ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

 திருவருகைக்காலம் 3ம் வாரம் - ஞாயிறு

வருடாந்த
ஞாயிறு வாசகம்
    Sermon Fr.Albert
Sr. Gnanaselvi (india)


 திருப்பலி முன்னுரை -
1ம் ஆண்டு

திபா 146: 7. 8. 9-10 (பல்லவி: எசா 35:4)
பல்லவி: ஆண்டவரே, எங்களை மீட்க வந்தருளும்.
அல்லது: அல்லேலூயா.

இறை மகிழ்ச்சியைப் பெற்றுக் கொள்ள வந்திருக்கும் நெஞ்சங்களே!
எப்பொழுதும் மகிழ்ந்திருக்கச் சொல்லி இந்த ஞாயிறு வழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கின்றது.இவ்வுலகில் நாம் பிறந்து விட்டோம். மகிழ்வுடன் வாழ வேண்டுமென்று விரும்புகிறோம். நாமும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் பிறரையும் மகிழ்ச்சியாக வாழவைக்க வேண்டும் என்கிற உணர்வுதான் நம் வாழ்க்கையின் அடிப்படை நோக்கம். இதைத்தான் புனித யோவான் தம் பணியாய் செய்து காட்டினார்.

வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் மகிழ்ச்சியான கொண்டாட்டம் தான். அதை மனம் உணராததால் நாம் மகிழ்ச்சியைத் தேடுகிறோம். மகிழ்ச்சியை உணர்ந்து வாழ இன்றைய வாசகங்கள் மிக அருமையாக எடுத்தியம்புகிறது.

மகிழ்ச்சியாக இருப்பதால் உடல் நலம், மன நலம், அமைதியான வாழ்க்கை சூழல் அமைகிறது. நமது மகிழ்ச்சியால் பிறரின் மகிழ்ச்சியும் பாதுகாக்கப்படுகிறது. மனித சக்தி முழுமையாகப் பயன் பெற மகிழ்ச்சி உதவிபுரிகின்றது. தனி மனித அமைதிக்கு மற்றும் சமூக அமைதிக்கு அடிப்படை தேவை மகிழ்ச்சியே! மகிழ்ச்சியான வாழ்க்கை, வாழ்க்கை தரத்தை வளப்படுத்த உதவுகிறது. வாழ்க்கையில் எந்த நிலையில் வாழ்ந்து வந்தாலும், மகிழ்ச்சியாக வாழ சில வழி முறைகளை பின்பற்றி வாழ்ந்து வந்தால், நிச்சயம் மகிழ்ச்சி நம்மைத் தேடி வரும்.

இன்பத்திலும் துன்பத்திலும் மகிழ்ச்சி கொண்டு சாதனை செய்தவரே, இவ்வுலகில் அழியாப் புகழ் பெற்று மக்கள் மனதில் வாழ்ந்து வருகின்றனர். துன்பம் வரும் போது கலங்காமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அத்தகைய மகிழ்ச்சியான மனநிலை, நமது துன்பத்தை எதிர்த்து வெல்ல உதவும் வழியாகும.

மகிழ்ச்சியின் விதி, பிறருக்கு என்ன கொடுக்கிறோமோ அது தான் நமக்கும் கிடைக்கும். பிறருக்கு எப்பொழுதும் நன்மை செய்தால், பிறரும் நமக்கு நன்மையே செய்வார்கள். அப்பொழுது மகிழ்ச்சியாக இருப்போம். நேர்மறை கண்ணோட்டமும், நேர்மறை எண்ணமும் மனதுக்குள் இருந்தால், உறவுகள் மேம்படும். துணிச்சல் கூடுதலாகும். நேர்மை அதிகரிக்கும். தன்னம்பிக்கை உயரும். அப்பொழுது நம் வாழ்வில் இந்த நொடியும் அடுத்த நொடியும், ஏன் ஒவ்வொரு நொடியும் மகிழ்ந்து வாழ்வோம். மகிழ்ச்;சி தொற்றிக் கொள்ளும் இயல்புடையது. நமது மகிழ்வு நம்மைச் சார்ந்தவரையும் தொற்றிக் கொள்ளும். நாம் மகிழ நம் வீடே மகிழும். வீடுமகிழ நம் நாடே மகிழும். மகிழ்ச்சி ஊற்றுக்கள் எல்லா இடங்களிலும் தோன்றும்.

எப்பொழுதும் மகிழ்ந்திருக்க வரம் தரும் திருப்பலியில் நமது மகிழச்சியின் ஊற்று வற்றாத ஜீவ நீருற்றாக அமைய அருள் வேண்டி செபிப்போம்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. ஒளியை குறித்து சான்று பகர யோவானை அனுப்பிய தேவனே!
உமது வருகைக்கு யோவான் மக்களை தயாரித்தது போல திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் இறைமக்களை உமது வருகைக்கு தயாரிக்கும் பணியில் ஆர்வமுடன் உழைக்கிறார்கள். திருச்சபைத் தலைவர்கள் யோவான் தன்னைத் தாழ்த்தி யேசுவை உயர்த்தியது போல செயல்பட வழிகாட்ட வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.


2. எப்பொழுதும் மகிழ்ந்திருக்க அருள் தரும் தேவனே!
நாடுகளிடையே கேட்கும் வேதனைக் குரலொலி, மக்களின் மனக் குமுறல் ஒலி, போராட்ட ஒலி, வன்முறை ஒலி, இவைகள் நீங்கி மக்கள் அமைதியான வாழ்கை வாழ அழைப்பு விடுக்கும் மகிழ்ச்சிக் குரலொலியை நாட்டிலே நிலைக்கச் செய்ய நாட்டுத் தலைவர்களுக்கு வழிகாட்ட வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.


3. விட்டு கொடுப்பவர்களை தட்டிக் கொடுக்கும் தேவனே!
உமது பொருட்டு சொந்த பந்தங்களை விட்டுக் கொடுத்து இறைமக்களை உயர்த்த உழைக்கும் எமது பங்குத் தந்தையை தட்டிக் கொடுத்து அவர் வேண்டும் விண்ணப்பங்களை நிறைவேற்ற வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.


4. உள்ளம் உடைந்தோரை குணப்படுத்தும் தேவனே!
இதோ இங்கே கூடியிருப்போர் உள்ளங்களில் நிரம்பி வழியும் எண்ணங்கள் எல்லாம் ஏற்றம் பெறவும், எதிர் வரும் துன்பங்களை பொறுமையோடு விட்டுக் கொடுத்து நற்பலனை பெற்று உம்மை சந்திக்கும் சந்தோஷம் தரவும் வழி காட்ட வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.


5. கட்டுண்டோருக்கு விடிவு தரும் தேவனே!
எங்கள் மனதில் இருக்கும் வீண் பெருமை, தவறான கணிப்பு, போட்டி, பொறமை, கர்வம் போன்ற உணர்வுகளை அகற்றி, நலமுடன் உம்மை சந்திக்கும் மனமகிழ்ச்சி பெற்று வாழ இங்கே கூடி இருக்கும் அனைவருக்கும் அருள் தர வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம.


 
திருப்பலி முன்னுரை


இறை இயேசுவில் அன்புள்ள சகோதர சகோதரிகளே!

ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும் வந்துள்ள, நம் ஆண்டவர் இயேசுவின் திருப் பெயரில் வாழ்த்துக்கள் கூறி திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்போடும், பெரு மகிழ்வோடும் வரவேற்கின்றோம்.

எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதும்;. இடைவிடாது இறைவனிடம் வேண்டுதல் செய்வதும். எல்லாச் சூழ்நிலையிலும் ஆண்டவருக்கு நன்றி கூறுவதும், தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்காதிருப்பதும். இறைவாக்குகளைப் புறக்கணிக்காமல் அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து, நல்லதைப் பற்றிக்கொண்டு. எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகி வாழ்வதுமே நமது கிறிஸ்தவ ஆன்மிக வாழ்வின் முழுமைக்கான வழிகளாக இருக்கின்றன என்பதை இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

எனவே அமைதி அருளுகின்றவரும், நம்மை முற்றிலும்; தூய்மையாக்குபவரும், நம்முடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் குற்றமின்றி முழுமையாகக் காக்கின்றவரும், நம்பிக்கைக்குரியவருமான நம் கடவுளிடம் சரணடைந்து அவர் பின்னே செல்லுவோம், அமைதியையும், மகிழ்ச்சியையும் பெறுவோம். அதற்காக இத்திருப்பலியில் நம்மை அர்பணித்துச் செபிப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டு.

1.உம் பணியாளருக்குத் துணையாக இருந்து வருகிற எங்கள் தந்தையே இறைவா!

நீர் எமக்குக் கொடுத்துள்ள எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரையும் நிறைவாக ஆசிர்வதித்து வலுப் படுத்தும். அவர்கள் ஒவ்வொருவரும்  தாம் ஒடுக்கப் பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும் உம்மால் அழைக்கப்பட்டுள் ளோம், அனுப்பப்பட்டுள்ளோம் என்னும் உண்மையை உணர்ந்து பணியாற்ற வேண்டிய ஞானத்தை அவர் களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகின்ற தந்தையே இறைவா!

இறைமக்கள் சமுதாயத்தின் உறுப்பினர்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும்: தூய ஆவியின் செயல் பாட்டைத் தடுக்க வேண்டாம். இறைவாக்குகளைப் புறக்கணிக்க வேண்டாம். அனைத்தையும் சீர்தூக்கிப் பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள். என்னும் இறைவனின் குரலுக்கு நல்லுள்ளத்தோடு செவிமடுத்து, நாங்கள் ஒவ்வொருவரும் இறை மகிமைக்காவும், பிறர் நலனுக்காகவும் உழைக்கின்ற மக்களாக வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் காப்பாற் றுகின்றவரான தந்தையே இறைவா!

அலகையின் தந்திர வலையில் சிக்கிப் போதைப் பொருள் பாவனையினாலும், கலாச்சாரச் சீர்கேடுகளி னாலும், ஒழுக்க வாழ்விற்கு மாறான செயற்படுகளி னாலும், தவறான இலத்திரனியல் பொருட்களின் பாவனையினாலும் சிதைவடைந்து கொண்டிருக்கும் அனைவரையும் ஆசீர்வதித்து, இந்தத் தீமையின் பிடியிலிருநது அவர்களை விடுவித்தருள வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நேர்மையும் விடுதலையும் துளிர்த்தெழச் செய்கின்றவரான தந்தையே இறைவா!

உலக நாடுகள் முழுவதிலும் விதைக்கப்பட்டுள்ள அநீதி. சுயநலம், பேரின்மீது பெருவிருப்பம், அடக்குமுறை போன்ற தீமைகளை வேரறுத்து அமைதி, விடுதலை, பிறர்நலம், உண்மை என்னும் விதைகளை விதைத்திட வேண்டுமென்றும், தற்போதைய காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அத்தனை தாக்கங்களிலிருந்தும் அனைத்து மக்களையும் பாதுகாத்திட் வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
மறையுரை சிந்தனைகள்
  
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.


மகிழ்வின் தூய வழி

மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும் என்பார் பெர்னாட்ஷா. பிறரை மகிழ்விப்பது தான் மகிழ்ச்சிக்கு வழி என்பர் கற்றறிந்தவர்கள். ஆக மகிழ்ச்சி மனிதனுக்கு மிக முக்கியமானது. இத்தகைய மகிழ்ச்சியை நாம் நிலையாக பெற இன்றைய திருவருகைக்கால மூன்றாம் ஞாயிறு நம்மை அழைக்கின்றது. முதல் வாசகம் மகிழ்வின் தூய வழி எப்படிப்பட்டது என்பதையும், இரண்டாம் வாசகம் அவ்வழியை அடைய நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும், நற்செய்தி வாசகம் அவ்வழி நடந்தால் நாம் எப்படிபட்டவர்களாவோம் என்பதையும் எடுத்துரைக்கின்றது.

மகிழ்ச்சி மனித வாழ்வில் மிக அவசியமானது. எல்லோரும் மகிழ்வாக வாழவே ஆசைப்படுகின்றனர். ஆனால் மகிழ்ச்சிக்கு முன்னர் ஏராளமான துன்பங்களை அனுபவிக்கின்றனர். ஏனெனில் நம்முடைய மகிழ்ச்சி நம்மை சார்ந்து பெரும்பாலும் இருப்பதில்லை. ஏதாவது ஒரு தேவையை முன்னிட்டே இருக்கின்றது. அது கைக்கு கிடைத்துவிட்டால் சந்தோஷம் மகிழ்ச்சி நிலைத்துவிடும் என்று நினைக்கின்றோம் ஆனால் அவ்வாறு நிலைப்பதில்லை. கிடைக்காதவரை துன்புற்றே வருந்துகின்றோம். வயது தகுதி நிலைமைக்கு ஏற்ப நம்முடைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையற்ற மகிழ்விற்காக எதிர்பார்த்து ஏமாற்றமடைவதை விட நிலையான உண்மையான மகிழ்ச்சியை அடைந்து நலமுடன் வாழ இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்புவிடுக்கின்றன.

எப்படிப்பட்டது?
மகிழ்வின் தூய வழி எப்படிப்பட்டது? வெறுமை நிறைவு அடையும் என்கின்றார் எசாயா இறைவாக்கினர். பாலைநிலம், பாழ்வெளி, பொட்டல் நிலம்,அனைத்தும் அகமகிழும் அக்களிக்கும், மகிழும், பூத்துக்குலுங்கும். எழில், மாட்சி, மேன்மை அதற்கு அளிக்கப்படும் என்கின்றார். இதிலிருந்து பழைய துன்பமான நிலைமை மாறி இன்பமான புதிய நிலைக்கு நீங்கள் அழைத்து செல்லப்படுவீர்கள் என்றுமுள மகிழ்ச்சியால் உங்கள் முகம் நிறைந்திருக்கும். துன்பமும் துயரமும் பறந்தோடும். இதற்கு நாம் செய்ய வேண்டியது தளர்ந்து போன நம் கைகளை திடப்படுத்தவேண்டும். தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்த வேண்டும். ஆண்டவரைத் தேடி நட, அவருக்கு பிரியமான பணிகளை கைகளால் செய், என்பதே அவர் நமக்கு தரும் செய்தி.

எப்படி இருக்க வேண்டும்?
விதைத்து விட்டு அறுவடைக்காகக் காத்திருக்கும் விவசாயி போல பொறுமையோடு காத்திருக்கச் சொல்கின்றார். மேலும் உள்ளத்தை உறுதிப்படுத்துங்கள். பொறுமையோடிருங்கள். முறையிடாதீர்கள். இறைவாக்கினரை உங்களுக்கு முன்மாதிரிகையாகக் கொள்ளுங்கள். என்கின்றார். பெரும்பாலும் நாம் முன்மாதிரிகையாக கொண்டிருப்பது சினிமா பிரபலங்களைத் தான் அதைவிடுத்து வர இருப்பதை நமக்கு சுட்டிக்காட்டும் நல்ல இறைவாக்கினர்களின் வாழ்வை முன்மாதிரிகையாகக் கொள்ளச்சொல்கின்றார். ஆக பொறுமையோடு நாம் அவரின் மகிழ்வான வருகைக்காகக் காத்திருந்தால் அம்மகிழ்வு நமக்கு நிலையாகக் கிடைக்கும்.

நாம் எப்படிப்பட்டவர்களாவோம்?
இயேசு சொல்கின்றார் என்னை தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறுபெற்றோர் என்று . நாம் அவரை தயக்கம் இன்றி ஏற்கின்றோமா? அவரது உருவத்தை பார்க்க அவரது குரலைக் கேட்க நாம் ஆற்றல் பெற்றிருக்கின்றோமா? நம் வெளிப்புற உறுப்புக்களான கண் காது கை கால் அனைத்தும் நலமாய் இருந்தாலும் ஆண்டவரைத் தேடுவதில் அவரை நாடுவதில் நாம் காட்டும் ஈடுபாடு மிகக் குறைவே. இந்நிலைமை மாறி அவரை நாம் முழுமனதோடு தேடும் போது நாமும் விண்ணரசில் இடம் பெறுவோம். நமது மகிழ்ச்சியும் நிறைவடையும் .

ஆக பொறுமையோடும் வேண்டுதல்களோடும் நாம் ஆண்டவர் இயேசுவின் வருகைக்காக காத்திருக்கும் போது அவர் காட்டும் மகிழ்வின் தூய வழியை நாமும் கண்டடைவோம் அவ்வழியில் பயணம் செய்து பேறுபெற்றோர்கள் கூட்டத்தில் நாமும் ஒருவராக இணைவோம். இவ்வாறு வாழ்ந்து மகிழ்வின் தூய வழியை அடைய இறைவன் இயேசு நமக்கு ஆசீர் பொழிந்து காப்பாராக ஆமென்.
Sr. Merina OSM

 
மறையுரைச்சிந்தனை  - அருட்சகோதரி: செல்வராணி O.S.M.


 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி

மகிழ்ச்சி மெசியாவின் செயல்

திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றை 'கௌதேத்தே தொமெனிக்கே' ('மகிழ்ச்சி ஞாயிறு') என அழைக்கின்றோம். இன்றைய திருப்பலியின் வருகைப் பல்லவியும், முதல் வாசகமும் 'அகமகிழ்தல்' என்னும் சொல்லுடன் தொடங்குகின்றன.

மகிழ்ச்சியின் வரையறை என்ன? 'சிரிப்பு,' 'இன்பம்,' 'சந்தோஷம்,' 'நிறைவு,' 'உடல்நலம்' என நாம் பல வார்த்தைகளைச் சொன்னாலும், எந்த வார்த்தையும் மகிழ்ச்சி என்ற உணர்வை முழுமையாகப் பிரதிபலிப்பதில்லை. மகிழ்ச்சி என்பது ஒரு 'ரெலடிவ்' (தனிநபர்சார் உணர்வு) எமோஷன் என்பதில் ஐயமில்லை. அதாவது, அது தனிநபர் சார்ந்தது. எல்லாருக்கும் பொதுவான மகிழ்ச்சி என்று ஒன்றை வரையறுக்க முடியாது. மகிழ்ச்சி உள்ளிருந்து வருகிறதா? அல்லது வெளியிலிருந்து வருகிறதா? 'உள்ளிருந்து வருகிறது' என்றால், சில நேரங்களில் நம் மனம் எந்தக் காரணமும் இல்லாமல் சோர்ந்திருக்கக் காரணம் என்ன? 'வெளியிலிருந்து வருகிறது' என்றால், மகிழ்ச்சி நிபந்தனைக்குட்பட்டதாகிவிடுமே!

மகிழ்ச்சியை வரையறை செய்வதில் இவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் மகிழ்ச்சி என்பது நாம் அனைவரும் அன்றாடம் அனுபவிக்கின்ற ஓர் உன்னத உணர்வு. நாம் உண்பது, உறங்குவது, படிப்பது, பயணம் செய்வது, பணி செய்வது, உறவாடுவது என எல்லாவற்றின் இலக்கு ஒன்றே ஒன்றுதான்: 'மகிழ்ச்சியாக இருப்பதற்கு!' யாரும் துன்பப்பட விரும்புவதில்லை. துன்புறவேண்டும் என்பதற்காக எதையும் செய்வதில்லை. அலெக்ஸாண்டர் தெ கிரேட் உலகையே தன் கைக்குள் அடக்கிவிடத் துணிந்ததும் மகிழ்ச்சிக்காகவே! புத்தர் அரண்மனையை விட்டு வெளியேறி போதி மரத்தடியில் அமர்ந்ததும் மகிழ்ச்சிக்காகவே! இவர்களின் மகிழ்ச்சியில் ஒன்று உயர்ந்தது மற்றொன்று தாழ்ந்தது என்று சொல்லிவிட முடியாது. மகிழ்ச்சியும் துன்பமும் மாறி மாறி எழுகின்ற உணர்வுகளாக இருக்கின்றன என்பதே நம் வாழ்வியல் எதார்த்தம்.

மெசியாவின் செயல்களைக் கேள்வியுறுவதும், ஏற்பதும், செய்வதும் மகிழ்ச்சி என்று மகிழ்ச்சிக்கான புதிய வாயில்களைத் திறக்கின்றன இன்றைய வாசகங்கள்.

