விழித்திருந்து ஆண்டவரை சந்திக்க வந்திருக்கும் அன்புள்ளங்களே!
திருவழிபாட்டின் புதிய ஆண்டை ஆவலோடு தொடங்கும் நம்மை, இன்றைய
திருப்பலிக்கு திருவருகைக் கால முதல் ஞாயிறு அன்போடு வரவேற்கின்றது.
அறச்செயல்கள் நிறைந்த வாழ்வினால் ஆண்டவர் இயேசுவை சந்திக்க
விழிப்போடு காத்திருக்க அழைப்பு விடுக்கிறது, திருவருகைக் காலத்தின்
ஆரம்ப நாள்.
அவரின் வருகை நாள் நமக்கு தெரியாது. அவரது வருகையின் நாள், மகிழ்ச்சியின்
நாளாக அமைய அவர் சுட்டிக் காட்டும் இறை வார்த்தையின் நெறியினை
பின்பற்றுவோம்.
இரவு முடியப் போகிறது பகல் அண்மையில் உள்ளது. இருளின் செயல்களைக்
களைவோம்... ஒளியின் செயல்களை அணிவோம்...
மதிப்போடு நடந்து கொள்வோம். களியாட்டம், குடிவெறி தவிர்ப்போம்...
தீய இச்சைகளை, சண்டை சச்சரவுகளை தகர்ப்போம்...
கூடாஒழுக்கம் ஒழிப்போம். ஊனியல்பின் நாட்டங்களை விரட்டுவோம்...
கடவுளின் மகன் மிகுந்த வல்லமையோடு வருகின்றார். அவரது வருகை நமக்கு
மிகுந்த வல்லமை தரக் காத்திருக்கின்றது. ஆம், அவரது வல்லமை......
- வேற்றினத்தார் மத்தியில் உள்ள நம் வழக்குகள் அனைத்தையும்
தீர்த்து வைக்கக் காத்திருக்கின்றது...
- நாட்டுக்கு எதிராய் நாடு வாள் எடுப்பதை தடுக்கக் காத்திருக்கிறது...
- போர்வாள் அமைதிக் கலப்பையாய் மாறக் காத்திருக்கிறது...
- போர்ப் பயிற்சி அமைதிப் பாசறையாய் மாறக் காத்திருக்கின்றது....
- அன்பையும் சமாதானத்தையும் தரக் காத்திருக்கின்றது..
- ஞானத்தையும், அறிவையும் தரக் காத்திருக்கின்றது...
- மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தரக் காத்திருக்கின்றது...
நாமும் அவரது திரு முகம் கண்டு வல்லமை அனைத்தையும் பெற்றுக் கொள்ள
விழிப்போடுக் காத்திருப்போம். இன்றைய திருப்பலி இங்கே கூடி
நிற்கும் நாமனைவரும். விழிப்பாயிருந்து இயேசுவை மகிழ்ச்சியோடும் ஆர்வத்தோடு
சந்திக்க வல்லமை தருகின்றது. இணைந்து செபிப்போம்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
1. மிகுந்த வல்லமையோடு வருகின்ற எங்கள் இறைவனே!
பயத்தினாலும், பேராசையினாலும் பிளவுபட்டிருக்கும் இந்த
உலகிற்கு மீட்பர் வர
வேண்டுமென்று வேண்டுதல் எழுப்பும் எம் திருச்சபையை ஆசிர்வதியும்.
உமது வருகை திருச்சபையையும் அதை ஆள்வோரையும் பலப்படுத்தட்டும்.
நீர் வந்து கதவைத்தட்டும் போது இறைமக்கள் விழிப்போடு
கதவைத் திறக்கவும், உறங்கிக் கொண்டிருக்கும் எங்கள் உள்ளத்தை
தட்டி எழுப்பி நம்பிக்கையோடு உம்மை சந்திக்கச் செய்யவும்திருச்சபைத்
தலைவர்களுக்கு அருள் புரிய வேண்டுமென்று, இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
2. விழிப்போடு காத்திருப்போருக்கு உம் திரு மகனைக் காணச்
செய்கின்ற இறைவா!
நாடுகளின் தலைவர்கள் அமைதிக்காக அன்போடு உழைக்கவும்,
தற்பெருமை நீக்கி பலவீனம் களைந்து மக்கள் அனைவரும் மகிழ்ச்சியின்
நிறைவு காண ஆளும் அதிகாரத்தைப் பயன்படுத்தவும், நல்லபுரிதலையும்
மனப்பக்குவத்தையும் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
3. கனிவுடன் எமைக் காத்து வரும் கனிவான தெய்வமே!
உமது வார்த்தையானவரின் வருகைக்காக எங்கள் இதயக்கதவினைத்
திறந்து உம்மை
வரவேற்க எமை ஆயத்தமாக்கிடும் எங்கள் பங்குத்தந்தைக்காக
உம்மை மன்றாடுகிறோம். மாட்சி மிக்க உமது பிறப்பை நாங்கள்
கண்டு மகிழ, அவர் எடுக்கும் முயற்சிகளால் புதுப் படைப்பாக
நாங்கள் உருமாற கனிவுடன் அருள்புரிய வேண்டுமென்று, இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
4. உமது வருகையின் அருளால் இவ்வுலகை நிரம்பி வழியச்
செய்யும் இறைவா!
நகரங்களிலும் நாட்டுப்புறங்களிலும் பிழைப்புத்தேடி உழைப்போருக்கு,
காணாமல் போன உறவுகளை உடமைகளைத் தேடுவோருக்கு, காயம்பட்டவர்களுக்கு,
பெருஞ்சுமையைத் தாங்க இயலாதவர்களுக்கு, நோயில் தனிமையில்,
முதுமையில், வறுமையில் வாடுவோருக்கு, இங்கே உம்
திருமுன் கூடி நின்று கண்ணீரோடு தங்கள் விண்ணப்பங்களை
கேட்டுக் கொண்டிருப்போருக்கு உமது வருகையின் அருள்
புத்துலகின் பாதையைக் காணச் செய்ய வேண்டுமென்று, இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
5. உமது அன்பு மகன் வழியாக எங்களை வழி நடத்துகின்ற இறைவா!
அனைவருக்கும் நீர் செய்த ஆற்றல் மிகு அற்புதங்கள் அனைத்திற்கும்
நன்றி கூறுகிறோம். தொடர்ந்து உம் அற்புதங்களை எங்கள்
வாழ்வில் அன்றாடம் சந்திக்கவும் எங்கள் குடும்பங்களில்
குழந்தைகள் அறிவில் ஆற்றலில் தெய்வீக ஆவியால் வளரவும்,
குடும்பங்களில் நிலவுகின்ற பிரச்சனைகளில் ஒருவர் ஒருவருக்கு
தோள் கொடுத்து தூக்கி விடவும், நலன்களால் அயலாரைத்
தாங்கிக் கொள்ளவும் அருள் புரியவேண்டு மென்று, இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
திருப்பலி
முன்னுரை
திருமதி
ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.
திருவருகைக்காலம் முதல் வாரம் - ஞாயிறு
30 11 2025
திருப்பலி முன்னுரை
புதிய திருவழிபாட்டு ஆண்டைத் தொடங்கவும், பிறக்க இருக்கும்
இறை மகனின் வரவை எதிர்நோக்கவும், அதற்கு நம்மை
தயார்படுத்தவும் இன்றைய திருவருகைக்கால முதலாம் ஞாயிறு
நம்மை அழைக்கின்றது.
திருவருகைக் காலத்தில் நாம் வழக்கமாக செய்வது, பீடத்தில்
ஏற்றப்படும் நான்கு வண்ண மெழுகுதிரிகள் தான். இந்த முதல்
வாரத்தில் ஏற்றப்படும் மெழுகுவர்த்தி நமக்கு
வெளிப்படுத்துவது எதிர்நோக்கு எனும் மாண்பினைத் தான்.
எதிர்நோக்கு என்பதற்கும் எதிர்பார்ப்பு என்பதற்கும்
பெரியதொரு வித்தியாசம் உண்டு. எதிர்பார்ப்பு என்பது
நம்பிக்கை அற்ற காத்திருப்பு. எதிர்நோக்கு என்பது உறுதியான
நம்பிக்கை கொண்ட காத்திருப்பு. எனவே இறைமகன் இயேசு
பிறப்பார் என்பதும் பாவத்தளையிலிருந்து நம்மை
மீட்டெடுப்பார் என்ற எதிர்நோக்குடன் காத்திருப்போம்.
இன்றைய முதல் வாசகத்தில் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்
என்று அடிமை வாழ்வில் சிக்குண்ட மக்களுக்கு எசாயா
வாக்கினர் இறைவாக்கு உரைப்பதை காண்கின்றோம். ஆண்டவரின் ஒளி
ஏற்றப்படும்போது அடிமை என்னும் இருள் அகற்றப்படுகின்றது.
நாமும் ஆண்டவரின் ஒளியை நமக்குள் ஏற்றி, நாம்
அடிமைப்பட்டுள்ள செயல்களில் இருந்து விடுபட்டு இறை ஒளியில்
நடப்போம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், ஆண்டவரின் வருகைக்காக
உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள், விழிப்பாயிருங்கள்
என்கிறார் இயேசு கிறிஸ்து.
இலக்கினை உன் கண்முன் நிறுத்து
அதை அடைய நேரிய வழியில்
உன் கால்களை செலுத்து.
மனிதனுக்குரிய மாண்பை செலுத்து
மனங்குளிர நல் அன்பைக் கொடுத்து.
இவையே இறைவன் நம்மிடம் எதிர்நோக்குபவை. இவை நம்முள்
இருந்தால் அழிக்கப்பட்ட மக்களிடையே இறைவனால்
காப்பாற்றப்பட்ட நோவா போல நாமும் அக்கிரமமான உலகத்தில்
அமைதியுடன் மீட்கப்படுவோம் என்ற எதிர் நோக்குடன்
இப்பலியில் பங்கேற்போம்.
இறைமக்களின் மன்றாட்டுகள்:
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக்
கேட்டருளும்.
1. ஆண்டவரின் ஒளியில் நடக்க அழைப்பவரே இறைவா!
எம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை, திருஅவை
பணியாளர்கள் இறை ஒளியில் நடக்கவும், மக்களை இறையாட்சிப்
பாதையில் நடத்திச் செல்லவும், பாவ இருளை மனதில் அகற்றி,
ஆண்டவரின் ஒளியில் நடைபோடவும் வரமருள வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகின்றோம்.
2. ஆயத்தமாய் இருங்கள் என்றவரே எம் இறைவா!
எம் நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள், பணிபுரியும் அரசு
அதிகாரிகள், தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு மக்களுக்கு
சேவை செய்யவே என்பதை மனதில் கொண்டு, நாடும் மக்களும்
வளர்ச்சி அடைய தேவையான திட்டங்களை செயல்படுத்தவும், மக்களை
பிரித்தாளும் போக்கினை விட்டொழித்து நலம் தரும் ஆட்சி
செய்ய நல்லறிவு தரவேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. எதிர்நோக்கோடு வாழ கற்று தருபவரே எம் இறைவா!
எம் நாட்டில், எம் பகுதியில் தனிமை, நோய், வன்முறை போன்ற
காரணங்களால் வாழ்வில் நம்பிக்கை இழந்து வாடும் சகோதர
சகோதரிகள் உம் மீது நம்பிக்கையில் உறுதிப்படவு, பசியற்ற
கல்வி பெற்ற உலகை எம் எதிர்நோக்காக கொண்டு, ஒருவர்
மற்றவருக்கு உதவும் மனப்பான்மை தரவேண்டுமென இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
4. இயற்கையை நேசிக்கச் செய்பவரே எம் இறைவா!
நீர் தந்தமைக்காக மழைக்காக நன்றி. எம் பகுதியில் வேளாண்மை
சிறப்படையவும், நீர்நிலைகள் மாசடையாமல் காக்கப்படவும்,
மக்கள் விழிப்புணர்வுடன் நீரை பயன்படுத்தவும்,
விளைச்சலுக்கு ஏற்ற காலச் சூழ்நிலையை தந்து
ஆசீர்வதிக்கவும், குடும்ப அமைதி, சந்தோஷம் பெருகவும்,
கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை வரம் வேண்டுவோர்
உமது அருளால் பெற்று மகிழவும் வரம் அருள வேண்டுமென்று
உம்மை கெஞ்சி மன்றாடுகின்றோம்.
திருவருகைக் காலம் முதல் ஞாயிறு
நம்பிக்கை என்னும் திரி
I. எசாயா 2:1-5
II. உரோமையர் 13:11-14
III. மத்தேயு 24:37-44
ஒரு இருட்டு அறை அந்த அறையில் நான்கு மெழுகுவர்த்திகள் பிரகாசமாக
எரிந்து கொண்டிருந்தன. அவை ஒன்றோடு ஒன்று பேசிக்கொண்டும்
சிரித்துக் கொண்டும் மகிழ்ச்சியாக இருந்தன. அப்போது அந்த அறையின்
ஜன்னல் வழியே காற்று பலமாக வீசத்தொடங்கியது. அப்போது முதல் மெழுகுவர்த்தி
பயத்துடன் அய்யோ நான் அணையப்போகிறேன் என்று கூறிக்கொண்டே அணைந்து
போனது. இரண்டாவது மெழுகுதிரியும் பயத்துடன் எனது வாழ்வும் இத்துடன்
முடியப்போகிறது என்று கூறி புலம்பியபடியே அணைந்து போனது. மூன்றாவது
திரி, நமது வாழ்வைக் காக்க யார் வருவார்? ஒருவரும் வர மாட்டார் என்று
கூறி அணைந்து போனது. நான்காவது திரி மற்ற திரிகளுக்கு நேர் மாறாக
காற்றோடு போராடியது . தனது ஜுவாலையை சிறிதாக்கி தனது ஒளியைக்
காத்துக்கொள்ள முயற்சித்தது . அது மனதில் இருந்ததெல்லாம் ஒன்றே ஒன்று
தான் . எனது வாழ்வைக் காக்க எனக்கு ஒளி ஏற்றியவர் வருவார். அவர் வரும்வரை
என்னால் முடிந்தளவு நான் என்னைக் காத்துக் கொள்வேன். என்று தனக்குள்
கூறிக்கொண்டது. அது நம்பியபடியே ஒளி ஏற்றி வைத்தவர் வந்தார்.
விரைவாக வந்து ஜன்னல் கதவுகளை அடைத்துவிட்டு எரிந்து கொண்டிருந்த
நான்காவது திரியின் மூலம் அணைந்த மற்ற மூன்று திரிகளையும் ஏற்றிவிட்டு
சென்றார். மீண்டும் நான்கு திரிகளும் மகிழ்வுடன் சுடர் விட்டு ஒளிர்ந்தன.
நம்பிக்கையோடு இருந்த நான்காவது மெழுகுதிரி போல நாம் வாழ வேண்டும்,
பிறரையும் வாழவைக்க வேண்டும் என்பதையே இன்றைய திருவருகைக்காலத்தின்
முதல் ஞாயிறு நமக்கு அறிவுறுத்துகின்றது. நம்பிக்கை இருந்தால் எதிலும்
போராடி வெற்றி பெறலாம் என்பதை இந்த மெழுகுதிரி அழகாக நமக்கு
கூறியுள்ளது.
இன்று நாம் ஏற்றிய திருவருகைக்காலத்தின் முதல் திரி நம்பிக்கையின்
திரி. நமது வாழ்வு நம்பிக்கை நிறைந்த வாழ்வாக இருக்க பிறருக்கும்
நம்பிக்கை தரக் கூடிய வாழ்வாக இருக்க இன்றைய வாசகங்கள் நமக்கு வலியுறுத்துகின்றன.
1. நம்பிக்கை ஒளியில் நடப்போம்.
2. நம்பிக்கையை அணிந்து கொள்வோம்.
3. ஆயத்தமாய் இருப்போம்.
நம்பிக்கை ஒளியில் நடப்போம்.:
முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர், இதுவரை இருளின் ஆட்சியில் இருந்த
மக்கள் இனி ஒளியின் ஆட்சியைச் சேர்ந்த மக்களாக மாறுவார்கள் என்று
நம்பிக்கை வாக்குறுதி தருகின்றார். மற்றவர்களின் வாழ்வை வீழ்த்த
பயன்பட்ட வாள்கள் கலப்பைக் கொழுக்களாக மாறி நிலத்தை பண்படுத்த, பயன்படுத்தப்படப்
போகிறது என்கின்றார். எதிரியின் உடலை தாக்க பயன்பட்ட ஈட்டிகள் கருக்கரிவாள்களாக
மாறி நல் விளைச்சலை அறுவடை செய்ய போகிறது என்கின்றார். இன்று நம்மிடம்
வாளோ ஈட்டியோ இல்லை அதனை கலப்பையாக, கருக்கரிவாளாக மாற்ற. மாறாக பிறரது
நற்பெயரை வீழ்த்த நாம் பயன்படுத்தும் அவதூறு என்னும் வாளை, நல்லெண்ணம்
என்னும் கலப்பையாக மாற்றுவோம். பிறரது மனதை புண்படுத்தும் கடுஞ்சொற்கள்
என்னும் ஈட்டியை, பண்பான சொற்கள் என்னும் கருக்கரிவாள்களாக மாற்றி
நன்மையை அறுவடை செய்வோம். இதன் மூலம் நம்பிக்கை என்னும் ஆண்டவரின்
ஒளியில் நடக்க முற்படுவோம்.
நம்பிக்கையை அணிந்து கொள்வோம்.:
படைக்கலன்கள் போர்வீரனுக்கு அழகு. மனித உடலுக்கு அணிகலன்கள் அழகு.
அது போல மனதிற்கு அழகு செய்வது நம்பிக்கை. நாம் நம்மேலும் பிறர்
மேலும் கொள்ளும் நம்பிக்கை இறை நம்பிக்கையில் மென்மேலும் வளர உதவுகின்றது.
இரண்டாம் வாசகத்தில் பவுலடியார், ஆண்டவரின் வருகைக்காக
காத்திருக்கும் நம்மை இருளின் ஆட்சிக்குரிய அனைத்து செயல்களையும்
விட்டு விட்டு ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலன் களை அணிந்து
காத்திருக்கச் சொல்கின்றார். பகலில் நடப்பது போல மதிப்போடு இருக்கச்சொல்கின்றார்.
களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு, ஊனியல்பு
இவற்றை விடுத்து வாழச் சொல்கின்றார். மேற்சொன்னவைகள் அனைத்தும் தனிமனித
இன்பத்திற்காக செய்யப்படுபவை. எனவே அதற்கு பதிலாக தானும் மகிழ்ந்து
பிறரையும் மகிழ்விக்கும் வண்ணம், குடும்ப செபம், குடும்ப நிகழ்வுகளில்
குடும்பமாக பங்கேற்றல், மனம் திறந்து உரையாடல், பாராட்டுதல்,
கைவினைப்பொருட்கள் செய்தல், செய்ய பயிற்றுவித்தல், நோயாளிகளை சந்தித்தல்
, அன்பியம் சபைக்கூட்டங்களில் பங்கேற்றல் போன்றவைகளில் ஈடுபாடு
காட்டுதல் இந்நாட்களில் மிக முக்கியம். அவ்வாறு நாம் இருந்தால் நம்பிக்கை
என்னும் கிறிஸ்துவை நாம் அணிந்து கொள்ளலாம்.
ஆயத்தமாய் இருப்போம்.:
நற்செய்தி வாசகத்தில் இயேசு நம்பிக்கையோடு விழிப்போடு அவரது வருகைக்காகக்
காத்திருக்கச்சொல்கின்றார். எப்படிப்பட்ட விழிப்பு நிலை என்பதை
மூன்று நிகழ்வுகள் வழி சுட்டிக்காட்டுகின்றார். வழக்கமாக வயலில்
வேலை செய்பவர்கள் பகலில் முழு விழிப்பு நிலையுடன் மிக மும்முரமாக
வேலை செய்வார்கள். அப்படிப்பட்ட நேரத்திலும் ஒருவர் மட்டுமே மானிடமகனின்
வருகையை அறிந்து எடுத்துக் கொள்ளப்படுவர் மற்றவர் விட்டுவிடப்படுவர்
என்கின்றார். மும்முரமான நிலையிலும் விழிப்புநிலை அவசியம் என்கின்றார்.
திரிகையில் மாவரைக்கும் போது இருவரும் கவனமாக மாவரைப்பர். ஒருவர்
கையினால் திரிகையை சுற்றியும் மற்றவர் மாவினை உள்ளே தள்ளியும் வேலை
செய்வர் அப்படிப்பட்ட கவனமான நிலையிலும் கூட ஒருவர் மட்டுமே மானிடமகன்
வருகையை கண்டுணர்வர் என்கின்றார். மூன்றாவது இரவு நேரக் காவலர்
வேலை {அதிக விழிப்புடன் இருக்க வேண்டிய இந்நேரத்தில் தான் பலர்
தூங்குகின்றனர்}. ஆக நமது விழிப்பு நிலை இதை எல்லாம் தாண்டிய
நிலையில் இருக்க வேண்டும் என்கின்றார். எனவே நாம் எப்போது முழு
விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் ஆண்டவரின் வரவை எதிர்பார்த்து.
கிறிஸ்து பிறப்பின் நாளுக்காக நம்மை தயாரிக்க நமக்கு கொடுக்கப்பட்ட
இந்த நான்கு வாரங்களும் மிக மிக முக்கியமான வாரங்கள். நமது வீட்டை,
குடிலை, தெருவை அலங்கரிக்க எடுக்கும் முயற்சிகளில் ஒரு சிறு முயற்சியையாவது
நம்மை மாற்ற நாம் எடுப்போம். நமது மனதில் படிந்திருக்கும் தீய எண்ணங்கள்
என்னும் சிலந்தி வலைகளை அகற்றுவோம். புத்துணர்ச்சி என்னும் வர்ணம்
பூசுவோம். நற்செயல்கள் என்னும் வண்ண வண்ண தோரணங்கள் கட்டுவோம். பிறரன்பு
என்னும் இனிப்பு வகைகளை செய்து பிறரோடு பகிர்வோம். நம்பிக்கை என்னும்
நாம் ஏற்றிய திரி நமது ஆலயத்தில் மட்டுமல்லாது நமது உள்ளத்திலும்
தொடர்ந்து சுடர்விட்டு எரிய முயற்சிப்போம். இறையருள் என்றும் நம்
உள்ளத்திலும் இல்லத்திலும் நீடித்து நிலைத்திருப்பதாக ஆமென்.
மறையுரைச்சிந்தனை -
அருட்சகோதரி: செல்வராணி O.S.M.
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி
ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்!
ஸ்மார்ட்ஃபோன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் பயன்படுத்தும் அனைவரும் பயன்படுத்தியிருக்கும்
ஒரு ஆப்ஷன் 'டைமர்' ('timer'). அதாவது, ஒரு குறிப்பிட்ட நேரத்தைக்
குறித்து அந்த நேரம் முடிந்தவுடன் நம்மை அலர்ட் செய்யும் இயக்கியே
டைமர். குட்டித்தூக்கம், நினைவூட்டல், தியானம், நீராவி பிடித்தல்
என எல்லாவற்றுக்கும் இந்த இயக்கியை நாம் பயன்படுத்துகிறோம். நம்மை
அறியாமலேயே நாம் டைமர் போட்டு இயங்கிக்கொண்டிருக்கிறோம். எப்படி?
குழந்தையைக் கருவில் தாங்கியிருக்கும் ஒரு பெண் குழந்தை பிறக்கும்
தேதி குறிக்கப்பட்டவுடன் அந்த நாள் மற்றும் நேரத்தை மையமாக வைத்து
தன்னுடைய வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கிறாள். அந்த நாளுக்கேற்றாற்போல
உணவு வகை, உடற்பயிற்சி, உடல் இயக்கம் என அனைத்தையும் ஒழுங்கு
செய்கிறார். ஒவ்வொரு நாளும் கடக்க கடக்க அவளுடைய உள்ளத்தில் இனம்
புரியாத மகிழ்ச்சியும் பயமும் ஒருசேர தோன்றி மறைகிறது. நாள்
நெருங்க நெருங்க இந்த இரண்டு உணர்வுகளும் அதிகமாகின்றன. குழந்தை பிறக்கும்
நாள் வந்தவுடன் அவள் இன்னும் கவனமாக இருக்கிறாள். தன் உடலில் ஏற்படும்
மாற்றங்களைக் கவனிக்கிறாள். தன் அம்மா மற்றும் உடன்பிறப்புக்களை
துணைக்கு வைத்துக்கொள்கிறாள். வாகனத்தை முன்பதிவு செய்கிறாள். உணவு,
தண்ணீரில் மிகக் கவனமாக இருக்கிறாள். தன்னுடைய இயக்கத்தை
வீ;ட்டிற்குள் மட்டும் என வரையறுத்துக்கொள்கிறாள்.
