நீதியும் இரக்கமும் நிறைந்த இறைவன் உள்ளத்திற்கு உறுதியூட்டி,
பொருள் நிறைந்த வாழ்க்கையை விட, அருள் நிறைந்த வாழ்க்கை வாழ இந்தத்
திருவருகைக் காலத்தின், 3ம் ஞாயிறு வழிபாடு வழியாக, நமக்கு அழைப்பு
விடுக்கின்றார்.
மிகுந்த ஆபத்திலுள்ள அயலாருக்கு அவசரமாய் உதவி செய்து உயிரைக்
காப்பாற்றியது போல தத்ரூபமாய் படம் வரைந்து, பரிசும் பாராட்டும்
பெறுவதை விட, உண்மையில் ஆபத்திலுள்ள அயலாருக்கு உதவி செய்து, உயிரைக்
காப்பாற்றுவது அருள் நிறைந்த வாழ்வல்லவா? சொல்லிலும் பேச்சிலும்
சான்று பகர்வதைவிட, செயலில் சான்று பகர்வதற்கு அருள் தர, இந்த
வழிபாடு நம்மை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றது.
ஏழையைக் கண்டும் மனமிரங்காமல் இருக்கும் போதும், அநியாயத்தைக் கண்டு
அமைதி காக்கும்போதும், அடிமைக்கு விடுதலைதர மறுக்கும்போதும், உயர்ந்த
நிலையில் இருப்பவரை பற்றி பழிக்கும்போதும், நேர்மையாளரை சந்தேகப்படும்போதும்
நமது பேச்சும் சொல்லும் அர்த்தமற்றது. நீதியும் இரக்கமும் நிறைந்த
இறைவனுக்கு இது பிரியமற்றது.
இறைமகன் யேசு பூமிக்குக் கொண்டுவந்த அன்புக்கும் அமைதிக்கும்
சான்றுபகர, நமது வாழ்க்கை முறையை மாற்றியமைப்போம். உள்ளத்திற்கு உறுதி
கேட்போம். நீதியையும் இரக்கத்தையும் நமதாக்குவோம். நற்செயல் செய்து
இறைவனுக்கு சான்றுபகர, அருள் நிறைந்த வாழ்க்கை வாழ, அயலாரின் மகிழ்ச்சியை
மிகுதியாக்குவோம். அயலாருக்காக நம் சொல்லைவிட செயலை அர்ப்பணிக்க,
இந்த வழிபாடு நம் உள்ளத்தை தட்டி எழுப்புகிறது. கூடி
ஜெபிப்போம்.
கோடி நன்மை பெறுவோம்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
அருள் நிறைந்த வாழ்க்கைவாழ
வழிநடத்தும் இறைவா!
திருச்சபையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை, ஆயர்கள்,
குருக்கள், துறவறத்தார், அனைவரையும் ஆசீர்வதியும். இறைமக்களை
அருள் நிறைந்த வாழ்க்கை வாழ வழிகாட்டும் திருச்சபைத்
தலைவர்கள் அனைவருக்கும், நீரே அனைத்துமாக இருந்து உமது
தெய்வீக வல்லமையால் இறைமக்களை வழிநடத்த துணை புரிய
வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
நீதியைத் தண்ணீரைய் பாயச் செய்யும் இறைவா!
நாடுகளின் தலைவர்கள் சமுதாயத்தில் மீது அக்கறை கொண்ட
பொறுப்பு மிக்க தலைவர்கள் எல்லோரும், நீதியுடன் செயல்படவும்,
மக்களின் நிலைவாழ்வுக்கு உதவும் வகையில் இவ்வுலக
பொருட்களைப் பயன்படுத்தி, விண்ணுலக அருள்வாழ்வுக்கு
வழிகாட்டும் விண்மீன்களாகச் செயல்பட அருள்தர
வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
நேர்மையை நீரோடையாய் பாயச் செய்யும் இறைவா!
எங்களைச் சுழ்ந்து நிற்கும் உலகக் கவலைகளில் முழ்கி,
நாங்கள் நேரிய பாதையை விட்டு சோர்ந்து போய் விலகி விடாமல்,
உள்ளத்தில் உறுதிகொண்டு, நேர்மையாய் உமது வருகைக்கு எம்மை
தயாரிக்க, எங்கள் பாதைகளில் நேர்மையை நீரோடையாய் பாயச்
செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
எங்களை சந்தித்து சந்தோசம் தரவரும் இறைவா!
உடமைகளை உறவுகளை இழந்து, தாயகம் இழந்து, எப்போது எல்லோரையும்
சந்திப்போம் என ஏக்கத்தோடு காத்திருக்கும் புலம் பெயர்ந்த
மக்களுக்கு, உமது வருகையானது ஆறுதலையும், மகிழ்ச்சியையும்
நிறைவாகத் தரட்டும். தங்கள் உற்றார், உறவினர், நண்பர்களை,
தாயகத்தை, ஒருநாள் சந்திப்போம் என்ற நம்பிக்கை உணர்வை
நிறைவேற்றி, ஒருவர் ஒருவரை சந்திக்கும் மகிழ்ச்சியான
சுழ்நிலையை, புலம் பெயர்ந்த எங்கள் சகோதரர்களுக்கு
விரைவில் தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
அருள் நிறைந்த வாழ்க்கை வாழ்வோரை நேசிக்கும் இறைவா!
இங்கே ஒரே குடும்பமாக கூடி நிற்கின்ற எங்கள் சொல், செயல்,
சிந்தனைகளை அருள் நிறைந்ததாக மாற்றியருளும். நாங்கள்
ஒருவர் ஒருவரை அன்போடு நேசித்து, நாங்கள் சம்பாதிக்கும்
எளிய பொருட்களைப் பயன்படுத்தி, வலிமைமிக்க அருள்வாழ்வினை
சம்பாதித்துக் கொள்ளத் தேவையான பொருளையும், அருளையும்
இங்கே கூடியிருக்கின்ற எங்கள் எல்லோருக்கும் நிறைவாகத்
தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
மறையுரை சிந்தனைகள்
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா
O.S.M.
திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு.
மகிழ்ச்சியா அது உன்னைப் பொறுத்தது..
I. செப்பனியா 3:14-17
II. பிலிப்பியர் 4:4-7
III. லூக்கா 3:10-18
பிறக்கும் போதே யாரும் மகிழ்ச்சியாய் பிறப்பதில்லை. ஆனால்
மகிழ்ச்சியுடன் வாழ்வும் தகுதியுடனே பிறக்கிறார்கள். சிலர்
அத்தகுதியைப் பயன்படுத்தி நல்ல முறையில் மகிழ்ச்சியுடன்
வாழ்கின்றார்கள். சிலரோ அத்தகுதியைப் பயன்படுத்துவதுமில்லை.
மகிழ்ச்சியாக வாழ்வதுமில்லை. சிலருக்கு அதிக மகிழ்ச்சியாய்
தான் இருந்தாலே பொறுக்காது. இன்று அதிகமாக சிரிக்கிறேன் என்ன
ஆகப்போகிறதோ தெரியவில்லை என்று நொந்து கொள்வர். அடுத்தவர்
அதிக மகிழ்வாக இருந்தாலும் இதை சொல்லி அவரையும் சோகமாக்கிவிடுவர்.
அதிக மகிழ்ச்சி ஆபத்து என்று நமக்கு நாமே ஒரு எல்லைக் கோடு
வரைந்து வைத்திருக்கிறோம். இப்படி இருக்க அகமகிழ்ந்து
பூரிப்படைய மகிழ்வடைய
இறைவன் அழைப்புவிடுக்கின்றார்.
மகிழ்ச்சியால் அக்களிக்க ஆர்ப்பரிக்க ஆரவாரம் செய்ய அழைப்புவிடுக்கின்றார்.
இயேசுவின் பிறப்பு விழாவிற்கென்று நம்மை நாமே தயாரித்துக்
கொண்டிருக்கின்ற இந்த திருவருகைக்காலத்தின் மூன்றாம்
ஞாயிறை, மகிழ்வின் ஞாயிறாகக் கொண்டாட திருச்சபை நமக்கு அழைப்புவிடுக்கின்றது.