இன்றைய முதல் வாசகத்தின் (காண். எசா 35:1-6,10) பின்புலம் மிகவும் சோகமானது. கிமு 7ஆம் நூற்றாண்டின் இறுதியில் இஸ்ரயேலும் எருசலேமும் அசீரியாவால் மிகுந்த அச்சுறுத்தலுக்கு ஆளாகின. மக்கள் அடிமைப்படுத்தப்பட்டார்கள். கோயில் தீட்டாக்கப்பட்டது. 'எல்லாம் முடிந்தது' என்று நினைத்த மக்களுக்கு, 'முடியவில்லை, விடிகிறது' என்று இறைவாக்குரைக்கின்றார் எசாயா. முதலில், ஒட்டுமொத்த படைப்பும் புத்துணர்ச்சி பெறுகிறது - 'பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழ்கிறது,' 'பொட்டல்நிலம் அக்களிக்கிறது,' 'லீலிபோல் பூத்துக்குலுங்கி மகிழ்ந்து பாடிக் களிப்படைகிறது' - படைத்தவரின் அரவணைப்பை படைப்பு பெற்றுக்கொள்கிறது. தொடர்ந்து, 'அஞ்சாதீர்கள்' என்று செய்தி அனைத்து மக்களுக்கும் வழங்கப்படுகிறது. மூன்றாவதாக, நான்கு வகை நோய்களிலிருந்து மக்கள் விடுபடுகிறார்கள் - கண்பார்வையற்ற நிலை, காதுகேளாத நிலை, கால்கள் முடமான நிலை, மற்றும் பேச்சற்ற நிலை. அக்காலத்தில் இந்நோய்களுக்குக் காரணம் ஒருவர் செய்த பாவம் என்று கருதப்பட்டது. ஆனால், அவர்களை நோய்களிலிருந்து விடுவிப்பதன் வழியாக கடவுள் அவர்களின் பாவங்களை எல்லாம் மன்னிக்கிறவராக முன்வைக்கப்படுகிறார்.

பகைவரின் படையெடுப்பால் படைப்பும், மக்களும் அனுபவித்த துன்பங்கள் மறைந்து மகிழ்ச்சி பிறக்கிறது. கிறிஸ்தவ வாசிப்பில் இப்பகுதி மெசியாவின் செயல்கள் முன்னறிவிப்பு பகுதி என அழைக்கப்படுகின்றது.

இன்றைய இரண்;டாம் வாசகம் (காண். யாக் 5:7-10) யாக்கோபின் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. யாக்கோபு இத்திருமடலை எழுதுகின்ற நேரத்தில் உலகின் முடிவு மற்றும் இரண்டாம் வருகையை மையமாகக் கொண்டு 'நிறைவுகாலம்' ('பரூசியா') பற்றிய எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. மக்கள் பொறுமையின்றி இருந்தனர். அதாவது, ஒரு வகையான அவசரம் அனைவரையும் பற்றிக்கொண்டது. எல்லாம் அழியப் போகிறது என்னும் அச்சம், அந்த அச்சத்தோடு இணைந்த பதற்றம் மற்றும் கவலையினால் ஒருவர் மற்றவரிடம் கொண்டுள்ள உறவும் பாதிப்புக்குள்ளாகிறது. போட்டி மனப்பான்மையும் முணுமுணுத்தலும் எழுகின்றது. இதன் பின்புலத்தில்தான் அவரின் அறிவுரை அமைகின்றது. இவர்களுக்கு அறிவுறுத்துகின்ற யாக்கோபு, 'பயிரிடுபவரைப் போல பொறுமையாகவும்,' 'ஒருவர் மற்றவரிடம் முறையீடு இன்றியும்' இருக்குமாறு அறிவுறுத்துகின்றார்.

நற்செய்தி வாசகம் (காண். மத் 11:2-11) இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது: முதல் பகுதியில், சிறையிடப்பட்டுள்ள திருமுழுக்கு யோவான், மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்று, 'வரவிருப்பவர் நீர்தாமோ?' என்று இயேசுவிடம் கேட்குமாறு தம் சீடர்களை அனுப்புகிறார். இரண்டாம் பகுதியில், திருமுழுக்கு யோவானுக்குப் புகழாரம் சூட்டுகிறார் இயேசு. இயேசுவின் சமகாலத்தில் மெசியா பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. மெசியா என்றால் அரசராக அல்லது அருள்பணியாளராக வந்து தங்களை எதிரிகளின் கைகளிலிருந்து விடுவிப்பார் என்று நம்பினர் மக்கள். இந்த நம்பிக்கை யோவானுக்கும் இருந்தது. ஆனால், இயேசு அப்படி எந்த ஒரு முயற்சியையும் எடுக்காமல் இருப்பதைப் பார்த்து, சற்றே குழப்பத்துடன் சீடர்களை அனுப்புகிறார் யோவான். இயேசுவின் மெசியா புரிதல் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. இயேசுவைப் பொருத்தவரையில் மெசியாவின் செயல்கள் என்பவை தனிநபர் வாழ்வில் நடந்தேறுபவை: 'பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர், கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர், தொழுநோயாளர் நலமடைகின்றனர், காதுகேளாதோர் கேட்கின்றனர், இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர், ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது' என்று மெசியாவின் வருகையின் மாற்று அடையாளங்களைச் சொல்லி அனுப்புகின்றார்.

மூன்று வாசகங்களிலும் துன்பம் பின்புலமாக நிற்கிறது: (அ) முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் அசீரியாவின் அடிமைத்தனத்தில் இருக்கிறார்கள்ளூ (ஆ) இரண்டாம் வாசகத்தில், எதிர்காலம் பற்றிய அச்சம் யாக்கோபின் திருஅவைக்குத் துன்பம் தருகிறதுளூ (இ) நற்செய்தி வாசகத்தில், திருமுழுக்கு யோவான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இருந்தாலும், அடிமைத்தனம், அச்சம், சிறையடைப்பு என்றும் மூன்று துன்ப நிலையில் இருந்தவர்களும் மெசியாவின் செயல்களைக் கேள்வியுறுகிறார்கள், காண்கிறார்கள், அனுபவிக்கிறார்கள்.

இன்று நம் வாழ்வில் நாம் அனுபவிக்கும் துன்பங்களையும் மேற்காணும் துன்ப நிலைகளோடு பொருத்திப் பார்க்க இயலும். பழக்கங்கள் மற்றும் மனிதர்களுக்கு அடிமையாக இருக்கின்ற நிலையில் நாம் துன்பம் அனுபவிக்கின்றோம். எதிர்காலம் பற்றிய அதீத அச்சமும் மற்ற பயங்களும் நமக்குத் துன்பம் தருகின்றன. நம் குறுகிய எண்ணங்களில் நாம் சிறைப்பட்டுக் கிடக்கும்போதும் துன்பப்படுகின்றோம்.

விளைவு, மெசியா நம் வாழ்வில் ஆற்றும் செயல்களைக் காண இயலாததோடு, அவற்றைச் செய்யவும் நாம் துணிவதில்லை. துன்பம் நீக்குதலே மெசியாவின் செயல்.

மெசியாவின் செயல்களை நாம் காணவும், அனுபவிக்கவும், செய்யவும், இவ்வாறாக, மகிழ்ச்சியைக் கண்டுகொள்ளவும் நாம் செய்ய வேண்டியது என்ன?

(அ) உள்ளத்தில் உறுதி
'தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள். தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்' என அழைப்பு விடுக்கின்றார் எசாயா. உள்ளத்தில் உறுதி குலையும்போது நம் உடலின் உறுதியும் குலைந்துபோகிறது. நம் தனிநபர் வாழ்வில், குடும்பத்தில், நட்பு வட்டத்தில், சமூகத்தில் உள்ளத்தில் உறுதியற்று வாழ்பவர்கள் ஏராளம். தவறான முடிவுகளாலும், கோபம், குற்றவுணர்வு, பயம், தாழ்வு மனப்பான்மை, ஒப்பீடு, பொறாமை போன்ற காரணங்களால் உள்ளம் உறுதியற்றுக் கிடக்கும் நபர்களுக்கு ஊக்கம் தருவது மெசியாவின் செயல்.

(ஆ) பொறுமை
நம் வாழ்வில் நம்மை அறியாமல் ஏதோ ஓர் அவசரம் நம்மைப் பற்றிக்கொள்ள அனுமதிக்கிறோம். எதையாவது செய்துகொண்டே வேண்டும் என்ற நிர்பந்தமும் நம்மை அழுத்துகிறது. இந்த இடத்தில் யாக்கோபு தருகின்ற உருவகத்தின் பொருளை உணர்ந்துகொள்வோம். பயிரிடுபவர் கொண்டிருக்கும் பொறுமையை நாம் கொண்டிருக்க வேண்டும். நிலத்தில் விதைகளை இட்ட விவசாயி விதை தானாக வளரும் வரை பொறுமையுடன் இருக்க வேண்டும். நிலத்தின் ஈரப்பதம், சத்து, வெளிப்புற காரணிகள் ஆகியவற்றைப் பொருத்து வளர்ச்சி வேகமாகவோ தாமதாமாகவோ அமையும். விதை முளையிடும் வரை பொறுமை காப்பதை விடுத்து, எதையாவது செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக, நிலத்தைத் தோண்டித் தோண்டி விதையைப் பார்த்துக்கொண்டிருந்தால் விதை முளைக்காது. அவசரம் குறைத்து பொறுமை ஏற்றால்தான் நம் வாழ்வில் மெசியாவின் செயல் நடந்தேறுதலைக் காண முடியும். நாமும் அச்செயலைச் செய்ய முடியும்.

(இ) சிறைப்படாத உள்ளம்
யோவானின் உடல் சிறைப்பட்டிருந்தாலும் அவருடைய உள்ளம் என்னவோ கட்டின்மையோடே இருக்கிறது. தன்னைச் சுற்றி நடக்கும் செயல்கள் பற்றிய அவருடைய அறிவு நமக்கு வியப்பளிக்கிறது. மெசியாவின் செயல்கள் ஆலயங்களில் அல்ல, சிறைக்கூடங்களின் தனிமையில் விரக்தியில் கண்டுகொள்ளப்படுகின்றன. மெசியாவின் செயல்களைக் கேள்வியுற்ற யோவான் உடனடியாகச் செயலாற்றுகின்றார். இவ்வாறாக, மெசியாவின் செயல்கள் தொடர்ந்து நடந்தேறுவதற்கான தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றார். யோவானின் பரந்த உள்ளம் மகிழ்ச்சிக்கான முக்கியக் கூறு.

இன்றைய பதிலுரைப் பாடலில், திருப்பாடல் ஆசிரியர், 'சீயோனே! உன் கடவுள் என்றென்றும் எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்கின்றார்' (146:10) என்று பாடுகின்றார். மெசியாவின் செயல்கள் இஸ்ரயேல் மக்களுக்கும் இயேசுவின் சமகாலத்தவருக்கும் மட்டும் உரியவை அல்ல. அவை இன்றும் நம்மில் நம் வழியாக நடந்தேறுகின்றன.

அவரின் செயல்கள் நம் வாழ்வில் மகிழ்ச்சி தருகின்றன.
 
 
 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை
திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு - 11 டிசம்பர் 2022

I எசாயா 35: 1-6,10
II யாக்கோபு 5: 7-10
III மத்தேயு 11: 2-11

இயேசுவைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்வோர், பேறுபெற்றோர்

அது ஒரு சிற்றூர். அந்தச் சிற்றூரில் பெரியவர் ஒருவர் இருந்தார். அவருக்குக் கடவுள் நம்பிக்கையே கிடையாது. இத்தனைக்கும் அவர் ஒரு பாரம்பரியக் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தவர். இருந்தாலும் அவர் ஆன்மிகத்திலும் கடவுள் தொடர்பானவற்றிலும் ஈடுபாடும் நம்பிக்கையும் இல்லாமல் இருந்தது, ஊரில் இருந்த எல்லாருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது.

இதற்கு நடுவில் அந்தப் பெரியவரோடு நெருங்கிப் பழகி வந்த இளைஞன் ஒருவன் அவரிடம், "உங்களுக்குக் கடவுள்மீது நம்பிக்கை இல்லை என்று சொல்கிறீர்களே! எப்பொழுதாவது நீங்கள் திருவிவிலியத்தை வாசித்திருக்கிறீர்களா...?" என்றான். அவர் இல்லையென்று சொன்னதும், அவன் அவரிடம் ஒரு திருவிவிலியத்தைக் கொடுத்து, "இந்தத் திருவிவிலியத்திலுள்ள யோவான் நற்செய்தியை வாசியுங்கள். அப்படி நீங்கள் வாசிக்கும் உங்களுக்கு எந்த இறைவார்த்தையில் நம்பிக்கை இல்லையோ, அந்த இறைவார்த்தையைச் சிவப்பு நிறத்தால் குறித்து வையுங்கள். அதன்பிறகு நான் உங்களுக்கு அது குறித்து விளக்கம் தருகின்றேன்" என்றான். பெரியவரும் அதற்குச் சரியென்று ஒப்புக்கொண்டார்.

நாள்கள் மெல்ல நகர்ந்தன. இளைஞன் அந்தப் பெரியவருடைய வீட்டைக் கடந்து போகின்றபோதேல்லாம், "திருவிவிலியத்தை வாசிக்கின்றீர்களா...?" என்று கேட்பான். அவரும் வீட்டுக்குள் இருந்து 'ம்ம்ம்' என்று சத்தம் கொடுப்பார். ஒருநாள் அந்த இளைஞன் பெரியவருடைய வீட்டைக் கடந்து போகும்போது, வழக்கமாகக் கேட்கும் கேள்வியைக் கேட்டான். பெரியவரிடமிருந்து சத்தம் எதுவும் வராததால், வீட்டுக்குள் போய்ப் பார்த்தான். அங்கோ பெரியவர் இறந்து கிடந்தார்; அவருக்குப் பக்கத்தில் திருவிவிலியம் திறந்த நிலையில் இருந்தது.

உடனே அவன் திருவிவிலியத்தைக் கையில் எடுத்து, யோவான் நற்செய்திப் பகுதிக்கு வந்து, அங்கு ஏதாவது சிவப்பு நிறத்தால் குறிக்கப்பட்டிருக்கின்றதா? என்று பார்த்தான். முதல் அதிகாரத்தில் எதுவும் இல்லை; இரண்டாம் அதிகாரத்திலும் எதுவும் இல்லை. மூன்றாம் அதிகாரத்தின் பதினாறாவது இறைவார்த்தைக்குக் கீழ், "நம்பினோர்க்கு நிலைவாழ்வு தரும் பேரன்புமிக்க இறைவா! உன்மீது நான் ஆழமான நம்பிக்கை வைக்கின்றேன்" என்ற சொற்கள் எழுதப்பட்டிருந்தன. இதைப் படித்துப்பார்த்த அவன் அப்படியே வியந்துநின்றான்.

இந்த நிகழ்வில் வருகின்ற கடவுள் நம்பிக்கையே இல்லாமல் இருந்த பெரியவர், இறுதியில் கடவுள்மீது நம்பிக்கை கொண்டதும், அவரை ஏற்றுக்கொண்டதும் நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. திருவருகைக்காலம் மூன்றும் ஞாயிற்றுக்கிழமை இறைவார்த்தையும் கடவுள்மீது ஆழமான நம்பிக்கை வைத்து வாழவேண்டும்; அவரைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற சிந்தனைக் தருகின்றது. அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

திருமுழுக்கு யோவான் இயேசுவை ஏற்றுக்கொள்ளத் தயங்கினாரா?
நற்செய்தியில், திருமுழுக்கு யோவானின் சீடர்கள் இயேசுவிடம், "வரவிருப்பவர் நீர்தாமா? வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?" என்று தங்களுடைய தலைவர் கேட்கச் சொன்ன கேள்வியைக் கேட்கின்றார்கள். இயேசுவுக்குத் திருமுழுக்குக் கொடுத்தவர்; அவரைத் தன்னுடைய சீடர்களிடம், 'இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி' என்று சுட்டிக்காட்டியவர் (யோவா 1:29) இந்தத் திருமுழுக்கு யோவான். அப்படிப்பட்டவர் தன் சீடர்கள் மூலம் மேலே உள்ளே கேள்வியைக் கேட்பது நமக்குச் சற்று வியப்பாக இருக்கின்றது. அவரை எது இப்படிக் கேட்க வைத்தது என்பதைக் குறித்துத் தெரிந்துகொள்வது நல்லது.

யோவான் இந்தக் கேள்வித் தன் சீடர்கள் மூலம் கேட்ட சமயத்தில், அவர் சிறையில் இருந்தார். ஒருவேளை அவர் 'இறைப்பணியைச் செய்யும் தன்னை மெசியாவாகிய இயேசு விடுவிப்பார்' என்று நினைத்து, அது நடக்காததால் இயேசு மெசியா இல்லையோ என்று எண்ணியிருக்கக்கூடும். மேலும் இயேசு பெரும்பாலும் பாவிகளோடு இருந்து, அவர்கள் நடுவில் பணிசெய்து வந்ததால், அவர் மெசியா இல்லைபோலும் என்று நினைத்திருக்கக்கூடும். அதனால்தான் அவர் தன்னுடைய நம்பிக்கையில் சிறிது தளர்ந்து, 'வரவிருப்பவர் நீர்தாமா...? வேறொருவரை எதிர்பார்க்கவேண்டுமா...?' என்ற கேள்வியைத் தன்னுடைய சீடர்கள் மூலம் இயேசுவிடம் கேட்கின்றார்.

திருமுழுக்கு யோவானின் சீடர்களுக்குக் கூட, இயேசு உண்மையில் மெசியாதானா? என்ற ஐயம் இருந்தது; இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அவர் திருமுழுக்கு யோவானைப் போன்று தன்னுடைய சீடர்களை நோன்பு இருக்கச் சொல்லவில்லை. இப்படியொரு நிலையில் இயேசு திருமுழுக்கு யோவான் கேட்ட கேள்விக்கு என்ன பதிலளித்தார் என்பதையும், அதன் பொருள் என்ன என்பதையும் சிந்தித்துப் பார்ப்போம்.

தான் மெசியா என்பதை வார்த்தையாலும் வாழ்வாழ்வாலும் எடுத்துச் சொன்ன இயேசு திருமுழுக்கு யோவான் கேட்ட கேள்விக்கு இயேசு, "ஆமாம், நான்தான் வரவிருப்பவர்" என்று நேரடியாகப் பதில் சொல்லிக்கொண்டிருக்காமல், நீங்கள் கேட்பதையும் காண்பதையும் யோவானிடம் போய் அறிவியுங்கள் என்று கூறுகின்றார்.

இறைவாக்கினர் எசாயா நூலில் (எசா 26: 18-19, 42;7, 61:1), குறிப்பாக இன்றைய முதல் வாசகத்தில் (35: 5-6) மெசியாவின் வருகையின்போது, என்னென்ன நடக்கும் என்பன பற்றிச் சொல்லப்பட்டது. அவையெல்லாம் இயேசுவின் மூலம் நடந்தது. ஆமாம், இயேசு பார்வையற்றவர்களுக்குப் பார்வையளித்தார் (மத் 9: 27-31; கால் ஊனமுற்றவரை நடக்கச் செய்தார் (மத் 9: 1-8); தொழுநோயாளரைக் குணமாக்கினார் (மத் 8: 1-4); பேச இயலாதவரைப் பேச வைத்தார் (மத் 9: 32-33); இறந்தோரை உயிர்பெற்று எழச் செய்தார் (மத் 9: 18-19); ஏழைகளுக்கு நற்செய்தி அறிவித்தார் (லூக் 4:23). இவ்வாறு அவர் தன்னுடைய போதனையாலும் வாழ்வாலும், தானே வரவிருப்பவர் என்பதை உறுதிப்படுத்தினார். இதைத் தான் இயேசு தன்னிடம் வந்த திருமுழுக்கு யோவானின் சீடர்களிடம், எடுத்துக்கூறி, திருமுழுக்கு யோவானிடம் சொல்லச் சொல்கின்றார். அவர் அவர்களிடம் இன்னொரு முக்கிய செய்தியையும் சொல்கின்றார். அது குறித்துத் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

நீங்கள் பேறுபெற்றோராக வேண்டுமா?
இயேசு, தன்னிடம் வந்த திருமுழுக்கு யோவானின் சீடர்களிடம் இறுதியாக, "என்னைத் தயக்கிமின்றி ஏற்றுக்கொள்வோர் பேறுபெற்றோர்" என்று கூறுகின்றார். இதன்மூலம் இயேசு அவர்களிடம், என்னை, என்னுடைய வெளியடையாளங்கள், பழகுகின்ற மக்கள், பின்புலம் இவற்றைக் கொண்டு மதிப்பிடாமல் போதனையையும் செயல்களையும் பார்த்து தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுகின்றார்.

