிருந்த ஆகாசு ஆண்டவராகிய கடவுள்
எசாயா வழியாக அருளிய அடையாளத்தால் துணிவுக்குள் விழித்தெழுந்து
அமைதி பெறுகின்றார்.
இன்றைய இரண்டாம் வாசகம் (காண். உரோ 1:1-7), பவுல் உரோமையருக்கு
எழுதிய திருமடலின் தொடக்கமாக இருக்கிறது. இரு உள்பிரிவுகளைக்
கொண்டுள்ளது இந்தப் பாடம்: முதலில், பவுல் மூன்று சொற்களால் தன்
அடையாளத்தைப் பதிவு செய்கின்றார் 'இயேசு கிறிஸ்துவின் தொண்டன்
அல்லது அடிமை,' 'திருத்தூதன்,' மற்றும் 'நற்செய்திப் பணிக்காக
ஒதுக்கிவைக்கப்பட்டவன்.' ஆண்டவராகிய திருஅவையை, ஆண்டவரின்
திருஅவையை அச்சுறுத்துவதற்காகத் தமஸ்கு புறப்பட்ட சவுல்
தூக்கத்திலிருந்து விடுதலை பெறுகின்றார். புதிய அடையாளங்களைப்
பெற்றுக்கொள்கின்றார். இரண்டாவதாக, 'தாவீதின் மரபினரான இயேசுவே
கடவுளின் மகன்' என முன்மொழிந்து பிறஇனத்தார் அனைவரையும்
நம்பிக்கைக்கு விழித்தெழச் செய்கின்றார்.
ஆக, நம்பிக்கையின்மை என்னும் தூக்கத்திலிருந்த பவுல் (மற்றும்
பிறஇனத்தார்) இயேசு கிறிஸ்து தமஸ்கு வழியில் தோன்றிய நிகழ்வு
வழியாக நம்பிக்கைக்குள் விழித்தெழுந்து அமைதி பெறுகின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 1:18-24), இயேசுவின் பிறப்பு
யோசேப்புக்கு முன்னறிவிக்கப்படும் நிகழ்வாகவும், பிறக்கப்போகும்
குழந்தைக்கு வழங்கப்படும் பெயரின் வரையறையாகவும் இருக்கின்றது.
நேர்மையாளராகிய யோசேப்பு, தூய ஆவியால் மரியாள்
கருத்தாங்கியிருக்கும் குழந்தையைத் தன்னுடையதாக
ஏற்றுக்கொள்கின்றார். இந்த ஏற்றுக்கொள்தல் 'பெயரிடும் நிகழ்வால்'
உறுதிசெய்யப்படுகிறது.
நிகழ்வில் அதிகமாகச் சிந்தித்துக்கொண்டிருந்த யோசேப்பு திடீரென
தூங்கிவிடுகின்றார். கனவில் ஆண்டவரின் தூதர் அவரிடம் பேசுகின்றார்.
இரு செய்திகள் தரப்படுகின்றன. ஒன்று, மரியா கருவுற்றிருப்பது தூய
ஆவியாரால்தான். இரண்டு, குழந்தைக்கு வழங்கப்பட வேண்டிய பெயர்.
வாழ்வின் எதார்த்தங்கள் நம் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக
இருக்கும்போது, அதீத எண்ணங்களால் நம் மனத்தின் சுமை
அதிகமாகும்போது, உடனடியாகத் தூங்கிவிடுதல் நலம் என்பது யோசேப்பு
தருகின்ற முதல் பாடமாக இருக்கின்றது.
நிராகரித்தல் என்னும் தூக்கத்திலிருந்த யோசேப்பு கனவில் நிகழ்ந்த
வெளிப்பாட்டின் வழியாக ஏற்றுக்கொள்தல் என்னும் நிலைக்கு
விழித்தெழுந்து அமைதி பெறுகின்றார்.
இன்று நம் வாழ்வில் நாம் தூங்கிக்கொண்டிருக்கும் நிலைகளில்
இருக்கக் காரணம் நாம் கொள்ளும் அச்சம், நம்பிக்கையின்மை, மற்றும்
நிரகாரித்தல் ஆகியவைதாம். இவற்றால்தாம் நம் அமைதியும்
நிலைகுலைகிறது. தனிப்பட்ட வாழ்வு பற்றிய அச்சம், இறைவன்மேல்
நம்பிக்கையின்மை, மற்றவர்களின் இருத்தலையும் இயக்கத்தையும்
நிரகாரித்தல் ஆகியவற்றிலிருந்து நாம் விழித்தெழ வேண்டும் எனில்
என்ன செய்வது?
இறைவனின் குறுக்கீட்டைக் கண்டடைந்து அதை உறுதியாகப்
பற்றிக்கொள்வது.
திருவருகைக்காலத்தின் நான்காம் (இறுதி) வாரத்திற்குள் நுழையும்
நாம் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து அமைதியின் அரசரைக்
கண்டுகொள்வோம்.
நிற்க.
'கடவுள் நம்மோடு' என்னும் செய்தியை மையமாக வைத்துச் சிந்தித்தால்,
பின்வரும் பிறழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டியவை. 'கடவுள் நம்மோடு'
என்பது மூன்று நிலைகளில் பிறழ்வுக்குள்ளாக்கப்படுகிறது.
அப்பிறழ்வுகள் எவை எனவும், அவற்றை எப்படிக் களைவது எனவும் அறிதல்
முதன்மையான வாழ்வியல் சவால்.
(அ) கடவுள் நம்மோடு இல்லை முதல் ஏற்பாட்டில் சில கதைமாந்தர்களை
விட்டு கடவுள் நீங்குகின்றார். தனிநபர்களும் (காண். சிம்சோன் நீத
16:20, சவுல் 1 சாமு 16:14) ஒட்டுமொத்த குழுவும் (இஸ்ரயேல் மக்கள்
எசே 11:23), 'கடவுள் நம்மோடு இல்லை' என்ற உணர்வைப் பெறுகின்றனர்.
'கடவுள் நம்மோடு இல்லை' என்பது இங்கே ஒரு வாழ்வியல் அனுபவமாக
அவர்களுக்கு இருக்கிறது. சில நேரங்களில் நம் வாழ்வில் நாம்
நம்பிக்கை இழக்கிறோம். நம் அன்புக்குரியவரின் இறப்பு, எதிர்பாராமல்
நிகழும் இழப்பு, குணப்படுத்த இயலாத நோய், மீள முடியாத தீய பழக்கம்
ஆகியவை, 'கடவுள் என்னோடு இல்லை' என்ற ஒருவித விரக்தி உணர்வை
நம்மில் ஏற்படுத்துகிறது. கோவித்-19 பெருந்தொற்று மற்றும் இயற்கைச்
சீற்றங்களின்போது, கடவுள் நம்மை விட்டு நீங்கிவிட்டதாக நாம்
உணர்கிறோம். சிலர் தங்கள் வாழ்வில் தாங்கள் செய்த தவறான
செயல்களுக்காகக் கடவுள் தங்களைத் தண்டிக்கிறார் என்று
நினைப்பதுண்டு. எடுத்துக்காட்டாக, அறியாமல் செய்த கருச்சிதைவினால்,
தங்களுக்கு குழந்தைப்பேறு இல்லாமல் கடவுள் செய்துவிட்டார் என்றும்,
நாம் ஆன்மிகத்தில் நன்றாக இல்லாததால், கடவுள் நமக்குத் தீமைகளை
அனுப்புகிறார் என்றும் சில நேரங்களில் நாம் எண்ணுகிறோம். கடவுள்
நம் தீச்செயலின் பொருட்டு தன் உடனிருப்பை நம்மிடமிருந்து
விலக்கிக்கொள்வதில்லை. ஆக, 'கடவுள் நம்மோடு இல்லை' என்ற
அவநம்பிக்கையை நம் உள்ளத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்.
(ஆ) கடவுள் நம்மோடு இருக்கத் தேவையில்லை
அறிவொளி இயக்கம் தொடங்கிய காலம் தொட்டே, அறிவு அரியணையில்
ஏற்றப்பட்டு, நம்பிக்கை வெளியே விரட்டப்பட்டு வருகிறது. புலன்களால்
உணர முடியாத எதுவும் இருத்தல் கொண்டிருப்பதில்லை எனக் கற்பிக்கின்ற
அறிவுமைய வாதம் கடவுளையும் புலன்களுக்குள் அடக்கிவிட நினைக்கிறது.
ஆக, அறிவொளி இயக்கம் கடவுள் நம்பிக்கையை சுமையாகப் பார்க்கிறது.
மேலும், சமயச் சடங்குகள் அனைத்தும் மூட நம்பிக்கைகளாக
பார்க்கப்படுகின்றன. இரண்டாவதாக, சமயத்தின் பெயரால் நடந்தேறும்
வன்முறை, போர், அறநெறிப் பிறழ்வுகள் ஆகியவற்றைக் காண்கின்ற சிலர்,
கடவுள் இல்லாமல் இருந்தால் இத்தகைய சண்டைகள் தவிர்க்கப்படலாம்
என்றும், கடவுள் இருப்பது நமக்கு ஒரு பெரிய நேர விரயம் என்றும்
கருதுகின்றனர். சிலர் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தாலும் ஆலயம்,
அருள்பணி நிலை போன்ற அமைப்புகள் தேவையற்றவை எனக் கருதுகின்றனர்.
மூன்றாவதாக, கடவுள் நம்மோடு இல்லை என்றால் நாம் விரும்பியதை
நம்மால் செய்ய இயலும் என்று சொல்கின்ற சிலர், கடவுள்
இருப்பதால்தான் அறநெறிக் கோட்பாடுகள் இருக்கின்றன என்று சொல்லி,
கடவுள் நம்மோடு இருக்கத் தேவையில்லை என முன்மொழிகின்றனர். யோபுவும்
கூட தன் துன்பத்தின் ஒரு கட்டத்தில், 'என்னுடைய நாள்கள்
சிலமட்டுமே. என்னிடமிருந்து எட்டி நிற்பீரானால், மணித்துளி
நேரமாவது மகிழ்ந்திருப்பேன்' (யோபு 10:20) என்கிறார். தன்
மகிழ்ச்சியைத் தடைசெய்கின்ற நபராக கடவுளைக் காண்கின்றார் யோபு.