திருமணத் தயாரிப்பு, அருள்பணி திருப்பொழிவு தயாரிப்பு, வேலைக்கான
தயாரிப்பு, அறுவடைக்கான தயாரிப்பு என அனைத்தும் நாள் குறிக்கப்பட்டு
'டைமர்' ஓடுவதன் பின்புலத்தில்தான் நடைபெறுகின்றன. இப்படி நாம் செயல்படும்போது
நம்மையே நன்றாக மேலாண்மை செய்ய முடிகிறது, முக்கியமானவற்றுக்கு மட்டும்
நேரம் ஒதுக்கக் கற்றுக்கொள்ள முடிகின்றது.
புதிய திருவழிபாட்டு ஆண்டிற்குள் நுழைகிறோம். இந்த முதல்நாளில் நமக்குத்
தரப்படும் வாசகங்கள் கடவுளின் டைமர் பற்றி நமக்கு விளக்குகின்றன.
அது என்ன கடவுளின் டைமர்?
'ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும்
ஒரு காலமுண்டு. பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம்' என
முன்மொழிகின்ற சபை உரையாளர் அப்பகுதியின் இறுதியில், 'கடவுள் ஒவ்வொன்றையும்
அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார். காலத்தைப் பற்றிய உணர்வை
மனிதருக்குத் தந்திருக்கிறார். ஆயினும், கடவுள் தொடக்கமுதல் இறுதிவரை
செய்துவருவதைக் கண்டறிய மனிதரால் இயலாது' (காண். சஉ 3:1-2,11) என
எழுதுகின்றார்.
காலம் என்றும் கடவுள் கையில் இருக்கிறது என்பது நமக்கு மிகப்பெரிய
நினைவூட்டலாக இருக்கிறது.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 2:1-5), 'இறுதி நாள்களில்' ஆண்டவர்
என்ன செய்வார் என்பதை எசாயா இறைவாக்கினர் எடுத்துரைக்கிறார். இரண்டாம்
வாசகத்தில் (காண். உரோ 13:11-14), 'இறுதிக்காலம் இதுவே,'
'விழித்தெழும் நேரம் வந்துவிட்டது' என்கிறார் பவுல். நற்செய்தி வாசகத்தில்
'எந்த நாளில் வருவார் என்று உங்களுக்குத் தெரியாது' என்றும், 'நீங்கள்
நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்' என்றும் மொழிகின்றார் இயேசு.
ஆக, மூன்று வாசகங்களிலும் காலத்தைப் பற்றிய குறிப்பு, 'நாள்,' 'நேரம்,'
'காலம்' போன்ற வார்த்தைகளில் காணப்படுகின்றது.
ஒவ்வொரு டைமரிலும் நேரத்துளிகள் முடிந்தவுடன் நாம் ஒரு வேலையைத் தொடங்குகிறோம்.
இறுதிநாளில், அல்லது வந்துவிட்ட இந்த நேரத்தில், நினையாத நேரத்தில்
நாம் செய்ய வேண்டிய வேலை ஒன்றே ஒன்றுதான்: 'ஆண்டவரின் இல்லத்திற்குப்
போவது!'
திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிற்றின் செய்தி இதுதான்: 'ஆண்டவரின்
இல்லத்திற்கு அல்லது மலைக்குப் போவோம்!'
ஆண்டவரின் இல்லத்திற்கு நாம் போக வேண்டும் என்று இன்றைய முதல் வாசகத்தில்
எசாயாவும், பதிலுரைப்பாடலில் திருப்பாடல் ஆசிரியரும் கூறுகின்றார்
என்றால் நாம் இப்போது இருக்கும் இல்லத்தில் என்ன பிரச்சினை? ஏன் இந்த
இல்லத்தை விட்டுவிட்டு ஆண்டவரின் இல்லத்திற்குப் போக வேண்டும்?
நாம் இப்போது வாழும் இந்த உலகம் அல்லது இல்லத்தில் உள்ள மூன்று
பிரச்சினைகளைப் பதிவு செய்கின்றன:
அ. ஆண்டவரின் நெறியை விட்டு நம் நெறியில் வாழ்வது
நீதித்தலைவர்கள் நூலில் ஒரு வாக்கியம் அடிக்கடி வரும்:
'அந்நாள்களில் இஸ்ரயேலுக்கு அரசன் கிடையாது. ஒவ்வொருவரும் அவரவர்
பார்வையில் நேர்மையெனப்பட்டதைச் செய்துகொண்டிருந்தனர்' (காண். நீத
21:25). இவர்கள் நேர்மையெனப்பட்டதைச் செய்தார்கள் என்றால்
நேர்மையானவற்றைச் செய்தார்கள் என்று பொருள் அல்ல. மாறாக,
தங்களுக்கு நேர்மையெனப்பட்டதைச் செய்தனர். இறுதிநாள்களில், 'நாம்
ஆண்டவரின் நெறியில் நடப்போம்' என்று மக்கள் சொல்வதாக எசாயா
எழுதுகின்றார். அப்படி என்றால், இப்போது அவர்கள் தங்கள்
நெறியின்படி வாழ்கின்றனர். திருச்சட்டத்தை மறந்தவர்களாகவும்,
வன்முறை, போர் போன்றவற்றால் அலைக்கழிக்கப்பட்டவர்களாகவும்
இருக்கிறார்கள்.
ஆ. இருளின் செயல்களை அணிந்திருத்தல்
உரோமைத் திருச்சபையில் உள்ளவர்கள் இருளின் செயல்களை - அதாவது,
களியாட்டம், குடிவெறி, கூடாஒழுக்கும், காமவெறி, சண்டைசச்சரவு -
அணிந்துகொண்டிருக்கின்றனர். இருளின் செயல்கள் இவை மட்டுமல்ல. நம்
தனிப்பட்ட வாழ்வில் நாம் கொண்டிருக்கின்ற தாழ்வு மனப்பான்மை,
கோபம், பயம், தன்மதிப்பு குறைவு போன்றவையும் இருளின் செயல்களே.
இ. தயார்நிலை அல்லது விழிப்புநிலை இல்லாமல் இருத்தல்
நோவாகாலத்து மக்கள் உலகம் அழியப்போகிறது என்ற விழிப்புநிலை
இல்லாமல் இருந்ததால் அவர்கள் அதற்கென எதுவும் தயாரிக்கவில்லை.
மேலும், தயார்நிலை அல்லது விழிப்புநிலையில் இல்லாதவரின் வாழ்வு
சூறையாடப்படும். அவர் மானிடமகனால் தேர்ந்துகொள்ளப்பட மாட்டார்.
இந்த மூன்று பிரச்சினைகளிலிருந்து நாம் விடுபட்டால்தான் ஆண்டவரின்
இல்லம் நோக்கி நாம் திரும்ப முடியும். மேற்காணும் மூன்று
பிரச்சினைகளும் இன்று நம் இல்லத்தில் அல்லது உள்ளத்தில் இருந்தால்
அவற்றை நாம் அப்படியே விட்டுவிட்டுச் செல்தல் அவசியம்.
அப்படி நாம் ஆண்டவரின் இல்லத்திற்குச் செல்வதால் நாம் அடையும்
பயன்கள் எவை?
அ. தலைகீழ் மாற்றம்
தலைகீழ் மாற்றத்தை உருவகமாகப் பதிவுசெய்கின்றார் எசாயா: 'வாள்கள்
கலப்பைக் கொழுக்களாகும். ஈட்டிகள் கருக்கரிவாள்களாகும்.
போர்ப்பயிற்சி நடைபெறாது.' ஆக, முந்தைய நிலை முற்றிலும்
மாறிப்போகிறது. மேலும், அழிவின் காரணிகளாக இருந்தவை விவசாயத்தின்,
ஆக்கத்தின் கருவிகளாக மாறுகின்றன. ஆண்டவரின் இல்லத்தை நோக்கி நாம்
பயணத்தைத் திருப்பும்போது நம்முடைய வாழ்விலும் தலைகீழ் மாற்றம்
நிகழும்.
ஆ. கிறிஸ்துவை அணிந்துகொள்வோம்
'அணிந்துகொள்தல்' என்பது முற்றிலும் ஆட்கொள்ளப்படுதலைக்
குறிக்கும். இருளை அணிந்துகொண்டவர்கள் இனிமேல் கிறிஸ்துவை
அணிந்துகொள்ளவேண்டும். நாம் அணியும் எதுவும் நமக்கு மதிப்பு
தருகிறது. ஆகையால்தான் சிறந்தவற்றையும், சிறந்த பிராண்ட்களையும்
நாம் அணிந்துகொள்ள விரும்புகிறோம். பார்க் அவென்யு, க்ரோகொடைல் போல
'கிறிஸ்து' என்ற பிராண்டை நாம் அணிந்துகொண்டால், நம் வெளி இயல்பும்
உள்ளே உள்ள இயல்பும் ஒன்றாக இருக்க வேண்டும்.
இ. மானிடமகனால் எடுத்துக்கொள்ளப்படுதல்
வயலில் இருக்கும் இருவரில் ஒருவர், மாவரைக்கும் இருவரில் ஒருவர்
எடுத்துக்கொள்ளப்படுகின்றார். மற்றவர் விடப்படுகின்றார்.
எடுத்துக்கொள்வது இறைவனின் தெரிவு. ஆனால், ஆயத்தமாய்
இருப்பவர்களையே அவர் எடுத்துக்கொள்கின்றார். ஆயத்தம் இல்லாதவர்
தொடர்ந்து வயலிலும் திரிகையிலும் வேலை செய்துகொண்டே இருக்க
வேண்டும்.
ஆண்டவரின் மலைக்குச் செல்ல நாம் என்ன செய்ய வேண்டும்?
அ. அவர் நெறியில் நடக்க வேண்டும்
ஆ. விழித்தெழ வேண்டும்
இ. தயார்நிலையில் இருக்க வேண்டும்
'ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்' என்ற அழைப்பை நான் கேட்டபோது
அகமகிழ்ந்தேன்' என்று பாடுகின்றார் திருப்பாடல் ஆசிரியர் (காண்.
122:1). அந்த இல்லத்தில் நீதியும், அமைதியும், நல்வாழ்வும்
இருக்கிறது.
நமக்கு முன் நிறைய நேரம் இருக்கிறது என நினைத்து நம் வாழ்வை
வாழ்ந்துகொண்டிருப்பதை நிறுத்துவோம். ஆண்டுகள் நிறையத் தெரியலாம்.
ஆனால், பத்தாண்டுகளாகப் பிரித்தால் நம் வாழ்வு வெறும் ஏழு அல்லது
எட்டு பத்தாண்டுகளே. நம்முடைய வாழ்வின் நேரம் குறைவு என்று
நினைக்கத் தொடங்கும் அந்த நாளில்தான் நாம் புதிதாய்ப் பிறக்கிறோம்.
இந்த எண்ணம் நமக்கு பயத்தை அல்ல, எதிர்நோக்கையே தர வேண்டும்.
'ஆண்டவரின் இல்லத்திற்குப் போவதை' நான் என்னுடைய வாழ்வின் இலக்காக
நினைத்து, அதற்கான டைமர் ஓடிக்கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு,
வாழ்வை நான் அன்றாடம் வாழ்ந்தால் வீண் சண்டை சச்சரவுகளில் நேர
மற்றும் ஆற்றல் விரயமும், பயமும், கோபமும், பாதுகாப்பின்மையும்,
வன்மமும், தீய இச்சையைத் தூண்டும் ஊனியல்பும், சோம்பலும்,
தூக்கமும் இருக்காது.
நாம் இன்று ஏற்றும் 'எதிர்நோக்கு' என்னும் மெழுகுதிரி 'ஆண்டவரின்
இல்லத்திற்குப் போவோம்!' என்ற எதிர்நோக்கை நம் உள்ளத்தில்
ஏற்றுவதாக!
ஒளியும் விழிப்பும்
புதிய திருவழிபாட்டு ஆண்டை இன்று நாம் தொடங்குகிறோம்.
மத்தேயு நற்செய்தியாளரோடு இந்த ஆண்டு முழுவதும் நாம் பயணம்
செய்யவிருக்கிறோம். திருவருகைக் காலத்தின் மூன்று
நோக்கங்கள்: (அ) இயேசு கிறிஸ்துவின் முதல் வருகையை
நினைவுகூர்ந்து கொண்டாடக் கூடிய கிறிஸ்து பிறப்பு
விழாவுக்கு நம்மையே தயாரிப்பது. (ஆ) இயேசுவின் இரண்டாம்
வருகைக்கான நம் காத்திருத்தலை நமக்கு நினைவூட்டுவது. (இ)
அன்றாம் இறைவார்த்தையிலும் அருளடையாளங்களிலும் நம் நடுவில்
வசிக்கும் மனிதர்கள் வழியாகவும் நம்மிடம் வருகிற இயேசு
கிறிஸ்துவை அடையாளம் காணக் கற்றுக்கொள்வது.
(அ) நம் கண்களை ஆண்டவரின் மலை நோக்கித் திருப்புவோம்
இன்றைய முதல் வாசகத்தில், தன் சமகாலத்து இஸ்ரயேல்
மக்களுக்கு இறைவாக்கு உரைக்கிற எசாயா, 'புறப்படுங்கள்.
ஆண்டவரின் மலைக்குப் போவோம் யாக்கோபின் குடும்பத்தாரே,
நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்' என்று அழைப்பு
விடுக்கிறார். போர்களாலும் அசீரிய மற்றும் பாபிலோனிய
அடிமைத்தனங்களாலும் சிதறடிக்கப்பட்ட மக்கள் தங்கள் கண்களை
ஆண்டவரின் மலை நோக்கித் திருப்ப வேண்டும். இவ்வாறாக,
ஆண்டவரின் மலை அவர்களுக்கு இலக்குத் தெளிவையும்,
ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், இணைந்த பயணத்தையும்
குறிக்கிறது. ஆண்டவராகிய கடவுள் தந்த திருச்சட்டங்களை
விட்டுவிட்டு இஸ்ரயேல் மக்கள் சிலைவழிபாட்டில் இறங்கி
தங்களையே தீட்டுப்படுத்தி இருளை அணிந்துகொண்டார்கள்.
திருச்சட்டம் என்னும் ஒளியில் நடப்போம் என்று அவர்களை
அழைக்கிறார் எசாயா.
(ஆ) 'ஆண்டவரது இல்லத்துக்குப் போவோம்!'
இன்றைய பதிலுரைப்பாடல் சீயோன் மலைத் திருப்பயணப்
பாடல்களில் ஒன்றாக அமைந்துள்ளது. ஆண்டவரது இல்லத்துக்குப்
போவோம் என்னும் அழைப்பைக் கேட்கிற திருப்பயணி ஒருவருடைய
உள்ளத்தில் எழுகிற நேர்முகமான உணர்வுகளை எடுத்துரைக்கிறது
இப்பாடல். அவர்கள் செல்கிற எருசலேம் நகரில் அவர்களுக்கு
நீதியும் அமைதியும் நலமும் இருப்பதாக திருப்பயணி
உணர்கிறார். ஆண்டவராகிய கடவுள் அங்கே குடியிருப்பதால்
அந்நகர் மேன்மையும் அழகும் பெற்றிருக்கிறது. இறைவனின்
இல்லத்தில் நமக்கு நீதியும் அமைதியும் நலமும் கிடைக்கும்
என்பது நம் எதிர்நோக்காகவும் இருக்கிறது.
(இ) 'பகல் நெருங்கி உள்ளது'
அகுஸ்தினாரின் மனமாற்றத்துக்குக் காரணமான விவிலியப்
பகுதியாகச் சொல்லப்படுகிற பகுதியே இன்றைய இரண்டாம் வாசகம்.
ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்துகொள்ள வேண்டும்
என்னும் திருத்தூதர் பவுலின் அழைப்பை தனக்கே தரப்பட்ட
அழைப்பாக எடுத்து உடனடியாக மனம் மாறுகிறார் அகுஸ்தினார்.
உரோமையருக்கு எழுதுகிற திருமடலை நிறைவுசெய்கிற பவுல்
அறிவுரையுடன் நிறைவு செய்கிறார். உடனடியான உளமாற்றத்துக்கு
அவர்களை அழைக்கிறார். 'இயேசு கிறிஸ்துவை
அணிந்துகொள்ளுங்கள்' என்னும் அழைப்பு சவால் நிறைந்ததாக
இருக்கிறது. ஒருவர் தனக்குரிய இயல்பை முழுமையாக
ஒதுக்கிவிட்டு இயேசுவை இயேசுவின் இயல்பை அணிந்துகொள்ள
வேண்டும் என்பது பவுல் தருகிற அழைப்பு.
(ஈ) 'ஆயத்தமாய் இருங்கள்'
மானிட மகனின் வருகை பற்றிய எச்சரிக்கையும் அறிவுரையையும்
வழங்குகிறார் இயேசு. அந்த நாள் திடீரென வரும் என்றும்,
விழிப்பு நிலையும் தயார்நிலையும் கொண்டிருப்பவர்கள் மானிட
மகனை எதிர்கொள்ள முடியும் என்று அறிவுறுத்துகிறார் இயேசு.
வாழ்க்கைப் பாடங்கள்
நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை போர், இயற்கைப்
பேரிடர், வெள்ளம், பெருமழை, புயல், அரசியல் குழப்பங்கள்,
சமயப் பிறழ்வுகள் சிலர் மானிட மகனுடைய இறுதி நாள்கள்
என்று பொருள்கொள்கிறார்கள். 'தொடக்க நாள்' என்று ஒன்றைக்
கொண்டிருக்கும் அனைவருக்கும் அனைத்துக்கும் 'இறுதி நாள்'
இருக்கும் என்பது வாழ்வியல் எதார்த்தம். 'இன்றே' அந்த
'இறுதி நாள்' என்று நாம் நினைத்து வாழத் தொடங்கினால், பல
மாற்றங்களை நம் தனிப்பட்ட வாழ்வில் கொண்டுவர முடியும்.
'இன்று இல்லை அந்த நாள்!' என்ற சாக்குப் போக்கே நம்
வாழ்வின் மாற்றத்தை தள்ளிப்போடுவதற்கான முக்கியக் காரணியாக
இருக்கிறது. 'நாளை பார்த்துக்கொள்ளலாம்!' என்றும் நம்
மனப்பாங்கை சற்றே மாற்றுவோம்!
'களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டை
சச்சரவு' போன்றவை இன்று பல வடிவங்கள் எடுத்து நிற்கின்றன.
தான் காய்வது தெரியாமாலேயே தண்ணீரின் சூட்டுக்குள்
கிடக்கும் தவளை போல, நாமும் நம் நேரமும் ஆற்றலும் கவனமும்
குடும்பமும் வாழ்வும் அழிவது தெரியாமலேயே நாம் அன்றாடம்
அழிந்துகொண்டிருக்கிறோம். ஏதாவது ஒன்றை நம் கண்களும்
காதுகளும் கேட்டுகொண்டே இருக்குமாறு பழகிவிட்டோம். இந்த
உறக்கத்தினின்று விழிக்கும் நேரம் வந்துவிட்டது. இப்பொழுது
நாம் விழிக்கவில்லை என்றால், விரைவில் இறந்துவிடுவோம்!
உறக்கத்தினின்று இப்போது விழித்தெழுகிற நாம் கடவுளின் மலை
நோக்கி நம் கண்களைத் திருப்புவோம். இந்த நாள்களில் நம்
இந்து சகோதர சகோதரிகள் சிறப்பான மாலையும் தவ உடையும்
அணிந்து சபரிமலை அல்லது பழனி மலைகளுக்குச் செல்லத்
தயாராகிறார்கள். மலை நோக்கிய பயணத்திற்கு தயாரிப்பும்
தூய்மையும் அவசியம். நம் சுமைகள் குறைய வேண்டும். இலக்கு
நோக்கிய கூர்மையும் கவனமும் வேண்டும். உடன் பயணிகளோடு
பயணம் செய்ய தயாராக வேண்டும். நம் உள்ளத்தில் நீதியும்
அமைதியும் நலமும் குடிகொள்ள வேண்டும்.
இன்று நாம் ஏற்றுகிற எதிர்நோக்கு என்னும் மெழுகுதிரி,
ஆண்டவரின் வருகைக்கான காத்திருத்தலை நமக்கு
நினைவூட்டுகிறது. 'எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது!'
(உரோ 5:5) என்று இந்த யூபிலி ஆண்டு முழுவதும் நாம்
சிந்தித்தோம்.
கிரேக்கப் புராணத்தின்படி பண்டோராவிடம் ஒப்படைக்கப்பட்ட
பெட்டி திறக்கப்பட்டவுடன் நோய், வறுமை, இறப்பு ஆகியவை
வெளியேறி பூமியை நிரப்புகின்றன. அனைத்தும் வெளியேறியவுடன்
பெட்டியின் அடியில் இருந்தது 'எதிர்நோக்கு'. அந்த
எதிர்நோக்கே நாம் அனைத்துத் தீமைகளையும் எதிர்கொள்வதற்கான
துணிவைத் தருகிறது.
எதிர்நோக்கு என்னும் திரி நம் விழிப்புநிலையின் அடையாளமாக
அமைவதாக!
கிறிஸ்துவை அணிந்துகொண்டவர்:
பணியிலிருந்து ஓய்வுபெற்ற பாக்கியம் ஆசிரியர், தன் இறுதி நாள்களை
அமைதியாகக் கழிக்க விரும்பினார். அதனால் அவர் நகருக்கு வெளியே ஓர்
இடம் வாங்கி, அங்கே புதிதாக ஒரு வீடுகட்டி, அதில் தன் மனைவி மக்களுடன்
மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். பாக்கியம் ஆசிரியர் விவசாயக்
குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், வீட்டிற்குப் பின்னால் இருந்த
இடத்தில் பழ மரங்களையும் காய்கறிச் செடிகளையும் வளர்த்து வந்தார்.
எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த வேளையில், பாக்கியம் ஆசிரியர்
வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் இருந்த சந்திரன் என்ற பெரியவர்,
அவர்மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவருடைய வீட்டிற்குள் குப்பையை
வீசி வந்தார். 'சில நாள்களில் எல்லாம் சரியாகிவிடும்' என்று
நினைத்துக்கொண்டு பாக்கியம் ஆசிரியர் பொறுமையாய் இருந்தபோது,
நாளுக்கு நாள் சந்திரன் என்ற அந்தப் பெரியவர் செய்த அட்டூழியங்கள்
கூடிக்கொண்டே போயின.
ஒருநாள் காலையில் பாக்கியம் ஆசிரியர் வீட்டுக் கதவைத் திறந்துகொண்டு,
வெளியே வந்தபோது, வீட்டிற்கு முன்னால் குப்பைக் கூடை ஒன்று இருந்தது.
கண்டு அதிர்ந்துபோனார். 'எல்லாம் இந்தச் சந்திரனின் வேலையாகத்தான்
இருக்கும்' என்று அவர் மனத்தில் நினைத்துக்கொண்டு குப்பைக் கூடையை
எடுத்து, அதனை நன்றாகக் கழுவி, தன்னுடைய தோட்டத்தில் விளைந்திருந்த
பழங்களாலும் காய்கறிகளாலும் நிரப்பி, பக்கத்து வீட்டில் இருந்த சந்திரனிடம்
போய்க் கொடுத்தார்.
அதைப் பார்த்ததும் சந்திரவன், "இத்தனை நாள்களும் நான் உங்களுடைய
வீட்டில் குப்பையைக் கொட்டியபோது, அதற்குப் பதிலாக நீங்கள் எனக்குப்
பழங்களையும் காய்கறிகளையும் கொடுக்கின்றீர்களே! " என்று
நெகிழ்ச்சியுடன் கேட்டார். அதற்குப் பாக்கியம் ஆசிரியர், "யாரிடம்
எது மிகுதியாக உள்ளதோ, அதைத் தானே அவர்கள் கொடுப்பார்கள் " என்றார்.
