ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

     திருவருகைக்காலம் 2ஆம் வாரம் - ஞாயிறு

    திருப்பலி முன்னுரை

வருடாந்த
ஞாயிறு வாசகம்
    pdf/Calendrier-litrugique2021.pdf
ஞாயிறு
முன்னுரை
MP3
Sr. Gnanaselvi (india)
இறையேசுவில் அன்புக்குப் உரியவர்களே!!
B தவக்காலம்1
நீதியும் நேர்மையும் தொலைந்துபோய் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மை நோக்கி, நீதியையும் நேர்மையையும் நிலைக்கச் செய்ய கொஞ்சம் முயற்சி செய்யுங்களே! என்று கெஞ்சும் குரலோடு திருவருகைக்கால இரண்டாம் ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கின்றது.

அதிகாரவர்க்கத்தினர் பதவியைக் கொண்டு ஏழைகளுக்கு உதவி செய்வதற்கு மாறாக, இன்று ஏழையரை அடக்கி ஆழ்கின்றனர்.

வறுமை நிலை ஒருபுறம் என்றால், அடக்கப்பட்டு ஆளும் அடிமை நிலை மறுபுறம் அழுத்த, வலியோரால் எளியோர் விழும் நிலை தொடரும் நிகழ்வாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

தம்மை நோக்கி மன்றாடும் ஏழையரைக் காப்பாற்றவும், நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைக்கச் செய்யவும் பூமிக்குப் புறப்பட்டு வருகின்ற மனுமகனிடம், நீதியையும் நேர்மையையும் தழைத்தோங்கச் செய்வோம்.

தன்னலம் களைவோம். இருப்பதைப் பகிர்வோம். துன்புறுவோருக்கு அரணாக நிற்போம்.

அதற்கான அருளை எங்களுக்கு இந்த கல்வாரி திருப்பலி வழியாக தாரும் இயேசுவே என, நாமும் கெஞ்சும் குரலோடு கேட்டு பக்தியோடு ஜெபிப்போம்.
B தவக்காலம்2
B தவக்காலம்3
B தவக்காலம்4
திருநீற்றுப்புதன்
 
Sermon Fr.Albert
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
 

ஆணவத்தை அகற்றி தாழ்ச்சியைத் தருகின்ற இறைவா!
திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், இறைமக்கள் நலனை முன்னேற்ற, தாழ்ச்சியோடு உழைக்க அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

நீதியைத் நீரோடையாய் எங்கள் நடுவே பாயச் செய்கின்ற இறைவா!
நாடுகளின் தலைவர்கள் ஏழையரை சுரண்டுகின்றனர். செல்வத்தை குவிக்கின்றனர் தன்னலப் போக்கினால் வறியோர் வாழ்வை மலர விடாமல் செய்கின்றனர். இறைவா இந்நிலைமாற, எளியோரை இரக்கத்தோடு நினைக்க, வறியோருக்கு வாழ்வாதாரம் அமைக்க, நீதியோடு நாட்டுத் தலைவர்கள் செயல்பட, அவர்களுக்கு அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

நீதிநேர்மையை நிலைக்கச் செய்யும் இறைவா!
நீதியை இழந்து அநியாயமாக துன்புறுத்தப்பட்டு நிம்மதியை இழந்து தவிக்கின்ற எல்லா மக்களுக்கும், உமது வருகையானது நீதியையும், நேர்மையையும் நிலைக்கச் செய்யும் என்ற, நம்பிக்கை உணர்வைத் தூண்டி எழுப்ப வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

ஒளிநிறைந்த தந்தையே இறைவா!
இன்றைய இறைவாக்குகள் உமது திருமகனின் வருகையை அறிவிக்கின்றன. உமது வார்த்தை எங்கள் உள்ளத்தையும் உணர்வையும் தொடச் செய்யும். நீர்காட்டும் பாதைக்கு இந்த வார்த்தை ஒளிவிளக்கென உணர்ந்து நாங்கள் வாழ அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நேரிய உள்ளத்தோரை நேசிக்கும் இறைவா!
உம்மை நேசிப்பதிலும் எங்களை உம்மை நேசிக்கச் செய்வதிலும் ஆர்வத்தோடு உழைக்கும் எங்கள் ஆன்மீகத் தந்தைக்கு நேசத்தோடு அவர் கேட்கும் வரங்களைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்


 
மறையுரை சிந்தனைகள்


 திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு "ஆன்மீக சீர்த்திருத்தம்"
ஆயத்தமான வழி- செம்மையான பாதை

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் முன்னோடியாய், அவர் தம் மிதியடிவாரை அவிழ்க்கக்கூட தகுதியற்றவராய், பாலைவனத்தின் குரலொலியாய், பாசாங்கு இல்லாமல் விசுவாசத்தோடு ஆண்டவருக்கான பாதையைச் செப்பனிட்ட கடைசி இறைவாக்கினரான புனித திருமுழுக்கு யோவானுடைய "மனமாற்றத்திற்கான அழைப்பு" திருவருகைக்காலத்தில் மிகவும் இன்றியமையாதது: போற்றுதற்குரியது. பாலைவனத்தின் கூக்குரல் மனமாற்றத்திற்கு அழைப்பு விடுக்கிறது. எலிசபெத்தின் திருவயிற்றில் கருத்தறித்து, கருவறைக்குள்ளிருந்தே மெசியாவைக் கண்டறிந்து, துள்ளிக்குதித்து அக்களித்து அகமகிழ்ந்து, பின்னாளில் "அவரே உலகின் செம்மறி" என்று அடையாளங்காட்டி, தம்முடைய சீடர்களையும் அவர்தம்; சீடர்களாக தாரை வார்த்து, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு ஒர்; அடையாளமாக திருமுழுக்குக் கொடுத்து, தாம் செப்பனிட்ட பாதையில் பயணத்தை மேற்கொள்ள ஆவண செய்தவர் புனித திருமுழுக்கு யோவான்.

எனவேதான் ஆண்டவர் இயேசுவும் அவரைப் பற்றி குறிப்பிடுகிறபோது "மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விட பெரியவர் எவரும் தோன்றியதில்லை (மத்11~11) என்று வியந்து பாராட்டுகிறார். திருமுழுக்கு யோவான் செப்பனிட்டப் பாதையில் ஆண்டவர் பயணித்ததாலே அவருடைய இறையாட்சி இலக்கு எளிதானதைப் போல தோன்றுகிறது. பாலைவனத்து கூக்குரல் ஏரொதின் அரண்மனையிலும் எதிரொலித்தது: துளைத்தெடுத்தது: அங்கும் எதிரொலித்தது. சிங்கத்தை அதன் குகைக்குள்ளேயே சந்தித்த மாமனிதர் திருமுழுக்கு யோவான். ஆண்டவரின் பிரதிநிதியாக இருந்ததால்தான்,அவ்வளவு துணிச்சலோடு ஒர்; அரசாங்கத்தின் அநீதத்தன்மையை எதிர்த்துப் போராட முடிந்தது: தன் தலை துண்டாடப்படப்போவதைப்பற்றிக்கூட கவலைப்படாமல்..துணிந்து ஆண்டவரின் குரலாக எதிரொலித்தவர். எனவேதான் தவறுதலாக, இயேசுவையே இன்னொரு திருமுழுக்கு யோவான் என்று ஏரோது அடையாளம் கண்டுகொண்டான் (மத்14~2). அப்படிப்பட்ட திருமுழுக்கு யோவான் "ஆண்டவருக்காக வழியை ஆயத்தப்படுத்துங்கள்: அவருக்காக பாதையை செம்மையாக்குங்கள்" என்கிறார்.

ஆன்மிக சீர்த்திருத்தம்!

ஆண்டவருக்கான வழியை ஆயத்தமாக்குங்கள் என்பதுதான் திருவருகைகாலத்தில் விடுக்கப்படுகிற அழைப்பு. இது ஆன்மீகத்திற்கான அழைப்பு. சமுதாய சீர்த்திருத்தத்திற்கான அழைப்பு: சமய மறுமலர்ச்சிக்கான அழைப்பு. "வழியை" ஆயத்தமாக்குங்கள்: பாதையை செப்பனிடுங்கள் என்பதில் ஒரு சூட்சமம் ஒளிந்திருக்கிறது.

ஒரு மலை மேல் ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருந்த ஒரு குருவிடம் ஓர் இளந்துறவி "எது வழி?" என்று கேட்டார். குரு அதற்கு பதிலாக "அடடா! இந்த மலை எவ்வளவு அழகாக இருக்கிறது" என்றார். நான் உங்களிடம் மலையைப்பற்றிக் கேட்கவில்லை: வழியைப் பற்றிக் கேட்டேன்" என்றார் இளந்துறவி. குரு "மகனே! மலைகளுக்கு அப்பால் செல்லாத வரை நீ வழியை அடைய முடியாது" என்று பதிலுரைத்தார். இது ஒரு ஸென் நிகழ்வு.

இறைவனை அடைய எது வழி? என்பதுதான் ஆன்மிகத்துறையில் எப்பொழுதும் எழுப்பப்பட்டுவரும் பெருங்கேள்வி. இன்றைய நற்செய்தியில் பாலைவனத்தின் கூக்குரல் விடுக்கிற அழைப்பே "ஆயத்தமான வழி: செம்மையான பாதை"என்பதுதான். உலகில் உள்ள ஒவ்வொரு மதமும் தான் காட்டுவதுதான "வழி" என்று வரிந்துக்கட்டிக்கொண்டு செயல்படுகின்றன. "மதம்" என்பதை நம் தமிழ் மரபில் "நெறி" என்பார்கள். உ.ம். கிறிஸ்தவ நெறி, சைவ நெறி. "நெறி" என்றால் "வழி" என்று பொருள். வழி என்றால்..மார்க்கம்: மார்க்கம் என்றால் பாதை. உ.ம் ஞான மார்க்கம்.. பக்தி மார்க்கம் .. என்பதெல்லாம் அதன் வழிமுறைகள்.
ஆயத்தமான வழி செம்மையான பாதை" என்பது ஆன்மிகத்திற்கான அறைகூவல். மேலே சொன்ன ஸென் கதையில் இடம்பெற்றுள்ள மலை என்பது ஒரு குறியீடு! அவ்வளவுதான் (அங்கே கேட்ட கேள்விக்கு எப்போதும் நேரடியாக பதில் கூறுவதில்லை). இதனை வெளிப்படுத்தவே "இந்த மலை எவ்வளவு அழகாயிருக்கிறது" என்று பதில் தருகிறார். அறிவு என்பது மலை. அதில் சிரமப்பட்டு ஏறி நாம் உயரத்திற்கு வந்திருக்கிறோம். அறிவு அழகானது: அதனால் நாம் பயன்களை அடைந்திருக்கிறோம். ஆனால் வழியை மறைக்கும் மலை போல் அறிவு இறைவனை அடையும் வழியை மறைக்கிறது. இறைவனை அடையும் வழியே அருள். அது அறிவுக்கு எதிரானது. அறிவு பகுத்துப்பார்க்கும்: அருள் தொகுத்துப் பார்க்கும். ஒரு வகையில் நம் ஒவ்வொருவரின் அகந்தையும் வழியை மறைக்கும் மலைதான். அகந்தை உடையவன் வழியை அறியமாட்டான்.