அறிவுவாதத்தின் கூற்று உண்மை போல இருந்தாலும், வெறும் புலனறிவு
மட்டுமே மனித அறிவு அல்ல. புலன்களால் உணர முடியாத பல எண்ணங்கள் நம்
மூளையில் இருக்கின்றன. இறையனுபவம் என்பது புலனறிவுக்கு
அப்பாற்பட்டது. கடவுள் பெயரால் நாம் பல நேரங்களில்
பிளவுபட்டிருந்தாலும், சமயம் மானுடருக்கு அளிக்கப்பட்ட
மயக்கமருந்து என்றாலும், சமயத்தின் வழியாக நிறைய மேம்பாடு மனித
இனத்தில் நடந்துள்ளது என்பதையும் நாம் மறுக்க இயலாது. கடவுள்
நம்பிக்கை இல்லை என்றாலும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை, நீதி
போன்ற கோட்பாடுகள் இருக்கவே செய்கின்றன. ஆக, கடவுள் நம்மோடு
இருக்கத் தேவையில்லை என்ற கூற்று ஆபத்தானது.
(இ) கடவுள் எங்களோடு மட்டும்
'கடவுள் நம்மோடு' என்ற சொல்லாட்சி, 'கடவுள் எங்களோடு' அல்லது
'கடவுள் எங்களோடு மட்டும்' என்று மாறும்போது சமய அடிப்படைவாதம்
தோன்றுகிறது. மனிதர்களுக்குள் பிளவை ஏற்படுத்துவதோடு, தங்களைச்
சாராத மற்றவர்களை அழிக்கவும் இது தூண்டுகிறது. கடவுள் யாருடைய
தனிப்பட்ட உரிமைப் பொருளும் அல்ல. பல நேரங்களில் கடவுளைக்
காப்பாற்றுவதிலும், கடவுள்சார் கோட்பாடுகளைத் தூக்கிப்
பிடிப்பதிலும் நாம் நேரத்தையும் ஆற்றலையும் பணத்தையும்
செலவழிக்கின்றோம். 'எங்கள் கடவுளே உண்மைக் கடவுள்' என்ற மனநிலையே
காலனியாதிக்கத்திற்கும் கட்டாய சமயமாற்றத்திற்கும் வழிவகுத்தது.
உண்மைக் கடவுள் யார் என உறுதி செய்ய நடந்தேறிய போர்களை வரலாறு
அறியும். கடவுள் எங்களோடு மட்டும் என்ற மனநிலையில்தான்
தூய்மை-தீட்டு, மேல்-கீழ், உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்னும்
பாகுபாடுகள் வருகின்றன. ஆக, 'கடவுள் நம்மோடு' என்பது ஒட்டுமொத்த
மானுட அனுபவமாக இருக்க வேண்டுமே தவிர, தனிப்பட்ட குழுவின்
அடிப்படைவாத நிகழ்வாக மாறக் கூடாது.
இப்பிறழ்வு எண்ணங்களும் நம் அமைதியைக் குலைக்கின்றன. 'கடவுள்
நம்மோடு' என்று இறங்கி வந்த இயேசு, 'கடவுள் நமக்காக' என்று
விண்ணேறிச் சென்றார். கடவுள் நம்மோடு இருக்கிறார் எனில், நாம்
அவரோடும், அவர் வழியாக ஒருவர் மற்றவரோடும் இணைந்து நின்றால்
எத்துணை நலம்!
"கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருப்போம்"
குருவிடமிருந்து கிடைத்த பாராட்டு:
தனக்கு வயலின் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் இருக்கின்றது என்பதை அறிந்த
அந்த இளைஞன் அதை முறைப்படி கற்றுக்கொண்டான். அத்தோடு நின்றுவிடாமல்,
அதில் வல்லுநராக வேண்டும் என்பதற்காக அவன் தொடர்ந்து பயிற்சிகளை
மேற்கொண்டான். ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு பெரிய அரங்கில், தன்னுடைய
இசை நிகழ்ச்சியை அரங்கேற்றவும் முடிவு செய்தான் அவன். அதற்காக அவன்
எல்லா ஏற்பாடுகளையும் செய்து, தன்னையே தயாரித்துக் கொண்டான்
குறிப்பிட்ட நாளும் வந்தது. அன்றைய நாளில், அவனுடைய இசை நிகழ்ச்சியைக்
கண்டுகளிக்க அரங்கமே நிரம்பி வழிந்தது. அவன் தன் கையில் வயலினை எடுத்து
வாசிக்கத் தொடங்கியபோது, பார்வையாளர்களின் கைதட்டலால் அரங்கே அதிர்ந்தது.
அவன் அந்தக் கைதட்டல்களில் மயங்கி விடாமல், தொடர்ந்து வாசித்தான்.
இடையிடையே, அவன் அரங்கியின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த ஒரு பெரியவரைப்
பார்த்துக் கொண்டான். ஒரு கட்டத்தில் பெரியவர் தம் கைகளை உயர்த்தி
அவனுக்குப் பாராட்டுத் தெரிவித்தபோதுதான் அவன் மிகவும் மகிழ்ந்தான்.
அரங்கிலிருந்த அனைவரும் கைகளைத் தட்டி, வாழ்த்துகளைத்
தெரிவித்தபோதும் மகிழாத அந்த இளைஞன், மூலையில் இருந்த ஒரு பெரியவர்
தம் கைகளை உயர்த்தித் தம் வாழ்த்துகளைத் தெரிவித்தபோது மகிழ்ந்தான்
எனில், அதற்கு முக்கியக் காரணம், அந்தப் பெரியவர் அவனுக்கு வயலின்
வாசிக்கக் கற்றுக்கொடுத்த குரு. அதனால்தான் அவர் தம்
வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தபோது, அவன் மகிழ்ந்தான்.
ஆம், இந்த நிகழ்வில் வரும் இளைஞன் எப்படித் தன் குருவிடமிருந்து
வாழ்த்தினைப் பெறுவதற்காகச் சிறந்த முறையில் வயலின் வாசித்தனோ,
அப்படி நாம் ஒவ்வொருவரும் கடவுளிடமிருந்து வாழ்த்தினைப்
பெறுவதற்காக இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருக்கவேண்டும்.
திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட
இறைவார்த்தை, "நாம் இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாய்
இருக்கவேண்டும்" என்ற அழைப்பினைத் தருகின்றது. நாம் எப்படி இயேசு
கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருப்பது? என்பது குறித்துச்
சிந்திப்போம்.
கீழ்ப்படிதலை விடச் சிறந்த பலியில்லை:
கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் தன் விருப்பம் போல் நடந்த,
இஸ்ரயேலின் முதல் அரசனான சவுலிடம் சாமுவேல் சொல்லும்
வார்த்தைகள்தான், "கீழ்ப்படிதல் பலியைச் சிறந்தது" (1சாமு 15:22).
இவ்வார்த்தைகள் சவுலுக்கு மட்டுமல்லாமல், இன்று நம்
ஒவ்வொருவருக்கும் பொருந்தும். ஒருவர் எந்த இனத்தவராக இருந்தாலும்,
அவர் ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், அவர் ஆண்டவரின் சொந்த
இனத்தவராக மாறுகின்றார், அல்லது இயேசு கிறிஸ்துவுக்கு
உரியவராகிறார். அதே நேரத்தில் ஒருவர் கடவுளின் சொந்த இனத்தில்
அல்லது, அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனத்தில் பிறந்தவராக
இருந்தாலும், அவர் கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து
நடக்காவிட்டால், அவர் யாரோ ஒருவராகத்தான் இருப்பார் இன்றைய
இறைவார்த்தை நமக்குச் சொல்லும் செய்தியும் இதுதான்.
ஒரு காலகட்டத்தில் கிறிஸ்தவர்களைப் பிடித்துத் துன்புறுத்தி,
அதன்மூலம் கிறிஸ்துவைத் துன்புறுத்தியவர் பவுல். அப்படிப்பட்டவர்
தமஸ்கு நகர் நோக்கிச் செல்லும்போது ஆண்டவர் இயேசுவால்
தடுத்தாட்கொள்ளப்பட்டுப் பிறவினத்தாருக்கு நற்செய்தி அறிவிக்கப்
பணிக்கப்பட்டார் (திப 9:15; உரோ 11:13). இதன்பிறகு அவர்
பிறவினத்தாருக்கு நற்செய்தி அறிவிக்கத் தொடங்கினார்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில், பிறவினத்தாராகிய உரோமையர்களுக்குக்
கடிதம் எழுதும்போது, பவுல் தன்னை இயேசு கிறிஸ்துவின் பணியாளன்,
திருத்தூதனாக அழைக்கப்பட்டவன் எனத் தன்னை அறிமுகம்
செய்துகொண்டுவிட்டு, கிறிஸ்து இயேசுவைப் பற்றிய நற்செய்தியை
அறிவிக்கின்றார். அந்த நற்செய்தி கடவுளால் தம் இறைவாக்கினர்
வாயிலாகத் திருநூலில் வாக்களித்ததுதான் என்று சொல்லிவிட்டு,
இறுதியில், "பிற இனத்தாராகிய நீங்களும் இயேசு கிறிஸ்துவுக்கு
உரியவர்களாய் இருக்க அழைப்பு பெற்றிருக்கின்றீர்கள்" என்கிறார்
அவர் யூதரல்லாத அனைவரும் பிற இனத்தவர்தான். அந்த அடிப்படையில்,
உரோமையரைப் போன்று பிறவினத்தாராகிய நாமும் கடவுளின் கட்டளையைக்
கடைப்பிடித்து, இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருக்கவேண்டும்.
அதுதான் பவுல் விடுக்கும் அழைப்பாகும்.