இவ்வார்த்தைகள் சந்திரனின் உள்ளத்தை வெகுவாகப் பாதிக்க, அவர் தன்னுடைய
தவற்றை உணர்ந்து, பாக்கியம் ஆசிரியரிடம் மன்னிப்புக் கேட்டார். அதன்பிறகு
இருவரும் நல்ல நண்பர்களாய் வாழ்ந்து வந்தார்கள்.
ஆம், தன் பக்கத்து வீட்டில் இருந்த சந்திரன் என்ற பெரியவர்
குப்பையை, வெறுப்பை வீசியபோதும் பாக்கியம் ஆசிரியர் அவர்மீது அன்பை
மட்டுமே பொழிந்தார். இவ்வாறு அவர் கிறிஸ்துவை அணிந்துகொண்டவர் என்பதற்கு
இலக்கணமாகத் திகழ்ந்தார். திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறான இன்று
நாம் வாசிக்கக் கேட்ட இறைவார்த்தை, "இயேசு கிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள் "
என்ற அழைப்பினைத் தருகின்றது. நாம் ஏன் கிறிஸ்துவை அணிந்து கொள்ளவேண்டும்?
கிறிஸ்துவை அணிந்து கொள்வதனால் நாம் பெறும் ஆசிகள் என்ன? என்பன
குறித்து நாம் சிந்திப்போம்.
பகல் நெருங்கி உள்ளது:
அனைத்துக்கும் அரசராம் நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின்
பெருவிழாவைக் கொண்டாடிவிட்டுத் திருவருகைக் காலத்தில் இன்று அடியெடுத்து
வைக்கின்றோம். இந்த நல்ல நாளில், இன்றைய இரண்டாம் வாசகத்தின் வழியாகப்
பவுல் விடுக்கின்ற அழைப்புதான், "கிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள் "
என்பதாகும்.
கிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள் என்றால், ஓர் ஆடையைப் போன்று அவரை
அணிந்து கொள்வதல்ல; மாறாக, அவரது மதிப்பீடுகளின்படி வாழ்வது. நாம்
ஏன் கிறிஸ்துவின் மதிப்பீடுகளின்படி வாழவேண்டும் எனில், இதுவே இறுதிக்காலம்,
அல்லது இரவு முடியப் போகிறது, பகல் நெருங்கி உள்ளது என்பதாகும். இருளின்
ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை
அணிந்துகொள்வதுதான் முறையானது. இருளின் ஆட்சிக்குரிய செயல் எவை என்று
இன்றைய இரண்டாம் வாசகத்தின் இறுதியில் பவுல் விவரிக்கின்றார்.
ஆதலால், இது இறுதிக் காலம் என்பதாலும், ஆண்டவரின் வருகை அண்மையில்
இருப்பதாலும், நாம் கிறிஸ்துவை அணிந்துகொண்டு, அவரது மதிப்பீடுகளின்படி
வாழ்வது இன்றியமையாததாக இருக்கின்றது.
அமைதியின் அரசர்:
'ஆசை துறந்தால் அகிலம் உனக்கு' என்பது பல பெரியவர்களும் தங்கள்
வாழ்க்கை அனுபவத்தில் கண்டறிந்த உண்மை. ஆனால், இந்த உண்மையை உணராமல்,
பலரும் மண்மீதும், பொன்மீதும் கொண்ட ஆசையால் நாடுகள்மீது
போர்தொடுத்தும், அதற்காகப் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்துக்
கொண்டும் இருக்கின்றார்கள். இது இன்று நேற்று அல்ல, காலங்காலமாகவே
இருந்து வருகின்றது. இப்படி இவ்வுலக அரசர்கள் போர்களையும் வன்முறைகளையும்
அரங்கேற்றிக் கொண்டிருக்கும் வேளையில், வரவிருக்கும் மெசியா அமைதியின்
அரசராக இருப்பார் என்கிறது இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட
இன்றைய முதல் வாசகம். சீயோன் மலை, எல்லாருக்கும் பொதுவான ஒன்று, ஏனெனில்,
அங்குதான் மெசியாவாம் இயேசு அமைதியின் அரசராய் (எசா 9:6)
வீற்றிருந்து ஆட்சி செலுத்துவார். அவரது காலத்தில் போர்களோ, சண்டை
சச்சரவோ எதுவுமே இராது என்பதுதான் இறைவாக்கினர் எசாயா உரைக்கின்ற
இறைவாக்கு. இயேசுவின் இரண்டாம் வருகையின்போது இதெல்லாம் நிறைவேறும்
என்பதுதான் திருவிவிலிய அறிஞர்களின் கூற்று.
விழிப்பாகவும் ஆயத்தமாகவும் இருங்கள்:
இரவு முடிந்து பகல் நெருங்கி உள்ளது என்றும், அமைதியின் அரசர் வரப்போகிறார்
என்றும் நாம் சிந்தித்துப் பார்த்தோம். இத்தகைய அமைதியின் அரசரது
வருகைக்கு நாம் எவ்வாறு தயார் செய்ய வேண்டும் என்பதற்கான
தெளிவினைத் தருகின்றது இன்றைய நற்செய்தி வாசகம்.
மானிட மகனுடைய வருகையின் எப்படி இருக்கும் என்பது பற்றிப்
பேசுகின்ற இயேசு, "நோவாவின் காலத்தில் இருந்தது போலவே இருக்கும் "
என்கிறார். நோவாவின் காலத்தில் வாழ்ந்தவர்கள் உண்டும் குடித்தும்
வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு நோவா நீதியைப் பற்றி அறிவித்தபோதும்
(2 பேது 2:5), அவர்கள் அதற்குச் செவிசாய்க்காமல், தங்கள் விருப்பத்தின்படி
நடந்தார்கள். இதனால் அவர்கள் வெள்ளப்பெருக்கினால் அழிந்தார்கள். இயேசு
நோவாவைப் பற்றிச் சொல்லிவிட்டு, மானிட மகனுடைய வருகைக்காக விழிப்பாகவும்
ஆயத்தமாகவும் இல்லாமல் இருப்பவர்கள் அப்படியே விட்டுவிடப்படுவார்கள்.
அதே நேரத்தில் ஆண்டவரின் வருகைக்காக விழிப்பாகவும் ஆயத்தமாகவும் இருப்பவர்கள்
எடுத்துக் கொள்ளப்படுவார்கள் என்கிறார்.
எனவே, மானிட மகன் எப்போது வருவார் என்பது நமக்குத்
தெரியாவிட்டாலும், அவர் இவ்வுலகில் அமைதியை நிலைநாட்டுவார்; அவருக்கு
அஞ்சி வாழ்வோருக்கும், விழிப்பாய், ஆயத்தமாய் இருப்போருக்கும், அவரை
அணிந்து கொண்டு வாழ்வோருக்கும் அவர் தக்க கைம்மாறு தருவார் என்ற நம்பிக்கையோடு
நாம் அவருக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம்.
இறைவாக்கு:
'புதிய மனித இயல்பை அணிந்திருக்கிறீர்கள். இவ்வியல்பு தன்னை உண்டாக்கினவரின்
சாயலுக்கேற்பப் புதுப்பிக்கப்படுகின்றது' (கொலோ 3:10) என்று பவுல்
கூறுவார். எனவே, நாம் புதிய மனித இயல்பை அணிந்திருக்கின்றோம் என்ற
உணர்வோடு, கிறிஸ்துவை நமது வாழ்வால் பிரதிபலிப்போம். அதன் வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
விழிப்பாய் இருங்கள்! ஆயத்தமாய் இருங்கள்!
சில ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பயணி
(Tourist) காடு, மலை என்று எல்லா இடத்திலும் நாடோடியாகச் சுற்றித்
திரிந்ததான். ஒருநாள் அவன் ஓர் ஏரிக்கு அருகே அழகான தோட்டம்
ஒன்றைக் கண்டார். அது பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும்,
தூய்மையாகவும் இருந்தது. ஆள்நடமாட்டம் இல்லாத இந்த இடத்தில்
இவ்வளவு அழகான ஒரு தோட்டமா? என்று அவனே ஆச்சரியப்பட்டு நின்றான்.
உடனே அவன் தோட்டத்திற்கு முன்பாகச் சென்றான். அது சுற்றிலும் வேலி
போடப்பட்டு அடைக்கப்பட்டிருந்தது. 'உள்ளே யாராவது இருக்கிறீர்களா?'
என்று சத்தம் கொடுத்துப் பார்த்தான். அப்போது உள்ளேயிருந்து ஒரு
வயதான பெரியவர் அங்கு வந்தார். அவரிடம் பயணி தன்னை
அறிமுகப்படுத்திக் கொண்டு, உள்ளே வரலாமா? " என்று கேட்டான். அதற்கு
அந்த பெரியவர், "ஓ தாராளமாக உள்ளே வரலாம் " என்று அவனை அழைத்தார்.
பின்னர் அந்த பயணி பெரியவரிடம், மெதுவாகப் பேச்சுக்கொடுத்தான்.
"ஐயா பெரியவரே! இந்த அழகான தோட்டத்திற்கு நீங்கள்தான்
பொறுப்பாளரா? " என்று கேட்டான். அதற்கு அவர், "இந்த தோட்டத்திற்கு
பொறுப்பாளர் நான் அல்ல, நான் வெறும் காவல்காரன்தான். இந்த
தோட்டத்தின் பொறுப்பாளர் வெளியூரில் இருக்கிறார் " என்றார். பயணி
தொடர்ந்து அவரிடம், "இந்த தோட்டத்தின் பொறுப்பாளார் எப்போதெல்லாம்
இங்கே வருவார்? " என்று கேட்டான். அதற்கு அந்த பெரியவர், "எனக்கு
விவரம்தெரிந்து அவர் நான்குமுறை இந்த தோட்டத்திக்கு
வந்திருக்கிறார் " என்றார்.
பயணி விடாது அவரிடம், "நான்குமுறைதான் இந்த தோட்டத்தின்
பொறுப்பளார் இங்கு வந்திருக்கிறாரா?, கடைசியாக அவர் இங்கே எப்போது
வந்தார்? " என்று கேட்டான். அதற்கு பெரியவர், "கடந்த ஆண்டு அவர்
இங்கே வந்தார். வந்தவர் ஒருசில நாட்கள் மட்டுமே தங்கிவிட்டு
அப்படியே சென்றுவிட்டார் " என்றார்.
"எப்போதாவதுதான் அவர் இந்த தோட்டத்திற்கு வருகிறார் என்று
சொல்கிறீர்கள், அப்படி இருக்கும்போது, ஏதோ நாளைக்கே அவர் இந்தத்
தோட்டத்திற்கு வருவதுபோன்று இவ்வளவு அழகாக, தூய்மையாக இந்தத்
தோட்டத்தை வைத்திருக்கிறீர்களே, அது ஏன்? " என்று கேட்டார். அதற்கு
பெரியவர் மறுமொழியாக, "நாளைக்கு அல்ல, இன்றைக்கே வருவார் என்ற என்ற
எதிர்பார்ப்பில்தான் நான் இந்தத் தோட்டத்தை இவ்வளவு அழகாக
வைத்திருக்கிறேன் " என்று பதிலளித்தார்.
தலைவர் எந்த நேரத்திலும் வருவார் என்ற எதிர்பார்ப்பில் தோட்டத்தைத்
தூய்மையாக வைத்திருக்கும் அந்த பெரியவரைப் போன்று, நாமும்
ஆண்டவரின் வருகைக்காக எப்போதும் விழிப்பாகவும், ஆயத்தமாகவும்
இருக்கவேண்டும் என்பதை மேலே உள்ள நிகழ்வானது நமக்கு
எடுத்துக்கூறுகிறது.
திருவருகைக் காலத்தைத் தொடங்கி இருக்கும் நமக்கு, இன்றைய நாளில்
நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள், "விழிப்பாயிருங்கள், ஆயத்தமாக
இருங்கள் " என்றதொரு செய்தியை வழங்குகின்றன. நாம் ஒவ்வொருவரும்
ஆண்டவர் இயேசுவின் வருகைகாக எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டும்
என்பதுதான் இன்றைய நாள் வாசகங்களின் சாரம்சமாக இருக்கின்றது.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி
வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "விழிப்பாய் இருங்கள், ஏனெனில் உங்கள்
ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. எனவே
நீங்கள் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில்
மானிடமகன் வருவார் " என்கிறார். மானிட மகனுடைய வருகை ஒரு திருடனைப்
போன்று எப்போது, எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது. எனவே
நாம் விழிப்பாகவும், ஆயத்தமாகவும் இருக்கவேண்டும் என்று ஆண்டவர்
இயேசு நமக்கு அழைப்புத் தருகின்றார்.
மானிட மகனுடைய வருகைக்கு நாம் எப்படி விழிப்பாகவும், ஆயத்தமாகவும்
இருக்கவேண்டும் என்று சிந்தித்துப் பார்க்கும்போது, கடவுள்
நமக்குக் கொடுத்த கடமைகளையும், பொறுப்புகளையும் சரிவரச் செய்து,
அவரது வருகையை எப்போதும் எதிர்கொண்டு இருப்பதுதான் விழிப்பாகவும்,
ஆயத்தமாகவும் இருப்பதாகும். எடுத்துக்காட்டாக தலைவன் ஒருவனுக்குக்
கீழ் வேலைபார்த்துக் கொண்டிருக்கும் நாம், எப்போதும் நமது கடமைகளை
நாம் செய்துகொண்டிருக்கவேண்டும். ஒருவேளை தலைவர் வரக் காலம்
தாழ்த்துவார், அல்லது அவர் எப்போதாவதுதான் வருவார் என்ற
நினைப்பில், நமது கடமைகளை நாம் சரிவரச் செய்யாமல் இருந்தால்,
கடைசியில் நாம் தலைவனின் தண்டனைக்கு கட்டாயம் உள்ளாவோம் இதைத்தான்
ஆண்டவர் இயேசு 'விழிப்பாய் இருங்கள், ஆயத்தமாய் இருங்கள் " என்று
சொல்கிறார்.
அதேபோன்று இப்படி நாம் விழிப்பாய், ஆயத்தமாய் இருந்து,
எதிர்பாத்துக் கொண்டிருக்கும் மானிட மகன்/மெசியா எப்படிப்பட்டவர்
என்பதை இன்றைய முதல் வாசகமானது நமக்கு எடுத்துக்கூறுகிறது.
இறைவாக்கினர் எசாயாப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய
முதல் வாசகத்தில், மெசியா எல்லா மக்களினத்தாரிடமும்
(வேற்றினத்தாரிடமும்) உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்; அவர்
வரும் நாளில் ஒரு இனம், இன்னொரு இனத்தின்மீது போர் தொடுக்காது.
இவ்வாறு அவர் மக்களுக்குக்கிடையே நல்லுறவை, அமைதியை ஏற்படுத்தக்
கூடியவராக இருப்பார் என்று சொல்லப்படுகின்றது. ஆம், நாம் ஆவலோடு
எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மெசியா சாதரணமானவர் அல்ல, அவர்
அமைதியின் அரசர், வியத்தகு ஆலோசர் (எசாயா 9:6).
இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். இங்கிலாந்தில்
உள்ள லண்டனில் எதிரிநாட்டுப் படையினர் குண்டுமழை
பொழிந்துகொண்டிருந்தார்கள். இதைப் பார்த்த மக்கள் பீதியடைந்து,
தங்களுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பாதுகாப்பான ஓர் இடத்திற்கு
தப்பியோடிச் சென்றார்கள். ஆனால் ஒரே ஒரு கிறிஸ்தவப் பெண்மணி
மட்டும் எங்கேயும் போகாமல், தன்னுடைய வீட்டிலேயே தங்கி இருந்தார்.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்து வீட்டார் எல்லாரும் அவளிடம்,
"உனக்கு உயிர்மீது அக்கறையில்லையா?, நகரில் எதிரிநாட்டினர்
குண்டுமழை பொழிந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், எல்லாரும்
தங்களுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடும்போது, நீ மட்டும் இப்படி
இருக்கிறாயே? " என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண்மணி, "கடவுள்
மக்களின் துன்பத்தைக் கண்டு கண்ணை மூடிக்கொள்பவர் அல்ல, அவர் இந்த
போர்மயமான சூழலை மாற்றி அமைதியைக் கொணர்வார் என்ற நம்பிக்கை எனக்கு
இருக்கிறது. ஏனென்றால் அவர் அமைதியின் அரசர் " என்று அவர்களுக்குப்
பதிலளித்தார்.
அந்தப் பெண்மணியின் நம்பிக்கை வீண்போகவில்லை. ஆம், சில நாட்கள்
கழித்து, எதிர்நாட்டவர் தங்களுடைய படையை நகரிலிருந்து திரும்பப்
பெற்றுக்கொண்டனர். அந்நகரில் அமைதி நிலவியது. ஆம், நம் ஆண்டவர்
இயேசு கிறிஸ்து இந்த உலகிற்கு அமைதியைக் கொணர்பவர். ஏனென்றால் அவர்
அமைதியின் அரசர்.
ஆகவே, நாம் ஆவலோடு, விழிப்பாடும், ஆயத்தமாகவும் எதிர்ப்பார்த்துக்
கொண்டிருக்கும் மெசியா அமைதியின் அரசர் என்ற உண்மையை உணர்ந்து,
அதற்கேற்ப நமது வாழ்வை அமைத்துக்கொள்ளவேண்டும்.
நிறைவாக அமைதியின் அரசராக இருக்கும் நமது ஆண்டவர் இயேசு
கிறிஸ்துவின் வருகைக்காக நாம் என்ன செய்யவேண்டும் என்பதை நாம்
சிந்தித்துப் பார்க்கவேண்டும். உரோமையருக்கு எழுதப்பட்ட
திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட, இன்றைய இரண்டாம் வாசகத்தில்
பவுலடியார் கூறுவார், "இரவு முடியப் போகிறது; பகல் நெருங்கி
உள்ளது. ஆகவே, இருளின் ஆட்சிக்குரிய படைக்கலன்களை களைந்துவிட்டு,
ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலன்களை அணிந்து கொள்வோமா! பகலில்
நடப்பதுபோல மதிப்போடு நடந்து கொள்வோமா!. இருளின் ஆட்சிக்குரிய
செயல்களான களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், சண்டைச் சச்சரவு,
காமவெறி, தீய இச்சை போன்றவற்றைக் களைந்துவிட்டு கிறிஸ்துவை
அணிந்துகொள்வோமாக " என்கிறார். எனவே, நாம் நமது வாழ்வில்
இருக்கக்கூடிய இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு,
ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலன்களை அணிந்துகொள்ளவேண்டும்.
ஆனால் உண்மையிலே நாம் இருளின் ஆட்சிக்குரிய காரியங்களைக்
களைந்துவிட்டு கிறிஸ்துவை அணிந்திருக்கிறோமா? என்று சிந்தித்துப்
பார்க்கவேண்டும். திருமுழுக்கின்போது குருவானவர் மக்களிடம்,
"பாவத்திற்குக் காரணனும், தலைவனுமாகிய சாத்தனை
விட்டுவிடுகிறீர்களா? " என்று கேட்பார். எத்தனை பேர் சாத்தனை
விட்டுவிட்டு, கிறிஸ்துவை அணிந்திருக்கிறோம்? இது நாம்
சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒரு செயல்.
இறைவாக்கினர் ஆமோஸ் புத்தகம் 5:14 ல் வாசிக்கின்றோம், "நன்மையை
நாடுகள்; தீமையைத் தேடாதீர்கள். அப்போது நீங்கள் சொல்வதுபோல
படைகளின் ஆண்டவர் உங்களோடு இருப்பார் " என்று. ஆகவே, தீமையை,
சாத்தானை நம்முடைய வாழ்விலிருந்து அகற்றிவிட்டு, நன்மையை, இயேசுவை
நாடுவோம். அப்போது இறைவன் தன்னுடைய மேலான உடனிருப்பை, பாதுகாப்பை
நமக்குத் தருவார்.
சாது வாஸ்வானி நம்முடைய இந்தியத் திருநாட்டில் வாழ்ந்த புகழ்பெற்ற
மகான்களுள் ஒருவர். அவர் நான்கு வயதுச் சிறுவனாக இருந்தபோது, ஒரு
நாள் தெருவில் நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார். அது
ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத தெரு வேறு.
திடிரென்று எங்கிருந்தோ வந்த முரடன் ஒருவன், சிறுவன் வாஸ்வானியின்
அருகே வந்து, தான் அணிந்திருந்த வேட்டிக்குள் அவனைத் தூக்கிப்
போட்டுக்கொண்டு, நடக்க ஆரம்பித்தான். சிறுவன் என்ன நடக்கின்றது
என்று தெரியாமல் விழித்தான். சிறுதுநேரம் கழித்துத்தான் அவன் தான்
இருட்டுக்குள் மாட்டிக்கொண்டுவிட்டோம் என்பதை உணர்ந்து, சத்தமாக
"ஆண்டவரே இருளிலிருக்கும் என்னை வெளியேகொண்டு வாரும் " என்று
கத்தினான்.
அந்நேரத்தில் தெருவில் போய்க்கொண்டிருந்த ஒரு மனிதன், சத்தம்
எங்கிருந்து வருகிறது என்று சுற்றும் முற்றும் பார்த்தான். ஆனால்
சத்தம் எந்தப் பக்கத்திலிருந்து வருகிறது என்பதை மட்டும் அவனால்
கண்டுகொள்ள முடியவில்லை. மாறாக எதிரிலே நடந்து வரும் முரடனின்
நடையில் ஒரு வித்தியாசம் தெரிவதை உணர்ந்தான். உடனே அந்த புதிய ஆள்,
சத்தம் முரடன் இருக்கும் திசையில் இருந்துதான் வருகிறது என்பதை
உணர்ந்துகொண்டு, அவன் அருகே நெருங்கினான். அதற்குள் முரடன் சிறுவனை
தெருவின் ஓர் ஓரத்தில் விட்டுவிட்டு, பறந்து சென்றுவிட்டான்.
பிற்காலத்தில் சாது வாஸ்வானி இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுச்
சொல்லும்போது சொல்வார், 'மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் அஞ்ஞானம்,
தீமை என்னும் இருளுக்குள் சிக்குண்டு கிடக்கின்றோம். அதாவது நாம்
தீமைக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றோம். என்றைக்கு நாம் இறைவனை
நோக்கி, "இறைவா! என்னை இந்த இருளிலிருந்து விடுவித்தருளும்' என்று
மன்றாடுகிறோமோ, அன்றைக்குத்தான் நாம் இருளிலிருந்து வெளியே
வரமுடியும் " என்று.
ஆகவே, நாம் இருளின் பிடியிலிருந்து வெளிவர இறைவனிடம் மன்றாடுவோம்.
நாமும் இருளின் ஆட்சிக்குரிய காரியங்களைக் களைந்துவிட்டு,
கிறிஸ்துவை ஆடையாக அணிந்துகொள்வோம். அப்போது நாம் விழிப்போடும்,
ஆவலோடும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அமைதியின் அரசர் நமக்கு
எல்லா ஆசிரையும் தந்து வழிநடத்துவார்.
அனிஸ் என்ற ஏழு வயது சிறுவன் பெங்களூரில் ஓர் ஆங்கிலப் பள்ளியிலே
3ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவன் அப்பா ஒரு
பொறியாளர், அமெரிக்காவில் பணி செய்து கொண்டிருந்தார். அவன்
அம்மா, அக்காள் இந்தப் பையன் மூவரும் விடுமுறையில் அப்பாவோடு
இருவாரங்கள் தங்கி வர, அமெரிக்காவைப் பார்த்து வர
பாஸ்போர்ட், விசா எல்லாம் ஒழுங்கு செய்து புறப்பட இரண்டு
நாட்கள் இருந்தன. அப்பாவுக்கு இந்தியா லாலா மிட்டாய்
வாங்கிக் கொண்டு போக வேண்டும் என்று விரும்பி அருகில் இருந்த
கடைக்குச் சென்று ஒரு கிலோ லாலா மிட்டாய் வாங்கி வரும்போது,
தரையில் அறுபட்டுக்கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்து அங்கே
பிணமானான் சிறுவன். ஒரு வாழ்வு மலருமுன்னே மறைந்து, எல்லோரையும்
துயரத்தின் கடலிலே ஆழ்த்தியது. ஆம் எதிர்பாராத சோக நிகழ்ச்சி!