ஆண்டவருக்கான வழியை ஆயத்தமாக்குங்கள் என்பது ஆன்மிக சீர்திருத்தத்திற்கான அழைப்பு. எனவேதான் "பாவ மன்னிப்பு அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்" என்று திருமுழுக்கு யோவான் முழங்கினார்: மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள் (3~8) என்று பறைசாற்றினார். இவர் சமயத்தை மாற்றத்திற்குள்ளாக்கவில்லை: மாறாக சமுதாயத்தை மாற்றத்திற்குள்ளாக்குகிறார். அப்போதுதான் "மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண முடியும் (லூக்3~6). எனவேதான் மார்க்கத்தைப் பற்றி வழியைப் பற்றி- பாதையைப் பற்றி எடுத்துரைக்கிறார்.
எனவேதான் "இதோ! நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன்: அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார்;" என்று மறைநூலில் குறிப்பிடப்பட்டது (மத்11~10). வழிதவறிப் போன இஸ்ராயேல் மக்களிடம்தான் புனித திருமுழுக்கு யோவான் "வழியைப்" பற்றி எடுத்துரைத்தார்: இயேசுவும்கூட அவர்களிடமே தம் திருத்தூதர்களை அனுப்புகிறார் (மத்10~6). " வழியை ஆயத்தமாக்குங்கள்: பாதையை செப்பனிடுங்கள்" என்று எடுத்தரைத்த திருமுழுக்கு யோவான், அந்த வழியே கிறிஸ்து என்பதை அறிவார்: வாயிலே கிறிஸ்து என்பதையும் (யோவான்14~6) அறிவார். எல்லோருக்கும் ஆயத்தமான வழி கிறிஸ்துவே: பயணிக்க வேண்டிய செப்பனிட்ட பாதை வாயில் கிறிஸ்துவே என்பதை அறிந்திடுவார்: அவரை பின்செல்பவர் இருளில் நடவார்: அதே சமயம் ஆயத்தமாக்கப்பட்ட வழிகளும், செப்பனிட்ட பாதைகளும் கிறிஸ்துவில்தான் முடிவுறுகிறது: கிறிஸ்துவே அதன் நிறைவாக, அகரமும் னகரமுமாக விளங்குகிறார்.
(மன) மாற்றம்

கிரேக்கம் பெற்றெடுத்த மாபெரும் தத்துவ ஞானி ஹெராக்லிடஸ் சொல்லுகிறார் "ஒரே ஆற்றில் நீங்கள் இருமுறை இறங்க முடியாது: எல்லாம் ஓடிக்கொண்டிருக்கின்றன: எதுவும் உறைந்து நிற்பதில்லை: குளிர்ந்தவை சூடாகின்றன: சூடானவை குளிர்கின்றன: ஈரமானது உலர்கிறது: உலர்ந்தது ஈரமாகிறது: ..இதுதான் அதுவாகிறது: அதுதான் இதுவாகிறது- எல்லாம் எதிர்பாராத தீடீர் மாற்றத்தால்.." என்றுரைக்கிறார். இவ்வுலகில் மாறாமல் இருப்பது ஒன்றே ஒன்றுதான் -அது மாற்றம் மட்டுமே. இறுதியாக ஹெராக்லிட்டஸ் "உண்மையில் முரண்கள் என்பதை முரண்கள் அல்ல: அவை ஒரே பொருளின் இருநிலைகள்" என்று வாழ்வின் மறைபொருளை விளக்குகிறார்.
திருவருகைக்காலத்தின் நோக்கமே "மாற்றம் ஒன்றுதான்". அது மனமாற்றம் ஒன்றேதான். ஆன்மிக மறுமலர்ச்சிதான் அதன் அடிப்படை நோக்கம்: அதுதான் அதன் நிறைவு. எனவேதான் திருமுழுக்கு யோவான், ஆண்டவரின் வருகைக்காக சமுதாயத்தைத் தயார்படுத்துகிறபோது "மன மாற்றத்தைப் பற்றி அழுத்தமாக பேசுகிறார்: அதனை வாழ்வில் செயல்படுத்தி.. செயல்களை செம்மைப்படுத்துங்கள்: நிருபியுங்கள் என்று சவால் விடுக்கிறார்.

சட்டம்-நிதி-நிர்வாகம்-நீதி சீர்த்திருத்தம்

சட்டம் - நிதி- நிர்வாகம்- நீதி என்று ஒரு சமுதாய அரசியல் அமைப்பின் இன்றியமையாத நான்கு தூண்களையும் வலிமைப்படுத்துகிறார். முதலாவதாக சட்ட சீர்த்திருத்தம்(லூக்3~11). இங்கே இருப்பவர் இல்லாதவரோடு பகிர்ந்துகொள்ள வேண்டும்: அது உணவாக இருக்கலாம்: உடையாக இருக்கலாம்: தன்னைத்தான் நேசித்தல் போல தன் அயலாரையும் நேசிக்க வேண்டும்: அது அன்பின் அடையாளம்: சட்டத்தின் நிறைவு அன்பே. இரண்டாவதாக நிதி சீர்த்திருத்தம்: குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள் (லூக்3~13). லஞ்சம்-லாவண்யம்- ஊழல் என எதுவும் வேண்டாம்: நேர்மை சிறந்தோங்கட்டும்: மூன்றாவதாக, நிர்வாக சீர்திருத்தம்(3~14): யாரையும் அச்சுறுத்தி பணம் பறிக்காதீர்கள். வெளிப்படையான நிர்வாகத்தைச் செயல்படுத்துங்கள்: ஒருவர் மற்றவரின் அடிப்படை உரிமைகளை மதித்து ஒழுக வேண்டும்.

நான்காவதாக நீதி சீர்த்திருத்தம் (லூக்3~14). யார்மீதும் பொய்க்குற்றம் சுமத்தாதீர்கள்: பொய்வழக்கு வேண்டாம்: அநீத தண்டணையும் வேண்டாம்: நீதியை நிலைநாட்டுங்கள்: குற்றத்திற்கேற்ற தண்டணையைக் கொடுங்கள். இப்படி நான்கு சீர்த்திருத்தங்கள அடங்கிய சமுதாய சீர்த்திருத்தத்தினை திருமுழுக்கு யோவான் செயல்படுத்துகிறார். இந்த சமுதாய சீர்த்திருத்தம் தான் ஆன்மிக சீர்த்திருத்தம். ஆன்மிக சீர்த்திருத்தம்தான் இக்காலத்தின் குறிக்கோள். செம்மையானப் பாதைத்தான் இலட்சியம்.

ஆயத்தமான வழி! செப்பனிட்ட பாதை!
அது சமதளப்பாதை! அது சமத்துவப்பாதை! சீர்த்திருத்தப்பாதை! பள்ளத்தாக்குகள் நிரம்பியுள்ளன: எனவே இனிய யாரும் அங்கே இறங்க வேண்டியதில்லை: குன்றுகள் யாவும் தாழ்த்தப்பட்டுள்ளன: எனவே இனி யாரும் சிரமப்பட்டு ஏற வேண்டியதில்லை. கோணலானவை நேராக்கப்பட்டுள்ளன: ஆகையால் இனி விபத்துக்களுக்கு இடமில்லை: கரடு முரடானவை சமதளமாக்கப்பட்டுள்ளன: ஆகையால் யாரும் தடுக்கி விழமாட்டார்கள்: தடுமாறமாட்டார்கள். மிகப்பெரிய சீர்த்திருத்தம் இங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். குன்றுகளும் மலைகளும் இருந்தால்தானே பள்ளத்தாக்குகளுக்கு இடமுண்டு: மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்பட்டு, பள்ளத்தாக்குகள் நிரம்பியுள்ளன: சமதளம் -சமநிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இங்கே கவனிக்கத்தக்க இன்னொரு குறிப்பு கோணலானவை நேராக்கப்பட்டுள்ளன: கரடு முரடானவை சமதளமாக்கப்பட்டுள்ளன. நேரானவை கோணலாக்கப்படவில்லை: சமதளமானவை கரடு முரடாக்கப்படவில்லை: மாற்றம் என்பது எப்போதும் நேர்மறையை நோக்கியதொன்றாகவே இருக்க வேண்டும்: வளர்ச்சிக்குரியதொன்றாகவே இருக்கிறது. பின்னைய நிலை இதற்கு முந்தைய நிலையைவிட மோசமானதாக இருக்க கூடாது. நம்முடைய ஒவ்வொரு செயல்பாடும், சீர்த்திருத்தமும் முழுமையடைய வேண்டுமே தவிர, குறையுடைதாக இருக்ககூடாது. இதனையே இன்றைய முதல்வாசகத்தில் இறைவாக்கினர் பாருக் (5~7) கடவுளின் மாட்சியில் பாதுகாப்புடன் நடந்துவரும் பொருட்டு, உயர் மலைகள் என்றென்றும் உள்ள குன்றுகள் எல்லாம் தாழவும் பள்ளத்தாக்குகள் நிரம்பவும் இவ்வாறு நிலம் முழுதும் சமமாகவும் கடவுள் கட்டளையிட்டுள்ளார்"என்கிறார்.

ஆகையால் நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் வருகைக்காக நேர்மறையை நோக்கி வளர்ச்சியை நோக்கி, மனமாற்றம் அடைவோம்: நாம் நடக்க வேண்டிய பாதையை செப்பனிடுவோம்! செல்ல வேண்டிய வழியை ஆயத்தமாக்குவோம். ஆன்;மிக சீர்த்திருத்தத்தை அறிந்துணர்ந்து மேற்கொள்வோம்! ஆயத்தமாகுவோம்! செம்மையாவோம்! ஆண்டவர் இதோ வருகிறார். ஆயத்தமாவோம்: செப்பனிடுவோம்!
 
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.