அரசனின் கீழ்ப்படியாமை:
ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்ற
ஒருவரால் மட்டுமே அவருக்கு உரியவராக இருக்க முடியும் என்று
பார்த்தோம். இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவரே ஒரு அடையாளத்தைத்
தருவதாகச் சொல்லியும், அவருக்குக் கீழ்ப்படியாமல், ஆகாசு தம்
விருப்பப்படி நடப்பதைக் குறித்து வாசிக்கின்றோம்.
திருவிவிலியத்தில் அடையாளம் கேட்பது, ஆண்டவரைச் சோதிப்பதற்கு
இணையானது. இயேசு கூட, பரிசேயர்கள் தன்னிடம் அடையாளம் கேட்டபோது,
அவர்களைக் கடுமையாகச் சாடியதைப் பற்றி நற்செய்தியில் நாம்
வாசிக்கின்றோம் (மத் 12: 38-42). இந்நிலையில், இன்றைய முதல்
வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, ஆகாசு மன்னனிடம் அடையாளம் ஒன்றைக்
கேட்குமாறு சொன்னபோது, அவன், "நான் கேட்க மாட்டேன்; ஆண்டவரைச்
சோதிக்க மாட்டேன்" என்கிறான். இதை நல்ல விதமாய்
எடுத்துக்கொள்ளலாமா? என்றால் முடியாது என்றுதான் சொல்லவேண்டும்.
ஏனெனில், இந்த ஆகாசு மன்னன் ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ள
அழைக்கப்பட்டான். அவனோ ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளாமல்,
சிரியாவோடும் இஸ்ரயேலோடும் கூட்டுச்சேர்ந்து கண்டு, ஆண்டவரைப்
புறக்கணித்தான். எனவேதான் இறைவாக்கினர் எசாயா அவனிடம்,
"ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார்..." என்கிறார்.
ஆம், ஆகாசு அரசனாக இருந்தாலும் ஆண்டவருக்குக் கீழ்ப்படியாமல்
நடந்து, யாரோ ஒருவர் போன்று ஆனான்.
யோசேப்பின் கீழ்ப்படிதல்
அரசன் என்பவன் ஒரு நாட்டிற்கே தலைவன். அவன் ஆண்டவர்மீது நம்பிக்கை
வைத்து, எல்லாருக்கும் முன்மாதிரியாய் இருந்திருக்கவேண்டும்.
ஆனால், ஆகாசு மன்னன் ஆண்டவருக்குக் கீழ்ப்படியாமல், துன்மாதிரியாய்
இருக்கின்றான். இதற்கு முற்றிலுமாக மாறாக, தாவீதின் வழிவந்த
யோசேப்பு ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து, அவருக்கு உகந்தவராகின்றார்.
"மணமாகியும் கன்னிமை கழியாத ஒருத்தியை நகரில் ஒருவர் சந்தித்து,
அவளோடு உறவு கொண்டால், இவர்கள் இருவரையும் நகர் வாயிலுக்குக்
கொண்டு போய்க் கல்லால் எறிய வேண்டும்" (இச 22: 23-24) என்பது யூதச்
சட்டம். யோசேப்பு தனக்கு மண ஒப்பந்தம் செய்யப்பட்ட மரியா தன்னோடு
கூடி வாழ்வதற்கு முன்பே கருவுற்றிருக்கின்றார் என்கிற செய்தியைக்
கேள்விப்பட்டதும், அவர் யூதச் சட்டத்தின் படி நடக்காமல், அவரை
மறைவாக விலக்கிவிடத் திட்டமிடுகின்றார். அல்லது எண்ணிக்கை நூலில்
சொல்லப்பட்டது (எண் 5:1-11) போன்று நடந்து கொள்ள முடிவு
செய்கின்றார். இந்நிலையில்தான் ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில்,
தோன்றி, மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான் என்கிறார்.
இதையடுத்து, தூக்கத்திலிருந்து விழித்தெழும் யோசேப்பு, கனவில்
ஆண்டவரின் தூதர் தனக்குச் சொன்னது போன்றே தன் மனைவி மரியாவை
ஏற்றுக்கொள்கின்றார்.
ஆம், அரசராய் இருந்த ஆகாசு ஆண்டவரின் கட்டளைக்குக்
கீழ்ப்படியாதபோது, தாவீதின் வழிவந்த யோசேப்பு, ஆண்டவரின்
கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, அவரது திருவுளம் நிறைவேறக் காரணமாக
இருக்கின்றார். இன்று பலர் ஆகாசைப் போன்று தங்கள் விருப்பம் போன்று
நடக்கின்றார்கள். அவர்களால் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க
முடியாது. நாம் யோசேப்பைப் போன்று கடவுளுக்கு உகந்தவர்களாய்
இருக்கவேண்டும். அதற்காக ஆண்டவரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து
நடக்கவேண்டும். நாம் ஆண்டவரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து
நடக்கத் தயாரா? சிந்திப்போம்.
சிந்தனைக்கு:
'கடவுளுக்கு அஞ்சி நட; அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படி.
இதற்காகவே மனிதர் படைக்கப்பட்டுள்ளனர்' (சஉ 12:13) என்கிறது சபை
உரையாளர் நூல். எனவே, நாம் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து, இயேசு
கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருப்போம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
இறைவனின் சந்திப்பிற்கு இன்று அடிக்கல்
நாட்டப்படுகிறது. ஆண்டவர் தாமே ஓர் அடையாளம் தருகிறார். "இதோ,
கருவுற்று இருக்கும் அந்த இளம்பெண் ஓர் ஆண் மகவைப்
பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவர் இம்மானுவேல் என்று பெயரிடுவார்"
(எசா. 7:14).
ஆண்டவர் விண்ணகத்தினின்று மானிடரை உற்று நோக்குகின்றார்!
மதி நுட்பமுள்ளோர், கடவுளை நாடுவோர் எவராவது உண்டோ எனப்
பார்க்கின்றார். எல்லாரும் நெறி பிறழ்ந்த ஒருமித்துக்
கெட்டுப்போயினர். நல்லது செய்வார் யாரும் இல்லை (திபா.
14:2-3) என்கிறார் திருப்பாடல்கள் ஆசிரியர். இப்படி மனிதன்
கடவுளைத் தேட நினைக்காதபோது, கடவுள் மனிதனைத்தேடி வருகிறார்!
இறைவன் மனிதரைச் சந்திக்க நினைத்ததற்குக் காரணம் உண்டு!
தான் படைத்த உலகத்தைக் கடவுள் பார்த்தார்! அழுகின்றவர்களின்
எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது! மனிதன் மனிதனை
வெறுக்கத் துவங்கினான். தனி மரம் தோப்பாகலாம்! தோப்பு தனிமரமாவதைக்
கடவுள் கண்டார். காடு வீடாகலாம்! வீடு காடாகலாமா? வீடு
காடாவதைக் கடவுள் கண்டார். மிருகம் மனிதனாகலாம்! மனிதன்
மிருகமாகலாமா? மனிதன் மிருகமாவதைக் கடவுள் கண்டார்!
நானென்ன, என் சகோதரனுக்குக் காவலாளியா என்ற காயினின்
கேள்வி மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது! எங்கு
பார்த்தாலும் கல்லறைத் தோட்டங்கள் பலுகிப் பெருகத் துவங்கின.
நீதிக்கொரு கல்லறை. நேர்மைக்கொரு கல்லறை, அன்புக்கொரு கல்லறை,
அமைதிக்கொரு கல்லறை, சமத்துவத்திற்கொரு கல்லறை, சகோதரத்துவத்திற்கொரு
கல்லறை. சுதந்திரத்திற்கொரு கல்லறை. இந்தக் கல்லறைகளுக்கெல்லாம்
பொய்யும், புரட்டும், வஞ்சகமும், சூழ்ச்சியும், அநீதியும்,
அக்கிரமும் காவல் நின்றன. யாரையும் யாரும் சந்திக்க விரும்பவில்லை!
எங்கு பார்த்தாலும் சுயநலம்! இப்படிப்பட்ட சூழ்நிலையில்,
தன்னால் படைக்கப்பட்ட மனிதர்கள் துடிதுடித்து, அனாதைகள்
போல சாவதைக் கடவுள் விரும்பவில்லை! நமது தாயைவிட நம்மை அதிகம்
அன்பு செய்பவராயிற்றே நமது கடவுள்! (எசா. 49:15)
இயேசு யார் யாரைச் சந்தித்தாரோ அவர்களின் வாழ்வில் உடல்நலம்
பொங்கியது. உள்ள அமைதி பொங்கியது. உயிர்ப்பு பொங்கியது. உன்னத
வாழ்வு பொங்கியது. இயேசு பேதுருவின் மாமியாரைச் சந்தித்தார்.
அவளுக்கு உடல்நலம் கிடைத்தது (மத். 8:14-15). இயேசு
பேய்பிடித்த இருவரைச் சந்தித்தார். அவர்களுக்கு விடுதலை
கிடைத்தது (மத். 8:26-34). இயேசு பாவத்தில் பிடிபட்ட
பெண்ணொருத்தியைச் சந்தித்தார் (யோவா. 8:1-11). பாவிக்கு
பாவ மன்னிப்பு கிடைத்தது. இயேசு கல்லறையில் வைக்கப்பட்டிருந்த
இலாசரைச் சந்தித்தார். இலாசருக்கு உயிர்ப்பு கிடைத்தது
(யோவா. 11:44).
இயேசு தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களைச் சந்தித்தார். அவர்களுக்கு
அன்னை கன்னிமரியாள் உருவிலே பாதுகாப்பு கிடைத்தது
(யோவா.19:25-27). உயிர்த்த இயேசு தனது சீடர்களைச் சந்தித்தார்.
அவர்களுக்குச் சமாதானம் கிடைத்தது ( யோவா.20:29). உலக மக்கள்
அனைவரும் இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் வாழ அழைப்பு
பெற்றிருக்கிறார்கள் (உரோ.1:7). இயேசு யார் யாரைச் சந்தித்தாரோ
அவர்களின் வாழ்வெல்லாம் ரோஜாப் பூக்களாக, மல்லிகைப் பூக்களாக,
தாமரைப் பூக்களாக, செவ்வந்திப் பூக்களாக, செண்பகப் பூக்களாக,
மலரும் பூக்களாக, மிளிரும் பூக்களாக, வளரும் பூக்களாக
பூத்துச் சிரித்தன.