இன்றைய நற்செய்தியில் நாம் விழிப்பாய் இருக்கவும், ஆயத்தமாக
இருக்கவும் அழைப்பு விடுக்கிறார் இயேசு. இதற்காக ஒரு நிகழ்வையும்,
ஓர் உவமையையும் தருகிறார். மக்கள் கடவுளை மறந்து சிற்றின்ப
வாழ்வில் மூழ்கினார்கள். வெள்ளப் பெருக்கைக் கொண்டு அம்மக்களை
அழிக்க விரும்பினார். நீதிமான் நோவாவை நோக்கிக் கப்பல் கட்டச்
சொன்னவுடன், பணிந்து வேலையை ஆரம்பிக்கிறார். மற்றவர்கள்
அவரைப் பார்த்து தண்ணீர் இல்லையே! ஏன் இந்தப் பெரிய கப்பல்
என்று ஏளனம் செய்கின்றனர். பெட்டக வேலை முடிந்தவுடன் பெருமழை
வந்தது. நோவாவின் குடும்பம் காப்பாற்றப்பட்டது. ஆனால் தயாரின்றி
இருந்த மற்றவர் அனைவரும் அழிந்தனர் (மத்: 24:37-44).
இரண்டாவது, இயேசு சொல்கிறார், இருவர் வயலில் இருப்பர், ஒருவர்
எடுத்துக் கொள்ளப்படுவார், மற்றவர் விடப்படுவார். புனித
பேதுரு கூறுவதுபோல ஆண்டவருடைய நாள் திருடனைப்போல் வரும்
(2பேதுரு 3:10). ஆண்டவருடைய நாள் என்பது பழைய ஏற்பாட்டிலே
கடவுளின் வாக்குறுதியின் நிறைவாக, மெசியாவின் வருகையைக்
குறிப்பதாக இருந்தது. ஆனால் புதிய ஏற்பாட்டிலே இயேசுவில்
நாம் பெறும் மீட்பைப் பற்றியதாக, இயேசுவை நம் இரட்சகராக ஏற்று
நாம் பெறும் நித்திய வாழ்வைப் பற்றியதாக உள்ளது. இன்றைய முதல்
வாசகத்திலே எசாயா இறைவாக்கினர் கூறுவது போல நாம் அனைவரும்
பயணிகள், நமது நோக்கம் எருசலேம் தேவாலயம் அல்ல. மாறாக இறைவனோடு
என்றும் வாழ்வுக்கு, அந்த உன்னத வாழ்வுக்கு, சீயோன் மலைக்குச்
செல்லத் தயாராக இருக்க அழைப்பு விடுக்கிறார். சிறுவன் அனிஸ்
வாழ்வு திடீரென முடிவுக்கு வந்தது போல, நமது வாழ்வு என்று
முடிவு பெறும் என்று தெரியாததால் நாம் என்றும்
விழிப்போடும், தொடர்ந்த ஆயத்தத்தோடும் வாழ வேண்டும் என்பதை
இயேசு நற்செய்திலே வலியுறுத்துகிறார் (மத்: 24:43-44).
இன்றைய சமுதாயத்தை ஆட்டிப்படைப்பது மனவிரக்தியும், மனச்சோர்வும்
ஆகும். இத்தகைய மனவிரக்தியிலும், மனச்சோர்விலும் வாழும்
நமக்குப் புனித பவுல் அடிகளாரின் இன்றைய இரண்டாம் வாசகம் (உரோ.
13:11-14), நம்பிக்கையையும், ஆற்றலையும், ஊட்டவல்லவையாக அமைகின்றன.
தீமைகளும், அநீதிகளும், இரவின் செயல்களும் முடியப்போகின்றன
என்று முன்னறிவிக்கிறார். மீட்பு அண்மையில் உள்ளது. இரவு
முடியப்போகிறது. பகல் நெருங்கி வந்துவிட்டது என்றும் உற்சாகமூட்டும்
வார்த்தைகளைத் தருகிறார்.
அன்பார்ந்தவர்களே!
புதிய சமுதாயத்தைப் படைக்க நம்மிடத்தில் முதலாவது இருக்க
வேண்டியது துணிவும், தளராத மனமும், விடாமுயற்சியும், இலட்சியத்
தெளிவும் ஆகும்.
ஆண்டவரின் நாள் எப்போது வரும் என்று நமக்குத் தெரியாததால்
நாம் மனப்பக்குவத்துடன் தயாராக இருக்க வேண்டும். நாளை மனம்
திரும்பலாம், என்று தள்ளிப்போடும் மடமை, முட்டாள்தனத்திற்கு
இன்று முடிவு கட்டியாக வேண்டும். கடந்த கால வாழ்வை எண்ணிக்
கவலைப்பட்டு, எதிர்காலத்தை நினைத்து அச்சத்துடன் வாழ்வதை
விட்டு, நிகழ்காலத்தில் நாம் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.
இருளின் ஆட்சிக்குரிய செயல்களான களியாட்டம், குடிவெறி,
கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டை சச்சரவுகளை நாம் தவிர்க்க
வேண்டும் (உரோ. 13:11).
இறுதியாக ஒளியின் படைக்கலன்களாக அன்பு, விசுவாசம், நம்பிக்கை
ஆகிய கொடைகளை (1தெச.5:8) அணிந்து கொண்டு, (உரோ.13:14) நம்மைச்
சந்திக்க வரும் இயேசுவோடு நாம் நம்மையே ஒன்றித்து, உறவை
வளர்த்து அவரோடு பயணம் செய்வோம்.
திருவருகைக் காலம் முதல் ஞாயிறு
அனிஸ் என்ற ஏழு வயது சிறுவன் பெங்களூரில் ஓர் ஆங்கிலப்
பள்ளியிலே 3ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவன்
அப்பா ஒரு பொறியாளர், அமெரிக்காவில் பணி செய்து
கொண்டிருந்தார். அவன் அம்மா, அக்காள் இந்தப் பையன் மூவரும்
விடுமுறையில் அப்பாவோடு இருவாரங்கள் தங்கி வர,
அமெரிக்காவைப் பார்த்து வர பாஸ்போர்ட், விசா எல்லாம்
ஒழுங்கு செய்து புறப்பட இரண்டு நாட்கள் இருந்தன.
அப்பாவுக்கு இந்தியா லாலா மிட்டாய் வாங்கிக் கொண்டு போக
வேண்டும் என்று விரும்பி அருகில் இருந்த கடைக்குச் சென்று
ஒரு கிலோ லாலா மிட்டாய் வாங்கி வரும்போது, தரையில்
அறுபட்டுக்கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்து அங்கே
பிணமானான் சிறுவன். ஒரு வாழ்வு மலருமுன்னே மறைந்து,
எல்லோரையும் துயரத்தின் கடலிலே ஆழ்த்தியது. ஆம் எதிர்பாராத
சோக நிகழ்ச்சி!
இன்றைய நற்செய்தியில் நாம் விழிப்பாய் இருக்கவும்,
ஆயத்தமாக இருக்கவும் அழைப்பு விடுக்கிறார் இயேசு. இதற்காக
ஒரு நிகழ்வையும், ஓர் உவமையையும் தருகிறார். மக்கள் கடவுளை
மறந்து சிற்றின்ப வாழ்வில் மூழ்கினார்கள். வெள்ளப்
பெருக்கைக் கொண்டு அம்மக்களை அழிக்க விரும்பினார்.
நீதிமான் நோவாவை நோக்கிக் கப்பல் கட்டச் சொன்னவுடன்,
பணிந்து வேலையை ஆரம்பிக்கிறார். மற்றவர்கள் அவரைப்
பார்த்து தண்ணீர் இல்லையே! ஏன் இந்தப் பெரிய கப்பல் என்று
ஏளனம் செய்கின்றனர். பெட்டக வேலை முடிந்தவுடன் பெருமழை
வந்தது. நோவாவின் குடும்பம் காப்பாற்றப்பட்டது. ஆனால்
தயாரின்றி இருந்த மற்றவர் அனைவரும் அழிந்தனர் (மத்:
24:37-44).
இரண்டாவது, இயேசு சொல்கிறார், இருவர் வயலில் இருப்பர்,
ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார், மற்றவர் விடப்படுவார்.
புனித பேதுரு கூறுவதுபோல ஆண்டவருடைய நாள் திருடனைப்போல்
வரும் (2பேதுரு 3:10). ஆண்டவருடைய நாள் என்பது பழைய
ஏற்பாட்டிலே கடவுளின் வாக்குறுதியின் நிறைவாக, மெசியாவின்
வருகையைக் குறிப்பதாக இருந்தது. ஆனால் புதிய ஏற்பாட்டிலே
இயேசுவில் நாம் பெறும் மீட்பைப் பற்றியதாக, இயேசுவை நம்
இரட்சகராக ஏற்று நாம் பெறும் நித்திய வாழ்வைப் பற்றியதாக
உள்ளது. இன்றைய முதல் வாசகத்திலே எசாயா இறைவாக்கினர்
கூறுவது போல நாம் அனைவரும் பயணிகள், நமது நோக்கம் எருசலேம்
தேவாலயம் அல்ல. மாறாக இறைவனோடு என்றும் வாழ்வுக்கு, அந்த
உன்னத வாழ்வுக்கு, சீயோன் மலைக்குச் செல்லத் தயாராக இருக்க
அழைப்பு விடுக்கிறார். சிறுவன் அனிஸ் வாழ்வு திடீரென
முடிவுக்கு வந்ததுபோல, நமது வாழ்வு என்று முடிவுபெறும்
என்று தெரியாததால் நாம் என்றும் விழிப்போடும். தொடர்ந்த
ஆயத்தத்தோடும் வாழ வேண்டும் என்பதை இயேசு நற்செய்திலே
வலியுறுத்துகிறார் (மத்: 24:43-44).
இன்றைய சமுதாயத்தை ஆட்டிப்படைப்பது மனவிரக்தியும்,
மனச்சோர்வும் ஆகும். இத்தகைய மனவிரக்தியிலும்,
மனச்சோர்விலும் வாழும் நமக்குப் புனித பவுல் அடிகளாரின்
இன்றைய இரண்டாம் வாசகம் (உரோ. 13:11-14), நம்பிக்கையையும்.
ஆற்றலையும், ஊட்டவல்லவையாக அமைகின்றன. தீமைகளும்,
அநீதிகளும், இரவின் செயல்களும் முடியப்போகின்றன என்று
முன்னறிவிக்கிறார். மீட்பு அண்மையில் உள்ளது. இரவு
முடியப்போகிறது. பகல் நெருங்கி வந்துவிட்டது என்றும்
உற்சாகமூட்டும் வார்த்தைகளைத் தருகிறார்.
அன்பார்ந்தவர்களே!
புதிய சமுதாயத்தைப் படைக்க நம்மிடத்தில் முதலாவது இருக்க
வேண்டியது துணிவும், தளராத மனமும், விடாமுயற்சியும்,
இலட்சியத் தெளிவும் ஆகும்.
ஆண்டவரின் நாள் எப்போது வரும் என்று நமக்குத் தெரியாததால்
நாம் மனப்பக்குவத்துடன் தயாராக இருக்க வேண்டும். நாளை மனம்
திரும்பலாம், என்று தள்ளிப்போடும் மடமை,
முட்டாள்தனத்திற்கு இன்று முடிவு கட்டியாக வேண்டும். கடந்த
கால வாழ்வை எண்ணிக் கவலைப்பட்டு, எதிர்காலத்தை நினைத்து
அச்சத்துடன் வாழ்வதை விட்டு, நிகழ்காலத்தில் நாம் வாழக்
கற்றுக்கொள்ள வேண்டும்.
இருளின் ஆட்சிக்குரிய செயல்களான களியாட்டம், குடிவெறி,
கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டை சச்சரவுகளை நாம் தவிர்க்க
வேண்டும் (உரோ. 13:11).
இறுதியாக ஒளியின் படைக்கலன்களாக அன்பு, விசுவாசம்.
நம்பிக்கை ஆகிய கொடைகளை (1தெச.5:8) அணிந்து கொண்டு,
(உரோ.13:14) நம்மைச் சந்திக்க வரும் இயேசுவோடு நாம்
நம்மையே ஒன்றித்து, உறவை வளர்த்து அவரோடு பயணம் செய்வோம்.
நம் வீட்டிற்கு ஒரு புனிதரோ, புனிதையோ வருகின்றார் என்று
வைத்துக்கொள்வோம். அப்படி வந்தால் நமது வீட்டைத்
தூய்மையாக. சுத்தமாக வைத்துக்கொள்வோம் அல்லவா?
இன்னும் சில வாரங்களிலே புனிதர்களையும், புனிதைகளையும்
படைத்த படைப்பின் தலைவர் கடவுள், இயேசுவின் உருவிலே
நம்மைத் தேடி வரப்போகின்றார். அவர் தூய்மையே உருவானவர்.
அவரை வரவேற்க நமது உள்ளத்தையும், இல்லத்தையும் தூய்மையாக,
சுத்தமாக வைத்துக்கொள்வோம்!
நமது மனத்தை, உள்ளத்தை, வாழ்க்கையை அழுக்காக்குவது எது?
பாவம்!
பாவம் என்றால் என்ன? இலக்கைத் தவறவிடுவதற்கு அல்லது
மறப்பதற்குப் பெயர்தான் பாவம்!
இலக்கு என்பது இறைவனால் நமக்கு நிர்ணயிக்கப்பட்ட
குறிக்கோள்! ஆக. குறிக்கோளை மறந்து, வழிதவறி நடப்பதற்கு,
வாழ்வதற்குப் பெயர்தான் பாவம்!
செபத்திலும், தவத்திலும் ஈடுபட்டு தேர்ந்துதெளிதல் வழியாக
(உரோ 12 : 1-2) நமது அழைத்தலின் தன்மைக்கு ஏற்றவாறு நமது
இலக்கை, குறிக்கோளை நிர்ணயித்த பிறகு அதைநோக்கி நாம்
ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும். இதோ ஒரு கதை!
ஞானம் தேடி இளைஞன் ஒருவன் இமயமலை நோக்கிப் பயணம் செய்தான்!
அவன் கங்கை நதிக் கரையிலிருந்த ஒரு பாறையின்மீது அமர்ந்து
தியானம் செய்தான்!
அப்போது கங்கை நதி அவனோடு பேசியது!
கங்கை அவனைப் பார்த்து, "உன் கண்ணோரத்தில் கங்கை எதற்கு?
உன் முகத்தில் ஏனிந்த சோக ரேகைகள்?" என்றது.
அதற்கு அந்த இளைஞன், "நான் எடுக்கும் எந்த முயற்சியிலும்
எனக்கு வெற்றி கிட்டுவதில்லை. முன்னேற்றம் என்ற சொல்லுக்கே
என் வாழ்வில் இடமில்லை!" என்றான்.
அதற்குக் கங்கை நதி அவனைப் பார்த்து. "என்னைப் பார்! என்
இலக்கு கடல்! கடலை அடையும்வரை என் பயணம் ஓயாது! என்னைச்
சுற்றி எத்தனையோ அழகான செடிகள், கொடிகள், மரங்கள்,
மலர்கள்! எதையும் நான் பற்றிக்கொள்ள நினைப்பதில்லை! என்
இலக்கான கடவை நோக்கி என் பயணம் தொடர்கின்றது! என்னைப் போல
நீயும் இலக்கை நிர்ணயித்துக்கொண்டு உன் பயணத்தைத் தொடங்கு.
உனக்கு வெற்றி கிடைக்கும்" என்றது!
அவனும் அவ்வாறே செய்தான்! தன் வாழ்க்கையின் இலக்கை
நிர்ணயித்தான்! "இந்த இலக்கை அடையும் வரை நான் எதையும்
திரும்பிக்கூட பார்க்க மாட்டேன்" என்று முடிவெடுத்தான்!
அவன் பயணத்தில் வெற்றிபெற்றான்!
கயிற்றின்மீது நடக்கும் கலைஞனுக்கு இலக்கு எது? கயிற்றின்
மறுபக்கத்தை அடைவது!
தூண்டில் போடுகின்றவனுக்கு இலக்கு எது ? தக்கை
தண்ணீருக்குள் செல்லும்போது மீனை கரைக்குக் கொண்டுவருவது!
ஊர்தியை இயக்கும் ஓட்டுநருக்கு இலக்கு எது? சேர வேண்டிய
ஊரை அடைவது!
கிறிஸ்தவர்களாகிய நமது இலக்கு எதுவாக இருக்க வேண்டும்?
இந்த கேள்விக்குப் புனித பவுலடிகளார் இன்றைய இரண்டாவது
வாசகத்தில் பதில் கூறுகின்றார்! இருள் என்னும் பாவத்தை
விட்டுவிட்டு பகல் என்னும் புண்ணியத்தை நமதாக்கிக்கொண்டு
இயேசுகிறிஸ்துவை அணிந்துகொள்ள வேண்டும்! இதுவே கிறிஸ்தவ
வாழ்வின் இலக்கு!
ஒரு மாணவன் தேர்வில் தூங்கிக்
கொண்டிருந்தான். ஆசிரியர் அவனை எழுப்பிவிட்டு அவன் என்
தூங்கிக் கொண்டிருக்கிறான் என்று கேட்டதற்கு அவன்
கூறினான்: "தேர்வில் கேள்விக்குப் பதில் தெரியாவிட்டால்
முழிச்சிக்கிட்டு இருக்காதே' என்று அப்பாதான் சொன்னார்".
தேர்வில் கேள்விக்குப் பதில் தெரியாவிட்டால் மாணவர்கள்
தூங்குகின்றனர், தேர்வு என்பது என்ன? - அறிந்தும் அறியாததும்.
வாழ்க்கைத் தேர்வில் பல கேள்விகளுக்குப் பதில் தெரியாத மனிதர்கள்
தூங்குகின்றனர். மனிதரின் வாழ்வு: "தூக்கத்தில் பாதி, ஏக்கத்தில்
பாதி,
இத்தகைய சூழலில் நாம் இன்று திருவருகைக் காலத்தைத் தொடங்குகிறோம்.
இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து "விழிப்பாயிருங்கள்" (மத்
24:42) என்றும் ஆயத்தமாய் இருங்கள்" (மத் 24:44) என்றும்
அறிவுறுத்துகிறார். இன்றைய இரண்டாம் வாசகத்திலும் "உறக்கத்தினின்று
விழித்தெழும் நேரம் ஏற்கெனவே வந்துவிட்டது" (உரோ 13:11) என்கிறார்
திருத்தூதர் பவுல்.
நாம் உறக்கத்திலிருந்து விழிக்க வேண்டும். "தூங்குகிறவனே,
விழித்தெழு" (எபே 5:14), ஏனெனில் நாம் இரவின் மக்கள் அல்ல
ஒளியின் மக்கள். நாம் பகலில் நடப்பதுபோல மதிப்போடு நடக்க
வேண்டும். இருளின் செயல்களைக் களைந்துவிட்டுக் கிறிஸ்துவை
அணிந்து கொள்ள வேண்டும். ஊனியல்பின் செயல்கள்: களியாட்டம்,
குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச் சச்சரவு என்று
இன்றைய இரண்டாம் வாசகத்தில் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்
திருத்தூதர் பவுல் (உரோ 13:3). இந்த அருள் வாக்குத்தான்
தூய அகுஸ்தினாரின் மனமாற்றத்திற்கு உந்துதலாக இருந்தது. -
இன்றைய விளம்பர உலகம், ஊடக உலகம், திரைப்படம் மற்றும்
தொலைக் காட்சி உலகம் மனிதர்களைக் குடிவெறியிலும் காமத்திலும்
தள்ளிவிட்டுப் பணத்தைக் குவிக்கிறது. அந்தக் காலத்தில்
திரைப்படங்களில் கதை இருந்தது; ஆனால் இக்காலத் திரைப்படங்களில்
கதை இல்லை; சதைதான் இருக்கிறது. இதன் விளைவாக இளைஞர்கள்
பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 'பாஸ்மார்க்"
வாங்காவிட்டாலும் "டாஸ்மாக்கில் வேலை கிடைக்கிறது. பட்டதாரிகளாக
மாற வேண்டிய இளைஞர்கள் பட்டைதாரிகளாக மாறிவருகின்றனர், பல்வேறு
பால்வினை நோய்களுக்குப் பலிக்கிடாக்களாகி வருகின்றனர்.
காய்ச்சல் வரும், போய்விடும்; வயிற்று வலி வரும்,
போய்விடும்; காச நோய் வரும், போய்விடும்; ஆனால் ஒரு நோய்
மட்டும் வந்தால் மறையுரை மொட்டுக்கள் போகவே போகாது. அதுதான்
'எய்ட்ஸ்' என்னும் உயிர்க்கொல்லி நோய். இந்நோயைத் தடுக்க
மனக்கட்டுப்பாடு தேவை, ஒருவனுக்கு ஒருத்தி என்ற வரைமுறையைக்
கடைப்பிடிக்க வேண்டும். எந்தவொரு தீமையையும், அது வருமுன்பே
அதைத் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால், வைக்கோல் புல்லை
நெருப்பு எரிப்பது போல அது தம்மை எரித்துவிடும் என்று எச்சரிக்கின்றார்
வள்ளுவர்.
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். குறள் 435
அரசர் ஏன் தள்ளாடித் தள்ளாடி வருகிறார்? ஏனெனில் அவர்
போருக்குப் போகாமல் பாருக்குப் போனாராம்". இன்று அரசே
'பார்' வசதியுடன் மதுபானக் கடைகளை நடத்துகிறது. குடி
குடியைக் கெடுக்கும் என்ற எச்சரிக்கையுடன் மதுபான விற்பனை
கொடி கட்டிப் பறக்கிறது. இந்நிலையில் குடிவெறியைக்
குழிதோண்டிப் புதைக்கும்படி அறிவுறுத்துகிறார். பவுல்,
தோவா காலத்தில் வரப்போகும் வெள்ளப் பெருக்கைப் பற்றி அறியாத
மக்கள் உண்டும் குடித்தும் வந்தது போலவே உலக முடிவில்
கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போதும் மக்கள் உண்டு
குடித்துக் களியாட்டம் புரிவர்; அப்போது கிறிஸ்து நினையாத
நேரத்தில் வருவார் என்று இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து எச்சரிக்கிறார்.
வீட்டில் யார் கை ஓங்கும்? அப்பா கை ஓங்கும், அம்மா கை
வீங்கும். குடிகார அப்பா அம்மாவை ஓங்கி அடிக்கிறார்; அம்மா
கை வீங்குகிறது. குடிகாரக் கணவர்களால் பல பெண்கள்
துன்புறுகின்றனர், அவர்களிடதிலிருந்து பெண்களைப் பாதுகாக்க
"குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தை" அரசு கொண்டு வந்திருக்கிறது.
ஆனால் சட்டத்தால் மனிதனைத் திருத்த முடியுமா? ஒவ்வொருவரும்
தனக்குத்தானே சட்டமாக இருந்து, தன்னைத் தானே திருத்திக்
கொள்ள வேண்டும். இல்லையென்றால், "திருந்தாத சென்மம் இருந்தென்ன
இலாபம்?" என்று கூற வேண்டியுள்ளது.
மேலும், சண்டைச் சச்சரவுகளைத் தவிர்க்க வேண்டுமென்றும்
திருத்தூதர் பவுல் கேட்கின்றார். இன்று எங்கு பார்த்தாலும்
சண்டையும் சச்சரவும், போரும் பாலும் நடந்து கொண்டிருக்கின்றன.
இத்திலையில் கடவுளுடைய விருப்பம் என்னவென்பதை இன்றைய முதல்
வாசகம் கூறுகின்றது. நாடுகளுக்கிடையே போர் இருக்கக்
கூடாது; போர்ப்பயிற்சியும் கூடாது. போர்க் கருவிகளை எல்லாம்
விவசாயக் கருவிகளாக மாற்ற வேண்டும் (எசா 2:1-5). கிறிஸ்து
தான் நமது அமைதி. அவர் யூத இனத்துக்கும் பிற இனத்துக்கும்
இடையே நின்ற பகைமை என்னும் தடைச் சுவரைத் தகர்த்து இரு இனத்தையும்
ஓரினமாக இணைத்துள்ளார் (எபே 2:13-16).