 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி
 

இன்றைய வாசகங்கள்:-
பாரூக்கு 5:1-9
பிலிப்பியர் 1:4-6, 8-11
லூக்கா 3:1-6


புதிய பாதை

நம் வாழ்வின் பாதை ஒன்றாக இருக்க, அங்கே புதிய பாதை ஒன்றை உருவாக்க இறைவன் வருவதாக இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்குச் சொல்கிறது. 'ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல்கள் புரிந்துள்ளார்' (திபா 126) என்று அக்களிக்கும் திருப்பாடல் ஆசிரியர், 'சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றியபோது நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம்' என எழுதுகிறார். பாபிலோனிய நாடுகடத்தலின் பின்புலத்தில் பாடப்பட்ட இத்திருப்பாடலில் ஆசிரியர் தன் குழு அனுபவித்த ஒட்டுமொத்த வலியைப் பதிவு செய்கின்றார். தங்களுடைய நகரம், ஆலயம் என எல்லாம் அழிந்து தாங்கள் வேற்றுநாட்டுக்கு அடிமைகளாக நடத்திச் சென்றதை ஓர் இறப்பு அனுபவமாக, உறக்க அனுபவமாக நினைக்கின்ற ஆசிரியர், ஆண்டவர் தங்களை மீண்டும் தங்களின் நாட்டிற்கு அழைத்து வந்ததை ஒரு கனவு போல நினைத்துப்பார்க்கிறார்.

இந்த நிகழ்வையே முதல் வாசகத்தில் (காண். பாரூக்கு 5:1-9) வாசிக்கின்றோம். பாரூக்கு எரேமியா இறைவாக்கினரின் செயலர். பாரூக்கு நூல் கத்தோலிக்க விவிலியத்தின் இணைத்திருமுறை பகுதியில் இருக்கிறது. இதன் கிரேக்க மூலம் மட்டுமே நமக்குக் கிடைத்திருக்கிறது. கிரேக்க மொழியில் எழுதப்பட்ட முதல் ஏற்பாட்டு நூல்களை யூதர்களும், பிரிந்த சகோதரர்களும் 'வெளிப்படுத்தப்பட்ட நூலாக' ஏற்றுக்கொள்வதில்லை. பாபிலோனியாவுக்கு இஸ்ரயேல் மக்கள் அடிமைகளாக நாடுகடத்தப்பட்டபோது இவரும் உடன் சென்றவர். எருசலேமில் எழுதப்படிக்கத் தெரிந்த அனைவரையும் நெபுகத்னேசர் தன் அரண்மனைக்கு எடுத்துச்சென்றுவிட்டார். ஆக, பாரூக்கு அடிமைத்தனத்தின் கோரத்தை நேருக்கு நேர் கண்டவர்.

இன்று இருக்கும் நிலையை நாளை ஆண்டவர் புரட்டிப்போடுவார் என்ற நம்பிக்கையைத் தருகிறார் பாரூக்கு. பாரூக்கு ஐந்து வகை புரட்டிப்போடுதல்களை முன்வைக்கின்றார்: (1) துன்ப துயர ஆடை களையப்பட்டு, மாட்சியின் பேரழகு அணிவிக்கப்படும்ளூ (2) ஒன்றுமில்லாத வெறுந்தலையில், ஆண்டவரின் மாட்சி மணிமுடியாகச் சூட்டப்படும்ளூ (3) பெயரில்லாதவர்களுக்கு, தங்கள் பெயர்களை இழந்தவர்களுக்கு, 'ஐரின் டிகாயுசனேஸ்' ('நீதியில் ஊன்றிய அமைதி') என்றும் 'டோக்ஸா தெயோசேபெயாஸ்' (இறைப்பற்றில் ஒளிரும் மாட்சி') என்றும் பெயர்கள் சூட்டப்படும்ளூ (4) நடந்து சென்றவர்கள் பல்லக்கில் மன்னர்போல் தூக்கிவரப்படுவார்கள்ளூ மற்றும் (5) மலைகள், குன்றுகள், பள்ளத்தாக்குகளில் இழுத்துச் செல்லப்பட்டவர்கள் சமமும், நறுமணமும் மிகுந்த சாலைகளில் நடத்திவரப்படுவர்.

அடிமைத்தனத்தின் பழைய பாதைக்கு எதிர்மறையாக இருக்கிறது இறைவன் அமைத்துத் தரும் புதிய பாதை. பழைய பாதை இஸ்ரயேல் மக்களை நிர்வாணமாக நடத்திச் சென்றது. 'ஆடைகள் களையப்படுதல்' என்பது 'அடையாளங்கள் அழிக்கப்படுவதைக்' குறிக்கிறது. பாபிலோனியாவில் நிர்வாணமாக நின்றவர்களை தன் மாட்சி என்னும் பேரழகால் உடுத்துகின்றார் இறைவன். புதிய பாதை அவர்களுக்கு ஆடை அணிவிக்கிறது. கடவுள் அருளும் மாட்சியின் பேரழகே அவர்களின் ஆடையாக இருக்கிறது. பழைய பாதையில் அவர்கள் தலைமுடி மழிக்கப்பட்டது. அடிமைகளின் தலைமுடி சுகாதாரத்திற்காகவும், நேர மேலாண்மைக்காகவும் மழிக்கப்படும். இப்படி மொட்டைத் தலையாய் இருந்தவர்களுக்கு மணிமகுடம் அணிவிக்கிறார் இறைவன். புதிய பாதையில் அவர்கள் மாட்சியை மணிமுடியாகச் சூடியிருக்கின்றனர். பழைய பாதையில் இஸ்ரயேல் மக்களுக்குப் பெயரில்லை. அடிமைகளும், சிறைக்கைதிகளும் பெயர் சொல்லி அழைக்கப்படுவதில்லை. அவர்கள் வெறும் எண்கள்தாம். பெயர் என்னும் அடையாளம் இழந்தவர்கள் 'ஐரின்' (அமைதி), 'டோக்ஸா' (மாட்சி) என்ற அழகான பெயர்களைப் பெறுகிறார்கள். இந்த இரண்டு பெயர்களும் அவர்கள் இவ்வளவு நாள் இழந்தவற்றைத் திருப்பி தருவனவாக இருக்கின்றன. பழைய பாதை இருளாக இருந்தது. புதிய பாதை பேரொளியால் ஒளிர்கிறது.பழைய பாதை அவர்களை மண்டிபோட வைத்திருந்தது. புதிய பாதை அவர்களை எழுந்து நிற்கச் செய்கிறது. பழைய பாதை கண்ணீராய் நிறைந்தது. புதிய பாதை மகிழ்வால் நிறைகிறது. பழைய பாதையில் சங்கிலி கட்டப்பட்டு கால்நடையாக இழுத்துச் செல்லப்பட்டனர் மக்களஇறைவன்தாமே இனி இவர்களை பல்லக்கில் தூக்கி வருவார். புதிய பாதையில் அரியணையில் வீற்றிருக்கும் மன்னர்போல உயர்மிகு மாட்சியுடன் அவர்கள் அழைத்துவரப்படுகிறார்கள்.பழைய பாதையில் யாருடைய உயிரையும் பற்றி யாரும் கவலைப்படவில்லை. புதிய பாதையில் இறைவன் அவர்களின் உயிரைப் பாதுகாக்கின்றார். பழைய பாதை இரத்தம் மற்றும் வியர்வையால் துர்நாற்றம் அடித்தது. எருசலேமிலிருந்து பாபிலோனியாவுக்குச் செல்லும் பாதை கரடு முரடானது. பள்ளத்தாக்குகள், குன்றுகள் நிறைந்தது. இவற்றையெல்லாம் சமன்படுத்துவதோடு இறைவன் இன்னும் ஒருபடி போய், பாதைகளில் சாம்பிராணியும் போடுகின்றார். அடிமைகள் இழுத்துச் செல்லப்பட்ட பாதை இரத்தம், உடலின் அழுகல் என நாற்றம் எடுக்கும். நறுமணம் இந்த நெடியை மாற்றுவதோடு, புத்துணர்ச்சியையும் கொடுக்கும். புதிய பாதையில் நறுமணம் வீசும் மரங்கள் நிழல் தருகின்றன.

இவ்வாறாக, இஸ்ரயேல் மக்களைத் தேடி வருகின்ற இறைவனின் பாதை புதிய பாதையாக இருக்கிறது.

இரண்டாம் வாசகம் (பிலி 1:4-6,8-11) பவுலின் சிறைமடல்களில் ஒன்றான பிலிப்பியருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. தன் நெஞ்சுக்கு நெருக்கமான பிலிப்பி நகரத் திருஅவைக்கு பவுல் எழுதும் திருமடலின் நடை மற்ற திருமடல்களின் நடையைவிட ஆத்மார்த்தமாக இருக்கின்றது. 'நீங்கள் என் இதயத்தில் இடம்பெற்றுவிட்டீர்கள்' (1:7), 'என் அன்பார்ந்தவர்களே, என் வாஞ்சைக்குரியவர்களே, நீங்களே என் மகிழ்ச்சி, நீங்களே என் வெற்றிவாகை' (4:1) என அன்பில் நீராட்டுகின்றார். தன் திருமடலின் தொடக்கத்தில் அவர்கள் இதுவரை நம்பிக்கையில் நிலைத்து நிற்பதற்காக அவர்களை வாழ்த்திப் பாராட்டுகின்றார். 'உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள் வரை அதை நிறைவுறச் செய்வார் என்று உறுதியாக நம்புகிறேன்' என்று அவர்கள்மேல் தான் வைத்துள்ள நம்பிக்கையைப் பதிவுசெய்கின்றார். மேலும், 'கிறிஸ்து இயேசு கொண்டிருந்த அதே பரிவுள்ளத்தோடு உங்கள்மீது எத்துணை ஏக்கமாயிருக்கிறேன்' என ஏங்குகின்றார்.

இயேசுவின்மேல் நம்பிக்கை கொள்ளும் வரை பிலிப்பி நகர மக்கள் தங்களின் பழைய பாதையில் இருக்கின்றனர். இயேசுவின்மேல் கொண்ட நம்பிக்கை அவர்களைப் புதிய பாதைக்கு அழைத்துவருகின்றது. இந்தப் புதிய பாதையில் அவர்கள், 'அறிவிலிலும் அன்பிலும் அனைத்தையும் உய்த்துணரும் பண்பிலும் மேன்மேலும் வளர்ந்து, அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்படுமாறு இறைவனை வேண்டுவதாக' முன்மொழிகின்றார். மேலும், அவர்களின் செயல்கள் நீதியின் செயல்களாக வேண்டுமென்று அறிவுறுத்துகின்றார்.

