திறமையை பிறருக்காக பயன்படுத்த
வந்திருக்கின்ற திறமையாளர்களே!
நம்மை நம்பி நம் பெருமான் இயேசு பிரான் ஏராளமான திறமைகளையும்
செல்வத்தையும் கொடுத்துள்ளார். நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட திறமைகளும்,
செல்வங்களும் நம்மை இந்த திருப்பலிக்கு வரவேற்க வந்திருக்கின்றன.
திறமையில்லாத மனிதனே இந்த பூமியில் இல்லை. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்
ஒவ்வொரு விதமான திறமை உள்ளது. திறமைகளை வளர்த்துக் கொள்ள
வேண்டும். பிறருக்காக திறமைகளை பயன்படுத்த வேண்டும். வாய்ப்பு
கிடைக்கவில்லை என்பதை விட வாய்ப்புக்களை உருவாக்கி கொள்பவர்களே
வரலாற்றில் காலடித் தடம் பதிக்கிறார்கள். திறமை, அறிவு அதிகம்
பெற்றிருந்தும் அதைப் பயன்படுத்தாது இருப்பதை விட, குறைவான திறமை,
அறிவு பெற்றிருப்பவர் அதைப் பயன்படுத்தும் போது எல்லையில்லாத
பெருமை உண்டாகும்.
இறந்த காலம் நம்மை பின் தொடர்கிறது. நம்முடைய வாழ்வைப் பதிவு
செய்து கொண்டே வருகிறது. நமது வாழ்க்கைப் பதிவுகள் நம் திறமைகளால்,
நமது உழைப்பினால் மிக அற்புதமாக பதிவு செய்யப்பட்டவையாக இருக்கட்டும்.
அதுவும் பிறருக்காகத் தியாகத்தோடு நம் திறமைகளும், உழைப்பும்
பயன்படுத்தப்பட்டதாய் பதிவு செய்யப் பட்டவையாக இருக்கட்டும்.
கடவுளை நினைத்து செய்யப்படும் நமது சிறு செயல்கள் கூட பெருமை
கொண்டதாக இருக்கும்.
இன்றைய நற்செய்தியில் தாலந்தை மண்ணுக்குள் புதைத்தவன் பிறருக்கும்
தனக்கும் பயனற்று தலைவரின் தண்டனைக்கும் உள்ளாகிறான். அவனிடமிருந்து
உள்ளதும் பறிக்கப்படுகிறது. மற்ற இருவர் இருப்பதைக் கொண்டு முயன்றதால்
இன்னும் பல பெற்று மகிழ்ந்தார்கள். தலைவரின் பாராட்டுக்கும் நம்பிக்கைக்கும்
உரியவர்களாகிறார்கள். இன்னும் அதிகமாய் அவர்களுக்குக்
கூட்டியும் கொடுக்கப்படுகிறது. நமது திறமையை, உழைப்பை பிறருக்காக
பயன்படுத்தும் போது, அருளுக்கு மேல் அருளைப் பெற்றுக்
கொள்வோம். என்பதை இந்த நிகழ்வு விளக்குகிறது. திறமைகளையும்
செல்வத்தையும் கொண்டு உழைத்து நாமும் முன்னேற வேண்டும். பிறரையும்
முன்னேற்ற வேண்டும்.
தியாகத்துடன் பிறருக்காக திறமையைப் பயன்படுத்தி உழைத்து கடவுளின்
அருளுக்கு மேல் அருளைப் பெற்று மகிழ அருள் தரும் திருப்பலி இது.
இந்தத் திருப்பலியில் பக்தியோடு இறையருளைக் கேட்டுப் பெறுவோம்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
1. விழிப்போடு இருப்போரை உருவாக்கிய தேவனே!
ஒளியை சார்ந்தவர்களாக, பகலில் நடப்பவர்களாக, விழிப்போடு;
வாழும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியரை ஆசீர்வதியும்.
நீர் அவர்களுக்கு கொடுத்துள்ள ஆற்றல்களை கொண்டு விழிப்போடு
நடமாடும் இறைமக்கள் சமூகத்தை படைக்கத் துணைபுரிய
வேண்டுமென்று தேவா உம்மை மன்றாடுகிறோம்.
2. எங்கும் அமைதி நிறைந்த உலகைப் படைத்த தேவனே!
நீர் படைத்த அமைதியான உலகு பிரச்சனைகளால் அமைதியிழந்து,
ஆபத்து மிகுந்து, அவலமாக மாறிக் கொண்டிருக்கிறது. நற்பண்பும்
அறிவுத் தெளிவும் மிகுந்த தலைவர்களைக் கொண்டு இந்த
பூமியில் நிலவும் வன் கொடுமைகளை அகற்றி அன்பும், அமைதியும்
நிறைந்த உலகாக மாற்றிடத் துணைபுரிய வேண்டுமென்று தேவா உம்மை
மன்றாடுகிறோம்.
3. உம் மகிழ்ச்சியில் பங்கு கொள்வோரை படைத்த தேவனே!
உம் மகிழ்ச்சியின் பாதையில் தன் பணியால் பாதம் பதிக்கும்
எமது பங்குத் தந்தையின் திறமைமிகு செயல்களால் பங்கு மக்கள்
எல்லோருமே உம் மகிழ்சியில் பங்கு கொள்ளும் பேறு பெறச்
செய்ய ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
4. திறமை வாய்ந்த பெண்களைப் படைத்த தேவனே!
குடும்பங்கள் சிறப்பாக அமைய பெண்களின் பங்களிப்பு அதிகம்
தேவை. பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கணவன் விரும்பும்
நல்லதைச் செய்து குடும்பத்தை செழிப்பாக்கவும், பிள்ளைகளை
நலமோடு வளர்த்;து தேசத்தைச் செழிப்பாக்கவும் துணைபுரிய ஆண்டவரே
உம்மை மன்றாடுகிறோம்.
5. பொறுப்புடன் நடந்து கொள்வோரை உருவாக்கிய உத்தமனே!
இங்கே கூடியிருப்போரின் திறமைகளை அதிகரிக்கச் செய்து,
செய்யும் சிறு சிறு செயல்களில் தங்கள் பொறுப்புணர்வையும்,
அக்கறையையும் மிகுதியாக்கி உம்மால் நம்பிக்கைக்கு உரிய நல்ல
ஊழியன் என அழைக்க பெற்றவர்களாக வாழச் செய்ய துணைபுரிய ஆண்டவரே
உம்மை மன்றாடுகிறோம்.
6. ஒளியின் மக்களை உண்டாக்கிய தேவனே!
இன்று மன சஞ்சலத்தோடன் உம்மை நோக்கி வேண்டிக்
கொண்டிருப்போரை சுற்றி இருக்கும் இருளை அகற்றும். நாங்கள்
அனைவரும் ஒளியின் பிள்ளைகளாக மாறவும், எங்கள் அருகில் இருப்போரையும்
ஒளிரச் செய்யவும் அருள் தர ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
பிரியமானவர்களே! இன்று பொதுக்காலம் 33ம் ஞாயிறு
வழிபாட்டை சிறப்பிக்க வந்துள்ள உங்கள் அனைவருக்கும் இயேசுவின்
இனிய நாமத்தில் அன்பான வணக்கங்கள்.
இன்றைய நற்செய்தியில், நம் இறைமகன் இயேசு கிறிஸ்து,
"நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்" என்றுரைத்த
இறைவார்த்தை இன்று நம்மை சிந்திக்க அழைக்கின்றது.
கிறிஸ்து மிகத் தெளிவாகவே நம் மனநிலையை அறிந்திருப்பதால்
அன்றே இந்த வார்த்தையை நமக்காக கொடுத்துச்
சென்றிருக்கின்றார். நமக்காக மண்ணகத்தில் மனுவுருவெடுத்து,
மாபெரும் இறையன்புப் பணிகளாற்றி, இறையாட்சியை மலரச்
செய்து, மாந்தர்கள் ஒவ்வொருவரும் மீட்பு பெற
வேண்டுமென்பதற்காக, தன் உயிரையே பலியாகத் தந்தவரை, "
இது என் உடல், இது என் இரத்தம், இதை என் நினைவாகச்
செய்யுங்கள்" என்று தம்மை நற்கருணை வடிவில் நமக்காக என்றும்
காத்திருப்பவரை இன்று நாம் பலரின் தவறான போதனைகளால்
மறந்து, அவர்களின் ஏமாற்றுப் போதனைகளில் நம் விசுவாசத்தை
விட்டு விலகியவர்களாக பல்வேறு சபைகளை நாடிச் சென்று
கொண்டிருக்கின்றோம். அப்படி செல்வதற்கு சில வேண்டாத
விவாதங்களை, கருத்துக்களைச் சொல்லி நம்மையே நாம் ஏமாற்றிக்
கொண்டிருக்கின்றோம். " கிறிஸ்துவின் பொருட்டு அருள்
கூர்ந்து உங்களை அழைத்த அவரை விட்டுவிட்டு இவ்வளவு குறகிய
காலத்தில் வேறு ஒரு நற்செய்தியை ஏற்றுக் கொண்டு
விட்டீர்களே" என்றும், மேலும்," நீங்கள் ஏற்றுக் கொண்ட
நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை யாராவது அறிவித்தால்
அவர்கள் சபிக்கப்படுக" என புனித பவுல் கலாத்தியர்
திருமுகத்தில் தெளிவாகக் கூறுகின்றார்.
இரண்டாவதாக, "என் பொருட்டு உங்களை அரசரிடமும், ஆளநரிடமும்
இழுத்துச் செல்வார்கள், சிறையில் அடைப்பார்கள், இவை
எனக்குச் சான்று பகர உங்களுக்கு வாய்ப்பளிக்கும்" என்ற
இறைவார்ததை தரும் அழைப்பு, நம் வாழ்க்கை
கிறிஸ்துவுக்கு சான்று பகரக்கூடிய விதத்தில் அமைய
வேண்டும் என்பதுவே. "வாழ்வது நானல்ல, என்னில்
கிறிஸ்துவே வாழ்கின்றார்" என பவுலின் இறைவார்தையை நம்
வாழ்வாக்கிட வேண்டும். அத்தகைய ஒரு ஒப்பற்ற மனநிலை, நம்மையே
முழுமையாக சரணாகதியாக்குகின்ற மனநிலையுள்ளவர்களாக, அவருக்காக
எதையும் இழக்கின்றவர்களாக, அவரன்பு வழியின் அடிச்சுவட்டிலே
நம் பார்வையை பதிய வைத்து, அவனியெங்கும் அவர் நாமம் ஓங்கிடச்
செய்து, அவருக்கு சான்று பகரும் வாழ்க்கை வாழந்திடுவோமேயானால்,
நாம் வாழ்வின் நாளை எதிர்நோக்கி இருப்போம், இல்லையேல்
அந்த நாள் அழிவு நாளாகத்தான் இருக்கும். மனஉறுதியுடன்
இருந்து நம் வாழ்வை காத்துக் கொள்ள இறையாசீர் வேண்டி
இத்திருப்பலியில் இணைந்திடுவோம்.
மன்றாட்டுகள்:
வார்த்தையே வாழ்வான இறைவா,
உம் வார்த்தையை ஏற்று, நம்பிக்கையுடன் வாழ்ந்த ஆபிரகாமைப்
போல, உம் வார்த்தையை ஏற்று, தன்னையே அர்ப்பணித்த அன்னை
மரியைப்போல, நாஙகளும் இறைவனின் வார்த்தையை வாசிப்பதோடு
இருந்துபோகாது, அதை வாழ்வாக்கி, முப்பது, அறுபது, நூறு
மடங்கு பலன் தருபவர்களாக, இறைவனுக்கு உகந்தவர்களாக, இறைநம்பிக்கையிலே
தளர்ந்திடாது, பாறைமீது கட்டப்பட்ட வீட்டைப்போல விசுவாசத்தில்
உறுதியுடனிருந்து, இறையன்பை எங்கள் வாழ்வில் பிரதிபலிப்பவர்களாக
வாழ்ந்திட, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
வழிகாட்டும் தெய்வமே இறைவா,
எம் நாட்டை ஆளும் தலைவர்கள், தன்னலமின்றி, பொதுநல
நோக்குடன், மக்களுக்குத் தேவையான பல நல்ல வளர்ச்சிப்
பணிகளைச் செய்திடவும், உண்மையுடனும், நேர்மையுடனும்,
நீதியுடனும் செயல்படவும், லஞ்ச, ஊழலற்ற நிர்வாகத்தினை
பின்பற்றவும், வறுமை, ஏழ்மையில் துயருறும் மக்களுக்குத்
தேவையான வாழ்வாதாரங்களைச் செய்து, நல்ல வேலைவாய்ப்புக்களை
உருவாக்கித் தந்து, மக்கள் வாழ்வை வளம் பெறச் செய்திடக்கூடிய
பரந்த, தன்னலமற்ற, உள்ளத்தைப் ;பெற்றிட, இறைவா, உம்மை
மன்றாடுகின்றோம்.
அமைதியின் தெய்வமே இறைவா,
சாதி, மத, இனவெறியால் இன்று பல வன்முறைகள், தீவிரவாதங்கள்;
மேலோங்கி, குண்டுவெடிப்புக்களும், கொலை, கொள்ளைகளும்
மக்களின் வாழ்வில் நிம்மதியற்ற நிலையை உருவாக்கி வருகின்ற
இந்த உலகில், தவறான அத்தகைய நிலைகள் மாறிடவும், மறந்து,
மறைந்து, மரத்துப்போன, மனிதநேய பண்புகள் இம் மண்ணில்
மலர்ந்திடவும், உமது அமைதி இவ்வுலகில் எங்கும்
நிறைந்திடவும் உமது அருளால் காத்திடவும் வேண்டி, இறைவா
உம்மை மன்றாடுகின்றோம்.
அற்புதங்களின் நாயகனே இறைவா,
தீராத, பல்வேறு உடல், உள்ள நோய்களினால் துன்புறும்
நோயாளிகள் ஒவ்வொருவரையும் உம்பாதம் ஒப்புக்
கொடுக்கின்றோம். அவர்கள் வாழ்வில் செய்த பாவங்களை உம்
பேரன்பினால், இரக்கத்தினால்; மன்னித்து, அவர்களின்
நோய்களைக் குணமாக்கி, பரிபூரண சுகம் தந்து, உம் அற்புதங்களையும்,
அதிசயங்களையும் உணர்ந்து, இறைவிசுவாசத்தில் உறுதியுள்ளவர்களாக,
உமக்கு தம் வாழ்வில் என்றும் நன்றியறிந்த மக்களாக, உமக்கு
நல்சாட்சிகளாக வாழ்ந்திடக்கூடிய, நல்இதயத்தை தந்தருள
வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
"இதோ! நான் புதியன செய்கிறேன்" என்ற இறைவா,
எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், உமக்குகந்தவர்களாக
வாழ முடிவெடுத்து, செயற்பட முற்படும்போதெல்லாம், ஊனுடலின்
பலவீனம், வலுவின்மையினால், மீண்டும், மீண்டுமாக பாவமென்னும்
சேற்றில் வீழ்ந்து, உமதன்பை, இரக்கத்தை, மன்னிப்பை எங்களுக்குச்
சாததகமாக மாற்றி வாழும் நிலையகற்றி, எங்கள் வலுவின்மையிலே
உமது வல்லமையை சிறந்தோங்கச் செய்து, தூய ஆவியின் வல்;லமையில்,
வழிகாட்டுதலில், பாவ வாழ்வை முற்றிலுமாக வேரோடு களைந்தெறிந்து,
புதுப்படைப்பாக, நாங்கள் ஒளியின் பாதையில் என்றும்
பயணப்படக்கூடிய, தூயதோர் உள்ளத்தை, தந்தருள
வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
நீதி மொழிகள் 31; 10-13,19-20,30-31
1 தெசலோனிக்கர் 5; 1-6
மத்தேயு;25; 14-30
ஆற்றங்கரை ஓரமாக வந்துகொண்டிருந்த வழிப்போக்கன் ஒருவனுக்கு
வைரக்கல் ஒன்று கண்ணில் பட்டது.. அது வைரம் என்றறியாமல்,
விலை போகுமா என்ற
சந்தேகத்துடன் கடைத்தெருவுக்கு எடுத்து வந்தான்..அவன்
கையில் வைரம் இருப்பதைப் பார்த்த வியாபாரி ஒருவன், இருபது
ரூபாய்க்கு தன்னிடம் அதை விற்குமாறு கேட்டான்..
ஆனால் வழிபோக்கனோ பேரம் பேசித்தான் பார்ப்போமே என்ற எண்ணத்துடன்
25 ரூபாய் கேட்டான்..ஐந்து ரூபாய் அதிகம் கொடுக்க
விரும்பாத அந்த வியாபாரியும் 20 ரூபாய்க்கு பேரம்
பேசினான்.. இதைக் கவனித்த மற்றொரு வியாபாரி 25 ரூபாய்
கொடுத்து அந்த வைரைத்தை வாங்கிக்கொண்டு சென்றான்.. ஆத்திரமடைந்த
வியாபாரி, அந்த வழிப்போக்கனை பார்த்து, 'அட முட்டாளே! அதன்
மதிப்பு பல ஆயிரம் பெறும்... அறிவில்லாமல்
விற்றுவிட்டாயே!' என்று திட்டினான்.. அதற்கு அவன், "அந்தக்
கல்லுக்கு என்னுடைய மதிப்பு அவ்வளவுதான்.. ஆனால் அது வைரம்,
அதன் மதிப்பு தெரிந்தும் அதைத் தவறவிட்ட நீ தான் மிகப்பெரிய
முட்டாள்" என்றான்..
சிலர் இப்படித்தான் உண்மையான மதிப்பு தெரிந்தும், கிடைத்ததை
விட்டுவிட்டுத் தவிக்கிறார்கள். இன்று நம்முடைய தாலந்து
உவமையில் நாம் காணும் மூன்றாம் பணியாளர் போல நாமும் பல நேரங்களில்
நமக்கு கிடைக்கும் ஆள், பொருள், வேலையின் மதிப்பு தெரியாமல்
அதனை தவற விடுகிறோம். பொதுக்காலத்தின் 33ம் ஞாயிற்றில் இருக்கும்
நம்மை விண்ணரசின் வியத்தகு உரிமைக்கு அழைக்கின்றார் இறைவன்.
தாலந்து உவமை மூலமாக நமது மதிப்பையும் பொறுப்பையும் உணர்ந்து
கொள்ள அழைக்கின்றார். இன்றைய தலைவரின் குணநலன்கள் மற்றும்
பணியாளரின் செயல்பாடுகள் நம்முடைய செயல்பாடுகளை சரிசெய்ய
நமக்கு உதவுகின்றன.
தலைவரின் குணநலன்:
பகிரும் குணம்;
தன்னுடைய சொத்துக்களை தானே வைத்திருக்காமல் தனக்கு கீழே இருக்கும்
பணியாளர்களிடம் ஒப்படைக்கின்றார்.
பணியாளர்களின் திறமையை அறிபவர்:
அவரிடம் ஏராளமான பணியாளர்கள் இருந்த போதிலும் அதில் மூவரை
தேர்ந்தெடுத்து அவர்களுக்குக் கொடுக்கின்றார். அதையும் மூவருக்கும்
சமமாகப் பிரிக்கவில்லை. மாறாக அவர்களின் திறம் அறிந்து
பார்த்து கொடுக்கின்றார்.
தனது இயல்பை வெளிப்படுத்துபவர்:
இவர் எவ்வளவு அன்பானவர் அக்கறையானவர் என்பதை முதல் இரு பணியாளர்களின்
வார்த்தையிலும், எவ்வளவு கண்டிப்பானவர் என்பதை மூன்றாவது
பணியாளரின் வார்த்தையிலும் அறிந்து கொள்ளலாம்.
பிறர் வளர்ச்சியில் அக்கறை கொள்பவர்;
தன்னுடைய பணியாளர்களில் இருவர் தான் கொடுத்த தாலந்தை
வைத்து இரு மடங்கு தாலந்து சம்பாதித்துள்ளனர் என்பதை அறிந்து
மகிழ்கின்றார். அவர்களின் மகிழ்வை தனது மகிழ்வாகப்
பார்க்கின்றார். உங்கள் மகிழ்வில் நான் பங்கு கொள்கின்றேன்
என்று சொல்லவில்லை. மாறாக உன் தலைவனாகிய என் மகிழ்வில் வந்து
பங்குகொள் என்கின்றார்.
இவன் என் பணியாளன் நாளுக்கு நாள் வளர்ந்து என்னைவிட பெரிய
ஆளாக மாறிவிடுவானோ என்று அஞ்சவில்லை. அவன் இன்னும் அதிகமாக
முன்னேற அழைக்கின்றார்.
கண்டிப்பானவர்:
ஒருவர் எவ்வளவு அதிகமாக நகைச்சுவை உணர்வு உள்ளவராக இருக்கின்றாரோ
அதே அளவுக்கு கோப உணர்வு உள்ளவராகவும் இருப்பார் என்கிறது
உளவியல் ஆய்வு. நம் தலைவர் உண்மையான பணியாளரை பாராட்டும்
குணம் கொண்டவர். அதே வேளையில் தவறு செய்த பணியாளரை தண்டிக்கும்
குணமும் உடையவர். ஒரே குண நலனோடு எல்லா இடத்திலும் எல்லா
சூழலிலும் ஒருவரால் எல்லா நேரமும் இருக்க முடியாது.
பாராட்டி பரிசளிக்கும் குணமுடையவர்:
முதல் இரண்டு பணியாளர்களின் பணியையும் செயலையும் பார்த்து
அவர்களை மனமாரப் பாராட்டுகின்றார். அவர்களின் செயலால் மகிழ்ந்து
சிறியவற்றில் மிக நம்பிக்கையோடு செயல்பட்டீர்கள் மிகப்
பெரியவற்றில் உங்களை பொறுப்பாளராக்குவேன் என்று அவர்களுக்கு
பதவி உயர்வு கொடுக்கின்றார்.
தாலந்து உவமையில் வரும் தலைவர் நம் ஆண்டவர் இயேசு. அவர்
கொடுக்கும் தாலந்து விண்ணரசிற்கு செல்ல தரும் கொடை,அனுமதி
சீட்டு. அனைவருக்கும் அது சமமாக கிடைப்பதில்லை. அவரவர் நம்பிக்கை,
குணநலன் பொறுத்து கொடுக்கப்படுகிறது. நம் தலைவர் அன்பானவர்
அதே சமயத்தில் கண்டிப்பானவரும் கூட. அவர் நம்மிடம்
கொடுத்திருக்கக்கூடிய கொடை என்னும் குடும்பம் உறவுகள் தகுதி
திறமை அனைத்தையும் மிகச்சிறப்பாக நாம் கையாள வேண்டும். அவர்
கொடுத்ததை இரட்டிப்பாக்கி விண்ணரசு என்னும் மிகப் பெரிய பரிசினை
நாம் பெற வேண்டும். நமக்கு கொடுக்கப்பட்ட கொடைகளின் உண்மையான
மதிப்பினை அவைகள் நம்முடன் இருக்கும் போதே உணர வேண்டும்.
சிறு குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களுக்காக அதிக அடம்பிடித்து
அழுது அதை வாங்குவார்கள். ஆனால் கொஞ்ச நாளிலேயே அதை மறந்து
விடுவார்கள். அதைப்பற்றிய நினைப்பே அவர்களுக்கு வருவதில்லை.
வீட்டில் எங்காவது ஒரு மூலையில் அது கிடக்கும். ஆனால் அதுவே
பிறர் அதனை எடுத்து விளையாட நினைத்தாலோ அல்லது வேறு ஒருவர்
கைக்கு சென்றாலோ அது தன்னுடையது என்று அழுது திரும்பப்
பெறும். ஒருவேளை அது அவர்களுக்கு அது திரும்ப கிடைக்கப்பெறலாம்.
ஆனால் நம்மிடம் கொடுக்கப்பட்ட கொடைகள் என்னும் தாலந்திற்கு
நாம் உரிய நேரத்தில் கணக்கு கொடுக்க வேண்டியிருக்கும். நம்
கையை விட்டு சென்றாலோ பிறர் கைக்கு சென்றாலோ நம்மால் ஒன்றும்
செய்ய முடியாது.
மூன்றாம் பணியாளர் போல அதன் மதிப்பு தெரியாமல் மறைத்து
வைத்தாலோ, பயன்படுத்தாமல் இருந்தாலோ பாதிப்பு என்னவோ நமக்கு
தான். பயத்தினால் அவர் அந்த தாலந்தை மண்ணுக்குள் மறைத்து
வைத்ததாக கூறுகின்றார். பல நேரங்களில் நம் பயங்கள் தான் நம்மை
மண்ணுக்குள் அழுத்துகின்றன.
விண்ணகத்தந்தை பயந்து தன் மகனை இவ்வுலகிற்கு அனுப்பாமல் இருந்த்திருந்தால்
நமக்கு இயேசு என்னும் மீட்பர் கிடைத்திருக்க மாட்டார்.
மரியாள் பயந்து மறுத்திருந்தால் மனுமகனாய் பிறந்திருக்க
மாட்டார்.
சூசையப்பர் பயந்து ஓடி இருந்தால் தச்சன் மகன் நமக்கு
கிடைத்திருக்க மாட்டார்.
சீடர்கள் பயந்து மறைந்தே இருந்திருந்தால் கிறிஸ்தவம் இன்று
உலகம் முழுதும் பரவி இருக்காது இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
அனைவரிடம் பயம் இருந்தது. ஆனால் அந்த பயம் அவர்களை நல்வழிக்கு
இட்டு சென்றது. ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு
கொடுக்கப்பட்ட கொடைகளின் மதிப்பை நன்கு அறிந்து இருந்தனர்.
அதனால் அவர்கள் பயத்தை மண்ணுக்குள் புதைத்து துணிவை புதுத்தளிராகப்
பெற்றனர்.
இன்றைய நாளில் இறைவன் நம்மையும், பயத்தை புதைத்து துணிச்சலோடு
நம் கொடைகளை கையாள அழைக்கின்றார். நம்மோடு இருக்கும் ஒவ்வொரு
பொருளும் உறவும் தகுதியும் திறமையும் இறைவன் நமக்கு
கொடுத்த கொடை . இக்கொடைகளை நாம் நன்முறையில் பேணிக்காத்து,
விண்ணரசிற்குள் நுழைய நம்மை நாம் தயார்ப்படுத்துவோம்.
நமது தாலந்துகளின் உண்மையான மதிப்பை நாம் நன்கு அறிந்து செயல்படுவோம்.
இறைவன் நம்மோடு இருந்து அவர் தம் அருளாலும் ஆசீராலும் நம்மை
நிரப்பி வழிநடத்துவாராக ஆமென்.
மறையுரைச்சிந்தனை -
அருட்சகோதரி: செல்வராணி O.S.M.
