ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

     லாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு

வருடாந்த
ஞாயிறு வாசகம்
    Sermon Fr.Albert
             
              லாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு
            முன்னுரை - 3ம் ஆண்டு
திபா 46: 1-2,3c. 4-5. 7-8 (பல்லவி: 4)
பல்லவி: ஆற்றின் கால்வாய்கள் ஆண்டவரின் நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன.

திருப்பலி முன்னுரை
இறை இயேசுவில் அன்புக்குரியவர்களே, இன்று அன்னையாம் திருஅவை எல்லா ஆலயங்களுக்கும் தாய் ஆலயமாக இருக்கக்கூடிய இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. ஒவ்வொரு ஆயருக்கும் ஒரு பேராலயம் பொறுப்பில் இருக்கும். அந்த விதத்தில் பார்க்கும்போது உரோமை நகரின் ஆயராக இருக்கக்கூடிய திருத்தந்தையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பேராலயம்தான் இந்த இலாத்தரன் பேராலயம், 324 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி நேர்ந்தளிக்கப்பட்டது. தொடக்கத்தில் இப்பேராலயம் உலக மீட்பருக்கும், பின்னர் திருமுழுக்கு யோவானுக்கும், அதன் பின்னர் நற்செய்தியாளரான துாய யோவானுக்கும் ஒப்புக்கொடுக்கப்பட்டது. பேராலயம் நேர்ந்தளிக்கப்பட்ட நாளிலிருந்து ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் திருத்தந்தையர்கள் அங்கேதான் தங்கியிருந்தார்கள். இன்னும் ஒருசில காரணங்களால் இலாத்தரன் பேராலயம் மேலும் சிறப்புப் பெறுவதாக இருக்கின்றது. குறிப்பாக ஆண்டவர் இயேசு தன்னுடைய இறுதி இராவுணவின்போது உண்ணப் பயன்படுத்திய மேசை இங்கேதான் இருக்கின்றது. அதேபோன்று திருத்தூதரான தூய பேதுரு திருப்பலி நிறைவேற்றிய பலிபீடம் இங்கேதான் இருக்கின்றது. இப்படி பல்வேறுபட்ட சிறப்புகளைக் கொண்டதால் இப்பேராலயம் "பொன் ஆலயம் "Golden Church" என்று அழைக்கப்படுகின்றது.

இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடும் இன்றைய நாளில், இறைவாக்கினர் எசேக்கியேல் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகத்தில், கோவிலிருந்து வரும் தண்ணீரை கடவுளின் அருளாக நாம் புரிந்துகொள்ளலாம். நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு எருசலேம் ஆலயத்தை "தந்தையின் இல்லம்" என்று அழைக்கின்றார். அதனால்தான் அவ்வாலயத்தில் வாணிபம் செய்தவர்களை எல்லாம் அவர் விரட்டி அடிக்கின்றார். கிறிஸ்தவர்களாகிய நாம் ஆலயத்தின் மதிப்பையும், பெருமையும் உணர்ந்துகொண்டு அதற்கேற்ப வாழ்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்க அழைக்கப்படுகிறோம். நாம் ஒவ்வொருவரும் தூய ஆவி வாழும் கோவில். எனவே சக மனிதருக்கு மதிப்பளிக்கின்ற ஒருவர் கடவுளுக்கு மதிப்பளிக்கிறார். அதே நேரத்தில் சக மனிதரை இழிவுபடுத்தும் ஒருவர் கடவுளையும் இழிவுபடுத்துகிறார் என்ற உண்மையைப் புரிந்துகொண்டு இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் இறையருளின் பிறப்பிடமான கோவிலுக்கு உரிய மரியாதை செலுத்தி வாழ்வோம். அத்தோடு நம்மோடு வாழும் உயிருள்ள ஆலயங்களாகிய சக மனிதர்களை மனிதர்களாக மதித்து, அவர்களை முழுமையாக அன்பு செய்யக் கற்றுக்கொண்டு வாழ தொடர்ந்து இத்திருப்பலியில் பங்கேற்போம்.

திருப்பலி முன்னுரை 2
இனியவர்களே! இவ்வுலகில்‌ உள்ள அனைத்துக்‌ கோவில்களுக்கும்‌ தாயான லாத்தரன்‌ பெருங்கோவிலின்‌ நேர்ந்தளிப்பு நாளை இன்று தாய்‌ திரு அவை கொண்டாடுகிறது. நம்‌ உடல்‌ இறைவன்‌ வாழ்கின்ற கோவில்‌. இக்கோவிலின்‌ மாண்பினை அறிந்து, இறைவன்‌ என்றென்றைக்கும்‌ தங்கும்‌ கோவிலாக நாம்‌ மாற இன்றைய திருவழிபாடு நம்மை அழைக்கின்றது.

"உள்ளம்‌ பெருங்கோயில்‌ ஊன்‌ உடம்பு ஆலயம்‌" என்கிறார்‌ திருமூலர்‌. உடலும்‌ உள்ளமும்‌ ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத அளவுக்கு இணைக்கப்பட்டிருக்கின்றன. உள்ளம்‌ இல்லாமல்‌ உடலும்‌, உடல்‌ இல்லாமல்‌ உள்ளமும்‌ வாழ்வின்‌ அர்த்தத்தைக்‌ கொடுப்பதில்லை. உள்ளத்தில்‌ உறைகின்ற இறைவனுக்கு உடலே கோவிலாக அமைகின்றது. இறைவனும்‌ மனிதனும்‌ இணையும்‌ இடந்தான்‌ கோவில்‌. கோவிலில்‌ தான்‌ பலிகள்‌ ஒப்புக்கொடுக்கப்படுகின்றன. இறைமனித உறவை ஒப்புரவாக்க வந்த இயேசு, எருசலேம்‌ கோவிலைத்‌ தூய்மைப்படுத்துவதை இன்று யோவான்‌ நற்செய்தியில்‌ வாசிக்கிறோம்‌. தூய ஆவியாரின்‌ ஆற்றலால்‌ தந்தையின்‌ திருவுளத்தை நிறைவேற்ற வந்த இயேசுவே அந்தக் கோவில் என்பதை யூதர்கள்‌ புரிந்து கொள்ளவில்லை.

கற்களால்‌ ஆனது ம்ட்டும்தான்‌ கோவில்‌ என்று நினைத்துக்‌ கொண்டிருந்தார்கள்‌. "கடவுளின்‌ ஆவியார்‌ உங்களுள்‌ குடிகொண்டிருக்கிறார்‌ நீங்களே அக்கோவில்‌" என்று திருத்தூதர்‌ பவுல்‌ இரண்டாம்‌ வாசகத்தில்‌ குறிப்பிடுகிறார்‌. இக்கோவிலிலிருந்து செல்லும்‌ ஆற்றல்‌ தீமை அனைத்தையும்‌ நன்மையாக மாற்றுகிறது என்று இறைவாக்கினர்‌ எசேக்கியல்‌ நூலிலிருந்து முதல்‌ வாசகத்தில்‌ வாசிக்கின்றோம்‌. இறைவன்‌ வாழுகின்ற கோவிலாக நாம்‌ மாற அருள்‌ வேண்டி இத்திருப்பலியில்‌ மன்றாடுவோம்‌.


 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. உரோமை நகருக்கு மட்டுமல்லாமல், அனைத்துலகத் திரு அவைக்கும் தாய்த்தலமாகவும், தலைமை ஆலயமாகவும் விளங்குகிற லாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவினை கொண்டாடுகிற இந்நாளில், திருஅவையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருகுலத்தார், துறவறத்தார், ஆகியோரையும், பொதுநிலையினராகிய எங்களையும், நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. திருக்கோவிலிலிருந்து புறப்படுகிற ஆறு பாய்கிற இடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும் என முன்னுரைக்கும் இறைவாக்கினர் எசேக்கியேலின் கூற்றுப்படி, இவ்வுலகும், உலகின் உயிரினங்கள் அனைத்தும், வாழ்வாங்கு வாழவும், துளிர்விட்டிருக்கும் அமைதிக்கான முயற்சிகள் நிறைவான பலன் தந்து, அமைதியும் சமாதானமும் செழிக்கும் பூமியாக இவ்வையகம் விளங்கவும், நாடுகளை ஆட்சி செய்கிற தலைவர்கள் மற்றும் மக்கள் யாவரும், நாளுமே உழைத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. "கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே" என்கிற திருப்பாடல் வரிகளில் நம்பிக்கை கொண்டவர்களாய், எம்மை வாட்டி வதைக்கும் துன்பங்கள், துயரங்கள், வேதனைகள், சோதனைகள், வறுமை, வேலையின்மை, பொருளாதார நெருக்கடிகள், கடன் தொல்லைகள், இன்னும்பிற இன்னல்கள் ஆகியவற்றை, உம்மிடம் சமர்ப்பிக்கின்றோம். நீர் தாமே எங்களுக்குத் துணையாகவும் அரணாகவும் இருந்து, கரைசேர்க்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. தந்தையின் இல்லத்தின் மீதுள்ள ஆர்வத்தால் எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்திய இயேசுவின் அறச்சீற்றத்தை புரிந்தவர்களாய், நாங்களும், எங்கள் பங்குத் தந்தையரோடும் பங்குப்பேரவை, அன்பியங்கள், பக்த சபைகள் ஆகியவற்றின் பொறுப்பாளர்களோடு இணைந்து, எங்கள் பங்குத்தளத்தைப் புனிதமிகு ஆலயமாகக் கட்டியெழுப்பத் தேவையான அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், "நீங்கள் கடவுளுடைய கோவில் என்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? என்கிற பவுலடியாரின் வினாவினை உள்வாங்கியவர்களாய், எங்களது தனிப்பட்ட வாழ்க்கையையும், சமூக மற்றும் பங்கு வாழ்க்கையையும் தூயதாக அமைத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

6. எம் இல்லங்களை உமது ஆலயமாகக் கருதும் இறைவா, எங்கள் குடும்பங்கள் ஒவ்வொன்றும் 'இல்லத் திருஅவைகளாக' விளங்கவும், அங்கே விசுவாசமும், அன்பும், செபமும் தழைத்தோங்கவும், பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு நற்சாட்சிகளாய் வாழவும் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

7. உடல்நலக் குறைவாலும், முதிர் வயதாலும், இன்று உம் ஆலயத்தில் எங்களோடு ஒன்றுகூடிச் செபிக்க இயலாதிருக்கும் எங்கள் சகோதர சகோதரிகளுக்காக மன்றாடுகிறோம். அவர்கள் தங்கள் துன்பங்களின் வழியே உம்மோடு ஒன்றித்து, உம் ஆறுதலையும் குணமளிக்கும் அருளையும் நிறைவாகப் பெற்றிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



 
மறையுரைச்சிந்தனை: அருள்தந்தை குமார்ராஜா

உடல் எனும் கோவில்!

இயேசுவில் இனிய அன்பர்களே, லாத்தரன் பேராலய அர்ப்பணிப்பு நாளாகிய இன்று இயேசு எருசலேம் தேவாலயத்தைத் தூய்மைப்படுத்திய நிகழ்வை நற்செய்தியாக வாசிக்கிறோம். அந்த நிகழ்வின் இறுதியில் நற்செய்தியாளரின் விளக்கவுரையில் இயேசு தம் உடலாகிய கோவிலைப் பற்றியே பேசினார் என்று குறிப்பிடுவதைக் காண்கிறோம். இன்றைய சிந்தனைக்கு அந்த வரியையே எடுத்துக்கொள்ளலாம். கோவில் என்பது இறைவன் வாழும் இல்லம். மனிதர் கட்டிய கோவிலில் வாழ்கின்ற இறைவன், தாமே கட்டிய கோவிலாகிய மானிட உடல்களிலும் வாழ்கிறார். இயேசுவின் உடல் இறைவனின் திருக்கோவில் என்பதால், அவரைத் தலையாகக் கொண்ட உடலாகிய நம் அனைவரின் உடல்களும் இறைவனின் கோவில்கள்தானே. பவுலடியாரும் நாம் தூய ஆவியின் கோவில்கள் என்று குறிப்பிடுகிறாரே. எனவே, நம்மை, நம் உடல்களை இறைவனின் கோவி;ல்கள் என்ற மதிப்பீட்டில் வளர்வோம். நம்மைப் போன்ற மனிதர்கள் ஒவ்வொருவருமே இறைவன் வாழும் கோவில்கள் என்பதையும் மறக்காமல், ஒவ்வொருவருக்கும் உரிய மாண்பை, மதிப்பை வழங்க முன் வருவோம். உடலுக்கெதிரான தீமைகள், குற்றங்கள் குறிப்பாக வன்முறை இறைவனுக்கெதிரானது என்பதை மனதில் கொள்வோம். அடிப்பது என்பது மனித உரிமை மீறல், இறைவனின் கோவிலுக்கு எதிரான பாவம் என்பதை உணர்ந்தால், ஆசிரியர்-மாணவர், கணவன்-மனைவி, பணித்தலைவர்-ஊழியர், மற்றும் அண்டை அயலாருக்கிடையே உள்ள உறவில் வன்முறை, அடித்தல், காயப்படுத்துதல் போன்றவை நிச்சயமாக நீங்கிவிடும்.
அருள்தந்தை குமார்ராஜா



 
 
அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

அன்பார்ந்த நண்பர்களே! ''கோவிலைத் தூய்மைப்படுத்துதல்'' என அழைக்கப்படும் நிகழ்ச்சியை நான்கு நற்செய்தியாளர்களும் பதிவுசெய்துள்ளனர் (காண்க: மத் 21:12-13; மாற் 11:15-17; லூக் 19:45-46). ஆனால் மற்ற மூன்று நற்செய்தியாளர்களும் இந்நிகழ்ச்சி இயேசுவின் பணிக்காலத்தின் இறுதிக் கட்டத்தில் நடந்ததாகக் கூறுவர். யோவான் மட்டும் இயேசுவின் பணிக்காலத்தின் தொடக்கத்திலேயே இந்நிகழ்ச்சி நடந்ததாகக் குறித்துள்ளார். ஏன் இந்த வேறுபாடு? யோவான் நற்செய்தி ஒரு குறிப்பிட்ட இறையியல் பின்னணியில் எழுதப்பட்டது. அதாவது, இயேசுவின் பணி தொடங்கிய நாளிலிருந்தே அவரை எதிர்த்தவர்கள் இருந்தார்கள்; இயேசு தம் பணியைத் தொடங்கிய நாளிலிருந்தே தாம் ஒரு புதிய ஒழுங்குமுறையை இவ்வுலகில் நிலைநாட்ட வந்ததாக அறிவிக்கிறார். அவர் கானாவில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தண்ணீரைச் சுவைமிகு திராட்சை இரசமாக மாற்றினார். யூத சமயம் என்னும் பழைய ஒழுங்குமுறை மாறி ஒரு புதிய ஒழுங்குமுறை விரைவில் வருகிறது என அறிவித்தார். இயேசு கொணர்வது சுவைமிகுந்த திராட்சை இரசம். அது மக்களுக்கு மகிழ்ச்சி தருகின்ற ஒன்றாகும். மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியை அறிவிக்கவே இயேசு வந்தார். தொடர்ந்து, யூத சமயத்தின் ஒரு முக்கிய அம்சமாக விளங்கிய எருசலேம் கோவிலில் இயேசு தம் அதிகாரத்தை நிலைநாட்டுகிறார். அக்கோவிலை இயேசு ''என் தந்தையின் இல்லம்'' என அழைக்கின்றார் (யோவா 2:16). அந்த இல்லம் தூய்மையானது. அதை ஒரு சந்தைபோல ஆக்கிவிட்டவர்களை இயேசு கடிந்துகொள்கிறார்.

மேலும் இயேசு தம்மையே எருசலேம் கோவிலுக்கு ஒப்பிட்டுப் பேசுகின்றார்: ''தம் உடலாகிய கோவில் பற்றி அவர் பேசினார்'' (யோவா 21). கோவில் என்பது கடவுள் உறைகின்ற இடம் என்றால் இயேசு தம் உடலில் (தம்மில்) கடவுள் உறைகின்றார் என்றுரைத்தார். இனிமேல் கடவுளைத் தேடி மக்கள் கோவிலுக்குச் செல்ல வேண்டியதில்லை; கடவுள் தம் மகன் இயேசுவிடம் முழுமையாக உறைகின்றார். இதைக் கேட்ட ''யூதர்கள்'' கோபமுற்றனர். இயேசு, ''இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்'' என்று கூறியதைக் கேட்ட அவர்கள் அதிர்ச்சியடைந்திருக்க வேண்டும். எனவேதான் தங்கள் கோவிலின் பெருமையை அவர்கள் எடுத்துரைத்தார்கள். எருசலேம் கோவிலைப் புதுப்பித்து விரிவுபடுத்தும் பணி கி.மு. 20-19 அளவில் தொடங்கியது. அப்பணி கி.பி. 60களில் தான் நிறைவடைந்தது. பணி தொடங்கிய ஆண்டிலிருந்து ''நாற்பத்தாறு ஆண்டுகள்'' (காண்க: யோவா 2:20) ஆகும்போது இயேசு ''கோவிலைத் தூய்மைப்படுத்தினார்'' என்றால் அது கி.பி. 28 அளவில் நிகழ்ந்திருக்க வேண்டும். இயேசுவின் உடல் கடவுள் உறைகின்ற கோவில் என்னும் உண்மையைச் சீடர் இயேசு சிலுவையில் இறந்து அதன் பின் உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியின் ஒளியில் முழுமையாக அறிந்துகொண்டார்கள்.
அருட்திரு பவுல் லியோன் வறுவேல்




 
திருப்பலி முன்னுரை: மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.
இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழா 09 11 2025



பிரியமானவர்களே! வணக்கம் மற்றும் நல்வாழ்த்துக்கள்.