புதிய பாதைக்கு இறைவனின் அருளால் அழைத்துவரப்படுகின்ற பிலிப்பி நகர மக்கள், தங்கள் சொந்த நற்செயல்களால் அந்தப் பாதையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 3:1-6) திருமுழுக்கு யோவானின் பணித்தொடக்கத்தை லூக்கா பதிவு செய்கின்றார். மற்ற நற்செய்தியாளர்கள் போல அல்லாமல், லூக்கா யோவானின் பணியை வரலாற்றுப் பின்புலத்தில் பதிவு செய்கிறார். உரோமைப் பேரரசர் திபேரியு சீசர், யூதேய ஆளுநர் பிலாத்து, மாநில அரசர்கள் ஏரோது, பிலிப்பு, குறுநில மன்னர்கள் இத்துரேயா, லிசானியா, தலைமைக் குருக்கள் அன்னா, கயபா என்று ஒரு சாதாரண, சாமானிய யூதரின்மேல் ஆட்சி செய்த அனைவர் பெயர்களையும் பதிவு செய்கின்றார் லூக்கா. ஒரு சாமானிய யூதர் தனது சமூக, சமய, பொருளாதார வாழ்க்கை நிகழ்வுகளுக்கு இத்தனை பேரைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. இவர்கள் அனைவரும் இந்த சாமானிய யூதரின் அன்றாட வாழ்வைத் தீர்மானித்தனர்.

ஆனால், இப்படிப்பட்ட சமூக, சமய, பொருளாதாரப் பாதை சமூகத்தை வழிநடத்திக்கொண்டிருக்க, கடவுளின் வார்த்தை விந்தையாக பாலைநிலத்தில் வாழ்ந்து வந்த செக்கரியாவின் மகன் யோவானுக்கு அருளப்படுகின்றது. ஆக, இறைவன் தேர்ந்தெடுக்கும் பாதை சாமானிய சமூகப் பாதையிலிருந்து முழுவதும் வித்தியாசமாக இருக்கிறது. இதுதான் இறைவனின் விந்தை.

'ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்' என்று மொழிகின்ற திருமுழுக்கு யோவான் புதிய பாதைக்கான தயாரிப்பு வேலைகளை முன்னெடுக்க அறைகூவல் விடுக்கின்றார். மேலும், 'இந்தப் புதிய பாதையில் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்' என்ற எசாயாவின் வாக்கு நிறைவேறுவதாக லூக்கா பதிவிடுகின்றார். எசாயா மொழிகின்ற சொல்லாடல்களை உருவகங்களாக எடுத்துக் கொள்வோம்:

பாலைநிலம்: நம் மனம் இறைவன் இல்லாமல், ஒளி இல்லாமல், மகிழ்ச்சி இல்லாமல், நிறைவு இல்லாமல் காய்ந்திருக்கும் நிலை. பாலை என்பது ஒரு குறைவு. பேரரசர், ஆளுநர், குறுநிலமன்னர்கள், தலைமைக்குருக்கள் என பளிங்குத் தரைகளில் வலம் வந்தவர்களுக்கு எட்டாத ஆண்டவரின் குரல், பாலைநிலத்தில் வாழ்ந்த திருமுழுக்கு யோவானை எட்டுகிறது. நம் வாழ்விலும் குறை மேலோங்கி நிற்கும் போது இறைவன் குரல் நம்மை எட்டுகிறது.

வழி: இது ஆண்டவர் அமைத்துத் தரும் புதிய பாதையைக் குறிக்கிறது. வழி நம் முன்பாக இருந்தாலும் அந்த வழிக்கான பயணத்தை மேற்கொள்ளும்போது தான் அந்த வழி அர்த்தம் பெறுகிறது. எடுத்துக்காட்டாக நாம் பயணிக்கும் நான்கு வழிச் சாலைகள், வாகனங்கள் இல்லாத போது வெறும் காட்டுப்பகுதியே. பயன்பாட்டில் தான் வழியானது வழியாக மாறுகிறது.

ஆயத்தமாக்குதலும் செம்மையாக்குதலும்: ஆயத்தமாக்குதல் புதிய முயற்சியையும், செம்மையாக்குதல் புதுப்பிக்கும் முயற்சியையும் குறிக்கிறது. நாம் நம் வாழ்வில் சில நேரங்களில் புதிய பாதையைத் தேர்ந்தெடுக்கிறோம். சில வேளைகளில் ஏற்கெனவே உள்ள பாதையைப் புதுப்பிக்கின்றோம். புதிய பாதையைத் தேர்ந்தெடுக்க துணிவு தேவை. பழைய பாதையைப் புதுப்பிக்க உள்ளுணர்வு தேவை.

பள்ளத்தாக்குகள் நிரப்பப்படும், மலை, குன்று யாவும் தகர்க்கப்படும்: பள்ளத்தாக்குகள் என்பவை என் வாழ்வில் உள்ள குறைவு மனநிலைகள். மலை என்பது என் வாழ்வில் உள்ள மேட்டிமை எண்ணங்கள். பள்ளத்தாக்குகள் நமக்குப் பயம் தருகின்றன. மலை நம் பார்வையை மறைக்கின்றது.

கோணலானவை நேராக்கப்படும். கரடுமுரடானவை சமதளமாக்கப்படும். கோணலானவை என்பவை நமக்கு நாமே நாம் சொல்லும் பொய்கள். இவை, நம் மனவுறுதியைக் குலைக்கின்றன. கரடுமுரடானவை என்பவை நம்மைத் தொற்றிக் கொண்டிருக்கும் பிறழ்வுகள்.

இவற்றை எல்லாம் சரி செய்யும்போது, 'நாம் கடவுள் அருளும் மீட்பைக் காண்கிறோம்.' ஆக, லூக்காவைப் பொருத்தவரையில், 'மீட்பு' என்பது இறப்புக்குப் பின் அல்லது மறுவுலக வாழ்வில் நடக்கும் நிகழ்வு அன்று. மாறாக, இன்றே, இங்கேயே நடக்கக் கூடியது (காண். லூக் 19:9).

ஆக, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை வாழ்வுக்கு, நம்பிக்கையின்மையிலிருந்து நம்பிக்கைக்கு, பிறழ்வுகளிலிருந்து மீட்புக்கு நாம் கடந்து செல்லும் புதிய பாதை இறைவனின் அரும்பெரும் செயலால் சாத்தியமாகிறது. விதை விதைத்தலின் கண்ணீர் மறைந்து, அறுவடையின் மகிழ்ச்சி நம்மைப் பற்றிக்கொள்கிறது.

இன்றைய திருப்பலியின் சபை மன்றாட்டில், 'ஆண்டவரை நோக்கி விரைந்து செல்லும் மக்கள் எதிரே உள்ள தடைகளால் நிறுத்தப்படாமல் இருக்க' செபிக்கின்றோம். ஆண்டவரின் புதிய பாதை நம் வாழ்வியல் அனுபவமாக நாம் செய்ய வேண்டியன எவை? (அ) துன்ப, துயரம் என்னும் பழைய ஆடைய நாம் களைய வேண்டும்ளூ (ஆ) சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்பட வேண்டும்ளூ (இ) அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் இறைவனின் மீட்புச் செயலைக் கண்டுணர வேண்டும்.

இன்று நாம் ஏற்றும் மெழுகுதிரி குறித்துக் காட்டுவது அன்பு. அன்புக்கான சிறந்த வழி பாதை
மாற்றம்!
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை
 
"குடிவெறியினால் மந்தமடைய வேண்டாம்"

நிகழ்வு

முரடர்கள் சிலர் இளைஞன் ஒருவனை ஓர் அறையில் அடைத்து வைத்தனர். அந்த அறையில் ஓர் அழகிய பெண் இருந்தாள். அவளுடைய கையில் அவளது குழந்தை இருந்தது. பக்கத்தில் ஒரு மதுக்குப்பி இருந்தது.

இளைஞனை அறையில் அடைத்துவைத்த முரடர்கள் அவனிடம், "இங்கிருந்து நாங்கள் உன்னை விடுவிக்கவேண்டும் என்றில், இங்குள்ள மதுக்குப்பியிலிருந்து மதுவைப் பருக வேண்டும் அல்லது குழந்தையைச் சுவரில் அடித்துக் கொல்லவேண்டும். அதுவும் இல்லையென்றால், பெண்ணை மானபங்கப்படுத்த வேண்டும். இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை நீ செய்யாவிட்டால், இங்கிருந்து நாங்கள் உன்னை விடுவிக்க முடியாது" கையில் துப்பாக்கியை வைத்து மிரட்டினார்கள்.

இளைஞன் யோசிக்கத் தொடங்கினான். "இருப்பதிலேயே மது அருந்துவதுதான், குறைவான பாதிப்பை ஏற்படுத்தும், அதனால் அதைக் குடித்துவிட்டு, இங்கிருந்து வெளியேறிவிடுவோம்" என்று முடிவுசெய்து கொண்டு, அவன் மதுக்குப்பியை எடுத்து, மதுவை அருந்தி முடித்தான். அவன் மதுவை அருந்தியதும், போதை தலைக்கேறியது. அதனால் பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சி செய்தான். அதற்கு அப்பெண்ணின் கையில் இருந்த குழந்தை தடையாய் இருந்தது. அதை அவன் சுவரில் தூக்கி அடித்துக்கொன்றான். பின்னர் அவன் அந்தப் பெண்ணையும் மானபங்கப்படுத்தினான். எல்லாம் நடந்தேறிய பின், "ஒரு தவற்றிற்கு மூன்று தவறுகளைச் செய்துவிட்ட பெரும் பாவியாகிவிட்டேனே நான்!" என்று சொல்லி மனம் நொந்து அழுதான் அவன்.

மது ஒருவரைத் தொடர்ந்து தவறு செய்யத்தூண்டும் என்பதற்காகச் சொல்லப்படும் இந்த நிகழ்வு நமது கவனத்திற்குரியது. திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறன இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நம் உள்ளம் குடிவெறி, இவ்வுலக வாழ்வுக்குரிய கவலை போற்றவற்றால் மந்தமடையாதவாறு பார்த்துக் கொள்ளவும், வரப்போகிற நீதியின் அரசருக்காக நம்மையே தயாரிக்கவும் அழைப்புத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

குடிவெறியினால் மந்தமடைந்து கிடைக்கும் சமூகம்

ஒருகாலத்தில் பண்டிகைகள், விழாக்கள் என்று எப்போதாவது குடித்துக் கொண்டிருந்தவர்களை, வயது வித்தியாசமில்லாமல் எப்போதும் குடிக்க வைத்த பெருமை இந்த அரசுகளைச் சாரும். இதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது. மது விற்பனையினால் நாட்டிற்கு வருமானம் சேர்கின்றது என்று சொல்லும் இந்த அரசுகள், அது வருமானம் அல்ல, நாட்டின் அவமானம் என்பதை உணரவேண்டும்.