இன்றைய வழிபாட்டின் மூன்று வாசகங்களும் மகிழ்ச்சியை அடிப்படையாகக்
கொண்டே அமைந்துள்ளது. மகிழ்ச்சியைத் தேடி அலைவதைவிட அல்லது
மகிழ்ச்சிக்காகக் காத்திருப்பதைவிட அந்த மகிழ்ச்சி நம்மிடம்
ஏற்கனவே இருக்கிறது என்று நம்பி வாழத் தொடங்கினால் அந்த மகிழ்ச்சி
நம்மை விட்டு நீங்காது நிலைத்திருக்கும் என்பதை வாழ்வாக்க
அழைப்புவிடுக்கின்றன வாசகங்கள். மகிழ்ச்சியா அது நம் ஒவ்வொருவரையும்
பொருத்தது. மகிழ்ச்சியாக வாழ ஐந்து காரணங்கள்; உன்னை நேசி,
நல்லதை செய், மன்னித்து வாழ், தீங்கு செய்யாதே, நேர்மையாக
வாழ் என்பன,.
உன்னை நேசி :
தன்னை நேசிக்காத மனிதன் பிறரை ஒருபோதும் நேசிக்க முடியாது.
தானமும் தர்மமும் மட்டுமல்ல அன்பும் தனக்குப் போகத் தான்
பிறருக்கும். இதுவே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சாக மாறவும்
வாய்ப்பிருக்கிறது. தன்னைத்தானே நேசித்தல் என்பது அற்புதமாய்
அழகுபடுத்தி, ஆடைநயத்தினால் அடுத்தவர்களை ஈர்ப்பது அல்ல,
அன்பான செயல்களால், அழகான செயல்களால் அற்புதமான குணங்களால்
தன்னை அழகுபடுத்தி நேசிப்பதாகும். ஆபரணங்களும் அழகுசாதனப்
பொருட்களுமல்ல நம் மகிழ்வை வெளிப்படுத்துவது, அன்புச்செயல்களும்
அருமையான பண்புகளுமே நமது மகிழ்வை அழகை பிறருக்கு வெளிப்படுத்துவன.
இத்தகைய அழகு பொருந்திய நம்மை நாம் நேசிக்க பழகுவோம்.
நல்லதை செய்;
ஒன்றே செய் நன்றே செய் அதை இன்றே செய் என்பர். நல்ல நல்ல
செயல்களை செய்து நமது உடன்வாழ்பவர்களின் மகிழ்வினைப்
பெருக்குவோம்.அதன் மூலம் நமது மகிழ்வையும் நாம் அதிகரித்துக்கொள்வோம்.
நன்மை காட்டுத்தீ போல பரவி, பிறரும் அது போல நன்மைகளைச்
செய்ய துணைபுரியும். நன்மையானதை மட்டுமே நான் பிறருக்கு
செய்வேன் என்ற உறுதிமொழியை திருவருகைக்காலத்தின் தீர்மானமாக
எடுத்து செயல்பட முயல்வோம்.
மன்னித்து வாழ்;
மன்னிப்பு மனித வாழ்க்கையின் அடித்தளம். மனிதர்கள் தவறுபவர்கள்
தவறுதல்மனித இயல்பு, மன்னிப்பவன் இறைச்சாயல் கொண்டவன். ஆக
மனிதன் தவறு செய்வதை இறைவன் மன்னிப்பது போல நாமும் நம்முடன்
வாழும் சகமனிதர்களின் தவறுகளை மன்னித்து வாழ முற்பட
வேண்டும்.
தீங்கு விளைவிக்காதே:
நன்மையை மட்டுமே பிறருக்கு செய்து வாழவேண்டும். தீங்கான எதையும்
யாருக்கும் செய்ய கூடாது. அதைப்பற்றி கனவிலும் நினைக்க
கூடாது.
நேர்மையாக வாழ்;
எந்நிலையிலும் நேர்மையாக வாழ வேண்டும் . செய்யும் தொழிலில்
நேர்மை, பேச்சில் நேர்மை, எண்ணத்தில் நேர்மை கொண்டு வாழ
முற்படுவோம்.
ஆக மகிழ்ச்சியாக வாழ இந்த ஐந்து காரணிகளையும் கடைபிடித்து
வாழவேண்டும். கிறிஸ்து பிறாப்பு பெருவிழாவிற்கு நம்மை நாமே
தயாரித்துக் கொண்டிருக்கின்ற இந்நாட்களில் மகிழ்ச்சியுடன்
வாழ முற்படுவோம். மகிழ்ச்சியைத் தேடி நாம் ஓடாது, மகிழ்ச்சி
என்ன்றும் நம்மோடு என்று நினைத்து வாழ்வோம். அன்று அடிமை
நிலையில் இருந்தபோதும் யாவே இறைவன் நம்மோடு என்று மகிழ்ந்த
இஸ்ரயேல் மக்கள் போல மகிழ்வோடு வாழ முயல்வோம்.
சிறைச்சாலையில் துன்புற்ற போதும் இறைவனின் அறிவெல்லாம் கடந்த
இறைஅமைதி நம்மோடு என்று மகிழும் பவுலடியார் போல மகிழ்ந்து
வாழ்வோம். என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார் என்று மகிழ்ந்து
அவருக்காக வழியை ஆயத்தம் செய்ய மக்களை தயார் படுத்திமகிழ்ந்த
திருமுழுக்கு யோவான் போல மகிழ்வோம். .... நமது மகிழ்ச்சி
நம்மை பொருத்தது.... நம்மை நாமே நேசித்து, நல்லது செய்து,
மன்னித்து மன்னிப்பு பெற்று, தீங்கு விளைவிக்காது
நேர்மையாக வாழ்ந்தோமானால் நமது மகிழ்ச்சி நமதே.... நமது
இதயத்தில் மகிழ்ச்சி பொங்க, ஆன்மாவில் புத்துணர்வு பெருக,
வாழ்வில் வெற்றி பெற, முகத்தில் புன்னகை நிலைக்க, நம் இல்லத்தில்
அன்பின் நறுமணம் வீச மகிழ்வென்னும் மாபரன் நம்மோடு
இருப்பாராக ஆமென்..
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி
கலங்காத மகிழ்ச்சி
மகிழ்ச்சியின் எதிரி என்ன?
மகிழ்ச்சி ஒரு அமைதியான குளம் என வைத்துக்கொள்வோம். அந்த
அமைதியான குளத்தின் நடுவில் விழும் ஒரு சிறிய கூழாங்கல்
குளத்தில் கலங்கலை ஏற்படுத்திவிடுகிறது. அக்கல் விழுந்த
இடத்தில் உருவாகும் சிற்றலை விரிந்து விரிந்து குளத்தின்
கரையை மோதும்போது அங்கிருக்கும் கரையும் கலங்குகிறது.
கலக்கம் குளத்தின் அமைதியைக் கெடுக்கிறது. நம் வாழ்விலும்
கலக்கங்களே அமைதியைக் குலைக்கின்றன. ஒரு சொல்லாக,
சிந்தனையாக, செயலாக விழும் கூழாங்கல் நம் மூளை, மனம், உடல்
என அனைத்திலும் ஒரு சிறு அசைவையாவது ஏற்படுத்திவிடுகிறது.
கூழாங்கல் ஏற்படுத்தும் கலக்கம் குளத்தின் மேற்பரப்பில்
மட்டுமல்லாமல், குளத்தின் அடியில் சென்று தேங்கியிருக்கும்
களிமண்ணையும் கலக்கிவிடுவது போல, கலங்கிய மூளை, மனம், உடல்
சேமித்து வைத்த பழைய அழுக்குகளையும் கீறி விடுகிறது.
கலக்கமில்லாத மகிழ்ச்சி சாத்தியமா? குளங்கள் விரும்பவில்லை
என்றாலும், கூழாங்கற்கள் வந்து விழுந்தால், அது குளத்தின்
குற்றமில்லையே? கலங்காத குளம் சாத்தியமா? கலங்காத
மகிழ்ச்சி சாத்தியமா?
சாத்தியம் என்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.
திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றை 'கௌதேத்தே
தொமெனிக்கே' ('மகிழ்ச்சி ஞாயிறு') எனக் கொண்டாடுகிறது
திருஅவை.
மகிழ்ச்சி என்றால் என்ன? 'சிரிப்பு,' 'இன்பம்,'
'சந்தோஷம்,' 'நிறைவு,' 'உடல்நலம்' என நாம் பல
வார்த்தைகளைச் சொன்னாலும், எந்த வார்த்தையும் மகிழ்ச்சி
என்ற உணர்வை முழுமையாகப் பிரதிபலிப்பதில்லை. மகிழ்ச்சி
என்பது ஒரு 'ரெலடிவ்' வார்த்தை. அதாவது, அது தனிநபர்
சார்ந்தது. எல்லாருக்கும் பொதுவான மகிழ்ச்சி என்று ஒன்றை
வரையறுக்க முடியாது என்றே நினைக்கிறேன். பசியாக இருக்கும்
எனக்கு ஒரு சாப்பாட்டுப் பொட்டலம் கிடைத்தால் மகிழ்ச்சி
கிடைக்கிறது. ஆனால், அது சாப்பாட்டுப் பொட்டலம் பசியில்லாத
ஒருவருக்கு, அல்லது நோய்வாய்ப்பட்டிருக்கும் ஒருவருக்கு
சுமையாகத் தெரிகிறது. ஒரே பொட்டலம்தான். ஆனால், அது ஒரே
மாதிரியான மகிழ்ச்சி உணர்வை எல்லாருக்கும் தருவதில்லை.
