ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

 திருவருகைக்காலம் 2ம் வாரம் - ஞாயிறு

வருடாந்த
ஞாயிறு வாசகம்
    Sermon Fr.Albert
Sr. Gnanaselvi (india)


 திருப்பலி முன்னுரை -
1ம் ஆண்டு

திபா 72: 1-2. 7-8. 12-13. 17 (பல்லவி: 7a)
பல்லவி: ஆண்டவருடைய காலத்தில் நீதி தழைத்தோங்கும்.


நெஞ்சக் குடிலை யேசு பிறக்கும் தொட்டிலாய் மாற்ற வந்திருக்கும் அன்புள்ளங்களே!
மாசு நிறைந்த நம்மை மனசு மாறி மாசற்றவர்களாய் நல்லுறவுடன் வாழ முழு முயற்சி செய்யச் சொல்லி இந்த திருவருகை காலம் இரண்டாம் ஞாயிறு வரவேற்கிறது. தீமையைக் களைய நினைத்தாலும் அவைகளை மீண்டும் மீண்டும் செய்து மனமாற்றமின்றி வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.

திருமுழுக்கு யோவான் பாலை நிலத்தில் தன் பணியைத் தொடங்குகிறார். பாலைவனம் அமைதியும், தனிமையும் நிறைந்த இடம் மனமாற்றத்திற்குரிய இடம். நமக்கும் பரபரப்பான சூழ்நிலையில் இருந்து மனமாற்றம் பெற சற்றே அமைதியும் தனிமையும் தேவை. இதற்கான தொடர் தயாரிப்பு முயற்சியை விளக்குகிறது இன்றைய வாசகங்கள்.

முயற்சி திருவினையாக்கும் என்பது முது மொழி. கொஞ்சம் முயற்சியும் கொஞ்சம் பயிற்சியும் இருந்தாலே பல சாதனைகளை படைக்க முடியும். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் தன் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்காத பல அரிய கண்டுபிடிப்புகளுக்கும் அறிவியல் அதிசயங்களுக்கும் இன்று நாம் சொந்தம் கொண்டாடுகிறோம். இது மனித குலத்தின் தொடர் முயற்சியின் பயனாக நாம் பெற்றுக் கொண்ட கொடையேயாகும்.

ஒவ்வொரு மனிதனும் தான் பெற்ற வெற்றியையும் அதற்க்கான உழைப்பையும் பிறர் வெற்றி பெறுவதற்கு அர்ப்பணித்தால் அதுவே அவன் பெறும் தலைசிறந்த வெற்றியாகும். முயற்சியால் முன்னேறியவர்கள் மற்றவர்க்கு முட்டுகட்டையாய் இராமல் பிறர் முன்னேற்றத்திற்க்காக தங்களைப் பயன்படுத்த வேண்டும். திருமுழுக்கு யோவான் தன்னைத் தாழ்த்தி யேசுவை உயர்த்துகிறார். தன் சீடர்கள் தன்னை விட்டு விட்டு யேசுவை பின் சென்றதைக் கண்டு வருந்தவில்லை. நாமும் முன்னேறுவோம் பிறரையும் முன்னேற்றுவோம்

நாம் முயற்சி செய்யும் போது கடவுள் அருள் கிடைக்கும். மகிழ்வாய் இருக்க வேண்டுமெனில் முயற்சி எடுத்து காரியமற்ற வேண்டும். மன மகிழ்வின் இரகசியம் என்ன விரும்புகிறோமோ அதை செய்வதில் இல்லை. எதைச் செய்ய நேரிடுகிறதோ அதை விரும்புவதில் உள்ளது.

இறைவன் வரும் போது அவர் நம்மை மாசுமருவற்றவர்களாய்க் காண வேண்டுமெனில் நம்மிடம் உள்ள செருக்கு, பொறாமை ஆங்காரம், பேராசை, சுய நலம், தீய சிந்தனை பிறரை தரக்குறைவாக எண்ணும் நினைவுகள் இவைகளை அகற்ற வேண்டும். அப்படி அகற்றும் போது நல்லுறவு உருவாகும.; அதற்கான முழு முயற்சியில் ஈடுபடுவோம்.

உறவில் விரிசல் ஏற்படுவதற்கும், மனதில் குறைகள் ஏற்படுவதற்கும் காரணமான பகைமை உணர்ச்சிகளை களையவும் காழ்ப்புணர்ச்சியை மனதைவிட்டு எடுக்கவும் மிகுந்த முயற்சி தேவை. தனிமை, மனஅமைதி, மனமாற்றம் பெறவேண்டும் என்ற நல் எண்ணம் ஒன்று கூடி மாசற்ற மனசை நமக்குத் தரும்.

மாசற்றவர்களாய் நல்லுறவு கொண்டவர்களாய் வாழ அருள் தரும் திருப்பலி இது. தீயவைச் சார்ந்த அனைத்தையும் விட்டுவிட தொடர் முயற்சி எடுக்க அருள் கேட்டு மன்றாடுவோம். நெஞ்சக் குடிலை இயேசு பிறக்கும் தொட்டிலாய் மாற்றுவோம்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. அர்த்தமுள்ள வகையில் வாழ திருச்சபை வழியாக அழைப்பு விடுக்கும் தேவனே! உம் பிறப்புக்காக தொடர்ந்து தயாரிக்க திருச்சபை வழியாக பணிசெய்யும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரையும் ஆசீர்வதியும். இறைமக்கள் அர்த்தமுள்ள வகையில் இயேசுவின் பிறப்பை சந்திக்க சோர்ந்து விடாமல் தயாரிப்பு பணியில் ஈடுபட அருள் புரிய வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

2. ஆறுதல் கூறுவதையும் கனிமொழி கூறுவதையும் விரும்பும் தேவனே! நாடுகளிடையே உள்ள தலைவர்கள் பாதிக்கப்பட்டு வாழும் எளிய மக்களுக்கு அடிப்படை உரிமைகளை தந்து நிறைவுடன் வாழ வழி காட்ட வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.


3. முயற்சி வெற்றி தரும் என உணர்த்திய தேவனே!
எமது பங்கில் தொடர் முயற்சியாலும் தொடர் தயாரிப்பாலும் உமது பிறப்பை வரவேற்க வழிகாட்டும் எமது பங்குத் தந்தைக்கு உமது ஆசீர் உடனிருந்து வழிகாட்ட அருள் புரிய வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

4. நற்பலனுள்ள வாழ்க்கை வாழ அழைக்கும் தேவனே!
மகிழ்ச்;சியை சந்திக்க கட்டாயம் நல்ல தயாரிப்பு வேண்டுமென்பதை உணரும் நாங்கள் எங்களைச் சூழ்ந்து வருகின்ற பிரச்சனை கண்டு வாடாது தொடர்ந்து நன்மை தரும் நற்செயல் பல செய்து உம்மை வரவேற்கத் துணைபுரிய ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

5. தொடர்ந்து முயற்சி செய்வோரை தேடிவந்து தேற்றும் தேவனே!
வெற்றி கிடைக்கும், நல்லது கிட்டும், வேலைகிடைக்கும், வரன் தடை நீங்கும் சுகம் பெறுவோம் என ஆவலோடு தொடர்ந்து உம்மை தேடிக் கொண்டிருப்போர் எல்லோரையும் நீர் தேடிவந்து தேற்ற வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

6. மனமாற்றத்தை எமக்குத் தருகின்ற இறைவனே!
எங்கள் மனசுக்குள் குடியிருக்கும் காழ்ப்புணர்ச்சி, ஆணவம், தன்னலப்போக்கு போன்ற மாசுகளை அகற்றி மனமாற்றம் பெற்று நீர் விரும்பித் தங்கும் குடிலாக எங்கள் உள்ளத்தை மாற்ற அருள் தர வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.


 
திருப்பலி முன்னுரை
திருவருகைக்காலம் 2வது வாரம் ஞாயிற்றுக்கிழமை


திருவருகைக்காலத்தின் 2ம் ஞாயிறாகிய இன்று அன்பின் வாரமாகும். மனித பலவீனத்தால் பாவத்தில் வீழ்ந்த நாம் தாழ்ச்சியோடு இறைவன் தரும் புதிய வாழ்வை அன்புறவோடு வாழ அழைக்கப்பட்டுள்ளோம்.

முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் பாவங்களுக்காக மனம் வருந்தி மனமாற்றத்துடன் இறைவனிடம் செல்லும்போது கடவுள் அன்போடு அரவணைப்பார் என இஸ்ராயேல் மக்களுக்கு அறிவிப்பதையும், பேதுருவின் இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இரண்டாம் வாசகத்தில் யாரும் அழிந்துபோகாமல் எல்லாரும் மனம் மாற வேண்டும் என்றுதான் ஆண்டவர் பொறுமையாய் காத்திருக்கின்றார் என ஆதிக்கிறிஸ்தவர்களுக்கு கூறுவதையும், மாற்கு நற்செய்தியில் தாழ்ச்சியுடன் திருமுழுக்கு யோவான் கிறிஸ்துவின் வருகைக்காக மக்களை மனமாற அழைப்பதையும் வாசிக்க கேட்போம்.

பாவத்தில் வீழ்ந்த நாம் படைப்புக்களோடும், கடவுளோடும், அயலவரோடும், நம்மோடும் உள்ள உறவுகளைச் சரிசெய்து வாழ இறைமன்னிப்பையும், இறைபராமரிப்பையும் வேண்டி தொடரும் திருப்பலியில் பங்குகொள்வோம்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

இறைவா! திருச்சபையின் திருப்பணியாளர்கள் தாழ்ச்சியோடும், கடினஉழைப்போடும் திருஅவையை உம் வழியில் நடத்திச்செல்ல வேண்டிய உடல், உள பலத்தை அவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
தந்தையே! உடல் நலம் மற்றும் பொருளாதார ரீதியாக பின்னடைவை அடைந்த மக்களுக்கு ஆண்டவரே உமது பேரன்பைக் காட்டி அவர்களை மீட்டருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே! பன்முக தொடர்பூடகங்கள், கலாச்சாரங்களுடன் வளரும் பதின்மவயதினர் நற்கருணை ஆண்டரிடமும், அன்னை மரியாவிடமும் பக்தியோடு ஒன்றித்திருக்க வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இறைவா! மனதில் எழும் ஒழுக்ககேடுகளை அகற்றி எமது எண்ணம், சொல், செயல்களில் திருமுழுக்கு யோவானைப் பிரதிபலித்து வாழ அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 
மறையுரை சிந்தனைகள்
  
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.
பற்றற்றான் பற்றினை பற்றுக...
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு... என்பது திருக்குறள் வரிகள்

பற்றில்லாத பரமனின் பற்றை நாம் பற்றிக் கொள்ள வேண்டும். எதற்காக??? பற்றில்லாமல் வாழவேண்டும் என்பதற்காக...... என்பதே அக்குறளின் பொருள் . நமது பற்றுக்கள் என்ன? நாம் எதை விடுத்து எதை பற்றிக் கொள்ள வேண்டும் என்பதை பற்றிய விழிப்புணர்வே திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறாகிய இன்று இறைவன் நமக்கு விடுக்கும் அழைப்பு. இன்றைய ஞாயிறு திருமுழுக்கு யோவான் ஞாயிறு என்று அழைக்கப்படுகிறது . காரணம் இயேசுவின் முன்னோடியாக இருந்து அவருக்கு முன் வழியை ஆயத்தம் செய்தவர்களில் முதன்மையானவர் திருமுழுக்கு யோவான். எனவே தான் இயேசு பிறப்புக்கு நம்மை நாமே தயாரித்துக் கொண்டிருக்கும் இந்நாட்களில் யோவானின் பற்றற்றை வாழ்வை நாமும் முன்மாதிரிகையாகக் கொண்டு வாழ அழைக்கின்றன இன்றைய வாசகங்கள்.

திருமுழுக்கு யோவான் ஒட்டக முடியை ஆடையாக அணிந்திருந்தார், வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் உணவாக உண்டு வந்தார், பாலைவனத்தில் தங்கி வாழ்ந்துவந்தார் என்பது எல்லாம் நாமறிந்த ஒன்றே. இன்றைய நாளில் அவர் துறந்த பற்றுகளைப் பற்றி அறிந்து அவர் போல பற்றற்றவர்களாய் வாழ் முற்படுவோம். உறவுப்பற்று, ஊர்ப்பற்று, குலப்பற்று இவை மூன்றையும் துறந்தவர் திருமுழுக்கு யோவான் என்ற தலைப்புக்களின் கீழ் சிந்திக்க உங்களை அழைக்கின்றேன்.

உறவுப்பற்றைத் துறந்தவர்:
வயது முதிர்ந்த காலத்தில் செக்கரியா, எலிசபெத் என்னும் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தவர். எனவே ஒட்டுமொத்த பாசத்தையும் அவர் மேல் காண்பித்திருப்பர் அவர் தம் பெற்றோர். உற்றார் உறவினர்கள் என அனைவரின் கண்களுக்கும் விலைமதிக்கப்பட முடியாத ஒரு பெரும்பொருளாக இருந்திருப்பார். கடவுளின் அருளால் பிறந்தவர், இவர் வாழ்வு எப்படி இருக்குமோ என்ற எல்லோரின் எதிர்பார்ப்பினால் நிறைந்ததாய் இவரின் வாழ்வு இருந்திருக்கும் . இருப்பினும் அதை அனைத்தையும் துறந்து, வாழத்துணிகிறார். இவரைப் போல நம்மால் நம் உறவுகளை இறைவனுக்காய் இறைப்பணிக்காய் துறக்க முடியுமா? துறத்தல் என்பது முழுமையாக துறப்பது..... திருமுழுக்கு யோவான் போல. நாமும் துறக்கிறோம் நமது உறவுகளை. எப்போது??? நமக்கு பிடிக்காத செயல்களை அவர்கள் செய்யும் போது.. நமது கருத்துடன் ஒத்துப் போகாதபோது.... நாம் நினைத்தது போல் அவர்கள் நடக்காத போது.... இப்படி தான் நாம் நம் உறவுகளை துறக்கிறோம். செல்வம், பதவி, புகழ் இவற்றை முன்னிருத்தி தான் இப்போதைய நமது உறவுகள் எல்லாம் புதுப்பிக்கப்படுகின்றன. அவர்களுடனான உறவு வலுப்பட எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராயிருக்கிறோம். நம்மை விரும்புபவர்களின் மாண்பை உணராது, நாம் விரும்புபவர்களை நாடி தேடி ஓடுகிறோம். இந்தப்பற்றினை துறக்கச்சொல்கிறார் இறைவன். என் பெயரால் நீங்கள் எதைத் துறந்தீர்களோ அதை நூறு மடங்காகப் பெற்றுக் கொள்வீர்கள் என்கிறார் இறைவன். திருமுழுக்கு யோவான் போல நமது வாழ்வின் நோக்கம் என்ன என்பதை அறிந்து அதற்கு தடையாக இருப்பவற்றை தாண்டி செல்ல அருள் வேண்டுவோம்.

ஊர்ப்பற்றைத் துறந்தவர்:
சொந்த நாட்டை விட்டு அயல் நாட்டில் பிழைப்பிற்காக இருக்கும் நபர்களுக்கு தெரியும் தன் சொந்த ஊரின் அருமை. உற்றார் உறவினர், ஊரார் என மகிழ்வினை அள்ளித்தரும் அத்தனை சொந்தங்களையும் விட்டு தனியே வாழ்வது என்பது வெறுமை.. இத்தகைய தனிமையை தானே தேடிச்செல்கிறார் திருமுழுக்கு யோவான். தான் வளர்ந்து மகிழ்ந்த ஊர். தன்னுடன் விளையாடி திரிந்த நண்பர்கள் கூட்டம், பார்த்து பரவசம் அடைந்த ஊரின் எழில் மிகு இடங்கள் என அனைத்தையும் துறந்து பாலைவனத்திற்கு செல்கிறார். இருத்தலிலிருந்து இல்லாமைக்கு தன்னை அழைத்துச்செல்கிறார். செழுமையிலிருந்து வெறுமைக்கு செல்கிறார். இத்தகைய வெறுமையும் தனிமையும் தன்னை தன்னுடைய இலக்கை நோக்கி இட்டுச்செல்லும் என்று நம்புகிறார். சிறுவயதில் தன் ஊர் மக்களை தான் தேடிச்சென்று பார்த்து மகிழ்ந்த காலம் போய் . இப்போது தான் தனியே சென்று அவர்களை தன்னிடம் வரவழைக்கிறார். இது என் ஊர் என்று சொன்ன காலம் கடந்து , இவன் எங்கள் ஊர்க்காரன் என்று பெருமைப்படும் அளவுக்கு மாற்றம் பெருகின்றார். நம்மால் நம் ஊர் மகிழ்கின்றதா? இல்லை நம் ஊரால் ஊர் மக்களால் நாம் மகிழ்வடைகின்றோமா சிந்தித்து செயல்படுவோம்.