தாயாம் திருஅவையின் தாய் பேராலயம் என்று அழைக்கப்படுகின்ற, உரோமையில் உள்ள லாத்தரன் பேராலய அர்ச்சிப்பு நாளை, நினைவு கூர்ந்து கொண்டாட அழைக்கப்படுகின்றோம்.

இதன் மூலம் நம்முடைய ஒன்றிப்பை உறுதி செய்திட திருஅவை அழைக்கின்றது. ஒன்றினைந்த மக்களாக மன்றாடுவோம்.

இறைவனது பிரசன்னம் வெளிப்படும் இடமாக ஆலயம் அமைகின்றது என்றும், உயிர்வாழும் ஆலயமாக நம்மிலும், அந்த இறைவெளிப்பாட்டை உணர்ந்து, வாழும் வரத்தை கேட்டுப் பெற்றுக் கொள்ளவும், பிறருக்கு அந்த இறைவனை வெளிக்காட்டும், சாட்சிகளாக இருந்திடவும் வரம் வேண்டுவோம். இறைவன் தம் ஆசீரால் நம்மை அர்ச்சித்து பலியின் பயனாக நம்மை புதுப்பிப்பாராக.

முதல் வாசக முன்னுரை (எசேக்கியேல் 47:1-2,8-9,12)

பாபிலோனியரால் நாடு கடத்தப்பட்ட யூத மக்களின் வாழ்க்கையும் உவர்ப்பு நிலையிலிருந்து இனிய நிலைக்கு மாறும் என்னும் நம்பிக்கைச் செய்தியை இறைவாக்கினர் எசேக்கியேல் அறிவிக்கிறார். துன்பங்கள் பல அனுபவித்த மக்கள் இனிமேல் ஆறுதல் பெறுவர்; அன்பும் இரக்கமும் நிறைந்த கடவுள் நம்மை ஒருநாளும் கைவிடார் என்று இறைவாக்கினர் எசேக்கியேல் எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தை கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை (1 கொரிந்தியர் 3:9-11,16-17)

உயிர்பெற்றெழுந்த இயேசு தூய ஆவியின் வல்லமையால் கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டோர் நடுவே வாழ்கின்றார் எனவும், இயேசுவை நம்புவோர் கடவுள் உறைகின்ற ''திருக் கோவில்களாக'' மாறுகின்றனர் எனவும் இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடியார் கூறுவதை கேட்போம்.

மன்றாட்டுகள்

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. பிரசன்னமாகும் இறைவனே! திருஅவையில் உம்முடைய பிரசன்னததை கண்டு, பணியாளர்கள், அதனை எடுத்துச் சொல்லும் அருட்பணியாற்ற, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. பிரசன்னமாகும் இறைவனே! எல்லாவற்றிலும், எல்லாரிலும் உம்முடைய பிரசன்னத்தை எம் பாரத மக்கள் காணவும், அதனால் சக மனிதரை மதித்து, ஏற்று வாழவும், அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. பிரசன்னமாகும் இறைவனே! கோவிலுக்கு தரும் முக்கியத்துவத்தைப் போல கோவிலுக்குள்ளும், வெளியேயும் உள்ள மனிதர்களில் உம் பிரசன்னத்தை கண்டு வாழ்த்திட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. பிரசன்னமாகும் இறைவனே! ஒன்றுபட்ட திருஅவையை மனதிலே கொண்டு, திருஅவை முன்னெடுக்கும் எல்லா காரியங்களிலும் ஒத்துழைக்கும் மனநிலை பெற்றவர்களாக வாழ, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. பிரசன்னமாகும் இறைவனே! கோவிலில் இருந்து புறப்படும் அருளை நிறைவாக பெற்று மகிழவும், அதனை பிறரோடு பகிர்ந்து வாழவும் அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கடவுள் அன்பாய் இருக்கிறார்! 1 யோவா 04: 16
மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.
 
மறையுரைச்சிந்தனை   :Selva AI

தூய ஆவியார் தங்கும் உயிருள்ள ஆலயங்கள்

அறிமுகம்: ஒரு கட்டிடம் ஏன் இவ்வளவு முக்கியம்?
அன்பு நிறைந்த இயேசுவில் சகோதர சகோதரிகளே, இன்று நாம் ஒரு சிறப்பான விழாவைக் கொண்டாடுகிறோம். இது ஒரு புனிதருடைய விழாவோ அல்லது ஆண்டவரின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வோ அல்ல. இது ஒரு "ஆலயத்தின்" விழா. உரோமை மாநகரில் உள்ள "தூய யோவான் இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழா".

நம்மில் பலருக்கு ஒரு கேள்வி எழலாம். கத்தோலிக்கத் திருஅவை உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஆலயங்களைக் கொண்டுள்ளது. அப்படியிருக்க, இத்தாலியில் உள்ள உரோமை நகரில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட ஆலயத்தின் விழாவை, உலகம் முழுவதும் உள்ள நாம் அனைவரும் ஏன் இவ்வளவு முக்கியத்துவத்துடன் கொண்டாட வேண்டும்?

காரணம், இந்த ஆலயம் மற்ற ஆலயங்களைப் போன்றது அல்ல. இதுவே, கத்தோலிக்கத் திருஅவையின் "தாயும் தலைமை ஆலயமும்" (Mother and Head of all Churches) ஆகும். இதுதான், உரோமை ஆயராகிய நமது திருத்தந்தையின் அதிகாரப்பூர்வமான "ஆசானம்" (Cathedra - ஆயரின் போதிக்கும் அதிகாரத்தின் இருக்கை) அமைந்துள்ள முதன்மைத் திருக்கோவில்.

நாம் அனைவரும் ஒரே விசுவாசக் குடும்பம் என்பதன் 살아있는 சின்னம் இந்தத் தாய்த் திருஅவை. இந்தப் பேராலயத்தின் விழா, வெறும் கல், மரம், காரை ஆகியவற்றின் கொண்டாட்டம் அல்ல; மாறாக, ஒரே விசுவாசத்தில், ஒரே திருத்தந்தையின் தலைமையில், ஒரே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அடித்தளமாகக் கொண்டு கட்டப்பட்டிருக்கும் உலகளாவிய "திருஅவை" என்னும் இறைமக்கள் குடும்பத்தின் கொண்டாட்டம் இது.

இன்றைய திருவழிபாட்டு வாசகங்கள் இந்த ஆழமான உண்மையை மூன்று அழகான படிநிலைகளில் நமக்கு விளக்குகின்றன.

1. ஆலயத்திலிருந்து பாயும் வாழ்வளிக்கும் தண்ணீர் (முதல் வாசகம்)
இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசேக்கியேல் ஓர் அற்புதமான காட்சியைக் காண்கிறார். எருசலேம் ஆலயத்தின் அடிப்பகுதியிலிருந்து தண்ணீர் கசிகிறது. அது சிறிய நீரோடையாகத் தொடங்கி, கணுக்கால், முழங்கால், இடுப்பு என உயர்ந்து, இறுதியில் நீந்த முடியாத அளவுக்கு ஒரு மாபெரும் ஆறாகப் பெருகுகிறது.

"அந்த ஆறு பாயும் இடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும்... அது தொடும் இடமெல்லாம் புத்துயிர் பெறும்." (எசேக் 47:9)

வறண்டுபோன பாலைவனப் பகுதியைக் கூட அது செழிப்பான சோலையாக மாற்றுகிறது. நச்சுத் தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றுகிறது. கனி தராத மரங்கள், மாதம் தோறும் கனிகளால் நிறைகின்றன.

இதன் பொருள் என்ன?
ஆலயம் என்பது கடவுளின் உடனிருப்பு தங்கும் இடம். அங்கே, கடவுளின் அருள் ஒருபோதும் வற்றுவதில்லை. இந்த "வாழ்வளிக்கும் தண்ணீர்" என்பது வேறு எதுவும் அல்ல; ஆலயத்தில் இருந்து, அதாவது திருஅவையிடமிருந்து புறப்படும் இறைவனின் வார்த்தை, அருளடையாளங்கள் (குறிப்பாக திருமுழுக்கு மற்றும் நற்கருணை) மற்றும் தூய ஆவியாரின் அருள் ஆற்றல் ஆகும்.

எப்படி அந்தத் தண்ணீர் வறண்ட நிலத்தை உயிர்ப்பித்ததோ, அப்படியே, திருஅவையிலிருந்து பாயும் இந்த அருளின் ஆறு, பாவம், பிளவு, விரக்தி, நோய் என்ற வறண்ட நிலத்தில் சிக்கியிருக்கும் நம் வாழ்வை உயிர்ப்பிக்கிறது; நம்மைக் குணமாக்குகிறது; ஆவியின் கனிகளால் நம்மை நிரப்புகிறது. நாம் நம் தாய் திருஅவையோடு ஒன்றித்திருக்கும்போது, இந்த வாழ்வளிக்கும் தண்ணீரின் பேறுகளை நாம் நிறைவாகப் பெற்றுக் கொள்கிறோம்.

2. "நீங்கள் கடவுளுடைய கோவில்" (இரண்டாம் வாசகம்)
முதல் வாசகம் "கட்டிடமாகிய" ஆலயத்தின் மாண்பைச் சொன்னால், இரண்டாம் வாசகத்தில், திருத்தூதர் பவுல், அதைவிட ஆழமான, நமக்குப் பெரும் பொறுப்பைத் தருகிற ஓர் உண்மையைப் பறைசாற்றுகிறார்.

"நீங்கள் கடவுளுடைய கோவில் என்றும், கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா?" (1 கொரி 3:16)

ஒரு சிறிய உவமை: ஒரு பெரிய ஏல நிறுவனம். அங்கே பழைய, தூசி படிந்த, நரம்புகள் தளர்ந்த ஒரு வயலின் (Violin) ஏலத்திற்கு வந்தது. ஏலம் விடுபவர், "யாராவது கேளுங்கள், 100 ரூபாய்?" என்றார். யாரும் ஆர்வம் காட்டவில்லை. "சரி, 50 ரூபாய்?"... "20 ரூபாய்?"... கூட்டத்தில் அமைதி.

அப்போது, கூட்டத்தின் பின்னாலிருந்து வயதான ஒருவர் மேடைக்கு வந்தார். அவர் அந்தக் கருவியை கையில் எடுத்தார். தன் கைக்குட்டையால் அதை அன்பாகத் துடைத்தார். அதன் நரம்புகளைச் சரிசெய்து, அதற்கேற்ற பதத்தில் முடுக்கினார். பிறகு, தன் தோளில் வைத்து அதை வாசிக்கத் தொடங்கினார். கூட்டமே மெய் சிலிர்க்கும் அளவுக்கு, அதிலிருந்து ஒரு தெய்வீக இசை புறப்பட்டது. வாசித்து முடித்ததும், கூட்டம் முழுவதும் எழுந்து நின்று கைதட்டியது.

இப்போது ஏலம் விடுபவர் சொன்னார்: "இதே வயலின், இப்போது மீண்டும் ஏலத்திற்கு வருகிறது. ஆரம்ப விலை 50,000 ரூபாய்!" கூட்டம் போட்டி போட்டுக் கொண்டு ஏலம் கேட்டது.

என்ன வித்தியாசம்? சற்று முன்புவரை அது பயனற்ற மரக்கட்டை. ஆனால் அந்த இசைக் கலைஞர் (Maestro) தொட்டவுடன், அது விலைமதிப்பற்ற இசைக்கருவி என்பது அனைவருக்கும் புரிந்தது.

அன்பானவர்களே, நம் வாழ்வும் பல நேரங்களில் இப்படித்தான் தூசி படிந்து, தளர்ந்து போய், யாருக்கும் பயனில்லாதது போல நமக்குத் தோன்றலாம். ஆனால் திருத்தூதர் பவுல் இன்று நம்மிடம் சொல்கிறார்: "சகோதரனே, சகோதரியே, நீ வெறும் உடம்பு அல்ல. நீ ஒரு சாதாரணப் பொருள் அல்ல. நீ... கடவுள் தங்கும் உயிருள்ள கோவில்!"

இந்த உண்மையை நாம் எப்போது முழுமையாக உணர்கிறோமோ, அப்போது நம் மதிப்பு நமக்குப் புரியும். நமது அடித்தளம் சாதாரணமானது அல்ல. பவுல் உறுதியாகச் சொல்கிறார், "இயேசு கிறிஸ்துவே அந்த அடித்தளம்." அந்த அசைக்க முடியாத அடித்தளத்தின் மீது கட்டப்பட்டிருக்கும் நாம், சாதாரணமானவர்களா? நம்மில் குடியிருப்பது யார்? "தூய ஆவியார்."

இதைவிடப் பெரிய மாண்பு, இதைவிடப் பெரிய தகுதி நமக்கு வேறு என்ன வேண்டும்?

3. கோவிலைத் தூய்மைப்படுத்துதல் (நற்செய்தி)
ஆலயம் வாழ்வின் ஊற்றாக இருக்க வேண்டும் (முதல் வாசகம்). நாமே அந்தக் கோவிலாக இருக்கிறோம் (இரண்டாம் வாசகம்). இந்த இரண்டு உண்மைகளையும் மனதில் வைத்து, இப்போது நற்செய்திக்கு வருவோம்.

இயேசு எருசலேம் ஆலயத்திற்குச் செல்கிறார். அங்கே என்ன நடக்கிறது? கடவுளைத் தொழ வேண்டிய, இறைவனைச் சந்திக்க வேண்டிய புனித இடம், ஒரு "சந்தைக்கடை"யாக (Marketplace) மாறியிருக்கிறது. காசு மாற்றுவோரின் கூச்சல், ஆடு மாடுகளின் சத்தம், புறா விற்பவர்களின் இரைச்சல், பேரம் பேசுதல்.

"என் தந்தையின் இல்லம் செபிக்கும் வீடு. நீங்களோ அதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்!" என்று இயேசு கோபம் கொள்கிறார். கயிறுகளால் ஒரு சாட்டையைச் செய்து, அனைத்தையும் ஆலயத்தை விட்டு விரட்டுகிறார். இது சாதாரண கோபம் அல்ல; இது "அறச்சீற்றம்" (Righteous Anger).

இந்த நிகழ்வு இன்று நமக்குச் சொல்வது என்ன?
இன்று இயேசு நம்மிடம் வருகிறார். திருத்தூதர் பவுல் சொன்னது போல, "நாமே கடவுளின் கோவில்" என்றால், இயேசு இன்று நம் ஒவ்வொருவரின் இதயமாகிய கோவிலுக்குள் நுழைகிறார்.

அங்கே என்ன பார்க்கிறார்?
நம் இதயக் கோவில் "செபிக்கும் வீடாக", தூய ஆவியார் தங்கும் அமைதி நிறைந்த ஆலயமாக இருக்கிறதா?

அல்லது, அங்கே காசு மாற்றுவோரின் சத்தம் கேட்கிறதா? (பண ஆசை, பொருள் வெறி, உலகக் கவலைகள்).

அங்கே புறா விற்பவர்களின் கூச்சல் இருக்கிறதா? (வெளிவேடப் பக்தி, பெருமை, பிறரை ஏமாற்றும் செயல்கள்).

அங்கே மாடுகளும் ஆடுகளும் இருக்கின்றனவா? (கெட்ட சிந்தனைகள், கோபம், பொறாமை, காம இச்சைகள், தீய பழக்கங்கள்).

நம் இதயக் கோவிலில், கடவுளை விட வேறு எதற்கெல்லாம் நாம் முதன்மை இடம் கொடுத்து, அதை ஒரு சந்தைக்கடை ஆக்கியிருக்கிறோம்?

இயேசு இன்று நம்மிடம் வருகிறார். கையில் சாட்டையோடு அல்ல; தன் அன்பாகிய சிலுவையோடும், தன் இரக்கமாகிய நற்கருணையோடும் வருகிறார். "மகனே, மகளே, இது என் இல்லம். இது தூய ஆவியார் தங்கும் கோவில். இதை ஏன் அசுத்தப்படுத்துகிறாய்? உன் பாவங்களை, கவலைகளை, தீய பழக்கங்களை வெளியே துரத்து. நான் உன்னுள் முழுமையாகத் தங்க வேண்டும், உன் வழியாக நான் செயல்பட வேண்டும்" என்று அன்புடனும் உரிமையுடனும் கேட்கிறார்.