கிறிஸ்துவின் பிறப்புப் பெருவிழாவுக்காகத் தயாரிக்கும் இக்காலத்தில்
நாம் சண்டைச் சச்சரவுகளைத் தவிர்ப்போம். இரண்டு வாகனங்கள்
நேருக்கு நேர் மோதிக் கொண்டன, இரண்டு வாகனங்களின் ஓட்டுனர்களும்
கடுமையாகச் சண்டையிட்டுக் கொண்டனர். அப்போது அங்கு கூடிய
கூட்டம் இரண்டு வாகனங்களில் இருந்தப் பொருள்களைச் சூரையாடினர்.
நாம் மற்றவர்களுடன் சண்டை போடுவதால் நமது அமைதி கொள்ளையடிக்கப்படுகிறது.
நாம் ஒருவர் மற்றவரை அழிக்கின்றோம். "நீங்கள் ஒருவர் ஒருவரைக்
கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால், ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள்.
எச்சரிக்கை " (கலா 5:15).
விழித்தெழுவோம்; ஏனெனில் நமது மீட்பு அண்மையில் உள்ளது. ஊனியல்பின்
இச்சைகளை அழித்துவிட்டு, கிறிஸ்துவையே அணிந்து கொள்வோம்.
இத்திருவருகைக் காலம் தமக்கு மீட்பின் காலமாக, மனமாற்றத்தின்
காலமாக அமைவதாக!
போராடு
"செவன் சமுராய் " என்று ஜப்பான் நாட்டுத் திரைப்படம்.
ஏழு சமுராய் வீரர்கள் ஒரு கிராம மக்களைக் கொள்ளையர் களிடமிருந்து
காப்பாற்றி, சிதைந்த கிராமத்தை மீண்டும் பழைய நிலைக்குக்
கொண்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் நான்கு சமுராய்கள்
இறந்துபட எஞ்சியது மூன்று பேர். போர் முடிய, உழவர்கள் மகிழ்ச்சியோடு
நாற்று நடும் பாடலுடன் வேலையைத் தொடங்குகின்றனர்.
நான்கு பேரின் சமாதிக்கருகில் நின்றபடி ஒரு சமுராய்
சொல்கிறான்: "போர் முடிந்து விட்டது. உழவன் பாடுகிறான். என்னால்
பாட முடியுமா? முடியாது. அடுத்த போர் எங்கே என்று போக
வேண்டும். உழுது உண்டு உட்கார்ந்திருக்கும் சுகம் என்னால்
தாங்க முடியாது. எனக்குப் போர் வேண்டும். போராளிக்குச் சுகம்
தேடுபவன் போராளி இல்லை " நெஞ்சில் தாக்கும் படக்காட்சி!
போர் தேடும் வாழ்க்கை என் வாழ்க்கை. இராட்டைச் சக்கரமாய்ச்
சுற்றாது காட்டாறாய்ப் பரவ ஆசைப்படுகிறேன். எனக்குப் போர்
வேண்டும். அதுதான் என் இடம். அதுதான் என் வாழ்க்கை. எல்லா
நோமும் விழிப்பாய் இருக்கிற நிலை வேண்டும். உண்டு களிக்கும்
சுகமல்ல.
திருத்தூதர் பவுலுக்கு நிறைவு தந்தது எது? "நான் நல்லதொரு
போராட்டத்தில் ஈடுபட்டேன்... விசுவாசத்தைக் காத்துக்
கொண்டேன்" (II திமோ.4:7) என்ற உணர்வு தானே! விசுவாசத்தைக்
காக்கும் போராட்ட மனநிலையில் திருவருகைக் காலத்தில் அடியெடுத்து
வைக்கிறோம். எனவே "அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள்
எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாம் எனக் கர்ச்சிக்கும் சிங்கம்
போலத் தேடித் திரிகிறது' (1 பேதுரு 5:8) "அலகையின் ஏமாற்று
வழிகளை எதிர்த்து நிற்கும் வலிமை பெறும்படி கடவுள் அருளும்
எல்லாப் படைக்கலன்களையும் அணிந்து கொள்ளுங்கள். ஏனென்றால்
நாம் மனிதர்களோடு மட்டும் போராடுவதில்லை. ஆட்சி புரிவோர்,
அதிகாரம் செலுத்துவோர், இருள் நிறைந்த இவ்வுலகின்மீது ஆற்றல்
உடையோர் வான்வெளியில் உள்ள தீய ஆவிகள் ஆகியவற்றோடும்
போராடுகிறோம் " (எபேசி.6:11,12)
இறுதி அறிவுரையாகத் திருதூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதுவது
இதுதான்: "விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு.
நிலைவாழ்வைப் பற்றிக் கொள். அதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறாய் "
(1 திமோ .6:12)
2000 ஆண்டுகளுக்கு முன் நம் மீட்பராக வந்த இயேசு இரண்டாம்
முறையாக வரும்போது நம்நடுவராக வருவார். எப்பொழுது வருவார்
என்பது தெரியாது என்பதனால் நாம் மெத்தனமாக இருக்கலாமா? 'எதிலும்
மெத்தனம்' என்பது தானே சாத்தானின் வலிய ஆயுதம்! "தலைவர் வந்து
பார்க்கும் போது தன் பணியைச் செய்து கொண்டிருக்கும் பணியாளர்
பேறுபெற்றவர் " (லூக்.12:43)
எதுவாக இருந்தேன் என்பதோ, எதுவாக இருப்பேன் என்பதோ அல்ல,
இன்று எதுவாக இருக்கிறேன் என்பதே முக்கியம் பெற வேண்டும்.
என்ன செய்தேன் என்பதோ, என்ன செய்வேன் என்பதோ அல்ல, இப்பொழுது
என்ன செய்கிறேன் என்பதே முதன்மை காண வேண்டும். மீட்பராக வந்தவர்
(வரலாற்று வருகை), நடுவராக வர இருப்பவர் (மகிமையின் வருகை),
இங்கே வாழ்வு தருபவராக வருகிறாரே, அவரைக் காலத்தின் அறிகுறிகளில்,
இறைவனின் திருவார்த்தையில், அருள்சாதன கொண்டாட்டங்களில்,
சுற்றிவாழும் ஏழை எளியோரில் என்னால் இனம் காண முடிகிறதா?
இதுதான் வர இருப்பவரைச் சந்திக்க நம்மைத் தயார் செய்யும்,
தகுதிப்படுத்தும்.
அப்படியானால் திருவருகை எதிர்பார்ப்பது என்ன? ஒரு போர் வீரனுக்குரிய
விழிப்புணர்ச்சியையும் எச்சரிக்கை உணர்வையுமே!
விழிப்புணர்ச்சி: "ஊழியன் உறங்கிவிட்ட காரணத்தால் பகைவன்
களைகளை விதைத்து விட்டுச் சென்றான் " (மத். 13:25) நாளை
என்பது விடியலில் அல்ல, விழித்தலில் உள்ளது. இடைவிடாத
விழிப்புணர்வு ஒன்றே ஏற்றமிகு மீட்புக்கான விலை.
எச்சரிக்கையுணர்வு: அபாயச் சங்கு ஒலிக்கிறதா? உடனே
பாதுகாப்பான இடத்தைத் தேடிச் செல்ல வேண்டாமா?
இல்லையென்றால் பரிதாபத்துக்குரிய அழிவுதானே
காத்திருக்கும்! அதனால்தான் இயேசு நோவாவை இன்று நம்
கண்முன் நிறுத்துகிறார்.
கட்டாந்தரையில் கப்பல் கட்டியதைக் கண்டு பலர் நகைத்தாலும்
இறைவன் தந்த எச்சரிக்கையன்றோ கேலிக்கும் கிண்டலுக்கும்
இடையே நோவாவைச் செயல்பட வைத்தது!
"நோவாவின் காலத்தில் இருந்தது போலவே மானிட மகனின்
வருகையின் போதும் இருக்கும் (மத்.24:37) என்றால் கடவுளின்
வருகை அறத்தை நிலைநாட்டவரும். (தொ.நூ.6:5-6, 11-13)
திருத்தூதர் பவுலின் மூன்று அம்சத் தயாரிப்பைச் சிந்தையில்
கொள்வோம்.
1. உறக்கத்தினின்று விழித்தெழு. இருளின் ஆட்சிக்கு
உரியவற்றைக் களைந்து விடு. (ரோமை. 13:11-12)
2. இயேசுவை - கடவுள் தரும் படைக்கலன்களை அணிந்து கொள்.
(எபேசி.6:13, 1தெச.5:8)
3. கிறிஸ்துவில் வாழ்வு என்ற இலக்கு மீது கண்பதித்து
ஆண்டவரின் மலைக்குச் செல். (எசா.2:3). அவரது பாதையில் நட,
(1திமோத்.6:12, 2 கொரி.10:3).
"நாங்கள் நம்பியிருக்கும் பேரின்ப வாழ்வையும் எம்
மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையையும் மகிழ்ச்சியுடன்
எதிர்பார்த்திருக்கின்றோம்.'
விழித்திரு
இரண்டாம் உலகப் பெரும்போர் முடிந்த நேரம். ஜெர்மனி நாட்டு
அதிபர் கொன்ராடு அடனாவர் வானொலி, தொலைக்காட்சி வழியாக
மக்களுக்கு உரையாற்றுகிறார்: "அழிவு, சிதைவு,
இடிபாடுகளுக்கு இடையே நின்று கொண்டிருக்கிறோம். நாம்
விழித்தெழும் நேரம் வந்து விட்டது. வீறுகொண்டு கரம்
கோர்ப்போம். புதிய ஜெர்மனியைக் கட்டி எழுப்பக் கிடைக்கும்
எந்த ஒரு வாய்ப்பையும் நழுவ விடக்கூடாது..."
மக்கள் கூர்ந்து கேட்டனர். விழித்து எழுந்தனர். விளைவு?
வளமான, செழிப்பான புதிய ஜெர்மனி.
திருவருகைக் காலத்தைத் தொடங்கும் போதே திருவழிபாட்டு
முழக்கம் விழிப்பாயிருங்கள் என்பதுதான். காரணம்?
"உறக்கத்தினின்று விழிதெழும் நேரம் ஏற்கனவே வந்துவிட்டது.
நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டபோது இருந்ததைவிட
மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது" (ரோமை.13:11.)
போரினால் உண்டான பாதிப்பால் அச்சமும் அதிர்ச்சியும் கொண்ட
ஜெர்மனி நாட்டு மக்களின் உள்ளத்தில் எத்தகைய உணர்வுகள்
கிளர்ந்தெழுந்தனவோ அதே தாக்கத்துக்கு ஆளான இஸ்ரயேல்
மக்களின் மன உணர்வுகளின் சித்தரிப்பே முதல் வாசகம்.
பபிலோனிய அடிமைத்தனத்துக்குப்பின் தாயகம் திரும்பிய
நிலையில் அழிந்துபட்ட எருசலேமை, சிதைந்துவிட்ட
திருக்கோவிலைக் கண்டு சிந்தையில் அமைதியிழந்து செல்வச்
செழிப்பிழந்து இறைவழிபாட்டின் வளமை இழந்து வார்த்தைக்குள்
அடங்காத வருத்தத்தை, சோகத்தை, ஏக்கத்தை வெளிப்படுத்தும்
மன்றாட்டான புலம்பல்.
இந்த இழிநிலைக்கெல்லாம் தங்கள் பாவ வாழ்வே, இறைவனை விட்டு
அகன்ற அவலமே காரணம் என்ற தன்னிலை உணர்வு. "நாங்கள் யாவரும்
இலைபோல் கருகிப் போகின்றோம். எங்கள் தீச்செல்கள்
காற்றைப்போல் எங்களை அடித்துச் சென்றன". (எசாயா 64:6)
இந்தத் தன்னுணர்வுக்கிடையிலும் உடைந்து போன இதயத்தின்
அடித்தளத்தில் நம்பிக்கை வேரற்றுப் போகவில்லை. 'ஆண்டவரே
உம் வழிகளிலிருந்து எங்களைப் பிறழச் செய்ததேன்? உமக்கு
அஞ்சி நடவாதவாறு எங்கள் நெஞ்சங்களைக் கடினப்-
படுத்தியதேன்?" (எசாயா 63:17) என்று தங்கள்
தவறுகளுக்கெல்லாம் கடவுளுக்குமே பங்கு உண்டு என்பது போலப்
புலம்பி "நாங்கள் களிமண். நீர் எங்கள் குயவன்" (எசா.64:8)
சீரழிந்த தன் வேலைப் பாடுகளைச் சீர்செய்ய இறைவனே இறங்கிவர
உரிமையோடும் எதிர்பார்ப்போடும் கூடிய அழைப்பு.
-களிமண் தானாகக் குடமாக முடியுமா? வனைந்திடக் குயவன் அங்கே
வரவேண்டாமா? கற்பாறை தானாகச் சிலையாக முடியுமா?
செதுக்கிடச் சிற்பி அங்கே வரவேண்டாமா? பாவியான மனிதன் தன்
சொந்த முயற்சியால் மட்டும் படைத்தவனைச் சென்றடைய முடியுமா?
"நீர் வானத்தைப் பிளந்து (கிழித்து என்பது பழைய
மொழிபெயர்ப்பு) இறங்கி வரமாட்டீரோ?" (எசா.64:1) இந்த இதய
எழுச்சி, ஏக்கக்கதறல் இறைவன் எனக்குத் தேவை அதுவும்
உடனடித் தேவை என்ற அவசர எதிர்பார்ப்புக் கலந்த தவிப்பு.
திருப்பாடல் 144:5இல் கூட இதே துடிப்பின் வெளிப்பாடு:
"ஆண்டவரே உம் வான்வெளியை வளைத்து இறங்கி வாரும்"
இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தடையை அவரால்
மட்டுமே தகர்க்க முடியும். நம்மால் இயலாது. நம்மால்
முடிந்ததெல்லாம் ஓசோன் படலத்தில் ஒட்டைகளைப் போட்டதுதான்!
ஆண்டவர் வருவார். "இந்த இயேசு உங்களிடமிருந்து
விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்கள் அல்லவா? அவ்வாறே அவர்
மீண்டும் வருவார்". (தி.ப.1:11) அதற்காக வானத்தை அண்ணாந்து
பார்த்துக் கொண்டே நிற்பதா?
"விழிப்பாய் இருங்கள் ஏனெனில் வீட்டுத்தலைவர்... எப்போது
வருவார் என உங்களுக்குத் தெரியாது' (மாற்கு. 13:35)
சென்னையில் ஓர் அரசு அலுவலர். தன் ஸ்கூட்டரை வெளியே
நிறுத்திவிட்டு மதிய உணவை முடித்து வெளியே வந்தவருக்கு ஒரே
அதிர்ச்சி. ஸ்கூட்டரைக் காணோம். அங்குமிங்கும் தேடி
அலைமோதிய அவர் சிறிது தொலைவில் ஸ்கூட்டரைப் பார்க்கிறார்.
மகிழ்ச்சியோடு அருகில் செல்கிறார். ஸ்கூட்டரில் ஒரு
கடிதமும் 2 சினிமா டிக்கெட்டுகளும் இருந்தன. "ஐயா, எங்களை
மன்னியுங்கள். ஓர் அவசர வேலைக்காக வண்டியை எடுத்துச்
சென்றோம். சொல்லாமல் எடுத்துச் சென்ற குற்றத்துக்காக
ரிசர்வ் செய்யப்பட்ட இந்த டிக்கெட்டுகளை வைத்துள்ளோம்.
உங்கள் மனைவியோடு இன்று மாலையில் படம் பார்த்து
மகிழுங்கள்" என்பது கடித வாசகம். இரட்டிப்பான மகிழ்ச்சி
உற்சாகத்தோடு திரையரங்கு சென்று திரும்பிய போது வீடே
கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. விழிப்புணர்வைக் குலைக்க,
கவனத்தைச் சிதறடிக்க, சாத்தான் எப்படியெல்லாம்
திட்டமிடுகிறான். செயல்படுகிறான்.
விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார் குறட்டை
விட்டோர் எல்லாம் கோட்டை விட்டார்.
"சுதந்திரம் இருளில் வாங்கினோம். இன்னும் விடியவில்லை
என்று யார் சொன்னது?
விடிந்துவிட்டது. இன்னும் நாம்தாம் விழித்தெழவில்லை நாளை
என்பது விடியலில் அல்ல, விழித்தலில் உள்ளது"
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச.
திருச்சி
கலப்பைக் கொழுக்களாக மாறும் வாள்கள்
ஒவ்வோர் ஆண்டும் திருவருகைக் காலத்துடன் ஒரு புதிய
திருவழிபாட்டு ஆண்டை நாம் துவக்குகிறோம். புத்தாண்டு என்றாலே,
புதியனவற்றைப் புகுத்தும் எண்ணம் மனதில் எழுகிறது. இந்தத்
திருவழிபாட்டு ஆண்டும் புதிய எண்ணங்களை, அந்த எண்ணங்களுக்குச்
செயல்வடிவம் கொடுக்கும் புதிய கண்ணோட்டங்களை, புதிய மனதை
நமக்குள் உருவாக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு, பதியதொரு
திருவழிபாட்டு ஆண்டை ஆரம்பிப்போம்.
சென்ற ஆண்டு திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு நவம்பர்
28ம் தேதி வந்தது. இவ்வாண்டு அது நவம்பர் 27ம் தேதி வந்துள்ளது.
நாள் காட்டியில் வரும் விழாக்கள் பொதுவாக பின்னோக்கி நகரும்.
ஆனால், காலம் பின்னோக்கி நகருமா? நகராது.
குளிர்காலம் ஆரம்பமாகி உள்ளது. குளிர் காலத்தில் பகல் நேரம்
மிகவும் குறுகி விடும். எனவே, பல நாடுகளில் பகல் ஒளியைக்
காப்பாற்றும் நேரம் (Daylight Saving Time) என்ற காரணம்
காட்டி, கடிகாரத்தின் முள்ளை ஒரு மணி நேரம் பின்னோக்கித்
தள்ளி வைத்துக் கொள்வார்கள். குளிர்காலம் முடிந்து வசந்தம்
வந்ததும், கடிகார முள்ளை மீண்டும் பழையபடி திருப்பி
வைத்துக் கொள்வார்கள்.
நமது நாள் காட்டியில் திருநாட்கள் முன், பின்னாக வர
முடியும்; நமது வசதிக்காக கடிகார முள்ளைத் திருப்பி வைக்க
முடியும். ஆனால், காலத்தை முன்னோக்கியோ, பின்னோக்கியோ தள்ள
முடியுமா? முடியாது.
காலம் பின்னோக்கிப் போனால் நன்றாக இருக்குமே என்று நம்மில்
பலர் பல நேரங்களில் ஏங்குகிறோம். இல்லையா? நமது குழந்தைப்
பருவம், வாலிபப் பருவம் இவைகளை மீண்டும் வாழ ஆசைப்படுகிறோம்.
அவ்வப்போது கற்பனையில், கனவில் அல்லது நாம் பேசிக்
கொள்ளும் கதைகளில் இந்தப் பருவத்தை எட்டிப் பார்த்து வருகிறோம்.
ஏக்கப் பெருமூச்சு விடுகிறோம்.
நம் தனிப்பட்ட வாழ்வில் பின்னோக்கிப் போவதற்கு ஏங்குவது
போல், உலக வரலாறும் பின்னோக்கிப் போவதற்கு ஆசைப் படுகிறோம்.
நம் மூதாதையர் வாழ்ந்த நிம்மதியான வாழ்வை எண்ணிப்
பார்க்கிறோம். 'பிரிட்டிஷ்காரன்' ஆண்ட காலம் பிரமாதம் என்றெல்லாம்
பேசுபவர்களைப் பார்த்திருக்கிறோம்.
நாம் என்னதான் ஏங்கினாலும் காலச் சக்கரம் பின்னோக்கிச் சுழலாது.
அது நிச்சயம். ஆனால், நாம் வாழும் வாழ்க்கை முறையை
பின்னோக்கித் தள்ளலாம். நம் மூதாதையர் வாழ்ந்த வாழ்க்கை உன்னதமானதென்று
உணர்ந்தால், அந்தக்காலத்து வாழ்க்கை முறைக்கு நாம்
திரும்பிச் செல்ல முடியும். அது நம் சக்திக்கு உட்பட்டது.
இப்படி வாழும் பல குழுக்கள் உலகில் 2010ம் ஆண்டு இருக்கத்தான்
செய்கின்றன.
மனித குலம் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி வாழ்ந்த காலம் ஒன்று
இருந்தது. இன்று, இந்த வளங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக,
தேவைக்கும் அதிகமாகப் பாழடித்து, இயற்கையைச் சீரழித்து வருகிறோம்.
நமது அடுத்தத் தலைமுறையைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாமல்
இயற்கையைத் தேவைக்கும் அதிகமாகச் சுரண்டி வருகிறோம். இந்த
அநீதிகளைச் சரி செய்யும் வகையில் ஒவ்வொரு நாட்டிலும் சிறு
சிறு குழுக்கள் வாழ்க்கை முறையை மாற்றி வாழ்ந்து வருகின்றன.
குறைவான அளவு எரிபொருளின் பயன்பாடு, சூரிய ஒளி சக்தியின்
பயன்பாடு, மறுசுழற்சி என்று பல வழிகளில் வாழ்க்கை முறையை
மாற்றி வாழ்ந்து வருகின்றன இக்குழுக்கள். ஒவ்வொரு நாட்டு
அரசும் இயற்கையின் மீது இன்னும் சிறிது அக்கறையுடன் செயல்பட்டால்
நமது இயற்கையும், உலகமும் காப்பற்றப்படுவதற்கு இன்னும்
வாய்ப்புக்கள் உள்ளன.
பருவ நிலை மாற்றங்கள் குறித்து நவம்பர் 29, Mexico
நாட்டில் Cancun நகரில் ஐ.நா. அமைப்பின் பன்னாட்டு கருத்தரங்கு
ஒன்று ஆரம்பமாகிறது. திருவருகைக் காலத்தின் ஆரம்பத்தில் இப்படி
ஒரு கருத்தரங்கு நடைபெறுவதை நம் திருவழிபாட்டு கண்ணோட்டத்துடனும்
நாம் பார்க்கலாம். உலகம் காப்பற்றப்படுவதைப் பற்றி இன்று
நாம் பேச வேண்டும். திருவருகைக் காலத்தின் இந்த முதல் ஞாயிறன்று
நமக்குத் தரப்பட்டுள்ள வாசகங்கள் இப்படி நம்மை எண்ண
வைக்கின்றன பேச வைக்கின்றன.
உலகைக் காப்பாற்றும் முயற்சியில் பல நாடுகளில் இளையோர்
விழித்தெழுந்திருப்பது நல்லதொரு அறிகுறியாகத் தெரிகிறது.
இந்த முயற்சிகளில் ஒன்றாக, ஒவ்வோர் அரசும் இராணுவத்திற்குச்
செலவிடும் தொகையைக் குறைப்பது பற்றி இளையோர் குரலெழுப்பி
வருகின்றனர். இராணுவத்திற்கு ஆகும் செலவைக் குறைத்து, அத்தொகையைக்
கொண்டு மக்களின் வாழ்வுத்தரத்தை, முக்கியமாக, ஏழை மக்களின்
வாழ்வுத்தரத்தை உயர்த்த திட்டங்கள் தீட்டுங்கள் என்று இளையோர்
பல வழிகளில் குரலெழுப்பி வருகின்றனர். கேட்பதற்கு அற்புதமான
நற்செய்தி இது!
அன்புள்ளங்களே, இராணுவச் செலவு பற்றி பல புள்ளி விவரங்களைத்
தரலாம். ஒரே ஒரு புள்ளி விவரத்தைத் தர நான் விழைகிறேன்:
2007ம் ஆண்டு உலகின் பல நாடுகளும் இராணுவத்திற்கென செய்த
செலவு 5,850,000 கோடி ரூபாய். (1.339 trillion Dollars) அதே
ஆண்டு ஐ.நா. அமைப்பு மேற்கொண்ட அத்தனை மனித சமுதாய
முன்னேற்ற முயற்சிகளுக்கும் ஆன செலவு (4.2 billion
dollars) இராணுவச் செலவுகளுக்கான தொகையில் ஒரு தூசு கூட இல்லை.
இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் கறுப்புப் பணத்தைப் பற்றி ஒரு
ஞாயிறு சிந்தனையில் நாம் சிந்தித்தபோது, ட்ரில்லியன் டாலர்களைப்
பற்றி பேசினோம். உலகில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை
வறியோருக்குப் பகிர்ந்தளித்தால், உலகில் வறுமை என்பதை
முற்றிலும் அகற்றலாம், விண்ணக வாழ்வை இவ்வுலகிலேயே ஆரம்பித்து
வைக்கலாம் என்று சொன்னோம். அதையே இன்றும் சொல்வோம். உலக
அரசுகள் இராணுவத்திற்குச் செலவிடும் தொகையில் பாதித்
தொகையை, அல்லது, பத்தில் ஒரு பங்குத் தொகையை ஏழைகளுக்குச்
செலவிட்டால், உலகின் வறுமையைப் பெரிதும் குறைக்கலாம்.
இராணுவத்தைப் பற்றி ஏன் இவ்வளவு பெரிய விளக்கம், ஆராய்ச்சி
என்று கேள்வி எழலாம். இரு காரணங்கள் உண்டு. முதல் காரணம்:
அண்மையில் இந்தியாவிலும் இன்னும் பிற ஆசிய நாடுகளிலும் அமெரிக்க
அரசுத்தலைவர் மேற்கொண்ட பயணம் ஒரு காரணம். தீபாவளியை ஓட்டி
ஒபாமா இந்தியா வந்ததால், வாண வேடிக்கைகளுடன் அவர் வரவைக்
கொண்டாடினோம். இப்பயணத்தை ஒரு பெரும் விழாவைப் போல் நமது
ஊடகங்கள் அலங்கரித்தாலும், இந்தப் பயணத்தின் ஒரு முக்கிய
காரணம்? அமெரிக்காவின் இராணுவத் தளவாடங்களை இந்தியாவுக்கு
விற்பதற்கான வழிமுறைகளைக் கண்டு பிடிக்க ஒபாமா முயன்றார்.
வெற்றியும் கண்டார். அவரது பயணத்தால், அமெரிக்கா இந்தியாவுக்கு
பல பில்லியன் டாலர் மதிப்புள்ள இராணுவத் தளவாடங்களை விற்க
உள்ளது. தீபாவளி நேரத்தில் ஒபாமா வந்தது பொருத்தமாகத்தான்
தெரிகிறது. தீபாவளி நேரத்தில் வெடிகள், மத்தாப்புக்கள் என்று
நாம் கோடிக்கணக்கான மதிப்புடைய காசைக் கரியாக்குகிறோம். அதைக்
குழந்தைத் தனம் என்று கடிந்து கொள்கிறோம். ஆனால், பல
பில்லியன் டாலர்களை இராணுவத்திற்காகக் கரியாக்கும் இந்திய
அரசைப் பார்த்து என்ன சொல்வது?
இராணுவத்தைப் பற்றி நான் பேச இரண்டாவது காரணம் நமது முதல்
வாசகம். இந்த வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் இறுதி நாட்கள்
குறித்து காணும் ஒரு அழகான கனவு இது:
எசா. 2 : 4-5
அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள்
ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள்,
ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது: அவர்கள்
இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள். யாக்கோபின்
குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.
வாள்கள் கலப்பை கொழுக்களாக மாறும்.
ஈட்டிகள் அறுவடை செய்யும் அரிவாள்கள் ஆகும்.
உயிர்களை அறுவடை செய்யும் படை வீரர்கள்
பயிர்களை அறுவடை செய்யும் அற்புதமானப் பணியில்
ஈடுபடுவார்கள்.
போர் பயிற்சிகளுக்குப் பதிலாக, ஏர் பயிற்சிகள் நடைபெறும்.
.அடுக்கு மொழியில் சொல்லப்பட்டுள்ள இந்த அற்புதமான, அழகான
கற்பனை, நாம் நம் குழந்தைப் பருவத்திற்கு, வாலிபப்
பருவத்திற்கு அல்லது 'அந்த காலத்திற்குச்' செல்லும்
கற்பனையைப் போன்றது. இவைகள் கற்பனைகளாக, கனவுகளாக மட்டுமே
இருக்க முடியும். நனவாக மாறவே முடியாது என்று நம்மில் பலர்
தீர்மானித்து விட்டோம். எனவே, இப்படி ஒரு காட்சியை
நினைத்துப் பார்த்து, ஏக்கப் பெருமூச்சு விடலாம், அல்லது
ஒரு விரக்தி சிரிப்பு சிரிக்கலாம். நமது ஏக்கத்திற்கும்,
விரக்திக்கும் காரணம் உள்ளது. எசாயாவின் கனவில் போர்
கருவிகள் விவசாயக் கருவிகளாக மாறுகிறது. நாம் வாழும்
சூழலில் விவசாயக் கருவிகள் போர் கருவிகளாக மாறி வருகின்றன.
பயிர்களை அறுவடை செய்யும் அரிவாள் உயிர்களை அறுவடை
செய்யும் கொடூரம் நம் சாதியப் போர்களில் நடந்து
வருகிறது.மனிதர்கள் கண்டுபிடித்த அனைத்துக் கருவிகளையும்
கொண்டு ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். அழிவை
மட்டுமே முன்னிறுத்தும் செயல்கள் பெருகி வருவதைப்
பார்க்கும் போது, கலிகாலம், முடிவு காலம் ஆரம்பித்து
விட்டதோ என்று மனம் குமுறுகிறோம். முடிவு என்றாலே,
அழிவுதானா? இல்லை. அது நம் கண்ணோட்டத்தைப் பொறுத்தது.
முடிவு, இறுதி என்பவைகளை அழிவு என்று பார்க்கலாம், அல்லது
நிறைவு என்றும் பார்க்கலாம். நமக்கு இன்று வழங்கப்பட்டுள்ள
மூன்று வாசகங்களும் முடிவு காலத்தைப் பற்றி சொல்கின்றன.
அழிவும் இருளும் இருக்கும் என்று சொன்னாலும்,
நம்பிக்கையுடன், விழிப்புடன் இதை எதிர்நோக்கும்படி மூன்று
வாசகங்களும் சொல்கின்றன. ஒவ்வொரு வாசகத்தின் முடிவில்
கொடுக்கப்பட்டுள்ள வரிகள் நம் மனதில் நம்பிக்கையை
விதைக்கும் வரிகள்:
யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின்
ஒளியில் நடப்போம்.எசாயா 2 : 5
இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்.உரோமையர் 13 : 14
ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில்
மானிட மகன் வருவார். மத்தேயு 24 : 44
முடிவை முழுமனதோடு ஏற்றுக்கொண்டால்...
வாழ்வின் முக்கியக் கேள்வியான முடிவைப் பற்றி - அது, உலக
முடிவாயினும் சரி, நம் சொந்த வாழ்வின் முடிவாயினும் சரி
அதைப் பற்றி எண்ணிப்பார்க்க, இந்த ஞாயிறு வழிபாடு நம்மை
அழைக்கிறது. இன்று, திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு.
ஒவ்வோர் ஆண்டும், திருவருகைக் காலத்துடன், ஒரு புதிய
வழிபாட்டு ஆண்டைத் துவக்குகிறோம். திருவருகைக் காலம்
என்றதுமே, கிறிஸ்மஸ் விழாவுக்குத் தேவையான ஏற்பாடுகள்,
களைகட்டத் துவங்கிவிடும். குழந்தை வடிவில் நம் இறைவன்
வருவார் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் திருவருகைக்
காலத்தின் முதல் ஞாயிறன்று, உலகின் முடிவில் இறைவன்
மீண்டும் வருவதை நினைவுறுத்தும் நற்செய்தி (மத்தேயு 24:
37-44) நமக்குத் தரப்பட்டுள்ளது.
உலக முடிவைப் பற்றி நம்மால் தீர்மானமாக ஒன்றும் சொல்ல
முடியாது. நாளையே வரலாம்; அல்லது, நாலாயிரம் கோடி ஆண்டுகள்
சென்று வரலாம். ஆனால், நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உலக
வாழ்வு முடியும் என்பது திண்ணமான உண்மை. எப்போது இந்த
முடிவு வரும் என்பதும் நிச்சயமற்ற ஒன்று. நம் முடிவு
எப்போது வரும் என்பதில் நாம் நேரம், சக்தி இவற்றைச்
செலவிடாமல், நம் முடிவு எப்படி இருக்கப்போகிறது, அல்லது
எப்படி இருக்க வேண்டும் என்று சிந்தித்தால் பயன் உண்டு.
எதிர்பாராத நேரத்தில் வரும் இந்த முடிவைச் சந்திக்க, அந்த
முடிவு நேரத்தில் வரும் இறைவனைச் சந்திக்க நாம் எப்படி
நம்மையே தயாரித்து வருகிறோம் என்பதை எண்ணிப்பார்க்க இன்றைய
நற்செய்தி நம்மைச் சிறப்பாக அழைக்கிறது. நாம் சந்திக்கச்
செல்வது, நமது அன்புத் தந்தையை, தாயை, அல்லது உற்ற நண்பரை
என்ற கண்ணோட்டம் இருந்தால், இச்சந்திப்பை ஆவலுடன்
எதிர்பார்ப்போம். நாம் சந்திக்கப் போவது, நம்மைத்
தீர்ப்பிடவிருக்கும் ஒரு நீதிபதியை என்ற கண்ணோட்டம்
இருந்தால், இச்சந்திப்பு, பயத்தையும், கலக்கத்தையும்
உருவாக்கும்.
நகைச்சுவை உணர்வுடன் எப்போதும் வாழ்ந்ததாகச் சொல்லப்படும்
புனித பிலிப் நேரி அவர்கள், ஒருநாள், நண்பர்களுடன் சீட்டு
விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது சாவைப் பற்றிய பேச்சு
அங்கு எழுந்தது. நண்பர்களில் ஒருவர் பிலிப்பிடம், "பிலிப்,
இதோ, அடுத்த நிமிடமே நீ இறக்கப்போகிறாய் என்று தெரிந்தால்,
என்ன செய்வாய்?" என்று கேட்டார். பிலிப் ஒரு நிமிடம்
சிந்தித்தார். பின்னர், ஒரு புன்னகையுடன், தன் நண்பரிடம்,
"தொடர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருப்பேன்" என்றார்.
மரணத்தை, பயங்கரமான ஒரு மாற்றமாக, முடிவாகப்
பார்ப்பவர்கள், அதைக் கண்டு பயப்பட வேண்டியிருக்கும்.
காரணம்? அவர்களது வாழ்வுக்கும், சாவுக்கும் இடையே ஏகப்பட்ட
முரண்பாடுகள் இருக்கலாம். அம்முரண்பாடுகளையெல்லாம்
சரிசெய்துவிட்டு, மரணத்தைச் சந்திக்க அவர்களுக்கு அதிக
நேரம் தேவைப்படுகிறது. ஆனால், வாழ்வு முழுவதையும்,
நல்லவிதமாக, பொறுப்புணர்வுடன் வாழ்பவர்களுக்கு,
வாழ்ந்தவர்களுக்குச் சாவு எவ்வகையிலும் பயத்தை உண்டாக்காது
என்பதற்கு, புனித பிலிப் நேரி அவர்கள், நல்லதோர்
எடுத்துக்காட்டு. சாவின் வழியாக, தன்னைச் சந்திக்கப்போவது,
அல்லது, தான் சென்றடையப்போவது, இறைவன்தானென, ஆழமாக
உணர்ந்தபின், பயமோ, பரபரப்போ தேவையில்லையே. புனித பிலிப்
நேரியைப் பொருத்தவரை, நாம் இப்படி கற்பனைசெய்து
பார்க்கலாம். நண்பர் சொன்னதுபோலவே, சீட்டு விளையாடிக்
கொண்டிருக்கும்போது அவருக்குச் சாவு நேரிட்டால், மறு
வாழ்வில், அந்த இறைவனுடன், அல்லது, வானகத் தூதர்களுடன் தன்
விளையாட்டைத் தொடர்ந்திருப்பார், பிலிப்.
ஜான் வெஸ்லி என்பவர், 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மேதை.
கிறிஸ்தவ வாழ்வு என்பது, பொறுப்புடன் சரியானக் கணக்கை
இறைவனிடம் ஒப்படைக்கும் ஒரு பணி என்ற எண்ணத்தை,
இங்கிலாந்து மக்கள் மத்தியில் விதைத்தவர் இவர். "இன்று
உங்கள் வாழ்வின் கடைசி நாள் என்றால் நீங்கள் என்ன
செய்வீர்கள்?" என்று இவரிடம் ஒருவர் கேட்டபோது, இவர் சொன்ன
பதில் இதுதான்: "மாலை நான்கு மணிக்கு, நான் வழக்கம்போல்
தேநீர் அருந்துவேன், 6 மணிக்கு, நோயுற்றிருக்கும் திருமதி
பிரவுன் அவர்களை மருத்துவமனையில் பார்க்கச் செல்வேன், 8
மணிக்கு, என் மாலை செபங்களைச் சொல்வேன், இரவு உணவுக்குப்
பின், வழக்கம்போல் படுக்கச் செல்வேன்... விழித்தெழும்போது,
என் இறைவன் முகத்தில் விழிப்பேன்" என்று சொன்னாராம்.
அமைதி நிறைந்த உலகை ஒரு கனவாக, கற்பனையாகக் கண்டவர்,
இறைவாக்கினர் எசாயா. அவரது கற்பனை வரிகள், இந்த ஞாயிறன்று,
நமது முதல் வாசகமாக ஒலிக்கின்றன:
எசாயா 2 : 2,4-5
இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா
மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும்...
மக்களினங்கள் அதைநோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள்...
அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள்
ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள்,
ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது:
அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள்.
யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின்
ஒளியில் நடப்போம்.
இறைவாக்கினர் எசாயாவின் கனவு, உள்ளத்தை உயர்த்துகிறது. அதே
வேளையில், நம்முன் சவால்களையும் வைக்கின்றது. இன்றைய
உலகின் பல பகுதிகளில் நிலவும் மோதல்களைக் காணும்போது,
'துண்டு, துண்டாக நிகழும் மூன்றாம் உலகப்போர்' என்று,
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய கருத்து, நினைவில்
எழுகிறது.
நமக்கு இன்று வழங்கப்பட்டுள்ள மூன்று வாசகங்களும் முடிவு
காலத்தைப் பற்றிச் சொல்கின்றன. அழிவும், இருளும் இருக்கும்
என்று சொன்னாலும், நம்பிக்கையுடன், விழிப்புடன் இதை
எதிர்நோக்கும்படி மூன்று வாசகங்களும் சொல்கின்றன. ஒவ்வொரு
வாசகத்தின் முடிவிலும் கொடுக்கப்பட்டுள்ள வரிகள் நம்
மனதில் நம்பிக்கையை விதைக்கும் வரிகள்:
யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள், நாம் ஆண்டவரின்
ஒளியில் நடப்போம். (எசாயா 2: 5)
இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள். (உரோமையர் 13 : 14)
ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில்
மானிட மகன் வருவார். (மத்தேயு 24: 44)
போர்களாலும், சுற்றுச்சூழல் சீரழிவாலும்
காயப்பட்டிருக்கும் இவ்வுலகிற்கு, நம்பிக்கை தரும்
செய்திகள் மிக அதிகமாகத் தேவைப்படுகின்றன. இத்திருவருகைக்
காலத்தில், நம்மால் இயன்றவரை, நம்பிக்கை செய்திகளைப்
பகிர்ந்துகொள்ள முயல்வோம். வாள்கள், கலப்பைக் கொழுக்களாக
மாறும் என்றும், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள்
எடுக்காது என்றும் நம் வருங்காலத் தலைமுறையின் உள்ளங்களில்
நம்பிக்கையை வளர்க்க முயல்வோம்.
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
அருள்பணி: மாணிக்கம் - திருச்சி
புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க் கழகம்,
பெங்களூர்
திருவருகைக்காலம் முதல் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (எசா. 2:1-5)
இறுதிநாள் அல்லது ஆண்டவரின் நாளைக் குறித்து எசாயா கண்ட
காட்சி இன்றைய முதல் வாசகமாக அமைகின்றது. இந்த வாசகத்தின்
பின்னணி என்னவென்று காண்போம். மக்களின் பாவ வாழ்க்கை,
வேற்று தெய்வ வழிபாடுகள் போன்ற தீமைகள் நிலவி இருந்தன.
யார் பெரியவர் யாவே இறைவனா அல்லது பிற கடவுள்களா? என்ற சந்தேகம்;
இறை கட்டளைகளைப் புறக்கணித்து வாழ்ந்த வாழ்க்கை முறை; பகை
நாட்டு அரசுகளின் தலையீடுகளால் உள்நாட்டு அரசியல் குழப்பம்
போன்றவைகளாகும். இறைவாக்கினர் எசாயா இன்றைய வாசகத்தின்
வழியாக இறுதி நாளைக் குறித்து அறிவிக்கிறார். இறுதி நாளில்
வேற்று இனத்தார் அனைவரும் யாவே இறைவனை தேடி வருவர் என்றும்,
யாவேயின் கட்டளைகளை கடைபிடிப்பர் என்றும், பிற தெய்வங்களைவிட
யாவே இறைவன் பெரியவர் என்பதையும் தெளிவுப்படுத்துகிறார்.
அதன் வழியாக இஸ்ரேயல் மக்களை யாவே கடவுளின் கட்டளைகளை ஏற்று
வாழ அழைப்பு விடுக்கிறார். இறுதிநாளில் இறைவன் வழக்குகளை
தீர்ப்பார். போர்கள் ஓயும், அமைதி நிலவும் என்று உறுதி
கொடுக்கிறார்.
இரண்டாம் வாசகப் பின்னணி (உரோ. 13:11-14)
இவ்வாசகமானது தூய பவுல் உரோமையருக்கு எழுதிய கடிதத்திலிருந்து
எடுக்கப்பட்டுள்ளது. இக்கடிதத்தின் பின்னணியா தெனில் பவுல்
ஆண்டவரின் இரண்டாம் வருகை மிகவிரைவில் வரும் என்று எதிர்பார்த்தார்,
அதற்காக இறைமக்களை தயாரிக்க அழைப்பு விடுக்கிறார். இருளின்
செயல்கள் பாவ வாழ்க்கையையும், ஒளியின் செயல்கள் தூய
வாழ்க்கையையும் குறித்து காட்டுகின்றன. இருளின் ஆட்சிக்குரிய
செயல்களைக் களைந்துவிட்டு ஒளியின் ஆட்சிக்குரிய படைகலனாம்
இயேசுவை அணிந்து இயேசுவின் வருகைக்குத் தயாராக வாழ அழைப்பு
விடுக்கிறார்.
நற்செய்தி வாசகப் பின்னணி (மத்தேயு 24:34-44)
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இடம் பெறும் செய்திகள் இறைமகன்
இயேசுவின் கடைசிகட்ட நாட்களில் போதித்த செய்திகளாகும். மத்தேயு
24-ஆம் அதிகாரத்தின் தொடக்கம் முதல் நிறைவுகாலம் அல்லது இறுதிநாள்
குறித்து போதிக்கிறார். எருசலேம் கோவிலின் அழிவு, வரப்போகும்
பெரும் துன்பம், மானிட மகனின் 2-ஆம் வருகைகுறித்து
போதிக்கும் இறைமகன் அத்திமர உவமை வழியாக 2-ஆம் வருகையைத்
தெளிவுப்படுத்துகிறார். இருந்த போதிலும் இன்றைய நற்செய்தியின்
வழியாக ஆண்டவரின் நாள் குறித்தும், நிறைவு காலம்
குறித்தும் தந்தை இறைவனை தவிர யாருக்கும் தெரியாத நிலையைச்
சுட்டிக் காட்டுகிறார். ஆகவே ஆண்டவரின் நாள்குறித்து
விழிப்பாய் இருக்க இறைமகன் இயேசு அழைப்பு விடுக்கிறார்.
மறையுரை
➤என்னங்க பொண்ணு கல்யாணத்திற்கு ஒரு மாசம் தான் இருக்கு...
இன்னும் கல்யாணப்புடவை எடுக்கல, இன்னும் பத்திரிக்கை வைக்கல,
வீட்டுக்கு வெள்ளை அடிக்கல... சட்டுபுட்டுனு வேலையை முடிக்கப்
பாருங்க இது ஒரு மகளின் திருமணத்திற்க்கான தயாரிப்பு.
➤தலைவர் வருவதற்கு இன்றும் ஒரு வாரம் தான் உள்ளது. நீ ஊர்
எல்லாம் போஸ்ட்டர் அடிச்சு ஒட்டுவது, மாலை வாங்குவது, ஊர்
எல்லையிலிருந்து தலைவரை அழைச்சிட்டு வரதெல்லாம் உன் வேலை -இது
ஒரு அரசியல் தலைவரின் வருகைக்காக ஒரு தொண்டனின் தயாரிப்பு.
➤10 மாதம் தன் வயிற்றில் கருவையும், அந்தக் கருவின் வருங்காலம்
குறித்த கனவை மனதிலும் தாங்கிக் கொண்டு காத்திருப்பவள்
நிறைமாத கர்ப்பிணி
➤கையில் உள்ள மலர் கொத்துக்களையும் தன் மனதையும் காதலி மடியில்
இறக்கிவைக்க காதலியின் வரவை நோக்கி காத்துக்கிடப்பவர் ஒரு
காதலன்.
➤எங்கள் வாழ்வு விடியாதா? எங்கள் வீட்டில் ஒளி எறியாதா?
நாடு திரும்பமாட்டோமா? எங்கள் பூமியில் வெள்ளை பூக்களே மலராதா?
எப்போது யுத்தம் நிற்கும், ஈழத்தில் அமைதி பிறக்கும் என்று
கண்விழித்து காத்துக்கிடப்பவர்கள் இடம்பெயர்ந்த ஈழத்து மக்கள்.
இவ்வாறு மனிதன் தன் அன்றாட வாழ்வில் பலவற்றிக்காகத் தன்னையே
தயாரித்துக்கொண்டும் காத்துக் கொண்டும் இருக்கிறான்.
இன்று திருச்சபையும் கிறிஸ்து இயேசு மண்ணிற்கு வந்த
கிறிஸ்து பிறப்பு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடவும், நாம்
எதிர் நோக்கி இருக்கும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு
நம்மை தயாரிக்கவும் அழைப்பு விடுக்கின்றது. இதற்காகத்
திருச்சபை திரு வழிப்பாட்டு கால அட்டவணையில் 'திருவருகை'
காலம் என்று முதல் நான்கு வாரங்களை அர்ப்பணித்து ஆண்டவரின்
வருகையை எதிர் நோக்கி இறைமக்களை தயாரிக்க அருமையான
வாய்ப்பை தருகின்றது. இத்தகைய தயாரிப்பானது 4-5-ஆம்
நூற்றாண்டுகளில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில்
துவங்கியது. கீழை நாட்டு திருச்சபைகள் ஆண்டவரின் பிறப்பு
விழாவை ஜனவரி 6-ஆம் நாள் திருக்காட்சிப் பெருவிழாவன்று சிறப்பித்ததோடு
அன்றைய நாளைத் திருமுழுக்கு நாளாகக் கொண்டாடினர். ஆகவே
திருமுழுக்கு பெறுவோர் தங்களை தயாரிக்க மேற்கொண்ட பக்தி முயற்சியும்,
ஆண்டவரின் இரண்டாம் வருகையை எதிர் நோக்கி மேற்கொண்ட பக்தி
முயற்சியும் பின் நாட்களில் திருவருகை காலமாக உருவெடுத்தன.
எனவே திருவருகைக்காலம் என்பது 'எதிர்நோக்கின்' அல்லது 'நம்பிக்கையின்
காலம்' மகிழ்ச்சியின் காலம். இந்தத் திருவருகைக்காலம் இரண்டு
பாகங்களாக பிரிந் துள்ளது. திருவருகைக்கால முதல் ஞாயிறு முதல்
டிசம்பர் 16 வரை இயேசுவின் இரண்டாம் வருகையையும், டிசம்பர்
17 முதல் 24 வரை கிறிஸ்துவின் பிறப்பு என்னும் மறையுண்மையையும்
தியானிக்க அழைக்கப்படுகிறோம்.