குலப்பற்றைத் துறந்தவர்:
தந்தை செக்கரியா எருசலேம் ஆலயத்தில் குருவாகப் பணியாற்றியவர். தந்தை பணியை மகன்கள் செய்வது வழக்கம். ஆனால் திருமுழுக்கு யோவான் குருவாக தன்னை , தனது பணியை ஆலயத்திற்குள் மட்டும் நிறுத்திவைக்க நினைக்கவில்லை. அவர் நினைத்து இருந்தால், செல்வ வளத்துடனும் புகழ் மரியாதையுடனும் எருசலேம் தேவாலயத்தில் பணியாற்றி இருக்கலாம். ஆனால் அதற்கு மாறாக ஊரை விட்டு வெளியே உள்ள மக்களும் தன்னை நாடி வர வேண்டும், தான் கூறும் அறிவுரையின்படி நடந்து மனமாற்றம் அடைய வேண்டும் என விரும்புகின்றார். அதன்படி தன்னுடைய குலத்தொழிலை விட்டு இறைப்பணியாற்ற செல்கிறார். நாம் எப்படி??? நல்ல வேலை, கை நிறைய பணம், கொஞ்சம் புகழ், வீடு நிலம் நகை .... இதோடு நமது வாழ்க்கை நிறைவடைந்துவிட்டது என்று எண்ணுகிறோமா??? இவை அனைத்தும் உண்மையில் நமக்கு நிறைவுதந்துவிடுமா??? இதுதான் எனது வாழ்க்கை என்று எண்ணி ஒரு குறுகிய வட்டத்திற்குள் நம் வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா ???சிந்திப்போம்.

திருமுழுக்கு யோவானின் பற்றற்ற வாழ்வை பற்றி தியானித்துக் கொண்டிருக்கக்கூடிய இவ்வேளையில் அவரைப் போல நாமு பற்றற்றவர்களாய் வாழ முற்படுவோம். இன்றைய தினம் ஏற்றப்பட்ட திருவருகைக்காலத்தின் இரண்டாம் மெழுகுதிரி நம் வாழ்வில் இருக்கும் தேவையற்ற பற்றுக்களை பற்றி எரியச் செய்யட்டும். இதன் மூலம் பற்றில்லாத பரமன் மேல் தூய்மையான பற்று கொண்டவர்களாக வாழ முற்படுவோம். அப்போது நமது தீய எண்ணங்கள் என்னும் பள்ளத்தாக்குகள் நல்லெண்ணங்களால் நிரப்பப்படும். மலை குன்றென திகழும் நமது மேட்டிமை குணம், தாழ்ச்சி என்னும் பண்பால் தாழ்த்தப்படும். கோணலான நமது வாழ்வு முறை அவரின் வழிகாட்டுதலால் நேரானதாக மாறும். கரடுமுரடான நமது மனம் சமாதானமானதாக மாறும் எனவே ஆண்டவருக்காக நமது வழியை ஆயத்தம் செய்ய பாதையை செம்மைப்படுத்த, பற்றற்றான் பற்றின் மேல் பற்று கொண்டு வாழ்வோம் ... இறையருள் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தார் அனைவர் மீதும் இருப்பதாக ஆமென்


 
மறையுரைச்சிந்தனை  - அருட்சகோதரி: செல்வராணி O.S.M.


 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி

இயல்பு மாற்றம்

ஈசோப் கதை ஒன்றோடு இன்றைய சிந்தனையைத் தொடங்குவோம்.

ஒரு ஆற்றங்கரையின் இந்தப் பக்கம் ஒரு தவளையும் ஒரு தேளும் வாழ்ந்து வந்தன. இருவரும் சில நாள்களில் நண்பர்களாயினர். தேளுக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை. ஆற்றின் அந்தக் கரைக்கு போக வேண்டும் என்ற ஆசை. ஒரு நாள் தவளையிடம், 'உன்னால்தான் நீந்த முடியுமே. நீ என்னைச் சுமந்துகொண்டு அக்கரைக்குச் செல்கிறாயா?' என்று கேட்கிறது. அதற்குத் தவளை, 'உன்னைத் தூக்கிச் செல்வதில் எனக்கு கஷ்டம் ஒன்றும் இல்லை. ஆனால், உன்னிடம் இருக்கும் கொடுக்குதான் எனக்கு பயமாக இருக்கிறது. பாதி வழியில் ஒருவேளை நீ என்னை உன் கொடுக்கினால் கொட்டிவிட்டால் நான் என்ன செய்வது?' என்று பதில் சொன்னது. உடனே தேள், 'ஐயயோ, நான் ஒருபோதும் அப்படிச் செய்யவே மாட்டேன். நீ எனக்கு எவ்வளவு பெரிய உதவி செய்கிறாய். நான் எப்படி உன்னை என் கொடுக்கால் கொட்டுவேன்!' என்று சொன்னது. சற்று நேரம் யோசித்த தவளை, 'இல்லை! வேண்டாம்! நீ கொட்டிவிடுவாய் என்று என் உள்மனம் சொல்கிறது!' என்று தேளைச் சுமக்கத் தயங்கியது. 'ஐயோ! நண்பா! இல்லவே இல்லை! என் அப்பா தேள், அம்மா தேள் சத்தியமா நான் சொல்றேன்! உன்னைக் கொட்டவே மாட்டேன்!' என்று சத்தியம் செய்தது தேள். தேளின் சத்தியத்தை நம்பிய தவளை, தன் முதுகில் தேளைச் சுமந்துகொண்டு ஆற்றுக்குள் இறங்கி அக்கரை நோக்கி நீந்த ஆரம்பிக்கிறது. ஏறக்குறைய பாதிதூரம் கடந்தவுடன் தேள் தவளையைத் தன் கொடுக்கால் கொட்டிவிடுகிறது. வலி பொறுக்க முடியாத தவளை, 'என்ன நண்பா! இப்படிச் செய்துவிட்டாயே? உன்னை நம்பி முதுகில் ஏற்றிக்கொண்டுவந்தேனே!' என்று கத்தியது. அதற்குத் தேள், 'என்னை மன்னித்துவிடு! கொட்டுவது என் இயல்பு. அதை என்னால் மாற்ற இயலாது!' தவளை சொன்னது, 'முட்டாள் நண்பனே! நீ இப்போது பாதி ஆற்றில் என்னைக் கொட்டியதால் நீயும்தானே மூழ்கப் போகிறாய்!'

சற்று நேரத்தில் தவளையும் தேளும் தண்ணீரில் மூழ்கி இறந்தன.

தன்னுடைய இயல்பை மாற்றிக்கொள்தல் தேளுக்குச் சாத்தியமில்லாமல் இருக்கலாம். ஆனால், மனிதர்களுக்குச் சாத்தியம் என்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு. இயல்பு மாற்றம் என்றால் என்ன? இயல்பு மாற்றத்தை எப்படி அடைவது?

இன்றைய முதல் வாசகம் (காண். எசா 11:1-10) மூன்று வகை இயல்பு மாற்றங்களைப் பதிவு செய்கின்றது:

அ. அடிமரத்திலிருந்து தளிர்
ஒரு சில பூங்காக்களில் பட்டுப்போன மரங்களை வெட்டிவிட்டு அதன் வேரையும், சிறிய தண்டுப்பகுதியையும் வெட்டிவிட்டு, அதை நாற்காலி போல அமைத்திருப்பார்கள். அந்த நாற்காலி என்றாவது துளிர்க்குமா? 'துளிர்க்கும்' என உறுதியாக இறைவாக்குரைக்கின்றார் எசாயா. தாவீதின் மரபு மறைந்துவிட்டது. இனி தங்களை ஆள யாருமில்லை என்று நினைத்திருந்த மக்களுக்கு புதிய அரசரின் வருகையை முன்னுரைக்கும் எசாயா, வெறும் தண்டு தளிர்விடும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றார்.

ஆ. புதுவகை அருள்பொழிவு
முதல் ஏற்பாட்டில் யாரெல்லாம் எண்ணெயால் அருள்பொழிவு பெறுகிறார்களோ அவர்களெல்லாம் குருவாக, இறைவாக்கினராக, அரசராக மாறுகின்றனர். தங்கள் வாழ்வில் புதிய திருப்பத்தைக் கண்டுகொள்கின்றனர். இன்றைய முதல் வாசகத்தில் வரும் அரசர் எண்ணெயால் அல்ல, மாறாக, ஆண்டவரின் ஆவியால் அருள்பொழிவு பெறுகின்றார். அந்த அருள்பொழிவு அவருக்குச் சில கொடைகளை அல்லது மதிப்பீடுகளை வழங்குகிறது. இறைவனின் திருவுளத்தை அறிய 'ஞானமும் மெய்யுணர்வும்,' அத்திருவுளத்தை நிறைவேற்ற 'அறிவுரைத் திறனும் ஆற்றலும்,' ஆண்டவருக்குப் பிரமாணிக்கமாய்ப் பணி செய்ய 'நுண்மதியும் அச்ச உணர்வும்' பெறுகின்றார் அரசர். இவ்வாறாக, நீதி, நேர்மை, மற்றும் உண்மை ஆகிய பண்புகளை மட்டுமே கொண்டிருப்பார். அரசருக்குரிய ஆற்றல், பெருமை, மற்றும் பொய்மை மறைந்து அவருடைய இயல்பு மாற்றம் பெறுகிறது.


இ. விலங்குகளின் செயல்பாடுகளில் மாற்றம்
ஓநாய் செம்மறியோடு தங்குவதிலும், செம்மறியாட்டுக் குட்டியோடு சிறுத்தைப் புலி படுத்துக்கொள்வதிலும், சிங்கக்குட்டியும் கொழுத்த காளையும் கூடி வாழ்தலிலும், பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்தலிலும், பசுவும் கரடியும் ஒன்றாய் மேய்வதிலும், அவற்றின் குட்டிகள் சேர்ந்து படுத்திருப்பதிலும், சிங்கம் மாட்டைப் போல வைக்கோல் தின்பதிலும், பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பு வளையில் விளையாடுவதிலும், பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடுவதிலும் இயல்பு மாற்றங்கள் தெரிகின்றன. இவை அனைத்தையும், 'என் திருமலை முழுவதிலும் தீமை செய்வார் எவருமில்லை' என்று ஒரே வரியில் சுருக்கி வரைகிறார் எசாயா. மேற்காணும் உருவக இணைவுகளில் ஒன்று வன்மையாகவும் மற்றது மென்மையாகவும் இருக்கிறது. எசாயாவின் கனவில் வன்மை மென்மையாகவும், மென்மை வன்மையாகவும் இயல்பு மாற்றம் பெறுகிறது. இப்படிப்பட்ட இயல்பு மாற்றம் இருந்தால்தான் மேற்காணும் காட்சி சாத்தியமாகும்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 15:4-9) உரோமையருக்கு எழுதப்பட்ட திருமடலை ஏறக்குறைய நிறைவு செய்யும் பவுல், அவர்கள் பெற வேண்டிய இயல்பு மாற்றம் குறித்து - தங்களுடைய மேட்டிமை எண்ணங்களையும், பிளவு மனப்பான்மையையும் விட்டுவிட்டு, யூதர்களும் புறவினத்தாரும் ஒரே மனத்தினராய் இருந்து ஒருவாய்ப்பட கடவுளைப் புகழ்வது - எழுதி, கிறிஸ்து இயேசுவில் யூதர்களும் புறவினத்தாரும் ஒரே மீட்பில் பங்கேற்கின்றனர் என்றும் சொல்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகமும் (காண். மத் 3:3:1-12) மூன்று வகை இயல்பு மாற்றங்களைப் பதிவு செய்கிறது:

அ. யோவானின் வாழ்க்கை முறை
ஒட்டக முடி ஆடை, தோல் கச்சை, வெட்டுக்கிளி, காட்டுத்தேன் என்ற எளிய உணவுப் பழக்கத்தையும், உடைப் பழக்கத்தையும் கொண்டிருக்கின்ற யோவான் அவருடைய சமகாலத்தவரிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவராக இருக்கின்றார். அவருடைய வாழ்விடமும் மாறுபட்டதாக இருக்கின்றது.

ஆ. மனம் மாறுவது என்பது செயலில் காட்டப்பட வேண்டும்
தன்னுடைய பணியின் தொடக்கத்தில், 'மனம் மாறுங்கள்' என்று முழக்கமிடும் யோவான், 'மனம் மாறியதைச் செயலில் காட்டுங்கள்' என்று உள்ளத்திற்கும் செயலுக்கும் இருக்க வேண்டிய தொடர்பை விளக்குகின்றார். உள்ளுக்குள் ஒன்று, வெளியில் வேறு என்று வாழ்ந்த மனிதர்களுக்கு இது ஒரு இயல்பு மாற்றம்.

இ. பழைய பெருமையை விடுங்கள்
'நாங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள். எங்களுக்கு ஆட்டோமேடிக்காக மீட்பு உண்டு' என்று பழம்பெருமையைப் பாடுவதை விடுங்கள் என்று அறிவுறுத்துகின்ற யோவான், இனியும் இயல்பு மாறவில்லை என்றால் வெட்டப்படுவது உறுதி என்று எச்சரிக்கின்றார்.

ஆக, மூன்று வாசகங்களும் இயல்பு மாற்றத்தை காட்சியாகவும், அறிவுரையாகவும், எச்சரிக்கையாகவும் முன்வைக்கின்றன.

இந்த இயல்பு மாற்றத்தை நாம் எப்படி அடைவது?

இறைவன் தருகின்ற வாக்குறுதியை நம்புவது, அவருடைய அழைப்பை ஏற்றுக்கொள்வது. ஆண்டவரைப் பற்றிய அறிவை நோக்கி அழைக்கின்றார் எசாயா. மனமாற்றத்திற்கு அழைக்கின்றார் திருமுழுக்கு யோவான்.
அருள்திரு யேசு கருணாநிதி

 
 
 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை

I எசாயா 11: 1-10
II உரோமையர் 15: 4-9
III மத்தேயு 3: 1-12


மனமாற்றத்தைச் செயலில் காட்டுங்கள்

1895 ஆம் ஆண்டில் ஒருநாள், அமெரிக்க அதிபராக இருந்த கிளீவ்லாண்ட்டிற்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது:

"மாண்புமிகு அதிபர் அவர்களே! வணக்கம். உங்கள் குடிமக்களில் ஒருவனாகிய நான் எழுதிக்கொள்வது.... சிலநாள்களாகவே எனக்கு நிம்மதியில்லை. எப்பொழுதும் அரசாங்கத்திற்கு எதிராக நான் செய்த தவறுதான் என்னுடைய நினைவுக்கு வந்துபோகின்றது. நான் செய்த தவறு இதுதான்: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மூன்று தபால்தலைகளை நான் மீண்டுமாகப் பயன்படுத்திவிட்டேன். அப்பொழுது எனக்குப் பதின்மூன்று வயது இருக்கும். ஏதோ அறியாமல் செய்துவிட்டான். இப்பொழுது நான் அதற்காக மனம்வருந்தி மன்னிப்புக் கேட்கின்றேன். மேலும், தவறாகப் பயன்படுத்திய அந்த மூன்று தபால்தலைகளுக்கு உண்டான பணத்தைக் காசோலையாக இந்தக் கடிதத்தோடு இணைத்துள்ளேன். அருள்கூர்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள். இப்படிக்கு உங்களில் குடிமக்களில் ஒருவன்."

இந்தக் கடிதத்தைப் படித்துப்பார்த்த அதிபர் கிளீவ்லாண்ட் அப்படியே வியந்துபோய் நின்றார். செய்த தவறினை உணர்ந்து, அதற்குப் பரிகாரம் தேடிய இந்தச் சிறுவன் அல்லவா நாட்டின் உண்மையான குடிமகன் என்று அவர் அவனுடைய கடிதத்தை வெள்ளை மாளிகையில் பத்திரப்படுத்தி வைத்தார். அது இன்றைக்கும் அங்கு உள்ளது.

உண்மையான மனமாற்றம் தவறுக்காக மனம்வருந்துவது மட்டுமல்ல, செய்த தவறை இனிமேலும் செய்வதில்லை என்று உறுதியெடுத்துக்கொண்டு, நேர்வழியில் நடப்பது. இத்தகைய செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. திருவருகைக்காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை மெசியாவின் வருகைக்காக நாம் நம்மையே தயாரிக்கும் விதமாக மனம்மாறி நல்வழியில் நடக்கவேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. நாம் எப்படி மனம்மாறி நல்வழியில் நடப்பது என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

திருவருகைக்காலத்தின் கதாநாயகன் திருமுழுக்கு யோவான்
நற்செய்தியில், திருமுழுக்கு யோவான் மெசியாவின் வருகையின் பொருட்டு மக்களை மனமாற்றத்திற்கு அழைக்கின்றார். அவருடைய இந்த அழைப்பினை ஏற்று வரிதண்டுபவர்களும் பாவிகளும் அவரிடம் செல்கின்றார்கள், பரிசேயர்களும் சதுசேயர்களும் தாங்கள் நேர்மையாளர்கள்... அதனால் தாங்கள் மனமாறத் தேவையில்லை என்று அப்படியே இருக்கின்றார்கள்.

இந்தத் திருமுழுக்கு யோவான் யார்? எந்த அதிகாரத்தால் அவர் மக்களை மனமாற்றத்திற்கு அழைத்தார்? அவருடைய அழைப்பிற்குச் செவிமடுப்பதன் தேவை என்ன? என்பவற்றைக் குறித்துத் தெரிந்துகொள்வது நல்லது. திருமுழுக்கு யோவான் எலியாவின் உளப்பாங்கைக் கொண்டவர் (லூக் 1: 16-17), இயேசுவின் வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால் அவர் எலியா (மத் 17:12). மட்டுமல்லாமல் அவர் மனிதராய்ப் பிறந்தவர்களுள் பெரியவர் (மத் 7: 11). இவையெல்லாவற்றிற்கும் மேலாக அவர் கடைசி இறைவாக்கினர் (லூக் 16:16). இத்தகைய சிறப்புகளைப் பெற்ற திருமுழுக்கு யோவான் தன்னுடைய சொந்த அதிகாரத்தால் போதிக்கவில்லை, திருமுழுக்குக் கொடுக்கவில்லை. மாறாக, விண்ணகத்திலிருந்து வந்த அதிகாரத்தாலேயே போதித்தார், திருமுழுக்குக் கொடுத்தார். அப்படிப்பட்டவருடைய போதனை எல்லாரும் கேட்டு மனம்மாறியிருக்கவேண்டும். ஆனால், மேலே நாம் பார்த்ததுபோல வரிதண்டுபவர்களும் பாவிகளும்தான் அவருடைய போதனையைக் கேட்டு மனம்மாறினார்கள். ஏனையோர் மனம்மாறத் தேவையே இல்லை என்பதுபோல் இருந்தார்கள். அதனால் அதற்குரிய தண்டனைக்குத் தங்களை உட்படுத்திக்கொண்டார்கள்.