இயேசு நம் இதயக் கோவிலைத் தூய்மைப்படுத்த நாம் இன்று முழு மனதுடன் அனுமதிப்போமா?

🚀 நமது வாழ்விற்கான செய்திகள்
இன்றைய இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழா நமக்கு மூன்று முக்கியச் செய்திகளைத் தருகிறது:

திருஅவையை ஒன்றித்து நேசிப்போம்: நமது தாய்த் திருஅவை (உரோமை) மீதும், நாம் கூடிவரும் நம் பங்குத் திருஅவை (ஆலயம்) மீதும் அன்பு கொள்வோம். இது கடவுளின் பிரசன்னம் தங்கும் புனிதமான இடம். ஆலயத்தின் புனிதத்தையும், அங்கு கடைப்பிடிக்க வேண்டிய அமைதியையும் பக்தியையும் மதிப்போம். திருஅவையின் போதனைகளோடும், நம் ஆயர் மற்றும் திருத்தந்தையோடும் ஒன்றித்திருப்போம்.

நம் மாண்பை உணர்ந்து வாழ்வோம்: நாம் சாதாரணமானவர்கள் அல்ல; நாம் "கடவுளின் உயிருள்ள கோவில்." இந்த மாபெரும் தகுதியை உணர்ந்து வாழ்வோம். நம் கண்களால் பார்ப்பது, காதால் கேட்பது, நாவால் பேசுவது, கரங்களால் செய்வது, நாம் சிந்திப்பது அனைத்தும், நாம் ஒரு "கோவில்" என்ற தகுதிக்கு ஏற்றதாக இருக்கட்டும். நம் உடலையும் உள்ளத்தையும் பாவத்தால் அசுத்தப்படுத்த வேண்டாம்.

இதயத் தூய்மையைப் பேணுவோம்: இயேசு ஆலயத்தைத் தூய்மைப்படுத்தியது போல, நம் இதயக் கோவிலில் இருந்து "பணம்", "சுயநலம்", "கோபம்", "பொறாமை", "அசுத்த எண்ணங்கள்" போன்ற சந்தைக் கறைகளை அனுதினமும் நல்ல பாவசங்கீர்த்தனம் மற்றும் செபத்தின் வழியாக வெளியேற்றுவோம். அப்போதுதான், எசேக்கியேல் கண்ட அந்த "வாழ்வளிக்கும் அருளின் ஆறு" நம் இதயத்திலிருந்து புறப்பட்டு, நம் குடும்பத்திற்கும், நாம் வாழும் சமூகத்திற்கும் புத்துயிர் அளிக்கும்.
Selva AI


 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி
 
இன்று தூய லாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடுகின்றோம். 15ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டு லாத்தரனி குடும்பத்திற்குச் சொந்தமான அரண்மனை திருத்தந்தை சிக்ஸ்து அவர்களுக்கு பரிசாக வழங்கப்படுகின்றது. அந்த அரண்மனையோடு இணைந்து பின் விரிவுபடுத்தப்பட்ட பேரலாயமே லாத்தரன் பேராலயம். திருமுழுக்கு யோவான் மற்றும் நற்செய்தியாளர் யோவான் என இரண்டு யோவான்களுக்காக அர்ப்பணம் செய்யப்பட்ட பேரலாயம் இது. திருத்தந்தையின் நான்கு பேரலாயங்களில் முதன்மையானது இது. திருத்தந்தையரின் வாழ்விடம் 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் வத்திக்கான் நகருக்கு மாற்றப்பட்டாலும் இந்தப் பேராலயத்திலேயே திருத்தந்தையின் அதிகாரப்பூர்வ நாற்காலி இருக்கிறது. உலகின் அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் தாய் ஆலயம் இது. உரோமை மறைமாவட்டத்தின் கதீட்ரல் இது. உரோமை மறைமாவட்டத்தின் பேராயர் இல்லமே(!) லாத்தரன் அரண்மனை.

இன்று கலைநுணுக்கத்திற்காக பலர் இங்கே செல்கின்றனரே தவிர பக்திக்காக யாரும் செல்லவில்லை. தங்கள் நாட்டைச் சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கூட இன்றைய திருவிழா வழிபாட்டு ஆண்டில் சேர்க்கப்பட்டிருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது. நம்ம ஊர் வேளாங்கண்ணியிலோ, பூண்டியிலோ, ஓரியூரிலோ நுழையும் போது நம்மை அறியாமல் தொற்றிக் கொள்ளும் ஒரு கடவுள் உணர்வு இந்த ஆலயத்தில் ஏற்படுவது இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

இன்று எல்லாமே வெர்ச்சுவல் என்று மாறிவருகிறது. அதாவது இருக்கு! ஆனா இல்லை! இன்று பல இணைய தளங்கள் வெர்ச்சுவல் கோவில்களாக உள்ளன. செவ்வாய் கிழமை, வெள்ளிக் கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை என்றால் இந்துக்களோ, இஸ்லாமியரோ, யூதர்களோ, கிறித்தவர்களோ கோவிலுக்கும், மசூதிக்கும், செபக்கூடத்திற்கும் போகத் தேவையில்லை. இணைய தளங்களில் நுழைந்து வழிபாடுகளைக் காணலாம், மறையுரைகள், பாடல்களைக் கேட்கலாம், விண்ணப்பங்கள் மற்றும் நன்றிகளைப் பதிவு செய்யலாம். காணிக்கை செலுத்தலாம். ஒருசில தளங்களில் பாவசங்கீர்த்தனமும் செய்யலாம்.

இடம் சார்ந்த இறைவன் இன்று இணையம் சார்ந்த இறைவனாக மாறிவிட்டார்!

இன்றைய நற்செய்தியில் இயேசு எருசலேம் ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் நிகழ்வை வாசித்தோம். நான்கு நற்செய்தியாளர்களுமே குறிப்பிடும் ஒரு நிகழ்வு இது. யோவான் நற்செய்தியாளர் இயேசுவின் வாழ்வின் முதல் நிகழ்வாகவும், மற்ற நற்செய்தியார்கள் இறுதி நிகழ்வாகவும் எழுதுகின்றனர். இப்போது அடுத்த கேள்வி! எப்போதுதான் இயேசு தூய்மைப்படுத்தினார்? ஏன் இந்த முரண்பாடு?

எருசலேம் ஆலயம் நாம் நினைக்கும் அளவிற்கு எல்லாரும் நுழையக் கூடிய ஆலயம் அல்ல. டெம்பிள் போலீஸ் என்னும் காவலர்கள் எந்நேரமும் விழித்திருந்து ஏதாவது அசம்பாவிதம் நடக்கிறதா என்று கவனித்துக் கொண்டே இருப்பர். மேலும் குருக்களுக்கான தனிப்பட்ட காவலர்கள், தலைமைக்குருவின் காவல் பணியாளர்கள் எனவும் நிறையப் பேர் இருப்பர். இவர்களை மீறி இயேசு சாட்டை எடுத்து வாங்குவோரையும், விற்போரையும் விரட்டியிருக்க வாய்ப்பு இல்லை. இந்த நிகழ்வு ஒரு வரலாற்று நிகழ்வு அல்ல.

நற்செய்தியாளர்கள் இயேசுவின் நற்செய்தியை எழுதிய காலம் கிபி 70 முதல் 120. கிபி 70ல் எருசலேம் ஆலயம் உரோமையர்களால் தரைமட்டமாக்கப்படுகிறது. யூதர்கள் ஒரு பக்கமும், கிறித்தவர்களாக மாறிய யூதர்கள் மறுபக்கமும் என அங்குமிங்கும் அலைபாய்கின்றனர். யூதர்கள் தங்களுக்கென செபக்கூடங்களைக் கட்டிக்கொண்டு கிறித்தவர்களை அங்கே நுழைய அனுமதிக்கவில்லை. இப்போது ஆலயமும் இல்லை! செபக்கூடமும் இல்லை! என்ன செய்வது? கிறித்தவர்கள் எங்கே போவார்கள்?

நற்செய்தியாளர்களின் மூளையில் ஒரு எண்ணம் உதித்தது. இயேசுவின் உடலையே ஆலயமாக்கிவிட்டால் நமக்கு கல்லால் ஆன ஆலயம் தேவையில்லையே! இயேசுவே இதைச் சொல்வதாக ஒரு நிகழ்வை கற்பனை செய்து எழுதுகின்றனர். இந்த நிகழ்வு கற்பனை நிகழ்வு அல்லது இறையியல் நிகழ்வு என்றாலும் இது நமக்கு ஒரு சில பாடங்களைச் சொல்லத்தான் செய்கின்றது:

அ. ஆள்சார்ந்த பிரசன்னம். பழைய ஏற்பாட்டில் கடவுள் என்பவர் இடம் சார்ந்த பிரசன்னமாக கருதப்பட்டார். உடன்படிக்கைப் பேழை, சந்திப்புக் கூடாரம், சாலமோனின் ஆலயம் என இறைவனை இந்த இடங்கள் பிரசன்னமாக்கியிருந்தன. புதிய ஏற்பாட்டில் இறைவன் இடம் சார்ந்த பிரசன்னத்தை விடுத்து ஆள்சார்ந்த பிரசன்னமாக மாறுகின்றார். இயேசு தன் உடலை ஆலயத்திற்கு ஒப்பிட்டதை, தூய பவுலடியார் இன்னும் ஒரு படி எடுத்துப் போய் நம்பிக்கை கொண்ட அனைவருமே இறைவனின் ஆலயங்கள் என்று கதவுகளை அகலத் திறக்கின்றார். இது மேற்கத்திய சிந்தனைக்குப் புதியது என்றாலும் இந்து மரபில் இது பல ஆண்டுகளாக இருந்து வருகின்ற ஒன்று. 'தத்வமசி' 'அகம் பிரமாஸ்ய' என்பவை குறிப்பிடுவதெல்லாம் இதுதான்: 'நீயே இறைவன்!' 'உன்னுள்ளே இறைவன்!' நம்முள் இறைவன் என்றால் நாம் ஒருவர் மற்றவரை மதிக்கவும், அன்பு செய்யவும் கடமைப்பட்டுள்ளோம்.

ஆ. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். கோவில் ஒரு சமூகத்தின் அடையாளம். வெறும் கற்கள் ஒரு கோவிலை உருவாக்குவதில்லை. மாறாக, மக்கள் தாம் அதை உருவாக்குகின்றனர். மக்களை மையப்படுத்தாமல் வெறும் வழிபாடுகளையோ, அல்லது குருக்களையோ மையப்படுத்தும் கோவில்கள் கோவில்கள் ஆகாது. அவை காட்டும் ஆன்மீகமும் ஆன்மீகம் அல்ல. வியாபாரம்!

இ. இன்று கோவிலுக்கு எதற்காகப் போகிறோம் என்று நம் இளைய தலைமுறையினரைக் கேட்டால், 'நண்பர்களைச் சந்திக்க!' என்பார்கள். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கோவிலுக்கு யாரும் வரவில்லை என்பதால் கோவில்கள் டிஸ்கோ பார்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. செல்போன் போல கடவுளையும் கைக்குள் வைத்துக்கொள்ளவே இன்றைய தலைமுறை விரும்புகிறது. எந்தக் கோவிலுக்கும் போகலாம், எந்தக் கடவுளையும் வணங்கலாம் என்ற எண்ணமும் வந்து விட்டது. இந்த நிலையில் லாத்தரன் பேராலயமும், நம் ஊரின் ஆலயங்களும் 'வெள்ளை யானைகளாக' மாறிவிடும் நாள் மிக அருகில் உள்ளது.

கோவில்களின் கோபுரங்கள் போல நம் எண்ணங்கள் உயர்ந்தால், அவைகளின் மணிகள் போல நாம் இறைப்பிரசன்னத்திற்கு நம் சகோதர, சகோதரிகளை அழைத்தால், ஒருவர் மற்றவரின் இறைச்சாயலை மதித்து அன்பு செய்தால் மட்டுமே ஆலயம் அருள் தரும்! பொருள் தரும்!
அருள்பணி ஏசு கருணாநிதி


 
இன்றைய இறைமொழி

இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழா

எசேக்கியேல் 47:1-2, 8-9, 12.
1 கொரிந்தியர் 3:9-11, 16-17.
யோவான் 2:13-22

நாமே ஆலயம்!

உரோமை மறைமாவட்டத்தின் தலைமை ஆலயமாக இருக்கின்ற புனித யோவான் இலாத்தரன் பேராலயம் திருத்தந்தையின் அதிகாரப்பூர்வமான இருக்கையைக் கொண்டுள்ளது. திருஅவையின் நம்பிக்கை மற்றும் அறநெறி சார்ந்த கொள்கைத்திரட்டை இந்த இருக்கையில் அமர்ந்தே திருத்தந்தை வெளியிடுவார். புனித மீட்பர் பேராலயம், அல்லது புனித திருமுழுக்கு யோவான் பேராலயம் என்னும் பெயர்களிலும் இப்பேராலயம் அழைக்கப்படுவதுண்டு. தொடக்ககால உரோமைத் திருச்சபையில் அனைவருக்கும் இங்குதான் திருமுழுக்கு வழங்கப்பட்டது. கான்ஸ்டான்டின் பேரரசரால் கட்டப்பட்டு, 324-ஆம் ஆண்டு திருத்தந்தை சில்வெஸ்டர் அவர்களால் நேர்ந்தளிக்கப்பட்டது. உலகெங்கும் உள்ள அனைத்துப் பேரலாயங்களின் தாய் ஆலயம் இது.

இந்த நாளின் இறைவார்த்தை வழிபாடு, 'ஆலயம்' என்னும் வார்த்தை பற்றிய இரு புரிதல்களை நமக்குத் தருகின்றது.

முதல் வாசகத்தில் (காண். எசே 47:1-2,8-9,12), 'ஆலயம்,' புதிய வாழ்வின் அடையாளமாக முன்வைக்கப்படுகிறது. பாபிலோனியாவின் அடிமைத்தனத்தின்போது ஆண்டவரின் மாட்சி எருசலேம் கோவிலை விட்டு அகல்கின்றது. மக்கள் திரும்பி வந்தபோது ஆண்டவர் மீண்டும் நகருக்குள் வருகின்றார். ஆண்டவரின் மாட்சி குடிகொள்ளும் இடத்திலிருந்து பொங்கி வழியும் தண்ணீர் அனைத்துலகையும் புதுப்பிப்பதாகவும், அதற்குப் புத்துணர்வு அளிப்பதாகவும் காட்சி காண்கிறார் இறைவாக்கினர் எசேக்கியேல்.

நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 2:13-22), 'ஆலயம்' என்பது 'இடம் சார்ந்த பிரசன்னம்' என்ற புரிதலைச் சற்றே மாற்றி, அது 'ஆள் சார்ந்த பிரசன்னம்' என்ற புதிய புரிதலைத் தருகின்றார். எருசலேம் ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் நிகழ்வில் இயேசு, தன்னுடலை ஆலயத்திற்கு உருவகப்படுத்துகிறார். ஆனால், மற்ற யூதர்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை.

இன்றைய நாள் நமக்குக் கொடுக்கும் செய்தி என்ன?

அ. 'கடவுள் நம் நடுவில் வாழ்கிறார்'
கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதன் காணக்கூடிய அடையாளம்தான் ஆலயம். 'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்பது பழமொழி. இங்கே, 'கோ-இல்' என்பது, 'அரசனின் இல்லத்தை' குறிக்கிறது. அதாவது, அரசன் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். ஏனெனில், அரசன் இல்லாத மக்கள் காட்டுமிராண்டித்தனமாக நடப்பார்கள், தான்தோன்றித்தனமாக இருப்பார்கள் (காண். நீத 24). நம் வாழிடத்தின் அரசராக இருப்பவர் இறைவன்.

ஆ. 'நம் எண்ணங்கள் உயர்கின்றன'

பெரிய ஆலயங்கள், பெரிய கோபுரங்கள், பெரிய தூண்கள் என என அமைந்திருக்கும் ஆலயங்களை நாம் உயர்ந்து பார்க்கும்போது நம் கண்கள் மட்டுமல்ல, நம் எண்ணங்களும் உயர்கின்றன. தாழ்வானவற்றை விடுத்து உயர்வானவற்றைப் பற்றிக்கொள்ள ஆலயங்கள் அழைப்பு விடுக்கின்றன.

இ. 'ஆலயம் நம் ஒவ்வொருவரின் தொப்புள்கொடி'

இறைவனையும் நம்மையும் இணைக்கும் தொப்புள்கொடியே ஆலயம். இதன் வழியாகவே இறையருள் நமக்குக் கிடைக்கிறது. திருமுழுக்கின்போது நாம் பெறும் உறவுப் பிணைப்பு, நாம் இறந்தபின்னும் இந்த ஆலயத்தின் வழியே தொடர்கிறது.

இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு நாளில், நம் பங்கு அல்லது மறைமாவட்டத்தின் ஆலயத்தின் நேர்ந்தளிப்பையும் நினைவுகூர்வோம். நம் ஒவ்வொருவரின் நேர்ந்தளிப்பையும் நினைவுகூர்வோம்.

நாமே ஆலயம்! நமக்கோர் ஆலயம்!

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

உரோமை மறைமாவட்டத்தின் தலைமை ஆலயமாக இருக்கின்ற புனித யோவான் இலாத்தரன் பேராலயம் திருத்தந்தையின் அதிகாரப்பூர்வமான இருக்கையைக் கொண்டுள்ளது. திருஅவையின் நம்பிக்கை மற்றும் அறநெறி சார்ந்த கொள்கைத்திரட்டை இந்த இருக்கையில் அமர்ந்தே திருத்தந்தை வெளியிடுவார். புனித மீட்பர் பேராலயம், அல்லது புனித திருமுழுக்கு யோவான் பேராலயம் என்னும் பெயர்களிலும் இப்பேராலயம் அழைக்கப்படுவதுண்டு. தொடக்ககால உரோமைத் திருச்சபையில் அனைவருக்கும் இங்குதான் திருமுழுக்கு வழங்கப்பட்டது. கான்ஸ்டான்டின் பேரரசரால் கட்டப்பட்டு, 324ஆம் ஆண்டு திருத்தந்தை சில்வெஸ்டர் அவர்களால் நேர்ந்தளிக்கப்பட்டது. உலகெங்கும் உள்ள அனைத்துப் பேரலாயங்களின் தாய் ஆலயம் இது.

இந்த நாளின் இறைவார்த்தை வழிபாடு, 'ஆலயம்' என்னும் வார்த்தை பற்றிய இரு புரிதல்களை நமக்குத் தருகின்றது.

முதல் வாசகத்தில் (காண். எசே 47:1-2,8-9,12), 'ஆலயம்', புதிய வாழ்வின் அடையாளமாக முன்வைக்கப்படுகிறது. பாபிலோனியாவின் அடிமைத்தனத்தின்போது ஆண்டவரின் மாட்சி எருசலேம் கோவிலை விட்டு அகல்கின்றது. மக்கள் திரும்பி வந்தபோது ஆண்டவர் மீண்டும் நகருக்குள் வருகின்றார். ஆண்டவரின் மாட்சி குடிகொள்ளும் இடத்திலிருந்து பொங்கி வழியும் தண்ணீர் அனைத்துலகையும் புதுப்பிப்பதாகவும், அதற்குப் புத்துணர்வு அளிப்பதாகவும் காட்சி காண்கிறார் இறைவாக்கினர் எசேக்கியேல்.

நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 2:13-22), 'ஆலயம்' என்பது 'இடம் சார்ந்த பிரசன்னம்' என்ற புரிதலைச் சற்றே மாற்றி, அது 'ஆள் சார்ந்த பிரசன்னம்' என்ற புதிய புரிதலைத் தருகின்றார். எருசலேம் ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் நிகழ்வில் இயேசு, தன்னுடலை ஆலயத்திற்கு உருவகப்படுத்துகிறார். ஆனால், மற்ற யூதர்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை.

இன்றைய நாள் நமக்குக் கொடுக்கும் செய்தி என்ன?

அ. 'கடவுள் நம் நடுவில் வாழ்கிறார்'
கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதன் காணக்கூடிய அடையாளம்தான் ஆலயம். 'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்பது பழமொழி. இங்கே, 'கோ-இல்' என்பது, 'அரசனின் இல்லத்தை' குறிக்கிறது. அதாவது, அரசன் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். ஏனெனில், அரசன் இல்லாத மக்கள் காட்டுமிராண்டித்தனமாக நடப்பார்கள், தான்தோன்றித்தனமாக இருப்பார்கள் (காண். நீத 24). நம் வாழிடத்தின் அரசராக இருப்பவர் இறைவன்.

ஆ. 'நம் எண்ணங்கள் உயர்கின்றன'
பெரிய ஆலயங்கள், பெரிய கோபுரங்கள், பெரிய தூண்கள் என என அமைந்திருக்கும் ஆலயங்களை நாம் உயர்ந்து பார்க்கும்போது நம் கண்கள் மட்டுமல்ல, நம் எண்ணங்களும் உயர்கின்றன. தாழ்வானவற்றை விடுத்து உயர்வானவற்றைப் பற்றிக்கொள்ள ஆலயங்கள் அழைப்பு விடுக்கின்றன.

இ. 'ஆலயம் நம் ஒவ்வொருவரின் தொப்புள்கொடி'
இறைவனையும் நம்மையும் இணைக்கும் தொப்புள்கொடியே ஆலயம். இதன் வழியாகவே இறையருள் நமக்குக் கிடைக்கிறது. திருமுழுக்கின்போது நாம் பெறும் உறவுப் பிணைப்பு, நாம் இறந்தபின்னும் இந்த ஆலயத்தின் வழியே தொடர்கிறது.

இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு நாளில், நம் பங்கு அல்லது மறைமாவட்டத்தின் ஆலயத்தின் நேர்ந்தளிப்பையும் நினைவுகூர்வோம். நம் ஒவ்வொருவரின் நேர்ந்தளிப்பையும் நினைவுகூர்வோம்.

நாமே ஆலயம்! நமக்கோர் ஆலயம்!

 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை
 வாசகங்கள்
எசேக்கியேல் 47: 1-2, 8-9, 12
கொரிந்தியர் 3: 9b-11, 16-17
யோவான் 2: 13-22


நிகழ்வு: ஒருசில நூற்றாண்டுகளுக்கு முன்பாக நம்முடைய இந்தியத் திருநாட்டில் நடைபெற்ற நிகழ்வு. சுக்யா என்ற சிறுமி ஒருத்தி இருந்தாள். அவள் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தவள். ஒருநாள் அவள் தீராத நோயினால் பாதிக்கப்பட்டு படுத்தபடுக்கையானாள். அந்த நேரத்தில் அவளுடைய அண்டை வீட்டைச் சார்ந்தவர்கள், இந்தக் கொடிய நோய் நீங்குவதற்கு ஊரின் மலைமேல் இருக்கும் ஆலயத்தில் கொடுக்கப்படும் அர்ச்சனை மலரை எடுத்துவந்து இவளுடைய தலையில் வைக்கவேண்டும். அப்போதுதான் இவளுடைய நோய் குணமாகும் என்று சொன்னார்கள். அவர்களுடைய பேச்சு சரியெனப்படவே சுக்யாவின் தந்தை ஊரின் மலைமேல் இருக்கும் ஆலயத்திற்குப் புறப்பட்டார். ஆனால் அதில் ஒரு பிரச்சனை இருந்தது. அது என்னவென்றால், அந்த ஆலயத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்கள் யாரும் உள்ளே நுழையக்கூடாது, அப்படியே நுழைந்தால் அது தீட்டு என்று சொல்லப்பட்டது. சுக்யாயின் தந்தை எப்படியோ தன்னுடைய முகத்தை மறைத்துக்கொண்டு ஆலயத்தின் உள்ளே நுழைந்துவிட்டார்.

ஆலயத்தின் உள்ளே நுழைந்த அவர் அங்கு நடைபெற்ற வழிபாட்டில் கலந்துகொண்டு இறைவனைத் தரிசித்தார். பின்னர் ஆலயத்தில் குரு கொடுத்துக்கொண்டிருந்த அர்ச்சனை மலரை வாங்குவதற்காகத் தன்னுடைய கையை நீட்டியபோது, பின்னாலிருந்து ஒரு கை அவரைத் தடுத்தது. அது யார் என்று அவர் திரும்பிப் பார்த்தபோது மேல் சாதியைச் சேர்ந்த ஒருவர் அங்கு நின்றுகொண்டிருந்தார். அவர் சுக்யாவின் தந்தையிடம், "என்ன தைரியத்தில் இந்த ஆலயத்திற்குள் நுழைந்தாய்?. உன்னால் இந்த ஆலயமே தீட்டுப்பட்டுப் போய்விட்டது" என்று சொல்லி அவரை வெளியே போகச் சொன்னார். பின்னர் அவர் ஊரைக் கூட்டிஇ சுக்யாவின் தந்தைக்கு ஒருவார காலம் சிறைத்தண்டனையும் வாங்கித்தந்தார். சுக்யாவின் தந்தை ஒருவார காலம் சிறை தண்டனையை முடித்துக்கொண்டு வீட்டுத் திரும்பி வந்தபோது சுக்யா இறந்துபோய் இருந்தார். அப்போது அவர் ஆலயத்தில் நடக்கும் தீண்டாமைக் கொடுமைகளை நினைத்து கண்ணீர்விட்டு அழுதார்.

ஆலயம் - இறைவன் வாழும் இல்லம் - எல்லாருக்கும் சொந்தமானது. அதில் வேறுபாடு பார்ப்பது அந்த ஆண்டவனுக்கே அடுக்காத ஒன்றாகும்.

இன்று நாம் நினைவுகூரும் இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவானது ஆலயத்திற்கு உரிய சிறப்புப் பண்புகளை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. அதனை இப்போது சற்று ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம்.

வரலாற்றுப் பின்னணி
ஒவ்வொரு மறைமாவட்டத்திற்கும் ஒரு தலைமை ஆலயம் (Cathedral)) உண்டு. ஆயர்தான் இதற்குத் தலைவராக இருப்பார். ஆனால் தலைமை ஆலயங்களுக்கு எல்லாம் தலைமை ஆலயமாக இருப்பதுதோ இலாத்தரன் பேராலயமாகும். இதற்குத் தலைவராக இருப்பவர் திருத்தந்தை அவர்கள் ஆவார். இவ்வாலமானது 4 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த உரோமை அரசன் கான்ஸ்டான்டி நோபிள் வழங்கியது. தொடக்க திருச்சபையில் ஆலயம் என எதுவும் கிடையாது. மக்கள் இல்லங்களில் கூடி ஜெபித்து வந்தார்கள். கிறிஸ்தவர்களுக்கு எதிராக அடிக்கடி வேதகலாபனைகள் நடந்ததாலும் கிறிஸ்தவர்கள் தங்களுக்கென ஆலயம் கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது இந்த நேரத்தில்தான் கான்ஸ்டாண்டி நோபிள் கிறிஸ்தவ மதத்தை உரோமை அரசாங்கத்தின் அரச மதமாக அறிவித்தான். அதன் நிமித்தமாக 313 ஆம் ஆண்டு அவன் தன்னுடைய அரண்மனையை ஆலயமாக மாற்றி, அதனை திருச்சபைக்குத் தந்தான். 324 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த முதலாம் சில்வஸ்டர் ஆலயத்தை அர்ச்சித்து அதனை உலக மீட்பரின் பாதுகாவலில் ஒப்படைத்தார்.

சிறுது காலத்திற்கு இந்த ஆலயம் திருமுழுக்கு யோவானின் பாதுகாவலுக்கு வைக்கப்பட்டது, பின்னர் நற்செய்தியாளர் தூய யோவானின் பாதுகாவலில், அவருடைய பெயரில் வைக்கப்பட்டது. அது இன்று வரை அவருடைய பெயராலே அழைக்கப்பட்டு வருகின்றது.

ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக திருத்தந்தை அங்குதான் இருந்தார். பதினான்காம் நூற்றாண்டில் திருத்தந்தை அவிஞ்னோன் என்ற இடத்திற்கு நாடு கடத்தப்பட்டு, மீண்டுமாகத் திரும்பி வந்தபோது இலாத்தரன் பேராலயமானது சிதிலமடைந்தது காணப்பட்டது. எனவே, திருத்தந்தை தங்குவதற்கு அது சரியான இடமில்லை என்று சொல்லி, திருத்தந்தை பதினோராம் கிரகோரி சாந்தா மரியா என்ற இடத்திற்குச் சென்றார். திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்தூஸ் என்பவரோ தன்னுடைய இடத்தை வத்திக்கானுக்கு மாற்றினார். எனவே, அன்றிலிருந்து இன்று வரை திருத்தந்தையர்கள் வத்திகானிலே தங்கி வருகிறார்கள். இலாத்தரன் பேராலயமோ தற்போது ஓர் அருங்காட்சியம் போன்று இருக்கின்றது.

இந்த பேராயலத்திற்கு மேலும் பல சிறப்புகள் உண்டு. ஆண்டவர் இயேசு இறுதி இராவுணவு உண்ட மேசையும், திருச்சபையின் முதல் திருத்தந்தையாகிய தூய பேதுரு திருப்பலி நிறைவேற்றிய பீடமும் இங்குதான் இருக்கின்றன.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

ஆலயம் எல்லா மக்களுக்கான இறைவேண்டலில் வீடு
"ஆலயம் தொழுவது சாலமும் நன்று", "ஆலயம் இல்லாத ஊரில் குடியிருப்பது நல்லதன்று" போன்ற முதுமொழிகள் ஆலயம் நம்முடைய வாழ்வில் எந்தளவுக்கு நீக்கமற நிறைந்திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுபவையாக இருக்கின்றன. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இறைவன் தங்கும் ஆலயத்தை தூய்மையாக வைத்திருக்கின்றோமா?, அதில் வழிபடும் நாம் தூய்மையாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். திருப்பாடல் ஆசிரியர் கூறுவார், "மாசற்றவராய் நடப்போர், உளமார உண்மை பேசுபவர்; தம் நாவினால் புறங்கூறார்; தம் தோழருக்குத் தீங்கிழையார்; அடுத்தவரைப் பழித்துரையார்; நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவோர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பவர்; தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார்; தம் பணத்தை வட்டிக்குக் கொடாதவர்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறாதவர் இவர்களே ஆண்டவரின் திருமலையில் குடியிருக்கத் தகுதிவுடைவர்" என்று. (திபா 15). நாம் இத்தகைய நெறிப்படி வாழ்கின்றோமா? என்பது நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. மேல் சொல்லப்பட்ட வழிமுறைகளின் படி நடக்காதபோது இறைவனின் இல்லத்திற்குள் நுழைய தகுதி இல்லாமல் போய்விடுகின்றோம் என்பதுதான் உண்மை.

மேலும் ஆலயம் எல்லா மக்களுடைய வழிபாட்டிற்கும் உரியது (எசாயா 56:7). அதனை ஒரு குறிப்பிட்ட இனமோ, சாதியோ சொந்தம் கொண்டாடுவது கிறிஸ்துவின் போதனைக்கு எதிரானது என்பதையும் நாம் புரிந்துகொண்டு வாழவேண்டும்.

தூய ஆவி வாழும் இல்லமாகிய மனிதர்களுக்கும் மதிப்புத் தரவேண்டும்
தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் கூறுவார், "நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடிகொண்டிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா?, ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில், கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில்." (3:16-17). ஆம், ஒவ்வொருவரும் தூய ஆவியார் வாழும் கோவில். எனவே, நாம் நம்மிடம் இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து ஒருவர் மற்றவருக்கு மதிப்பளித்து வாழவேண்டும். அப்போதுதான் இறைவன் வாழும் இல்லிடமாக நாம் மாறமுடியும். இல்லையென்றால் கடவுளில் சாபத்திற்குத் தான் நாம் உள்ளாகவேண்டி வரும். பல நேரங்களில், மனிதரால் கட்டப்பட்ட கோவிலுக்கு மதிப்பளிக்கும் நாம், இறைவனால் கட்டப்பட்ட கோவிலுக்கு மதிப்பளிக்க மறுக்கின்றோம். இந்நிலை மாறவேண்டும். எல்லாரிலும் எல்லாம் வல்ல இறைவன் குடிகொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து வாழவேண்டும்.

ஆகவே, இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் இறைவன் வாழும் இல்லத்திற்கு உரிய மரியாதை செலுத்துவோம், உயிருள்ள ஆலயங்களாகிய மனிதர்களுக்கு மதிப்பளிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
 

"ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே,
ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே"

இன்று அன்னையாம் திருச்சபை எல்லா ஆலயங்களுக்கும் தாய் ஆலயமாக இருக்கக்கூடிய இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. ஒவ்வொரு ஆயருக்கும் ஒரு பேராலயம் பொறுப்பில் இருக்கும். அந்த விதத்தில் பார்க்கும்போது உரோமை நகரின் ஆயராக இருக்கக்கூடிய திருத்தந்தையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பேராலயம்தான் இந்த இலாத்தரன் பேராலயம்.