சிறையில் அடைபட்டிருந்த திருமுழுக்கு யோவானுக்கு ஏற்பட்ட 'இயேசுதான் வருவிருப்பவரா?' என்ற ஐயம், பலருக்கும் ஏன், நமக்கும் நாம் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றபோதும் அல்லது துன்பங்களைச் சந்திக்கின்றபோதும் ஏற்படலாம். இதைவிடவும் இறைவனுடைய இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் சூழ்நிலை நமக்கு ஏற்படலாம். ஆனால், எவர் ஒருவர் இயேசுவைத் தயக்கமின்றி, எந்தவொரு ஐயமின்றி ஏற்றுக்கொள்கின்றாரோ, அவரே பேறுபெற்றவர் ஆவார். ஆகையால், நாம் இயேசுவைத் தயக்கமின்றி ஏற்றுக்கொண்டு, அவர்மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்து பேறுபெற்றோர் ஆகப்போகிறோமா? அல்லது இயேசுவை ஏற்றுக்கொள்ளாமலும் அவர்மீது நம்பிக்கை கொள்ளாமலும் இருந்து, அவர் தரும் ஆசியை இழக்கப்போகிறோமா? சிந்திப்போம்.

சிந்தனை
'இயேசுவே ஆண்டவர் என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்பு பெறுவீர்கள்' (உரோ 10:9). என்பார் புனித பவுல். ஆகையால், நாம் இயேசுவே ஆண்டவர், இயேசுவே மெசியா என்று அவரைத் தயக்கமின்றி ஏற்றுக்கொண்டு, அவர்மீது நம்பிக்கை வைத்து, அதற்கேற்றாற்போல் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
 
 
 
இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
ஒரு மனிதனுக்கு சாதாரணமாக நான்கு வகையிலே துன்பம் வரலாம்: 1. நோயினால் 2. பாவத்தால் 3. மரணத்தால் 4. இயற்கையினால். ஆண்டவர் மனிதர்களின் மனநிலையை உணர்ந்தவராய் நான்கு துயரங்களிலிருந்தும் மனிதர்களை விடுவித்து அவர்களுக்கு மகிழ்ச்சியும், மனநிம்மதியும் நிறைந்த வாழ்க்கையைப் பரிசாக அளிக்கிறார்.

நற்செய்தியில் கூறப்பட்ட இருவரும் பார்வையற்றோர். அவர்கள் ஆண்டவராம் இயேசுவுக்காகக் காத்திருந்தார்கள்! இயேசு அவர்கள் இருந்த பக்கம் நடந்து செல்கிறார் என்பதை எப்படியோ உணர்ந்து கொண்டார்கள். கத்தினார்கள்: "தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்" என்றனர்! (மத.9:27-31) கங்கையும், காவிரியும் சேர்ந்தால் சொல்லவும் வேண்டுமோ! அவர் அவர்களை அன்போடு பார்த்து, ஆதரவு நிறைந்த இதயத்தோடு அவர்களைத் தொட்டார். தொட்டவுடன் அவர்கள் குணமானார்கள்.

இருவர் இயேசுவின் பக்கத்தில் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தனர். இருவரும் குற்றவாளிகள். ஒருவன் கேலி செய்தான். மற்றொருவனோ இயேசுவின் இரக்கத்தைக் கேட்டான்! திருடித் திருடிப் பழக்கப்பட்டவன் இறுதியாக இயேசுவின் இதயத்தையும் திருடிவிட்டான். இயேசு அவனைப் பார்த்து, "நீ இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" (லூக்.23:43) என்றார். "நான்கு நாட்கள் கல்லறையிலிருந்த இலாசரை உயிர்ப்பித்து கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்" (யோவா. 11:1-44) என்றார். "இரையாதே, அமைதியாயிரு" என்றார். காற்றும், கடலும் அவருக்குக் கீழ்ப்படிந்தன (மாற். 4:35- 41).

இதோ இந்த இரக்கத்தின் ஆண்டவர் இயேசுதான் நம் நடுவே பிறக்கப் போகிறார்! நமக்கெல்லாம் மகிழ்ச்சி பொங்கும் காலமிது. இயேசு காலடி பட்ட இடமெல்லாம் பாலைவனம் சோலை வனமானது; பொட்டல் நிலம் பூத்துக் குலுங்கியது; தளர்ந்துபோன கைகள் திடப்படுத்தப்பட்டன; தள்ளாடிய முழங்கால்கள் உறுதிப் படுத்தப்பட்டன. உள்ளத்தில் உறுதி அற்றவர்களுக்கு இயேசு உறுதி அளித்தார். அநீதியினின்று மக்களைக் காப்பாற்றினார். கண்களுக்குப் பார்வையையும், செவிகளுக்குக் கேட்கும் ஆற்றலையும், நாவிற்குப் பேசும் வரத்தையும் முடவருக்கு நடக்கும் சக்தியையும் தந்து எல்லாரும் நலமுடன் வாழ வலம் வந்தார்! ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோர் திரும்பி வருவர். மகிழ்ந்து பாடிக் கொண்டே (எசா. 35:10) சீயோனுக்கு வருவர் (முதல் வாசகம்). திருமுழுக்கு யோவான், மெசியா யார் என்பதை அறிந்துகொள்ள இயேசுவிடம் தன் சீடர்களை அனுப்புகிறார். தம்மிடம் வந்த சீடர்களிடம், நீங்கள் கண்டதையும், கேட்டதையும் யோவானிடம் அறிவியுங்கள். குருடர் பார்க்கின்றனர். முடவர் நடக்கிறார். நோயாளி குணமடைகிறான் என்றார் இயேசு. (மூன்றாம் வாசகம்) இயேசுவின் பணி திருமுழுக்கு யோவானுக்கு நிறைவும் மகிழ்வும் தருகிறது. இந்த மனநிலை நம்மில் இருந்தால் எவ்விதத் தடையுமின்றி பல நல்ல செயல்கள் நடந்தேறும் என்பதில் சந்தேகமில்லை.

யோவான் முன்னோடியாக வந்து இயேசுவின் பாதையை செம்மைப்படுத்தியது போல நாமும் இயேசுவின் முன்னோடியாக, சான்று பகர்ந்து வாழ இன்றைய வார்த்தை வழிபாடு நம்மை அழைக்கிறது. நாம் பாவம் என்ற குருட்டுத் தன்மையிலிருந்து விடுபட்டு இயேசுவின் மீது நம்பிக்கை கொள்வோம். நாம் பெற்றுக் கொண்ட மீட்பை, அமைதியை மற்றவருக்கு எடுத்துச் சொல்லும் தூதுவர்களாகச் செயல்படுவோம்.

ஒரு சிற்பியானவன் ஒரு கல்லில் சிலை வடிக்க தொடங்கினான். அது உடைந்தது. அடுத்த கல்லை செதுக்கினான். அதுவும் உடைந்தது, மூன்றாவது கல்லை விடா முயற்சியோடு செதுக்கினான். அழகான சிலை உருவானது. உடைந்த கற்கள் ஆலயத்தின் படிகற்களாக மாறின. உருவாக்கப்பட்ட சிலையானது வழிபடும் சிலையானது. ஆம்! நாம் நம்பிக்கையோடும், மன உறுதியோடும் செயல்பட்டால் வெற்றி நமதே! சாதனை ஒரு சிறுகதையல்ல. அது ஒரு தொடர்கதை.
 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
 திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்:-
எசாயா 35:1-6,10
யாக்கோபு 5:7-10
மத்தேயு 11:2-11


என்னை ஏற்றுக்கொள்

முள் மலராக வேண்டும்.
தேள் தேனாக வேண்டும்.
மண் பொன்னாக வேண்டும்.
நோயாளிகளுக்கு உடல் நலம் வேண்டும்.
பாவம் செய்தோர்க்குப் பாவ மன்னிப்பு வேண்டும்.
இறந்தவர்களுக்கு உயிர்ப்பு வேண்டும்.
அறிவுக்குத் தெளிவு வேண்டும்.
உள்ளத்திற்கு உறுதி வேண்டும்.
வாழ்க்கைக்கு வழி வேண்டும்
என்று அன்று வேண்டி நின்றனர் உலக மக்கள். அவர்களைப் பார்த்து இறைவாக்கினர் எசாயா. உங்கள் கனவு நனவாகும் (எசா 35:1-6அ. 10) என்றார். அவர் சொன்னபடியே மக்கள் நடுவே இயேசு அழகிய நிலவாக. அற்புத மலராக, ஆனந்தக் கடலாகத் தோன்றி, அமுதவர்களின் வேதனைகளையெல்லாம் நீக்கி எல்லாருக்கும் எல்லாமுமாய்த் திகழ்ந்தார். (நற்செய்தி)

அன்று மட்டுமல்ல. இன்றும் அவரை ஏற்றுக்கொள்பவர்களின் வாழ்க்கையிலே இயேசு புதுமை செய்கின்றார் என்பதற்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு.

அவன் பெயர் பெர்னாண்டு லெக்ராண்ட் அவனுக்கு வயது 26. அவனுடைய உற்றாரும். உறவினரும் அவனுடைய திருமணத்திற்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்கள். அவன் தனது எதிர்காலத்தைப் பற்றி எத்தனையோ கனவுகளைச் சுமந்து கொண்டிருந்தான்.

ஒருநாள். அவன் அதை கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. படுத்த அவனால் எழுந்து அமர முடியவில்லை. ஆற்றல் இழந்த கைகள், ஆற்றல் இழந்த கால்கள்! அவன் படுக்கையில் விழுந்து 26 மாதங்கள் உருண்டோடிவிட்டன. 1934-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் நாள் காலை மணி 10. லெக்ராண்ட்டை லூர்து நகரிலுள்ள அற்புத அருவிக்குள் நீராட வைத்தார்கள்.

38 வருடங்களாக படுத்த படுக்கையாய்க் கிடந்தவரைப் பார்த்து இயேசு, எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும் (யோவா 5:8) என்றார். அவர் எழுந்து நடந்தார். அந்த இயேசு, அவரது தாயின் சொல்லிற்கிணங்க லெக்ராண்ட்டையும் தொட்டிருந்தார். அவன் எழுந்து அமர்ந்தான். நடந்தான். அவனோடு எல்லாரும் நடந்தார்கள். 14 டாக்டர்கள் அவனைப் பரிசோதித்தார்கள்.

அவர்கள் அளித்த சான்றிதழில் இன்று நாம் காண்பதென்ன? இப்படிப்பட்ட குணத்திற்கு குணத்திற்கு விஞ்ஞானத்தில் விளக்கமில்லை. திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட அரும் அடையாளங்களில் இதுவும் ஒன்று. இன்று இயேசு நம் ஒவ்வொருவரையும் பார்த்து இவ்வாறு கூறுகின்றார்:

என் மகனே, என் மகளே!
உனக்கு என்ன வேண்டும்?
என்னிடம் கேள்.
கடல் கரையாகிவிட்டதா? இல்லை
கரை கடலாகிவிட்டதா?
கிழக்கு மேற்காகிவிட்டதா? இல்லை
மேற்கு கிழக்காகிவிட்டதா?
விழிகளிலே கண்ணீரா?
வீட்டுக்குள்ளே தண்ணீரா?
உடலிலே ஊனமா?
உள்ளத்திலே ஊனமா?
அன்று அரும் அடையாளங்களைச் செய்த
என் கைகள் இன்று குறுகிவிடவில்லை!
என் ஆற்றல்,
என் அன்பு - இவை இரண்டும்
என்றும் உன்னோடு
நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே!
என்னை ஏற்றுக்கொள்.
நீ கேட்ட உடனேயே நான்
அரும் அடையாளத்தைச் செய்யவில்லையே என
கவலைப்படாதே!
இன்றைய இரண்டாம் வாசகம் சுட்டிக்காட்டும்
திருத்தூதர் யாக்கோபைப் போல இரு.
இறைவாக்கினர்களைப் போல,
யோபுவைப்போல பொறுமையாக இரு!
உன்னுடைய எதிர்நோக்கும், நம்பிக்கையும், அன்பும்
ஒருபோதும் வீண்போகாது.
மேலும் அறிவோம் :

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும் (குறள் : 154).
பொருள் :
நாம் சான்றாண்மை மிக்கவராக விளங்க விரும்பினால் என்றும் பொறுமை மிக்கவராக வாழ்தல் வேண்டும். அன்பு. நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை ஆகிய பண்புக் கூறுகள் சால்புக்கு இன்றியமையாத தூண்கள். அச்சால்புக்கு மணிமகுடமாக மிளிர்வது பொறுமை ஆகும்.
 
 
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்



ஒரு குருமடத்தில் மின்சாரம் பழுதடைந்துவிட்டது. அதைப் பழுதுபார்க்கும்படி குருமட அதிபர் மின் ஊழியர் ஒருவரைப் பலமுறைத் தொலைபேசி மூலம் அழைத்தும் அவர் வரவில்லை . அந்த மின் பாழியர் பிரிவினைச் சபையைச் சார்ந்த ஒரு விவிலியப் பிரியர். குருமட அதிபர் ஒரு காகிதத் துண்டில், மத் 11-ஆம் அதிகாரம் 3-ஆம் வசனத்தை வாசிக்கவும் என்று எழுதி அவரிடம் அனுப்பினார். உடனடியாக அந்த மின் ஊழியர் வந்துவிட்டார். மத் 11-ஆம் அதிகாரம் 3-ஆம் வசனம்: *வரவிருப்பவர் நீர்தாமோ? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?" (இன்றைய நற்செய்தி வாசகம்).

மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயாரிக்கக் கடவுள் திருமுழுக்கு யோவானை அனுப்பினார். "இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் உமது வழியை ஆயத்தம் செய்வார்" (மலா 3:1) என்று இறைவாக்கினர் மலாக்கி முன்னறிவித்திருந்தவர் தான் திருமுழுக்கு யோவான்.

விவிலியம் ஒரு பக்கம் கடவுளுடைய நீதியையும் மறுபக்கம் கடவுளுடைய இரக்கத்தையும் காட்டுகிறது. திருமுழுக்கு யோவான் கடவுளுடைய நீதியை மையப்படுத்தி மெசியாவை மக்களுக்கு அறிவித்தார். மெசியா தமது ஒருகையில் கோடரியையும் மறுகையில் சுளகையும் வைத்திருக்கிறார், நற்கனி கொடாத மரங்களை வெட்டித் தள்ளுவார்; பதர்களைப் புடைத்து தீயில் சுட்டெரிப்பார் (மத் 3:10,12) என்று கூறி மக்களை அச்சுறுத்தினார்.

ஆனால் மெசியாவோ அவர் கூறியதற்கு நேர்மாறாக நடந்துகொண்டார். மெசியா பாவிகளை வரவேற்றார்; வரி தண்டுவர்களுடன் உணவு அருந்திணர். "பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்; நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" (மத் 9:13) என்று கிறிஸ்து கூறியதைக் கேட்டத் திருமுழுக்கு யோவான் அதிர்ச்சி அடைந்தார்; கிறிஸ்துவைப் பற்றி அவருக்கு ஐயப்பாடு எழுந்தது. எனவேதான் அவர் தமது சீடர்களைக் கிறிஸ்துவிடம் அனுப்பி, அவர் தான் மெசியாவா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா? என்று கேட்டு வரும்படி சொன்னார்.

கிறிஸ்து திருமுழுக்கு யோவானின் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லவில்லை. மாறாக, அவரது செயல்களைக் கொண்டு அவர் மெசியாவா அல்லது இல்லையா என்பதைக் கணிக்கும்படி கேட்டுக் கொண்டார். இன்றைய முதல் வாசகத்தில் மெசியா என்ன என்ன செய்வார் என்று இறைவாக்கினர் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். மெசியாவின் காலத்தில் பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும்; அப்போது கால் ஊனமுற்றோர் மான்போல் துள்ளிக் குதிப்பர்; வாய் பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்" (எசா 35:5-6), மெசியா செய்ய வேண்டிய செயல்களை எல்லாம் கிறிஸ்து செய்ததால், அவரே மெசியா என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்.

ஒருமரம் நல்ல மரமா கெட்ட மரமா என்பதை அதன் கனிகளைக் கொண்டே கணிக்க வேண்டும் என்று கிறிஸ்துவே கூறியுள்ளார் (மத் 7:17-19), எனவே ஒருவரின் செயல்களைக் கொண்டே நாம் ஒருவரை எடை போட வேண்டும். தம்மை நம்ப மறுத்த யூதர்களிடம் இயேசு கூறினார்: "மனிதர் தரும் சான்று எனக்குத் தேவையில்லை ... யோவான் பகாந்த சான்றைவிட மேலான சான்று எனக்கு உண்டு நான் செய்து முடிக்குமாறு தத்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று" (யோவா 5:36) எனவே, இயேசுவின் செயல்களே அவர் மெசியா என்பதற்குச் சான்று. இன்றைய உலகம் தம்மிடமிருந்து எதிர்பார்ப்பது சாட்சிய வாழ்வு, தாம் கிறிஸ்துவின் சீடர்கள் என்பதை நமது செயல்களால் எண்பிப்போம்!!

ஆப்பிரிக்காவுக்கு மறைபரப்பாளர் பலர் சென்று கிறிஸ்துவைப் பற்றிப் போதித்தும் ஒருவர்கூட மனம் மாறவில்லை. மறைபரப்பாளர்கள் போதிப்பதை நிறுத்திக்கொண்டு, அம்மக்களுக்குக் கல்விப்பணி, மருத்துவப் பணி, சமூகப் பணி செய்தனர். அதைப் பார்த்த மக்கள் தாங்களாகவே முன்வந்து திருமுழுக்குக் கேட்டனர்.

கால் பானமுள்ள ஒருவர் நடந்தபோது தடுமாறிக் கீழே விழுந்தார்; அவருடைய பையிலிருந்த பொருள்கள் நான்கு புறமும் சிதறி விட்டன. நடுத்தர வயதுடைய ஒருவர், அவரைத் தூக்கிவிட்டு, சிதறிக் கிடந்த பொருள்களைச் சேகரித்து அவரது பையில் போட்டு, அவரது கையில் 10 ரூபாய் வைத்தார். கால் ஊனமுற்றவர் அவரிடம், "நீங்கள் தான் இயேசுவா?" என்று கேட்டதற்கு அவர், "நான் இயேசு அல்ல; அவருடைய சீடர்" என்றார். "உங்கள் தற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்" (மத் 5:16). திருவருகைக் காலத்தில் நாம் கடவுளை தம் செயல்களால் பிரசன்னப் படுத்துவோம். "நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம் (1 யோவா 3:18).

இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து, "மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை, ஆயினும் விண்ண ரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே' (மத் 11:11) என்று கூறுகின்றார். காரணம் என்ன? திருமுழுக்கு யோவான், நாம் ஏற்கெனவே கூறியவாறு, கடவுளுடைய நீதியை மட்டும் பார்த்தார்; அவரின் இரக்கத்தைக் காணவில்லை. கடவுளது அன்பு, கிறிஸ்துவில் கல்வாரியில் சிலுவையில் அறையப்பட்ட அந்தக் காட்சியைக் காணும்பேறு அவருக்குக் கொடுத்து வைக்கவில்லை. மாறாக, தமக்கு அந்தப்பேறு கிடைத்துள்ளது. அக்கல்வாரித் திருப்பலியை நாள்தோறும் புதுப்பித்து, அதில் பங்குபெறும் நாம் உண்மையிலேயே திருமுழுக்கு யோவானைவிட பேறுபெற்றவர்கள்!

திருமுழுக்கு யோவானைப்போல, கிறிஸ்துவின் இரண்டாம் வருகை விரைவில் வரவேண்டும்; கடவுளின் பழிதீர்க்கும் நாளாக அது இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். இந்நிலையில் தூய யாக்கோபு இன்றைய இரண்டாவது வாசகத்தில் கூறுகிறார்; "ஆண்டவரின் வருகை வரை பொறுமையோடு இருங்கள். உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில் ஆண்டவரின் வருகை நெருங்கி வந்து விட்டது" (யாக் 5:7-8). ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஆண்டவரின் நான். அருள்வாக்கு. அருள் அடையாளங்கள் வாயிலாக அவர் வந்து கொண்டே இருக்கிறார்; நம்மைச் சந்திக்கிறார்; நம்முடன் சேர்ந்து நடக்கின்றார்; நம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஆண்டவரைச் சந்திப்போம். ஆண்டவரே! எங்களை மீட்க வந்தருளும்" என்று மன்றாடுவோம்.
 