மது அல்லது குடியினால் வரும் தீமைகளைக் குறித்துத் தொடக்கம் முதலே பலரும் பல்வேறு கருத்துக்களைக் கூறியிருக்கின்றார்கள். "மது அருந்துதல் ஒரு மனிதனின் பலவீனமாகக் கருதப்படும். அத்தகைய பலவீனத்தைக் கொண்ட மன்னன் எளிதில் வீழ்த்தப்படுவான்" என்கிறார் திருவள்ளுவர். "கடலில் மூழ்கியவர்களை விட மதுவில் மூழ்கியவர்கள் மிகுதி" என்கிறார் தாமஸ் ஃபுல்லர். "சாத்தானால் வீழ்த்த முடியாத ஒருவனை மது வீழ்த்திவிடும்" என்கிறார் லியோ டால்ஸ்டாய். இப்படிப் பலரும் மதுவினால் ஏற்படும் தீமைகளைப் பற்றிச் சொல்லியிருந்தாலும், நாளுக்கு நாள் மதுவிற்கு அடிமையாகி வாழ்வைச் சீரழிப்போரின் எண்ணிக்கை மிகுதியாவதுதான் வேதனை கலந்த உண்மை.

இத்தகைய பின்னணியில் இயேசு இன்றைய நற்செய்தியில் சொல்லக்கூடிய, உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தால் மந்தமடையாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள் என்று சொல்லக்கூடிய வார்த்தைகள் நமது கவனத்திற்குரியவை. ஆண்டவர் இயேசு ஏன் இவ்வாறு சொல்கின்றார் என்று நாம் தொடர்ந்து சிந்திப்போம்.

வரப்போகிறவர் நீதியின் அரசர்

ஒருவேளை நம்முடைய உள்ளம் குடியினாலும் களியாட்டத்தினாலும் மந்தமாகிவிட்டால் நம்மால் வேறு எதைப் பற்றியும் சிந்திக்க முடியாது. அப்பொழுது, ஒரு கண்ணியைப் போன்று வரும் ஆண்டவரின் நாளில் யாவரும் வகையாய்ச் சிக்கிக் கொள்வோம். நோவாவின் காலத்தில் வாழ்ந்தவர்கள் இப்படித்தான் உலகப் போக்கிலான வாழ்க்கை வாழ்ந்ததால் வெள்ளப் பெருகிக்கினால் அழிந்தார்கள். ஆகவே, நம்முடைய உள்ளம் குடிவெறியினால் மந்தமடையாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.

இயேசு இவ்வாறு சொல்வதற்கு மற்றொரு காரணம், ஆண்டவரின் நாளை அடுத்து வருகின்ற மானிடமகன் நீதியின் அரசராய், நேர்மையின் அரசராய் இருப்பார் என்பார் என்பதால்தான். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், "அந்நாள்களில் நான் தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையும் நிலைநாட்டுவார்" என்கிறார் ஆண்டவர். இறைவாக்கினர் எரேமியா நூலில் இடம்பெறும் இவ்வார்த்தைகள் இயேசுவின் முதலாம் வருகையை விடவும், அவரது இரண்டாம் வருகைக்கே மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்று திருவிவிலிய அறிஞர்கள் கூறுவார்கள். ஆதலால், இயேசு கிறிஸ்து நீதியின் அரசராய், நேர்மையின் அரசராய் வருகின்றபோது, நமது உள்ளத்தைக் குடிவேறியினாலும் களியாட்டத்தினாலும் மந்தமடையாதவாறு பார்த்துக் கொள்வதே நல்லது.

மன்றாடினால் மகிழ்வு வரும்

இயேசு கிறிஸ்து நீதியின் அரசராய், நேர்மையின் அரசராய் வருகின்றார் எனில், அவர்முன் குற்றமற்றவர்களாய் நாம் இருக்கவேண்டும்; அவருக்கு உகந்தவர்களாய் நாம் வாழவேண்டும். இது குறித்துத் தெசலோனிக்கர்களிடம் பேசுகின்ற புனித பவுல், "கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழும் முறையை எங்களிடம் கற்றுக் கொண்டீர்கள்" என்கின்றார். அப்படியெனில், பவுலும் அவரோடு இருந்தவர்களும் கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழ்வது பற்றித் தெசலோனிக்கர்களிடம் போதித்து மட்டுமல்லாமல், அதை அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள் என்றுதான் சொல்லவேண்டும். இவ்வாறு பவுலும், அவரோடு இருந்தவர்களும் தங்களுடைய வார்த்தையால் மட்டுமல்ல, தங்களுடைய செயலாலும் தெசலோனிக்க மக்களுக்குக் கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழ்வது பற்றிக் கற்றுக் கொடுத்தது, நம்மையும் அவ்வாறு வாழ அழைக்கின்றது.

நற்செய்தியில் இயேசு நீதியின் அரசருடைய வருகையை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான ஒருவழியைச் சொல்கின்றார். அதுதான் விழிப்பாய் இருந்து மன்றாடுவது. இறைவனிடம் நாம் மன்றாடிவிடலாம்; ஆனால், விழிப்பாய் இருந்து மன்றாடுவது எப்படி என்ற கேள்வி நமக்கு எழும். விழிப்பாய் இருந்து மன்றாடுவது எனில், ஒருவர் எப்போதும் தன்னை இறைவேண்டலுக்கு, இறைவனைப் பற்றிய சிந்தனைக்கு உட்படுத்திக்கொள்வது என்று சொல்லலாம். எப்பொழுது ஒருவர் இறைச் சிந்தனைக்குத் தன்னை உட்படுத்திக் கொள்கிறாரோ, அப்பொழுது அவர் குடிவெறிக்கும் களியாட்டத்திற்கும், இன்ன பிற தீமைகளுக்கும் தன்னை உட்படுத்தி, தனது உள்ளத்தை மந்தமடைய விடமாட்டார். அதனால் அவர் நீதியின் அரசர் வருகின்றபோது, அவரை தூய்மையோடு எதிர்கொள்வார் என்பது உறுதி.

எனவே, நாம் இறைச்சிந்தனைக்கும் இறைவேண்டலுக்கும் எப்பொழுதும் நம்மை உட்படுத்தி, கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழ்ந்து, வரப்போகிற நீதியின் அரசரைத் துணிவோடு எதிர்கொள்வோம்.

சிந்தனை

"மது ஆசையைத் தூண்டுகிறது, செயல்பாட்டைத் துண்டிக்கிறது" என்பார் ஷேக்ஸ்பியர். ஆகையால், நமது ஆசையைத் தூண்டி, செயல்பாட்டைத் துண்டிக்கின்ற குடிவெறிக்கும் இவ்வுலக வாழ்விற்குரிய கவலைக்கும் அடிமையாகிவிடாமல், நீதியின் அரசராம் ஆண்டவர் இயேசுவில் ஆழமான பற்று வைத்து, அவருக்கு உகந்தவர்களாய் வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மறையுரைச் சிந்தனை: அருள்பணி மரிய அந்தோணி பாளையங்கோட்டை
இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
 
மீட்பு நெருங்கி வருகிறது.

நடுக்கடலில் பாய்மரக் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்த போது, திடீர் என்று சூறாவளி... கப்பல் திக்குமுக்காடுகிறது .... திசைமாறுகிறது. இறுதியில் ஒரு பாறை மீது மோதி நொறுங்குகிறது. நம்பிக்கையுள்ள, விழிப்புள்ள ஒருவன் மட்டும் தப்பிப் பிழைக்கிறான். ஒரு மரத்துண்டைப் பற்றிக் கொண்டு நீந்திக் கரையேறுகிறான். ஒரு சிறிய தீவு அவன் கண்ணில் பட்டது. பரவாயில்லை கடவுள் காப்பாத்திட்டார் என்று சந்தோஷப்பட்டான். அவன் கரையேறிய தீவில் எந்த மனிதனும் இல்லை . கிடைத்த இலை தழைகளைக் கொண்டு ஒரு குடிசையை உருவாக்கினான். அங்கே கிடைத்ததை உண்டான். சொந்த இடத்தை அடைவோம் என்ற நம்பிக்கை அவனில் நிலையாக இருந்தது. ஒரு நாள் வெளியே சென்றபோது அந்த குடிசை தீப்பற்றி எரிந்தது. மூங்கில்களின் உராய்வினால் ஏற்பட்ட தீயால் குடிசை சாம்பலானது. சற்று நேரத்தில் நாலைந்து பேர் அங்கே வந்தார்கள். நாங்கள் மீன் பிடிக்க, படகிலே இந்த பக்கமா வந்துகிட்டிருந்தோம். இந்த தீவிலே புகை தெரிந்தது. யாரோ இருக்காங்க, பார்க்கலாம்னு வந்தோம். அப்போது அவன், எனது நம்பிக்கையும், விழிப்பும் வீண் போகவில்லை என்று கடவுளுக்கு நன்றி கூறினான்.

பல்லாண்டு காலமாகக் காத்திருந்த இஸ்ரயேல் மக்களின் கனவு நனவாக தாவீதின் தளிராக இயேசு இம்மண்ணில் உதயமானார். காத்திருத்தல் என்பது கனவு கண்டு கொண்டிருப்பது அல்ல. நம்பிக்கையோடு நமது கடமைகளை, விழிப்போடு நிறைவேற்றிக் கொண்டிருப்பதாகும். மரத்தின் ஆணிவேர் உறுதியாக இருந்தால், அந்த மரம், பல ஆண்டுகள் நிலைத்திருக்கும். எந்த அளவுக்கு நம்பிக்கையோடும், விழிப்போடும், காத்திருக்கிறோமோ, அந்த அளவுக்கு மனுமகனோடு இறையரசில் சேர தகுதி பெறுவோம். நாளும் நேரமும் நமக்குத் தெரியாது (மத். 24:36 - 44). ஆனால் நம்பிக்கையோடு இருப்போர் வரவேற்கப்படும் தகுதியைப் பெறுவார்கள். மனுமகனைத் தரிசிப்பார்கள் (மத். 25:10).