தொடக்கத் திருச்சபையில் கிறிஸ்தவர்கள் உரோமை அரசாங்கத்தால் அதிகமாகத் துன்புறுத்தப்பட்டார்கள். எனவே கிறிஸ்தவர்கள் உரோமையர்களுக்குப் பயந்து இல்லங்களில் தங்களுடைய வழிபாடுகளைச் செய்துவந்தார்கள். அவர்களுக்கு என்று ஆலயங்கள் கிடையாது. என்றைக்கு உரோமையை ஆண்ட கான்ஸ்டாண்டிநோபுள் என்ற மன்னன் கிறிஸ்தவ மதத்தை தன்னுடைய தேசத்தின் மதமாக அறிவித்தானோ அன்றைக்கு ஆலயங்கள் பெருகத் தொடங்கியன. கான்ஸ்டாண்டிநோபுள் தான் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியதன் நிமித்தமாக தன்னுடைய அரண்மனையையே ஆலயமாகப் பயன்படுத்தத் தந்தான். அப்படி வந்ததுதான் இந்த இலாத்தரன் பேராலயம்.

இப்பேராலயம் 324 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி நேர்ந்தளிக்கப்பட்து. தொடக்கத்தில் இப்பேராலயம் உலக மீட்பருக்கும், பின்னர் திருமுழுக்கு யோவானுக்கும், அதன்பின்னர் நற்செய்தியாளரான தூய யோவானுக்கும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

பேராலயம் நேர்ந்தளிக்கப்பட்ட நாளிலிருந்து ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் திருந்தந்தையர்கள் அங்கேதான் தங்கியிருந்தார்கள். ஒருசில குழப்பங்களின் காரணமாக சில காலம் அவிஞ்னோன் என்ற இடத்தில் திருத்தந்தையர்கள் தங்க நேர்ந்தது. திருத்தந்தை பதினோராம் கிரஹோரியின் காலத்தில் அந்த குழப்பங்கள் எல்லாம் தீர்ந்து, உரோமை நகருக்கு அவர் வந்தபோது அங்கே இலாத்தரன் பேராலயம் சேதமடைந்திருப்பதைக் கண்டார். எனவே அவர் பேராலயத்தைப் புதுப்பிக்கத் தொடங்கினார். அதன்பிறகு திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்துஸ் என்பவர் இப்போது உள்ள வடிவத்தைக் கொண்டுவந்து நேர்ந்தளித்தார்.

இன்னும் ஒருசில காரணங்களால் இலாத்தரன் பேராலயம் மேலும் சிறப்புப் பெறுவதாக இருக்கின்றது. குறிப்பாக ஆண்டவர் இயேசு தன்னுடைய இறுதி இராவுணவின்போது உண்ணப் பயன்படுத்திய மேசை இங்கேதான் இருக்கின்றது. அதேபோன்று திருத்தூதரான தூய பேதுரு திருப்பலி நிறைவேற்றிய பலிபீடம் இங்கேதான் இருக்கின்றது. இப்படி பல்வேறுபட்ட சிறப்புகளைக் கொண்டதால் இப்பேராலயம் "பொன் ஆலயம் - Golden Church" என்று அழைக்கப்படுகின்றது.

இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடும் இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் நமக்கு என்ன செய்தியைத் தருகின்றன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

பொதுவாக ஆலயம் என்று சொன்னால் (ஆ)ன்மாக்கள், ஆண்டவனில் (லயிக்க)க்கூடிய இடம் என்று சொல்வார்கள். இது உண்மை. ஆலயத்தில்தான் இறைவனுக்கும், மனிதருக்கும் இடையே ஒரு நல்லுறவு ஏற்படுகின்றது. அங்கேதான் மனிதன் தன்னுடைய கவலையை மறந்து, அமைதியில் இளைப்பாறுகிறான். ஏனென்றால் ஆலயம் ஆண்டவரின் அருளும், இரக்கமும் பொங்கி வழியும் ஓர் இல்லிடமாக விளங்குகின்றது.

இறைவாக்கினர் எசேக்கியேல் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், கோவிலிலிருந்து வரும் தண்ணீர் பாயுமிடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும், அங்கு ஏராளமான மீன்கள் இருக்கும். ஏனெனில், இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய் மாற்றும். அது பாயுமிடமெல்லாம் உயிர் வாழும்" என்று படிக்கின்றோம். கோவிலிருந்து வரும் தண்ணீரை கடவுளின் அருளாக நாம் புரிந்துகொள்ளலாம். நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு எருசலேம் ஆலயத்தை தந்தையின் இல்லம் என்று அழைக்கின்றார். அதனால்தான் அவ்வாலயத்தில் வாணிபம் செய்தவர்களை எல்லாம் அவர் விரட்டி அடிக்கின்றார்.

கிறிஸ்தவர்களாகிய நாம் ஆலயத்தின் மதிப்பையும், பெருமையும் உணர்ந்துகொண்டு அதற்கேற்ப வாழ்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஏனென்றால் ஆலயம்தான் நம்முடைய வாழ்வில் ஆற்றலின் ஊற்று.

இறையியலாளர்களின் இளவரசர் என்று அழைகக்ப்படும் தூய தாமஸ் அக்வீனஸ் அவர்களுடைய வாழ்வில் நடைபெற்ற நிகழ்வு. ஒருநாள் இரவு அவர் நப்லஸ் (Naples) என்று இடத்தில் இருந்த டொமினிக்கன் ஆலயத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருக்கும்போது அவருடைய உடலானது பூமியை விட்டு சற்று உயரத்தில் இருந்தது. அப்போது தற்செயலாக அங்கு வந்த ஆலயப் பணியாளர் ஒருவர் இதைக் கண்ணுற்று வியப்புள்ளாகி நின்றார். அவர் தொடர்ந்து என்ன நடக்கின்றது என்று கூர்ந்து கவனித்தார். அந்நேரத்தில் ஆண்டவர் இயேசு தாமஸ் அக்வீனசிடம் பேசத் தொடங்கினார், "

"அக்வீனாஸ் நீ திருச்சபைக்கு மிகப்பெரிய பங்களிப்பைத் தந்திருக்கிறாய் (Summa Theologiae). அதனால் உனக்கு நான் ஒரு பரிசினைத் தரப்போகிறேன். என்ன பரிசுவேண்டும் என்று கேள், நான் தருகிறேன்" என்றார். அதற்கு அவர், "ஆண்டவரே, எனக்கு உம்மைத் தவிர வேறு ஒன்றும் வேண்டாம்" என்றார். அதன்பிறகு தாமஸ் அக்வினாஸ் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதை நேரில் கண்ணுற்ற அந்த ஆலயப் பணியாளரே சாட்சி,.

கடவுளின் திருச்சன்னதியில் இருக்கும்போது நாம் அடையும் ஆறுதலும், மகிழ்ச்சியையும் வார்த்தைகளால் சொல்லமுடியாது என்பதற்கு மேல சொல்லப்பட்ட நிகழ்ச்சி சான்று. ஆகவே நாம் ஆண்டவரது அருளின் ஊற்றாக இருக்கும் ஆலயத்திற்கு தகுந்த மதிப்பளிக்க வேண்டும், அதனை சந்தைவெளி ஆக்கக்கூடாது என்பதுதான் இயேசு கூறவிரும்பும் செய்தியாக இருக்கின்றது.

அடுத்ததாக தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், "நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும், கடவுளின் ஆவியார் உங்களுக்குள் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? என்கிறார். ஆம், நாம் ஒவ்வொருவரும் தூய ஆவி வாழும் கோவில். எனவே சக மனிதருக்கு மதிப்பளிக்கின்ற ஒருவர் கடவுளுக்கு மதிப்பளிக்கிறார். அதேநேரத்தில் சக மனிதரை இழிவுபடுத்தும் ஒருவர் கடவுளையும் இழிவுபடுத்துகிறார் என்ற உண்மையைப் புரிந்துகொண்டு வாழவேண்டும்.

ஆகவே, இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் இறைவன் வாழும் ஆலயத்திற்கு, மனிதர்களுக்கு மதிப்பளிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்

 
தந்தியை கண்டுபிடித்தவர் (தந்தி கொடுப்பது இன்று வழக்கொழிந்து போய்விட்டது) சாமுவேல் மோர்ஸ் என்பவர்.

ஒருமுறை அவரிடத்தில் சாதாரண மனிதர் ஒருவர் அணுகிவந்து, "மிகப் பெரிய விஞ்ஞானியான உங்களுக்கு வாழ்க்கையில் துன்பம், கஷ்டம், கலக்கம் இவையெல்லாம் வருவதுண்டா?" என்று கேட்டார். அதற்கு அவர், "துன்பம் இல்லா வாழ்க்கை வாழ நான் என்ன கடவுளா?; எல்லாருடைய வாழ்க்கையையும் போல என்னுடைய வாழ்க்கையிலும் துன்பங்கள், கஷ்டங்கள் எல்லாம் உண்டு" என்றார்.
உடனே வந்தவர் அவரிடம், "அப்படிப்பட்ட நேரத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்" என்று கேட்டார். அதற்கு அவர், "நான் என்னுடைய வாழ்க்கையின் இருள் சூழ்ந்த நேரங்களில் - துன்பமான வேளையில் - கோவிலுக்குச் சென்று சிலமணி நேரம் உட்கார்ந்து ஜெபிப்பேன். அது எனக்கு ஆறுதலையும், வல்லமையையும் தரும்" என்றார். மிகப்பெரிய விஞ்ஞானியே கோவிலுக்குச் சென்று ஜெபித்தார் என்றால் சாதாரண மனிதர்களாகிய நாம் கோவிலின் முக்கியத்துவத்தை ஜெபத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாழவேண்டும்.
இன்று திருச்சபையானது இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடுகின்றது. கி.பி. நான்காம் நூற்றாண்டில் (கி.பி 333 ஆம் ஆண்டுக்குப் பிறகு) கிறிஸ்தவ மதம் உரோமையில் அரசமதமாக அங்கிகரிக்கப்பட்ட பிறகு, அப்போது அரசராக இருந்த கான்ஸ்டன்டைன் திருமுழுக்கு பெற்றான். அவன் திருமுழுக்குப் பெற்ற இடத்தில் எழுந்தருளிய ஆலயம்தான் இலாத்தரன் பேராலயம் என்று அழைக்கப்படுகின்றது.

இவ்வாலயம் உலகில் உள்ள ஆலயங்களுக்கும் தாய் ஆலயம் என்றும், திருத்தந்தையின் ஆலயம் என்று அழைக்கப்படுகின்றது. திருத்தந்தை இங்கே தான் தங்குகிறார். இவ்வாலயத்தில் 5 பொதுச்சங்கங்களும், 20 ஆயர் பேரவையும் நடைபெற்றிருக்கிறது. பேதுரு மற்றும் யோவானின் தலையை வெள்ளிப்பாத்திரத்தில் இங்கேதான் வைத்திருக்கிறார்கள். அத்தோடு பேதுரு திருப்பலி நிறைவேற்றிய பீடமும், ஆண்டவர் இராவுணவு உண்ட மேசையும் இங்கேதான் இருக்கிறது. இப்படி பல்வேறு சிறப்புகளைப் கொண்ட இப்பேராலயமானது மூன்றாம் செர்ஜியுஸ் என்ற திருத்தந்தையால் திருமுழுக்கு யோவானுக்கும், இரண்டாம் லூசியஸ் என்ற திருத்தந்தையால் நற்செய்தியாளர் யோவானுக்கும் நேர்ந்தளிக்கப்பட்டது. இது "மீட்பரின் பேராலயம்" என்றும் அழைக்கப்படுகின்றது.

இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடும் இந்நன்னாளில் இன்றைய வாசங்கள் வழியாக இறைவன் நமக்குத்தரும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு நிறைவு செய்வோம்.

இறைவாக்கினர் எசேக்கியேல் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் "கோவிலிலிருந்து வரும் தண்ணீர் பாயும் இடத்தில் உயிர்கள் வாழும்; பலவகையான மரங்கள் வளரும்; அவற்றின் இலைகள் உதிரா; கனிகள் குறையா" (எசே 47:9,12) என்று படிக்கின்றோம். ஆம், இறைவனின் ஆலயம் நமக்கு உயிர் வாழ்வதற்கான ஆற்றலையும், வல்லமையையும் தரும் பிறப்பிடமாக இருக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகது. திருப்பாடல் 20:2 ல் வாசிக்கின்றோம், "ஆண்டவராகிய கடவுள் சீயோனிலிருந்து எருசலேம் திருக்கோவிலிருந்து உனக்குத் துணை புரிவாராக" என்று. ஆக, இறைவனின் ஆலயம் என்பது இவ்வுலகில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் அருளையும், ஆசிரையும் தரும் இல்லிடம் என்பதை உணர்ந்து வாழவேண்டும்.

அடுத்ததாக, இறைவன் வாழும் திருக்கோவிலை நாம் தூய்மையாக வைத்திருக்கவேண்டியது நமது கடமையாகும். இதனை இன்றைய நற்செய்தி வாசகத்தில் படிக்கின்றோம். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு எருசலேம் திருக்கோவிலில் வாணிபம் செய்துகொண்டிருந்த மக்களை விரட்டி அடிக்கின்றார். "என் தந்தையின் இல்லத்தை கள்வர்கள் குகையாக மாற்றாதீர்கள்" என்று கடுஞ்சினம் கொள்கிறார். ஆலயம் எல்லா மக்களும் கூடி ஜெபிக்கக்கூடிய இடம். எனவே அதன் புனிதத் தன்மை பாதுக்காக்கப்படவேண்டும் என்பதே இயேசுவின் விருப்பமாக இருக்கின்றது. நாம் ஒவ்வொருவருமே ஆலயத்தின் புனிதத்தன்மையை உணர்ந்து, அதற்குரிய முக்கியத்துவத்தை கொடுத்து வாழ்வோம்.

நிறைவாக கற்களால் கட்டப்பட்ட கோவில் மட்டுமல்ல, கடவுளால் கட்டப்பட்ட கோவிலாகிய மனிதர்களை நாம் மனிதமாண்போடு நடத்தவேண்டும் என்று இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் தெளிவுபடுத்துகிறார். "நீங்கள் கடவுளின் கோவிலென்றும், தூய ஆவியார் உங்களுக்குள் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா?" என்கிறார் தூய பவுல் (1 கொரி 3:16). ஆதலால் நாம் ஒவ்வொருவரும் நம்மோடு வாழும் உயிருள்ள ஆலயங்களாகிய சக மனிதர்களை மனிதர்களாக மதித்து, அவர்களை முழுமையாக அன்புசெய்யக் கற்றுக்கொள்ளவேண்டும்.

ஆனால் இன்றைக்கு ஒரு மனிதன் தன்னோடு வாழும் சக மனிதர்களை மதிக்காத, அவர்களை விலங்கினும் கீழாக நடத்தக்கூடிய சூழ்நிலையைப் பார்க்கின்றோம். நாம் மனிதர்களை மனிதர்களாக மதிக்காததன் வெளிப்பாடுதான் சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் வன்முறைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலை மாறவேண்டும். ஒருவர் மற்றவருக்கு - அவர் இறைவனின் சாயலால் படைக்கப்பட்டவர் என்பதை உணர்ந்து - சேவை செய்து வாழவேண்டும்.

"மனிதனால் உணவை உண்டு மட்டும் வாழ்ந்துவிட முடியாது. பணத்தை சம்பாதிப்பது அதன்மூலம் அந்தஸ்தை சேர்ப்பதால் வாழ்விற்குப் பயனில்லை. வாழ்வு இவற்றைவிட அடுத்தவருக்கு சேவை புரிவதில் கிடைக்கும் மாபெரும் மகிழ்ச்சியில் அடங்கியிருக்கிறது" என்பார் எட்வர்ட் பாக் என்ற அறிஞர். ஆம், இது முற்றிலும் உண்மை. மற்றவருக்கு சேவை செய்துவாழ்வதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

மேற்கு வாங்க மாநிலத்தில் முசிராபாத் என்ற குக்கிராமம் உள்ளது. இங்கே உள்ள யாவருமே கல்வியறிவு அற்றவர்கள்; போதிய அடிப்படைவசதி இல்லாதவர்கள். இக்கிராமத்தைச் சேர்ந்த பதினான்கு வயதே ஆனா பாபர்அலி என்ற மாணவன்தான் முதன்முதலில் இக்கிராமத்திலிருந்து பள்ளிக்கூடம் சென்று கல்வியறிவு பெற்றவன். தன்னுடைய வறுமையான சூழ்நிலையிலும், கல்விக் கட்டணம் செலுத்த போதிய பணம் இல்லாத போதிலும் முயன்று கல்வியறிவு பெற்றான்.