இன்றைய மூன்று வாசகங்களும் இறைமகனின் வருகைக்காக இறைமக்கள்
தயார் நிலையில் இருக்க வேண்டும், இறைமகனின் வருகையை எதிர்
நோக்கி வாழ வேண்டும் என்ற கருத்துக்களை அடிக்கோடிட்டுக்
காட்டுகின்றன. இன்றைய நற்செய்தியில் இறைமகன் இயேசு மனுமகனின்
இரண்டாம் வருகையைக் குறித்து 'விழிப்பாய் இருக்க' அழைப்பு
விடுக்கிறார். விழிப்பாய் இருத்தல் என்பது தயாராக இருத்தல்,
எதிர் நோக்கி இருத்தல், காத்திருத்தல், மனம் தெளிந்திருத்தல்,
மனம் திறந்திருத்தல் என்றும் பொருள்படும்.
இன்றைய நற்செய்தியில் இயேசு இறைமகனின் வருகையை திருடனுக்கு
ஒப்பிடுகிறார். ஏனென்றால் திருடனைப் போலவே
1) இறைமகன் வருகின்ற கால நேரமானது கணிக்க இயலாது. எப்போது
வேண்டுமானாலும் வரலாம். இரவிலும் வரலாம், பகலி லும் வரலாம்.
2) இறைமகன் வருகின்ற வழியும் தெரியாது, போகின்ற வழியும்
தெரியாது.
3) இறைமகன் வருகின்ற உருவம் தெரியாது. உருவம் மாறி வரலாம்.
ஆகவே விழிப்பாய் இருங்கள் என்கிறார் இயேசு.
விழிப்பாய் இருத்தலில் மூன்று நிலைகள்
ஒரு மனிதனின் விழிப்பு நிலையில் 3 நிலை உண்டு
1) தன்னைக் குறித்த விழிப்பு,
2) சக மனிதன் குறித்த விழிப்பு
3)இறைவன் குறித்த விழிப்பு
1. தன்னைக் குறித்த விழிப்பு
தன்னை குறித்த விழிப்பு நிலை என்பது தன்னையே அறிதல்,
அல்லது தன்னை குறித்த ஒரு தெளிவோடு இருத்தல் ஆகும்.
இதைத்தான் 'உன்னையே நீ அறிந்து கொள்' என்று கிரேக்க தத்துவ
ஞானி கூறுகிறார். நான் யார்? என் பலம் என்ன? பலவீனம் என்ன?
வாழ்தலின் அர்த்தம் என்ன? குறிக்கோள் என்ன? போன்ற
கேள்விகளுக்குத் தெளிவான பதில் இருக்கும். சுயவிழிப்பு
கொண்டவர் செய்கின்ற செயலை முழு ஈடுபாடோடு செய்வார், தன்னை
தன்னாளு -கைக்குள் வைத்திருப்பார். இவ்வாறு தன்னை குறித்த
விழிப்புணர்வு சகமனிதனைக் குறித்து வழிப்புணர்வு பெற
வழிவகுக்கிறது.
2. சக மனிதன் குறித்த விழிப்பு
தன்னை குறித்த விழிப்பு பெறும்போது நாம் சகமனிதர்களை
குறித்தும், சகமனிதனுக்கும், நமக்கும் இடையேயான தொர்பு,
உறவு, பிணைப்பு குறித்தும் விழிப்பு பெற முடிகிறது.
சகமனிதனும் இறைவனின் சாயல் என்ற விழிப்புணர்வை
ஏற்படுத்துகின்றது.
3. இறைவன் குறித்த விழிப்பு
இதுதான் ஒருவன் தன்னை குறித்தும், சகமனிதனை குறித்தும்
விழிப்பு அடைய அடிப்படையாய் இருக்கின்றது. இறைவன் யார்?
தனக்கும் இறைவனுக்கும், படைப்பு பொருட்களுக்கும் இடை
யேயுள்ள தொடர்பு என்ன? என்று தெளிவுபடுத்துகின்றது.
ஒவ்வொரு மனிதனும் நான்கு முறை பிறக்கிறார்கள்.
கருவாகும்போது முதல் பிறப்பு, கருவறையைவிட்டு
வெளியேறும்போது இரண்டாம் பிறப்பு, தன்னையே உணர
ஆரம்பிக்கும்போது மூன்றாம் பிறப்பு, உணர்ந் தைைத அடைவது
அல்லது விழிப்புநிலை அடைவது 4-ஆம் பிறப்பு, ஒருவன்
விழிப்பாய் இருக்கும்பொழுது தன்னில் மட்டுமல்ல, பிறரிலும்
ஏன் இயற்கையிலும் இறைமையை காண இயலும்.
"காற்றிலும் இறைமை கடலிலும் இறைமை
மொட்டிலும் இறைமை முள்ளிலும் இறைமை
ஒளியிலும் இறைமை உளியிலும் இறைமை" காண இயலும்.
2000 ஆண்டுகளுக்கு முன்பு இறைமகன் இயேசு இந்த மண்ணில்
பிறந்தபொழுது நாம் இருக்கவில்லை. இன்று அன்றாட
நிகழ்வுகளின் வழியாகவும், சக மனிதர்கள் வழியாகவும்,
இறைவனின் படைப்புக்கள் வழியாகவும் இறைவன் நம்மைச்
சந்தித்துக் கொண்டி ருக்கிறார். நாம் இறைவனை கண்டு
கொள்கிறோமா...
"எங்கே இரண்டு மூன்று பேர் என் பெயரின் பொருட்டு ஒன்றாக
கூடியிருக்கிறீர்களோ அங்கே அவர்களிடையே நானிருக்கிறேன்
(மத்தேயு 18:20) என்று சொன்ன ஆண்டவர் இயேசு இன்று திருச்
சபை வழியாகவும், திருவருட்சாதனங்கள், திருவிவிலியம்,
திருப்பணி யாளர்கள் வழியாகவும் தன்னை பிரசன்னப்படுத்திக்
கொண்டிருக் கிறார். நாம் அவரைக் கண்டு கொள்ளும் அளவிற்கு
விழிப்பாய் இருக்கிறோமா?
"சின்னஞ்சிறிய சகோதரர்களுக்கு நீங்கள் செய்ததெல்லாம்
எனக்கே செய்தீர்கள்" என்ற இறைமகன் சகமனிதர்கள் வழியாக
வும், இறைவனின் படைப்புப் பொருட்கள் வழியாகவும் தன்னை
வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். நாம் இறைமகனை கண்டுகொள்
ளும் அளவிற்கு விழிப்பாய் இருக்கிறோமா?
பிற மறையுரைக் கருத்துக்கள்
🕇மக்களினங்களை ஆண்டரின் மலையை நோக்கி வருவார்கள். எசா.
2:2 ஏனெனில் ஆண்டவரின் வருகை அனைவருக்குமானது.
🕇 ஆண்டவர் ஒளியில் நடப்போம் எசா. 2:5 - ஒளியின்
ஆட்சிக்குரிய படைகலன்களை அணிவோம் (உரோ. 13:13). நல்வாழ்வு,
மனமாற்றம் தயாரிப்பின் அடையாளம்.
🕇 இரவு முடிகிறது பகல் விடிகிறது. கிறிஸ்துவின் பிறப்பு
(உரோ.13:12). ஒளியாம் இயேசுவை ஏற்றுக் கொள்ள இருளின்
செயல்பாடுகளை விட்டொழிப்போம்.
அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட்
திருவருகைக் காலம் முதலாம் ஞாயிறு
இன்று புதியதொரு திருவழிபாட்டு ஆண்டைத் தொடங்குகின்றோம்.
இன்றைய வாசகங்கள் எல்லாம் காலத்தைப் பற்றிப் பேசுகின்றன.
எசாயா இறுதி நாள்களில், மெசியாவின் காலத்தில் நிகழ இருப்பன
பற்றி விவரிக்கின்றார். பவுலடியார் உரோமையருக்கு 'இறுதிக்
காலம் இதுவே' என்று கூறி இக்காலத்தில் கிறிஸ்தவர்கள் எப்படி
நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றார். இயேசு இன்றைய
நற்செய்தியில் மானிட மகனின் வருகையின் காலத்தைப் பற்றிப்
பேசுகின்றார். இதையெல்லாம் வாசிக்கின்ற நமக்கு எது இறுதிக்காலம்?
அதுவந்துவிட்டதா?வர இருக்கின்றதா? அப்படியானால் எப்போது வரும்?
அதற்கான அறிகுறிகள் எவை? அதற்காக நாம் ஏதாவது தயாரிப்புச்
செய்ய வேண்டுமா? அவை எவை? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.
இக்காலங்களில் புதிது புதிதாய் எழும்புகின்ற 'சபை'களும்
'போதகர்களும்' விதவிதமான விளக்கங்களையும் வியாக்கியானங்களையும்
தந்து மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில்
இறுதிக் காலம் அல்லது நிறைவுக்காலம் பற்றிய விவிலியப் புரிதல்
என்ன? இன்னும் குறிப்பாக இன்றைய நற்செய்திப் பகுதியின் வழி
மத்தேயு நற்செய்தியாளர் கூற வருகின்ற நிறைவுக்காலம் பற்றிய
செய்தி என்ன என்று மட்டும் இவண் காண்போம்.
நிறைவுக் காலம்பற்றிய விவாதம்
தொடக்கக் கால யூதக் கிறிஸ்தவத்தில் இறையரசு பற்றிய விவாதம்
மானிட மகனாகிய இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றியதாகவும்
இருந்தது. மத்தேயு மானிட மகனின் இரண்டாம் வருகையைப் பற்றிய
விவாதத்தை இந்த அதிகாரத்தின் பல இடங்களில் எழுப்புகின்றார்
(காண். மத் 24:3, 27, 37, 39). இந்த விவாதத்தில் மிக
முக்கியமான ஓர் அங்கம், உலக முடிவுபற்றிய சரியான நேரத்தைக்
கணித்துக் கூறுவதாகும். இத்தகைய ஒரு முயற்சி தானியேல் காலத்திலிருந்தே
காணக் கிடக்கின்றன (காண். தானி 7:25; 8:13; 9:27; 12:7
12:11, 12). இவ்வாறு இறுதிக் கால "கால அட்டவணை" ஆதித்
திருச்சபையின் காலத்தில் அனைவருக்கும் அறிமுகமாயிருந்தது.
மக்களிடையே இப்படியொரு போக்கு போய்க் கொண்டிருக்கின்ற
வேளையில் இதற்கு எதிரான ஒரு போக்கும் தொடக்கக் காலத்தில்
நிலவியிருந்தது. அதாவது இறுதிக் காலத்தைப் பற்றி இரண்டாம்
வருகை அல்லது உலகு முடிவு ஆகியவற்றை சந்தேகிக்கின்ற, புறந்தள்ளுகின்ற
ஒரு போக்கு. இதைப் பேதுருவின் இரண்டாம் மடல் இவ்வாறு பதிவு
செய்கின்றது, "இறுதிக் காலத்தில் ஏளனம் செய்வோர் சிலர்
தோன்றி தங்கள் சொந்த தீய நாட்டங்களுக்கேற்ப வாழ்ந்து உங்களை
எள்ளி நகையாடுவர். அவர்கள், 'அவரது வருகையைப் பற்றிய
வாக்குறுதி என்னவாயிற்று, நம் தந்தையரும் இறந்து போயினர்;
ஆயினும் படைப்பின் தொடக்கத்தில் இருந்ததுபோல எல்லாம் அப்படியே
இருக்கின்றனவே' என்று சொல்லுவார்கள்" (2 பேது 3:3-4). ஆக
இரண்டாம் வருகை, நிறைவுக் காலம்பற்றிய துல்லியமான வரையறைக்கான
முயற்சி ஒருபுறமும், அதை எள்ளி நகையாடுகின்ற போக்கு மறுபுறமும்
இருந்த சூழலில் மத்தேயுவின் நிலைப்பாடு என்ன என அறிந்து
கொள்ள முயல வேண்டும். இந்தச் சூழலில் மத் 24:32-51 எனும்
இந்த நீண்ட பகுதியை வைத்துப் பார்க்க வேண்டும்.
மத்தேயுவின் எதிரிகளின் நிலைப்பாடு
ஏற்கெனவே யூத சமயத்தில் இருந்த இறுதிக்காலம் பற்றிய கருத்துக்களோடு
(காண். தானியேல்) கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றிய
கருத்தும் உடன் சேர்க்கப்பட்டது. இதற்கு எதிராக மத்தேயுவின்
யூத எதிரிகள் மத்தேயு கால கிறிஸ்தவர்களின் நம்பிக்கையில்
குறைகண்டு அவர்களைக் கேலி செய்திருக்க வேண்டும். அவர்களின்
வாதப்படி "கிறிஸ்தவர்களே நீங்கள் இறுதிக்காலம் பற்றிய கருத்துடன்
இயேசுவின் இரண்டாம் வருகையையும் இணைத்து விட்டீர்களே! அவர்
எப்போது வருவார்? இந்தத்தலைமுறையிலா, இதோ இந்தத் தலைமுறை
கடந்து போகின்றதே! இவையெல்லாம் நம்பும்படி இல்லையே" என்று
அவர்கள் குறைகூற வாய்ப்பிருந்தது. இத்தகு சூழலில் உண்மையான
கிறிஸ்தவர் இறுதிக்காலம் பற்றி என்ன நம்ப வேண்டும், அவர்கள்
இதுகுறித்து என்ன செய்ய வேண்டும். எத்தகைய மனநிலை
கொண்டிருக்க வேண்டும் என்பதையெல்லாம் இயேசுவின் வார்த்தைகளைக்
கொண்டு மத்தேயு விளக்குகின்றார்.
மத்தேயுவின் நிலைப்பாடு
பாரம்பரியமாகக் கிறிஸ்தவர்கள் இறுதிகாலம் பற்றி நம்பியவைகளை
மத்தேயுவும் வழி மொழிகின்றார். அதாவது மானிட மகனின் உடனடி
வருகை, அதற்கான அடையாளங்களை வலியுறுத்துகின்ற அதே வேளையில்
(காண். மத் 24:32-34), அந்த நாளைப் பற்றியும், நேரத்தைப்
பற்றியும் துல்லியமாக வகுத்து "கால அட்டவணையிட்டுக்' கூற
முடியாது என்பதையும் தெளிவுபடுத்துகின்றார் (காண். மத்
24:36): "அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தை ஒருவருக்குத்
தவிர வேறு எவருக்கும் தெரியாது. விண்ணகத் தூதருக்கோ மகனுக்கோ
கூடத் தெரியாது"). இந்நிலையில் கிறிஸ்தவர் கொண்டிருக்க
வேண்டிய மனநிலையைத்தான் இன்றைய நற்செய்திப் பகுதி முழுவதும்
விவாதிக்கின்றது. எனவே மத்தேயுவின் நிலைப்பாடு இவ்வாறு அமைகின்றது,
"இயேசுவின் இரண்டாம் வருகை நிச்சயம் நடக்கும் (காண். மத்
24:35); ஆனால் அவரது வருகை எதிர்பாராமல் திடீரென நிகழும்.
இதற்கு நோவா காலத்து வெள்ளப்பெருக்கு உதாரணமாகக் காட்டப்படுகின்றது
(காண். மத் 24:37-39). இந்த வருகையின்போது மக்கள் தீர்ப்பிடப்பட்டு
நல்லவர், தீயவர் எனப் பிரிக்கப்படுவர் (காண். மத்
24:40-41). இவற்றையெல்லாம் சரியாக எதிர்கொள்ள, சந்திக்க,
கிறிஸ்தவர்களுக்குக் கூறப்படும் அறிவுரை "விழிப்பாயிருங்கள்;
ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவாரென உங்களுக்குத்
தெரியாது" (வச. 42). இத்தகைய விழிப்பாயிருப்பது எப்படி என்பதை
விளக்க இரு உவமைகள் வீட்டுத் தலைவரும் திருடனும், (வச
43-44); இருவகை பணியாளர் (வச 45-51) ஆகியவை தரப்படுகின்றன.
எனவே இரண்டாம் வருகையின் தீர்ப்பு விழிப்பாயிருப்பதையும்,
அவரவர் பணியைப் பொறுப்புடன் செய்வதையும் கொண்டே அமையும் என்பதை
இவ்வதிகாரத்தின் இறுதி உவமையும் இறுதி வசனமும்
குறிப்பிடுகின்றன.
இன்றைய கால கட்டத்திலும் இந்த 'இறுதிக் காலத்தைப்' பற்றிப்
பலர் பலவிதமாகக்கூறி நம்மைக் குழப்பத்திலும், அச்சத்திலும்
ஆழ்த்துகின்றனர். நற்செய்தியில் இயேசுவின் போதனை தெளிவாய்
உள்ளது. இறுதி வருகை உறுதி, நிச்சயம்; அப்போது தீர்ப்பு உள்ளது
என்பதும் உறுதி; அதை எதிர்கொள்ள விழிப்போடு அவரவர் கடமைகளைச்
சரிவரச் செய்வதே சரியான அணுகுமுறை. இந்த மனநிலையுடன் எதிர்வரும்
திருவருகைக் காலத்தைச் சந்திப்போம். இயேசுவின் வருகைக்கு
நம்மைத் தயாரிப்போம்.
அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
திருவருகைக் காலம் - முதல் ஞாயிறு முதல் ஆண்டு
முதல் வாசகம் : எசா 2 : 1-5
அமைதி தருவார் மெசியா
இன்று வாசிக்கப்படும் இவ்வாசகம் பபிலோனியப் படையெடுப்பால்
எருசலேம் அழிவுற்றபின் (கி.மு. 587) எழுதப்பட்டது. புதிய
எருசலேம். அதனின்று பிறக்கும் சமாதானம் ஆகியவை பற்றி இங்கு
விவரிக்கிறார். அமைதியும் சமாதானமும் நிரம்பிய புத்துலகப்
படைப்புக்கு மேற்கோளாக, ஐக்கிய நாடுகளின் சபை, எசா. 2: 4-ஐச்
சுட்டிக்காட்டுகிறது. "அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத்
தீர்த்து வைப்பார்; பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்;
அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும், தங்கள்
ஈட்டிகளைக் கருக்கரிவாள் களாகவும் அடித்துக்கொள்வார்கள்.
ஓர் இனத்தாருக்கு எதிராக வேறோர் இனம் வாள் எடுக்காது; அவர்கள்
இனி ஒருபோதும் போர்ப் பயிற்சி பெறமாட்டார்கள்" (மிக்கா இறைவாக்கினர்
4: 1-4-ம் எசாயா 2:1-5-ம் ஏறத்தாழ ஒரே சொற்களை உடையன).
மீட்பு அளிப்பார் மெசியா
இயேசுவின் வருகைக்காகக் காத்திருக்கும் திருச்சபை புதிய
எருசலேமை நம் கண்முன் வைக்கிறது. இங்கு "ஆண்டவரின் கோயில்
அமைந்துள்ள (சீயோன்) மலை, "ஆண்டவரின் மலை", "யாக்கோபின்
கடவுளது கோயில்", "சீயோன்", என்று எருசலேம் பல பெயர்களால்
அழைக்கப்படுகிறது. இஸ்ரயேலருக்கு (நமக்கும்) மீட்பு
இறைவனிடமிருந்தே, அவர் வதியும் "சீயோன் மலையிலிருந்தே"
வருகிறது. "மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்தினேன்; 'உதவி
எனக்கு எங்கிருந்து வரும்?' என்றேன்" (திபா 121:1) என்ற
வினாவுக்குத் திருப்பாடல் ஆசிரியர், "உதவி எனக்கு
ஆண்டவரிடம் இருந்தே வரும்" (திபா 121:2) என்று பதில்
கூறியதுபோல, "சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிப்படும்"
"எருசலேமிருந்தே ஆண்டவர் வாக்குப் புறப்படும்" என்று கூறி
இறைவன் தரும் மீட்பை நம்பிக்கையுடள் எதிர்பார்க்க எசாயா
அழைக்கிறார்.
"நம்பி னார்க்கருள் செய்யும் அந்தணர்" நம் இறைவன்.
-சுந்தரர் தேவாரம்
ஆம், திருவருகைக் காலம் நம்பிக்கைக் காலம்.
அனைவருக்கும் உண்டு மீட்பு
இறைவன் அளிக்கும் இம்மீட்பு தேர்ந்தெடுக்கப்பட்ட
இஸ்ரயேலுக்கு மட்டுமன்று; புறவினத்தாருக்கும் இதில்
பங்குண்டு. "மக்களினங்கள்" "பலநாட்டு மக்கள்" அனைவரும்
இறைவனிடம் வந்து அவருடைய வழிகளைக் கற்றுக்கொள்வர்.
இறைவனும் இஸ்ரயேலருக்குச் செய்தது போன்று, இவர்களுக்கும்
நீதியும் அமைதியும் சமாதானமும் வழங்குவார். கிறிஸ்து தமது
பிறப்பால் கொண்டு வந்த சமாதானம் (லூக் 2:14) கிறிஸ்த
வர்களுக்கு மட்டுமே உரிய தனியுடைமையன்று; அனைவருக்குமுரிய
அருட்கொடை. எனவே, திருவருகைக் காலத்தில் நமது செபங்களிலும்
தியானங்களிலும் பிற மக்களின் மீட்பு, சமூக நீதி, உலக அமைதி
ஒரு முக்கிய இடம் பெற வேண்டும்.
செபம், தவம், அன்பு செய்வோம்
"உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக" (லூக்
2:14) என்று இயேசுவின் பிறப்பின்போது விண்ணவர் திரள்
பாடியது. பழைய ஏற்பாட்டிலும் சரி, புதிய ஏற்பாட்டிலும்
சரி, மக்களிடை நீடிய அமைதியே இறைவனின் திட்டமாகும்.
அமைதியில்லா உலகு அழிந்துவிட்ட உலகு. அமைதியில்லா உள்ளம்
அழிந்துபட்ட உள்ளம். இறைவனே தரும் இவ்வமைதியை அடைய
"ஆண்டவரின் மலைக்கு ஏறிச்செல்ல வேண்டும்"; "ஓடிச் செல்ல
வேண்டும்."ஆம், விடாமுயற்சி, (செபம், தவம், ஒறுத்தல்,
அன்பு ஆகியவை) தேவை.
நம்மிடமுள்ள வாள்கள், ஈட்டிகள் ஆகிய சுயப்பற்று, அநீதியான
வாழ்வு, தீய குணங்கள் முதலியவற்றை அடித்து ஒடுக்க
வேண்டும். கலப்பைக் கொழுக்கள், அரிவாள்கள் ஆகிய பிறருக்கு
நன்மை பயக்கும் அன்பு, நீதி, நேர்மையான வாழ்வு இவற்றைப்
பேணி வளர்க்க வேண்டும். அப்போது தான் நாம் ஆண்டவரின்
ஒளியிலேயும் நெறிகளிலேயும் நடந்து, அவருடைய திருவருகைக்கு
உண்மையிலேயே நம்மைத் தயார் செய்கிறவர்களாவோம்.
ஆண்டவரின் ஒளியிலே நாம் நடப்போம்.
இரண்டாம் வாசகம் : உரோ 13:11-14
கிறிஸ்தவர் ஒளியில் வாழ வேண்டியவர்
"இருள் நீங்கி இன்பம் பயக்கும்" வாழ்வு அவனது. (குறள் 352)
எனவே, இருளாகிய பாவ வாழ்வை விட்டகன்று இயேசு கிறிஸ்துவாகிய
ஒளியை அணிந்துகொள்ள வேண்டும். புனித அகுஸ்தீனாரின் மனமாற்ற
வாழ்வுக்கு இவ்வாசகம் காரணமாயிருந்தது என்று அவர்
வாழ்க்கையிலிருந்து அறிகிறோம். திருவருகைக் காலத்
தொடக்கத்திலே இவ்வாசகம் வழி பவுல் அடியார் நம் மனமாற்ற
வாழ்வுக்கு அழைப்பு விடுக்கிறார்.
இறுதிக் காலம் வந்துவிட்டது
கிறிஸ்துவின் உயிர்ப்பிலே, திருச்சபையின் வரலாற்றிலே நாம்
அனைவரும் இறுதிக் காலத்திலே வாழ்கிறோம். "தகுந்த வேளையில்
நான் உமக்குப் பதிலளித்தேன். விடுதலை நாளில் நான் உனக்குத்
துணையாய் இருந்தேன்" {2 கொரி 6: 2) என்று இன்று நம்மைப்
பார்த்து இறைவன் கூறுகிறார். "நமக்கோ விண்ணகமே தாய்நாடு"
(பிலி 3: 20). எனவே இவ்வுலகிலே நாம் வேற்று நாட்டினரென,
அந்நியர் போன்று வாழ்வு நடத்த வேண்டும் (எபி 11: 13).
"இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றம் என்றெண்ணி" - நாலடியார்
வாழ்வின் இறுதிக் காலத்தில் வாழ்பவர்கள்போல் என்றும்
இறைவனைச் சந்திக்கத் தயாரான வாழ்க்கையை வாழ வேண்டும்.
இயேசுவின் உயிர்ப்பு எனும் ஒளியில் இருளைக் காணாதவர்களாய்,
ஒளியின் மக்களென வாழ முடியும் (எசா 4:5-6; 60: 1-2; எபே 5:
8-14).
மீட்பு அண்மையில் உள்ளது
உலக முடிவிலே, அல்லது வாழ்வின் இறுதியிலே வழங்கப்படும்
தீர்ப்பு அன்று இது; அன்றாட வாழ்வில் ஆரம்பித்து வளர்வது.
"நம் மீட்பை உறுதிப் படுத்தும் அடையாளமாகத் தூய ஆவியை நம்
உள்ளத்தில் பெற்றுக் கொண்ட நாம்" தூய ஆவியாரை அச்சாரமாகப்
பெற்ற நாம் (2கொரி 1:22) நம்முடைய நற்செயல்களினாலே
இம்மீட்பிலே பங்கு பெறுகிறோம்; வளர்கிறோம். இறுதி நாளில்
இம்மீட்பு முழுமையடையும். எனவே கிறிஸ்தவருக்கு எந்நாளும்
மீட்பு நாளே. இங்கே, இப்போது, இன்று கிறிஸ்து மனிதரை
ஆட்கொள்ளும் செயல் மனிதர் கிறிஸ்துவால் ஆட்கொள்ளப்படும்
செயல் - இதுதான் மீட்பு. திருவருகைக் காலத் தொடக்கத்தில்
இதனை மனத்திலிருத்தி இறைவனுடைய மீட்பிலே பங்கு பெறும்
நிலையினை அடைதற்கான செயல்களைச் செய்வோம். இத்திருவருகைக்
காலத்தின் ஒவ்வொரு நாளும், மீட்பர் இயேசுவின் நாளாக, நமது
மீட்பின் நாளாக அமைய நம்முடைய செயல் முறைகளைத் திருத்தி
அமைப்போம்.
கிறிஸ்து இயேசுவை அணிந்துகொள்வோம்
"இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின்
ஆட்சிக்குரிய படைக் கலங்களை அணிந்துகொள்வதே" (13:12)
கிறிஸ்துவை அணிந்து கொள்வதாகும்.
"கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற
நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள்" (கலா 3:
27). கிறிஸ்துவுக்குள் வாழும் நாம் கிறிஸ்துவின்
மனநிலையையும் மதிப்பீடுகளையும் நம் வாழ்வில் பின்பற்ற
வேண்டும். கிறிஸ்துவிலே அனைத்து மக்களையும் சகோதர
சகோதரிகளாக ஏற்று, ஏற்றத் தாழ்வுகளை அகற்றி, அன்பு வாழ்வு
வாழ வேண்டும் (கலா 3:28; உரோ 13 8-10). அத்தோடு தீய
நாட்டம், சொல் செயல் முதலியவற்றை அகற்றி (13:13), ஒளியின்
ஆட்சிக்குரிய படைக்கலங்களாகிய நம்பிக்கை, பற்றுறுதி, நீதி,
நேர்மை முதலியவற்றிலே வேரடித்து வளர வேண்டும் (1தெச 5:8;
எபே 6:13-17). இத்திருவருகைக் காலம் நாம் ஒளியின் மக்களாக
வாழ ஏற்ற காலமாய் அமைவதாக.
விழித்தெழும் நேரம் வந்துவிட்டது. ஆண்டவராகிய இயேசு
கிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள்.
நற்செய்தி: மத் 24 : 37-44
விழிப்பு வேண்டும்
மத்தேயு 24-ஆம் அதிகாரம், இறுதிக் காலம்பற்றி இயேசு
விட்டுச் சென்ற அறிவுரையாகும். இதிலே எருசலேமின் அழிவும்
(கி.பி. 70), உலகத்தின் முடிவும் இரண்டறக் கலந்து
நிற்கின்றன. காலத்தினாலே இவ்விரண்டு நிகழ்ச்சிகளும்
பிரிந்திருந்தாலும், இறையியல் மரபில், இவற்றில் முன்னையது
பின்னையதற்கு முன்னோடியாகவும் அறிகுறியாகவும் அமையும்.
கிறிஸ்துவின் வருகைக்குத் தயார் செய்யும் முறையிலே, அவரின்
இறுதி வருகையின்போது எவ்வாறு நாம் விழிப்பாயிருந்து அவரை
எதிர்கொள்வோமோ, அத்தகைய விழிப்பை எதிர்பார்க்கிறது
இவ்வாசகம்.
மனம் மாறுவோம்
நோவாவின் காலத்திலே மனிதரின் அக்கிரமம் பெருகியது. எல்லா
மனிதர்களும் தீமையையே நாடினர் (தொநூ. 6: 5). "நோவாவுக்கு
ஆண்டவரின் அருள் பார்வை கிடைத்தது" (தொநூ 6:8). ஆண்டவரை
விசுவசித்து, "அதே நம்பிக்கையினால் உலகைக் கண்டனம் செய்து,
அந்த நம்பிக்கையினாலே இறைவனுக்கு ஏற்புடையவராகும்
பேற்றுக்கு உரிமையாளர் ஆனார்" (எபி 11:7). நாமும் நோவா
போன்று ஆண்டவரில் மட்டுமே விசுவாசம் வைத்து வாழ்வோமா?
அல்லது நோவா காலத்து மக்கள் போன்று உண்டும் குடித்தும்
கேளிக்கைகளில் நேரத்தைப் போக்கியும், அநீத வாழ்வு
நடத்தியும், அன்பற்ற வாழ்வில் அமிழ்ந்தும் இறைவனை மனம் நோக
வைப்போமா? (தொநூ 6:6). நோவா காலத்துப் பெரும் வெள்ளம்
மக்களின் அக்கிரமங்கள் மேல் இறைவன் கொண்ட கோபத்தின்
வெளிப்பாடு (தொநூ 6:12-13). பாவ வாழ்க்கையில் உழன்று
திரியும் நம்மையும், நாம் எதிர்பாரா வேளையிலே இறைவனின்
கோபமாகிய பெருவெள்ளம் அடித்துச் சென்றுவிடக்கூடும் என்பதை
அறியாது நாம் வாழ்க்கை நடத்தலாமா? எந்நேரத்திலும் இறைவனின்
கோபம் வெளிப் படலாம்; எவ்வேளையிலும் இறைவன் நம் நடத்தையைக்
கணக்கிட வருவார்.
தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று
அழுது காமுற்று அரற்றுகின் றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே! - அப்பர் தேவாரம்
என்பதை உணர்ந்து, நாம் மனம் மாறிய வாழ்க்கை நடத்த முயற்சி
செய்வோம். திருவருகைக் காலம், இயேசுவின் வருகை முதலியன
நமக்கு நோவாவுக்குக் கிடைத்த ஆசீராயமையுமா? அல்லது நோவா
காலத்து மக்களுக்குக் கிடைத்த சாபத் தீர்ப்பாயமையுமா? மனம்
மாறுவோம்; இறைவனை அணுகுவோம். "நம்பிக்கையினால் இறைவனுக்கு
ஏற்புடைய வராகும் பேற்றுக்கு உரிமையாளர் ஆவோம்" (எபி
11:7).
ஆண்டவர் நாள் நாம் எதிர்பாராதபோது வரும்
திருடன் அறிவித்துவிட்டு வரமாட்டான். எதிர்பாராத வேளையிலே
நம்மை ஏமாற்றி, நம் உடைமைகளைக் கொள்ளையிட்டுச்
சென்றுவிடுவான். ஆண்டவரின் வருகையும் அவ்வாறே இருக்கும்.
"திருடன் நள்ளிரவில் 13வருவதுபோல் ஆண்டவருடைய நாள் வரும்"
என்பது உங்களுக்குத் தெரியும். "எல்லாம் அமைதி, ஆபத்து
ஒன்றுமில்லை" என்று மக்கள் கூறும்போதே,
"கருவுற்றிருப்பவர்களுக்குப் பேறுகால வேதனை ஏற்படுவது
போலத் திடீரென அவர்களுக்கு அழிவு வரும்" (1 தெச 5: 2-3; 2)
என்பார் தூய பவுல் அடியார். எனவே விழித்திருப்போம்.
திருவருகைக் காலம், விழிப்புக்காலம். அதே வேளையில்
இரக்கத்தின் காலம். எப்போதும் தயாராயிருப்போம்.
இரக்கத்தின் கடவுள் நம்மிடம் வரும் வேளையிலே "விளக்குடன்
ஏனத்தில் எண்ணெயும் எடுத்துக்கொண்டு" (மத் 25: 1-13)
"அன்பே தகழியாய் ஆர்வமே நெய்யாக", விழித்திருந்து
வரவேற்போம். நல்ல உள்ளத்தோடு, விசுவாசமாகிய ஏனத்தில்,
அன்பாகிய எண்ணெயோடு காத்திருப்போம். "ஏனெனில் நாளும்
நேரமும் நமக்குத் தெரியாது" (மத் 25:13).
ஆயத்தமாய் இருங்கள், நீங்கள் நினையாத நேரத்தில் மனுமகன்
வருவார்.
சிந்தனை 9
இறைவனின் வருகையும் நமது வாழ்வும்
திருவருகைக்காலத்தின் முதல் வாரத்தில் இருக்கிறோம். கடந்த
வழிபாட்டு ஆண்டை நேற்றோடு நிறைவு செய்திருக்கிறோம். புதிய
ஆண்டை இன்றோடு தொடங்குகிறோம். ஏறக்குறைய நமது புத்தாண்டு
கொண்டாட்டத்திற்கான முக்கியத்துவம் வாய்ந்தது இது. கடந்த
ஆண்டு முழுவதும் இயேசுவின் பிறப்பு, போதனை, நமக்காக இறந்து
உயிர்த்து, விண்ணகம் சென்று, அனைத்துலக அரசராக அவரை
நிலைநிறுத்திக்கொண்டதை தியானித்து நம்மையே
புதுப்பித்துக்கொண்டிருக்கிறோம். மற்றொரு
புதுப்பித்தலுக்கான தொடக்கம் தான் இன்றைய
திருவருகைக்காலத்தின் முதல் வாரம்.
இந்த நாளிலே நாம் அனைவரும் சிந்திப்பது புதிய ஆண்டிற்கான
தயாரிப்பு மட்டுமல்ல. பழைய ஆண்டு எந்தளவுக்கு நம்மைப்
பக்குவப்படுத்தியிருக்கிறது என்பதையும் அறிந்து கொள்வதும்
தான். இயேசுவின் வாழ்வு முழுவதையும் அறிந்து
தியானித்திருக்கிற நாம், எப்படி அவரது வாழ்வை நமது வாழ்வாக
மாற்றியிருக்கிறோம்? அல்லது மாற்ற முயற்சி
எடுத்திருக்கிறோம்? அதிலே எந்த அளவுக்கு வெற்றி
பெற்றிருக்கிறோம்? அல்லது சறுக்கியிருக்கிறோம்? இந்த
கேள்விகளை நாம் மீண்டும், மீண்டுமாகக் கேட்டுப்பார்த்து,
அதற்கான பதில்களையும் நாம் காண முயல வேண்டும். நமது
வார்த்தைகள், உரையாடல்கள், செயல்பாடுகள் முதிர்ச்சி
பெற்றிருக்கிறதா? என்று நம்மையே நாம் கேட்டுப் பார்ப்போம்.
கடந்த ஆண்டு நம்மை எந்தளவுக்கு மாற்றியிருக்கிறது என்பதை
சிந்திக்கிற நாம், இனி வரக்கூடிய நாட்களிலும் கடவுளுக்கு
ஏற்ற மனநிலையோடு வாழ ஆண்டவரிடம் வரம் வேண்டும். அவரது
அன்பும், இரக்கமும் நம்மோடு இருக்கிறவரை, நாம் எந்நாளும்
சரியான பாதையில் தான், வலம் வருவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
சிந்தனை 10
இறை நம்பிக்கையில் புதுவாழ்வு
இன்று மனிதன் தன்னைப்பற்றிய சிந்தனையிலே மூழ்கி மூச்சற்ற
நிலையில் இருக்கிறான். தன்னுடைய சுகம், தன் இன்பம்
இவைபற்றியே எண்ணமாக உள்ளான். உண்பதும் உடுப்பதும்,
குடிப்பதும் கும்மாளமடிப்பதும், பெண்கொள்வதும் கொடுப்பதும்
வாழ்க்கை என வாழ்பவன் வெள்ளப்பெருக்குக்கு முந்திய
காலத்திய பாவ வாழ்க்கை வாழ்கிறான். அத்தகையோர்
வெள்ளப்பெருக்கால் அழிந்தது போல அழிவார்கள். அந்த அழிவின்
நாள் யாருக்கும் தெறியாது. பாவ வாழ்க்கை வாழும் மனிதனின்
அழிவும் அவனுக்குத் தெரியாது.
வயலில் இருக்கும் இருவரில் ஒருவர் எடுத்துக்
கொள்ளப்படுவதும் மற்றவர் விடப்படுவதும் அவர்களுக்கே
தெறியாது. திரிகையில் மாவரைத்துக்கொண்டிருக்கும் இருவருள்
ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவதும் மற்றவர்
விட்டுவிடப்படுதும் யாரும் அறியார். பாவிகளின் அழிவு
அவர்களை அறியாமல் அவர்களை வந்தடையும்.
சுகபோகம் அனுபவிப்பதே வாழ்க்கை என்று வாழ்ந்தால்,
மகிமையும் மாட்சியும் நிறைந்த "ஆண்டவரின் நாள்" வேதனையும்
விரக்தியும் நிறைந்த தண்டனையின் நாளாகிவிடும். ஆண்டவரின்
மாட்சியை மகிமையைக் காணும் ஆசீர் பெற்ற மக்களாக இருக்க
நோவா குடும்பம்போல் நம் குடும்பமும் குடும்ப வாழ்வும்
இருக்க வேண்டும். ஆண்டவருக்குள் வாழும் குடும்பம்
அழிவிலிருந்து பாதுகாக்கப்படும்.
அருட்திரு ஜோசப் லியோன்
சிந்தனை 11
இறைவாக்கை வாழ்வோடு இணைப்போம்!
மத்தேயு நற்செய்தியில் இறுதிக்காலம் பற்றி வருகின்ற ஒரு
பகுதியை இன்று வாசிக்கக் கேட்கிறோம் (மத் 24:37-44).
இயேசுவின் இரண்டாம் வருகையை விழிப்போடு எதிர்பார்த்திருக்க
வேண்டும் என்று இங்கே கிறிஸ்தவ சமூகத்திற்குச் செய்தி
வழங்கப்படுகிறது. இதில் மூன்று சிறு உவமைகள் உள்ளன.
அவற்றில் மானிட மகன் திடீரென்று, எதிர்பாராத நேரத்தில்
வருவார் என்பது வலியுறுத்தப்படுகிறது. முதல் உவமை நோவா
பற்றியது. அவருடைய காலத்தில் வாழ்ந்த மக்கள் அன்றாட
செயல்களைச் செய்வதில் மூழ்கியிருந்தனர். அப்போது
எதிர்பாராத விதத்தில் பெருவெள்ளம் வந்து அவர்களை
அடித்துச்சென்றது.
கிறிஸ்தவ சமூகமும் அன்றாடக் கவலைகளில்
மூழ்கியிருந்துவிட்டுத் தங்கள் வாழ்க்கையின் இறுதி
நோக்கத்தை மறந்துவிடலாகாது. அவர்களுக்கு வழங்கப்படும்
செய்தி: விழிப்பாயிருங்கள்! கிறிஸ்துவை அணிந்துகொண்டு,
கிறிஸ்துவின் வருகைக்காகக் காத்திருப்பதே உங்கள்
வாழ்க்கைக் குறிக்கோளாகும் என்பதை மறந்துவிடாதீர்கள்!
திருவருகைக் காலம் "எதிர்நோக்கிக் காத்திருக்கும்" காலம்
ஆகும். எபிரேய மக்கள் மெசியாவின் வருகையை எதிர்பார்த்தனர்
என்றும் அவர்களுடைய எதிர்பார்ப்புக்கள் இயேசு கிறிஸ்துவில்
நிறைவேறின எனவும் நாம் அறிவோம். திருவருகைக் காலத்தில் இதை
நாம் நினைவுகூர்கின்றோம். நம் வாழ்வு சார்ந்த
எதிர்பார்ப்பும் திருவருகைக் காலத்தில் தெரிகிறது.
மனிதரிடையே போரும் சண்டை சச்சரவும் மறைந்து அமைதி நிலவும்
புதியதொரு காலம் மலரும் என்பது நம் எதிர்பார்ப்பு.
கிறிஸ்துவின் வருகையால் இது நிகழும் என்பது நம் நம்பிக்கை.
மனித வாழ்விலிருந்து இருள் மறைந்து ஒளி தோன்றும் என்பதும்
நம் எதிர்பார்ப்பு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்
கிறிஸ்துவின் வருகை உலகில் நிகழ்ந்தது.
ஆனால், அவர் வரலாற்றின் இறுதியில் மீண்டும் வருவார். அந்த
வருகைக்கு முன்னால் கிறிஸ்து நம் வாழ்விலும் நாம்
வாழ்கின்ற சமூகத்தின் வாழ்விலும் தொடர்ந்து
நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. குறிப்பாக, நாம் கிறிஸ்துவை
அருளடையாளக் கொண்டாட்டத்தில் சந்திக்கிறோம். நம்மை
அடுத்திருப்போர் வழியாகவும் கிறிஸ்து நம்மைச் சந்திக்க
வருகிறார். இவ்வாறு திருவருகைக் காலம் நமக்கு இயேசுவின்
வெள்வேறு "வருகைகளை" நினைவுறுத்துகிறது. கிறிஸ்துவை நாம்
சந்தித்து, அச்சந்திப்பின் வழியாக நம் வாழ்க்கை வளம்
பெறவும், நம் இறுதிச் சந்திப்புக்கு நாம் என்றுமே தயாராக
இருக்கவும் இத்திருவருகைக் காலம் நமக்குத் தூண்டுதலாக அமைய
வேண்டும்.
அருட்திரு பவுல் லியோன்
சிந்தனை 12
விழித்திருங்கள்! ஆண்டவர் வருகின்றார்!
கிறிஸ்துவில் மிகவும் பிரியமான சகோதர சகோதரிகளே,
உங்கள் அனைவருக்கும் திருவழிபாட்டு ஆண்டின் புத்தாண்டு
வாழ்த்துக்கள்! இன்று நாம் திருவருகைக் காலத்தை
தொடங்குகிறோம். இது வெறும் கிறிஸ்மஸ் விழாவுக்கான, குடில்
கட்டுவதற்கான அல்லது புத்தாடை எடுப்பதற்கான தயாரிப்பு
காலம் மட்டுமல்ல; இது "காத்திருத்தலின் காலம்" மற்றும்
"நம்பிக்கையின் காலம்".
இந்தக் காலம் நமக்கு இரண்டு உண்மைகளை நினைவூட்டுகிறது:
ஒன்று, 2000 ஆண்டுகளுக்கு முன்பு பெத்லகேமில் தாழ்மையுடன்
வந்த இயேசுவை நினைவுகூர்வது; மற்றொன்று, உலக முடிவில்
மாட்சியுடன் வரவிருக்கும் அரசராகிய இயேசுவைச் சந்திக்கத்
தயாராவது.
இன்றைய இறைவார்த்தைகள் நமக்குத் தரும் மையச் செய்தி
ஒன்றுதான்: "விழித்திருங்கள்!"
1. எதற்காக விழித்திருக்க வேண்டும்? நற்செய்தியில் இயேசு,
நோவாவின் காலத்தை நினைவூட்டுகிறார். அன்று மக்கள்
சாப்பிட்டார்கள், குடித்தார்கள், திருமணம் செய்தார்கள்.
இவை எதுவும் தவறான செயல்கள் அல்ல. ஆனால், அவர்களின் தவறு
என்னவென்றால், அவர்கள் அன்றாட வாழ்க்கையில் மூழ்கிப்போய்,
கடவுளை மறந்தார்கள். வெள்ளம் வரும் வரை அவர்களுக்கு
எதுவும் தெரியவில்லை.
மேலும், "திருடன் எப்போது வருவான் என்று வீட்டு
உரிமையாளருக்குத் தெரியாது" என்று இயேசு எச்சரிக்கிறார்.
அதுபோலவே, நம் வாழ்வின் இறுதி நாளோ அல்லது ஆண்டவரின்
வருகையோ எப்போது நிகழும் என நமக்குத் தெரியாது. மரணம் ஒரு
திருடனைப் போல எந்த நேரத்திலும் நம் கதவைத் தட்டலாம். அந்த
நேரத்தில், "ஆண்டவரே, இன்னும் சிறிது நேரம் தாரும், நான்
திருந்த வேண்டும்" என்று நாம் கேட்க முடியாது. அதனால்தான்
"இப்போதே தயாராகுங்கள்" என்று திருஅவை நமக்கு அழைப்பு
விடுக்கிறது.
2. எப்படித் தயாரிப்பது? விழித்திருப்பது என்றால் இரவு
முழுவதும் தூங்காமல் இருப்பது அல்ல; மாறாக, பாவ
இருளிலிருந்து விடுபட்டு, ஆன்மீக விழிப்புணர்வோடு வாழ்வது.
இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் மிக அழகாகச் சொல்கிறார்:
"இரவு முடியப்போகிறது, பகல் நெருங்கிவிட்டது. எனவே இருளின்
ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிடுவோம்."
நமக்குத் தெரியும், எது இருளின் செயல் என்று. பகைமை,
பொறாமை, குடிவெறி, சிற்றின்பம், பிறரைப் பற்றிப் புறம்
பேசுவது - இவை அனைத்தும் இருள். இந்தத் திருவருகைக்
காலத்தில், நம் உள்ளத்தில் மறைந்திருக்கும் இந்த இருளை
அகற்றி, "அன்பு" என்னும் ஒளியின் கவசத்தை அணிந்துகொள்ள
வேண்டும். நம் அருகில் இருக்கும் ஏழைகளிலும்,
துயருறுவோரிலும் இறைவனைக் காண்பதுதான் உண்மையான
விழிப்புணர்வு.
3. நம்பிக்கையின் ஒளி இன்று நாம் முதல் மெழுகுவர்த்தியை
ஏற்றியுள்ளோம். இது 'நம்பிக்கையின்' அடையாளம். நம்
வாழ்க்கை எவ்வளவு இருள் சூழ்ந்ததாக இருந்தாலும்,
பிரச்சினைகள் நிறைந்ததாக இருந்தாலும், இயேசு என்னும் ஒளி
நம் வாழ்வில் உதிக்கும் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும்.
முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் சொல்வது போல, போர்க்
கருவிகளைப் பயிர்க்கருவிகளாக மாற்றும் சமாதானம் நம்
குடும்பங்களில் மலர வேண்டும்.
செயல்பாட்டுத் தீர்மானம்: அன்பானவர்களே, இந்த வாரம்
முழுவதும் ஒரு சிறிய முயற்சியை எடுப்போம்:
தினமும் காலையில் எழுந்தவுடன், "ஆண்டவரே, இன்று நீர் என்
உள்ளத்திற்கு வாரும்" என்று சொல்லிவிட்டு, அன்றைய நாளைத்
தொடங்குவோம்.
தேவையற்ற கோபத்தையோ, வீண் பேச்சையோ, அடுத்தவரைப் பற்றித்
தீர்ப்பிடுவதையோ இந்த வாரம் தவிர்ப்போம்.
ஆண்டவர் வரும்போது, நாம் விழிப்போடும், விளக்கேந்திய
கைகளோடும், தூய உள்ளத்தோடும் அவரை வரவேற்கத் தயாராக
இருப்போம். ஆமென்.
மீட்பரின் பாதையில் சென்றவளே, மேலவன் திருவுளம் வாழ்ந்தவளே
இகமதில் இருப்பவர் எம் துணையே, எங்களின் இனியநல் இறையன்னையே