இப்படி நம்மை வாழ வைக்கும் இயேசுவைச் சந்தித்து புது
வாழ்வும், புத்துயிரும் பெற விசுவாசத்தாலும், நம்பிக்கையாலும்
நம்மையே நாம் அலங்கரித்துக் கொள்ளும் முயற்சியில் இந்நாட்களிலே
ஈடுபடுவோம்.
நம்மோடு வாழ இயேசு பிறக்கப்போகின்றார். நற்செய்தியிலே
ஆண்டவரின் தூதர். இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகளைப்
பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப்பெயரிடுவீர்
(மத் 1:22) எனக் கூறுகின்றார். இம்மானுவேல் என்றால்
கடவுள் நம்முடன் இருக்கின்றார் என்பது பொருள் (மத்
1:23).
நமக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒருவர் நம் வீட்டில் தங்க
வந்தால் நமது வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க நாம் எல்லா
முயற்சிகளையும் எடுப்போம். நம்மைச் சந்திக்க வருபவர்
இயேசு (மத் 1:21அ). அவர் பாவங்களிலிருந்து நம்மை
விடுவிக்கும் மீட்பர் (மத் 1:21ஆ): கடவுள் (மத் 1:23):
தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட இறை மகன் (உரோ 1:4அ) ஆண்டவர்
இயேசு கிறிஸ்து (உரோ1:4); அருளின் ஊற்று (உரோ 1:5அ).
நம்மோடு வாழ, நம் இல்லத்திற்குள்ளும், உள்ளத்திற்குள்ளும்
வாசம் செய்ய வரும் கடவுளுக்கு நாம் தகுந்த மரியாதை
செலுத்த விரும்பினால், நமது மனத்தை. உள்ளத்தைத்
தூய்மையாக வைத்துக் கொள்ள மனமுவந்து முன் வரவேண்டும்.
நம்மையே நாம் எப்படித் தூய்மைப்படுத்திக் கொள்ளலாம்?
நாம் பாவிகள் என்பதை ஏற்றுக்கொள்வதே நமது ஆன்மிக
வாழ்வின் அடித்தளம். என்னிடம் பாவம் உண்டு என்று உங்களுள்
யாராவது குற்றம் சுமத்த முடியுமா ? (யோவா 8:46) என்று
கேட்கும் அளவுக்கு இந்த உலகத்திலே யாரும் இயேசுநாதர்
கிடையாது. அருள்மிகப்பெற்றவரே வாழ்க! (லூக் 1:28) என்று
வாழ்த்தப்படும் அளவுக்கு இந்த பூமியில் யாரும் தேவ அன்னையும்
கிடையாது.
புனித பவுலடியார் உரோமையருக்கு எழுதியுள்ள திருமுகத்தில்
உரோ 3:9-18) கூறியுள்ளதுபோல நாம் எல்லாரும் பாவிகளே.
புனித யோவான் தாம் எழுதியுள்ள முதல் திருமுகத்திலே (1
யோவா 1:8) பாவம் நம்மிடம் இல்லையென்போமானால் நம்மையே
நாம் ஏமாற்றிக்கொள்கின்றோம் என்கின்றார்.
பாவிகளில் இரண்டு வகையினர் உள்ளனர் : சிலர் திட்டமிட்டுப்
பாவம் செய்வார்கள் : சிலர் அறிவுத் தெளிவின்மையால் தவறி
பாவத்தில் விழுந்துவிடுவார்கள். இரண்டுக்கும் இரண்டு
உதாரணங்கள் :
அன்று பெரிய வெள்ளிக்கிழமை! ஒரு மாடப்புறாவை வல்லூறுகள்
பிடித்து, அதனை பலவந்தமாக இழுத்து வந்து பிலாத்துவின்
முன்னால் நிறுத்தினர் இயேசுதான் அந்த மாடப்புறா.
இயேசு என்ன குற்றம் செய்தார்? அவர் எந்தக் குற்றமும்
செய்யவில்லை. நம்மைப்போன்று ஒரு சாதாரண, சராசரி மனிதனாக
வாழ இவன் மறுக்கின்றானே! இவனை இப்படியே
விட்டுவிட்டால். எல்லாரையும் இவன் தன் பக்கம் இழுத்துவிடுவான்.
இவனைக் கொலை செய்துவிட வேண்டும் என்று எண்ணியவர்கள் இயேசுவின்
மீது சிலுவையைச் சுமத்தி அவரைக் கொல்ல (யோவா18:31)
விரும்பினார்கள்.
பிலாத்து மூன்று முறை, இவனிடம் நான் குற்றம் ஒன்றும்
காணாயில்லையே (யோவா 18:38ஆ: 19:4ஆ, 6ஆ) என்றான். பிறகு
ஏன் இயேசுவை விடுதலை செய்யவில்லை? ஆசை, பேராசை, பதவி
மீது பேராசை! தன்னுடைய பதவி ஆசைக்கு இயேசுவை அவன் பலியாக்கினான்.
அவன் அறியாமலா பாவம் செய்தான்? அறிந்து. புரிந்து உணர்ந்து,
தெரிந்து பாவம் செய்தான்.
அறிவுத் தெளிவு இல்லாமலும் சிலர் பாவம் செய்வதுண்டு!
ஒருவன் மருந்துக் கடைக்கு மருந்து வாங்கச் சென்றான்.
கடைக்காரரிடம் விக்கலுக்கு மருந்து கேட்டான். கடைக்காரர்,
மருந்து கேட்டவனை ஓங்கி அறைந்தார். மருந்து வாங்கப்போனவன்
: எதுக்காக என்னை அறைஞ்சே? என்று கேட்டான். அதற்கு கடைக்காரர்
சொன்னார் : விக்கலுக்கு அதிர்ச்சி வைத்தியம்தான்
பெஸ்ட். இப்பப் பாரு. நான் உன்னை அறைஞ்சதினாலே விக்கல்
நின்னிட்டு என்றார். அதற்கு மருந்து கேட்டவன்: அடப்பாவி,
விக்கல் எனக்கு இல்லேய்யா, என் மனைவிக்கு என்றான்.
அந்த கடைக்காரர் செய்தது குற்றம், பாவம்! ஆனால் அதை
அவர் அறியாமல் செய்தார். பாவம் என்பது ஒரு குடம்
பாலில் ஒரு துளி விஷம் போன்றது! அது நம்மைப்
பாதிக்கும்! நம் உள்ளத்திலும், இல்லத்திலும் தங்க வரும்
இயேசுவை மகிழ்ச்சியோடு வரவேற்கவிடாமல் அது நம்மைத் தடுத்துவிடும்.
நமது உள்ளத்தையும், இல்லத்தையும் இயேசு தங்கக்கூடிய இனிய
இடமாக மாற்ற நம்மையே நாம் இந்த நாள்களிலே
தூய்மையாக்கிக் கொள்வோம்.
இன்று இதுவே நமது செபமாக இருக்கட்டும் :
இயேசுவே! என் வாய் உம்மைப்போற்ற மறந்தது போதும்!
என் நா உம்மைப் புகழ மறந்தது போதும்! என் கண்கள் உம்மைத்
தேட மறந்தது போதும்!
என் செவிகள் உம் வார்த்தையைக் கேட்க மறந்தது போதும்!
என் சுவாசம் உம்மைச் சுவாசிக்க மறந்தது போதும்!
போதும் ! நான் உம்மைவிட்டு ஓடியது போதும்!
ஓடி ஓடி களைத்துப்போனேன்!
என்னிடம் மிஞ்சியிருப்பதெல்லாம்
சோதனை, வேதனை, தயக்கம், மயக்கம், குழப்பம், பயம்,
பஞ்சம், பசி!
போதும்! நான் உம்மைவிட்டு ஓடியது போதும்!
இன்று உமது உடனிருப்பால் என்னைத் தொட்டுக் குணமாக்கி
உமக்கு ஏற்ற இல்லிடமாக என்னை மாற்றியருளும். மேலும்
அறிவோம்:
இன்றி யமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல் (குறள் : 961).
பொருள்: கட்டாயமாகச் செய்து தீர வேண்டும் என்னும்
சிறப்புடையவை என்றாலும் தன் மதிப்பைக் குறைக்கும்
செயல்களை ஒருபோதும் செய்யக்கூடாது.
ஒரு மாணவன் ஒழுங்காகப் படிப்பதில்லை. அவனுடைய வகுப்பு ஆசிரியர்
கேட்டதற்கு, "அப்பாவும் அம்மாவும் எப்போதும் சண்டை போடுவதால்
என்னால் படிக்க முயவில்லை" என்றான். யாருடா உன் அப்பா? என்று
ஆசிரியக் கேட்டதற்கு, "அதைப் பற்றிதான் ஒவ்வொரு நாளும் சண்டை
நடக்குது" என்றான்!
எத்தனையோ குடும்பங்களில் கணவன் - மனைவி இடையே விரிசல் ஏற்படுவதற்குக்
காரணம், ஒருவர் மற்றவருடைய நடத்தையைப் பற்றிச் சந்தேகப்படுவதாகும்.
யோசேப்பு- மரியாவுடைய வாழ்வில் திருமணத்திற்கு முந்தியே சந்தேகப்
புயல் வீச ஆரம்பித்துவிட்டது. மரியாவுக்கும்
யோசேப்புக்கும் இடையே திருமண ஒப்பந்தம் மட்டும் செய்யப்பட்டிருந்தது.