பொதுக்காலம் 33ம் ஞாயிறு.
நோக்கம் அறிந்து செயல்படு
ஓர் அரசன் ஒரு முறை தம் நாட்டு மக்களைத் தனிப்பட்ட
முறையில் சந்தித்து , அவர்களுடைய கவலைகளையும் , பிரச்சனைகளையும்
நீக்க வேண்டுமென ஆசைப்பட்டான். இதற்காக, தாம் பொது இடமொன்றில்
அமரப்போவதாகவும் கூறினான். இச்செய்தி நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
அரசன் ஒரு மரத்தடியை இதற்காகத் தேர்ந்தெடுத்தான். அங்கு
அவரை யார் வேண்டுமானாலும் சந்தித்து தங்களுடைய குறைகளைச்
சொல்லலாம் என்று அறிவிக்கப்பட்டது. அரசன் அமர்ந்திருந்த
இடத்தைச் சுற்றிலும் நிறைய குடில்கள் அமைத்து , அவற்றில்
உண்பண்டங்களில் துவங்கி நகைகள், அலங்காரப் பொருட்கள் என அனைத்தும்
இருந்தன. தோட்டக்காரன் வேடத்தில் அரசன் செடிகளுக்குத் தண்ணீர்
ஊற்றிக் கொண்டே அக்குடிலைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஊர்
மக்கள் அனைவரும் அரசனைக் காணவந்தனர். அங்கிருந்த பொருட்களையும்,
இலவசம் என்ற பலகையையும் கண்டனர். எனவே அரசனைக் காண
வேண்டும் என்ற நோக்கத்தை மறந்து, தேவையான பொருட்களைப்
பெற்ற மகிழ்வில் இல்லம் திரும்பினர். யாரும் அரசனைக் காண
வரவேயில்லை. அனைவரும் தங்களுக்குத் தேவையான பொருட்களை அவர்களே
தேர்நதெடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களுள் ஒரு வாலிபன் மட்டும் தோட்டக்காரன் வேடத்தில்
இருந்த அரசனிடம் வந்தான். அரசன் அவனைப் பார்த்து, " இங்கு
இருக்கும் இலவசப் பொருட்களில் நீ எதையும் எடுத்துக் கொள்ளவில்லையா?"
என்று கேட்டான். அதற்கு அவன் , " என்னுடைய நோக்கம் அரசனைக்
காண்பது! பொருட்களை அல்ல. அரசன் எங்கே " என்றான். அரசன்
அவன் பேச்சையும் செயலையும் கண்டு வியந்து, எனது நோக்கமும்
என்னை நாடுபவர்கள் எத்தனை பேர்? என் பொருட்களின் மேல் நாட்டம்
கொள்பவர்கள் எத்தனை பேர்? என்று அறிந்து கொள்வது தான். ஏனெனில்
நான் உங்கள் அரசன் என்றார். நான் வந்த நோக்கத்தை அடைந்துவிட்டேன்.
நீதான் என்னுடைய அரசவையின் மூத்த மந்திரி. கொண்ட
கொள்கையிலும் நோக்கத்திலும் உறுதியாக இருப்பவனே எனக்கு
தேவை.-" என்று சொல்லி அவனை கட்டித் தழுவினான். பிறகு அரசன்
அவனை அரசவைக்கே அழைத்து சென்றுவிட்டார்.
ஆம் அன்புக்குரியவர்களே ! நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நோக்கத்துடனே
இம்மண்ணில் அவதரிக்கிறோம். நாம் வளர வளர ,நமது பிறப்பின்
நோக்கம் வெளிப்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. யார் அதனைக்
கண்டு கொள்கிறார்களோ, யார் தனது பிறப்பின் நோக்கத்தை உணர்கிறார்களோ
அவர்களே இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார்கள். நம்மில்
ஒரு சிலர் பிறப்பின் நோக்கத்தை அடைவதை விடுத்து, கிடைப்பதை
செய்து அதை தங்களது வாழ்வின் நோக்கமாக மாற்றிக்
கொள்கின்றார்கள். அவர்களே இறைவனின் மகிழ்ச்சியில் பங்கு
கொள்கிறார்கள். இன்றைய நற்செய்தியில் இயேசு , தாலந்து உவமை
வாயிலாக விண்ணரசின் பேறுண்மைகளை எடுத்துரைக்கிறார்.
நெடும்பயணம் மேற்கொண்ட தலைவர் ஒருவர், தம்
பணியாளர்களை அழைத்து தம் உடைமைகளை அவர்களிடம் ஒப்படைத்தார்.
பணியாளர்களின் திறமைக்கேற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும்,
வேறு ஒருவருக்கு இரண்டும், மற்றுமொருவருக்கு ஒன்றுமாகக்
கொடுத்தார். ஒவ்வொருவரும் தம் எண்ணத்தின் படியே செயல்பட்டனர்.
எந்த நோக்கத்திற்காக தனக்கு தாலந்து கொடுக்கப்பட்டது என்பதை
உணர்ந்த இருவரும் அதனை இரட்டிப்பாக்கினர். நோக்கத்தை உணராத
ஒற்றைத் தாலந்தைப் பெற்ற பணியாளன் அதனை நிலத்தில் புதைத்து
வைத்தான். தனது நெடும்பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய தலைவன்,
பணியாளர்களிடம் கணக்குக் கேட்கிறார். ஐந்து தாலந்து பெற்றவனும்
, இரண்டு தாலந்து பெற்றவனும் , மேலும் தாங்கள் அதிகமாக சம்பாதித்ததன்
விவரத்தை மகிழ்ச்சியாக தலைவனிடம் பகிர்ந்து கொண்டனர். தலைவன்
அவர்களைப் பாராட்டி இன்னும் சில பொறுப்புக்களை ஒப்படைக்கிறார்.
தனது மகிழ்ச்சியில் பங்கு கொள்ளவும் அவர்களை அழைக்கிறார்.
ஆனால் ஒரு தாலந்து பெற்றவன் ,தான் நிலத்தில் புதைத்த விபரத்தை
தலைவனிடம் எடுத்துரைக்கிறார். அதனைக் கேட்டத் தலைவன் அந்தப்
பணியாளரை கடிந்து கொள்கிறார். வேலையை விட்டு நீக்குகிறார்.
இருளில் தள்ளச் சொல்லி கட்டளையிடுகிறார். ஐந்து தாலந்தைப்
பெற்றவரும் , இரண்டு தாலந்தைப் பெற்றவரும் தங்களுக்கு மிகப்பெரிய
வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதை அறிந்து, முழுமூச்சாக உழைக்கின்றனர்.
இதுவரையில் அவர்கள் இவ்வளவு பெரிய தொகையை பார்த்திருக்கவே
மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் ஒரு தலைவனுக்கு அடியில் பணி
புரியும் பணியாளர்கள். அதனால் அத்தொகையை மிகப்பெரிய பொக்கிஷமாக
கருதினார்கள். இந்த தாலந்தை வைத்து என்னவெல்லாம் செய்யலாம்
என்று யோசிக்கின்றார்கள். அதற்கான பாதையை உருவாக்குகிறார்கள்.
அல்லும் பகலும் உழைத்து ,தலைவன் கொடுத்த தாலந்தைவிட இன்னும்
ஒரு மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறார்கள். அதனால் தங்களின்
நோக்கத்தை நிறைவேற்றி விட்டதாக பெரு மகிழ்ச்சி அடைகின்றனர்.
ஆனால் ஒரு தாலந்தைப் பெற்றவன் தலைவன் மீது கொண்ட பயத்தின்
காரணமாக , அதன் மதிப்பை உணராது புதைத்து வைக்கின்றான். தலைவன்
கொடுத்த தாலந்து, தனது வாழ்வை மேம்படுத்தும் என்பதை மறந்து,
அதனை பத்திரப்படுத்துவதே தனது நோக்கமாகக் கொண்டதால் தான்
அரசனுடைய மகிழ்ச்சியில் பங்கு கொள்ள முடியவில்லை.
இறைவன் கொடுக்கும் திறமைகளை சரியாகப்
பயன்படுத்துவோருக்கு , இறைவன் மென்மேலும் திறமைகளை வழங்குகிறார்.
இறைவன் கொடுத்த திறமைகளை சரியாகப் பயன்படுத்தாதவர்களிடம்
அது மங்கி விடுகிறது. இறைவன் நமக்கு எத்தனை தாலந்துகளைக்
கொடுத்திருக்கிறார்? அவற்றில் நாம் எதனைப் பயன்படுத்துகிறோம்
? இன்னும் பயன்படுத்தாமல் இருப்பது எது? இத்தகைய கேள்விகளை
நமக்குள் எழுப்பி, அதற்கான விடைகளை கண்டறிந்து செயல் படவேண்டும்
என்ற நோக்கத்துடனே இன்றைய நற்செய்தி வாசகம் அமைந்திருக்கிறது.
நமக்கு கொடுக்கப்பட்ட திறமைகளை மண்ணில் புதைத்துவிடாமல்,
அதனைக் கொண்டு விண்ணரசின் செல்வங்களாகிய அன்பு , பகிர்வு,
கருணை, மன்னிப்பு போன்ற செல்வங்களை சம்பாதிக்க வேண்டும்.
இதற்காகவே இறைவன் நம்மை அழைத்திருக்கிறார். இறைவன் நம்மை
எந்த நோக்கத்திற்காக அழைத்திருக்கிறாரோ அந்த நோக்கத்தில்
தெளிவும் நற்சிந்தனையும் கொண்டு செயல்படும் போது நாமும்
அவரின் மகிழ்ச்சியில் பங்கு கொள்கின்றோம் . நோக்கமறிந்து
செயல்படுவோம் . ஊக்கமுடன் பணிபுரிவோம். இறைவனின் ஆசீர் என்றும்
நம்மிலும் நம்மைச்சுற்றி இருப்பவர்களிலும் நிலைத்து இருப்பதாக
ஆமென்.
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி
வாழ்வின் மறுபக்கம்
'நாம் அனேகமாய்ப்
பார்ப்பதில்லை பார்த்ததில்லை
ஒரு சருகு இலையின் பின்புறத்தை
ஒரு மரப்பாச்சியின் பின்புறத்தை
ஒரு மலையின் பின்புறத்தை
ஒரு சூரியனின் பின்புறத்தை
மற்றும்
நம்முடையதை'
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும்
பள்ளத்தாக்கின் அந்தப் பக்கத்திலிருந்து எருசலேம்
ஆலயத்தைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களையும்
அவர்களோடு சேர்ந்து கோவிலையும் வேடிக்கை
பார்த்துக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் சத்தமாகச்
சொல்கிறார்: 'என்னே கோவிலின் அழகு! என்னே கவின்மிகு
கற்கள்! என்னே அழகு!' இயேசுவின் காதுகளில் இவ்வார்த்தைகள்
விழ, அவர் உடனே திரும்பிப் பார்த்து, 'இவற்றையெல்லாம்
பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும். அப்போது கற்கள்
ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்'
என்கிறார்.
நம்மிடம் ஒரு நாணயம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த
நாணயத்தைக் கஷ்டப்பட்டு இரண்டாக உடைத்துவிடுகிறோம். அந்த
நாணயத்தை எடுத்துக்கொண்டு கடைக்குச் செல்கின்றோம்.
நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் அருகருகே வைத்து
பண்டமாற்றம் செய்ய முயல்கின்றோம். கடைக்காரர் நாணயத்தைச்
செல்லாக்காசு என்கிறார். நாணயம் இரண்டு பக்கங்களாகப்
பிரிக்கப்பட்டாலும் செல்கின்ற நாணயம் தங்க நாணயத்தைத் தவிர
வேறு நாணயங்கள் இல்லை.
இன்றைய இறைவாக்கு வழிபாடு வாழ்வின் மறுபக்கத்தை நாம்
கண்டுணர அழைக்கின்றது.
திருவழிபாட்டு ஆண்டின் ஏறக்குறைய இறுதிப்பகுதிக்கு
வந்துவிட்டோம். இன்றைய வாசகங்கள் வாழ்வின் முடிவைப்
பற்றிப் பேசுகின்றன. வாழ்விற்கு முடிவு கிடையாது.
மறுபக்கம்தான் உண்டு.
வாழ்வின் மறுபக்கத்தை எப்படிக் காண்பது?
இன்றைய முதல் வாசகம் (காண். மலா 4:1-2) மலாக்கி
இறைவாக்கினர் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எபிரேய
விவிலியத்தில் இறைவாக்கினர்கள் நூலை நிறைவு செய்பவர்
மலாக்கி. பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பின், புதிய ஆலயம்
கட்டப்பட்டதன் பின்புலத்தில், புதிய ஆலயத்தில் நிலவிய சமய
சடங்குகளைக் கண்டிக்கின்ற மலாக்கி, வரப்போகும் மெசியா
பற்றி முன்னுரைக்கின்றார். அந்த நாளை 'ஆண்டவரின் நாள்' என
அழைக்கின்றார். அந்த நாளில் ஆண்டவர் உலகிற்குத் தண்டனைத்
தீர்ப்பு அளித்து அமைதியையும் ஒருங்கியக்கத்தையும்
மீண்டும் சரி செய்வார்.
இன்றைய முதல் வாசகம் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல்
பகுதியில், கடவுள் ஆணவக்காரரை அழிக்கும் நிகழ்வை
எடுத்துரைக்கிறார் மலாக்கி. நெருப்பு என்ற உருவகத்தைக்
கையாளும் இறைவாக்கினர், ஆணவக்காரர் அனைவரும் அந்த
நெருப்புக்குள் தூக்கி எறியப்படுவர் என்று
எச்சரிக்கின்றார். அவர்கள் வேர்களோடும் கிளைகளோடும்
எரிக்கப்படுபவர். அதாவது, அவர்களில் ஒன்றும் மிஞ்சாது.
உலகத்தின் முகத்திலிருந்து தீமை முற்றிலும் துடைத்து
எடுக்கப்படும். இரண்டாவது பகுதியில், கடவுளின் பெயருக்கு
அஞ்சி நடப்பவர்கள் பெறும் பரிவைப் பற்றிச் சொல்கிறார்
இறைவாக்கினர். 'நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய
இறக்கைகளில் அதாவது கதிர்களில் நலம் தரும் மருந்து
இருக்கும்.' இவரின் இறைவாக்குப் பகுதி மிகவும் எளிதாக
இருக்கிறது. ஒரே நெருப்புதான். அது ஒரு பக்கம்
ஆணவக்காரருக்கு அழிவாக இருக்கிறது. மறு பக்கம்
நீதிமான்களுக்கு நலம் தரும் மருந்தாகவும், நீதியின்
ஆதவனாகவும் இருக்கிறது.
வாழ்வில் எல்லாம் ஒன்றுதான். ஒரு பக்கம் அழிவு என்றால்,
மறு பக்கம் நலம். ஒரு பக்கம் தீமை என்றால், மறு பக்கம்
நன்மை. இரண்டும் அப்படியே இருக்கும். இரண்டையும்
எடுத்துக்கொள்ளும் பக்குவம் நமக்குத் தேவை.
இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 2 தெச 3:7-12)
தெசலோனிக்கருக்கு எழுதப்பட்ட இரண்டாம் திருமுகத்தின் இறுதி
அறிவுரைப்பகுதியாக இருக்கிறது. பவுல் தெசலோனிக்காவில்
நற்செய்தி அறிவிக்கின்றார். அவருடைய நற்செய்தி அறிவிப்பில்
இயேசுவின் இரண்டாம் வருகை பற்றிப் போதிக்கின்றார். அவர்
சென்ற சில மாதங்களில் அங்கே வருகின்ற வேறு சிலர் பவுல்
அறிவித்த நற்செய்திக்குப் பிறழ்வான நற்செய்தி ஒன்றை
அறிவித்து நம்பிக்கையாளர்களின் மனத்தைக் குழப்புகின்றனர்.
இவர்கள் இறுதிநாள் விரைவில் வருகிறது என்று அறிவித்ததோடு,
'இனி யாரும் வேலை செய்யத் தேவையில்லை. இருப்பதை
அமர்ந்துகொண்டு உண்போம். அல்லது இருப்பவர்களிடம் வாங்கி
உண்போம்' என்று சொல்லி எல்லாரையும் ஊக்குவிக்கின்றனர். ஆக,
எங்கும் சோம்பல் பெருகுகிறது. ஒருவர் மற்றவரை ஏமாற்றி
அல்லது பயமுறுத்தி உண்கின்றனர். 'எல்லாமே அழிந்துவிடும்.
இனி எதற்கு வேலை செய்ய வேண்டும்?' என்று
ஓய்ந்திருக்கின்றனர்.
இதை அறிகின்ற பவுல் இவர்களின் இச்செயலைக் கண்டித்துக்
கடிதம் எழுதுகின்றார். முதலில், தன்னுடைய எடுத்துக்காட்டான
வாழ்வை அவர்களுக்கு எடுத்தியம்புகின்றார்: 'உங்களிடையே
இருந்தபோது நாங்கள் சோம்பித்திரியவில்லை. எவரிடமும்
இலவசமாக உணவருந்தவில்லை. மாறாக, உங்களுள் எவருக்கும்
சுமையாய் இராதபடி, இராப்பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம்.
எங்களுக்கு வேண்டியதைப் பெற உரிமை இல்லை என்பதால் அல்ல.
மாறாக, எங்களைப் போல நடப்பதற்காக உங்களுக்கு முன்மாதிரி
காட்டினோம்.' ஆக, பவுல், தனக்கு உணவை இலவசமாகப் பெற உரிமை
இருந்தும் அந்த உரிமையைப் பயன்படுத்தவில்லை என்கிறார்.
இரண்டாவதாக, 'உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது' என்று
தான் ஏற்கெனவே கொடுத்திருந்த கட்டளையை அவர்களுக்கு
நினைவூட்டுகிறார். இதன் வழியாக மற்றவர்களின் உழைப்பு
சுரண்டப்படுவதையும், மற்றவர்கள் ஏமாற்றப்படுவதையும்
தடுக்கின்றார் பவுல். ஆண்டவரின் இரண்டாம் வருகைக்காக
காத்திருக்கின்ற வேளையில் ஒழுக்கமான, நேர்மையான வாழ்வை
வாழவும் வேண்டும் என்றும், கடின உழைப்புடன் வேலை செய்ய
வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றார் பவுல்.
ஆக, தங்கள் வாழ்வின் ஒரு பக்கத்தை அதாவது, உலக அழிவை
மட்டுமே கண்டு, வாழ்வின் மறுபக்கத்தை உழைப்பை, அன்றாட
வாழ்வின் இன்பத்தை மறந்து போன தெசலோனிக்க நகர மக்களை
வாழ்வின் மறுபக்கத்தையும் காண அழைக்கின்றார் பவுல்.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 21:5-19) எருசலேம்
அழிவைப் பற்றி லூக்கா இரண்டாவது முறை பேசும் பகுதியாக
இருக்கிறது (காண். 19:43-44). எருசலேம் ஆலயத்தின் இறுதி
அழிவு கி.பி. 70-இல் நடந்தது. இது யூதர்களுக்கும்
கிறிஸ்தவர்களுக்கும் மிகப்பெரிய எதிர்மறை தாக்கத்தை
ஏற்படுத்தியது. இந்தப் பேரழிவு இயேசுவை
ஏற்றுக்கொள்ளாததால்தான் என்று முந்தைய பகுதியில் மக்களை
எச்சரிக்கிறார் லூக்கா. ஆனால், இன்றைய நற்செய்தி வாசகப்
பகுதியில், வரப்போகும் தீங்கை முன்னுரைக்கின்ற இயேசு, அதை
எதிர்கொள்ளத் தம் சீடர்களைத் தயாரிக்கின்றார். போலி
மெசியாக்கள் தோன்றுவார்கள் என்றும், போர்களும்,
எதிர்ப்புகளும், கொந்தளிப்புக்களும், கொள்ளை நோய்களும்,
பஞ்சமும், துன்புறுத்தல்களும், வருத்தங்களும்,
மறைசாட்சியப் போராட்டங்களும் வரும் என்றும்
எச்சரிக்கின்றார் இயேசு.
இப்படி எச்சரிக்கின்ற இயேசு, 'நானே உங்களுக்கு
நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்' என்றும், 'உங்கள்
தலைமுடி ஒன்றுகூட விழாது' என்றும் நேர்முகமாக நம்பிக்கை
தருகின்றார்.
இதுதான் இயேசு காட்டுகின்ற வாழ்வின் மறுபக்கம். வாழ்வின்
ஒருபக்கம் துன்பம் என்றால், போராட்டம் என்றால், மறுபக்கம்
இன்பம் அல்லது அமைதி உறுதியாக இருக்கும்.
வாழ்வின் மறுபக்கத்தை நாம் கண்டறிய மூன்று தடைகள் உள்ளன:
ஒற்றைமயமாக்கல்
வாழ்க்கை என்ற நாணயத்தை நாம் பல நேரங்களில் வலிந்து
பிரிக்க முயல்கின்றோம். பிரித்து ஒரு பகுதியை
வைத்துக்கொண்டு மற்ற பகுதியைத் தூக்கி எறிய நினைக்கிறோம்.
நன்மை, ஒளி, நாள் என சிலவற்றை உயர்த்தி, தீமை, இருள், இரவு
ஆகியவற்றை அறவே ஒதுக்கிவிடுகின்றோம். ஆனால், இரண்டு
பகுதிகளும் இணைந்தே வாழ்வு நகர்ந்துகொண்டிருக்கும். இதையே
சபை உரையாளர், 'வாழ்க்கை இன்பமாய் இருக்கும்போது
மகிழ்ச்சியோடிரு. துன்பம் வரும்போது நீ நினைவில் கொள்ள
வேண்டியது: 'அடுத்து என்ன நடக்கும் என்பதை நீ
தெரிந்துகொள்ளா வண்ணம் கடவுள், இன்பத்தையும் துன்பத்தையும்
மாறி மாறி வரவிடுகின்றார்" (சஉ 7:14). ஆக, வாழ்வின்
இருபக்கங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வரட்டும். ஒரு பகுதியை
மட்டும் பிடித்துக்கொண்டு இன்னொரு பகுதியை விட வேண்டாம்.
ஏனெனில், சூரியனின் ஒரு பக்கம் ஆணவக்காரரைச்
சுட்டெரிக்கிறது என்றால், அதன் மறுபக்கக் கதிர்களில்
நேர்மையாளர்களுக்கான நலம் தரும் மருந்து இருக்கும்.
அவசரம் அல்லது சோம்பல்
ஒற்றைமயமாக்கலில் நாம் வாழ்வின் மறுபக்கத்தை வெறுத்து
ஒதுக்குகின்றோம் என்றால், அவசரத்தில் மறுபக்கத்தை நாம்
அப்படியே எடுத்துக்கொள்ள நினைக்கிறோம். இதுவும் தவறு.
எல்லாக் குழந்தைகளும் ஒருநாள் இறக்க வேண்டும் என்பதற்காக
பிறந்த குழந்தைகளைக் கொல்வது போன்றது அவசரம். எல்லாக்
கட்டிடங்களும் ஒருநாள் இடிந்துபோகும் என்பதற்காக எல்லாக்
கட்டிடங்களையும் இடிக்க நினைப்பது அவசரம். தெசலோனிக்கத்
திருஅவையில் இதே பிரச்சினைதான் இருந்தது. 'கடவுள் வரப்
போகிறார், உலகம் முடியப் போகிறது' என்ற அவசரத்தில், ஆடு,
கோழிகளை அடித்து சாப்பிட்டுவிட்டு, ஓய்ந்திருந்தனர்.
அவசரத்துடன் சோம்பலும் வந்துவிடுகிறது. பல நேரங்களில் நாம்
வாழ்வின் மறுபக்கத்தை யூகித்துக்கொண்டே விரக்தியும்
அடைகிறோம். 'இது இப்படி ஆகுமோ? அது அப்படி ஆகுமோ?' என்னும்
வீணான குழப்பங்களும் அவசரத்தின் குழந்தைகளே.
பயம்
இதைப் பற்றி இயேசு நற்செய்தி வாசகத்தில்
அறிவுறுத்துகின்றார். மனித அல்லது இயற்கைப் பேரழிவுகள்
பயத்தைக் கொண்டுவரலாம். நம்முடைய உடைமைகள் அல்லது உயிரும்
பறிக்கப்படலாம். ஆனால், இந்தப் பயத்தைப் போக்க இயேசு
நம்பிக்கையும் எதிர்நோக்கும் தருகின்றார்: 'உங்கள் தலைமுடி
ஒன்றுகூட விழாது!'
வாழ்வின் மறுபக்கத்தை நாம் பார்ப்பதற்குத் தடையாக
இருக்கின்ற ஒற்றைமயமாக்கல், அவசரம்-சோம்பல், பயம்
ஆகியவற்றை விடுத்தல் அவசியம்! இவற்றை விடுத்தலே ஞானத்தின்
முதற்படி! இந்த ஞானத்தை அடைந்தனர் இயேசுவும்
பட்டினத்தாரும்.
இவற்றை விடுக்கும் எவரும், வாழ்வின் இருபக்கங்களையும்
கொண்டாட்ட முடியும். அந்தக் கொண்டாட்டத்தில் திருப்பாடல்
ஆசிரியரோடு இணைந்து, 'யாழினை மீட்டி ஆண்டவரைப்
புகழ்ந்தேத்துங்கள். யாழினை மீட்டி இனிய குரலில் அவரை
வாழ்த்திப் பாடுங்கள்' (திபா 98:5) என்று பாட முடியும்.
நிற்க.
இன்று தாய்த்திருஅவை வறியோர்க்கான 9-ஆவது உலக நாளைக்
கொண்டாடுகிறது. 'ஆண்டவரே, நீரே எம் எதிர்நோக்கு!' (காண்.
திபா 71:5) என்னும் மையக்கருத்தோடு கொண்டாடப்படுகிறது இந்த
நாள். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திருத்தந்தை 14-ஆம்
லியோ வெளியிட்ட 'திலக்ஸித் தெ' என்னும் திருத்தூது
ஊக்கவுரையின் பின்புலத்தில் இந்த நாளைக் கொண்டாட நாம்
முயற்சி செய்வோம். கடவுள் இல்லாத நிலையே அல்லது கடவுள்
தேவையில்லை என்னும் நிலையே நம் வறுமையின் உச்சம்.
வறியவர்கள்மேல் நாம் காட்டும் கண்டுகொள்ளாத்தன்மை நம்
அக்கறையாக மாற வேண்டும். அவர்கள்மேல் நாம் சுமத்தும்
தீர்ப்புகள் அவர்கள் மேம்பாட்டுக்கான செயல்பாடுகளாக மாற
வேண்டும்.
நம் பங்குத்தளங்களில் வாழ்விடங்களில் உள்ள வறியவர்
ஒருவருக்கு நம் உடனிருப்பை இன்று காட்ட முயற்சி செய்வோம்.