இவன் செய்த மிகப்பெரிய காரியம் பள்ளிக்கூடம் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபிறகு தன் வயதை ஒத்த சிறுவர், சிறுமியருக்கு பள்ளியில் தான் கற்ற பாடத்தைச் சொல்லிக்கொடுத்தான். தொடக்கத்தில் குறைவான எண்ணிக்கையிலே வந்த சிறுவர்கள் கூட்டம் இப்போது 800 மேல் வந்துகொண்டிருக்கிறது. அவனால் பாடம் சொல்லிக்கொடுக்கப்பட்ட குழந்தைகள் தங்களுடைய வீடுகளில் இருக்கும் பெற்றோர்களுக்கும் சொல்லிகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாபர் அலி என்ற அந்த சிறுவனின் அளப்பெரிய செயலைப் பார்த்த பிபிசி என்ற சேனல் அவனுக்கு இளையோருக்கான சிறந்த தலைமை ஆசிரியர் என்ற விருதைக் கொடுத்திருக்கிறது. சிறுவன், தான் பெற்ற கல்வியை தன்னோடு மட்டும் வைத்துக் கொள்ளாமல், அதை பிறருக்கும் பயன்படுமாறு செய்தான்; நமக்கெல்லாம எடுத்துக் காட்டாக விளங்குகின்றான்.

நாம் ஒவ்வொருவருமே பிறரில் இறைவன் குடிக்கொண்டிருக்கிறார் என்ற மனநிலையில் வாழ்ந்தால் என்றும், எங்கும் ஆனந்தம் தான்.

ஆதலால் இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் இறையருளின் பிறப்பிடமான கோவிலுக்கு உரிய மரியாதை செலுத்தி வாழ்வோம். அத்தோடு உயிருள்ள ஆலயங்களை மனித மாண்போடு நடத்துவோம். அவர்களுக்கு உதவி புரிவோம். இறையருள் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்
 
 
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
தொடக்க கால திருச்சபையில், ஆலயங்களின் நேர்ந்தளிப்பு நாளையும், விழாவாகவே கொண்டாடினர். ஆலயங்களின் நேர்ந்தளிக்கும் நாள் என்பது, பேராலயத்தின் பிறந்த நாள் என்றழைக்கும் வழக்கமும் இருந்தது. உரோமை திருவழிபாட்டு மரபில், அர்ப்பணிக்கப்பட்ட பேராலயத்திற்கான நான்கு விழாக்களை திருச்சபை முழுவதும் கொண்டாடுகிறோம். லாத்தரன் பேராலயம், புனித பேதுரு பேராலயம், புனித பவுல் பேராலயம் மற்றும் புனித மரியாள் பேராலயம். இதில், லாத்தரன் ஆலயத்தின் அர்ப்பணிப்பு விழாவை இன்று கொண்டாடுகிறோம்.

முதல் நூற்றாண்டில், நீரோ மன்னன் கிறிஸ்தவர்களை வதைத்து, பலபேரை கொன்றொழித்தது வரலாறு. அப்படி அவன் கிறிஸ்தவத்திற்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருந்தபோது, அவனுக்கு எதிராக சதிசெய்தவர் என்று, லாத்தரன் என்னும் உயர்ந்த குடும்பத்தைச் சார்ந்த பிளவுத்துஸ் லாத்தரன் என்பவர் கொல்லப்பட்டார். கொன்ற பிறகு, அந்த குடும்பத்திற்குச் சொந்தமான மாளிகை, உடைமைகள் என்று, அவனுடைய சொத்துக்களையும் அபகரித்துக்கொண்டான். பின்னர் வந்த உரோமை அரசனான கான்ஸ்டன்டைன் அரசர், கி.பி.313 ம் ஆண்டு, கிறிஸ்தவத்தை நாட்டின் அதிகாரப்பூர்வ மதமாக மாற்றினார். அப்போது, லாத்தரன் குடும்பத்தினரிடமிருந்து பறித்துக்கொண்ட அந்த சொத்தை, உரோமை ஆயருக்கு(திருத்தந்தை மெல்தியாதஸ்) அன்பளிப்பாகக் கொடுத்தார். அந்த இடத்தில் அழகிய ஓர் ஆலயம், எழுப்பப்பட்டது. அதை, அவருக்குப்பின் வந்த திருத்தந்தை சில்வஸ்டர் புனித மீட்பருக்கு அர்ப்பணித்தார். கி.பி. 896 ல் நடந்த நிலநடுக்கத்தில், லாத்தரன் மாளிகை சேதப்பட்டது. கி.பி.904 முதல் 911வரை திருச்சபையை ஆண்ட திருத்தந்தை 3ம் செர்ஜியுஸ், அதை புதுப்பித்து, புனித திருமுழுக்கு யோவானுக்கு இதை அர்ப்பணித்தார். அதனோடு லாத்தரன் குடும்பப்பெயரும் சேர்த்து, புனித திருமுழுக்கு யோவான் லாத்தரன் ஆலயம் என்றும், வெறுமனே லாத்தரன் ஆலயம் என்றும், இது அழைக்கப்படலாயிற்று. உரோமை நகர கதீட்ரல் ஆலயம் இதுவேயாகும். பழமையான ஆலயமும் இதுவே ஆகும். கி.பி நான்காம் நூற்றாண்டிலிருந்து பதினான்காம் நூற்றாண்டு வரை, இது தான், திருத்தந்தையர்களின் இல்லமாக விளங்கிவந்தது. 28 திருத்தந்தையர்களின் உடல்கள் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஐந்து திருச்சங்கங்கள் இங்கு தான் நடைபெற்றது.

இங்கு தான், திருத்தந்தையர்களால் தொடக்கத்தில் திருமுழுக்கு அருட்சாதனங்களும், புனித வாரச்சடங்குகளும் நிறைவேற்றப்பட்டன. உரோமையிலுள்ள அனைத்து ஆலயங்களுக்கும், உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து ஆலயங்களுக்கும் இதுதான் தாய்க்கோயிலாகும். உரோமை மறைமாவட்டத்தின் தலைமைக்கோயிலும் (Cathedral) இதுதான்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

 
 
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

நோ்ந்தளியுங்கள் நேராகுங்கள்
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு திருவிழா திருப்பலி நம்மை கடவுளுக்கு நேர்ந்தளிக்க அழைப்பு கொடுக்கிறது. நாம் அனைவரும் கடவுளுக்கே சொந்தம் என்பதை ஆலயத்தில் அறிக்கையிட வேண்டும். உரக்க அதை வெளியிட வேண்டும். அதற்கான வாய்ப்பாக இந்த நாளை பயன்படுத்துவோம். இன்று ஆலயம் வந்திருக்கின்ற நாம் அதை முழு ஆர்வத்தோடும் ஆசையோடும் செய்வோம். அதுதான் இந்த திருவிழாவின் முக்கிய நோக்கமாகும். கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் தங்களை ஆலயத்தில் நேர்ந்தளிக்க வேண்டும். அப்படி ஆலயத்திற்கு நம்மை நேர்ந்தளிக்கும் போது இரண்டு விதங்களில் நாம் பயன் பெறுகிறோம்.

1. பாதுகாப்பு பெறும் வளையம் உருவாகிறது
நாம் ஆண்டவருக்கு ஆலயத்தில் வைத்து நம்மை நேர்ந்தளிக்கும் போது பாதுகாப்பு வளையம் நம்மைச் சுற்றி உருவாகிறது. அந்த பாதுகாப்பு வளையம் நம்மை அனைத்து தீமையிலிந்தும் விடுவிக்கிறது. அவசியமற்ற ஆசைகள் அந்த வளையத்துக்குள் வருவதில்லை. பாதுகாப்பு வளையத்திற்குள் நாம் 24 மணிநேரமும் பத்திரமாக இருப்போம்.

2. பாதுகாப்பு கொடுக்கும் வளையம் உருவாகிறது
ஆலயத்தில் நேர்ந்தளிக்ப்பட்ட நான் பிறருக்கு பாதுகாப்பு கொடுக்கும் வளையமாக மாறுகிறேன். என் குடும்பத்திற்கு நான் பாதுகாப்பாக மாறுகிறேன். நான் எங்கிருந்தாலும் என் அருகிலிருப்பவர்களை பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்து நான் பத்திரமாக நான் பாதுகாக்கின்றேன்.

மனதில் கேட்க
1. என்னை ஆண்டவருக்கு நான் நேர்ந்தளித்திருக்கிறேனா?
2. நான் பிறருக்கு கெடுதல் செய்யாமல் நன்மை செய்யும் பாதுகாப்பு வளையமாக மாறலாம் அல்லவா?

மனதில் பதிக்க
நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? (1கொரி 3:16)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

 
 
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
லாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு

ஓர் இளைஞன் ஓர் இளம் பெண்ணிடம், "நீ என் இதயத்தில் இருக்கிறாய்" என்றான். அதற்கு அவள் கூறினாள்: "செருப்பைக் கழட்டட்டுமா?" என்று கேட்டதற்கு அவன் கூறினான்: "என் இதயம் ஒரு கோவில் அல்ல; செருப்பைப் போட்டுக்கொண்டே உள்ளேவா." ஆலயம் புனிதமானது; அதில் நுழையுமுன் மிதியடிகளைக் கழற்றிவிட வேண்டும். மோசேக்குக் காட்சியளித்த கடவுள் அவரிடம் கூறியது: "உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு. ஏனெனில் நீ நின்று கொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்" (விப 3:5). கற்களால் கட்டப்பட்ட ஆலயத்தைவிட தூய ஆவியார் குடிகொள்ளும் நமது உடல் தூயது என்னும் மையக்கருத்தை இன்றைய விழா எடுத்துரைக்கின்றது.

கி.பி. 4ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உரோமையில் வேதகலாபனை முடிவடைந்து கிறிஸ்தவர்களுக்கு மத சுதந்திரம் கிடைத்தது. அதற்கு உறுதுணையாய் இருந்தவர் மாமன்னர் கொன்ஸ்டான்டின். அவர் உரோமையில் லாத்தரன் மலையில் மாபெரும் ஆலயத்தைக் கட்டி எழுப்பினார். இந்த ஆலயமே எல்லா ஆலயங்களுக்கும் முதன்மையானதாகவும் அன்னையாகவும் திகழ்கிறது. கி.பி.324-இல் நவம்பர் திங்கள் 9-ஆம் நாள் சில்வெஸ்டர் என்ற திருத்தந்தை இந்த ஆலயத்தை நேர்ந்தளித்தார். 12-ஆம் நூற்றாண்டிலிருந்து இந்த ஆலயம் திருமுழுக்கு யோவான் நினைவாக "ஜான் லாத்தரன் பேராலயம்" என்று அழைக்கப்படுகிறது. இவ்வாலயத்தின் நேர்ந்தளிப்பை ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் திங்கள் 9-ஆம் நாள் உலகெங்கும் திருச்சபை விழாவாகக் கொண்டாடுகிறது.

கடவுள் எல்லா இடங்களிலும் இருந்தாலும் அவரின் உடனிருப்பு ஆலயத்தில் சிறப்பாக வெளிப்படுகிறது. ஆலயம் தொழுவது சாலவும் நன்று. கிறிஸ்து விண்ணகம் சென்றபின் திருத்தூதர்கள் "கோவிலில் எப்போதும் கடவுளைப் போற்றியவாறு இருந்தார்கள்" (லூக் 24:53). இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து ஆலயத்தைக் தூய்மைப்படுத்துகிறார். அவர் தமது உடலை ஆலயம் என்று குறிப்பிடுகிறார். மத்தேயு நற்செய்தியில், "என் இல்லம் இறைவேண்டல் வீடு... ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்குகிறீர்கள்" (மத் 21:13) என்று கூறுகிறார். எனவே, ஆலயம் 'செப வீடு'; அங்கு நாம் சென்று கடவுளைப் புகழ வேண்டும் என்பது கிறிஸ்துவின் விருப்பம்.

இன்றைய முதல் வாசகம் கூறுகிறது: ஆலயத்திலிருந்து கிழக்கு நோக்கி வந்த தண்ணீர் நான்கு திசைகளிலும் பாய்கிறது; உப்பு நீரை நன்னீராக மாற்றுகிறது; உயிர்களை வாழ வைக்கிறது. மரங்கள் கனி கொடுக்கச் செய்கிறது. மரத்தின் கனிகள் உணவாகவும், இலைகள் மருந்தாகவும் பயன்படுகிறது (எசே 47:1-12). ஆலயத்திலிருந்து கடவுளுடைய அருள் நமக்கு அபரிமிதமாகக் கிடைக்கிறது. "எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும்" என்று நிம்மதியின்றிப் பரிதவிக்கும் இன்றைய மனிதர்களுக்கு ஆலயம் நிம்மதிதரும் இடம் என்பதில் ஐயமில்லை.

நாம் ஒவ்வொருவரும் தூய ஆவியார் குடிகொள்ளும் ஆலயம் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுகிறார். "நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா" (1 கொரி 3:16). திருத்தூதர் பவுல் கொரிந்தியர்களுக்கு இந்த ஆழமான இறையியல் கருத்தைக் கூறுவதன் பின்னணியை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கொரிந்து ஒரு துறைமுக நகரம்; ஒழுக்கச் சிதைவுக்குப் பேர்போன நகரம்; பரத்தைமை கொடிகட்டிப் பறந்த நகரம்; கொரிந்து பெண் என்றால் "விலை மகள்" என்று பொருள். காமம், களிநடனம் புரிந்த அந்நகரில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு உடலின் மேன்மையை எடுத்துக்கூறி, உடல் கடவுளுடைய ஆலயம் என்பதை உணர்த்துகிறார். உடல் காமத்திற்கு அல்ல, மாறாக ஆண்டவருக்கு உரியது என்கிறார் பவுல். உடலில் 'சுகர்' இருந்தாலும் ஆபத்து; உள்ளத்தில் "பிகர்" இருந்தாலும் ஆபத்து. இன்றைய கலாச்சாரச் சீரழிவில் பெண் வெறும் "பிகராக" மட்டுமே கருதப்படுகிறாள். "பிகரு பிகருதான், சூப்பர் பிகருதான்" என்ற திரைப்படப் பாடல் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

ஓர் ஆங்கில ஆசிரியை மிகவும் கவர்ச்சியான உடையில் வகுப்பிற்கு வந்தார். ஏனெனில், "கிராமர் டீச்சர்" தேவை என்று விளம்பரம் செய்வதற்குப் பதிலாகக் "கிளாமர்" டீச்சர் தேவை என்று விளம்பரம் செய்து விட்டனர்.

இத்தகைய சூழலில், திருத்தூதர் பவுல் பெண்களுக்குக் கூறும் அறிவுரை: "பெண்கள் பின்னற்சடை, பொன், முத்து, விலையுயர்ந்த ஆடைகள் ஆகியவற்றால் தங்களை அணிசெய்து கொள்ளாமல், நாணத்தோடும் தன்னடக்கத்தோடும் ஏற்புடைய ஆடைகளை அணிய வேண்டும்" (1 திமொ 2:9).

ஒரு பெண் அழகி; அவள் எப்போது பேரழகியாக மாறுகிறாள்? கோவலனை படுக்கை அறையில் மயக்கிய கண்ணகி அழகி. ஆனால் தனது கற்பால் மதுரையை எரித்த கண்ணகி பேரழகி. உதயகுமாரனை தனது அழகால் மயக்கிய மணிமேகலை அழகி. ஆனால் தனது தலையை மொட்டையடித்து, காவி உடை அணிந்து, கையிலே அமுதசுரபி ஏந்தி பசித்தீயை அணைத்த மணிமேகலை பேரழகி. பெண்கள் அநீதியை எரிக்கும்போதும் பசித்தீயை அணைக்கும்போதும் பேரழகிகள்!

ஒருவர் தன் நண்பரிடம், "நான் திருமணம் செய்ய எனக்கு அடக்கமான ஒரு பெண் தேவை" என்றார். நண்பர் அவரை கல்லறைக்கு அழைத்துச் சென்றார். ஏன்? என்று கேட்டதற்கு அவர் கூறிய பதில்: "அடக்கமான பெண்கள் எல்லாம் கல்லறையில்தான் இருக்கின்றனர்." ஆண்கள் பெண்களை வெறும் காமப் பொருளாகப் பார்க்காமல் அவர்களை "வாழ்வுதரும் அருளுக்கு உடன் உரிமையாளர்களாகப்" (1 பேது 3:7) பார்க்க வேண்டும். பெண் வெறும் கள் அல்ல, மாறாக மாபெரும் காவியம். கள் குடிப்பவன் வாயில் நாறுகின்றது; காவியம் படிப்பவன் வாயில் மணக்கின்றது. அடக்கமே ஒருவரை விண்ணகம் சேர்க்கும்; அடங்காமை அவரை நரக இருளில் தள்ளிவிடும்.

அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும் (குறள் 121)

கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில் (1கொரி 3:17).
 
திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
ஆலயங்களே நீர்த்தேக்கங்கள்
லாத்தரன் பேராலயம் நவம்பர் 9

"நீர்த் தேக்கங்களே எனக்கு ஆலயங்கள்" என்று சொல்வாராம் மறைந்த பாரத இரத்னா நேரு பெருமகனார். சமூக நலச்சிந்தனை கலந்திருந்தாலும் சற்று நாத்திக வாடை வீசும் சொற்றொடர். நமக்கோ ஆலயங்களெல்லாம் நீர்த்தேக்கங்கள்!