ஆனால் அவர்கள் இன்னும் கூடி வாழவில்லை. அதற்கு முன்பே மரியா
கருவுற்றிருந்ததை அவர் கணவர் யோசேப்பு ஏற்கவும் இயலவில்லை;
மரியாவைக் காட்டிக் கொடுக்கவும் மனமில்லை. இந்நிலையில் மரியா
கருவுற்றிருப்பது தூய ஆவியால் என்ற செய்தியை வானதாதர்
யோசேப்புக்குக் கனவில் தெரிவித்த போது, நேர்மையாளரான
(நீதிமானாகிய) யோசேப்பு மரியாவைச் சற்றும் தயக்கமின்றித்
தம் மனைவியாக ஏற்றுக் கொண்டார்.
மரியா தம் கணவர் யோசேப்பின் துணையின்றிக் கன்னிமையில் தூய
ஆவியால் கிறிஸ்துவைக் கருத்தாங்குவார் என்பது இறைவாக்கினார்
எசாயாவால் முன்னறிவிக்கப்பட்டது என்பதை நற்செய்தியாளரான மத்தேயு
அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார். "இதோ கன்னிப் பெண் கருவுற்று
ஓர் ஆண்மகனைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு இம்மானுவேல்
என்று பெயரிடுவர்" (எசா 7:14: மத் 1:22-23) இன்றைய முதல்
வாசகம் கிறிஸ்துவின் கன்னிமைப் பிறப்பை எடுத்துக் கூறுகிறது.
ஏசாயா 7:14ம் சொற்றொடரின் மூலப் பாடத்தில் வருகின்ற "இளம்
பெண்" என்ற சொல்லை மத்தேயு தமது நற்செய்தியில் 'கன்னி' என்று
மொழிபெயர்த்துள்ளார். மரியா கன்னிமையில் கிறிஸ்துவை ஈன்றெடுத்தார்
என்பது மத்தேயுவின் நம்பிக்கை; அதுவே திருச்சபையின் நம்பிக்கை,
அதை நாமும் ஏற்று அறிக்கையிடுவதில் பெருமையடைகிறோம்.
கிறிஸ்துவுக்கு ஒரே தந்தை, வாகைத் தந்தை எனவே யோசேப்பு
கிறிஸ்துவை ஈன்ற தந்தையாக இருக்க முடியாது. மேலும் மீட்பு
கடவுளுடைய முன் செயல்; அது யோசேப்பின் முன் செயலாக இருக்கவும்
முடியாது.
எனினும் சட்ட ரீதியாகப் பார்க்கும்போது, இயேசு கிறிஸ்து
தாவீதின் மகன், இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல்
கூறுகிறார்: "இயேசு கிறிஸ்து மனிதர் என்னும் முறையில்
தாவீதின் வழி மரபினர்" (உரோ 1:3). கிறிஸ்து தாவீதின் மகன்
என்று கருதப்படுவதற்குக் காரணம் மரியா அல்ல, மாறாக
யோசேப்பு ஆவார். ஏனெனில் யோசேப்புதான் தாவீது குலத்தில் பிறந்தவர்.
அவரைத் 'தாவீது மகன்' (மத் 1:20) என்றும், 'தாவீது வழி மரபினர்'
(லூக் 2:4) என்றும் நற்செய்தி கூறுகிறது.
யோசேப்பு மரியாவின் கணவராசு இல்லையென்றால், மரியாவுக்கு 'நடத்தை
கெட்டவள் என்ற பட்டம் சூட்டி அவரைக் கல்லால் எறிந்து
கொன்றிருக்கும் அன்றைய யூதச் சமுதாயம், கிறிஸ்து
யோசேப்பின் மகனாகக் கருதப்பட்டார் (லூக் 3:23). யோசேப்பு
உண்மையிலேயே ஒரு நேர்மையாளர்; கடவுளின் திட்டத்தை ஏற்றுக்கொண்டவர்.
நாமும் அவரைப் பின்பற்றி நமது புத்திக்கு அப்பாற்பட்ட
மீட்பின் மறையுண்மைகளை ஏற்றுக் கொள்வோம்.
மரியா ஒரு கன்னி. கன்னிமைப் பண்பு என்பது இதயத்தின்
முழுமை,பிளவுபடாத ஒரு மனப்பட்ட உள்ளம். மரியா பிளவுபடாத ஒரு
மனப்பட்ட உள்ளத்துடன் தம்மை முழுமையாகக் கடவுளுக்கு அர்ப்பணித்தார்.
மசியாவின் அடியொற்றித் திருச்சபையும் ஒரு கன்னி ஏனெனில்
இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூறுவதுபோல், முழு விசுவாசம்,
தளராத நம்பிக்கை, உண்மையான அன்பு இவற்றைக் கன்னிமைப் பண்போடு
திருச்சபை காத்து வருகிறது. (திருச்சபை, எண் 64)
நாமும் நமது கிறிஸ்துவ வாழ்வில் விசுவாசம் கன்னிமையைப் பழுதறப்
பாதுகாக்க வேண்டும். கிறிஸ்து நமது மணமகன் என்றும், அவர்முன்
நாம் கற்புள்ள கன்னியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்
திருத்தூதர் பவுல் (2கொரி 11:2). ஒருசில கத்தோலிக்கக்
கிறிஸ்தவர்கள் போலிப்போதகர்கள் வலையில் சிக்கித் தங்களது
விசுவாசக் கன்னிமையை இழந்து கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.
ஓர் இளைஞன் ஒரு இளம் பெண்ணைக் காதலித்து, பிறகு அவளை
விட்டுவிட்டு, அவளின் தங்கையைக் காதலிக்க ஆரம்பித்தான். ஏன்
அவன் அவ்வாறு மாறினான்? என்று அக்கா கேட்டபோது அவன், "நான்
என்ன செய்வது? உன்னைப் பார்த்த போது என்னை மறந்தேன்; உன்
தங்கையைப் பார்த்தபோது உன்னை மறந்தேன்" என்றான். அவன் ஒரு
சந்தர்ப்பவாதக் காதலன்!
அவ்வாறே கத்தோலிக்கத் திருச்சபையில் நீண்ட நெடுங் காலமாக
இருந்தவர்கள். போலிச் சபைகளின் மாயக்கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு,
கத்தோலிக்கத் திருச்சபையை விட்டுவிட்டு அப்போலிச் சபைகளில்
சேர்கின்றனர். இவர்கள் யார்? புனித பவுல் கூறுகிறார்; ஏவா
பாம்பின் சூழ்ச்சியால் ஏமாற்றப்பட்டதைப்போல். தங்கள் எண்ணங்களைச்
சீரழியவிட்டு, கிறிஸ்துவிடம் விளங்கிய நேர்மையையும்
தூய்மையையும் இழத்துவிட்டவர்கள் (2 கொரி 11:3). பச்சையாகச்
சொல்ல வேண்டுமென்றால், தங்களுடைய விசுவாசக் கற்பை இழத்தவர்கள்!
மரியா ஒரு கன்னி: திருச்சபையும் ஒரு சுன்னி. இருவருமே இறைவனுக்கு
என்றும் பிரமாணிக்கமாய் உள்ளவர்கள். கிறிஸ்து பிறப்புப்
பெருவிழாவுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ளது, இந்த இறுதிக்
கட்டத்தில் நாம் கன்னி மரியாலைப் பின்பற்றிக்
கிறிஸ்துவுக்கும், உண்மைக்கு அரணும் அடித்தளமுமாகத் திகழும்
திருச்சபைக்கும் (1 திமொ 3:15) உண்மை உள்ளவர்களாய் இருப்போம்.
கடவுளை முழுமையான, பிளவு படாத, ஒருமனப் பட்ட உள்ளத்துடன்
அன்பு செய்வோம்.
மரியன்னை வழியாகவே 'வார்த்தை மனிதர் ஆனார்; நம்மிடையே
குடிகொண்டார்' (யோவா 1:14); கடவுள் இம்மானுவேல் ஆனார்; அதாவது
கடவுள் என்றென்றும் நம்முடன் இருக்கின்றார் (மத் 1:23). இம்மானுவேல்
என்றும் உங்களோடு இருந்து உங்கள் வாழ்வைச் செம்மையுறச்
செய்து, உங்களை அமைதியின் பாதையில் (லூக் 1:79) வழிதடத்துவாராக!
இந்தப் பள்ளியில் கிறிஸ்து பிறப்பு விழாக் கொண்டாட்டம். ஆடல்
பாடல் நாடகம் நடனம் என்று மாணவர்கள் கலக்கினர். அதில் நாடகக்
காட்சி ஒன்று (கதை, வசனம், இயக்கம் எல்லாம் அவர்களே)
காவலாளி: "சத்திரத்தில் இடமில்லை" என்று போர்டு
போட்டிருக்கிறோமே உம் கண்ணில் அது படவில்லையா?
யோசேப்பு: தெரிகிறதையா... ஆனால் என்னுடைய மனைவி நிறைமாதக்
கர்ப்பிணி...
காவலாளி: அதற்கு நானா காரணம்?
யோசேப்பு: (பரிதாபத்துக்குரிய மெல்லிய குரலில்) அதற்கு
நானும். காரணமில்லை....!
நாடகம் என்ற நிலையில் புன்முறுவல் பூக்கலாம். ஆனால் நடைமுறை
எதார்த்தத்தில்...?
மரியா கருவுற்றிருக்கிறாள் என்ற உண்மை யோசேப்புக்கு எவ்வளவு
பெரிய அதிர்ச்சியை, மனக்குழப்பத்தைத் தந்திருக்க வேண்டும்!
இந்த உண்மையை அறிந்ததும் அவர் நடந்து கொண்ட விதம் தான் நம்மை
வியப்பில் ஆழ்த்துகிறது.
மனைவியின் வயிற்றில் கருவாக வளர்வது தன் குழந்தை இல்லை என்று
கணவன் அறியும் போது அவரைச் சட்டப்படி கடுமையான சோதனைக்கு
உட்படுத்த வேண்டும். (எண்.5:11-31). தவறு எண்பிக்கப் பட்டால்
ஒன்று அவரைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் அல்லது மணமுறிவு
செய்ய வேண்டும். (இணை.22:20,21)
யோசேப்பு இரண்டாவது முறையில் மிகவும் மென்மையாக நடந்து மறைவாக
விலக்கிவிட விரும்பினார். இந்த மனித நேய உணர்வு தான் ஆழமான
அவரது நம்பிக்கைக்குப் புதுப்பொலிவு தருகிறது.