முதல் வாசகத்தில் யூதா விடுதலைப் பெறும், எருசலேம் விடுதலையோடும், பாதுகாப்போடும் வாழும் (எரே. 33:16) என்ற வார்த்தைகள் நம்பிக்கை கொடுத்து, வாழ்வு கொடுத்தது, விடுதலை தந்தது. நம் ஆண்டவர் இயேசு நம் தந்தையாம் கடவுளின் முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக (1 தெச. 3:13) என்று புனித பவுல் வாழ்த்துகிறார். நம்பிக்கையோடும், விழிப்போடும் நிலைத்திருப்பவர்களுக்கு மீட்பு நெருங்கி வருகிறது. இதற்கு இயேசு கூறும் வழிமுறை , உங்கள் உள்ளம் குடிவெறியிலும் களியாட்டத்திலும் மந்தமடையாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள் (லூக். 21:34-35) என்பதே.

ஒரு முனிவர் தனது சீடனிடம் கடவுளின் ஞானம் உன்னிலே மாற்றத்தை தருகிறதா...? என்றார். சீடர், நான் கடவுளைப்போல மாறவில்லை என்றார். முனிவர், நீ ஒரு புனிதனாக மாறியிருக்கிறாயா...? என்று கேட்டார். சீடன், இல்லை , நம்பிக்கையுள்ளவனாக மாற முயற்சி செய்துக் கொண்டிருக்கிறேன் என்றான். முனிவர், பின் எதற்கு இருக்கிறாய் இங்கு ? சீடன், நான் விழிப்புடன் வாழக் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்றான். விழிப்பு என்பது விழிகளைத் திறந்து வைத்திருப்பது மட்டுமல்ல. ஒரு மனிதனுடைய எண்ணங்கள், சிந்தனைகள், செயல்பாடுகள் எப்போதும் விழிப்போடு இருக்க வேண்டும் என்பதே முக்கியம். இன்றையச் சூழலில் மனிதன் சுய சிந்தனையை இழந்து, தீமையைக் கூட நன்மையானது என்று நினைக்கிறான். அவனின் ஆன்மீக வாழ்வும், தேக்க நிலையாகவே உள்ளது. பாவம் பற்றிய பயமும், மனசாட்சியைப் பற்றிய அக்கறையும் இருப்பதில்லை . இப்படிப்பட்ட சூழலில் வாழும் மனிதனை, விழிப்போடு வாழ இன்றைய நாள் வழிபாடு அழைக்கின்றது.

கிறிஸ்து எங்கோ இருக்கிறார் என்று எண்ணி அவரது வருகைக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக நமக்குள்ளே, நம்மோடு நம்மில் ஒருவராக இருக்கிறார் என்பதை உணர்வோம். ஆனால் நாம் தேடும் கிறிஸ்து நம்மில் குடிகொள்ளாமல் போகத் தடையாக இருப்பது குடிவெறி, களியாட்டம். இவைகள் நமக்குள் இருக்கும் கிறிஸ்துவையும், அவரின் சாயலையும் சிதைத்துவிடுகிறது.

சிந்தனைக்கு
வேலைக்காரச் சிறுவனிடம் ஆற்றுக்குச் சென்று இந்தப் பானையில் தண்ணீர் கொண்டு வா , தவறுதலாகக் கீழே போட்டு உடைத்தால், கடுந்தண்டனை கிடைக்கும் என்று சொல்லி அவன் தலையில் ஓங்கி கொட்டினார் முல்லா. இதைக் கண்ட நண்பர் பானையை உடைக்கும் முன்பே ஏன் அடித்தீர் என்று கேட்க பானை உடைந்தப் பின் தண்டித்து என்ன பயன்? பானையும் உடைந்து, தண்ணீரும் வீணாகிப் போன பின், தண்டித்து ஒரு பயனும் இல்லை. முன்னரே தண்டித்தால், பயத்துடன், கவனத்துடன், விழிப்பாக இருந்து பானையை உடைக்காமல் தண்ணீரோடு கொண்டு வந்து சேர்ப்பான் என்றார் முல்லா.
அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
 
கிறிஸ்து பிறக்கும்போது அவர் நம்மிடம் என்ன கேட்பார்?
இது திருவருகைக் காலம்!
நம்மைத் தேடி வரும் இயேசு நமக்கு அருளைத் தருவாரா?
பொருளைத் தருவாரா?
உடல் நலத்தைத் தருவாரா?
உள்ள அமைதியைத் தருவாரா?
உண்ண உணவைத் தருவாரா?
உடுக்க உடையைத் தருவாரா?
இருக்க இடத்தைத் தருவாரா?
இறைவாக்கினர் எரேமியா போல் நீதியைத் தருவாரா?

அவர் கேட்கப்போகும் கேள்விக்கு நாம் சரியான பதிலைச் சொன்னால் நாம் கேட்பதை அவர் நமக்குத் தருவார்!
பதில்களிலே இரண்டு வகையான பதில்கள் உள்ளன! ஒன்று சரியான பதில் ; மற்றொன்று தவறான பதில்!
ஓர் ஆசிரியர் மாணவனைப் பார்த்து, எத்தனைக் கடவுள் இருக்கின்றார்? என்றார். அந்த மாணவனோ, ஒரே கடவுள் என்றான்.
அவர் எங்கே இருக்கின்றார்? என்றார் ஆசிரியர். மாணவனோ, எங்கும் இருக்கின்றார் என்றான். இன்னொரு கடவுள் இருக்கமுடியாதா? என்றார் ஆசிரியர்.

ஒரு கடவுள்தான் எல்லா இடங்களிலும் இருக்கின்றாரே! இரண்டாவது கடவுள் இருக்க எங்கே இடமிருக்கும்? என அந்த மாணவன் கேட்டான்! ஒரு கேள்விக்கு ஒரு கேள்வியால் அந்த மாணவன் பதில் சொன்னான்.
இது சரியான பதில்!

தவறான பதிலுக்கு ஓர் உதாரணம்!
ஓர் ஆசிரியை!
அவருக்குக் கோபம் வந்துவிட்டது. அவர் ஒரு மாணவனைப் பார்த்து, நீ தேறவே மாட்டே என்றார். உங்க கிளாசிலே இருக்கும் வரை நான் எப்படித் தேறுவேன்? என்றான் மாணவன். இது தவறான பதில்!
நாம் இயேசுவுக்குத் தவறான பதிலை அல்ல சரியான பதிலைத் தந்து நாம் கேட்கும் வரங்களை இயேசுவிடமிருந்து பெற்று பெருவாழ்வு வாழலாம்.

கிறிஸ்துமஸ் நாளன்று நம்மைப் பார்த்து இயேசு என்ன கேள்வி கேட்பார்?
இன்று குழந்தை இயேசுவாகிய என்னைத் தொட்டுத் தொட்டு கும்பிடுகின்றீர்களே! மண்ணுக்குள் நான் இருப்பதாக நம்பி தொட்டுக்கும்பிடும் நீங்கள், மண்ணைவிட உயர்ந்த கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட மனிதர்களுக்குள் நான் இருக்கின்றேன் என்பதை நம்பி திருவருகைக் காலத்தில் அவர்களைத் தொட்டு வணங்கினீர்களா ? என்று கேட்பார்.

பொழுது விடிந்ததும் மனைவி கணவரே கண்கண்ட தெய்வம் எனச் சொல்லி அவரைத் தொட்டு வணங்கவேண்டும். கணவரோ, மனைவி கொடுக்கின்ற உணவை உண்டு, அவருடைய திருக் கைகளைப் பற்றிப் பிடித்துக்கொண்டு இந்தக் கைகளால்தானே இப்படிப்பட்ட சுவையான உணவைப் படைத்தாய் எனச் சொல்லி அவரது கைகளை முத்தமிட வேண்டும். பேரனும், பேத்தியும், போட்டி போட்டுக்கொண்டு, தாத்தா பாட்டியின் கண்ணங்களிலே முத்தமிட வேண்டும்.

இன்றைய இரண்டாவது வாசகத்தில் புனித பவுலடிகளார் கூறுவது போல அன்பு நமது இல்லங்களையும், உள்ளங்களையும் ஆட்சி செலுத்தவேண்டும். நாம் ஒருவரையொருவர் மதிப்போடும், மரியாதையோடும் நடத்த வேண்டும். மனிதனை மனிதனாக மதிக்கவேண்டும். இந்தத் திருவருகைக் காலத்தில் மனிதநேயம் நமக்குள் வளரவேண்டும்.

அண்மையிலே புதுக்கவிதை ஒன்றைப் படித்தேன். ரோஜா சொல்கின்றது! என் செடியிலிருந்த முள்கள் என்னைக் காப்பாற்றும் என நினைத்தேன்! அவைகளால் என்னைக் காப்பாற்ற முடியவில்லை!
ஆகவே நான் முள்ளாக மாறிவிட்டேன்.

இந்த உலகில் எந்த ரோஜாவும் முள்ளாக மாறக்கூடாது! ஒருவரையொருவர் மதிப்போடும், மரியாதையோடும் நடத்தி, பெற்றோரும், குழந்தைகளும், தலைவர்களும், சீடர்களும், நீங்களும், நானும் ஒருவரையொருவர் போட்டிப் போட்டுக்கொண்டு அன்பு செய்வோம். இன்றைய நற்செய்தி கூறுவதுபோல அன்பு செய்வதில் எல்லாரும் விழிப்பாயிருப்போம்! அப்போது நாம் தேடும் புதுவாழ்வை, புத்துயிரை பிறக்கப் போகும் குழந்தை இயேசு நமக்களித்து நம்மை வாழ்வாங்கு வாழவைப்பார்.
மேலும் அறிவோம் :

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் (குறள் : 91).

பொருள் :

அன்பு கலந்து, வஞ்சகம் எதுவுமின்றி மெய்ப்பொருளாம் அறம் உணர்ந்த பெருமக்கள் வாயிலிருந்து வருவதே இனிய சொல் ஆகும்.
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
 
இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய முக்காலங்களைப் பற்றி விளக்கியபின் தமிழ் ஆசிரியர் மாணவர்களிடம், "நாளை மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள். இது என்ன காலம்?" என்று கேட்டதற்கு மாணவர்கள், "சார்! இது எங்கள் போதாத காலம்" என்று பதிலுரைத்தனர். உண்மையில் நம்மில் பலருக்குப் போதாத காலம். தனி வாழ்விலும், குடும்ப வாழ்விலும், பொது வாழ்விலும் பல்வேறு பிரச்சினைகள் நம்மைக் கசக்கிப் பிழிந்தெடுக்கின்றன. நிம்மதியாக இருப்பவர் இரண்டே பேர், "ஒருவர் இன்னும் பிறக்கவில்லை ; மற்றவர் ஏற்கெனவே இறந்துவிட்டார். " உயிருடன் இருப்பவர்களுக்கெல்லாம் போதாத காலம். மனிதர் மட்டுமல்ல, இயற்கை அனைத்தும் பேறுகால வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறது (உரோ 8:22-23).