உண்மையான மனமாற்றம் எது?
திருமுழுக்கு யோவான் மக்களிடம் போதித்தது இரண்டே இரண்டு செய்திகள்தான். ஒன்று, விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது. இரண்டு. மனம்மாறவேண்டும் என்பதாகும். இந்த இரண்டு செய்திகளும், மெசியா வருகின்றார், ஆதலால் மனம்மாறுங்கள் என்ற ஒரே நேர்கோட்டில் வருகின்றன. திருமுழுக்கு யோவான் சொல்லக்கூடிய மனம்மாற்றம் எத்தகையது என்பதைத் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

ஒருசிலர் மனமாற்றம் என்றால், பாவத்தை நினைத்து மனம்வருந்துதல் என்று நினைத்துக்கொள்கின்றார்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் சுருக்கிக்கொள்கின்றார்கள். உண்மையான மனமாற்றம் என்பது பாவத்தை நினைத்து மனம் வருந்துவது மட்டும் கிடையாது. அந்தப் பாவத்தை மீண்டுமாகச் செய்யாமல் இருந்து, நற்செயல்களைச் செய்வது. அதைத்தான் திருமுழுக்கு யோவான், "நீங்கள் மனம்மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்" என்கின்றார்.

இங்கு இன்னொரு முக்கியமான செய்தியையும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும். அது என்னவெனில், மனமாற்றம் அடைவது ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டும் கிடையாது. எல்லாரும் மனமாற்றம் அடையவேண்டும். திருமுழுக்கு யோவான மனமாற்றச் செய்தியை எடுத்துரைத்தபோது, பரிசேயர்களும் சதுசேயர்களும் அவருடைய குரலைச் சட்டைசெய்யாமல் இருந்தற்குக் காரணம், தாங்கள் ஆபிரகாமின் மக்கள்... அதனால் மனம்மாறத் தேவையில்லை என்ற எண்ணமாகும். ஆகையால்தான் திருமுழுக்கு யோவான் அவர்களைப் பார்த்து, "இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்ய கடவுள் வல்லவர்" என்று கூறுகின்றார். அப்படியென்றால், அவர் மனம்மாறவேண்டும், இவர் மனம்மாறவேண்டும் என்றில்லை. எல்லாரும் மனம்மாறவேண்டும். ஏனெனில், கடவுள் ஒருவரே நல்லவர் (மத் 19: 17). ஏனையோர் யாவரும் பாவிகளே!

கனிகொடாத மரம் வெட்டப்படும்
திருமுழுக்கு யோவான், தன்னிடம் திருமுழுக்குப் பெற வந்தவர்களிடம் சொல்லக்கூடிய மிக முக்கியமான செய்தி, கனிகொடுக்கும் வாழ்க்கை வாழவேண்டும் என்பதாகும். இயேசுவும் இதே செய்தியைத்தான், நீங்கள் மிகுந்த கனிதந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது (யோவா 15:8) என்று கூறுவார். அப்படியானால், மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் கனிகொடுக்கும் வாழ்க்கை வாழவேண்டும். அப்படிக் கனிகொடுக்காமல் இருக்கின்றபோது, கனிகொடாத மரங்களைப் போன்று தீயில் தள்ளப்படுவோம் அல்லது தண்டனையைப் பெறுவோம் என்பது உறுதி.

திருமுழுக்கு யோவான் இங்கு, மனமாற்றச் செய்தியைக் கேளாமலும், கேட்டு அதன்படி வாழாமலும் இருக்கக்கூடியவர்களுக்குக் கிடைக்கும் தண்டனைத் தீர்ப்பைக் குறித்துப் பேசுகின்றார். யாரும் அழிந்துபோகாமல், எல்லாரும் மீட்படையவேண்டும் என்பது கடவுளின் திருவுளமாக இருந்தாலும் (1திமொ 2:4; 2 பேது 3:9), ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்பக் கைம்மாறு அளிக்கின்ற கடவுள் (உரோ 2:6) மனம்மாறாமலும், மெசியாவின் வருகைக்காகத் தயாரில்லாமலும், வந்தவரை நம்பாமலும் அதன்படி வாழாமலும் இருந்தால், அதற்கானத் தண்டனையைத் தருவார் என்பது உறுதி.
ஆகையால், மெசியாவாம், இயேசுவின் வருகையை, அவருடைய பிறப்பு விழாவைக் கொண்டாட ஆவலுடன் காத்திருக்கும் நாம், நம்முடைய பாவத்திலிருந்து விலகி, அவர்மீது நம்பிக்கை வைத்து முற்படுவோம்.

சிந்தனை
அவள்/அவன் மனம்மாற வாய்ப்புக் கொடுத்தேன். அவளோ/ அவனோ மனம்மாறவில்லை (திவெ 2: 21) என்பார் ஆண்டவர். ஆகையால், கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் மனமாற்றத்திற்கான வாய்ப்பினைப் பயன்படுத்தி, நற்கனி கொடுப்பவர்களாவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்
 
மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது
சிறுவன் ஒருவன் தன்னுடைய வீட்டுத்தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் வேலைபார்க்கும்போது தெரியாமல் அவனுடைய தந்தை ஆசை, ஆசையாய் வளர்த்துவந்த மலர்செடியை ஒன்றை வெட்டிவிட்டான். இதைப்பார்த்த அவனது வீட்டில் இருந்த அனைவரும், சிறுவனுக்கு என்ன ஆகுமோ என்று பயந்து நடுங்கினார்கள். ஏனென்றால் அவனது தந்தை மிகவும் கோபக்காரர், கண்டிப்பு மிகுந்தவர்.

அன்று மாலை அலுவலகத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பிவந்த அவனது தந்தை, தான் ஆசை ஆசையாய் வளர்த்த மலர்செடி வெட்டுண்டு கிடப்பதைக்கண்டு கொதித்தெழுந்தார். "இந்த செடியை யார் வெட்டி எறிந்தார்கள்?" என்று சத்தம்போட்டு பேசினார். அவர் கோபம்கொல்வதைப் பார்த்துவிட்டு, சிறுவன் தனக்கு என்ன ஆகப்போகிறதோ என்று பயந்துகொண்டேவந்து தந்தையிடம், "நான்தான் அந்தச் செடியைத் தெரியாமல் வெட்டிவிட்டேன். என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்" என்று கெஞ்சிக்கேட்டான். அதற்கு அவனுடைய தந்தை, "சரி போ உன்னை நான் மன்னித்துவிட்டேன். இனிமேலும் இப்படி நடந்துகொள்ளாதே, கவனமாக இரு" என்று அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார்.

எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த வீட்டிலிருந்த மற்ற அனைவரும், "ஏன்! நீங்கள் அவனைத் தண்டிக்கவில்லை, வழக்கமாக தவறு செய்பவர்களைத் தண்டிப்பதுதானே உங்கள் இயல்பு" என்று கேட்டதற்கு அவர், "எவன் ஒருவன் தன்னுடைய தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்கிறானோ, அவனை உடனே மன்னித்து விடவேண்டும். இல்லையென்றால் அவன் ஒருபோதும் உண்மை பேசமாட்டான். எல்லாருக்கும் பயந்து, பயந்து கோழையாகத் தான் இருப்பான்" என்று அவர்களுக்குப் பதிலளித்தார்.

இந்த நிகழ்வில் வரும் சிறுவன் வேறு யாருமல்ல அமெரிக்காவின் முதல் அதிபர், ஜார்ஜ் வாஷிங்டன் அவர்களே. இதில் வரும் தந்தையைப் போலவே, நம்முடைய விண்ணகத் தந்தையும், பிள்ளைகளாகிய நாம் நமது தவற்றை உணர்ந்து, மன்னிப்புக் கேட்கிறபோது, அவர் நம்மை மனதார மன்னித்து ஏற்றுக்கொள்கிறார்.

திருவருகைக்காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு, இன்றைய நாள் வாசகங்கள் நாம் மனம் மாறி வாழ" அழைப்புத் தருகிறது. நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவான் யோர்தான் நதிக்கரையில் திருமுழுக்கு கொடுத்துக்கொண்டே, "மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" என்று சொல்லி, யூதர்களை மனம்திரும்பி வாழ அழைக்கின்றார்.

திருமுழுக்கு யோவான் ஆண்டவருக்காக வழியை ஆயத்தப்படுத்தியவர்; அவர்தம் பாதையை செம்மைப்படுத்தியவர். எனவே அவர், மக்கள் தங்களுடைய தீய வழியிலிருந்தும், பாவ நாட்டங்களிளிருந்தும் மனந்திரும்பி புதுவாழ்வு வாழ அழைக்கிறார். மேலும் ஆண்டவரும், கடவுளுமானவர் தூயவராக இருப்பதால் (லேவியர் 19:2), அவருடைய மக்களாகிய நாம் ஒவ்வொருவருமே அவரை எதிர்கொண்டு வரவேற்கத் தூயவராக இருக்கவேண்டும் என்று திருமுழுக்கு யோவான் மக்களை அழைக்கின்றார். அதனால்தான் மக்கள் அனைவரும் அவரிடம் வந்து திருமுழுக்குப் பெறுகிறார்கள்.

மெசியாவின் வருகைக்காக நம்மையே நாம் தயாரித்துக்கொண்டிருக்கும் இந்தவேளையில், நாம் செய்யவேண்டிய முதன்மையான காரியம் மனமாற்றம் பெறுவதுதான். அதாவது உண்மையான கடவுளையும், அவரது அன்பையும் மறந்துவிட்டு, போலிகளுக்குப் பின்னால் செல்லும் வாழ்க்கையை விட்டுவிட்டு, அவரிடம் திரும்பிவருவதுதான் உண்மையான மனமாற்றமாக இருக்கும். திருமுழுக்கு யோவான், தன்னிடம் திருமுழுக்குப் பெற வரும் மக்களைப் பார்த்து, அத்தகைய ஒரு மனம்மாற்றம் பெற்ற வாழ்வு வாழ அழைக்கின்றார்.

ஆகவே, நாம் ஒவ்வொருவரும் போலிகளைப் புறந்தள்ளிவிட்டு, மனந்திரும்பி உண்மைக் கடவுளின் வழி நடக்க நாம் முயல்வோம்.

இரண்டாவதாக இன்றைய இறைவார்த்தை நமக்குத் தரும் சிந்தனை: நாம் ஒவ்வொரும் மனமாற்றம் பெறுவதோடு மட்டுமல்லாமல், கனிதரும் மக்களாகவும் வாழவேண்டும் என்பதாகும். நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் தன்னிடம் திருமுழுக்குப் பெற வந்த யூதர்களைப் பார்த்துச் சொல்வார், "நற்கனிதராத மரங்கள் எல்லாம், வெட்டப்பட்டு தீயில் போடப்படும்" என்று. இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், நாம் ஒவ்வொவரும் கனிதரும் மக்களாக வாழவேண்டும். கிறிஸ்தவம் என்றாலே கனிதரும் வாழ்க்கைதானே, உண்மையில் கிறிஸ்தவர்களாகிய நாம் நற்கனிதரும் தரும் மக்களாக வாழ்கின்றோமா? என்று சிந்தித்து பார்க்கவேண்டும்.

வாழ்க்கை என்பது தன்னிடம் உள்ளதைப் பிறருக்குக் கொடுப்பது, அடுத்தவரிடமிருந்து எதையும் எடுப்பது அன்று என்பார் விக்டர் பியூக்கோ என்ற அறிஞர். அதேபோன்று அனைவரின் நலனையும் கருத்தில்கொண்டே நம் செயல்பாடுகள் அமையவேண்டும் என்பதுதான் வாழ்க்கைமுறை என்பார் மெக்கனல் என்ற அறிஞர். எனவே, வாழ்க்கை என்பதே பிறருக்காக வாழ்வதுதான் என்பதை இரண்டு அறிஞர்களும் சுட்டிகாட்டுகிறார்கள். ஆக, நம்முடைய வாழ்க்கை பிறருக்குப் பயனுள்ளதாக இருக்கின்றதா? என்பதை நாம் சிந்தித்து பார்த்து, அதன்படிவாழ நாம் முயற்சி எடுக்கவேண்டும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்த ஒரு மிகப்பெரிய ஆளுமை லார்ட் சாப்ட்ஸ்பரி (Lord Shatesbury), இவர் ஏழை மக்களின் கதாநாயகனாக அறியப்பட்டவர்.

சிறுவயதில் அதிகமாக சுட்டித்தனம் செய்யும் சிறுவனாக வளர்ந்து வந்த சாப்ட்ஸ்பரி, ஒருநாள் பள்ளிக்கூடம் விட்டு, வீடு திரும்பும்போது இறந்த ஒருவரை அடக்கம் செய்வதற்காக சவப்பெட்டியில் வைத்து தூக்கிக்கொண்டு போனார்கள். அந்த சவப்பெட்டி பார்பதற்கு மிகவும் அலங்கோலமாகவும், ஆங்காங்கே உடைந்துபோயும் இருந்தது. அதைவிட கொடுமை இறந்த உடலை தூக்கிக்கொண்டுபோன அந்த மனிதர்கள் நன்றாகக் குடிவிட்டு வழியெங்கும் ஆட்டம்போட்டுக்கொண்டே சென்றார்கள். இது சிறுவனின் உள்ளத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுவன் அவர்களைப் பின்தொடர்ந்துகொண்டே சென்றான். அவர்கள் ஊருக்கு வெளியே இருந்த ஒரு குன்றுக்கு வந்ததும், அதிலிருந்து இறந்த உடலை தூக்கிவீசிவிட்டு, தங்களுடைய வீட்டிற்குத் திரும்பினர்.
எல்லாவற்றையும் தூரத்திலிருந்து பார்த்துகொண்டிருந்த சிறுவன் மிரண்டுபோய் நின்றான். இறந்த ஒருவரை இப்படித்தான் அடக்கம் செய்வார்களாக?, இது இறந்த மனிதருக்குச் செய்யும் மிகப்பெரிய அவமரியாதை அல்லவா?, இந்த நிலையை நாம் மாற்றவேண்டும் என்று அப்போதே ஒரு முடிவெடுத்தான்.

லார்ட் சாப்ட்ஸ்பரி பெரியவனாக வளர்ந்த பிறந்து இறந்த உடல்களை, அழகான ஒரு பெட்டியில் வைத்து, அவற்றை ஊருக்கு வெளியே கொண்டுபோய், ஓரிடத்தில் புதைத்து, நல்லடக்கம் செய்துவந்தான். இவ்வாறு ஆயிரக்கணக்கான இறந்த உடல்களை நல்லடக்கம் செய்திருக்கிறான் என்பது சாப்ட்ஸ்பெரியின் வாழ்க்கை வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகிறது. லார்ட் சாப்ட்ஸ்பரி ஏழை, எளிய மாணவர்களுக்கும் பெருமளவில் கல்விக்கான உதவி செய்துவந்தார் என்றும் சொல்லப்படுகின்றது.

ஆகையால், நாம் செய்வது சிறுகாரியமாக இருந்தாலும், அல்லது நாம் வாழும் வாழ்வு மிகக்குறுகியதாக இருந்தாலும் அது பிறருக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கவேண்டும் என்பதையே லார்ட் சாப்ட்ஸ்பரியின் வாழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது. ஆகவே, நமது வாழ்வு கனிதரும் வாழ்வாக அமைய, நாம் முயற்சி எடுப்போம்.

நிறைவாக நமது வாழ்வை நாம் நற்கனிதரும் வாழ்வாக அமைத்துக்கொள்ளும்போது இறைவன் நமது துன்பத்திலும், வேதனையிலும் மன உறுதியையும், ஊக்கத்தையும் தந்து காத்தருள்வார். இதைதான் தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் "மனஉறுதியையும், ஊக்கத்தையும் தரும் கடவுள் உங்களுக்கு அருள்புரிவாராக!" என்று கூறுகிறார். எனவே, நாம் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழும்போது, எதிர்வரும் துன்பத்தைக் கண்டு கலங்காமல், இறைவன் தரும் ஆசிர்வாதத்தை உணர்ந்துகொண்டு தொடர்ந்து இறைவழியில் நடக்க முயல்வோம்.

இறைவாக்கினர் எசாயா புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில் வாக்களிக்கப்பட்ட மெசியா எப்படிப்பட்டவராக இருப்பார் என்பது பற்றி சொல்லப்படுகின்றது. அவர் தூய ஆவியால் அருள்பொழிவு பெற்றவராய், மக்களுக்கு நேர்மையான தீர்ப்பு வழங்குவார்; உண்மையின் வழியில் மக்களை வழிநடத்திடுவார். அதைவிடவும் அவருடைய ஆட்சியில் எல்லா உயிர்களும் ஒன்றாக, ஒரே குடும்பாக இருக்கும். ஆகையால், தன்னுடைய பாதுகாப்பையும், அருளையும், நமக்கு வழங்கி, நல்லாட்சி புரியும் மெசியாவின் உடனிருப்பை உணர்ந்து நாம், இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழவேண்டும் என்பதுதான் இறைவன் நமக்கு விடுக்கும் வேண்டுகோளாக இருக்கின்றது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் மிகப்பெரிய கோடிஸ்வரர் ஒருவர் இருந்தார். அவர் எப்போதும் கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்தவர். கடவுளுடைய பராமரிப்பை தன்னுடைய வாழ்வில் அதிகதிகமாக உணர்ந்தவர். அப்படிப்பட்ட மனிதருடைய வாழ்வில் துன்பங்களுக்கு மேல் துன்பங்கள் ஏற்படத் தொடங்கின.