விண்ணரசுக்காகச்
செயலாற்றுதல்
2017ஆம் ஆண்டு தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும், 'ஆண்டின்
பொதுக்காலம் 33ஆம் ஞாயிற்றை' 'அகில உலக ஏழையர் நாள் அல்லது
ஞாயிறு' எனக் கொண்டாட வேண்டும் எனத் திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார். நம் வீட்டின் வாசலில்
விழுந்து கிடக்கும் ஏழை இலாசர்களைச் சற்றே அடையாளம் காணவும்,
நீதி நிலைநாட்டப்படாமல் ஏழ்மை அழிவதில்லை என நாம் கற்றுக்கொள்ளவும்,
ஏழ்மை சூழ்ந்த இவ்வுலகில் புதிய மறைத்தூதுப் பணி திட்டங்களை
வரையறுக்க நம்மைத் தூண்டவும் இந்த நாள் அழைப்பு விடுக்கிறது
என்று இந்த நாள் பற்றிக் கூறுகின்றார் திருத்தந்தை
பிரான்சிஸ். இங்கே, 'பொருளாதார ஏழ்மை' என்பதே மையப்படுத்தப்பட்டாலும்,
நற்செய்தியின் அடிநாதமாக 'ஏழ்மை' அல்லது 'எளிய உள்ளம்' இருக்கிறது
என்பது நமக்குப் புலனாகிறது.
முதலில், 'பொருளாதார ஏழ்மை' என்பது ஒரு சார்பியல்
வார்த்தை. அதாவது, ஒன்றை மற்றொன்றோடு தொடர்புபடுத்தி நாம்
ஒருவரை ஏழை என்றும், மற்றவரைப் பணக்காரர் என்றும் வரையறுக்கிறோம்.
என் பக்கத்து வீட்டுக்காரரோடு என்னை ஒப்பிட்டால் நான் அவரைவிடப்
பணக்காரராக இருக்கலாம். ஆனால், தூரத்தில் இருக்கிற உறவினரரோடு
என்னை ஒப்பிட்டால் அவர் என்னைவிடப் பணக்காரராக இருக்கலாம்.
ஆக, இதுதான் 'ஏழ்மை' என்பதை நாம் வரையறுத்துவிட முடியாது.
இரண்டாவதாக, ஒருவர் தன் ஏழ்மையை தன்னுடைய நிறைவு எனக் கருதலாம்.
எடுத்துக்காட்டாக, அருள்பணி மற்றும் துறவற நிலையில் நாம் 'ஏழ்மை'
என்ற வாக்குறுதியை எடுக்கின்றோம். இங்கே, 'ஏழ்மை' என்பது 'ஒன்றும்
இல்லாத நிலையை' அல்ல, மாறாக, 'எல்லாம் பெற்ற நிறைவை' அல்லது
'பற்றற்ற நிலையைக்' குறிக்கிறது.
மூன்றாவதாக, ஒருவர் தன்னிடம் உள்ளதை வைத்து நிறைவு பெறலாம்.
எடுத்துக்காட்டாக, குடிசை வீட்டில் வாழும் ஒருவர், தன்னிடம்
உள்ளதே போதும் என்ற நிலையில் நிறைவுகொண்டு தன் வாழ்க்கையை
நடத்த முயற்சி செய்யலாம். செல்வம் என்பது அவரைப் பொருத்தவரையில்
சுமையாகத் தெரியலாம்.
ஏழ்மை பற்றிய புரிதலை வரையறுத்தல் அவ்வளவு எளிதன்று.
ஆனால், இந்த நாள் 'ஏழையர் அல்லது ஏழ்மை' பற்றிச் சொல்வது
என்ன?
ஒன்று, அனைவரும் செல்வத்துக்கென அல்லது பொருளாதாரத் தன்னிறைவுக்கெனப்
படைக்கப்பட்டவர்கள். ஒரு ஊரில் உள்ள மாமரத்தில் 50 கனிகள்
பழுக்கின்றன என்றால், அது அந்த ஊரில் உள்ள 50 பேருக்கும்
உரியது. ஆனால், என்னிடம் ஏணி இருக்கிறது என்பதற்காக நான்
50 கனிகளையும் பறித்துக்கொண்டு, 49 கனிகளை எனக்கென
வைத்துக்கொண்டு, ஒற்றைக் கனியை மற்ற 49 பேரும் பகிர்ந்துகொள்ளுமாறு
சொல்வது நீதி அன்று. அப்படி நான் சொல்லும்போது, அவர்களுக்கு
உரிமையான கனியை அவர்களிடமிருந்து பறிப்பதோடு அல்லது அவர்களுக்கு
மறுப்பதோடு, இயற்கையின் நீதி மற்றும் சமநிலை குறையவும்
நான் காரணமாகிவிடுகிறேன். ஆக, ஏழை இலாசர்கள் உருவாகக் காரணம்
வீட்டின் உள்ளே அமர்ந்து விருந்துண்பவர்களே. ஏனெனில், இயற்கைத்
தாய் தன் பிள்ளைகள் யாரும் ஏழ்மையில் வாடுவதை விரும்புவதில்லை.
எந்த அணிலாவது ஏழ்மையில் இறப்பதுண்டா? எந்தக் கிளியாவது ஏழ்மையால்
உயிரை மாய்த்துக்கொள்வதுண்டா?
இரண்டு, ஏழ்மை என்பது ஒருவரின் பாவத்தாலும் சாபத்தாலும் வருவது
என்ற புரிதலை நாம் மாற்ற வேண்டும். 'ஆண்டவரை நம்புகிறவனோ
செழிப்பான்' என்ற இறைவார்த்தை ஆபத்தானது. ஏனெனில்,
செழிப்பாய் இருப்பவர்கள், தங்களை நினைத்துப் பெருமிதம்
கொள்ளவும், தங்கள் செல்வம் கடவுள் தங்களுக்கு அளித்த ஆசீர்
என்றும், ஏழையர்கள் கடவுளின் சாபத்துக்கு ஆளானவர்கள் என்றும்
தவறான புரிதல் கொள்ளச் செய்கிறது. தன்னை நம்புகிறவர்களைக்
கடவுள் செழிப்பாகவும், தன்னை நம்பாதவர்களைக் கடவுள் ஏழையராகவும்
ஆக்குகிறார் என்று நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஒரு
தாய் தன்னைப் பாராட்டும் தன் மகளுக்கு வளமையும், தன்னை
வெறுக்கும் தன் மகளுக்கு வறுமையையும் தருவாளா? இருவரும் எப்படி
இருந்தாலும் இருவருமே தாய்க்குப் பிள்ளைகள்தாமே.
மூன்று, ஏழையர் ஏழையராக இருப்பதற்குக் காரணம் அவர்களுடைய
சோம்பல் என்ற எண்ணத்தை நாம் களைய வேண்டும். ஒருவரின் கடின
உழைப்பு அவரை உயர்த்தும் என்பதில் ஐயமில்லை. ஆனால், உழைக்கிறவர்கள்
எல்லாம் உயர்வடைவதில்லை. உயர்வடைபவர்கள் எல்லாம் உழைப்பதில்லை.
சில நேரங்களில் மனிதர்களின் இயலாமை, சூழல், வாய்ப்பின்மை,
திறன் பற்றாக்குறை போன்றவை நம் உழைப்புக்கேற்ற பலனை நாம்
அனுபவிக்க இயலாமல் செய்துவிடலாம். இன்னொரு பக்கம், குடிமை
அரசு தன் மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்துகொடுத்து ஏழ்மையை
விரட்டுவதை விடுத்து, ஏழையரை அழிக்கும் நோக்குடன் வளர்ச்சித்
திட்டங்களை வகுப்பது தவிர்க்கப்பட வேண்டும். கடினமான உலகில்
போட்டி போடுவது ஏழையருக்கு இயலாதது ஆகிவிடுகிறது.
இன்று நாம் சாலைகளில் வேகமாகச் செல்லும்போது கொஞ்சம்
நின்று பார்த்தால், எவ்வளவோ வகையான ஏழ்மையை நாம் அடையாளம்
காண முடியும்: பசி என்னும் ஏழ்மை, வேலையின்மை என்னும் ஏழ்மை,
தாழ்வு மனப்பான்மை என்னும் ஏழ்மை, வீடின்மை என்னும் ஏழ்மை,
உறவுகளின்மை என்னும் ஏழ்மை, நம்பிக்கையின்மை என்னும் ஏழ்மை
எனப் பல இனியவர்களை நாம் கடந்துசெல்கின்றோம். அல்லது நாமே
இம்மாதிரியான ஏழ்மை நிலைகளில் இருக்கிறோம். ஒரு நிமிடம்
நான் நின்று, 'இவன் ஏன் இப்படி இருக்கிறான்? இவள் ஏன் இப்படி
இருக்கிறாள்?' என்று நம்மை இந்த நாள் கேட்கத் தூண்டினால்,
இந்த நாளைக் கொண்டாடுவது பொருளுள்ளதாகும்.
ஏழ்மையை நாம் கொண்டாட வேண்டாம், ஆனால், ஏழையரைக்
கொண்டாடுவோம். ஏனெனில், ஒவ்வொருவர் உள்ளத்திலும்
நிறைவுக்கான, வளர்ச்சிக்கான, செயலாற்றுதலுக்கான தீப்பொறி
இருக்கிறது என்று சொல்கின்றது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 25:14-20), விண்ணரசு
பற்றிய இன்னொரு எடுத்துக்காட்டைத் தருகிறது. கடந்த வாரம்,
பத்துக் கன்னியர் எடுத்துக்காட்டு வழியாக, விண்ணரசுக்கான
விழித்திருத்தல் பற்றிச் சிந்தித்தோம். இந்த வாரம், தாலந்து
உவமை வழியாக, விண்ணரசுக்கான அல்லது விண்ணரசுக்காகச் செயலாற்றுதல்
பற்றிச் சிந்திப்போம். 'தாலந்து உவமை' என்பது விண்ணரசு பற்றிய
உவமையே தவிர, அது நம் 'டேலன்ட்கள்' ('திறன்கள்' அல்லது 'செயல்திறன்கள்')
பற்றிய உவமை அல்ல என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள
வேண்டும். 'ஒரு தாலந்து' என்றால் '6000 தெனாரியம்'. ஒரு
தெனாரியம் என்பது ஒருவரின் ஒருநாள் கூலி. ஒருநாள் கூலி ஒருவருக்கு
நூறு ரூபாய் என்றால், ஒரு தாலந்து என்பது 6,00,000 ரூபாய்.
ஒரு பெரிய தொகைதான். இது பெரும்பாலும் வெள்ளி அல்லது ஏதாவது
ஒரு உலோகத்தால் நிறுத்துக் கொடுக்கப்படும். இயேசுவின் சமகாலத்துப்
பாலஸ்தீனத்தில் நெடும்பயணம் மேற்கொள்ளும் வீட்டுத் தலைவர்
பொதுவாக, தன் சொத்துகள் அல்லது உடைமைகள் அனைத்தையும் பணமாக்கி,
அவற்றைப் பணியாளர்களிடம் கொடுத்துச் செல்வது வழக்கம். ஏனெனில்,
நெடும்பயணத்தில் பலர் இறந்துபோவதும், அல்லது மறைந்துபோவதும்,
அல்லது காணாமல்போவதும் உண்டு. ஒருவேளை தலைவர் வீடு
திரும்பினால் தன் சொத்துகள் அனைத்தையும் மீண்டும்
பெற்றுக்கொள்வார். அவற்றைப் பேணி வளர்த்த தன் பணியாளர்களுக்கு
சில அன்பளிப்புகள் வழங்குவார். ஒவ்வொரு பணியாளரின் தகுதிக்கேற்ப
தலைவர் பிரித்துக்கொடுப்பது வழக்கம்.
இந்தப் பின்புலத்தில்தான், ஒருவருக்கு ஐந்து, இன்னொருவருக்கு
இரண்டு, இன்னொருவருக்கு ஒன்று என்று தாலந்துகள் கொடுக்கப்படுகின்றன.
'அவரவர் திறமைக்கு ஏற்ப' பிரித்துக்கொடுக்கிறார் தலைவர்.
ஐந்து மற்றும் இரண்டு தாலந்து பெற்றவர்கள் வாணிகம் செய்து
அவற்றை இரட்டிப்பாக்குகின்றனர். மூன்றாமவர் தான் பெற்ற தாலந்தை
நிலத்தில் புதைத்து வைக்கிறார். பாலஸ்தீனத்தில் சொத்துகளை
நிலத்தில் புதைத்து வைப்பதும் வழக்கம். திருட்டிலிருந்து
தற்காத்துக்கொள்ள தங்கள் வீட்டருகிலோ அல்லது தங்கள் வயலிலோ
அவற்றைப் புதைத்து வைப்பர். புதைத்து வைப்பதோடு அவற்றின்
மேல் அவர்கள் ஒரு கண் வைத்துக்கொண்டே இருப்பார்கள். மூன்றாமவர்
தன் தலைவரின் வயலிலேயே புதைத்து வைத்திருக்கலாம். புதைத்து
வைத்து அதைப் பேணிக் காத்ததோடு தன் பணிகளைச் செய்வதில்
மும்முரமாய் இருந்தார். முதல் இரண்டு நபர்களும் தலைவரிடமிருந்து
பரிசு பெற, மூன்றாம் நபரோ தண்டனை பெறுகின்றார்.
விண்ணரசு பற்றி இந்த உவமை சொல்வது என்ன?
முதலில், விண்ணரசின் தலைவர் பற்றி உவமை சொல்வது பின்வருமாறு:
(அ) தலைவர் தான் விரும்பியதை, விரும்பியவர்க்குக்
கொடுக்கிறார்.
ஆக, கடவுள் இதை ஏன் செய்கிறார், இதை ஏன் இவருக்குச்
செய்கிறார் என்று நாம் அவரிடம் எதுவும் கேட்க முடியாது. நம்
கையில் இருக்கும் தாலந்து அவரது விருப்பத்தால் நம் கைக்கு
வருகிறது. விண்ணரசில் அனைத்து முடிவுகளையும் எடுப்பவர் அவரே.
(ஆ) தலைவர் தான் விரும்பிய நேரத்தில் திரும்புகிறார்.
வீட்டுத் தலைவர் இந்த நேரத்தில் வர வேண்டும் என்று சொல்ல
பணியாளர்களுக்கு உரிமை இல்லை. பணியாளர்கள் எந்நேரமும் தயார்நிலையில்
இருக்க வேண்டும். ஏனெனில், இவர்கள் பணியாளர்கள், அவர் தலைவர்.
(இ) நிகழ்வுகளையும் செயல்களையும் மதிப்பிடும் வரையறைகளை வகுப்பவர்
தலைவரே
'நீ ஏன் வட்டிக்குக் கொடுக்கவில்லை?' என்று கேட்பவரும், 'உள்ளவருக்கும்
இன்னும் அதிகம், இல்லாதவருக்கு ஒன்றும் இல்லை' என்று
விதியை மாற்றி எழுதுபவரும் தலைவரே.
ஆக, விண்ணரசின் தலைவராக இருக்கின்ற கடவுள் தான் விரும்பியதைச்
செய்கிறார், விரும்பிய நேரத்தில் வருவார், விரும்பியவாறு
நம்மை மதிப்பிடுவார்.
இரண்டாவதாக, விண்ணரசின் பணியாளர் பற்றி உவமை சொல்வது பின்வருமாறு:
(அ) தானே செயலாற்ற வேண்டும்
பணியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களின் செயல்களைத் தாங்களே
நிர்ணயிக்க வேண்டும். வாணிகம் செய்வதும், வட்டிக்கு விடுவதும்,
நிலத்தில் புதைப்பதும் பணியாளர்களின் சொந்த விருப்பத்திற்கு
உட்பட்டது. பணியாளர்களின் விருப்புரிமை மற்றும் கட்டின்மையை
(சுதந்திரம்) இது குறிக்கிறது.
(ஆ) தலைவர் விருப்பம் அறிந்து செயலாற்ற வேண்டும்
மூன்று பணியாளர்களும் தலைவரின் விருப்பம் மற்றும் அவருடைய
குணநலன்களை அறிந்துள்ளனர். ஆனால், முதல் இரண்டு பேரும் அந்த
அறிவின்படி செயலாற்றுகின்றனர். மூன்றாம் நபரோ அறிவதோடு
நிறுத்திக் கொள்கிறார். செயலாற்ற மறுக்கிறார். அல்லது தன்
தலைவர் பற்றிய தவறான அறிவைக் கொண்டிருக்கிறார்.
(இ) தலைவர் வரும்வரை செயலாற்ற வேண்டும்
இன்று அல்லது நாளையோடு நான் என் வேலையை நிறுத்திக்கொள்வேன்
என்பது சாத்தியமல்ல. தலைவர் வரும் வரை பணியாளர்கள் செயலாற்ற
வேண்டும்.
ஆக, விண்ணரசில் பணியாளர்கள் என்ற நிலையில் இருக்கின்ற
நாம், தலைவரின் விருப்பம் அறிந்து தொடர்ந்து செயலாற்றினால்தான்
அவரிடமிருந்து பரிசில் பெற முடியும்.
மூன்றாவதாக, விண்ணரசுக்காக எப்படிச் செயலாற்றுவது?
(அ) சிறியவற்றில்தான் பெரியவை அடங்கியுள்ளன என அறிவது
'சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவர் பெரியவற்றிலும் நம்பிக்கைக்குரியவர்.'
'எண்ணி அறியக் கூடிய ஒன்றில் - பணம், நேரம் - நம்பிக்கைக்குரியவர்,
எண்ணி அறிய இயலாதவற்றிலும் - உறவு, நட்பு, பிரமாணிக்கம்,
நற்பண்பு - நம்பிக்கைக்குரியவர். ஆக, சின்னஞ்சிறிய
வாக்குறுதிகளைக் கடைப்பிடிப்பது, சின்னஞ்சிறியவற்றில் நன்முறையில்
செயலாற்றக் கற்க வேண்டும். 'சிறியவற்றைப் புறக்கணிப்போர்
சிறிது சிறிதாய் வீழ்ச்சி அடைவர்' (சீஞா 19:1). இன்றைய முதல்
வாசகம் (காண். நீமொ 31), சிறியவற்றில் - உழைப்பதில், நூல்
நூற்பதில், வியாபாரம் செய்வதில், எளியவருக்கு உதவுவதில்,
ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் - நம்பிக்கைக்கு உரியவராய் இருக்கும்
நன்மனையாளை நமக்கு எடுத்துக்காட்டாகத் தருகிறது.
(ஆ) தவறான முற்சார்பு எண்ணங்களைக் களைவது
தன் தலைவரின் கடின உள்ளம் பற்றிய முற்சார்பு எண்ணம்
கொண்டிருந்ததால் மூன்றாவது பணியாளர் செயலாற்ற மறுக்கிறார்.
கடவுள், உலகம், மனிதர்கள், உறவுகள் பற்றிய முற்சார்பு எண்ணங்களை
நாம் களைய வேண்டும். எல்லா மனிதர்களும் நம்பிக்கை துரோகிகள்
என்ற முற்சார்பு எண்ணம் எனக்கு இருந்தால் என்னால் நிம்மதியாக
சோறு சாப்பிடக் கூட இயலாது. ஏனெனில், சாப்பிடும் ஒவ்வொரு
முறையும் அதில் நச்சு இருக்குமோ என்ற எண்ணம் என்னைச்
சாப்பிட விடாமல் செய்துவிடும். தலைவர் கடின உள்ளம் கொண்டவர்தான்.
ஆனால், நான் செயலாற்றுவேன் என நினைப்பது நன்று.
(இ) வாழ்வின் உறுதியற்ற நிலையைக் கொண்டாடுவது
திருடன் வருவது போல, கருவுற்ற பெண்ணுக்கு வலி வருவது போல
ஆண்டவரின் வருகை இருக்கும் எனச் சொல்கிறார் பவுல் (காண்.
இரண்டாம் வாசகம்). வாழ்வின் உறுதியற்ற நிலையை நினைத்து
நாம் அச்சம் கொள்ளக் கூடாது. 'இறப்பைக் கண்டு அவர் அஞ்சவும்
இல்லை. வாழ்வதற்கு அவர் தயங்கவும் இல்லை' என்று புனித
தூரின் நகர் மார்ட்டின் பற்றிச் சொல்லப்படுவதுண்டு. இறப்பும்
வாழ்வும் உறுதியற்ற இரு துருவங்கள். ஆனால், இரு துருவங்களையும்
இணைத்துக் கொண்டாடுதல் இனிமை.
இறுதியாக,
இன்றைய பதிலுரைப் பாடல் (காண். திபா 128), 'உமது உழைப்பின்
பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்!' என
நம்மை வாழ்த்துகிறது. இவ்வார்த்தைகளைச் சொல்லி நாம் ஒருவர்
மற்றவரை வாழ்த்தினால், ஏழ்மை மறையும். ஏனெனில்,
'சீயோனிலிருந்து நமக்கு ஆசி வழங்குபவர் ஆண்டவரே!' (காண்.
திபா 128:5).
ஒற்றைத் தாலந்து
ஏழையர் ஞாயிறாகிய இன்று நமக்கு 'தாலந்து எடுத்துக்காட்டு'
நற்செய்தி வாசகமாக வருகின்றது. மேலோட்டமாகப் பார்த்தால் ஏழையர்
ஞாயிற்றின் சிந்தனைக்கு எதிர்மாறாக இருக்கின்றது இன்றைய நற்செய்தி
வாசகம். எப்படி?
'இல்லாதோரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்' என்று
சொல்கின்ற தலைவன் ஒரு தாலந்து உள்ளவனிமிருந்து அதைப் பறித்து
பத்து தாலந்து உள்ளவனிடம் கொடுக்கின்றான். அப்படி என்றால்
இல்லாதவர்கள் இல்லாதவர்களாகவே இருக்க வேண்டும், இருப்பவர்கள்
இன்னும் அதிகம் பெறவேண்டும் என்பது தலைவனின் ஆசையாக இருக்கிறது.
மேலும், ஐந்து, மூன்று, ஒன்று என்று மனிதர்களைப் பிரிப்பதே
அவர்களுக்குள் வேறுபாட்டை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ஆக,
விண்ணரசு என்ற ஒரு நிகழ்வு இயல்பாகவே சமத்துவம் இல்லாத ஒரு
நிலையில்தான் தொடங்குகிறது. இப்படி வேறுபாடுகள் அல்லது ஏற்றத்தாழ்வுகளை
வைத்துக்கொண்டு விண்ணரசு பற்றி எப்படி பேச முடியும்?
'இருப்பவனுக்குத்தான் எல்லாம் இருக்கணும். இல்லாதவனுக்கு
ஒன்னும் இருக்கக்கூடாது' என்று நினைத்த யாரோ ஒருவர் இந்த
தாலந்து உவமையை எழுதி இயேசுவே இதைச் சொன்னதாக இடைச்செருகியிருக்கவும்
வாய்ப்பு இருக்கிறது.
தமிழகத்தில் ஆளும் கட்சியினரைச் சார்ந்த சிலரின் வீடுகளை
வருமான வரித்துறையினர் சோதனையிட்டு கோடிக்கணக்கான சொத்துக்களைக்
கண்டறிந்துள்ளனர். இவர்கள் எதற்காக இவ்வளவு சொத்துக்களைச்
சேர்க்க வேண்டும்? என்ற கேள்வி பாமரனின் மனதில் எழுகின்றது.
அதிக சொத்து அதிக அதிகாரம் என்பது எழுதப்படாத நியதியாக இருப்பதாலும்,
மனித மனம் இயல்பாகவே அதிகாரத்திற்கு ஏங்குவதாலும் சொத்து
சேர்த்தல் அதிகமாகிறது.
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீயிட்டு
இறந்துபோன குடும்பத்தினர் இக்கதையாடலில் வரும் 'தலைவனை'
எப்படி புரிந்து கொள்வர்? 'என் பணத்தை நீ கந்துவட்டிக்கு
கொடுத்திருக்கக்கூடாதா?' என்ற அவனது கேள்வியை இந்தக்
குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்களா?
மேற்காணும் தொடக்கக் கேள்விகளை ஒதுக்கிவிட்டுக் கதையாடலைக்
கையாள்வோம்: விண்ணரசு பற்றிய இயேசுவின் தாலந்து உவமை நாம்
பலமுறை கேட்ட ஒன்று. இந்த உவமை லூக்கா மற்றும் மத்தேயு
நற்செய்திகளில் மட்டும் உள்ளது. மாற்கு நற்செய்தியாளாரின்
கைக்கு எட்டாத ஒரு பாரம்பரியத்தை லூக்காவும், மத்தேயும்
பெற்றதால் அவர்கள் மட்டும் இதை எழுதுகின்றனர். ஆனால் இந்த
இருவரின் பதிவுகளும் பல முரண்பாடுகளைக் கொண்டுள்ளன.
மத்தேயு நற்செய்தியாளரில் வரும் வீட்டுத்தலைவன் தன்
பணியாளர்களில் மூவருக்கு தலா ஐந்து, மூன்று மற்றும் ஒன்று
என தாலந்துகளைக் கொடுத்து விட்டுப் பயணம் மேற்கொள்கிறான்.
ஐந்து பெற்றவன் மேலும் ஐந்து, மூன்று பெற்றவன் மேலும்
மூன்று என ஈட்டினாலும், ஒன்று பெற்றவன் அதை நிலத்தில்
புதைத்து வைக்கிறான். லூக்கா நற்செய்தியாளரில் அரசன் தன்
பணியாளர்களுக்குச் சொத்தைப் பிரித்துக் கொடுக்கின்றார்.
பத்துப் பேருக்கு தலா ஒரு தாலந்து என பத்துத் தாலந்துகள்
பகிர்ந்து கொடுக்கப்படுகின்றன. அரசுரிமை பெற வெளியூர்
செல்கின்றான் தலைவன். இதற்கிடையில் 'இவன் எங்களுக்கு
அரசனாக வேண்டாம்!' என ஒரு சிலர் தூது அனுப்புகின்றனர்.
இருந்தாலும் அரசுரிமை பெற்றுத் திரும்புகின்றான் தலைவன்.
அவன் திரும்பியபோது பணியாளர்களில் ஒருவன் ஒரு தாலந்தைக்
கொண்டு பத்து சம்பாதித்ததாகவும், இரண்டாமவன் ஒன்றைக்
கொண்டு ஐந்து சம்பாதித்ததாகவும், மூன்றாமவன் தலைவனுக்குப்
பயந்து அதை கைக்குட்டையில் முடிந்து வைத்ததாகவும்
கூறுகின்றனர். ஆனால் மற்ற ஏழு பேர் என்ன செய்தார்கள்
என்பது பற்றி உவமையில் ஒன்றும் இல்லை.