எங்கும் பொழியும் இறைவனின் பேராற்றல் ஆலயத்தில்தானே தேக்கப்பட்டு மனித சமுதாய வயல்வெளியில் மடை திறந்துவிடப்படுகிறது! "அம்மனிதர் என்னைக் கோவிலின் நுழைவாயிலுக்கு மீண்டும் அழைத்து வந்தார். அங்கு நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன்... தண்ணீர் கோவில் மற்றும் பீடத்தின் தெற்குப் பக்கத்திலிருந்து வந்தது ... அது பாயும் இடமெல்லாம் யாவும் உயிர் வாழும்... ஏனெனில் தூயகத்திலிருந்து தண்ணீர் அவற்றிற்குப் பாய்கின்றது..." (எசேக். 47:1-12).

ஆனால் ஒன்றை மறந்துவிடக் கூடாது. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. Stone walls do not make a prison. கற்சுவர்கள் எல்லாமே சிறைச்சாலை ஆவதில்லை. கல்லோ, கற்சுவரோ உணர்ச்சியற்ற சடப்பொருள்களே. அந்த உணர்ச்சியில்லாத சடப் பொருள்களுக்கு உணர்வூட்டி உயிர்பெறச் செய்வது மனித உணர்வுகள், மனித நேயச் செயல்பாடுகள். கோயிலாவதும், வணிகக் கூடமாவதும் மனித எண்ணத்தாலேயே! அதுபோலக் கல்லும் மண்ணும், கம்பியும் சிமெண்டும் கட்டிடங்களை உருவாக்கலாம். கோவில்களை உருவாக்குவதில்லை. அப்படியென்றால் இறைவனின் உடனிருப்பை உணர்த்துவது எது? "இரண்டு அல்லது மூன்றுபேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடி இருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன்" (மத். 18:20). உடலைத்தான் மனிதன் பார்க்கிறான். ஆனால் இறைவனோ உள்ளங்களைப் பார்க்கிறார். மனித மனங்களை நோக்கித்தான் கடவுள் பயணிக்கிறார். மக்களின் தோழமை உணர்வுக்கும், சேவை மனத்துக்கும் அமைதி வாழ்வுக்கும் ஆலயங்கள் கட்டியம் கூறட்டும்.

"உள்ளம் பெருங்கோவில். ஊனுடம்பு ஆலயம்" இது எல்லாச் சமயங்களிலும் காணும் உணர்வே! இறைவார்த்தையின் ஒளியில் மட்டுமே இதற்கு அருத்தமும் விளக்கமும் காண முடியும். கடவுள் தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார் என்றாலும் தூணையோ துரும்பையோ இறைவனின் ஆலயம் என்கின்றோமா?

கடவுள் வார்த்தையால் அனைத்தையும் படைத்தார். மனிதனையோ தன் ஆவியால் உருவாக்கினார். உயிர்மூச்சை ஊதிய அக்கணமே மனிதன் தூய ஆவியார் குடிகொள்ளும் கோவிலாகிவிட்டான். "நீங்கள் கடவுளின் கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா?" (1கொரி. 3:16) என்று கேட்கும் திருத்தூதர் பவுல் "உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள்" (1 கொரி. 6:20) என்கிறார். புனித பவுலின் புரட்சிச் சிந்தனை நமக்கு விடுக்கப்படும் சவால்!

வரலாற்றுச் சிறப்புமிக்க இறைவனின் திருஉறைவிடமான லாத்தரான் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடுகிறோம். பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் புனிதர்கள் திருவிழாக்களைக் கூட அனுமதிக்காத வழிபாட்டுக் கால அட்டவணை லாத்தரான் பேராலய அர்ப்பணிப்பு விழாவிற்குச் சிறப்புச் சலுகை கொடுத்திருக்கிறது என்றால் அந்தப் பேராலயத்தின் முக்கியத்துவத்தை உணரலாம். கான்ஸ்டன்டைன் மன்னரால் நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லாத்தரான் குன்றின்மேல் எழுப்பப்பட்ட ஆலயம் அது. இந்த நாளில் இறைவழிபாட்டுக்காக நேர்ந்தளிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. அந்த பேராலயத்தின் முகப்பில் பொறிக்கப்பட்டிருக்கும் ஒரு வாக்கியத்தைப் பார்க்கலாம். "உரோமை நகரிலும் மற்றும் உலகமெங்கும் உள்ள கோவில்களின் தாயும் தலைமையும் லாத்தரான் பேராலயமே" என்பதுதான் அந்த வாக்கியம். உரோமை மறைமாவட்டத்துக்கும் அதன் ஆயரான திருத்தந்தைக்கும் முதன்மைப் பேராலயம் என்ற வகையில் இப்பேராலயயத்தை உலக ஆலயங்களின் தாய் என்றும், கத்தோலிக்கத் திருஅவையின் ஒற்றுமைக்கு அடையாளம் என்றும் கருதி உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

திருப்பாடல் 84இல் அதன் ஆசிரியர் ஆலயத்தை நினைந்து வியந்து பாடுகிறார். "படைகளின் ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது! என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது... உமது இல்லத்தில் தங்கி இருப்போர் நற்பேறு பெற்றோர். அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டே இருப்பார்கள்".

எருசலேம் பேராலயத்தின் மீது இஸ்ரயேல் மக்கள் எவ்வளவு பற்றுக் கொண்டிருந்தார்கள்! பாபிலோனில் சிறைப்பட்டிருந்த மக்களை மகிழ்ச்சிப் பாடல் பாடக் கேட்கிறார்கள். அடிமைத்தனத்திலிருந்து கொண்டு எப்படி இறைவனின் உறைவிடமாகிய சீயோனைப் பாடுவது என்று தயங்கிக் கொண்டே சொல்கிறார்கள் "எருசலேமே, நான் உன்னை மறந்தால் என் வலக்கை சூம்பிப் போவதாக! உன்னை நான் நினையாவிடில், என் மகிழ்ச்சியின் மகுடமாக நான் எருசலேமைக் கருதாவிடில் என் நா மேல் வாயோடு ஒட்டிக் கொள்வதாக" (தி.பா. 137:5-6).

ஆலயம் தொழுவது சாலவும் நன்று. உண்மைதான். ஆனால் நம்மில் பலர் ஆலயம் தொழுவதோடு நின்று விடுகிறோம். ஆண்டவர் கோவிலில் மட்டும்தான் இருக்கிறார் என்று நினைக்கிறோம். இறைமக்களின் வளர்ச்சியே கோவிலின் பெருமை. இறைமக்களின் பலிவாழ்வின் அடையாளமே கோவில் என்ற எண்ணமே இல்லை. உலகப் பெருமையின் அடையாளங்களாக, சாதி இனப்பிளவின் சின்னங்களாக உள்ள கட்டடங்கள் எப்படிக் கோவிலாக முடியும்? அங்குமிங்கும் வானைச் சுரண்டி நின்று கொண்டிருக்கும் ஆலயங்கள் வருந்திச் சுமை சுமக்கும் மக்களே, என்னிடம் வாருங்கள்' என்று அழைக்கும் அமுத ஒலியை மக்கள் இதயச் செவிகளில் எழுப்பும் ஆற்றலை இழந்துவிட்டன.

வங்கக் கவி தாகூரின் கதை நினைவுக்கு வருகிறது. ஒரு மன்னன் கோடிக்கணக்கில் செலவழித்து அழகிய ஆலயத்தைக் கட்டினான். ஆனால் நரோட்டான் என்ற புனித துறவி அந்த ஆலயத்திற்குள் நுழையாமல் இருந்தார். அவரது அறப்போதனைகளைக் கேட்க வந்த மக்களும் கோவிலுக்குள் அடியெடுத்து வைக்கவில்லை. இதைக் கேள்வியுற்ற அரசன் நரோட்டானைக் கோபித்தார். "ஆலயம் கட்டியதால் வசிக்க வீடின்றி எண்ணற்ற மக்கள் தவிப்பதற்கு நீயே காரணமாகிவிட்டாய்" என்று துறவி பதிலளித்தார். அரசன் சினமுற்றவனாய் துறவி நகரைவிட்டு வெளியேறும்படி கட்டளையிட்டான். "நீர் கடவுளையே இவ்வூரைவிட்டு எப்போதோ விரட்டிவிட்டீரே. அவர் பின்னால் நானும் செல்வது முறையே" என்று கூறிப் புறப்பட்டார் துறவி. ஆலயங்களைவிடப் புனிதமானது மனிதம்.

மக்கள் ஆலயத்துக்கு வருவது ஆண்டவனை வழிபடவா அழகுப்போட்டியில் கலந்து கொள்ளவா என்ற ஐயம் எழ பாரதிதாசன் பாடியதைக் கேளுங்கள். அதுவும் கிறிஸ்தவ ஆலயத்தை முன்னிறுத்தியே பாடுகிறார்.

தலை, காது, மூக்கு, கழுத்து, கை, மார்பு
விரல், தாள் என்ற எட்டுறுப்பும்
தங்கநகை, வெள்ளிநகை ரத்தினம் இழைத்த நகை
தையலர்கள் அணியாமலும்
விலைகுறையும் ஆடைகள் அணிந்துமே
கோவில் வர வேண்டுமென்றே பாதிரி
விடுத்த ஒரு சேதியால் விஷமென்று கோவிலை
வெறுத்தார்கள் பெண்கள், புருஷர்கள்
நிலைகண்ட பாதிரி, பின் எட்டுறுப்பே யன்றி
நீள் இமைகள், உதடு, நாக்கு
நிறைய நகை போடலாம், கோவிலில் முகம் பார்க்க
நிலைக்கண்ணாடி உண்டு என
இலைபோட்டு அழைத்ததும் நகைபோட்ட பக்தர்கள்
எல்லாரும் வந்து சேர்ந்தார். இயேசுநாதர் மட்டும்
அங்கு வரவில்லையே இனிய பாரத தேசமே.
 
அருட்பணி. பிரதாப்

உயிருள்ள ஆலயங்களாக ...

இன்று ஆலயமில்லாத இடங்களை காணமுடியாது. ஏனென்றால் அந்த அளவிற்கு வழிபாட்டு தலங்கள் பெருகி கொண்டேயிருக்கின்றன. இன்னும் ஆழ்ந்த சிந்தித்தால் தற்போது வழிபாட்டு தலங்களுக்கு கேடு விளைவிக்கும் தவறான கடைகளும் ஆலயத்தைச் சுற்றி காணப்படுகின்றன. இது எதை வெளிப்படுத்துகிறதென்றால் ஆலயத்தின் மாண்பும், மதிப்பும் சிதைந்துகொண்டு இருக்கின்றன.

ஆனால் உண்மையாகவே ஒரு ஆலயம் எப்படி இருக்கவேண்டும், நாம் எப்படி உயிருள்ள ஆலயமாக வாழ முடியும் என்ற கேள்விக்கு பதிலைத்தான் இன்றைய வாசகங்கள் கற்றுக்கொடுக்கின்றன. ஆலயம் என்பது கற்களால் மட்டும் கட்டுப்படுவது அல்ல, மாறாக மனிதனிடம் விளங்கும் நற்குணங்களால் கட்டப்பட வேண்டும். அதனால்தான் பவுலடியார் நீங்கள் தூய ஆவியானவர் தங்கும் ஆலயம் என்கிறார். இந்த ஆலயத்தை தூய்மையாக வைக்கவே கடவுள் மோசே வழியாக பத்து கட்டளைகளை கொடுத்து மனித வாழ்வை நெறிப்படுத்தியதாக முதல் வாசகத்திலே வாசிக்கின்றோம். இந்த ஆலயத்தை நாம் மாசுபடுத்துகின்றபோது, நாம் மாசு அடையபடுகின்றோம். ஏனென்றால் ஆலயம் என்பது யூதர்களின் வாழ்வில் சிறப்பான இடம். ஒவ்வொருவருமே மூன்று வேளை செல்வது வழக்கம். எனவேதான் அந்த ஆலயம் தவறாக பயன்படுவதக் கண்டு வெகுண்டெழுகின்றார்.

நாம் நமது உடலாகிய உயிருள்ள ஆலயத்தை எப்படி பாதுகாக்கின்றோம். சிந்திப்போம்.
அருட்பணி. பிரதாப்


 
 
https://alaguamir.wordpress.com
கோவில்
இன்று உரோமையின் இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு திருநாளைக் கொண்டாடுகிறோம். உலக மீட்பர் ஆலயம் எனப்பெயரிடப்பட்டு, திருமுழுக்கு யோவான் மற்றும் திருத்தூதர் யோவான் என்ற இரு யோவான்களுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது இந்த ஆலயம். இதுதான் கத்தோலிக்க திருஅவையின் தாய் ஆலயம். முதன்மை ஆலயம். உலகின் எல்லா ஆலயங்களுக்கும் தலைமை ஆலயம். திருத்தந்தை விசுவாச பிரகடனம் செய்யும் சிறப்பு இருக்கை இங்குதான் இருக்கிறது.

பண்டைக்கால உரோமையில் சுற்றுச்சுவர் இருந்து, அதில் 12 நுழைவாயில்கள் இருந்திருக்கின்றன. நான்கு முக்கிய நுழைவாயில்களில் ஒன்றான யோவான் நுழைவாயிலில் அமைந்திருக்கிறது இந்தக் கோவில். இந்நுழைவாயில் வழியாக வரும் அனைவரும் இந்த ஆலயத்தைப் பார்க்காமல் உரோமிற்குள் செல்லவே முடியாத என்பது போல இதன் அமைப்பு இருக்கிறது. பல நூற்றாண்டு இடைவெளிகளில் இதில் பல பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டாலும், காலத்தின் கன்னத்தில் வடிந்த கண்ணீர்த் துளியாக, வானிலிருந்து விழுந்து குட்டி நிலாவாக இன்றும் மின்னிக் கொண்டிருக்கிறது.

கோவில் கட்டுவது என்பது மனிதர்களின் தொடக்க காலம் முதல் இருக்கிறது. ஹோமோ சேபியன்ஸ் எனப்படும் நமக்கு முந்தைய மனித இனம்கூட கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தது எனவும், அதற்கான ஆதராங்கள் அகழ்வாராய்ச்சியில் கிடைப்பதாகவும் ஜெர்மனியின் பான் நகர மியூசியத்தில் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

எல்லா இடத்திலும் கடவுளைப் பார்க்கலாம் என்பதெல்லாம் இன்று நாம் சொல்லிக் கொள்ளும் பொய்ச்சாக்கு. அல்லது வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் போலிச்சாக்கு.

ஒவ்வொன்றுக்கும் ஒரு இடம் இருக்கிறதுதானே.
நாம் சாப்பிட்ட இடத்திலே என்றாவது பாத்திரம் கழுவுகிறோமா?
அல்லது
எல்லாம் என் வீடுதான் என்று சமையலறையில் நாம் குளிக்கிறோமா?
இல்லை.

கோவில் என்பது முதலில் ஒரு இடம். இடத்தை நாம் தூய்மை என்ற வார்த்தையைக் கொண்டே பிரிக்கிறோம். மாடுகள், நாய்கள், கோழிகள் வாழ்வதற்கான இடத்தில் நாம் வாழ்வதில்லை. ஏன்? அவற்றின் தூய்மை நம் தூய்மையை விட குறைந்தது. (மாடு தூய்மை குறைவு என்று சொல்வது மோடி அரசில் தேசத்துரோகம் என்றும் கண்டிக்கப்படலாம்!) கடவுள் இருக்கும் இடத்தில் நாம் வாழ்வதில்லை. ஏனெனில் அவரின் தூய்மையைவிட நம் தூய்மை குறைந்தது. (அப்படியென்றால் கடவுளின் இல்லத்தில் வாழ்வோர் பெற்றிருக்க வேண்டிய தூய்மை அவர்கள்மேல் சுமத்தப்படும் பெரிய பொறுப்பு).

கோவில் எந்தக் கோவில் என்றாலும், இலாத்தரன் என்றாலும், மீனாட்சி என்றாலும் நமக்கு நினைவுபடுத்துவது மூன்று:

அ. எது எதற்கு நாம் எந்த இடத்தைக் கொடுக்க வேண்டுமோ, அது அதற்கு அந்த இடத்தைக் கொடுக்க வேண்டும்.

ஆ. கோபுரம் உயர்ந்திருப்பது போல நம் எண்ணம் உயர வேண்டும்.