1831 ஆம் ஆண்டு, சிகாகோ நகரில் பயங்கரத் தீவிபத்து ஏற்பட்டபோது, அவருடைய சொத்துக்கள், உடமைகள் எல்லாம் எரிந்து, நாசமாய் போயின. ஆனாலும் அவர் இந்த மண்ணுலக செல்வம் போனால் என்ன, விண்ணுலகில் கடவுள் எனக்கு செல்வத்தை சேமித்து வைத்திருக்கிறார் என்று ஆறுதல்கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு அவருடைய மனைவியும், நான்கு பிள்ளைகளும் பயணம் செய்த கப்பல் உடைந்து, அதில் பயணம் செய்த 236 பேர் இறந்துபோனார்கள். அவருடைய மனைவியைத் தவிர்த்து, அவருடைய நான்கு பிள்ளைகளும் கடலில் மூழ்கி இறந்துபோனார்கள். அப்போதும் அவர் சோகத்தை அடக்கிக்கொண்டு, என்னுடைய நான்கு மகன்களும் என்னைவிட்டுப் போனாலும், என்னுடைய மனைவி என்னோடு இருக்கிறாரே அதுபோதும் என்று ஆறுதல்கொண்டார்.

இந்த துயர நிகழ்வுகள் நடந்து ஒருசில மாதங்கள் கழித்து, அவரும், அவருடைய மனைவியும் அட்லாண்டிக் கடலில், கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது அவரை அடையாளம் கண்டுகொண்ட ஒரு மனிதர் அவரிடம் வந்து, கடலில் ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக்காட்டி, இந்த இடத்தில்தான் கப்பல் மூழ்கி, அதில் பயணம்செய்த பெரும்பாலானவர்கள், உம்முடைய மகன்கள் உட்பட இறந்துபோனார்கள்" என்றார். இதைக் கேட்டதும் கோடிஸ்வரர் துக்கத்தை அடக்கமுடியாமல் தேம்பித் தேம்பி அழுதார்.

அப்போது அவருடைய உள்ளத்தில் ஓர் எண்ணம் உதித்தது. கடவுள் எனக்கு எத்தனையோ துன்பங்களைத் தந்தாலும், என்னைக் கைவிட்டுவிடவில்லையே, அவர் என்னோடு இருக்கிறார், என்னை வழிநடத்துகிறார்" என்று ஆறுதல்கொண்டார். ஆம், நமது வாழ்வில் நமக்கு எத்தனையோ துன்பங்கள் வந்தாலும் கடவுள் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார். இதுதான் இந்த நிகழ்வு நமக்கு உணர்த்தும் செய்தி.

ஆகவே, இயேசுவின் பிறப்பு விழாவைக் கொண்டாட நம்மை நாம் தயாரித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், நாம் இறைவனுக்கு உகந்தவர்களாக வாழ, நமது பாவ நாட்டங்களை, எண்ணங்களை விட்டுவிட்டு, நற்கனி தரும் மக்களாக வாழ்வோம்; இந்த சமூகத்திற்கு நம்மாலான உதவிகளைச் செய்வோம். அப்போது அமைதியின் அரசர், வியத்தகு ஆலோசகர், நல்ல நடுவர் நமக்கு எல்லாவிதமான ஆசிர்வாதங்களையும் தந்து வழிநடத்துவார்.
 
 
இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
அறிவியல், சமூகம், கல்வித் துறைகளில் மிகப் பெரும் முன்னேற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் கண்கூடாக நாம் பார்க்கிறோம். ஆனால் இந்த முன்னேற்றங்கள் எல்லாம் மனதர்களிடையே உறவுகளை வளர்த்தெடுத்து வளப்படுத்து வதற்குப் பதிலாகச் சீரழிக்கின்றன என்று சொன்னால் மிகையாகாது, பொறாமை, போட்டி மனப்பான்மையைப் பெற்றெடுக்கிறது. அண்ணன்-தம்பி அடிதடி, தந்தை-மகன் தகராறு, மாமியார்- மருமகள் மோதல், கணவன்-மனைவி பிரச்சனை என்று எத்தனையோ சிக்கல்கள் குடும்பத்திலும் சரி, சமூகத்திலும் சரி புரையோடிக் கிடக்கின்றன.

ஒரு மனைவி தன் கணவனைப் பார்த்து, "நாம் திருமணம் முடித்து 25 ஆண்டுகள் நாளை நிறைவு பெறுகிறது. அதற்காக ஒரு ஆட்டை வெட்டி விருந்து செய்து உறவினர்களுக்குக் கொடுக்கலாமா?" என்று கேட்டாள். அதற்கோ கணவன், "என்றோ நடந்த தவறுக்குப் பரிகாரமாக இப்போது ஏன் ஒரு ஆட்டை அநியாயமாகக் கொல்ல வேண்டும்?", என்று பதில் சொன்னானாம். ஆம்! இந்த உறவு நிலைதான் இன்று குடும்பங்களில் காணும் காட்சி. ஆண்டவரின் வருகைக்காலம் நீதி, அமைதி, நேர்மை, ஒற்றுமை உருவாக்கப்பட வேண்டிய காலம்.

இத்தகைய உறவுச் சிக்கலை நீக்கி உறவு வாழ்வுக்கு உயிர்த்தெழ இன்றைய முதல் வாசகத்திலே எசாயா இறைவாக்கினர், வேறு வேறான இயல்புகளைக் கொண்ட மிருகங்களே இணைந்து வாழ்வதாக இயம்புகிறார். சிங்கக் குட்டியும் கொழுத்தக் காளையும் கூடி வாழும்; பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும்; பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும் (எசா.11:6-7). அதேபோல் பல்வேறு இயல்புகளைக் கொண்ட நாம் ஒன்றிணைந்து ஒரே குடும்பமாக வாழ வேண்டும் என்பதே எசாயாவின் எதிர்பார்ப்பும், கனவும் ஆகும். ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இல்லாத சமூகமாக நம் சமூகம் மாற வேண்டும் என்பதே அவரது எதிர்பார்ப்பு. அமெரிக்க கருப்பர்களின் தந்தையாக இருந்த மார்ட்டின் லூத்தர் கிங் என்பவரின் கனவும் இத்தகையதே. வெள்ளையர்களும், கருப்பர்களும் சமத்துவப் பந்தியில் ஒரு நாள் அமர்வார்கள். ஒரு கருப்பர் வெள்ளை மாளிகையிலே ஆட்சி நாற்காலியிலே அமருவார் என்று கூறிய கனவும் நனவாயிற்றல்லவா!

இத்தகைய கனவு வாழ்வை நீங்கள் செயலாக்க, கிறிஸ்து இயேசு உங்களை ஏற்றுக் கொண்டதுபோல, நீங்களும் ஒருவர் - ஒருவரை ஏற்றுக் கொள்ளுங்கள் (உரோ.15:7) என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் அழைப்பு விடுக்கின்றார் பவுல் அடிகளார். நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு தீயில் போடப்படும் என்கிறார் திருமுழுக்கு யோவான் (மூன்றாம் வாசகம்). ஏனெனில் மரத்தின் அடிப்படை இயல்பே கனி தந்து பிறருக்கு உபயோகமாக இருப்பது. இது நடைபெறாதபோது அம்மரத்தினால் பயனில்லை. அதுபோல பிறருக்கு உதவி செய்து அவர்களோடு உறவு கொண்டு வாழ்வதுதான் மனித வாழ்வு. இது நடைபெறாதபோது மனிதர்களால் இந்தச் சமூதாயத்திற்கு எப்பயனும் இல்லை என்பதே திருமுழுக்கு யோவான் சுட்டிக்காட்டும் பாடம் ஆகும்.

ஒரு தந்தை தன் ஐந்து வயது மகனிடம் "உலக வரைப்படத்தைத் தூள்தூளாகக் கிழித்துக் கசக்கிக் இதைச் சரியாகப் பொருத்தித் தந்தால் தகுந்த பரிசு தருவேன்" என்று கொடுத்தார். இந்தச் சிறுவன் ஐந்து நிமிடங்களில் வரைபடத்தைச் சரியாகப் பொருத்தி அப்பாவிடம் கொண்டு வந்தான். "எப்படி உன்னால் மிக வேகமாகப் பொருத்த முடிந்தது?" என்று கேட்டார் தந்தை. "இது மிக எளிது. ஏனெனில் பின்புறம் ஒரு மனிதனின் படம் இருந்தது. அந்த மனிதனின் உருவத்தைச் சரி செய்தவுடன் வரைபடம் தானாக அமைந்தது" என்றான் சிறுவன் மகிழ்ச்சியோடு. ஆம் அதேபோல் நீதியும், நேர்மையும், இணைப்பும், ஒருமைப்பாடும், ஒற்றுமையும் உலகில் உருவாக்க நிறைவு செய்யப்பட வேண்டுமானால், மனிதனின் உருவத்தை ஒழுங்கு செய்ததுபோல, மனித சமுதாயம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

இதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

நீங்கள் மனம் மாறுங்கள் (மத்.3:2). நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள் (மத்.3:8) என்கிறார் திருமுழுக்கு யோவான்.

சகோதரரே,நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று மக்கள் கேட்டபோது நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களி லிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள் (திபா.2:38) என்றார் திருத்தூதர் பேதுரு.

மனமாற்றம் என்பது எதில் அடங்கும் ? கடந்து வந்த பாவ வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைப்பது. தடுமாறிச் சென்ற பாதையை விட்டு வீடு நோக்கி வருவது. ஆம்! பரிசேயர்கள், சதுசேயர்களைப் போல, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளாக, இராது, தாழ்ச்சியோடு நான் பாவி என்று முதலில் ஏற்றுக்கொண்டு கிறிஸ்துவின் மனநிலையைக் கொண்டவர்களாய் (பிலி.2:5) நமக்கு அடுத்திருப்பவர்களை கிறிஸ்து ஏற்றுக்கொள்வதுபோல நாம் ஏற்றாக வேண்டும். இதனால் நம்மிடையே எழுகின்ற கோபம், பொறாமை, கர்வம், ஆணவம் அனைத்திற்கும் முற்றுப் புள்ளி வைத்தாக வேண்டும்.
 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
 அறிவுத் தெளிவு அடைவோம்.

இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான், மனம் மாற நம்மை அழைக்கின்றார் (மத் 3:1-2). மனம் என்றால் என்ன? நம்மிடம் பதினைந்து புலன்கள் உள்ளன. இந்தப் புலன்களின் கூட்டுதான் உடல்.

நம்மிடம் ஐம்புலன்களாம் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை உள்ளன. நமது வீட்டை விட்டு வெகுதூரத்தில் இருந்து கொண்டு, நமது மனக்கண்ணால் நமது வீட்டைப்பார்க்கலாம். நமக்குள்ளே ஒரு கண் உண்டு. நேற்று யாரோ நம்மைப்பற்றிப் பேசியதை இன்று நாம் நமது அகக் காதால் கேட்கலாம். இவ்வாறு உள்வாங்கப்பட்ட ஐந்து வெளிப்புலன்கள் நமக்குள் உள்ளன. இவற்றைத் தவிர ஆசை. அறிவு. நினைவு. கற்பனை. உணர்வு என்ற ஐந்து உள்புவன்களும் நமக்குள் உள்ளன.

மனம் என்பது ஒரு காசு ! அதற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒரு பக்கத்தின் பெயர் ஆசை, மற்றொரு பக்கத்தின் பெயர் அறிவு. பதினைந்து புலன்களில் ஆற்றல் மிக்கதும் சுதந்தரமாகச் செயல்படுவதும் ஆசை! அறிவு தனக்குப் புலன்களால் கிடைக்கும் அனைத்துச் செய்திகளையும் ஆசைமுன் சமர்ப்பிக்கும். ஆசையின் ஆணைக்கிணங்க அறிவு செயல்படும். அறிவின் ஆணைக்கிணங்க மற்ற புலன்கள் செயல்படுகின்றன.

மனமாற்றம் என்பது தெளிவான எண்ணங்களால், கருத்துக்களால், செய்திகளால் நமது அறிவை நிரப்புவதில் அடங்கியுள்ளது. தெளிவான செய்திகளை ஆசையின் முன்னால் அறிவு சமர்ப்பிக்கும் போது எந்தவித தடுமாற்றமும் இவ்லாமல் சரி என்று சொல்லும் நாம் சரியான வழியில் நடப்போம்.

அறிவுத்தெளிவு என்றால் என்ன? என்பதை நமக்குக் கற்பிக்க நம் முன்னே காணாமற்போன மகன் (லூக் 15:11 32) வந்து நிற்கின்றான்.

ஊதாரி மகனின் மனமாற்றம் அறிவுத் தெளிவோடு துவங்குகின்றது (லூக் 15:17). அவன் எவ்வாறு அறிவுத்தெளிவு அடைந்தான் என்பதை ஆராய்ந்து பார்த்தால், அவன் ஆன்மிக வாழ்வில், மூன்று படிகளில் ஏறிச்சென்றதை நாம் காண்கின்றோம்.

1.அவன் தந்தையோடு வாழ்ந்த நாள்களை எண்ணிப் பார்க்கின்றான். தன்னுடைய மதிப்பையும், மரியாதையையும் இழந்துவிட்டதை உணர்கின்றான். இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன் : உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன் (லூக் 15:19) என்கின்றான்.
2.அவன் எழுந்து தந்தையிடம் செல்ல முடிவெடுக்கின்றான் (லூக் 15:18). பன்றிகளா? இல்லை பண்பாடு நிறைந்த தந்தையா? அவன் ஒரு முடிவு எடுத்தான் : என் தந்தையே எனக்கு வேண்டும். இந்த முடிவை எடுக்க அவனைத் தூண்டியவை எவை? ஒன்று மீண்டும் தந்தையின் அன்பைச் சுவைக்க வேண்டும் என்ற எண்ணம்; மற்றொன்று அவனுடைய தந்தை அவனை ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கை.
3.தாறுமாறான வாழ்க்கையை (லூக் 15:13ஆ) ஊதாரி மகன் விட்டுவிட்டான்.

அறிவுத் தெளிவு என்னும் விளக்கை ஊதாரி மகன் தனக்குள் ஏற்றியபோது அவனுக்கு ஆன்மிக விடுதலை, மனமாற்றம் கிடைத்தது.

நாம் மனம் திரும்ப விரும்பினால் ஊதாரி மகன் போல நம்முடைய அறிவை தெளிவான எண்ணங்களால், கருத்துக்களால் அலங்கரித்துக்கொள்ள வேண்டும்.

இயேசு பிறப்புப் பெருவிழாவின்போது நாம் யாரைச் சந்திக்கப்போகின்றோம்? ஆண்டவரால் அருள்பொழிவு செய்யப்பட்டவரை, நீதியின் தேவனை, நேர்மையின் அண்ணலை, அமைதியின் அரசரைச் சந்திக்கப் போகின்றோம் (எசா 11:1-10) என்ற எண்ண விதையை நாம் நமது அறிவு என்னும் நிலத்திலே தூவவேண்டும். அந்த விதை முளைக்கும்போது இயேசுவோடு வாழவேண்டும் என்ற ஆசை என்னும் நீரை ஊற்றி, என் பாவங்களை இயேசு மன்னித்துவிடுவார் என்ற நம்பிக்கை என்னும் உரமிட்டு, புதிய வாழ்வு என்னும் பந்தலிட்டு, அறிவு நிலத்திலே வளரும் மனமாற்றம் என்னும் செடியை நாம் வளர்க்க வேண்டும்.

மனமாற்றத்திற்குத் தேவையானவை இரண்டு : ஒன்று மனமாற்றம் அடைந்தே தீருவேன் என்ற மன உறுதி ; மற்றொன்று ஆன்மிக வாழ்வில் உயர, உயரப் பறப்பேன் என்ற ஊக்கம். இவையிரண்டையும் கடவுள் தருவார் என்கின்றார் புனித பவுலடிகளார் (இரண்டாம் வாசகம்).

ஒரு மலைமீது ஓர் அழகிய வீடு. அந்த வீட்டுக்குள்ளே ஒரு பணக்காரப்பெண். அவர் வயது முதிர்ந்தவர். அவர் வீட்டை விட்டு வெளியே வருவது கிடையாது. அவரைப் பார்க்க விடுமுறையின்போது அவரது பேத்தி வந்தாள். சுகமா? என்றாள். எல்லாம் சுகமே! கண் பார்வைதான் மங்கிப் போய்விட்டது. இப்பொழுதெல்லாம் இயற்கையின் அழகை என்னால் இரசிக்க முடியவில்லை என்றார். பேத்தி வீட்டைச் சுற்றிப் பார்த்தாள். சன்னலிலிருந்த கண்ணாடிகளில் படிந்திருந்த தூசியைத் துடைத்தாள். பாட்டி இப்போது பாருங்கள் என்றாள். பாட்டி இயற்கையை இரசித்து ஆனந்தக் கூத்தாடினார்.

நமது அறிவு என்னும் கண்ணாடியிலிருக்கும் பாவத்தை மனமாற்றம் என்னும் துணிகொண்டு துடைத்து எல்லாம் வல்ல இறைமகன் இயேசுவைக் கண்டு மகிழ்ச்சி நிறை கிறிஸ்துமஸ் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்வோம். மேலும் அறிவோம்:

அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழம் இல (குறள்:39).