மகிழ்ச்சி உள்ளிருந்து வருகிறதா? அல்லது வெளியிலிருந்து
வருகிறதா? 'உள்ளிருந்து வருகிறது' என்றால், சில நேரங்களில்
நம் மனம் எந்தக் காரணமும் இல்லாமல் சோர்ந்திருக்கக் காரணம்
என்ன? 'வெளியிலிருந்து வருகிறது' என்றால், மகிழ்ச்சி
நிபந்தனைக்குட்பட்டதாகிவிடுமே! மேலும், என் மகிழ்ச்சி
சார்புநிலையின் வெளிப்பாடாக அமைந்துவிடுமே! அடுத்தவர்
இல்லை என்றால் எனக்கு மகிழ்ச்சி இல்லை என்றாகிவிடுமே!
இன்றைய இறைவாக்கு வழிபாடு 'மகிழ்ச்சி' என்ற சொல்லாடலை
எப்படிப் புரிந்துகொள்கிறது?
இன்றைய முதல் வாசகம் (காண். செப் 3:14-18) இறைவாக்கினர்
செப்பனியா நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. கி.பி. 612ஆம்
ஆண்டில், யோசியாவின் ஆட்சி முடிந்த சில ஆண்டுகளில், அல்லது
அவரது ஆட்சியின் இறுதி நாள்களில் இறைவாக்குரைத்த
செப்பனியாவின் இறைவாக்கு நூல் பெரும்பாலும் எருசலேமின்
அழிவைப் பற்றியே பேசுகிறது. மேலும், நூலின் இறுதியில்,
தண்டனைத் தீர்ப்பளிக்கும், எதிர்கொள்ளக் கொடியதாய்
இருக்கும் 'ஆண்டவரின் நாள்' பற்றியும் பேசுகிறார். இன்றைய
முதல் வாசகம் அவரின் ஒன்பதாம் மற்றும் இறுதி இறைவாக்குப்
பாடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அழிவு பற்றிப் பேசாமல்
ஆறுதல் பற்றிப் பேசுகிறார் இறைவாக்கினர். எருசலேமைச்
செல்லமாக, 'மகளே' என அழைப்பது வழக்கம். மேலும், 'மகளே'
என்றால் 'குட்டி நகரம்' என்பதும் பொருள். எருசலேமும்,
அதைச் சுற்றியிருக்கிற குட்டி ஊர்களும் அகமகிழுமாறு
அழைப்பு விடுக்கிறார் செப்பனியா. 'மகிழ்ச்சியால்
ஆர்ப்பரி,' 'ஆரவாரம் செய்,' 'அக்களி' என அவர்
பயன்படுத்தும் மூன்று சொல்லாடல்களுமே மகிழ்ச்சியைக்
குறித்தாலும், இவற்றின் எபிரேயப் பதங்கள் இன்னும் ஆழமான
பொருளைத் தருகின்றன. அதாவது, 'உள்ளத்தில்,' 'உதட்டில்,'
'நாக்கில்' என மகிழ்ச்சி, உள்ளத்து உணர்வாகத் தொடங்கி,
பெருஞ்சத்தமாக மாறுகிறது. மகிழ்ச்சி என்பது ஒரு இருப்பு
என்ற நிலை மாறி, அது ஒரு இயக்கமாக உருவெடுக்கிறது. ஒவ்வொரு
மகிழ்ச்சிக்கும் ஒரு காரணம் இருக்கும் - சோற்றுப் பொட்டலம்
போல! எருசலேமின் மகிழ்ச்சிக்குக் காரணம் என்ன? 'உன்
கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கிறார்.' நாம் அன்பு
செய்யும் நபர் நம் நடுவில் இருந்தால் நம்மைப் பற்றிக்
கொள்ளும் மகிழ்ச்சி போல, நம் கடவுள் நம் நடுவில்
இருக்கிறார் என்ற உணர்வை நமக்கு மகிழ்ச்சி தருகிறது.
'இன்று ஆண்டவர் உன் நடுவில் இருக்கிறார்' என்றால், இவ்வளவு
நாள்கள் யார் இருந்தார்? 'பகைவர்கள்,' 'எதிரிகளின்
படைகள்,' 'விரும்பத்தகாதவர்,' 'கொலை செய்பவர்,'
'அழிப்பவர்' என மற்றவர்கள் இருந்தார்கள். இவர்களின்
உடனிருப்பு மக்களுக்கு அச்சம் தந்தது. மேலும், இவர்களின்
உடனிருப்பு மக்களின் கைகளைச் சோர்வடையச் செய்தது. ஏனெனில்
மக்கள் எந்நேரமும் அவர்களுக்கு எதிராகப் போராட
வேண்டியிருந்தது. இந்தப் போரட்டம் அவர்களின் உடலின்
ஆற்றலைக் குறைத்தது. மேலும், இப்போது ஆண்டவர், 'மாவீரராக,
வெற்றி அளிப்பவராக, புத்துயிர் அளிப்பவராக' இருப்பதால்,
எதிரிகள் இருந்தாலும் அவர்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை.
ஆக, முதல்வாசகத்தின்படி, 'ஆண்டவரின் உடனிருப்பு' கலங்காத
மகிழ்ச்சியைத் தருகிறது.
இன்றைய இரண்டாம் வாசகம் (காண். பிலி 4:4-7) புனித
பவுலடியார் பிலிப்பி நகரத் திருஅவைக்கு எழுதிய
திருமடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இம்மடலின் பவுலின்
சிறைமடல்களில் ஒன்று. என்ன ஒரு முரண்! சிறையின் துன்பம்,
தனிமை, விரக்தியிலிருந்து, 'ஆண்டவரோடு இணைந்து என்றும்
மகிழுங்கள். மீண்டும் கூறுகிறேன். மகிழுங்கள்' என அறைகூவல்
விடுக்கின்றார் பவுல். 'ஆண்டவர் அண்மையில் உள்ளார்' என்ற
பவுலின் காலத்தில் எல்லாரும் எதிர்நோக்கியிருந்த,
'பருஸியா' எனப்படும் 'ஆண்டவரின் இரண்டாம் வருகையே' பவுலின்
மகிழ்ச்சி ஊற்றெடுக்கக் காரணமாக அமைகிறது.
'ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்' என்கிறார் பவுல்.
மகிழ்ச்சிக்கான அழைப்பு நிலையற்றவைகளில் அல்லாமல்,
நிலையானவற்றில் இணைந்திருப்பதற்கான அழைப்பாக இருக்கிறது.
'இணைந்திருத்தல்' என்பது இன்று அதிகமாக சமூக வலைதள
இணைப்புகளில் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாடல். செயலி,
செல்ஃபோன், இணையதளம் என்னும் மூன்றின் வழியாக நாம் ஒருவர்
மற்றவரோடு இணைந்திருக்கிறோம். இந்த மூன்றில் ஒன்று
தவறானாலும் இணைப்பு சாத்தியமில்லை. ஆண்டவரோடு எப்படி
இணைந்திருப்பது? நமக்கும், இறைவனுக்கும் ஒரு தொப்புள் கொடி
இருப்பது போல நினைத்து, அந்தத் தொப்புள்கொடி ஒரு புளுடூத்
இணைப்பு போல இருப்பதாக நினைத்து வாழும்போது, நாம்
எந்நேரமும் அவரோடு இணைந்திருக்க முடியும். தொடர்ந்து,
'எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம்' என்கிறார் பவுல்.
'கலக்கம்' அல்லது 'கவலை' மகிழ்ச்சியின் எதிரி என்பது
பவுலுக்கும் தெரிந்திருக்கிறது. மேலும், நன்றியோடு
இறைவேண்டல் செய்து, எல்லா நிகழ்வுகள், எல்லா நேரங்கள்,
எல்லா மனிதர்கள் என எல்லாரையும் இறைவன்-நான்
தொப்புள்கொடியில் இணைத்துக்கொள்ளும்போது கலங்காத மகிழ்ச்சி
சாத்தியமாகிறது.
ஆக, இரண்டாம் வாசகத்தின்படியும், 'ஆண்டவரில்
இணைந்திருத்தல்' கலங்காத மகிழ்ச்சியைத் தருகிறது.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 3:10-18) கடந்த
ஞாயிறு வாசகத்தின் தொடர்ச்சியாக இருக்கிறது. கடந்த வார
வாசகத்தில் திருமுழுக்கு யோவான் தன் பணியைத் தொடங்கினார்.