தமிழ் ஆசிரியர் வகுப்புக்குள் நுழையும் போதெல்லாம் ஒரு மாணவன் சிரிப்பான். ஏன் அவன் சிரிக்கிறான்? என்று ஆசிரியர் அவனைக் கேட்டார். அவன், "சார்! நீங்கள்தான் துன்பம் வரும்போதெல்லாம் சிரிக்க வேண்டும் என்று சொன்னீர்கள்" என்றான்.

துன்பம் வரும்போது சிரிக்க வேண்டும். ஏனெனில் துன்பத்தை விரட்டி அடிப்பதற்குச் சிரிப்பைப் போல வேறெந்த சக்தியும் கிடையாது.

இடுக்கண் வருங்கால் நகுக, அதனைஅடுத்து
ஊர்வது அஃது ஒப்பது இல் (குறள் 621)

திருவருகைக் காலத்தின் 3-ஆம் ஞாயிறு "மகிழ்வின் ஞாயிறு" என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் செப்பனியா, "மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி" (செப் 3:14) என்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம்: "இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கிறார்" (செப் 3:15). பதிலுரைப் பாடல். "சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்" என்கிறது. அதற்குக் காரணம்: "இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகிறார்" (எசா 12:6). இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், "ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்" என்கிறார். காரணம்: "ஆண்டவர் அண்மையில் உள்ளார்" (பிலி 4:4-5).

நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கான காரணம் ஆண்டவர் நம் நடுவில் இருக்கிறார்; நம்முடன் இருக்கிறார். நம்மைவிட்டு அவர் விலகுவதுமில்லை; நம்மைக் கைவிடுவதுமில்லை. வானதூதர் கபிரியேல் மரியாவை, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" (லூக் 1:38) என்றுதான் வாழ்த்தினார். எனவேதான் திருச்சபையும் திருப்பலியில், "ஆண்டவர் உங்களோடு இருப்பாராக" என்று வாழ்த்துகிறது. கிறிஸ்து திருச்சபையின் திருக்கூட்டத்தில் உடனிருக்கிறார் (மத் 18:20). அவர் நம்மைத் திக்கற்றவராக விட்டுச் செல்வதில்லை (யோவா 14:18). உலகம் முடியும் வரை எந்நாளும் நம்முடன் இருக்கின்றார் (மத் 28:20).

ஒருவர் நன்றாகக் குடித்துவிட்டு நடுரோட்டில் குப்புறப்படுத்துக் கைகளையும் கால்களையும்ஆட்டிக் கொண்டிருந்தார். வழியில் சென்றவர்கள் அவர் என்ன செய்கிறார்? என்று கேட்டதற்கு "நான் நீச்சல் அடிக்கிறேன்" என்றார். "நீச்சல் அடிக்க தண்ணீர் எங்கே இருக்கிறது?" என்று கேட்டதற்கு, "என் வயிற்றுக்குள்ளே இருக்கிறது" என்றார்.

மகிழ்ச்சியின் ஊற்று நமக்குள் இருக்கிறது. அந்த ஊற்று யார்? கடவுள்தான் பொங்கி வழிந்தோடும் நீரூற்று (எரே 2:3), "மீட்பரின் உற்றுக்களிலிருந்து அகமகிழ்வுடன் தண்ணீர் முகந்து கொள்வீர்கள்" (எசா 12:3), "யாரேனும் தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும்; என்னில் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும். அவருடைய உள்ளத்திலிருந்து வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்" (யோவா 7:37-38).

கடவுள்தான் மகிழ்ச்சியின் ஊற்று. கடவுள் நம்மைத் திருபதிப்படுத்த முடியவில்லையென்றால் உலகில் வேறெந்தப் பொருளோ ஆளோ திருப்திப்படுத்த முடியாது. மாறாக, கடவுள் நம்மோடு இருக்கும்போது நாம் எல்லாவற்றையும் இழந்த நிலையிலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். "அத்திமரம் துளிர்த்து அரும்பாமல் போயினும் திராட்சைக் கொடிகள் கனிதராவிடினும், ஒலிவ மரங்கள் பயன் அற்றுப் போயினும், வயல்களில் தானியம் விளையாவிடினும், கிடையில் ஆடுகள் யாவும் அழிந்து போயினும். தொழுவங்களில் மாடுகள் இல்லாது போயினும் நான் ஆண்டவரில் களிகூர்வேன்" (அபக்கூக்கு 3:17).

இரண்டாவதாக, நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால். நாம் நமக்குள்ளதை இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். "இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும், உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்" (லூக் 3:11) என்று இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான். மக்களைக் கேட்கிறார்.

ஒரு சிறுவனுக்கு நான் இரண்டு 'சாக்லேட்' கொடுத்து எனக்கு ஒன்றைத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்டதற்கு அவன் கொடுக்க மறுத்தான். அப்போது அவனுடைய அக்கா, "ஃபாதர் என் தம்பிக்குப் பிறரிடமிருந்து வாங்கத்தான் தெரியும்; பிறருக்குக் கொடுக்கத் தெரியாது" என்றார், பிறரிடம் வாங்கி வாங்கி வாழ்ந்தான் என்பதைவிட பிறர்க்குக் கொடுத்துக் கொடுத்துச் செத்தான் என்பதே மேல். "பெற்றுக் கொள்வதைவிட கொடுத்தலே பேறுடைமை." (திப 20:35)

மூன்றாவதாக, நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால், நமக்கு மனநிறைவு வேண்டும்; பேராசை இருக்கக்கூடாது. "உங்கள் ஊதியம் போதும் என்றிருங்கள்" (லூக் 3:14) என்று திருமுழுக்கு யோவான் அறிவுறுத்துகிறார். கிடைக்கும் ஊதியம் போதாதென்று இன்று பலர் இலஞ்சம் வாங்குகின்றனர். ஒருவர் தன் நண்பரிடம், "எனக்கு இலஞ்ச ஒழிப்புத் துறையில் வேலை கிடைத்துள்ளது" என்றார். உடனே நண்பர் அவரிடம், "அந்த வேலையை வாங்குவதற்கு எவ்வளவு இலஞ்சம் கொன்று கேட்டார். இனிமேல் பிரசவத்தில் குழந்தையின் தலை முதலில் வராமல் அதனுடைய கைதான் வெளியே வருமாம்; அதன் கையில் ஒரு நூறு ரூபாய் வைத்தால்தான் மிச்சம் வருமாம்! கையூட்டு வாங்காமல் குழந்தையும் நகராது, அரசு அலுவலகங்களில் உள்ள கோப்பும் நகராது. ஒருவர் கையை மேலே தூக்கினால் அதற்குப் பெயர் "சல்யூட்" (Salute). கையை கீழே தாழ்த்தினால் அதற்குப் பெயர் "கையூட்டு!"

கடைசியாக, நாம் மகிழ்ச்சியுடன் வாழ நமக்குத் தாழ்ச்சி வேண்டும். இயேசு கிறிஸ்துவின் மிதியடி வாரைக்கூட அவிழ்க்கத் தமக்குத் தகுதியில்லையென்றும் (லூக் 3:16), "அவரது செல்வாக்குப் பெருக வேண்டும்; எனது செல்வாக்குக் குறைய வேண்டும்" (யோவா 3:30) என்றும் கூறுகிறார் திருமுழுக்கு யோவான்.

ஒரு மனைவி தன் கணவரிடம், "ஏழு ஏழு சென்மத்துக்கும் நீங்கள்தான் எனக்குக் கணவராக இருக்க வேண்டும்" என்றார். அதைக் கேட்ட கணவர் மிக்க மகிழ்ச்சியுற்று அதற்கான காரணத்தை மனைவியிடம் கேட்டபோது, "உங்களைவிட இளிச்சவாயன் வேறு யாரும் எனக்குக் கிடைக்க முடியாது" என்றாள் மனைவி. என்னே அவரது பதிபக்தி.

"மனத்தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவர் களாகக் கருதுங்கள் ... கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்" (பிலி 2:3-5).

நமக்குள் கடவுள் இருப்பதை உணர்ந்து, நமக்குள்ளதை பிறருடன் பகிர்ந்து, கிடைக்கும் ஊதியம் போதுமென்று வாழ்ந்து, பிறரை நம்மைவிட உயர்ந்தவர்களாகக் கருதி மகிழ்ச்சியுடன் வாழ்வோம். அப்போது நமது மகிழ்ச்சியை எவரும் நம்மிடமிருந்து பறிக்க முடியாது (யோவா 16:22).
 
திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை

அசலா போலியா?

ஆண்டு - 1 மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள மதுரைக்கு வந்தார் இரயில்வே போக்குவரத்துத் துறை அமைச்சர் இலால்பகதூர் சாஸ்திரி, உரிய நேரத்துக்கு முன்னதாகவே இரயில் வந்து சேர்ந்ததால், அவரை வரவேற்க யாரும் நிலையத்தில் இல்லை! எனினும் கோபமோ கொந்தளிப்போ இல்லாமல் தனக்கே உரிய எளிமை, அமைதி, எதற்கும் எரிச்சல்படா மனமுதிர்ச்சி போன்ற பண்புகளோடு இரயிலை விட்டு இறங்கி, தனக்கு ஏற்பாடு செய்திருந்த தங்கும் அறை நோக்கி நடந்தார். அவர் யார் என்று அங்கிருந்த எவருக்கும் தெரியவில்லை . அந்த அறையை அடைந்ததும் காவலாளி அவரைத் தடுத்தார். இது இரயில்வே அமைச்சருக்கு ஒதுக்கப்பட்ட அறை' என்று சொன்னார். 'நான்தான் அவர்' என்று பலமுறை வலியுறுத்தியும் பயனில்லை. அதற்குள் அமைச்சரை அழைத்தவர்கள் அலறி அடித்து ஓடிவந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டனர்.
அமைச்சர் என்றால் ஆடம்பரம், அதிகாரத் தோரணை, அதட்டல், அலட்டல் என்று பந்தா இல்லாமலா? - இப்படி ஓர் எண்ணத்தை, எதிர்பார்ப்பை வளர்த்துக் கொண்ட காரணத்தால் இலால் பகதூர் சாஸ்திரியை அமைச்சராக இனம் காணப் பலரால் முடியவில்லை.

அமைச்சர் என்ன, ஆண்டவர் இயேசுவே மனிதனாக மண்ணகம் வந்த போதும் இப்படித்தானே நடந்தது! காலங்காலமாகக் காத்திருந்தும், மெசியா வந்த போது எத்தனை பேர் அவரை இனம் கண்டு ஏற்றுக் கொண்டனர்?

இஸ்ரயேல் மக்கள் எதிர்பார்த்திருந்த மெசியாவைப் பற்றி எத்தனை கனவுகள் கண்டனர்! "பாலை நிலமாய், பாழ் வெளியாய், பொட்டல் தரையாய்க் கிடக்கும் தங்கள் அவல வாழ்வு மலராதா, மகிழ்ச்சியால் பூத்துக் குலுங்காதா" (எசா.35:1-2) என்ற ஏக்கம், "இதோ உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார். அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்" (எசா.35:4) என்ற எதிர்நோக்கோடு கலந்தது.
ஆனால்.... நாசரேத்திலிருந்து நல்லது வர முடியுமா? யாரும் அறியாத பெற்றோருக்கா அவர் பிள்ளையாகப் பிறப்பார்? பாமர மீனவர்களா அவருடைய சீடர்கள்?

கடவுளின் நீதியை மையப்படுத்தி ஒரு கையில் கோடரியும் மறுகையில் சுளகுமாக, கனிகொடாத மரங்களை வெட்டித்தள்ளி, பதர்களைத் தீயிட்டுக் கொளுத்தும் மெசியாவையன்றோ அறிவித்தார் திருமுழுக்கு யோவான்! கடவுளின் இரக்கத்தை மையப்படுத்தித் தாழ்ச்சியும் சாந்தமுயமாகப் பாவிகளைத் தேடிச் செல்லும் இயேசுவைக் கண்ட போது கொஞ்சம் தடுமாறிப் போனார். அதன் விளைவு தான் "வர இருப்பவர் நீர்தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர் பார்க்க வேண்டுமா?" (மத்.11:3) என்ற கேள்வி.

மெசியாவைப் பற்றிய மக்களின் கனவுகளை நிறைவேற்றாதது இயேசுவின் தப்பன்று; சரியான கனவுகளைக் காணாதது தான் அவர்களுடைய தப்பு. நாம் எதிர்பார்ப்பது போல கடவுள் நடக்க வேண்டும் என்று எண்ணுவது தவறு. நடந்ததைக் கொண்டு கடவுளின் தன்மையைக் கண்டுகொள்ள முயல வேண்டும். பொறுமையைக் கடைப்பிடித்தால் (யாக்.5:7,8) புரிந்து கொள்ளலாம்.

ஆக திருமுழுக்கு யோவான் ஒருவேளை நினைத்தது போல இயேசு தனது மெசியாவுக்குரிய ஆற்றல்களை வீணாக்கவில்லை. மாறாகத் தன் செயல்பாடுகளே மெசியாவுக்குரிய பணி என்று காட்டுகிறார். "நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள் (மத்.11:4). மெசியா பற்றி இறைவாக்கினர் எசாயா முன்னுரைத்ததும் இதுதானே! (எசா.611)

தங்கம் அசலா போலியா? தரம் பிரிக்க உரைகல் வேண்டும். ஒரு மனிதனுடைய தாத்தை அறிய உரைகல் அவனது செயல்களே. "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்" (திருக்குறள். 505)

எருசலேமில் கோவில் அர்ப்பண விழாவில் யூதர்கள் இயேசவைக் சூழ்ந்து கொண்டு "இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும்? நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லி விடும்" என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக "என் தந்தையின் பெயரால் நான் செய்யும் செயல்களே எனக்குச் சான்றாக அமைகின்றன" (யோ.10:22-25), "என்னை நம்பாவிடினும் என்செயல்களையாவது நம்புங்கள்" (யோ.10:28) என்றார்.

இயேசுவின் அடிச்சுவட்டில், நமது செயல்களாலேயே நாம் இயேசுவின் சீடர்கள் என்பதை இவ்வுலகுக்கு, அடையாளப்படுத்த முடியும். (யோ.13:35)
நமது செயல்களைக் கொண்டே இறைவனை மகிமைப்படுத்த முடியும். (யோ .15:8, மத்.5:16)

அன்னை தெரசாவின் பணியை முதலில் எதிர்த்த கொல்கத்தா நகரத்துக் காளிகோயில் பூசாரி, இறுதியில் எலும்புருக்கி நோய்க்கு இலக்காகி கவனிப்பார் யாருமின்றி அன்னையின் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டு அவளின் அன்பு மடியில் மரிப்பதற்கு முன்னால் "நான் 30 ஆண்டுகள் காளி தேவதைக்குப் பணிபுரிந்தேன். அந்தத் தேவதை இதோ என் முன்னால் நிற்கிறாள்" என்று அன்னையின் பாதங்களைத் தொட்டு வணங்கி அழுதது வரலாறு,

நமது செயல்களால்தான் இவ்வுலகில் கடவுளைப் பிரசன்னப்படுத்த இயலும். இன்று இவ்வுலகில் கிறிஸ்துவைப் பிரசன்னப் படுத்துவதுதானே கிறிஸ்மஸ். அதுதானே நமது பணி.
திருச்சபை என்பது என்ன? கிறிஸ்துவின் இன்றையப் பிரசன்னமே திருச்சபை. எனவேதான் கிறிஸ்துவின் மறையுடல் என்கிறோம்.

 
விழித்திரு

இரண்டாம் உலகப் பெரும்போர் முடிந்த நேரம். ஜெர்மனி நாட்டு அதிபர் கொன்ராடு அடனாவர் வானொலி, தொலைக்காட்சி வழியாக மக்களுக்கு உரையாற்றுகிறார்: "அழிவு, சிதைவு, இடிபாடுகளுக்கு இடையே நின்று கொண்டிருக்கிறோம். நாம் விழித்தெழும் நேரம் வந்து விட்டது. வீறுகொண்டு கரம் கோர்ப்போம். புதிய ஜெர்மனியைக் கட்டி எழுப்பக் கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் நழுவ விடக்கூடாது...

மக்கள் கூர்ந்து கேட்டனர். விழித்து எழுந்தனர். விளைவு? வளமான செழிப்பான புதிய ஜெர்மனி.

திருவருகைக் காலத்தைத் தொடங்கும் போதே திருவழிபாட்டு முழக்கம்- விழிப்பாயிருங்கள் என்பதுதான். காரணம்? "உறக்கத்தினின்று விழிதெழும் நேரம் ஏற்கனவே வந்துவிட்டது. நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டபோது இருந்ததைவிட மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது" (ரோமை. 13:11.)

போரினால் உண்டான பாதிப்பால் அச்சமும் அதிர்ச்சியும் கொண்ட ஜெர்மனி நாட்டு மக்களின் உள்ளத்தில் எத்தகைய உணர்வுகள் கிளர்ந்தெழுந்தனவோ அதே தாக்கத்துக்கு ஆளான இஸ்ரயேல் மக்களின் மன உணர்வுகளின் சித்தரிப்பே முதல் வாசகம்.

- பபிலோனிய அடிமைத்தனத்துக்குப்பின் தாயகம் திரும்பிய நிலையில் அழிந்துபட்ட எருசலேமை, சிதைந்துவிட்ட திருக்கோவிலைச் கண்டு சிந்தையில் அமைதியிழந்து செல்வச் செழிப்பிழந்து இறைவழிபாட்டின் வளமை இழந்து வார்த்தைக்குள் அடங்காத வருத்தத்தை, சோகத்தை, ஏக்கத்தை வெளிப்படுத்தும் மன்றாட்டான புலம்பல்.

இந்த இழிநிலைக்கெல்லாம் தங்கள் பாவ வாழ்வே. இறைவனை விட்டு அகன்ற அவலமே காரணம் என்ற தன்னிலை உணர்வு. "நாங்கள் யாவரும் இலைபோல் கருகிப் போகின்றோம். எங்கள் தீச்செல்கள் காற்றைப்போல் எங்களை அடித்துச் சென்றன". (எசாயா 64:6)

இந்தத் தன்னுணர்வுக்கிடையிலும் உடைந்து போன இதயத்தின் அடித்தளத்தில் நம்பிக்கை வேரற்றுப் போகவில்லை. "ஆண்டவரே உம் வழிகளிலிருந்து எங்களைப் பிறழச் செய்ததேன்? உமக்கு அஞ்சி நடவாதவாறு எங்கள் நெஞ்சங்களைக் கடினப்- படுத்தியதேன்?" (எசாயா 63:17) என்று தங்கள் தவறுகளுக்கெல்லாம் கடவுளுக்குமே பங்கு உண்டு என்பது போலப் புலம்பி "நாங்கள் களிமண். நீர் எங்கள் குயவன்" (எசா.64:8) சீரழிந்த தன் வேலைப் பாடுகளைச் சீர்செய்ய இறைவனே இறங்கிவர உரிமையோடும் எதிர்பார்ப்போடும் கூடிய அழைப்பு.

- களிமண் தானாகக் குடமாக முடியுமா? வனைந்திடக் குயவன் அங்கே வரவேண்டாமா? கற்பாறை தானாகச் சிலையாக முடியுமா? செதுக்கிடச் சிற்பி அங்கே வரவேண்டாமா? பாவியான மனிதன் தன் சொந்த முயற்சியால் மட்டும் படைத்தவனைச் சென்றடைய முடியுமா? "நீர் வானத்தைப் பிளந்து (கிழித்து என்பது பழைய மொழிபெயர்ப்பு) இறங்கி வரமாட்டீரோ?" (எசா.64:1) இந்த இதய எழுச்சி, ஏக்கக்கதறல் இறைவன் எனக்குத் தேவை அதுவும் உடனடித் தேவை என்ற அவசர எதிர்பார்ப்புக் கலந்த தவிப்பு. திருப்பாடல் 144:5இல் கூட இதே துடிப்பின் வெளிப்பாடு: 'ஆண்டவரே உம் வான்வெளியை வளைத்து இறங்கி வாரும்'' இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தடையை அவரால் மட்டுமே தகர்க்க முடியும். நம்மால் இயலாது. நம்மால் முடிந்ததெல்லாம் ஓசோன் படலத்தில் ஒட்டைகளைப் போட்டதுதான்!

ஆண்டவர் வருவார். "இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்கள் அல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்". (தி.ப.1:11) அதற்காக வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே நிற்பதா?