மரியாளுக்கு நேர்ந்தது கூட அவ்வளவாக அல்ல, மரியாளின் மௌனம்தான்
யோசேப்பை நிம்மதி இழக்கச் செய்திருக்கும். மரியாளின் அன்பையும்
நேர்மையையும் கூட சந்தேகத்துக்கு உள்ளாக்கி இருக்கும். உண்மையான
அன்பு இருந்திருந்தால், கபிரியேல் தூதன் மூலம் கடவுள்.
சொன்னதை, செய்ததை முன்கூட்டியே யோசேப்பிடம் சொல்லியிருக்க
வேண்டாமா?
ஆண்டவனின் திட்டமிது. அதனால் வரும் சிக்கலை ஆண்டவன்தான்
தீர்த்து வைக்க வேண்டும், தீர்த்து வைப்பார் என்ற உறுதியே
மரியாவின் மௌனத்துக்குக் காரணமாக இருந்திருக்கும்.
கடவுள் எப்படிச் சிக்கலைத் தீர்த்து வைத்தார் என்பதே இன்றைய
நற்செய்தி.
கணவன் மனைவிக்கிடையே ஆயிரம் சிக்கல்கள் எழலாம். அவற்றில்
நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதை வைத்தே நாம்
நேர்மையானவர்களா, பண்பாடுடையவர்களா என்று முடிவு கட்ட
முடியும். ஒரு கணவன் மனைவி, ஏதோ காரணத்தால் இரண்டு
பேருக்குள்ளும் உறவு விரிசல். மணமுறிவு வாங்க
நீதிமன்றத்துக்குப் போன கணவனைப் பார்த்து "உன் மனைவி என்ன
தப்புப் பண்ணினா?" என்று ஒருவன் கேட்டான். கணவன் "இன்னும்
டைவர்ஸ் வாங்கல. அதனால் என் மனைவியைப் பற்றி எதுவும் சொல்ல
விரும்பல" என்றான். டைவர்ஸ் வாங்கிட்டுக் கோர்ட்டிலிருந்து
வரும்போது அதே ஆள் "டைவர்ஸ் தான் வாங்கிட்டியே? இப்பச்
சொல்லு உன் சம்சாரம் என்ன தப்புப் பண்ணினாள்? " என்றான்.
அதற்குக் கணவன் "டைவர்ஸ் வாங்கிட்டதாலே இப்ப அவள் என்
மனைவி இல்லை. அதனால் மனைவி இல்லாத ஒருத்தியைப் பத்தி நான்
பேசுறது தப்புன்னு போய் விட்டான். கேள்வி பண்பாடற்றது.
பதிலோ பண்பாடானது.
யோசேப்பு வெளிப்படுத்திய பண்பாட்டிற்கு முன் இது
எம்மாத்திரம்! இத்தகைய பண்பட்ட மனநிலையே நேர்மையாளர்,
நீதிமான் என்ற பேரை யோசேப்பு வாங்க வைத்தது!
"உலகமே அவருக்கு உரிமைச் சொத்தாகும் என்னும் வாக்குறுதி
ஆபிரகாமுக்கோ அவருடைய வழிமாபினர்களுக்கோ திருச்சட்டத்தைக்
கடைப்பிடித்ததால் கிடைக்கவில்லை. நம்பிக்கை கொண்டு
கடவுளுக்கு ஏற்புடையவர் ஆனதால் தான் அவ்வாக்குறுதி
கிடைத்தது (ரோமை.4:13) ஆபிரகாமைப் பின்பற்றி யோசேப்பு மனித
நேயம் கலந்த நம்பிக்கையின் அடிப்படையில் இறைத்திட்டத்தை
நிறைவேற்றத் தயங்காத நேர்மையாளர்.
இயேசு கற்றுத் தந்த செபத்தில் வரும் வார்த்தைகள்: "உமது
திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும்
நிறைவேறுக (மத்.6:10). இதன் பொருள்: நாம் விரும்புவதை
இறைவன் நமக்குச் செய்ய வேண்டும் என்பதன்று. மாறாக இறைவன்
விரும்புவது. நம்மால், நம்மில் நிறைவேற வேண்டும் என்பதே!
மரியா இயேசுவின் மீது கொண்ட அன்பு இரத்த உறவால் எழும்
அன்பு. தான் ஆடாவிட்டாலும் தன் சதையை ஆடவைக்கும் அன்பு.
யோசேப்பின் அன்பு விசுவாச உறவால் வந்தது. எது பெரிது? "என்
தாய் யார்? என் சகோதரர்கள் யார்?... விண்ணகத்தில் உள்ள என்
தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதாரும்
சகோதரியும் தாயும் ஆவார்" (மத்.12:49-50)
"இதோ கன்னி கருவுற்று ஓர் ஆண் மகவைப் பெற்றெடுப்பார்.
அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர் (மத்.1:22,
எசா.7:14) என்று ஆண்டவர் அருளிய அடையாளம் யோசேப்பின்
நம்பிக்கைக்குப் புதிய ஒளி, சோர்வுற்ற மனதுக்கு ஓர் உறுதி,
ஐயுற்ற அறிவுக்குப் புதுத்தெளிவு.
இறைவன் மானிடப் பிறப்பெடுத்த நிகழ்வில் நாம் பார்க்கும்
இரு உண்மைகள்: 1. யோசேப்பு நீதித்தன்மைக்குச் சிறந்த
எடுத்துக்காட்டு. 2. மரியா தூய்மைப் பண்புக்குச் சிறந்த
எடுத்துக்காட்டு. இரண்டும் இல்லாத சமுதாயம் அவலமான
வீழ்ச்சிக்கு ஆளாகும்.
கிறிஸ்துமஸ் என்பது இறைவனைப் பிரசன்னப்படுத்தும் நமது பணி.
மரியாவின் தூய்மையிலும் யோசேப்பின் நீதி உணர்விலுமே இறைவன்
தன் பிரசன்னத்தை நிலைநாட்டினார்.
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச.
திருச்சி
வாழவைக்கும் கனவுகள்
அடுத்த ஞாயிறு, கிறிஸ்து பிறப்புப் பெருவிழா. ஒரு குழந்தையை
மையப்படுத்திக் கொண்டாடப்படும் இவ்விழா, பல கோடி குழந்தைகள்
மனதில் கனவுகளை வளர்க்கும் விழா. இவ்விழாக் காலத்தில் தனக்குக்
கிடைக்கப்போகும் பரிசைப் பற்றியக் கனவுகள், பலகோடி குழந்தைகளின்
உள்ளங்களில் அலைமோதும். அந்தப் பரிசை வழங்கப்போவது
'கிறிஸ்மஸ் தாத்தா' என்ற கனவையும், குழந்தைகள் சுமந்து
வாழ்கின்றனர். குழந்தைகளின் இத்தகையக் கனவுகள் அர்த்தமற்றவை,
ஆபத்தானவை என்று அறிவுரைகள் வழங்கும் பெரியவர்களையும் நாம்
காணலாம். பொதுவாகவே, கனவுகள் காண்பதும், கனவுலகில் வாழ்வதும்
குழந்தைத்தனம் என்பது, வயதில் வளர்ந்துவிட்ட பலரின்
தீர்ப்பு. கனவுகள் இன்றி மனுக்குலம் இதுவரை
வாழ்ந்திருக்குமா என்பது கேள்விக்குறிதான்.
சென்ற ஞாயிறு, பாலை நிலம் பூத்துக் குலுங்கும் என்று, இறைவாக்கினர்
எசாயா, கற்பனை கலந்து கண்ட கனவைப் பற்றி சிந்தித்தோம். இந்த
ஞாயிறு, மீண்டும் கனவைப் பற்றி சிந்திக்க வந்திருக்கிறோம்.
குறிப்பாக, கனவுக்கு செயல் வடிவம் கொடுப்பதுபற்றியும், அவ்விதம்
செயல்வடிவம் கொடுப்பதற்கு நம்மிடம் உள்ள தடைகள் பற்றியும்
சிந்திக்க வந்திருக்கிறோம். நமது சிந்தனைக்குத் துணையாக,
கடந்த வாரம் நிகழ்ந்த இரு செய்திகளை நினைவுக்குக் கொணர்வோம்.
முதல் செய்தி, ஆப்கானிஸ்தான் நாட்டில் நிகழ்ந்தது - ஆப்கானிஸ்தான்
நாட்டில் பிறந்து வளர்ந்த முர்தாசா அஹ்மாதி (Murtaza
Ahmadi) என்ற ஆறு வயது சிறுவன், உலகப் புகழ்பெற்ற கால் பந்தாட்ட
வீரர், இலயனல் மெஸ்ஸி (Lionel Messi) அவர்களைச் சந்தித்தான்.
இரண்டாவது செய்தி, இந்தியாவில், மகாராஷ்ட்ரா மாநிலத்தில்
நிகழ்ந்தது - தன் மகளின் திருமண பரிசாக, ஒரு செல்வந்தர்,
90 ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தந்தார்.
முதல் செய்தியில் கூறப்பட்டுள்ள சிறுவன் முர்தாசா, ஆப்கானிஸ்தான்
நாட்டில் பிறந்து வளர்ந்தவன். உலகப் புகழ்பெற்ற கால் பந்தாட்ட
வீரர், மெஸ்ஸி அவர்களின் தீவிர இரசிகன். பிளாஸ்டிக் பை ஒன்றை,
கால்பந்தாட்ட பனியன் போலச் செய்து, அதில் 'மெஸ்ஸி' என்ற பெயரையும்,
10 என்ற எண்ணையும் எழுதி, அச்சிறுவன் உடுத்தியிருந்த
புகைப்படம், மெஸ்ஸியின் இரசிகர் வட்ட வலைத்தளத்தில் பதிவாகி,
உலகெங்கும் வெகு வேகமாகப் பரவியது. அதன் விளைவாக, அச்சிறுவன்,
தன் கனவில் கண்டுவந்த கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி அவர்களை,
டிசம்பர் 13, கடந்த செவ்வாய், கட்டார் நாட்டில் நிகழ்ந்த
ஒரு கால்பந்தாட்ட விளையாட்டில் சந்தித்தான்.