இன்றைய நாள் வாசகத்தில், அவர் திருமுழுக்கு வழங்கும்
நிகழ்வும், முறையும், அந்நிகழ்வில் பங்கேற்றவர்களோடு அவர்
மேற்கொண்ட உரையாடலும் தரப்பட்டுள்ளது. இன்றைய நற்செய்தியை
இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். முதல் பகுதியில்
திருமுழுக்கு பெறுவதற்காக யோவானிடம் மூன்று குழுவினர்
வருகின்றனர். இரண்டாம் பகுதியில் தான் மெசியா அல்ல
என்பதையும், மெசியா எப்படிப்பட்டவர் என்பதையும் எடுத்துச்
சொல்கின்றார் யோவான்.
முதல் பகுதியில் வரும் 'மக்கள் கூட்டத்தினர்,'
'வரிதண்டுபவர்கள்,' மற்றும் 'படைவீரர்கள்' என்னும் மூன்று
குழுவினரின் கேள்வி ஒன்றாக இருக்கிறது: 'நாங்கள் என்ன
செய்ய வேண்டும்?'
'இரண்டு அங்கிகளை உடையவர்கள் இல்லாதவரோடு பகிர்ந்து
கொள்ளட்டும். உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்.'
'உங்களுக்காக குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகாக எதையும்
தண்டாதீர்கள்.'
'நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்.
யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள். உங்கள் ஊதியமே
போதும் என்றிருங்கள்.'
- இவ்வாறாக, ஒவ்வொரு குழுவினருக்கு வேறு வேறு வாழ்க்கை
நிலை அறிவுரைகளைத் தருகின்றார் யோவான்.
நம் அலமாரி நிறைய ஆடைகள் இருந்தாலும் நாம் உடுத்துபவை
வெறும் இரண்டு ஆடைகளே. நம் வீட்டில் அறைகள் பல இருந்தாலும்
நாம் ஒவ்வொரு நேரத்திலும் இருப்பது வெகு சில அடிகளே.
'நாளை' என்ற உணர்வுதான் நம்மை இன்னும் அதிகம்
சேகரிப்பவர்களாகவும், சேர்த்து வைப்பவர்களாகவும்
மாற்றுகிறது. தொடர்ந்து, 'குறிக்கப்பட்டதற்கு மேல்
வரிதண்ட' ஒருவரைத் தூண்டுவது, அவருடைய பேராசை.
'அச்சுறுத்தல், பொய்க்குற்றம்' வழியாக வருவது சுலப
வருமானம். திருமுழுக்கு யோவானைப் பொறுத்தவரையில் மனமாற்றம்
என்பது வாழ்க்கைமுறை அல்லது வாழ்க்கைநெறி மாற்றமாக
இருக்கிறது. இந்தப் புரிதல் நமக்கு முதல் மற்றும் இரண்டாம்
வாசகங்களின் கருத்தை நிறைவு செய்வதாக இருக்கிறது. அதாவது,
வாழ்க்கைநெறி மாற்றமும் நமக்கு கலங்காத மகிழ்ச்சியைக்
கொடுக்கிறது.
மேலும், நற்செய்தி வாசகத்தின் இரண்டாம் பகுதியில், மக்கள்
தன்னை மீட்பராக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றுணர்கிற
யோவான், அவர்கள் கேட்காமலேயே, தானாக முன்வந்து, 'என்னைவிட
வலிமைமிக்க ஒருவர் வருகிறார்' என்று தன்னைப் பின்னுக்குத்
தள்ளி, இயேசுவை முன்னே கொண்டுவருகிறார். அதாவது,
'உங்களுக்குக் குறித்துள்ளதற்கு மேல் போகாதீர்கள்' என்று
முதல் பகுதியில் அறிவுறுத்திய யோவான், தானே அதை வாழ்ந்தும்
காட்டுகிறார். தனக்குக் குறிக்கப்பட்ட எல்கையைத் தாண்ட
மறுக்கிறார். இவ்வாறாக, தன் மகிழ்ச்சி என்பது தன்
அடையாளத்திலிருந்து வருவது அல்ல. மாறாக, அது அடையாளங்களைக்
களைவதில்தான் இருக்கிறது என நமக்கு அறிவுறுத்துகிறார்
யோவான்.
இவ்வாறாக, இன்றைய இறைவாக்கு வழிபாடு, மகிழ்ச்சி என்பது (அ)
'ஆண்டவர் நம் நடுவில் உள்ளார்' எனக் கண்டுகொள்வதிலும், (ஆ)
'ஆண்டவரோடு இணைந்திருத்தலிலும்,' (இ) 'வாழ்க்கைமுறையை
மாற்றுவதிலும்,' மற்றும், (ஈ) 'தன்னை அறிதலிலும்'
இருக்கிறது என்பதை எடுத்தியம்புகிறது.
கலங்காத மகிழ்ச்சி. இது எப்போதும் நமக்குக் கிடைக்குமா?
நம் வாழ்வில் எல்லாம் நன்றாகப் போகும்போது - உணவு, உடைகள்,
உறைவிடம் என அடிப்படைத் தேவைகள் நிறைவேறி, செலவுக்குக்
கொஞ்சம் பணம், பேசிப் பழக சில நண்பர்கள், படிக்க ஒரு
புத்தகம், பார்க்க ஒரு வேலை என இருக்கும் போது - மகிழ்ச்சி
இயல்பாக வருகிறது. ஆனால், அடிப்படைத் தேவைகள் இல்லாத போது
நான் எப்படி மகிழ முடியும்? என் வீடும், தோட்டமும் புயலால்
அழிக்கப்படும்போது நான் எப்படி மகிழ முடியும்? என் வேலை,
திருமணம், குடும்பம் உடையும்போது நான் எப்படி மகிழ
முடியும்? நான் நோய்வாய்ப்பட்டு, முதுமையில், தனிமையில்
படுக்கையில் கிடக்கும்போது நான் எப்படி மகிழ முடியும்? என்
அன்பிற்குரியவர் இறக்கும்போது, அந்த இழப்பை யாராலும்
ஈடுசெய்ய முடியாதபோது நான் எப்படி மகிழ முடியும்? என் பணம்
எல்லாம் திருடப்படும்போது, என் வாழ்வாதாரம்
பறிக்கப்படும்போது, என்னை ஆள்பவர்கள் சுயநலமாக
இருக்கும்போது என்னால் எப்படி மகிழ முடியும்?
பிலிப்பியருக்கு எழுதப்பட்ட திருமடல் ஐந்து நட்சத்திர
ஓட்டலில், ரம்மியமான வெளிச்சத்தில், மெல்லிய இசையின்
பின்னணியில் எழுதப்படவில்லை. மாறாக, சிறைச்சாலையின்
தனிமையில், வெறுமையில், குளிரில், புண்களின் நாற்றத்தில்,
கை மற்றும் கால் விலங்குகளின் அழுத்தத்தில் எழுதப்பட்டது.
திருமுழுக்கு யோவானின் போதனை அரச மாளிகையில், பளிங்குத்
தரையில், பச்சைக் கம்பளம் விரித்து, சாமரங்கள் வீச,
அனைவரும் அரியணையில் அமர்ந்திருக்க அங்கே தரப்படவில்லை.
மாறாக, ஆற்றங்கரை ஓரத்தில், மனிதர்கள் மற்றும் மரங்களின்
சலசலப்பில், தண்ணீரின் குளிர்ச்சியில், வீசும் காற்றின்
வேகத்தில் தரப்படுகிறது. சிறைச்சாலை, ஆற்றங்கரை என்னும்
இரண்டு சூழல்களுமே நம் கேள்விகளுக்கான விடையைத்
தந்துவிடுகின்றன.
ஆம், எங்கும் எப்போதும் கலங்காத மகிழ்ச்சி சாத்தியம்.
ஒருவர் தன்னை அறிந்து, தன் அருகிருப்பவர் அறிந்து, தன்
உள்ளது பகிர்ந்து, தன் இறைவனோடு இணைந்திருக்கும்போது,
கலங்காத மகிழ்ச்சி காலத்திற்கும் சாத்தியம்.
நம் மகிழ்ச்சியை நம்மிடமிருந்து பிரிக்கும் காரணிகளை,
நம்மீது எறியப்படும் கூழாங்கற்களை நாம் அடையாளம் கண்டு,
அவற்றிலிருந்து ஒதுங்குவது முதற்படி.