மத்தேயு மற்றும்
நற்செய்தியாளர்களில் பொதுவாகக் காணப்படுவை மூன்று:
அ.
முதல் இரண்டு பேர் நன்றாக சம்பாதிக்கின்றனர், மூன்றாமவன்
சம்பாதிக்கவில்லை.
ஆ. அதிகம் பெற்றவர்கள் இன்னும் அதிகம்
பெறுகிறார்கள்.
இ. பொல்லார் தண்டிக்கப்படுகின்றனர்.
'தாலந்து உவமை'யை நாம் மூன்று விதங்களில் காலங்காலமாக
'தவறாக' புரிந்துகொள்கிறோம்:
அ. தாலந்து என்றால் ஆங்கிலத்தில் 'டேலன்ட்' ('திறன்').
கடவுள் நமக்கு நிறைய திறன்களைக் கொடுத்திருக்கின்றார்
எனவும், அத்திறன்களை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்
அல்லது பெருக்க வேண்டும் என்று பொருள் கொள்வது.
ஆ. வட்டிக்குக் கொடுத்துவைப்பதை அல்லது வங்கியில் கொடுத்து
வைப்பதை சரி என்று இயேசு சொல்வதாகப் புரிந்து கொள்வது.
இ. 'புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள்' என்ற சொல்லாடல்
உத்தரிக்கிற நிலை அல்லது நரகத்தைக் குறிக்கிறது என்று
பொருள்கொள்வது.
தாலந்து உவமையின் நோக்கம் இந்த மூன்றும் அல்ல. பின் என்ன?
இயேசு உவமையின் தொடக்கத்தில் சொல்வது போல, 'விண்ணரசைப்
பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்.' ஆக,
'தாலந்து உவமை' முழுக்க முழுக்க விண்ணரசு பற்றியது.
தாலந்து உவமையிலிருந்து விண்ணரசை நாம் எப்படி புரிந்து
கொள்வது?
அ. தலைவர் தான் விரும்பியதைச் செய்கின்றார். யாருக்கு
எவ்வளவு தாலந்து கொடுக்க வேண்டும் என்பதை நிர்ணயம்
செய்பவர் அவரே. 'ஏன் இப்படிச் செய்கிறீர்?' என்று அவரை
யாரும் கேட்க முடியாது.
ஆ. இருப்பது பெருகும், இல்லாதது தேயும். இதை ஆங்கிலத்தில்
'ஸ்னோபால் இஃபெக்ட்' என்கிறார்கள். சின்னதாக உருட்டி மேலே
இருந்து உருட்டிவிடப்படும் பனிக்கட்டி கீழே வர, வர தன்னோடு
மற்ற பனித்துகள்ளையும் சேர்த்துக்கொண்டு பெரிதாகிக்கொண்டே
வருகிறது. ஆக, இருப்பது வேகமாக நகரும்போது இன்னும்
பலவற்றைதன் தன்னோடு அணைத்துக்கொள்ளும்.
இ. பரிசும், தண்டனையும் தருபவர் தலைவரே. ஏன் இந்தப் பரிசு?
ஏன் இந்த தண்டனை? என யாரும் தலைவனைக் கேள்வி கேட்க
முடியாது. மேலும், என்ன செய்தால் பரிசு, என்ன செய்தால்
தண்டனை என்பதும் பணியாளர்களுக்கு மறைபொருளாக இருக்கிறது.
ஒரு தாலந்து என்பது 6000 தெனாரியங்களுக்குச் சமம். அதாவது
6000 நாள்கள் (ஏறக்குறைய 20 ஆண்டுகள்) ஒருவன் செய்யும்
வேலையின் கூலி இது. ஒரு நாளைக்கு ஒருவருக்கு ஐநூறு ரூபாய்
சம்பளம் என வைத்துக்கொண்டால், இதன் தாலந்து மதிப்பு 30
இலட்சம். இவ்வளவு பெரிய தொகை பணியாளர்களுக்கு ஐந்து,
இரண்டு, ஒன்று என்ற அளவில் தரப்படுகிறது. அ. எதற்காக
தலைவன் ஐந்து, மூன்று, ஒன்று என தாலந்துகளைக் கொடுக்க
வேண்டும்? ஐந்து பெற்றவன் ஐந்து கொண்டு வந்தான், மூன்று
பெற்றவன் மூன்று கொண்டு வந்தான். ஒன்று பெற்றவன் ஒன்று
கொண்டு வந்தான். லாஜிக் சரிதானே! பின் ஏன் அவனுக்கு
மட்டும் தண்டனை. ஆ. ஒன்றை மட்டும் கொண்டுவந்தவன் அதையாவது
கொண்டு வந்தானே. அவன் ஊதாரித்தனமாகச் செலவழிக்கவில்லை.
அல்லது அதைத் தொலைத்துவிடவில்லை. பத்திரமாகத்தானே
வைத்திருந்தான். அதற்காகவாவது அவனைப் பாராட்ட வேண்டமா? இ.
நிலத்தில் புதைத்து வைப்பது சாதாரண காரியம் அல்ல. நம்
அலமாரியில் இருந்தால் கூட திறந்து பார்த்து 'ஆ!
இருக்கிறது!' என்று சொல்லிக்கொள்ளலாம். நிலத்தில்
புதைப்பதால் அவன் இன்னும் அதிக அலர்ட்டாக இருக்க வேண்டும்.
நிலத்தில் புதைத்து வைத்து அதைக் காவல் காப்பதும் பெரிய
வேலைதானே!
இன்றைய நற்செய்தியில் வரும் மூன்றாம் நபர் அல்லது ஒற்றைத்
தாலந்தை மட்டும் வைத்து நாம் சிந்திப்போம்:
1. கோபம். மூன்றாம் பணியாளனுக்குத் தன் தலைவன் மேல் ஏதாவது
கோபம் இருந்திருக்க வேண்டும். 'மற்றவர்களுக்கு ஐந்து,
மூன்று எனக் கொடுத்துவிட்டு எனக்கு ஒன்றா கொடுக்கிறாய்!'
என உள்ளத்தில் கொதித்திருக்கலாம். 'நீ என்னடா கொடுக்கிறது!
நான் என்னடா உழைக்கிறது!' என்று நினைத்திருக்கலாம்.
சமூகத்தில் நடைபெறும் பல தீமைகளுக்குக் காரணம் கோபம்தான்.
திருடர்கள் திருடுவது எதற்காக? பணம் வைத்திருப்பவர்கள்
மேலும், அல்லது தாங்கள் வாழும் சமூகத்தின் கட்டமைப்பின்
மீதும் கோபம். தங்களின் கையாலாகாத நிலையில் அந்தக்
கோபத்தைத் திருட்டாகக் காட்டுகின்றனர். ஒரு பெண்ணால்
ஏமாற்றப்பட்ட ஒருவன் காலப்போக்கில் பாலியல் பிறழ்வுகளில்
ஈடுபட்டு ஒட்டுமொத்த பெண் இனத்தின் மேல்
பழிதீர்த்துக்கொள்ள நினைக்கிறான். நாம் கையாள முடியாத
கோபம் எல்லாம் எதிர்வினைகளாக மாறிவிடுகின்றன. எனக்குத்
தெரிந்த நண்பர் ஒருவருக்கு புற்றுநோய். என்னை விட கொஞ்சம்
கூட வயது. நன்றாக மருத்துவம் பார்த்திருந்தால் இன்றும்
வாழ்ந்து கொண்டிருப்பார். ஆனால் அவனுக்கு கடவுளின் மேல்
ஒரு கோபம்: ஏன் இது எனக்கு மட்டும் வருகிறது? என்ற சதா
கேட்டுக் கொண்டிருந்தவன், புற்றுநோய் தன்னை ஏன் அழிக்க
வேண்டும்? நானே அழித்துக்கொள்கிறேன் என்னை என அதிக
மதுஅருந்தவும், மாத்திரைகளைப் புறக்கணிக்கவும்
தொடங்கினான். விளைவு, விரைவில் இறந்துவிட்டான். நம்
வாழ்வில் நாம் வாழ்வை முழுமையாக வாழத் தடையாக இருப்பது
நம்மிடம் இருக்கும் கோபம். பெற்றோரிடம் கோபப்பட்டு
வீட்டுக்கு வெளியே தங்கும் இளைஞர்கள், கணவன் மனைவியாக
வீட்டில் தங்கியிருந்தாலும் ஒருவருக்கொருவர் வருடக்கணக்காக
பேசமால் இருக்கும் நிலைகள், 'ஏதோ! குழந்தை இருக்குன்னு
பார்க்கிறேன்! அல்லது எப்பவோ முறிச்சிறுப்பேன்!' என்று
சண்டைபோட்டுக் கொள்ளும் தம்பதியினர், அருட்பணி நிலையிலும்
தலைமையில் இருப்பவர்கள் மேல் கோபப்பட்டுக் கொண்டு, 'எனக்கு
அந்த இடம் கொடுத்தால் தான் பணி செய்வேன். அல்லது தினமும்
பூசை மட்டும் வைப்பேன். வேறு ஒன்றும் செய்ய மாட்டேன்!' என
ஓய்ந்திருக்கும் நிலை என அனைத்திலும் நம் கதையின் மூன்றாம்
கதைமாந்தர் ஒளிந்திருக்கிறார்.
2. பயம். 'ஐயா, நீர் கடின உள்ளத்தினர். நீர் விதைக்காத
இடத்திலும் போய் அறுவடை செய்பவர். தூவாத இடத்திலும் போய்
சேகரிப்பவர்' என்று தன் தலைவனைப் பற்றிச் சொல்லும்போது
இவன் கொண்டுள்ள பயம் தெரிகிறது. இதைவிடப் பெரிய பயம்
அல்லது இதை ஒட்டிய பயம் என்னவென்றால், இவன் தான் தன்
தாலந்தை இழந்துவிடக்கூடாது என பயப்படுகின்றான். ஒருவேளை
இவன் ரொம்ப ஏழையாக இருந்திருப்பான். போதுமான பாதுகாப்பு
இல்லாத வீட்டில் குடியிருப்பவனாக இருந்திருக்கலாம்.
ஆகையால்தான் தாலந்தை தன் வீட்டில் வைப்பதற்குப் பதிலாக
நிலத்தைத் தோண்டி புதைக்கிறான். இவனது பயமே இவனைச்
செயல்படாமல் ஆக்கிவிட்டது.
3. தேக்கம். இவன் தண்டிக்கப்பட்டது எதற்காக? தாலந்தைப்
பெருக்காத குற்றத்திற்காக. இவன் மற்றவர்களையும், தன்
தலைவனையும் ஆராய்ச்சி செய்வதிலேயே தன் நேரத்தைக் கழித்தானே
ஒழிய தான் ஒன்றும் உருப்படியாகச் செய்யவில்லை. இதைவிட
மேலாக, தவைன் இவனை பொறுப்பாளனாக அல்லது கண்காணிப்பாளனாக
மாற்ற நினைத்தான். ஆனால் இவனோ தான் பணியாளனாக இருந்தாலே
போதும் என்ற தேக்கநிலையில் இருந்தான். மூன்றாம் பணியாளனை
நம் 'சோம்பேறி!' என்று அழைக்கிறோம். அவன் சோம்பேறி இல்லை.
சோம்பேறியாக இருந்தால் பணம் கொடுக்கப்படும் போதே, 'ஐயா!
நம்மால எல்லாம் இத வச்சு ஒன்னும் செய்ய முடியாது.
அவன்கிட்டே சேர்த்துக் கொடுங்க!' என்று சொல்லியிருப்பான்.
செய்ய வேண்டிய வேலையைச் செய்யாமல் தன் ஆற்றலை
பிறழ்வுபடுத்துவதுதான் அவனின் தவறு. நாணயத்தைப்
பத்திரப்படுத்தியதில் செய்த வேலையை அவன் வட்டிக்கடைக்குச்
செல்வதற்குப் பயன்படுத்தியிருக்கலாமே என்பதுதான் தலைவனின்
ஆதங்கம். 'நான் டெய்லி பிஸியாகவே இருக்கிறேன்! எதையாவது
செய்து கொண்டே இருக்கிறேன்!' என்று ஒருசிலர் பெருமையாகச்
சொல்வார்கள். 'எதையாவது செய்து கொண்டே இருப்பது
முக்கியமல்ல. எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறோமா?'
என்பதுதான் முக்கியம்.
இந்த மூன்று எதிர்மறையான பாடங்களுக்கு மாற்றாக மூன்று
நேர்முகமான பாடங்களையும் இன்றைய இறைவாக்கு வழிபாடு
நமக்குக் கற்றுத்தருகிறது:
1. பார்வை மாற்றம். ஐந்து மற்றும் இரண்டு தாலந்து
பெற்றவர்களின் பார்வை மற்றவனின் பார்வையைவிட வித்தியாசமாக
இருந்தது. தன் தலைவரின் கடின உள்ளம் தெரிந்திருந்தாலும்
அந்தக் கடின உள்ளத்தை மாற்றக்கூடிய மருந்து ஒன்று
இருக்கிறது என்று கண்டுபிடிக்கிறார்கள். ஒரே தலைவன் தான்.
ஆனால் பணியாளர்கள் அவனை எப்படி பார்க்கிறார்களோ அதைப்
பொறுத்து அவர்களின் வாழ்க்கை நிலையும் மாறுகிறது. இன்று
நாம் பார்க்கும் பார்வைதான் நம் வாழ்வை தீர்மானிக்கிறது.
ஆக, இந்தப் பார்வை நேர்முகமாக இருக்கிறதா அல்லது
எதிர்மறையாக இருக்கிறதா?
2. திறமை. திறமை வாய்ந்த மனையாள் எப்படி இருப்பாள் என்பதை
இன்றைய முதல் வாசகம் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது.
திறமையும், உழைப்பும் அவளை உயர்த்துவதுடன், அவள்
மேற்கொள்ளும் அனைத்துக் காரியங்களிலும் அவளுக்கு
வெற்றியைக் கொடுக்கின்றன.
3. விழிப்பு. 'ஆகவே மற்றவர்களைப் போல நாம் உறங்கலாகாது.
விழிப்போடும் அறிவுத்தெளிவோடும் இருப்போம்' என தெசலோனிக்க
நகர் திருச்சபைக்கு அறிவுறுத்துகின்றார் தூய பவுல்
(இரண்டாம் வாசகம்). ஒற்றைத் தாலந்து பெற்றவன் தன்
தாலந்தைக் காக்க விழித்திருந்தானே தவிர, அதைப் பெருக்க
அல்ல. விழிப்பு நிலை என்பது இருப்பதை அப்படியே
வைத்திருத்தல் அல்ல. மாறாக, தொடர்ந்து முன்னேறுதல்.
இறுதியாக, இன்றைய 'ஏழையர் தினத்திற்கும்,' 'இறைவாக்கு
வழிபாட்டிற்கும்' எப்படி முடிச்சு போடுவது?
ஏழைகளுக்கு இருக்கும் மூன்று உணர்வுகளை ஒற்றைத் தாலந்து
நமக்கு உணர்த்துகிறது: (அ) பயம், (ஆ) சோம்பல், (இ) பயனறு
மனம். இந்த மூன்று உணர்வுகள் நம்மிலும் சில நேரங்களில்
துலங்கலாம். 'எனக்கு இன்னும் வேண்டும்' என்ற ஆலிவர்
டுவிஸ்ட் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இன்றைய சமுதாயம்,
'அதிகம் வைத்திருத்தலே நலம்' என்று கற்பிக்கிறது. 'இன்னும்
அதிகம்,' 'இன்னும் அதிகம்' என நம்மை ஓடச் செய்கிறது.
கதையில் வரும் தலைவனும் இதே ஓட்டத்தோடுதான் இருக்கிறான்.
இன்று இவ்வாறு ஓட முடியாமல் நிற்பவர்களே ஏழைகள். இவ்வாறு
ஓட முடியாதவர்களும் மதிப்பிற்குரியவர்களே என்பதை நாம்
ஏற்றுக்கொள்வோம்.
இன்றும் இவர்களிடமிருந்து பறிக்கப்படுகின்ற ஒற்றைத்
தாலந்துகள் ஏராளம்.
ஒற்றைத் தாலந்தும் இல்லாமல் கலங்கி நிற்பவர்களை,
அழுகையிலும் அங்கலாய்ப்பிலும் இருப்பவர்களைத் தேடிச் செல்ல
இன்றைய நாள் நமக்கு அழைப்பு விடுக்கிறது.
வாழ்க்கை எல்லாரையும் ஒரே போல நடத்துவதில்லை.
சிலரை மயிலிறகால் வருடிக் கொடுக்கிறது.
சிலரை செங்கல்லால் முகத்தில் அறைகிறது.
வாய்ப்புக்களும், வசதிகளும், தாலந்துகளும் எல்லாருக்கும்
பொதுவானதும், சமமானதும் அல்ல. அவர் நினைக்கிறார். அவர்
கொடுக்கிறார். அவர் எடுக்கிறார்.
'எல்லாம் அவருடையதே' - இந்த மனநிலையோடுதான் ஒற்றைத்தாலந்து
பெற்றவன் வாழ்ந்தான். இதுதான் ஏழைகளின் மனநிலை.
இந்த மனநிலையே மகிழ்ச்சி தரும் மனநிலை.
அருட்பணி.இயேசு கருணாநிதி.
சிறையில் சான்று பகர்ந்தவர்:
கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்ததற்காக மறைப்பணியாளர் ஒருவர்
கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அவர் அடைக்கப்பட்ட
சிறையில் நாத்திகர், ஆத்திகர், கம்யூனிஸ்ட் என்று பலதரப்பட்ட மனிதர்கள்
இருந்தார்கள். அவர்கள் அனைவரும் தூக்கிலிடப்படுவதற்காக இருந்தார்கள்.
இன்னும் சில நாள்களில் தாங்கள் தூக்கிலிடப்படப் போகிறோம் என்பதை
நினைத்து, அவர்கள், சுவர்களில் அதிகாரிகளைப் பற்றி அசிங்க அசிங்கமாக
எழுதி வைத்தார்கள். அதைப் பார்த்துவிட்டு மறைப்பணியாளர்,
"ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச
வேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்"
(மத் 10: 28) என்று எழுதிவிட்டு, அதற்குக் கீழ், யோவான் 3:16 இல்
இடம்பெறும் இறைவார்த்தையை முழுவதுமாக எழுதி வைத்தார்.
எல்லாரும் அதை வியப்போடு பார்த்துக் கொண்டிருக்கும்போது, அவர் அருகில்
வந்த இளைஞன் ஒருவன், "இன்று மாலை நான் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட
இருக்கின்றேன். கிறிஸ்துவைப் பற்றி அறியாத நான், சாவை எப்படி அணுகுவது
என்று அஞ்சிக் கொண்டிருந்த வேளையில், கடவுள் பேரன்புமிக்கவர் என
நீங்கள் எனக்குக் காட்டியிருக்கின்றீர்கள். இனிமேல் நான் சாவைத்
துணிவோடு எதிர்கொள்வேன். நிச்சயம் உங்களை விண்ணகத்தில் சந்திப்பேன்"
என்று கண்களில் நீர் மல்க சொன்னான்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற மறைப்பணியாளர் நற்செய்திக்காகச்
சிறையில் அடைக்கப்பட்ட போதிலும், அங்கே கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை
அறிவித்து, அவரைப் பற்றி அறியாத ஒருவரைக் கிறிஸ்துவுக்குள் கொண்டு
வந்து சேர்த்தார். பொதுக் காலத்தின் முப்பத்து மூன்றாம் ஞாயிறான இன்று
நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நமக்குக் கிடைக்கின்ற வாய்ப்புகளில்
நாம், "இயேசுவுக்குச் சான்று பகர்வோம்" என்ற சிந்தனையைத் தருகின்றது.
அது குறித்து நாம் சிந்திப்போம்.
ஒவ்வொரு சூழ்நிலையும் சான்று பகர வாய்ப்பு!
எருசலேமில் முதல் கோயிலைக் கட்டியவர் தாவீதின் மகனான சாலமோன்.
தாவீதுதான் ஆண்டவருக்கென முதன்முதலில் கோயிலைக் கட்ட நினைத்தாலும்,
அவர் போரில் மிகுதியான குருதியைச் சிந்தியதால், அவரால் கோயில் கட்ட
முடியவில்லை (1 குறி 8:22). சாலமோனால் கட்டப்பட்ட எருசலேம்
திருக்கோயில் பாபிலோனியப் படையெடுப்பின்போது அழிக்கப்பட்டது. அதன்பிறகு
பாபிலோனிலிருந்து திரும்பி வந்தவர்கள் செருபாபேலின் தலைமையில்
மீண்டுமாக அங்கே கோயிலைக் கட்டி, கி.மு. 515 ஆம் ஆண்டு, அதைப் புனிதப்படுத்தினர்.
இதன்பிறகு இதுமேயனாகிய ஏரோது மன்னன், யூதர்களை மகிழ்ச்சிப்பட்ட
எருசலேம் திருக்கோயிலின் வேலையைத் தொடங்கினான். இது கோயிலைப்
புதுப்பிக்கும் பணியே என்று திருவிவிலிய அறிஞர் சொல்வர். இதற்காக
எடுத்துக் கொள்ளப்பட்ட ஆண்டுகள் மொத்தம் 46. இக்கோயிலுக்கு வசதி
படைத்தவர்கள் பொன், வெள்ளி என்று பலவற்றையும் நேர்ச்சையாகக்
கொடுத்தார்கள். அவை கோயில் சுவரில் பதித்து வைக்கப்பட்டன. பெரிய
உலக அதிசயம் போல் இருந்த இந்தக் கோயிலைப் பார்த்துவிட்டுத்தான்
இன்றைய நற்செய்தியில் சிலர், வியந்து பேசுகின்றார்கள். அப்போதுதான்
இயேசு அதன் அழிவைப் பற்றிப் பேசுகின்றார்.
இயேசு இவ்வாறு சொன்னதும், "இவை நிகழப்போகும் காலத்திற்கான
அறிகுறிகள் என்ன?" என்று அவர்கள் கேட்கின்றார்கள். போலி
இறைவாக்கினர்கள் வருவார்கள், உலகில் பெரிய மாற்றங்கள் ஏற்படும்
என்று அவர்களிடம் சொல்லிக் கொண்டே போகும் இயேசு, "என் பெயரின்
பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் உங்களை இழுத்துச் செல்வர்கள்.
எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும்" என்கிறார்.
எருசலேம் திருக்கோயிலுடைய அழிவின் பின்னணியில் இயேசுவில் பதில்
இருந்தாலும், அது இறுதி நாள்களில் என்னென்னவெல்லாம் நடக்கும்
என்பதற்கான விளக்கமாக இருக்கின்றது. மற்றவர்களுக்கு வேண்டுமானால்
கிறிஸ்தவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் சாதாரணமானவையாக
இருக்கலாம். கிறிஸ்தவர்களைப் பொறுத்தளவில், அவை இயேசுவுக்குச்
சான்று பகர்வதற்கான வாய்ப்பு. அதனால் எவ்வளவு பெரிய துன்பம்
வந்தாலும், இயேசுவுக்குச் சான்று பகர்வதை நாம் நிறுத்திக்
கொள்ளக்கூடாது.
எப்படிச் சான்று பகர்வது?
அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்லப்படுவது சான்று
பகர்வதற்கான வாய்ப்பு என்று நற்செய்தியில் இயேசு சொல்கின்றார்
எனில், இன்றைய இரண்டாம் வாசகத்தில், பவுல், நாம் எப்படி
இயேசுவுக்குச் சான்று பகர்வது என்பது பற்றிப் பேசுகின்றார்.
தெசலோனிக்கர்கள், ஆண்டவரின் நாள் அண்மையில் இருக்கின்றது என்று
உழைக்காமல், சோம்பித் திரிந்தார்கள். அதைவிடவும் அவர்கள்
மற்றவர்களுடைய வேலைகளில் தலையிட்டார்கள். இதை அறிந்த பவுல்,
அவர்கள் எப்படி வாழவேண்டும் என்று விளக்கம் கூறுகின்ற ஒரு
பகுதிதான் இன்றைய இரண்டாம் வாசகம்.
"வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே" (மத் 10:10) என்ற இயேசுவின்
வார்த்தையின் அடிப்படையில், மக்களுக்கு இறைவார்த்தையை அறிவித்த
பவுல், அவர்களிடமிருந்து உணவையும் வேண்டியதையும் பெற உரிமை உடையவர்
என்றாலும், அவர் நற்செய்தி அறிவித்த நேரம் போக கூடாரம் செய்யும்
வேலையைச் செய்து வந்தார் (திப 18:3). இவ்வாறு அவர் மக்களுக்கு
முன்மாதிரி காட்டினார். அதனால்தான் பவுல், இன்றைய இரண்டாம்
வாசகத்தின் தொடக்கத்தில், என்னைப் போன்று ஒழுகுங்கள் என்கிறார்.
பவுல் இவ்வாறு சொல்லக் காரணம், அவர் மறு கிறிஸ்துவாக
வாழ்ந்ததால்தான் (கலா 2:20; 1 கொரி 4:16,17). அதனால் நாம் எப்படிச்
சான்று பகரவேண்டும் என்றால், இயேசுவைப் போன்று வாழ்ந்து, சான்று
பகரவேண்டும்.
சான்று பகர்வோருக்கு கிடைக்கும் கைம்மாறு!
எல்லாச் சூழ்நிலையிலும் சான்று பகரவேண்டும், இயேசுவைப் போன்று
வாழ்ந்து, சான்று பகரவேண்டும் என்பன பற்றிச் சிந்தித்த நாம்,
சான்று பகர்வோருக்குக் கிடைக்கும் கைம்மாறு என்ன என்பதைப் பற்றிச்
சிந்திப்போம்.
ஆண்டவரின் நாளைப் பற்றிப் பேசும் இறைவாக்கினர் மலாக்கி, அந்நாளில்
ஆணவக்காரர், கொடுமை செய்வோர் சுட்டெரிக்கப்படுவர் என்று
சொல்லிவிட்டு, ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர்மீது நீதியின் கதிரவன்
எழுவான். அவனுடைய இறக்கைகளில் நலம் தரும் மருந்து இருக்கும்
என்கிறார். ஆண்டவருக்குச் சான்று பகர்வோரை ஆண்டவரின்
திருப்பெயருக்கு அஞ்சி வாழ்வோர் என்றும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.
அத்தகையோர் மேல் நீதியின் கதிரவனாகிய இயேசுவின் ஆசி என்றும் தங்கி
இருக்கும்.
கிறிஸ்தவர்கள் என்பதற்காகவே இன்றும் பல இடங்களிலும்
துன்புறுத்தல்களும் கொடுமைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
அவற்றைக் கண்டு நாம் அஞ்சத் தேவையில்லை. ஏனெனில், அவையெல்லாம்
இயேசுவைப் பற்றிச் சான்று பகர்வதற்கான வாய்ப்பே. இதை
உணர்ந்தவர்களாய் நாம் இயேசுவுக்குச் சான்று பகர்வோம்.