பொருள்: அறச் செயல்களால் வருவது மட்டுமே உண்மையான இன்பம் ஆகும்; புகழையும் தரும். அதற்கு மாறான வழியில் வருபவை இன்பம் போலத் தோன்றினாலும் துன்பம் ஆகும்; புகழையும் கெடுக்கும்!
 
 
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
ஒரு பெண் தமக்குப் புதுமை செய்யும் வல்லமை இருப்பதாகச் சொன்னார். மக்கள் கூட்டம் அவருடைய வீட்டில் அலை மோதியது. இதைக் கேள்விபட்ட ஆயர், அப்பெண்ணிடம் உண்மையிலேயே கடவுளின் வல்லமை செயல்படுகிறதா என்பதை அறிந்து வரும்படி ஒரு குருவை அனுப்பினார். அக்குரு சேறும் சகதியும் நிறைந்த ஒரு பாதை வழியாக அப்பெண்ணின் வீட்டுக்குச் சென்று, அப்பெண்ணிடம் சகதி படிந்த தனது செருப்பையும் கால்களையும் கழுவச் சொன்னார். அதற்கு அப்பெண் மறுத்துவிட்டார். அந்த குரு ஆயரிடம் திரும்பி வந்து அப்பெண்ணிடம் கடவுளின் வல்லமை கடுகளவும் இல்லை; ஏனெனில் அவரிடம் தாழ்ச்சி இம்மி அளவும் இல்லை என்று கூறினார்.

எங்கு தாழ்ச்சி இல்லையோ அங்கு கடவுளின் செயல்பாட்டை எதிர்பார்க்க முடியாது. தலை சிறந்த போதகராகிய திருமுழுக்கு யோவான் தாழ்ச்சிக்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு. அவர் ஆடம்பரத்தை அகற்றி, எளிய உடை உடுத்தி, எளிய உணவு உண்டு நகரத்தில் ஆரவாரத்தை வெறுத்து, பாலை நிலத்தில் தமது பணியைத் தொடங்கினார். அவர் இன்றைய நற்செய்தியில் தம்மைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்: "எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வல்லமை மிக்கவர், அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை" (மத் 3:11). ஒரு குருவின் காலணியைச் சுத்தம் செய்து கொடுக்க மறுத்தத் தலைக் களம் கொண்ட பெண் தம்மிடம் கடவுளுடைய வல்லமையுள்ளது என்று பெருமிதம் கொள்கிறார். ஆனால் கடவுளுடைய வல்லமை கொண்ட பெரிய இறைவாக்கிளர் திருமுழுக்கு யோவான் மெசியாவின் காலணியைத் தூக்கிச் செல்லக்கூடத் தமக்குத் தகுதியில்லை என்று கூறித் தம்மைத் தாழ்த்துகிறார்
.

பொற்கொல்லர்கள் தங்கத்தின் தரத்தை அறிய உரைக் கல்லைப் பயன்டுத்துகின்றனர். ஆனால் ஒரு மனிதரின் தரத்தை அறிய அவரது செயல்களை உரைகல்லாகக் கொண்டு முடிவு செய்ய வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக்கல். (குறள் 505)

ஒருவர் கடவுளுக்கு நெருக்கமானவரா அல்லது தூரமானவரா என்பதை அறிய நாம் பயன்படுத்தும் உரைகல் அவரிடத்தில் தாழ்ச்சி இருக்கிறதா அல்லது இல்லையா என்பதுதான். ஏனெனில் புனித பேதுரு கூறுகிறார்: "செருக்குற்றோரைக் கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார். தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்" (1 பேதுரு 5:5).

திருமுழுக்கு யோவான் யூதர்களை மனமாற்றத்திற்கு அழைத்தார் (மத 3:1). ஆனால் அவர்களோ ஆணவம் பிடித்தவர்களாக, ஆபிரகாம் பிள்ளைகள் என்ற தலைக்களம் கொண்டவர்களாக இருந்தனர். அவர்களிடம் திருமுழுக்கு யோவான் கூறினார்: "ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை என உங்களிடையே சொல்லிப் பெருமிதம் கொள்ள வேண்டாம்* (மத் 3:9) ஆபிரகாமைப்போல அவர்கள் தங்களது நம்பிக்கையைச் செயல்களில் காட்டவில்லையென்றால், அதாவது கிறிஸ்துவை மெசியாவாக ஏற்றுக் கொள்ளவில்லையென்றால், நற்கனி கொடாத மரங்களைப் போல் வெட்டப்பட்டு எரி நெருப்பில் சுட்டெரிக்கப்படுவா என எச்சரித்தார் திருமுழுக்கு யோவான்.

கடவுளால் சிறப்பாகத் தேர்ந்துகொள்ளப்பட்ட கிறிஸ்தவர்களாகிய நம்மிடம் ஆணவம் தலைகாட்டக் கூடாது நாம் மீட்கப்பட்டவர்கள் என்பது உண்மையாயின் அதை நமது நற்செயல்களில் மூலம் எண்பிக்க வேண்டும். குறிப்பாக, தாழ்ச்சியின் மூலம் காட்ட வேண்டும், நம்மிடையே போட்டிப் பொறாமை, சண்டைச் சச்சரவு இருக்கக் கூடாது. "நீங்கள் அனைவரும் ஒருமனப்பட்டுக் கடவுளைப் புகழுங்கள்: ஒருவர் ஒருவரை ஏற்றுக்கொண்டு கடவுளைப் பெருமைப்படுத்துங்கள்" (உரோ 15:7) என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் அறிவுறுத்துகிறார் புனித பவுல்.

ஒரு பங்குத் தந்தை ஒருநாள் காலையில் பங்கு வளாகத்தில் ஒரு கழுதை செத்துக்கிடப்பதைக் கண்டு அதைப்பற்றி நகராட்சி அலுவலகத்துக்குத் தொலைபேசி மூலம் தெரிவித்தார். தொலைபேசியை எடுத்த நகராட்சி அலுவலர் பங்குத் தந்தைக்கு எரிச்சல் ஊட்டும் வகையில், "இறந்தவர்களை நல்லடக்கம் செய்வது பங்குக் குருவின் கடமை" என்றார். பங்குக் குரு மிகவும் பொறுமையுடன், *இறந்தவர்கள அடக்கம் செய்யுமுன் சொந்தக்காரர்களிடம் தெரிவிக்க வேண்டாமா? அதனால்தான் உங்களுக்குத் தெரிவித்தேன்" என்றார். நகராட்சி அலுவலர் பங்குத் தந்தையை முட்டாள் ஆக்க. பங்குத் தந்தை தாள் நகராட்சி அலுவலருக்குச் சற்றும் இளைத்தவர் அல்ல என்பதைக் காட்டினார். இவ்வாறு ஒருவர் ஒருவரை முட்டாளாக்கும் இவ்வுலகில், "மனத் தாழ்மையுடன் மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவர்களாகக் கருதுங்கள்" என்று அழைப்பு விடுக்கிறார் புனித பவுல் (பிலி 2:3)

ஒருவர் இரவில் கூடக் கண்ணாடி போட்டுக் கொண்டு தூங்கினார். ஏன்? என்று அவரைக் கேட்டதற்கு அவர்: "இரவில் நான் காணும் கனவு சரியாகத் தெரிவதில்லை" என்றார். நாம் பற்பல கனவுகள் காண்கின்றோம். ஆனால் கடவுளின் கனவு என்ன என்பதை இன்றைய முதல் வாசகத்தில் இறைவனே இறைவாக்கினர் எசாயா வாயிலாகக் கூறுகிறார்: "கடவுனின் ஆட்சியில் நீதியும் நேர்மையும் கோலோச்சும்... செம்மறியும் சிங்கமும் ஒன்றாகப் படுத்துறங்கும். எவரும் மற்றவர்க்குத் தீமையோ கேடோ விளைவிக்கமாட்டார்கள்* (எசா 11:4-9) இன்றைய பதிலுரைப் பாடலும், 'அவர் காலத்தில் நீதி தழைத்தோங்கும், மிகுந்த சமாதானம் நிலவும்" (திபா 72:7) எனக் கூறுகிறது.

இறையாட்சியின் தனித்தன்மை நீதியும் சமாதானமும், நீதியின் கனிதான் சமாதானம், இன்று வல்லரசுகள் ஏழை நாடுகளைப் பற்றிக் கவலைப்படாமல் ஏழை நாடுகளைச் சுரண்டுகின்றனர். செல்வத்தைக் குவிக்கின்றனர். அணு ஆயுதங்களைப் பெருக்குகின்றனர். வளரும் நாடுகளிலும்கூட ஒருவர் செல்வச் செருக்குடன் வாழ, பலர் வறுமையில் வாடுகின்றனர். இன்றைய உலகின் இருபெரும் தீமைகள்: தனியாள் ஆணவமும் குழுக்களின் ஆணவமும் ஆகும். இந்தத் திருவருகைக்காலம் நம்மைத் தனியான் ஆணவத்திலிருந்து விடுவித்து நம்மிடம் தாழ்ச்சி என்ற பண்பை வேரூன்றச் செய்ய வேண்டும். அவ்வாறே குழுக்கள் தங்களுடைய குழு ஆணவத்திலிருந்து விடுதலை பெற்று. ஏழை எளியவர்களுடன் தங்கள் செல்வத்தையும் அதிகாரத்தையும் பகிர்ந்து கொள்ள முன்வர வேண்டும். ஏனெனில் கடவுள் "தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியவர்களையும் விடுவிப்பார். வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்" (திபா 72:12-13).
 
 
 
திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை

கனவொன்று காண்கிறேன்

அமெரிக்காவில் கருப்பின மக்களின் சம உரிமைக்காகப் போராடியவர் மார்ட்டின் லூத்தர் கிங். அவரது கனவும் இறைவாக்கினர். ஏசாயாவின் கனவு (11:6-9) போன்றதே! கருப்பின மக்கள் அடிமை- களாகக் கொடுமைக்கு ஆளாகிய சூழ்நிலையில் அவர் நிகழ்த்திய உலகப் புகழ்பெற்ற 'கனவொன்று காண்கிறேன்" என்ற பேருரை அவரின் கனவை நம் கண்முன் நிறுத்துகிறது. எல்லோரும் சமம் என்ற உண்மையை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்ற வாய்மொழி அறிக்கையை இந்நாடு உண்மையிலேயே தன் வாழ்வாக்கும் என்று கனவு காண்கிறேன். ஜியார்ஜியா எனப்படும் இடத்தில் உள்ள செம்மலைகளில் அடிமைகளின் மகன்களும் அவர்களது முதலாளிகளின் மகன்களும் சமத்துவப் பந்தியில் ஒருநாள் அமர்வார்கள் என்று கனவு காண்கிறேன். அளவற்ற அநீதியாலும், அதீத அடக்குமுறையாலும் கொதித்துக் கொண்டிருக்கும் மிசிசிபி மாநிலம் சுதந்திரமும் நீதியும் திகழும் சோலையாக மாறும் எனக் கனவு காண்கிறேன். பள்ளத்தாக்குகள் எல்லாம் உயர்த்தப்படும் என்றும் மலைகள் குன்றுகள் தாழ்த்தப்படும் என்றும் மேடுபள்ளங்கள் சமதளமாகவும் கோணலானவை நேராகவும் மாறும் என்றும் கடவுளின் மாட்சி எல்லா இடங்களிலும் நிரம்பி இருப்பதை அனை வரும் கண்டுணர்வர் என்றும் கனவு காண்கிறேன். ஒருநாள் நாங்கள் அனைவரும் சுதந்திரமானவர்களாக இருப்போம் என்ற நம்பிக்கையில்- தான் ஒன்றாக உழைக்கிறோம். ஒன்றாகச் செபிக்கிறோம். ஒன்றாகப் போராடுகிறோம்".

இந்தக் கனவு இன்று அமெரிக்க அதிபர் ஒபாமாவில் அரியணை கண்டுள்ளது.

அதுபோல் அன்று பாலைவனத்தில் ஒரு குரல் - இறைவனின் எச்சரிக்கையாக: "மனம் மாறுங்கள். ஏனெனில் விண்ணாக நெருங்கி வந்துவிட்டது . (மத்.3:2)

மெசியாவின் அரசு சமத்துவம், சகோதரத்துவம், அன்பு, நீதி நிலவும் அரசு, அந்த அரசு தமிழ் இலக்கிய அரசாக எப்படியெல்லாம் நிழலாடுகிறது!

மிதிலையில் விசுவாமித்திரர் இராமனது குலப்பெருமையைப் பற்றி "புலிப்போத்தும் புல்வாயும் ஒரு துறையில் நீருண்ண... என்பார். அதாவது புலியும் மானும் ஒரு துறையில் நீர் அருந்துமாம். நளனது செங்கோல் சிறப்பைப் பற்றிப் புகழேந்தி பாடுவார்... "மாதர் அருகூட்டும் பைங்கிளியும் ஆடற்பருந்தும் ஒரு கூட்டில் வாழ உலகு" பருந்தும் பைங்கிளியும் ஒரு கூட்டில் குடியிருக்குமாம்.

இறைவாக்கினர் எசாயா முன்னுரைத்ததும் இதுதானே! "அந்நாளில் ஓநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும். அக்குட்டியோடு சிறுத்தைப்புலி படுத்துக் கொள்ளும்.. பசுவும் கரடியும். ஒன்றாய் மேயும்... பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையாடும்... என் திருமலை முழுவதிலும் தீமை செய்வார். எவருமில்லை...."(எசா.11:6-9)

படிக்கப்படிக்க நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தும் வரிகள்! எவ்வளவு பரவசமோ அவ்வளவு சந்தேகமும் கூட.

இங்கு எழும் கேள்வி: எசாயா கூறிய காலம் வந்து விட்டதா, அல்லது..? மெசியா வந்துவிட்டாரே, இன்னும் அநீதி தலைவிரித்துத் தாண்டவமாடத் தானே செய்கிறது! 'மனிதனை மனிதன் சாப்பிடுறாண்டா, தம்பிப் பயலே' என்ற அந்தப் பழைய பாட்டு இன்றும் பொய்த்துப் போய்விட வில்லையே! 'மனிதன் மனிதனுக்கு ஓநாய்' என்ற இலத்தீன் பழமொழி இன்றும் உண்மை அல்லவா! புவி புலியைத் தின்னாது. ஓநாய் ஓநாயைக் கடிக்காது. மனிதனோ மனிதனைக் கடித்துக் குதறுகிறான்.

மீட்பர் வந்து விட்டார். உலகுக்கு மீட்பும் விடுதலையும் தந்து விட்டார். ஆனால் அந்த மீட்பை, விடுதலையை உலகம் இன்னும் தனதாக்கிக் கொள்ளவில்லை. அந்த மீட்பின் நிறைவு காலம் இனிமேல் தான் வா இருக்கிறது. "இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது" (உரோமை.8:19) வான்மழை கொட்டோ கொட்டு என்று கொட்டினாலும் திறந்த நிலையில் பாத்திரத்தை நீட்டினால் தானே நீர் நிரம்பும்! என்று வரும் அந்தக்காலம் என்ற ஏக்கம் நிறைவுற திருமுழுக்கு. யோவான் மனந்திரும்புதலுக்கு அழைக்கிறார்.

உரோபை மாநகரில் குருக்களின் கூட்டத்தில் உரையாற்றிய திருத்தந்தை 2ஆம் அருள்சின்னப்பர் "இப்போது ஆண்டவர் இயேசு என்ன செய்து கொண்டிருக்கிறார்?" என்று கேட்டாராம். ஒவ்வொரு குருவும் ஒவ்வொரு விதமாய் பதில் அளித்தனராம். இறுதியாக திருத்தந்தை மத்.3:12ஐ மேற்கோள்காட்டி தனது சொந்தக் களமாகிய திருச்சபையைத் தூய்மைப்படுத்தலில் ஈடுபட்டிருக்கிறார் என்று கூறிக் குருக்கள் எச்சூழ்நிலையிலும் தங்கள் அழைப்பின் பிரமாணிக்கத்தைக் காட்ட வேண்டிய அவசியத்தைப் பற்றி எடுத்துக் கூறினாராம். இறைமக்கள் அனைவருமே கவலையுடனும் கவனத்துடனும் சிந்தித்துச் செயல்படவேண்டிய அறிவுரை இது.

"ஏற்கனவே மரங்களின் வேரருகே கோடரி வைத்தாயிற்று" (மத்.3:10) - தீமையை வேரறுக்க.

மரங்களின் வேரடியில் கோடரி ஏன்? வேரை விட்டு வைத்தால் மீண்டும் தளிர்த்து விடும்.