அடுத்தவரை மகிழ்ச்சிப்படுத்தி, அந்த மகிழ்ச்சியில் நாம்
புன்னகை பூப்பது இரண்டாம் படி.
என் இறைவனே என் மகிழ்ச்சி என அவரில் சரணாகதி அடைவது
மூன்றாம் படி.
நாம் ஏற்றும் மூன்று திரிகளும் நம்மை இந்த மூன்று படிகளில்
ஏறுவதற்கு நம் பாதையை ஒளிர்விக்கட்டும்.
இன்றையச் சூழலில் பணம் இருப்பவர்கள் தர்மம்
செய்வது வியப்பல்ல. மாறாக, பட்டினியோடு இருப்பவர்கள் தங்கள்
, பசியை, மறந்து தானம் செய்வதுதான் வியப்பானது. இதயங்கள்
சுருங்கியதால்தான் கரங்கள் விரிய மறுக்கின்றன எனலாம். சுயநலவாதங்களும்,
தன்னலப் போக்கும் பெருகுவதால், வாழ்வின் நெறிமுறைகள்
சிதைக்கப்படுகின்றன என்பது நாம் அறிந்ததே. இன்று ஒருவனிடம்
100 ரூபாய் இருந்தால் அதில் ஒரு பகுதியை பகிர்வதற்குப் பதிலாக
1000 ரூபாய் கிடைக்கட்டும். அப்போது பகிர்ந்துகொள்ளலாம் என்றுதான்
அவன் மனம் நினைக்கிறது. அப்படியே 1000 ரூபாய்
கிடைத்துவிட்டால் எனக்கு 10,000 ரூபாய் கிடைக்கட்டும் என்று
நம் மனம் தாவிக் கொண்டிருக்கும்.
எனவே சிறிய தொகை இருக்கும்போதே அதில் ஒரு பகுதியை பகிர்ந்து
கொள்ள நமது மனம் பக்குவப்பட வேண்டும். சிறிய தொகையில் ஒரு
பகுதியைப் பகிர மனம் வராதபோது, பெரும் தொகை இருக்கும்போது
பகிரும் மனம் கண்டிப்பாகத் தோன்றாது என்பது உண்மை . பகிரும்
மனிதன் வணக்கத்துக்கும், பலரின் வாழ்த்துக்கும் உரியவன்.
திருவள்ளுவரை எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவர் காலத்தில்
வாழ்ந்த பெரிய பணக்காரர்கள் யார் என்பது யாருக்கும்
தெரியாது. பகிர்ந்து கொடுப்பவன் எல்லா காலங்களிலும், எல்லா
இதயங்களிலும் நிறைந்தவன் ஆவான். பணக்காரர் எவருக்கும் நோபல்
பரிசு கொடுப்பதில்லை . பகிரும் மனம் உடையவர் நோபல் பரிசுக்கு
உரியவராகிறார் என்பது நாம் அறிந்ததே! இன்றைய முதல் இரண்டு
வாசகங்களும் நாம் மகிழ்வோடு வாழ அழைப்பு விடுக்கின்றது.
பாபிலோனிய அடிமைத் தனத்தில் உழன்ற இஸ்ரயேல் மக்களை, மகிழ்ச்சியால்
ஆர்ப்பரிக்கும்படி இறைவாக்கினர் செப்போனியா அழைப்பு
விடுக்கிறார். கனிந்த உங்கள் உள்ளம் எல்லா மனிதருக்கும்
தெரிந்திருக்கட்டும். ஆண்டவரோடு இணைந்திருந்து மகிழ்ந்திருங்கள்
என புனித பவுல் அறிவுறுத்துகிறார்.
நடுத்தர வயதுள்ள, நான்கு பணக்காரர்கள் ஒரு துறவியிடம்
சென்று, நாங்கள் மோட்சம் போக என்ன வழி என்று கேட்டார்கள்.
துறவி, அமைதியாக அவர்களை பார்த்துவிட்டு மோட்சம் போக வழி
சொல்கிறேன். ஒரு மாதம் முடிந்து என்னை வந்து பாருங்கள். ஆனால்
அடுத்த மாதம் வரும்போது உங்களில் ஒருவர் உயிரோடு இருக்கமாட்டார்
என்றார். ஒரு மாதம் முடிந்தும் யாரும் இறக்க வில்லை.
மீண்டும் துறவியிடம் சென்று எதற்காக பொய் சொன்னீர்கள்.
யாரும் இறக்கவில்லையே என்று கேட்டனர். இந்த ஒரு மாத காலம்
எப்படி வாழ்ந்தீர்கள் என்று துறவி எதிர் கேள்வி கேட்டார்.
நால்வரில் ஒருவர் இறப்போம் என்று சொன்னீர்கள் யாரென்று
குறிப்பிட்டுச் சொல்லாத காரணத்தால், நான்கு பேருமே மரணத்துக்குப்
பயந்து நிம்மதி இல்லாமல், தூக்கம் இல்லாமல் இருந்தோம். இறந்தால்
நரகம் சென்று விடுவோமோ என்ற பயத்தால், குடும்பத்துக்காக கடினமாக
உழைத்தோம். சண்டை போட்டவர் ளிடம் மன்னிப்பு கேட்டு சமாதானம்
செய்து கொண்டோம். ஏமாற்றி வாங்கியதைத் திருப்பிக் கொடுத்து
விட்டோம். நேரத்தை வீணாக்காமல் சுறுசுறுப்பாக உழைத்தோம்.
வருமானத்தில் ஒரு பகுதியைப் பகிர்ந்து கொடுத்தோம், யார்
மனதையும் புண்படுத்தாமல் மகிழ்வையும், சமாதானத்தையும்
தேடினோம் என்றனர். அப்போது துறவி இந்த ஒரு மாதம் எந்த மனநிலையோடு
வாழ்ந்தீர்களோ! அதே மனநிலையோடு வாழ்ந்தால் நீங்கள் கண்டிப்பாக
மோட்சம் போக வழி தானாகக் கிடைக்கும் என்றார்.
இன்றைய நற்செய்தியில் இரண்டு அங்கிகள் உடையவர் இல்லாதவரோடு
பகிர்ந்து கொள்ளட்டும். உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்
என்று திருமுழுக்கு யோவான் மக்களுக்கு பதில் தருகிறார். மனிதர்கள்
மனசு பெரிதாக இருந்த காலத்தில் தங்களின் தேவைக்குப் போக
மீதியை பகிர்ந்து கொடுத்தார்கள். இன்று அறிவு பெரிதாக,
இதயம் சுருங்கிய காலமாக மாறிவிட்டதால் சுயநலத் தேவைகள் அதிகரித்து,
பகிரும் மனநிலை குறைந்து, சொகுசாக வாழும் காலமாக மாறிவருகிறது.
சுயநலத்தால் மகிழ்ச்சியின் கனியை எட்டிப் பறித்துவிடலாம்
என்று எண்ணுகிறோம். ஆனால் இயேசுவின் பார்வையோ விசாலமானது.
பணத்தைச் சேர்த்து வைப்பதில் அல்ல. மாறாக பகிர்வதில்தான்
உண்மையான மகிழ்ச்சி நிறைந்துள்ளது என்கிறார். பகிர்வு
நிறைவையும், நிம்மதியையும், வாழ்வில் மகிழ்வையும், நிரந்தரமாக்குகிறது
என்கிறார் புனித பவுல். விவிலியத்தில் கூட ஏழைக்கு, லாசர்
என்ற பெயர் உண்டு. ஆனால் பணக்காரனுக்கு பெயரே இல்லை . காரணம்,
மனது பகிராமல் பணத்தாலும், சுயநலத்தாலும் கூடுகட்டிக் கொண்டது.
இயேசுவின் இதயம் எப்போதும் பகிரும் ஏழைகள் பக்கமே
சார்ந்திருந்தது.
நமது வாழ்வில் ஒரு மனிதனை எவ்வாறு முதன்மைப்படுத்தி மதிக்கிறோம்.
பணத்துக்காகவா, அதிகாரத்துக்காகவா, படிப்புக் காகவா, நாகரிகத்துக்காகவா
அல்லது மனிதத் தன்மைக்காகவா? வேறுபாடுகளை நீக்கி, அனைத்து
தரப்பு மக்களையும் மதித்து, தவறு செய்தவர்களை அன்போடு
திருத்தி, புதிய வாழ்வுக்கு அழைத்து வந்த இயேசுவை பின்பற்றுகிறோமா?
அல்லது வெளிப்புற தோற்றத்தை முன் வைத்து, மனதுக்குள்
புதைந்திருக்கும் மனிதத் தன்மையை மறந்துவிடுகிறோமா...?