"விழிப்பாய் இருங்கள் ஏனெனில் வீட்டுத்தலைவர்... எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது" (மாற்கு. 13:35)

சென்னையில் ஓர் அரசு அலுவலர். தன் ஸ்கூட்டரை வெளியே நிறுத்திவிட்டு மதிய உணவை முடித்து வெளியே வந்தவருக்கு ஒரே அதிர்ச்சி. ஸ்கூட்டரைக் காணோம். அங்குமிங்கும் தேடி அலைமோதிய அவர் சிறிது தொலைவில் ஸ்கூட்டரைப் பார்க்கிறார். மகிழ்ச்சியோடு அருகில் செல்கிறார். ஸ்கூட்டரில் ஒரு கடிதமும் 2 சினிமா டிக்கெட்டுகளும் இருந்தன. "ஐயா, எங்களை மன்னியுங்கள். ஓர் அவசர வேலைக்காக வண்டியை எடுத்துச் சென்றோம். சொல்லாமல் எடுத்துச் சென்ற குற்றத்துக்காக ரிசர்வ் செய்யப்பட்ட இந்த டிக்கெட்டுகளை வைத்துள்ளோம். உங்கள் மனைவியோடு இன்று மாலையில் படம் பார்த்து மகிழுங்கள்" என்பது கடித வாசகம். இரட்டிப்பான மகிழ்ச்சி உற்சாகத்தோடு திரையரங்கு சென்று திரும்பிய போது வீடே கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. விழிப்புணர்வைக் குலைக்க, கவனத்தைச் சிதறடிக்க, சாத்தான் எப்படியெல்லாம் திட்டமிடுகிறான். செயல்படுகிறான்.

விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார் குறட்டை விட்டோர் எல்லாம் கோட்டை விட்டார்.

"சுதந்திரம்
இருளில் வாங்கினோம். இன்னும் விடியவில்லை
என்று யார் சொன்னது?
விடிந்துவிட்டது. இன்னும் நாம்தாம் விழித்தெழவில்லை
நாளை என்பது விடியலில் அல்ல, விழித்தலில் உள்ளது".
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அருள்பணித்துவ வாழ்வில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த, டிசம்பர் 13, 2019 அன்று, ஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில், ஐ.நா.அவையின் பருவநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கு - COP 25 நிறைவுக்கு வந்தது. இக்கருத்தரங்கு துவங்குவதற்கு முந்தின நாள், ஐ.நா.அவையின் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், பருவநிலை மாற்றத்தால் நாம் சந்திக்கவிருக்கும் ஆபத்துக்களைக் குறித்து எச்சரிக்கை ஒன்றை விடுத்தார்: "பருவநிலை மாற்றத்தைத் தடுக்க, புவி வெப்பமயமாதலைத் தடுக்க, உலக அரசுகள் மேற்கொண்டுவரும் முயற்சிகள் மிக, மிகக்குறைவு. புவி வெப்பமயமாவதால் விளையும் ஆபத்துக்களிலிருந்து மீளமுடியாத நிலையை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம்" என்பது அவர் விடுத்த எச்சரிக்கை.

இதே எச்சரிக்கையை, மத்ரித் நகரிலுள்ள புகழ்பெற்ற பிராதோ (Prado) அருங்காட்சியகம், ஓவியங்களாக வடித்து, இக்கருத்தரங்கு நடைபெற்ற நேரத்தில் கண்காட்சியாக அமைத்திருந்தது. புவியின் வெப்பநிலையில் மாற்றம் ஏதுமற்ற 0C காலத்தில், அதாவது, தொழில்புரட்சிக்கு முந்தைய காலத்தில் உருவாக்கப்பட்ட நான்கு புகழ்பெற்ற ஓவியங்களை, " கூடுதலான 1.5C, அனைத்தையும் மாற்றுகிறது" (+1.5C Lo Cambia Todo - +1.5C Changes Everything) என்ற தலைப்புடன், 'டிஜிட்டல்' மாற்றங்கள் செய்து, 'ஒரிஜினல்' ஓவியத்தையும், மாற்றம் செய்யப்பட்ட ஓவியத்தையும் பிராதோ அருங்காட்சியகம், இக்கண்காட்சியில், அருகருகே வைத்திருந்தது.

எடுத்துக்காட்டாக, 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்பானிய ஓவியர் Diego Velzquez அவர்கள், குன்றின் மீது, ஒரு குதிரையில் அமர்ந்திருக்கும் நான்காம் பிலிப் (Felipe) என்ற இஸ்பானிய மன்னரின் ஓவியத்தைத் தீட்டியிருந்தார். புவியின் வெப்பநிலை 1.5C கூடினால் என்ன ஆகும் என்பதைக் காட்ட, அந்த ஓவியத்தில், மன்னரின் இடுப்பு, மற்றும் அவர் அமர்ந்திருக்கும் குதிரையின் கழுத்து ஆகியவை மட்டும் வெளியே தெரியும்படி, குன்று முழுவதும் கடல்நீரில் மூழ்கியிருப்பதுபோல், மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

பருவநிலை மாற்றத்தால், கடல் நீர் மட்டம் உயரும் என்ற ஆபத்தைச் சித்திரிக்கும் இந்த ஓவியத்தைப்போல், நதிகள் வறண்டு பாலை நிலமாக மாறுதல், உலகெங்கும் கடும் பனிக்காலம் பரவுதல், கடல்வாழ் உயிரினங்கள் மடிதல் என்ற ஆபத்துக்களைச் சித்திரிக்கும்வண்ணம் ஏனைய மூன்று ஓவியங்கள் டிஜிட்டல் முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

புவியின் வெப்ப நிலை 1.5C கூடுவது, 'அனைத்தையும் மாற்றுகிறது' என்ற எச்சரிக்கையுடன் மாற்றம் செய்யப்பட்டிருந்த ஓவியங்களைக் காணும்போது, எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கை பிறப்பதற்குப்பதில், விரக்தியே நம்மை நிறைக்கிறது. இதற்கு மாறாக, 'அனைத்தும் மாறிவிட்டன' என்று மனம் தளர்ந்து போயிருந்த இஸ்ரேல் மக்களுக்கு, இறைவாக்கினர் எசாயா, எதிர்காலத்தைப்பற்றிய அழகிய மாற்றங்களைக் கூறுகிறார். நம்பிக்கையும், மகிழ்வும் கலந்து, எசாயா, சொற்களில் வடித்துள்ள கனவுகளை, இன்றைய முதல் வாசகத்தில் இவ்வாறு கேட்கிறோம்: அந்நாள்களில், பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும்; பொட்டல் நிலம் அக்களிப்படைந்து, லீலிபோல் பூத்துக் குலுங்கும். அது வளமாய்ப் பூத்துக் குலுங்கி மகிழ்ந்து பாடிக் களிப்படையும் (இறைவாக்கினர் எசாயா 35: 1-2)

இறைவாக்கினரின் இக்கூற்றைக் கேட்கும்போது, "கொஞ்சம் நிறுத்துங்கள். கட்டுக்கடங்காது செல்லும் உங்கள் கற்பனைக்கு, தயவுசெய்து, கடிவாளம் போடுங்கள்" என்று இறைவாக்கினர் எசாயாவின் கனவுகளை கட்டுப்படுத்தத் தோன்றுகிறது. அற்புதம் என்ற பெயரில், அபத்தமான கற்பனைகளை எப்படி ஏற்றுக்கொள்வது? பாலை நிலம், லீலி மலர்களுடன் பூத்துக் குலுங்கும் என்று, இயற்கைக்கு முரணானவற்றைக் கூறுவது, கொஞ்சம் 'ஓவர்' தானே...

இறைவாக்கினரின் கூற்றுக்கு, நாம், இத்தகைய மறுப்பு சொல்வதற்கு காரணம் என்ன? எந்த மனநிலை இப்படி நம்மைப் பேசவைக்கிறது என்பதைச் சிந்திப்பது நல்லது. வாழ்வின் எதார்த்தங்களைப் பார்த்துப் பார்த்து, பயந்து, பயந்து, அடுத்த அடி எடுத்து வைத்தால் அடிபடுவோமோ என்ற அச்சத்தில், அனைத்தையும் கணக்குப் பார்க்கும் 'practical' சிந்தனை - நடைமுறைக்கு ஏற்றவைகளை மட்டும் நாள்தோறும் எண்ணிப்பார்க்கும் சிந்தனை - இதுபோன்றக் மறுப்புகளை எழுப்புகிறது. இப்படிப்பட்ட கற்பனைகள், உண்மையாகவே நடந்தால் நன்றாக இருக்குமே என்று, ஆழ்மனதில் ஏக்கம் எழுந்தாலும், நமது 'practical' நடைமுறைச் சிந்தனை, அந்த ஆவலின் மேல் தண்ணீரை ஊற்றி அணைத்துவிடுகிறது.

நடைமுறைக்கு ஏற்றவைகளை மட்டும் நாள்தோறும் எண்ணிவந்தால்... ஒவ்வொரு செயலுக்கும், ஒவ்வொரு எண்ணத்துக்கும், நாம் கணக்கு பார்த்துக்கொண்டிருந்தால்... உலகில், கணக்குகள் எழுதப்பட்ட நூல்கள் மட்டுமே நிறைந்திருக்கும். கனவுகளைச் சொல்லும் கவிதை நூல்கள் இருக்காது. மனித சமுதாயத்தில் ஆயிரம் பேர் கணக்கெழுதியபோது, ஓரிருவர் கவிதை எழுதியதால்தான், இவ்வுலகம் இன்னும் ஓரளவு அழகுடன் சுழன்று வருகிறது.

டிசம்பர் 11ம் தேதி, மாபெரும் கவிஞர் ஒருவரின் பிறந்தநாளை நினைவு கூறுகின்றோம். ஆம், 1882ம் ஆண்டு, டிசம்பர் 11ம் தேதி, மகாகவி பாரதியார் பிறந்தார். இன்னும் பல நூறு ஆண்டுகள் சென்றாலும், துணிவு மிகுந்த அவரது கவிதைகள், மனித சமுதாயத்தில், நேர்மறையான அதிர்வலைகளை உருவாக்கியவண்ணம் உள்ளன. ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்திலும், வறுமையின் கோரப்பிடியிலும் சிக்கித்தவித்த பாரதியார், விடுதலைக் கனவுகளை விதைத்துச் சென்றார். ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து நாம் பெறவேண்டிய அரசியல் விடுதலையைப் பற்றி மட்டும் அவர் பேசவில்லை. பல்வேறு வழிகளில் தளையுண்டு, சிறைபட்டிருந்த இந்திய சமுதாயத்தின் உண்மை விடுதலையைப் பற்றி அவர் அழகானக் கனவுகளை விதைத்தார். சாதியத் தளைகள், ஆண்-பெண் என்ற வேற்றுமைத் தளைகள் என, அனைத்தையும் உடைத்து, விடுதலை பெறவேண்டும் என்ற கனவையும், இயற்கை வளங்களைச் சரிவர பராமரித்து, நாட்டின் வளங்களைப் பகிர்ந்துகொள்ளும் கனவையும் கண்டவர், பாரதியார். அவரைப்பற்றி இன்று பேசுவதற்கு, அண்மையில் நாம் சிறப்பித்த அவரது பிறந்தநாள் மட்டும் காரணம் அல்ல; இன்றைய ஞாயிறு வழிபாட்டின் நாயகனாக விளங்கும் திருமுழுக்கு யோவானை, பாரதியார் நினைவுபடுத்துகிறார் என்பது, மற்றொரு காரணம்.

தான் வாழ்ந்தது கடினமான ஒரு வாழ்வு என்றாலும், தனக்கு அடுத்தத் தலைமுறை, விடுதலை பெற்று, தலைநிமிர்ந்து வாழும் என்ற நம்பிக்கையுடன், கவிதைகளை உருவாக்கியவர் பாரதியார். பாரதி போலவே, தன் வாழ்வில் துன்பங்களைத் தாங்கினாலும், மக்களுக்கு நம்பிக்கை செய்தியை வழங்கியவர், திருமுழுக்கு யோவான்.

இவரைக் குறித்து இன்றைய நற்செய்தியில் இயேசு பேசும்போது, யோவான் வாழ்ந்த கடினமான வாழ்வை நினைவுபடுத்துகிறார். உண்மையான இறைவாக்கினர்கள், மெல்லிய ஆடை அணிந்து, மாளிகையில் வாழ்பவர்கள் அல்ல... பாலை நிலத்தில் பாறைகளோடு பாறையாய் மாறி, இயற்கையின் கருணைக்கு விடப்பட்டவர்கள் என்பதை இயேசு நினைவுபடுத்துகிறார்.

"மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை" (மத்தேயு 11:11) என்று இயேசுவால் புகழப்பட்டவர், திருமுழுக்கு யோவான். பாலை நிலத்தில் ஒலித்த யோவானின் குரலைக் கேட்க மக்கள் ஓடிச் சென்றனர். அவர்களை வரவேற்று, நம்பிக்கையையும், நற்செய்தியையும் அவர்களுக்கு வழங்கிய யோவான், அதே வேளையில், மதத் தலைவர்களையும், உரோமைய அரசையும், வன்மையாகக் கண்டித்தார். கதி கலங்கிய மதத்தலைவர்கள், ஏரோதின் துணையோடு, அவரைச் சிறையில் அடைத்தனர். யோவானின் உடல் சிறையில் அடைபட்டிருந்தாலும், அவரது மனம், மக்களின் விடுதலையைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தது. அந்த விடுதலை, இயேசுவின் வழியே வருமா என்ற கேள்வியை, "வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?" (மத்தேயு 11:3) என்று, ஏக்கத்துடன் கேட்கிறார், இன்றைய நற்செய்தியில்

யோவானின் கேள்வியும், இதற்கு இயேசு தந்த பதிலும், ஒரு சில தெளிவுகளை, ஒரு சில வாழ்க்கைப் பாடங்களை நமக்குத் தருகின்றன. உலகின் செம்மறி என்று மக்களுக்கு தான் சுட்டிக்காட்டிய இயேசு, தான் சிறையில் அடைபட்ட பின், முழு வீச்சுடன், பணியில் இறங்கியிருப்பார்; மதத்தலைவர்களையும், உரோமைய அரசையும், இந்நேரம், கதிகலங்கச் செய்திருப்பார் என்பது, யோவானின் எதிர்பார்ப்பாக இருந்தது.

யோவானின் எதிர்பார்ப்புகளும், தனது கண்ணோட்டமும், வேறுபட்டிருந்தன என்பதைச் சொல்ல இயேசு தயங்கவில்லை. யோவான் எதிர்பார்த்த புரட்சி, ஆள்பவர்களை விரட்டியடித்து, ஆட்சியைப் பிடித்து, மக்கள் வாழ்வை மாற்றுவது என்ற வரிசையில் அமைந்திருந்தது. இயேசுவின் புரட்சி, இதற்கு நேர்மாறான, தலைகீழான புரட்சி. இந்தப் புரட்சி, மக்கள், தங்கள் வாழ்வை மாற்றுவதிலிருந்து ஆரம்பமாகிறது. இந்த புரட்சியைக் குறித்து இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயாவும் கூறியுள்ளார்: திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்: இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்; அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார். (எசாயா 35: 4) என்று எசாயா முழங்குகிறார்.

எசாயாவின் இவ்வார்த்தைகளைக் கேட்டதும், இறைவன் எப்படி பழிதீர்க்க வருவார் என்ற விவரம், அடுத்த வரிகளில் அடங்கியிருக்கும் என்ற எதிர்பார்ப்புடன், தொடர்ந்து வாசித்தால், பெருத்த ஏமாற்றம் அங்கு நமக்குக் காத்திருக்கும். பழிதீர்ப்பது என்ற வார்த்தையைக் கேட்டதும், நம் மனங்களில் ஓடும், வழக்கமான, குறுகிய எண்ணங்களைக் கொண்டு வாசிப்பதால் வரும் ஏமாற்றம் இது. அடுத்த வரிகளில் எசாயா கூறுவது இதுதான்:

அப்போது அதாவது, ஆண்டவர் பழிதீர்க்க வரும்போது - பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; ... அவர்கள் முகம் என்றுமுள மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்;... துன்பமும் துயரமும் பறந்தோடும். (எசாயா 35: 5-6அ, 10) 'பழிதீர்த்தல்' என்ற சொல்லுக்கு இறைவன் தரும் இலக்கணம் இதுதான்.

இத்தகையப் 'பழிதீர்க்கும் படலத்தை' இயேசு தன் வாழ்வின் வழியே தொடர்கிறார். பழிதீர்ப்பது என்றால், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற போக்கில், கணக்கு தீர்ப்பது என்பது ஒரு பொருள். ஆனால், பழிதீர்ப்பது என்றால் பழியை, குறையை, தீர்ப்பது என்றும் பொருள் கொள்ளலாம், இல்லையா? அவ்விதம், பழியைத் தீர்க்க, பழியைத் துடைக்க வந்தவர் இயேசு.

மதத் தலைவர்களையும், அதிகார வர்க்கத்தையும் பழிதீர்க்காமல் இருந்த இயேசுவிடம் "வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?" என்று கேள்விகள் எழுப்பிய யோவானுக்கு இயேசு கூறிய பதில் இதுதான்: "நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள். பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. (மத்தேயு நற்செய்தி 11: 4-5)

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது, இன்றைய உலகில் பலரது பழிதீர்க்கும் மந்திரம். இதற்கு நேர்மாறாக, பார்வையற்றோருக்குப் பார்வை வழங்கி, ஊனமுற்றோரை முழுமையாக்கி, பழியைத் தீர்க்கும் மந்திரங்களும், வழிகளும், உலகில் இருக்கத்தான் செய்கின்றன. கண்களையும், மனதையும் திறந்து, இவற்றைக் கேட்கவும், பார்க்கவும் நாம் பழக வேண்டும் என்று, இயேசு இன்றைய நற்செய்தியில் நமக்கு அழைப்பு விடுக்கிறார்.

அளந்து, கணக்குப் பார்த்து, அன்பு காட்டும் பலர் வாழும் இவ்வுலகில், பயனேதும் கருதாமல், கணக்குப் பார்க்காமல், கவிதையாக, நல்ல கனவாக வாழ்ந்த பாரதியார், எசாயா, யோவான், போன்ற இறைவாக்கினர்கள் தொடர்ந்து நம்மிடையே வாழவேண்டும் என்றும், அத்தகைய இறைவாக்கினர்களாக நாம் மாறவேண்டும் என்றும் மன்றாடுவோம். கணக்குப் பார்த்து, பழிதீர்க்கும் உலகை விட, நல்ல கனவுகள், கவிதைகள் வழியாக, பழிகளைத் தீர்ப்பதில் நம் உலகம் வளரவேண்டும் என செபிப்போம்.
 
அறிவைக் கடந்த கனவுகள்

'Chase the Lion', அதாவது, 'சிங்கத்தைத் துரத்திச் செல்லுங்கள்' என்ற நூல், 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. பொதுவாக, சிங்கத்தைக் கண்டால், தப்பித்து ஓடுவோம் அல்லது, முடிந்தால், அதை துரத்தியடிப்போம். இது மனித இயற்கை. இங்கோ, இந்நூலின் ஆசிரியர், சிங்கத்தைத் துரத்திச் செல்லுங்கள் என்று பணிக்கிறார். அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டன் மாநகரில் பணியாற்றும் Mark Batterson என்ற கிறிஸ்தவப் போதகர் எழுதியுள்ள இந்நூலுக்கு அவர் அளித்துள்ள துணை தலைப்பு, நம் கவனத்தை ஈர்க்கிறது. "If your dream doesn't scare you, it is too small" அதாவது, "உங்கள் கனவு உங்களை அஞ்சி நடுங்கச் செய்யவில்லையெனில், அது மிகச் சிறியது" என்று தன் நூலின் முகப்பில் கூறுகிறார். கனவை சிங்கமாக உருவகித்து, அதை நோக்கி நாம் செல்லவேண்டும் என்று வலியுறுத்தும் ஆசிரியர் Batterson அவர்கள், அதற்கு, விவிலிய எடுத்துக்காட்டுகளையும் வழங்கியுள்ளார். கனவைக் குறித்துப் பேசும் இந்நூலை இன்று நாம் சிந்திப்பதற்குக் காரணம், இன்று நாம் கொண்டாடும் 'மகிழும் ஞாயிறு'.
திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு, மகிழும் ஞாயிறு என்று அழைக்கப்படுகிறது. இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசாயா, அக்களியுங்கள், அகமகிழுங்கள், மகிழுங்கள் என்று மகிழ்வைக் குறித்து பலமுறை கூறியுள்ளார். மகிழ்வு என்பது மனிதர்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல, அது இயற்கை அனைத்திலும் வெளிப்படும் உணர்வு என்பதை நம் உள்ளங்களில் ஆழப்பதிக்க, ஒரு கனவுலகை அவர் விவரிக்கிறார். இறைவாக்கினர் எசாயா கூறும் வார்த்தைகளுக்கு செவிமடுப்போம்:

அந்நாள்களில், பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும்; பொட்டல் நிலம் அக்களிப்படைந்து, லீலிபோல் பூத்துக் குலுங்கும். அது வளமாய்ப் பூத்துக் குலுங்கி மகிழ்ந்து பாடிக் களிப்படையும் (இறைவாக்கினர் எசாயா 35: 1-2)
இவ்வார்த்தைகளைக் கேட்கும்போது, "தயவு செய்து கட்டுக்கடங்காது செல்லும் உங்கள் கனவுக்குக் கடிவாளம் போடுங்கள்" என்று, இறைவாக்கினர் எசாயாவிடம் சொல்லத் தோன்றுகிறது. அற்புதம் இருக்க வேண்டியதுதான். அதற்காக, அபத்தமான, கற்பனை கலந்த கனவுகளை அற்புதம் என்று எப்படி சொல்வது? பாலை நிலம், லீலி மலர்களுடன் பூத்துக்குலுங்கும் என்று, இறைவாக்கினர் கூறுவதை, மிகையென்று கருதுகிறோம்.