சிந்தனைக்கு:
'கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் அவரைப் பற்றி
அறியாதவர்களுக்குச் சான்று பகரவேண்டும் என்றே கடவுள்
விரும்புகின்றார்' என்பார் பில்லி கிரகாம் என்ற மறைப்பணியாளர்.
எனவே, நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்வாலும் வார்த்தையாலும்
கிறிஸ்துவுக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
I மலாக்கி 4: 1-2a
II 2 தெசலோனிக்கர் 3: 7-12
III லூக்கா 21: 5-19
'இறுதிவரை மனவுறுதியோடு இரு'
கொரியாவில் ஜூன்-கோன் கிம் (Joon-Gon Kim) என்றொரு
கிறிஸ்தவத் தலைவர் இருந்தார். கிறிஸ்துவின்மீது ஆழமான
நம்பிக்கை கொண்டிருந்த அவர், கிறிஸ்துவைக் குறித்து
மக்களிடம் மிகத் துணிச்சலாக அறிவித்து வந்தார். நாள்கள்
செல்லச் செல்ல, ஜூன்-கோன் கிம் மட்டுமல்லாது, அவருடைய
தந்தையும் அவருடைய மனைவியும் கிறிஸ்துவைக் குறித்து
நற்செய்தியை மக்கட்கு அறிவிக்கத் தொடங்கினார்கள்.
இது அங்கிருந்த கம்யூனிஸ்ட்கட்குக் கொஞ்சம்கூடப்
பிடிக்கவில்லை. அவர்கள் ஜூன்-கோன் கிம்மிடமும் அவருடைய
தந்தையிடமும் மனைவியிடமும் கிறிஸ்துவைக் குறித்து
நற்செய்தியை யாருக்கும் அறிவிக்கக்கூடாது... மீறினால்
கொலைசெய்யப்படுவீர்கள் என்று எச்சரிக்கப்பட்டார்கள்.
அவர்கள் அதற்கெல்லாம் அஞ்சாமல் கிறிஸ்துவைக் குறித்து
நற்செய்தியை மக்கட்குத் தொடர்ந்து அறிவித்து வந்தார்கள்.
ஒருநாள் ஜூன்-கோன் கிம்மின் தந்தையும் அவருடைய மனைவியும்
ஒரு பொது இடத்தில் கிறிஸ்துவைக் குறித்து நற்செய்தியை
அறிவித்துக் கொண்டிருக்கும்போது, அங்கு வந்த
கம்யூனிஸ்டுகள், அவர்கள் இருவரையும் அடித்தே கொன்றார்கள்;
அதைப் பார்த்துவிட்டுக் கூட்டம் சிதறி ஓடியது. செய்தி
அறிந்த ஜூன்-கோன் கிம் மிகுந்த வேதனை அடைந்தார். 'தன்னுடைய
தந்தையையும் மனைவியையும் கயவர்கள் இப்படிக்
கொன்றுபோட்டுவிட்டார்களே' என்று அவர் அவர்களைப்
பழித்துரைத்துக் கொண்டிருக்காமல், அவர்களை மனதார
மன்னித்தார். மட்டுமல்லாமல், அவர்கள் மனமாற்றம்
பெறவேண்டும் என்று இறைவனிடம் மன்றாடிவந்தார்.
இதற்குப் பின்பு அவர் புதிய உத்வேகத்துடன் கிறிஸ்துவைக்
குறித்து நற்செய்தி அறிவிக்கத் தொடங்கினார். எல்லாம்
நன்றாகச் சென்றுகொண்டிருந்த தருணத்தில், ஒருநாள் அவர்
நற்செய்தியை அறிவித்துவிட்டு, தன்னுடைய இல்லத்திற்குத்
திரும்பிக்கொண்டிருந்தபோது, முன்பு அவருடைய தந்தையையும்
மனைவியும் கொன்றுபோட்ட அதே கயவர்கள் அவர்மீது பாய்ந்து,
அவரை அடித்துக் குற்றுயிராய்ப் போட்டுவிட்டுச்
சென்றார்கள். அந்த நேரத்தில் தற்செயலாக அங்கு வந்த
ஜூன்-கோன் கிம்மிற்கு அறிமுகமான ஒருவர் அவரை
மருத்துவமனைக்குக் கொண்டுசென்று, காப்பாற்றினார். இந்தக்
கொடிய நிகழ்விற்குப் பிறகு ஜூன்-கோன் கிம்மிற்குத்
தெரிந்தவர்களெல்லாம், அவரிடம் கிறிஸ்துவைக் குறித்து
நற்செய்தி அறிவிப்பதை விட்டுவிடுமாறு கெஞ்சிக்கேட்டார்கள்.
அவரோ, "நற்செய்தி அறிவிப்பது என்னுடைய கடமை. அந்தக் கடமையை
என்னுடைய உயிர் உள்ளவரை ஆற்றுவேன்" என்றார்.
நன்றாக உடல்நலம் தேறியதும் ஜூன்-கோன் கிம் முன்பைவிட
மிகுந்த வல்லமையோடு கிறிஸ்துவைக் குறித்து நற்செய்தி
அறிவிக்கத் தொடங்கினார். இதைப் பார்த்துவிட்டு அவருடைய
எதிரிகள் ஆச்சரியப்பட்டார்கள். நாள்கள் மெல்ல
நகர்ந்துகொண்டு சென்றன. ஜூன்-கோன் கிம் கிறிஸ்துவைப்
பற்றித் தொடர்ந்து நற்செய்தி அறிவித்துவந்தார். அதே
நேரத்தில் தன்னுடைய எதிரிகட்காக இறைவனிடம் மன்றாடியும்
வந்தார். இதனால் யாரெல்லாம் அவருடைய தந்தையுயையும்
மனைவியையும் கொன்றுபோட்டு, அவரை அடித்துத்
துன்புறுத்தினார்களோ, அவர்களே அவரிடம் வந்து மன்னிப்புக்
கேட்டு, கிறிஸ்துவைத் தங்களுடைய ஆண்டவராகவும் மீட்பராகவும்
ஏற்றுக்கொண்டார்கள்.
ஜூன்-கோன் கிம், 'எதிரிகள் தன்னுடைய தந்தையையும்
மனைவியையும் கொன்றுபோட்டுவிட்டார்கள்... அதனால்
கிறிஸ்துவைக் குறித்து நற்செய்தியை அறிவிப்பதை
விட்டுவிடவேண்டும்' என்று நினைக்காமல், மனவுறுதியோடு
கிறிஸ்துவின் நற்செய்தியை மக்கட்கு அறிவித்து வந்தார்.
இதனால் எதிரிகளே அவர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு
மனம்மாறினார்கள். ஜூன்-கோன் கிம்மைப் போன்று நாமும்
இறுதிவரை மனவுறுதியோடு இருந்து ஆண்டவர்க்குச்
சான்றுபகரவேண்டும். அதைத்தான் இன்றைய இறைவார்த்தை
எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
ஏமாறவேண்டாம்!
இன்றைய நற்செய்தி வாசகம் எருசலேம் திருக்கோயிலின் அழிவு
குறித்தும் மானிடமகனுடைய வருகையின்போது நிகழும்
அடையாளங்கள் குறித்தும் இறுதி நாளைக் குறித்தும் எடுத்துக்
கூறுகின்ற அதேவேளையில், நாம் நம்முடைய வாழ்வை எப்படி
வாழவேண்டும் என்பது குறித்த ஒருசில தெளிவுகளைத்
தருகின்றது. அவை குறித்து இப்போது சிந்தித்துப்
பார்ப்போம்.
இயேசு கிறிஸ்து, இறுதிநாளைக் குறித்துப் பேசுகின்றபோது
சொல்லக்கூடிய முதலாவது செய்தி, 'ஏமாறவேண்டாம்' என்பதாகும்.
யாரிடம் ஏமாறவேண்டும் என்பதையும் இயேசு மிக அழகாக
எடுத்துச் சொல்கின்றார். இயேசுவின் காலத்தில் பலர்
தாங்கள்தான் மெசியா... காலம் நெருங்கிவந்துவிட்டது...
என்றுசொல்லி மக்களை மூளைச் சலவை செய்து ஏமாற்றிவந்தார்கள்.
இன்றைக்கும் பலர் அப்படியொரு செயலில் ஈடுபடுவதைக்
காணமுடிகின்றது. இவர்களிடம்தான் யாரும் ஏமாறவேண்டாம் என்று
இயேசு உறுதியாகச் சொல்கின்றார். காரணம், அந்த நாளையும்
வேளையையும் பற்றித் தந்தை ஒருவரைத் தவிர வேறு யாருக்கும்
தெரியாது (மத் 24: 36). தந்தை ஒருவருக்குத்தான் அந்த
நாளைப் பற்றி, அந்த வேளையைப் பற்றித் தெரியும் என்பதால்,
யாரும் ஏமாறவேண்டாம் என்று இயேசு கூறுகின்றார்.
திகிலுறவேண்டாம்!
இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்கின்ற இரண்டாவது செய்தி,
திகிலுறவேண்டாம் அல்லது அஞ்சவேண்டாம் என்பதாகும். எவற்றைக்
குறித்துத் திகிலுறவேண்டாம் என்றால், உலகில் ஏற்படும்
இயற்கைப் பேரிடர்கள், போர்கள், கலவரங்கள் போன்றவற்றைக்
குறித்து ஆகும். ஒருசிலர் உலகில் நடைபெறும் போர்கள்,
இயற்கைப் பேரிடர்கள் ஆகியவற்றைக் கண்டு, 'கடவுள் இவ்வுலகை
அழிப்பதற்குத்தான் இதுபோன்ற இயற்கைப் பேரிடர்களை
அனுப்புகின்றார்' என்று பேசுவதுண்டு. இத்தகையோர் கடவுள்
தன் திருமகன் இயேசுவை இந்த உலகை அழிப்பதற்கு அல்ல,
வாழ்வுகொடுக்கவே அனுப்பினார் (யோவா 10:10) என்ற உண்மையை
உணர்வது நல்லது. மேலும் புனித பவுல் எபேசியர்க்கு எழுதிய
திருமுகத்தில் கூறுவதுபோல், கடவுள் தமது திருவுளத்தின்
திட்டத்தின்படி அனைத்தையும் செயல்படுத்தி வருகின்றார் (எபே
1:11). ஆகையால், நிகழும் பலவகையான இயற்கைச் சீற்றங்களைக்
குறித்து அஞ்சிக் கொண்டிருக்காமல், அஞ்சாமல் ஆண்டவரிடம்
நம்பிக்கைகொண்டு வாழ்வது சிறப்பானது.
கவலைப்படவேண்டாம்!
நற்செய்தியில் இயேசு சொல்கின்ற மூன்றாவது செய்தி,
கவலைப்படவேண்டாம் என்பதாகும். எவற்றைக் குறித்த கவலை
என்றால், கிறிஸ்து இயேசுவைக் குறித்து அறிவித்து, சான்று
பகர்கின்றபோது மக்களிடமிருந்தும் சொந்தக்
குடும்பத்திடமிருந்தும் வரும் எதிர்ப்புகள், துன்பங்கள்,
வேதனைகள் ஆகியவற்றால் வரும் கவலை. இவற்றிற்காக நாம்
கவலைப்படவேண்டாம் என்பதுதான் இயேசு நமக்குச் சொல்லும்
செய்தி.
நாம் ஏன் கவலைப்படவேண்டாம் என்பதற்கான காரணங்களையும் இயேசு
சொல்கின்றார். அவைதான் இறைவன் தரும் நாவன்மை, பாதுகாப்பு,
உடனிருப்பு ஆகியவையாகும். ஆம், இறைவன் தருகின்ற
பாதுகாப்பையும் உடனிருப்பையும் ஆசியையும் ஒருவர்
உணர்ந்துகொண்டால், அவர் யாருக்கும் எதற்கும் கவலைப்படத்
தேவையில்லை. இவற்றைவிட இன்னொரு முக்கியமான செய்தியையும்
இயேசு சொல்கின்றார், அதுதான் இறுதிவரை மனவுறுதியோடு
இருப்பது. கிறிஸ்துவின் மதிபிடுகளின்படி வாழ்கின்றபோது
எதிர்வரும் துன்பங்கள், சாவால்கள் யாவற்றைக் கண்டு
அஞ்சாமல், மனவுறுதியோடு இருந்தால், நம்மால் நிச்சயம்
நம்முடைய வாழ்க்கைக் காத்துக்கொள்ளலாம். ஆகையால், நாம்
இறுதிவரை மனவுறுதியோடு இருந்து ஆண்டவர்க்குச் சான்றுபகர
முயற்சி செய்வோம்.
சிந்தனை
'சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள்; எனவே
அஞ்சாதிருங்கள்' (மத் 10: 31) என்பார் இயேசு. ஆகையால்,
நாம் ஆண்டவரைத் தவிர வேறு யாருக்கும் எதற்கும் அஞ்சாமல்,
மனவுறுதியோடு இருந்து, ஆண்டவர்க்குச் சான்று பகர்வோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
-மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்
வில்லியம் மில்லர் என்ற பிரிவினை சபைப் போதகர் 19ஆம்
நூற்றாண்டில் வாழ்ந்தவர். 1843ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி
முதல் 1844ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதிக்குள் உலகம் அழியும்
என்றார். ஆயிரக் கணக்கானோர் இந்தப் போதனையைக் கேட்டு நிலபுலன்களை
விற்று, வீட்டையும் விற்று செலவு செய்து அந்த நாளுக்காகக்
காத்திருந்தனர். ஆனால் அவர் சொன்னதுபோல ஒன்றும் நடக்கவில்லை.
இதேபோல் எத்தனையோபேர் உலகம் முடியும் என்றும், சீக்கிரம்
இயேசு வருவார் என்றும் போதித்தனர். போதித்தும் வருகிறார்கள்.
ஏன் புனித பவுல் அடிகளார் காலத்திலே, தெசலோனிய மக்கள் தொடங்கிவிட்டார்கள்.
இஸ்ரயேல் மக்களைப் பொறுத்தவரையில் எருசலேம் ஆலயம் அழிவு
உலகத்தின் முடிவுக்கு அடையாளம். எனவேதான் இயேசு எருசலேம்
அழிவை முன்னறிவித்தபோது உலகமும் முடிவுக்கு வரும் என்று யூதர்கள்
நம்பினார்கள்.
உலகம் முடியும் என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்க
முடியாது. அந்த நாளையும், வேளையையும் பற்றித் தந்தைக்குத்
தவிர (மாற்கு 13:32) மகனுக்கோ, விண்ணகத் தூதர்களுக்கோ
கூடத் தெரியாது. "இதோ சூளையைப்போல் எரியும் அந்த நாள்
வரும்" என்கிறார் இறைவாக்கினர் மலாக் (முதல் வாசகம்).
போர்க்குழப்பங்களையும், குழப்பங்கள் பற்றிக்
கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள். ஏனெனில் இவை முதலில்
நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது. பல
இடங்களில் பஞ்சமும், கொள்ளை நோயும் ஏற்படும். அச்சுறுத்தக்
கூடிய பெரிய அடையாளங்கள் வானில் தோன்றும் (லூக். 21:9-12)
என்கிறார் இயேசு (மூன்றாம் வாசகம்).
இயேசுவின் வருகைக்காக நாம் செய்ய வேண்டியவை:-
1. நிகழ்காலத்தில் வாழ வேண்டும்
ஆண்டவரின் நாள் எப்போது வரும் என்று தெரியாத காரணத்தால்
நாம் மனப்பக்குவத்துடன் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
நாளை மனம் திரும்பிக் கொள்ளலாம், அடுத்த வாரத்தில் புதிய
வாழ்வு வாழலாம், பின்னால் ஆண்டவரைத் தேடிக் கொள்ளலாம்
என்று தள்ளிப் போடுவதுதான் மடமை, முட்டாள்தனம். மூடி
(Moodi) என்ற உலகப் புகழ் பெற்ற போதகர் எப்போதும்
மகிழ்ச்சியோடு இருப்பார். இதன் இரகசியம் என்ன? என்று
கேட்டபோது, "நான் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த
மறையுரையை முடிக்கும் முன்பே ஆண்டவர் வந்தாலும் வந்து
விடுவார் என்ற மனநிலையோடு வாழ்கிறேன்" என்றாராம்.
விழிப்பாக இருங்கள், அந்த நேரம் எப்போது வரும் என்று
தெரியாது (மாற்.13:33).
2. கழன உழைப்புத் தேவை
புனித பவுல் அடிகளாரின் போதனையைக் கேட்ட தெசலோனிக்கிய
மக்களில் சிலர் உழைப்பதை விட்டு விட்டு. இயேசுதான்
விரைவில் வரப்போகிறாரே பின் ஏன் உழைக்க வேண்டும்? கடின
உழைப்பு உழைக்கத் தேவையில்லை என்று திருச்சபையின் பொதுச்
சொத்தில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தனர். இப்படிப்பட்ட
மக்களுக்குச் சாட்டையடி கொடுக்கும் வகையில்தான் இந்த
இரண்டாம் திருமுகத்தை எழுதுகிறார் புனித பவுல். உழைக்க
மனமில்லாதவன் எவரும் உண்ணலாகாது. ஒழுங்காகத் தங்கள்
வேலையைச் செய்து. தாங்கள் உண்ணும் உணவுக்காக உழைக்க
வேண்டும் என்றார் (இரண்டாம் வாசகம்).
3. சான்று பகரக்கூடிய வாழ்வு
உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள். என் பெயரின்
பொருட்டு அரசரிடமும், ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள்,
சிறையில் அடைப்பார்கள் (லூக். 21:12-13). இவை எனக்குச்
சான்று பகர உங்களுக்கு வாய்ப்பளிக்கும் என்கிறார் இயேசு.
ஆண்டவருக்குச் சான்று பகரும் வாழ்வு வாழ்ந்தோம் என்றால்
நாம் வாழ்வின் நாளை எதிர்நோக்கி இருப்போம். இல்லையென்றால்
அந்த நாள் அழிவு நாளாகத்தான் இருக்கும். எனவே ஆண்டவரின்
வருகையை எதிர்பார்த்திருக்கும் நீங்கள்
மாசுமறுவற்றவர்களாய் நல்லுறவு கொண்டவர்களாய் காணும்
வகையில் முழு முயற்சி செய்யுங்கள் (2பேதுரு:3:10-14) என்று
கூறுகிறார் திருத்தூதர் பேதுரு.
இன்றைய நற்செய்தியிலே இயேசு நமக்கு ஞானத்தைத் தருவதாகக்
கூறுகின்றார். இயேசு வாக்கு மாறாதவர். ஆகவே நம் நல்வாழ்விற்குத்
தேவையான ஞானத்தை இயேசுவிடம் கேட்போம்.
இதோ ஞானம் என்றால் என்ன? என்பதைச் சுட்டிக் காட்ட ஒரு
நிகழ்வு !
பெரிய ஞானி ஒருவர் ஒரு காட்டுக்குள்ளே வாழ்ந்து
வந்தார். அவரிடம் ஞானம் பெறச் செல்கின்றவர்கள் ஐந்து
ஆண்டுகள் அவர் சொல்லும் பாடத்தைக் கவனிக்க வேண்டும்.
இது ஒரு நிபந்தனை. அவரிடம் அந்த சமயத்தில் ஐம்பது
சீடர்கள் இருந்தார்கள். அன்று ஐந்து வருடங்களின் கடைசி
நாள். மறு நாள் சீடர்கள் வீட்டுக்குச் செல்லும் நாள்.
ஞானம் பெற்றுவிட்டீர்களா? என்று குரு சீடர்களைப்
பார்த்துக் கேட்டார். எல்லாரும், கடந்த ஐந்து
ஆண்டுகளாக கற்க வேண்டிய அனைத்தையும் உங்களிடமிருந்து
கற்றுக்கொண்டோம் என்றார்கள். குரு, உங்களைச்
சோதித்துப் பார்க்கலாமா? என்றார். சீடர்கள், நிச்சயமாக
என்றார்கள்.
குரு அவர்களைப் பார்த்து, இரண்டுபேர் ஒரு சாலையின்
வழியாக சென்றுகொண்டிருந்தார்கள்! திடீரென மழை கொட்டோ
கொட்டென்று கொட்டியது. இருவரில் ஒருவர் மட்டும்
நனைந்தார். இன்னொருவர் நனையவில்லை. அது எப்படி?
என்றார்.
சீடர்களிடமிருந்து பலவிதமான பதில்கள் வந்தன! சிலர்.
ஒருவரிடம் குடை இருந்திருக்கும் என்றனர். யாரிடமும்
குடையில்லை என்றார் குரு.சிலர், ஒருவரிடம் மழை கோட்
இருந்திருக்கும் என்றனர். குருவோ, யாரிடமும் மழை கோட்
இல்லை என்று சொல்லிவிட்டார். சிலர், அவருக்கு உதவி
செய்ய மரங்களோ, வீடுகளோ, தங்கும் விடுதிகளோ
இருந்திருக்கும் என்றனர். குருவோ, பாதையிலே மரங்களோ,
வீடுகளோ, சத்திரங்களோ இல்லை என்று சொன்னார்.
எல்லாச் சீடர்களும் எந்தப் பதிலையும் கூறமுடியாமல்
விழித்தனர். அப்போது குரு, அவர்களுக்கு உதவி செய்ய
எதுவுமே இல்லை, யாருமே இல்லை என்று நான் சொன்னேன்.
பிறகு எப்படி ஒருவர் மட்டும் நனையாமல் இருந்திருக்க
முடியும்? இரண்டுபேருமே மழையில் நனைந்தார்கள். இதுதான்
உண்மை. ஒருவர் மட்டும் நனைந்தார் என்று நான் சொன்னது
பொய். நீங்கள் என்னைப் பார்த்து . குருவே, நீங்கள்
சொல்வது பொய் என்று சொல்லியிருக்க வேண்டும் என்றார்.
சொல்வதையெல்லாம் உண்மை என்று நம்புகின்றீர்கள்!
சொல்வதில் உண்மையிருக்கின்றதா? என்பதை ஆராய்ந்து
தெளியும் ஆற்றல் உங்களிடம் இல்லை! எது பொய், எது உண்மை
என்பதை அறிந்துகொள்ளும் ஆற்றலுக்கும், அறிவுக்கும்
பெயர்தான் ஞானம்.
நீங்கள் இன்னும் ஞானம் பெறவில்லை. இன்னும் ஐந்து
ஆண்டுகள் என்னோடு தங்குங்கள் என்று கூறிவிட்டார்.
கிறிஸ்துவுக்குச் சான்று பகர நமக்கு ஞானம் தேவை.
முக்கியமாக நம்மை வெறுக்கின்றவர்கள், நம் மீது பழி
சுமத்துகின்றவர்கள் நடுவில் நாம் நிறுத்தப்படும் போது
அவர்களுக்குச் சரியான பதிலைத் தர நமக்கு ஞானம் தேவை
(நற்செய்தி).
ஞானம் என்பது நாம் படிப்பதினால், பார்ப்பதினால்,
தொடுவதினால். நுகர்வதினால், கேட்பதினால் மட்டும்
நமக்குக் கிடைக்கும் உலக அறிவு அல்ல. மாறாக ஞானம்
என்பது கடவுளால், ஆண்டவரின் ஆவியாரால் நமக்குக்
கொடுக்கப்படும் கொடை. ஞானம் நமக்குச் சொல் வளத்தை
அருளும் (1கொரி 12:8); ஞானம் கடவுளுக்கு அஞ்சி
நடக்கும் அறிவை நமக்குத் தரும் (முதல் வாசகம்) : ஞானம்
புனித பவுலடிகளாரைப் போல, திருத்தூதர்களைப் போல எப்படி
வாழவேண்டும் என்பதை நமக்குக் கற்பிக்கும் (இரண்டாம்
வாசகம்).
இன்று இதுவே நமது மன்றாட்டாக இருக்கட்டும் : இறைவா,
சாலமோனைப் போன்று, இன்று உம்மிடம் ஞானத்தைப்
கேட்கின்றோம். எது பொய்? எது உண்மை? எது சரி? எது நீதி
? எது அநீதி? எது பாவம்? எது புண்ணியம்? எது நல்லது?
எது உகந்தது? எது நிறைவானது? என்பதைப்
புரிந்துகொள்ளும், தெரிந்துகொள்ளும், உணர்ந்துகொள்ளும்
மனத்தைத் தாரும். எங்களை ஞானத்தால் நிரப்பி உம்
திருமுன் நாங்கள் என்றும் ஞானிகளாக வாழ அருள்
புரிந்தருளும். ஆமென். மேலும் அறிவோம் :
உலகம் தழீஇய(து) ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு (குறள் 425).
பொருள்:
உலகச் சான்றோருடன் தழுவிச் செல்வதே ஒருவருக்குரிய
இயல்பான அறிவாகும். அவ்வாறு பொருத்தி வாழும்போது,
இன்பத்தில் மகிழ்வதும் துன்பத்தில் வருந்துவதும்
இல்லாததே சிறந்த அறிவாகும்.
ஆடி மாதத்தில் ஏன் பலத்தக் காற்று வீசுகிறது? ஆடி
மாதத்தில் புதுத் தம்பதியர்களைப் பிரித்து விடுகின்றனர்.
பெண் தமது அம்மா வீட்டுக்குப் போய்விடுகிறார். இவ்வாறு
பிரிந்திருக்கும் தம்பதியர் ஒருவர் மற்றவரை நினைத்து
ஏக்கப் பெருமூச்சு விடுகின்றனர். அதுதான் பலத்தக் காற்றாக
வீசுகிறதாம்! புதுமையான மற்றும் புதிரான விளக்கம்!
மணமகன் கிறிஸ்து விண்ணகம் சென்றபின், அவரைப் பிரிந்த
மணமகளாகிய திருச்சபை அன்றிலிருந்து இன்றுவரை அவருடைய மறு
வருகைக்காக ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது.
தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் ஏக்கப் பெருமூச்சுவிட்டுக்
கூறியது: "மாரனாத்தா", அதாவது, 'ஆண்டவரே வருக' (1 கொரி
16:22). விவிலியத்தின் இறுதி ஏக்க மன்றாட்டு: "ஆண்டவராகிய
இயேசுவே, வாரும்" (திவெ 22:20). ஒவ்வொரு திருப்பலியிலும்
திருச்சபை ஏக்கத்துடன் கூறுவது: "எங்கள் ஆண்டவராகிய இயேசு
கிறிஸ்துவின் வருகையை மகிழ்ச்சியுடன்
எதிர்பார்த்திருக்கின்றோம்."