பகிராதவனுக்குப் பரலோகம் இல்லை, உள்ளதை இல்லாதவருக்கு தர
மறுக்கும்போது அங்கு மகிழ்ச்சி இல்லை. உள்ளதைப் பகிரக் கற்றுக்கொள்வோம்.
அன்பு உள்ளங்களை அறுவடை செய்து, பகிர்வால், பாசத்தால், மகிழ்வால்
இதயங்களை கட்டி எழுப்புவோம். புனித பவுல் கூறுவதுபோல் இறைவனில்
இணைந்து அகமகிழுங்கள் (பிலி. 4:4). இயேசு காட்டும் பகிர்வின்
பாதையில் பயணம் அமையாவிட்டால் அந்த வாழ்க்கை போலியானது.
நீடிக்காது, நிரந்தரமற்றது, நிலையற்றது.
பகிர்வுக்குக் கிடைத்த பரிசு
ஒரு ஏணியில் எவ்வளவு உயரத்திற்கு ஏறவேண்டுமானாலும், முதல்
அடியை எடுத்து வைத்துத்தான் ஒவ்வொரு படியாக ஏற வேண்டும்.
மனம் மாற விரும்பிய சக்கேயு பகிரும் நோக்கில் ஏற்றத்தின்
முதற்படியாகக் காட்டு அத்திமரத்தில் ஏறினார் (லூக். 19:4).
அவரின் உள்ளமெல்லாம் பகிர்ந்து வாழ்ந்த இயேசுவைக் காண
வேண்டும் என்ற ஏக்கமாக இருந்தது. அவரின் மனநிலையை அறிந்த
இயேசு, மேலான நிலைக்கு அழைத்துச் சென்றார். அதன் விளைவு சக்கேயு
வீட்டில் பகிர்தலுக்கும், மனமாற்றத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
குடும்பமே பகிர்வின் பாசறையானது. உடைமைகளில் பாதியை, ஏழைகளுக்குக்
கொடுக்க முன் வந்த சக்கேயு இயேசுவின் இதயத்திலும், அவரின்
இறையரசிலும் இடம் பெற்றார். விவிலியத்தில் நீங்காத இடமும்
கிடைத்தது.
பகிர்ந்து கொள்வோம்
இந்திய நாட்டின் பிரதமர் நமது பங்கிற்கு வருகின்றார் என்று
வைத்துக்கொள்வோம். அவருடைய காருக்கு முன்னால் ஒரு கார் வரும்.
அது பைலட் கார்! அந்தக் காரின் மீது ஒரு சிவப்பு லைட்
சுற்றிக்கொண்டிருக்கும். அந்தக் கார் எதற்கு? பிரதம மந்திரியின்
கார் தடங்கலில்லாமல் சாலையிலே வர் சாலையைத் தயார் செய்யத்தான்
அந்தக் கார்.
இயேசுவின் வரவிற்கு மக்களை, மக்களின் மனத்தைத் தயார்படுத்த,
கடவுள் ஒரு பைலட்டாக, திருமுழுக்கு யோவானை அனுப்பிவைத்தார்.
அவரைப்பார்த்து மக்கள், எங்களுக்குப் புதுவாழ்வையும்
புத்துயிரையும் அளிக்கவரும் ஆண்டவரை வரவேற்க நாங்கள் எப்படி
எங்களையே தயார் செய்ய வேண்டும்? என்று கேட்டனர்.
அதற்கு அவர் மக்களைப் பார்த்து, உங்களிடமிருப்பதை மற்றவர்களோடு
பகிர்ந்துகொள்ளுங்கள் என்றார்.
பகிர்வு - கொடுத்தல் - இதுதான் நம்மையே நாம் தயாரித்துக்கொள்ள,
நாம் பின்பற்ற வேண்டிய சரியான வழியாகும்.
இயேசு :
அவருடைய அருளை நம்மோடு பகிர்ந்துகொண்டவர்.
அவருடைய ஆசியை நம்மோடு பகிர்ந்துகொண்டவர். அவருடைய மன்னிப்பை
நம்மோடு பகிர்ந்துகொண்டவர்.
அவருடைய மாண்பை நம்மோடு பகிர்ந்துகொண்டவர். அவருடைய உடலை
நம்மோடு பகிர்ந்துகொண்டவர்.
அவருடைய உயிரை நம்மோடு பகிர்ந்துகொண்டவர்.
இரண்டு வகையான பகிர்தல்கள் உள்ளன! ஒன்று உள்ளதிலிருந்து
பகிர்தல், மற்றொன்று உள்ளதையெல்லாம் பகிர்தல்.
கணவனும் மனைவியும் பெற்றோரும் பிள்ளைகளும் மாமியார்களும்
மருமகள்களும் நீங்களும் நானும் ஒருவர் ஒருவரைப்பார்த்து,
உங்களுக்குத் தேவையானதை என்னிடமிருந்து
எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லும் அளவுக்கு நம்
பகிர்தல் வாழ்வு உயர்ந்து நிற்கவேண்டும்.
சாதாரணமாக, நம்மைப் பகிரவிடாமல் தடுப்பது எது? நான்
வாழவேண்டும், நான் மட்டுமே வாழவேண்டும் என்ற சுயநல எண்ணம்.
ஒரு பட்டணத்தில் ஒரு பெரிய இலட்சாதிபதி வாழ்ந்து வந்தார்.
அவரிடம் ஒருவர் தொலைபேசி வழியாக நன்கொடை கேட்டார்.
அவர் அந்த பணக்காரரிடம், இங்கு இலவச முதியோர் இல்லம்
இருக்கின்றது, அநாதை இல்லம் இருக்கின்றது, இலவச
பள்ளிக்கூடம் இருக்கின்றது. நீங்கள் பெரிய இலட்சாதிபதி.
ஏதாவது நன்கொடை கொடுக்கலாமே என்றார்.
அதற்கு அந்த இலட்சாதிபதி, என் அண்ணன் புற்றுநோயால்
பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கின்றார். அது
உங்களுக்குத் தெரியுமா? தெரியாது.
என் அக்காளுக்கு ஐந்து பெண் பிள்ளைகள். அவர்களுக்கு
திருமணம் செய்து வைக்க முடியாமல் அவள் தினந்தோறும் கண்ணீர்
வடிக்கின்றாள். அது உங்களுக்குத் தெரியுமா? தெரியாது.
என் தம்பி வியாபாரத்தில் அனைத்தையும் இழந்து மூன்று
பிள்ளைகளோடு தவியாய்த் தவிக்கின்றான். அது உங்களுக்குத்
தெரியுமா? தெரியாது.
என் தங்கை வெளிநாடு போகமுடியாமல், தடுமாறிக்
கொண்டிருக்கின்றாள். அது உங்களுக்குத் தெரியுமா? தெரியாது.
இப்போ நான் சொல்றதைக் கவனமாகக் கேளுங்க. இப்படி
இருந்தும்கூட எங்க அண்ணன், அக்கா, தம்பி, தங்கைக்கு நான்
உதவி எதுவும் செய்றது கிடையாது.
உங்களுக்கு ஏன் நான் உதவி செய்யனும்? என்று கேட்டார்.
இதற்குப் பெயர்தான் சுயநலம்.
இது பெரிய புனிதர்களையும், புனிதைகளையும் கூட
ஆட்டிப்படைத்திருக்கின்றது. ஆனாலும் ஆண்டவரின்
அருளுதவியோடு அதனை நம்மால் வெல்லமுடியும் (உரோ 7:25).
வரப்போகும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா வாடிக்கையான
விழாவாக இல்லாமல் ஆண்டவர் இயேசுவின் அருளையும், ஆசியையும்
நமக்குப் பெற்றுத்தரும் விழாவாக அமைய நம்மிடமிருப்பதை
நம்மைவிட வறியவர்களாக வாழ்கின்றவர்களோடு
பகிர்ந்துகொள்வோம்.
இதுவே நமது விண்ணப்பமாக இருக்கட்டும் இரண்டாவது வாசகம்);
இறைவா! இறைவாக்கினர் செப்பனியாவின் வார்த்தைகளின் மீது
நம்பிக்கை வைத்து மன்றாடுகின்றோம். உமது அன்பினால் எங்களை
நிரப்பியருளும். ஆமென் (உரோ 5:5).
மேலும் அறிவோம் :
எச்சம் என்(று) என் எண்ணும் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்? (குறள் : 1004).
பொருள் : எவருக்கும் எதுவும் தந்துதவாமல் எவராலும்
விரும்பப்படாதவன், தனக்குப் பின்னால் எஞ்சி நிற்பது என்று
எதனை எண்ணுவானோ தெரியவில்லை!