இப்போதாத காலத்தில் திருச்சபை இன்று திருவருகைக் காலத்தைத் தொடங்குகிறது. திருவருகைக் காலம் எதிர்பார்ப்பின் காலம், நம்பிக்கையின் காலம், திருவழிபாட்டு ஆண்டின் தொடக்கக் காலம். கிறிஸ்துவின் பிறப்புப் பெருவிழாவிற்காக நம்மைத் தயாரிக்கும் காலம்.

அன்று இஸ்ரயேல் மக்கள் கிறிஸ்துவின் முதல் வருகைக்காக வழிமேல் விழிவைத்து காத்துக் கொண்டிருந்தனர். மெசியா நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார் என்று ஏங்கினர் (முதல் வாசகம்). தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கினர் (இரண்டாம் வாசகம்).

உலக நாடுகளைச் சமாதானத்தில் ஒன்று சேர்க்க கிறிஸ்து வந்து, தமது சாவினாலும் உயிர்ப்பினாலும் வான்வீட்டின் கதவுகளத் திறந்து விட்டார். அவரது இறுதி வருகையின்போது நமக்கு நிறைவான மீட்பை அளிப்பார். ஆனால், நிகழ்காலத்தில் அருள்வாக்கு அருள் அடையாளங்கள்.

அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள் ஆகியவற்றின் வாயிலாக அவர் வந்து கொண்டு இருக்கிறார்.

ஆடி மாதத்தில் ஏன் பலத்த காற்று வீசுகிறது? புதிதாக மொழி செய்த தம்பதியர்களை ஆடி மாதத்தில் பிரித்து விடுகின்றனர். இவ்வாறு பிரிக்கப்பட்டவர்கள் ஒருவர் மற்றவரை நினைத்து விடுகின்ற ஏக்கப் பெரு மூச்சு பலத்த காற்றாக வீசுகிறதாம்! அவ்வாறே, மண மகனாம் கிறிஸ்துவைப் பிரிந்த மணமகளாம் திருச்சபையும் அவரது இரண்டாவது வருகையை நினைத்து ஏக்கப் பெரூமூச்சு விடுகிறது. "மாரனாத்தா, ஆண்டவரே வருக" (1 கொரி 16:22): "ஆண்டவராகிய இயேசுவே வாரும்" (தி வெ 22:20) என்று திருச்சபை இயேசு கிறிஸ்துவைக் கூவி அழைக்கிறது. "எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையை மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கின்றோம்" என்று திருவழிபாட்டில் திருச்சபை உருக்கமாக மன்றாடுகிறது.

இயேசுவின் இரண்டாம் வருகை எப்போது நிகழும்? அந்த நாளும் வேளையும் எவருக்கும் தெரியாது (மத் 24:36), காலங்களையும் நேரங்களையும் அறிவது நமக்கு உரியது அல்ல (திப 1:7), இறுதி நாள்களில் இயற்கையில் பல்வேறு குழப்பங்களும் கொந்தளிப்பும் நிகழும் என்பதை முன்னறிவித்து, எப்போதும் விழிப்பாக இருந்து மன்றாடும்படி இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து அறிவுறுத்துகிறார். நாம் தூங்கக் கூடாது; நமக்கு விழிப்புணர்வு தேவை.

ஒரு மாணவன் தேர்வில் தூங்கிக் கொண்டிருந்தான். ஏன் அவன் தூங்குகிறான்? என்று அவனைக் கேட்டதற்கு, "தேர்வில் கேள்விகளுக்குப் பதில் தெரியவில்லை என்றால் முழிச்சிக்கிட்டு இருக்காதே" என்று அவர் அப்பா சொன்னாராம்.

வாழ்க்கைப் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாதவர்கள் அவற்றிலிருந்து தப்பி ஓடுகின்றனர். குடிவெறியிலும் களியாட்டத்திலும் ஈடுபடுகின்றனர், குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவர் திருப்பலியில் "அல்லேலூயா" என்று பாடுவதற்குப் பதிலாக, "கள்ளே லூயா, கள்ளேலூயா கள்ளேலூயா. பத்து ரூபாய்க்குக் கள் குடித்தேன். போதை வரவில்லை . மேலும் பத்து ரூபாய்க்குக் கள் குடி என்கிறார் ஆண்டவர்" என்று பாடினாராம்.

ஒரு பாம்பு சிறிது நேரத்திற்கு முன் ஒரு தவளையைப் பிடித்து வாயில் வைத்துக் கொண்டிருக்கிறது. அத்தவளையோ சற்று நேரத்திற்குமுன் ஒரு வண்டைப் பிடித்து தனது வாயில் வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வண்டோ சற்று நேரத்திற்கு முன் ஒரு பூவிலிருந்து சிறிது தேனை உறிஞ்சி வாயில் வைத்துக் கொண்டிருக்கிறது. அத்தவளை தனக்கு வரப்போகிற ஆபத்தை உணராது தனது வாயில் இருக்கும் வண்டைச் சுவைத்து மெய் மறந்த நிலையில் உள்ளது. அவ்வாறே, நாமும் நமக்கு வரவிருக்கிற பேரழிவை உணராது இவ்வுலக இன்பங்களைச் சுவைத்து நினைவிழந்த நிலையில் இருக்கிறோம். தொலைநோக்குடன் வாழ வேண்டியவர்கள் தொலைக் காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்து நமது முகவரியைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். இவ்வுலக இன்பங்களைத் துய்ப்போர் அவற்றிலேயே மூழ்கி விடாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறார் திருத்தூதர் பவுல் (1 கொரி 7:29-30).

"நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிட மகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும், எப்போதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்" (லூக் 21:36) என்று இன்றைய நற்செய்தியில் அறிவுறுத்துகிறார் நம் ஆண்டவர். நாம் செபிக்க வேண்டும், செபத்திற்கும் வாழ்வுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நாம் எப்படி செபிக்கின்றோமோ அப்படியே வாழ்கிறோம். நாம் எப்படி வாழ்கின்றோமோ அப்படியே செபிக்கின்றோம். நன்றாக செபிக்கவில்லை என்றால், நாம் நன்றாக வாழவில்லை. நன்றாக வாழவில்லை என்றால் நாம் நன்றாகச் செபிக்கவில்லை.

ஒரு மருத்துவர் ஒரு நோயாளியை ஆறாவது படுக்கையிலிருந்து நூறாவது படுக்கைக்கு மாற்றினார். ஏன்? என்று கேட்டதற்கு, "ஆறிலும் சாவு, நூறிலும் சாவு" என்றார். ஆம், நாம் எப்போது சாவோம் என்பது நமக்குத் தெரியாது. எனவே நாம் எப்போதும் விழிப்பாக இருந்து செபிப்போம்.

ஆபத்து வருமுன் அதைத் தடுத்து நிறுத்தாதவருடைய வாழ்வு நெருப்பு முன் வைக்கோல் போல் எரிந்து சாம்பலாகவிடும் என்று அறிவுறுத்துகிறார் வள்ளுவர்.

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தாறு பேலக் கெடும் (குறள் 435)

பசித்திரு! தனித்திரு! விழித்திரு! செபித்திரு! இதுவே இத்திருவருகைக் காலம் முழுவதும் நம்மை நெறிப்படுத்தும் தாரக மந்திரமாக அமையட்டும்.

தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
 
காத்திரு

"சித்தார்த்தா" - ஆங்கில நாவல் இது. அதில் இப்படி ஒரு காட்சி. சித்தார்த்தா என்ற அந்த இளைஞன் ஒருத்தியைக் காதலிக்கிறான். அவள் எங்கே சென்றாலும் பின்னாலேயே சுற்றுகிறான். திடீரென்று ஒருநாள் தன்னைச் சுற்றித் திரியும் அவனைப் பார்த்து அவள் கேட்கிறாள்: "என்னைக் காதலிக்க உனக்கு என்ன அருகதை உண்டு?" ஒருகணம் அதிர்கிறான். "என்ன கேள்வி இது? என்றாலும் இதோ பதில்" என்று அவளைக் காதலிக்கத் தனக்கு உள்ள தகுதியைப் பட்டியலிடுகிறான்

. 1. என்னால் உன்னை நேசிக்க முடியும். I can love you. 2. என்னால் உன்னை நினைக்க முடியும். I can think of you,
3. எல்லாவற்றிற்கும் மேலாக என்னால் உனக்காகக் காத்திருக்க முடியும். Above all I can wait for you.
இறைவனை அன்பு செய்கிறேன் என்பதற்கான அடையாளங்களில் ஒன்று அவனுக்காகக் காத்திருத்தல். அன்பு இல்லையென்றால் காத்திருத்தல் எரிச்சலாக இருக்கும். அன்புடன் என்றால் அதில் ஒரு 'த்ரில்' இருக்கும். காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு. காக்க வைப்பதில் சுகம் உண்டு'.

நம் வாழ்வில் பெரும்பகுதி காத்திருக்கிறோம் - பயணத்தில் பஸ்ஸுக்காக, படுக்கையில் உறக்கத்துக்காக, வாசலில் நண்பனுக்காக, வரிசையில் (Q) திரைப்பட நுழைவுச் சீட்டுக்காக... இப்படி ஏதோ ஒன்றுக்காக, யாரோ ஒருவருக்காக.

ஆனால் இறைவனுக்காக எந்த அளவு, எவ்வளவு நேரம் காத்திருக்கிறோம்?

"ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப் போவதில்லை" என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்த (லூக்.2:26),

சிமியோன் எப்படியெல்லாம் இஸ்ராயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலுக்காகக் காத்திருந்தார்! "உமது மீட்பை என் கண்கள் கண்டு கொண்டன" என்ற அவரது உற்சாக வார்த்தைகளில் எத்துணை மகிழ்ச்சி, மன நிறைவு! மீட்பர் அரசியல் தலைவன் அல்ல துன்புறும் ஊழியன் என்ற உண்மையின் வெளிப்பாடு அல்லவா அன்றே அவர் கண்டது!
அன்னை மரியா எப்படியெல்லாம் காத்திருந்தாள்?