இறையாட்சி வரப் போகிறது என்பதைக் காட்டும் செயல் என்ன? திருத்தூதர் பவுல் சொல்வார் : "கிறிஸ்து உங்களை ஏற்றுக் கொண்டது போல நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ளுங்கள். அப்போது கடவுளைப் பெருமைப்படுத்துவீர்கள்". (உரோமை. 15:7)
 
 
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி

அவசர கிறிஸ்மஸ் வேண்டாம்
ஐரோப்பிய வரலாற்றில் தனியிடம் பெற்ற ஒரு நிகழ்வு, 1989ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி, இடம்பெற்றது. ஜெர்மன் நாட்டை, கிழக்கு, மேற்கு என்று இரண்டாகப் பிரித்திருந்த பெர்லின் சுவர், அன்று வீழ்த்தப்பட்டபோது, உலகின் பல நாடுகளில், மக்கள் மகிழ்ந்தனர். மக்கள் தாங்களாகவே இணைந்து மேற்கொண்ட சமுதாயப் புரட்சியால், ஜெர்மனி, ஒரே நாடாக இணைந்தது என்று வரலாறு சொன்னது. ஆனால், விரைவில், அந்த வரலாற்று நிகழ்வு, வர்த்தகப் பொருளாக மாற்றப்பட்டது. இடிக்கப்பட்ட அந்தச் சுவர், சிறு சிறு துண்டுகளாக்கப்பட்டு, நினைவுப் பொருள்களாக விற்பனை செய்யப்பட்டன. பெர்லின் சுவர் என்று சொல்லி, போலித் துண்டுகளும் விற்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

2001ம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி, நியூயார்க் நகரில், உலக வர்த்தகக் கோபுரங்கள் இரண்டு, விமானங்களால் தாக்கப்பட்டு, இடிந்து விழுந்தன. அமெரிக்க ஐக்கிய நாட்டு வரலாற்றைக் காயப்படுத்திய ஒரு நிகழ்வு இது என்று கூறப்பட்டது. இக்கோபுரங்களின் இடிபாடுகளும், நினைவுப் பொருள்களாக விற்பனை செய்யப்பட்டன.
கடந்த மூன்று ஆண்டுகளாக மனித குடும்பத்தை வதைத்து வரும் கோவிட் பெருந்தொற்று காலத்தில், மக்களின் நலனுக்காக தங்கள் உயிரையும் பணயம் வைத்து உழைத்த மருத்துவர்களையும், உதவியாளர்களையும் நாம் மறக்க இயலாது. அதே நேரம், மக்களின் உடல் நலனையும், வேதனையையும் மூலதனமாக்கி பல மருத்துவ மனைகளும், மருத்துவ நிறுவனங்களும் செல்வம் சேர்த்துள்ளன என்பது நம்மை வெட்கத்திலும், வேதனையிலும் ஆழ்த்துகிறது. அத்துடன், கோவிட் பெருந்தொற்றை கண்டுபிடிக்க உதவும் கருவிகளிலும், இந்த பெருந்தொற்றிற்கு பயன்படுத்தப்பட்ட தடுப்பு மருந்துகளிலும் போலிகளும், கலப்படங்களும் செய்யப்பட்டன என்பது, வர்த்தக உலகின் பேராசை வெறியை வெளிச்சமிட்டு காட்டியது.

சமுதாயப் புரட்சி, தீவிரவாதத் தாக்குதல், மக்களை வதைக்கும் பெருந்தொற்று என்று இவ்வுலகில் எந்நிகழ்வு நடந்தாலும், அதை, எவ்விதம் விற்பனை செய்யமுடியும் என்பதில், வர்த்தக உலகம், தீவிர முயற்சிகள் மேற்கொள்கிறது. அனைத்தையும் விற்பனைப் பொருளாக்கி, விலைபேசும் இப்போக்கு, மதம், கல்வி, நலவாழ்வு, என்ற அனைத்திலும் ஊடுருவியிருப்பது, வேதனையளிக்கிறது.

புனிதமான உண்மைகளையும், உணர்வுகளையும் கொண்டாடுவதற்கென்று உருவாக்கப்பட்ட சமய விழாக்கள் அனைத்திலும், வர்த்தக வாடை வீசுவதை நாம் அறிவோம். சமய விழாக்களை எவ்வகையில் கொண்டாடவேண்டும் என்று, வியாபார உலகம் வழிகாட்டுகிறது. சமய விழாக்களின் அடிப்படையாக விளங்கும் உண்மைகள், சவால்கள் நிறைந்தவை என்பதால், அவற்றைப் பற்றிய எண்ணங்களுக்கு முதலிடம் கொடுக்காமல், நமது சமய விழாக்களை பொழுதுபோக்கு அம்சங்களால் நிறைப்பது, வர்த்தக உலகின் குறிக்கோளாக விளங்குகிறது. வர்த்தக உலகம் விளம்பரப்படுத்தும் பொழுதுபோக்கு அம்சங்களில் அதிகம் சிக்கியிருப்பது, நம் கிறிஸ்மஸ் விழா.

"அவசரப்பட்டு கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை ஆரம்பிக்காதீர்கள், தயவுசெய்து, டிசம்பர் 24 இரவு வரை காத்திருங்கள்" என்று, அமெரிக்காவின் Salt Lake City மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் John Wester அவர்கள் (தற்போது Santa Fe பெரு மறைமாவட்டத்தின் பேராயர்), சில ஆண்டுகளுக்கு முன், தன் மறைமாவட்ட மக்களுக்கு ஒரு வேண்டுகோள் மடலை அனுப்பினார். ஆயர் அனுப்பிய அந்த வேண்டுகோளை, வியாபார உலகின் பிடியிலிருந்து, கிறிஸ்மஸ் விழாவை விடுதலை செய்யும் ஒரு முயற்சியென்று பாராட்டலாம்.

ஆயர் Wester அவர்கள், இவ்வாறு சொன்னதற்குக் காரணம் என்ன? அமெரிக்காவில், ஒவ்வோர் ஆண்டும், நவம்பர் மாதத்தின் 4வது வியாழன், நன்றியறிதல் நாள் என்று கொண்டாடப்படும். இறைவன் அளித்த நல்ல அறுவடைக்கு நன்றி சொல்லும் நாளாக, இந்நாளை, மக்கள் கொண்டாடிவந்தனர். ஆனால், வியாபார உலகம், விரைவில், இந்நாளை, ஒரு விடுமுறை கொண்டாட்டமாக மாற்றிவிட்டது. தற்போது, இந்த நன்றியறிதல் நாள், மத உணர்வு அதிகமற்ற சமுதாயத் திருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த விழா முடிந்த கையோடு, வியாபார உலகம், கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களைத் துவக்கிவிடும். வியாபார உலகம் ஆரம்பித்து வைக்கும் இந்த கிறிஸ்மஸ் விழாவை, ஆடம்பரமாக, ஆர்ப்பாட்டமாக கொண்டாடச்சொல்லி, விளம்பரங்கள் தூண்டிவிடும். இந்தத் தூண்டுதலுக்கு இணங்க, ஒரு மாத அளவு கொண்டாடிவிட்டால், டிசம்பர் 24ம் தேதி இரவு, உண்மையான கிறிஸ்மஸ் வரும்போது, நாம் அனைவரும் களைத்துப் போய்விடுவோம் என்ற அக்கறையுடன், ஆயர் Wester அவர்கள், அந்த எச்சரிக்கையைத் தந்தார். களைத்துமட்டும் போய்விடமாட்டோம், கலைந்தும் போய்விடுவோம். வியாபார உலகம் விரிக்கும் மாயவலைக்குள் அகப்பட்டு, ஒவ்வொரு திருநாளின் உட்பொருளை விட்டுக் கலைந்து, வேறு வழிகளில் நம் மனங்கள் சிந்திக்கின்றன என்பது, வேதனையான உண்மை.

கிறிஸ்து பிறப்பு விழாவின் உண்மைப் பொருளை உணர்வதற்கு நமக்கு வழங்கப்பட்டுள்ள வரம்நிறைந்த காலம், திருவருகைக் காலம். இறைவன் வருவார் என்ற எதிர்பார்ப்புடன் நாம் காத்திருக்கும் காலம் இது. ஆனால், இறைவன் எந்த வடிவில் வருவார் என்பதை நாம் அறியோம். நாம் எதிர்பாராத வழிகளில் வந்து, நம்மை வியப்பில் ஆழ்த்துவது, இறைவனுக்கே உரிய அழகு. இறைவனின் வரவு, நம்மை, வியப்பிலும், சில வேளைகளில் அதிர்ச்சியிலும் ஆழ்த்தமுடியும் என்பதைக் கூறும் பல கதைகளை நாம் கேட்டிருக்கிறோம். அத்தகைய கதைகளில் இதுவும் ஒன்று.

வசதிமிகுந்த நகரப் பங்குக் கோவில் ஒன்றில், ஞாயிறு திருப்பலிக்காக மக்கள் கூடிவந்தனர். அன்று, அந்த பங்கிற்கு புதிய பங்கு அருள்பணியாளர் வருகிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், வழக்கத்திற்கு மேலாக மக்கள் பெருமளவில் கோவிலுக்கு வந்திருந்தனர். கோவிலுக்கு வெளியே, வீடற்ற ஒருவர் அமர்ந்து, கோவிலுக்குள் செல்வோர் அனைவருக்கும் வணக்கம் சொல்லிக்கொண்டிருந்தார். ஒருசிலர் மட்டும் அவருக்கு பதில் வணக்கம் சொன்னார்கள். அவருக்கு முன் வைக்கப்பட்டிருந்த தொப்பியில் ஒருவரும் தர்மம் எதுவும் தரவில்லை.
திருப்பலி நேரம் நெருங்கியபோது, வீடற்ற அம்மனிதர், கோவிலுக்குள் புகுந்து, பீடத்தை நோக்கி நடந்துசென்றார். அங்கிருந்த ஒரு பெரியவர், அவருக்குப்பின் விரைந்து சென்று, அவரைத் தடுத்து நிறுத்தி, அவரை, கோவிலின் பின்பக்கம் சென்று அமருமாறு கேட்டுக்கொண்டார். வீடற்ற மனிதரும், ஒரு புன்சிரிப்புடன், இறுதி பெஞ்சில் சென்று அமர்ந்தார்.

பங்குப் பேரவையின் தலைவர், பீடத்திற்குச் சென்று, "நம் பங்கிற்கு வரவிருக்கும் புதிய பங்குத்தந்தையை நீங்களோ, நானோ பார்த்ததில்லை. சில நிமிடங்களுக்குமுன் என் தொலைப்பேசிக்கு அவர் ஒரு செய்தியை அனுப்பியுள்ளார். அவர் ஏற்கனவே நம் மத்தியில் வந்துவிட்டதாக அவர் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்" என்று கூறினார். அமர்ந்திருந்த மக்கள், ஆர்வத்துடன், வாசலை நோக்கித் திரும்பி நின்று, கரவொலி எழுப்ப ஆரம்பித்தனர். அவ்வேளையில், இறுதி பெஞ்சில் அமர்ந்திருந்த வீடற்ற மனிதர் எழுந்து, பீடம் நோக்கி நடந்தார். கரவொலி, சிறிது சிறிதாக அடங்கிப்போனது. அனைவரும் அதிர்ச்சியுடன் அம்மனிதரைப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தனர்.

பீடத்திற்குச் சென்ற அம்மனிதர், தான், அப்பங்கின் புதிய பங்குத்தந்தை என்று தன்னையே அறிமுகப்படுத்தினார். பின்னர், அன்று காலையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை மக்களிடம் சொல்ல ஆரம்பித்தார். அவர் பேச, பேச, அங்கிருந்தோர், தலையை நிமிர்த்தி அவரைப் பாக்கமுடியாமல் அமர்ந்திருந்தனர். ஒரு சிலரது கண்களில் கண்ணீர் வழிந்தது. "இன்று இங்கு நடந்தது நமக்கெல்லாம் நல்லதொரு பாடம். வீட்டுக்குச் சென்று இதைப்பற்றி சிந்திப்போம். அடுத்தவாரம் நாம் மீண்டும் சந்திப்போம்" என்று, அப்புதிய பங்குத்தந்தை கூறி, மக்களை அனுப்பிவைத்தார்.இறைவன் இவ்வடிவில்தான் வருவார், அவரது வரவை இப்படித்தான் கொண்டாடவேண்டும் என்று, சில வர்த்தக மந்திரங்களைச் சொல்லித்தரும் இவ்வுலகின் வழிகளிலிருந்து விலகி, அவரது உண்மையான வரவுக்காக, வழிமேல் விழிவைத்து காத்திருக்க, இந்த ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கிறது. இறைவனின் வரவுக்காக நம்மையே எவ்விதம் தயாரிப்பது என்ற வழிமுறைகளை, திருமுழுக்கு யோவான், இன்றைய நற்செய்தியில், ஓர் எச்சரிக்கையாக விடுக்கிறார்.

அவர் இன்றைய நற்செய்தியில் சொல்லியிருக்கும் வார்த்தைகள், எவ்வித இனிப்பும் கலக்காத, கசப்பான உண்மை. கசப்பான மருந்து. இத்தகைய உண்மைகளை மறைத்து, அந்த உண்மைகளைச் சொல்பவர்களை மறைத்து, மற்ற கனவு நாயகர்களை, அவர்கள் விளம்பரப்படுத்தும் வியாபாரக் கொண்டாட்டங்களை நம் மனங்களில் பதிய வைப்பதுதானே, வர்த்தக உலகின் விருப்பம்.
"கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை இவ்வளவு சீக்கிரம் ஆம்பிக்காதீர்கள்" என்று சொன்ன ஆயர் Wester அவர்களை, வாய்ப்பு கிடைத்தால், வியாபார உலகம் கடத்திக் கொண்டுபோய், கிறிஸ்மஸ் முடியும்வரை கண்காணாத இடத்தில் வைத்துவிடும். கசப்பான உண்மைகளைச் சொன்ன திருமுழுக்கு யோவானை, யூத மதத் தலைவர்கள், இந்த உலகைவிட்டே அனுப்பத் துடித்தார்கள். ஏரோது மன்னன் வழியே, விரைவில், அனுப்பியும் விட்டார்கள். உண்மையைச் சொல்லும் எந்த இறைவாக்கினருக்கும் ஊரில் நல்ல பெயர் இருந்ததில்லையே! ஆனால், உண்மையைச் சொல்லி, உலகில் நன்மையை வளர்க்கும் இறைவாக்கினர்கள் நமது உலகிற்கு தேவை.இறைவனின் பக்கம் நம்மை வழிநடத்தும் இறைவாக்கினர்கள், இறைப்பணியாளர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருப்பார்கள்; அவர்கள் உலகில் இருந்தால் இவ்வுலகம் எவ்வளவு அழகாக மாறும் என்பனவற்றை, இறைவாக்கினர் எசாயா, ஓர் அழகியக் கனவாகத் தந்திருக்கிறார், இன்றைய முதல் வாசகத்தில். இந்த வரிகளுக்கு விளக்கமே தேவையில்லை. எசாயாவின் இந்தக் கனவு, இன்று, நாம் வாழும் உலகில் நடைமுறையாக வேண்டும் என்ற ஏக்கத்தோடு இந்த வரிகளுக்குச் செவிமடுப்போம்.

இறைவாக்கினர் எசாயா 11: 1-10
ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்: ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு - இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும். அவரும் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் மகிழ்ந்திருப்பார். கண் கண்டதைக் கொண்டு மட்டும் அவர் நீதி வழங்கார்: காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் அவர் தீர்ப்புச் செய்யார்: நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்: நடுநிலையோடு நாட்டின் எளியோரது வழக்கை விசாரிப்பார்: வார்த்தை எனும் கோலினால் கொடியவரை அடிப்பார்: உதட்டில் எழும் மூச்சினால் தீயோரை அழிப்பார். நேர்மை அவருக்கு அரைக்கச்சை: உண்மை அவருக்கு இடைக்கச்சை.

இத்தகைய நேரியவர்கள் வாழும் நாட்டில் என்ன நடக்கும் என்பதையும் இந்தக் கனவில் தொடர்ந்து கூறுகிறார் இறைவாக்கினர் எசாயா:
அந்நாளில், ஒநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும்: கன்றும், சிங்கக்குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழும்: பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும். பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும்: அவற்றின் குட்டிகள் சேர்ந்து படுத்துக்கிடக்கும்: சிங்கம் மாட்டைப் போல் வைக்கோல் தின்னும்: பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையாடும்: பால்குடி மறந்த பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடும். என் திருமலை முழுவதிலும் தீமை செய்வார் எவருமில்லை: கேடு விளைப்பார் யாருமில்லை.
அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது: அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள். (எசாயா 2:4) என்ற நம்பிக்கை தரும் கனவுகளை, சென்ற ஞாயிறு, நம் உள்ளங்களில் விதைத்த இறைவாக்கினர் எசாயா, இந்த ஞாயிறு, இன்னும் சில உன்னதக் கனவுகளை நம்முள்ளத்தில் விதைக்கிறார்.

வியாபார உலகம், விளம்பர உலகம் காட்டும் பல கனவுகளை, நமது திரைப்படங்களில், நாயகர்கள் சொல்லும் வசனங்களை, செய்யும் சாகசங்களைக் கண்டு, இவை உண்மையாகக் கூடாதா என்று எங்கும் நாம், இறைவாக்கினர் எசாயாவின் கனவையும் ஏன் அப்படி நினைத்து ஏங்கக்கூடாது? ஏங்குவோம். உலகில் நல்லவை நடக்க வேண்டும் என்று, ஏங்குவோம்.

நம் இறுதி எண்ணங்கள் நாம் கடந்துவந்த மூன்று நாள்களைச் சுற்றி வலம்வருகின்றன. டிசம்பர் 1, உலக AIDS நாளையும், டிசம்பர் 2, அடிமைத்தனத்தை ஒழிக்கும் உலக நாளையும், டிசம்பர் 3, மாற்றுத்திறனாளிகளின் உலக நாளையும் கடைபிடித்தோம். இத்திருவருகைக் காலத்தில், வர்த்தக உலகம் காட்டும் ஆடம்பரங்களிலிருந்து நம் எண்ணங்களைத் திருப்பி, AIDS நோயால் துன்புறுவோர், அல்லது, பெரும் நோய்களால் துன்புறுவோர், பல்வேறு அடிமைத்தனங்களால் கட்டுண்டிருப்போர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் பக்கம் நம் கவனத்தைத் திருப்பினால், நம் கிறிஸ்மஸ் விழாவன்று இறைவன் நம் உள்ளங்களிலும், இல்லங்களிலும் வந்து தாங்கும் வாய்ப்பை வளர்க்க முடியும். அதுவே உண்மையான கிறிஸ்மஸ் கொண்டாட்டமாக அமையும்!

அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச
 
 
 
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
 
 
மறையுரைச்சிந்தனை  -அருட்திரு ஜோசப் லியோன்

 
 
 
அருள்பணி: மாணிக்கம் - திருச்சி

 
 
புனித பேதுரு பாப்பிறைத்‌ தமிழ்க்‌ கழகம்‌, பெங்களூர்
திருவருகைக்காலம் 2-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (எசா. 11:1-10)

இஸ்ராயேலரின் அரசு அழிக்கப்பட்டு பலர் நாடுகடத்தப்பட்டனர். எஞ்சியவர்கள் அருகாமையில் உள்ள நாடுகளுக்குத் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள சிதறி சென்றனர். இச்சூழலில், இறை- வாக்கினர் எசாயா, இஸ்ராயேல் மக்களுக்கு நம்பிக்கையுட்டும் வகையில், "ஜெசெவின் கோத்திரத்திலிருந்து மெசியா தோன்றுவார். அவர்மீது ஆண்டவரின் ஆவி தங்கும். நீதியோடு தீர்ப்பு வழங்குவார். அன்பும் அமைதியும் மக்கள் மனங்களில் குடிகொள்ளச் செய்வார்." எடுத்துரைக்கிறார்.

இரண்டாம் வாசகப் பின்னணி (உரோ. 15:4-9)

தூய பவுல், முதல் கிறிஸ்தவர்களைக் கொன்றார். கிறிஸ்தவத்தை அழிக்க முயற்சி செய்தார். ஆனால் அவரைத் தேர்ந்து கொண்ட இயேசுவின் ஆவி அவரையும் தூயப்படுத்தினார். கிறிஸ்தவர்களை துன்புறுத்திய சவுல், கிறிஸ்துவுக்காகத் துன்புறும் ஊழியனாகப் பவுலாக மாறினார். அப்படியே பாவத்தில் இருக்கும் பிறஇனமக்களை இயேசு தமது இரக்கத்தினால் அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்களையும் தூய வாழ்வுக்கு உரிமை உடையவராக்கினார் என்று பவுல் இவ்வாசகத்தில் கூறுகின்றார்.

நற்செய்தி வாசகப் பின்னணி (மத்தேயு 3:1-12)

திருமுழுக்கு யோவான் "மனம் திரும்புங்கள் ஏனெனில் விண்ணரசு நெருங்கிவிட்டது" என்றுகூறி "விண்ணரசில் நுழைய மனமாற வேண்டும்" என்பதில் அத்தியாவத்தை வலிவுறுத்து விதமாக இந்த வாசகம் அமைந்துள்ளது. "யூதக்குலப் பெருமையோ, சட்டத்திட்டங்களோ உங்களுக்கு மீட்பு அளிக்க முடியாது. மாறாக மனம் மாறியதற்குரிய நம்பிக்கை கொண்டு தூய ஆவியில் திரு முழுக்கு பெறுவதின் வழியாகவே நீங்கள் மீட்பு பெறுவீர்கள், என்பதை தெளிவுப்படுத்துகின்றார் யோவான்.

மறையுரை

எலிசபெத்தம்மாள் பத்து மாதம் சுமந்து ஒரு பச்சிளங்குழந்தையை அல்ல, ஒரு பாலைவனக்குரலை, தன் முதிர்ந்த வயதில் எலிசபெத்து கருத்தரித்தாள். இயேசுவின் முகம் சாந்தம் வழியும் முகம், கருணை கொண்ட கண்கள், நீண்ட தொங்களாடை, பாத்தாலே பரவசமான தோற்றம்! ஆனால் திருமுழுக்கு யோவான் அப்படியல்ல கரடுமுரடான முகம்! படியாத தலைமுடி, கண்கள் இரண்டும் நெருப்பு, நாக்கு தீப்பிழம்பு போலச் சுடும் தன்மை, உடுத்தியது ஒட்டக மயிராடை, உணவு காட்டுதேனும், வெட்டு- கிளியும்.

ஆனால் அவர் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகள் எல்லாம் நற்செய்தியை கேட்டபோது தொடும் வார்த்தைகளாகவும், சுடும் வார்த்தைகளாகவும் உள்ளன! ஒரு கவிஞன் அழகாகச் சொல்லுவான். கடவுள் ஒரு கனம் இடியென இடிக்கிறார், அடுத்த கணம் மழையை பொழிகின்றார். இது கடவுளுக்குப் பொருந்தும். அவருக்கு இரண்டு முகம், நீதி முகம், இரக்க முகம். நீதி முகத்தில் இடிக்கிறார். இரக்க முகத்தில் பொழிகின்றார். பொழியும்போது இனிக்கிறது. அவர் இடிக்கும்போது கசக்கிறது.

➤ "இதோ நான் இறங்கி வருவேன் என் மக்களை மீட்டு பாலும் தேனும் பொழியும் கானான் தேசத்திற்கு கொண்டு செல்வேன். கடவுள் சொல்லும்போது இனிக்கிறது. என் கட்டளைகளை கடைபிடித்து அதன்படி நடங்கள் இல்லையென்றால் என் கோபம் உங்களுக்கு எதிராக எழும்" என்று கடவுள் சொல்லும்போது கசக்கிறது.

➤ "நான் உன் ஆயன், உன்னைப் பசும் புல்வெளிக்கு அழைத்து செல்வேன், நீர் நிலையில் இளைப்பாற்றுவேன் என்று கடவுள் சொல்லும்போது இனிக்கிறது. ஏழையை வஞ்சிக்காதே, ஆதரவின்றி இருப்பவர்களை நீதி மன்றத்தில் சிறுமை படுத்தாதே. அவர்களுக்காக நான் வாதாடுவேன்" என்று கடவுள் சொன்னால் கசக்கிறது.

➤ "ஆறுதல் கூறுங்கள், என் மக்களுக்குக் கனிமொழி கூறுவேன் என்று ஆண்டவர் கூறும்போது இனிக்கிறது. மரக்காலை சிறிதாக்கி, எடைக்கல்லை கனமாக்கி, கள்ளதராசில் மோசடி செய்கிறீர்கள், வெள்ளிகாசுக்கு ஏழைகளையும், இரு காலணிக்கு வறியோரையும் வாட்டுகிறீர்கள்" எனக் குற்றம் சாட்டும்போது கசக்கிறது.

திருமுழுக்கு யோவானின் குரல் கடவுளின் இடிக்கும் இடி. அவர் கடவுளுடைய நீதிமுகத்தின் பிரதிபலிப்பு. அவர் பேச்சும் செயலும் சற்று கசக்கும்தான், மருந்து கூடக் கசக்கதான் செய்கிறது. அதற்காக அதைத் தூக்கியா எறிந்து விடுகிறோம். சாப்பிட்டு நம் நோயைப் போக்கி கொள்கிறோம் அல்லவா. திருமுழுக்கு யோவானின் வார்த்தைகள் கூட, ஒரு கசப்பு மருந்து அதைச் சாப்பிட்டு நம் நோயைக் குணமாக்கி கொள்வோம்.

ஏரோது அவருடைய தலையை வெட்டியதால், திருமுழுக்கு யோவான் இறந்து விடவில்லை தலைமுறை தலைமுறையாய் இங்கு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். தப்பான ஒன்ன உலகமே சரி என்று ஒத்துக்கொண்டாலும், நீதிக்காக ஆங்காங்கே எழும்பும் சின்ன சின்னப் பாலைவனக் குரல்களில் திருமுழுக்கு யோவான் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறர்.

இன்றைய நற்செய்தியின் வழியாகத் திருமுழுக்கு யோவானின் செய்தி இடிக்கும் இடியாக, மனமாற்றம் பெற அழைப்பு விடுக்கிறது. மாற்றம் என்பது மானிடத் தத்துவம். மாற்றம் ஒன்றுதான் உயிரின் அடையாளம். தன்னை மாற்றிக் கொள்ளாத, அல்லது மாற்ற மறுக்கின்ற எந்த ஒரு நபரையும் யாரும் திரும்பிப் பார்ப்பதில்லை. ஓர் இலையுதிர்காலத்திற்கு பின் தன்னை புதுப்பிக்காத மரத்தை வனம் தன் எண்ணிக்கையில் வரவு வைப்பது கிடையாது. ஊற்று நீராலும், ஆற்று நீராலும், மழை நீராலும் தன்னைப் புதுப்பிக்காத நதியை மனிதன் நதி என்பதில்லை. மாற்றம் என்பது காலத்தின் கட்டுப்பாடு. இது மரத்திற்கு மட்டுமல்ல மாறாக ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தும். மாற்றம் என்பது மிகவும் அவசியம். குறிப்பாகத் தன் பாவ வாழ்க்கையிலிருந்து புண்ணிய வாழ்வுக்கு மாற இன்றைய வாசகங்களும், வழிபாடும் அழைப்பு விடுக்கின்றன.

➤தீயவர் தாம் செய்த பாவங்களை விட்டு மனம்மாறி நேர்மையை கடைபிடித்தால் வாழ்வது உறுதி என்கிறது (எசே 18:21). ➤பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்து விடுங்கள் (எபே 4:22).
➤உன் பாவங்களை அறிக்கையிட வெட்கப்படாதே. (சீராக் 4:26) நாம் பாவத்தை அறிக்கையிட்டு புதிய மனிதனாக வாழ வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு இரண்டு செய்திகளைத் தருகின்றன. ஒன்று. மனம்மாறுங்கள், மற்றொன்று நற்செய்தியை நம்புங்கள்.

1. மனம் மாறுங்கள்: "பாவத்தைப் பற்றிய அறிவே மீட்பின் தொடக்கம்" என்கிறது இலத்தின் பழமொழி. எனவே நாம் நம் பாவத்தை நியாயப்படுத்தாமல் அதைத் தாழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வோம். நினிவே மக்கள் இறைவனின் அழைப்பை ஏற்று பாவத்திற்கு மனம் வருந்தி, மன்னிப்பு கேட்டதால் புதுவாழ்வு பெற்றார்கள் (யோனா 3:5). புதிய ஏற்பாட்டில் தன் பாவத்தை உணர்ந்து, மனம்வருந்தி அதன் அடையாளமாகத் தன் சொத்துக்- களை ஏழைகளுக்குப் பகிர்ந்த சக்கேயு புதுவாழ்வு பெற்றார் (லூக்கா 19:1-10). அதுபோல நாமும், நம் பாவங்களை ஏற்று மனம் வருந்தி வாழ்வோம்
.

2. நற்செய்தியை நம்புங்கள்: நற்செய்தியை நம்புவது என்பது இயேசு தரும் புதிய வாழ்வை ஏற்பதாகும். புதிய வாழ்வு வாழ்வதற்கு நற்செய்தி மிகவும் அவசியம்.
➤ஒருவன் உலகம் எல்லாம் தனதாக்கி கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்தால் அதனால் வரும் பயனென்ன! என்ற நற்செய்தி தூய சவேரியாரை உருவாக்கியது. நற்செய்தியை கேட்டார். உளமார ஏற்றார். வாழ்வாக வாழ்ந்தார்.
➤சின்னஞ்சிரிய சகோதர்களுக்குச் செய்த போதெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்ற வார்த்தை அன்னை தெரசாவை உருவாக்கியது.

ஆக! மேற்சொன்ன உதாரணங்கள் எல்லாம் நற்செய்தியால் புதுவாழ்வு பெற்றவர்கள் தான். எனவே நாமும் நற்செய்தியை வாசித்துப் பழைய வாழ்விலிருந்து புதிய வாழ்வுக்கு அடி எடுத்து வைப்போம். நம்முடைய சுயநலத்திலிருந்து - பொதுநலத்திற்கு, தற்பெருமையிலிருந்து தாழ்ச்சிக்கு, அநீதியிலிருந்து - நீதிக்கு, பாவத்திலிருந்து - புண்ணியத்திற்கு, பேராசையிலிருந்து - அருள் ஆசைக்கு மாற முயற்சி எடுப்போம்.

பறவையைக் கண்டு விமானம் படைத்த நாம்
பாயும் மீனைக் கண்டு படகைப் படைத்த நாம்
எதிரொலியை கேட்டு வானொலியைப் படைத்த நாம்
நற்செய்தியை படித்துப் புதிய மனம் படைப்போம்.
புதிய மனிதர்களாக வாழ்வோம்.


பிற மறையுரைக் கருத்துக்கள்

🕇 நவீன உலகில் உடலை ஒறுப்பது, உண்ணா நோன்பு இருப்பது எல்லாம் குறைந்து கொண்டே வருகின்றன. ஆனால், தூய திருமுழுக்கு யோவான் எளிய உடையும், ஏழையின் உணவும், நோன்பு நிறைந்த பாலைவன வாழ்வும் வாழ்ந்தார். தன் ஊனுடலை பார்த்துத் தூய அகுஸ்தினார், "கழுதை, வெளியில் காத்திரு. நான் அருமையான ஆண்டவரை என் ஆவியிலும் உண்மையிலும் வழிபடப் போகின்றேன்" என்பாராம். உடல் ஒறுத்தல் இச்சை அடக்கத்திற்கு வழி.

🕇நமது பிரிந்த சகோதரர்கள் முழுக்கு திருமுழுக்கே உண்மையானது, நீரால் பெறும் திருமுழுக்கு திருமுழுக்கேயல்ல என்கின்றனர். திருமுழுக்கு யோவான் தந்த திருமுழுக்கு பாவ மன்னிப்பின் அடையாளமே ஒழிய வேறில்லை. பரிசுத்த ஆவியின் வல்லமை தரும் திருமுழுக்கு ஜென்ம பாவத்தைப் போக்குவதோடு தூய ஆவியின் தூய ஆலயமாக நமது உடலை மாற்றுகின்றார். பிள்ளைக்களுக்குரிய அருள்வாழ்வு வாழ வழிவகை செய்கின்றார்.
 
அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட் ‌
திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு

நமதாண்டவர் இயேசுவின் பிறப்புப் பெருவிழாவிற்கு நம்மைத் தயாரிக்கும் இத்திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையில் தாயாம் திருஅவை, இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவானை நம்முன் நிறுத்துகின்றது. இயேசுவின் பணி வாழ்வுக்கு முன் மக்களைத் தயாரித்த அவர் இயேசுவின் பிறப்புக்கு நம்மைத் தயாரிப்பதற்கு நமக்கு மாதிரியாகின்றார்.

பின்னணி

இன்றைய நற்செய்தியின் முக்கியச் செய்தி, "மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்து விட்டது" (வச.2) என்பதுதான். இது மத் 4:17ல் இயேசு தந்த போதனையைப் போலவே இருக்கின்றது. இவ்வாறு இவ்விருவரும் (திருமுழுக்கு யோவானும் இயேசுவும்) போதனையின் உள்ளீடு என்னும் விதத்தில் ஒத்திருப்பதோடு, இவ்விரு பகுதிகளும் (மத் 3:2-4:17) ஒரு தொடர் இலக்கியத் தொகுதியாகப் பார்க்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றது. திருமுழுக்கு யோவானைப் பற்றி யூத இலக்கியங்களிலும் (யோசேப்புஸ்), ஒத்தமை நற்செய்திகளிலும், யோவான் நற்செய்தியிலும் பல விவரங்கள் காணப்பட்டாலும் நமது சிந்தனைக்கு மத்தேயு தர விரும்பும், வலியுறுத்தும் செய்திகளைப் பற்றி மட்டும் இங்குக் காண்போம்.

திருமுழுக்கு யோவானின் ஆளுமை

மத்தேயு நற்செய்தி உட்பட அனைத்து நற்செய்திகளிலும் யோவானின் போதனையும், அவர் தந்த திருமுழுக்கும் இறையர சோடும் ஆண்டவரின் வழியைத் தயார்படுத்துவதோடும் தொடர்புப் படுத்தப்பட்டுள்ளது (காண். மத் 3:1-6; மாற் 1:2-6; லூக் 3:1-6; யோவா 1:19-23). அவரது ஆடை (ஒட்டக முடியாலான ஆடை, தோல் கச்சை) இறைவாக்கினர் எலியாவை ஒத்திருக்கின்றது (காண். 2 அர 1:8; மேலும் காண். மத் 11:7-15; 17:10-13). அவர் தந்த திருமுழுக்கு பாவ அறிக்கை மற்றும் மனமாற்றத்தின் அடையாள மாகவும், வரப்போகும் சினத்தினின்று (தண்டனைத் தீர்ப் பினின்று) தப்பிக்கும் வழியாகவும் அமைகிறது (காண். வச 6, 11, 7). இயேசுவுக்கும் திருமுழுக்கு யோவானுக்கும் உள்ள தொடர்பு எனக் காணும்போது இவர்கள் இருவரும் ஒரே செய்தியைப் போதித்தனர் (காண். மத் 3:2; 4:17), திருமுழுக்கு யோவான் இயேசுவுக்குக் கீழ்ப்பட்டவர் (காண். வச. 3, 11). எனவே இயேசுவின் முன்னோடி (காண். எசா 40:3).

திருமுழுக்கு யோவானின் போதனை

அண்மையிலிருக்கும் தண்டனையுடன் கூடிய இறையரசின் பின்னணியில் திருமுழுக்கு யோவானின் போதனை மூன்று எச்சரிக்கைகளைத் தருகின்றது (காண். வச.7 ஆ-8, 9, 10).
1. திருமுழுக்குச் சடங்கு மட்டுமே காப்பாற்றிவிடும் என எண்ண வேண்டாம்.
2. ஆபிரகாமின் பிள்ளைகள் என்பதே உங்களைக் காப்பாற்றிவிடும் என நினைக்க வேண்டாம்.
3. இருக்கும் சிறிது காலத்தில் உடனடியாகச் செயல்படுங்கள்.
எனவே திருமுழுக்கு யோவானின் போதனையின் சாரம் இறையரசு வருகின்றது. அது தீர்ப்பையும் தண்டனையையும் உடன் கொண்டு வருகின்றது. எனவே இனியுள்ள குறுகிய காலத்தில் மனமாற்றத்திற்கு ஏற்றச் செயல்களில் ஈடுபடுங்கள்.