தமிழ் ஆசிரியர் வகுப்புக்குள் நுழையும் போதெல்லாம் ஒரு மாணவன்
சிரிப்பான், ஏன் அவன் சிரிக்கிறான்? என்று ஆசிரியர் அவனைக்
கேட்டார். அவன், "சார்! நீங்கள்தான் துன்பம் வரும்போதெல்லாம்
சிரிக்க வேண்டும் என்று சொன்னீர்கள்" என்றான்,
துன்பம் வரும்போது சிரிக்க வேண்டும். ஏனெனில் துன்பத்தை விரட்டி
அடிப்பதற்குச் சிரிப்பைப் போல வேறெந்த சக்தியும் கிடையாது.
இடுக்கண் வருங்கால் நகுக; அதனை
அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல் (குறள் 821)
திருவருகைக் காலத்தின் 3-ஆம் ஞாயிறு "மகிழ்வின் ஞாயிறு" என்று
அழைக்கப்படுகிறது, ஏனெனில் இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர்
செப்பனியா, மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி" (செப்
3:14) என்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம்: "இஸ்ரயேலின்
அரசராகிய ஆண்டவா உன் நடுவில் இருக்கிறார்" (செப் 3:15). பதிலுரைப்
பாடல், "சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்"
என்கிறது. அதற்குக் காரணம்: "இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே
சிறந்து விளங்குகிறார் " (எசா 12:6). இரண்டாம் வாசகத்தில்
திருத்தூதர் பவுல், "ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்"
என்கிறார், காரணம்: "ஆண்டவர் அண்மையில் உள்ளார்" (பிலி
4:4-5).
நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கான காரணம் ஆண்டவர் நம்
நடுவில் இருக்கிறார்; நம்முடன் இருக்கிறார். நம்மைவிட்டு
அவர் விலகுவதுமில்லை; நம்மைக் கைவிடுவதுமில்லை. வானதூதர்
கபிரியேல் மரியாவை, அருள் மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர்
உம்மோடு இருக்கிறார் " (லூக் 1:38) என்றுதான்
வாழ்த்தினார். எனவேதான் திருச்சபையும் திருப்பலியில்,
"ஆண்டவர் உங்களோடு இருப்பாராக" என்று வாழ்த்துகிறது.
கிறிஸ்து திருச்சபையின் திருக்கூட்டத்தில் உடனிருக்கிறார்
(மத் 18:20). அவர் நம்மைத் திக்கற்றவராக விட்டுச்
செல்வதில்லை (யோவா 14:18). உலகம் முடியும் வரை எந்நாளும்
நம்முடன் இருக்கின்றார் (மத் 28:20).
ஒருவர் நன்றாகக் குடித்துவிட்டு நடுரோட்டில்
குப்புறப்படுத்துக் நகைகளையும் கால்களையும் ஆட்டிக்
கொண்டிருந்தார். வழியில் சென்றவர்கள் அவர் என்ன
செய்கிறார்? என்று கேட்டதற்கு "நான் நீச்சல் அடிக்கிறேன்"
என்றார். நீச்சல் அடிக்க தண்ணீர் எங்கே இருக்கிறது?''
என்று கேட்டதற்கு, "என் வயிற்றுக்குள்ளே இருக்கிறது
என்றார்,
மகிழ்ச்சியின் ஊற்று நமக்குள் இருக்கிறது. அந்த மாற்று
யார்? கடவுள் தான் பொங்கி வழிந்தோடும் நீரூற்று (எரே 2:3),
"மீட்பரின் உற்றுக்களிலிருந்து அகமகிழ்வுடன் தண்ணீர்
முகந்து கொள்வீர்கள்" (எசா 12:3). "யாரேனும்
தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும்; என்னில் நம்பிக்கை
கொள்வோர் பருகட்டும். அவருடைய உள்ளத்திலிருந்து வாழ்வு
தரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்" (யோவா
7:37-38),
கடவுள் தான் மகிழ்ச்சியின் காற்று. கடவுள் நம்மைத்
திருப்திப்படுத்த முடியவில்லையென்றால் உலகில் வேறெந்தப்
பொருளோ ஆளோ திருப்திப்படுத்த முடியாது. மாறாக, கடவுள்
நம்மோடு இருக்கும்போது நாம் எல்லாவற்றையும் இழந்த
நிலையிலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும், "அத்திமரம்
துளிர்த்து அரும்பாமல் போயினும் திராட்சைக் கொடிகள்
கனிதராவிடினும், ஒலிவ மரங்கள் பயன் அற்றுப் போயினும்,
வயல்களில் தானியம் விளையாவிடினும், கிடையில் ஆடுகள் யாவும்
அழிந்து போயினும், தொழுவங்களில் மாடுகள் இல்லாது போயினும்
நான் ஆண்டவரில் களிகூர் வேன்" (அபக்கூக்கு 3:17).
இரண்டாவதாக, நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால்.
நாம் நமக்குள்ளதை இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொள்ள
வேண்டும். "இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து
கொள்ளட்டும், உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்" (லூக்
3:11) என்று இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான்
மக்களைக் கேட்கிறார்.
ஒரு சிறுவனுக்கு நான் இரண்டு 'சாக்லேட்' கொடுத்து எனக்கு
ஒன்றைத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்டதற்கு அவன் கொடுக்க
கறுத்தான். அப்போது அவனுடைய அக்கா, "ஃபாதர் என்
தம்பிக்குப் பிறரிடமிருந்து வாங்கத்தான் தெரியும்;
பிறருக்குக் கொடுக்கத் தெரியாது" என்றார், பிறரிடம் வாங்கி
வாங்கி வாழ்ந்தான் என்பதைவிட பிறர்க்குக் கொடுத்துக்
கொடுத்துச் செத்தான் என்பதே மேல், "பெற்றுக் கொள்வதைவிட
கொடுத்தலே பேறுடைமை" (திப 20:35).
மூன்றாவதாக, நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால்,
நமக்கு மனநிறைவு வேண்டும்; பேராசை இருக்கக்கூடாது. "உங்கள்
ஊதியம் போதும் என்றிருங்கள்" (லூக் 3:1 4 ) என்று
திருமுழுக்கு யோவான் அறிவுறுத்துகிறார். கிடைக்கும் ஊதியம்
போதாதென்று இன்று பலர் இலஞ்சம் வாங்குகின்றனர். ஒருவர் தன்
நண்பரிடம். "எனக்கு இலஞ்ச ஒழிப்புத் துறையில் வேலை
கிடைத்துள்ளது" என்றார். உடனே நண்பர் அவரிடம், அந்த
வேலையை வாங்குவதற்கு எவ்வளவு இலஞ்சம் கொடுத்தீர்கள்?"
என்று கேட்டார். இனிமேல் பிரசவத்தில் குழந்தையின் தலை
முதலில் வராமல் அதனுடைய கைதான் வெளியே வருமாம்; அதன்
கையில் ஒரு நூறு ரூபாய் வைத்தால்தான் மிச்சம் வருமாம்!
கையூட்டு வாங்காமல் குழந்தையும் நகராது, அரசு
அலுவலகங்களில் உள் ள கோப்பும் நகராது. ஒருவர் கையை மேலே
தூக்கினால் அதற்குப் பெயர் சல்யூட்" (Salutc). கையை கீழே
தாழ்த்தினால் அதற்குப் பெயர் "கையூட்டு!"
கடைசியாக, நாம் மகிழ்ச்சியுடன் வாழ நமக்குத் தாழ்ச்சி
வேண்டும், இயேசு கிறிஸ்துவின் மிதியடி வாரைக்கூட
அவிழ்க்கத் தமக்குத் தகுதியில்லையென்றும் (லூக் 3:16),
"அவரது செல்வாக்குப் பெருக வேண்டும்; எனது செல்வாக்குக்
குறைய வேண்டும்" (யோவா 3:30) என்றும் கூறுகிறார்
திருமுழுக்கு யோவான்.
ஒரு மனைவி தன் கணவரிடம், "ஏழு ஏழு சென்மத்துக்கும்
நீங்கள்தான் எனக்குக் கணவராக இருக்க வேண்டும்" என்றார்.
அதைக் (கேட்ட கணவர் மிக்க மகிழ்ச்சியுற்று அதற்கான
காரணத்தை மனைவியிடம் கேட்டபோது, "உங்களைவிட இளிச்சவாயன்
வேறு யாரும் எனக்குக் கிடைக்க முடியாது" என்றாள் மனைவி,
என்னே அவரது பதிபக்தி,
மனத்தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவர் களாகக்
கருதுங்கள் ... கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே
உங்களிலும் இருக்கட்டும் (பிலி 2:3-5).