திருவழிபாட்டு ஆண்டின் இறுதிக் கட்டத்தில், திருச்சபை உலக
முடிவையும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையும் நமக்கு
நினைவூட்டுகின்றது. இன்றைய முதல் வாசகத்தில், கடவுள்
உலகுக்குத் தீர்ப்பு வழங்கும்நாளை "அந்தநாள்" என்று
குறிப்பிடுகின்றார் இறைவாக்கினர் மலாக்கி. அந்தநாள்
நெருப்பின் நாளாகவும் கடவுளுடைய வெஞ்சினத்தின் நாளாகவும்
அமையும். அந்த நாளில் ஆணவக்காரர் சுட்டெரிக்கப்படுவர்.
அந்த நாளில், பதிலுரைப்பாடல் கூறுவதுபோல, கடவுள் உலகுக்கு
நீதி வழங்கி, மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார்
(திபா 98:9), புதிய ஏற்பாடும் தீர்ப்பின் நாளை
'அந்நாள்கள்' என்றும் (மாற் 13:24). "ஆண்டவருடைய நாள்"
என்றும் (1 தெச 5:2) அழைக்கிறது.
ஆனால், அந்நாள் எப்போது வரும் என்றும், எப்படி வருமென்றும்
எவர்க்குமே தெரியாது. நீங்கள் நினையாத நேரத்தில் மானிட
மகன் வருவார் (மத் 24:44), ஆண்டவருடைய நாள் திருடனைப்
போலவும் (1 பேது 3:10), கருவுற்றிருப்பவருக்கு வேதனை
வருவது போலவும் (1 தெச 5:3) வரும், அந்த நாளைப் பற்றி அறிய
முயற்சி எடுப்பது முட்டாள்தனம் மட்டுமல்ல, இறை
நிந்தையுமாகும். "என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து
வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு
உரியது அல்ல" (திப 1:7) என்று கிறிஸ்துவே நமக்குத்
தெளிவாகக் கூறியுள்ளார்.
இன்றைய நற்செய்தியிலே (லூக் 21:5-19), கிறிஸ்து எருசலேம்
ஆலயத்தின் அழிவையும் உலக முடிவையும் இணைத்துக் கூறுகிறார்.
அவர் கூறியபடி கி.பி. 70-ஆம் ஆண்டிலே எருசலேம் ஆலயம் தரை
மட்டமாக்கப்பட்டது; எருசலேம் நகரும் எரியூட்டப்பட்டது.
எனவே உலக முடிவும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும்
உடனடியாக நிகழப்போகிறது என்று பலர் எதிர்பார்த்தனர். புனித
பவுலும் கூட அத்தகைய எண்ணம் கொண்டிருந்தார். ஆனால்
காலப்போக்கில் அவர் தம் எண்ணத்தை மாற்றிக் கெண்டார்.
கிறிஸ்துவின் இரண்டாம் வருகை விரைவில் வரப்போகிறது என்ற
எண்ணத்தில் தாங்களும் உழைக்காமல், மற்றவர்களையும் உழைக்க
விடாமல் தடுத்த ஒரு சிலருக்குப் பவுல், "உழைத்து வாழ
வேண்டும்; உழைக்காதவன் உண்ணக்கூடாது" என்று இன்றைய
இரண்டாம் வாசகத்தில் அறிவுரை வழங்குகின்றார் ( 2 தெச
3:10).
கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பாக இயற்கையில்
பல்வேறு விபரீதங்கள் நிகழும் என்று கிறிஸ்து இன்றைய
நற்செய்தியில் கூறுகிறார். அவை. முறையே. போலி
இறைவாக்கினர்களின் பொய்ப்பிரச்சாரம். போர்கள்,
நிலநடுக்கம், பஞ்சம், கொள்ளைநோய் முதலியன. இவையாவும்
உலகில் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்து கொண்டுதான்
இருக்கின்றன. அண்மையில் பல்வேறு நாடுகளில் மக்களைப்
பீதியில் சிக்கவைத்துக் கொண்டிருக்கும் நிலநடுக்கம்,
வெள்ளப் பெருக்கு, ஆழிப்பேரலைகள் என்று அழைக்கப்படும்
சுனாமி போன்றவை இதற்குச் சான்றாகும். எனினும் "உடனே முடிவு
வராது" (லூக் 21:9).
இத்தகைய சூழ்நிலையில் நமது மனநிலையும் செயல்பாடும்
எப்படியிருக்க வேண்டுமென்பதையும் கிறிஸ்து நமக்குச்
சுட்டிக் காட்டியுள்ளார். "நீங்கள் மன உறுதியோடு இருந்து
உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்" (லூக் 21:19). எனவே
நமக்குத் தேவைப்படுவது பொறுமையும் மனஉறுதியுமாகும். புனித
யாக்கோபு கூறுகிறார்: "சோதனையை மன உறுதியுடன் தாங்குவோர்
பேறுபெற்றோர். ஏனெனில் அவர்களது தகுதி
மெய்ப்பிக்கப்படும்போது. தம்மீது அன்பு கொண்டுள்ளோருக்குக்
கடவுள் வாக்களித்த வாழ்வாகிய வெற்றிவாகையினை அவர்கள்
பெறுவார்கள்" (யாக் 1:12).
"இக்காலக் குருக்களிடம் பொறுமை என்னும் அருட்சாதனம் இல்லை"
என்று ஒருவர் என்னிடம் கூறினார். பொறுமை என்ற பண்பை அவர்
ஓர் அருளடையாளத்துக்கு ஒப்பிட்டுக் கூறியது எனக்கு
வியப்பாக இருந்தது. இல்லறத்தார்க்கும் துறவறத்தார்க்கும்
இன்று அதிகமாகத் தேவைப்படுகிறது பொறுமை. ஒருவர் நிறைவு
உடையவராக இருக்க வேண்டுமென்றால், அவர் பொறுமையைப் போற்றி
ஒழுக வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
வானகத் தந்தை நிறைவுள்ளவர் (மத் 5:48); ஏனெனில் அவர்
'நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்' (திபா 103:8).
நிலக்கரி, வைரம் ஆகிய இரண்டுமே பூமிக்கு அடியிலுள்ள
கரிவகை. பூமியின் அழுத்தம் தாங்காமல் விரைவில் வெளிவருவது
தான் நிலக்கரி. ஆனால் பல நூறு ஆண்டுகளாகப் பூமியின்
அழுத்தத்தைப் பொறுத்துக் கொண்ட நிலக்கரிதான் வைரமாக
மாறுகிறது. சோதனைகளை மனஉறுதியுடன் தாங்கினால், நமது
விசுவாச வாழ்வு வைரமாகும். சோதனைகள் வருவது நம்மைச்
சிரமப்படுத்த அல்ல. மாறாகப் பட்டைதீட்ட என்பதை அறிவோம்.
தாம் அடையவிருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும்
பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்ட இயேசுவின்மீது நம்
கண்களைப் பதிய வைப்போம் (எபி 12:2). கடவுளுடைய
வார்த்தையைச் சீரிய செம்மனத்தில் ஏற்று மன உறுதியுடன் பலன்
தருவோம் (லூக் 8:15).
கடவுளுக்கு ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம்
ஆண்டுகள் ஒருநாள் போலவும் இருக்கின்றன.அவர் காலம்
தாழ்த்துவதில்லை. பொறுமையாக இருக்கிறார். எவரும் அழியாமல்,
எல்லாரும் மனம் மாற விரும்புகிறார் ( 2 பேது 3: 8-9).
இறுதிக்காலப் போதனை' என்று அழைக்கப்படும் இன்றைய நற்செய்தி
வாசகம் குழப்பமான ஒரு பகுதி. மக்களைக் குழப்புவதற்கென்றே
சில பிரிவினை சபையினர் பயன்படுத்தும் ஒரு பகுதி - இதோ இங்கே
போர், அதோ அங்கே புயல். நாளை காலை 9.59 மணிக்கு இயேசு வருகிறார்
என்ற வகையில்.
ஆனால் இந்த வாசகத்தில் ஒரு நிகழ்ச்சி அல்ல, நான்கு நிகழ்ச்சிகள்
அதுவும் நடந்தது. நடப்பது, நடக்க இருப்பது என்று காலத்தால்
வேறுபட்ட நிகழ்ச்சிகளையும் அவற்றுடன் தொடர்புடைய கருத்துக்களையும்
காணலாம்.
1. யூதர்களுடைய கண்ணோட்டத்தில் ஆண்டவருடைய நாள் (லூக்.
21:11,25-27). அது தீச்சூளையைப் போல் எரியும் நாள் (மலா.
4:1). திருடனைப் போல் வரும் நாள் (2 பேது. 3:10). கருவுற்றிருப்பவருக்கு
வேதனை வருவதுபோலத் திடீரென வரும் நாள் (1 தெச.5:3).
நினையாத நேரத்தில் வரும் நாள் (மத். 24:44). ஆண்டவரின்
நாள் தீயோருக்கு அழிவின் நாள் இருளின் நாள் (ஆமோஸ்.
5:18-20) ஆண்டவருக்கு அஞ்சி நடப்போருக்கு அது மீட்பின்
நாள், ஒளியின் நாள் (சாஞா 19:9).
2.எருசலேம் பேரழிவு (லூக். 21:6, 20, 24) "ஒரு காலம்
வரும். அப்போது கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி
இவையெல்லாம் இடிக்கப்படும். இது கி.பி. 70இல் நடைபெற்ற
வரலாற்று நிகழ்ச்சி.
3. இயேசுவின் இரண்டாம் வருகை (லூக். 21:27,28). தொடக்க
காலக் கிறிஸ்தவர்களின் ஏக்கப் பெருமூச்சு "மாரனாத்தா!"
(1கொரி 16:22). ஆண்டவரே வருக என்பது அதன் பொருள்.
விவிலியத்தின் இறுதி மன்றாட்டு "ஆண்டவராகிய இயேசுவே
வாரும்" (தி.வெ.22:20). திருப்பலியில் திருச்சபையின்
எதிர்பார்ப்பு "நாங்கள் நம்பியிருக்கும் பேரின்ப
வாழ்வையும் எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையையும்
மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கின்றோம்.'' நமது நம்பிக்கை
அறிக்கையின் கோட்பாடு "வாழ்வோருக்கும் இறந்தோருக்கும்
தீர்ப்பு வழங்க மீண்டும் வருவார்". ஆனால் இந்த வருகை காலக்
கணிப்புக்குள் அடங்காது. "அந்த நாளையும் வேளையையும்
பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது.
விண்ணகத்தில் உள்ள தூதருக்கோ, மகனுக்கோ கூடத் தெரியாது"
(மார்க். 13:32). "என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து
வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு
உரியது அல்ல" (தி.ப. 1:7). குறித்த காலம் நெருங்கிவிட்டது
என்று சொல்பவர்கள் பின்னே போகாதீர்கள் (லூக். 21:8).
போலிப் போதகர்களின் ஆவிக்குரிய கூட்டங்கள் பற்றிய
எச்சரிக்கை இது!
4.கிறிஸ்தவர்கள் சந்திக்கும் சமயக் கலவரங்கள் (லூக்.
21:12-13). இன்றைய நம் வாழ்வுக்கும் இது பொருந்தும்.
இயேசுவின் சாட்சிகளாக நமக்கு இது நல்லதொரு வாய்ப்பாகும்.
இவை அனைத்திலும் அச்சுறுத்தலை மட்டுமல்ல ஆறுதலான
வாக்குறுதியையும் பார்க்கிறோம்.
-நான் உங்களோடு இருப்பேன்.
-நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன் (லூக். 21:15).
-உங்கள் தலைமுடி ஒன்றைக் கூட ஒருவனும் ஒன்றும் செய்ய
முடியாது (லூக்.21:18).
இயேசுவின் வார்த்தைகளை எச்சரிக்கையாய்க் கொண்டு, அதனால்
வாழ்வுக்கான உறுதிப்பாட்டை உருவாக்கிக் கொள்வோம். நம்மைக்
காக்கும் கவசம் மன உறுதியே. எனவே "நீங்கள் மன உறுதியோடு
இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்"
(லூக்.21:19). இந்த உள்மன உறுதிப்பாடு இல்லாததால்தான்
நம்பிக்கையில் தளர்ச்சி. ஆழமற்ற கிறிஸ்தவ வாழ்க்கை.
உலக வரலாற்றில் உள்ளத்தைத் தொடும் மனந்திரும்புதல்கள்
உண்டு. திருத்தூதர் பவுல் போல. மாமன்னன் அசோகன்.
கலிங்கப்போரில் பிணக்காட்டைப் பார்த்து ஏற்பட்ட மனமாற்றம்.
அசோகன் புத்த சமயத்தைத் தழுவியதும், புத்த பிக்குகளை
மரியாதையுடன் நடத்தியதும் அவருடைய தம்பிக்குப்
பிடிக்கவில்லை. புத்த பிக்குகள் புலன் இன்பங்களை ஒதுக்கித்
தள்ளிவிட்டதாகப் பாசாங்கு செய்கிறார்கள். புலன் இன்பங்களை
ஒதுக்குவது சாத்தியமாகாது என்பது அவரது நினைப்பு.
தன் தம்பிக்குச் சரியான பாடம் கற்பிக்க நினைத்தார் மன்னர்.
அரசுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்ததாகக் கூறித்
தம்பியைச்சிறையில் அடைத்தார். ஏழு நாள் சிறைவாசம் எட்டாம்
நாள் தூக்குமேடை. ஏழுநாள்களிலும் தம்பி அனுபவிக்க உலக
இன்பங்கள் (பெண்கள் உட்பட)அனைத்துக்கும் ஏற்பாடு செய்தார்.
எட்டாம் நாள் சிறைக்கு வந்து, "நன்கு அனுபவித்தாயா?" என்று
கேட்டார். "இல்லை அண்ணா, எட்டாம் நாள் இறப்புப் பற்றிய
நினைவு அனுபவிக்க விடவில்லை".
"புத்த பிக்குகளும் அப்படித்தான். வாழ்க்கை நிலையற்றது.
உடல் அழியக்கூடியது என்ற உண்மைகளை அவர்கள்
உணர்ந்துவிடுவதால் புலனடக்கத்துடன் இருப்பது அவர்களுக்குச்
சாத்தியமாகிறது".
நாளை என்னவானால் என்ன, இன்று அனுபவிப்போம் என்பவன் மொத்த
வாழ்வு பற்றி, இலட்சிய உணர்வுள்ள மனிதனாக இருக்க முடியாது.
உலக முடிவு என்பது உலக அழிவு அல்ல.பசுமையான வயல்களில்
பெண்கள் களையெடுக்கும் காட்சியைப் பார்க்கிறோம். 'ஐயோ,
நிலத்தைக் கொத்துகிறார்களே, பயிரை மிதிக்கிறார்களே,
மண்ணைப் புரட்டுகிறார்களே, வேரை அசைக்கிறார்களே' என்று
எவராவது அங்கலாய்ப்பார்களா?
இன்றைய வழிபாடு ஊட்டும் உணர்வு இதுதான்.
களையெடுன்ப்புக்குப் பின் வயல் காண்பது புதுப் பொலிவு.
கடைசித் தீர்ப்புக்குப் பின் உலகம் காண்பது புது மாட்சி.
புது உலகம், புதுமை உலகம், புனித உலகம்.
அதனால் அந்த நாள் நல்லவர்கள் மகிழும் நாள். நம்பிக்கையோடு
எதிர்நோக்கும் நாள். நின்று கொல்லும் தெய்வம் தன் நீதியை
நிலைநிறுத்தும் நாள். அழிவதெல்லாம் தீமையே! அந்தப் புதிய
உலகத்தில் எல்லாரும் நல்லவர். எல்லாரும் புனிதர்.
எத்தகைய உலகம் நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்? உலக
முடிவில் புதிய வானமும் புதிய வையமும், படைக்கப்படும்
என்பதுதானே விவிலியம் புதிய யுகமும், புதிய இனமும்
விளம்பும் உண்மை.
அந்த நிலையில் அந்த நாள் - ஆண்டவரின் நாள் தீயோருக்கு
அழிவின் நாள், இருளின் நாள். அந்த நாள்
"சிங்கத்திடமிருந்து தப்பியோடிய ஒருவனைக் கரடி ஒன்று
எதிர்கொண்டாற்போலும், அவன் தப்பியோடி வீட்டிற்குள்
நுழைந்து, சுவரில் கை வைத்துச் சாய்ந்தபோது பாம்பு
கடித்தாற்போலும் இருக்கும்" (ஆமேஸ் 5:18-20). உலகில்
குற்றம் செய்தவன் நீதியின்படி தண்டிக்கப்படாவிட்டால்,
குற்றங்கள் பெருகிவிடும். அடித்து வளர்க்காத குழந்தையும்
ஒடித்து வளர்க்காத முருங்கையும் ஒன்றுக்கும் உதவாது.
இறைவன் தண்டிப்பதுகூட மனிதனின் நன்மைக்காகவே!
ஆண்டவரின் நாள் அவருக்கு அஞ்சி நடப்போருக்கு மீட்பின்
நாளாக அமையும். எனவே அவர்கள், "நல்ல மேய்ச்சலைக் கண்ட
குதிரைகளைப்போல் துள்ளிக் குதித்துக் கொண்டும், ஆட்டுக்
குட்டிகளைப் போலத் துள்ளிக் கொண்டும், தங்களை விடுவித்த
ஆண்டவரைப் புகழ்ந்து போற்றும் நாளாக" (சா.ஞா. 19:9)
இருக்கும்.இவ்வாறு ஆண்டவரின் நாள் பற்றி எடுத்துரைக்கிறது
முதல் வாசகம்.
புனித ஹென்றி (978-1024) பவேரியா நாட்டின் சிற்றரசராக
இருந்தார். அவருக்கு ஆசிரியராக இருந்த புனித வேல் டிகாங்கு
இறந்த சில நாட்களில் அவர்முன் தோன்றி "சுவரில் உள்ளதைப்
படி" என்றார். அதில் "ஆறுக்குப்பின்" என்று
எழுதியிருந்தது. "ஆறு நாள்களுக்குப் பிறகு நானும்
இறப்பேன்" என்று எண்ணிக் கொண்டு புனித ஹென்றி இறப்பதற்குத்
தயாரானார். ஆறு நாள்களுக்குப் பிறகும் தான் வாழ்வதைக்
கண்டு "ஆறு மாதங்களில் இறப்பேனோ" என்று இறைவனைச்
சந்திக்கத் தயார்நிலையில் இருந்தார். ஆறு மாதங்களுக்குப்
பிறகு ஆறு ஆண்டுகளில் இறப்பேனோ என்று எண்ணி இறப்பதற்குத்
தன்னைத் தயாரித்தவராகவே இருந்தார். ஆறு ஆண்டுகளுக்குப்
பிறகும் அவர் இறக்கவில்லை. மாறாக உரோமைப் பேரரசராக முடி
சூட்டப்பட்டார்.
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச.
திருச்சி
பொதுக் காலத்தின் 33-ஆம் ஞாயிறு
இன்றைய வாசகங்கள்:-
மலாக்கி 4: 1-2
2 தெசலோனிக்கர் 3: 7-12
லூக்கா 21: 5-19
உலக முடிவை கைதட்டி இரசிக்க...
தத்துவ இயல் மேதைகளில் ஒருவரான சோரென் கீர்க்ககார்ட்
(Sren Kierkegaard) அவர்கள், நாடக அரங்கத்தை மையமாக
வைத்து, ஓர் உவமை கூறியுள்ளார்.
ஓர் அரங்கத்தில், அலைமோதும் கூட்டத்தின் நடுவே நாடகம் அரங்கேறி
வருகிறது. அடுத்தடுத்து வரும் காட்சிகள், ஒன்றையொன்று
விஞ்சும் அளவு விறுவிறுப்பாக இருப்பதால், மக்கள் தொடர்ந்து,
ஆரவாரமாய், கைதட்டி இரசிக்கின்றனர்.
அவ்வேளையில், திடீரென, திரைக்குப் பின்புறமிருந்து
மேடைக்கு ஓடிவரும் கோமாளி, "மக்களே, அவசரமான ஓர் அறிவிப்பு...
மேடையின் பின்புறத்தில் தீப்பிடித்துள்ளது. எனவே, தயவுசெய்து,
விரைவாக இங்கிருந்து வெளியேறுங்கள்" என்று கத்துகிறார்.
அவர் அப்படி கத்துவதை, நாடகத்தின் நகைச்சுவைப் பகுதி என்று
மக்கள் கருதி, ஆரவாரமாய் கைதட்டி இரசிக்கின்றனர்.
கோமாளியோ, கரங்களைக் கூப்பி, கண்களில் கண்ணீர் வழிய,
மேடையில் முழந்தாள் படியிட்டு, "தயவுசெய்து வெளியேறுங்கள்"
என்று கெஞ்சுகிறார். ஆனால், அவர் அற்புதமாக நடிக்கிறார் என்று
கூட்டம் பாராட்டுகிறது. திடீரென, அந்த அரங்கம் முழுவதும்
தீயால் சூழ்ந்து, அனைவரும் தீக்கிரையாகின்றனர்.
"உலக முடிவும் இதுபோல்தான் இருக்கும். அந்த உண்மையை ஒரு
வேடிக்கை என்று எண்ணுவோரின் கரவொலியோடு, இவ்வுலகம்
முடியும்" என்று கீர்க்ககார்ட் அவர்கள், தன் உவமையை நிறைவு
செய்துள்ளார்.
வாழ்வில் பல வேளைகளில், பல வடிவங்களில் வந்தடையும் எச்சரிக்கைகளில்
கவனம் செலுத்தாமல், அனைத்தையும் விளையாட்டாக இரசித்துக்
கொண்டிருப்பவர்களில், நாமும் ஒருவரெனில், இன்றைய ஞாயிறு
வழிபாடு, மீண்டும் ஒருமுறை, நம்மை விழித்தெழச் செய்கிறது.
திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறு இது. அடுத்த ஞாயிறு
கிறிஸ்து அரசர் பெருவிழா. அதற்கடுத்த ஞாயிறு துவங்கும்
திருவருகைக் காலம், புதிய திருவழிபாட்டு ஆண்டைத்
ஆரம்பித்துவைக்கிறது. நாம் சிறப்பித்த இந்த வழிபாட்டு
ஆண்டு முழுவதும், இரக்கத்தின் நற்செய்தி என்று
அழைக்கப்படும் லூக்கா நற்செய்தியிலிருந்து நாம் வாசித்த
அற்புதப் பகுதிகள் வழியாக, இறைவன் நம்மை இரக்கச்
சிந்தனைகளில் நிறைத்ததற்காக அவருக்கு நன்றி கூறுவோம்.
நற்செய்தியின் அற்புதப் பகுதிகள் என்று சொன்னதும், எல்லாமே
மனதிற்கு இதமானதைச் சொல்லும் பகுதிகள் என்று பொருள்
கொள்ளக்கூடாது. நற்செய்தி என்றால், நல்லதைச் சொல்லும்
செய்தி. அந்த நல்ல செய்தி, சில வேளைகளில், அச்சத்தையும்,
அதிர்ச்சியையும் உண்டாக்கும். நல்லவை நடக்கவேண்டும் என்ற
ஆதங்கத்தோடு தரப்படும் எச்சரிக்கையும், நல்ல செய்திதானே!
இந்தக் கண்ணோட்டத்துடன் இன்றைய நற்செய்தியை நாம் சிந்திக்க
முயல்வோம். இன்று நமக்குத் தரப்பட்டுள்ள நற்செய்தி
வாசகத்தில், 15 இறைச்சொற்றொடர்கள் உள்ளன. அவற்றில் 13
இறைச்சொற்றொடர்கள் அழிவைக் கூறுகின்றன. இதோ, இன்றைய
நற்செய்தியின் துவக்க வரிகள்...
லூக்கா நற்செய்தி 21: 5-6
அக்காலத்தில், கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக்
கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப்
பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று
சிலர் பேசிக் கொண்டிருந்தனர். இயேசு, "இவற்றையெல்லாம்
பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள்
ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்"
என்றார்.
இப்படி ஆரம்பமாகிறது, இன்றைய நற்செய்தி. இஸ்ரயேல் மக்களின்
மதநம்பிக்கைக்கு உயிர்நாடியாக விளங்கிய எருசலேம்
பேராலயத்தின் நடுவில் நின்றுகொண்டு, அந்தப் பேராலயம்,
கல்மேல் கல் இராதபடி இடிந்து தரைமட்டமாகும் என்று இயேசு
கூறுகிறார். அவ்விதம் கூறுவதற்குத் தனிப்பட்ட ஒரு துணிவு
வேண்டும். பின்வருவதை முன்கூட்டியே அறியும் அருள்
இயேசுவுக்கு இருந்ததால், அவரால் இவ்வளவு உறுதியாகப் பேச
முடிந்ததென்று, இந்த வீரத்திற்கு நாம் விளக்கம் சொல்லலாம்.
ஆனால், அதேநேரம், தனிப்பட்ட ஒருவரது வாழ்வு போகின்ற திசை,
அவர் நடந்து கொள்ளும் முறை இவற்றை வைத்து, அவர் வாழ்வு
அழிவை நோக்கிப் போகிறதா அல்லது மகிழ்வை நோக்கிப் போகிறதா
என்று கணிக்கமுடியும், இல்லையா? அதேபோல், ஒரு நிறுவனம்
நடத்தப்படும் முறையை வைத்தும் அதன் எதிர்காலத்தைப் பற்றிக்
கூறலாம். எருசலேம் கோவில், எவ்விதம் நிர்வகிக்கப்பட்டது
என்பதை இயேசு ஆழமாய் உணர்ந்து, வெளிப்படுத்திய எண்ணங்களே,
இன்றைய நற்செய்தியில் இடம்பெற்றுள்ளன.
இயேசுவைப் பொருத்தவரை, அவர் 12 வயதிலிருந்தே, எருசலேம்
ஆலயம் நடத்தப்பட்ட முறையைப் பார்த்து கவலைப்பட்டிருப்பார்.
அவரது கவலை, ஆதங்கம் இவற்றை ஒரு சாட்டையாகப் பின்னி, அந்த
ஆலயத்தை அவர் தூய்மைப்படுத்தினார். (லூக்கா 19: 45-46)
அதற்குப் பின்னும், அந்த ஆலயம், மீண்டும் தன் பழைய வியாபார
நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்ததைப் பார்த்த இயேசு,
இவ்வளவு தூரம் வருமானம் சேர்க்கும் அக்கோவில், நிச்சயம்
பிற நாட்டவரின் பொறாமைப் பார்வையில் படும். அக்கோவில்
சேர்த்துள்ள செல்வமே, அதன் அழிவுக்குக் காரணமாய் இருக்கும்
என்பதை, சொல்லாமல் சொல்லும் வண்ணம், இயேசு, இந்த
எச்சரிக்கை வார்த்தைகளைச் சொல்லியிருக்க வேண்டும்.