இரண்டாவது செய்தி, இந்தியாவில் நிகழ்ந்தது. மகாராஷ்டிரா
மாநிலத்தின் அவுரங்காபாத் நகரைச் சேர்ந்த மனோஜ் முனோத்
(Manoj Munot) என்ற செல்வந்தர், தன் மகளின் திருமணச் செலவைக்
குறைத்துக்கொண்டு, அத்தொகையில், 90 ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக்
கொடுத்துள்ளார். அவரது மகள், ஷிரேயாவும், அவரது கணவரும் இணைந்து,
அந்த ஏழைகளுக்கு வீட்டுச் சாவிகளை வழங்கினர். "என் தந்தை
எனக்களித்த மிகப் பெரிய திருமணப் பரிசு இதுதான். வறியோர்
எங்களுக்குத் தந்த ஆசீர்வாதங்களை, எவ்வளவு பணம் தந்தாலும்
எங்களால் வாங்கியிருக்க முடியாது" என்று மணப்பெண் ஷிரேயா
கூறினார்.
இந்த இரு செய்திகளும், அவை நமக்குள் உருவாக்கும் பல்வேறு
எண்ணங்களும் சில பாடங்களைப் புகட்டுகின்றன. முதல்
செய்தியில் நாம் சந்திக்கும் முர்தாசா, வறுமையும், ஆபத்தும்
நிறைந்த ஆப்கானிஸ்தான் நாட்டில் பிறந்த சிறுவன். அச்சிறுவனின்
குடும்பம், ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பித்து, வேறொரு
நாட்டிற்குப் புலம்பெயர்ந்த குடும்பம் என்றும் சில செய்திகள்
கூறுகின்றன. கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி அவர்களைப் பற்றி,
தன் மனதுக்குள் வளர்த்துக்கொண்ட கனவுகளே, அச்சிறுவன் சந்தித்த
வேதனைகளிலிருந்து அவனை ஓரளவு காத்தது என்று சொல்லலாம்.
சிறுவன் முர்தாசா, தன் கனவு நாயகனைக் கண்டான் என்பதை மகிழ்வுடன்
எண்ணிப் பார்ப்பவர்கள் உண்டு. ஒரு சிலரோ, அச்சிறுவன்
பிளாஸ்டிக் பையை பயன்படுத்தியது தவறு என்ற பாணியில் விமர்சனம்
கூறியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
செல்வந்தர் மனோஜ் அவர்கள், ஏழைகளுக்கு வீடுகட்டித் தந்த நற்செயலை,
பல்வேறு கோணங்களில் அலசிப்பார்க்க முடியும். இந்தியாவில்,
பணத்தட்டுப்பாடு உருவானபின்பு, ஓர் அரசியல்வாதி, கோடி
கோடியாகச் செலவு செய்து, தன் மகளின் திருமணத்தை நடத்தினார்
என்ற செய்தி வெளியான சில வாரங்களில், மனோஜ் அவர்களைப்பற்றிய
இந்தச் செய்தியும் வெளியானது.
பிரித்தானிய நாளிதழ் ஒன்று (The Independent) இச்செய்தியை
வெளியிட்டதும், ஆரம்பத்தில், மனோஜ் அவர்களைப் பாராட்டி,
வாழ்த்தி, வாசகர் கருத்துக்கள் வெளிவந்தன. ஆனால், சிறிதுநேரம்
சென்று, எதிர்மறையான கருத்துக்களும் வெளிவந்தன. "இதுபோன்ற
செல்வந்தர்களின் அருட்சாதனம்
, பெரும்பாலும் விவாகரத்தில்தான்
முடிகின்றன" என்று ஒருவரும், "இப்படி, சிறு, சிறு வீடுகளை
கட்டி, நிலத்தை வீணாக்குவதைவிட, அடுக்குமாடி அமைப்பில் கட்டியிருந்தால்
நல்லது" என்று மற்றொருவரும் "அந்த இடத்தைச் சென்று
பார்த்தேன். அங்கு, இந்துக்களுக்கு மட்டுமே வீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இஸ்லாமியருக்கும், கிறிஸ்தவருக்கும் வீடுகள் ஒதுக்கப்படவில்லை"
என்று வேறொருவரும், எதிர்மறை கருத்துக்களைக் கூறியுள்ளனர்.
நல்ல செய்திகளைக் கேட்கும்போது, முதலில் நம் உள்ளங்களில்
நல்ல எண்ணங்களும், அதிர்வுகளும் உருவாகின்றன. ஆனால், நாம்
அறிவிலும் வயதிலும் முதிர்ந்தவர்கள் என்ற கோணத்தில்
சிந்திக்க ஆரம்பித்ததும், சந்தேகங்கள், விமர்சனங்கள், எதிர்மறை
எண்ணங்கள் ஆகியவை எழுகின்றன. வயது வந்தவர்கள் என்ற காரணத்தால்,
நம்மில் பலர், கனவுகளுக்கு முக்கியத்துவம் தராமல் வாழப்
பழகிக்கொள்கிறோம்.
கனவுகளைப்பற்றி, இன்று நாம் சிந்திப்பதற்குக் காரணம்... இன்றைய
நற்செய்தியில் நாம் சந்திக்கும் புனித யோசேப்பு. மரியாவின்
கணவரான யோசேப்பு, அமைதியான ஒரு புனிதர். அவரை, வாழ்வின் பல
நிலைகளுக்குப் பாதுகாவலர் என்று போற்றுகிறோம். திருஅவையின்
காவலர், கன்னியர்களின் காவலர், குடும்பங்களுக்குக் காவலர்,
தொழிலாளர்களுக்குக் காவலர்... என்று பலவழிகளில் பெருமைப்படுத்துகிறோம்.
மனித வாழ்வின் மற்றொரு முக்கிய அனுபவத்திற்கும் இவரைக் காவலர்
என்று அழைக்கலாம். புனித யோசேப்புவை, கனவுகளின் காவலர் என்று
நாம் பெருமைப்படுத்தலாம். மத்தேயு நற்செய்தியில் யோசேப்பு
கண்ட கனவுகள் பற்றி மூன்றுமுறை கூறப்பட்டுள்ளது. கருவுற்றிருந்த
மரியாவை ஏற்பதா, விலக்கிவைப்பதா என்று யோசேப்பு
போராடிக்கொண்டிருந்த வேளையில், மரியாவை ஏற்றுக்கொள்ளும்படி,
அவருக்கு, கனவில் ஒரு செய்தி வருகிறது. இந்நிகழ்வு, இன்றைய
நற்செய்தியாகத் தரப்பட்டுள்ளது. (மத். 1: 18-24)
கீழ்த்திசை ஞானிகள் மூவர் வந்து, குழந்தை இயேசுவைக் கண்டு
திரும்பிய பின்னர், யோசேப்புவின் கனவில் தோன்றிய வானதூதர்,
அவரை எகிப்திற்கு ஓடிப்போகச் சொல்கிறார். இரவோடு இரவாக மரியாவையும்,
பச்சிளம் குழந்தை இயேசுவையும் அழைத்துக்கொண்டு யோசேப்பு எகிப்துக்குச்
செல்கிறார். (மத். 2: 13-14) எகிப்தில் அகதிகளாய் இவர்கள்
வாழ்ந்தபோது, சொந்த நாட்டில் ஏரோது இறந்து விடுகிறான்.
மீண்டும் யோசேப்புக்குக் கனவில் செய்திவர, அவர் இஸ்ரயேல்
நாட்டுக்குத் திரும்புகிறார். (மத். 2: 19-21)
இம்மூன்று சம்பவங்களையும் ஆழமாகச் சிந்தித்தால், ஒருசில
பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். இன்றைய நற்செய்தியில்
கூறப்பட்டுள்ள நிகழ்வை முதலில் சிந்திப்போம். மரியாவோடு
திருமண ஒப்பந்தம் நடந்து ஒரு சில நாட்களில், மரியா
கருவுற்றிருந்தார் என்ற கசப்பான, பேரிடியான உண்மை
யோசேப்புவுக்குத் தெரியவருகிறது. இச்சூழலில், யோசேப்பு,
தன் பெயரை, தன் பெருமையை மட்டும் காப்பாற்ற
நினைத்திருந்தால், ஊர் பெரியவர்களிடம் இதைத்
தெரிவித்திருக்கலாம். அவ்வாறு அவர் செய்திருந்தால்,
தன்னைக் காப்பாற்றியிருப்பார். மரியாவோ ஊருக்கு நடுவே,
கல்லால் எறியப்பட்டு, கொடூரமாய் கொலையுண்டிருப்பார்.
இந்தச் சிக்கலான சூழலில், யோசேப்புவின் கனவில் ஆண்டவரின்
தூதர் தோன்றினார் என்கிறது இன்றைய நற்செய்தி. தன்னை
நீதிமான் என்று ஊரில் நிலைநாட்டினால் போதும், மரியா
எக்கேடுகெட்டாகிலும் போகட்டும் என்ற சுயநலக் கோட்டைக்குள்
யோசேப்பு வாழ்ந்திருந்தால், இறைவனின் தூதர் அவரை
நெருங்கியிருப்பாரா என்பதும் சந்தேகம்தான். சுயநல
மனங்களில் கடவுள் நுழைய நினைத்தாலும், அவரால் முடியாது.
மென்மையான மனங்களில் மேலான எண்ணங்களும், கனவுகளும்
தோன்றும். அப்படித் தோன்றிய ஒரு கனவையே இன்று நற்செய்தி
நமக்குச் சொல்கிறது. இந்தக் கனவில் யோசேப்புவுக்கு இறைவன்
தந்த செய்தியை நாம் இப்படியும் சிந்தித்துப் பார்க்கலாம்:
"யோசேப்பே, தாவீதின் மகனே, சட்டங்களை, சமுதாயக்
கட்டுப்பாடுகளை மட்டும் மனதில் எண்ணிக் குழம்பாதே.