நமக்குள் கடவுள் இருப்பதை உணர்ந்து, நமக்குள்ளதை பிறருடன்
பகிர்ந்து, கிடைக்கும் ஊதியம் போதுமென்று வாழ்ந்து. பிறரை
நம்மைவிட உயர்ந்தவர் கள 11கக் கருதி மகிழ்ச்சியுடன்
வாழ்வோம். அப்போது நமது மகிழ்ச்சியை எவரும் நம்மிடமிருந்து
பறிக்க முடியாது (யோவா 16:22).
சிந்தனையை உசுப்பிவிடும் சிறிய கதை இது. ஒரு நாய்க்குட்டி
தன் தாய்நாயைப் பார்த்து அம்மா, உலகம் அறிந்திடாத உண்மை
ஒன்றை நான் உணர்ந்துள்ளேன் என்றது. சொல்லடா கண்ணா!' என்றது
தாய். நாய்க்குட்டி. கூறியது: "என் வாலின் நுனியில் மகிழ்ச்சி
இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதை எப்படியாவது பிடித்துவிட
வேண்டும் என்று சுற்றிச்சுற்றி வந்தும், அது என்
பிடிக்குள் சிக்காமல் விலகிவிடுகிறது. எனவே யாரும் மகிழ்ச்சியை
அடைய முடியாது என்ற முடிவுக்கு வந்து விட்டேன்"
தாய் தன் குட்டியைப் பார்த்து "மகனே, ஆழமாக யோசிக்க ஆரம்பித்து
இருக்கிறாய் என்பதால் எனக்கு ஆனந்தம் தான். இருப்பினும் உன்
தத்துவத்தில் சிறுதவறு, ஒரு குறை இருக்கிறதே, நீ சொல்வது
போலவே உன் வாலின் நுனியில் மகிழ்ச்சி இருப்பதாக வைத்துக்
கொள்வோம். அதைப் பிடிக்க முயன்று ஒரே இடத்தில் நான் சுழன்று
கொண்டிருக்க மாட்டேன். என் கடமையைச் செய்ய நான் முன்னே
செல்வேன். வாலின் நுனியில் உள்ள மகிழ்ச்சி என் பின்னே
தானாக வந்து கொண்டிருக்கும் என்றது.
திருவருகைக்கால் மூன்றாம் ஞாயிறு எப்போதும் மகிழ்ச்சி
ஞாயிறாகக் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவனுக்கு அசைக்க
முடியாத அடையாளம் என்ன? அவனது விசுவாசம் அல்ல. அவனது அன்பு
கூட அல்ல, ஆண்டவரில் எப்போதும் அகமகிழ்வதுதான்! தூய ஆவி
விளைவிக்கும் கனிகளில் அன்புக்கு அடுத்த இடம் மகிழ்ச்சிக்குத்தான்
(கலா.5:22). மனிதன் மகிழ்ச்சியாக இருப்பதே கடவுளின் திருவுளம்
என்பதை உணர்த்த எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள் என்பார்
திருத்தூதர் பவுல் (1 தெச.5:16)
இன்றைய வழிபாட்டில் காணும் மகிழ்ச்சிக்கான இரண்டு வழிகள்:
1. ஆண்டவர் அண்மையில், நம் நடுவில் இருக்கிறார் என்ற அணையாத
ஆர்வம். அவரைச் சந்திக்க வேண்டும் என்ற தணியாத ஆசை, மகளே
சீயோன், மகிழ்ச்சியால் ஆர்ப்பரி... உன் கடவுளாகிய ஆண்டவர்
உன் நடுவில் இருக்கின்றார்... அவர் மாவீரர். மீட்பு அளிப்பவர்
(செப்.3:14-17)
2.சமூகத்தில் பகிர்வு மனத்தோடும் நீதிநெறியோடும் கடமை
உணர்வோடும் செயல்படும் தீரம். மனம் மாறியவர்கள் என்பதை
அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள் என்று திருமுழுக்கு
யோவான் முழங்க, அதைக்கேட்ட பல்வேறு வகையினரும் அணுகி
நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்ட போது கிடைத்த
பதில் : போதும் என்ற மனம், பகிர்ந்து வாழும் உள்ளம்
வேண்டும். (லூக்.3:8-15)
கடவுள்தான் நம் மகிழ்ச்சியின் ஊற்று. அவர் நம்மைத்
திருப்திப்படுத்த முடியவில்லை என்றால் வேறு எவர், வேறு
காது நம்மைத் திருப்திப்படுத்த முடியும்?
கவலை இல்லாத வாழ்க்கைக்காக மகிழ்ச்சியை மாயை என்று உணராமல்
மதுபோதையிலும் மற்ற பொழுதுபோக்குகளிலும் தேடுகிறோம்.
வசதியான வீட்டில் வளர்ந்த நாய் ஒன்று திருப்தி இல்லாமல்
தெருவுக்குப் போனது. அதற்குக் காய்ந்து போன எலும்புத்
துண்டு ஒன்று கிடைத்தது. கடும் வெயிலில் காய்ந்து சுவை
வற்றிக் கல் போல் இருந்த அந்த எலும்பை கடித்தது. நாயின்
வாயில் கீறல்கள் விழ இரத்தம் கசிந்தது. தன் இரத்தத்தைச்
சுவைத்த நாயோ, இரத்தம் எலும்பிலிருந்துதான் வருகிறது என்று
எண்ணி இன்னும் ஆவேசமாக எலும்பைக் கடித்தது, இதைப் பார்த்த
வழிப்போக்கர் ஒருவர் மடநாயே, அது காய்ந்துபோன எலும்பு, நீ
சுவைக்கும் இரத்தம் எலும்பிலிருந்து அல்ல உன் வாயிலிருந்து
கசிவது என்று சொல்ல, நாயோ ஏஏளனமாகச் சிரித்துக் கொண்டே
இந்தநாள் வரை என் நாக்கு இரத்தம் சுவைத்த தில்லை. இந்த
எலும்பைக் கடித்த பிறகு தான் இரத்தத்தின் சுவை தெரிகிறது.
எனவே இந்த இரத்தம் எலும்புத் துண்டிலிருந்து தான்
வருகிறது. என்னை நீ ஏமாற்றாதே" என்று சொல்லி மேலும்
ஆவேசமாகக் காய்ந்த எலும்பைக் கடித்ததாம்.
காய்ந்து உலர்ந்த எலும்பைக் கடித்த நாய் அடைந்த
மகிழ்ச்சிக்கும், புகை, மது, ஆபாசப் படம் போன்றவற்றால்
தங்களையே அழித்துக் கொண்டு சில மனிதர்கள் அடையும்
மகிழ்ச்சிக்கும் என்ன வித்தியாசம்?
கவலை இல்லாத வாழ்வுக்குக் கடவுளே வழி. ''உங்கள் கவலைகளை
எல்லாம் அவரிடம் விட்டுவிடுங்கள். ஏனெனில் அவர் உங்கள்மேல்
கவலை கொண்டுள்ளார் (1 பேதுரு 5:7), சூழ்நிலைகள் மாறலாம்,
துன்ப இருள் சூழலாம், போராட்டம் சிக்கல் பொங்கி எழலாம்.
உள்ளமோ களிகூர்ந்து கொண்டே இருக்கும். அத்திமரம்
துளிர்த்து அரும்பாமல் போயினும், திராட்சைக் கொடிகள்
கனிதராவிடினும், ஒலிவ மரங்கள் பயனற்றுப் போயினும்,
வயல்களில் தானியம் விளையாவிடினும், கிடையில் ஆடுகள் யாவும்
அழிந்து போயினும், தொழுவங்களில் மாடுகள் இல்லாது போயினும்
நான் ஆண்டவரில் களிகூர்வேன். என் மீட்பரான கடவுளில்
மகிழ்ச்சியுறுவேன்" (அபகூக்.3:17-18). வறுமையிலும்
நோயிலும் துயரத்திலும் கூடத் தெய்வீக மகிழ்ச்சியை முகம்
பிரதிபலிக்கும்.
மகிழ்ச்சி என்பது என்ன? இறைவன் நம்மை தனித்த விதத்தில்
நேசிக்கிறார். நமக்காக, நம்மைக் காப்பதற்காக எந்தத்
தியாகத்தையும் செய்வார். ஏன், தன் ஒரே மகனையே கையளிப்பார்
(இது தானே கிறிஸ்மஸ்!). இதை நினைக்கும் போதே நம்மில்
மகிழ்ச்சி பொங்கவில்லையா?
ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள். உன் உள்ளத்து விருப்பங்களை
அவர் நிறைவேற்றுவார்" (தி.பா.37:4)
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச.
திருச்சி
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
மறையுரை அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
அருள்பணி: மாணிக்கம் - திருச்சி
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