செல்வம் சேர்க்கும் நிறுவனங்களாக மாறும் கோவில்கள்,
கற்களால் எழுப்பப்படும் கோட்டைகளாக மாறிவிடுகின்றன.
கோவிலில் உள்ள கடவுளைக் காப்பதைவிட, செல்வத்தைக்
காப்பதற்காக வலுவானக் கற்சுவர்களை அமைத்துக்கொள்கின்றன.
கற்களை நம்பி உயர்ந்து நிற்கும் கோவில்களுக்குப் பதில்,
மக்களை நம்பி எழுப்பப்படும் உண்மை ஆலயங்களை, அனைத்து
மதங்களும் கட்டவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்.
முதல் இரு இறைச்சொற்றொடர்களில், எருசலேம் கோவிலின்
அழிவுபற்றி பேசும் இயேசு, அதன் பின், உலகில் நிகழப்போகும்
அழிவுகளைப்பற்றி கூறியுள்ளார். அவர் பட்டியலிட்டுக் கூறும்
அவலங்களை அலசினால், ஏதோ நாம் வாழும் இக்காலத்தைப்பற்றி
இயேசு பேசுவது போல் தெரிகிறது. இதோ, இயேசு கூறும் அந்த
அவலங்கள்:
கடவுளின் பெயரால், உலகம் அழியப்போகிறது என்ற பயத்தால்,
மக்களை வழிமாறிப் போகச் செய்தல்;
போர் முழக்கங்கள், குழப்பங்கள், ஒன்றை ஒன்று எதிர்த்து
எழும் நாடுகள்;
பெரிய நில நடுக்கங்கள், பஞ்சம், கொள்ளை நோய்;
அச்சுறுத்தும் அடையாளங்கள் வானில் தோன்றுதல்
இவை அனைத்தும், நாம் வாழும் காலத்திலும் நம்மைச் சுற்றி
நடப்பதை நாம் பார்த்து வருகிறோம். இந்த அவலங்களுக்கு,
அழிவுகளுக்கு மத்தியில், கலங்காமல் இருங்கள் என்று இயேசு
கூறுவது, நமக்கு விடுக்கப்படும் பெரும் சவால்!
இயற்கையிலும், சமுதாயத்திலும் நடக்கும் இந்த பயங்கரங்களைக்
கூறிவிட்டு, பின்னர் நமது தனிப்பட்ட வாழ்வை, குறிப்பாக,
தம்மைப் பின்பற்றுகிறவர்களின் வாழ்வை வெளிச்சம்போட்டுக்
காட்டுகிறார், இயேசு. அங்கும், அவர் சொல்பவை, அச்சத்தையும்
கலக்கத்தையும் ஏற்படுத்தும் ஒரு பட்டியல்தான்.
நீங்கள் விசாரணைகளுக்கு இழுத்துச் செல்லப்படுவீர்கள்;
உங்கள் குடும்பத்தினரே உங்களைக் காட்டிக் கொடுப்பார்கள்;
உங்களுக்கு எதிராகச் சான்று பகர்வார்கள்;
உங்களுள் சிலரைக் கொல்வார்கள்;
என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள்
இயேசு கூறும் இத்தகையத் துன்பங்களை தங்கள் வாழ்வில்
ஒவ்வொருநாளும் சந்திக்கும் பல கிறிஸ்தவர்களைப் பற்றி
அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன. கிறிஸ்துவுக்காக
வன்முறைகளைச் சந்திக்கும் இவர்களுக்காக இன்று சிறப்பாக
செபிப்போம்.
இயேசு இன்றைய நற்செய்தியில் கூறிய இந்த அழிவுகளைக்
கேட்கும்போது, இது என்ன நற்செய்தியா என்றுகூட கேட்கத்
தோன்றுகிறது. மீண்டும் நினைவில் கொள்வோம். நற்செய்தி
என்றால், இனிப்பான செய்தி அல்ல. நமக்குள் வளரும் ஒரு நோயை
நமக்குச் சுட்டிக்காட்டும் மருத்துவரை எதிரி என்றா நாம்
கூறுகிறோம்? கசப்பான மருந்துகளைத் தரும் அவரை, நன்மை
செய்பவர் என்று நாம் நம்புவதில்லையா? அதேபோல், இயேசுவும்,
இவ்வுலகைப் பற்றிய கசப்பான உணமைகளைச் சொல்கிறார்.
முக்கியமாக, தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு வரவிருக்கும்
சவால்களை ஒளிவு மறைவு இல்லாமல் தெளிவாக்குகிறார். தனக்குச்
சீடர்கள் வேண்டும், தன்னைச் சுற்றி எப்போதும் கூட்டம்
இருக்கவேண்டும் என்று அவர் நினைத்திருந்தால், கசப்பான
உண்மைகளைச் சொல்லத் தேவையில்லையே!
தொண்டர்களைத் தவறான வழி நடத்தும் தலைவர்கள், எதிர்வரும்
ஆபத்துக்களைச் சொல்லத் தயங்குவார்கள். அப்படியே
ஆபத்துக்கள் வரும்போதும், உண்மைப் பிரச்சனைகளிலிருந்து
தொண்டர்களைத் திசைத்திருப்பி, வெறியூட்டும் பாகுபாட்டு
உணர்வுகளை வளர்த்து, தேவையில்லாமல் உயிர்களைப் பறிக்கும்
வழிகளையேக் காட்டுவர், இந்தப் போலித் தலைவர்கள். இயேசுவின்
வழி, மாறுபட்ட வழி...
இத்தனைப் பிரச்சனைகளின் மத்தியிலும் இயேசு தரும் ஒரே
வாக்குறுதி... அவரது பிரசன்னம். அழிவுகளையும்,
குழப்பங்களையும் பட்டியலிட்ட இன்றைய நற்செய்தியில் இறுதி
இரு இறைச்சொற்றொடர்களில் மட்டும் மனதுக்குத் துணிவூட்டும்
நல்ல செய்தியைச் சொல்கிறார், இயேசு. விசாரணைகளின்போது,
"என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட
வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும்
கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து
நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது." (லூக்கா 21:
14-15) என்று கூறுகிறார் இயேசு. நற்செய்தியின்
இறுதியிலும், இயேசு, அறுதல் தரும் வார்த்தைகளுடன் நிறைவு
செய்கிறார். "நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள்
வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்." இயேசு கூறும் 'உங்கள்
வாழ்வு' இவ்வுலக வாழ்வு அல்ல. மறு உலக வாழ்வு.
நாம் எல்லாருமே ஒருநாள் இவ்வுலகிலிருந்து விடைபெற
வேண்டும். ஆனால், அது எப்போது என்பது மட்டும் யாருக்கும்
தெரியாது. ஒரு சிலருக்கு, மறுவுலக வாழ்வு நெருங்கிவருகிறது
என்ற உண்மை, அவர்களுக்கு வரும் நோயால் உணர்த்தப்படுகிறது.
அவ்வேளையில், அவர்களில் ஒரு சிலர் மிகுந்த தெளிவுடன்
இவ்வுலக வாழவைக் குறித்து உன்னதமான உண்மைகளைக்
கூறியுள்ளனர். மறுவுலக வாழ்வுக்கு நாள் குறிக்கப்பட்ட
Randy Pausch என்ற பேராசிரியர், இறப்பதற்கு ஒரு சில
வாரங்களுக்கு முன், தன் பல்கலைக் கழகத்தில் புதிதாகப்
பட்டம் பெற்ற இளையோருக்கு வழங்கிய ஓர் உரையைக் கேட்கும்
வாய்ப்பு பெற்றேன். அதில் அவர் கூறுவது இதுதான்:
"உங்கள் வாழ்வில் ஆழ்ந்த தாகத்தோடு கனவுகளைத்
துரத்துங்கள். கனவுகளைத் துரத்துவதற்கு முன், அவை
எப்படிப்பட்ட கனவுகள் என்பதைத் தீர்மானம் செய்யுங்கள்.
பொருளும், புகழும் சேர்க்கும் கனவுகளைத் துரத்தவேண்டாம்.
நீங்கள் எவ்வளவுதான் பொருள் சேர்த்தாலும், உங்களை விட
வேறொருவர் இன்னும் அதிகப் பொருள் சேர்த்திருப்பார்; அது
உங்களை மீண்டும் ஏக்கத்தில் விட்டுவிடும். உறவுகளைச்
சேகரிக்கும் கனவுகளைத் துரத்துங்கள். உண்மையான உறவுகள்,
ஏக்கம் தராது. நிறைவைத் தரும்."
பணம், புகழ் என்ற சக்திகள், தாங்கள் அழிவதோடு,
இவ்வுலகையும் அழித்து வருகின்றன. இந்த சக்திகளோடு உறவு
கொள்வதற்குப் பதில், மனித உறவுகள் என்ற சக்தியைத் தேடிச்
செல்வோம். அந்த உறவுகளுக்கெல்லாம் சிகரமாக, இறைவனின்
உறவும் நம்முடன் உள்ளதென்ற நம்பிக்கையோடு, உலகப் பயணத்தை,
வாழ்வின் முடிவை, உலகத்தின் முடிவை எதிர்கொள்வோம்.
அருட்திரு பவுல் லியோன் வறுவேல்
இயேசுவைப் பின்செல்லும் மனிதர்கள் எதிர்ப்புகளைச் சந்திக்க
நேரிடும். எனவேதான் இயேசு ''என் பெயரின் பொருட்டு
எல்லாரும் உங்களை வெறுப்பார்கள்'' என்று கூறுவதாக லூக்கா
பதிவு செய்துள்ளார் (லூக் 21:17). லூக்கா நற்செய்தி
எழுதப்பட்ட காலத்தில் தொடக்க காலத் திருச்சபையின் அனுபவம்
அதுதான். கிறிஸ்துவைப் பற்றி மக்கள் நடுவே எடுத்துரைத்து,
அவர்களிடம் நம்பிக்கையைத் தூண்டி எழுப்பிட கிறிஸ்தவ
போதகர்கள் முயன்றார்கள். அப்போது யூதர் நடுவிலிருந்தும்
பிற இனத்தார் நடுவிலிருந்தும் பலத்த எதிர்ப்பு
எழுந்ததுண்டு. இது தூய பவுல் பணியாற்றிய இடங்களில்
நிகழ்ந்தது என்பதை அவருடைய திருமுகங்களிலிருந்து
அறிகிறோம். இயேசு எருசலேம் கோவில் அழிந்தபடும் என
அறிவித்தார். தொடர்ந்து உலக இறுதியில் போர்களும்
குழப்பங்களும் ஏற்படும் எனவும் முன்னறிவித்தார். இந்த
இறுதிக் காலம் என்பது விரைவில் வரும் என தொடக்க காலத்
திருச்சபை எண்ணியிருக்கக் கூடும். ஆனால் இறுதிக் காலம்
ஒருவிதத்தில் ஏற்கெனவே வந்துவிட்டது. அதாவது, இயேசுவின்
சாவு, உயிர்த்தெழுதல், விண்ணேற்றம் ஆகிய நிகழ்ச்சிகள் இந்த
இறுதிக் காலத்தின் தொடக்கமாக அமைந்தன. கடவுளின் ஆட்சி
இவ்வுலகில் தொடங்கியுள்ளதை இயேசுவின் வாழ்வு
முன்னறிவித்தது. இருப்பினும் அந்த இறுதிக் காலத்தில்
வாழ்கின்ற நாம் இறையாட்சியின் நிறைவை இன்னும் காணவில்லை.
இறையாட்சியின் நிறைவு எப்போது எங்கே நிகழும் என்பதையும்
நாமறியோம். ஆனால் எந்த எதிர்ப்பு வந்தாலும் நாம்
இயேசுவிடத்தில் அசையாத நம்பிக்கை கொண்டு வாழ்ந்தால் எதைக்
கண்டும் அஞ்ச வேண்டியதில்லை என இயேசு நமக்கு
அறிவுறுத்துகிறார். ''உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே
விழாது'' (லூக் 21:18) என இயேசு கூறுவது மிகைக் கூற்றாகப்
படலாம். ஆனால் அதன் பொருள் நமக்குத் தெளிவாகவே உள்ளது.
அதாவது, இயேசுவைத் தங்கள் மீட்பராக ஏற்று, அவரில் அசையாத
நம்பிக்கை கொள்கின்ற மனிதர்கள் எந்த ஆபத்து வந்தாலும்
அஞ்சவேண்டியதில்லை. கடவுளின் வல்லமை அவர்களைத் தாங்கிக்
கொள்ளும். இதனால் நமக்குத் துன்பங்களே வராது என இயேசு
கூறவில்லை. மாறாக, துன்பங்கள் வந்தாலும் கடவுள் நம்மைக்
கைவிட மாட்டார் என்னும் உறுதி நமக்கு அளிக்கப்படுகிறது.
இயேசுவின் வாழ்வில் துன்பத்திற்கு இடம் இருந்தது. ஏன்,
கேவலமான சிலுவைச் சாவுக்கு அவர் உட்படுத்தப்பட்டார். ஆனால்
அவர் கடவுளின் திட்டத்தை நிறைவேற்றினார். சாவின் மீது
வெற்றி கொண்டார். அந்த வெற்றி நமக்கும் உண்டு என்பது இயேசு
நமக்கு அளிக்கின்ற வாக்குறுதி.
அருட்திரு பவுல் லியோன் வறுவேல்
அருட்திரு ஜோசப் லியோன்
வாழ்வைக் காத்துக் கொள்ளும் வழி
இந்நாட்களில் முழு மனித வாழ்கை வாழ்வதில் பல
போராட்டங்களைச் சந்தித்து வருகிறோம். மனித நேயத்தோடு
வாழ்ந்தால் பல இழப்புக்கள். நற்செய்தி விழுமியங்களை
முதன்மைப்படுத்தி வாழ்ந்தால் ஏராளம் தொல்லைகள். ஒதுங்கி
வாழ்ந்தாலும் வாழ முடியாது. பின் வாங்கவும் முடியாது,
கூடாது.
இத்தகைய சூழல்களில் இன்றைய இறைவாக்கு ஆறுதலாக இருக்கிறது.
"என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள்.
இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது". (லூக்
21'17-18) இறைவனை நம்பி வாழ்கிற மனிதனுக்கு துன்பங்கள்
இழப்பகள் அதிகம். அவமானங்கள் ஏராளம். நான் யாரை
நம்பியிருக்கிறேன் என்று எனக்குத் தெரியும் என்ற
பவுலடியார் தன் வாழ்வி அடுக்கடுக்காக துன்பங்களை
அனுபவித்தபோதும் துவண்ட விடவில்லை.
கிறிஸ்துவுக்காக வாழ்வதால் நம் பொருட்களுக்கு சேதம்
உண்டாக்கலாம். பெயரை தூற்றலாம். உறவுகள் நம்மைப்
புறக்கணிக்கலாம். சலுகைகளை இழக்கலாம். பதவி இல்லாமல்
போகலாம். காவல் நிலையமும் நீதி மன்றமும் இழுக்கப்படலாம்.
குடும்பமே காட்டிக்கொடுக்கலாம். அஞ்ச வேண்டாம். கலங்க
வேண்டாம். பயப்பட வேண்டாம். உங்களை வெல்ல எவராலும் இயலாது.
நமக்குத் தேவை மன உறுதி ஒன்றே. கடவுள் நம்பிக்கை மட்டுமே.
அவர் நம் வாழ்வை காத்துக்கொள்வார். துணிந்து செயல்படுவோம்.
வெற்றி உறுதி.
அருட்திரு ஜோசப் லியோன்
புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க் கழகம்,
பெங்களூர்
பொதுக்காலம் 33-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (மலா. 4:1-3)
இறைவனோடு உடன்படிக்கை செய்து ஒட்டுறவாடியவர்கள் இஸ்ரயேல்
மக்கள். அவர்கள் இறைவனை மறந்து விலகிச்சென்ற- தன் பயனாகக்
கி.மு. 587-இல் தென் நாடான யூதா வீழ்த்தப்பட்டு அம்மக்கள்
பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டனர். ஐம்பது ஆண்டு- களுக்குப்
பின் (சுமாராகக் கி.மு. 537-இல்) இறைவனின் இரக்கத்தினால்
தங்கள் தாய் நாடு திரும்புகின்றனர். வந்தவுடன் முதல்
வேலையாகத் தீக்கிரையான திருக்கோவிலையும் பாழடைந்த வீடுகளையும்
கட்டி எழுப்புகின்றனர். இருந்தப் போதிலும் வறுமை, குருக்கள்
மற்றும் மக்களிடையே நிலவிய ஒழுக்கமின்மை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்,
வெற்று சடங்காகிப்போன ஆலய வழிபாடு, சுற்றிலும் எதிரிகளின்
அச்சுறுத்தல் போன்றவற்றால் மனச் சோர்வடைந்து, 'ஒரு வேளை ஆண்டவர்
தம் உடன்படிக்கையை மறந்து விட்டரோ' என்று ஐயமுறுகின்றனர்.
இவர்களுக்குத் தான் இறைவாக்கினர் மலாக்கியா, "ஆண்டவரின்
நாள் கண்டிப்பாக வரும். அந்நாள் தீமையைச் சுட்டெரிக்கும்
நெருப்பாகவும் நன்மைக்கு வாழ்வு தரும் திருநாளாகவும் அமையும்"
என்று உறுதியாய்க் கூறுகிறார்.
இரண்டாம் வாசகப் பின்னணி (2தெச. 3:7)
தெசலோனிக்காவில் புனித பவுலடியார் நற்செய்தியை அறிவித்துத்
திருச்சபையை ஏற்படுத்தினார். அங்கிருந்தச் சில யூதர்களின்
எதிர்ப்பால் அவர் கிறிஸ்தவ அறநெறிகளை அவர்களுக்குத்
தெளிவுறக் கற்பிக்கும் முன்னே அங்கிருந்து புறப்பட
நேர்ந்தது. முக்கியமாக இயேசுவின் இரண்டாம் வருகையைப்
பற்றிய செய்திகளை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.
ஆண்டவரின் வருகை வெகு அண்மையில் இருப்பதாக அலட்டிக்-
கொண்டு அதுவரை 'சும்மா இருப்பதே சுகம்' என்ற விருதுவாக்-
கோடு சோம்பித் திரிந்தனர். இவர்களுக்குத் தூய பவுல்
ஆண்டவர் வரும் வரை சோம்பித் திரியாமல் பாடுபட்டு உழைக்க
அழைக்கின்றார். இவர்களுக்கு முன் தம்மையே ஒரு உதாரணமாக
நிறுத்துகின்றார்.
304
நற்செய்தி வாசகப் பின்னணி (லூக்கா 21:5-19)
தாம் பாடுகள் பட்டு மகிமையடையும் நாட்கள் நெருங்கி வரவும்
ஆர்வத்துடன் இயேசு எருசலேமை நோக்கிப் பயணிக்கிறார் (லூக்கா
9:5). எருசலேமில் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைந்து,
கோவிலைத் தூய்மையாக்கி, மக்களுக்குப் போதிக்கிறார்.
அப்போது சிலர் எருசலேம் கோவிலின் அழகைச்
சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால் இயேசுவோ எருசலேம் கோவிலின்
அழிவை உலக அழிவின் அடையாளமாக முன்னறிவிக்கிறார். மேலும்
தம் பெயரின் பொருட்டு சீடர்கள் அனைவரும் துன்புறுத்தப்
படுவார்கள் என்றும், இத்துன்பங்- களைச் சமாளிக்கத் தேவையான
ஞானத்தைத் தாம் கொடுப்பதாகவும், சீடர்கள் மனவுறுதியோடு
நிலைத்து நின்று தமக்கு சான்று பகர வேண்டும் என்றும் இயேசு
அறிவுறுத்துகிறார். உங்கள் தலைமுடி ஒன்று கூட விழவே
விழாது' என்று நம்பிக்கை மொழி- களையும் கூறுகிறார்.
மறையுரை
"சார், எட்டுமணி பஸ் எத்தனை மணிக்கு வரும்?" எட்டு மணி
பேருந்துக்காகக் காத்திருந்த நபர் கால் கடுக்க, எட்டரை
மணியளவில் கேட்ட கேள்வி. "தேர்வு முடிவுகள் எப்ப வரும்?"
பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் மே
மாதச் சிறப்புக் கேள்வி. "காவேரி நீர் எப்பொழுது வரும்?"
தமிழக விவசாயிகள் பலரின் கண்ணீர் கேள்வி. "உனக்குக்
குருப்பட்டம் எப்ப வரும் ராசா?" குருமட மாணவர்களை உள்ளுர்
மூதாட்டிகள் முக்கியமாய் கேட்கும் கேள்வி. "கடவுள் எப்போது
வருவார்?" இது மனுக்குலம் காலங்காலமாய்க் கேட்கும் கேள்வி.
இப்படி பல கேள்விகளோடும் எதிர்பார்ப்புகளோடும் நம்
வாழ்க்கைப் பறவை, "பார்த்துப் பார்த்துக் கண்கள்
பூத்திருந்தேன் நீ வருவாயென" என்று நம்பிக்கைக் கீதம்
இசைத்துக் கொண்டிருக்- கிறது. இவ்வாறே நம் தாய்த்
திருச்சபையும் தன் மணவாளன் இயேசு கிறிஸ்து 'மீண்டும்
வருவார்' என்ற உன்னத எதிர்பர்ப்போடு- தான் வாழ்ந்துக்
கொண்டிருக்கறது.
'ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட ராஜ குலத்திலகக் கிறிஸ்து
ராஜா வரார் பராக்! பராக்!' என்று கட்டியம் கூறுவது போல்
அமைந்துள்ளது இன்றைய வார்த்தை வழிபாடு.
என்ன கடவுள் வருகிறாரா? எப்பொழுது வருகிறார்?' என்று
கேட்டால், 'தெரியாது' என்றுதான் இயேசுவே பதில் கூறுவார்.
ஆக, 'எப்பொழுது வருவார்' என்பது நிச்சயமல்ல என்றாலும், 'வர
வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக வருவார்' என்பது தான்
விவிலியம் கூறும் மறுக்க முடியாத உண்மை ஆகும் (லூக்கா 21)
சரி. ஆண்டவரின் நாள் எப்படிப் பட்டதாக இருக்கும்? அது
சிலருக்குச் சுட்டெரிக்கும் சூளையாகவும், சிலருக்கு
வாழ்வளிக்கும் நீதியின் கதிரவனாகவும் இருக்கும்' என்று
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் மலாக்கி
பதிலுரைக்கிறார்.
சற்று கூர்ந்து நோக்கினால் இயேசுவின் இரண்டாம் வருகை நம்
வாழ்க்கையில் இரண்டு கட்டங்களில் நிகழ்வது புலப்படும்.
ஒன்று: நமது மரண நாள் (தனித்தீர்வை). மற்றொன்று, உலக
முடிவிலே நிகழும் பொதுத்தீர்வை. எனவே 'ஆண்டவரின் நாள் என்ற
வார்த்தையைக் கேட்டவுடன் நம்மில் சிலருக்கு நம்மை
அறியாமலேயே 'மரண பயம்' ஏற்படுவது இயல்பே. ஆக ஆண்டவரின்
நாள் அச்சத்தின் நாளா அல்லது நம் மகிழ்வின் நாளா?
இக்கேள்விக்குப் பதில் கூறும் வகையில் அமைந்துள்ளது மறைந்த
அமெரிக்க பேராயர் ஃபுல்டன் ஷீன் அவர்களின் வாழ்க்கையில்
நிகழ்ந்த ஒரு உருக்கமான நிகழ்ச்சி: அவர் இறப்பதற்கு ஒரு
சில ஆண்டுகளுக்கு முன்பு இதய அறுவைச் சிகிச்சை செய்ய
நேர்ந்தது. சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. உடல் நலம்
தேறியப் பிறகு ஒரு பத்திரிகையாளர் இவரைப் பேட்டிக் காண
வந்தார். அவர் பேராயரிடம், 'பேராயர் அவர்களே! உங்களுக்கு
இதய அறுவைச் சிகிச்சை செய்யப்படவிருந்தபோது உங்கள் மனதில்
மரணத்தைப் பற்றியப் பயம் எழுந்ததா?' என்று கேட்டார்.
பேராயரும் புன்னகைப் பூக்களை உதிர்த்தவராய் "இல்லை.
ஏனெனில் நான் இறந்தால் விண்ணில் கிறிஸ்துவோடு இருப்பேன்,
வாழ்ந்தால் மண்ணில் கிறிஸ்து என்னோடு இருப்பார்" என்று
மறுமொழி கூறினார்.
பேராயர் அவர்களின் இந்த அசைக்க முடியாத நம்பிக்கைக்குக்
காரணம் அவர் கிறிஸ்துவோடு கொண்டிருந்த ஆழ்ந்த அன்புறவும்,
வாழ்ந்த அர்த்தமுள்ள வாழ்வுமே ஆகும். அவர் தம்
வாழ்க்கையில் தினந்தோறும் தவறாமல் ஒரு மணி நேரம் நற்கருணை
நாதரைச் சந்தித்து உறவாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கிறிஸ்துவோடு இணைந்து வாழ்பவர்களுக்கு மரண பயம்
இல்லை. இத்தகையவர்கள் ஆண்டவரின் நாளை ஆவலோடு எதிர்
நோக்கிக் காத்திருப்பார்கள் (உரோ. 8:23).
ஆண்டவரின் வருகையைப் பற்றித் தெளிவுறத் தெரியாதத்
தெசலோனிக்கக் கிறிஸ்தவருள் சிலர் ஒரு வேலையும் செய்யாமல்
சோம்பேறிகளாய்ப் பொழுதைப் போக்கி வந்தார்கள். "ஆண்டவர்
உடனடியாக வருவார். உழைக்க வேண்டாம்" என்றத் தத்துவத்தின்
அடிப்படையில் தங்கள் அன்றாட அலுவல்களைப் புறக்கணித்தனர்.
இத்தகையவர்க்குத்தான் தூய பவுல் இன்றைய இரண்டாம் வாசகம்
மூலம் 'தாங்கள் உண்ணும் உணவுக்காகப் பாடுபட்டு உழைக்க
வேண்டும்' எனவும், 'உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலா- காது'
எனவும் தெளிவுபடுத்துகிறார்.
எனவே ஆண்டவர் வரும் நாளைக் குறித்து நாம் வீண் அச்சம்
கொள்ளவும் தேவையில்லை, அதுவரை சோம்பித் திரியவும்
தேவையில்லை. மாறாகக் கிறிஸ்துவுக்கு நம் வாழ்வில் சான்று
பகர்ந்து அவர்மீது நமக்குள்ள அன்பிலும் நம்பிக்கையிலும்
நிலைத்து நிற்க வேண்டும், என்று இன்றைய நற்செய்தி
வாசகத்தில் தெளிவு படுத்துகிறார். அவர் இன்று உலக முடிவின்
அடையாளமாக எருசலேமின் அழிவுகுறித்து முன்னறிவிப்பது நம்மை
அச்சத்திற்கு ஆளாக்க அல்ல. மாறாக நம் நம்பிக்கையை
அதிகமாக்கி நம்மை உற்சாகப்படுத்தவே.