- மனிதர் அவளுக்கு வழங்கும் அடை மொழிகள் எத்தனை எத்தனை! விண்ணகத்தின் வாயிலே, விடியற்கால விண்மீனே, நீதியின் கண்ணாடியே, மறைபொருளின் ரோஜா மலரே இப்படியாக.
- கடவுள், தூதன் கபிரியேல் வழியாக வழங்கிய அடைமொழி அருள்மிகப் பெற்றவரே, இறையாசி நிறைந்தவரே என்பது.
- மரியா தனக்குத் தானே வழங்கிக் கொண்ட அடைமொழி: 'இதோ ஆண்டவருடைய அடிமை .
அடிமை என்பவன் யார்?
- தலைவனுக்காகக் காத்திருப்பவன். - தலைவனுக்குத் தன்னையே அர்ப்பணித்தவன். - தலைவனுக்கு அனைத்து வகையிலும், பணிவிடை புரிபவன் - தலைவனுக்குக்காகத் தன்னையே இழப்பவன்.

அடிமை என்ற சொல்லில் காத்திருத்தல் மட்டுமல்ல வெறுமையாக்குதலைப் பார்க்கிறோம்.

மனிதனோடு இணைய இறைவன் தன்னையே வெறுமையாக்கினார். (பிலிப்.2:7) இறைவனோடு இணைய மனிதன் தன்னையே வெறுமையாக்க வேண்டும். வெறுமையாக்குவது இறைவன் தன் அருளை, மீட்பை, நிறைவைப் பெற மிகவும் இன்றியமையாதது.

"உன் பாத்திரம் களிமண்ணால் நிறைந்திருந்தால் இறைவன் மாற்றும் பால் அதில் விழும் போது தெறித்துச் சிதறும். எவ்வளவுக்கு எவ்வளவு அது காலியாக, வெறுமையாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு இறைவன் ஊற்றும் பாலால் நிரம்பும்" என்ற சிலுவை அருளப்பரின் கூற்று திருவருகைக்காலச் சிந்தனைக்கு ஏற்றது.

அயர்லாந்து நாட்டில் ஒரு கிறிஸ்துமஸ் பழக்கம் உண்டு. கிறிஸ்து பிறப்பதற்கு முன்னிரவு வீட்டில் உள்ள கதவுகளையெல்லாம் திறந்து வைப்பார்கள். முன் கதவுக்கருகில் ஒரு மெழுகுதிரியை ஏற்றி வைப்பார்கள். பெத்லகேமில் அன்று இரவு மரியாவும் சூசையும் வீடுதேடி அலைந்ததன் நினைவாக அவர்களை வரவேற்க ஆயத்தமாக இருப்பது போல இப்பழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
திருவருகைக் காலத்தில் மீட்பரின் வருகைக்காக நமது இதயக் கதவு திறந்திருக்கிறதா? அருள்வாழ்வு என்னும் விளக்கு அங்கு ஒளிர்கிறதா? "இதோ நான் கதவருகில் நின்று தட்டிக் கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால் நான் உள்ளே சென்று அவர்களோடு உணவருந்துவேன். அவர்களும் என்னோடு உணவருந்துவார்கள்" (தி.வெ.3:20) என்கிறார் ஆண்டவர்.
வர இருப்பவர் எரேமியா பார்வையில் நீதியின் தளிர். (எரே.33:15)
எசாயா பார்வையில் அமைதியின் ஊற்று. (எசா.9:6)

அந்த நீதியின் தளிர் செழித்து வளர, அந்த அமைதியின் ஊற்று சுரந்து பாய நம் வாழ்வில் "ஆண்டவர் அருளும் மீட்புக்காக அமைதியுடன் காத்திருப்பதே நலம்". (புலம்பல் 3:26)

"கலைமானைக் கண்ணியில் சிக்க வைத்துப் பிடிக்க முடியாது. ஏனெனில் அதற்குக் கூர்மையான பார்வை உண்டு. ஒரு பறவை விழிப்பாய் இருந்தால் வெகு எளிதில் வலையில் சிக்காமல் தப்பித்துக் கொள்ள முடியும். இவ்வாறு மிருகங்களெல்லாம் தங்களையே காத்துக் கொள்ள விழிப்பாய் இருக்கின்றபோது நீ மட்டும் ஏன் விழிப்புடன் இருப்பதில்லை ?" - புனித பசிலியார்.
 திருவுரைத் தேனடை
அருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
 
 
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
 
 
மறையுரை  அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
திருவருகைக் காலம்
இரண்டாம் ஞாயிறு
முதல் வாசகம்
மு.வா : பாரூ: 5: 1-9
ப.பா: திபா 126: 1-2. 2-3. 4-5. 6
இ.வா: பிலி: 1: 4-6, 8-11
ந. வா : லூக்: 3: 1-6

"ஆண்டவருக்காக நம் வழியை ஆயத்தப்படுத்த தயாரா!"

ஒரு ஊரில் களப்பணி செய்வதற்காக சமூகப் பணி செய்யக்கூடிய நபர் சென்றார். அவர் சமூகப் பணி செய்து கொண்டிருக்கும் பொழுது அவ்வூரில் பூட்டிக் கிடந்த வீட்டை வேகமாகத் திறந்து கூட்டிக் கொண்டிருந்தார். ஆனால் அந்த நபருக்கு பிரமாண்டமான வீடு தனியாக இருக்கின்றது. அந்த நபரிடம் வசதியான வீடு ஒன்று இருக்கின்றது. ஆனால் பூட்டிக் கிடந்த வீட்டைச் சுத்தம் செய்ததன் நோக்கம் அரசு மானியத்தில் வீடு கட்டி அந்த வீட்டை வாடகைக்கு விட வேண்டும் என்பதாகும் .சுத்தம் செய்த நாளில் அதிகாரிகள் வீடு இல்லாதவர்களைப் பார்வையிட வந்தனர். இவ்வாறாக இவ்வுலகம் சார்ந்த பலன்களையும் செல்வங்களையும் பெறுவதற்கு நாம் ஆயத்தப்படுத்தப்படுத்துகின்றோம். ஆனால் நிலையான செல்வமாகிய கடவுளின் மீட்பினைப் பெற ஆயத்தப்படுத்தத் தவறிவிடுகிறோம்.

இந்த நிகழ்வு நமக்குப் பாடமாக இருக்கின்றது. ஆண்டவருடைய வருகைக்காக ஆயத்தப்படுத்தாமல் ஏனோதானோ என்று வாழ்க்கை நடத்தி வருகிறோம். இந்த உலகம் சார்ந்தவற்றிற்கு ஆயத்தப்படுத்துகிறோம். ஆனால் நமக்குப் புது வாழ்வு அளிக்கும் ஆண்டவர் இயேசுவின் வருகைக்காக நம்மை ஆயத்தப்படுத்தத் தவறிவிடுகிறோம்.

நமது வாழ்க்கைப் பயணம் ஆண்டவரை நோக்கிய ஆன்மீகப் பயணம். இப்பயணம் சாலையில் நடப்பது போல வெளிப்புற பயணமல்ல. மாறாக மனதால் செய்யக்கூடிய பயணம். வானை நோக்கிய பயணம். சாதாரணமாகவே நாம் நடக்கும் பாதையில் பல தடைகள் இருக்கும். குண்டும் குழியுமாக பாதைகள் இருக்கும். கற்களும் முற்களும் இருக்கும். தேவையில்லாத அருவருப்பான கழிவுகளும் இருக்கும். ஆயினும் அவற்றையெல்லாம் நாம் கடந்து பயணம் செல்லத்தான் செய்கிறோம். சிலசமயங்களில் நம்மால் முடிந்த அளவு சில காரியங்கள் செய்து சுத்தப்படுத்துகிறோம். சாதாரண பயணத்திற்கே இத்தகைய சிரமம் இருக்கும் போது ஆன்மீகப் பயணப் பாதையைச் சீராக வைக்க வேண்டியது எத்துணை அவசியமாகிறது!

திருவருகைக் காலத்தின் இரண்டாம் விரத்தில் இருக்கும் நமக்கு இன்றைய நற்செய்தியில் மனமாற்றத்திற்கான அழைப்பை திருமுழுக்கு யோவான் வழியாக இறைவன் தருகிறார். வாழ்வின் கரடுமுரடான பாதையை செம்மைப்படுத்த நமக்கு அழைப்பு விடப்படுகிறது.எவ்வாறெல்லாம் நாம் வழியை ஆயத்தம் செய்வது?

1.ஆன்மீகப் பயணத்தில் நமது அசட்டைத்தனம் என்ற பள்ளத்தாக்கை நாம் நிரப்பி இறை ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.இறையச்சத்தில் நாளும் வளர வேண்டும்.

2.மலைபோல் இருக்கும் நமது பாவங்களையும் குற்றங்களையும் மனமாற்றத்துடன் இறைவனிடம் முறையிட்டு அவரது இரக்கத்தை நாட வேண்டும். இத்தகைய செயல்களை தொடர்ந்து செய்யாமல் படிப்படியாகக் குறைக்க வேண்டும்.

3. நம் மனதிலே உள்ள கவலைகள், தேவையற்ற குழப்பங்கள், பிறரைப்பற்றிய தேவைற்ற எண்ணங்கள், பொறாமை, தாழ்வு மனப்பான்மை போன்ற கழிவுகளையும் கற்களையும் முட்களையும் அப்புறப்படுத்த வேண்டும்.

4.இறுதியாக இறைன்பு பிறரன்பு என்பவற்றை நம் இருகண்களாகக் கொண்டு தெளிவான பார்வையுடன் பயணிக்க வேண்டும்.

இப்படிப்பயணிக்கும் போது நமது வாழ்வு செம்மையாக மாறும். நமது ஆன்மீகப்பயணம் சரியான முறையில் இறைவனை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்கும். இறைவனும் நம்மோடு பயணித்து நமக்கு மீட்பு வழங்குவார். அன்புக்குரியவர்களே இறைவனை எதிர்கொள்ள பாதையை ஆயத்தப்படுத்தினால் மட்டும் போதாது. அலங்கரிக்க வேண்டும். நமது மனமாற்றத்தால் வழியை ஆயத்தம் செய்து, நற்செயல்களாலும் அன்பாலும் இறையச்சத்தாலும் அவருக்காகப் பாதையை அலங்கரிப்போம். அது இத்திருவருகைக் காலத்தில் மட்டுமல்ல நம் வாழ்நாள் முழுதும், இறைவனை நாம் சென்றடையும் நாள் வரையும் தொடரட்டும்.

இறைவேண்டல்
இறைவா! உம்மை நோக்கிய எம் ஆன்மீகப்பயணத்தின் பாதையை சிறப்பாக ஆயத்தப்படுத்தவும் அலங்கரிக்கவும் உமது அருளை நிறைவாகப் பொழிந்தருளும். ஆமென்.
 
அருள்பணி: மாணிக்கம் - திருச்சி

 
 
 
 

  
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