இ. நம் வேர்களை மறக்கக் கூடாது ஒவ்வொரு கோவிலும் நமக்கு முந்தைய தலைமுறை நமக்கு விட்டுச் சென்ற பாதச் சுவடு. அந்தச் சுவட்டில் ஏறி நின்றுதான் நாம் வாழ்க்கையைப் பார்க்கின்றோம். ஒவ்வொரு கோடும் கடவுளுக்கும் மனிதருக்கும், மனிதருக்கும் மனிதருக்குமான இணைப்புக் கோடு.
https://alaguamir.wordpress.com


 
 
புனித பேதுரு பாப்பிறைத்‌ தமிழ்க்‌ கழகம்‌, பெங்களூர்
லாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு (நவம்பர் 9)
திருவிழா பின்னணி

லாத்தரன் பேராலயமானது கான்ஸ்டன்டைன் மன்னனின் மாளிகையாக இருந்தது. தனது தாய் அரசி லெனின் வேண்டுகோளுக்கிணங்க, தனது மாளிகையைத் திருத்தந்தையின் இருப்பிடமாக மன்னர் அர்ப்பணித்தார். அதன் ஒருபகுதியை ஆலயமாகப் பயன்படுத்தச் செய்தார். முதலில் உலக மீட்பர் பேராலயம் என்று அழைக்கப்பட்டது. பிறகு தூய யோவானின் பேராலயம் என்று அழைக்கப்பட்டது. பலமுறை இடிக்கப்பட்டாலும் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டது. உரோமை நகரில் முதன்முதலில் கட்டப்பட்ட ஆலயமாதலால், பேராலயமாகக் கருதப்படுகின்றது. உரோமை மறைமாவட்டத்தின் ஆயராகியத் திருத்தந்தையின் சிம்மாசனம் இந்தப் பேராலயத்தில் அமைந்துள்ளது.
நம் உள்ளங்கள் இறைவன் வாழும் இல்லங்களாக வேண்டும்

இறைவனின் படைப்பில் எல்லாம் இனிமையே! படைப்பின் இறுதியில் அனைத்தையும் பார்த்து அவரே பரவசமடைகின்றார். எல்லாம் இனிமையாயினும் படைத்தவரின் பார்வையில் மனித இனம் இனிமையிலும் இனிமையே. எனவேதான் இயற்கையில் தனது இணையில்லா பிரசன்னத்தை வைத்த இறைவன், தன் இருப்பிடமாக மனிதனின் மனதை தேர்ந்துகொண்டார். ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதிலும் இறைவன் அவனோடு உறவாடுகிறார். உண்மை, அன்பு, நீதி போன்ற உயரிய பண்புகளிலிருந்து விலகிச் செல்கின்றபோதெல்லாம் நம்மில் வாழும் நம்மைப் படைத்தவன் நம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எச்சரிக்கைக் குரல கொடுக்கின்றார். ஆனால் பலநேரங்களில் நாம் கண்களிருந்தும் குருடர்களாக, காதுகளிருந்தும் செவிடர்களாக இறைவனின் வழியிலிருந்து இடறிவிழுகிறோம். பொறாமை, பேராசை, பெருமை, வஞ்சகம் போன்ற பொய்யுணர்வுகளால் நம்மை அலங்கரித்துக் கொள்கின்றோம். நம் ஆழ்மனதை ஆலயமாக்கி அங்கே தன் வாழ்விடத்தை அமைத்த ஆண்டவனை அங்கிருந்து அப்புறப்படுத்தி 235.ஆனந்தமடைகிறோம். அன்பு, பொறுமை, அறம், இன்னா செய்யாமை ஆட்சிபுரிய வேண்டிய நம் மனதைத் தீமைகளின் திருத்தலங்களாக்கி திருவிழா காணுகின்றோம். நன்மை நல்லாட்சி நடத்த வேண்டிய மனதைத் தீமைகளால் திருப்தி படுத்துகின்றோம். ஆனால் பல நேரங்களில் நமது பாதைத் தவறிய பயணங்கள், நமது பலவீனத்தாலும், வலுவின்மையாலும் என்று சப்பைக்கட்டு கட்டுகின்றோம்.

இச்சூழ்நிலையில் இன்றைய வழிபாடும், வாசகங்களும் நமக்களிக்கும் செய்தி, "ஏன் இறைவன் இல்லமாகிய உங்கள் உள்ளங்களை இப்படி கள்வர் குகையாக்குகின்றீர்கள்?" என்பது- தான். இன்று நாம் சிறப்பிக்கும் 'லாத்தரன் பேராலய அர்ப்பண விழாவானது" நம்மைப் பார்த்துக் கேட்கும் கேள்வி, "திருமுழுக்கின் மூலம் ஆண்டவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உங்கள் ஆன்மா எனும் ஆலயத்தை ஏன் அலகையின் ஆட்சிக்கு உட்படுத்துகிறீர்கள்?" என்பதுதான்.

அலகையினால் அலைகழிக்கப்பட்டு சோர்ந்து போன நம்மைப் பார்த்து இயேசு கிறிஸ்து அழைப்பு விடுக்கின்றார்! "என் சிலுவை எனும் சாட்டையால் உங்களைச் சிறுமைபடுத்தும் பாவங்களைச் சிதறடித்தேனே, மீண்டும், மீண்டும் ஏன் சிறகொடிந்தப் பறவைகளாகப் பரிதவிக்கிறீர்கள்: வாருங்கள், வந்து எனது விலாவிலிருந்து வழிந்தோடும் குருதியினால் உங்கள் உள்ளங்களைக் கழுவுங்கள். ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆன்மாவை அழகுபடுத்துங்கள்" என்கிறார். இவ்வாறு பாவங்களிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளும்போது நம்மை மீட்ட இறைவன் நம் மத்தியில் பிரசன்னமாய் இருப்பார்.

"இஸ்ராயேல் மக்கள் பாவ வாழ்வை விட்டு இறைவனில் கட்டளைகளைக் கடைபிடிக்கும்போது அவர்கள் மத்தியில் என்றென்றும் பிரசன்னமாய் இருப்பேன் என்று எசேக்கியேல் இறைவாக்கினர் வழியாக இறைவன் உறுதியளிக்கின்றார். பலிகளை அன்று, மாறாக இரக்கம் நிறைந்த உள்ளங்களையே நாடுகின்றேன் என்கிறார் ஆண்டவர். எனக்காக அர்ப்பணிக்கப்பட்ட தேவாலயமானது பலி செலுத்துவதற்காக மட்டுமல்ல மாறாக உங்களுடைய பாவங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்பதற்காகவே" என்கிறார். ஒரே குடும்பமாக ஒன்று கூடி இறைவன் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நன்றி கூற அர்பப்ணிக்கப்பட்ட இடமே ஆலயம் என்று இறைவாக்கினர்கள் எடுத்துரைக்கின்றார்கள். ஆனால் இஸ்ராயேல் மக்கள் பலிகளின் மூலம் படைத்தவரைப் பரவசபடுத்திவிடலாம் என்று எண்ணினார்கள். அன்பளிப்புகள் மூலம் ஆண்டவரை அடைந்து விடலாம் என்று பலிசெலுத்துவதிலேயே முனைப்புடன் செயல்பட்டார்கள். விளைவு, ஆலயம் இடிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்டார்கள். 40 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பியவர்கள் நல்வழி வந்தபாடில்லை. மீண்டும் அதே நிலை. இயேசு வாழ்ந்த காலத்திலும் அதே நிலை தொடர்ந்தது. சொல்லப்போனால் இன்னும் மோசமாக இருந்தது. எனவேதான் இன்றைய நற்செய்தி வாசகத்திலே இயேசு கோபம் கொண்டு பலி செலுத்த வைக்கப்பட்டிருந்த ஆடுகளையும், கன்றுகளையும், புறாக்களையும் அகற்றினார் என்று காண்கிறோம். பலி செலுத்த வேண்டும் என்பது ஒவ்வொரு யூதனுடைய கடமை. அப்படியிருக்கும்போது இயேசு ஏன் கோபப்படுகின்றார்? எனக்கு உங்கள் முதற்கனிகளை அர்ப்பணமாக்குங்கள் என்ற இறைவன் அவற்றை வெறுக்கக் காரணமென்ன?

ஒரு முறை எமது விவிலியப் பேராசிரியர் ஒருவர் எங்களுக்குக் கிறிஸ்மஸ், புத்தாண்டுச் செய்தி வழங்கியபோது சொன்ன வாக்கியமொன்று என்னை மிகவும் கவர்ந்தது. "Keep Christ in your celebration" என்பதுதான் அவ்வாக்கியம். அதாவது "உங்கள் விழாக்களில் கிறிஸ்துவின் பிரசன்னத்தை நீங்கள் உணர வேண்டும்" என்பதுதான் அதன் பொருள். விழாக்கள் நாம் நமது விசுவாசத்திலிருந்து விழாமல் இருப்பதற்காகதான். அன்று பாஸ்கா விழாவிலே தனது தந்தையின் பிரசன்னத்தை உணராதவர்களைக் கண்டு இயேசு கோபப்பட்டார். இன்றைய நற்செய்தியை ஆழ்ந்து வாசித்தால் மூன்று முக்கியமான காரணங்களுக்காக இயேசு கோபப்படுவதைக் காணலாம்.

1. 'கோயில் பூனை சாமிக்கு அஞ்சாது' என்பது சொல்வழக்கு. ஆனால் அன்றைய யூத மதக் குருக்களின் நிலையும் அதுதான். பலி செலுத்த வேண்டும் என்பது ஒவ்வொரு யூதனின் கடமை. ஆனால் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இடத்திலே பலி என்ற பெயரில் பணம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். வழிபாடு என்ற பெயரில் வறுமையில் வாடிய மக்களை வதைத்தார்கள். இந்நிலையைக் கண்டுதான் இயேசு கோபப்படுகின்றார்.

2. இறைவன் பலிகளை அன்று, மாறாக இரக்கத்தையே விரும்புகிறார்' என்பதை இயேசு அறிந்திருந்தார். எத்தனையோ ஆண்டுகளாக இறைவாக்கினர்களால் எடுத்துரைக்கப்பட்ட செய்தியும் அதுதான். 'எரிபலிகளின் இரத்தத்திலே எனக்கு நாட்டமில்லை' (எசாயா 1:11-17). 'உங்களை எகிப்தியரின் கொடுமைகளிலிருந்து விடுவித்தது உங்கள் எரிபலிகளுக்காக அன்று' (எரே 7:22). 'பலியிடப்படுகின்ற இறைச்சியில் எனக்கு நாட்டமில்லை' (ஒசே 8:13). இவ்வாறு பலிகளை அல்ல அன்பு நிறைந்த இதயங்களைதான் இறைவன் காணிக்கையாகக் கேட்கிறார் என்று இறைவாக்கினர்கள் காலங்காலமாக வலியுறுத்தி வந்திருக்கின்றனர்.

3. இறைவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இடம் அனைவருக்கும் பொதுவானது. ஆனால் ஆண்டவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஜெருசலேம் தேவாலயமானது பல அறைகளைக் கொண்டது. முதலில் இருந்தது புறவினத்தாருக்கான பகுதி. 2-ஆவது பெண்களுக்கான பகுதி. 3-ஆவது இஸ்ராயேல் மக்களுக்கான பகுதி. 4-ஆவது யூதக் குருக்களுக்கான பகுதி. கடைசியாக 'திருத்தூயகம்' என்று அழைக்கப்பட்ட இறைபிரசன்னத்தின் அறை இருந்தது. புறவினத்தாருக்கான அனுமதி முதல் பகுதியுடன் முடிந்தது. பலியிடுவதற்குத் தேவையான பலிபொருட்கள் அங்குதான் விற்கப்பட்டன. யூத மதக் குருக்களின் உறவினர்கள்தான் குருக்களின் உதவியுடன் தடுப்புகள் அமைத்து வியாபாரம் செய்துகொண்டிருந்தனர். பேரம் பேசப்படுகின்ற கூச்சலும், குழப்பங்களும், விலங்கினங்களின் கழிவுநாற்றமும் விவரிக்க இயலாதது. இந்நிலையில் புறவினத்தார் எவ்வாறு செபம் செய்ய இயலும், ஆண்டவனை மனதுருகி வேண்ட அளிக்கப்பட்ட சிறுவாய்ப்பும் அவர்களிடம் இருந்துப்பறிக்கப்பட்டதைக் கண்ட இயேசு கோபப்படுகின்றார்.

இப்படிப்பட்ட சூழலில் இயேசு கோபப்பட்டதில் தவறொன்றும் இல்லை. நம் மனம் என்னும் கோவில்கூட இந்த நிலையிருப்பதைக் காணமுடிகிறதல்லவா? ஃபிராய்டு என்ற உளவியல் வல்லுனர் நம் மனதை மூன்று பகுதிகளாகப் பிரிக்கின்றார். 1. வெளிமனம், 2. உள்மனம், 3. ஆழ்மனம். வெளிமனம் என்கின்ற முதல் பகுதி எல்லோருமே அறிந்த ஒருபகுதி. உள்மனம் என்ற பகுதியை நாம் மட்டுமே அறிவோம். ஆழ்மனம் என்ற பகுதியை யாருமே அறியார். நமக்கு வேண்டாத நிகழ்வுகளை நாம் சேகரித்து வைப்பது அங்கேதான் என்று கூறுகின்றார். பெரும்பாலும் நம்மை நாம் வெளிமன வழியாக நல்லவர்களாகப் பிரதிபலிக்கின்றோம். ஆனால் நம் உள்மனதுக்குத் தெரியாமல் நாம் செய்யும் பல செயல்களில் இறைவனின் பிரசன்னம் உணரப்படுவதில்லை. அதையும் தாண்டி நாம் ஆழ்மனப்பகுதிக்கு நம்மை ஆட்படுத்துவதில்லை. ஏனெனில் அங்கே நம்மைத் தட்டிக் கேட்கக்கூடிய மனசாட்சி உள்ளது. எனவே நாம் வெளிப்படையாக நல்லவர்களாக முகமூடி அணிந்து வாழக் கற்றுக்கொள்கின்றோம்.

இன்றைய வழிபாட்டின் மூலம், எருசலேம் தேவாலயத்தைச் சந்தை கடைகளாக்கியவர்களைக் கண்டு கோபங்கொண்ட இயேசு நம் உள்ளமெனும் ஆலயத்தைக் கண்டும் கோபம் கொள்ளலாம். எப்போதென்றால், 1. நம் உள்ளத்தில் உள்ள மனசாட்சி என்ற இறைவனது பிரசன்னத்தை அலட்சியம் செய்கின்றபோது. 2. நாம் அருவருக்கத்தக்கத் தீய எண்ணங்ளுக்கு இடம் கொடுக்கின்ற போது, 3. நமது செயல்களைச் சீர்தூக்கி பார்த்து நம் மனசாட்சிக்குப் பயந்து நடக்காதபோது இயேசு நம்மைப் பார்த்துக் கோபப்படுகின்றார்.

ஆனால் அந்தக் கோபத்தின் விளைவாக அவர் நம்மை துன்புறுத்தவில்லை. மாறாகத் தன்னைச் சிலுவையின் துன்பத்திற்கு உட்படுத்துகின்றார். ஆம்! சிலுவை என்னும் சாட்டையால் நம் மனதைத் தூய்மைப் படுத்துகின்றார்.

அப்படித் தூய்மைப்படுத்தப்பட நம் ஆழ்மனதில் தன் ஆலயத்தை அமைத்திட அவர் தன் துன்பங்களின் மூலம் அடித்தளமிட்டுள்ளார் என்று இன்றைய இரண்டாம் வாசகத்திலே கேட்டோம். ஆம், சிலுவை மரணத்தால் நாம் அனைவரும் நம்மைச் சிறுமைப்படுத்தும் பாவத்திலிருந்துக் கழுவப்பட்டுள்ளோம். ஆண்டவருடைய ஆலயமாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளோம். கிறிஸ்துவின் சிலுவை மரமே அந்த அர்ப்பணத்தின் அடித்தளம். நமது திருமுழுக்கின்மூலம் கிறிஸ்து என்னும் மூலைக்கல் நமது ஆன்மாவை அலங்கரிக்காமல் தீமைகளால் நிறைத்து அதைக் கள்வர் குகையாக்குகிறோம்.

இன்று நற்கருணை வடிவில் நம்மைத் தேடி வருகின்ற இறைவன் நம்மைப் பார்த்துக் கூறுவது என்னவென்றால், "அர்ப்பணிக்கப்பட்ட உனதான்மா அழிவுற வேண்டுமென்றல்ல மாறாக, எனது பிரசன்னத்தில் மகிழ்வுற வேண்டும்" என்பதே எனது விருப்பம். நமது பதில் என்ன? உலக மீட்பருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிறகு, தூய யோவானுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட லாத்தரன் பேராலயத்தின் அர்ப்பண விழாவைச் சிறப்பிப்பதோடு நின்றுவிடாமல் ஒப்புரவு அருட்சாதனத்தில் பங்குபெற்று மீண்டும் ஆண்டவருக்கு அர்ப்பணமாக்குவோம். அதுவே பலிகளிலெல்லாம் சிறந்த பலியாகும்.
 
அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட் ‌
 
 
அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
 
 
 
 

  
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