எனவே ஆண்டவர் வருகையை ஆவலோடு எதிர் நோக்கி இருக்கிற நாம்
அனைவரும் நமக்கு இறைவன் கொடுத்திருக்கிற பொறுப்புகளைச்
சரிவர நிறைவேற்றுவோம். நம் வீடு, பணிமனை, கல்விச்சாலை,
பங்கு, நாடு ஆகியவற்றில் நாம் ஆற்ற வேண்டிய கடமைகளைத்
திறம்பட செய்வோம். இவ்வாறு கிறிஸ்துவில் இணைந்து
அவருக்குச் சாட்சிய வாழ்வு வாழ்ந்து வந்தால் நம்மை ஒருநாள்
சந்திக்கின்ற ஆண்டவரும், "நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல
பணியாளரே, சிறியப் பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய்
இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளுக்கு உம்மை அதிகாரியாய்
அமர்த்துவேன். உன் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும்
வந்து பங்கு கொள்ளும்" என்பார்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
* இயேசுவுக்குச் சாட்சிய வாழ்வு வாழும்போது பல இன்னல்
இடையூறுகள் நமக்கு நேர்வது இயல்பே. எ.கா. பல மதவெறி
அமைப்புகளால் வரும் துன்பங்கள் (ஒரிசா). ஆனால் ஆண்டவர்
நம்மோடு இருக்கிறார். நம்முடையத் தலைமுடி அனைத்தும்
எண்ணப்பட்டுள்ளன. * எங்கெல்லாம் அறம் மறைந்து அநியாயம் தலை
தூக்குகிறதோ அங்கெல்லாம் ஆண்டவர் வருகிறார். அறத்தை நிலை
நாட்டுகிறார். எ. கா. நோவா மற்றும் லோத்து ஆகியோரின்
காலத்தில் இறைவன் அநீதியை அழித்து அறத்தை
நிலைநாட்டுகிறார். * தெசலோனிக்க மக்களுக்குப் புனித
பவுலடியார் தம்முடைய வாழ்க்கையையே ஒரு சிறந்தப் பாடமாக
முன் வைக்கிறார். அவர் சொன்னதைச் செய்தார். செய்ததைச்
சொன்னார். அவர் வார்த்தைக்கும் வாழ்வுக்கும் எள்ளளவும்
இடைவெளி இல்லை. நம் வாழ்க்கை எப்படி இருக்கிறது?
அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட்
பொதுக் காலம் முப்பத்தி மூன்றாம் ஞாயிறு
இன்றைய முதல் வாசகம் ஆண்டவரின் நாளைப் பற்றிக்
குறிப்பிடுகின்றது. நற்செய்தியில் நமதாண்டவர் எருசலேமின்
அழிவுபற்றிக் கூறுகின்றார். எனவே இன்றைய இறைவார்த்தை உலக
முடிவுபற்றிக் கூறும் என்று நாம் எதிர்பார்க்கலாம். இன்னும்
சிலர் இது எப்போது நிகழும்? எப்படி, நிகழும்? இப்போதே நிகழுமா?
எனும் எதிர்பார்ப்பிலும் இருப்பர். இதற்கெல்லாம்
தீனிபோடும் வகையில்பேசுகின்ற, முழு நேரமும் இதை 'விற்பனை'
செய்கின்ற போதகர்களும் இருக்கின்றனர். ஆனால் இங்கு நமது
சிந்தனைக்கு இன்றைய நற்செய்திப் பகுதியின் வழியாக லூக்கா
தன் உடனடி வாசகர்களுக்குச் சொல்ல விரும்பும் செய்தி என்ன?
தன் காலத்தவர்களுக்கு அறிவுறுத்த விரும்புவது என்ன என்பது
பற்றி மட்டும் இவண் விளங்கிக்கொள்ள முயல்வோம். அதற்கு முன்
இந்த நற்செய்தி பகுதிப் பற்றிய சில பின்னணித் தகவல்களை அறிந்து
கொள்வோம்.
பின்னணி
எதிர்காலத்தைப் பற்றி விவரங்கள் அடங்கிய இந்த நீண்ட பகுதியை
(லூக் 21:5-38) நான்கு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கலாம்.
அவை முறையே
🕇எருசலேம் ஆலய அழிவுக்கு முந்தய காலம்பற்றிய விவாதம் (வச.
5-11)
🕇இவை நிகழும் முன் எதிர்பார்க்க வேண்டியவை (வச. 12-19)
🕇எருசலேம் அழிவுபற்றிய விவரிப்பு (வச. 20-20)
🕇மானிட மகன் வருகையின்போது நிகழவிருப்பவை (வச. 25-38).
எனவே காலத்தின் அடிப்படையில் இதை மூன்றாக பிரிக்கலாம்.
🕇கிறிஸ்தவர்கள் சந்திக்கும் துன்பங்களின் காலம்.
🕇எருசலேமின் அழிவின் காலம்.
🕇மானிட மகனின் வருகையின் காலம்.
இனி இவற்றின் வழி லூக்கா வலியுறுத்த விரும்பும் செய்தியினை
அறிந்து கொள்ள முயல்வோம்.
1. இயேசு பற்றி...
இந்த நற்செய்திப் பகுதியின் வழியாக லூக்கா இயேசுவைப் பற்றி
எத்தகையதொரு செய்தியைவாசகர்கள் மனதில் பதிய வைக்க
விரும்புகிறாரென நோக்குவோம். லூக்கா நற்செய்தியின் ஏனைய
பகுதிகளைப்போலவே இங்கும் இயேசுவை ஓர் இறைவாக்கினராக
படம்பிடித்துகாட்டுகின்றார். அதிலும் குறிப்பாக,
இறைவாக்கினர் என்றால் இறைவனின் பதிலாளியாய் பேசுபவராக
மட்டுமல்ல, அதோடு கூட எதிர்காலத்தை முன்னறிவிக்கிற
இறைவாக்கினராக இயேசு காண்பிக்கப்படுகின்றார். இதை இயேசு
இரண்டு நிலைகளில் செய்கின்றார். முதலாவது தனது வாழ்வில்
தனக்கு நிகழ இருப்பதை இயேசு முன்னறிவிக்கிறார். இதை இயேசு
தம் பாடுகளை மூன்று முறை முன்னறிவித்ததில் காண்கிறோம்.
இரண்டாவது, எருசலேமின் அழிவில் முன்னறிவிக்கிறதைக்
காண்கிறோம். இவ்வாறு இறை வாக்கினர் முன்னறிவித்தது
நிகழும்போது, நிறைவேறும்போது இறைவாக்கினரின் உண்மைத் தன்மை
எண்பிக்கப்படுகின்றது. இதை நாம் எரேமியாவின் வாழ்விலும்
காண்கின்றோம்.எரேமியா எருசலேம் ஆலய அழிவை
முன்னறிவிக்கின்றார் (காண். எரே 7). அது நிறைவேற்றும்போது
அவரின் இறைவாக்கினத் தன்மை நியாயப்படுத்தப்படுகின்றது,
அவருடைய வார்த்தைகள் ஏற்புடையவை ஆகின்றன (காண். 28:7-9).
எனவே லூக்காவின் தொடக்க கால வாசகர்கள் இயேசு கூறிய
வார்த்தைகள் நிறைவேறியதைக் காணும்போது இயேசுவின்மீது
அவர்கள் கொள்ளும் நம்பிக்கை வலுப்பெறும். அதாவது இயேசு தன்
வாழ்வில் தனக்கு ஏற்படப்போகும் நிகழ்வுகளையும், எருசலேம்
ஆலயத்திற்கு நிகழவிருப்பதையும் முன்னறிவித்தது நிகழ்ந்து
விட்டதை அறிந்த வாசகர்கள், தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள்
இன்னும் நிகழாத மானிட மகனின் வருகையை நம்புவதற்கு உதவியாக,
ஆதாரமாக இருக்கும். இயேசுவைப் பற்றியும், எருசலேம்
பற்றியும் கூறியது நிறைவேறியதால், இயேசுவின் இரண்டாம்
வருகையைப் பற்றி கூறியதை நம்புவது எளிதாகின்றது,
நம்புவதற்கு இடமிருக்கின்றது.
2. இயேசுவின் சீடர்கள்பற்றி...
இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதியில் இயேசு
எருசலேமின் அழிவுக்கு முன் தன் சீடர்கள், தன்னை
நம்புபவர்கள் படவேண்டிய துன்பங்களையும் விவரிக்கின்றார்
(காண். வச 12-19). திருத்தூதர் பணிகள் நூலினை லூக்காவின்
இரண்டாம் பாகமாக வாசிக்கின்றவர்களுக்கு இந்தச் சீடர்களைப்
பற்றிய முன்னறிவிப்புகள் எல்லாம் தொடக்கக் காலக்
கிறிஸ்தவர்களில் நிறைவேறியது தெளிவாகும். எனவே இயேசு
கூறியவை லூக்காவின் இன்னொரு நூலில் நிறைவேறியதைக்
கண்டுபிடிப்பர். எனவே இறைவாக்கினரின் "முன்னறிவிப்பு, அதன்
நிறைவு" எனும் வகையில் இயேசு ஓர் இறைவாக்கினர் என்பது
நிறுவப்படுகின்றது.
நமது வாழ்வுக்கு ...
இயேசு தம் சீடர்களுக்கு நேரும் என முன்னறிவித்தவை தொடக்கக்
காலத் திருச்சபையில் மட்டுமல்ல, அதன் வரலாறு முழுவதும் ஏன்
இன்றும் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. கிறிஸ்துவின் சீடர்
என்பதற்காக நாம் துன்புறுத்தப்படுகின்றோம். ஆனால், "நானே
உங்களுக்கு நாவன்மையையும், ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள்
எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப்
பேசவும் முடியாது (வச. 15). நீங்கள் மன உறுதியோடு இருந்து
உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்" (வச. 19) எனும்
இயேசுவின் வார்த்தைகள்மீது நம்பிக்கை வைத்து நமது
இறைநம்பிக்கையில் ஊன்றி, நிலைத்து நிற்போம்.
அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
பொதுக்காலம் - முப்பத்து மூன்றாம் ஞாயிறு
முதல் வாசகம் :மலா 4:1-2
திருவழிபாட்டு ஆண்டின் இறுதி வாரங்களில் தாய் திருச்சபை
இறுதி நாளைப் பற்றி மக்களுக்கு நினைவுறுத்துகிறது.
மலாக்கியா இறை வாக்கினர் இவ்இறுதி நாள்பற்றி எழுதுவது
இன்றைய வாசகம். இதன் கருத்து, இறுதி நாளிலே தீயோர்
அழிவுறுவர், நல்லோர் வாழ்வுக்கு அழைத்துச் செல்லப்படுவர்
என்பதாகும். தீய முடிவுக்கோ நல்ல முடிவுக்கோ செல்வது
நம்மைப் பொறுத்தது.
தீயோர் அழிவுறும் நாள்
ஆண்டவரின் நாள் எல்லோரையும் எதிர்ப்படும். அதே வேளையில்
தீயோருக்கு அது அழிவின் நாளாக, இருளின் நாளாக அமையும்.
"அது ஒளி மிக்க நாளன்று, இருள் சூழ்ந்த நாளாகத்தான்
இருக்கும். அந்த நாள், சிங்கத்திடமிருந்து தப்பி ஓடிய
ஒருவனைக் கரடி ஒன்று எதிர்கொண்டாற் போலும், அவன் தப்பியோடி
வீட்டிற்குள் நுழைந்து, சுவரில் கைவைத்துச் சாய்ந்தபோது,
பாம்பு ஒன்று கடித்தாற் போலும் இருக்கும்' (ஆமோஸ் 5:18-
20). இவ்வுலகில் கையூட்டுவழி எத்தகைய தண்டனையிலிருந்தும்
தப்பிக்கலாம். ஆனால் "அங்கிங்கெனாதபடி எங்கும் பிரசாசமாய்
ஆனந்தசோதியாய்" உள்ள இறைவனின் திருமுன் குற்றம் செய்த
எவரும் எங்கும் எப்போதும் தப்பிக்க முடியாது. இறுதி நாள்
தீயானது (திருவெளிப்பாட்டு இலக்கிய மரபில் தீயென்பது
நீதியைக் குறிக்கும்) தீயோர்களைத் தேடிச்சென்று தீர்ப்பு
வழங்கிப் பூண்டோடு அழித்துவிடும். இத்தகைய கொடிய தீர்ப்பை
என்றும் நம் கண்முன் இருத்துதல் பாவத்திலிருந்து நாம் விலக
நமக்கு உதவியாயிருக்கும். "அடி உதவுவது போல் அண்ணன் தம்பி
உதவ மாட்டான்" என்னும் பழமொழிக்கொப்ப, தண்டிக்கும்
இச்சாதனத்தை இறைவன் பயன்படுத்துவது நமது நன்மைக்காகவே
என்று உணர்வோம். விண்ணரசு நம்மைப் புண்ணிய வாழ்வுக்குத்
தூண்டாத நிலையிலே "இறுதிநாள் தீ" நம்மைப் பாவ
வாழ்விலிருந்து விலகி நடக்கத் தூண்ட வேண்டாமா?
நல்லோர் வாழ்வு பெறும் நாள்
ஆண்டவர் பெயருக்கு அஞ்சி நடப்போர், இயேசுவின்
மதிப்பீடுகளைப் பின்பற்றி வாழ்வோர் ஆவர். "உலகின் ஒளி
நானே; என்னைப் பின்செல்பவர் இருளில் நடக்கமாட்டார்" (யோ
8:12). இவர்கள்மேல் கிறிஸ்துவின் ஒளி என்றும் ஒளிரும்,
இவர்கள் முடிவற்ற மகிழ்வு நிறைந்த வாழ்வைப் பெறுவர்.
"குதிரைகளைப் போலக் குதித்துக்கொண்டும்,
ஆட்டுக்குட்டிகளைப் போலத் துள்ளிக்கொண்டும், தங்களை
விடுவித்த ஆண்டவராகிய உம்மைப் புகழ்ந்துகொண்டே செல்வர்"
(சாஞா 19 : 9).
இவர்கள்மேல் "நீதியின் கதிரவன் எழுவான்" (மலாக் 4:2).
அநீதியை அகற்றித் தம் நினைவு, சொல், செயல்களால்
நீதிக்காகப் போராடி, ஒடுக்கப்பட்டவர்களுக்கு உரிமை வாழ்வு
வழங்கப் பாடுபட்ட இவர்கள்மேல் நீதியின் கதிரவன் எழுதல்
இயல்பே. "நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்" (மத் 5:6). நீதி,
நியாயம், நேர்மைமிக்க வாழ்வு இவ்வுலகில் மட்டுமன்று,
மறுவுலகிலும் நம்மை நிறைவுள்ளவர்களாக மாற்றக்கூடிய தன்மையை
உடையது. கடவுள் நீதியுள்ளவர்; கடவுளின் மக்களாகிய நாம்
நீதியின் வழியிலே நம் வாழ்க்கையை அமைக்க வேண்டும். நம்
அடியில் உள்ளவர்களுக்கு, நம்மை ஒத்தவர்களுக்கு,
தாழ்த்தப்பட்ட நிலையில் உள்ள வர்களுக்கு, உரிமையற்றவர்கள்,
சக்தி அற்றவர்கள் என்று கருதப்படும் பெண் இனத்திற்கு
முழுஉரிமை, சுதந்திரம், நீதி வழங்குகிறோமா? இவர்கள்
நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வாயடைத்து நிற்கும்
நிலையிலே, இவர்களுடைய உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிறோமா?
பேசுகிறோமா? எழுதுகிறோமா? வாதாடுகிறோமா? துன்புறுகிறோமா?
நம்மில் இவ்வுலகிலேயே "நீதியின் கதிரவன் எழுவானா?"
உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான்.
இரண்டாம் வாசகம் : 2 தெச 3:7-12
திருவழிபாட்டு ஆண்டின் இறுதி வாரங்களில் நம்முடைய இறுதி
நாளை நினைக்க வேண்டும், அந்நாள் நமக்கு நல்ல முறையில்
அமையப் பாடுபட்டு உழைக்க வேண்டும் என்ற கருத்திலே இன்றைய
வாசகம் அமைகிறது. சோம்பல் பல பாவங்களுக்கும்
காரணமாயிருக்கிறது என்பதை நாம் அறிவோம். சுறுசுறுப்பாகச்
செயல்படும் எவனும் நல்வாழ்வு வாழ்வான் என்பதையும் நாம்
அறிவோம். இறுதிநாள் அருகில் இருக்கிறது. எனவே யாதும் வேலை
செய்யாது ஓய்ந்திருந்து அந்நாளை எதிர்கொள்வோம்
என்றிருக்கும் தெசலோனிக்கருக்குப் பவுல் கூறும் அறிவுரை
இன்றும் நமக்கு எவ்வளவு பொருந்தி அமைகிறது?
பவுலைப் போல் நடத்தல்
தான் போதித்ததை வாழ்ந்து காட்டினார் பவுல். எனவே அவரைப்
பின்பற்றி நடக்கக் கிறிஸ்தவர்களை அழைக்கிறார். "ஆகையால்
நீங்கள் என்னைப் போல் ஆகுங்கள் என அறிவுரை கூறுகிறேன்" (1
கொரி 4: 16); நீங்கள் அனைவரும் என்னைப் போல் வாழுங்கள்"
(பிலி 3 : 17). இங்கும் அதே போதனை (1 தெச 3:7). "சொல்லுதல்
யார்க்கும் எளிய, அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்" (குறள்
664). பவுல் போதித்தார்; போதித்தபடி வாழ்ந்தார். நமது
போதனைக்கும் நமது வாழ்வுக்கும் தொடர்பு இருக்கிறதா?
சொல்வதொன்று செய்வது வேறொன்றாக இல்லையா நம் வாழ்வு?
பவுலின் மாதிரியைப் பின்பற்றுபவர்கள் கிறிஸ்துவையே
பின்பற்றுகிறார்கள் எனலாம். ஏனெனில் பவுல் வாழ்வே
கிறிஸ்துவின் வாழ்வு தானே? (கலா 2: 20). எனவேதான்
"கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும்
இருக்கட்டும்" (பிலி 2 : 5) என்கிறார். "எங்களைப் போலவும்
ஆண்டவரைப் போலவும் நடப்பவரானீர்கள்" (1 தெச 1 : 6)
என்கிறார். யோவான், "அவரோடு இணைந்திருப்பதாகக் கூறுவோர்
அவர் வாழ்ந்தவாறே வாழக் கடமைப்பட்டவர்கள்" (1 யோ 2: 6)
என்பார்; பேதுருவும், "கிறிஸ்துவும் உங்களுக்காகத்
துன்புற்று ஒரு முன்மாதிரியை வைத்துச் சென்றுள்ளார். எனவே
நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்;
இதற்காகவே அழைக்கப்பட்டுள்ளீர்கள்" (1 பேது. 2: 21)
என்பார்.
எனவே, பவுலைப் பின்பற்றுவது இயேசுவை பின்பற்றுவதாகும்.
இயேசுவைப் பின்பற்றவேண்டுமென்பது நமது கடமை. "என்னை
அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த
வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு" (யோ 4: 34)
என்கிறார் இயேசு. தந்தையின் விருப்பத்தின்படி நடப்போமா?
வெறும் வாய்ப்பேச்சு வீரர்களாக மட்டுமே இருப்போமா?
சொல்வதைச் செயலாற்றும் கடமையுணர்வு உள்ளவர்களாக மாறுவோமா?
சோம்பல் கூடாது
தன்னைப் பின்பற்ற வேண்டுமெனில், சிறப்பாகச் சோம்பலை அகற்ற
வேண்டும் என்று விரும்புகிறார் பவுல். உழைப்பவன்
கூலிக்குத் தகுதியுடையவனேயாயினும், பவுல் மக்களுக்குச்
சுமையாக இருக்க விரும்பவில்லை. "சகோதரரே நாங்கள் எவ்வாறு
பாடுபட்டு உழைத்தோம் என்பதை நினைவு கூருங்கள். உங்களுள்
யாருக்கும் சுமையாயிராதபடி எங்கள் பிழைப்புக்காக
இராப்பகலாய் வேலை செய்து கொண்டே கடவுளின் நற்செய்தியை
உங்களுக்கு அறிவித்தோம்" (1 தெச 2:9; 2 தெச 3:8). "நெற்றி
வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய்" (தொநூ.3:
19) அது நமது உரிமையும்கூட. ஏனெனில் உழைப்பின் வழிதான் ஒரு
குடும்பத்தை, ஒரு சமுதாயத்தை உருவாக்கி வாழவைக்க முடியும்.
இது மட்டுமன்று; உழைப்பு ஒன்றுதான் நம்மைப் பாவச்சூழல்கள்,
சோதனைகளிலிருந்து விலக்கவல்லது. எனவே உழைப்போம். உழைத்து
உழைத்து ஒய்வோம். உழைப்போரை மதிப்போம். ஏனெனில் உழைப்பு
வழிதான் உலகமே உய்வடையும். "உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம்."
யூதர்களின் தனிப்பெரும் மதிப்பிற்கும் வணக்கத்திற்கும்
உரியது எருசலேம் தேவாலயம். கி.பி. 70-இல் அது உரோமைப்
படைகளால் தவிடு பொடியாகத் தகர்க்கப்படும். இதை முன்
உணர்ந்த இயேசு தேவாலயம் அழிவுறு நாளையும் இறைவனின் இறுதித்
தீர்ப்பு நாளையும் இணைத்து இன்றைய வாசகம்வழி
வெளிப்படுத்துகிறார். திருவழிபாட்டு ஆண்டின் கடைசி
வாரங்களில் நம்மை மனமாற்றத்திற்கு அழைக்கும் வாசகமாக இது
அமைகிறது.
ஆண்டவரின் நாள்
யூத கணிப்புப்படி, நாம் வாழும் இத்தீய காலத்துக்கும்,
வரவிருக்கும் நற்காலத்திற்கும் இடையில் அமைவது "ஆண்டவரின்
நாள்". "இதோ, ஆண்டவரின் நாள் வருகின்றது. கொடுமையும்
கோபமும் கடும் சீற்றமும் நிறைந்த நாள் அது; மண்ணுலகைப்
பாழ்நிலமாக்கும் நாள் அது; அதிலிருக்கும் பாவிகளை
முற்றிலும் அழித்துவிடும் நாள் அது" (எசா. 13: 9; யோவே. 2:
1-2; ஆமோ. 5:18-20). இந்நாள் திடீரென வரும். "திருடன்
இரவில் வருவதுபோல, ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே
திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள்" (1 தெச 5: 2).
ஆண்டவரையும், அவரது நாளையும் நீதித் தீர்ப்பையும்
எதிர்ப்படத் தயாராய் இருக்கிறோமா? "கெட்டுப் போனோம்,
பாவியானோம், கிருபை செய் நாதனே" எனப் புலம்புவோம்.
எருசலேம் அழிவுறும் நாள்
கி.பி. 70-இல் உரோமையர் படையானது, கல்மேல் கல் நிற்காதவாறு
எருசலேமையும், அதன் நடுநாயகமாகிய திருக்கோயிலையும்
அழித்துத் தரைமட்டமாக்கியது. யோசேப்புஸ் என்னும்
வரலாற்றாசிரியர், இப்போரில் ஏறத்தாழ, கோடிக்கணக்கான மக்கள்
உயிரிழந்ததாகவும் பதினாயிரக் கணக்கான மக்கள்
சிறைப்பட்டதாகவும் கூறுவார். எருசலேமின் அழிவு இயேசுவின்
காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு மட்டுமன்று, நமக்கும்
எச்சரிக்கையாக அமைகிறது. எருசலேமே அழிவுற்றதெனின்
பாவிகளாகிய நாம் விட்டு வைக்கப்படுவோமா? எருசலேமுக்கு
ஏற்பட்ட அழிவு நமக்கும் ஏற்படாது என்று நாம் கூறமுடியுமா?
திருநகரின் அழிவிலே இறைத் தீர்ப்பைக் கண்டு நமது
வாழ்க்கையை இறைவனுக்குகந்ததாக அமைப்போமா? "குறித்த காலம்
நெருங்கிவிட்டது."
கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நாள்
ஆண்டவரின் நாள், எருசலேமின் அழிவு முதலியவை நம்மைத்
திகில்படுத்தினாலும், இவை நமக்கு நம்பிக்கை அளிக்கும்
இயேசுவின் மறு வருகையையும் சுட்டுகின்றன. இறைவனில்,
அவருடைய வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து வாழும் நம்
அனைவரையும் அவர் பாதுகாப்பார். எனவே துன்ப துயரங்களைக்
கண்டு நாம் நலிந்து விடக் கூடாது. மனம் தளர்ந்து விடக்
கூடாது. எதிரிகளால் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது.
"அவர் பெயரின் பொருட்டு" (21: 12-17) நாம் அனுபவிக்கும்
துன்பம் அனைத்தும் அவராலே இன்பமாக மாற்றப்படும் என்பது
திண்ணம். "உங்கள் தலைமயிர் ஒன்று கூட விழவே விழாது"
(21:19) என்று எத்துணை உறுதியாக இயேசு கூறுகிறார்?
எதிரியின் ஞானம், அறிவு, வல்லமை எல்லாம் இயேசுவின்
பெயருக்கு முன் அடிபணிந்து நிற்கும். எனவே நமக்கு
வேண்டியதெல்லாம் ஆண்டவர் மேல் ஆழ்ந்த நம்பிக்கை. அவர்
பெயருக்குப் பொருள் "அவர் தம் மக்களை அவர்களுடைய
பாவங்களிலிருந்து மீட்பார்" (மத் 1 : 21) என்பதாகும். எனவே
நிலைத்து நிற்போம். "நிலைத்து நின்றால் உங்கள் ஆன்மாக்களை
மீட்டுக் கொள்வீர்கள் "(21: 19) என்ற வார்த்தைகள் நமக்கே
கூறப்பட்டுள்ளன. "நாமோ பின்வாங்கிச் சென்று அழிவுறுவோர்
அல்ல. மாறாக, நம்பிக்கையையும், வாழ்வையும்
காத்துக்கொள்வோர் ஆவோம்" (எபி 10: 39). எனவே "அச்சமில்லை,
அச்சமில்லை" யெனப் பாடுவோம். தீர்ப்புக் கடவுள் நமக்கு
இன்றும் என்றும் மீட்புக் கடவுளாகவே இருப்பார் என்று
நம்பி, நமது வாழ்வைச் செம்மைப்படுத்துவோம்.
உங்கள் தலைமயிர் ஒன்று கூட விழவே விழாது.
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