இறைவாக்கினரின் கூற்று, அபத்தமானது, மிகைப்படுத்தப்பட்டது என்று நாம் சொல்வதற்குக் காரணம் என்ன? எந்த மன நிலை, நம்மை, இவ்வாறு பேசவைக்கிறது என்பதைச் சிந்திப்பது நல்லது. வாழ்வின் எதார்த்தங்களை, பெரும்பாலும், எதிர்மறை கண்ணோட்டத்துடன் பார்த்து, பயந்து, பயந்து, அடுத்த அடி எடுத்து வைத்தால் எவ்விதம் அடிபடுவோமோ என்று கணக்குப் பார்க்கும் practical சிந்தனை, அதாவது, நடைமுறைக்கு ஏற்றவற்றை மட்டுமே எண்ணிப்பார்க்கும் சிந்தனை, நம்மை இவ்வாறு பேசவைக்கிறது. இப்படிப்பட்டக் கனவுகள், நனவானால் நன்றாக இருக்குமே என்று ஆழ்மனதில் ஆசை எழுந்தாலும், நமது நடைமுறை அறிவு, இந்த ஆவலின் மேல் தண்ணீரையோ, மணலையோக் கொட்டி, அணைத்து, புதைத்துவிடுகிறது.

நடைமுறைக்கு ஒத்து வருவதையே நாம் நாள்தோறும் எண்ணிவந்தால்...
நடக்கும் ஒவ்வொன்றுக்கும் காரண, காரியங்களை நாம் அலசிவந்தால்...
எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் எடுத்துவைத்தால்...
செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நாம் கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தால்...

உலகில், கணக்குகள் எழுதப்பட்டப் புத்தகங்கள் மட்டுமே நிறைந்திருக்கும். கவிதைகளை, கனவுகளைக் கூறும் புத்தகங்கள் இருக்காது. மனித குலத்தில் ஆயிரம் பேர் கணக்கெழுதியபோது, ஓரிருவர் கவிதை எழுதியதால்தான், இவ்வுலகம் இவ்வளவு அழகாக இன்றும் உள்ளது. கவிதை, கனவு, கலை இவை தரும் நம்பிக்கையால் இவ்வுலகம் இன்று வரை வாழ்ந்து வருகிறது.

கவிதை சொல்பவர்கள், கனவு காண்பவர்கள், மென்மையானவர்கள்; உலகின் முரட்டுப் போக்கிற்கு ஈடுகொடுக்க முடியாதவர்கள் என்று அவசர முடிவெடுக்கிறோம். இத்தகைய முற்சார்பு எண்ணங்களை புரட்டிப்போட்ட ஒரு கவிஞரின் பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறோம். ஆம், இன்று, டிசம்பர் 11, மகாக்கவி பாரதியாரின் பிறந்தநாள். கொழுந்துவிட்டெரியும் மனதில் உருவாகும் கனவுகளும், கவிதைகளும், பிற மனங்களிலும் தீயை மூட்டும் என்பதற்கு, பாரதியார் ஓரு சிறந்த எடுத்துக்காட்டு. தான், வாழ வழியில்லாமல் இருந்தாலும், பல கோடி மக்கள் வாழ, நம்பிக்கை வரிகளைச் சொன்ன, பாரதியார் போன்ற கவிஞர்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

பாரதியாரைப் போலவே, தன் வாழ்வில் துன்பங்களைத் தாங்கினாலும், மக்களின் நம்பிக்கைக்கு வழி வகுத்த திருமுழுக்கு யோவானைக் குறித்து இன்றைய நற்செய்தி பேசுகிறது. இவரைக் குறித்து இன்றைய நற்செய்தியில் இயேசு பேசும்போது, யோவான் வாழ்ந்த கடினமான வாழ்வை நினைவுபடுத்துகிறார். இறைவாக்கினர் அனைவருக்கும் இதே கதிதான் என்பதை விவிலியம் மீண்டும் மீண்டும் நமக்குச் சொல்கிறது. இறைவாக்கினர்கள் மெல்லிய ஆடை அணிந்து, மாளிகையில் வாழ்பவர்கள் அல்ல... பாலை நிலத்தில் பாறைகளோடு பாறையாய் மாறி, இயற்கையின் கருணைக்கு விடப்பட்டவர்கள் இவர்கள் என்று இயேசு நினைவுபடுத்துகிறார்.

"மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை" என்று இயேசுவால் புகழப்பட்ட யோவானின் குரல், பாலை நிலத்தில் ஒலித்தாலும், அவரது குரலைக் கேட்க மக்கள் ஓடிச் சென்றனர். மக்களை வரவழைத்து, அவர்களுக்கு நம்பிக்கையையும், நற்செய்தியையும் கூறிய யோவான், மதத் தலைவர்களையும் உரோமைய அரசையும் கடுமையாகச் சாடினார். இதனால் கதி கலங்கிய மதத் தலைவர்களும், ஏரோதும் அவரைச் சிறையில் அடைத்தனர். அந்தச் சிறையும், சங்கிலிகளும் யோவானின் உடலைக் கட்டிப்போட்டன. ஆனால், அவரது மனதில் கொழுந்துவிட்ட கனலை அடக்க முடியவில்லை. யோவானின் உடல் சிறையில் அடைபட்டிருந்தாலும், அவர் மனம், தனது மக்களின் விடுதலையைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தது. அந்த விடுதலை, இயேசுவின் வழியே வருமா என்ற கேள்வியை, ஏக்கத்துடன் கேட்கிறார், இன்றைய நற்செய்தியில்: "வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?"

இந்தக் கேள்வியும், இதற்கு இயேசு தந்த பதிலும் இரு வேறு கண்ணோட்டங்களை நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. முதலில் யோவானின் கண்ணோட்டம்: தான் சிறையில் அடைக்கப்பட்டதும், தான் சுட்டிக்காட்டிய உலகின் செம்மறியான இயேசு, தன்னைத் தொடர்ந்து, தான் செய்துவந்த பணியில், முழு வேகத்துடன் இறங்கியிருப்பார்; மதத் தலைவர்களையும், உரோமைய அரசையும் இந்நேரம் கதிகலங்கச் செய்திருப்பார் என்பது யோவானின் எதிர்பார்ப்பாக இருந்தது. அவரது எதிர்பார்ப்பு, ஏமாற்றம் அடைகிறது. எந்தப் புரட்சியும் நடக்கவில்லை. தான் ஒருவேளை தவறானவரைச் சுட்டிக்காட்டிவிட்டோமோ என்று, யோவான் கலக்கம் கொள்கிறார். தம் சீடர்கள் வழியே இயேசுவிடமே தன் கலக்கத்தை வெளிப்படுத்துகிறார்.

தன் எதிர்பார்ப்புகளை ஏமாற்றிவிட்ட ஒருவரைப்பற்றி ஊரெல்லாம் சொல்லி சலித்துக் கொள்வதைவிட, ஏமாற்றிய அவரிடமே அதைப்பற்றி சொல்வதற்கு தனிப்பட்ட துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சல் யோவானிடம் ஏகப்பட்ட அளவு இருந்தது. வெட்டு ஒன்று, துண்டு இரண்டாக எழுகிறது, அவரது கேள்வி: தெளிவாகச் சொல்லுங்கள்... வேறு யாரையாவது நாங்கள் எதிர்பார்க்க வேண்டுமா?

யோவானின் எதிர்பார்ப்புகளும், தனது கண்ணோட்டம், பணி வாழ்வு இவைகளும் வேறுபட்டவை என்பதைச் சொல்ல, இயேசுவும் தயங்கவில்லை. யோவான் எதிர்பார்த்த புரட்சி, ஆள்பவர்களை விரட்டியடித்து, ஆட்சியைப் பிடித்து, மக்கள் வாழ்வை மாற்றுவது என்ற வரிசையில் அமைந்திருந்தது.

இயேசுவின் புரட்சி, இதற்கு நேர்மாறான, தலைகீழான புரட்சி. இந்தப் புரட்சி மக்கள் வாழ்வை மாற்றுவதிலிருந்து ஆரம்பமாகிறது. அதுவும் குறையுள்ள மக்களுக்கு முதலில் நிறைவை வழங்கி, அதன் வழியே தன் புரட்சியை ஆரம்பிக்கிறார், இயேசு. தன் புரட்சியைக்குறி்த்து அவர், நாசரேத்து தொழுகைக்கூடத்தில் இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகள் வழியே கூறினார். இயேசு அன்று நாசரேத்தில் வாசித்தது, எசாயா நூலின் 61ம் பிரிவு என்றாலும், இந்த புரட்சியைக் குறித்து இறைவாக்கினர் எசாயா கூறியுள்ள வரிகளை 35ம் பிரிவிலும் காண்கிறோம். இதுவே, இன்று நமக்கு முதல் வாசகமாக வழங்கப்பட்டுள்ளது. திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்: இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்; அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார். (எசாயா 35: 4) என்று எசாயா முழங்குகிறார்.

இறைவாக்கினர் எசாயா இவ்வாறு கூறியதும், இறைவன் எவ்விதம் பழிவாங்குவார் என்ற விவரம் அடுத்த வரிகளில் அடங்கியிருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அடுத்த வரிகளைத் தொடர்ந்து வாசித்தால், பெருத்த ஏமாற்றம் அங்கு நமக்குக் காத்திருக்கும். பழிவாங்குவது, அல்லது, பழிதீர்ப்பது என்ற வார்த்தைகளைக் கேட்டதும் நம் மனங்கள், பழிக்குப் பழி என்ற பாணியில் சிந்திப்பதால் வரும் ஏமாற்றம் இது. ஆனால், நமது எண்ணங்களுக்கு எதிர் துருவமாக, இறைவாக்கினர் எசாயா, பழிவாங்கும் கடவுளின் செயல்களாகக் கூறுவன இதோ:
அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோர் திரும்பி வருவர்; மகிழ்ந்து பாடிக் கொண்டே சீயோனுக்கு வருவர்; அவர்கள் முகம் என்றுமுள மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்; அவர்கள் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைவார்கள்; துன்பமும் துயரமும் பறந்தோடும். (எசாயா 35: 5-6அ, 10)

பழிதீர்க்கும் இறைவன் இப்படித்தான் செயலாற்றுவார். இறைவனின் இந்த 'பழிதீர்க்கும் படலத்தை' இயேசு தொடர்கிறார். பழி தீர்ப்பது என்றால், பழிக்குப் பழியைச் செய்வது என்பது ஒரு பொருள். ஆனால், பழி தீர்ப்பது என்றால் பழியை, குறையைத் தீர்ப்பது என்றும் பொருள் கொள்ளலாம் இல்லையா? அப்படி பழியைத் தீர்க்க, பழியைத் துடைக்க வந்தவர் இயேசு. பழிதீர்க்கும் தன் பணியைக் குறித்து இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுவது இதுதான்:

"நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள். பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. (மத்தேயு 11:4-5)

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது உலக வழக்கில், நடைமுறை வழியில் 'practical' ஆகச் சிந்திப்பவர்களின் பழிதீர்க்கும் மந்திரம். இதற்கு நேர் மாறாக, பழியைத் தீர்க்கும் மந்திரங்களும் வழிகளும் உலகில் உண்டு. கண்களையும், மனதையும் திறந்து இவற்றை நாம் பார்க்கவேண்டும் என்று, இயேசு இன்றைய நற்செய்தியில் நமக்கு அழைப்பு விடுக்கிறார்.

பழிதீர்ப்பது என்றால் என்ன என்பதை நமக்குப் புரியவைக்கும் ஓர் உன்னதமான உண்மை நிகழ்வை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரமதான் பண்டிகை காலத்தில், அகமது கதீப் என்ற பாலஸ்தீனிய சிறுவன் ஒருவன், இஸ்ரேல் வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான். அவன் வைத்து விளையாடிக் கொண்டிருந்த பொம்மை துப்பாக்கியை, உண்மைத் துப்பாக்கி என்று நினைத்த இஸ்ரேல் வீரர்கள் அகமதைச் சுட்டனர்.

வீரர்கள் தங்கள் தவறை உணர்ந்ததும், உடனே அச்சிறுவனை இஸ்ரேல் பகுதியில் இருந்த ஒரு மருத்துவ மனைக்கு எடுத்துச்சென்றனர். அவனது பெற்றோரையும் அழைத்துச்சென்றனர். அகமதைக் காப்பாற்ற முடியவில்லை. அந்நேரத்தில் அந்தத் தாயும், தந்தையும் அற்புதம் ஒன்றைச் செய்தனர். அவர்கள் இருவரும், அகமதின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்தனர்.

அகமதின் பெற்றோர், தங்கள் மகனின் உறுப்புக்களை, இஸ்ரேல் பகுதியில் இருந்த மருத்துவமனையிலேயே தானம் செய்ததைக் கேள்விப்பட்ட பாலஸ்தீனியர்கள், அதிர்ச்சி அடைந்தனர். பலர் கோபமடைந்தனர். தங்கள் மகனைக் கொன்றது, இஸ்ரேல் படை என்று தெரிந்தும், அப்பகுதியிலேயே தங்கள் மகனின் உறுப்புக்களை அவர்கள் தானம் செய்தது, பழிதீர்ப்பதன், அதாவது, பழியை முற்றிலுமாகத் துடைப்பதன் உச்சக்கட்டம்.

இஸ்மாயில், ஆப்லா என்ற அந்த பெற்றோர், எளிய மக்கள். இஸ்மாயில் சாதாரண ஒரு மெக்கானிக். அந்தப் பெற்றோரின் உன்னதச் செயலைப் பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, இஸ்மாயில் சொன்னது இதுதான்: "என் மகனின் உறுப்புக்கள் வழியே வாழப்போகும் இஸ்ராயேல் குழந்தைகள், தங்கள் காலத்திலாவது, சமாதானத்தை விரும்புவார்கள் என்ற நம்பிக்கையில்தான், இந்த உறுப்புகளை இங்கு நாங்கள் தானம் செய்தோம்."

பல்லாயிரத்தில் ஒருவர் இவ்வாறு இருப்பதால்தான் இந்த உலகம், இன்னும், மனிதர்கள் வாழும் உலகமாக இருக்கிறது. அன்புக்கும், நம்பிக்கைக்கும் விலைகுறித்து, கணக்குப் பார்க்கும் பலரது நடுவில், கவிதையாக, நல்ல கனவாக வாழும் எசாயா, திருமுழுக்கு யோவான், இஸ்மாயில், ஆப்லா போன்ற இறைவாக்கினர்கள், தொடர்ந்து நம்மிடையே வாழவேண்டும் என்று வேண்டுவோம். கணக்குப் பார்க்கும் உலகை விட, நல்ல கனவுகளில், கவிதைகளில் உலகம் வளர வேண்டும் என செபிப்போம். நம்பிக்கை தரும் கனவுகளை இத்திருவருகைக் காலத்தில் துரத்திச் செல்வோம்! சிங்கத்தைத் துரத்திச் செல்வோம்!
 
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
 
 
மறையுரைச்சிந்தனை  -அருட்திரு ஜோசப் லியோன்

பாராட்டைப் பெறுவோம்

"பெண்ணிடம் பிறந்தவருள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை" என்னும் பாராட்டை இயேசு வழங்குகிறார். அவரது இடத்தை நம்மில் யாரும் பெற முடியாது. ஆனால் அடுத்தடுத்த இடங்களை நாம் பெற வேண்டும் என்பது இயேசு உணர்த்தும் பாடம். திருமுழுக்கு யோவானின் வாழ்க்கையை நாம் வாழத் தொடங்கினால் அடுத்தடுத்த இடங்களை நாம் பெற்றுக்கொள்ளலாம்.

திருமுழுக்கு யோவான் ஒரு பாலை நில மனிதர். உடலும் உள்ளமும் உறுதி உடையவர். வசதியை தேடி வாழ்ந்தவர் அல்ல. அவர் பாலைவனக் குரல். ஒலித்துக்கொண்டும் எதிரொலித்துக்கொண்டும் இருப்பார். பனங்காட்டு நரி. சலசலப்புக்கு அஞ்சாதவர். உண்மையை உறக்க உறைப்பவர். அதே வேளையில் உண்மையை, எதார்த்தத்தை எளிய மனதோடு ஏற்றுக்கொள்ளும் மனத்தாழ்மை உடையவர்.

யோவானின் இந்த வாழ்க்கை, அவரது அதிரடி முழக்கம் அனைத்து மக்களையும் கவர்ந்தது.(லூக் 3'10-14) ஆகவே அவரைத் தேடி பாலைவனம் சென்றனர். இயேசுவும் அவரைத் தேடிச் சென்றார். அவரை இறைவாக்கினருள் மேலானவராகக் கண்டார். இறைவன் வரும் பாதையை ஆயத்தம் செய்யும் தொண்டனாகக் கண்டார். எனவே பெண்ணிடம் பிறந்தவருள் பெரியவராகக் காண்கிறார்.

நாம் ஒவ்வொருவரும் அவருக்கு அடுத்தடுத்த இடங்களைப் பெற்று இயேசுவின் பாராட்டைப் பெற வேண்டும். இயேசுவின் பிறப்புக்காகத் தயார் செய்யும் இக் காலத்தில் அவர் வரும் பாதையை தயார் செய்யும் தொண்டனாவோம்.
 
 
 
அருள்பணி: மாணிக்கம் - திருச்சி

 
 
புனித பேதுரு பாப்பிறைத்‌ தமிழ்க்‌ கழகம்‌, பெங்களூர்
திருவருகைக்காலம் 3-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (எசா. 35:1-6,10)

ஆண்டவரின் அன்பு மக்கள் தோல்வியடையும்போது அவர்களின் வீழ்ச்சி கண்டு அகம் மகிழ்பவர்களுக்கு ஆண்டவர் தண்டனை அளிப்பார் என்பது இந்த வாசகத்தின் மையக் கருத்தாக இருக்கலாம். ஏனெனில் எருசலேம் நகர் வீழ்ச்சியுற்று மக்கள் துன்- பத்தால் துவண்டனர். எங்கும் மரண ஓலம். "யூதாவின் இதயமான எருசலேம் கோயில் இடிக்கப்பட்டது. அவர்களின் வாழ்வே பறி- போனது போன்று இருந்தது. ஆண்டவரால் தேர்ந்து கொள்ளப்- பட்டவர்கள் துன்பப்படும்போது அந்த இறைவன் எங்கே? என்று கூட அவர்கள் அழுது புரண்டு கொண்டிருந்தனர். இவர்களின் அழுகை ஏதோமில் வாழ்ந்த மக்களுக்கு அக்களிப்பாக இருந்தது. எருசலேம் மக்களின் பழைய எதிரிதான் ஏதோம். உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும்போது அதைப்பார்த்து ஏளனம் செய்வது வெந்த புண்ணிலும் வேல் பாய்ச்சுவது போலத்தான் இருந்திருக்கும். அந்தச் சமயத்தில் தான் ஆண்டவர் ஏதோமையும் பிற எதிரிகளையும் ஏளனம் செய்தவர்களையும் தண்டித்துப் புது வாழ்வை அளிப்பார் என்று இறைவாக்கினர் எசாயா கூறுகிறார். ஏதோம் நாடு தண்டிக்கப்- பட்டுத் தோற்கடிக்கப்படும் (ஒப. 1:1-14; எசா. 34:5; எசே. 25:12; 35:15). ஆண்டவரின் மக்களினமோ வளமாகச் செழித்து வாழும் பூஞ்சோலையாக மாறும். உடைந்து போன அவர்கள் உள்ளம் உறுதியுள்ளதாக்கப்படும். அவர்கள் முகம் மகிழ்ச்சியால் துள்ளும் என்ற இறைவனின் உயிருள்ள வார்த்தைகளால் எசாயா இறைவாக்கினர் தேற்றுகின்றார்.