அவற்றையும் தாண்டி, மனிதாபிமானத்தோடு நடந்துகொள். இவ்வாறு
நீ நடந்தால், உன்னையும் மரியாவையும் மட்டுமல்ல.
இவ்வுலகையும் காப்பாற்றும் வழியொன்றை நீ திறப்பாய்"
என்பது, யோசேப்பு கனவில் பெற்ற செய்தி என்று நாம்
சிந்திக்கலாம்.
சுயநலனைக் கடந்து, அடுத்தவர் நலனை முன்னிறுத்துவோர்
உள்ளங்களில் கனவுகள் தோன்றும்; அக்கனவுகள், செயல்வடிவமும்
பெறும் என்பதை, புனித யோசேப்புவின் வாழ்வு நமக்கு
உணர்த்துகிறது. இன்றைய நற்செய்தியை பின்புலமாக வைத்து,
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் டிசம்பர் 15 இவ்வியாழனன்று
சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். உரோம் நகரில்,
குழந்தைகள் நலனுக்கென இயங்கிவரும் புகழ்பெற்ற 'குழந்தை
இயேசு மருத்துவமனை'யைச் சேர்ந்த மருத்துவர்கள்,
பணியாளர்கள், நோயுற்ற குழந்தைகள், அவர்களது
குடும்பத்தினர், மருத்துவமனைக்கு உதவிகள் செய்வோர் என்று,
ஏறத்தாழ 7000 பேரை, இவ்வியாழன் காலை, அருளாளர் ஆறாம் பவுல்
அரங்கத்தில் திருத்தந்தை சந்தித்தபோது, கனவுகளைப் பற்றி
இவ்வாறு பேசினார்: "கனவுகளை, உயிர் துடிப்புடன் வாழவைக்க
வேண்டும். கனவுகளுக்கு மயக்கமருந்து கொடுக்கக்கூடாது"
என்று கூறியத் திருத்தந்தை, இஞ்ஞாயிறு நற்செய்தி வழியே
கனவுகள் பற்றிய பாடங்களை, இறைவன் நமக்குச் சொல்லித்
தருகிறார் என்று தொடர்ந்தார்:
"கனவுகள் கடினமாக இருந்தாலும், அவற்றை நனவாக்க, நடைமுறை
வாழ்வாக்க, இறைவன் அழைக்கிறார். இறைவன் நம் ஒவ்வொருவரையும்
குறித்து கனவு காண்கிறார். கனவுகள் இல்லாத வாழ்க்கை,
கடவுளுக்கு உகந்த வாழ்க்கை அல்ல. உற்சாகமற்ற, சோர்ந்துபோன
வாழ்வு, கிறிஸ்தவ வாழ்வு அல்ல" என்று வலியுறுத்திக்
கூறியத் திருத்தந்தை, கனவுகளுடன் தொடர்புள்ள மற்றோர்
அம்சத்தைக் குறித்தும் பேசினார்: "கனவுகளைத் தொடர்ந்து
வருவது, பரிசு. வாழ்வில் இருவகை இலக்குகளை நாம் துரத்திச்
செல்லமுடியும். ஒன்று, மேலும், மேலும் நமக்கென சேகரித்து
வைத்துக் கொள்வது; மற்றொன்று, தருவது. ஒவ்வொருநாள்
காலையிலும் வீட்டைவிட்டு வெளியேறும்போது, நமது உள்ளம்
நம்மைச் சுற்றியே வட்டமிடுகிறதா, அல்லது, மற்றவர்களைச்
சந்திப்பது, பிறருக்குத் தருவது என்ற திறந்த மனநிலையில்
உள்ளதா?" என்ற கேள்வியை எழுப்பினார், திருத்தந்தை.
எல்லாருமே கனவு காண்கிறோம். யோசேப்புவும் கனவு கண்டார்.
அவரை ஏன் கனவுகளின் காவலர் என்று கூறவேண்டும் என்ற கேள்வி
எழலாம். இக்கேள்விக்கு விடையாக, இரு காரணங்களை
எண்ணிப்பார்க்கலாம்.
முதல் காரணம் : அதிர்ச்சிகளும், அச்சங்களும் நம்மைச்
சூழும்போது, நமது தூக்கம் பெரிதும் பாதிக்கப்படும்.
அப்படியே நாம் தூங்கினாலும், நமது கனவுகளும் நம்மைப்
பயமுறுத்தும். மரியா கருவுற்றிருந்தார் என்பதை அறிந்த
யோசேப்பு, கட்டாயம் இந்த ஒரு நிலையில் இருந்திருக்க
வேண்டும். நம்பமுடியாத அந்த அதிர்ச்சியின் நடுவிலும்,
கனவில் தனக்குக் கிடைத்தச் செய்தியை, நற்செய்தி என்று
நம்பினாரே, அந்தக் காரணத்திற்காக, யோசேப்பைக் கனவுகளின்
காவலராகப் போற்றலாம்.
இரண்டாவது காரணம் : யோசேப்பு தன் கனவில் கண்டதைச்
செயல்படுத்தினார். கனவு காண்பது எளிது. கனவு முடிந்து
எழுந்ததும், கனவின்படி நடப்பது அவ்வளவு எளிதல்ல. கண்ட கனவு
சுகமான கனவு என்றால் ஒருவேளை செயல்படுத்துவது எளிதாகலாம்.
உதாரணமாக, குறிப்பிட்ட ஒரு 'க்ரீமை'ப் பயன்படுத்தினால்,
ஒரு சில வாரங்களில் நமது தோல் நிறம் மாறும் என்றும்,
குறிப்பிட்ட ஒரு பற்பசையைப் பயன்படுத்தினால், நம்மைச்
சுற்றி எப்போதும் நண்பர்கள் சூழ்ந்திருப்பர் என்றும் நமது
விளம்பர உலகம் சொல்லும் எத்தனைக் கனவுகளை நாம்
நம்புகிறோம்? செயல்படுத்துகிறோம்?
ஆனால், யோசேப்பு கண்டதாகக் கூறப்படும் மூன்று கனவுகளும்
கடினமானச் சூழலில், கடினமானதைச் செய்வதற்கு யோசேப்பை
உந்தித் தள்ளிய சவால்கள்... திருமணத்திற்கு முன்னரே
கருவுற்ற பெண்ணை, தன் மனைவியாக ஏற்றுக்கொள்வது; ஏரோதின்
பிடியிலிருந்து தப்பிக்க, பச்சிளம் குழந்தையோடும்,
தாயோடும், எகிப்துக்கு ஓடிச்செல்வது; மீண்டும் தன் சொந்த
நாட்டுக்குத் திரும்புவது... என்று யோசேப்புவுக்கு வந்த
எல்லாக் கனவுகளும் சிக்கலைத் தீர்ப்பதற்குப் பதில்,
மீண்டும் சிக்கலில் தள்ளும் கனவுகளாக இருந்தன.
இருந்தாலும், இம்மூன்று கனவுகளிலும் சொல்லப்பட்டவற்றை
யோசேப்பு உடனே செயல்படுத்தினார் என்று நற்செய்தி
சொல்கிறது. சிக்கலானச் சூழல்களின் நடுவிலும் தன்னை
வந்தடைந்த கனவுகளை இறைவன் விடுத்த அழைப்பு என்று
ஏற்றுக்கொண்டதால், அக்கனவுகளில் சொல்லப்பட்டவற்றைச்
செயல்படுத்தியதால், யோசேப்பைக் கனவுகளின் காவலர் என்று
நாம் கொண்டாடலாம்.
1963, ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி, கறுப்பு, வெள்ளை
இனத்தவரிடையே நல்லுறவு வளரும் என்பதை, "எனக்கொரு கனவு
உண்டு" (I have a dream) என்ற உலகப்புகழ்பெற்ற உரையாக
வழங்கிய மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்களையும், அதே
கனவு, தென்னாப்ரிக்காவில் நனவாகும் என்ற நம்பிக்கையுடன்
வாழ்ந்து, அந்தக் கனவைப் பெருமளவு நனவாக்கி, 2013ம் ஆண்டு,
டிசம்பர் 5ம் தேதி, புகழுடல் எய்திய நெல்சன் மண்டேலா
அவர்களையும், ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து மட்டுமல்ல,
சாதியப் பிரிவுகள், பெண்ணடிமைத்தனம் ஆகிய தளைகளிலிருந்தும்
இந்தியா விடுதலை பெறவேண்டுமென்று கனவுகள் கண்டு, அவற்றை
கவிதைகளாக விட்டுச்சென்ற மகாகவி பாரதியார் அவர்களையும்
வரலாறு மறந்திருக்க வாய்ப்பில்லை. கனவு காணவும், அக்கனவை
நனவாக்கவும் துணிபவர்கள் வாழ்வதால்தான், இவ்வுலகம் இன்றும்
வாழ்ந்து வருகிறது.
கனவுகளின் காவலரான புனித யோசேப்பு, தன் கனவுகளை நம்பி,
செயல்பட்டதால் தன்னையும், மரியாவையும், குழந்தையையும்
மட்டும் காப்பாற்றவில்லை. இவ்வுலகைக் காக்கவந்த இறைவனை
'இம்மானுவேல்' ஆக நம்முடன் தங்கவைத்தார். கனவுகள்
காண்போம். இன்னல்கள் நடுவிலும் நம் கனவுகளை நல்ல முறையில்
புரிந்து கொள்வோம். கனவுகளைச் செயல்படுத்தி, கடவுளை
நம்மோடு தங்க வைப்போம். கனவுகளின் காவலரான புனித யோசேப்பு
நமக்குத் துணை புரிவாராக!
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
அருள்பணி: மாணிக்கம் - திருச்சி
புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க் கழகம்,
பெங்களூர்
அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட்
அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
மீட்பரின் பாதையில் சென்றவளே, மேலவன் திருவுளம் வாழ்ந்தவளே
இகமதில் இருப்பவர் எம் துணையே, எங்களின் இனியநல் இறையன்னையே