திருமுழுக்கு யோவானின் போதனையின் இரண்டாம் பகுதி (வச 11-12) யோவானின் திருமுழுக்கையும், இயேசு தர இருக்கும் திருமுழுக்கையும் ஒப்பிட்டு, இயேசுவின் திருமுழுக்கு உயர்ந்தது எனக் காட்டுகின்றது. இந்தப் பாரம்பரியத்தில்தான் கிறிஸ்தவமும் இந்தத் திருமுழுக்கை தனது அருள் அடையாளங்களில் முதன்மை யானதாக ஏற்றுக் கொண்டது. ஆனால் கிறிஸ்தவத் திருமுழுக்கு "இயேசுவின் பெயரால்" வழங்கப்படுகின்றது. மேலும் இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றோடு ஒப்பிடப்படுகிறது (காண். உரோ 6).

எனவே இயேசுவின் வருகையை எதிர்நோக்கித் தயாரிப்புடன் காத்திருக்கும் நாம், நமது திருமுழுக்குக்கு ஏற்ற வாழ்க்கையை, மனமாற்றத்தின் வாழ்க்கையை வாழ்வதே இறையாட்சியில் பங்கு பெற, இயேசுவைச் சந்திக்கத் தகுந்த, சரியான வழியாகும்.
 
அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
திருவருகைக் காலம் - இரண்டாம் ஞாயிறு
முதல் வாசகம் : எசா 11: 1-10

அடிமரம் சுட்டும் நம்பிக்கை

இஸ்ரயேல் என்ற காடானது பபிலோனியப் படையெடுப்பால் (கி.மு.587) அழித்து நாசமாக்கப்பட்டது. அனைத்து மரங்களும் அடியோடு அழிவுற்ற நிலையிலே ஓர் அடிமரம் மட்டும் தனித்து நின்று, பின் தளிரிட்டு வளர்கிறது. இது யெஸ்ஸேயின் மகன் தாவீதையும், பின்னர் தாவீதின் மரபில் வந்த கிறிஸ்துவையும் சுட்டும். அழிவின் மத்தியிலும் ஆழ்ந்த நம்பிக்கையூட்டும் சித்திரம் இது. "மரத்திற்காவது நம்பிக்கை உண்டு. அது தறிக்கப்பட்டால் மீண்டும் துளிர்க்கும்; அதன் குருத்துகள் விடாது துளிர்க்கும். அதன் வேர் மண்ணில் பழமை அடைந்தாலும், அதன் அடிமரம் நிலத்தில் பட்டுப் போனாலும், தண்ணீர் மணம் பட்டதும் அது துளிர்க்கும். இளஞ்செடி போல் கிளைகள் விடும்" (யோபு 14:7-9) என்ற பகுதியை ஈண்டு ஒப்பிட்டுக் காண்க.

ஆவியாரின் கொடைகள் கிறிஸ்துவில்

ஆண்டவருடைய ஆவி தளிராகிய கிறிஸ்துவின் மேல் தங்குவதால் அவர் சாலமோனைப் போன்று ஞானத்திலும் மெய்யுணர்விலும் சிறந்திருப்பார்: தாவீதைப் போன்று ஆலோசனையிலும் வல்லமையிலும் நிறைந்திருப்பார்; மோயீசன், யாக்கோபு, ஆபிரகாம் போன்று அறிவிலும் ஆண்டவரைப் பற்றிய அச்சத்திலும் தழைத்திருப்பார். இவ்வாறு குல முன்னோர்கள் குணமனைத்தும் இயேசுவில் முழுமையாகக் குடிகொள்ளும். இத்தகைய இயேசுவை நம் உள்ளங்களில் வரவேற்போம். திறந்த உள்ளத்தோடு இருப்பின் தூய ஆவியாரின் வரங்களனைத்தும் (கலா 5 : 22) இயேசுவின் திருவருகையால் நமக்குக் கிட்டும் என்பது திண்ணம்.

ஆவியாரின் சிறப்புக்கொடை நீதி

ஆண்டவருடைய ஆவி கிறிஸ்துவை நீதியால் நிரப்பும். இந்நீதியானது எளியோருக்கு நற்செய்தி அளிக்கும் நீதி, ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு வழங்கும் நீதி (லூக் 4: 18-19); வல்லமை மிக்கவர் அரும்பெரும் செயல் பல புரியும் நீதி; நெஞ்சிலே செருக்குற்றவர்களைச் சிதறடிக்கும் நீதி; வலியோரை அரியணையினின்று அகற்றி, தாழ்ந்தோரை உயர்த்தும் நீதி; பசித்தோரை நலன்களால் நிரப்பி, செல்வரை வெறுங்கையராய் அனுப்பும் நீதி (லூக் 1: 49-53); நடுநிலை பிறழாது ஏழைகளுக்கு வாழ்வளிக்கும் நீதி; தீயோரை வெஞ்சினத்தால் ஒடுக்கிவிடும் நீதி (எசா 4:3-5). ஆம், நீதியுள்ள கடவுள் நீதி வழங்க வருகிறார். மூன்றாம் உலகத்தினர் என்று அழைக்கப்படும் நமக்கு அடிப்படையாக வேண்டப்படுவது உலக செல்வங்களைப் பகிர்ந்து வாழ்வது; வைத்திருப்பவன் இல்லாதவன் என்ற வேறுபாட்டைக் களைவதும் நீதிக்காக உழைப்பதும் சாட்சியம் பகர்வதுமே, நீதி வழங்கிடும் கிறிஸ்துவை நம் உள்ளங்களில் வரவேற்பதற்குச் சிறந்த வழியாகும்.

"பகுத்துண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" குறள் -322

அமைதி தருபவரும் ஆவியாரே

ஆண்டவருடைய ஆவி போரும் பூசலும் நிறைந்த இவ்வுலகிற்கு அமைதியும் சமாதானமும் தந்திடும். ஆவியால் நிறைந்த கிறிஸ்து ஒருவரே, "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன்" (யோவா 14 : 27-28) என்று உண்மையான, நீடித்த சமாதானத்தை அருள முடியும். அவர் வருகையால் உலகிலே அமைதி நிலவும் என்று காட்ட, இயற்கையில் எதிரிகளான செம்மறி-ஒநாய், வெள்ளாட்டுக் குட்டி-சிறுத்தைப் புலி, கன்று - சிங்கம் - குழந்தை, பசு கரடி, சிங்கம் எருது இவை இணைத்துக் காட்டப்படுகின்றன. இயேசு தரும் அமைதி நமக்குக் கிட்ட, நமது சூழலிலே சமாதானக் கருவிகளாக நாம் உழைப்போம். "அமைதி ஏற்படுத்துவோர் பேறு பெற்றோர்" (மத் 5:9).

ஆண்டவரைப் பற்றிய அறிவு நாட்டை நிரப்பும். ஆண்டவருடைய ஆவி என்மேலே.

இரண்டாம் வாசகம் உரோ 15 : 4-9

இன்றைய வாசகம், மறைநூலின் முக்கியத்துவம் பற்றியும், ஒன்றுபட்டு வாழ்தலின் தேவை பற்றியும் எடுத்துக் கூறுகிறது.
மறைநூல் இறைவனின் ஏவுதலாலும் தூண்டுதலாலும் எழுதப்பட்டது

நம் அனைவருக்கும் நற்படிப்பினைகள் வழங்குவதற்காகக் கொடுக்கப் பட்டது (2 மக் 15: 8). "மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும், சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும்" (2 திமொ 3: 16) அருளப்பட்டது. "திருநூல் எங்களுக்கு ஊக்கம் ஊட்டுகிறது" (1 மக் 12 : 9) என்கிறார் யோனத்தான். மேற்கூறிய யாவும் பழைய ஏற்பாட்டைச் சுட்டும். நம்மில் பலர் பழைய ஏற்பாட்டைத் தட்டிக் கழித்துவிடுகிறோம். இது தவறு. பழைய ஏற்பாடு தான் புதிய ஏற்பாட்டின் துவக்கம். ப.ஏ. இன் விளக்கமும் முடிவும் தான் பு.ஏ. எனவேதான் ப. ஏ. இன்றிப் பு. ஏ. கிடையாது என்பர். ப.ஏ. நமக்குக் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கையை வளர்க்க வேண்டும். கிறிஸ்து தரும் மீட்பை எதிர்நோக்கி வாழப் ப.ஏ. உதவ வேண்டும். சிறப்பாகத் திருவருகைக் காலத்திலே ப.ஏ. வாசகங்கள் கிறிஸ்துவை நோக்கி நம்மை உந்தித் தள்ளுகின்றன. ப.ஏ. வாசகங்களை இத்திருக்காலத்தில் கவனத்தோடு வாசிப்போம், கேட்போம்.

அன்புள்ளம் வேண்டும்

"சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று, எத்துணை இனிது" (திபா 133 : 1). கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவைப் பின்பற்றி ஒருங்கிணைந்து வாழும் ஒரு குடும்பத்தினர். அவர்களில் உள்ளோர், இல்லார் என்ற வேறுபாடு கூடாது (திப 4:34-35; 2: 44-45). ஒருமனப் பட்டோராய் "ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய்" (திப 4 : 32) அவர்கள் வாழ்தல் வேண்டும்.

இணைந்து செபித்தல் வேண்டும்

இவ்வாறு ஒரு மனப்பட்டு அவர்கள் வாழும்போது அவர்களுடைய வழிபாடும் ஒன்றுபட்டு அமையும். தனிச்செபத்திற்குப் பலன் உண்டு எனினும் (மத் 6:5-8) கிறிஸ்தவர் கிறிஸ்து பேரில் ஒருமித்து கூடிச் செபிக்கும்போது, நமது செபம் பன்மடங்கு பலன் தரும். "உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக் கிறார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன்" (மத் 18:19-20) என்கிறார் இயேசு.

இது மட்டுமன்று; தலையாகிய இயேசுவோடு உறுப்புகளாகிய நாம் அனைவரும் இணைந்து, தந்தையாகிய கடவுளுக்குப் புகழ்சாத்துவதே இறைப் பணிகளிலெல்லாம் மேலான இறைப் பணியாகும். எனவே, கிறிஸ்தவர்களின் பொது இறைவழிபாடான திருப்பலியில் நமது பங்கு என்ன? கடமையைக் கழிக்க வருகின்றோமா அல்லது கடவுளின் பிள்ளைகளோடு சேர்ந்து மனமொத்து இறைபுகழ் பாடுகிறோமா? பெற்றோரும் பிள்ளைகளும் கூடிக் குடும்பமாய்ச் செபிக்கின்றோமா? செபிக்கும் குடும்பம் சேர்ந்து வாழும் குடும்பம் என்பதை உணர்ந்து நம்வாழ்வில் பின்பற்றுகிறோமா?

இறைப்புகழ் செபம் வேண்டும்

இவ்வழிபாடு, சிறப்பாக இறைவனை மகிமைப்படுத்துவதாக அமைய வேண்டும் (15:5-6). வேண்டுதல், மன்றாட்டு செபங்கள் நம் வாழ்க்கைக்குத் தேவையெனினும், இறைவனை ஏத்தும் புகழ்ச்சிக் கீதம் நம் செபங்களில் முதலிடம் பெற வேண்டும். திருப்பாடல் ஆசிரியர்களோடு சேர்ந்து, மண், விண், கீழுலகு இவற்றில் உள்ள அனைத்துக்காகவும் இறைவனை ஏத்துவோம் (திபா 136:1-10; 149), தாழ்வுற்ற நிலையிலிருந்து நம்மை மீட்டுக் காத்ததற் காகவும் இறைவனைப் புகழ்வோம்.

மறைநூல் வாக்குகள் நமக்குப் போதனையாக எழுதப்பட்டன.
கடவுளின் மகிமைக்காக ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்.

நற்செய்தி: மத் 3: 1-12

இயேசு தம் பொது வாழ்வுப் பணியைத் துவக்குமுன்னர், திருமுழுக்கு யோவான் இயேசுவின் வருகைக்காக மக்களைத் தயார் செய்கிறார். யூதேயாப் பாலைவனத்தில் அவர் முழங்கிய சொற்கள் கிறிஸ்து பிறப்பு விழாவை எதிர்நோக்கியிருக்கும் நம்மீதும் சாட்டையடிகளாய் விழுகின்றன.

"மனம் திரும்புங்கள்"

இச்சொற்கள், "உங்கள் வாழ்க்கையை மாற்றியமையுங்கள்" என்று நம்மை நோக்கிக் கூவுகின்றன. "உங்கள் மூதாதையர் பணிந்து வந்த தெய்வங் களுக்கோ, ...எமோரியரின் தெய்வங்களுக்கோ இவர்களுள் யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே இப்போது முடிவு செய்யுங்கள். ஆனால் நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்" என்று கூறிய யோசுவாவுக்கு, "நாங்கள் ஆண்டவரை விட்டு விலகியது தவறு; அவரையே இனி வழிபடுவோம்" (யோசுவா 24: 14-18) என்று பதிலுறுத்த இஸ்ரயேலரின் சொற்கள் நமதாக மாற வேண்டும். நம்முடைய பழைய தீய ஈடுபாடுகள், நாட்டங்கள், சொற்கள் செயல்களாகிய இருளிலிருந்து ஒளிக்கு நாம் திரும்பி வர வேண்டும். "பயனற்ற சிலைகளை விட்டுவிட்டு உயிருள்ள கடவுள்பால் திரும்ப வேண்டும்" (திப 14: 15, 26: 18). நம் வாழ்விலே இருள் கவிந்த நிலையாயும், பயனற்ற சிலைகளாயும் உள்ளன யாவை? இவற்றை இறையருளால் அகற்றி, ஒளியாம் இறையும், உயிருள்ள கடவுளுமான இயேசுவுக்கு, நம் இதயங்களில் தீபமேற்றி வைப்போமா? மனம் மாறுவோம்.

"செயல்களில் காட்டுங்கள்"

இச்சொற்கள், மனமாற்றம் என்பது - நன்மனத்தோடு, உயர்ந்த எண்ணங்களோடு அமைந்துவிடக் கூடாது, செயல் வடிவில் மலர வேண்டும் என்பதை உணர்த்துகின்றன. ஆபிரகாமின் மக்களென்று தங்களையே கூறிக் கொண்ட யூதர்கள் ஆபிரகாமின் செயல்களைச் செய்யவில்லையே என்று இயேசு கூறுவது (யோவா 8: 33-40), ஆபிரகாமுடைய ஆழ்ந்த விசுவாசம், அவர் கண்ணின் மணியென நேசித்த ஒரே மகனையே இறைவனுக்கு அர்ப்பணம் செய்ய எவ்வாறு தயங்கவில்லையோ (தொநூ 22:1-12) அதே போன்று, இவர்களும் தங்களுடைய செயலிலே தம் மனமாற்றத்தை (விசுவாசத்தை) வெளிப்படுத்த வேண்டும் என்பதையே சுட்டுகின்றது. இக்கருத்திலே தான் திருமுழுக்கு யோவானும், பரிசேயரையும், சதுசேயரையும் சாடுகிறார்; இன்று இதே சொற்களில் நமக்கும் அறிவு புகட்டப் படுகிறது. "ஆண்டவரே, ஆண்டவரே" என்று வாய்வழி வேண்டு வதால் மட்டும் பயனில்லை; தந்தையின் விருப்பப்படி நடத்தலிலேதான் (மத் 7: 21) நமது மனமாற்றம் வெளிப்பட வேண்டும். தந்தையின் விருப்பமோ, இயேசுவின் அன்புக் கட்டளையை, நம் அன்றாட இன்னல் இடைஞ்சல் களுக்கிடையே நம் நினைவு, சொல், செயல்களில் வாழ்ந்து காட்டுவதே. விசுவசிக்கும் வாழ்வைச் செயல்படுத்துவோமா? (யாக் 2: 17).
"கடவுள் வல்லவர்"

மனமாற்றமடையும் நம்மில், இறை இயேசுவில் விசுவாசம் கொள்ளும் நம்மில், செயலாற்ற வல்லவர் கடவுள். கற்களிலிருந்து ஆபிரகாமுக்கு அவர் மக்களை எழுப்பக்கூடும் (3: 9) என்பதன் பொருள், விசுவாசமுடைய புறவினத்தாரிலிருந்தும் இறைவன் தமக்கு மக்களைச் சேர்த்துக்கொள்ளக் கூடும் என்பதாகும். "கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" (லூக் 1: 37, தொநூ 18 : 14). நாம் மனம் திரும்பி இறைவன் பால் வரவும், நம் மனமாற்றத்திற்கு ஏற்ற முறையில் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் கடவுளே நமக்கு உறுதுணையாயிருந்து, ஊக்கமளித்து உதவுவார்; அவரது வல்லமைக் கரம் நம்மில் செயலாற்றும் (லூக் 1: 48-50) என்ற ஆழ்ந்த நம்பிக்கையோடு இத்திருவருகைக் காலத்திலே செயல்படுவோம். "கடவுளை நம்பினோர் கைவிடப்படார்."

மனம் திரும்பியவர்க்கு ஏற்றச் செயலைச் செய்துகாட்டுங்கள்.
 
 
மறையுரைச்சிந்தனை  -அருள்பணி மாணிக்கம் , திருச்சி
 

  
மீட்பரின் பாதையில் சென்றவளே, மேலவன் திருவுளம் வாழ்ந்தவளே
இகமதில் இருப்பவர் எம் துணையே, எங்களின் இனியநல் இறையன்னையே