இரண்டாம் வாசகப் பின்னணி (யாக். 5:7-10)

கிறிஸ்தவ வாழ்வின் முக்கியப்பண்பும், மதிப்பீடுகளில் பிறந்த துமான "பொறுமை" என்ற நல்ல குணத்தைக் கிறிஸ்தவ மக்கள் பெற்றிருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். அவர் அவ்வாறு கூறுவதன் காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் இவ்வுலக பொருள், சொத்துக்களின் மீது கொண்ட ஆசையால் சிற்றின்ப நாட்டங்களில் ஈடுபட்டு கொலை, கொள்ளை, பொறாமை, ஏழைக்- குரியவற்றை வலிமையுள்ளவர்கள் எடுத்துக் கொள்வது, பிறரிடம் குற்றம் காண்பது போன்ற தீமைகளில் ஈடுபட்டு வாழ்ந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறார். ஆண்டவரின் பிள்ளைகளாகிய நல்லவர்- களை பொறுமையோடு ஆண்டவரின் வருகைக்காகக் காத்திருக்க சொல்கிறார். மானிட மகன் இயேசுவின் வருகை தீயவர்களை அழித்து ஒடுக்கப்பட்டவர்களையும் ஓரங்கட்டப்பட்டவர்களையும் தனித்து விடப்பட்ட மக்களையும் ஆதரவு இல்லா எல்லா மக்க- ளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவார் என்று பொறுமையோடு இருக்க நம்மை அழைக்கிறது இவ்வாசகம்.

நற்செய்தி வாசகப் பின்னணி (மத்தேயு 11:2-11)

"ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள், பாதையைச் செம்மையாக்குங்கள்" (மத்தேயு 3:3) என்று கிறிஸ்துவின், விண்ணரசின் வருகையைப் பறை சாற்றியவர், இன்று நற்செய்தியிலே தன் இரு சீடர்களையும் அனுப்பி "வரவிருப்பவர் நீர் தாமா?' என்று அறிந்து வரச் சொல்கிறார்! ஏன்? யோவான் எதிர் பார்த்த மெசியா- வின் தன்மைகள் வித்தியாசமானவையாக இருந்தன. மத்தேயு 3:8,10,12, போன்றவற்றை வாசித்தால் மெசியா வந்து மனம் மாறாத நெறி கெட்ட இறைவன் அன்பை மறந்த மக்களை எவ்வாறு நடத்து- வார் என்று குறிப்பிடுகிறார். ஆனால் மெசியாவின் செயல்களானது வன்முறையாலோ, அடக்கு முறையாலோ அல்ல. மாறாக லூக்கா 4:17-21-இல் அறிவித்த அவரின் கொள்கைப்படிதான் அவர் தனது செயலைச் செய்கின்றார். அவரின் செயல் திட்டத்தில் ஏழைகள், பார்வையற்றோர், ஊனமுற்றோர், நோயுற்றோர் இருக்கின்றனர். எனவே விண்ணரசின் மகிமையின் மாட்சியின் சொந்தக்காரர்கள் இவர்களே என்று எடுத்துக் கூறுகிறது இவ்வாசகம்.

மறையுரை

விண்ணரசின் வருகையை அறிவித்தவரையே விண்ணரசில் மிகச் சிறியவர் கூட அவரைவிடப் பெரியவர் என்று இயேசு குறிப்பிடுவது, குழப்புவது போலத் தோன்றுகிறது. ஆனால் அவ்வாறு இல்லை. நமது சிந்தனைக்கு இயேசுவின் மூன்று பதில்களை எடுத்துக் கொள்வோம். ➤ திருமுழுக்கு யோவான் ஓர் இறைவாக்கினர் (9).
➤ ஆண்டவரின் தூதர் (10)
➤ மனிதராய் பிறந்தவரில் மிகப் பெரியவர் (11).
1. திருமுழுக்கு யோவான் ஓர் இறைவாக்கினர்

இறைவாக்கினர் என்பவர் கடவுளுக்கும் மனித இனத்துக்கும் இடையே உள்ள இணைப்புப் பாலம். கடவுள் வெளிப்படுத்தும் செய்தியை மக்களுக்கு அறிவித்து மக்களை இறைவனை நோக்கி அழைத்துச் செல்வது இறைவாக்கினரின் முக்கியப் பணிகளில் ஒன்று. இறைவனின் மக்கள் துன்பத்தில் துவளும்போது ஆறுதலாக இருப்பவரே இறைவாக்கினார். துன்பத்திற்குக் காரணமானவர்களை எதிர்த்து அவர்களின் தவற்றைச் சுட்டிக் காட்டுவதும் இறைவாக்கினரே, இயேசுவும் இவரை இறைவாக்கினர் எலியாவுடன் ஒன்றுபடுத்திக் கூறுகிறார் (11:14). அப்படியென்றால் இறைவாக்கினர் எலியா என்ன செய்தார் என்று நமக்குத் தெரிய வேண்டும். எலியாவும் யோவான் செய்த பணியைச் செய்ய அனுப்பப்பட்டவரே (மலா 3:1). சீராக் 48:1-11 வாசித்தால், இறைவாக்கினர் எலியா எவ்வாறு வல்லமை பெற்று விளங்கினாரெனத் தெரியும். அகங்காரம், ஆணவம், பேராசை கொண்ட மன்னர்கள், இஸ்ரயேல் மக்களுக்கு எதிராக இருக்கும்போது எலியா மக்களுக்குத் துணையாக இருக்கின்றார். 1அர 17:1-3-இல் பார்க்கிறோம். கடவுளின் பெயரால் ஆணையிட "மழையோ பனியோ பெய்யாது" என்று சொல்லி ஆகாபு அரசனின் நாட்டில் பஞ்சம் வரச் செய்கிறார். காரணம், ஆகாபு அரசன் வாழும் உண்மைக் கடவுளை விட்டு விட்டு வேற்று தெய்வத்தை வணங்குகிறான். ஆண்டவர் பார்வையில் தீயவை அனைத்தையும் செய்தான். தன் சொந்த மகன்களையே வேற்று தெய்வத்திற்கு நரபலி கொடுக்கிறான். அதனால்தான் எலியா அரசனைக் கண்டிக்கிறார். 2அர. 1:1-11-இல் அரசன் அகசியாவை சபிக்கிறார். காரணம், இஸ்ரயேலின் கடவுளைப் புறந்தள்ளி விட்டு ஆணவத்தால் பாகால் தெய்வத்திடம் குறி கேட்கச் செல்கிறான். இஸ்ரயேலுக்கு கடவுளே இல்லை என்று அரசன் சொல்ல எலியா அரசனை படுத்த படுக்கையாக்கி விடுகிறார்.

கிறிஸ்தவர்களாகிய நாம் இறைவன் மேல் முழு நம்பிக்கையும் இழந்து நல்ல நேரம் பார்க்க, ஜோசியம் பார்க்க, பில்லி சூனியம் பார்க்க, குறி கேட்கக் கிளி ஜோசியக்காரனைத் தேடிச் செல்கிறோம். கிறிஸ்தவர்கள் நமக்கு இறைவன் ஒருவரே என்று வாக்களித்த பின்னும், நம்மை அவரது பிள்ளைகள், மக்களாக ஏற்றுக் கொண்ட பின்னும் ஏன் வழிதவறிச் செல்கின்றோம். அவ்வாறு செல்பவர்களை எப்போதாவது நாம் நல்வழிப்படுத்தியுள்ளோமா? எப்போதும் நாம் இரண்டு தலைவர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது. சாத்தானையும், மிக்கேல் தூதரையும் ஒரு பெண் தொட்டுக் கும்பிட்டார். ஏன் எனக் கேட்டதற்கு, "நல்லது என்றால் மிக்கேல் பார்த்துக் கொள்வார், தீமை என்றால் சாத்தான் பார்த்துக் கொள்ளும்" என்றார். அதுபோல நாமும் இரண்டு மனம் கொண்டு இருக்கக் கூடாது. நம் தனிப்பட்ட வாழ்வை எண்ணிப் பார்ப்போம். இறைவாக்கினரின் வழிமரபில் வந்திருப்போம் என்றால் கண்டிப்பாக இறைவாக்கினர் தன்மை நம்மிலும் இருக்கும். குழுவாக, சமுதாயமாக எடுத்துக் கொள்வோம். தீமைகள், அநியாயம், நேர்மையற்ற, செயல்களை நம்மை ஆள்பவர்கள் செய்யும்போது ஏன் அதனைக் கண்டிக்காமல், அதற்குத் துணை போகிறோம், ஓர் அநீதி நம்மைப் பாதிக்காதவரை நாம் எதிர்ப்பதில்லை.

அணு ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சைகள், இலஞ்சப் பணம் பெற்ற செய்திகள், அரங்கேறியபோது கிறிஸ்தவ அமைப்புகள் ஏன் எதிர்ப்போ அல்லது தனது நிலைப்பாட்டைத் தெறிவிக்கவில்லை?

சென்னையில் ஒரு மாதமாக 'சைக்கோ கொலை" என்ற பெயரில் காவல் துறையின் மெத்தனத்தால் பல உயிர்கள் பறிபோனபோது நம் இறைவாக்கினர் தன்மை என்ன ஆனது? (ஜுலை 2008).

குடும்ப வாழ்வில் பிள்ளைகள் தவறு செய்யும்போது பெற்றோர்கள் தவறை கண்டிக்காமல் இருப்பது இறைவாக்கினர் தன்மையா?
ஊர்களில் பிறர் தவறுசெய்யும்போது கண்டிக்காமல் கண்டும் காணாமல் செல்வது இறைவாக்கினரின் தன்மையா? எனவே இன்று இயேசு ஒவ்வொரு கிறிஸ்தவரையும் இறை- வாக்கினர் பணியைச் செய்ய அழைக்கிறார். பெரிய அளவில் இல்லா விட்டாலும் நம் வீட்டில் சுற்றுப் புறத்தில் ஊரில் நடைபெறும் தீமைகளை எதிர்த்து மக்களை இறைவன் பக்கம் திருப்ப வேண்டும். எல்லாத் தீமைகளுக்கும் காரணம் மக்கள் மனதில் உள்ள, நம் உள்ளத்தில் உள்ள அழுக்குகள் தான். தனியொரு மாற்றம் ஏற்படின் கண்டிப்பாகச் சமூக மாற்றம் ஏற்படும். அப்போது நம்மிலும் பாலைவனம் போன்ற வெறுமை வறட்சி இருக்காது. வளமையான செழிப்பான மகிழ்ச்சி நிறைந்த வாழ்வு கிடைக்கும் என்பது உறுதி.

ஆண்டவரின் வருகையின்போது மக்கள் அனைவரும் தூய உள்ளத்தோடு இருக்க வேண்டும். நம் உள்ளம் கறைபடிந்திருக்கு- மானால் நாம் சுட்டெரிக்கப்படுவோம். ஆம். நமக்குத் தெரியும். நம் உள்ளம் நன்மை நிறைந்ததா என்று? உள்ளே ஒன்று வைத்து புறம் ஒன்று பேசி வருபவர்களா நாம்? பொய், பொறாமை, கெட்ட எண்ணம், தீயவை எண்ணுதல், செறுக்கு, தான் என்ற சுயநலம், மெத்தனம், பிறர் எக்கேடு கெட்டுப் போகட்டும் நான் நல்லா இருந்தா சரி என்ற மனப்பாங்கு ஆகியவை நம்மில் இருப்பின் நாம் கடவுளின் தூதர்களாக இருக்க முடியாது. ஆனால் இவையெல்லாம் நிறைந்தது தான் உலகம். இன்று நடக்கும் வன்முறை, கொலை, கொள்ளை, ஆதிக்க வெறி, எல்லாமே தனிமனிதனின் உள்ளத்தைப் பிரதிபளித்து ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பாதிக்கின்றன.

ஆண்டவர் வரும் நாளில் நம்மையெல்லாம் தூய்மைப்படுத்து- வதற்காகத்தான் தூய யோவான் வழியாக எச்சரிக்கிறார் இறைவன். மலாக் 3:1-யிலும் 23:20-யிலும் "இதோ உனக்கு முன் ஒரு தூதுரை அனுப்புவேன்" என்ற வாசகத்தைப் பார்க்கிறோம். அந்தத் தூதர் என்ன செய்வார்? மாற்கு 4:6-இல் இதற்குப் பதில் இருக்கிறது. ஆண்டவர் வரும் நாளில் நம்மைத் தூய்மையாக்கிக் கொள்ள உதவு- வார். "நான் வந்து தண்டிக்காதபடி அதாவது நான் வந்து உலகைச் சபித்துத் தண்டிக்காதபடி அவர் பெற்றோரின் உள்ளங்களை பிள்ளைகளிடத்தும், பிள்ளைகளின் உள்ளங்களைப் பெற்றோரிடத்தும் திருப்புமாறு செய்வார்". அக்காலத்தில் வாழ்ந்த சுயநலக்காரர்- களையும் வரி ஏய்ப்பு செய்து ஏழைகளின் வயிற்றில் அடித்தவர்- களையும், பொய்க்குற்றம் சுமத்திய படை வீரர்களையும் நோக்கி விரியன் பாம்புக் குட்டிகள் என்று சாடுகிறார் திருமுழுக்கு யோவான் (லூக்கா 3:11).

3. மனிதராய் பிறந்தவரில் மிகப்பெரியவர்

மனிதராய் பிறந்தவர்களில் மிகப் பெரியவரும் இவரே. ஆனால் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என்று உறுதியாகக் கூறுகிறார். வெளிப்படையாகப் பார்த்தால் உண்மை- யில் இது முரண்பாடான வார்த்தைகள். ஆனால் இறைவனின் வார்த்தை என்றுமே மாறாதவை. தவறிழைக்கக் கூடியதல்ல. தூய திருமுழுக்கு யோவான் விண்ணரசைப் பற்றி முன்னறிவிக்கிறார். அப்படியெனில் அவர்தான் முன்னோடி. நமக்கெல்லாம் முன்னே வந்து நம் உள்ளங்களைத் தூய்மைப் படுத்தி இறைவனிடம் சேர்ப்பவர். எனவே ஏற்கெனவே அவர் இறையரசின் அங்கத்தினராகி விட்டார். எனினும் அவரின் தயாரிப்பினால் உள்ளம் தூய்மையாக்கப் பட்ட நாம் அவரைக் கடந்து தான் செல்ல வேண்டும். இன்றைய சாதாரண பேச்சு வழக்கில் சொன்னால் தூய யோவான் வாயில் படியில் நிற்கிறார். நாமோ உள்ளே சென்று இயேசுவை காணுகிற வாய்ப்பைப் பெற்றுள்ளோம்.

எனவே நமது வாழ்வும் ஒரு இறைவாக்கினருக்குரிய வாழ்வாக அமைய வேண்டும். "தூய்மையான உள்ளம்" இறைவனின் கட்ட- ளைக்குப் பணியும் உள்ளம். தன்னைச்சுற்றி வாழ்பவர்களை அன்பால் அரவணைத்துச் சேர்கின்றபோது ஏற்றம் பெற்ற உள்ளமாக, உறுதிப் படுத்தும் உள்ளமாக வாழும்பொழுது நாமும் இயேசுவை அறிமுகப் படுத்தும் வாயில்களாக வாழ்கிறோம். நிலத்தில் விதையிட்டால் உடனே பலன் தராது. அதற்குரிய பக்குவம் வந்தபின்பே அதற்குரிய பலன் கிடைக்கும் எனச் சாதாரண விவசாயி காத்திருக்கிறான். ஆண்டவரின் ஆட்சி மண்ணில் அமையும் வரை பொறுமையோடு காத்திருந்து இறைவாக்கினருக்குரிய பணியைச் செய்வோமாயின் இன்றைய முதல் வாசகம் கூறிய மகிழ்ச்சியும் வளமும் பசுமையும் நம்மிலும் தங்கும்.

பிற மறையுரைக் கருத்துக்கள்

🕇 இன்றைய மூன்று வாசகங்களும் இயற்கையை மையப்படுத்தியே உள்ளன. இயேசு இயற்கையோடு மக்களோடு மக்களாக, அவர்கள் செய்யும் தொழில் முறைகளோடு கூடிய சூழ்நிலையில் வளர்ந்து பணி செய்ததால் இயற்கையை மையமாகக் கொண்டு தனது பணியைச் செய்கிறார். இன்று இயற்கைக்கு நாம் எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? அறிவியல் வளர்ச்சியால் காடுகளை அழித்து வறட்சியாக்குகிறோம். நான்கு வழிப் பாதை அமைக்கச் சாலையோரம் இருந்த அத்தனை மரங்களையும் வெட்டியது இந்த அரசு. விளைவு எங்கும் பாலைவனக் காட்சி. நிழலில் இளைப்பாறக் கூட மனிதருக்கு இடமில்லை. அந்த மரங்களில் வாழ்ந்த பறவைகள் சிறிய உயிரினங்கள் அழிந்து போயின.

🕇 காடுகளை அழித்துச் சாலை, விடுதி, கல்லூரி, தொழிற்சாலை என நம்மையே அழித்துக் கொள்கிறோம. ஆனால் இயேசு எப்போதும் ஜெபிக்கும் போதும் உவமைவாயிலாகப் பேசும் போதும் இயற்கையை மையப்படுத்தி மக்களை உணர வைக்கிறார்.

🕇 இயேசுவைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்வோர் பேறுபெற்றோர். ஏனெனில் தன்னை மக்கள் புறக்கணிப்பதை முன்னறிவிப்பதாக இவ்வாசகம் அமைகிறது. காரணம் திருமுழுக்கு யோவானையே புறக்கணித்தனர். இயேசுவைப் பின்தொடரும் நமக்கும் இந்த புறக்கணிப்பு கிடைப்பது உறுதி.
 
 
அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட் ‌
திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு

இன்றைய முதல் வாசகமும் நற்செய்தியும் பல நிலைகளில் ஒத்துப்போவது தெற்றென விளங்கும். அவற்றை முறையாக அதை நற்செய்தியின் நிலை நின்று விளக்க முயல்வோம்.
அமைப்பு முறை

இன்றைய நற்செய்திப் பகுதி மத் 11:1-19 எனும் நீண்ட பகுதியின் உள்பகுதியாகும். இதை மூன்று உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1. வரவிருப்பவர் நீர்தாமா?' (வச. 3) என யோவான் எழுப்பிய கேள்வி (வச. 2-6).
2. யோவானைப் பற்றிய இயேசுவின் மதிப்பீடு (வச. 7-11).
3. யோவானும் இயேசுவும் ஏற்றுக்கொள்ளப்படாதது குறித்த உவமை (வச. 12-19).
இவற்றுள் முதல் இரண்டு பகுதி வழி மத்தேயு தர விரும்பும் செய்தியினை இவண் காண்போம்.

அ. இயேசுவின் அடையாளம்

இன்றைய நற்செய்தியின் தொடக்கத்தில் "வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?" (வச.3) எனும் கேள்வி சிலருக்கு வியப்பை ஏற்படுத்தலாம். இது யோவான் இயேசுவை அறியாததாலோ, நம்பாததாலோ எழுந்ததல்ல, மாறாகத் தம் சீடர்கள் உண்மை நிலையை, இயேசுவின் சரியான அடையாளத்தை, அவர்களே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகப் பயன்படுத்தப்படும் யுக்தி. இயேசுவும் அதே பாணியில் "யோவானிடம் போய் அறிவியுங்கள்" என்று கூறியவை எசா 35:5-6ஐ ஒத்திருக்கின்றன. பார்வையற்றோரின் கண்கள் பார்ப்பது, காது கேளாதோர் கேட்பது, காலூனமுற்றோர் துள்ளிக் குதிப்பது, வாய் பேசாதோர் மகிழ்ந்து பாடுவது (எசா 35:5-6) ஆகியவை மெசியாவின் காலத்தில் நிகழ இருப்பவைகளாக எசாயா (குறிப்பாக இரண்டாம் எசாயா) முன்னறிவித்தவை. இது இஸ்ரயேலரின் நாடுகடத்தப்படுதலுக்கு பின் முன்னறிவிக்கப்பட்டவை. எனவே புதுமைகளும், நலமாக்கலும் மெசியாவின் காலத்து அறிகுறிகள். இவையெல்லாம் தன் காலத்தில், தன்னால் நிகழ்கின்றன என்று இன்றைய நற்செய்திப் பகுதியில் கூறுவதன் வழியாக இந்த மெசியாவின் காலம் தன் காலத்தில் தொடங்கிவிட்டது, தான் தான் அந்த வாக்களிக்கப்பட்ட மெசியா எனச் சொல்லாமல் சொல்கின்றார் இயேசு. எனவே யோவானின் ஒரு கேள்வி இயேசுவின் உண்மை அடையாளத்தை அவரது சீடர்களுக்கும், வாசகர்களுக்கும், உலகுக்கும் வெளிப்படுத்துகின்றது.

ஆ. யோவானின் அடையாளம்

யோவானின் சீடர்கள் சென்றபின் இயேசு யோவானைப் பற்றிப் பேசி அவரது அடையாளத்தை வெளிப்படுத்துகின்றார். யோவான் பாலைநிலத்தில் வாழ்ந்தவர் (வச.7). அரச மாளிகையில் வாழ்பவர்கள்போல மெல்லிய ஆடை அணியாதவர் (வச. 8); இறைவாக்கினர் (வச.9); இறைவாக்கினரிலும் மேலானவர் (வச.9); இறைவன் அனுப்பிய தூதர் (வச.10); ஆண்டவரின் வருகையின் வழியை ஆயத்தப்படுத்துபவர் (வச.10); இவை அனைத்தின் கொடு முடியாக, "மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் இல்லை (வச.11). மேலும் வரவேண்டிய எலியா (வச 14) எனவே யோவான் பன்முகங் கொண்டவர். அதை இயேசு வெளிப்படுத்தித் தனது முன்னோடிக்குச் சான்று பகர்கின்றார்.

இ. நமது அடையாளமும் கடமையும்

இன்றைய நற்செய்தி பகுதியில் இறுதி வசனத்தின் இரண்டாவது பகுதி (வச.11ஆ) யோவானின் ஒரு குறைபாட்டையும், நமது அடையாளத்தையும் வெளிப்படுத்துகிறது. வச. 13ல் "திருச் சட்டமும் எல்லா இறைவாக்கு நூல்களும் யோவான் வரும்வரை இறைவாக்குரைத்தன" எனக் கூறுவதன் வழி, யோவான் இறை வாக்கினர் பாரம்பரியத்தின் இறுதி இறைவாக்கினர் என்பதும் இயேசுவின் வருகையிலிருந்து மெசியாவின் காலம், இறையரசின், விண்ணரசின் காலம் தொடங்கிவிட்டது என்பதும் தெளிவாகிறது. இந்த விண்ணரசின் காலத்தில் நாம் இருக்கின்றோம். இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றின் வழியாக, நமது திருமுழுக்கின் வழியாக இந்த விண்ணரசின் மக்களாகி விட்டோம். இதில் நாம் சிறியவர்களாய், சாமான்யர்களாய் இருந்தாலும் இயேசுவிற்கு முந்தைய காலத்தவர்களைவிட பெரியவர்களாவோம். என்னே நாம் பெற்ற பேறு! இந்தப் பேற்றுடன், இயேசுவின் இரண்டாம் வருகை எனும் மெசியாவின் வருகைக்காக, விண்ணரசுக்காக, அது நிறைவாய் நம்மிடையே வர வேண்டும் என உழைக்க வேண்டியதுதான் நமது கடமையாகும். வரவிருக்கும் கிறிஸ்து பிறப்பு விழா இதைச் செயல்படுத்த நமக்கு ஒரு வாய்ப்பு.
 
அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
திருவருகைக் காலம் - மூன்றாம் ஞாயிறு முதல் ஆண்டு
முதல் வாசகம் எசா 35: 1-10

இஸ்ரயேலின் எதிரியான "ஏதோமின் நீரோடைகள் கீலாகும், அதனுடைய நிலத்தின் மண், எரியும் கந்தகம் ஆகும்"(எசா 34: 9) என்று ஏதோமைப் பழித்த ஆண்டவர் "பாலை நிலமும் பாழ்வெளியும் அகமகிழும். பொட்டல் நிலம் அக்களிப்படைந்து லீலிபோல் பூத்துக் குலுங்கும்" என்று இஸ்ரயேலை வாழ்த்துகிறார். இறைவன் கிறிஸ்து வருகையால் நமக்குக் கிடைக்கும் ஆசீரை இப்பகுதி சுட்டும் எனலாம். பாபிலோனிய அடிமைத் தளையின் போது எழுதப்பட்டது இவ்வாசகம்.

"உறுதியாயிருங்கள்"

"அஞ்ச வேண்டாம்" என்ற சொற்கள் நம் அனைவருக்கும் உரம் தரும் சொற்கள். "இதோ இந்நெருப்புப் பொறி உன் உதடுகளைத் தொட்டது. உன் குற்றப் பழி உன்னைவிட்டு அகன்றது. உன் பாவம் மன்னிக்கப்பட்டது" (எசா 6:7) என்று எசாயாவுக்குக் கூறிய ஆண்டவர், "'சிறுபிள்ளை நான்' என்று சொல்லாதே; யாரிடமெல்லாம் உன்னை அனுப்புகின்றேனோ அவர்களிடம் செல்" (எரே 1:7) என்று எரேமியாவுக்குச் சொன்ன இறைவன், "அஞ்சாதீர்; கடவுளின் அருளை அடைந்துள்ளீர்" (லூக் 1: 31) என்று மரியாவிடம் பகர்ந்த கடவுள், அவரே நம் ஒவ்வொருவரையும் பார்த்து "அஞ்ச வேண்டாம்; உறுதியாயிருங்கள்" என்று கூறுகிறார். ஆண்டவர் நம்முடைய அரணும் அடைக்கலப் பாறையுமாயிருக்கும்போது (திபா 17:2: 31-46) நம்மைப் பாதுகாக்கும் கோட்டையும் கொத்தளமுமாயிருக்கும்போது, நாம் அச்சப்பட வேண்டியது ஒன்றுமில்லை. "உன் பாவங்கள் கடுங் சிவப்பாய் இருக்கின்றன. எனினும் உறைந்த பனிபோல் அவை வெண்மை யாகும். இரத்த நிறமாய் அவை சிவந்திருக்கின்றன. எனினும் பஞ்சைப் போல் அவை வெண்மையாகும்" (எசா 1:18). "கடவுள் தாமே வந்து நம்மை மீட்பார்" (35:4).

ஆன்மீக வளம் தருவார் ஆண்டவர்

ஆண்டவர் நமக்கு மீட்பைக் கொண்டு வரும்போது பாழ்நிலம் நீருற்றுக்களால் நிரம்பி வழியும். உடல் ஊனமுற்றோர் உரம் பெற்று மகிழ்வர் என்பது இயற்கை வளத்தை மட்டுமன்று, இயற்கைக்கு மேற்பட்ட ஆன்மீக வளத்தையும் சுட்டும். இயேசுவின் வருகையால் கல்லான இதயங்கள் கனிவதையும், பாவத்துக்கு அடிமைப்பட்ட உள்ளங்கள் விடுதலையுற்று மகிழ்வதையும் இது குறிக்கும்.
"கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன் கருணை
வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியன்"- திருவாசகம்
வரவிருக்கும் கிறிஸ்து பிறப்பு விழா இத்தகைய விடுதலைக்கும் மகிழ்ச்சிக்கும் நம்மை இட்டுச் செல்ல வேண்டும்.

இயேசுவின் மனநிலை நமதாகட்டும்

கிறிஸ்து பிறப்பு, நாம் நல்வழியில் நடக்கக் கடவுள் தந்தையால் தயார் செய்யப்பட்ட ஒரு "தூய வழி" (35:8). அவ்வழியில் அசுத்தமானவர் எவரும் நடக்க முடியாது. "மீட்படைந்தவர்கள் மட்டுமே அவ்வழியாய் நடந்து செல்வர்"(35 : 9). அப்பாதை ஒடுக்கமான பாதை, சிலுவைகள் நிறைந்த பாதை. ஆயினும், அன்பு எனும் உறுதுணையுடன் இப்பாதையில் நடப்போருக்கு எப்போதும் மகிழ்ச்சியும் அக்களிப்பும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

"கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் ஊக்கம் பெற்றுள்ளீர்களா? அன்பினால் ஆறுதலும், தூய ஆவியாரினால் தோழமையும், பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டுள்ளீர்களா? அப்படியானால் நீங்கள் ஒரே எண்ணமும் ஒரே அன்பும் ஒரே உள்ளமும் கொண்டவராய் திகழ்ந்து, ஒரு மனத்தோராய்... மனத்தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவர்களாகக் கருதுங்கள். நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறைகொள்ள வேண்டும்."

"தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன்" - அகநானூறு

"கிறிஸ்து இயேசுவில் இருந்த மனநிலையே உங்களிலும் இருப்பதாக" (பிலிப் 2: 1-5) என்ற வார்த்தைகள் இத்திருவருகைக் காலத்தில் பின்பற்ற எவ்வளவு ஏற்றன?

உறுதியாயிருங்கள்: அஞ்ச வேண்டாம்.

இரண்டாம் வாசகம்: யாக் 5:7-10

யாக்கோபு திருமடலின் முடிவுரையிலிருந்து இன்றைய வாசகம் எடுக்கப் பட்டுள்ளது. பொறுமை, நம்பிக்கை, அன்பு ஆகிய புண்ணியங்களைக் கடைப்பிடித்து இறைவனின் வருகைக்காகக் காத்திருக்க வேண்டுமென்று நமக்கு அழைப்பு விடப்படுகிறது.

"பொறுமையாயிருங்கள்" (5: 7, 8, 10) என மும்முறை யாக்கோபு நமக்குப் புத்தி புகட்டுகிறார். "அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு" என்பதும், "பொறுமை பொன் செய்யும் மருந்து" என்பதும் தமிழ் வழக்கு. கிறிஸ்தவ வாழ்விலே பொறுமையெனும் புண்ணியம் ஒரு முக்கிய இடத்தைப் பெறும். நிலத்திலே விதை விதைத்த குடியானவர் ஓரிரு நாட்களிலே தன்னுடைய முயற்சியின் பலனை எதிர்பார்க்கமாட்டார். பொறுமையோடு, மழைக்கும் வெயிலுக்கும் காத்திருக்கிறார்; உரமிட்டுக் களையெடுத்துத் தக்க காலத்தில் விளைச்சலை எதிர்பார்த்திருக்கிறார். அது போன்றே நாமும் பொறுமையோடும், மன அமைதியோடும், நமது அன்றாடக் கடமைகளில் சோர்வு காட்டாது, இன்றோ, நாளையோ, என்ற முறையிலே என்றும் தயாராக இருக்க வேண்டும். இந்த இன்றும் நாளையும் நமக்கு இன்னும் பல ஆண்டுகள் கழித்தும் வரலாம். எனினும் பொறுமை இழக்காது காத்திருப்போம். கிறிஸ்து பிறப்பு, கிறிஸ்துவின் இறுதி வருகையின் முன் அறிவிப்பு என்பதை உணர்ந்து பொறுமையோடு ஒவ்வொரு கிறிஸ்து பிறப்பின் போதும் அவருடைய இறுதி வருகைக்காகக் காத்திருப்போம். "பொறுத்தவர் பூமியாள்வாரன்றோ?"

"உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள்"

நற்செயல்கள் செய்வதிலே நமக்குத் தளர்ச்சியிருக்கக் கூடாது. "தக்க வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்" (2 கொரி 6:2) என்கிறார் ஆண்டவர் (எசா 49:8). நம் செயல்களுக்கேற்பவே அவருடைய கைம்மாறும் அமையும். எனவே, "மனவுறுதியோடு நற்செயல் புரிந்து" (உரோ 2: 7) நடக்க முயல்வோம். வாழ்விலே உறுதியின்மை, பிடிப்பற்ற தன்மை, ஏனோதானோ என்ற முறையில் நடத்தல் முதலியன வெற்றிக்கு வழிகோல்வன ஆகா. "செய்வன திருந்தச்செய்" என்ற முதுமொழிக்கிசைய, நம்பிக்கை தளராது நம்முடைய கடமைகளை நிறைவேற்றுவோம். "இறைவனை நம்பினோர் கைவிடப் படார்."எனவே இறைவனில் ஆழ்ந்த நம்பிக்கை வைத்து உறுதியோடு நம் பணிகளை நிறைவேற்றுவோம். "கடவுள் வாக்குறுதிகள் யாவற்றுக்கும் ஆம் என்பதே இயேசுவிடம் இருந்தது" (2 கொரி 1: 20). "இல்லை" கலவாத அந்த "ஆம்" நம்முடைய வழிதுணையாயிருக்கட்டும். கடவுளுக்கு இயேசு தந்த "ஆம்" தான் கிறிஸ்து பிறப்பு. நமக்கும் இக்கிறிஸ்து பிறப்பு "ஆம்" (உறுதி. துணிவு, தளர்வின்மை) ஆக அமையுமா? "உறுதியுள்ள நெஞ்சினாய் வா, வா, வா."

"ஒருவர் மற்றவருக்கு எதிராக முறையிடாதீர்கள்"

பிறருக்குத் தீர்ப்பளிப்பது நமக்கே தீர்ப்பளிப்பதாகும். எனவேதான் ஆண்டவர், "நீங்கள் தீர்ப்புக்குள்ளாகாதபடி, தீர்ப்பிடாதீர்கள்" (மத் 7: 1) என்கிறார். "முதலில் உன் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறி. பின் உன் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருக்கும் துரும்பை எடுக்க நன்றாகக் கண் தெரியும்" (மத் 7:1-5) என்கிறார். ஆம், கிறிஸ்தவ வாழ்வு "பகைவர்களுக்கும் அன்பு செய்ய" (மத் 5: 44) விடுக்கப்பட்ட அழைப்பு. எனவே பிறரைப் பற்றிக் குறைகூறி முறையிட்டு, நம்முடைய வாழ்வையும் நேரத்தையும் வீணாக்காது, அன்பையும் மன்னிப்பையும், பிறருடைய குறைகளை மறக்கும் தன்மையையும் ஆடைகளாக அணிந்து கொண்டு, வரவிருக்கும் கிறிஸ்து பிறப்புக்கு நம்மைத் தயார் செய்வோம். "மறம் துறந்து வஞ்சம் மாற்றி... நின்கண் ஆசையே தொடர்ந்து நின்ற நாயினேன்' (திருச்சந்த விருத்தம்) என்பது நமது வாழ்வாய் அமையட்டும். "அன்பெனும் ஆறு நம்மில் கரையது புரள" (திருவாசகம்) வாழ முயற்சிப்போம்.

உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள். இதோ. நடுவர் வாசலிலே நிற்கிறார்.

நற்செய்தி: மத் 11: 2-11

சிறையிடப்பட்ட திருமுழுக்கு யோவான் மரணத்தைத் தழுவுமுன் மெசியாவைத் தம் சீடர்களுக்கு அறிமுகப்படுத்திட விரும்பினார். எனவேதான் அவர்களை இயேசுவிடம் அனுப்பி அவரிடமிருந்தே உண்மையை அறியும்படி செய்கிறார். அவர்களது வினாவுக்கு நமதாண்டவர் அளித்த விடையும், அவர் யோவானுக்குச் சூட்டிய புகழாரமுமே இன்றைய நற்செய்தியாகும்.

செயல்வழிப் போகனை

இஸ்ரயேல் இனம் மெசியாவை எதிர்நோக்கி இருந்தது. "ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்; ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசிகூறுகிறோம்" (திபா 118: 26) என்பன போன்ற பகுதிகள் அவர்களுக்குப் பழக்கமானவை. "இறந்துபோன உம் மக்கள் வாழ்வு பெறுவார்கள் "(எசா 26: 19). "அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும். காது கேளாதோரின் செவிகள் கேட்கும். கால் ஊனமுற்றோர் மான்போல் துள்ளிக் குதிப்பர்; வாய் பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்" (எசா 35 :5-6) என்ற இறைவாக்குகளை மெய்ப்பிக்கும் வகையில் இயேசு பல்வேறு புதுமைகளைப் புரிந்தும், எதிர்பார்க்கப் பட்ட மெசியாதான் தான் என்பதை இயேசு இன்னும் பகிரங்கமாக வெளியிடாதது திருமுழுக்கு யோவானுக்கு வியப்பாகவும், "சற்று எரிச்சலாகவும்" இருந்திருக்கலாம். எனவேதான் தன் சீடர்களை அவரிடம் அனுப்பி நேரில் உண்மையை அறியச் செய்கிறார். அவர்கள் கேட்ட கேள்விக்கு இறை இயேசு தம் செயல்களையே பதிலாகச் சுட்டிக் காட்டுகிறார் (115-6). இயேசு இன்றும் குணமளிக்கும் மருத்துவராகவே நம்மிடைச் செயல்புரிகின்றார். உடல் பிணிகளை மட்டுமல்ல, உள்ளப் பிணிகளை நீக்குபவரும் அவரே. இறைவனைக் காணாத, காண விரும்பாத மக்களின் உளக் கண்களைத் திறப்பவரும் அவரே; பாவத்தின் பயனாக அருள் வாழ்வை இழந்த ஆன்மாக்களுக்குப் புத்துயிர் அளிப்பவரும் அவரே. "இடரைக் களையும் எந்தாய் போற்றி"யென அவரை வாழ்த்துவோம் (திருவாசகம்). மருத்துவ மனைகள், கல்விக் கூடங்கள், சமூக சேவைத் தளங்கள் வழியாகத் திருச்சபை நமதாண்டவரின் பணியையே தொடர்ந்து செய்து வருகிறது. இவற்றில் எனது பங்கென்ன?

திருமுழுக்கு யோவானின் மாண்பு

மெசியாவின் வருகைக்கு மக்களைத் தயார் செய்ய வந்த யோவான் எதற்கும் வளைந்து கொடுக்கும் ஆற்றங்கரை நாணல் போன்றவர் அன்று; உண்மையென்று தான் உணர்ந்ததை உள்ளபடியே கூறும் வீரர். ஏரோதரசனின் தவற்றைச் சுட்டிக்காட்டி, தன் தலையையே இழந்தவர். அவர் அரண்மனையில் தங்கி ஆடம்பர வாழ்வு நடத்தவில்லை. காட்டிலே கடுந்தவம் புரிந்த இறைத் தூதுவர். எனவேதான் மக்கள் அவரைக் காணச் சென்றனர்.

திருமுழுக்கு யோவான் இறைவனின் ஞானத்தை மனதிலே கொண்டு, அவரது உண்மையைத் தன் உரையிலே பொதிந்து, அவரது உறுதியை நெஞ்சிலே சுமந்து மக்களுக்கு வழிகாட்டியாக வாழ்ந்தவர். மெசியா வந்துவிட்டார் என்ற நற்செய்தியை அறிவித்த மிகச் சிறந்த இறைவாக்கினர் இவர். மனிதராய் பிறந்தவர்களில் பெரிய இறைவாக்கினர் இவர் என்ற பாராட்டைப் பெற்றவர் (11: 11). எனினும் இவர் இறை இயேசு கல்வாரியில் நிகழ்த்திய நித்திய பலியைக் காணவில்லை. இறை இயேசுவின் பாடுகளில் அவரது இதயம் ஊடுருவப்பட்டதால் வெளியான இறையன்பின் ஆழத்தையும் அகலத்தையும் நீளத்தையும் உயரத்தையும் (எபே 3:18-19) அறிந்தவரல்லர். கல்வாரியில்தான் ஒரு புது யுகம் தொடங்கியது; புதிய இறையரசு உருவானது. இந்த அன்பு யுகத்தில் வாழும் நாம் யோவானைவிடப் பேறு பெற்றவர்களே. இதை நாம் உணர்கிறோமா? உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோமா?

விண்ணரசில் மிகச் சிறியவர். அவரினும் பெரியவர்.
 
 
மறையுரைச்சிந்தனை  -அருள்பணி மாணிக்கம் , திருச்சி
 

  
மீட்பரின் பாதையில் சென்றவளே, மேலவன் திருவுளம் வாழ்ந்தவளே
இகமதில் இருப்பவர் எம் துணையே, எங்களின் இனியநல் இறையன்னையே